#தமிழர்_முஸ்லீம்_உறவும்_எதிர்காலமும்
இலங்கை இனவாத அரசின் மொழிவாரியான அடக்குமுறை தீவிரம் கொண்ட காலம் முதல் அதன் எதிர்வினையாகத் தோற்றம் பெற்ற தமிழ் மக்களது தேசிய விடுதலை போராட்ட வாழ்முறையுடன் பல முஸ்லீம்கள் தங்களை இணைத்துக் கொண்டார்கள். தமிழ் தேசிய வீரர்பட்டியலிலும் பலர் இடம் பிடித்திருந்தனர்; தமிழ் தேசிய படையணிகளும், போர்வீரர்களும் முஸ்லீம் பெயர்களை பெருமையுடன் தாங்கி நின்றிருக்கின்றன. தமிழீழ தேசிய விடுதலை போராட்டத்தின் அங்கமாக முஸ்லீம்கள் இணைந்திருந்தார்கள்.
முஸ்லீம் மக்களை பொறுத்தவரை, தமிழ் மக்களில் இருந்து மாறுபட்டு ஒரு தனித்தன்மை அவர்களிடம் ஆரம்பம் முதலே இருந்து வந்துள்ளது என்பது வரலாற்று உண்மையாகும். தாம் தனித்தன்மை கொண்ட ஒரு மக்கள் பிரிவு என்பதை முஸ்லீம்கள் பலமுறை, பலவழிகளில் மற்றைய சமூகங்களுக்கு அறைந்து கூறிய பின்னரும் இலங்கை முஸ்லீம்களை “இஸ்லாமிய தமிழர்” என்று இன்னும் கருதுவதை தமிழ் மக்கள் நிறுத்திக்கொள்வது முறையாக இருக்கும்.
பலமுறை மன்னிப்பு கேட்கப்பட்டு, மீள்குடியேற்றத்திற்கும் அழைப்பு விடுக்கப்பட்ட தமிழீழ விடுதலை புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட முஸ்லீம்கள் மீதான அந்த பலவந்த வெளியேற்றம் என்பது ஒரு வரலாற்று தவறாக அமைந்ததுடன்; இரு சமூகங்களிடையேயும் பெரும் இடைவெளியை உருவாக்கி, எதிர்நிலைகளிலும் கொண்டு சென்று நிறுத்தியது. முஸ்லீம்களின் வெளியேற்றம் என்பது தமிழ் சமூகத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு விடயமாக இருக்கவில்லை. பல எதிர்ப்பு குரல்கள் அன்றிலிருந்து இன்றுவரை ஒலித்தவண்ணம்தான் இருக்கின்றன.
கடந்த தசாப்தங்களாக பெரும்பாலும் இலங்கை ஆளும் பிரிவுடன் கைகோர்த்திருக்கும் முஸ்லீம் மக்களின் அரசியல் தலைமை, தமிழ் மக்களின் தேசிய அபிலாசைகளுக்கும், அரசியல் உரிமைகளுக்கும் எதிரான தமது வர்த்தக நலனுடனும் மற்றும் சந்தர்ப்பவாதத் தன்மையுடனும் இருந்து வந்திருக்கின்றமை இன்றைய யதார்த்தமாக உள்ளது.
இரு சமூகங்களிடையேயும் ஏற்பட்டிருந்த கசப்பான அனுபவங்கள் ஒருவரையொருவர் திட்டமிட்டு படுகொலை செய்வது என்கின்ற கொடுமையான வடிவங்களைக் கூட எடுத்திருக்கிறது. காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலை என்றவடிவங்களில் புலிகளின் நடவடிக்கைகள் அமைய, முஸ்லீம் துணைப்படைகள், கூலிப்படைகளின் திட்டமிட்ட படுகொலைகள் என்கின்ற வடிவங்களில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். முஸ்லீம்கள் மீதான புலிகளின் படுகொலைகள் பேசம்படும் அளவிற்கு தமிழ் மக்கள் மீது முஸ்லீம் கூலிப்படைகளால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள் பேசப்படுவதில்லை.
புலிகளின் தவறுகள் தமிழரின் தவறுகளாக்கப்பட்டு, பல்லாயிரக்கணக்கில் தமது உயிர்களை இழந்து, காணாமல் ஆக்கப்பட்டு, நிலங்களை, கிராமங்களை இழந்து, உடமைகளை இழந்து நிற்கும் தமிழ் மக்கள்; தொடர்ந்தும் முஸ்லீம் தலைமைகளால் குற்றவாளிகள் ஆக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஒரு இன அழிப்பில் இருந்து மீண்டு வருவதற்கு போராடிக்கொண்டிருக்கும் தமிழ் சமூகத்திடம் அதனுடன் கூடவாழும் முஸ்லீம் சமூகம்” எரியும் வீட்டில் பிடுங்கியது இலாபம்” என்னும் வகையில் வடகிழக்கின் பலபகுதிகளில் அணுகிக்கொண்டிருப்பது என்பது, எதிர்கால பேரவலத்தின் அறிகுறி என்றுதான் கணிக்கப்பட வேண்டும்.
பெளத்த சிங்கள பேரினவாத சக்திகள் அம்பாறையிலும் திருகோணமலையின் எல்லை பகுதிகளிலும் முஸ்லீம் மக்களின் நிலங்களை அபகரிக்கரிப்பதற்கு எதிராக முறையாக போராடாமால், சகோதர இனம் எனக்கூறிக்கொண்டு “நலிந்து” போயிருக்கும் தமிழ் சமூகத்தின் நிலங்களை அதே பகுதிகளில் முஸ்லீம்கள் சதித்தனமாக ஆக்கிரமிப்பதும்; அதிலும் குறிப்பாக மிகவும் ஒடுக்கப்பட்ட பிரிவாகிய பழங்குடி மக்களின் நிலங்களை அவர்களின் செய்யறு நிலையைப் பயன்படுத்தி ஏமாற்றி நயவஞ்சகமாக ஆக்கிரமிப்பதை தமிழ் சமூகம் அடையாளம் கண்டு வருகிறது.
அம்பாறை, திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் முஸ்லீம் அரசியல்வாதிகள், அதிகாரிகளின் கூட்டு திட்டமிடலில் தமிழர் நிலங்கள் தொடர்ந்து ஆக்கிரமிப்பிற்கு உள்ளாகி வருகின்றன. அம்பாறையில் இது ஒரு அடாவடித்தனமாக மாறியிருப்பது என்பது தீவிர மதவாத சிந்தனைகளால் ஆட்கொள்ளப் பட்ட முஸ்லீம்கள் பெரும்பான்மையாக மாறும் பகுதிகளில் மற்றைய மக்களின் நிலை எப்படி அமையும் என்று முஸ்லிம் அல்லாத மக்கள் அனைவரையும் சிந்திக்கத் தூண்டியிருக்கிறது . தமிழர்களின் யுத்த அவலங்களையும், வறுமையையும் பயன்படுத்தி நிகழும் திட்டமிட்ட இஸ்லாமிய மதமாற்றங்கள் என்பன சமூகங்களிடையே முரண்பாடுகளையும், நம்பகமற்ற நச்சு சூழலையும் உருவாக்கி வருகின்றன.
வடக்கு கிழக்கு இணைப்பிற்கு எதிரான அரசியல் என்பது முஸ்லீம் தலைமைகளால் தேவையான நேரங்களில் கையாளப்பட்டுவதுடன், அரசியல் செல்வாக்கு மற்றும் அதிகாரிகள் துணையுடன் கிழக்கின் வேலை வாய்ப்பில் முஸ்லீம்களுக்கு முன்னுரிமையும் அளிக்கப்படுகிறது. அதிகாரத்துடன் ஒட்டிய தலைமை; சந்தர்ப்பம் உள்ள இடங்களில் அதிகாரம், ஆக்கிரமிப்பு; பலமற்ற இடங்களில் ஐக்கியம் பற்றி பேசுவது அல்லது ஒரே மக்களாக பேசுவது என்னும் வகையில் முஸ்லீம் சமூகத்தின் கணிசமான பகுதி, அடிப்படையில் “சமூக சந்தர்ப்பவாதம்” என்னும் ஆபத்தான கூறை தன்னகத்தே கொண்டிருப்பதாக ஏனைய சமூகங்களால் பார்க்கப்படுகிறது.
தமிழ் மக்களுடன் இணைந்து வாழும் ஒரேமொழி பேசும் முஸ்லீம் சமூகத்தின் ஒரு பிரிவு உலக இஸ்லாமிய அடிப்படை வாதமாகிய “வஹாபிச” மார்க்கத்தை வரித்துக் கொண்டிருப்பதும், தீவிர அரபுக் கலாச்சாரத்தைப் பேண முனையும் போக்குகள் என்பன இலங்கை தீவில் வாழும் மற்றைய சமூகங்களில் இருந்து தங்களை அன்னியப்படுத்தும் நிலைமைகளையே முஸ்லீம் மக்களுக்கு தோற்றுவித்திருக்கிறது என்பது ஒரு கசப்பான உண்மையாகும்.
மன்னாரில் சிலாவத்துறையிலும், தற்பொழுது முல்லைத்தீவிலும் அரச நிலங்களில் திட்டமிட்டு உருவாக்கப்படும் முஸ்லீம் கிராமங்கள் இன்று முக்கிய கவனத்தைப் பெறுகின்றன. ரிசாத் பதியுதீன், அவரது உறவினர்கள் படையணியின் வியாபார மற்றும் ஓட்டு வங்கியை அடிப்படையாக வைத்து முஸ்லீம்களின் இனப்பரம்பலை தமிழ் பகுதிகளில் அதிகரிப்பது என்னும் திட்டமும் நிறைவேற்றப்படுகிறது. மத்திய அரசின் துறைசார் செல்வாக்கு, மந்திரிகள் செல்வாக்கு இன்னும் இலங்கையை ஆளும் பிரிவுகளின் செல்வாக்குகளுடன் இவர்களின் அரேபிய வியாபார நண்பர்கள், உலக இஸ்லாமிய விரிவாக்கலின் நண்பர்களின் பெரும் நிதிப்பங்களிப்புடனும் இத்திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன. இவற்றை கேள்விகேட்கும் அரசியல் வாதிகளுக்கோ, அதிகாரிகளுக்கோ பணமும் செல்வாக்கும் தான் பதிலாக இருக்கிறது.
முஸ்லீம்கள் ஒரு தனியான தேசிய இனத்தவர்கள் என்ற வகையில், அவர்களது மீள்குடியேற்றத்தை மீறிய, இனப்பரம்பலை மாற்றியமைக்கக் கூடிய திட்டமிட்ட குடியேற்றங்கள் தமிழர்களுக்கு அச்சுறுத்தல் தரவல்லன என்பதை முஸ்லீம்கள் புரிந்து கொள்ள வேண்டும். அம்பாறையில் இலங்கை அரச ஆக்கிரமிப்பு முஸ்லீம்களுக்கு என்ன அச்சுறுத்தலைத் தருகிறதோ அதே நிலைதான் திருகோணமலை, மட்டக்களப்பு, மன்னாரிலும், முல்லைத்தீவிலும் தமிழர்களுக்கு ஏற்படுகிறது என்பதை முஸ்லீம்கள் உணரவேண்டும்.
இலங்கையை பெளத்த சிங்கள மயமாக்க துடிக்கும் ஶ்ரீ லங்கா அரசும்; கூடவே இன, மத முரண்பாட்டினூடாக பிரிவினையை வளர்த்து ஆளநினைக்கும் இந்திய அரசும் ஒடுக்கப்படுபவர்களாகிய எமக்கிடையே இருக்கக்கூடிய முரண்பாடுகளை பயன்படுத்தக் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். கிழக்கில் முஸ்லீம்களின் நில ஆக்கிரமிப்பை நிறுத்துவதற்கு ஆதரவு கேட்டு தமிழ் மக்கள் பௌத்த பிக்குகளிடம் செல்ல விளைவது ஒரு தற்செயல் நிகழ்வாக நாம் பார்க்க முடியாது. தமது தலைமையால் கைவிடப்பட்ட கையறு நிலையில் மக்கள் தூக்கும் கடைசி ஆயுதமாகவே நாம் அதனைக் கருதலாம். பெளத்தமும், இந்துத்துவமும் ஒரணியிலே நின்று இஸ்லாத்தை எதிர்க்கும் போக்காக தெற்காசியாவில் வளர்ச்சி கண்டு வரும் புதிய போக்கிற்கு தீனிபோடுவதாகவே இந்த முயற்சிகள் அமையும்.
முஸ்லீம் மக்கள் மீது தமிழ் மக்களின் ஒரு பிரிவினர் காட்டும் இனவாத அணுகுமுறைகளும், அவதூறுகளும் நிறுத்தப்பட்டு, முஸ்லீம் மக்களுடனான பிரச்சனையை தமிழ் மக்கள் அவர்களுடன் முறையான உரையாடல் தளங்கள் ஊடாகவே தீர்த்துக்கொள்ள வேண்டும். தமிழ், முஸ்லீம் பரஸ்பர உரையாடல்கள் அந்தந்த மக்களின் மதத் தலைவர்களுடனான சந்திப்பாக இல்லாமல்; சிவில் சமூகத் தளங்களில் நடைபெறுவதே ஆரோக்கியமானதாக இருக்கும். ஶ்ரீ லங்கா அரசோ, இந்திய அரசோ அல்லது தீவிர மத வாதிகளோ எந்தக்காலத்திலும் எமது பிரச்சனைகளைத் தீர்த்துவைக்கப் போவதில்லை. மாறாக எம்மைக் கூறு போட்டு தமது நிகழ்ச்சி நிரலிற்கேற்ப எம்மை பயன்படுத்துவதில் தான் அவர்களது அக்கறை இருக்கும்.
முஸ்லிம்களின் நியாயமான மீள்குடியேற்றத்திற்கு தமிழ் மக்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் தொடர்ந்து வழங்கப் பட வேண்டும்
நய வஞ்சகமான முறையில் தமிழர் பகுதிகளில் இனப்பரம்பலை மாற்றியமைக்கக் கூடியவகையில் முஸ்லீம்களால் நிகழ்த்தப்படும் திட்டமிட்ட குடியேற்றங்கள் நிறுத்தப் படவேண்டும்
நன்றி
புதிய திசைகள்
Leave a Reply
You must be logged in to post a comment.