தேவதாசி நல்லவளா? கெட்டவளா? உண்மை வரலாறு!
தேவதாசி என்ற வார்த்தை சமீப நாட்களாக மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. எனவே, தேவதாசி என்று அழைக்கப்பட்டவர்கள் யார்? அவர்கள் எப்படி உருவானார்கள்? அந்த வரலாற்றின் கரு எங்கு உற்பத்தியாகியது? இப்போது அந்த வார்த்தைக்கு கற்பிக்கப்படுகிற கேவலமான அர்த்தம் நிஜம்தானா? என்பது பற்றி தெரிந்து கொள்ள முயற்சி செய்தோம்.
அதன் விளைவே இந்த வரலாற்று சுருக்கம்.
தேவதாசி என்பது வடமொழிச் சொல் என்கிறார்கள். கி.பி.ஆறாம் நூற்றாண்டில்தான் இந்த தேவதாசி முறை புழக்கத்தில் இருந்தது என்று சிலர் கூறினாலும், சிந்து சமவெளி நாகரிக காலத்திலும், அதற்கு முந்தைய வேத காலத்திலும் இந்த பழக்கம் நடைமுறையில் இருந்தது என்று ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஆலயங்களில் இசை, நடனம் உள்ளிட்ட கலைகளின் வழியாக சேவையாற்றியவர்களே தேவதாசிகள் என்று அழைக்கப்பட்டனர். சமூகத்தில் உயர்ந்த நிலையில் வைக்கப்பட்டிருந்த பெண்கள் ஒரு பகுதி ஆண்களால் பாலியல் பொருளாக ஆக்கப்பட்டனர் என்கிறது வரலாறு.
தேவதாசி முறை என்பதை இந்து மதம் நடத்திய பாலியல் பலாத்காரம் என்றும், எளியவர்களை வலியவர்கள் பலிகொள்ளும் மதமே இந்து மதம் என்றும் கூறினார்கள். தேவதாசி என்ற வார்த்தையை பயன்படுத்தினாலே உயர்ந்தபட்ச கொதிநிலைக்கு சிலர் ஆளாவது ஏன் என்பதற்கு முடிந்த அளவுக்கு விளக்கம் சொல்வதே நமது நோக்கம்.
மிகப் பழமையான காலத்திலேயே தேவதாசி முறை இருந்திருக்கிறது. இந்தியாவின் தொன்மை நாகரிகம் என்று கருதப்படும் சிந்து சமவெளி நாகரித்திலேயே நடனக்கலை முக்கிய அம்சமாக இருந்திருக்கிறது. நாட்டியப் பெண்மணியை சித்தரிக்கும் மிகச்சிறிய வெண்கலச் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
ஆரியர்களின் ரிக் வேதத்திலும் கூட நடனமாதுகள் பற்றிய குறிப்புகள் இருக்கின்றன. உஷா என்ற ஆடல் அரசியை ரிக் வேதம் வர்ணிக்கிறது. அதன்பிறகு வந்த புராணங்களிலும் இந்த நடனமாது கதாபாத்திரம் வருகிறது.
தேவதாசி என்ற வார்த்தை பலவிதமாக பயன்படுகிறது. ஆந்திராவில் மாதங்கி என்றும் விலாசினி என்றும், கொங்கனியில் நாயகி என்று், மராட்டியத்தில் பாசவி என்றும், கர்நாடாகவில் சூலி, சானி எனவும், ஒடிஸாவில் மக எனவும், உத்தரப்பிரதேசத்தில் பாலினி எனவும் தேவதாசிகளை அழைக்கிறார்கள்.
சங்க இலக்கியங்கள் கலையறிந்த பெண்களை பதியிலாள், மாணிக்கம், தளிச்சேரி, பெண்டுகள் என்று அடையாளப்படுத்துகின்றன. இந்த வார்த்தைகளின் அர்த்தம் எல்லா வகையிலும் அந்தப் பெண்களை பெருமைப்படுத்துவதாகவே இருப்பதாக அறிஞர்கள் கூறியுள்ளனர்.
சைவ மற்றும் வைணவ மதங்களில் உள்ள ஆகமங்கள் இத்தகைய பெண்களை ருத்ர கன்னிகைகள் என்றே குறிப்பிடுகின்றன. இவர்கள் உடலாலும், மனதாலும் தூய்மையானவர்கள், சொல் மற்றும் செயலில் அறிவு மற்றும் பொறுமை உடையவர்கள். தோற்றத்தில் இளமையும் மென்மையும் உடையவர்கள் என்று தெரிவிக்கிறது.
சைவ சமயக் குரவர்களில் முதன்மையான திருநாவுக்கரசரும் தேவதாசிகளை போற்றிப் பாடுகிறார். சுந்தரமூர்த்தி நாயனாரின் காதல் மனைவி பறவை நாச்சியார் ஒரு தேவதாசி என்கிறார்கள். இவர்கள் இருவரின் காதலுக்கு சிவபெருமான் தூது சென்றதாக புராணங்கள் கூறுகின்றன. தேவதாசிகளின் உயர்வான நிலைக்கு இதுவே சான்று என்கிறார்கள்.
தேவதாசிகளில் இரண்டுவகை இருக்கிறார்கள். முதல்வகை பதியிலார் என்று அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் யாரையும் கணவனாக ஏற்காமல், இறைவனை மட்டுமே மனதில் நினைத்து வாழ்க்கையை நடத்துவார்கள். இவர்களுக்கு நித்ய சுமங்கலிகள் என்ற பெயரும் உண்டு.
இரண்டாவது வகையினர் ருத்ர கன்னிகைகள் என்று அழைக்கப்பட்டனர். இவர்கள் இறைவனின் சன்னிதானத்தில் நாட்டியம் ஆடினாலும், தனது மனங்கவர்ந்த கணவன் ஒருவனோடு இல்லறம் நடத்தினார்கள்.
கணவனோடு வாழ்ந்தாலும், கணவன் இல்லாமல் வாழ்ந்தாலும் இவர்கள் மிகவும் ஒழுக்கமான வாழ்க்கையை நடத்தினார்கள். ஆனால், பிற்காலச் சமூகமே இவர்களை விபச்சாரிகளாக மாற்றியது என்கிறார்கள்.
ஒரு குறிப்பிட்ட ஜாதியைச் சேர்ந்தவர்களையே இப்போது தேவதாசி பரம்பரையினர் என்று இப்போது கூறப்படுகிறது. ஆனால் இது உண்மையில்லை. பல்வேறு ஜாதிகளைச் சேர்ந்த பெண்களும் தேவதாசிகளாக இருந்திருக்கிறார்கள் என்று ஆதாரங்களுடன் சொல்கிறார்கள். ஆதி சமூகத்தில் குடும்பத்தில் மூத்த பெண்ணாக பிறக்கும் குழந்தையை கோவிலுக்கு அர்ப்பணித்துவிடும் பழக்கம் இருந்திருக்கிறது. இந்தப் பழக்கம் சாதி வித்தியாசம் இல்லாமல் எல்லா மக்களிடத்தும் இருந்ததாக கூறுகிறார்கள். தேவதாசி பரம்பரையினர் எண்ணிக்கை அதிகரித்ததால் தங்களை ஒரு சமுதாயமாக அறிவித்துக் கொண்டதாக கருதலாம்.
ஆலயங்களில் தேவதாசிகளின் கடமை புனிதமானதாக கருதப்பட்டது. காலை, மாலை, உச்சிக்கால பூஜைகளில் இறைவன் முன் நாட்டியாஞ்சலி செய்வது இவர்களுடைய பணி. அர்த்தஜாம பூஜைக்குப் பிறகு மூர்த்தியை பள்ளியறைக்கு எடுத்துச் செல்லும்போதும், லாலி ஊஞ்சல், திருத்தாழ் அடைப்பு பாடல்களை பாட வேண்டும். ஒரு ஆலயத்தில் பல தேவதாசிகள் இருந்தால் முறை வைத்து பணி செய்தார்கள். ஆடல், பாடல் தெரியாத தேவதாசிகள் மாலை தொடுத்தல், பூஜை பாத்திரங்கள் சுத்தப்படுத்துதல் போன்ற பணிகளை செய்தார்கள்.
Leave a Reply
You must be logged in to post a comment.