தமிழரசுக் கட்சியின்புதிய தலைவரினால் சீர் செய்யப்படவுள்ள வாய்ப்புக்கள் மிக அரிதே!

 கடந்த சனவரி 02, 2024 அன்று கனடா உதயன் வார ஏட்டில் மேலேயுள்ள தலைப்பில் எழுதப்பட்ட தலையங்கத்துக்கான எதிர்வினை.

(1) தமிழ் மக்கள் இது வரை அடைந்த துன்பங்களை சிங்கள மக்கள் அனுபவிக்க தொடங்கி விட்டனர். இதனால் அரசு அச்சத்தில் மூழ்கியுள்ளது. இதுவும் தமிழர்களுக்கான பாதை திறக்க வழியாகும். ஆகவே நாம் எல்லோரும் இணைந்து ஒருமிக்க வேண்டிய காலகட்டம் என இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலை வர் சிறிதரன் சிவஞானம் தெரிவித் துள்ளதாக செய்தியொன்று எழுதப்பட்டுள்ளது. அத்துடன் அவர் தெரிவிற்கான வாக்கெடுப்பில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்ட பின்னர் கிளிநொச்சி சென்று அங்கு மாவீரர்களின் நினைவிடங்களுக்குச் சென்று அவர்களுக்கு மரியாதையையும் அஞ்சலியையும் செலுத்தினார். அங்கு அவர் உரையாற்றும் போது “மாவீரர்களின் கனவு நனவாகும் வரை நாம் உழைப்போம்’ என்று தெரிவித்துள்ளார்.

(2) அதற்கு முன்பதாக திருகோணமலையில் அவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட முடிவுகள் வெளியாகிய பின்னர் சுமந்திரன் போன்ற அனைவரோடும் சேர்ந்து  தமிழர்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு உழைப்போம் என அறைகூவல் விடுத்துள்ளார். ஆனால் சுமந்திரன் அவர்களோ மாவீரர்களின் கனவு ‘கனவாகவே போகட்டும்’ என்று சபதம் எடுத்தவர். “விடுதலைப் புலிகளின் பல அரசியல் மற்றும் இராணுவ நகர்வுகளை தவறு என்று இன்னமும் உரத்த குரலில் சொல்லித் திரிகின்றவர். இவ்வாறானவர் எவ்வாறு சிறிதரன் சிவஞானம் அவர்களோடு சேர்ந்து அரசியல் செய்யப்போகின்றார் என்பது எம்மால் புரிந்து கொள்ள முடியாமல் உள்ளது.

(3) தமிரசுக் கட்சி ஆரம்பிக்கப்பெற்று 75 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. தந்தை செல்வா தொடக்கம் சம்பந்தர் வரை தலைமை வகித்த எவராலுமே தமிழரசுக் கட்சியின் அடிப்படைக் கொள்கையான ‘சமஸ்டி’யை வென்றெடுக்க இயல வில்லை. அவர்களது பாராளுமன்ற அரசியல் நகர்ந்து சென்ற காலத்தை விட எமது விடுதலை இயக்கங்களின் நாற்பது வருடத்திற்கும் மேலான ஆயுதப்போராட்டத்தின் போது பாராளுமன்ற உறுப்பினர்களாக விடுதலைப்புலிகளின் ஆசீர்வாதத்தோடு பாராளுமன்ற சென்று அமைதியாக இருந்து விட்டு பின்னர் விடுதலை புலிகள் இயக்கம் மீதான தாக்குதல்கள் 2009ம் ஆண்டு நடத்தப்பட்ட பின்னர் அவர்களின் பாராளுமன்ற அரசியல் எந்தப் பக்கம் சென்றது என்பதற்கு அப்போதை தலைவர்கள் ;அடையாளங்களாக’ இன்னும் விளங்குகின்றார்கள்.

(4) முக்கியமாக தங்களிடம் கேள்விகள் கேட்பதற்கு மக்களைத் தவிர ‘ஒருவரும்” இல்லை என்று எண்ணிக்கொண்டு ரணிலின் அரசாங்கத்தையும் அவரையும் காப்பாற்றத் துணிந்த அரசியல் ‘சாணக்கியத்திற்கு’ பரிசாக தற்போது சாணக்கியன் என்னும் பாராளுமன்ற உறுப்பினர் கிட்டியுள்ளார். அவரது அரசியல் நகர்வு மற்றும் பாராளுமன்ற பிரசன்னம் போன்றவை. தமிழரசுக் கட்சியின் பல அங்கத்தவர்கள் நினைப்பது போன்றே. ‘அரசியல் அறிவு’ மற்றும் ‘ஆங்கிலப் புலமை’ சர்வதே பயணங்களின் அனுபவங்கள்’ என்ற அவர்களது பார்வை மழுங்கியதாகத் தெரியவில்லை.

(5) இவ்வாறு “சுமந்திரன் ஒருவரே சர்வதேசம் வரை சென்று வாதிட்டு பேசக்கூடியவர்’ என்று கூறுகின்றவர்கள். விடுதலைப் புலிகள் தங்களிடத்தில் கொண்டிருந்த மக்கள் ஆதரவும். இராணுவ பலத்தையும் அவர்கள் நடத்திவந்த அரசியல் நகர்வுகளையும் மறந்தும் மறைத்தும் தங்கள் அரசியலை நடத்துவதும் ஏன் என்று எமக்கு புரிந்து கொள்ள முடியவில்லை.

(6) இவ்வாறான ‘மாயைகள்’ நிறைந்த தமிழர்களின் எதிர்கால அரசியலில் தமிழரசுக் கட்சி என்ன பங்கு வகிக்கப் போகின்றது என்பதற்கு அரசியல் அவதானிகளும் காத்திருப்பது போலத் தெரிகின்றது. அவர்களைப் போன்றே நாமும் காத்திருப்போம். எனினும். தமிழரசுக் கட்சியின் புதிய தலைவரான சிறிதரன் சிவஞானம் தனது உரையில் தெரிவித்துள்ள கருத்துக்களுக்கு மதிப்பளித்து நாம் காத்திருக்க வேண்டிய தேவையும் உள்ளது.

(7) அவர் தனது உரையில் “தமிழர்களின் தேசிய அபிலாசைகளை உலகம் புதிய பரிமாணத்துடன் சிந்திக்க முற்பட்டுள்ளது. நாம் இழந்த ஆத்மாக்கள் இப்பொழுது எமக்கு உத்வேகத்தை தருகிறன. நாம் எந்த நோக்கத்துக்காக எமது உறவுகளின் உயிர்களை இழந்தோமோ அந்த நோக்கங்கள் இன்னும் அழிந்து போகவில்லை. சிங்கள மக்களுக்கு முன்பே நமது தமிழினம் இங்கு வாழ்ந்துள்ளது. நாம் இங்கு பல அடையாளங்களுடன் வாழ்ந்திருக்கிறோம்.

(8) ஆகவேதான் இழந்த இறைமையை தான் நாம் மீண்டும் பெறப் போராடுகின்றோம். எமது மொழி  இடம்  கலை பண்பாட்டு இவைகள் எமது தமிழ் தேசிய அடையாளத்தைப் பற்றியுள்ளது. நாம் பல சவால்களை சந்தித்து இன்னும் மனிதர்களாக இருக்கிறோம் என்றால் நாம் அறத்தின் மீதும் தர்மத்தின் மீது பற்றுக் கொண்டவர்களாக இருக்கின்றோம்.இலங்கை அரசுக்கு ஒரு செய்தியை கூறுகின்றோம்’ என்று அவர் தனது உரையில் கூறுகின்றார்.

(9) ஆனால் நாம் ஒன்றை மட்டும் புரிந்து கொள்ள வேண்டும். இலங்கையில் இடம்பெறுவது இனங்களுக்கிடையிலான போட்டி அல்ல. ஆள்கின்றவர்களுக்கும் ஆளப்படுகின்றவர்களும் இடையிலான போட்டி என்பதை எமது புதிய தலை வர் புரிந்து கொள்ள வேண்டும். தமிழரசுக் கட்சியானது பல தடவைகள் ஆள்கினறவர்களாக தமக்குத் தெரிந்த தலைவர்களைக் காப்பாற்றியது. இது கடந்த காலத்திலும் அண்மைக் காலத்திலும் இடம்பெற்ற ;தவறுகள்’ என்பதை  தமிழரசுக் கட்சியினர் புரிந்து கொள்ள வேண்டும். எனவேதான் நாம் குறிப்பிட்டுச் சொல்கின்றோம்.

“தமிழரசுக் கட்சியின் கடந்த அரை நூற்றாண்டுகளுக்கு மேலான தவறுகள் புதிய தலைவரினால் சீர் செய்யப்படவுள்ள வாய்ப்புக்கள் மிக அரிதே!” என்று.

About editor 3045 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply