இலங்கையில் தமிழர் பகுதியில் சிங்களர்கள் அத்துமீறி குடியேற்றமா?
பிபிசி கள ஆய்வு
7 ஏப்ரல் 2024
இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மயிலத்தமடு மற்றும் மாதவணை ஆகிய இடங்களில் தமிழர்கள் பாரம்பரியமாக கால்நடை மேய்த்து வந்த மேய்ச்சல் நிலத்தில் அத்துமீறிக் குடியேறியுள்ள சிங்கள விவசாயிகள், தங்கள் மாடுகளை சித்ரவதை செய்து கொன்று வருவதாகத் தமிழ் பண்ணையாளர்கள் (கால்நடை வளர்ப்பாளர்கள்) குற்றம் சாட்டுகின்றனர்.
இப்பிரச்னைக்கு உரிய தீர்வு வேண்டி அவர்கள், கடந்த 200 நாட்களாக இரவு பகலாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். மட்டக்களப்பு – சித்தாண்டி பகுதியில் கூடாரம் அமைத்துள்ள தமிழ் பண்ணையாளர்கள், இந்தப் போராட்டத்தை சுழற்சி முறையில் முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும், இப்பிரச்னையில் தமக்கான தீர்வு கிடைக்கப் பெறும் வரை போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை என போராட்டக்காரர்கள் கூறுகின்றனர்.
இந்த விஷயத்தில் என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள பிபிசி தமிழ் நேரடியாக அந்த இடத்திற்குச் சென்றது.
என்ன பிரச்னை?
மட்டக்களப்பு மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களின் எல்லை பகுதியாக மயிலத்தமடு மற்றும் மாதவணை பிரதேசங்கள் காணப்படுகின்றன. இப்பகுதிகள் வனப் பகுதிக்கு மத்தியில் அமைந்துள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தின் சில பகுதிகளிலுள்ள கால்நடைகளை வளர்க்கும் பாரம்பரிய இடமாக இப்பகுதிகள் இருக்கின்றன.
இந்த இரண்டு பகுதிகளிலும் ஆயிரக்கணக்கான ஏக்கர் மேய்ச்சல் நிலம் காணப்படுவதால், மட்டக்களப்பு மாவட்டத்தின் பெரும்பாலான பண்ணையாளர்கள் இந்தப் பகுதிகளிலேயே தமது கால்நடைகளை (மாடுகள் மற்றும் ஆடுகள்) வளர்த்து வருகின்றனர். வேளாண்மையின் போது, பாரம்பரியமாக ஆடு, மாடுகளை மேச்சல்நிலப் பகுதிக்கு அழைத்துச் செல்கின்றனர்.
சுமார் மூன்று லட்சத்திற்கும் அதிகமான மாடுகள் மற்றும் ஆடுகள் இந்தப் பகுதிகளில் வளர்க்கப்பட்டு வருவதாக பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
200 நாட்களைக் கடந்த போராட்டம்
இந்நிலையில், அத்துமீறிய சிங்களக் குடியேற்றை எதிர்த்தும், கால்நடை பாதுகாப்பு, பூர்வீக நில உரிமை உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தும் மட்டக்களப்பு பண்ணையாளர்கள் சுழற்சி முறை போராட்டம் ஒன்றை நடத்தி வருகின்றனர். மட்டக்களப்பு – சித்தாண்டி பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது.
கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி, இந்தப் போராட்டத்தின் 200வது நாள் கடைபிடிக்கப்பட்டது. ஆனால் இன்னும் தமது கோரிக்கைகளுக்கு அரசாங்கம் இன்று வரை செவிசாய்க்கவில்லை என போராட்டக்காரர்கள் கூறுகின்றனர்.
இந்தப் போராட்டத்தில் பண்ணையாளர்கள் மாத்திரமன்றி, சமய தலைவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருக்கின்றனர்.
இப்பிரச்னையால் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பைச் சேர்ந்த தர்மலிங்கம் கண்ணம்மா பிபிசி தமிழிடம் தங்கள் பாட்டன், பூட்டி காலத்திலிருந்து 200 வருடங்களுக்கும் மேலாக அப்பகுதியில் வாழ்ந்து வருவதாகத் தெரிவித்தார்.
“கடந்த 200 நாட்கள் போராட்டத்தில் நாங்களும் பிள்ளைகளை இந்த வெயிலில் கூட்டி வந்து போராடி வருகின்றோம். ராணுவம், போலீஸ் எல்லாம் வந்து தீர்த்து தருகின்றோம் எனச் சொல்கின்றார்கள். ஆனால் இன்னும் முடிவு வரவில்லை.
ஆடு மாடுகளை கம்பியில் கொல்கிறார்கள். மாடுகளை கட்டுவதற்கு மேச்சல் தரையை எங்களுக்குத் தர வேண்டும். அதற்காகத்தான் போராடிக் கொண்டிருக்கின்றோம்,” என தர்மலிங்கம் கண்ணம்மா கூறினார்.
தனது மாடுகளும் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அரசாங்கம் இதுவரை தனக்கு எந்தவித நஷ்டஈடும் வழங்கவில்லை என பண்ணையாளர் தெய்வேந்திரன் தெரிவிக்கின்றார்.
“எங்களுடைய நிறைய மாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. நிறைய மாடுகளை வெட்டி விட்டார்கள். என்னுடைய 10 மாடுகள் வரை வெட்டுப்பட்டுள்ளன. கடந்த 7-8 மாதங்களாக தொழில் இல்லாமல் இருக்கின்றோம்.
அரசாங்கம் எந்தவிதமான நிவாரணமும் தரவில்லை. பண்ணையாளர்கள் அமைதிப் போராட்டத்தை நடத்தி வருகின்றோம். போலீசில் முறைப்பாடு செய்துள்ளோம்,” என தெய்வேந்திரன் கூறுகிறார்.
‘இது அரசு நடத்தும் நிழல் யுத்தம்’
தமிழ் மக்கள் பொருளாதாரத்தை இழந்து இந்த இடத்தை விட்டு போகக்கூடிய ஒரு நிழல் யுத்தத்தை இந்த அரசு நடத்தி வருவதாகச் சமூகச் செயற்பாட்டாளர் நாகேஸ்வரன் மிரேக்கா பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
வடக்கு-கிழக்கு பகுதிகளைப் பொருத்த வரையில் தமிழ் மக்கள் பல அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்றார்கள், என்று அவர் தெரிவித்தார்.
“அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்த வரையில் தமிழ் மக்கள்தான் பெரும்பான்மையாக இருக்கிறார்கள். மயிலத்தமடு மற்றும் மாதவணை பிரச்னை என்பது இன்று-நேற்று நடக்கும் பிரச்னை அல்ல. இது பல ஆண்டுகளாக இந்த மக்கள் எதிர்கொண்டிருக்கின்ற பிரச்னை,” என்றார்.
“கடந்த 9 மாதங்களாக சுமர் 1,750 மாடுகள் இறந்திருக்கின்றன. வாய்க்கு வெடி வைத்தும், மின்சார வேலிகளில் தாக்கப்பட்டும், ஆயுதங்களால் வெட்டியும் இந்த மாடுகள் கொலை செய்யப்பட்டிருக்கின்றன. மயிலத்தமடு பண்ணையாளர்களுக்கு கோடிக்கணக்கான ரூபாய் வருமானத்தை இழந்துள்ளனர்,” என்றார் அவர்.
“வாழ்வாதார்ததை இழக்கக்கூடிய இடத்திற்கு இவர்கள் தள்ளப்பட்டிருக்கின்றார்கள். பல நீதிமன்ற உத்தரவுகள் இந்த மக்களுக்கு சார்பாக வந்தபோதிலும், நீதிமன்ற உத்தரவுகளைக் கூடப் பொருட்படுத்தப்படுவதில்லை.
இந்தப் பிரச்னைக்கு 200 நாட்கள் போராடியும் இன்று வரை தீர்வு கிடைக்கவில்லை. இந்த மக்கள் காலப்போக்கில் தங்களுடைய பொருளாதாரத்தை இழந்து இந்த இடத்தை விட்டுப் போகக்கூடிய ஒரு நிழல் யுத்தத்தை இந்த அரசு இன்றைக்கு நடத்திக் கொண்டிருக்கின்றது,” என்கிறார் நாகேஸ்வரன் மிரேக்கா.
மேலும், சர்வதேச அழுத்தங்களின் ஊடாகவே இப்பிரச்னைக்கு தீர்வை ஏற்படும் முடியும் தாங்கள் நம்புவதாக அவர் தெரிவித்தார்.
அரசாங்கம் என்ன சொல்கிறது?
இந்தப் பிரச்னை தொடர்பாக அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், பிபிசி தமிழிடம் கருத்து தெரிவித்தார்.
அவர், மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த மேய்ச்சல் நிலப் பிரச்னை இரண்டு தரப்பான விவசாயிகளுக்கு இடையில் காணப்படுகின்றது என்றார்.
“கால்நடை வளர்ப்பவர்களுக்கும், விவசாயம் செய்பவர்களுக்கும் இடையில் இந்தப் பிரச்னை காணப்படுகின்றது. இந்த இரண்டு தரப்பினரும் நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானவர்கள்.
இந்த இடத்தில் விவசாயம் செய்பவர்களுக்கு ஒரு பொறிமுறையை ஏற்படுத்திக் கொடுக்குமாறு ஜனாதிபதி அவர்கள் தெரிவித்திருந்தார். இந்த மாவட்டத்தைப் பூர்வீகமாக கொண்டவர்களுக்கு, பூர்வீகமாகக் கொள்ளாதவர்களுக்கும் ஒரு விவசாய பொறிமுறையைச் செய்யுமாறு ஜனாதிபதி சொல்லியிருக்கின்றார்,” என்றார்.
மேலும் பேசிய அவர், விவசாயம் செபவர்கள் மேய்ச்சல் நிலத்தில் புற்களைப் பயிரிடும் போது, கால்நடைகளுக்கு தேவையான உணவு கிடைக்கும் என்றார். “அதற்கான வேலைத்திட்டங்களை நாங்கள் செய்கின்றோம்,” என்றார்.
போராட்டம் செய்பவர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த அவர், “போராடுபவர்கள் பல கருத்துகளைச் சொல்வார்கள். அந்த இடத்தை ராணுவம் கட்டுப்படுத்தவில்லை. இது இரண்டு மாவட்டங்களுக்கு இடையில் நடக்கும் யுத்தமும் இல்லை.
இது கால்நடை வளர்ப்பாளர்களுக்கும், விவசாயிகளுக்கும் இடையில் உள்ள பிரச்னை. இனஅழிப்புக்கும் இதற்கும் எந்தவித தொடர்பும் இல்லை,” என்றார்.
மேலும், “இது அரசாங்கத்திற்குச் சொந்தமான இடம். இரண்டு குழுக்களுக்கு இடையில் காணப்படும் பிரச்னையாகவே இதைப் பார்க்கிறோம்,” என்றார் ஆளுநர் செந்தில் தொண்டமான்.
இரண்டு தரப்பினரும் ஒரு இணக்கப்பாட்டிற்கு வரும் பட்சத்தில், உடனடியாக இப்பிரச்னைக்குத் தீர்வு காண முடியும் என அவர் தெரிவித்தார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)
https://www.bbc.com/ws/av-embeds/articles/cd180j237rmo/p0hpd6vz/taகாணொளிக் குறிப்பு,தமிழர்களின் மாடுகளை சிங்கள விவசாயிகள் கொல்வதாக குற்றச்சாட்டு, போராட்டம்.
Leave a Reply
You must be logged in to post a comment.