தமிழ் பேசும் மக்கள் உய்த்துணர வேண்டும்!
விரவிக்கிடக்கும் இந்த அமைதியைக் குலைத்துத் தேர்தல் கலகலப்பை ஏற்படுத்தக்கூடியதாக அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் எழுப்பிய குற்றச்சாட்டு வந்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் எல்லோரும் அந்தக் குற்றச்சாட்டுக்குப் பதிலளிக்கப்போக, அது ஒரு பரபரப்பாகத் தொற்றிக்கொண்டது.
தேர்தல் காலங்களில் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுக்களை அடுக்குவதும் துரோகிப் பட்டங்களைச் சூட்டுவதும் தமிழ் கூறும் நல்லுலகில் ஒன்றும் புதிதில்லைத்தான். என்றாலும் சிவசக்தி ஆனந்தன் கூறியிருப்பது அடிப்படையற்ற குற்றச்சாட்டு என்பதுடன், ஈபிஆர்எல்எவ் கட்சியினர் தமது சொந்த அரசியல் நலனுக்காகத் தமிழ் மக்களின் நலன்களைக்கூடத் தமது காலில் தூக்கிப் போட்டுக் மிதிக்கவும் தயங்கமாட்டார்கள் என்பதையும் நிரூபித்திருக்கிறது.
தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அபிவிருத்திக்காக வழங்கப்பட்ட 2 கோடி ரூபா நிதி அவர்களுக்கு வழங்கப்பட்ட லஞ்சம் என்பதுதான் அவர் கிளப்பிவிட்ட குற்றச்சாட்டு. அடிப்படையில் தேர்தலுக்காக அவர் திட்டமிட்டுப் பரப்பிய பொய் அது என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்கவின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் இந்த 2 கோடி ரூபா நிதி முதலில் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கே வழங்கப்பட்டது. பின்னர் அது சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் விரிவாக்கப்பட்டது.
இவ்வாறு அந்தக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அதிகளவில் நிதி ஒதுக்கப்படுவது தேசியக் கட்சிகளை வடக்கில் வளர்ப்பதற்கான மறைமுகத் திட்டம் என்று அச்சப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள், இந்தப் பிரச்சினையை தலைமை அமைச்சரிடம் காட்டமாக எழுப்பினர்.
இதையடுத்தே கூட்டமைப்பினருக்கும் அந்தளவிற்கான நிதியை ஒதுக்கவேண்டிய நிலமை தலைமை அமைச்சருக்கு ஏற்பட்டது.
இந்த நிதி ஒதுக்கீடு என்பது பணத்தைத் தூக்கி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கைகளில் கொடுப்பது அல்ல என்பது எல்லோருக்கும் தெரியும்.
அது சிவசக்தி ஆனந்தனுக்கும் தெரியும். ஏனெனில் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்டத்தின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் வழங்கப்படும் ஒதுக்கீட்டு நிதியைப் பயன்படுத்துபவர்களில் அவரும் ஒருவர். பொருளாதார அபிவிருத்தி அமைச்சால் ஒதுக்கப்பட்ட நிதியும் அவ்வாறானதே.
நிதி ஒதுக்கீடு என்று சொல்லப்பட்டாலும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அதில் கிடைக்கக்கூடிய ஆகக்கூடுதலான சலுகை, தமது பகுதிகளில் செய்யக்கூடிய அபிவிருத்தித் திட்டங்களை பொருளாதார அபிவிருத்தி அமைச்சுக்கு அடையாளம் காட்டுவது மட்டுமே.
அதற்கு மேல் அவர்களுக்கு அதில் எந்தப் பங்கும் கிடை யாது. அவர்கள் கொடுக்கும் திட்டம் ஏற்புடையது என்றால் அமைச்சு அதனை அங்கீகரித்து வழக்கமான அரச நடைமுறைகளின் கீழ் அதனை ஓர் அரச அபிவிருத்தித் திட்டமாகச் செயற் படுத்தும்.
ஆக மொத்தத்தில் வடக்கில் தமிழ் மக்களுக்குக் கொழும்பு அரசு செய்யும் அபிவிருத்தித் திட்டத்தை கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடையாளப்படுத்தினார்கள் என்பதைத் தவிர இதில் வேறு சலுகைகள் எதுவும் அவர்களுக்குக் கிடைக்காது. அப்படிச் சொல்வதும் முழுப் பொய்.
போரால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு அரசு அதிக அளவில் நிதி ஒதுக்கீட்டை வழங்கவேண்டும் என்று தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும், வடக்கு மாகாண சபையினரும் வருடாவருடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்திருக்கின்றனர். கடந்த ஆண்டு நடந்த வரவு செலவுத் திட்ட விவாதத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன்கூட இதே கோரிக்கையை வலியுறுத்தியிருந்தார்.
ஆனால், அத்தகைய அதிக நிதிக்கான சிறியதொரு வாய்ப்புக் கிடைக்கும்போது, அதனைத் தமது சொந்த அரசியலுக்காக மிக மோசமான விமர்சனத்திற்கு உள்ளாக்கக்கூடிய சிவசக்தி ஆனந்தன் போன்றவர்கள் உண்மையிலேயே மக்களுக்காகத்தான் பேசுகிறார்களா என்பதை மக்கள் உய்த்துணரவேண்டும்.
கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படும் நிதி 2 கோடி ரூபாவுக்கான திட்டங்களை சிவசக்தி ஆனந்தன் முன்வைத்தால் அவருக்கும் அது கிடைக்கும். அதையும் செய்யாமல், தனது மக்களின் அபிவிருத்தியைத் தடுப்பது மட்டுமல்ல, அதைத் தமது கீழ்த்தரமான அரசியலுக்கு அவர் பயன்படுத்துவதையுமிட்டு அவருக்கு வாக்களித்த மக்கள் சிந்திக்க வேண்டும்.
Leave a Reply
You must be logged in to post a comment.