எமது மக்கள் சுதந்திரம் கிடைத்த காலம் தொட்டு அரசியல் மயப்படுத்தப்பட்டு வந்தவர்கள்! நக்கீரன்

எமது மக்கள் சுதந்திம் கிடைத்த காலம் தொட்டு அரசியல் மயப்படுத்தப்பட்டு வந்தவர்கள்! நக்கீரன்

கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் 16 பேரும் சாதித்தது என்ன..? 

2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் பேரவலத்துடன் தமிழ் மக்களுக்கான உரிமைப் போராட்டம் வேறு வடிவத்தை பெற்றிருந்தது.

கடந்த காலத்தில் அகிம்சை ரீதியாக போராடிய தமிழ்த் தேசிய இனத்தின் கோரிக்கைகளையும், அபிலாசைகளையும் தென்னிலங்கையின் இரு பிரதான கட்சிகளும் கண்டு கொள்ளவில்லை. 

மாறாக தமிழ் மக்களின் பிரதிநிதிகளால் மேற்கொள்ளப்பட்ட ஜனநாயக ரீதியான போராட்டங்களை அடக்குவதிலும், அவற்றை இழிவு படுத்துவதிலுமே கவனம் செலுத்தியிருந்தனர்.

இதன் காரணமாக தென்னிலங்கை ஆட்சியாளர்கள் மீது அதிருப்தி அடைந்த இளைஞர்கள் ஆயுதம் ஏந்திப் போராட வேண்டிய நிலமை ஏற்பட்டிருந்தது. 

ஆயுத ரீதியாக தமிழ் மக்களால் மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தை பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் என்ற பேரில் மஹிந்த அரசாங்கம் சர்வதேச நாடுகளின் உதவியுடன் முடிவுக்கு கொண்டு வந்திருந்தது. 

அதன் பின்னரான தமிழ்த் தேசிய அரசியல் என்பது மீண்டும் ஜனநாயக வழியையே நம்பி இருக்க வேண்டிய சூழலை உருவாக்கியுள்ளது.

யுத்தம் முடிவடைந்த பின்னர் தமிழ் மக்கள் தமது தலைமையாக தமிழ் தேசியக் கூட்டமைப்பையே நம்பிச் செயற்பட்டிருந்தனர். 

தமிழீழ விடுதலைப் புலிகளால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டிருந்ததுடன், தமிழ் மக்களது அபிலாசைகளை முன்னிறுத்தியே தமிழ் தேசியக் கூட்டமைப்பும் தேர்தல்களில் போட்டியிட்டு இருந்தது. அதன் அடிப்படையிலேயே தமிழ் மக்களின் ஆணையையும் அது பெற்றிருந்தது.

ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கடந்த 8 ஆண்டுகளில் எதைச் சாதித்து இருக்கின்றது என்ற கேள்வி இன்று எல்லோர் மனங்களிலும் எழுந்திருக்கின்றது. 

2013ஆம் ஆண்டு நடைபெற்ற வடமாகாண சபைத் தேர்தலின் போது பல்வேறு அழுத்தங்களுக்கு மத்தியில் தமிழ் மக்கள் அலை அலையாக திரண்டு வந்து வழங்கிய ஆணையின் அடிப்படையில் அதிக பெரும்பான்மை பலத்துடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வடக்கு மாகாண சபையில் ஆட்சியமைத்தது. 

மாகாணசபைக்குள் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் இருக்கின்ற போதும் ஆளும் கூட்டமைப்பு உறுப்பினர்களே எதிர்க்கட்சி போன்றும் செயற்பட்டு வந்திருந்தனர். இதன் காரணமாகவே மாகாண சபைக்குள் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டிருந்தது.

இந்த நிலையில் அந்த குழப்பங்களை கட்டுப்படுத்த வேண்டிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமையாக இருந்தாலும் சரி அல்லது பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்தாலும் சரி அதனை கட்டுப்படுத்துவதை விடுத்து அந்த பிரச்சினைகள் கட்சிக்குள் விஸ்வரூபம் எடுக்கும் வகையில் செயற்பட்டிருக்கின்றனர்.

வடமாகாண சபை தொடர்பாக பல்வேறு விமர்சனங்களை கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களும் முன்வைத்து வருகின்றனர். வடமாகாண சபை என்ன செய்தது எனவும் அவர்கள் கேள்வி எழுப்பி இருக்கிறனர்.

வடமாகாண சபை என்பது அதிகாரமற்ற ஒன்று. அதற்குரிய அதிகாரங்களைப் பெற்று மக்களுக்கு சேவை செய்ய அது இன்னும் போராடவேண்டியே இருக்கிறது. மாகாணசபை அதிகாரங்களை வைத்து எதனையும் சாதித்து விட முடியாது என்பது கடந்த கால வரலாறு.

பதில்: இந்தக் கட்டுரை முக்கால்வாசி காழ்ப்புணர்ச்சியோடு ஒருதலைப் பட்சமாக எழுதப்பட்டுள்ளது. கட்டுரையாளர் ததேகூ ஒன்றுமே செய்யவில்லை என்று குற்றம் சாட்டுகிறார். அதில் உண்மையில்லை. பலவற்றை ததேகூ சாதித்துள்ளது. சிலவற்றை செய்யவில்லை. மாகாண சபைக்கு இப்போதுள்ள அதிகாரங்களை வைத்துப் பலவற்றைச் சாதிக்கலாம். அதிகாரமற்ற சபை  என்றால் மாகாண சபைக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் ஏன் போட்டியிடுகிறார்கள்? வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம். வட மேற்கு மாகாண முதல்வர் தனது மாகாணத்துக்கு வெளிநாட்டு முதலீட்டார்களை அழைக்கப் போவதாக அண்மையில் பேசியிருக்கிறார்.

இந்த நிலையில், 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலின் போது வடக்கு, கிழக்கு இணைந்த சுயாட்சி, சமஸ்டி அடிப்படையில் ஒரு நிரந்தர தீர்வு உள்ளிட்ட மீள்குடியேற்றம், காணாமல்ஆக்கப்பட்டோர் விவகாரம், அரசியல் கைதிகள் பிரச்சினை என தமிழ் மக்கள் முன்னுள்ள பல பிரச்சினைகளை தமது தேர்தல் விஞ்ஞாபனமாக முன்வைத்து தமிழ் தேசியக்கூட்டமைப்பு மக்கள் ஆணையைக் கோரியிருந்தது. 

இதனடிப்படையில் 14 பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்களின் ஆணை மூலம் நேரடியாக தெரிவு செய்யப்பட்டதுடன், இரு உறுப்பினர்கள் தேசியப்பட்டியல் மூலமும் தெரிவு செய்யப்பட்டனர். 

இதனால் கூட்டமைப்பில் 16 பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றார்கள். ரணில் – மைத்திரி அரசாங்கத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கி இந்த அரசாங்கத்தை சர்வதேச அழுத்தங்களில் இருந்து காப்பாற்றிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் அதன் மூலம் தமிழ் மக்களுக்கு பெற்றுக் கொடுத்தது என்ன…? 

பதில்:யார் சொன்னது ததேகூ அரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்குகிறது என்று? ததேகூ அரசோடு இணக்க அரசியல் நடத்துகிறது. ஆயுதப் போராட்டத்தினால் சாதிக்க முடியாமல் போனவற்றை ததேகூ  இராசதந்திர வழிகளில் சாதிக்க முயற்சிக்கிறது.

2016ஆம் ஆண்டுக்குள் தீர்வு வரும் என கூட்டமைப்பு தலைவர் இரா.சம்மந்தன் முன்னர் கூறியிருந்தார். ஆனால் தற்போது 2017 ஆம் ஆண்டும் இறுதிக்காலாண்டை அண்மித்துள்ளது. 

எந்த தீர்வை அவரால் பெற முடிந்தது. அல்லது எந்த தீர்வை பெற முடியும் என நம்பிக்கையை வழங்க முடிந்தது. குறைந்த பட்சம் தமிழ் அரசியல் கைதிகளையாவது விடுதலை செய்ய முடிந்ததா..?

பதில்: இது மலிவான குற்றச்சாட்டு. அரசியல் உரிமைகளை வென்றெடுப்பது இலேசான காரியமல்ல.  அதிலும் போரில் தோற்ற தரப்புக்கு அது இலகுவான செயல் அல்ல. மேலும் உரிமைப் போராட்டம் என்பது யாழ்தேவிப் பயணம் இல்லை. கோட்டையை விட்டு காலை 9.00 மணிக்கு புறப்பட்டு மாலை 2.00 மணிக்கு யாழ்ப்பாணம்  போய் சேருவது போன்ற தொடர்வண்டிப்  பயணம் இல்லை.

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஒரு புதிய யாப்பை உருவாக்கும் முயற்சியில் அரசியல் நிர்ணய சபை ஈடுபட்டு வருகிறது. வருகிற செப்தெம்பர் 5 ஆம் நாள் புதிய அரசியல் அமைப்பின் வரைவை அரசியல் நிர்ணய சபை விவாதிக்க இருக்கிறது. இது தொடர்பாக ஐதேக, சிறிலங்கா சுதந்திரக் கட்சி, ததேகூ  இடையே ஒரு இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

2015 ஆம் ஆண்டு ஐ.நா மனிதவுரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட 30-1 தீர்மானம் நடைமுறைப்படுத்துவதற்கான அறிகுறிகள் எதுவுமின்றியே அதே தீர்மானத்தை அமுல்படுத்துவதற்கு 34-1 இன் மூலம் அரசாங்கத்திற்கு மேலும் இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் வழங்கப்பட்டு இருக்கிறது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைமையின் ஆதரவுடன் இந்த காலநீடிப்பில் அரசாங்கம் வெற்றி பெற்றிருக்கிறது. அந்த காலநீடிப்பு வழங்கி 6 மாதங்கள் கடந்து விட்டது. இதன் பின் கிடைத்த மாற்றம் என்ன..?வடக்கு, கிழக்கு இணைந்த சுயாட்சி பற்றி தேர்தல் மேடைகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் பேசிவந்தனர். 

பதில்: ஐநாம உரிமைப் பேரவையின் 30-1  மற்றும் 34-1 தீர்மானங்களை முழுமையாக  நடைமுறைப்படுத்த வேண்டிய கடப்பாடு இலங்கை அரசுக்கு இருக்கிறது. அதில் இருந்து அது தப்ப முடியாது. அண்மையில் ஐரோப்பிய ஒன்றியம் இந்த இரண்டு தீர்மானங்களையும் சிறிலங்கா அரசு முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் எனக் கோரியுள்ளது. நிறைவேற்றாவிட்டால் அதற்கான விளைவுகளை இலங்கை அரசு எதிர்கொள்ள நேரிடும். கால அவகாசம் கொடுத்தது ததேகூ அல்ல. அமெரிக்காவும் அதன் நேச நாடுகளுமே கால அவகாசம் கொடுத்தன. கால அவகாசம் கொடுக்காவிட்டால் இந்த இரண்டு தீர்மானங்களும் செயலற்றுப் போகும். அதுதான் கட்டுரையாளரின் விருப்பமா?

ஆனால் இன்று அரசாங்கம் வடக்கு, கிழக்கு இணைப்பு கிடையாது என கூறி வருகின்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சிலரும் வடக்கு, கிழக்கு இணைப்பு தற்போதைக்கு சாத்தியம் இல்லை என கூறுகின்றனர். 

பதில்: இணைப்புக்கு சாத்தியம் இல்லாமல் இருப்பதற்கு முக்கிய காரணம் கிழக்கில் இன்று தமிழர் சிறுபான்மையாக இருக்கிறார்கள். திருகோணமலை மற்றும் அம்பாரை மாவட்டங்களில் தமிழர்கள் முறையே 33, 19 விழுக்காடாக இருக்கிறார்கள். மேலும் முஸ்லிம்கள் ஒன்று பட்ட வட – கிழக்கு மாகாணத்தில் தாங்கள் சிறுபான்மையராகப் போய்விடும் ஆபத்து இருப்பதாக நினைக்கிறார்கள். இன்று அவர்கள் திருகோணமலையில் 45.47 விழுக்காடும் அம்பாரையில் 44.21 விழுக்காடாகவும் மட்டக்களப்பில் 25.02 விழுக்காடாகவும் இருக்கிறார்கள். இன்று கூட வட – கிழக்கு மாகாண சபைகள் இணைப்பிற்கு தனித் தனி தீர்மானங்கள் நிறைவேற்றினால் இணைப்பு சாத்தியமாகிவிடும்.

ஒற்றையாட்சி முறைக்குள்ளேயே தீர்வு என அரசாங்கம் கூறுகின்றது.பௌத்த சமயத்திற்கே முன்னுரிமை வழங்க வேண்டும் என பௌத்த மாநாயக்கர்கள் கோருகின்றனர். 

பதில்: ஒற்றையாட்சி, இணைப்பாட்சி இவை இரண்டும் தனித்தனி அரசியல் முறைமைகள் அல்ல. எந்த நாடும் முற்றாக ஒற்றையாட்சி நாடாகவோ முற்றிலும் இணைப்பாட்சி நாடாகவோ இல்லை. பிரித்தானியா ஒற்றையாட்சி நாடு. ஆனால் ஸ்கொட்லாந்து கிட்டத்தட்ட ஒரு தனி நாட்டுக்கான அம்சங்கள் கொண்டது. நாடாளுமன்றம், மத்திய வங்கி, தனிக் கொடி, தனி வரிமுறை அந்த நாட்டுக்கு உண்டு. எனவே உருவத்தை விட்டு விட்டு உள்ளடக்கத்தை நாம் பார்க்க வேண்டும். புதிய யாப்பு (வரைவு) மாகாண சபையே  அதிகார அலகாக இருக்கும். கச்சேரி முறைமை ஒழிக்கப்படும்.  

ஜனாதிபதி, பிரதமருடைய கருத்துக்கள் கூட அதனை ஆமோதிப்பதாகவே அமைந்திருக்கின்றது. இந்த நிலையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தை முழுமையாக மீறிய நிலையில் ஒரு தீர்வை அரசாங்கம் திணிக்க முற்பட்டுள்ளது. 

பதில்: இது கட்டுரையாளரின் கற்பனை. முன்னர் போலல்லாது (1972, 1978) இம்முறை சகல கட்சிகளும் ஒரு இணக்கப்பாட்டுக்கு வந்திருக்கின்றன. புற நடை மகிந்த இராபபக்சாவின் சிறிலங்கா சுதந்திரக் கட்சி.

நிபந்தனையற்ற ஆதரவை வழங்கி வருகின்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்த விடயத்தில் காத்திரமாக என்ன செய்திருக்கின்றது. 

பதில்: என்ன செய்திருக்கிறது என்று கேட்பது சுலபம். அதைவிடச் சுலபம்  வாயால் சொல்வது. மாலைக் கண்காரர்களுக்கு எல்லாம் செம்மஞ்சள் நிறமாகமே தெரியும்! 

குறைந்த பட்சம் மக்களையும், சமூக செயற்பாட்டாளர்களையும் ஒன்றிணைத்து தமது தேர்தல் விஞ்ஞாபனத்தை நடைமுறைப்படுத்த அழுத்தத்தை வழங்கியிருக்கின்றதா..?

பதில்: எமக்கு ஆதரவாக இருக்கும் இந்தியா, அமெரிக்கா, பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியம் மூலம் கடுமையான அழுத்தத்தை கொடுத்து வருகிறோம். கட்டுரையாளர் செய்தித் தாள்களை படிப்பதில்லையா?

கடந்த ஆட்சிக் காலத்தைப் போன்று தற்போதும் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள், இனவிகிதாசாரத்தை குழப்பும் வகையிலான குடிப்பரம்பல்கள், தமிழரின் ஆட்புல அடையாளத்தை சிதைக்கும் எல்லை மீள்நிர்ணயம் என்பன மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

பதில்: திட்டமிட்ட குடியேற்றங்கள் எங்கு நடைபெறுகிறது என்று கூறமுடியுமா?

கிழக்கு மாகாணம் முழுமையாக பறிபோய் விட்டது. வவுனியா, மன்னார், முல்லைத்தீவு என வடக்கிலும் நிலப்பறிப்புக்கள் தீவிரமாக இடம்பெறுகிறது. 

பதில்: இப்போதல்ல அது 1948 தொடங்கி பறிபோய்க் கொண்டிருக்கிறது. அதற்கான காரணங்கள் பல. டி.எஸ். சேனநாயக்கா மற்றும் பண்டாரநாயக்கா காலத்தில் தொடக்கப்பட்ட பாரிய சிங்களக் குடியேற்றம் அம்பாரை, திருகோணமலை மாவட்டங்களில் தமிழர்களை சிறுபான்மையாக்கி விட்டது. புலிகள் காலத்தில்தான்  வெலி ஓயா (மணலாறு) குடியேற்றம் நடைபெற்றது.  மேலும் திருகோணமலை மாவட்டத்தை பொறுத்தளவில் ஆயிரக்கணக்கான தமிழ்க் குடும்பங்கள் தமிழ்நாட்டுக்கு இடம்பெயர்ந்து விட்டன.  இன்னொரு காரணம். தமிழர்களது பிறப்பு விழுக்காடு குறைந்து போகிறது.

இதைத்தடுப்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களால் என்ன செய்ய முடிந்தது.

பதில்: இது ஒரு பாமரத்தன்மையான கேள்வி? சார்ல்ஸ் சிறப்புப் படையணி, மாலதி படையணி,  சோதியா படையணி, இம்ரான் பாண்டியன் பீரங்கி படையணி,  ஜெயந்தன் படையணி, கடற்புலிகள், கரும்புலிகள் போன்றவற்றை வைத்திருந்த புலிகளால் முடியாத காரியத்தை வெறுங்கையோடு நிற்கும் ததேகூ உறுப்பினர்களைப் பார்த்து கேட்பது அறமா?

குறைந்த பட்சம் பொருத்து வீடு வட பகுதிக்கு பொருத்தமற்றது என கூறி தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் அதனை எதிர்த்து வந்தனர். நீதிமன்றத்திலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

ஆனால் வடக்கில் 6000 பொருத்து வீடுகள் மத்திய மீள்குடியேற்ற அமைச்சினால் நேரடியாக வழங்கப்படுகிறது. அதற்கான நடவடிக்கைகள் இறுதிக் கட்டத்தை அடைந்திருக்கின்றது.

இதைக் கூட 16 பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒன்று சேர்ந்து தடுக்க முடியாமல் போய்விட்டது. பொருத்து வீட்டைக் கூட தடுக்க முடியாத இவர்கள் தீர்வை பெற்றுத் தருவார்கள் என்று எவ்வாறு நம்ப முடியும்?

பதில்: ததேகூ மீது குற்றம் கண்டு பிடிப்பதிலேயே கட்டுரையாளர் குறியாக இருக்கிறார். 60,000 பொருத்து வீடுகள் கட்ட வெளிக்கிட்ட அமைச்சர் சுவாமிநாதனோடு ததேகூ மோதிய காரணத்தால்தான் 60,000 ஆயிரம் 6,000 ஆயிரமாகக் குறைந்துள்ளது. இந்த 6,000 வீடுகள் கட்டுவதற்கு எதிராகவும் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.அரசாங்கம் இப்போது வடக்கிலும் கிழக்கிலும்  50,000 கல் வீடுகள் கட்ட முடிவு செய்துள்ளது. 

காணாமல் ஆக்கப்பட்டோர் தமக்கு நீதி கோரி மேற்கொண்டு வரும் போராட்டங்கள் அரையாண்டை எட்டியுள்ளது. போராட்டக்களங்கள் அவர்களது சொந்த இடங்கள் போல் மாறி அந்த மக்கள் அந்த இடத்திலேயே நிரந்தரமாக இருந்து போராட வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கின்றது. 

அவர்கள் உள ரீதியாகவும் கடுமையாக பாதிப்படைந்து வருகின்றனர். 16 பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்தும் அவர்களது போராட்டத்தை முடித்து வைக்க முடிந்ததா..? அரசாங்கத்திற்கு அழுத்தத்தைக் கொடுத்து அந்த மக்கள் நம்பும் படியான வாக்குறுதியை வழங்கியாவது அந்த போராட்டத்தை முடித்து வைக்க முடியாத நிலையே தொடர்கிறது.

பதில்: காணாமல் போனோர் பற்றி அரசாங்கம் ஒரு சட்டம் இயற்றியுள்ளது. ஆனால் அந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் அரசு இழுத்தடிக்கிறது.  ததேகூ காணமல் போனோர் தொடர்பாக அலுவகங்களைத் திறந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்குமாறு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது. ஒரு நாட்டில் நடைபெற்ற உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தால் இப்படியான சிக்கல்கள் எழவே செய்யும்.

தமது வாகனக் கொள்வனவு தொடர்பிலும், பாராளுமன்ற விவாதங்களின் போது சம்பந்தம் இல்லாமலும் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் பேசி வருகின்றனர். 

பதில்: அப்படியா? உங்களைப் போன்ற புத்திசாலிகள், அரசியல் சாணக்கியர்கள் தேர்தலில் நின்று நாடாளுமன்றம் சென்று போராடினால் என்ன?

வடக்கில் இளைஞர்,யுவதிகள் வேலைவாய்ப்புக் கோரி மாதக்கணக்கில் போராடுகிறார்கள். அவர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்க பாராளுமன்றத்தில் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்த திட்டம் என்ன…? யுத்தம் மௌனிக்கச் செய்யப்பட்ட போது தமிழ் மக்கள் எதிர்நோக்கியிருந்த பிரச்சனைகள் இன்றும் தொடர்கிறது. 

பதில்: வேலையில்லாச் சிக்கல் நாடு தழுவிய சிக்கல். வட கிழக்கு மாகாண சபைகள் பட்டதாரி ஆசிரியர்களுக்கு நியமனங்கள் வழங்கியுள்ளன. வட மாகாணத்தில் மொத்தம் 35,000 ஊழியர்கள் வேலை செய்கிறார்கள். இந்தச் சிக்கல்களைத் தீர்க்க உங்களிடம் இருக்கும் தீர்வுகள் என்ன?

இணக்க அரசியல் எனக் கூறிஅரசாங்கத்துடனான உறவை வலுப்படுத்தி அந்த மக்களுக்காக செய்தவை என்ன…? மாறாக வடக்குக்கு கொண்டு வரப்பட்ட சில அபிவிருத்தி திட்டங்களைக் குழப்பி மத்திய அமைச்சர் சார்பாக ஒரு குழுவும், பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக ஒரு குழுவும் என பிரிந்து அத் திட்டங்களை நடைமுறைப்படுத்தாமல் விட்டதே மிச்சம். வவுனியா பொருளாதார மத்திய நிலைய விவகாரத்தில் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களின் செயற்பாடுகள் யாவரும் அறிந்ததே. 

பதில்: சொல்கிறேன் விரலை மடித்துக் கொள்ளுங்கள். சம்பூரில் பறிக்கப்பட்ட 1,055 ஏக்கர் காணியை போராடி திரும்பவும் அங்கு குடியிருந்த மக்களுக்கு வழங்கியுள்ளோம். கடற்படை தனது முகாமை மூடிவிட்டு வேறு இடம் போனது. அந்த மக்களுக்கு வீடுகள், கழிவறைகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த 1,055 ஏக்கர் காணியில் 818 ஏக்கர் காணியை மகிந்த இராசபக்சே சிறிலங்கா கேட்வே நிறுவனத்துக்கு 99 ஆண்டு குத்தகைக்கு கொடுத்திருந்தது. இந்தக் காணி மீட்பென்பது  பாம்பின்வாய் அகப்பட்ட தேரையை மீட்டெடுத்த காரியம் போன்றது. முன்னாள் மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் கருணா, இந்தக் காணி 99 ஆண்டு குத்தகைக்குக் கொடுக்கப்பட்டு விட்டது. அது திரும்பி வராது. அது வரும் என்று ததேகூ உங்களை ஏமாற்றுகிறது என்று சம்பூர் மக்களுக்குச் சொல்லியிருந்தார். காணி விடுவிப்பு மந்த கதியில் நடைபெறுகின்றது சொன்னால் அதனை ஒத்துக் கொள்ளலாம். ஒரு சொட்டுக் காணியும் விடுவிக்கவில்லை என்று சொன்னால் அது அப்பட்டமான பொய். அண்மையில் மயிலிட்டியில் 54.5 ஏக்கர் காணி கடற்படையால் விடுவிக்கப்பட்டது. இப்போது அதனைச் சுற்றியுள்ள தனியார் காணிகளையும் விடுவிக்க கடற்படை நடவடிக்கை எடுக்கிறது. கிளிநொச்சியில் 36 ஏக்கர் விடுவிக்கப்பட்டுள்ளது. இந்த வாரம் கேப்பாப்புலவில் 111 ஏக்கர் உறுதிக் காணிகளை கையளிக்க இராணுவம் ஒத்துக் கொண்டுள்ளது.

ஆக, ஆட்சி மாற்றத்திற்கு பின்னரான இணக்க அரசியல் மூலம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் வரிச்சலுகைளையும், சொகுசு வாகனங்களையும், பாராளுமன்ற பதவிகளையும், வெளிநாட்டு பயணங்களையும், மாவட்ட மற்றும் பிரதேச ஒருங்கிணைப்புக்குழு இணைத் தலைமைப் பதவிகளையும் பெற்றுக் கொண்டதை தவிர மக்களுக்காக அவர்களால் முழுமையாக எதை செய்ய முடிந்திருக்கின்றது. ஜனாதிபதி, பிரதமருடன் விருந்துகளிலும், வீட்டு வைபவங்களிலும் பங்கு பற்றியதுடன் அவர்களை தமது வீடுகளுக்கும் அழைத்து கொண்டாட்டங்களை செய்ய முடிந்திருக்கின்றது. 

பதில்: இது குதர்க்க வாதம்.  சின்னத்தனமான மலிவான விமர்சனம்.  தமிழ் நா.உறுப்பினர்களுக்கு சிங்கள – முஸ்லிம் நா.உறுப்பினர்களுக்கு வழங்கும் கொடுப்பனவுகளையே அரசு வழங்கியுள்ளது. சொகுசு வாகனங்களும் அப்படியே. வாகனங்களுக்குப் பதில் மாட்டு வண்டில்களில் அவர்கள் பயணம் செய்ய வேண்டும் என்பது கட்டுரையாளரின் எதிர்பார்ப்பா? கட்டுரையாளரின் மனப்போக்கு மலட்டு அரசியல் மனப்போக்கு. நாடாளுமன்றம் மல்யுத்தம் அல்லது குத்துச் சண்டை செய்யும் அரங்கல்ல. சிங்கவர்கள் என்றால் அவர்கள் எல்லாம் கெட்டவர்கள் என்ற மனப்போக்கு, மனத் தடங்கல்  நீண்ட காலமாக எம்மிடம் இருந்து வருகிறது. இதில் கட்டுரையாளரும் ஒருவர்.  இலங்கைத் தீவில் நாம் விரும்பினாலும் சரி விரும்பாவிட்டாலும் சரி சிங்களவர்களோடு நாம் ஒன்றாக வாழ வேண்டியவர்கள்.  

தென்னிலங்கை ஆட்சியாளர்களுடன் அன்னியோன்னியமாக பழக முடியும் என்றால் அந்த நட்பையும், தொடர்பையும் பயன்படுத்தி மக்களுக்கான பிரச்சினைகளை ஏன் தீர்க்க முடியாது…?

தமிழ் மக்களுக்காகவும் இவர்களால் எதையும் செய்ய முடியவில்லை. தமது கட்சியின் ஒற்றுமையையும் காக்க முடியவில்லை. இவ்வாறான நிலையில் இவர்களை நம்பி தீர்வுக்காக தமிழ் தேசிய இனம் காத்து இருப்பதன் மூலம் அதனை அடைய முடியுமா…?

மக்கள் விழிப்படைந்து தமது தலைமைக்கும், பிரதிநிதிக்கும் அழுத்தம் கொடுக்காத வரை தமிழ் மக்களால் எதனையும் பெற முடியாது என்பதே கள யதார்த்தம்.

பதில்: கட்டுரையாளர் நினைப்பது போல மக்கள் மடையர்கள் அல்ல. எமது மக்கள் சுதந்திரம் கிடைத்த காலம் தொட்டு அரசியல் மயப்படுத்தப்பட்டு வந்தவர்கள். 2009 க்குப் பின்னர் நடத்த தேர்தல்களில்  75 விழுக்காடு மக்கள் ததேகூ வாக்களித்தவர்கள். ததேகூ இல் வைத்திருக்கும் நம்பிக்கையை மக்கள் இழந்தால் எதிர்த்து வாக்களிப்பார்கள். இதில் அவர்களிடம் குழப்பமில்லை. குழப்பம் வாயால் வடை சுடும் கட்டுரையாளர் போன்றவர்களது மத்தியில்தான் இருக்கிறது.

Nakkeeran


        கிழக்கு மாகாண குடிப் பரம்பல் – 2012

மாவட்டம் முஸ்லிம் % தமிழர் % சிங்களவர் %
அம்பாரை 268,630 44.21 111,948 18.33 228,938 37.46
திருகோணமலை 152,019 45.47 96,142 28.75 84,766 25.35
மட்டக்களப்பு 129,045 25.02 381,984 74.05   2,397 0.74
மொத்தம் 549,694 37.75 590,074 40.53 316.,101 21.71

About editor 2992 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply