என்னதான் இல்லை எங்கள் தமிழில்!
கனடா தமிழர் தகவல் இதழில் இன்று (5.3.2024) வெளியான எனது கட்டுரை இது!
என்னதான் இல்லை எங்கள் தமிழில்!
சங்க இலக்கியத்தின் எட்டுத் தொகை நூல்களுள் பரிபாடலும் ஒன்று அதிலே காணப்படும் ஒரு பாடலுக்கு நாம் செல்லும் முன்பு சங்க மக்களின் அகம் புறம் என்ற ஒழுக்க வாழ்வியலைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
வெளியே சொல்லக் கூடிய ஒரு மனிதனின் வீர உணர்வு கொடை மனப்பான்மை போன்ற செய்திகள் புறம் என்றும் யாருக்கும் சொல்ல முடியாமல் நடந்ததை அகத்திலே மட்டும் இரகசியமாகப் பாதுகாக்க வேண்டிய காம நிகழ்வுகளை அகம் என்றும் நாம் எளிமையாகக் கூறிக் கொள்ளலாம்.
அந்த அக ஒழுக்கத்தையும் சங்க இலக்கியம் கற்பியல் களவியல் என்று இரண்டாகப் பிரித்து வைத்துக் கொண்டது. வயது வந்த ஆடவனும் ஒரு பெண்ணும் பெற்றோர் முதல் பிறர் யாரும் அறியாமல் தமக்குள் காதல் கொண்டு யாரும் காணாத இடங்களில் சந்தித்து உடல் சுகத்தை அனுபவித்து வருவது களவு எனப்பட்டது. அது சில வேளைகளில் நண்பர்களுக்கு மட்டும் தெரிந்து இருந்தது.
இந்தக் களவு ஒழுக்கத்தில் இருந்து விடுபட்டு ஒரு ஆடவனும் பெண்ணும் ஊரறிய பெற்றார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டு இல்லற வாழ்வில் கற்பு நெறியோடு வாழத் தொடங்குவதைக் கற்பு என்றது சங்க இலக்கியம்.
கற்பெனப் படுவது கரணமொடு புணரக்
கொளற்குரி மரபின் கிழவன் கிழத்தியைக்
கொடைக்குரி மரபினோர் கொடுப்பக் கொள்வதுவே
என்று தொல்காப்பியர் கற்பு நெறிக்கு இலக்கணம் எழுதினார். தொல்காப்பியம் வகுத்த அந்த இலக்கணத்தை மீறாமல் திருவள்ளுவர் கூட தனது காமத்துப் பாலைக் களவியல் கற்பியல் என்று இரண்டாகப் பிரித்துக் கொண்டு குறள் எழுதினார் என்றால் தொல்காப்பியத்தின் வலிமையை நாம் உணர்ந்து கொள்ள முடியும்.
இவ்வாறு வகுக்கப்பட்ட களவு கற்பு ஒழுக்கங்களைக் கருப்பொருளாகக் கொண்டு சங்க இலக்கியங்கள் தோன்றியிருந்தாலும் களவை விடக் கற்பொழுக்கமே மனித வாழ்வுக்குச் சிறந்தது என்ற கருத்தை அதிகமாக வலியுறுத்தின.
ஒருவனிடம் ஒருபெண் காதல் கொண்டதற்காக அப்பெண்ணைத் தாய் வளர்த்த முறை சரியில்லை என்று ஊர்ப் பெண்கள் அந்தத் தாய் தெருவில் போய் வரும்போதெல்லாம் கடைக் கண்ணால் பார்த்து தம் மூக்கின் நுனியிலே விரல் வைத்து வாயை மறைத்துக் கொண்டு கேலி பேசினர் என்றும் கோபத்தோடு வீடு வந்த தாய் எனக்கு இப்படி அவமானத்தைத் தேடித்தரவா நீ பிறந்து இருக்கிறாய் என்று தடி எடுத்து மகளை அடித்ததாக நற்றிணை பேசுகின்றது.
சிலரும் பலரும் கடைக்கண் நோக்கி
மூக்கின் உச்சிச் சுட்டு விரல் சேர்த்தி
மறுகில் பெண்டிர் அம்பல் தூற்ற
சிறு கோல் வலந்தனள் அன்னை அலைப்ப
(நற்றிணை 149)
ஒரு பெண்ணுக்குத் திருமணம் நடக்கின்றது. ஆண் பிள்ளைகளைப் பெற்ற பெரிய வயிற்றை உடைய நான்கு பெண்கள் சூழ்ந்து கொண்டு தலையிலே தண்ணீர் தெளித்து பெண்ணே நீ கற்பு நெறியிலே வழுவாமல் வாழ்ந்து உனது கணவனுக்கும் உங்கள் இருவரையும் பெற்ற பெற்றோருக்கும் நல்லது செய்து வாழ்வாயாக என்று வாழ்த்தியதாக சொல்கின்றது அகநானூறு
புதல்வற் பயந்த திதலை அவ் வயிற்று
வால் இழை மகளிர் நால்வர் கூடி
கற்பினின் வழாஅ நற் பல உதவிப்
பெற்றோற் பெட்கும் பிணையை ஆக என
நீரொடு சொரிந்த ஈர் இதழ் அலரி
(அகநானூறு 86)
சங்க காலத்தில் மட்டுமல்ல இன்று நாம் பார்த்தாலும் இந்தக் கருத்துக்கள் நல்ல செய்திகளாகத்தான் தெரிகின்றன. ஆனால் ஒரு பெண்ணும் ஆணும் திருமணத்துக்கு முன்பே மறைந்து பழகுவதைத் தவிர்த்து பெரியோர்கள் முன்னிலையில் இல்லற வாழ்வில் இணைந்து கற்பு நெறியில் வாழும் வாழ்வை இகழ்ந்து பேசும் சங்க இலக்கியம் ஒன்று உண்டு. அது தான் மேலே சொல்லப்பட்ட பரிபாடல்.
வைகை ஆறு மலையிலே ஊற்றாகத் தோன்றி அருவியாக வளர்ந்து வரும் வழியிலே மரம் செடி கொடிகளை எல்லாம் தழுவி இனபுற்;று இறுதியில் நதியாக நடந்து முடிவில் ஆற்றிலே சென்று கலக்கின்ற காட்சியைப் பார்க்கின்றான் ஒரு சங்க காலத்துப் புலவன். அவன் நலன்துவன் என்கிறார்கள்.
அவன் வைகை ஆற்றைப் பார்த்துக் கேட்டான். என்ன வைகையே பெண்கள் எங்கோ பிறந்து அங்குள்ள ஆடவனோடு களவாக சேர்ந்து பழகித் தினமும் சந்தோசம் அடைந்து வந்த ஒரு உயர்ந்த வாழ்க்கையை உதறி விட்டு அறிவில்லாமல் திருமணம் செய்து கொண்டு கணவன் வீட்டுக்கு செல்லும் இழிவான வாழ்க்கைக்கு ஆசைப் பட்டதைப்போல நீயும் ஒரு இடத்தில் பிறந்து வளர்ந்து அங்குள்ளவற்றைத் தழுவி மகிழ்ந்து விட்டு ஒரு சுகமும் இன்றிக் கடலிலே போய்க் கலங்கின்ற வாழ்வுக்கு ஆசைப்பட்டு விட்டாயா என்றான்.
வயத்தணிந் தேகுநின் யாணரிறு நாள்பெற
மாமயி லன்னார் மறையிற் புணர்மைந்தர்
காமங் களவிட்டுக் கைகொள்கற் புற்றென
மல்லற் புனல்வையை மாமலை விட்டிருத்தல்
இல்லத்து நீதனிச் சேறல் இளிவரல்
(பரிபாடல் – வைகை 11)
அந்தப் புலவன் கேட்ட கேள்வி தானே இன்று மேலைத்தேய மானுடரின் பொதுவான வாழ்வியல் கொள்iயாக இருக்கின்றது. விலங்குகள் போல கூடிப் பிரியும் வாழ்வைத் தானே அவர்கள் உகந்தது என்று கொண்டாடி வாழ்கின்றார்கள். அதை எமது கலாச்சாரம் அடியோடு வெறுக்கின்றது. ஆனால் அதை விரும்பி ஆதரித்த சங்க இலக்கியமும் இருந்திருக்கிறது என்று காட்டுகின்றது பரிபாடல் என்னதான் இல்லை எங்கள் தமிழில்?
இரா.சம்பந்தன்
Leave a Reply
You must be logged in to post a comment.