விபுலாநந்தர் தமிழ்த் தொண்டு  

 

விபுலாநந்தர் தமிழ்த் தொண்டு

கி.பி.1892ஆம் ஆண்டில் இலங்கையின் கிழக்கு மாநிலத்திலே அமைந்து உள்ள காரைதீவு என்னும் ஊரிலே மயில்வாகனன் என்னும் இயற்பெயர் கொண்ட விபுலாநந்தர் பிறந்தார். இவரது தந்தை பெயர் சாமித்தம்பியார்ரூபவ் அன்னை பெயர் கண்ணம்மையார் ஆகும்.

மயில்வாகனன் தனது தொடக்கக் கல்வியைக் கல்முனை மெதடித்த பேரவைப் பள்ளியில் பயின்றார். இImage result for விபுலாநந்தர் தமிழ்த்தொண்டுடைநிலைக் கல்வியை  மட்டக்களப்பு தூய மைக்கல் கல்லூரியில் கற்றார், மயில்வாகனன், தனது 16ஆவது அகவையிலே கேம்பிறிச்சுத் தேர்விலும் அடுத்துக் கொழும்பு ஆசிரிய பயிற்சிக் கல்லூரித் தேர்வு இலண்டன் அறிவியல் பட்டத் தேர்வு எனப் பல்வேறு தேர்வுகளில் தொடர்ச்சியான வெற்றிகளைப் பெற்றார். இவர் தமிழ் மொழியில் மட்டுமன்றிச் சமற்கிருதம், ஆங்கிலம், இலத்தீன், கிரேக்கம், வங்காளம், பாளி, அரபு, சிங்களம் ஆகிய மொழிகளிலும் புலமை பெற்றவராகத் திகழ்ந்தார்.

முத்தமிழ் அறிஞரான விபுலாநந்தர் ஆற்றிய தமிழ்த் தொண்டைக் கல்விப் பணி, ஆசிரியப் பணி, ஊடகப் பணி,  மொழிபெயர்ப்புப் பணி, சொற்பொழிவுப் பணி, கலைச் சொல்லாக்கப் பணி, ஆய்வுப் பணி, அரசியற் பணி எனப் பிரித்து ஆராயலாம்.

கல்விப் பணி

ஒரு குமுகம் தனது மொழி மற்றும்; பண்பாட்டைப் பேணவும் வளர்க்கவும் வேண்டுமாயின் தாய் மொழிக் கல்வி இன்றியமையாதது என்பதனை விபுலாநந்தர் உணர்ந்து இருந்தார். இந்த அடிப்டையிலேயே மட்டக்களப்பு சிவானந்த வித்தியாலயம், திருகோணமலை இந்துக் கல்லூரி, யாழ்ப்பாணம் வைத்தீசுவராக் கல்லூரி, காரைதீவு சாரதா வித்தியாலயம், ஆனைப்பந்திப் பெண்கள் பாடசாலை, கல்முனை தமிழ்க் கலவன் பாடசாலை, கொக்கட்டிச் சோலை தமிழ்க் கலவன்
பாடசாலை உள்ளிட்ட பதினேழு பள்ளிகளை நிறுவி அல்லது மீளமைப்புச் செய்து பொறுப்பாளராக இருந்து நடத்தி வந்தார்.

இதன் விளைவாக ஆங்கிலேயர் ஆட்சி நிலவிய காலத்தில் தமிழ்ப் பிள்ளைகள் தமிழ்ப் பண்பாட்டுச் சூழலில் தமிழ்க் கல்வியை மட்டுமன்றி ஆங்கிலக் கல்வியையும் பெறக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டது. கல்வி நிறுவனங்களை மட்டுமன்றி ஆதரவற்ற மாணவர் தங்கியிருந்து கல்வி பயில விடுதிகளையும் நிறுவினார். இவர் நிறுவிய கல்வி நிறுவனங்களில் கல்வி கற்றவர் பிற்காலத்தில் சிறந்த ஆசிரியர் பேராசிரியர் பொறியியலாளர் மருத்துவர் சட்டவல்லுநர் செயலாண்மையர் மற்றும் அரசியலாளராக விளங்கித் தமிழ்க் குமுகாயத்துக்கு அளப்பரிய பணியாற்றி உள்ளதனை நாம் காணலாம்.

சென்னை அண்ணாமலை மற்றும் கொழும்புப் பல்கலைக் கழகங்களில் தமிழ்ப் பாடத்திட்டங்களும் தேர்வு களும் அடிகளாரது வழிகாட்டலிலேயே அமைக்கப்பெற்றன. இலங்கை அரசின் கல்வித்; துறைக்குச் சைவ சமயம் மற்றும் தமிழ் மொழிப் பாடத்திட்டங்கள் அடிகளாராலேயே ஆக்கி அளிக்கப்பட்டன. விபுலாநந்தரின் கல்விப் பணிகளில் மிகவும் முதன்மையானது தமிழ் நாட்டிலுள்ள அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தை அமைக்க ஆங்கில ஆட்சியாளரிடம் ஒப்புதல் பெற்றமையாகும். அன்றைய தமிழ்நாட்டுக் கல்வியாளர் அத்தகைய ஒரு செயலை ஆற்ற வல்லவர் விபுலாநந்தர் என்பதனை உணர்ந்து ஈழத்தில் இருந்து அவரை அழைத்தமை அடிகளாரது திறமைக்கு ஓர் எடுத்துக்காட்டு ஆகும்.

ஆசிரியப் பணி

விபுலாநந்தர் நன்னூலார் கூறும் ஆசிரியப் பண்புகளைக் கொண்டு விளங்கினார். இவர் இலங்கையில் உள்ள மட்டக்களப்பு தூய மைக்கல் கல்லூரி கல்முனை கத்தோலிக்கப் பேரவைப் பள்ளி யாழ்ப்பாணம் தூய சம்பத்திரிசியார் கல்லூரி மானிப்பாய் இந்துக் கல்லூரி உள்ளிட்ட பல பள்ளிகளில் ஆசிரியராகப் பணிபுரிந்தார். இது மட்டுமன்றிச் சென்னைப் பல்கலைக் கழகம் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் மற்றும் கொழும்பு பல்கலைக் கழகத்திலும் விரிவுரையாளராகவும் பேராசிரியராகவும் பணிபுரிந்து உள்ளார். “விபுலாநந்தரடியில் அமர்ந்து கல்வி கற்பதனை மாணவர் பெரும் பேறாகக் கருதினர்” என்று அண்ணாமலைப் பல்கலைக் கழக இணைவேந்தர் குறிப்பிடுவதில் இருந்து விபுலாநந்தரது கற்பித்தல் திறமையை நாம் உணர்ந்து கொள்ளலாம். தமிழ் மொழியை
மட்டுமன்றிக் கணிதம் அறிவியல் ஆங்கிலம் இலத்தீன் முதலிய பிற பாடங்களைக் கற்பித்தார். இதன் மூலம் தமிழ் அறிஞர்களை மட்டுமன்றித் தமிழரில் பல்துறை அறிஞர்களையும் உருவாக்கிய பெருமை அடிகளாரைச் சாரும்.

சொற்பொழிவுப் பணி: விபுலாநந்தர் தமது சொற்பொழிவுகள் மூலம் தமிழரது அறிவையும் சிறப்பையும் பெருக்கினார். இந்த வகையில் 1924ஆம் ஆண்டில் மதுரைத் தமிழ்ச் சங்கத்திலே நாடகத் தமிழ் பற்றி நிகழ்த்திய ஆய்வுரை 1927இல் கண்டி சைவ மகாசபையில் ஆற்றிய பேருரை 1934இல் கரந்தைத் தமிழ்ச் சங்க விரிவுரை 1936இல் திருவண்ணாமலையில் நிகழ்த்திய சொற்பொழிவு 1936இல் சென்னைப் பல்கலைக் கழகத்தில் யாழ்ப்பாணம் தமிழிசை  சிலப்பதிகாரம் பழந்தமிழர் சிற்பக்கலை முதலிய தலைப்புகளில் நிகழ்த்திய பேருரைகள் 1947இல் திருக்கொள்ளம்புதூரில் ஆற்றிய விரிவுரை ஆகியன தமிழரது பெருமையைத் தமிழரும் பிறரும் அறியும் வண்ணம் செய்த பணிகள் ஆகும். இதன் விளைவாக தமிழின்பால் மக்களுக்கு ஓர் ரூடவ்ர்ப்பு ஏற்பட்டது. இலங்கைத் தமிழர் பெருமை அறிவு
உலகுக்கு எடுத்துக் காட்டப்பட்டது.Image result for விபுலானந்தர்

ஊடகப் பணி

மொழி மற்றும் குமுகாய மேம்பாட்டில் செய்தி இதழ்கள் பெரும்பங்கு வகிக்க முடியும் என்பதனை விபுலாநந்தர் உணர்ந்து இருந்தார். எனவே செய்தி இதழ்கள் வாயிலாகவும் தமிழ்த்தொண்டு புரியத் தவறவில்லை. இந்த அடிப்படையிலே வேதாந்தகேசரி இராமகிருட்டின விசயம் விவேகாநந்தர் பிரபுத்தபாரதா ஆகிய செய்தி இதழ்களின் ஆசிரியராக இருந்து தமிழ் மொழியையும் தமிழ்ப் பண்பாட்டையும் தமிழர் மட்டுமன்றிப் பிறமொழியினரும் அறியும் வண்ணம் செய்தமை அவர் செய்த சிறந்த தமிழ்த் தொண்டாகும்.

மொழிபெயர்ப்புப் பணி: “பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும்” என விழையும் பாரதியாரது கனவை நனவாக்குவார் போல மொழிபெயர்ப்பிலும் விபுலாநந்தர் கவனம் செலுத்தி உள்ளார். தமிழ் மக்கள் பயனடையும் வண்ணம் பிறமொழி நூல்களைத் தமிழ் மொழிக்கு மாற்றினார். தமிழ் மொழி மற்றும் தமிழ்ப் பண்பாட்டுப் பெருமைகளைப் பிறமொழியினர் அறியும் வண்ணம் தமிழ் மொழி நூல்கள் பலவற்றை ஆங்கில மொழியில் அடிகளார் மொழிபெயர்த்தார். மதங்கசூளாமணி இதற்குத் தக்கதொரு சான்றாகும். அடிகளார் மொழிபெயர்க்கும் பொழுது முதல் நூற் பொருள் நடை மாறுபடாமல் இருப்பதில் மிகவும் கண்ணுங் கருத்துமாக இருந்தார்.

கலைச்சொல்லாக்கப் பணி

“கால நீரோட்டம் விரைந்து செல்கின்றது. தமிழர் பழங்காலச் சிறப்பினை மாத்திரம் பறை அறைந்து கொண்டிருப்பர் எனின் நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் இழந்த நீர்மையர் ஆதல் கூடும். ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் அறிவியல் நூல்கள் மிகவும் வளர்ச்சி அடைந்துள்ளன. இத்தகைய அறிவுச் செல்வத்தை தமிழ் மொழியிற் பெறுவதற்கு ஆவன செய்தலும் சிறந்த தமிழ்த் தொண்டாகும்” என்பது அடிகளாரது கூற்றாகும்.

கணிதம் இயற்பியல் வேதியியல் விலங்கியல் தாவரவியல் முதலிய துறைகளில் தமிழ் நூல்களை எழுதக் கலைச்சொற்கள் தேவைப்பட்டன. இதன்பொருட்டு 1934இல் சென்னை மாநிலத்தில் கலைச் சொல்லாக்கக் கழகம் ஒன்று உருவாக்கப்பட்டது. இதன் தலைவராக விபுலாநந்த அடிகளார் தேர்ந்து எடுக்கப்பட்டார். இவருடைய தலைமையில் ஒன்பது அறிவியற் பிரிவுகளுக்கு கலைச்சொற்கள் உருவாக்கப் பட்டன. இதன் பெறுபேறாக 1938இல் பதினாறாயிரம் தமிழ்க் கலைச்சொற்கள் கொண்ட அகரமுதலி வெளியிடப்பட்டது. கலைச்சொல் ஆக்கத்தின் பொழுது பழந்தமிழ் நூல்களைத் துருவி ஆராய்ந்து சுருக்கம் விளக்கம் தெளிவு தமிழ் உருவம் ஆகிய பொருந்துமாறு சொற்களை ஆக்கியரூபவ் ஆக்குவித்த பெருமை அடிகளாரைச் சாரும்.

ஆய்வுப் பணி

தமிழரது பண்பாடுகளையும் பெருமைகளையும் ஆராய்ந்து வெளிக் கொண்டுவருவதில் அடிகளார் கொண்டிருந்த ஆர்வம் மிகப் பெரியது. அவர் ஆசிரியராகவும் இதழியலாளராகவும் இருந்த காலத்தில் இதன்பொருட்டு அடிகளார் மேற்கொண்ட பணிகள் பல. இவற்றுக்கு எல்லாம் மணிமுடி வைத்தாற் போல விளங்குவது அவரது யாழ் நூலாகும். இந்த நூலானது ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக மறைந்து கிடந்த தமிழரது இசை அறிவை வெளிக்கொண்டு வந்தது. இந்த நூலைப்பற்றி அடிகளார் கூறுகையில் “ஐயிரண்டு ஆண்டாக நேரம் கிடைக்கும் பொழுது எல்லாம் அரிதில் முயன்று குருவருளாலும் தமிழ்த் தெய்வத்தின் கடைக்கண் பார்வையாலும் இந்நூலை ஒருவாறு எழுதி முடித்தோம்” என்று கூறுகின்றார். “சங்கத் தமிழ் அறிவியல் மற்றும் கணிதத் துறையை நன்கு அறிந்த ஒருவராலேயே யாழ் நூல் போன்ற ஒரு நூலை ஆக்க முடியும். அடிகளாரது அகன்ற அறிவுத் திறமையை யாழ்நூல் தெளிவு ஆக்குகின்றது” என்று தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் கூறுகிறார். இதில் இருந்து அடிகளாரது திறமையும் இந்நூலின் பெருமையும் புலனாகும். சென்னைப் பல்கலைக்கழகத் துணை வேந்தர் கேட்டுக்கொண்டதற்கு இணங்கத் தமிழ் ஆராய்ச்சிப் பிரிவுக்கான பாடத்திட்டத்தை அடிகளாரே வகுத்துக் கொடுத்தார். அதன் அடிப்படையிலேயே சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் ஆராய்ச்சிப் பிரிவு அமைக்கப்பட்டது.

தமிழரது இசைக்கருவியாகிய யாழைப் பற்றி அடிகளார் கூறுகையில் “வரலாற்றுக்கு எட்டாத காலத்திலே வில்யாழ் எனப் பெயரிய குழவியாய் உதித்து மழலைச் சொற்பேசி இடையர் இடைச்சியரை மகிழ்வித்து சீறியாழ் என்னும் பேதைப் பருவச் சிறுமியாகி பாணனொடும் பாடினியொடும் நாடெங்குந் திரிந்து ஏழை- யரும் இதயங் களிப்பெய்த இன்சொற் கூறி பின்பு பேரியாழ் என்னும் பெயரோடு பெதும்பைப் பருவம் எய்தி பெரும்பாணரொடு சென்று குறுநில மன்னரும் முடிமன்னரும் தமிழ்ப் புலவரும் கொடை வள்ளலரும் கேட்டு வியப்பெய்தும் வண்ணம் நயம்பட உரை பகர்ந்து அதன்பின் மங்கைப் பருவமெய்தி அப்பருவத்துக்கேற்ப புதிய ஆடையும் அணிகலனும் பூண்டு நாடக அரங்கத்திலே திறமை காட்டி மடந்தைப் பருவம் வந்து எய்தலும் திருநீலகண்டப் பெரும்பாணரொடும் மதங்கசூளாமணியாரோடும் அம்மையப்பர் உறைகின்ற திருக்கோவில்கள் பலவற்றை வலம் வந்து தெய்வ இசையினாலே அன்பர் உள்ளத்தினை உருக்கி முத்தமிழ் வித்தகராற் பாடப்பட்டு அரிவைப் பருவம் வந்து எய்தலும் அரசிளங் குமரியருக்கு இன்னுயிர்ப் பாங்கியாகி அவர்க்கேற்ற தலைவரை அவர்பாற் சேர்த்துச் சீருஞ் சிறப்பும் எய்தி நின்ற ‘யாழ்’ என்னும் மென்மொழி நங்கை இருந்த இடம் தெரியாமல் மறைந்து போயினள்.”

அரசியற் பணி

இலங்கைத் தமிழ் அரசியற் கட்சிகளின் தொடக்கத்துக்கு அடி எடுத்துக் கொடுத்த அமைப்பு யாழ்ப்பாணம் இளைஞர் பேராயம் ஆகும். இதன் தலைவராக மட்டக்களப்பைச் சேர்ந்த விபுலாநந்தர் தெரிவு செய்யப் பட்டதில் இருந்து அடிகளார் தமிழ்க் குமுகாயத்துக்கு ஆற்றிய தொண்டும் தமிழ்க் குமுகாயத்தில் அவர் பெற்றிருந்த நன்மதிப்பும் புலனாகின்றது. ஆவர் யாழ்ப்பாணம் இளைஞர் பேராயத்தில் தலைவராக இருந்து ஆற்றிய பணிகள் குறைத்து மதிப்பிட
முடியாதவை ஆகும். அன்று இலங்கைக்கு வருகை தந்த காந்தியடிகளை வரவேற்றார். கதிரவன் மறையாத பேரரசைக் கொண்டிருந்த ஆங்கிலேயருக்கு எதிராக தமிழ்நாடு சிதம்பரத்திலே இந்தியத் தேசியக் கொடியை ஏற்றினார். எனவேதான் அடிகளார் அயலவர் ஆட்சிக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய மூத்த விடுதலை வீரராகவும் விளங்குகிறார். அவர் வழியில் நாமும் தமிழுக்கும் தமிழ்க் குமுகாயத்துக்கும் தொண்டு புரிவோம். முத்தமிழ் அறிஞரான விபுலாநந்தரது 126 ஆவது பிறந்தநாளையொட்டி இக்கட்டுரை பிரசுரிக்கப்படுகின்றது.

சண்முகம் குகதாசன்

About editor 2996 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply