இலங்கை அனைத்து மக்களுக்கும் உரித்தான நாடு என அரசியலமைப்பு கூறுமா?
சிவலிங்கம் சிவகுமாரன்
16 JUL, 2023

‘அரசியலமைப்புகள் எல்லாம் நல்ல எண்ணங்களுடன் உருவாக்கப்படுவதில்லை’ மனிதர்களின் மொத்த அறிவு என்பது இப்பிரபஞ்சத்தை பொறுத்தவரை ஒரு தூசாகும். எனவே, திருத்தங்களை நாம் செய்ய வேண்டியவர்களாக இருக்கிறோம்” என சிரேஷ்ட சிங்கள ஊடகவியலாளர் ஒருவர் ஒரு சந்தர்ப்பத்தில் தனது ஆங்கில பத்தியில் குறிப்பிட்டிருந்தார்.
குருந்தூர் மலை விவகாரம் தொடர்பில் “இலங்கை பெளத்த சிங்கள நாடு என்பதை முல்லைத்தீவு நீதிபதி மறக்கக்கூடாது” என நாடாளுமன்றத்தில் சரத்வீரசேகர எம்.பி. கூறியிருந்தார். ஊடகசந்திப்பொன்றில் இதற்குமஹிந்தானந்த அழுத்கமகே எம்.பி. கூறிய மாற்றுக் கருத்துகளால் இலங்கை வாழ் தமிழ்ப் பேசும் மக்கள் உச்சி குளிர்ந்து விடவில்லை.
மாறாக, அது வழமையான சமாளிப்பு கருத்து என்பது அரசியல் அறிவுள்ளவர்களுக்குத் தெரியும். மேலும், சரத் வீரசேகர என்ற முன்னாள் கடற்படை அதிகாரியின் வாயில் இனவாத கருத்துக்களைத் தவிர வேறு எதுவும் வந்ததில்லையென்பதையும் இலங்கை மக்கள் அறிவர்.
அவர் இனவாத கருத்துக்களை பேசும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரே ஒழிய, அரசியல் விவகாரங்கள் பற்றிய எந்த அடிப்படை அறிவும் இல்லாதவர். அவரது பேச்சையும் கருத்துக்களையும் சிங்கள ஊடகங்களே பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை.
சரத் வீரசேகரவின் கருத்தை சட்டத்தரணிகள் சங்கம் வன்மையாக கண்டித்திருந்தது. இது நீதித்துறைக்கு விடுக்கப்பட்ட சவால் என வடபகுதியில் உள்ள பல நீதிமன்ற சட்டத்தரணிகள் தமது எதிர்ப்பை போராட்டங்கள் மூலம் வெளிப்படுத்தியிருந்தனர்.
இலங்கை என்ற நாடு அனைத்து மக்களுக்கும் உரியது என்றும் அனைவரும் ஒற்றுமையாக வாழ பழகிக்கொள்ள வேண்டும் என்று மாத்திரம் மஹிந்தானந்த எம்.பி கூறவில்லை. மாறாக ஒவ்வொரு எம்.பியும் வெவ்வோறு நிலைப்பாட்டை கொண்டிருப்பர் என்றும் அவர்களில் ஒரு சிலர் சிங்கள மக்களை மாத்திரம் பிரதிநிதித்துவப்படுத்தி அவர்களின் வாக்குகளைப் பெற்றுக்கொள்வர் என்றும் வேறு சிலர் அடிப்படைவாதத்துக்கு சார்பான கருத்துக்களை கூறி அவர்களின் வாக்குகளைப் பெற்றுக்கொள்வர் என்றும் கூறியுள்ளார்.
ஆனால், இலங்கையின் அரசியலமைப்பில் என்ன கூறப்பட்டுள்ளது என்பதை மஹிந்தானந்த அறியாதவரால்லர். ‘தனிமனித வழிபாட்டு அரசியலமைப்பு’ என வர்ணிக்கப்படும் நாட்டின் இரண்டாவது அரசியலமைப்பை ஜே.ஆர்.ஜெயவர்தன 1978 ஆம் ஆண்டு கொண்டு வந்த போது பெளத்த மதமானது ஆள் பலத்தின் முதன்மை மத மாக விளங்க வேண்டுமென அத்தியாயம் 11 இல் வரையறை செய்தார். அதற்கு முன்பதாக சிறிமாவோ அரசால் கொண்டு வரப்பட்ட முதலாவது அரசியலமைப்பில் (1972) சிங்களம் மாத்திரமே அரச கரும மொழி என்று குறிப்பிடப்பட்டிருந்ததால் அதன் பிறகு பெளத்த மதத்துக்கு அரச அந்தஸ்து வழங்கப்பட்டது.
இலங்கையின் முதலாம் ,இரண்டாம் அரசியலமைப்புகள் நாட்டின் அனைத்து மக்களினதும் அபிலாஷைகள், எண்ணங்களை பெற்று உருவாக்கப்படவில்லை என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். நல்லாட்சி காலத்தில் புதிய அரசியலமைப்புப் பற்றி அதிகம் பேசப்பட்டது.
2016 ஆம் ஆண்டு அந்நேரம் பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்க, கொழும்பு கொலன்னா விகாரையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பேசும் போது, புதிய அரசியலமைப்பு தொடர்பில் நாடாளுமன்றில் உள்ள அனைத்து கட்சிகளும், பெளத்தத்துக்கு முன்னுரிமை வழங்கும் விடயத்தில் தமது சம்மதத்தை தெரிவித்துள்ளன, ஆகையால் பெளத்த மதத்தை பாதுகாப்பதிலோ அல்லது அதை முன்னுரிமை படுத்துவதிலோ இங்கு எந்த பிரச்சினைகளும் இல்லை எனத் தெரிவித்திருந்தார்.
எனவே, இந்த நாடு அனைவருக்கும் சொந்தம் என்ற கூற்றுகள் சிங்கள தேசிய தலைவர்களினதும் அரசியல்வாதிகளினதும் உதட்டளவு சமாளிப்புகளே ஒழிய அது ஆழ்மனதிலிருந்தோ அல்லது இதய சுத்தியுடனோ கூறப்படும் வார்த்தைகள் இல்லை.
அந்த விடயத்தை எக்காரணம் கொண்டும் அரசியலமைப்பில் சேர்ப்பதற்கோ அல்லது ஏற்கனவே இருக்கும் பெளத்த மதத்துக்கு முன்னுரிமை என்ற சரத்தை நீக்குவதற்கோ எந்த சிங்களத் தலைவர்களும் முன்வர மாட்டார்கள். பெளத்தர்களை மாத்திரம் திருப்திப்படுத்தும் ஒரு அரசியலமைப்பை இந்த நாடு கொண்டிருக்கின்றது. இதில் திருத்தங்களை கொண்டு வருவதென்பது சவாலான விடயமாகும்.
அது பற்றி கதைத்தால், அவர் யாராக இருந்தாலும் தேசத்துரோகியாகவும் பெளத்த சாசனத்துக்கு எதிரியாகவும் கணிக்கப்படுவார்.
சரத் வீரசேகர மற்றும் மஹிந்தானந்த இருவரும் மொட்டு கட்சியை பிரதிநிதித்துவம் செய்யும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் . ஆனால் வெவ்வேறு பிரதேசத்தை சேர்ந்தவர்கள். மஹிந்தானந்த தனது உரையில் சரத் வீரசேகர ஒரு அடிப்படைவாதி என்பதை சொல்லாமல் சொன்னார். இந்த நாடு அனைத்து மக்களுக்கும் உரியது என்று கூறும் மஹிந்தானந்தவுக்கு தமிழ் மக்களின் வாக்குகள் அவசியம். அவரது தொகுதி நாவலப்பிட்டியாகும். அது கண்டி மாவட்டத்துக்குரியது.
நாவலப்பிட்டியை அண்டியிருக்கும் பல தேயிலைத்தோட்டப் பிரதேசங்கள் மஹிந்தானந்தவின் கட்டுப்பாட்டிலேயே உள்ளன. குறித்த வாக்குகள் அனைத்தும் அவருக்கே உரித்தானவை. ஒரு காலத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் செல்வாக்கிலிருந்த அப்பிரதேசத்தை மஹிந்தானந்த தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கு அவர் தமிழ் மக்களையே குறிவைத்தார்.
பிரதேச தமிழ் மக்களுக்கு தேவையானதை அவர் தாராளமாக செய்து கொடுத்தார். குப்பை நகரம் என்று அழைக்கப்பட்ட நாவலப்பிட்டியை சீரமைத்தார். வைத்தியசாலையை மாற்றியமைத்து சிறந்த சுகாதார சேவைகளை வழங்கும் நிறுவனமாக மாற்றினார்.
நாவலப்பிட்டியிலிருந்து தோட்டப்பகுதிகளுக்கு செல்லும் பாதைகளை திருத்தினார். இவை அனைத்தையும் செய்து முடித்த அவர் அப்பகுதி தமிழ் மக்களிடம் ஒரு கேள்வியை முன்வைத்தார். ‘தேவையான அனைத்தையும் நான் செய்து கொடுத்திருக்கிறேன் பிறகு எதற்கு இங்கு வேறு ஒரு அரசியல்வாதி’?
இ.தொ.காவின் அசைக்க முடியாத ஆளுமையான அமரர் ஆறுமுகன் தொண்டமானால் நாவலப்பிட்டி நகரில் கால் வைக்க முடியாமல் போனதற்கு இது தான் காரணம். தேர்தல் காலங்களில் தமிழ்க் கட்சிகளின் எந்த பிரசாரங்களும் அங்கு நடத்த முடியாத அளவிற்கு மஹிந்தானந்தவின் ஆதரவாளர்கள் அங்கு செல்வாக்கு பெற்றிருந்தனர். உள்ளூராட்சி சபைகளில் மாத்திரம் தமிழ் உறுப்பினர்களைக் கொண்டிருக்கக் கூடிய நாவலப்பிட்டிய தொகுதியில், மஹிந்தானந்த ஏறத்தாழ நிரந்தர நாடாளுமன்ற உறுப்பினராகவே விளங்குகிறார்.
சரத் வீரசேகரவின் கூற்றுக்கு மாற்று கருத்துக்களை அவர் கூறியதன் பின்னணி அது தான்.
சரத் வீரசேகரவின் கூற்று நீதித்துறைக்கே அச்சுறுத்தலானது என்பது பொதுவான கருத்தாகும். ஆனால், அது குறித்து நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக் ஷவும் ஒன்றும் கூறவில்லை. அவரும் பெளத்த தர்மத்துக்கு எதிராக எதுவும் பேசாத ஒருவர். நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்குள்ள வரப்பிரசாதங்களை எல்லை மீறி பயன்படுத்துதலுக்கு சரத் வீரசேகர ஒரு உதாரணம். இந்த நாட்டில் சட்டம் அனைத்து இன மக்களுக்கும் பொதுவானதா இல்லையா என்ற சந்தேகம் இப்போது எழுந்துள்ளது.
பெளத்த சிங்களவராக இருந்தால் அவருக்கு சட்டம் சற்று தளர்வான போக்கோடு செயற்பட வேண்டுமா? தமிழர் பிரதேசங்களில் உள்ள உயரிய நீதிமன்றங்கள் கூட அவர்களுக்கு தலைவணங்க வேண்டுமா என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளன.
சரத் வீரசேகரவின் உரை முற்று முழுதான இனவெறியின் உச்சம். நாட்டை வழிநடத்தும், உயரிய சட்டங்களை இயற்றும் ஒரு சபையில் அதை அச்சமின்றி வெளிப்படுத்தியுள்ளார்.
அவர் உரையாற்றிய சந்தர்ப்பத்தில் நாடாளுமன்றில் இருந்த எவரும் அதை எதிர்த்து ஒரு வார்த்தை தானும் பேசவில்லை. மஹிந்தானந்தவும் கூட ஊடகவியலாளர் மாநாட்டில் தன்னிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கும் போதே சரத் வீரசேகரவின் கூற்றை நிராகரித்திருந்தார்.
அரசியல்வாதிகள் மாத்திரமின்றி இந்நாட்டில் படித்த சிங்கள இளைஞர், யுவதிகளும் கூட சமூக வலைதளங்களில் பதிவிடும் போது இலங்கை பெளத்த நாடு என்ற விடயத்தில் உறுதியாக இருக்கின்றனர். ‘எல்லோரும் ஒரு நாட்டு மக்கள்’ என்ற அரசியல்வாதிகளின் கூற்று சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்காக வெளிப்படும் உயிரில்லாத வெற்று வசனம் மட்டுமே!
Leave a Reply
You must be logged in to post a comment.