இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும் விடயத்தில் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் விட்டுக்கொடுப்பு போக்குடன் தனது வகிபாகத்தை மேற்கொண்டு வருகின்றார். கடந்த மூன்று தசாப்தகாலமாக இடம்பெற்ற கொடூர யுத்தத்தில் தமிழ் மக்கள் பேரிழப்புக்களை சந்தித்திருந்தனர். இந்த இழப்புக்களுக்கு ஏற்ற வகையில் அவர்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் வகை யில் அரசியல் தீர்வு காணப்படவேண்டியது இன்றியமையாததாகும்.
இவ்வாறான தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய அரசியல் தீர்வுக்கு எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் முயற்சிகளை மேற்கொள்கின்றாரா என்ற கேள்வி சிங்கள மற்றும் தமிழ் தலைவர்களினால் எழுப்பப்பட்டு வருகின்றது. நல்லாட்சி அரசாங்கம் பதவியேற்றதையடுத்து அரசியல் தீர்வு காண்பதற்கான முயற்சிகள் மந்தகதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பாராளுமன்றம் அரசியல் யாப்பு சபையாக மாற்றப்பட்டு வழிநடத்தல் குழு அமைக்கப்பட்டு அரசியல் தீர்வு தொடர்பில் ஆராயப்பட்டது. அதிகாரத்தை பகிரும் யோசனைகளை உள்ளடக்கிய இடைக்கால அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டு அதுகுறித்து விவாதமும் இடம்பெற்றது.
இந்த இடைக்கால அறிக்கையிலுள்ள அரசியல் தீர்வு தொடர்பிலான யோசனைகள் தொடர்பில் தற்போது சர்ச்சை ஏற்பட்டிருக்கின்றது. இந்த யோசனைகளில் தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய விடயங்கள் இல்லை என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் உட்பட பல தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இணைந்த வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களின் சுயாட்சியை உறுதிப்படுத்தும் வகையிலான சமஷ்டி தீர்வை உள்ளடக்கிய அரசியல் அமைப்பு உருவாக்கப்படவேண்டும் என்ற வலியுறுத்தல் தமிழ் தரப்பினரால் முன்வைக்கப்படுகின்றது. ஆனாலும் தற்போதைய இடைக்கால அறிக்கையில் சமஷ்டி குறித்து குறிப்பிடப்படவில்லை என்று குற்றம் சாட்டப்படுகின்றது.
இந்த நிலையில் இடைக்கால அறிக்கையில் சமஷ்டியை ஒத்த அதிகாரப் பகிர்வுக்கான விடயங்கள் உள்ளடங்கியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன், கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் உட்பட கூட்டமைப்பின் தலைவர்கள் எடுத்துக்கூறி வருகின்றனர்.
கடந்தவாரம் திருகோணமலை மாவட்டத்தில் உள்ளூராட்சித் தேர்தலுக்கான பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் இந்த விடயம் குறித்து எடுத்துக்கூறியிருந்தார். சுயநிர்ணய அடிப்படையில் இறைமையின் இலக்கணத்திற்கு அமைய அரசியல் தீர்வு வருமாக இருந்தால் அதுதான் சமஷ்டிக்கான அடிப்படையாகும். இதுதான் சமஷ்டி ஆட்சி முறையுள்ள நாடுகளில் காணப்படும் பண்பாகும். எந்தவொரு தருணத்திலும் வரும் சந்தர்ப்பங்களை நாம் தவறவிடக்கூடாது என்று சம்பந்தன் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
நாம் வரலாற்றில் பல சந்தர்ப்பங்களை இழந்திருக்கின்றோம். அந்தநிலை தொடர்ந்தும் இடம்பெறக்கூடாது. சந்தர்ப்பங்களை உணர்ந்து சாணக்கியத்துடன் கையாளவேண்டும். இதனை தந்தை செல்வா அடிக்கடி என்னிடம் கூறுவார். தற்பொழுது நாட்டில் சில அரசியல் மாற்றங்களை ஏற்படுத்தி புதிய அரசியல் சாசனத்தின் ஊடாக தீர்வுகாண முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம். நீண்டகாலமாக தமிழ்மக்கள் சம உரிமையுடனும் சுயமரியாதையுடனும் இறைமையின் அடிப்படையில் உள்ளக, வெளியக சுயநிர்ணய உரிமையைப் பெற்று நாளாந்த கருமங்களை தாங்களே ஆற்றக்கூடிய வகையில் அதிகாரத்தை நாடு சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து கோரி வந்திருக்கின்றனர். தந்தை செல்வா தலைமையில் இதற்காக போராடினோம் என்றும் சம்பந்தன் தெரிவித்திருக்கின்றார்.
இந்தியா, கனடா, அவுஸ்திரேலியா, பெல்ஜியம் போன்ற நாடுகளில் இருப்பதைப் போன்று எமக்கும் ஒருமித்த நாட்டுக்குள் நாடு பிளவுபடாமல் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படவேண்டும். அது எமது இறைமையின் அடிப்படையில் உள்ளக சுயநிர்ணய அடிப்படையில் சுகாதாரம், கல்வி, விவசாயம் எனும் எமது உள்ளார்ந்த செயல்முறைகளை எமது மாவட்டங்களில் நாம் தெரிவுசெய்யும் பிரதிநிதிகள் ஊடாக எங்களால் உருவாக்கப்பட்ட மாகாணசபை, பிராந்திய சபை ஊடாக அதிகாரங்களை பயன்படுத்தி எங்கள் தமிழ் மக்கள் அமைதியாகவும் கௌரவத்துடனும் தமது சுயமரியாதையை பாதுகாத்து வாழவேண்டும் என்பதற்காக எம்மால் கடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சர்வதேச சமூகம் எங்கள் நிலைப்பாட்டின் நியாயங்களை உணர்ந்துள்ளது. அதன் அங்கீகாரமும் ஒத்துழைப்பும் எமக்கிருக்கிறது. ஆதலால் பிரச்சினைக்கு தீர்வு காணும் இந்த சந்தர்ப்பத்தை தவறவிட்டு விடக்கூடாது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் தனதுரையின்போது நீண்ட விளக்கத்தை அளித்துள்ளார்.
உண்மையிலேயே இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கான நல்லதொரு சந்தர்ப்பம் தற்போது ஏற்பட்டிருக்கின்றது. நல்லாட்சி அரசாங்கம் ஆட்சி அமைத்து மூன்று வருடங்கள் ஆகப்போகின்றது. இந்தக் கால எல்லைக்குள் அரசியல் தீர்வு என்பது காணப்பட்டிருக்கவேண்டும். ஆனால், அந்த விடயத்திலும் இழுத்தடிப்புக்களும் காலதாமதங்களும் நீடித்து வருகின்றன. தற்போது கூட அரசியல் தீர்வை உள்ளடக்கிய புதிய அரசியல் யாப்புக்கான இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ள போதிலும் இறுதி அறிக்கை எப்போது சமர்ப்பிக்கப்படும் என்ற வினாவிற்கு விடை தேட முடியாத நிலைமை காணப்படுகின்றது.
பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண தம்மாலான முயற்சியினை எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் மேற்கொண்டு வருகின்றார். ஆனால், அரசாங்கத் தரப்பில் அதற்கான ஒத்துழைப்பு போதுமானதாக இல்லை. இவ்வாறான நிலையில் அரசியல் தீர்வைப் பெற்றுக்கொள்ளவேண்டுமாயின் தமிழ் தேசியக்கூட்டமைப்பு ஜனாதிபதி மைத்திரியின் அணியிலேயே இருக்கவேண்டும். இதனை எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் உணர்ந்து கொள்வார் என்று நம்புகின்றோம் என்று சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் பிரமுகரும் இராஜாங்க அமைச்சருமான டிலான் பெரேரா தெரிவித்திருக்கின்றார்.
தமிழ் தேசியக்கூட்டமைப்பு தெற்கில் மிகவும் நவீன கருத்துக்களைக் கொண்ட கட்சியாக தன்னை அடையாளம் காட்டிவருகின்றது. இது தொடர்பில் நாங்கள் மகிழ்ச்சியடைகின்றோம். ஆனால் தெற்கில் இவ்வாறு மிதவாத கட்சியாக தன்னை அடையாளம் காட்டும் கூட்டமைப்பு வடக்கில் இனவாத ரீதியில் பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றது. தெற்கில் தூய்மையான ஹெல உறுமய கட்சியினர் என்ன செய்கின்றனரோ, அதனையே வடக்கில் கூட்டமைப்பினர் செய்துகொண்டிருக்கின்றனர். எனவே, இத்தகைய நிலையை மாற்றி ஜனாதிபதியின் அணியில் கூட்டமைப்பினர் இடம்பெறவேண்டும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
அமைச்சரின் இந்தக்கூற்றானது இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வுக்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பு உரிய வகையில் ஒத்துழைக்கவில்லை என்று குற்றஞ்சாட்டுவதாகவே அமைந்திருக்கின்றது. ஆனால், அரசியல் தீர்வுக்காக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைமையானது பல்வேறு விட்டுக்கொடுப்புக்களுடன் வடக்கு, கிழக்கில் பல்வேறு தமிழ் அரசியல் கட்சிகளின் எதிர்ப்புக்கு மத்தியில் செயற்பட்டு வருகின்றது.
வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் உட்பட பல அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கூட்டமைப்பின் தலைமையை விமர்சித்து வருகின்றனர். தமிழ் மக்களுக்கு உரிய அரசியல் தீர்வை பெறுவதற்கு கூட்டமைப்பின் தலைமை முயலவில்லை என்றும் அரைகுறை தீர்வைத் திணிக்கும் அரசாங்கத்தின் முயற்சிக்கு கூட்டமைப்பு ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவும் குற்றம் சாட்டிவருகின்றனர். எதிர்க்கட்சித் தலைவர் மீது நேரடியான குற்றச்சாட்டுக்களும் விமர்சனங்களும் முன்வைக்கப்படுகின்றன.
எனவே, இதனை உணர்ந்தாவது தென்பகுதி அரசியல் தலைமை கள் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனை விமர்சிப்பதையோ, குற்றம் சாட்டுவதையோ நிறுத்தி தமிழ் மக்களுக்கு நியாயமான தீர்வினை வழங்க முன்வரவேண்டும் என்பதை வலியுறுத்த விரும்புகின்றோம்.v
http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-01-22#page-4
Leave a Reply
You must be logged in to post a comment.