‘இராஜிநாமா’  முடிவு கஸ்டமானது; மனம் திறந்த சத்தியலிங்கம்

‘இராஜிநாமா’  முடிவு கஸ்டமானது; மனம் திறந்த சத்தியலிங்கம்

வடமாகாண சுகாதர அமைச்சராக பணியாற்றி வைத்தியகலாநிதி ப.சத்தியலிங்கம் இராஜினாமச் செய்த பின்னர் மனம் திறந்து கருத்துக்களை முன்வைத்தார். அவை வருமாறு,

கடந்த 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற வடமாகாசபைத் தேர்தலிலே, நான் வவுனியா மாவட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஊடாக போட்டியிட்டு. மாவட்டத்தில் அதிகூடிய வாக்குகளைப் பெற்று வெற்றியடைந்ததையடுத்து, வடக்கு மாகாண சபையின் முதலாவது சுகாதார அமைச்சர்  என்ற பதவி எனக்கு வழங்கப்பட்டது.

கிட்டத்தட்ட நான்கு வருட காலப்பகுதியிலே, ஓர் அமைச்சராக இந்த மாகாணத்தின் மக்களால் தெரிவுசெய்யப்பட்;டவன் என்ற அடிப்படையிலே,  சுகாதார அமைச்சுக்குரிய எல்லா வேலைத்திட்டங்களையும் முன்னெடுத்திருந்தேன்.

நாங்கள் வடக்கு மாகாண சபையைப் பொறுப்பேற்றபோது, அமைச்சர்கள்; இருப்பதற்குக் கூட ஓர் அலுவலகம் இல்லாத நிலையிலே நாங்கள்  இருந்து செயற்படுவதற்குரிய அலுவலகத்தைத் தெரிந்தெடுத்ததில் இருந்து, இன்று வரை, எங்களை இந்த மாகாண சபையின் உறுப்பினர்களாகத் தெரிவு செய்த, நீண்டகால யுத்தத்தினால் துன்பப்பட்ட எங்கள் மக்களுடைய அடிப்படை தேவைகளை இனங்கண்டு. அவற்றைப் பூர்த்தி செய்வதற்குரிய  வேலைத் திட்டங்களை முன்னெடுத்திருந்தேன்.

இந்த காலப்பகுதியிலே மக்களுடைய அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டிய பாரிய பொறுப்பு என்ற சுமை எங்களுக்குத்  தரப்பட்டிருந்தது.  அதன் அடிப்படையில் சுகாதார அமைச்சர் என்ற வகையில், எங்களுடைய மாகாணத்தின் 30 வருட கால யுத்தத்தினால் முற்று முழுதாக   சிதைக்கப்பட்டிருந்த மக்களுக்கான சுகாதாரத் தேவைகளை இனங்கண்டேன்.

அதற்கும் அப்பால், இந்த மாகாணத்தின் எதிர்கால சுகாதார சேவைகள் எவ்வாறானதாக இருக்க வேண்டும் என்பதை, சுகாதாரத்தோடு தொடர்புடையவ்கள் மற்றும் சுகாதாரத்தோடு தொடர்பில்லாத போதிலும் சமூகத்தின் நலன்களில் அக்கறையோடு இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட நிபுணர்களுடன் சேர்ந்து, அவர்களுடைய நிபுணத்தின் அடிப்படையிலே எங்களுடைய மாகாணத்திற்கான நீணடகால சுகாதாரத் திட்டம் ஒன்றை  உருவாக்கியிருந்தோம்.

அந்தத் திட்டத்தின் அடிப்படையில், நான், இந்த மாகாண சபையின் சக்திக்கு உட்பட்ட வகையிலும், மாகாண சபைக்கும் அப்பால், எங்களுடைய  புலம்பெயர் உறவுகளினதும், மற்றும் மத்திய அரசாங்கத்தினதும் அனுசரணையோடு, பல சுகாதார வேலைத்திட்டங்களை பொறுப்புள்ள சுகாதார அமைச்சர் என்ற வகையில் முன்னெடுத்திருந்தேன்.

முதலமைச்சரின் நிலைப்பாடு

வடமாகாண சபையை நாங்கள் பொறுப்பேற்றதன் சுகாதாரத்துறையில் ஏற்பட்டுள்ள அபிவிருத்தியை கொஞ்சம் கொஞ்சமாக எமது மக்கள் இப்போது உணரவும் பார்க்கவும் ஆரம்பித்திருக்கின்றார்கள். இத்தகைய ஒரு சூழ்நிலையிலேதான், எங்களுடைய மாகாண சபையிலே அமைசர்களால்  செய்யப்பட்டதாகக் கூறப்படுகின்ற ஊழல்கள் அல்லது முறைகேடுகள் தொடர்பாக விசாரணை ஒன்றை செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டை முதலமைச்சர் அவர்கள் எடுத்திருந்தார்.

ஆரம்பத்திலே இது, குறிப்பிட்ட ஓர் அமைச்சர் தொடர்பிலானதாக இருந்தாலும், ஏதோ காரணங்களினால், குற்றங்கள் இல்லாத அமைச்சர்களைக் விசாரணை செய்ய வேண்டும் என்ற முடிவை முதலமைச்சர் அவர்கள் எடுத்து, அமைச்சர்கள் மீது ஏதாவது ஒரு குற்றச்சாட்டு இருந்தாலும் குறிப்பிட்ட திகதிக்குள் தனக்குத் தர வேண்டும் என்று   பத்திரிகைகள் வாயிலாக விளம்பரப்படுத்தினார்.

விசாரணையும் குழப்பங்களும்

அந்த விளம்பரத்தில் குறிக்கப்பட்டிருந்த காலப்பகுதியில், என்மீது குறிப்பாக மக்களாலோ அல்லது மக்கள் அமைப்புக்களினாலோ எந்தவிதமான  குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்படாத நிலையில், சக மாகாண சபை உறுப்பினராகிய அனந்தி சசிதரன் அவர்கள் மாத்திரம், எனக்கு எதிராக  ஐந்து குற்றச்சாட்டுக்களை முன் வைத்திருந்தார்.

அதனடிப்படையிலே, முதலமைச்சர் அவர்கள் இரண்டு நீதிபதிகளையும் முன்னாள் அரசாங்க அதிபர் ஒருவரையும் உள்ளடக்கிய ஒரு விசாரணை குழுவை அமைத்திருந்தார். அந்த விசாரணைக்குழு விசாரணைகளை முன்னெடுத்தபோது நாங்கள் அமைச்சர்கள் நான்கு பேரும் பூரண  ஒத்துழைப்பை வழங்கியிருந்தோம்.

விசாரணைகளின் முடிவில் அந்த குழு வழங்கியிருந்த விசாரணை அறி;க்கையில், என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படவில்லை. அவைகள் பொய்யானவை என்றும் அதற்கு மேலதிகமாக சுகாதார அமைச்சர் என்ற வகையில் நான் முன்னெடுத்திருக்கின்ற  வேலைத்திட்டங்களை மேலும் சிறப்பாகச் செயற்படுத்துவதற்கு, மாகாண சபை தனது பூரணமான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்ற வேண்டுகோள்  விடுக்கப்பட்டிருந்தது.

அந்த விசாரணை அறிக்கையின் பரிந்துரையின்படி மாகாண அமைச்சர்கள் இரண்டு பேர் தங்களுடைய பதவியில் இருந்து விலக வேண்டும் என்று முதலமைச்சர் அவர்கள் தெரிவித்திருந்தார்.

ஆயினும், ஏனைய குற்றம் நிரூபிக்கப்படாத அல்லது குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுவிக்கப்பட்ட ஏனைய இரு அமைச்சர்களும் தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என்று அந்த அறிக்கை பரிந்துரைத்திருந்த போதிலும், முதலமைச்சர் அவர்கள் எங்கள் இருவர் மீதும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டை எடுத்திருந்தார். அதன் அடிப்படையில் எங்களை கட்டாய லீவில் செல்லுமாறும் அவர் சொல்லியிருந்தார்.  அதனைத் தொடர்ந்து எங்களுடைய மாகாணசபையிலே பலவிதமான குழப்பங்கள் ஏற்பட்டிருந்தன.

நாங்கள் கூறிய செய்தி

அதனையடுத்து. தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்களும், முதலமைச்சர் அவர்களும் எழுத்து மூலமாக உடன்பட்டதன் அடிப்படையில், பதவி விலகாத ஏனைய இரு அமைச்சர்களாகிய நாங்கள் இருவரும் முதலமைச்சருக்கு ஒரு செய்தியைச் சொல்லியிருந்தோம்.

அதாவது, நீங்கள் இருவரும் – தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவரும், முதலமைச்சரும் ஏற்றுக்கொண்டதன் அடிப்படையிலே, சட்டரீதியான,  நடுநிலையானதொரு குழுவை அமைத்து, விசாரணை நடத்தினால் நாங்கள் அந்த குழுவின் முன்னால் எந்தவிதத் தயக்கமுமின்றி, குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக நாங்கள் மீண்டும் விசாரணைக்கு உட்படுவததற்கு எமது பூரண சம்மதத்தைத் தெரிவித்திருந்தோம்.

இருந்தபோதும் முதலமைச்சர் அவர்கள், இரண்டு அமைச்சர்களாகிய எங்கள் இருவரையும் மாகாண அமைச்சர் வாரியத்தில் இருந்து வெளியேற்றுவதற்குத் தொடர்ச்சியாக முயற்சிகளை எடுத்திருந்தார்.

முதலமைச்சரின் கடிதம்

எங்கள் மாகாண சபைக்கு இன்னும் ஒரு வருடமும் சில மாதங்களும் மட்டுமே பதவிக்காலமாக இருக்கின்றது. இந்த நிலையிலே, முப்பதுவருட கால யுத்தத்தில் அனுபவித்த துன்பங்களையும்,

இழப்புக்களையும் முதன்மைப்படுத்தி அவற்றை சீர் செய்வதற்கு அல்லது அவர்களுடைய அடிப்படை தேவைகளைப் பூர்த்தி செய்வது தொடர்பில்  கூடிய கவனம் செலுத்தி செயற்பட வேண்டும் என்பதற்காக குறிப்பாக நான் சுகாதார அமைச்சர் என்ற வகையில் சுகாதாரம்சார்ந்த பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்திருக்கின்றேன்.

இச்த நிலையில் கடந்த இரண்டாம் திகதி முதலமைச்சர் அவர்கள் எனக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். அதிலே, தான் ஒரு விசாரணை குழுவை அமைத்திருப்பதாகவும், அந்த குழுவின் முன்னால் தோன்றி விசாரணைக்கு நாங்கள் ஒத்துழைக்கமாட்டோம் என்று தெரிவித்திருந்தாக ஊடகங்கள் வாயிலாக தான் அறிந்ததாகவும், அந்தச் செய்தி உண்மையா அல்லது பொய்யானதா என்பதை எழுத்து மூலமாகத் தனக்கு அறிவிக்குமாறு அந்தக்  கடிதத்தில் முதலமைச்சர் அவர்கள் கேட்டிருந்தார். இந்தக் கடிதம் 8 ஆம் மாதம் 2 ஆம் திகதி என்று திகதியிடப்பட்டிருந்த போதிலும், எனக்கு 5 ஆம்  திகதியே ஈமெயில் ஊடாக அனுப்பப்பட்டிருந்தது.

முதலமைச்சருடைய அந்தக் கடிதத்திற்கு நான் அனுப்பியுள்ள பதில் கடிதத்தில் சட்ட ரீதியான நடுநிலையான ஒரு விசாரணைக்குழுவை நீங்கன்   அமைத்தால், அதன் முன்னிலையில் தோன்றி அவர்களுடைய விசாரணைகளில் பங்கெழுப்பதற்கு மிகவும் ஆர்வமாக இருக்கிறேன் என்று நான் தெரிவித்திருக்கிறேன்.

இப்போதைய பிரச்சினை 

தொடர்ந்து,5 ஆம் திகதி முதலமைச்சருடைய இல்லத்திலே அவரும், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சித் தலைவர்களுடன் நடத்திய கூட்டத்தின் ஆரம்பத்தில் இருந்து இறுதி வரையில் குறிப்பாக என்னை அமைச்சர் வாரியத்திலிருந்து நீக்க வேண்டும் என்பதில் மிகவும் பிடிவாதமாக இருந்திருக்கின்றார்.

முதலமைச்சர் அவர்களினால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவானது என்னை நிரபாராதி என்று தெரிவித்திருந்த போதிலும்கூட, அரசியல்
நோக்கத்திற்காக என்னை அமைச்சர் வாரியத்தில் இருந்து நீக்க வேண்டும் என்பதற்காக எடுத்து வருகின்ற தீராத முயற்சி அந்தக் கூட்டத்தில் வெளிப்பட்டிருக்கின்றது.

அதன் அடிப்படையிலே, நாங்கள் – தமிழரசுக் கட்சியின் மாகாண சபை உறுப்பினர்கள் யாழ்ப்பாணத்திலே கூடி மாகாண சபையின் நிலைமைகளை ஆராய்ந்தோம்.வடமாகாண சபையின் அமைச்சர் வாரியத்தில் யார் அமைச்சராக இருப்பது என்பது இப்போதைய நிலையில் தமிழ் மக்களுடைய  பிரதானமான பிரச்சினையாக இருக்கவில்லை. அதிலும் பார்க்க, அதிலும் முக்கியமாக பல பிரச்சினைகள் எம் முன்னால் இருக்கின்றன.

இனவிடுதலைக்கான இந்த நீண்டகாலப் போராட்டத்திலே, நாங்கள் எல்லோரும் எதிர்பார்த்திருக்கின்ற தமிழ்பேசும் மக்களுடைய அடிப்படை உரிமைகளை உள்ளடக்கி தாங்களே தங்களை ஆளக்கூடிய, ஒரு பூரணமான ஒரு சுயாட்சியை ஏற்படுத்தக்கூடிய நல்லதொரு அரசியல் தீர்வை நோக்கி  நகர வேண்டிய ஓர் இறுதிச்சந்தர்ப்பமாக இன்றைய நிலைமையை நாங்கள் கருத வேண்டியிருக்கின்றது என அந்தக் கூட்டத்திலே நாங்கள் தீர்மானித்தோம்.

அமைச்சரவையில் சேர்வதில்லை

தற்போது வடக்கு மாகாணத்திலும் அதேபோன்று கிழக்கு மாகாணத்திலும், காணி அபகரிப்பு, சிங்களக் குடியேற்றம், காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய பிரச்சினை, அரசியல் கைதிகளின் பிரச்சினை என நீண்டதொரு பட்டியலே தயாரிக்கும் அளவுக்கு எங்களுடைய மக்கள் பிரச்சினைகளை எதிர்நோக்கி, துன்பத்தில் இருக்கின்ற நிலையில், எங்களைப் பொருத்தமட்டிலே   இந்த மாகாண அமைச்சர் வாரியத்தில் யார் அமைச்சராக இருப்பது,  எந்தக் கட்சியைச் சார்ந்தவர்கள் அமைச்சராக இருப்பது என்பதை இரண்டாம்பட்ச பிரச்சினையாகவே நாங்கள் பார்க்கிறோம்.

அதேநேரம் முதலமைச்சர் அவர்கள் அரசியல் நோக்கத்திற்காக அல்லது அரசியல் அடிப்படையில், குற்றமற்றவன் என்று விசாரணைக்குழு தெரிவித்ததன் பின்னரும், வடமாகாண அமைச்சர் வாரியத்தில் இருந்து என்னை நீக்க வேண்டும் என்று தொடர்ச்சியாக முயன்று கெர்ணடிருக்கின்றார்.

இந்த நிலையிலே சமூகத்தில் இப்போது காணப்படுகின்ற வாள்வெட்டு மற்றும் குற்றச்செயல்களையும், மாகாண சபை வாரியத்திலே யார் இருப்பது யார் விலகுவது என்பதையுமேமாகாண சபை உறுப்பினர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும், எங்களுடைய பிரச்சினைகளாக எங்கள் மக்களுடைய பிர்ச்சினைகளாக நோக்குகின்ற நிலைமையை உருவாக்கியிருக்கின்றது.

இது, உண்மையான பிரச்சினைகளில் இருந்து எமது கவனத்தை திசை திருப்புவதற்கான ஒரு சதி முயற்சியாகவே நாங்கள் இந்தக் கூட்டத்தின் கலந்துரையாடலின் மூலம் உணர்கின்றோம். அதன் அடிப்படையிலேயே தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த மாகாண சபை உறுப்பினர்களாகிய நாங்கள்  இந்தக் கூட்டத்தில், வடமாகாண சபையின் அமைச்சர் வாரியத்தில் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த எவரும் கூட அமைச்சராகப் பொறுப்பேற்பதில்லை என்ற முடிவை எடுத்தோம். அந்தத் தீர்மானத்தை எங்களுடைய கட்சியின் தலைமைப்பீடத்திற்கு நாங்கள்     அறிவித்திருக்கின்றோம்.

எனது இராஜிநாமா

அந்த அடிப்படையில் என்னை அமைச்சர் பதவியில் இருந்து அகற்ற வேண்டும் என்று தொடர்ச்சியாக உள்நோக்கத்துடன் எடுக்கப்படுகின்ற நடவடிக்கைக்காகவும், இப்போதைய பிரச்சினை அமைச்சர் வாரியத்தின் பிரச்சினை அல்ல, மாறாக மக்களுடைய அடிப்படை பிரச்சினைகளாக வேறு பிரச்சினைகள் இருக்கின்றன

அவற்றில் கூடிய கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காகவும், தமி;ழரசுக் கட்சியின் வடமாகாணசபை உறுப்பினர்கள் எவரும் வடமாகாண சபையின் அமைச்சர் வாரியத்தில் இருக்கக்கூடாது என்று அந்த உறுப்பினர்களுடைய கூட்டத்தில் ஏகமனதாக எடுக்கப்பட்ட முடிவுக்கு அமைவாகவும் எனது அமைச்சர் பதவியை நான் இரரஜிநாமா செய்வதாக நான் முடிவெடுத்திருக்கிறேன். மிகவும் கஸ்டமான இந்த முடிவை மனவருத்தத்தோடு எடுப்பதற்கு நான் நிர்ப்பந்திக்கப்பட்டேன்

எனது இந்த முடிவை எங்களுடைய கட்சித் தலைவருக்கும், வடமாகாண சபையின் முதலமைச்சருக்கும், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்களுக்கும் நான் மின்னஞ்சல் வழியாகத் தெரிவித்திருக்கின்றேன். அந்தப் பிரதிகளை நேரடியாக அவர்களிடம் கையளிப்பதற்கும் நான் நடவடிக்கை எடுத்துள்ளேன்.

நன்றியும் கோரிக்கையும்

இவ்வளவு காலமும், இந்த மாகாணத்தின் சுகாதார சேவையை மேம்படுத்துவதற்கும், எனக்கு வாக்களித்த மக்களுடைய அடிப்படை பிரச்சினைகளை இல்லாமல் செய்வதற்கும் அல்லது குறைப்பதற்கும் எடுத்த நடவடிக்கைகளில் எனக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் பிரச்சினைகளைக் கையாள்வதற்கு என்னோடு உதவியாக இருந்த ஊடகத்துறையினர் உட்பட அனைவருக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஏனைய மாகாணங்களுக்கு முன்னுதாரணமான பல வேலைத்திட்டங்களை நாங்கள் எங்கள் மாகாணத்திலே நடைமுறைப்படுத்தியிருக்கிறோம். இன்னும் செயற்படுத்தி வருகின்றோம். அத்துடன் எதிர்காலத்தில் செயற்படுத்த வேண்டிய வேலைத்திட்டங்களையும் முன்னெடுத்திருக்கின்றோம்.

அவற்றை முன்னெடுப்பதற்கு எனக்கு உதவிபுரிந்த – புலம்பெயர் நாடுகளைச் சேர்ந்த அமைப்புக்கள், வைத்தியர்கள், தனிப்பட்டவர்கள், தமிழ்த்தேசியத்தின்பால் அக்கறையோடு செயற்பட்டு வருகின்றவர்கள் அனைவருக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஏனைய மாகாணங்களில் இல்லாத வகையில், எங்களுடைய மக்களுக்கு மிகவும் அவசியமாகத் தேவைப்படுகின்ற சுகாதார உட்கட்டு மாணங்களையும், சேவைகளையும் நாங்கள் ஆரம்பித்தவற்றை தொடர்ச்சியாக எங்களுடைய மக்களுக்குக் கிடைப்பதற்கு குறிப்பாக முதலமைச்சர் அவர்களும் அமைச்சர் வாரியமும், எந்தவொரு இடையூறும் வராத வகையில் அவற்றை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்ற கோரிக்கையையும் இந்த சந்தர்ப்பத்திலே நான் முன்வைக்கிறேன்.

முன்னுதாரணமான பல சேவைகளை முன்னெடுப்பதற்கு மத்திய சுகாதார அமைச்சோடும், மத்திய அரசாங்கத்தோடும் தொடர்பு கொண்டபோதெல்லாம் அனுசரணை வழங்கி உதவி புரிந்த அவர்களுக்கு, எங்களுடைய மக்கள் சார்பிலான நன்றிகளையும் எனது நன்றிகளையும் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

நெதர்லாந்து அரசின் உதவித் திட்டம்

எங்களுடைய மாகாணத்தின் சுகாதார அபிவிருத்திக்காக நெதர்லாந்து பிரதிநிதிகளுடன் நான் கதைத்து, இப்போது அமைச்சரவையிலும் அங்கீகாரம் பெற்று கிட்டத்தட்ட 14 ஆயிரத்து 65 மில்லியன் ரூபா நிதியைப் பெறுவதற்கான அனைத்து வேலைத்திட்டங்களும் நிறைவடைவதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளேன். எமது நாட்டின் அமைச்சரவை அந்த வேலைத்திட்டங்களுக்கான அனுமதியை அண்மையில் வழங்கியுள்ளது.

அதனையடுத்து கடந்த வாரம் நெதர்லாந்து நாட்டு வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் இருவர் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்து என்னைச் சந்தித்தபோது, ஒருசில மாதங்களில் இந்த வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கலாம் என்ற மகிழ்ச்சியான செய்தியைத் தெரிவித்தார்கள்.

துன்பப்பட்ட மக்களுடைய அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்காக நாங்கள் ஏற்கனவே ஆரம்பித்த வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதோடு, எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்துவதற்குக் கைகூடியுள்ள பல திட்டங்களை, எந்தவிதமான இடையூறுமின்றி முன்னெடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் அவர்களையும், அமைச்சர் வாரியத்தையும் வடமாகாணசபையைச் சேர்ந்த அதிகாரிகளையும் இந்தச் சந்தர்ப்பத்தில் கேட்டுக்கொள்கிறேன்.

வடமாகாண சுகாதார அமைச்சை திறம்பட செயற்படுத்துவதற்கு என்னோடு தோளோடு தோள் நின்று பணியாற்றிய அமைச்சின் செயலாளர் அதிகாரிகள் தொடக்கம் உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்

நிர்ப்பந்தம் இல்லை

தமிழரசுக் கட்சியினரோ அல்லது வேறு எவருமே பதவியை இராஜிநாமா செய்யுமாறு தான் நிர்ப்பந்திக்கவில்லை எனது மக்கள் பணி தொடர்ந்து கொண்டிருக்கும். உண்மைக்கான பதிலை காலம் கூறும் என்றார்

About editor 3045 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply