தலை நிமிர்வோம்!
யாழ்ப்பாணம் வந்திருந்த சிங்கப்பூர் அயலுறவுத்துறை அமைச்சர் விவியன் பாலகிருஸ்ணன் யாழ்ப்பாணத்தவர்களே மறந்திருந்த அவர்களின் பெருமைகள் பலவற்றை மீட்டுப் பார்த்திருக்கிறார்.
அத்தோடு ஈழத் தமிழர்களுக்கு உறைக்கும் விதத்தில், நீங்கள் இந்த உலகத்தின் மற்றைய பாகங்களுக்கெல்லாம் உழைத்துக் கொடுத்தது போதும், இனியாவது உங்களுக்காக உழைக்கப் பாருங்கள் என்று குத்திக்காட்டிவிட்டும் போயிருக்கிறார்.
இலங்கையின் அரசியல் பொருளாதாரத்தில் அடிக்கடி உச்சரிக்கப்படும் ஒரு சொற்றொடர், ‘‘ஒரு காலத்தில் இலங்கையைப் போன்று வளரவேண்டும் என்று சொல்லிக் கொண் டிருந்தது சிங்கப்பூர், இன்றோ சிங்கப்பூரைப் போன்று வளர வேண்டும் என்று சொல்லும் நிலையில் நாம் இருக்கின்றோம்’’ என்பதுதான்.
கொழும்பில் இருந்தபடி போருக்குத் தலைமை யேற்று ஒரு குருதிச் சகதியை இலங்கையில் உருவாக்கிய சகல தலைவர்களும் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் இதனைக் கூறித்தான் இருக்கிறார்கள்.
அமைச்சர் விவியன் பாலகிருஸ்ணன் கூறியது முற்றிலும் சரியானது. ஒரு காலத்தில் தெற்காசியாவிலேயே அதிகம் படித்த சமூகமாகத் தமிழ் இனம்தான் இருந்தது.
இலங்கையைப் பார்த்து சிங்கப்பூர் வளர்ந்தது மட்டுமல்ல, அந்த நாட்டைக் கட்டி வளர்ப்பதற்கான அடித்தளத்தை இட்ட வர்களில் தமிழர்களுக்கும் மிகக் கணிசமான பங்கு இருக்கிறது என்று ஆணித்தரமாகத் தெரிவித்திருக்கிறார் அமைச்சர் விவியன். அதிலும் குறிப்பாகக் கல்வி, மருத்துவம், வீதிக் கட்டமைப்பு என்பவற்றின் பிதாமகர்கள் தமிழர்கள்தான் என்ற உண்மையையும் அவர் போட்டுடைத்திருக்கிறார்.
இங்கிருந்து சென்ற தமிழர்கள் பலரே சிங்கப்பூரை இந்த அளவுக்கு வளர்த்தெடுத்தார்கள் என்றால், தம்மை அரவணைத்துச் செல்லும் ஒரு அரசு கொழும்பில் இருந்திருந்தால் இலங்கையையும் அவர்கள் எவ்வளவு தூரத்துக்கு வளர்த்துவிட்டிருப்பார்கள் என்ற சிந்தனை, விவியனின் பேச்சைக் கேட்டதும் ஒரு கணம் மின்சாரமாகத் தாக்குகின்றது.
சிங்கப்பூரில் மட்டுமல்ல 19ஆம் நூற்றாண்டுகளில் மலேசியா உள்ளிட்ட பல நாடுளிலும் நிர்வாகத்தில் சிறந்து விளங்கிய வர்கள் தமிழர்களே. கல்வியே இனிவரும் காலத்தில் பலம் என்று உலகம் மாறி வந்த காலத்தில் அதனோடு ஒத்திசைந்து ஓடி தம்மையும் தாம் சென்ற இடங்களையும் வளர்த்தவர்கள் தமிழர்கள்.
துரதிஷ்டவசமாகத் தமிழனின் அந்த அறிவும், அதனால் அவனுக்குக் கிடைத்த அதிகாரமுமே இலங்கையில் அவன் மேல் வெறுப்பும் இனத்துவேசமும் மேலோங்கக் காரணமாகியது என்பதும், அதனால் இலங்கை கெட்டுக் குட்டிச் சுவராகிப் போனது என்பதும் மறக்க முடியாத, மறக்கப்படக்கூடாத தனிக் கதை.
தமிழர்களின் பலம் என்ன என்பதையும், அதனை நாம் பயன்படுத்தாமலேயே காலத்தை வீணடிக்கின்றோம் என்பதையும் எமக்கு நாசுக்காகக் குத்திக்காட்டிவிட்டுச் சென்றிருக்கிறார் அமைச்சர் விவியன்.
அவர் தெளிவாகக் குறிப்பிடுகி றார், ‘‘உலகத்திற்குச் சேவையாற்றக் கிடைத்த பொக்கிசமா கத் தமிழர்கள் இதுவரை உழைத்துக் கொடுத்ததுபோதும். உங்கள் அறிவும் திறமையும் இனிமேலாவது உங்களை மேம்படுத்தவும் யாழ்ப்பாணத்தை மேம்படுத்தவும் பயன்படட்டும்.
அதற்கு நீங்கள் தகுதியானவர்கள், பொருத்தமான வர்கள். அதற்காக நீங்கள் நீண்ட காலம் காத்திருந்தும் விட்டீர்கள். எனவே இனியாவது உங்கள் அறிவையும் திறமையையும் உங்களுக்காகப் பயன்படுத்துங்கள்’’ என்கிறார்.
போரில் இருந்து மீண்டு வரும் ஒரு சமூகத்திற்கு உந்து சக்தியளிக்கக்கூடிய ஒரு உரை அது. தனது பெருமையை, திறமையை மறந்திருந்த, தூக்கத்தில் ஆழ்ந்திருந்த சமூகத்தைத் தட்டியெழுப்பும் உரை அது. விவியன் அழகாகச் சொன்னார், நாங்கள் இப்போது செய்வது உங்கள் மூத்தோர்கள் செய்த வற்றுக்கான கைமாறு; இது வெறும் உதவியோ தொண்டுப் பணியோ அல்லவென்று.
அந்த மூத்தோரின் மூச்சுக் காற்றிலிருந்து பலம் பெற்று எழுந்து, நாம் இழந்துவிட்ட பெருமைகளையும் திறமைகளையும், திரும்பப் பெறவேண்டும். அனைத்துத் தமிழர்களும் ஒன்றிணைந்து இப்போது செய்யவேண்டியது அதுதான். அதுவேதான் இந்த உலகின் முன்னாள் தமிழனைத் தலைநிமிர்ந்து நிற்க வைக்கும்.
உதயன் தலையங்கம்
Leave a Reply
You must be logged in to post a comment.