தமிழரின் அரசியலில் காட்டிக்கொடுப்புகளும், குழி பறித்தலும் தொடர்வதால் கவலை!
ஈழத்தமிழரின் அரசியலில் இன்றும் காட்டிக்கொடுப்புகளும், குழி பறித்தல்களும் தொடர்ந்த வண்ணமே உள்ளதாக ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.
இதன் விளைவே வட மாகாண சபையின் இன்றைய நிலைக்கு காரணமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கனகராயன்குளத்தில் நேற்று நடைபெற்ற தங்கம்மா முதியோர் இல்ல திறப்பு விழாவில் அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய போதே இவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
30 வருடகால கொடிய யுத்தத்தின் பின்னர் பெரும் எதிர்பார்ப்புடன் நிறுவப்பட்ட வட மாகாண சபையில் அண்மைக் காலமாக நடைபெறும் விடயங்கள் மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளன.
ஏற்கனவே மத்தியிலுள்ள நல்லாட்சியில் தமிழ் மக்கள் நம்பிக்கை இழந்து வருகின்ற நிலையில் மாகாண சபையில் நடைபெறும் நிகழ்வுகள் கேலிக்கூத்தானவையாக பேசப்படுகின்றது.
மகிந்த அரசின் மீது கொண்ட வெறுப்பின் பிரதிபலிப்பாக மைத்திரி தலைமையிலான அரசை நிறுவுவதற்கு தமிழ் மக்கள் பெரும் பங்களிப்பை ஆற்றியிருந்தனர்.
இதன்மூலம் தமக்கு நிரந்தரமான ஓர் அரசியல் தீர்வு கிடைக்குமென எதிர்பார்த்தனர். எனினும் அதுவும் கடந்த காலங்களில் நடைபெற்றது போன்று கானல்நீராக மாறி விடுமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் தோன்ற ஆரம்பித்துள்ளது.
நிரந்தர அரசியல் தீர்வுக்கான தெரிவுக்குழுக்களின் அறிக்கைகள் வெளியிடப்பட்டு பல மாதங்கள் ஆகியும் இதுவரை அது நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படாது காலங்கடத்தப்பட்டு வருகின்றமை இந்த அரசிலும் சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவே உள்ளது.
இப்படியான சூழ்நிலையில் வட மாகாண சபையில் அறைகுறையான அதிகாரங்களை கொண்டு பல சவால்கள் மத்தியில் மக்களுக்கான அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்கும் எங்களையும் வீண்பழி சுமத்தி வேலை செய்ய முடியாமல் தடுக்கின்றனர்.
அரசியல் போட்டி காரணமாகவும் தங்களுக்கு பதவிகள் கிடைக்கவில்லையென்ற பொறாமையிலும் உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து எம்மை மக்கள் சேவை செய்யாது தடுத்து வருகின்றனர் என தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/politics/01/155146?ref=recommended3
Leave a Reply
You must be logged in to post a comment.