முல்லை. மாவட்ட மீள்குடியேற்றத்தில் இன, மத வேறுபாடு காட்டும் அரச நிர்வாகம்
போர் ஓய்ந்தும்கூட அது விட்டுச் சென்றுள்ள பிரச்சினைகள் இன்னமும் அப்படியேதான் இருக்கின்றன. ஆனால் எப்போதும் இந்த நாடு ‘இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு’ என்றே தொடர்ந்தும் சொல்லப்படுகின்றது. நடந்த போர், அடக்கு முறையாளர்களுக்கும் நியாயம் கேட்ட சிறுபான்மையினருக்கும் இடையிலானது.
எனினும் சிங்கள, தமிழர்கள் போரில் நேரடியாகச் சம்பந்தப்பட்டார்கள். அந்த இரண்டு தரப்புக்களும் போரின் இழப்புக்களால் பாதிக்கப்பட்டன. ஆனாலும் இறுதியாக, போரின் முடிவில் அதிக இழப்புகள் அதில் பின்னடைவு கண்டவர்களையே சாரும் என்ற பெரும்பான்மை யதார்த்தப்பாட்டில் அந்தப் பாதிப்பு தமிழர்களுக்கே ஏற்பட்டது.
அது வரலாற்று அவலம். ஆனால் நடந்து முடிந்த அந்தப் போரின் பாதிப்புக்கள் என்பவை ஆளாளுக்கு மாறுபட்ட அளவுகளில் கிடைத்ததாக நோக்க முடியாது. அது ஏற்படுத்திய பாதிப்பு சம பரம்பலையுடையது. சிங்களவர்களுக்கு இவ்வளவு, தமிழர்களுக்கு இவ்வளவு, முஸ்லிம்களுக்கு அவ்வளவு… என்று எப்படி அதன் தொகையை, நிறையை, அளவை மதிப்பிடமுடியும்…?
நடந்து முடிந்த போர் வடக்குக் கிழக்கையே தளமாகக் கொண்டிருந்தது. அதிலும் வடக்கே அதன் நிலையான தளமாக நெடுங்காலம் நீடித்தது. அந்த வகையில் போரால் அப்பகுதியை வாழ்விடமாகக் கொண்ட மக்களே அதிகளவில் பாதிக்கப்பட்டனர்.
குறித்த பகுதிகளில் வாழ்ந்தவர்கள் தமிழ், முஸ்லிம் மக்களே. அவர்கள் தமது பூர்வீக நிலங்களை விட்டு இடம்பெயரும் நிலை ஏற்பட்டது. உணவின்மை, உடமை, – சொத்திழப்புக்கள், உயிரிழப்புக்கள் எனப் போர் அவர்களுக்கு வழங்கியிருந்த கொடுமைகள் எண்ணிலடங்காதவை.
வடக்குக் கிழக்குப் பகுதிகளில் வாழந்திருந்த தமிழ் – முஸ்லிம் மக்கள் தாராளமாகவே போரின் பாதிப்புக்களை அனுபவித்திருந்தனர். அதனை அளவிட்டுத் தராதரப் படுத்திக்கொள்வது சாத்தியமற்றது. அத்துடன் போரால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து மக்களுக்கும் வழங்கும் பாதிப்பு நிவாரணங்களும்கூட பாரபட்சமற்றிருக்கவே வேண்டும். வேறுபாடு காட்டுதல் முறையற்றது. ஆனால் முல்லைத்தீவு -– கூழாமுறிப்புச் சம்பவம் இதற்கு எதிர் மறையானது.
கூழாமுறிப்புச் சம்பவம்
கடந்த வாரத்தில் முல்லைத்தீவில் ‘முகப்புத்தகப் போராளிகளால்’ ஒன்றிணைக்கப்பட்ட போராட்டம் ஒன்று மக்கள் கவனத்தை ஈர்த்திருந்தது. அது அந்தப் பகுதியில் மேற்கொள்ளப்படும் காடழிப்புக்கு எதிரானது. அவர்களின் முகப்புத்தகச் செய்திகள், ‘‘177 ஏக்கர்கள் அளவுடைய தேக்கங் காடுகளை அழித்து அவ்விடத்தில் முஸ்லிம் மக்களைக் குடியமர்த்தும் செயற்றிட்டத்தின் ஆரம்பமே இந்தக் காடழிப்பு’’ என்றன. முள்ளியவளை – ஒட்டுசுட்டான் வீதிக்கும், நெடுங்கேணி – புளியங்குளம் வீதிக்கும் இடைப்பட்ட கூழாமுறிப்பு எனும் பகுதியிலுள்ள தேங்கங்காடுகள் அவசர அவசரமாக அழிக்கப்பட்டு அந்தப் பகுதியில் முஸ்லிம் மக்களைக் குடியமர்த்துவதற்கான முன்னாயத்தங்கள் நிகழ்வதைக் கண்டித்து அதற்கெதிராகவே அந்தப் போராட்டம் நடந்திருக்கின்றது. அந்தப் போராட்டம் இரண்டு அணுகுமுறைகளைக் கொண்டிருந்தது. ஒன்று அது காடழிப்புக்கு எதிரானது. இரண்டாவது இனப்பரம்பலைச் சீர்குலைக்கும் விதமாக அவ்விடத்தில் முஸ்லிம்களைக் குடியமர்த்துவதற்கு எதிரானது.
அது பாதிக்கப்பட்ட மக்களை முன்னிறுத்தி அல்லது சாட்டாகக் கொண்டு அரசியல் உயர்மட்டங்களால் முன்னெடுக்கப்படும் செயல் என்றும் விமர்சனங்கள் எழுந்தன.
முஸ்லிம்கள் முன்னர்
வாழ்ந்த நிலம் அது
முல்லைத்தீவு -– கூழாமுறிப்பில், இப்போது காடு அழிக்கப்பட்ட பகுதியில் 25 வருடங்களுக்கு முன்னர் கிட்டத்தட்ட ஆயிரத்து 400 முஸ்லிம் குடிகள் வாழ்ந்திருக்கின்றன என்று சொல்லப்படுகிறது. அவர்கள் போர் காரணமாக அவ்விடத்தை விட்டகன்று வேறு இடங்களில் தமது வாழ்வை முன்னெடுத்திருக்கின்றனர்,இ ப்போது 25வருடங்களுக்குப்பிறகு அந்தக் குடிகள் பல்கிப் பெருகி விட்டன, போர் ஓய்ந்து மீளவும் தமது வாழ்விடத்தில் குடியமர அவர்கள் முனைகின்றனர்.
அ தற்காகவே முன்பு அவ்விடத்தில் தாம் வாழ்ந்த நிலப்பரப்புக்கு மேலதிகமான நிலம் அவர்களுக்கு இப்போது தேவைப்படுகின்றது என்பது அவர்கள் தரப்பில் சொல்லப்படும் நியாயங்கள் அந்தக் குடிகள் முன்பிருந்து நிரந்தரமாகவே அவ்விடத்தில் வாழ்க்கை நடாத்தி வந்திருந்தால், அதன்வழி மெல்ல மெல்ல ஏற்படும் அவர்களின் பெருக்கம் ஒரு பெரிய விடயமாகி யிருக்காது. ஆனால் இன்றைக்கோ திடீரென்று அதிகளவு இடத்தைத் தமது இருப்புக்காக அவர்கள் ஒதுக்கும்போது அது ஒரு பெரிய விடயமாகியிருக்கின்றது.
அத்துடன் அந்தப்பகுதியில் பெருமளவில் தேக்கங்காடுகள் அழிக்கப்படுவதுவும் இந்தப் பிரச்சினை யைக் கவனிக்க வைக்கின்றது. முல்லைத்தீவு மாவட்ட இனப்பரம்பலில் வருங்காலத்தில் மாற்றம் ஏற்படும் எனும் விடயத்தையும் இதன்படியே வைத்து நோக்கவேண்டும். ஆனால், போரால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களுக்குரிய காணிகள் என்ற தோற்றத்துக்குள் பெரும் அரசியல் பின்னணியில் அவசர அவசரமாக இந்தச் சம்பவம் முஸ்லிம்க ளுக்காகக் கூழாமுறிப்பில் நிகழ்ந்தேறு வதுதான் பாரதூரமான விடயம்.
காரணம், போரால் பாதிக்கப்பட்ட இன்னும் பல முஸ்லிம் மக்களும் ஏராளம் தமிழ் மக்களும் இன்றுவரைத் தமது இருப்பிடங்களுக்காகப் போராடிக் கொண்டுதான் இருக்கின்றார்கள். அவர்களிடம் காட்டப்படாத அன்பும் அக்கறையும் அரசியல் தலைமைகளால் கூழாமுறிப்பு விவகாரத்தில் எப்படிச் சடுதியாகக் காட்ட முடிகின்றது…?
பாதிக்கப்பட்டவர்கள் பலர்
இருக்க இவர்களில்
ஏன் அவசர அக்கறை…?
போரால் பாதிக்கப்பட்ட நிலையில் ஏராளமானவர்கள் இருக்க, அவர்களை எல்லாம் விடுத்து அவசர அவசரமாகக் கூழாமுறிப்புப் பகுதியில் முஸ்லிம் மக்களுக்குக் காணி ஒதுக்குவதில் பின்னணியில் இருந்து செயல்படும் அரசியல் உற்று நோக்க வேண்டியதே. இதுவரை காலமும் போரால் பாதிக்கப்பட்ட எத்தனையோ ஆயிரம் மக்கள் தமது இழப்புகளுக்குரிய இழப்பீடுகள் கிடைக்காமல் தவிக்கின்றனர்.
அதற்காகக் களமிறங்கிப் போராடிக் கொண்டுமிருக்கின்றனர். ஆனால் இதையெல்லாம் கவனிக்காத அல்லது இதற்கெல்லாம் செவிசாய்க்காத, உதவி புரியாத அரச அதிகாரிகள், அமைச்சர்கள் சிலர் குறித்த மக்களை மாத்திரம் முதன்மைப்படுத்துவதும் அந்த மக்களுக்குரியதைப் பெற்றுக் கொடுப்பதற்கு மாத்திரம் முன்னிற்பதுவும் முன்னுக்குப் பின் முரணாகவே இருக்கின்றது. பல இடங்களிலும் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரண ஒழுங்குகளுக்குரிய ஆரம்ப முயற்சிகள்கூட மேற்கொள்ளப்படவில்லை. இந்த நிலையில் போரால் பாதிக்கப்பட்டவர்கள் என்ற போர்வைக்குள், மற்றவர்களுடன் பாரபட்சப்படுத்தியே பார்க்கப்படுகின்றது குறித்த பிரச்சினை.
பெரும் அரசியல் பின்னணியுடன் நிகழும் இதில் அந்த அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் தமக்கும் ஆதாயம் தேட விளைகின்றனரா…?
காணிக்காகவும் இருக்க நிலம் இன்றியும் உடைமைகள் இழந்தும் ஏராளமானோர் குரல் எழுப்பிக் கொண்டிருக்க சத்தமில்லாத இவர்களுக்கு ஏன் அவசரமாக இருப்பிடம்…?
சரி… போர் பாதித்தவர்களுக்கு நிவாரணம் என்றால் இவர்களுக்கு ஏன் இவ்வளவு முன்னுரிமை…?
இந்தக் கேள்விகளைப் போலவே குறித்த பிரச்சினையை ஒட்டி இன முரண்பாட் டைக் கிள்ளிவிடும் பல செயற்பாடுகள் மேற்குறித்த அரசியல்வாதிகளாலும் உயர்மட்ட அதிகாரிகளாலும் மேற்கொள்ளப்படுகிறது என்று அந்தப் பகுதி மக்கள் கவலை வெளியிடுகின்றனர்.
இலங்கை என்பது ஒரு நாடு. அந்த நாட்டில் உள்ள சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் சமமான அரசியல் உரிமைகளுக்கு உரித்துடையவர்கள். இலங்கை அரசு இதன் பின்னால் உள்ள சதியை வேரோடு களைந்து, பொது நீதியில் இயங்க ஆவண செய்யவேண்டும்.
கொ. செ. வேலாயுதபிள்ளை
Leave a Reply
You must be logged in to post a comment.