விக்னேஸ்வரனின் ஆன்மீகப் பயணம் பாலியல் சுவாமி பிரோமானந்தா ஆச்சிரமத்துக்கா? அல்லது இமயமலை சேத்திரங்களுக்கா?

விக்னேஸ்வரனின் ஆன்மீகப் பயணம் பாலியல் சுவாமி பிரோமானந்தா ஆச்சிரமத்துக்கா? அல்லது இமயமலை சேத்திரங்களுக்கா?

நக்கீரன்

வட மாகாண முதலமைச்சர்  இந்தியாவுக்கு  20 நாள் ஆன்மீகப் பயணத்தை மேற்கொண்டுள்ளார். அதற்கு முன்னர் அடுத்த மாகாண சபைத் தேர்தலில் தான் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்.

 “நான் அடுத்த தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று பெருவாரியான மக்கள் விரும்புவதை நான் அறிவேன். நான் செல்லும் இடங்களில் எல்லாம் மக்களிடம் இருந்து இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகிறது. எனது பயணம் தொடர வேண்டும் என்பது அவன் சித்தமும் மக்கள் விருப்பமும் போலும். இந்தப் பின்னணியில் நான் என்ன செய்ய? மக்கள் கருத்தும் மகேஸ்வரனின் கருத்துக்களுமே முக்கியம்”  இவ்வாறு  தெரிவித்திருக்கிறார்.

விக்னேஸ்வரன் தன்னை ஆன்மீகவாதி என்கிறார். சித்தம் போக்கு சிவன் போக்கு என்றிருந்த தன்னை தமிழரசுக் கட்சித் தலைவர்கள்தான் அரசியலுக்கு இழுத்து வந்துவிட்டதாகச்  சொல்கிறார். ஆனால் ஆன்மீகவாதி என்பவன் யார்?

இறைவனைக்காண்பது தான் பேரானந்தம் என்பதை ஒருவன் உண்மையிலேயே நம்பினால் அவரைக்காண ஏக்கத்தால் பித்தனாவான். எப்போதும் அவரைப்பற்றியே சிந்தித்துக்கொண்டிருப்பான். இந்த பைத்தியம், இந்த தாகம், இந்த வெறிதான் ஆன்மீக விழிப்புணர்வு எனப்படுகிறது.இது தொடங்கிய பிறகுதான் ஒருவன் ஆன்மீகவாதியாகிறான். இந்த விழிப்புணர்வு தோன்றாதவர்களை ஆன்மீகவாதி என்று அழைக்க முடியாது. (சுவாமி விவேகானந்தர்(பக்திநெறி பற்றி)

விக்னேஸ்வரனது  ஆன்மீகம் என்பது பாலியல் சுவாமி  பிரேமானந்தா மீதுள்ள பக்தியாகும். அவரைக் கடவுளாக நினைத்து அவருக்குக்  கோயில் கட்டிக் கும்பிடுவது ஆகும்.  ஆண்டு தோறும் அவரது பிறந்த நாளை தடல்புடலாகக் கொண்டாடுவது ஆகும்.

பிரேமானந்தா இலங்கை மாத்தளையில் இருந்து 1984 இல் தமிழ்நாட்டுக்குப் புலம் பெயர்ந்தார். தனது 18 ஆவது அகவையில் தனக்குத் தெய்வீக ஆற்றல் இருந்ததைத் தான் கண்டுகொண்டதாகக் கூறிக்கொண்டார். “ஒரு பெரிய ஆன்மீக அதிர்வு எனது பூசை அறைக்குள் நுழைந்தது, எனது வெள்ளை ஆடை படிப்படியாகக் காவியாக மாறிவிட்டது” என்று கதை அளந்தார்.

பிரேமானந்தா இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்டவர்.   நொவம்பர்  17, 1951 இல்  இலங்கையின் மாத்தளையில் பிறந்தவர். இவரது இயற்பெயர் பிரேம்குமார். பதினேழு  அகவையிலேயே இவருக்கு ஞானம் வந்து விட்டதாக இவரது வாழ்க்கை வரலாற்று நூலில் கூறப்பட்டுள்ளது. தனக்குத் தெரிந்த கடவுளை அனைவருக்கும் காட்டும் நோக்கிலேயே இவர் சாமியார் அவதாரம் எடுத்ததாகவும் அது கூறுகிறது.

பிரேமானந்தா மாத்தளையில் 1972ம் ஆண்டு ஒரு ஆச்சிரமத்தைத் தொடங்கினார். அதில் ஆதரவற்றோர், கைவிடப்பட்ட குழந்தைகளைச் சேர்த்தார். இலங்கையில்  1983 இல் நடந்த இனக் கலவரம் காரணமாக  தனது ஆசிரமத்தில் வாழ்ந்த சிறுமிகளோடு தமிழகத்திற்குச் சென்றார்.

1989 இல் திருச்சியில் திருச்சி, விராலிமலை பாத்திமாக நகரில்  150 ஏக்கர் பரப்புக் கொண்ட நிலத்தை வாங்கி அதில் ‘பூபாலகிருஷ்ண ஆச்சிரமம்’ என்ற பெயரில் ஒரு புதிய ஆச்சிரமத்தை உருவாக்கினார்.   சுமார் நூறு சிறுவர்கள், நூறு சிறுமியர் என அநாதைக் குழந்தைகள் ஆசிரமத்தில் சேர்க்கப்பட்டு வளர்க்கப்பட்டனர்.

உருவத்தில் ஏறக்குறைய சத்யசாயி பாபாவைப் போல் தோற்றம் கொண்டிருந்த பிரேமானந்தாவின் புகழ் திருச்சியிலும் அதைச் சுற்றியுள்ள ஊர்களிலும் பரவியது. அரசியல்வாதிகள், அமைச்சர்கள், தொழிலதிபர்கள் எனப் பலர் சுவாமி பிரேமானந்தாவைத் தரிசித்து‘அருளாசி’ பெற்றுச் சென்றனர். கையில் இருந்து  திருநீறு கொட்டுவது, வாயிலிருந்து சிவலிங்கம் வரவழைப்பது, அந்தரத்தில் கையை அசைத்து திருநீறு, குங்குமம், சந்தனத் தூள், உருத்திராட்சக் கொட்டை, சங்கிலி, மோதிரம்   வரவழைப்பது ஆகும். அவரது தனிச்சிறப்பு வயிற்றில் இருந்து இலிங்கத்தை வாயால் வரவழைப்பதுதான்.  இந்தச்  சித்து விளையாட்டுக்களைப் பார்த்து  அவரது  தெய்வீக ஆற்றலில்  மயங்கிய வெளிநாட்டுப் பக்தர்கள் உட்பட  பக்தர்களின் எண்ணிக்கை பெருகியது.

பிரேமானந்தாவுக்கு பொருளும் புகழும் வந்து குவிந்தது.  ஆச்சிரமத்துக்கும் பிரபல்யம் உண்டாயிற்று. 1989 இல்  நாடெங்கும் 15 கிளைகளைக் கொண்டிருந்த இந்த ஆச்சிரமத்துக்கு அனைத்துலக இளைஞர் பிரிவு ஒன்றும் இருந்தது.

1993 இறுதி வரை பிரேமானந்தாவின் காட்டில் மழை நன்றாகப் பெய்து கொண்டிருந்தது. ஆனால்  பிரேமானந்தா அங்கு வரும் பெண் பக்தைகளுக்கு தீா்தத்துடன் மயக்க மருந்தைக் கலந்து கொடுத்து கலவி இன்பத்தில் ஈடுபட்ட செய்தி வெளியில் கசிந்தது.  அவரது காமப் பசிக்கு அவரது பாதுகாப்பில் இருந்த அநாதைச்  சிறுமிகள் பலர்  பலியானார்கள் என்ற செய்தியும் யாரும் எதிர்பாராத நேரத்தில் வெளியில்  அம்பலமாகியது.

1994 இல் பிரேமானந்தாவின் பசிக்கு இரையான ஆச்சிரமத்தைச் சேர்ந்த ஆதரவற்ற  சுரேஷ்குமாரி மற்றும் லதா என்ற இரு  பெண்கள்  தப்பிச் சென்று தாங்கள் பிரேமானந்தாவால் கற்பழிக்கப்பட்டதாகவும் அதனை வெளிப்படுத்தி விடுவதாகக் கூறிய பொறியாளர் இரவி என்பவர் அடித்துக் கொலை செய்யப்பட்டு ஆச்சிரம வளவுக்குள்ளேயே புதைக்கப்பட்டதாகவும் காவல்துறையில் முறைப்பாடு செய்தனர். காவல்துற  நொவம்பர் 15, 1994 அன்று பிரேமானந்தா,  அவருடைய செயலாளர் கமலானந்தா இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்து விசாரணையை மேற்கொண்டது. அப்போதுதான் தோண்டத் தோண்டப் பூதம் கிளம்பிய கதையாக பல மர்மங்கள் வெளிவரத் தொடங்கின. அநாதைச் சிறுமியரை தனது உடற்பசியைத் தீர்த்த  பிரேமானந்தாவின் காமலீலைகள், கொலை, பித்தலாட்டங்கள்  வெளியில் அம்பலமாயின.

சுவாமி பிரேமானந்தா அணிந்திருந்த காவி உடைக்கு உள்ளே ஒரு காமவெறி பிடித்த ஒரு கொடூர மிருகம் ஒளிந்திருந்ததை அதுவரை யாரும் கண்டு கொள்ளவில்லை. பிரேமானந்தா பகலில் இளிச்சவாயர்களுக்கு ஆன்ம உபதேசம் செய்து விட்டு இரவில் ஆச்சிரமத்தைக் காமக் களியாட்டக் கூடமாக மாற்றினார்.

மருத்துவ ஆய்வில் 13  சிறுமிகள் பருவமடைய முன்னரும், பருவமடைந்து ஒரு மாதத்துக்குள்ளும் கூட பிரேமானந்தாவால் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டனர் என்ற அதிர்ச்சித் தகவல்  வெளியானது.  அது விசாரணையில் உறுதி செய்யப்பட்டது. அவர்களில் ஒருவரான அருள்சோதி அப்போது கர்ப்பமாக இருந்தார். நீதிமன்றத்தின் அனுமதியோடு அருள்சோதி கற்பத்தைக் கலைத்தார்.  மரபணுச் சோதனையில் கர்ப்பத்திற்குப் பிரேமானந்தாவே காரணம் என்பது உறுதி செய்யப்பட்டது. ஆசிரமத்தில்  அடித்துக் கொலை செய்து புதைக்கப்பட்டிருந்த இளம் பொறியாளர் இரவியின் உடலும்  தோண்டி எடுக்கப்பட்டது.

ஓகஸ்ட் 20, 1997 அன்று காவி உடையில் காமக் களியாட்டம் நடத்திய பிரேமானந்தா இரவியைக் கொலை செய்தது, ஆசிரமத்தில் வாழ்ந்த இளம் பெண்களைக் கற்பழித்தது  என்ற குற்றச்சாட்டுக்களில் குற்றவாளியாகக் காணப்பட்டு புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஆர். பானுமதி (இப்போது இவர் இந்திய உச்ச நீதிமன்ற நீதியரசர்) அவர்களால்  இரட்டைத்  தொடர் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.  பிரேமானந்தாவுக்கு  உதவியாளராக இருந்த கமலானந்தாவுக்கும் இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.  நான்கு பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. மேலும் பாலியல் சுவாமி பிரேமானந்தா உட்பட ஏழு எதிரிகளும் பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு இந்தியப் பணத்தில் 62 இலட்சம் ரூபா இழப்பீடு  செலுத்தவும் உத்தரவிடப்பட்டது.

இந்தத் தண்டனையை எதிர்த்து சனவரி 2000 இல் பிரேமானந்தா சென்னை உயர்நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்தார். சென்னை உயர் நீதிமன்றம் அந்த மனுவைத் தள்ளுபடி செய்து தீர்ப்பை உறுதிசெய்தது. எதற்கும் சளைக்காத பாலியல் சுவாமி பிரேமானந்தா தில்லி உச்ச நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்தார். அவருக்காக பிரபல வழக்கறிஞர் இராம் ஜெத்மாலினி தோன்றி வாதாடினார்.

விக்னேஸ்வரன் பாலியல் சுவாமி பிரேமானந்தா சார்பாக உச்ச நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தார். ஆனால் உச்ச நீதிமன்றம் அவரது சாட்சியத்தை நிராகரித்தது. அவரை  ஒரு கற்பனைவாதி (wishful thinker) என்று சொல்லி அவரது தலையில் குட்டு வைத்தது.

பிரேமானந்தா செய்த மேன்முறையீடு 2002 டிசெம்பரில் உயர்நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டு அவருக்கு விதிக்கப்பட்ட இரட்டை ஆயுள் தண்டனை உறுதிசெய்யப்பட்டது. ஏப்ரில் 2005 இல் தில்லி உச்ச நீதிமன்றம்  பாலியல் சுவாமி பிரேமானந்தாவில் மேன்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்தது.

இரட்டை ஆயுள் தண்டனை பெற்று கடலூர் சிறையில் அடைக்கப்பட்ட பாலியல் சுவாமி பிரேமானந்தா  பெப்ரவரி 21, 2011  இல் தனது 59 ஆவது வயதில் சிறையில்  காலமானார்.

விபூதி, சந்தணம், சிவலிங்கம், கைக்கடிகாரம் போன்றவற்றை வரவழைத்த பாலியல் சுவாமி பிரேமானந்தாவுக்கு கடலூர் சிறைக் கதவைப் திறப்பதற்கு அவரால் ஒரு  சாவியை வரவழைக்க முடியவில்லை.

பாலியல் சுவாமி பிரேமானந்தா ஆச்சிரமத்தில் நடைபெறும் பௌர்ணமி வழிபாட்டில் ஆண்டுக்கு ஒருமுறை விக்னேஸ்வரன் கலந்து கொள்வது வழக்கம். வடக்கு மாகாண முதல்வராகப் பொறுப்பேற்ற பின்னர் முதல் முறையாக   நொவெம்பர் 07, 2014 இல்  சென்னை சென்ற விக்னேஸ்வரன் கார் மூலமாக திருச்சி சென்றடைந்தார். பின்னர் விராலிமலையில் உள்ள பிரேமானந்தா ஆச்சிரமத்துக்குச் சென்ற அவர் சிவன் ஆலயத்தில் தரிசனம் செய்து விட்டு ஓய்வெடுத்துக் கொண்டார். (Read more at: https://tamil.oneindia.com/news/tamilnadu/wigneswaran-visits-premananda-ashram-214420.html )

பாலியல் சுவாமி பிரேமானந்தாவின்  பல இலட்சம் கோடிகள் பெறுமதியான சொத்துக்கள் அறக்கட்டளை ஒன்றினால் பராமரிக்கப்பட்டு வருகிறது. இலங்கையில் உள்ள ஆச்சிரமச் சொத்துக்களுக்கு விக்னேஸ்வரன் அறங்காவலராக இருக்கிறார்.  வவுனியாவில் புளியங்குளம்  ஏ9 வீதியில்  பிரேமானந்தாவுக்குக் கோயில் கட்டி குடமுழுக்கும்  விக்னேஸ்வரன் செய்துள்ளார்.

விக்னேஸ்வரன் தனது பேச்சை வாசிக்கத் தொடங்கு முன்னர்  “பரப்பிரமம்” என்று சொல்வார். அந்தப் பரப்பிரமம் வேறு யாருமல்ல.  மாவட்ட   நீதிமன்றம் ஒன்றால் ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டு, பின்னர் சென்னை  உயர் நீதி மன்றம், தில்லி உச்ச நீதி மன்றம் போன்றவற்றால்  தண்டனை உறுதி செய்யப்பட்ட  காமுகன்,  கொலையாளி பிரேமானந்தாதான்.

கேள்வி என்னவென்றால் விக்னேஸ்வரனின் ஆன்மீகப் பயணம் எங்கே எதுவரை போகிறது?  அவரது ஆன்மீகக் குரு பாலியல் சுவாமியின் விராலிமலை பூபாலகிருஷ்ண ஆச்சிரமம் வரையா? அல்லது  வட இந்தியாவின் இமயமலையில் உள்ள  பத்ரிநாத் கோயில், கேதார்நாத் கோயில், கங்கோத்திரி கோயில் மற்றும் யமுனோத்திரி கோயில்,   கங்கை ஆற்றின் கரைகளில் காணப்படுகிற  காசி, ரிஷிகேத்திரம் அல்லது புனிததலமான அமர்நாத் குகைக்கோயிலுக்கா (Amarnath Cave Temple)? இதில் எது என்பது தெரியவில்லை. இரண்டொரு  நாள் பொறுத்தால் விடை கிடைத்துவிடும்.

இந்தப் பின்னணியில்தான் விக்னேஸ்வரன்  “நான் அடுத்த தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று பெருவாரியான மக்கள் விரும்புவதை நான் அறிவேன். நான் செல்லும் இடங்களில் எல்லாம் மக்களிடம் இருந்து இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகிறது. எனது பயணம் தொடர வேண்டும் என்பது அவன் சித்தமும் மக்கள் விருப்பமும் போலும். இந்தப் பின்னணியில் நான் என்ன செய்ய? மக்கள் கருத்தும் மகேஸ்வரனின் கருத்துக்களுமே முக்கியம்” எனக் கூறியுள்ளார்.

விக்னேஸ்வரன் போலவே பாலியல் சுவாமி பிரேமானந்தாவும் தனது ஆதரவில் இருந்த சிறுமிகளோடு  வன்புணர்வு கொள்ளும் போது அது  சாட்சாத் அந்த மகேசனுக்கு  செய்யும் சேவை  என்றார்.  தன்னோடு உடலுறவு வைத்துக் கொண்டால் தான் சொல்லும் அருள்வாக்குப் பலிக்கும் என்றும் அவர் அந்தச் சிறுமிகளுக்கு உபதேசம்  செய்தார்!


About editor 3020 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply