இலங்கையின் சுருக்கமான அரசியலமைப்பு வரலாறு

18 OCT, 2020 |
image

அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் அரசியலமைப்புக்கான 20 ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை பரிசீலனை செய்த நீதிமன்றம் அதன் தீர்மானங்களை ஜனாதிபதிக்கும் பாராளுமன்ற சபாநாயகருக்கும் கடந்த வாரம் அறிவித்து விட்டது. அந்த தீர்மானங்களின் விபரங்கள் குறித்து ஊடகங்களிலும் வெளியிடப்பட்டிருந்தது. சபாநாயகர் பாராளுமன்றத்தில் அறிவிப்பதற்கு முன்னதாக ஊடகங்களுக்கு தீர்மானத்தின் உள்ளடக்கங்கள் அம்பலப்படுத்தப்பட்டது குறித்து சர்ச்சைகளும் கிளம்பியிருக்கின்றன.

உச்ச நீதிமன்றத்தின் தீர்மானங்களை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன எதிர்வரும் 20 ஆம் திகதி சபையில் அறிவிப்பார் என்று ஏற்கனவே கூறப்பட்டிருக்கிறது.

சபாநாயகரின் அறிவிப்பைத் தொடர்ந்து 20 ஆவது திருத்தச் சட்டமூலம் மீதான விவாதம் பாராளுமன்றத்தில் நடத்தப்பட்டு வாக்கெடுப்புக்கு விடப்படும். அதற்கான திகதிகள் பாராளுமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் திர்மானிக்கப்படும். 225 ஆசனங்களைக் கொண்ட பாராளுமன்றத்தில் இப்போது 223 உறுப்பினர்களே இருக்கிறார்கள். ஐக்கிய தேசியக் கட்சியும் அபே ஜனபல கட்சியும் அவற்றுக்குரிய தேசியப்பட்டியல் உறுப்பினர்களை இன்னமும் நியமிக்கவில்லை. அதனால், 20 ஆவது திருத்தச்சட்டமூலத்தை மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றுவதற்கு 150 உறுப்பினர்களின் ஆதரவு அல்ல 149 உறுப்பினர்களின் ஆதரவு போதுமானது என்றும் கூறப்படுகிறது.

இத்தகைய பின்னணியில், 1978 ஆம் ஆண்டு ஜே. ஆர். ஜெயவர்த்தன தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட தற்போதைய அரசியலமைப்பு ஏற்கனவே 19 தடவைகள்  திருத்தம் செய்யப்பட்டிருக்கிறது. புதிய திருத்தச் சட்டமூலம் அந்த அரசியலமைப்புக்கு திருத்தம் கொண்டு வரப்படுகின்ற 20 ஆவது தடவையாக அமைகிறது. இந்நிலையில் இலங்கையில் அரசியலமைப்பு வரலாற்றைப் பின்னோக்கிப் பார்ப்பது பொருத்தமானதாகவிருக்கும். 

அரசியலமைப்பு என்றால் என்ன? 
ஒரு நாட்டின் அரசியலமைப்பு அதன் அரசின் முதன்மையான சட்டமாகக் கருதப்படுகிறது. ஒரு அரசும் அதன் பிரஜைகளும் எவ்வாறு ஆளப்பட வேண்டும் என்பதைக் குறித்துரைக்கும் அடிப்படைக் கோட்பாடுகளை அரசியலமைப்பு உள்ளடக்கியிருக்கிறது. இலங்கை இதுகால வரையில் இரண்டு காலனித்துவ அரசியலமைப்புக்களையும் இரண்டு குடியரசு அரசியலமைப்புக்களையும் கொண்டிருந்தது. 

காலனித்துவ அரசியலமைப்புக்கள்

பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தின் போது அறிமுகப்படுத்தப்பட்ட  முதலாவது அரசியலமைப்பு டொனமூர் அரசியலமைப்பு என்று அழைக்கப்பட்டது. டொனமூர் ஆணைக்குழுவினால் வரையப்பட்ட அந்த அரசியலமைப்பு 1931 ஆம் ஆண்டு தொடக்கம் 1947 ஆம் ஆண்டு வரை நடைமுறையில் இருந்தது. 

இந்த அரசியலமைப்பு வயது வந்தவர்களுக்கான சர்வஜன வாக்குரிமையுடன் பொதுத் தேர்தல் நடத்தப்படுவதற்கு வகை செய்தது. பிரிட்டிஷ் சாம்ராச்சியத்தின் ஆட்சியின் கீழிருந்த ஒரு நாட்டில், ஒரு ஆளுக்கு ஒரு வாக்கு என்ற கோட்பாடு அறிமுகப்படுத்தப்பட்டு உள்நாட்டு விவகாரங்களை கையாளுவதற்கான அதிகாரம் கொடுக்கப்பட்ட முதல் சந்தர்ப்பமாக இது அமைந்தது. சர்வஜன வாக்குரிமை  மூலமாகப் பெண்களும் வாக்களிக்கக் கூடியதாக இருந்தது. தேர்தலொன்றில் பெண்கள் வாக்களித்த முதலாவது ஆசிய நாடு இலங்கையே ஆகும். 

அந்த அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் மூலமாக இலங்கை அரசாங்க சபைக்கு (Ceylon State Council ) சில அதிகாரங்கள் கைமாறப்பட்டன. இந்த அரசாங்க சபையே பின்னைய வருடங்களில் நடைமுறைக்கு வந்த பாராளுமன்றத்திற்கு முன்னோடியாகும்

‘ எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு அரசியலமைப்பு என்பது வெறுமனே ஒரு ஆவணம் என்பதை விட கூடுதல் பெறுமதி கொண்டது. அது ஒரு வரலாற்று ஆவணமாகும். சிந்தனைகள் எவ்வாறு நடைமுறைக்குக் கொண்டு வரப் படுகின்றன என்பதை  அது குறித்து நின்றது. இலங்கை அதன் வரலாற்றில் ஒரு திருப்புமுனையில் நிற்கின்றது என்பதை நான் உணர்ந்தேன். காலனித்துவ ஆட்சியின் கீழிருந்த நாடுகளில் அரசியல் ரீதியில் மிகவும் மேம் பட்டதாக இலங்கையே இருந்தது என்பதில் கேள்விக்கிடமில்லை ” என்று டொனமூர் ஆணைக்குழுவின் நான்கு உறுப்பினர்களில் ஒருவரான ஜெவ்ரி பட்லர், அசோசியேட்டட் நியூஸ்பேப்பர்ஸ் நிறுவனத்தின் (லேக் ஹவுஸ்) தாபகரான டி. ஆர். விஜேவர்தனாவுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். 

ஆனால், அந்த அரசியலமைப்பு குறைபாடுகள் இல்லாததாக இருக்கவில்லை. தேர்தலில் வாக்களிப்பவர்கள் இலங்கை வாசிகளாக இருக்க வேண்டுமென்ற நிபந்தனை அதில் இருந்த காரணத்தினால் இந்தியாவிலிருந்து வந்த தமிழ் தோட்டத் தொழிலாளர்கள் வாக்களிப்பதை அது தடுத்தது. இன ரீதியான பிரதிநிதித்துவம் (Communal Representation ) பிராந்திய ரீதியான பிரதிநிதித்துவத்தினால் (Territorial Representation ) பதிலீடு செய்யப்பட்டது.  இறுதியில் அந்த புதிய அரசியலமைப்பின் கீழான முதல் தேர்தலை தமிழ் அரசியல்வாதிகள் பகிஷ்கரிக்கும் நிலை ஏற்பட்டது (1931 இலங்கை அரசாங்க சபைக்கான தேர்தல் ). 

சோல்பரி அரசியலமைப்பு

1944 ஆம் ஆண்டு சோல்பரி ஆணைக்குழுவின் வழிகாட்டலின் கீழ் இலங்கையில் இரண்டாவது காலனித்துவ அரசியலமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஆணைக்குழு அதற்கு முன்னோடியான டொனமூர் ஆணைக் குழுவை ஒத்ததேயாகும். அந்த அரசியலமைப்பின் வழியாகக் கொண்டு வரப்பட்ட சீர்திருத்தங்கள் இலங்கையை ஒரு டொமினியன் அந்தஸ்துக்குரிய நாடாக மாற்றியது ( தன்னாட்சியுடைய குடியேற்ற நிலை நாடு ). நாளடைவில் 1948 ஆம் ஆண்டு இலங்கைக்கு சுதந்திரம் வழங்கப்பட்டது. 

பிரபல்யமான பிரிட்டிஷ் கல்விமான் சேர் ஐவர் ஜெனிங்ஸின் ஆலோசனையின் கீழ் அமைச்சர்கள் சபைக்கு தலைமை தாங்கிய டி. எஸ். சேனநாயக்க அரசியலமைப்பை வரைந்தார். அந்த வரைபையடுத்து டொனமூர் அரசியலமைப்பு கைவிடப்பட்டது. ஐக்கிய இராச்சியத்தில் நடைமுறையிலிருக்கின்ற வெஸ்ட் மினிஸ்டர் முறையை ஒத்த அரசாங்கம் அமைக்கப்பட்டது. 

அந்த அரசியலமைப்பின் கீழ் சனப் பிரதிநிதிகள் சபை (House of Representatives ) உருவாக்கப்பட்டு உள்நாட்டு விவகாரங்களைக் கையாளும் அதிகாரமும் கொடுக்கப்பட்டது. ஆனால், பாதுகாப்பு மற்றும் வெளிவிவகாரங்கள் தொடர்பான அதிகாரங்கள் இலங்கையின் பிரிட்டிஷ் மகாதேசாதிபதியிடமே பிரத்தியேகமாக இருந்தன. அந்த சோல்பரி அரசியலமைப்பினால் கொண்டு வரப்பட்ட சீர்திருத்தங்களின் கீழ் சனப் பிரதிநிதிகள் சபைக்கான பொறுப்பு ஒரு பிரதமருடன் கூடிய அமைச்சரவையிடம் இருந்தது. 

டொனமூர் அரசியலமைப்பைத் தொடர்ந்து சிறுபான்மை இனத்தவர்களின் பிரதிநிதித்துவம் தொடர்பான பிரதான அக்கறை தேர்தல் தொகுதிகள் மீள வரையப்பட்ட போது சோல்பரி சீர்திருத்தங்கள் ஊடாக கவனிக்கப்பட்டன. அதாவது, முன்னரை விடவும் கூடுதல் ஆசனங்களை சிறுபான்மை இனக்குழுக்கள் பெறுவதை உறுதிப்படுத்தக் கூடியதாக புதிய வழியில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. 

1948 பெப்ரவரி 4 ஆம் திகதி பிரிட்டனிடமிருந்து இலங்கை சுதந்திரம் பெற்ற பின்னரும் கூட நாடு பிரிட்டிஷ் சாம்ராச்சியத்தின் பொதுநலவாயத்திலேயே தொடர்ந்தும் இருந்தது. 1972 மே 16 ஆம் திகதி நாடு உத்தியோகபூர்வமாக சுதந்திரமான ஒரு குடியரசாகப் பிரகடனப்படுத்தப்படும்  வரை அந்த நிலை தொடர்ந்தது. 

முதலாவது குடியரசு அரசியலமைப்பு

முதலாவது குடியரசு அரசியலமைப்பு கொண்டு வரப்பட்ட போது ஆங்கிலத்தில் சிலோன் என்று இருந்த நாடு ஸ்ரீ லங்காவாகப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 1970 பொதுத் தேர்தலில் சிறிமாவோ பண்டாரநாயக்கா தலைமையி லான ஐக்கிய முன்னணி (United Front ) மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற பிறகு சோல்பரி அரசியலமைப்பைப் புதியதொரு மேம்பட்ட அரசியலமைப்பினால் பதிலீடு செய்வதே முன்னுரிமைக்குரிய விடயமாகவிருந்தது. 

ஐக்கிய முன்னணி அதன் தேர்தல் விஞ்ஞாபனத்தில் நாட்டு மக்களுக்கு பின்வருமாறு கூறி அவர்களிடம் ஆணையைக் கேட்டிருந்தது. 

‘ நீங்கள் தெரிவு செய்கின்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏக காலத்தில் பதிய அரசியலமைப்பொன்றை வரைந்து அதனை அங்கீகரித்து செயற்படுத்துவதற்கான ஒரு அரசியல் நிர்ணய சபையாகவும் (Constituent Assembly ) செயற்படுவதற்கு அனுமதி தருமாறு உங்களிடம் நாம் ஆணையைக் கோரி நிற்கின்றோம். புதிய அரசியலமைப்பு சோசலிச ஜனநாயக இலக்குகளை அடைவதற்கு உறுதிபூண்ட சுதந்திரமானதும் சுயாதிபத்தியம் கொண்டதுமான குடியரசாக இலங்கையைப் பிரகடனம் செய்யும். அத்துடன் அது சகல பிரஜைகளினதும் அடிப்படை உரிமைகளையும் சுதந்திரத்தையும் பாதுகாக்கும். ” 

ஆனால், காலனித்துவத்திற்குப் பின்னரான இலங்கையின் அரசியலமைப்புப் படிமுறை வளர்ச்சியில் 1972 குடியரசு அரசியலமைப்பு (The 1972 Republican Constitution in the Postcolonial Constitutional Evolution of Srilanka ) என்ற தலைப்பிலான தனது கட்டுரையில் ராதிகா குமாரசுவாமி , ‘1972 அரசியலமைப்பை நோக்குகையில் அது பல வழிகளில் சுதந்திரத்திற்குப் பிறகு 25 வருடங்கள் கடந்த நிலையில் தேசிய வாதத்தின் ஒரு அடையாளபூர்வமான முனைப்புறுத்தலாக இருந்தது” என்று சுட்டிக்காட்டினார்.

திருமதி பண்டாரநாயக்க பதிய அரசியலமைப்பை வரைவதற்கு பல குழுக்களை நியமித்தார். பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட புதிய அரசியலமைப்பு வரைபு பாராளுமன்றத்தில்  விவாதிக்கப்பட்டு 1972 மே 22 ஆம் திகதி நிறைவேற்றப்பட்டது. அரசியலமைப்புக்கு ஆதரவாக 119 வாக்குகளும் எதிராக 16 வாக்குகளும் கிடைத்தன. அரசியலமைப்பை எதிர்த்த எதிரணிக் கட்சிகளான ஐக்கிய தேசிய கட்சியும், தமிழ் கட்சிகளும் பாராளுமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்தன.

பதிய அரசியலமைப்பினால் கொண்டு வரப்பட்ட சீர்திருத்தங்களின் கீழ் பின்வரும் விடயங்களை முக்கிய அம்சங்களாக அடையாளப்படுத்த முடியும்.

· சிங்களம் அரசின் உத்தியோகபூர்வ மொழியாக அடையாளப்படுத்தப்பட்டது.

· இலங்கை ஒரு ஒற்றiயாட்சி (Unitary State) நாடாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. மத்திய அரசாங்கமே மேன்மையானது. நிர்வாக அலகுகளுக்கு அதிகாரங்கள் ஒப்படைக்கப்படலாம்.

· பௌத்த மதத்திற்கு ஒரு முன்னுரிமை அந்தஸ்து வழங்கப்பட்டது.

· பாராளுமன்றத்தின் பதவிக்காலம் 6 வருடங்களாக்கப்பட்டது.

ஜே. ஆர். ஜெயவர்த்தன யுகம்

1977 ஜுலை பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆசனங்களைக் கைப்பற்றி வெற்றி பெற்றது. சபையில் ஆறில் ஐந்து பெரும்பான்மைகளைக் கொண்டதாக அது விளங்கியது. இலங்கையின் அரசியல் வரலாற்றில் தனியொரு அரசியல் கட்சியினால் சாதிக்கக்கூடிய மிகப்பெரிய வெற்றியாகவும் அது அமைந்தது.

இந்த வெற்றியைப் பயன்படுத்தி ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரான ஜே. ஆர். ஜெயவர்த்தன 1972 அரசியலமைப்பை இல்லாதொழித்தார். அதன் பிரகாரம் 1978 செப்டெம்பர் 7 ஆம் திகதி புதிய அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்தது. அது ஒரு சபையைக் கொண்ட பாராளுமன்றத்தையும் (Unicameral Parliament) சகல அதிகாரங்களுமுடைய நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையையும் அறிமுகப்படுத்தியது.

புதிய சீர்திருத்தங்கள் நிறைவேற்றப்பட்ட பிறகு நாட்டின் முதலாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக ஜெயவர்த்தன  பதவியேற்றார். ரணசிங்க பிரேமதாச பிரதமராக நியமிக்கப்பட்டார்.

புதிய சீர்திருத்தங்கள் 196 உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்றத்திற்கான தேர்தலுக்கு விகிதாசார தேர்தல் பிரதிநிதித்துவ முறையை (Proportional Representation) அறிமுகப்படுத்தியது. ஆனால், பாராளுமன்றத்தின் வகிபாகம் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறை கொண்டு வரப்பட்டதையடுத்து குறைக்கப்பட்டது. பாராளுமன்றம் தெரிவு செய்யப்பட்டு 1 வருடம் கடந்த நிலையில் அதனை ஜனாதிபதியால் கலைக்க முடியும். அரசியலமைப்புக்கு முக்கியமான திருத்தங்கள் கொண்டு வரப்படுவதாக இருந்தால் அவை பாராளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதுடன் சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் மக்களின் அங்கீகாரத்தைப் பெற வேண்டும் என்ற மாற்றங்களை இந்த சீர்திருத்தம் கொண்டு வந்தன.

அதற்குப் பிறகு அரசியலமைப்புக்குப் பல திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. அந்த திருத்தங்கள் வருமாறு,

முதலாவது திருத்தம் ( 20 நவம்பர் 1978 ): மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் விசாரிக்கப்படுகின்ற குறிப்பிட்ட சில வழக்குகள் உச்ச நீதிமன்றத்திற்கு பாரப்படுத்தப்பட முடியும் என்பதே இந்த திருத்தமாகும்.

இரண்டாவது திருத்தம் ( 26 பெப்ரவரி 1979 ) : பாராளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகுவதற்கும் வெளியேற்றப்படுவதற்குமான நடைமுறைகளில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன.

மூன்றாவது திருத்தம் ( 27 ஆகஸ்ட் 1982 ) : ஜனாதிபதி தனது முதலாலது பதவிக்காலத்தை 4 வருடங்களைப்  பூர்த்தி செய்த பிறகு மீண்டும் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு இத்திருத்தம் வகை செய்தது. அதாவது, தனது முதலாவது பதவிக் காலத்தின்  நான்கு வருடங்கள் முடிந்த பிறகு எந்த நேரத்திலும்  ஜனாதிபதி மேலும் ஒரு பதவிக்காலத்திற்கான மக்களின் ஆணையைப் பெறுவதற்கான நோக்கத்தைப் பிரகடனம் செய்யலாம்.

நான்காவது திருத்தம் ( 23 டிசெம்பர் 1982 ) : பாராளுமன்றத்தின் பதவிக்காலத்தை நீடிப்பது தொடர்பானது இந்த திருத்தம். 1982 டிசெம்பர் 12 ஆம் திகதி நடத்தப்பட்ட சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

ஐந்தாவது திருத்தம் ( 25 பெப்ரவரி 1983 ) : பாராளுமன்றத்தில் வெற்றிடமொன்று நிரப்பப்படாத பட்சத்தில் அதற்காக இடைத்தேர்தல் ஒன்றை நடத்துவதற்கு இந்த திருத்தம் ஏற்பாடு செய்தது.

ஆறாவது திருத்தம் ( 8 ஆகஸ்ட் 1983 ) : இலங்கையின் ஆட்புல ஒருமைப்பாடு மீறப்படுவதைத் தடை செய்தல். இலங்கைக்குள் தனி அரசொன்றை உருவாக்குவதற்காக குரல் கொடுப்பதிலிருந்து பிரஜைகளை இந்த திருத்தம் தடுத்தது. 1983  கறுப்பு ஜுலை இன வன்முறைகளைத் தொடர்ந்து இந்த திருத்தம் கொண்டு வரப்பட்டதால் அது கடுமையான கண்டனத்திற்கு உள்ளானது.

ஏழாவது திருத்தம் ( 4 அக்டோபர் 1983 ) : இந்த திருத்தம் மேல் நீதிமன்ற ஆணையாளர்கள் சம்பந்தப்பட்டது. அத்துடன் அது கிளிநொச்சி மாவட்டத்தையும் உருவாக்கியது. இதனுடன் சேர்த்து இலங்கையின் நிர்வாக மாவட்டங்களின் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்தது.

எட்டாவது திருத்தம் ( 6 மார்ச் 1984 ) : ஜனாதிபதி சட்டத்தரணிகளை நியமிப்பதற்கு ஜனாதிபதியின் அதிகாரங்கள் அதிகரிக்கப்பட்டன.

ஒன்பதாவது திருத்தம் ( 24 ஆகஸ்ட் 1984 ) : பாராளுமன்ற உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்படுவதற்கு தகுதியைக் கொண்டிராத அரசாங்க உத்தியோகத்தர்களின் சம்பள மட்டங்களை சீர்செய்வதற்கான திருத்தம்.

பத்தாவது திருத்தம் ( 6 ஆகஸ்ட் 1986 ) : பொதுப்பாதுகாப்பு ஒழுங்கு விதிகளின் கீழ் பிரகடனங்களை செய்வதற்கு பாராளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை தேவை என்ற பிரிவை இரத்து செய்தல்.

பதினோராவது திருத்தம் ( 6 மே 1987 ) : முதற்தடவை செய்யப்படுகின்ற குற்றங்களைக் கையாளுவதற்கு மேல் நீதிமன்றத்தின் நியாயாதிக்க அதிகாரங்களை சீர்திருத்துதல். மேல் நீதிமன்ற அமர்வுகள் தொடர்பில் மாற்றங்கள் செய்யப்பட்டன. மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் அமர்வில் இருக்க வேண்டிய நீதிபதிகளின் குறைந்தபட்ச எண்ணிக்கையைத் திருத்துதல்.

பன்னிரண்டாவது திருத்தம் ( 25 செப்டெம்பர் 1987 ) : இந்த திருத்தம் 1987 செப்டெம்பர் 25 ஆம் திகதி பிரேரிக்கப்பட்ட போதிலும் சட்டம் நுணுக்கம் சார்ந்த தவறுகள் காரணமாக நிறைவேற்றப்படவில்லை.இந்த திருத்தம் தொடர்பான சட்டமூலம் அப்போது எதிர்க்கட்சி உறுப்பினராக இருந்த தினேஷ் குணவர்த்தனவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அன்று நடைமுறையிலிருந்த பாராளுமன்ற நிலையியற்கட்டளையின் 45 (5)  பிரகாரம் அரசியலமைப்பு திருத்தத்தைக் கொண்டு வருவதற்கான சட்டமூலம் ஒன்றிற்கான ஒரு நடைமுறையாக அமைச்சரின் அறிக்கையொன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும். ஆனால், அப்போதைய அரசாங்கம் அத்தகைய அறிக்கையொன்றை வழங்கவில்லை. ஆனால், இந்தத் திருத்தச்சட்டமூலம் பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்படவில்லை என்றபோதிலும் நடைமுறையின் ஒழுங்கற்ற தன்மை காரணமாகத் திருத்தங்களின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை பன்னிரண்டாவது திருத்தம் என்றே கணிக்கப்பட்டது. ஆனால், பன்னிரண்டாவது திருத்தம் என்ற ஒன்று உண்மையில் இல்லை என்றபோதிலும் 17 நவம்பர் 1987 நிறைவேற்றப்பட்ட அடுத்த திருத்தம் பதின்மூன்றாவது திருத்தம் என்று கணிக்கப்பட்டது. அதற்குப் பிறகு ஒரு புனைவுருவான பன்னிரண்டாவது திருத்தம் அரசியலமைப்பு வரலாற்றில் தொடர்ந்து இடம்பெற்று வருகிறது.

பதின்மூன்றாவது திருத்தம் ( 14 நவம்பர் 1987 ) : தமிழையும் ஒரு உத்தியோகபூர்வ மொழியாகவும் ஆங்கிலத்தை இணைப்பு மொழியாகவும் ஆக்குவதற்கும் மாகாணசபைகளை அமைத்து அவற்றிற்கு அதிகாரங்களைப் பரவலாக்கவும் இது வகை செய்தது. மேன்முறையீட்டு நீதிமன்றங்களின் அதிகாரங்களுக்கும் சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தது. பொதுமக்கள் பொதுப்பாதுகாப்பு ஒழுங்கு விதிகளிலும் திருத்தங்கள் செய்யப்பட்டன.

பதினான்காவது திருத்தம் ( 24 மே 1988 ) : சட்டத்திலிருந்து ஜனாதிபதிக்கு இருந்து வந்த விலக்கீடு மேலும் நீடிக்கப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 125 ஆக உயர்த்தப்பட்டது. தேர்தல் மாவட்டங்களை தேர்தல் வலயங்களாகப் பிரிப்பதற்கான எல்லை நிர்ணய ஆணைக்குழு  நியமிக்கப்பட்டது. விகிதாசார பிரதிநிதித்துவ தேர்தல் முறையும் மொத்த வாக்குகளில் 1ஃ8 என்ற வெட்டுப்புள்ளியும் அறிமுகப்படுத்தப்பட்டது. 29 தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்கள் நியமிக்கப்படுவதற்கு வகை செய்யப்பட்டது.

பதினைந்தாவது திருத்தம் ( 17 டிசெம்பர் 1988 ) : தேர்தல் வலயங்களை இல்லாதொழிப்பதற்கு அரசியலமைப்பின் 96 ஏ சரத்து நீக்கப்பட்டது.

பதினாறாவது திருத்தம் ( 17 டிசெம்பர் 1988 ) : சிங்களத்தையும் தமிழையும் நிர்வாக மற்றும் சட்டவாக்க மொழிகளாக மாற்றுவதற்கான ஏற்பாடு.

பதினேழாவது திருத்தம் ( 3 அக்டோபர் 2001 ) : அரசியலமைப்பு பேரவையையும் சுயாதீன ஆணைக்குழுக்களையும் கொண்டு வருவதற்கான ஏற்பாடு. தேர்தல் ஆணைக்குழு, நீதிச்சேவைகள் ஆணைக்குழு, பொலிஸ் ஆணைக்குழு ஆகியவையும் இதில் உள்ளடங்கும். ஜனாதிபதியால் செய்யப்படுகின்ற நியமனங்களுக்கும் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன.

பதினெட்டாவது திருத்தம் ( 8 அக்டோபர் 2010 ) : ஜனாதிபதிக்கு இருந்த இரு பதவிக்கால மட்டுப்பாடு நீக்கப்பட்டது. தேர்தல் ஆணைக்குழு, மனித உரிமைகள் ஆணைக்குழு ஆகியவற்றிற்கும் உறுப்பினர்கள் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் போன்ற சுயாதீனமான பதவிகளை நியமிப்பதற்கும் ஏற்பாடுகள் கொண்டு வரப்பட்டன.

பத்தொன்பதாவது திருத்தம் ( 28 ஏப்ரல் 2015 ) : பதினெட்டாவது திருத்தத்தை இரத்து செய்து சுயாதீன ஆணைக் குழுக்களை நிறுவுவதற்கும் நிறைவேற்று ஜனாதிபதியின் அதிகாரங்களை மட்டுப்படுத்துவதற்கும் கொண்டு வரப்பட்ட பதினேழாவது திருத்தத்தின் ஏற்பாடுகள் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டன. ஜனாதிபதி அரச தலை வராக, அமைச்சரவையின் தலைவராக, பாதுகாப்புப் படைகளின் தலைவராகத் தொடர்;நது செயற்படுகின்ற அதேவேளை, அவரது பதவிக்காலம் 5 வருடங்களாக மட்டுப்படுத்தப்பட்டது.

இருபதாவது திருத்தம் (22 செப்டெம்பர் 2020 ) : பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அன்றைய தினமே முதலாவது வாசிப்பும் நிறைவேறியது. இது பத்தொன்பதாவது திருத்தத்தினால் மட்டுப்படுத்தப்பட்ட நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் அதிகாரங்களை மீண்டும் கொண்டு வருவதற்கும் அதற்கு மேலும் ஜனாதிபதிக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்கி பாராளுமன்றத்தின் அதிகாரங்களைக் குறைக்கும், பத்தொன்பதாவது திருத்தத்தின் பிறகு கணிசமான அதிகாரங்களைக் கொண்டதாக இருந்து வந்த பிரதமர் பதவி மீண்டும் பழைய நிலைமைக்கே செல்லக்கூடிய ஏற்பாடுகளை இந்த திருத்தம் கொண்டிருக்கிறது. 

https://www.virakesari.lk/article/92384

About editor 3000 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply