மகாவம்சம் – ஒரு வரலாற்றுப் பின்புலம் : யசோதா பத்மநாதன்

மகாவம்சம் – ஒரு வரலாற்றுப் பின்புலம் : யசோதா பத்மநாதன்

‘ஒரு வரலாற்று நூலைப் படிக்கு முன் ஒரு வரலாற்று ஆசிரியனைப் படி’என்பதுவரலாற்று மாணவர்களின் அடிச்சுவடி.இன,மத,மொழி,கலாசார,பண்பாட்டு இயல்புகளுக்குள் தொலைந்து போயிருக்கும் மனிதனிடமிருந்து ‘உண்மை வரலாற்றை’ பிரித்துப் பார் என்பது அதன் பொருள்.அந்த வகையில் புனிதமாகப் போற்றப் பட்டு வரும் மகாவம்சம் பார்க்கப் படவில்லை.

இருந்த போதும், இன்றய இனப்பிரச்சினைக்கான அடிப்படையை இட்டுக் கொடுத்ததென்ற வகையிலும் நாடு, மதம்,அரசு என்ற இம் மூன்றுக்கும் வலுவான அடிப்படையை இட்டுக் கொடுத்ததென்ற வகையிலும் அவற்றின் பூரண விளைவை நாம் அனுபவிப்பவர்களாக  இருக்கிறோம் என்ற வகையிலும் மகாவம்சத்தின் உருவாக்கப் பின்னணி பார்க்கப் பட வேண்டியது அவசியமாகும்.

மகாவம்சம் கிபி 5ஆம் நூற்றாண்டிற்கும் கிபி  ஆம் நூற்றாண்டிற்குமிடையே மஹாநாம தேரர் என்ற பெளத்த பிக்குவால் எழுதப் பட்டதாக நம்பப் படுகிறது. 37 அத்தியாயங்களைக் கொண்ட மஹாவம்சத்தில் 1-5 வரையான பகுதி இலங்கையில் புத்தரின் விஜயம்,இந்தியாவில் பெளத்தத்தின் தோற்றம், வளர்ச்சி என்பவற்றைக் கூறுகிறது.6-10 வரையான பகுதி தேவ நம்பிய தீசனுக்கு முற்பட்ட கால வரலாற்றைக் கூறுகிறது,இலங்கையில் ஆரியரின் குடியேற்றம்,பண்டுகாபயனது ஆட்சி,அனுராதபுரம் தலை நகராக்கப் பட்டமை போன்ற செய்திகள் இவற்றில் அடங்கியுள்ளன.11-20 ல் தேவநம்பிய தீசனின் ஆட்சிக்காலம்,மஹிந்த தேரரால் இலங்கைக்குப் பெளத்தம் அறிமுகப் படுத்தப்பட்டமை கூறப் படுகிறது,21-32 வரையான அத்தியாயங்கள் அதாவது மஹா வம்சத்தின் 3/1 பாகம் துட்டகைமுனுவின் வீர வரலாறு கூறப் படுகிறது.இதில் ஒரு தேசிய விடுதலை வீரனாக துட்டகைமுனு வர்ணிக்கப் படுகிறான்.அடுத்துள்ள 6 அத்தியாயங்களில் மன்னர்களின் அரசியல் வரலாறு கூறப் படுகிறது.

இலங்கைக்கு பெளத்தம் கி.மு.3 ஆம் நூற்றாண்டளவில் அறிமுகப் படுத்தப் பட்டமைக்குச் சாசன ஆதாரங்கள் உள்ளன.இலங்கைக்குப் பெளத்தம் அறிமுகப் படுத்தப்பட்டமையைத் தொடர்ந்து இலங்கையில் நிலையாக நிலவி வந்த கலாசாரம் பெளத்தத்தைச் சார்ந்தோர் சாராதோர் என இரு பெரும் பிரிவுகளாக வளர்ச்சி பெற்றது.அதற்கு முன் இயற்கையின் சாராம்சங்களையும் இந்து கலாசாரங்களையும் உள்ளடக்கிய பெருமளவு நிறுவன மயப் படுத்தப்படாத வழிபாட்டு முறை நிலவியதாகக் கூறப்படுகிறது,

பெளத்தத்தின் வருகையோடு இணைந்து வந்த வட இந்திய பேச்சு மொழியாகிய பாளிப் பிராகிருதம் இலங்கையில் வழக்கிலிருந்த சிங்கள மொழியின் மூதாதை மொழியாகிய எலு மொழியுடன் இணைந்து ஆதிச் சிங்கள மொழி ஒன்றை உருவாக்கியது.பெளத்த மதத்தினைப் பின்பற்றுகின்ற மக்கள் அதனோடு இணைந்த வகையிலான மொழி வடிவத்தினைப் பின்பற்ற பெளத்த மதத்தினைச் சாராத ஏனையோர் திராவிட மொழி வடிவத்தினைப் பின்பற்றினர்.அதனால் பெளத்த மதத்துடன் இணைந்து கொண்ட மொழி உருவாக்கமானது பெளத்தர்-பெளதரல்லாதோர் ஆகியோரை மொழி அடிப்படையிலும் வேறு படுத்தியது.Search results for "mahavamsa in tamil"

மதமும் மொழியும் இணைந்து சிங்கள பெளத்தரை உருவாக்கிய வேளையில் இலங்கை அரசியலில் வெளி நாட்டுக்காரணிகள் பல ஆதிக்கம் செலுத்த முற்படுவதினையும் காணலாம்.பல்லவர் காலத்தில்(கிபி6ம் நூற்றாண்டளவில்) தென்னிந்தியாவில் ஏற்பட்ட இந்து சமய மறுமலர்ச்சியின் தாக்கம் இலங்கையிலும் ஏற்பட்டது.இதனால் இலங்கையில் பெளத்தர் பெளதரல்லாதோர் ஆகியோருக்கிடையே இருந்து வந்த இடைவெளி மேலும் அதிகரித்தது.

இலங்கை அரசின் இறைமைக்கெதிரான தென்னிந்திய அர்சியல் அச்சுறுத்தல்களும் பெளத்தரல்லாதோரான தமிழ் இந்துக்களின் தொகை வட இலங்கை, தென்னிந்தியக் கலாசார, வர்த்தக, வாணிபத் தொடர்புகளால் இலங்கையில் அதிகரித்துக் காணப் பட்டமையும் அவ்விடவெளியை மேலும் அகலப்படுத்தியது.

அத்துடன், தென்னிந்தியாவில் செல்வாக்குற்றிருந்த பெளத்தம் பலமிழந்து அவ்விடத்தில் மீண்டும் இந்து மதம் மேல்நிலையுற்றது.இவ்வரலாற்று நிகழ்வுகள் இலங்கையின் எதிர்காலத்தினைத் தீர்மானிக்கும் பொறுப்பை பிக்குகளின் கையில் ஒப்புவித்தது.இதனால் பெளத்தரல்லாதோரான – பெருமளவு வலிமையைக் கொண்டிருந்த தென்னிந்திய வட இலங்கைத் தமிழரிடமிருந்து சிங்கள மொழியையும் பெளத்த மதத்தையும் பாதுகாக்க வேண்டிய தேவைக்கு பெளத்த சங்கத்தினர் தள்ளப் பட்டனர்.எனவே, மதமும் மொழியும் தென்னிந்தியப் பின்னணியும் இணைந்து பெளத்தர் – பெளதரல்லாதோர் வேறுபாட்டை வளர்த்ததோடு சிங்கள பெளத்த இனமொன்றையும் தமிழ் இந்துக்கள் இன்ற ஓர் இனத்தையும் உருவாக்கிற்று.அத்துடன் அது இரு வேறு பட்ட முனைப்பில் சென்று கொண்டும் இருந்தது.

இவ்விடத்தில் மொழியையும் மதத்தையும் ஆளுகின்ற நிறுவனம் என்ற வகையில் அரசு முக்கியம் பெற்றது.இக்காலத்தில் தென்னிந்தியச் சவால்களில் இருந்து பெளத்த மதத்தையும் மொழியையும் காக்கின்ற அரசனுக்கு முக்கியமாக பெளத்த சங்கத்தினர் ஆதரவு கொடுத்தனர்.இதே வேளை தன் அரச அதிகாரத்தை நிலை நிறுத்துவதற்கும் பெரும்பாண்மை மதத்தையும் மொழியையும் முதன்மைப் படுத்தி ஆதரவைப் பெற வேண்டிய நிலை அரசனுக்கு இருந்தது. எனவே அரசன் பெளத்த மதத்திற்குப் பெருமளவு ஆதரவளித்தான்.பெளத்த குருமாரும் தம் மதத்தை ஆதரிக்கும் அரசனுக்குத் தம் ஆதரவை அளித்தனர்.இவ்வாறு மதமும் அரசும் ஒன்றோடொன்று நெருங்கிய பிணைப்பைக் கொண்டிருந்தது.இதனால் மதத்தை அடிப்படையாகக் கொண்டு மொழி, இனம், அரசு என்பன இணைக்கப் பட்டன.

இவ் வேளையில் இன்னொரு விடயத்தையும் நாம் நோக்க வேண்டும்.அது வட இந்தியாவில் இருந்து தென்னிந்தியாவினூடாகப் பரப்பப் பட்ட பெளத்தத்தோடு வந்த வரலாற்றை கோவைப் படுத்தி வைக்கும் மரபாகும்.இம் மரபு வட இந்தியாவில் மகத இராச்சியத்தில் வளர்க்கப் பட்டு மஹிந்ததேரருடய தூதின் போது இலங்கைக்குக் கொண்டுவரப் பட்டது.இது ஆரம்பத்தில் பிக்குப் பரம்பரையினரது செய்தியைகளையும் அவர்களின் மத நடவெடிக்கைகளையுமெழுதி வைக்கும் முறைகளை மரபாகக் கொண்டிருந்தது.இதனால் பெளத்தத்தோடு தொடர்புடய நூல்களை அவர்கள் எழுதினர்.ஆரம்பத்தில் பெளத்த போதனைகளும் புத்தரின் வரலாற்றுச் செய்திகளும் மத ஆச்சாரியர்களது செய்திகளும் இவர்களால் பாதுகாக்கப் பட்டு வந்தன.இவற்றுக்குக் கால அடிப்படையைக் கொடுக்கும் நோக்குடன் அவ்வவ் காலத்தில் அரசாண்ட மன்னர்களின் விபரங்கள் சேர்க்கப் பட்டன.மன்னர் ஒவ்வொருவரது ஆட்சிக்காலச் சம்பவங்கள் விகாரைகளுக்கு அவர்கள் அளித்த ஆதரவு போன்ற அம்சங்கள் அவற்றில் சிறப்பிடம் பெற்றன.

இம்மரபு காலப் போக்கில் புதிய பாதையில் வளரத்தொடங்கியது.அரச ஆதரவும் நேர அவகாசமும் கல்வி பயிலும் வாய்ப்பும் நூல்களை எழுதும் நாட்டமும் பெளத்தம் செல்வாக்குற்ற மதமாக எழுச்சி பெற்றதும்,எல்லாவற்றுக்கும் மேலாக சமூகத்தை வழிநடத்தும் பொறுப்பு பிக்குகளின் கைக்கு இடம் மாறியமையும் பெளத்தம் புதிய பாதையில் வளரக் காரணமாயிற்று.இதனால் பெளத்த மதம் தொடர்பான செய்திகளோடு தமக்கு ஆதரவளித்த அரசர்களின் செய்திகளையும் அவர்களின் மத நடவெடிக்கைகளையும் விரிவாக எழுதிப் பேணி வைக்க ஆரம்பித்தனர்.அவை விரியாக இடம் பெற்ற காரணத்தால் காலப் போக்கில் அரசியல் வரலாற்றுப் பகுதி தனிப் பகுதியாக வளரத்தொடங்கியது.இலங்கையைத் ‘தர்ம துவீபம்’ எனப் போற்றிய பெளத்த சங்கத்தினர் அதன் வரலாற்று முக்கியத்துவத்தினைக் காட்டும் நோக்குடன் அவ்வரசியல் பகுதியைத் தனி நூலாக எழுதிப் போற்றத் தொடங்கினர்.

இதனால் தம் மதத்திற்கு ஆதரவளித்த மன்னர்களின் பதிவுகள் அதிகமாகவும் சுய சார்புத்தன்மையுடயனவாகவும் அமைய, அதற்கு மாறாக அவர்களுக்கு ஆதரவளிக்காத அரசர்களின் நிகழ்ச்சிகள் புறக்கணிக்கப் பட்டும் அவை உருவாகின.இத்தகைய பதிவுகளின் தொகுதி ‘சீஹள அட்டஹதா மஹாவ்ங்ச’என அழைக்கப் பட்டது.இதில் அரச அதிகாரமும் பெளத்தமும் இணைந்திருந்தது.இவ்விபரத்தொகுதியில் இருந்து பெறப்ப்ட்ட நேரடி விளைவே மிக முக்கிய வரலாற்று நூலாகக் கருதப்படும் மகாவம்சமாகும்.

பெளத்த பிக்குகளால் தனியாக எழுதப்பட்ட அதிகார பூர்வ மன்னர்களுடய வரலாற்றோடு செவி வழியாகப் பேணப்பட்டு வந்த புராணக்கதைப் பண்பைக் கொண்டிருந்த வடிவங்கள் இணக்கப் பட்டதுடன் இலங்கைக்கான பூரணமான வரலாற்று நூலாக மகாவம்சம் உருப் பெற்றது.

இதில் அவதானிக்க வேண்டிய அம்சம் என்னவென்றால் இந்நூல் எழுதப் பட்ட போது இங்கு இரு வேறு பட்ட இன, மத, மொழிப் பண்புகளைக் கொண்ட மக்கள் காணப்பட்டனர் என்பதாகும். ஆனால் இதிலிருந்து முரண்பட்ட வகையில் இலங்கையின் தேசிய வரலாறு பெளத்தத்துடனும் சிங்கள இனத்துடனும் இணந்த வகையில் ஐதீக அம்சங்களை உள்ளடக்கியதாகக் காணப் படுகிறது.இதன் உச்சக்கட்ட வெளிப்பாட்டை எல்லாளன் – துட்டகைமுனு போர் சித்தரிப்பில் காணலாம்.அது உண்மையில் ஓர் அரசியல் ஆதிக்கப் போராட்டமாக இருந்தும் கூட ஆசிரியர் அதனை ஓர் இனப் போராட்டமாகக் கூறிச் செல்கிறார்.37 அத்தியாயங்களைக் கொண்டுள்ள மகாவம்சத்தில் 21-32 வரையான அத்தியாயங்களில் துட்டகைமுணுவின் வீர வரலாறு கூறப் படுகிறது.இது இந்நூலின் 3/1 பகுதியாகும். இதில் துட்டகைமுனு தன் இனத்தையும் மதத்தையும் காப்பாற்றிய ஒரு தேசிய விடுதலை வீரனாகச் சித்தரிக்கப் படுகிறான்.

இந் நூல் இந்துக்களைப் பற்றிக் குறிப்பிடும் போது அவர்கள் தவறான நெறிகளை அனுஷ்டிப்போர் என்றே குறிப்பிடப் படுகின்றனர். இந்நூலில் எந்த ஒரு இடத்தில் தானும் தமிழ் இந்துக்களும் இந்நாட்டுக்குரியவர்கள் என்ற குறிப்புக் காணப் படவில்லை.தமிழர்களைப் பற்றிக் குறிப்பிடும் இடங்களில் எல்லாம் அவர்களை ஆக்கிரமிப்பாளர்களாகவும் இந்நாட்டுக்கு வந்த அன்னியர்களாகவுமே குறிப்பிடப் படுகின்றனர்.

ஆனால் தொல்லியல் ஆய்வுகளும் சமூகவியல் மானிடவியல் தரவுகளும் இவற்றிற்கு முரணான வகையில் முடிவுகளைத் தந்துள்ளன.அவை இலங்கையும் தென்னிந்தியாவை ஒத்த வரலாற்றுதய கால கலாசாரப் பண்பாடுகளைத் தன்னகத்தே கொண்டிருந்ததென்றும் படிப்படியான அரசின் வளர்ச்சி,பண்பாட்டுப் பரவல் பற்றியும் தெளிவான சான்றாதாரங்களைத் தந்துள்ளன.மானிடவியல் ஆய்வு முடிவுகள் தென்னிந்திய-இலங்கை மக்கள் கூட்டம் ஒரே வர்க்கத்தைச் சேர்ந்ததென்பதையும் அது திராவிட அடிப்படை இயல்புகளைக் கொண்டுள்ளதென்பதையும் எடுத்துக் காட்டியுள்ளன.சமூகவியல் ரீதியானதும் மொழியியல் ரீதியானதுமான ஒற்றுமைகள் பல இன்றுவரை மத்திய தரை – தக்கிண – தென்னிந்திய ஈழப் பிராந்தியங்களின் தொடர்புகளைப் பற்றிய தெளிவான விளக்கங்களைத் தருகின்றன.இது பற்றிப் பல சிங்கள புத்திஜீவிகளும் சுட்டிக் காட்டியுள்ளனர்.(பார்க்க;ethnisity and social change / தமிழ் மொழி பெயர்ப்பு; இனத்துவமும் சமூக மாற்றமும்) எனினும் சிங்கள மக்கள் மத்தியில் அவை செல்வாக்குள்ள கருத்தாக மேற்கிழம்பவில்லை. மகாவம்சத்தோடு அவர்களுக்கு இருக்கும் வரலாற்று வாஞ்சையும் இறுக்கமான பிணைப்பும் அதற்குக் காரணமாகலாம்..

இன்று ‘சிங்கள பெளத்த நாடு’ என்ற மேலான அபிலாஷைகளைக் கடந்து அரசு மீண்டு  வர மகாவம்சமும் பிக்குகளும் சிங்கள மக்களும் தயாராக இருப்பார்களா என்பது நமக்கு முன்னால் உள்ள பெரும் கேள்வியாகும்.

இதற்கு, முதலில் உணர்ச்சி நிலையில் இருந்து மாறி அறிவு நிலையில் இப்பிரச்சினையை அணுக வேண்டும் என்ற நிலைப் பாட்டை நாம் புரிந்து கொள்ளுதல் அவசியமாகும்.இது இரு தரப்பாருக்கும் பொருத்தமானதும் கூட.

யசோதா பத்மநாதன்

[10-Mar-2009]

About editor 2992 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply