ஈழநாட்டு ஆராய்ச்சி வரலாறு பகுதி 2

அணிந்துரை

வரணியூர் பண்டித வித்துவான் ஆறுமுகம் சின்னத்தம்பி அவர்கள் எழுதிய ஈழநாட்டு ஆராய்ச்சி வரலாறு என்னும் நூல் பல சுவையான தகவல்களைத் தருவதுடன் எம்முடைய நாட்டின் வரலாறு பற்றி ஆழமாகச் சிந்திக்கவும் தூண்டுகின்றது.

ஈழநாடு ஒரு காலத்தில் குமரிக் கண்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது எனவும், அது பின்னர் ஏற்பட்ட கடல்கோள் காரணமாகத் தனித் தீவாகியது எனவும், குமரிக் கண்டத்து மக்கள் தமிழரே@ அதுபோல் ஈழத்து மக்களும் தமிழரே எனவும் ஆசிரியர் இந்நூல் வாயிலாக நிறுவ முற்படுகின்றார்.

“பஃறுளியாற்றுடன் பன்மலையடுக்கத்துக் குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள” என்னும் சிலப்பதிகாரச்செய்யுளடி மூலம் குமரி எனப் பெயரிய ஒரு பெரிய மலையும் பஃறுளியாறும் கடலுக்கள் அமிழ்ந்தன என அறிகிறோம். இக் கடல்கோள் காரணமாகவே குமரிக்கண்டம் சிதைவுற்று தமிழ் நாட்டின் தென் கோடியிலே ஈழம், இராமேஸ்வரம் உள்ளிட்ட தீவுகள் ஏற்பட்டன என நூல் ஆசிரியர் கூறுவர் பொருத்தமானது எனவே எண்ணுகிறேன்.

இந்நூலில் வரலாற்றுத் தரவாக இலக்கியச் சான்றுகளே பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டுள்ளன. தொல்லியல் சான்றுகள் கிடைப்பின், அவற்றுடன் இவ்விலக்கியச் சான்றுகளை ஒப்புநோக்கிக் கூறுவர் அவசியமாகும். எனினும் குமரிக்கண்டம் பற்றியும், ஈழம் பற்றியும் நாம் சிந்திக்கக் கூடிய பல தகவல்களை ஆசிரியர் இந்நூலிலே தொகுத்துத் தருகிறார். “குமரி என்பது மலையே, அம்மலை செறிந்த இடம் குமரி நாடு எனப்படும். அம் மலையினின்று பாயும் ஆற்றை குமரியாறு என்றலும், குமரி மலையை மோதும் கடலை குமரிக்கடல் என்றலும் சகசமே…. குமரிநாடு இந்துமாக்கடலுள் பரந்து இருந்த தென்பதையும், அது கடற்பெருக்கினால் கடல்வாய்ப்பட்டு சிதைந்து பல தீவுகளாகவும், இடையிடையே சிறுகடல்களாகவும் உருமாறின தென்பதையும் அதனால் இந்தியாவினின்றும் இலங்கை துண்டிக்கப்பட்டதென்பதையும் வரலாற்றாசிரியர்கள் யாவரும் ஒப்புக்கொள்வர்” (பக்.29-30) என ஆசிரியர் கூறிச் செல்கிறார்.

திராவிட மொழிகளைப் பிறமொழிகளுடன் தொடர்புபடுத்தி ஆராய்ந்ததனால், திராவிடப் பண்பாட்டுக்கும் பிறபண்பாடுகளுக்கும் தொடர்பு இருந்திருக்க வேண்டுமென ஆய்வாளர்கள் ஐயம் கொண்டுள்ளனர். மேலைப் பக்கத்தில் சுமேரிய (இது குமரியின் திரிபு ஆக இருக்கலாம் என அறிஞர்கள் சிலர் கருத்துத் தெரிவித்துள்ளனர்) நாகரிகம் பற்றியும் ஈழம்மொழி பற்றியும் அறிகிறோம். கிழக்குப் பக்கத்தில் யப்பானில் பண்டைக் காலத்தில் குமரி (KUMARI YAMA) என்று ஒருமலைக்குப் பெயரிருந்தது. இவை குமரிக்கண்டத்தின் சிதைவினால் ஏற்பட்ட விளைவுகளோ என ஐயப்படவும் இடமுண்டு. எனவே குமரிக்கண்டம் பற்றிய ஆய்வு முன்னெடுக்கப்பட வேண்டிய தொன்றாகும். அத்தகைய ஆய்விலே இந்நூலாசிரியர் குமரிக்கண்டம் பற்றிக் கூறுவன நுணுகி நோக்கப்படும் என்பதிலே ஐயம் இல்லை.

ஈழம் தொடர்பாக ஆசிரியர் கூறும் கருத்து ஒன்றினை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். யாழ்ப்பாணச் சரித்திரம் எழுதிய முதலியார் இராசநாயகம் இந்நாட்டில் பண்டைக்காலத்தில் ஈழு என்றொரு மொழி பேசப்பட்டுவந்த தென்றும் அதனால் இந்நாட்டிற்கு ஈழம் எனப்பெயர் வரலாயிற்று” எனக் கூறியுள்ளார். முதலியார் இராசநாயகம் கூறிய இக் கருத்தினை இந்நூல் ஆசிரியர் பண்டிதவித்துவான் சின்னத்தம்பி மிக வன்மையாகக் கண்டிக்கிறார். இது தொடர்பாக ஆசிரியர் பின்வருமாறு கூறுகின்றார்:

“புத்த மதத்தோடு இங்கு வந்த புத்த பிக்குகள் ஈழநாட்டின் ஈழ மக்களால் பேசப்பட்ட தமிழ் மொழியை நாட்;டின் பெயரால் சுட்டி ஈலு மொழியெனக் கூறியிருக்கலாம். இது அவர்களுடைய வழக்கென்றே கொள்ள வேண்டும். ஆனால் அவர்கள் அழுத்தம் திருத்தமாக ஈழு என உச்சரிக்கமாட்டார்கள். அதனால் அவர்கள் ஈலு என வழங்கினார்கள். அஃது பின்னும் காலக்கிரமத்தில் எலு என்று உருமாறலாயிற்று. எனவே அவர்கள் ஈலு என்றும் வழங்கிய பெயர் ஈழநாட்டில் பேசப்பட்ட தமிழ் மொழியைக்குறித்தேயன்றி ஈழு என ஒருமொழி பேசப்பட்டு அதனால் நாட்டுக்கு ஈழம் எனப் பெயர் வந்ததன்று. இதுவே உண்மை வரலாற்று நிகழ்ச்சியாகும். இன்னும் எலு என்னும் சொல்லாகிய பெயர் சிங்கள மொழியிலேயே காணக் கிடப்பதாலும்வேறு உலக மொழிகள் எதினாலும் அப் பெயர் கூறப்படாமையினாலும் மேற்போந்த உண்மை இன்னும் தெளிவாகிறதன்றோ?”

ஆசிரியருடைய இக்கருத்து எம்முடைய சிந்தனையைத் தூண்டவல்லது.

பின்வரும் பகுதிகளைக் கொண்டதாக இந்நூல் அமைக்கப்பட்டு உள்ளது:

1. பூர்வகாலம் – குமரி நாடும் ஈழமும்
2. ஈழமும் வரலாறும்.
ஐ) இலங்கை
ஐஐ) ஈழமும் விசயனும்
ஐஐஐ) ஈழமும் சிங்களமும்
ஐஏ) ஈழமும் பழைய நூல்களும்
ஏ) தமிழரும் திராவிடரும்
ஏஐ) சூரன், சிங்கன், தாரகன்
3. விசயன் வருகை
ஐ) விசயன் வருகையும் ஸ்ரீலங்காவும்
ஐஐ) படை எழுச்சிகளும் விளைவும்
ஐஐஐ) கலிங்கமாகன் படை எழுச்சி
ஐஏ) ஈழமும் தமிழர் ஆதிக்கமும்.

இப்பிரிவுகளின் அடிப்படையிலே, ஈழத்தினுடைய, ஈழத் தமிழருடைய வரலாற்றை ஆசிரியர் தமக்கேயுரிய பாணியிலே விவரிக்கின்றார்.

இந்நூலிலே ஒருபுதிய செய்தி குறிப்பிடப்படுகின்றது. அது விசயனும் அவனுடைய கூட்டாளிகளும் இத்தீவிலே இறங்கி ஆட்சி நகர் ஒன்றை அமைத்தது பற்றியதாகும்.

“விசயனும் கூட்டாளிமாரும் சிங்கபுரத்துக்கு மிகவும் அணித்தான துறைமுகமாகவுள்ள கற்கோவளக் கரையில் இறங்கி இருக்கலாம் என்பது பலவாற்றாளும் பொருத்த முடையதாகும்”

இவ்வாறு சிங்கை நகருக்கு வந்த விசயன் வரணியில் உள்ள தம்பான் என்னும் இடத்தைத் தன்னுடைய உறைவிடமாகக் கொண்டு அரசதானி அமைத்தான் என்னுஞ் செய்தி புதியதொன்றாகும். வரலாற்றாசிரியர்களின் சிந்தனைக்கு இது விருந்தாக அமையுமென நம்புகிறேன். எனினும், தம்பான் பகுதியில் இது தொடர்பான அகழ்வாராய்வுச் சான்றுகள் கிடைப்பின் இச் செய்தி தொடர்பான ஆய்வுமேலும் விரிவடைய வாய்ப்புண்டு.

இத்தகைய வரலாற்று நூல்களைக் கண்டவுடன் பலர் இது மரபுவழிப்பட்ட எழுத்து எனக் கூறுவது வழக்கம் . ஆனால் மகாவம்சத்தை ஏற்றுக்கொள்ள முடியுமாயின், இத்தகைய எழுத்துக்களையும் நாம் ஏற்றுக்கொள்ளவே வேண்டும். புராணக்கதைகள், சில வரலாற்றுத் தரவுகள், ஊகங்கள் ஆகியனவற்றை அடிப்படையகக் கொண்டு இவ்வரலாற்று நூல் எழுதப்பட்டது. ஈழ வரலாற்றைச் செம்மையுற எழுதவுள்ள கல்வியாளர்களுக்கு வித்துவான் சின்னத்தம்பி அவர்களுடைய இந்நூல் பெரிதும் உதவவல்லது.

பேராசிரியர் கலாநிதி. அ. சண்முகதாஸ்
தலைவர்,
தமிழ்த்துறை. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
12 – 11 – 1993



சிவசமயம்
ஈழநாட்டு ஆராய்ச்சி வரலாறு

காப்பு
நற்குஞ்சரக்கன்று நண்ணில் கலைஞானம்
கற்குஞ் சரக்கன்று காண்
வேழ முகத்து விநாயகரைத் தொழ
வாழ்வு மிகுந்து வரும்.

1. பூர்வகாலம்: குமரிநாடும் ஈழமும்

நாம் வசிக்கும் நாடு இலங்கை. இதன் பழமையான ஒரே ஒரு பெயர் ஈழம் என்பதே. இந்நாட்டின் செழிப்பும் பலப்பல சீரும் நோக்கிப் பல நாட்டினராலும் காலத்துக்குக்காலம் பலப்பல பெயர்கள் வழங்கப்பட்டு வந்திக்கின்றன. அவை லங்கா, இலங்கை, மணி பல்லவம், இரத்தின துவீபம், நித்தில துவீபம், சேரன்றிப், சிலோன் முதலாயின.

இப் பெயர்கள் சில ஓரோர் காரணத்தைக் கருத்திற் கொண்டு. வேறு வேறு மொழி பேசும் வேற்று நாட்டார் தத்தம் மொழி இயல்புக்கமைய இட்டு வழங்கிய பெயர்களாகும். ஆதலின் இப் பெயர்களின் வழக்காட்சியையும் மொழி ஆக்கத்தையும் சீர்தூக்கி ஆராய்ந்து நம் நாட்டின் பழமையை ஒருவாறு தெளிவாக அறிய முடியும்.

முன்னர் காட்டிய பெயர்களுள் ஈழம். லங்கா, இலங்கை என்ற பெயர்கள் பற்றிப் பின்னர் விரிவாக விளக்குவோம். அடுத்தது மணிபல்லவம் என்னும் பெயர் ஆகும். இப்பெயர் எழுந்த வகை பற்றி ஆராய்வோம். மணிமேகலை ஆசிரியர் சீத்தலைச்சாத்தனார் என்பவர் இப் பெயரை எடுத்தாண்டுள்ளார். இவர் சேரன் செங்குட்டுவன் காலத்தவர். இவர் காலம் கி.பி. 150 – 180 வரையிலான காலமாகும். இக்காலத்தில் ஆட்சி புரிந்த இலங்கை அரசன் 1ம் கசபாகு என்பவன். இவனே கண்ணகி வணக்கத்தை இலங்கையில் பரப்பியவன். சிலப்பதிகாரம் அதனை வலியுறுத்துகின்றது. எனவே மணிபல்லவம் என்னும் பெயர் சித்தலைச்சாத்தனார் எடுத்தாளுவதற்குப் பன்னெடுங் காலம் முன்னதாகவே வழக்கில் இருந்திருக்க வேண்டும். அப்படியானால் கடைச்சங்க காலத்து அப்பெயர் வழக்கு இருந்திருக்க வேண்டும். கௌதம புத்தர் காலத்திலேயே (கி. மு. 543) இவ் வழக்கு இருந்தமை புத்தர் வரலாற்றில் காணப்படுகின்றது. எனவே ஈழ நாட்டில் மணிபல்லவம் என்பது மிகமிகப் பழமையான பெயர் என்பது புலனாகும். விசயன் வருகைக்கு முற்பட்ட வழக்காகும்.

இனி இப் பெயர் எழுந்தமைக்கு என்ன காரணம் இருந்திருக்கலாம் என ஊகித்தறிவோம் மணிபல்லவம் என்னும் பெயர் மணி – பல்லவம் என்னும் இரு சொற்களால் ஆயது. மணி என்றால் அழகைக் குறிக்கலாம். அன்றி ஒன்பது வகையான நவரத்தினங்களையும் குறிக்கலாம். அன்றேல் மாணிக்க இரத்தினத்தைக் குறிக்கலாம். இலங்கை பண்டுதொட்டு இரத்தினக்கல் அகழ்ந்தெடுக்கும் ஓர்நாடு என்பதை உலகம் அறியும். அன்றி சிறந்த முத்துக்கும் பேர்போன நாடு. இவ்வுண்மையை இரத்தினதுவீபம். நித்திலதுவீபம், இரத்தினபுரி, முத்துச்சலாபம் என்ற பெயர் வழக்கே புலப்படுத்துகின்றது. ஆதலின் இரத்தினம் முத்து முதலான மேலான பொருட்கள் கிடைக்கும் ஓர் செழிப்புள்ள நாடு என்னும் கருத்தமைய மணிபல்லவம் எனப் பண்டைக் காலத்து தமிழ் மக்கள் தம்மொழியில் பெயர் சூட்டி அழைக்கலாயினர் என்பது போதரும்.

இனி இப் பெயர் தூய தமிழ் மொழியாய் இருத்தலினால் இந்நாட்டுப் பூர்வீக தமிழ் மக்களே இப் பெயரைத் தம் நாட்டிற்கு இட்டு வழங்கினார்கள் என்பது மறுக்கமுடியாத உண்மையாகும். தமிழரே இலங்கையின் பூர்வ குடிகள் ஆனதினாலும் தமிழர் வேறு நாடுகளில் இருந்து இங்கு வந்து இலங்கையில் குடியேறினர் அல்லர் ஆனதினாலும் இலங்கையில் தமிழர் அல்லாத வேற்று மொழியாளர் வசித்தனர் என்பதற்கு வரலாறு இன்மையாலும். அதற்கு வேறு எந்தவிதமான சான்றுகள் இன்மையாலும், மணிபல்லவம் என்னும் தமிழ்த் தொடர் தமிழர் வழங்கிய வழக்கே என்பதும் அஃது மிகவும் காலவரையறைக்கப்பாற்பட்ட வழக்கு என்பதும் நாம்தெளிவாக அறியும் உண்மைகளாகும்.

அடுத்த பெயர்கள் இரத்தினதுவீபம், நித்திலதுவீபம் என்பன. இவை இத் தீவில் இரத்தினமும், முத்தும் மிகுதியாகக் கிடைத்த காரணத்தினால் வழக்கில் வரலாயின. இப் பெயர்களில் உள்ள இரத்தினம், நித்திலம், துவீபம் என்ற சொற்கள் வடமொழிச் சொற்களாகும். எனவே வடமொழியாளரால் வழங்கப்பட்ட பெயர்கள் அவை என்பது பெற்றாம். அவ்வாறானால் அப் பெயர்கள் ஆரியர் வருகைக்குப் பின்னர் அவர்களால் சூட்டப்பட்ட பெயராதல் வேண்டும். ஆதலின் அப் பெயர்கள் பிற்கால வழக்கென்பது வெளிப்படை. எனவே பன்னெடுங்காலம் முன்னதாகவே தமிழ் மக்களால் வழங்கப்பட்ட பெயர் மணிபல்லவம் என்பது தாமே போதரும் உண்மையாகும்.

இனி செரன்றிப் என்ற பெயரை எடுத்துக்கொள்வோம். இப் பெயர் அராபிய தேசத்து வணிகர்களால் இலங்கையைக் குறிப்பிட்ட பெயர்ஆகும். இங்கே சேரன் என்பது சேரநாட்டைக் குறிப்பதாகும். திவ்றிப் என்பது தீவு என்ற சொல்லின் திரிந்த உருவம். அஃதாவது வாய்ஒலி மாற்றமாகும். இனி அவ்வாறு அவர்கள் இலங்கையைக் குறிப்பிட்டமை பற்றி விளக்குவோம். இலங்கையை நோக்கி அரபிக் கடலின் ஊடாக வரும் அராபிய வணிகர் முதல் சந்திக்கும் நிலப்பகுதி சேரநாட்டுக் கரையோரமாகும். அப்பால் அதனைக் கடந்துசெல்ல வருவது இலங்கைத் தீவே. ஆகவே சேரநாட்டை அடுத்த தீவு என்னும் கருத்தை உடையராய் சேரன்றீவ் என அழைக்கலாயினர். அஃது சேரன்றீவ் சேரன்றிப் என வருதல் சகசமே. எனவே அரபு மொழியைத் தம் மொழியாகக் கொண்ட அராபிய வணிகரே சேரன்தீவு என்னும் தொடரைத் தம் மொழியியல்பின் கூறும் பொழுது ஏற்பட்ட வாய் ஒலி மாற்றமே சேரன்றிப் என்பது போதரும். வாயொலி மாற்றம் – உச்சரிப்பு வேறுபாடு. இப் பெயர் இலங்கையோடு வியாபாரத் தொடர்பு ஏற்பட்ட காலத்தில் ஏற்பட்ட பெயரேயாகும். அராபியர் இலங்கைக்கு வந்த காலம் பந்துகாபயன் ஆட்சி காலமாகும். பந்துகாபயன் காலம் கி. மு. 437 – 367 ஆகும். பந்துகாபயன் வரலாற்றில் பரசமயிகள் ஐந்நூற்றுக்கு அதிகமானோருக்கு இவ்விடங்கொடுத்து உதவினான் எனக் கூறப்படுகிறது.

அக்காலத்தில் புத்த மதம் இலங்கைக்கு வரவில்லை. புத்த மதம் இலங்கைக்கு வந்தது கி. மு. 304ல். பந்துகாபயன் காலத்தில் கிறீஸ்த சமயம் தோற்றவில்லை. எனவே பரசமயிகள் எனக்குறிப்பிடப்படுபவர் அராபியரே என்பது தேற்றம். பந்துகாபயன் காலத்தில் புத்த மதம் இலங்கைக்கு வருதற்கு முன்னர் இலங்கையில் நிலவிய சமயம் இந்து சமயமேயாகும். ஆதலின் இவர்களுடைய கடவுட் கொள்கைக்கு வேறான கொள்கை உடையவர்களான அராபியர்களைப் பரசமயிகள் எனக் குறிப்பிட்டனர். அன்றி அக்காலத்தில் முகம்மதுவின் கோட்பாடாகிய இஸ்லாம்; மதமும் தோற்றவில்லை. எனவே சேரன்றிப் என்னும் வழக்கு அராபியர் வருகைக்குப் பின்னர் ஏற்பட்ட வழக்காதலின் அதுவும் பிற்பட்ட வழக்கேயாகும். சிலோன் என்பது மேலைத் தேயத்தவர்களால் வழங்கப்பட்ட பெயராகும். இஃது சுமார் 15ம் நூற்றாண்டுக்குப்பின் உள்ள வழக்கேயாகும்.

இனி இந்நாட்டின் பழமைக்கு வருவோம். இந்நாடு ஒருகாலத்தில் வடக்கே உள்ளதும், பரந்த நிலப்பரப்பை உடையதுமான இந்தியாவோடு ஒரே நாடாக ஒன்றிணைந்து இருந்ததாகும். இதனை இலங்கை – இந்தியா இயற்கை அமைப்பே இன்றும் நமக்குப் புலப்படுத்திக் கொண்டிருக்கின்றது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையேயுள்ளது ஒர் ஒடுங்கிய நீரிணை. நீரிணையாவது இரு பெரும் நீர்ப்பாகத்தை ஒன்றிணைப்பது: எனவே இந்நீரிணை தோன்றுவதற்கு முன் இரு நாடுகளும் ஒன்றுபட்டு ஒன்றாகவே இருந்தது என்பது எவரும் எளிதில் உணரக்கூடிய உண்மையாகும் ஆதலின் இவ்விரு நாடுகளும் ஒரு காலத்தில் ஒரு நாடாகவே இருந்தன என்பதை இன்றைக்கும் எவருக்கும் புலப்படுத்திக் காட்டும் ஒருபெரிய சான்று இப் பாக்கு நீரிணையேயாகும். இஃது சுமார் 30 மைல்களுக்குட்பட்ட அகலமுடையதும், ஆழமற்றதும், முருகைக் கற்பார்ச் செறிவுடையதுமாகும்.

இந்நீரிணை ஏற்பட்டு நாடு கடலானமைக்கும் அதனால் இந்தியாவும் இலங்கையும் வேறு வேறு நாடாகப் பிரிந்தமைக்கும் காரணம் காலத்துக்குக்காலம் ஏற்பட்ட கடற் பெருக்கேயாகும். இக்கடற்பெருக்கு கடல்கோள் பற்றி பின்னர் ஆங்காங்கு விபரிப்போம். இன்னும் இதனை வலியுறுத்திக் காட்டுவன இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையே பரந்து கிடக்கும் பலப்பல தீவுகளும், அவற்றின் இடையேயுள்ள பரவைக் கடல்களுமாகும்.

அவை யாழ்ப்பாணக்குடாநாட்டை அடுத்துள்ள ஏழு தீவுகளும், மன்னார்த்தீவு, இராமேஸ்வரத் தீவு, கச்சதீவு, மாலைதீவு, அந்தமான் தீவு முதலியனவாகும். இத்தீவுகள் இலங்கையும் இந்தியாவும் ஒன்றாய் இருந்து கடல்வாய்ப்பட்டதினால் ஏற்பட்ட சிதைவேயாகும் என்பதில் ஐயமே இல்லை. இந்தியாக் கரையில் இந்துமாக் கடலில் பலமுறை கடல்கோள்கள் நடைபெற்றன என்பதை பண்டைத் தமிழ் நூல்கள் பறைசாற்றுகின்றன. மேலை, கீழைத்தேய வரலாற்றாசிரியர்களும் அதனை ஒப்புக் கொள்வர்.

இனிதமிழ் நாட்டில் (இந்தியா) மூன்று சங்கங்கள், இருந்தனவன்றோ? அவை முதற் சங்கம், இடைச் சங்கம், கடைச் சங்கம் என்பன. முதன் முதலாகத் தொடங்கப் பட்ட ஒரு சங்கம் தொடர்ந்து இருக்குமானால் சங்கங்கள் மூன்றாவதற்கில்லை. சங்கங்கள் மூன்றாகக் கூறப்படுவதினால் இடையிடையே இடையீடுபட்டு சங்கங்கள் மூன்றானமை கடல் கோள்களின் அழிவினால் ஏற்பட்ட மாற்றமேயாகும் என்பதில் ஐயமே இல்லை. எனவே கடல் கோள் காரணமாக இலங்கை இந்தியாவினின்றும் பிரிந்து தற்போதிருக்கும் நிலையில் ஒரு தனித் தீவாக மாறியது.

இலங்கை இந்தியாவோடு ஒன்றாய் இருந்த ஆதிகால வரலாற்றை அறிதற்குத் தெளிவான ஆதாரங்கள் கிடைத்தில. ஆனால் குமரிகண்ட ஆராய்ச்சி முடிபுகள் அதற்கோர் ஒப்பற்ற சான்றாகும். குமரிகண்ட முடிபுகள் பற்றிய ஈழநாட்டு வரலாறு பி;ன்னர் விபரிக்கப்படும்.

தமிழ் நாட்டைப்பற்றி (இந்தியா, இலங்கை) அறிதற்குரிய மிகப் பழைய வரலாற்று நூல்கள் கந்தபுராணம், இராமாயணம், பாரதம், சங்க நூல்கள் என்பனவே. இவை யாவும் இலங்கையும் இந்தியாவும் பிரிந்த பின்னர் உள்ள வரலாற்றையே கூறுகின்றன. என்றாலும் இவற்றின் மூலம் ஆதி வரலாற்று நிலையை ஒருவாறு அறிய முடியும்.

இவற்றுள் கந்தபுராண வரலாறே மிகமிகப் பழமையானது. அதனை எவரும் ஒப்புக்கொள்வர். இதன் உதவி கொண்டு சில உண்மைகளை அறிய முடியுமானால் அஃது இலங்கை இந்தியாவினின்றும் துண்டிக்கப்பட்ட பின்னர் உள்ள ஆதி வரலாறு என்றே கொள்ள வேண்டும். சூரன் ஆட்சிக்கால முடிவிலும் ஓர் பெரிய கடல் கோள் நடைபெற்றதாகக் கந்தபுராணம் கூறும். அக் கடல் கோளினால் முன்னிருந்த இலங்கையின் பெரும் பகுதி, சூரன் ஆட்சி நகர் வீருமகேந்திரம் உட்படகடல்வாய்ப்பட்டன. அக்காலத்திலேயே இராமேஸ்வரத்துக்கும், இந்தியாவுக்கும் இடையேயுள்ள பகுதி கூடுதலாகச் சிதைவுற்று இடையே சிறு கால்வாயாக மாறி இருக்கலாம் என ஊகிக்க இடமுண்டு. சூரன் வரலாற்றுக்கு வெகுகாலம் பிற்பட்டதே இராமர் வரலாறு ஆகும். எனவே இராமேஸ்வரம் என்னும்பெயரும் இராமர் காலத்திலோ பின்போ ஏற்பட்ட பிற்கால வழக்கேயாகும். அவ்விடத்தின் பழைய பெயர் அறிய வேண்டியதாகும்.

கந்தபுராண வரலாற்றின்படி சூரன் ஆட்சிக்காலத்தில் இராமேஸ்வரமும் இந்தியாவும் ஒன்றாய் இருந்ததாக அறிகிறோம். வீரவாகு தேவர் சூரனிடம் தூதாக வீரமகேந்திரம் சென்ற போது இராமேஸ்வரத்தின் வடகோடி கந்தமாதனத்தில் இருந்தே கடலைத் தாவி இலங்கைக்குச் சென்றதாக அறிகிறோம். எனவே கந்தமாதனம் வரையும் வீரவாகுதேவர் தரைமார்க்கமாகவே சென்றார் என்பது துணிபொருள். அன்றியும் பிற்பட்ட இராமர் காலத்தில் அணைகட்டிச் செல்லத்தக்கதான சிறுகால்வாயாக இருந்தமை இராமாயண வரலாற்றில் இருந்து அறிகிறோம். எனவே வீரவாகுதேவர் சென்ற காலத்தில் தரையாக இருந்து சூரன் ஆட்சி முடிவில் ஏற்பட்ட கடல் கோளினால் அத்தரைப் பகுதி சிறு கால்வாயாக மாறியது என்பதே தெளிவான உண்மை.

ஆதலின் எவ்வாற்றானும் இலங்கையும், இந்தியாவும் ஒருகாலத்தில் ஒன்றாய் ஒரே நாடாய் ஒரே தேசமாய் இருந்ததென்பதை மறுக்கமுடியாது. ஒன்றாய் இருந்த அக்காலத்தில் இலங்கையின் பூர்வ குடிகளும், இந்தியாவின் பூர்வ குடிகளும் ஒரே நாட்டு மக்களே என்பதில் ஐயமே இல்லை. அப்பொழுது ஒரே மொழி ஒரே கடவுட் கொள்கை. ஒரே பண்பாடு உடையவர்களாக இருந்திருப்பார்கள். அதற்குச் சான்றாக எத்தனையோ பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னரும் இந்தியாவின் தென்பகுதியும், ஈழமும் இன்றும் ஒரே மொழி (தமிழ்) ஒரே கடவுட் கொள்கை (சைவம்) ஒரே பண்பாடு உடையதாக இருத்தலை அறிக. ஒரே பண்பாடு உடையதாக இருத்தலை மொகஞ்சதாரோ ஆராய்ச்சி முடிபும் வலியுறுத்துவதாகும். ஆரிய மொழி, சிங்களமொழி புத்தமதம், கிறீஸ்தவ மதம். இஸ்லாம் மதம் இவை இடைக்காலத்தே வந்து புகுந்தனவன்றோ? இவைபற்றிப் பின்னர் விபரிப்போம்.

அன்றியும் ஆரியர் இடைக்காலத்தே இந்தியாவினுட் புகுந்தமையினாலும், அவர்கள் இந்தியப் பூர்வ குடிகளோடு (தமிழர்) உறவாடிக் கலந்தமையினாலும், பல மொழித்தோற்றம் ஏற்பட்டுப் பல இன மக்களாக இந்தியாவில் வாழ்ந்த போதிலும், எல்லோரும் ஒரே கடவுட் கொள்கையும், பண்பாடும் உடையவர்களாக இற்றை வரைக்கும் இருந்துவருதலே. ஆரியர் வருகைக்கு முன் இந்தியா முழுமையும் தமிழர்களே வாழ்ந்தார்கள் என்பதற்குப் போதிய சான்றாகும். ஆரியர்கள் இந்தியாவுக்கு வந்த காலம் கி; மு. 1600 – 2000 வரையிலென வரலாற்றாசிரியர் கருதுவர். அஃதாவது இற்றைக்கு 3588 – 3988 ஆண்டுகளுக்கு முன்னாகும்.

எனவே கி. மு. 1600 – 2000 க்கு முன் இலங்கையின் தென்கோடி அம்பாந்தோட்டை தொடக்கம் இமயமலை பரியந்தம் வாழந்த மக்களினம் தமிழர்களே என்பதில் யாதாமொரு ஐயப்பாடும் இல்லையே. இலங்கையில் சிங்கள மொழியும் புத்த மதமும் ஏற்படுவதற்கான காரண கருத்தாவாக இருந்தவன் தேவநம்பியதீசன் ஆவான். இவன் காலத்திலேயே புத்த மதம் இலங்கைக்கு வந்தது.

ஆரியர் வருகைக்கு முன் இந்தியா முழுமையும் தமிழினமே வாழ்ந்தார்கள் என்பதற்கு 1922ல் மொகஞ்சதாரோ, கரப்பா என்னும்சிந்துநதிப் பள்ளத்தாக்கில் புதையுண்ட நகரங்கள் கண்டுபிடிக்கப்பட்டு ஆய்வு நடத்தியபோது அங்கு வாழ்ந்த மக்கள் தமிழ் இனமே என ஆய்வாளர்கள் முடிபு செய்துள்ளனர். அப்பகுதியின் நாகரீக மக்கள் கி. மு. 3300 – 2900 என்பர். அஃது இற்றைக்கு 5288 – 4888 ஆண்டுகள் முன்னாகும். எனவே துவாபரயுகத்தின் இறுதிக் காலம் ஆகும். எனவே துவாபரயுகத்தில் இந்தியா, ஈழத்தில் வாழ்ந்த மக்கள் தமிழர்களே. சமயம் இந்து சமயம்.

எனவே ஆரியர் வருகைக்குப்பல நூறு வருடங்களுக்கு முன்னாகவே தமிழர்கள் அங்கு வாழ்ந்தார்கள் என்பது வெளிப்படை. இவ்வாறாயின் இத்தகைய தமிழினத்தின் முன்னோர் எத்தனை பல்லாயிரம் ஆண்டுகள் பாரம்பரியமாக வாழ்ந்திருக்க வேண்டும். உணர்மின்!

இன்னும் “பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்துக் குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள” எனச் சிலப்பதிகாரம் கூறுகின்றது. இதனை ஆழ்ந்து சிந்திக்க வேண்டும். இந்தியாவும் இலங்கையும் ஒரே நாடாய் குமரி நாட்டின் ஒரு பகுதியாய் இருந்த காலத்திலேயே இக் கடல் கோள் நடைபெற்றிருக்கிறது. அப்போது குமரிக்கோடும் அதனின்றும் ஊற்றெடுத்துப் பாயும் பஃறுளியாறும் கடல் வாய்ப்பட்டுக் கடலானது என்பது பெற்றாம் அக்கடலின் தென்கரையில் உள்ளதே இலங்கை. வடகரையில் உள்ளதே இந்தியா. இதனால் ஒரே நாடாயிருந்த இந்தியாவும் இலங்கையும் இக்கடல் கோளினால் வேறு வேறு நாடாகப்பிரிக்கப்பட்டு இடையே கடல் புகுந்ததன்றோ? எனவே அக்கடலாகிய நீரிணையின் ஆழமான பகுதியே பஃறுளியாற்றுப் படுக்கையாக அமையலாம் அல்லவா? அந் நீரிணைப் பகுதியின் இரு கரைப் பகுதிகளும் குமரிமலையின் சாரலாக மக்கள் வாழ்ந்த நாடுகளாக இருக்க வேண்டும். இதற்கு ஆதாரமாக இறையனார் களவியலுரையில் 49 நாடுகள் கடல்வாய்ப்பட்டன எனக் கூறப்பட்டிருத்தலை உணர்க. ஏனைய உரையாசிரியர்களும் இக்கூற்றை ஆங்காங்கே வலியுறுத்தியுள்ளனர்.

குமரிக்கோடு கடல் வாய்ப்பட்ட தென்பதனை குமரிமுனை, குமரியங்கடல் என்னும் இன்றைய வழக்கில் இருந்து வரும் பெயர்களே சான்று பகருகின்றன. குமரிமுனையில் குமரித் தெய்வம் குடிகொண்டிருக்கின்றது. குமரியங்கடல் ஓர் புண்ணிய தீர்த்தமாக மிளிர்கின்றது. இதனால் குமரி மலை இருந்த காலத்தில் அம் மலைமீது குமரிக்கோயில் ஒன்று இருந்திருக்க வேண்டும் என்பதும் மக்கள் அதனை வழிபட்டு அம்மலையினின்றும் ஊற்றெடுத்துப் பாய்ந்த பஃறுளியாற்றிலே தீர்த்தமாடி வந்தனர் என்பதும் அறிய முடிகின்றதல்லவா? அவை கடல்வாய்ப்பட்ட பின்னர் அக் கடலின் வடகரையும். இந்தியாவின் தென்கோடியும் ஆகிய அம்முனையில் குமரிக்கோயிலும் வழிபாடும் தீர்த்தமாடுதலும் நடைபெற்று வருகின்றதென்றே கொள்ள வேண்டும்.

இன்னும் அக்கடலின் (பாக்குநீரிணை) தென்கரையை நோக்குவோம். அஃது இலங்கையின் வட கரையாகும் இங்கே கீரிமலை எனப்படும் குன்றும் நன்னீருற்றுமுடைத்தாய் அறியாத பண்டைக்காலம் தொட்டுப் புண்ணிய தீர்த்தமாக இன்றும் விளங்கி வருகின்றது. இத் தீர்த்தத்தில் கீரிமுகம் உடைய ஒர் முனிவர் தீர்த்தமாடி அக் குன்றில் தவஞ் செய்து தமக்கிருந்த கீரிமுகம் மாறப் பெற்றார் என்பதும் அதனால் அக்குன்று அன்று தொட்டு கீரிமலை என அழைக்கப்பட்டு வருகிறது என்பதும் கர்ண பரம்பரைக் கதையாகும்.

இன்னும் கி. பி 8ம் நூற்றாண்டிலே குதிரை முகம் உடைய மாருதப்புரவீகவல்லி என்னும் சோழ அரசன் மகளானவள் கீரிமலை நன்நீரூற்றில் தீர்த்தமாடித் தனக்கிருந்த குதிரை முகம் மாறப் பெற்றாள் என்றும் அதனால் மாவிட்டபுரம் எனப் பெயர்சூட்டி ஒரு முருகன் ஆலயத்தை அமைத்து ஆனி உத்திரத்தில் கொடியேற்றி ஆடி அமாவாசையில் தீர்த்தவிழா எடுப்பித்தாள் என்றும் வரலாறு கூறுகின்றது. இதனால் அத் தீர்த்தத்தின் மகிமை புலனாகிறது. எனவே கீரிமலை எனப்படும் இக் குன்று குமரி மலையின் ஒரு பகுதியென்றே கொள்ளக் கிடக்கின்றது.

இனி குமரிமலைச் சாரலும் பஃறுளியாற்றின் இரு கரைநாடுகளும் செழிப்புள்ள வளம் நிறைந்த மக்கள் நெருங்கிய இடங்களாக அமைய வேண்டும். குமரிக்கோடு கடல்வாய்ப்பட்டபோது 49 நாடுகள் கடல்வாய்ப்பட்டன என சிலப்பதிகாரமும் இறையனார் களவியலுரையும் கூறுகின்றன. 49 நாடுகளாவன: ஏழ் தெங்கு நாடு, ஏழ் மதுரை நாடு, ஏழ் முன்பாலை நாடு, ஏழ் பின்பாலை நாடு, ஏழ் குன்ற நாடு, ஏழ் குணகாரை நாடு, ஏழ் குறும்பானை நாடு, குமரி, கொல்லம் முதலிய பன்மலை நாடு என்பனவாம்.

இனி குமரி என்பது மலையைக் குறித்ததா? அன்றி ஆற்றைக் குறித்ததா? என்னும் ஐயப்பாடும் உண்டாகலாம். சிலப்பதிகாரம், குமரிக்கோடு (மலை) என்றே கூறுகின்றது. இக்கூற்றைச் சிகனடியார் கூற்றும் வலியுறுத்துகின்றது. என்னை?

“வேங்கடங்குமரி தீம்புனற் பௌவம் என்றும்
இந்நான் கெல்லை தமிழது வழக்கே”

என்பது வடக்கு வேங்கடமும் தெற்கு குமரி இரண்டையும் ஒரே இயல்பாக “வேங்கடம்குமரி” வேங்கட மலையோடு குமரியைச் சேர்த்துக் கூறி மேற்கும் கிழக்கும் “தீம்புனற் பௌவம்” என விதந்து கடலைக் கூறுதலின் குமரிமலை என்பதே ஆசிரியர் கருத்தாகும்.

ஆசிரியர் காலத்துக் குமரிமலை இருக்கவில்லையேயெனின் ஆம், குமரிமலை கடல்வாய்ப்பட்ட பின் அதனின் முனைப்பாகிய எஞ்சிய பகுதியை ஆசிரியர் குறித்தனர் ஆதல் வேண்டும். எனவே குமரிமுனையைக் குறிப்பதாகும் என்க. எனவே குமரி என ஒர் மலையிருந்து, அது கடல் வாய்ப்பட்டபின் அதன் ஞாபகார்த்தமாக தென்கோடி முனையை குமரி முனையென வழங்கி வரலாயினர் என்பதே வரலாற்றுண்மையாகும். குமரி என்பது ஆற்றைக் குறித்தது என உரையாசிரியர்கள் கூறுவதற்கு அவர்கள் கூற்றேயன்றி வேறு சான்றுகள் கிடைத்தில. தொல்காப்பிச் சிறப்புப் பாயிரச் செய்யுளும் “வடவேங்கடம் தென் குமரி” என்றே கூறும். கடல் என்றோ யாறென்றோ சுட்டவில்லை. இதனாலும் குமரி மலையைக் குறிக்கிறது என்பதே வலியுறுத்தல் காண்க.

இனி இந்தியாவும் இலங்கையும் குமரிமலைத் தொடரை உடையதாய் ஒன்றாய் இருந்துபின் கடல் கோளினால் இடையே 49 நாடுகள் கடல்வாய்ப்பட்டன என்றால் எஞ்சியிருந்த இன்றைய இலங்கையே (ஈழம்) ஐம்பதாவது நாடாம் என்பது துணிபாம். இக்கடல் கோள் எப்போது நடைபெற்றிருக்கலாம் என்பது பற்றிப் பின்னர் கூறுவாம்.

ஆரியர் இந்தியாவுக்கு வந்த காலத்தில் தமிழ் மக்களைத் தென்பக்கம் நோக்கிக் குடிபெயரச்செய்தும், அவர்களுள் ஒரு பகுதியாரோடு உறவாடிக் கலந்தும் இந்தியாவின் வடபகுதியில் குடியேறி வாழ்ந்து வரலாயினர்.

தற்போது உள்ள இந்தியாவில் சங்கம் ஆரம்பித்த காலத்தில் தெற்கே குமரியும், வடக்கே வேங்கடமும் ஆகிய எல்லைக்குட்பட்ட இடம் தமிழ் மொழி வழங்கிய செந்தமிழ் நாடாம். பண்டைய சங்க காலத் தமிழ் நூல்கள் யாவும் அதனைவலியுறுத்துகின்றன. இன்றுள்ள தமிழ் நூல்களுள் மிகவும் பழமையானதும், யாவற்றுக்கும் முதனூலாக விளங்கும் பெருமையுடையதுமான ஒல்காப் பெரும் புகழ்த் தொல்காப்பியத்தின் பாயிரத்திலே பனம்பாரனார் என்பவர் தமிழ் வழங்கும் நாட்டின் எல்லையை வரையறுத்து “வட வேங்கடந் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல்லுலகத்து” எனக் கூறுகின்றார். காக்கை பாடினியாரும்,

“வடக்கும் தெற்கும் குடக்கும் குணக்கும்
வேங்கடங் குமரி தீம்புனற் பௌவமென்று
அந்நான் கெல்லை ஆவயிற் கிடந்த
நூலதின் முறையே வாலிதின் விரிப்பின்”

எனக் கூறியிருப்பது காண்க சிகண்டியார் கூற்று முற்கூறப்பட்டது. இவைகள் மாற்றவோ மறைக்கவோ முடியாத பெருஞ் சாசனங்களாகும்.

தெற்கே குறிப்பிட்ட எல்லை குமரி. அக் குமரிக்குத் தெற்கே உள்ளது பாக்கு நீரிணை. ஆகவே வடக்கே வேங்கடம் தொடக்கம் தெற்கே கடல் எல்லையாகத் தமிழ் வழங்கிய நாடாகும். இவ்வெல்லை சங்ககாலத்திலே தொல்காப்பியர் காலத்துத் தமிழ் நாட்டின் விரிவை எடுத்துக்காட்டுகின்றது. சங்க காலமாவது மூன்று சங்கங்களும் நிலவிய காலமாகும். இவ்வெல்லை வேங்கடம் வரையும் வரையறுக்கப்பட்டமையினால் தொல்காப்பியர் காலத்தில் ஆரியர் வேங்கடத்துக்கு வடக்கே குடியமர்ந்திருந்தமை புலப்படுவதாகும். எனவே ஆரியர் வருகை தொல்காப்பியர் காலத்துக்குப் பல நூற்றாண்டுகள் முற்பட்டதாக வேண்டும் என்பது தெளிவு.

இக்காலத்தில் வேங்கடத்துக்கு அப்பாலும் பரந்த நிலப்பரப்பும் மக்கள் சமுதாயமும் இருக்கவும் வட வேங்கடத்தை எல்லையாக வரையறுத்தமை, அப்பால் வேற்று மொழி மக்கள் வசித்தனர் என்பதை எடுத்துக் காட்டுவதன்றோ? இங்கே நாம் ஒருவரலாற்று உண்மையை அறிய முடிகின்றது. என்னை?

தொல்காப்பியனார் தொல்காப்பியம் செய்கின்ற காலத்தில் ஆரியர் வடபகுதியில் குடியமர்ந்து வாழ்ந்தனர் என்பதேயாகும். எனவே ஆரியர் வருகை கி. மு. 1600 – 2000 என வரலாற்றாசிரியர் கூறுவதினால் தொல்காப்பியம் செய்யப்பட்ட காலம் கி. மு. 1600 க்கும் சில நூற்றாண்டுகள் பின்னாகக் கொள்ளலாம்.

இனி தென்குமரியை எல்லையாகக் கூறுவதினால் தெற்கே அதற்கு அப்பாலும் வேற்று மொழிநாடாம் எனின்? அற்றன்று. ஏன்? குமரிக்குத் தெற்கே கடல் இருந்து இந்தியாவையும், இலங்கையையும் வேறு வேறு நாடாகப் பரித்தலின் அது கடாவன்மை அறிக. தெற்கே கடலால் வரையறுக்கப்பட்ட தமிழ் மக்கள் வாழ்ந்த இந்தியாவின் தென் பகுதியை முக்குலத் தமிழ் மன்னர் ஆட்சி புரிந்து வரலாயினர். அவர்கள் சேரன், சோழன், பாண்டியன் ஆவர். அம் மூவரும் தமிழ் மொழியை வளர்ப்பான் கருதியும் கற்று வல்ல பெரியோரை ஒன்று கூட்டிச் சங்கம் அமைத்து, சங்கத்தில் தாமும் அங்கம் வகித்து சங்கத்தை வளர்த்த தமிழ் மொழியையும், தமிழ் மக்களையும் வளம் படுத்தினர் ஆதலின் அம்மூவர் நாடும் அகப்படத் தமிழ் வழங்கிய இடத்துக்கு எல்லை கூறுவாராயினர். அதனால் குமரிக்குத் தெற்கே கடலுக்கு அப்பாலுள்ள நாடாகிய இலங்கை வேற்று மொழி நாடெனப்படாமை காண்க.

எனவே, இலங்கை இந்தியாவினின்றும் பிரிபட்ட பின்னர் ஆரியர் வருகைக்குப் பின்னர், தமிழ் வழங்கிய எல்லை இதுவானால் இரு நாடுகளும் ஒன்றாய் இருந்த காலத்தில் இலங்கையும் அகப்படத் தமிழ் நாடே என அறிக. அன்றியும் பிரிபட்ட பின்னும், ஆரியர் வருகைக்கு முன் இலங்கையும் சேர இமயமலை பரியந்தம் தமிழ் வழங்கிய தமிழ் மக்கள் வாழ்ந்த இடமேயாகும்.

இனி, குமரிக்குத் தெற்கேயும் கடல் இன்றி நிலப்பரப்பும் மக்கள் கூட்டமும் இருக்க அதனை வேறு பிரித்து குமரியையே தமிழ் நாட்டின் எல்லையாக வரையறுத்திருந்தால் வேங்கடத்துக்கு அப்பாலுள்ள வடபகுதியே போன்று இலங்கையும் வேற்று மொழி நாடாம் எனக் கோடல் தகும். ஆதலின், கடல் தோன்றுவதற்கு முன் இரு நாடுகளும் ஒன்றாய் இருந்த காலத்தில் இலங்கையின் தென்கோடி அம்பாந்தோட்டை தொடக்கம் இமயமலை பரியந்தம் தமிழ் வழங்கிய தமிழ் நாடே என்பது தெளிவு. இதுபற்றி முன்னரும் கூறியுள்ளாம்.

இதுவரை யாம் கூறியவற்றில் இருந்து பிறிதோர் வரலாற்றுண்மை வலியுறுத்தப்படுகின்றது. என்னை? சங்க கால எல்லை வடவேங்கடம் அதற்கப்பால் உள்ளது. சிந்துவெளி, அங்குள்ள மொகஞ்சதாரோ, கரப்பா நாகரீகம் தமிழர் நாகரீகம் என்பது ஆய்வாளர் கருத்து என்பதனை முன் உணர்த்தியுள்ளேன். எனவே சங்ககாலத்துக்கு முன்னர் தமிழர்கள் இலங்கை அகப்பட இமயமலை பரியந்தம் வாழ்ந்தார்கள் என்பதும், வேறு எந்த ஒரு இன மக்களோ வாழவில்லை என்பதும் ஆகும்.

ஆரியர் வருகைக்குப்பின்னரே இடைச்சங்கம் இருந்த காலமாகும். அதனாலேயே தொல்காப்பியர் வடஎல்லை வேங்டமாகக் கூறியதுமன்றி, வடமொழிச் சொற்கள் தமிழ் மொழியில் வந்து விரிவாதிருத்தற் பொருட்டும் பொது எழுத்தாலாய வடமொழிகள் தமிழில் வழங்குதற்கும் வரையறுத்து இலக்கண வரம்பும் செய்துள்ளார்.

இனி, தென் எல்லையாகக் கூறப்பட்ட குமரி என்பது மலையன்று@ யாறும் அன்று@ கடலும் அன்று@. அஃது குமரி மலை கடல் வாய்ப்பட்டபோது எஞ்சிய குமரிமலையின் முனைப்பே என்பதை முன் கூறியவற்றில் இருந்து நாம் உணருகிறோம். இவ்வுண்மையை இன்னும் அகல நோக்கித் துணிவாம்.

“வடா அத பனிப்படு நெடுவரை வடக்கும்
தெனா அது உருகெழு குமரியின் தெற்கும்
குணாது கரைபொரு தொடுகடற் குணக்கும்
குடா அது தோன்று முதிர் பௌத்தின் குடக்கும்”

எனப் புறநானூறு கூறுவதில் இருந்தும் அவ்வுண்மையை அறியலாம். இப்பாட்டு பல்யாகசாலை முது குடுமிப் பெருவழுதி மேற் பாடப்பட்டது. பாடியவர் புலவர் காரிகிழார் என்பவர். இவ்வரசன் புகழ் தமிழ்நாட்டில் மாத்திரமன்று. அதற்கப்பாலும் பரவியது என்பதைப் புலவர் எடுத்துக் காட்டுகின்றார். இப் பாட்டில் கிழக்கும், மேற்கும் கடல் என விதந்து கூறி, குமரியை வாளா உருகெழு குமரி எனக் கூறுதலினால் அஃது கடலும் அன்று@ மலையும் அன்று என்பது பெற்றாம். எனவே குமரி என்னும் பெயர் குமரிமலையின் நினைவுச் சின்னமாக இந்தியாவின் தென்கோடி முனையைச் சுட்டி உணர்த்துவதாகும். புறம் 17வது செய்யுளில்,

“தென்குமரி வடபெருங்கல்
குணகுட கடலா வெல்லை” எனக் கூறப்பட்டுள்ளது.

குமரியாற்றைக் குறிப்பதென வைத்துக்கொண்டு அதுபற்றிச் சிந்திப்போம். குமரிநாடு கடல்வாய்ப்பட்டு அழிவெய்திய பின்னர் தமிழ்நாட்டின் தென்எல்லை குமரி என்பது இது யாறானால் இப்போதும் அப்படி ஓர்யாறு ஓடிக் கொண்டிருக்கிறதா? அழிவெய்த முன்னர் குமரி என்பது யாறு எனக் கூறின் அதற்கு எவ்வித ஆதாரமும் இன்று.

புறம் 67ஆவது செய்யுள் குமரி கடற்கரையிலுள்ள ஓர் இடம் என்பதைச் சுட்டிக்காட்டுகின்றது. அது “குமரியம் பெருந்துறை அயிரை மாந்தி” என்பதுஇதில் துறை என்பது கடற்றுறை எனக்கோடலே பெரு வழக்கும் இயல்பாய பொருள் கோளுமாம். அன்றி வலிந்து யாதொரு ஆதாரமும் இன்றி யாற்றுத்துறை எனக் கொள்வார் சிலர். அங்கேயோர் யாற்று முகத்துவாரம் இல்லாமையே அவர் கூற்றுப் பொருந்தாமையை வலியுறுத்துவதாகும்.

எனவே சிலப்பதிகாரம் தெளிவாக “பஃறுளியாற்றுடன் பன்மலையடுக்கத்துக் குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள” எனக் கூறியிருப்பதனால் கடல்கோள்ப்பட்ட பின்னர் குமரிமலையின் நினைவாக இன்றும் அழிவின்றி நிற்கும் அம்மலைப் பகுதியின் முனைப்பையே குமரிமுனை, குமரி எனக் கூறிவரலாயினர் எனத் தொல்லாசிரியர் கூற்றில் இருந்து நாம் அறியக்கூடிய உண்மையாகும்.

குமரிகோடு என்பது குமரி மலையின்உச்சி என்று கொள்ளலாம். ஏன்? “பன்மலையடுக்கத்துக் குமரிக்கோடு” என்றலின் அஃது பல மலை அடுக்குகளைக் கொண்ட குமரி மலையின் உச்சி எனப்பொருள்படும்.

இக் குமரிக்கோடு அக்காலத்தில் தற்போது இமயமலை இருப்பது போன்று தெய்வீகம் நிறைந்த பலவகையான பெருமைகளை உடையதாக அக்கால மக்களால் போற்றப்பட்டு வந்திருக்க வேண்டும். அக் குமரிக்கோட்டின் உச்சியில் குமரித்தெய்வம் வீற்றிருந்து அருள்பாலித்திருக்க வேண்டும். அதனால் அம்மலை குமரிமலை என மக்களால் போற்றப்பட்டதாக வேண்டும். அதனாலேயே அம்மலை கடல்வாய்ப்பட்ட பின்னும் அவ்விடத்திலே குமரிக் கோயிலும், அம்பாள் தரிசனமும் தீர்த்தமாடுதலும் பண்டுதொட்டு இன்று காறும் நடந்துவருகின்றது.

இத்தகைய தெய்வீகம் நிறைந்த குமரிமலை இமயமலைக்குக் கங்காநதி போன்ற பஃறுளியாற்றைக் கொண்டிருந்தது எனக் கொள்ள இடமுண்டு. இவ்வாற்றையே குமரி ஆறு என வழங்கி இருக்கலாம். ஏன் குமரிமலையினின்றும் ஊற்றெடுத்துப் பாய்ந்த காரணத்தால் அவ்வாறு அழைத்தலும் சாலும். அன்றிப் பிறிதோர் குமரியாறு இருந்தமைக்கு எவ்வித ஆதாரமும் இன்று. அக்காலத்தில் குமரி மலை கொண்டிருந்த சிறப்பால் அம்மலையுடைய நாட்டையும் குமரிநாடென அழைக்கலாயினர் என்பது போதரும். குமரிமலை முழுமையும் கடல்வாய்ப்பட்டதன்று. வடக்குத் தெற்காக நீண்டிருந்த குமரிமலைத் தொடரின் வடபகுதியாகிய குமரிக்கோடும், பஃறுளியாறும், அவற்றைச்சார்ந்த இடங்களுமே கடல்வாய்ப்பட்டன. அப்பகுதியே தற்காலம் பாக்குநீரிணை எனக் கூறப்படும் கடற் பகுதியும் மன்னார்க் குடாக்கடலுமாகும்.

இனி, குமரி மலையை மொழியாளர் மகேந்திரமலை என்பர். சைவ உபாகமமாகிய சிவதருமோத்திரத்தில் பெரியமலைக்குத் தெற்கே மகேந்திரமலை உண்டென்றும். அது தெற்கு வடக்காக நீண்டு பரந்து உயர்ந்திருந்ததென்றும், அதன் அடிவாரத்தில் கனகமயமான இலங்கை உள்ள தென்றும் கூறப்படுகிறது. அன்றியும் அஃது ‘உன்னதத் தென்மகேந்திரம்’ எனவும் கூறப்படுகிறது. இம் மகேந்திரமலையின் தென்கோடியிலேயே (ஈழம்) சூரனுடைய இராசதானியாகிய வீரமகேந்திரம் இருந்திருக்கிறது.

எனவே மகேந்திர மலையின் அடிவாரத்தில் கனக மயமான இலங்கை உள்ளது எனக் கூறப்படுவதாலும் இலங்கையின் தென்கோடியில் மகேந்திர மலையில் சூரனது இராசதானி வீர மகேந்திரம் இருந்ததாகக் கூறப்படுவதாலும், குமரிமலைத் தொடர் (மகேந்திரம்) தற்போதுள்ள இந்தியாவின் தென்கோடியில் இருந்து ஆரம்பமாகி பாக்கு நீரிணை மன்னார்க் குடாக்கடலை உள்ளடக்கித் தெற்கு நோக்கிச் சென்று இலங்கையின் மத்தியில் மலை அடுக்குகளாய்ப் பரந்து உயர்ந்து இருக்கும் காலத்தில் அம்மலையின் மத்திய பகுதியே ஈழமாகும். (இலங்கை) இம் மகேந்திரமலை பலவிதமான அற்புத நிகழ்ச்சிகளைக் கொண்டுள்ளது. இம் மகேந்திரமலையிலேயே (குமரிமலை) இறைவன் எழுந்தருளியிருந்து நான்கு தமிழ் முனிவர்களுக்கு ஆகமங்களை உபதேசஞ் செய்தருளினார் என்பது புராண வரலாறு. அம்மலை தற்போது தெய்வீகம் நிறைந்த இடமாகக் காணப்படுவதும் சிவன் நாமத்தினால் அழைக்கப்படுவதுமான சிவனொளிபாதமலை என்றே கருத இடமுண்டு.

“மன்னுமாமலை மகேந்திரமதனில்
சொன்ன ஆகமம் தோற்றுவித்தருளியும்”

எனக் கீர்த்தித் திருஅகவலிலும் “மந்திர மாமலை மேவினாய் போற்றி” எனப் போற்றித் திரு அகவலிலும் மாணிக்கவாசக சுவாமிகள் கூறியிருப்பது காண்க. மந்திரமாமலை எனக் கூறப்படுவது மகேந்திரமலையே. மகேந்திரமலையின் அடிவாரத்தில் உள்ள இலங்கையைத் திருமூலநாயனார் சிவ பூமி எனக் கூறுவர். அவர் கூறுவதற்கு ஆதாரமாக இன்றும் நின்று காட்சி அளிப்பது சிவனொளி மலையே இது பிற்காலம் சிவனொளிபாதமலை என வழங்குவதாயிற்று. இஃது எல்லா மதத்தினராலும் போற்றப்பட்டுவரும் தெய்வீகச் சக்தி நிறைந்தது இம் மலை பண்டைக்காலம் தொட்டு சிவனின் உறைவிடமாக மக்களால் போற்றப்பட்டு வருகிறது. அதனாலேயே பின் வந்தவர்களான புத்தர்களும், கிறிஸ்தவர்களும், இஸ்லாமியரும் அம் மலையைத் தத்தம் கடவுளின் இருப்பிடமாகக் கருதி வழிபட்டு வருகின்றார்கள். வழிபடுவது மாத்திரமல்ல, தத்தம் சமய கோட்பாட்டுக்கும், மொழிக்கும் ஏற்ப வேறுவேறு பெயர் சூட்டியும் வணங்குவாராயினர்.

எனவே இலங்கையின் மத்தியில் அதன் தென்கோடி வரை பரந்து உயர்ந்திருக்கும் மலைத்தொடர்கள் யாவும் மகேந்திர மலையின் பகுதிகளேயாகும். இதனை சிவதருமோத்திரத்தில் “மகேந்திர மலையின் அடிவாரத்தில் கனக மயமான இலங்கை இருக்கிறது” எனக்கூறப்பட்டிருத்தலினாலும் தென்கோடியில் சூரன் ஆட்சி நகர் வீரமகேந்திரம் இருந்ததெனக் கூறப்படுவதாலும் அறியலாம். எனவே மகேந்திரமலை இந்தியாவின் தென்கோடியில் இருந்து ஈழநாட்டை ஊடறுத்துத் தெற்கு நோக்கிச் சென்றது என்பது புலனாகும். அம் மலையின் அடிவாரமே ஈழம். எனவே இந்தியாவோடு இணைந்து தென்புறமாகப் பரந்திருந்த நாடே குமரிநாடென்பதும், அந்நாட்டில் கடல்கோட்பட்டவை போக எஞ்சியுள்ள குமரி நாடே ஈழம் என்பதும், குமரி நாடு இருந்த காலத்தில் வழங்கி வரப்பட்ட ஒரு உள்நாட்டின் பெயரே ஈழம் என்பதும், எனவே ஈழம் என்னும் பெயர்குமரி நாடு இருந்த காலத்தில் வழக்கில் இருந்த தென்பதும் அவ்வீழமே தற்போது இலங்கை என அழைக்கப்படும் தீவு என்பதும் குமரி நாட்டில் உள்நாடாய் இருந்த ஈழம் குமரி நாட்டைக் கடல்கொண்டதால் தீவானது என்பதும் நாம் தெளிவாக அறியும் உண்மைகளாகும்.

இனிக் குமரிமலை பல அடுக்க மலைகளைக் கொண்ட ஒருதொடர் என்பதனை இளங்கோவடிகள் கூற்று உறுதிப்படுத்துகின்றது. “பன்மலை அடுக்கத்துக் குமரிக்கோடு” என்கிறார். ஆதலின் குமரிமலைத் தொடரின் வடபால் உள்ள உயர்ந்த மலையும் அதனின்று ஊற்றெடுத்துப் பாய்ந்த பஃறுளியாறு கடல்வாய்ப்பட்டன என்பது உண்மையாகும்.

About editor 2996 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply