தமிழ்நாட்டில்… பைசா செலவில்லாத பசுமைப் புரட்சி!

தமிழ்நாட்டில்… பைசா செலவில்லாத பசுமைப் புரட்சி!

பசுமை விகடன் டீம்

 வரலாறுபசுமைக் குழு

‘ரசாயன உரங்கள் வேண்டாம்… பூச்சிக்கொல்லிகள் வேண்டாம்… நுண்ணுயிர் உரங்கள் வேண்டாம்… பண்ணைக்குள் இருக்கும் பொருள்களும் கழிவுகளுமே போதும். மண்ணை வளமாக்கி நல்ல மகசூல் எடுக்க முடியும்’ என்ற எளிய சித்தாந்தம், தமிழக விவசாயத்தில் மாபெரும் வேளாண் புரட்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

உழைத்துச் சம்பாதிக்கும் பணத்தை யெல்லாம், உரக்கடைகளில் கொண்டுபோய்ப் படியளந்துகொண்டிருந்த தமிழக விவசாயிகளுக்கு, ‘உங்கள் மாடே ஓர் உரத் தொழிற்சாலைதான்’ என்ற குரல் ஆனந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நாட்டுப் பசு மாட்டின் சாணத்தையும் சிறுநீரையும் மட்டுமே பயன்படுத்தியதில் பயிர்களின் பல்வேறு சிக்கல்கள் தீர்ந்துபோனபோது, ஆனந்தத்தின் உச்சிக்கே போனார்கள் விவசாயிகள். அதுவரை விவசாயிகளுக்குப் பெரும் சுமையாக இருந்த முட்டுவளிச் செலவு என்ற சாகுபடி செலவை உடைத்தெரிந்தது புதிய சித்தாந்தம். ஆம், இத்தனை அற்புதங்களையும் நிகழ்த்திய அந்தச் சிந்தாந்தம்தான், ‘பைசா செலவில்லாத சாகுபடி’ என்றழைக்கப்படும் ஜீரோ பட்ஜெட் சித்தாந்தம்.

மஹாராஷ்ட்ராவைச் சேர்ந்த ‘வேளாண் வித்தகர்’ சுபாஷ் பாலேக்கர் கண்டறிந்ததுதான் ஜீரோ பட்ஜெட் சாகுபடி முறை. அடிப்படையில் வேளாண் பட்டதாரியான சுபாஷ் பாலேக்கர், தனது சித்தாந்தத்தை இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் பரப்பிக்கொண்டிருந்தார்.

‘சுபாஷ் பாலேக்கரின் ஜீரோ பட்ஜெட் முறையைப் பயன்படுத்திவரும் கர்நாடக விவசாயிகள் வறண்ட நிலங்களை வளமாக்கி வருகிறார்கள், குறைவான நீரைப் பயன்படுத்தி நெல் விளைவிக்கிறார்கள்’ என்ற செய்தியைச் சொன்ன எழுத்தாளர் தூரன் நம்பி, ஆனந்த விகடன் ஆசிரியர் குழுவை கர்நாடகாவுக்கு வந்து பார்வையிட அழைப்புவிடுத்தார்.

2006-ம் ஆண்டு பாலேக்கரின் சித்தாந்தங்களை அறிந்து வர விகடன் குழுமத்தின் அப்போதைய தலைமைப் பொறுப்பாசிரியரும், தற்போது பசுமை விகடன் ஆசிரியருமான ச.அறிவழகன் மற்றும் புகைப்படக்காரர் பொன்.காசிராஜன் ஆகியோர்  புறப்பட்டனர். கர்நாடக மாநிலம், மைசூருக்கு அருகில் உள்ள சுத்தூர் மடத்தில், சுபாஷ் பாலேக்கர் நடத்திய ஜீரோபட்ஜெட் பயிற்சி பற்றியும் சுபாஷ் பாலேக்கர் குறித்தும் ‘பைசா செலவில்லாமல் பசுமைப் புரட்சி!’ என்ற தலைப்பில் 1.11.2006 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழில் விரிவான கட்டுரை இடம்பெற்றது. இந்தக் கட்டுரையைப் படித்துவிட்டு, ஏராளமான வாசகர்கள் விகடன் அலுவலகத்துக்குக் கடிதம் அனுப்பி குவித்தனர். பசுமை விகடன் இதழ் தொடங்குவதற்கான முன்னோட்டத்தின் முதல் விதையாக இந்தக் கட்டுரை அமைந்தது.

கோயம்புத்தூரில் 2007-ம் ஆண்டு ஜனவரி 26-ம் தேதி நடைபெற்ற பசுமை விகடனை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழாவில், கலந்துகொண்டு சிறப்புரையாற்ற முதல் முறையாக சுபாஷ் பாலேக்கர் தமிழக மண்ணில் அடியெடுத்து வைத்தார். இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து ‘ஆனந்த விகடன் குழும’த்தின் நிர்வாக இயக்குநர், ‘இந்தச் சித்தாந்தம் தமிழக விவசாயிகளுக்குப் பயன்பட வேண்டும். இதன் மூலமாக, தமிழக விவசாயத்தில் மாபெரும் மாற்றம் நிகழும் என்ற நம்பிக்கை இருக்கிறது. உடனடியாக இதை விவசாயிகளிடம் கொண்டு செல்ல வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டார்.

அதைத் தொடர்ந்து, ‘அதிசய சாகுபடி’ என்ற பெயரில்,  தூரன் நம்பி  எழுதிய ஜீரோ பட்ஜெட் விவசாயம் பற்றிய கட்டுரைகள் பசுமை விகடனில் வெளியாயின. குறைவான நீரில் நெல் சாகுபடி செய்யும் பண்ணூர் கிருஷ்ணப்பா, வறண்ட பகுதியிலும் பப்பாளி சாகுபடியில் அசத்தும் குல்பெர்கா கங்காதர், திராட்சை விவசாயி கும்பார், மலைப்பயிர் சாகுபடியில் வெளுத்து வாங்கும் ஹாசன் மாவட்டத்தைச் சேர்ந்த பார்த்தி என ஒவ்வொரு இதழிலும் அனுபவ விவசாயிகளின் வெற்றிக்கதைகள் அரங்கேற்றப்பட்டன.

அந்தத் தொடர், தமிழக விவசாயிகளிடம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. ‘‘தமிழ்நாட்டில் ஜீரோபட்ஜெட் பயிற்சி வகுப்பை நடத்த வேண்டும்…’’ என்று வாசகர்கள் கோரிக்கை வைத்தனர். இதைத் தொடர்ந்து 2007-ம் ஆண்டு செப்டம்பர் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் திண்டுக்கல்லில் நடந்தது, சுபாஷ் பாலேக்கரின் முதல் பயிற்சி வகுப்பு. கூட்டத்தில் கலந்துகொள்ள விவசாயிகள் காட்டிய ஆர்வம் மற்றும் பயிற்சியின்போது விவசாயிகள் கவனித்துக் குறிப்பெடுத்துக்கொண்ட விதம் ஆகியவையே ‘இனி, ஜீரோ பட்ஜெட் தமிழக விவசாயத்தைப் புரட்டிப்போடும்’ என்பதைத் தெளிவு படுத்தின.

90 நாள்களில் நிகழ்ந்த மாற்றம்!

திண்டுக்கல் பயிற்சி வகுப்புக்குப் பிறகு, தமிழகம் முழுவதும் பல விவசாயிகள், ஜீரோ பட்ஜெட் தொழில்நுட்பத்தைக் கடைப்பிடிக்கத் தொடங்கினார்கள். முதல் பயிற்சி முடிந்த மூன்றே மாதத்தில், ஈரோட்டில் 2007-ம் ஆண்டு டிசம்பர் 29, 30, 31 மற்றும் ஜனவரி 1 ஆகிய நான்கு நாள்களுக்கு அடுத்த பயிற்சி வகுப்புக்கு ஏற்பாடு செய்தது பசுமை விகடன். இந்த முறை நான்கு நாள்கள் நடந்த பயிற்சியில் சுமார் 2 ஆயிரம் விவசாயிகள் கலந்துகொண்டனர். முதல் பயிற்சிக்கும் இரண்டாவது பயிற்சிக்குமான 90 நாள்கள் இடைவெளியில் ஜீரோ பட்ஜெட் முறையைக் கடைப்பிடித்த விவசாயிகள் பலர், தங்கள் பயிர்களில் நிறைய மாற்றங்களைக் கண்டு, ஆச்சர்யப்பட்டுப்போயிருந்தனர். திண்டிவனம் அருகேயுள்ள தொழுப்பேடு கிராமத்தைச் சேர்ந்த அனந்தகிருஷ்ணன், திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடி கிராமத்தைச் சேர்ந்த கதிரேசன் உள்ளிட்ட பலர், ஈரோடு கூட்டத்தில் பாலேக்கரிடம் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.

விதை விருட்சமான நெகிழ்ச்சி!

இந்த இரண்டு பயிற்சி வகுப்புகளுக்குப் பிறகு, தமிழகத்தில் அதிவேகமாகப் பரவத் தொடங்கியது, ஜீரோ பட்ஜெட். தமிழக விவசாய வரலாற்றை ஜீரோ பட்ஜெட்டுக்கு முன், ஜீரோ பட்ஜெட்டுக்குப் பின் எனக் குறிப்பிடும் அளவுக்குப் பல்வேறு மாற்றங்கள் அரங்கேறின. நாட்டு மாடுகளின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. அதுவரை இடுபொருள்களுக்காகச் செலவழித்த பெரும் தொகை மிச்சமானது. ஜீவாமிர்தம் கொடுக்கப்பட்ட பயிர்களின் வளர்ச்சியும் காய்கள், பழங்களின் சுவை மற்றும் பளபளப்பும் விவசாயிகளுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தன. இதைத் தொடர்ந்து பல்வேறு அமைப்புகளும் சுபாஷ் பாலேக்கரை அழைத்து வந்து, தமிழகத்தில் ஜீரோபட்ஜெட் பயிற்சியை நடத்தின.

ஜீரோ பட்ஜெட் சித்தாந்தம், தமிழகத்தில் அறிமுகமான இந்தப் பத்தாண்டுகளில்  பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் இயற்கை விவசாயத்துக்கு மாறியிருக்கின்றன. ஆரம்பக்கட்டத்தில் ஜீரோ பட்ஜெட் விவசாயத் தோட்டங்களைப் பார்க்க, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங் களுக்குப் பயணம் செய்ய வேண்டிய நிலை இருந்தது. ஆனால், பல மாநில விவசாயிகள் பார்வையிட்டு வியக்கும் அளவுக்கு மிகச்சிறந்த ஜீரோ பட்ஜெட் மாதிரிப் பண்ணைகள் தமிழகத்தில் உருவாகி வருகின்றன.

தமிழ்நாட்டில் பல ஆண்டுகளாக இயற்கை விவசாயத்தைப் பட்டிதொட்டியெல்லாம் பரப்பி வந்த ‘இயற்கை வேளாண்’ விஞ்ஞானி கோ.நம்மாழ்வாரின் இயற்கை விவசாயக் கனவு வேகமாக நிறைவேற, ஜீரோபட்ஜெட் இயற்கை வேளாண்மை தொழில்நுட்பமும் அழுத்தமாக கைக்கொடுத்தது என்றால் அது மிகையல்ல.  ஜீரோபட்ஜெட்டின் ஜீவாமிர்தம் இன்றைக்கு விவசாயிகளின் துயர் துடைக்கும் ‘பாற்கடல் அமுத’மாக இருக்கிறது. இத்தனை மாற்றத்துக்கும் காரணமான ஜீரோ பட்ஜெட் என்ற விதையை, தமிழகத்தில் விதைத்ததை நினைத்துப் பெருமைகொள்கிறது, பசுமை விகடன். விதைத்த விதை விருட்சமாகி நிற்பதைப் பார்த்து நெகிழ்ந்து நிற்பதுடன், அந்த விருட்சங்களை அறிமுகப்படுத்தும் வகையில் இந்த இதழ் ஜீரோ பட்ஜெட் சிறப்பிதழாக உங்கள் கைகளில் தவழ்கிறது.


ஜீரோ பட்ஜெட் சுற்றுலா!

திண்டுக்கல் பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள, ஈரோடு மாவட்டத்திலிருந்து முப்பது விவசாயிகளைத் தேர்ந்தெடுத்து அனுப்பி வைத்திருந்தார், அப்போதைய ஈரோடு மாவட்ட ஆட்சியராக இருந்த உதயசந்திரன் ஐ.ஏ.எஸ் (தற்போது பள்ளி கல்வித்துறை செயலாளராக இருக்கிறார்). பயிற்சி முடித்த விவசாயிகள், ஜீரோ பட்ஜெட் பயிற்சி வகுப்பில் பல்வேறு விஷயங்களைத் தெரிந்துகொண்டோம்.

கர்நாடக மாநிலத்தில் உள்ள சில மாதிரிப் பண்ணைகளை நேரடியாகப் பார்வையிட்டால்தான், இந்தப் பயிற்சி முழுமையடையும் எனக் கோரிக்கை வைத்தனர். உடனடியாக அந்தக் கோரிக்கையை நிறைவேற்றிய உதயசந்திரன், ‘மைராடா’ என்ற தொண்டு நிறுவனம் மூலமாக ஜீரோ பட்ஜெட் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்துகொடுத்தார். அதில் கலந்துகொண்ட பல விவாசாயிகள் இன்று, முன்னோடி ஜீரோ பட்ஜெட் விவசாயிகளாகத் திகழ்கிறார்கள்.


ஜீரோ பட்ஜெட் சூத்திரம்!

சுபாஷ் பாலேக்கர் சொல்லிவரும் முக்கிய ‘ஜீரோபட்ஜெட் சூத்திரங்கள்’ இங்கே இடம் பிடிக்கின்றன…

* இயற்கையை உணர்ந்துகொள்ளும் தத்துவம்தான், ஜீரோ பட்ஜெட். முதலில் சில அடிப்படையான கருத்துகளைத் தெரிந்துகொண்டால்தான் இயற்கையிடமிருந்து எதையும் நாம் பெறுவதற்கான தகுதியைப் பெற்றவர்களாவோம். மனிதனால் எதையும் படைக்க முடியாது. அபிவிருத்திதான் செய்ய முடியும். ஒரேயொரு நெல் விதையைத்தான் விதைக்கிறோம். ஆனால், 250 தூர்கள் வெடிக்கிறது. விதையின் சூட்சுமம் இதுதான். இதை உணர்ந்துகொள்ளாமல் அதிவேகத்தில் செயல்பட்டோம். விளைச்சல் மட்டுமே குறியாக இருந்ததால் அதன் முடிவு… வலி தருவதாக இருந்தது.

*  பசு மாட்டை நாம் இதுவரை பால் கொடுக்கும் ஜீவனாகத்தான் பார்த்து வந்துள்ளோம். அது அற்புதமான உரத்தொழிற்சாலை. பயிர்களுக்கு வேண்டிய நுண்ணுயிர்கள் பசுமாட்டின் வயிற்றில்தான் உற்பத்தியாகின்றன. கரும்பு போடும்போதும் காய்கறிப் பயிரிடும்போதும் பாஸ்பேட் உரம் போடுகிறோம். இந்தப் பாஸ்பேட், பயிர்களின் வேர்களால் உட்கிரகிக்கும் வகையில் இருக்காது. இதைச் சமைத்துப் பயிர்கள் எடுத்துக்கொள்ளுமளவுக்குப் பக்குவப்படுத்திக் கொடுக்கிறது, பாஸ்பேட் சாலிபலஸ் பாக்டீரியா. இந்தப் பாக்டீரியா, பசுமாட்டின் குடலில் வசிக்கிறது. இனி, பாஸ்பேட் உரம் போட வேண்டாம்… பசுமாட்டைத் தேடுங்கள்.

* செடிகளில் இலையாக, பூவாக, காயாக இருப்பவையெல்லாம் ஒருகட்டத்தில் உதிர்ந்து மண்ணில் விழுந்தவுடன் ஹீயுமஸாக மாறுகின்றன. மண்ணில் எந்தளவுக்கு ஹீயுமஸ் இருக்கிறதோ, அந்தளவுக்குப் பயிர்களின் வளர்ச்சி இருக்கும். ரசாயன உரத்தால் அழிக்கப்பட்டுவிட்ட ஹீயுமஸ், மீண்டும் மண்ணில் பெருக வேண்டும். இதற்கு மூன்று செயல்முறைகளை நீங்கள் செய்ய வேண்டும். முதலாவது, தானியத்தைத் தவிர மற்ற பாகங்களை மண்ணுக்கே திருப்பித் தந்துவிட வேண்டும். இரண்டாவது, நாட்டுமாடு வளர்க்க வேண்டும். மூன்றாவது, மூடாக்குப் போட வேண்டும். இந்த மூன்று செயல்களையும் சரியாகச் செய்தாலே உங்கள் மண்ணில் பழையபடி வளம் பிறந்துவிடும்.

* ஜீவாமிர்தம் தயாரிக்கத் தொட்டி இல்லையே… பிளாஸ்டிக் கேன் இல்லையே… என்றெல்லாம் வருத்தப்பட வேண்டாம். 3 அடி ஆழத்தில் மண்ணில் குழி எடுத்து, அதில் சாணக் கரைசலை உட்புறம் விட்டு தரையை மெழுகுவதுபோல மெழுகி விடவும். பிறகு, குழியின் மீது பிளாஸ்டிக் ஷீட் விரித்து, அதில் ஜீவாமிர்தம், பீஜாமிர்தம் போன்றவற்றைத் தயாரிக்கலாம். ஜீவாமிர்தத்தைப் பாசன நீரில் கலந்து விடலாம்.

கிணற்றுப் பாசனம் செய்பவர்கள் குறைந்தளவு நீர் மட்டுமே இருந்தால், ஜீவாமிர்தம் தயாரித்துக் கிணற்றிலேயே ஊற்றிவிடலாம். நீர்ப்பாசன வசதியில்லாதவர்கள் கனஜீவாமிர்தத்தை வயலில் தூவிவிடலாம்; இல்லையென்றால் பயிர்களுக்கு அருகே கொஞ்சம் கொஞ்சமாகத் தெளித்துவிடலாம்.

* நம்முடைய மண்… ஓர் அட்சயபாத்திரம். எடுக்க எடுக்கக் குறையாத சத்துகள் அதில் உள்ளன. ஆனால், ‘மண்ணில் பேரூட்டச்சத்து இல்லை. நுண்ணூட்டச்சத்து இல்லை’ என்று திரும்பத் திரும்பப் பொய்யை மட்டுமே சொல்லி வருகிறார்கள் விஞ்ஞானிகள்.

http://www.vikatan.com/pasumaivikatan/2017-jun-25/current-affairs/131829-green-revolution-event-for-zero-budget-farming.html?artfrm=most_read

About editor 3020 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply