135 பேர் யார் எந்தப் பக்கம்?

135 பேர் யார் எந்தப் பக்கம்?

ஜூனியர் விகடன் டீம்
டெல்லி திகார் சிறையில் இருந்து திரும்பிய தினகரனுக்கு அ.தி.மு.க-வில் கிடைத்திருக்கும் வரவேற்பு, எடப்பாடி அணிக்கு அதிர்ச்சி தந்துள்ளது. பெங்களூரு சிறையில் சசிகலாவைச் சந்தித்தபோது, தினகரனை அடுத்த 60 நாள்களுக்குப் பொறுமை காக்கும்படி அட்வைஸ் செய்து அனுப்பியிருந்தார். ஆனால், தினகரன் பொறுமை காக்கவில்லை. அடுத்தடுத்து, எம்.எல்.ஏ-க்களைச் சந்திக்க ஆரம்பித்துவிட்டார். இதுவரை அவரை வீடு தேடிப் போய் சந்தித்த எம்.எல்.ஏ-க்கள் 32 பேர். ‘இத்தனை எம்.எல்.ஏ-க்கள் எப்படிப் போனார்கள்? யார் லாபி செய்தது? உளவுத்துறை எப்படிக் கோட்டை விட்டது?’ என்கிற கேள்விகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது ஆதரவாளர்களிடம் கேட்டு வருகிறார். வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன், சாத்தூர் சுப்பிரமணியன் என மூன்று பேருடன் ஆரம்பித்த ஆதரவுப் பட்டியல் 32 பேர் வரை நீண்டுவிட்டது. ஆட்சியையே அசைத்துப் பார்க்கும் வல்லமையோடு தினகரன் அணி பலமடைந்திருப்பது யாரும் எதிர்பார்க்காத திருப்பம்தான்.

தினகரனின் உளவு அமைச்சர் யார்?

‘‘ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் தினகரன் ஜெயிப்பார். முதல்வர் ஆவார். அதன் பிறகு, இரண்டு துணை முதல்வர்கள். அதில் நானும் ஒருவன்…’’ இப்படி சொல்லித் திரிந்தவர் கொங்கு மண்டலத்து அமைச்சர் ஒருவர்.  வெளிப்படையாக எடப்பாடி கோஷ்டி என்று சொல்லிக் கொண்டாலும், திரைமறைவில் இவர் தினகரனை உடும்பாகப் பிடித்திருக்கிறாராம். தன்னிடம் சிபாரிசு கேட்டு வரும் எம்.எல்.ஏ-க்கள் பலரையும் இவர்தான் பிரைன்வாஷ் செய்து தினகரனிடம் அனுப்புகிறாராம். ‘‘பார்த்தீங்களா? முப்பதைத் தாண்டியாச்சு ஸ்கோர். நீங்க எப்போப் போறீங்க?’’ என எடப்பாடி கோஷ்டி எம்.எல்.ஏ ஒருவரிடம் போனில் இவர் நக்கல் சிரிப்புடன் கேட்டாராம். அப்போது எடப்பாடியும் அருகில் இருந்தாராம். இந்த அமைச்சர் பேசியதைக் கேட்டு எடப்பாடி திடுக்கிட்டாராம். அதேபோல், எல்லா அமைச்சர்களும் ஒன்றிணைந்து எடுத்த முடிவை மீறி, ‘சசிகலாதான் பொதுச் செயலாளர்’ என்று அடித்துச் சொல்லி எடப்பாடியை டென்ஷன் ஆக்கினார் ராஜேந்திர பாலாஜி. எடபாடி எச்சரித்தும் அதையும் மீறி பேசியிருக்கிறார் அவர்.

தவிக்கும் எடப்பாடி

தினகரன் அணிக்கு வந்தவர்கள் எல்லோருமே எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான மனநிலையில் இல்லை. பலரும் எடப்பாடி யிடமும் நட்புறவைத் தொடர் கிறார்கள். ஆனால், கூவத்தூர் ஒப்பந்தப்படி செட்டில் ஆகவேண்டியது இன்னும் பல எம்.எல்.ஏ-க்களுக்குப் போகவில்லை. இதைச் சுட்டிக்காட்டும் தினகரன் தரப்பினர், “இதைப் போய் முதல்வரிடம் கேளுங்கள்”என முடுக்கிவிட்டு அனுப்புகிறார்களாம். ‘மாறுதல்கள், டெண்டர்கள், கான்ட்ராக்ட்டுகள் என்று எல்லாவற்றிலும் வசூலிக்கப்படும் தொகை எங்கு செல்கிறது? நாளைக்கே உள்ளாட்சித் தேர்தல் வந்தால், இதை வைத்து அமைச்சர்கள் செலவு செய்வார்களா?’ என்றெல்லாம் கேள்வி கேட்கும்படி எம்.எல்.ஏ-க்களிடம் வகுப்பு நடத்துகிறார்கள் தினகரன் ஆதரவு பிரமுகர்கள்.

பெரிய துறைகளை வைத்திருக்கும் அமைச்சர்கள் சின்னச்சின்ன வேலைகளுக்குக் கட்சி நிர்வாகிகளிடமே பணம் வசூலிப்பதாகப் புலம்பல் இருக்கிறது. ‘‘இவர்கள் எங்களையே உதாசீனப் படுத்துகிறார்கள். இவர்களுக்கு முதலில் கல்தா கொடுங்கள்’’ என்று சில எம்.எல்.ஏ-க்கள் கோரிக்கை வைக்கிறார்கள். எடப்பாடி இதில் திகைத்துப் போய் என்ன செய்வது என்று தவிக்கிறாராம்.

தினகரனின் முதல் அஜெண்டா

தினகரனுக்கு ஆதரவாக உள்ள செந்தில் பாலாஜியும், தோப்பு வெங்கடாசலமும், ஏற்கெனவே எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியவர்கள். அமைச்சர் பதவிவேண்டும் என்ற ஒற்றை அஜெண்டாவோடு தங்கள் ஆதரவு எம்.எல்.ஏ-க்களை வைத்து ஆட்டம் காட்டப் பார்த்தவர்கள். இப்போது தினகரன் அணிக்குச் சென்றிருந்தாலும், இவர்களுக்கு ஒரே இலக்கு, அமைச்சர் பதவிதான். இதே போல் அமைச்சர் கனவில் இருந்த பலரும், ‘தினகரன் நமக்குத் திருப்பம் தருவார்’ என்ற ஒரே நம்பிக்கையோடு அடையாறு வீட்டில் அடைக்கலம் தேடிச் செல்கிறார்கள். ‘‘ஆட்சியைக் கவிழ்க்க வேண்டும் என்ற எண்ணம் துளிகூட எனக்குக் கிடையாது” எனத் தன்னைச் சந்தித்த    எம்.எல்.ஏ-க்களிடம் ஓப்பனாகச் சொல்லி வருகிறார் தினகரன். ஆனாலும் ஆட்சி தன் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்ற முடிவில் உறுதியாக உள்ளார் தினகரன். தற்போது 31 அமைச்சர்கள் தமிழக அமைச்சரவையில் இருக்கிறார்கள். இன்னும் நான்கு பேரை புதியதாக நியமிக்க முடியும். அதையே தினகரன் தரப்பு குறி வைக்கிறது. ஆனால், ‘இனி யாரையும் அமைச்சராக்கக் கூடாது’ என்ற முடிவில் தெளிவாக இருக்கிறார் எடப்பாடி.

எதற்கும் தயாராக எடப்பாடி!

எந்தத் தினகரனின் தயவினால் மூன்று மாதங்களுக்கு முன்பு முதல்வர் பதவியைப் பெற்றாரோ, அந்தத் தினகரனுக்கு எதிராகவே இப்போது அரசியல் செய்துவருகிறார் எடப்பாடி. மூன்று அணிகளாக அ.தி.மு.க பிரிந்து நின்றாலும், எடப்பாடி பக்கம்தான் 91 எம்.எல்.ஏ-க்கள் இருக்கிறார்கள். எடப்பாடியின் இந்த வலிமைக்குப் பின்னால் அமைச்சர்கள் வேலுமணியும், தங்கமணியும் உள்ளார்கள் என்ற கோபம் தினகரன் தரப்பிற்கு இன்னும் உள்ளது. இவர்களோடு ஜெயக்குமாரும் சேர்ந்து குடைச்சல் கொடுத்து வருவது தினகரனை எரிச்சலடையச் செய்துள்ளது. “கட்சியில் இருந்து என்னை யாரும் நீக்க முடியாது” என்று தினகரன் பேட்டி கொடுத்த அதேநேரத்தில், ‘கோட்டையில் எல்லா அமைச்சர்களின் அறையிலும் முதல்வர் படத்தை மாட்டவேண்டும்’ என்று சைலன்ட் உத்தரவைப் பிறப்பித்துக் கொண்டிருந்தார் எடப்பாடி.

பிரதமர் மோடியைச் சமீபத்தில் சந்தித்த பிறகு தெம்புடனே இருக்கிறார் எடப்பாடி. ஆட்சிக்கு எந்தப் பாதிப்பும் வராது என்ற அதீத நம்பிக்கையில் உள்ளார். இந்தத் தெம்புக்குப் பின்னணியாக இருப்பவர்கள், இரண்டு பேர். அமைச்சர் வேலுமணி உபயத்தில் கோவை சாமியார் ஒருவரும், அமைச்சர் தங்கமணி உபயத்தில் பிரபல டெல்லி தொழிலதிபர் ஒருவரும் பிரதமர் அலுவலகத்தில் பேசி இருக்கிறார்கள். இந்தப் பேச்சுவார்த்தை களுக்குப் பிறகு மோடி குளிர்ந்துவிட்டதாகப் பேச்சு. அதனால்தான், தினகரனுக்கு நேரடியாக பதில் சொல்லாமல் மௌனம் காத்து வருகிறார் எடப்பாடி. பன்னீருக்குத் தந்திருக்கும் அதே அரவணைப்பைத் தனக்கும் டெல்லி தந்திருப்பதாக நம்புகிறார் எடப்பாடி.

திரைமறைவில் திவாகரன்!

தினகரனின் ஒவ்வொரு அசைவையும் உன்னிப்பாகக் கவனிக்கிறது மத்திய அரசு. தினகரனின் அதிரடியால் இதுநாள் வரை சண்டைக்கோழியாக நிற்கும் எடப்பாடி அணியும், ஓ.பி.எஸ் அணியும் இணைந்து மிரட்டுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்குப் பின்னணியில் நடராசன் இருக்க, இணைக்கும் பாலமாக திவாகரன் களத்தில் இறங்கியிருக்கிறார். ‘இரண்டு அணிகளும் ஒன்று சேருங்கள் என்று இந்தியப் பிரதமரே சொல்லும் அளவுக்கு அ.தி.மு.க-வின் குடும்பச் சண்டை அகிலத்துக்கே தெரிந்துள்ளது. இது பொதுமக்கள் மத்தியில் அருவருப்பை ஏற்படுத்தியுள்ளது. அ.தி.மு.க  ஒன்று சேர வேண்டியது காலத்தின் கட்டாயம்’ என ம.நடராசன் அறிக்கை விட்டிருப்பதை அனைத்துத் தரப்பினரும் உன்னிப்பாகக் கவனிக்கிறார்கள். பொங்கல் விழா சர்ச்சை பேச்சுக்குப் பிறகு நடராசன் வெளிப்படையாக ஒரே ஒருமுறைதான் பேட்டி கொடுத்தார். அதன்பிறகு அவர் இப்போது அறிக்கை விட்டு இருக்கிறார். திவாகரனின் பேச்சுவார்த்தைக்கு உதவி செய்யவே இந்த அறிக்கையை அவர் வெளியிட்டதாகக் கருதப்படுகிறது.

‘தினகரனை ஒதுக்கி வைத்துவிட்டு, எடப்பாடி அணியையும் பன்னீர் அணியையும் இணைத்து, அ.தி.மு.க-வைத் தங்கள் குடும்பத்தின் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும்’ எனத் திவாகரன் நம்புகிறார். இந்த முயற்சிக்கு நடராசனின் ஆதரவும் கிடைத்துவிட்டது. சசிகலாவும் இதற்கு ஒப்புக்கொள்வார் என்று நம்புகிறார் திவாகரன். ‘‘உங்களுக்கு என்ன வேண்டும் என்று சொல்லுங்கள். நான் பேசி எல்லாவற்றையும் சரி செய்கிறேன்’’ எனப் பன்னீரிடம் பேசி வாக்குறுதி கொடுத்திருக்கிறாராம் திவாகரன். அதே கையோடு எடப்பாடியிடமும் அவர் பேசி இருப்பதாகத் தகவல்.

தினகரன் கைக்கு அதிகாரம் போய்விடக்கூடாது என்பதில் குடும்ப உறவுகளே தீர்மானமாக நிற்கிறார்கள்.

பவ்யம் காட்டும் பன்னீர்!

எடப்பாடி அரசோடு கிட்டத்தட்ட இணைந்து போகவேண்டிய நிலைக்குப் பன்னீர் அணியினர் வந்துவிட்டார்கள். பன்னீரோடு சேர்த்து 12 எம்.எல்.ஏ-க்கள் மட்டுமே அவர் பக்கம் இருக்கிறார்கள். தன் பக்கம் இருக்கும் எம்.எல்.ஏ-க்களைத் தக்கவைப்பதே அவருக்கு இப்போது கடினமாகிவருகிறது. திகார் சிறையில் இருந்து வெளியே வந்த தினகரன் மீண்டும் கட்சிப் பணியாற்றப் போவதாக அறிவித்ததும், அதற்கு எதிராக அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்தார். இந்தக் கருத்து மோதலைத் தள்ளி நின்றே ரசித்தவர் பன்னீர்செல்வம். இருவர் இடையே ஏற்படும் மோதல் தனக்குச் சாதகமாக இருக்கும் என்று கணக்கு போட்டுக் காய்நகர்த்தினார்.

அதனால், ‘‘எடப்பாடி ஆட்சி கவிழ்வதற்கு நாங்கள் காரணமாக இருக்கமாட்டோம்” என்று அறிக்கை விட்டார். ஆட்சிக் கவிழ்ப்புக்குத் தினகரன் முயன்றால், அரசைக் காப்பாற்றவும் பன்னீர் அணி தயாராக இருக்கிறது. முதல்வர், பொதுச்செயலாளர் பதவிகள் என ஆரம்பத்தில் காட்டிய கெடுபிடிகளை தளர்த்தி வருகிறது பன்னீர் அணி. இரண்டு அணிகளின் முடிவுகளைப் பொறுத்தே தனது முடிவினைப் பன்னீர்செல்வம் எடுக்க உள்ளார். ‘இனியும் தனியாக ஆவர்த்தனம் செய்வது நல்லதல்ல’ என்ற முடிவுக்குப் பன்னீர் அணியினர் வந்துவிட்டனர்.

கட்டுப்பாட்டுக்குப் பேர் போன அ.தி.மு.க-வில் இப்போது  அட்ராசிட்டி!

– நமது நிருபர்கள்

http://www.vikatan.com/juniorvikatan/2017-jun-14/politics/131893-admk-interparty-confusion-135-mlas.html?artfrm=mag_editor_choice

About editor 3099 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply