ஈழநாட்டு ஆராய்ச்சி வரலாறு – பகுதி 3

சங்ககால ஆரம்பம் – பகுதி 3

இனிச் சங்ககாலத்துக்கு வருவாம். இலங்கையும், இந்தியாவும் இரு வேறு நாடுகளாகப் பிரிந்த பி;ன்னர் நாம் அறியக்கூடிய மிகப் பழைய வரலாறு சூரனது ஆட்சிக் கால வரலாறேயாகும். சூரன் ஆட்சிக்காலத்தில் சங்கம் பற்றிய செய்திகள் அறியக் கூடியதாய் இல்லை. ஆனால் அகத்தியர் பேசப்படுகிறார். அவர் அக்காலத்தில் தென்னாடு போந்தமை பற்றிய வரலாறே கூறப்படுகின்றது. அகத்தியர் வருகைக்கு முன் சங்கம் இருந்ததில்லை. அகத்தியரே முதற் சங்கத்துக்கு முதன்மையானவராய் விளங்கினார். அகத்தியர் தென்னாடு போந்தமை தமிழ்ச்சங்கம் ஒன்றை நிறுவவேண்டும் என்ற நோக்குடன் அன்று என்பதை வரலாறு காட்டுகின்றது. ஆகவே அகத்தியர் வந்தார்@ பொதிய மலையில் இருந்தார். அப்படியானால் முதற் சங்கம் ஏன்தொடங்கப்பட்டது? யார் தொடக்கினார்? எப்பொழுது தொடங்கப்பட்டது? என்னும் வினாக்கள் எழுகின்றன. அதற்கு உய்த்துணர்ந்து விடைகள் காண்பாம்.

கடல்கோள் காரணமாக நாடு பல வழியிலும் அழிவெய்தியதனால் அதனைச் சீர் செய்வான் கருதியே சங்கம் ஆரம்பிக்கப்பட்டதாக வேண்டும். எனவே அகத்தியர் வருகைக்குப் பின் ஒர் பெருங் கடல் கோள் நடந்திருக்க வேண்டும். அதனால் ஏற்பட்ட அழிவைச் சீர் செய்வான் கருதியே முதன் முதலாக தலைச் சங்கம் தொடங்கியிருக்க வேண்டும். அப்பெருங்கடல் கோளே சூரன் ஆட்சி முடிவில் ஏற்பட்ட கடல் கோளாக இருக்கலாம். சூரன் ஆட்சிக்காலத்தில் அகத்தியர் தென்னாடு வருகின்றார்@ பொதிய மலையில் வசிக்கின்றார். சூரன் ஆட்சி முடிவடைகிறது. கடல் கோள் ஒன்றுநடைபெறுகிறது. அதனால் சங்கம் ஒன்று நிறுவப்படுகிறது. எனவே சூரன் ஆட்சி முடிவில் ஏற்பட்ட கடல் கோளின் பின்னர் சில நூற்றாண்டுகள் கழிந்த பின்னரே அகத்தியனாரை முதன்மையாக வைத்துத் தலைச்சங்கம் தொடங்கப்பட்டதென்றே கொள்ள வேண்டும். வரலாற்றுண்மை அதுவேயாகும். ஆதலின் சங்ககால ஆரம்பம் சூரன் காலத்துக்குப் பிற்பட்ட தென்பது துணி பொருள்.

இனி, தொடங்கப்பட்ட சங்கம் தொடர்ந்து எக்காலமும் இருக்கலாமே. அவ்வாறன்றி இடையீடுபட்டு முதற்சங்கம், இடைச் சங்கம் கடைச்சங்கம் என வரவேண்டிய காரணம் என்னையோ? காரணம் இடையிடையே ஏற்பட்ட கடல் கோள்களன்றிப் பிறிதில்லை. கடல் கோள்களினால் நாடு ஒரு பகுதி கடலாகலாம்@ மக்கட் கூட்டம் ஒரு பகுதி அழியலாம்@ அதனால் மக்கள் பண்பாடு, நாகரீகம் சிதையலாம்@ நூற் சுவடிகள் அழியலாம். அப்போது நாடாளும் அரசன் மனம் கனன்று தமிழ் மொழி, அம்மொழியிலுள்ள நூல்கள் தமிழ் மரபு, பண்பாடு, நாகரிகம், கடவுட்கொள்கை இவற்றை மேலும் பேணி வளர்க்க வேண்டியே அறிவுடைப் பெரியோரைக் கூட்டி சங்கத்தை அமைப்பான். ஆதலின் அவ்வக் கால அரசர் கடல் கோள்களுக்குப் பின்னர் சங்கங்களைத் தாபித்தனர். இவ்வாறாகவே சங்கங்கள் மூன்றாயின. அவ்வாறானால் முதற்சங்கம் எப்போது ஆரம்பித்திருக்கலாம் என அறிவோம். சூரன் ஆட்சி முடிவில் ஓர் பெருங்கடல் கோள் நடைபெற்றதெனஅறிவோம். அக்காலம் அகத்தியர் பொதிய மலையில் இருக்கிறார் என வரலாறு கூறுகின்றது. அக் கடல் கோளினால் நாட்டுக்குப் பேரழிவு ஏற்பட்டிருக்கலாம். அதனைச் சீர்செய்வதற்கு அறிவுடைப் பெரியோர் பலரின் ஆலோசனை அவசியமாயிற்று. எனவே யாவரினதும் மேலான அறிவும். அறிவாற்றலும் படைத்தவர் அகத்தியரேயாவர். ஆதலின் அவரின் தலைமையிலே முதற் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது. அக்காலம் சூரன் ஆட்சி முடிவெய்திய சில நூற்றாண்டுகளின் பின்னர் ஆரியர் வருகைக்கு முன்னராதல் வேண்டும். எனவே சூரன் ஆட்சி முடிவுக்கும் ஆரியர் வருகைக்கும் இடைப்பட்ட காலத்திலேயே சங்க காலம் ஆரம்பித்ததாக வேண்டும்.

அத்திலாந்திக் சரித்திரம் எழுதிய எல்லியட் என்னும் ஆங்கில பண்டிதர் இற்றைக்கு 11481 ஆண்டுகளுக்கு முன்னர் ஓர் கடல் கோள் நடைபெற்றதாகவும் அதனால் பல தீவுகள், கடற்கரை நாடுகள் சிதைவுற்றன என்றும் கூறுவர் இக்கடல் கோளே சூரன் ஆட்சி முடிவில் நிகழ்ந்த கடல்கோளாக அமையலாம். அவர் கூற்றின்படி இக்கடல் கோள் துவாபர யுகத்தின் இறுதியில் நடைபெற்றிருக்கிறது. அப்போது துவாபர யுகத்துக்கு அடுத்த யுகமாகிய கலியுகம் பிறந்துஇன்று 5088 ஆண்டுகளுக்கு மேல் ஆகின்றது. எலியட் இற்றைக்கு எனக் குறிப்பதுதான் நூல் எழுதிய காலம் ஆகும். எனவே கலியில் நிகழும் ஆண்டாகிய 5088ல் 88ஐக்கழித் மிருதி 5000 ஆண்டுகளை 11581இல் கழிக்க வருவது துவாபரயுகத்தில் நின்ற இறுதிக்காலம் 6481 ஆண்டுகளாகும். இக்காலமே சூரன் ஆட்சி நடைபெற்று முடிவுற்ற காலம் எனக் கொள்ளலாம். (இனி ஒரு யுகம் முடிந்து பிறிதோர் யுகம் தோன்றும்போது முன் யுகத்தின் இறுதி 500 ஆண்டும் பின் யுகத்தின் தொடக்கம் 500 ஆண்டுமாக 1000 ஆண்டுகள் யுகசந்தி எனப்படும். இக் காலம் அழிவும் ஆக்கமுமான காலமாகும். ஆதலின் 6481 இல் 1000 போக மிகுதியான 5481 ஆண்டுக்குள்ளேயே சூரன் ஆட்சி முடிபு இருந்திருக்கலாம்.

ஆனால் குமரிக்கோடும் பஃறுளியாறும் கடல்வாய்ப்பட்டு அழிவெய்தி இலங்கையும் இந்தியாவும் பிரிந்தது சூரன் ஆட்சிக்காலத்துக்கு முன்னாகும்.

முந்தொரு காலந் தன்னில் மூவுலகந் தன்னில்
வந்திடும் உயிர் செய்த வல்வினை யதனாலே
அந்தமில் மறை எல்லாம் அடிதலை தடுமாறிச்
சிந்திட முனிவோரும் தேவரும் மருளுற்றார்”

என்பது கந்தபுராணம் பாயிரப் படலத்திலுள்ள செய்யுளாகும். இச் செய்யுளில் உள்ள
”முந்தொரு காலம்” என்பதற்கு ஆதி கற்பத்தில் துவாபர யுகத்தில் என நாவலர் பெருமான் குறிப்பிட்டுள்ளார். இப்பொழுது கலியுகம் பிறந்து 5088ம் ஆண்டு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கலியுகத்துக்கு முன்னுள்ள யுகமே துவாபரயுகம். எனவே துவாபரயுகம் அதற்கு முன்னுள்ள யுகங்களின் வரலாறுகளே கலியுகத்துக்கு வந்தனவாதல் வேண்டும். கந்தபுராணம் சூரனது வரலாறு கூறும் நூல். இவ்வரலாறு இறைவனால் நந்திக்கு உபதேசிக்கப்பட்டு, அவரால் வாதநாராயணருக்கு உணர்த்தப்பட்டு அவரால் அவர் மகன் சூத முனிவருக்கு உபதேசிக்கப்பட்டு சூத முனிவர் யாவரும் அறியக் கூறினார் எனக் கந்தபுராணம் பாயிரப் படலம் கூறுகின்றது.

எனவே சூரன் ஆட்சிக்காலம் முடிவுற்று பல நாடுகள் கடல்கோளினால் அழிவுற்று அதனால் பல நூற்றாண்டு காலம்மறை நெறிகளும் முன்னிருந்த தெய்வீக வழிபாட்டு முறைகளும், மக்கள் வாழ்க்கை நெறியும் மறைந்து போன ஓர் நிலைமை ஏற்படுவதாயிற்று என்பது புலனாகின்றது. ஆதலின் சூரன் ஆட்சிக் காலம் துவாபரயுகத்தின் பிற்பகுதியாக வேண்டும். துவாபரயுகம் 865000 ஆண்டுகள் கொண்டது. இதி;ல் இறுதிக்காலமாகிய எஞ்சியிருந்த 6481 ஆண்டுகளுக்குள்ளேயே தலைச் சங்கம் தொடங்கியிருக்க வேண்டும். அஃதாவது எலியட் பண்டிதர் கூறும் கடல் கோளுக்குப் பின்னரே ஆக வேண்டும்.

இறையனார் களவியலுரையின்படி மூன்று சங்கங்களும் இருந்த காலம் முறையே 4440, 3700, 1850 ஆண்டுகளாகும். இவற்றில் தலைச்சங்கம் தொடங்கிய காலம் துவாபரயுக இறுதி 6481 ஆண்டுகளுக்குள்ளேயே அமையவேண்டும் . இடைச்சங்கமும் துவாபரயுக இறுதியில் தொடங்கிக் கலியுகத்தில் முடிபெய்தியது. கடைச்சங்கம் கலியுகத்தில் ஆரம்பித்து கி. பி. 3ம் நூற்றாண்டில் முடிவெய்தியது. கி. பி.3ம் நூற்றாண்டு ஏறக்குறைய 250 ஆண்டு எனக் கொண்டால் கடைச் சங்கம் முடிவெய்திய காலம் இற்றைக்கு 1738 ஆண்டுகளுக்கு முன்னாகும். எனவே இப்பொழுது கலி 5088ம் ஆண்டு நிகழ்வதால் கடைச்சங்கம் முடிவெய்திய காலம் கலி (5088 – 1738) 3350ம் ஆண்டாகும் என்க. ஆகவே கடைச்சங்கம் தொடங்கிய காலம் கலி (3350 – 1850) 1500ம் ஆண்டாகும்.

எனவே இடைச்சங்கம் முடிபெய்திய காலம் கலி 1500க்கு முன்னாக வேண்டும். இடைச் சங்கம் நிலவிய காலம் 3700 ஆண்டுகளாகும். ஆதலின் இடைச்சங்கம் தொடங்கிய காலம் (3700 – 1500) துவாபரயுக இறுதியிலுள்ள 2200 – 2300 ஆண்டுகளுக்குள் அமைய வேண்டும். எனவே தலைச் சங்கம் முடிபெய்திய காலம் துவாபரயுக இறுதி 2200 – 2300 ஆண்டுகளுக்கு முன்னாக வேண்டும். ஆதலின் தலைச் சங்கம் தொடங்கிய காலம் துவாபரயுக இறுதி (2200 + 4440) 6640, 6740 வரையிலாகலாம்.

இனி வேதகாலம் ஆரியர் வருகை பற்றி ஆராய்வாம். வேதகாலம் கி. மு. 1500க்கு முன் என்றும் அது தொகுக்கப்பட்ட காலம் கி. மு. 800 என்றும் ஆய்வாளர் கூறுவர். வேதகாலம்; கி.மு. 1500 க்கு முன். எனவே அக்காலம் இற்றைக்கு 3488 ஆண்டுகளுக்கு முன்னாகும். ஆகவே கலி வருடம் (5088 – 3488) 1600 ஆகும். தொகுக்கப்பட்ட காலம் கி. மு. 800. எனவே அஃது இற்றைக்கு 2788 ஆண்டுகளுக்கு முன்னாகும். கலி வருடம் 2300 ஆகும்.

இனி ஆரியர் இந்தியாவுட் புகுந்த காலம் கி. மு. 1600 – 2000 வரையில் என்பர். அஃது இற்றைக்கு 3588 ஆண்டுகளுக்கு முன்னாகும். கலி 1500 ஆகும். எனவே ஆரியர் வருகை இடைச்சங்க கால இறுதியில் நடைபெற்றிருத்தல் சாலும். தொகுக்கப்பட்டது கடைச்சங்க காலமாதல் வேண்டும்.

இவ் வரலாற்றின்படி நாம் அறியக்கூடிய இலங்கை வரலாறு துவாபரயுகத்திறுதிக் காலத்தே எலியட் பண்டிதர்கூறும் 11481 ஆண்டுகளுக்கு முன் ஈழநாட்டைச் சூரன் ஆட்சி புரிந்தான் என்பதும், அதனால் ஈழ நாட்டில் துவாபரயுகத்தில் தமிழினம் வாழ்ந்து வந்தனர் என்பதும் வேத காலம் வியாசர் காலம் ஆரியர் வருகைக்கு முன்னரே ஈழ நாட்டில் தமிழர்கள் வாழ்ந்து உலகறியப் பேரரசு செலுத்தினர் என்பதுமாகும்.

இனி, சூரன் ஆட்சிக்காலத்தில் இலங்கையும், இந்தியாவும் வேறு நாடாக வேறு வேறு அரசர் நாடாக இடையே கடல்கொண்டதாக வரலாறு கூறுதலின் குமரி நாடு கடல் கோளினால் சிதைவுற்ற காலம் சூரன் ஆட்சிக்கு முற்பட்ட காலமாகும் என்பது தெளிவு. எனவே குமரி நாடு அழிவுற்ற காலம் திரேத துவாபர சந்தியாதல் வேண்டும் என ஊகிக்க இடண்முடு.

இனித் தமிழ் மறை 3 சங்கத்திலும் நிலவியதாகக் கருத இடமுண்டு. தொல்காப்பியம் செய்யுளியலில் தமிழ் நூல் இலக்கணம் கூறுமிடத்து அவற்றை 7 வகையாக வகுத்துக் கூறும் போது வாய்மொழி (மந்திரம்) என்பதனை ஒரு வகை நூலாகக் கூறியிருப்பதினாலும் தொல்காப்பியர் பாயிரத்தில் பனம்பாரனார் “முந்து நூல்கண்டு” எனக்கூறுவதினாலும், மறை என்னும் சொல் மூன்று சங்க காலத்திலும் வழக்கில் இருந்தமையாலும் வேதம் என்ற சொல்லின் மொழிபெயர்ப்பு அன்று மறையாகையாலும் வேதகாலத்துக்கு முன்னரே மறை நூல்கள் இருந்தன என்பதும் வெளிப்படை.

இனி சூரன் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்திலேயே அகத்தியர் தென்னாடு போந்தனர் என்பது வரலாறு. அவரது வருகை முன்னாகவும் இருக்கலாம். சங்கம் பற்றிய செய்திகள் ஒன்றும் சூரன் ஆட்சிக் காலத்தில் இருந்ததாகக் கூறப்படவில்லை ஆதலின் சூரன் ஆட்சி முடிந்த பி;ன்னரே சங்கம் ஆரம்பிக்கப்பட்டதென்பது உறுதியாகிறது.

கற்று வல்ல பெரியோரும், அரசனுமே சங்கத்தில் அங்கம் வகித்தனர். இலங்கை இந்தியாவினின்றும் கடலால் பிரிக்கப்பட்டு வேறு வேறு நாடாகி வேறு வேறு அரசர் ஆட்சிக்குட்பட்டமையால் இலங்கை தமிழ் நாடாய் இருந்தும் அதனை வேறுபடுத்தி தமிழ்ச் சங்கம் தாபித்த இடமாகிய இந்தியாவை எடுத்துக்கொண்டு தமிழ்நாட்டுக்கு எல்லை கூறுவாராயினர். அவ்வாறிருந்தும் இலங்கை வாழ் தமிழ் மக்களின் அறிவுடைப் பெரியோர் தமிழ்ச் சங்கத்தில் சேர்ந்து அங்கம் வகித்து வரலாயினர்.

அவருள் இன்று எம்மால் அறியத்தக்கவராய் இருப்பவர் ஈழத்துப் பூதந்தேவனார் என்பவர். இவர் சங்கத்தில் ஓர் உறுப்புடைப் புலவராய் இருந்த காரணத்தினால் ஈழநாட்டினின்றும் போந்து மதுரையிலே தங்கி வாழ்ந்தவராகத் தெரிகி;ன்றது. அதனால் இவர் “மதுரை ஈழத்துப் பூதந்தேவனார்” எனவும் அழைக்கப்பட்டார் இவரால் பாடப்பெற்ற பாண்டியன் பசும்பூற் பாண்டியன் என்பவன். இவர் பாடிய பாடல்கள் அகநாநூற்றில் மூன்றும், நற்றிணையில் ஒன்றும், குறுந்தொகையில் மூன்றுமாகும். இவர்கடைச்சங்க காலத்தவர் என்பார்.

எனவே இங்கே நாம் முக்கியமாகக் கவனிக்க வேண்டிய விடயம் இலங்கை என்னும் பெயரா? ஈழம் என்னும் பெயரா? எது முற்பட்ட வழக்கு என்பதே. ஈழத்துப் பூதந்தேவனார் என அழைக்கப்பட்டார் ஆதலின் ஈழம் என்பதே இலங்கையின் பூர்வீக நாமம் என்பதும் தெளிவாகின்றது. கடைச்சங்க காலத்தில் இலங்கை ஈழம் என்றே வழங்கப்பட்டிருந்ததால் முதலாம். இரண்டாம் சங்க கால வழக்கும் அதுவே என்பதில் ஐயத்துக்கே இடமில்லை என்றோ? முற்பட்ட வழக்கே தொடர்ந்து பின்வருவதன்றோ?

இனி ஈழத்துப் பூதந்தேவனார் காலத்தை ஒருவாறு சுட்டியுணர்வாம். இவராற் பாடப்பட்டவன் பசும்ப+ற் பாண்டியன். இவன் வாழ்ந்த காலம் கி. மு. 180 – 125 என்று வரலாற்றாசிரியர் கூறுவர். எனவே புலவர் வாழ்ந்த காலம் அதுவாகும். இக்காலத்தில் ஈழநாட்டை (இலங்கை) ஆட்சி புரிந்துகொண்டிருந்த அரசன் எல்லாளன் ஆவான். இப்பொழுது இலங்கையில் புத்த மதம் வந்து 164 ஆண்டுகளேயாகும். விஜயன் வந்தது புலவர் காலத்துக்கு முன் 363வது ஆண்டாகும். இக்காலமே அநாகரிகமான இயக்கர் நாகர் வாழ்ந்த காலம்@ உணர்மின். இன்னும் இலங்கை தூய தமிழ்மொழி நாடே என்பதனை தமிழை தென் தமிழ் எனக்கூறும் பண்டைய வழக்கே வலியுறுத்துவதாகும். என்னை? தென் தமிழ் எனக் கூறுவதனால் தமிழின் உற்பத்தியிடம், தென்பகுதி என்பது பெற்றுக் கொள்ளப்படும். தமிழ்தெற்கே பிறந்து வட திசை நோக்கி வளர்ந்து பரந்தது என்பதே உலகறிந்த உண்மை. இதற்குச் சான்றாக தற்கால இந்தியாவிலும் தென்பகுதியே சிறந்த தென் தமிழ்நாடாக அமைகிறது. இதற்கு ஆதாரமாக 3 தமிழ்ச் சங்கங்களும் இருந்த இடங்களே சான்று பகருகின்றன. முதலாவது சங்கம் அக்கால இந்தியாவில் தென்கோடியில் தென்மதுரை என்ற இடத்திலும், பின்னர் ஏற்பட்ட கடல்கோள் காரணமாக அழிவுற்றதும் எஞ்சிய இந்தியாவில் தென்கோடி கபாடபுரம் என்ற இடத்திலும் பின்னர் அடுத்த கடல்கோளினால் அப்பகுதியில் சிதைவுற மூன்றாவது சங்கம் தென் பகுதியில் மதுரை என்ற இடத்திலும் நிறுவப்பட்டன என வரலாறு கூறுகின்றது எனவே தமிழின் உற்பத்தியிடம் தென்பகுதியேயாம் என்பது தெளிவு.

அவ்வாறானால் இந்தியாவும் இலங்கையும் ஒரே நாடாய் இருந்த காலத்தில் இலங்கையே தென் தமிழ் நாடாகும். ஆதலின் தமிழின் உற்பத்தி இடம், செந்தமிழ் செழிப்புற்றிருந்த இடம் இலங்கையே என்பதில் எவ்வித ஆட்சேபனையும் இன்று. ஆதலின் இலங்கை அன்றும், இன்றும், என்றும் தமிழ் நாடே அன்றி வேற்று மொழி எதற்கும் உரிய பிறப்பிடம் அன்று. இன்னும் இவ்வுண்மையை எந்த மொழிக்கும் இல்லாத, தமிழ் மொழிக்கே தனிச் சிறப்பாகவுள்ள “ழ’கர ஒலியைத் தன்னகத்தே கொண்ட ஈழம் என்ற அதன் பெயரே அங்கைநெல்லி என எளிதில் யாவரையும் உணர வைக்கின்றது. அன்றியும் இலங்கையில் வேறு மொழிகளோ, வேற்று மொழியாளர்களோ வாழ்ந்தார்கள் என்பதற்கும். வேற்று நாட்டில் இருந்து இங்கு வந்து குடியமர்ந்தார்கள் என்பதற்கும் விஜயன் வருகைக்கு முன் வரலாறே கிடையாது.

தலைச் சங்கம் இருந்த தென்மதுரை இலங்கைக்கு மிக மிக அண்மையில் இருந்திருக்க வேண்டும். தென் மதுரை கடல்வாய்ப்பட்ட பின்னர் பாண்டிதன் மணற்றி என்ற இடத்தில் இருந்ததாக வரலாறு கூறுகின்றது. வான்மீகி இராமாயணத்திலும் கூறப்படுகின்றது. தென்மதுரை அழிவுற்ற பின்னர் கபாடபுரம் அமைக்கப்படுவதற்கு முன்னர்சில காலம் மணற்றியைத் தலைநகராகக் கொண்டிருக்கும் காலம். மணற்றி என்பது அந்நாட்டின் இயற்பெயர் ஈழநாட்டில் வடகோடியில் உள்ள யாழ்ப்பாணக் குடாநாடும் பண்டைக்காலத்தில் மணற்றி என்றே அழைக்கப்பட்டது. யாழ்ப்பாணம் என்ற பெயர் வருவதற்கு முன்னர் அக் குடாநாட்டின் பழைய பெயர்களுள் மணற்றியும் ஒன்றாகும். எனவே அழிவுற்ற தென்மதுரை யாழ்ப்பாணம் ஆகிய மணற்றிக்கு மிக மிக அண்மையில் இந்தியாவின் தென் கோடியில் இருந்த தென்பதனை இயற்கையும் சுட்டி உணர்த்துகிறது.

இலங்கை கடலால் பிரிக்கப்படாமல் இருக்குமாயின் இன்று பாண்டி நாட்டின் ஒரு பகுதியாகவோ, அன்றிச் சேர, சோழ, பாண்டிய நாடுகளைப் போல் இந்தியாவுக்குட்பட்ட ஓர் தமிழ்; நாடாகவே அமைந்திருக்கும். ஆதலின் இலங்கையில் வாழ்ந்த பூர்வ மக்கள் தூயசெந்தமிழ் பேசிய பழங்குடி மக்களே என்பது எவ்வாற்றானும் மறுக்க முடியாத உண்மையாகும். இலங்கையின் எப்பாகத்திலாயினும் பண்டுதொட்டு வேற்றுமொழி பேசிய பகுதி இருந்ததேயில்லை. சிங்கள மொழி பேசும் ஓர் பகுதி இருக்கிறதே எனில் அம்மொழி இங்கு வாழ்ந்த மக்கள் பேசிய தமிழ் மொழியும், பிக்குகள் பேசியும், பயிற்றியும் வந்த பாலி மொழியும் கலந்து ஏற்பட்ட ஒர் கலப்பு மொழியாகும். இம் மொழியின் ஆரம்ப காலம் கி. மு. 304க்குப் பின்னாகும்.

இனிவடமொழியை நோக்குவோம். அஃது இன்றும் வடக்கே இருந்து தெற்கு நோக்கி வளர்ந்து செல்வதைக் காணலாம். அஃது தமிழ் நாட்டில் தமிழ் வழக்கில் இன்றும் வடமொழி என்றே அழைக்கப்பட்டிருக்கிறது. ஆசிரியர் தொல்காப்பியனார், “வடசொற் கிழவி, வடவொழுத்தொரீஇ” எனக் கூறியிருப்பதை அறிக. வடமொழி எனக் கூறும்போது சமஸ்கிருதத்தின் குடும்ப மொழிகள் அத்தனையும் அடங்கும், இவ்வுண்மைகளை ஒப்புநோக்கி ஆராயும் போது தமிழின் பிறப்பிடம் தமிழன் பிறப்பிடம் இலங்கையும், இந்தியாவும் ஒன்றாய் இருந்த காலத்துத் தென்பகுதியிலும் தென்பகுதி என்றே கொள்ளக் கிடக்கின்றது.

எனவே, அப்பகுதி எதுவாயிருக்கலாம் என அறிவாம். குமரிநாடு கடல்வாய்ப்பட்டபோது அஃதாவது ‘பஃறுளியாற்றுடன் பன்மலையடுக்கத்துக் குமரிக்கோடும் கொடுங்கடல்கொண்ட காலத்து 49 நாடுகள் கடல்வாய்ப்பட்டன என்பது வரலாறு. அப்போது கடல்வாய்ப்படாது எஞ்சியிருந்த நாடே இலங்கையாகும். (ஈழம்) எனவே அதுவே 50 ஆவது நாடெனக் கூறலாம். எனவே 49 நாடுகளுக்கும் தெற்கே பண்டைக் காலத்து ஒரு நாடாய் இருந்து பின்னர் பிரிந்த இலங்கையே ஈழம் (தமிழினி) தமிழனின் பிறப்பிடம் எனக் கூறல் தகும்.

இனி ஈழநாட்டுப் புலவர் சரித்திரம் எழுதிய எனதுகுரு வித்துவ சிரோன்மணி சி. கணேசையா அவர்கள் அந்நூலின் முகவுரையில் “தமிழ் மொழி முற்காலத்து எங்கும் சென்றுபரவி வழங்கியது” என்றும், “தொல்காப்பியர் காலத்துக்கு முன்னேயே எல்லைக்குட்பட்டு வழங்கியது” என்றும் மு. இராகரவயங்கார் கூற்றை எடுத்துக் காட்டினார்கள். இது சிந்தனைக்குரியது.

இன்னும் அம் முகவுரையின் ஆரம்பத்தில் “ஈழ நாடெனும் இலங்கைத் தீவு எனினும் ஒக்கும்” என அவர்கள் கூறியிருப்பது இலங்கைத் தீவின் பழைய பெயர் ஈழ நாடே என்பது அவர்கள் கருத்தாகும். அன்றியும் இலங்கையில் உள்ள புலவர்கள் வரலாறு எழுதிய அவர்கள் இலங்கைப் புலவர் சரித்திரம் எனப் பெயர் சூட்டாது ஈழநாட்டுப் புலவர் சரித்திரம் எனப் பெயர் ச+ட்டியிருப்பதே இலங்கையின் முன்னுள்ள பழமையான ஒரேயொரு பெயர் ஈழமே என்பது அவர்கள் கருத்து என்பதனை நன்கு ஐயத்துக்கிடமின்றித் தெளிவாக வலியுறுத்துவதாகும்.

எனவே மக்களின் ஆதிப் பிறப்பிடம் இலங்கையே (ஈழம்) என்பதும்; உலகில் தோன்றிய ஆதி மொழி தமிழே என்பதும், மக்கள் வாழ்க்கைக்கும் நாகரீகத்துக்கும் அடியெடுத்து வைத்தவர்கள் தமிழரே என்பதும் நாம் அறியக் கூடிய உண்மையாகும்.

ஆதிமக்கள் இலங்கையிலே தான் தோன்றியிருக்க வேண்டும் என்பது கொரல் பாதிரியாரது கருத்துமாகும். அவர் சாகவத் தீவில் காணப்பட்ட பழைய நூல் ஒன்றில் ‘இலங்கையில் ஆதி மக்கள் தோன்றிச் சாவக முதிலிய நாடுகளிற் குடியேறிப் பெருகினார்கள்’ எனக் கூறப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இப்போது கந்தபுராண வரலாற்றை ஒப்புநோக்குமின்! சூரன் ஆட்சிக்காலத்தில் அவனது தலைநகர், தற்போதும் உள்ள முருகன் பாசறையாகிய கதிர்காமத்திற்குத் தெற்கே சில மைல் தூரத்தில் இருந்ததாகவும், அஃது சூரன் ஆட்சி முடிவில் ஏற்பட்ட கடல்கோளினால் கடல்வாய்ப்பட்டது என்றும் கூறும். அதுவே வீரமகேந்திரம் எனப்படுவது இதனால் சூரனது ஆட்சி நகர் இலங்கையின் தென்கோடியில் குமரிமலை அந்தத்தில் இருந்தமை புலப்படுகின்றதன்றோ? சூரன் ஆட்சிக்;காலத்தில் இந்தியாவையும் இலங்கையையும் ஒப்புநோக்கும்போது இலங்கையும், மக்கள் வாழ்க்கையிலும் நாகரீகத்திலும் கடவுட் கொள்கை (சிவநெறி) யிலும் சிறந்து விளங்கியமை புலப்படுகின்றது. சூரன் ஆட்சிக்காலம் 3 சங்கங்களும் தோன்றுவதற்கு முன் உள்ள காலம் என்பதை ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டும். சூரன் ஆட்சிக்காலத்தில் இலங்கையின் தென்பகுதியே சிறப்புற்று விளங்கியிருக்கின்றது. ஆகவே பண்டைக்காலத் தமிழ் மக்களின் குடிப்பரம்பல், அவர்கள் பேசிய தமிழ் மொழி, நகரீகம் ஆகியன காலப்போக்கில் தெற்கே இருந்து வடக்கு நோக்கி நகர்ந்து வளர்ந்ததெனவே உணர முடிகின்றது.

எனவே நாம் உணரக்கூடிய உண்மை வரலாறு: இலங்கை(ஈழம்) இந்திய நிலப்பரப்போடு ஒரு காலத்தில் இணைந்து ஒரேநாடாய் இருந்தது என்பதும், இலங்கையே ஆதி மக்களின் பிறப்பிடம் என்பதும். அவர்கள் பேசிய மொழி தமிழே என்பதும், வரலாற்றுக்கெட்டிய வலையில் தமிழரின் ஆதித் தலைவன் சூரன் அதியோரே என்பதும் ஆகும்.

வித்துவ சிரோன்மணி சி. கணேசையா அவர்களும் தாம்எழுதிய ஈழநாட்டுத் தமிழ்ப்புலவர் சரித்திரத்தில் ஓரிடத்தில் “இவ்வீழநாடு பண்டுதொட்டு முத்தமிழுக்கும் உறைவிடமாய் உள்ளதென்பது எவராலும் ஒப்புக் கொள்ளப்படக் தக்கதேயாகும்” எனக் கூறியுள்ளார்.

இலங்கை வரலாற்றில் மகாவமிச மன்னர் காலம் கி. பி. 304ல் முடிவடைகிறது. ஆகவே மகாவமிச காலத்தில் சிங்களமொழி எழுத்து வடிவில் வலுப் பெறவில்லை என்பதுதெளிவு. மகாவமிச மன்னரின் ஆட்சி முடிபு புத்ததாசன் காலத்துக்குச் சுமார் 40 ஆண்டுகள் முற்பட்டதாகும்.

இதற்கு ஆதாரமாக வாலகம்பாகு ஆட்சி புரிந்த காலத்தில் கி. மு. 85க்கு முன் புத்தமத போதனைகள், திரிபிடகக் கருத்துக்கள் யாவும் கர்ண பரம்பரையாக ஒதப்பட்டு வந்ததாக மகாவமிச வரலாறே கூறுகின்றது. ஏன்? சிங்களப் பேச்சு மொழியோ எழுத்து வடிவமோ வலுப்பெறவில்லை என்பதனாலன்றோ? புத்தமத வருகைக்கும், வாலகம்பாவுக்கும் இடைப்பட்ட காலம் (கி.மு. 307 – 85) சுமார் 220 ஆண்டுகளாகும். எனவே தேவநம்பியதீசன் தொடக்கம் மகாசேனன் முடியவுள்ள காலப்பகுதியே சிங்கள மொழி கருக்கொண்டு வளர்ச்சியுற்ற காலம் எனக்கொள்ளலாம். மகாசேனன், மகாவமிச மன்னர்களின் இறுதியரசன்.

அன்றியும் ஒரு புதிய மொழி ஒரு நாட்டு மக்களுக்குப் பேச்சு மொழியாக வருவதற்கு மிகக் குறைந்தது 25 ஆண்டுகள் ஆதல் வேண்டும். ஏன்? ஒரு நாட்டின் ஒரு இளம் சந்ததியினரின் கற்கையாண்டு சுமார் 25 ஆண்டுகளுக்கு உட்பட்டதாகும். அடுத்த இளம் சந்தததியினரின் கற்கையாண்டு 25 ஆண்டுகளாகும் எனவே 50, 60 ஆண்டுகளில் ஒரு புது மொழி நாட்டில் வழக்கு மொழியாக வருவது நூதனமல்ல. ஆதலின் கி. மு. 247ல் ஆட்சி புரிந்த சூரத்தீசன் காலம் வரையில் சிங்கள மொழி பேச்சு மொழியாக ஆரம்ப நிலையில் இருந்திருக்கலாம். அஃதாவது அரசர், படித்தவர்கள், பிக்குகள் அளவிலர் அம் மொழிப் பயிற்சி இருந்திருக்கலாம். ஆனால் பாமரமக்களிடையே வழக்கில் இருந்த மொழி தமிழே. அக்காலத்தில் சிங்களம் என்ற சொல்லும் ஆரம்ப வழக்கில் இருந்திருக்கலாம். ஆனால் ஈழநாட்டு மக்களிடையே வேற்றுமை உணர்வு இல்லாத காலமாகும். சூரத்தின் தீசன் ஆட்சி முடிய சேனன், கூத்திகன் என்ற மலையாளத் தமிழர் இருவரும் 22 ஆண்டுகள் ஆட்சி புரிந்துள்ளார்கள். பின் 10 வருட இடைவெளியின் பின் எல்லாளன் என்னும் சோழ அரச குமாரன் கி. மு. 205 தொடக்கம் 44 ஆண்டுகள் ஆட்சி புரிந்தான். இதனால் சூரத்தீசனுக்குப்பின் 66 ஆண்டுகள் தமிழர் ஆட்சி நடைபெற்றது பின்னர் துட்டகைமுனு ஆட்சிக்கு வருகிறான். இவனே சிங்களவர். தமிழர் என்ற வேற்றுமை உணர்வை வலுப்படுத்தியவனாவான். இவன் காலம் தொடக்கம் சிங்களர். தமிழர் என்ற வேற்றுமை உணர்வு நாளுக்கு நாள் வளர்வதாயிற்று.

எனவே விசயன் ஈழநாட்டுக்கு வந்து சுமார் 250 ஆண்டுகளின் பின்னரே சூரத்திசன் காலம் வரையிலேயே சிங்களம் என்னுமோர் கலப்புமொழி உருப்பெற்று ஆரம்ப நிலையில் இருந்திருக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இக்காலத்திலும் மக்களிடையே தமிழ் மொழியே சுயமொழியாக இருக்க வேண்டும். சிங்களம் எழுத்து மொழியாகி வழக்கில் வந்த பின்னரே தமிழ்மொழி காலப்போக்கில் வழக்கொழிந்ததாகும் என்க. அம்மொழி எழுத்து மொழியாகி மக்களால் பேசவும், எழுதவும் தக்கதாக நிலவி ஆரம்ப காலம் மகாவம்சத்தின் இறுதிக்காலம் என்றே கூறலாம். ஏன்? மகாவமிசம் முடிவுற்று சலு வமிச காலத்தில் புத்ததாசன் ஆட்சி செய்த காலத்திலேயே பாளியில் இரந்தபுத்த நூல்கள் யாவும் சிங்கள மொழிக்குக்கொண்டுவரப் பட்டனவன்றோ? மகாவமிசம் முடிவு காலம் கி. பி. 304ஆகும். எனவே மகாவமிச காலம் முழுமையும் மக்கள் மொழி அரசமொழி தமிழ் மொழியே என்பதும் வெளிப்படை . மகாவமிச அரசர்களின் பெயர்களும் தமிழ் மரபைச் சேர்ந்த மொழிகளாகவே இருக்கின்றன. இம் மன்னர்களின் பெயர்களுள் ஈழநாகன் என்னும் பெயர்சிறப்பாக உற்று நோக்க வேண்டியது.

இவ்வரசன் கி. பி. 35 – 44 வரை ஆட்சி செய்துள்ளான். எனவே இக்காலத்திலும் ஈழம் என்ற இந்நாட்டின் பெயர்வழக்கு ஈழநாட்டு மக்கள் இடையேயும், மன்னரிடையேயும் மறையாது நிலவியதென்பது புலப்படுகின்றது. இக்காலத்தில் லங்கா, இலங்கை என்ற வழக்கு மிக அருமையாக படித்தவர்கள் மத்தியில் வழக்கத்தில் இருந்ததாக வேண்டும். ஈழநாகனை எலுநன் என்றும் அழைப்பர். அதனால் பெறப்படும் உண்மை என்ன? ஈழன் என்ற சொல்லின் சிங்கள உச்சரிப்பேயாகும். அவ்வாறு அழைத்தவர்கள் அவன் காலத்துப் புத்த பிக்குகளாய் இருத்தல் வேண்டும்.

இனி ஈழநாகன் என்ற பெயரில் இருந்து இவன் ஈழநாட்டு அரச பரம்பரையைச் சேர்ந்த நாகர் குலக் கலப்புள்ளவன் என்பதும் பெறப்படும். மூத்தசிவன் தொடக்கம் விசயன் பரம்பரையினர் நாகர் குல ஈழநாட்டு அரச பரம்பரையினரோடு மண உறவு கொண்டு ஒரே கிளையினராக வாழ்ந்தார்கள் என்பது வரலாறு கொண்டு அறியலாம். மகாவமிச மன்னர்களுள் ஒரு சிலர் தவிர ஏனையோர் யாவரும் அவர்களே. அன்றி விசயன் பரம்பரை வளர்ச்சியடைந்தமைக்கு வேறு வரலாறுண்டா? உணர்மின்!

இதுவரை கூறியவற்றில் இருந்து நாம் அறியக் கூடிய உண்மைகள் இவைகளாகும். ஈழம் என்பதே இந்நாட்டின் பூர்வீக ஒரே தமிழ்ப் பெயர் என்பதும் ஈழம் என்ற சொல்லே ‘லங்கா’ வாக மொழிபெயர்க்கப்பட்டது என்பதும், ஈழம் என்ற சொல்லை வைத்தே சிங்களம் என ஓர் புனைபெயர் ஆக்கப்பட்டதென்பதும் ‘லங்கா’ என்ற வடமொழி உருவம் தமிழில் இலங்கை என உருப்பெற்றதென்பதும், விசயன் வந்த காலத்தில் இங்கு வாழ்ந்தோர் தமிழர்களே என்பதும், அவர்கள் வடமொழியாளரால் அம் மொழியில் இயக்கர், நாகர் என அழைக்கப்பட்டார்கள் என்பதும், விசயன் பரம்பரையினரும் ஈழநாட்டு அரச பரம்பரையினரும் மணஉறவு கொண்டு ஒரே கிளையினராக வாழ்ந்தார்கள் என்பதும், இக்கிளையினர் பேரரசாகவும் ஏனையவர்கள் பற்பல இடங்களில், சிற்றசர்களாகவும் ஒன்று பட்டு ஆட்சி புரிந்தனர் என்பதும், விசயன் ஆதியோரும் கலிங்க நாட்டுத் தமிழர்களே என்பதும், விசயன் இயக்கர் என அழைக்கப்பட்ட ஈழநாட்டு அரச பரம்பரையில் உள்ள அரச கன்னி குவேனியை மணம் முடித்தே அரசுரிமை பெற்றான் என்பதும் இவர்கள் இந்து சமயக் கோட்பாடுடையவர்கள் என்பதும் ஈழநாட்டுச் சமயம் இந்துசமயமே என்பதும், சிங்களம் என ஒரு மொழி பேசவும் எழுதவும் தக்க நிலைக்கு வரும்வரையில் ஈழநாட்டின் ஒரே மொழி தமிழே என்பதும் ஆகும்.

About editor 3145 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply