யாரும் எனக்குப் பணம், காசோலை தரவில்லை அவற்றை நான் கொண்டுவரவும் இல்லை – முதலமைச்சர் விக்னேஸ்வரன்

யாரும் எனக்குப் பணம், காசோலை தரவில்லை அவற்றை நான் கொண்டுவரவும் இல்லை – முதலமைச்சர் விக்னேஸ்வரன்

நக்கீரன்

ட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தனது பொன்னான நேரத்தை   அரசியல் செய்வதற்கு ஒதுக்குவதால் சபையின் நிருவாகம் முடங்கிக் கிடக்கிறது என்ற குற்றச் சாட்டு பலரால் பரவலாக முன் வைக்கப்பட்டு வருகிறது. வடக்குக்கு சென்று திரும்புவர்கள் வட மாகாண சபையின் நிருவாகம் பற்றி விசனமே தெரிவிக்கிறார்கள்.

கடந்த மூன்று ஆண்டுகளில் 337  தீர்மானங்களை நிறைவேற்றிய மாகாண சபையால் உருப்படியாக மக்களுக்கு வேலை கொடுப்பதற்கு ஒரு புடவைத் தயாரிப்பு நிறுவனத்தைக் கூட திறக்க முடியவில்லை. மேலும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் மத்திய அரசோடு இணங்கிப் போவதாகவும்  தெரியவில்லை. மத்திய அரசை பகிரங்கமாக விமர்ச்சித்துப் பேசுகிறார். நீண்ட அறிக்கைகளை விடுகிறார். வடக்கில் இருந்து ஒன்றரை இலட்சம் இராணுவத்தை முற்றாக அகற்றுமாறு கேட்கிறார். அது நடைமுறைச் சாத்தியமில்லாத கோரிக்கை. இராணுவ பிரசனன்னத்தை குறைக்குமாறு கேட்கலாம். அப்படித்தான் ததேகூ இன் தலைவர் திரு சம்பந்தன் கேட்கிறார்.

திரு விக்னேஸ்வரனின் பேச்சைக் கேட்க அவரது அறிக்கையைப் படிக்க மனதுக்கு பூரிப்பாக  இருக்கிறது. ஆனால், மக்களுக்கு அதனால் பயனில்லை. மத்திய அரசோடு   மோதல் போக்கை அவர் கடைப்பிடிப்பதால் சிங்கள அரசு அவரை ஒதுக்குகிறது. அல்லது ஓரங்கட்டுகிறது.  இதனால் பாதிக்கப்படுபவர்கள் பொது மக்களே. 

வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரனின் அரசியல் வாழ்வு முடிவுக்கு வந்து கொண்டிருப்பதாகவும் அவரது எதிர்பார்ப்புக்கள் எதுவும் நிறைவேற மாட்டாது எனவும்  அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கடந்த 19 ஆம் திகதி கிளிநொச்சியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் கருத்து வெளியிடும் பொழுதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனின் தாளத்துக்கு ஆடுவதற்கு தாம் தயாரில்லையெனவும் அவர் கூறும் விதத்தில் வடக்கிலிருந்து இராணுவத்தை மீளழைப்பதற்கு ஒரு போதும் முடியாது என்றும் அமைச்சர் சரத் பொன்சேகா பேசியிருக்கிறார். 

முதலமைச்சர் விக்னேஸ்வரன் அரசியலைத் தமிழ்த் தேசியக் கூட்டமைபின் தலைமையிடம் விட்டு விட்டு எஞ்சியிருக்கும் 15 மாதங்களை வடக்கின் பொருளாதார வளர்ச்சியில் முழுக் கவனம் செலுத்த வேண்டும். வடக்கில் அவலப்படும் நாற்பதாயிரம் கைம்பெண்களின் வாழ்வாதாரத்தை நிமிர்த்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். லேலையில்லாத இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புக்களை உருவாக்கிக் கொடுக்க வேண்டும். வேளாண்மை, மீன்பிடி இரண்டும் வட மாகாணத்தின் பொருளாதாரத்தின் முதுகெலும்புகள். அவற்றை மீள்கட்டி எழுப்ப வேண்டும். அதற்கான உதவிகளை மத்திய அரசிடம் இருந்து கேட்டுப் பெறவேண்டும்.  இந்தியா 45 மில்லியன் அ.டொலர்கள் செலவில் காங்கேசன்துறை துறைமுகத்தை சீரமைக்க இருக்கிறது.

வடக்கில் வறுமை நிலவுகிறது. கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களில் வாழும் மக்கள் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கிறார்கள் என அரசே சொல்கிறது.

முப்பது ஆண்டுகள் நடந்த கொடிய போர் முடிவடைந்த பின், இடம்பெயர்ந்த குடும்பங்கள் தமது வாழ்வை மீளக் கட்டியெழுப்புவதற்கு சவால்களை எதிர்கொண்டுவரும் நிலையில் வடக்கு கிழக்கில் வறுமை மட்டமும் கடன்படு நிலையும் வெகுவாக அதிகரித்துள்ளது என மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார். அதிகரித்துவரும் கடன்படுநிலையை கட்டுபாட்டில் கொண்டுவர மத்தியவங்கி நடவடிக்கை எடுக்கும் எனவும் கடன் வழங்கும் நிறுவனங்கள் தொடர்பில் ஆராய்ந்து சரியான தீர்வு வழங்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். கடனைத் திருப்பிக் கட்டாததற்கு போதிய வேலை வாய்ப்பின்மை முக்கிய காரணம் என்கிறார். கொழும்பில் வெளிநாட்டு ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு  தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் விக்னேஸ்வரன் மத்திய அரசின் நம்பிக்கையை மட்டுமல்ல அவர் தேர்தலில் நின்று வென்று வந்த தமிழ் அரசுக் கட்சித் தலைவர்களது நம்பிக்கையையும் இழந்துள்ளார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்காததற்குக் காரணம் “நான் இப்போது வேண்டப்படாதவன்” ஆயிற்றே என்று அவரே சொல்லும் அளவிற்கு  உறவு சீர்குலைந்து இருக்கிறது. இரண்டு தோணிகளில் பயணப்பட நினைப்பவர்கள் கதி இதுவாகத்தான் இருக்கும்.

நிற்க. இந்த ஆண்டுத் தொடக்கத்தில் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் பெயரைச் சொல்லி கனடாவில் திரட்டிய இலட்சக்கணக்கான டொலர்களுக்கு என்ன நடந்தது? இந்தக் கேள்விக்கு விடை தெரியாமல் இருக்கிறது. மருத்துவர்கள், வணிகர்கள், சட்டத்தரணிகளிடம் இருந்து டொலர் 500,1,000, 5,000, 10,000 என திரட்டப்பட்டது. அது தொடர்பாக நடந்த இரவு விருந்தில் முதலமைச்சர் உட்பட ஆயிரத்துக்கும் மேலானவர்கள் கலந்து கொண்டார்கள். இதன் மூலம்  வரும் பணம்  வட மாகாண அபிவிருத்திக்கு முதலமைச்சரிடம்  கையளிக்கப்படும் எனச் சொல்லப்பட்டது.

ஆனால் முதலமைச்சர் தான்  யாரிடமும் பணமும் வாங்கவில்லை காசோலையும் வாங்கவில்லை  அதனை இலங்கைக்குக் கொண்டுவரவும் இல்லை என நேற்றைய (மே 24)  மாகாணசபைக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சின்னத்துரை தவராசா எழுப்பிய கேள்விக்கு ஒரு மழுப்பலான பதிலை இறுத்துள்ளார்.

மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர்: இலண்டனிலும் கனடாவிலும் புலம்பெயர் தமிழர்களால் நிதி  சேகரிக்கப்பட்டு பணமாகவும் காசோலையாகவும் தங்களிடம் கொடுக்கப்பட்டதாக ஊடகங்கள் வாயிலாகவும் வீடியே கிளிப் மூலமாகவும் அறியக் கூடியதாக இருக்கின்றது. இது தொடர்பாக பின்வரும் விடயங்களை தெளிவு படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். Wicki2

“புலம்பெயர் தமிழர்களால் பணமாகவும் காசோலையாகவும் தங்களிடம் நிதி கொடுக்கப்பட்டதா? அவ்வாறு கொடுக்கப்பட்ட பணம், காசோலை இரண்டின் பெறுமதி என்னவென்று அறியத்தர முடியுமா? பணத்தின் பெறுமதி என்ன? அந்தப் பணம் செலவு செய்யப்பட்டு விட்டதா? அந்தப் பணம் செலவழிக்கப்பட்டிருந்தால் அதன் விபரங்களைத் தரமுடியுமா?”

இதற்குப் பதிலளித்த முதலமைச்சர் விக்னேஸ்வரன் யாரும் தன்னிடம் பணம்  கொடுக்கவில்லை, வீடியோ கிளிப்பில் காட்டப்பட்ட பணம் என்னிடம் கொடுக்கப்பட்டது. ஆனால் அதனை அவர்களிடமே திருப்பிக் கொடுத்துவிட்டேன் என்றார். 

முதல்வர் குறிப்பிடும் டொலர் 45,000 க்கான அடையாள காசோலை பிராம்ரன் தமிழ்ச் சங்கம் சார்பில் மாங்குளத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் உயிரிழை முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டோர்களின் அமையத்துக்கான பயிற்சி நிலையக் கட்டிடம் கட்டுவதற்கு ஏற்கனவே கொடுக்கப்பட்ட நிதியுதவி ஆகும். சம்பந்தப்பட்டவர்கள் விளம்பரத்துக்காக அந்தப் பணம் ஏதோ புதிதாகக் கொடுக்கப்படுவதாக முதல்வரிடம் கொடுத்து ஊடகங்களில் அந்தச் செய்தியை வெளிவர வழி செய்தார்கள்.  முதலமைச்சருக்கு, இந்த நிதியுதவி ஒரு நாடகம் என்பது தெரியும். ஆனால் அவரும் நாடகத்தில் நடிக்க ஒப்புக் கொண்டு பிரமாதமாக நடித்தார்.

அதே போல் பிரம்ரன் மாநகர சபையோடு வவுனியா நகர சபை ஒரு சகோதர நகர உடன்பாடு  எழுதப்பட்டதாகச் சொல்லப் படுவதிலும் உண்மையில்லை. முதலமைச்சர் விக்னேஸ்வரன் பிரம்ரன் மாநகர சபையில் உரையாற்றினார் என்பதிலும் உண்மையில்லை. அவர் பேசியது பிரம்ரன் மாநகர சபை கட்டிடத்தின் ஒரு அறையில். பிரம்ரன் மாநகர சபை மேயர் லின்டா ஜெஃரி (Linda Jeffrey) அவர்களோ, உறுப்பினர்களோ யாரும் அவரை வரவேற்கவில்லை. மாநகரசபையின் துணை மேயர் மார்ட்டின் மெடிரொஸ் மட்டும் வரவேற்பில் கலந்து கொண்டார். மாநகர சபை உறுப்பினர்கள் எழுப்பிய எதிர்ப்புக் காரணமாக மாநகர சபை மேயர் அந்த யோசனையைக் கைவிட்டுவிட்டார் எனத் தெரிகிறது. அது பற்றிய அறிவித்தல்கள் பிரம்ரன் மாநகர சபை இணைய தளத்தில் இருந்து நீக்கப்பட்டுவிட்டன.Wigneswaranbramptonbuilding

மேலும் முதலமைச்சரின் பெயரைப் பயன்படுத்தி அவரைக் கௌரவிக்கும் முகமாக தமிழ் கனடியர் சிவில் ஒன்றியம் (Tamil Canadians Civil Society Forum ) ஒரு இரவு விருந்தை ஒழுங்கு செய்திருந்தது. அந்த விருந்துக்கான நுழைவுச் சீட்டுக்கள் டொலர் 500, 1,000, 5,000, 10,000 என விற்கப்பட்டன. இரவு விருந்தில் ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள், பெரும்பாலும் மருத்துவர்கள், சட்டத்தரணிகள், வணிகர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். சிறப்பு விருந்தினர் முதலமைச்சர் விக்னேஸ்வரன் என்று சொல்ல வேண்டியதில்லை. இந்த இரவு விருந்தின் வழியாக ரூபா 65 மில்லியன் (60,000 டொலர்கள்) திரட்டப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இந்த நிகழ்ச்சியின் இறுதி ஏற்பாட்டை முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்களது அரசியல் ஆலோசகர், மூலோபாய செயலாளர் செய்திருந்தார். ஒரு சிலர் அந்த நிதி அரசியல் ஆலோசகர் நிர்மலதன் கார்த்திகேயனின் சம்பளக் கொடுப்பனவுக்கு திரட்டியதாகச் சொல்கிறார்கள். அவுஸ்திரேலியா குடிமகனான அவருக்கு இப்போது வட மாகாண சபை மாதம் ரூபா 35,000 மட்டுமே சம்பளமாகக் கொடுக்கிறது.  (http://www.tamilguardian.com/content/wigneswaran-encourages-tamil-diaspora-contribute-towards-development-and-accountability).

தமிழ் கனடியர் சிவில் சமூக ஒன்றியம் (விக்னேஸ்வரன் வருகையை ஒட்டி தொடங்கப்பட்ட அமைப்பு) என்ற அமைப்பே இந்த இரவு விருந்தை நடத்தியது. ஆனால்  திரட்டிய பல இலட்சம் டொலர் பணத்துக்கு என்ன நடந்தது? என்பது தெரியவில்லை. நிகழ்ச்சி நடந்த 4 மாதம் முடிந்த பின்னரும் சம்பந்தப் பட்டோர் மவுனம் காப்பது ஏன்?

இதே கூட்டம்தான் 2015 இல் நடந்த பொதுத் தேர்தலில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைவராக இருக்கும் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு படாத பாடு பட்டது. மாற்றத்தின் குரல் என்ற அமைப்பு அந்தக் கட்சிக்கு ஆதரவாக கூட்டங்கள் நடத்தின. பெரும் பொருள் திரட்டி அனுப்பியது. இங்குள்ள தமிழர்கள் அங்குள்ள உறவினர்களோடு தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேச தொலைபேசி அட்டைகளையும் ஆயிரக்கணக்கில் வழங்கியது. தேசியத் சொத்துக்களில் ஒன்றான சிரிஆர் வானொலி விடிய விடிய தமிழ்க் காங்கிரஸ்கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை செய்தது. கட்சி வேட்பாளர்களை வானலையில் அழைத்து வந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை திட்ட வைத்தது.

இந்த வானொலி தனது பரப்புரைக்கு வட மாகாண முதலமைச்சர் தேர்தல் நடக்க இருந்த திகதிக்கு (ஓகஸ்ட் 17, 2015) சில நாள்களுக்கு முன்னர் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசுக்கு வாக்களிக்குமாறு மறைமுக ஆதரவு தெரிவித்து விட்ட அறிக்கைகளை மெத்தப் பயன்படுத்தியது. தேர்தலில் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் வேட்பாளர்கள் கூண்டோடு கைலாசம் போனாலும் ததேகூ க்கு எதிரான பரப்புரையை எந்தவித துக்கமோ வெட்கமோ இன்றித் தொடர்ந்து இந்த வானொலி செய்து கொண்டிருக்கிறது. காகம் திட்டி மாடு சாவதில்லை என்ற உண்மை இந்த வானொலி நடத்துவோருக்குத் தெரியாமல் இருக்கிறது.

நிற்க முதலமைச்சர் விக்னேஸ்வரன் பிரம்ரன் மக்களால் தன்னிடம் கொடுக்கப்பட்ட அடையாள காசோலையை திருப்பிக் கொடுத்து விட்டதாகச் சொல்வது சரி. அது பெறுமதியில்லாத காசோலை. ஆனால் அவர் பெயரில் அவரது ஒப்புதலோடு இரவு விருந்தின் மூலம் திரட்டிய பெருந்தொகைப் பணத்துக்கு என்ன நடந்தது என்பதுதான் தெரியவில்லை.

இதனை எழுதிய பின்னர் இந்த விருந்து தொடர்பான கணக்கு விபரம் கிடைத்துள்ளது.  நிதி அறிக்கையின்படி,    

                                                                                                                   $

வருமானம்                                                                                         113,500                                                                                             

செலவு                                                                        $   

உணவு                                                                 34,877

பொதுக் கூட்டம்                                               10,024

பிரயாணம், பாதுகாப்பு                                    11,434

ஹோட்டல்                                                           2,342

ஊடகம் பிற செலவு                                          4,4673      

மொத்த செலவு                                                63,350                           63,350

செலவு போக மிகுவருவாய்                                                                  50,150         

முதலமைச்சரின் குழு  கொழும்பில் இருந்து வர ஏற்பட்ட  விமானச் செலவை தமிழ்  பாரம்பரியம் மற்றும் பண்பாட்டுக்கான மையம் பொறுப்பேற்றது.   முதலமைச்சரது இருப்பிட வசதிச் செலவை மார்க்கம் மாநகரசபை பொறுப்பேற்றது. ஆனால் செலவு போக எஞ்சிய  $ 50,150 க்கு என்ன நடந்தது என்ற விபரம் இல்லை.

இதன் அடிப்படையிலேயே யாரும் எனக்குப் பணம், காசோலை தரவில்லை அவற்றை நான் கொண்டுவரவும் இல்லை என  முதலமைச்சர் விக்னேஸ்வரன் சொல்கிறாரா?

                                          

 

 

About editor 3016 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply