பகிரங்க விவாதம் மேற்கொள்ள அமைச்சர் ரிசாட் பதீயுதீன் தயாரா?
முல்லைத்தீவு மாவட்டத்தில் உண்மையான சேவைக்காக எந்த அரசியல்வாதிகள் இந்தப்பிரதேச மக்களுக்கு சேவை மேற்கொண்டனர் என அந்த மாவட்டத்தில் பகிரங்க விவாதம் மேற்கொள்ள அமைச்சர் ரிசாட் பதீயுதீன் தயாராக உள்ளாரா என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன் சவால் விடுத்தார்.
முல்லைத்தீவு, முள்ளியவளை நீராவிப்பிட்டியில் மீள்குடியேற்ற விசேட செயலணி ஊடாக வீடமைப்புக்கான நிதி உதவிகள் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக அமைச்சர் றிஷாட் பதியுதீன் நேற்று முன்தினம் கலந்து கொண்டு ஆற்றிய உரை தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார் .
இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவிக்கையில் ,
முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து யுத்தத்தினால் வெளியேறிய சகோதர மக்களை மீள் குடியேற்றச் செய்வதற்கு இன்றுவரை எந்த தமிழ் அரசியல்வாதியும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. மாறாக மீள் குடியேற்றம் என்னும் பெயரில்ஙோர் இனத்திற்கு மட்டும் நிலமும் சலுகையும் வழங்குவதனையே கேள்விக்கு உட்படுத்துகின்றனர். இந்தப் பிரதேசத்தில் உடைந்து போய்க்கிடந்த, அழிந்து போயிருந்த அத்தனை கட்டங்களையும் மீளக்கட்டியெழுப்பி தமிழ் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி நிம்மதியாக வாழ வேண்டுமென்பதில் முழுமூச்சுடன் உழைத்ததாக அமைச்சர் வாய்ச் சவாடல் விட்டுள்ளார்.
இந்த மாவட்டத்தின் தொழிற்சாலையாக இருந்த பேராறு தும்புத் தொழிற்சாலையாகட்டும் கூழாமுறிப்பு ஓட்டுத் தொழிற்சாலையாகட்டும் கரிப்பட்டமுறிப்பு நெற்களஞ்சியம் ஆகட்டும் இதேபோன்று எந்த தொழில் மையமும் இன்றுவரை இந்தமாவட்டத்தில் மீளமைக்கப்படவில்லை. மீள்குடியேற்ற அமைச்சராகவிருந்த காலத்தில் எமது கேப்பாபுலவு மக்களையும் மீள்குடியேற்றம் செய்கின்றோம் என்ற போர்வையில் நடுக்காட்டில் இறக்கி விட்டதுதான் மீள்குடியேற்றமா? அதேபோன்று அன்றைய காலத்தில் வடக்கின் 5 மாவட்டத்திலும் மீள் குடியேறிய மக்களிற்கு அரசின் 25 ஆயிரம் ரூபா பணம் வழங்கியதாக அரசும் அமைச்சரும் கூறுகின்றனர்.ஆனால் வடக்கில் மட்டும் இன்னமும் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களிற்கு இப் பணம் இன்றுவரையில் வழங்கப்படவே இல்லை.
இவ்வாறு பணம் வழங்கப்படாதமைக்கு மாவட்ட அரச அதிபர்களே சாட்சியாக உள்ளபோது எவர் பொய்கூறுகின்றனர் என்பதே மக்களின் கேள்வியாகவுள்ளது. இதேநேரம் ஒரு இனத்திற்கு மட்டும் பணிபுரிபவர் அல்ல அமைச்சர் . முல்லைத்தீவில் வெறும் 78 தென்னிலங்கையர்களிற்கு மட்டுமே மீன்பிடி உள்ளதாக மத்திய அரசே கூறிய பின்பும் இன்று 500 பேருக்கும் அதிகமாக தொழில்புரியும் நிலையில் இந்த அமைச்சர் வாய்திறக்கவே இல்லை. மகாவலி அபிவிருத்தி என்னும் போர்வையில் தமிழ் மக்களின் 2 ஆயிரத்து 524 ஏக்கர் நிலம் முதல் கட்டமாகவும் தற்போது 850 ஏக்கரும் பறிபோவது தொடர்பில் மூச்சே விடவில்லை.
இதே மாவட்டத்தில் 2 ஆயிரம் தமிழ் மக்களிற்கு காணி இல்லாதமைக்கு அமைச்சரால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை. மாறாக தனது இனம் சார்ந்து 925 குடும்பத்திற்காக புலிகளால் நாட்டப்பட்ட காட்டை அழிக்கத் துடிக்கின்றனர். அதேபோல் இதே மாவட்டத்தில் தற்போது 15 ஆயிரத்திற்கும் அதிக வீட்டுத் தேவைஉள்ளநிலையில். அதில் ஓர் இனத்திற்கு 2 ஆயிரம் வீட்டிற்கு மட்டும் அமைக்கப்பட்ட செயலணி மீது எவ்வாறு நம்பிக்கைகொள்ள முடியும்.
தமிழர்கள் ஒன்றும் அரசோடு மட்டும் ஒட்டிநின்று பிழைப்பு நடாத்திவிட்டு வந்து இன்று அதியுச்ச அதிகாரம் வேண்டுமென கோரவோ அல்லது சமஷ்டிதான் தீர்வு என வலியுறுத்தி வடக்கும் கிழக்கும் இணைய வேண்டுமென விடாப்பிடியாக நிற்கவில்லை.
அல்லது பத்திரமாக அனுப்பி இன்னுமோர் இடத்தில் காத்திருந்துவிட்டும் வந்து உரிமையை கோரி நிற்கவில்லை. அல்லது அடுத்தவன் உயிரை கொடுத்து போராடும்போது தப்பி நின்று தீர்வு எட்ட முயற்சிக்கும் சந்தர்ப்பத்தில் அதேபங்கினையும் கோரிநிற்கவில்லை.
தமிழ்மக்கள் இன்றைய நிலையில்கூட 50 ஆயிரம் போராளிகளதும் 2 லட்சம் அப்பாவிகளினது உயிரையும் விலையாக கொடுத்து 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அங்கவீனர்களாகவும் 80 ஆயிரம் விதவைகளாக்கப்பட்டும் பல ஆயிரம் கோடி ரூபா சொத்துக்களிற்கு என்ன நடந்த்து எனத் தெரியாத நிலையிலேயே இவற்றை கோரி நிற்கின்றனர் என்பதனை புரிந்துகொள்ள வேண்டும். என்றார்.(தயாளன்)
Leave a Reply
You must be logged in to post a comment.