தமிழ்நாட்டு அரசியலில் ஒரு புது முயற்சி
தமிழ்நாட்டு அரசியலில் ஒரு புது முயற்சியாக தமிழ்நாடு பொதுமேடை – 2024 அமைக்கப்பட்டுள்ளது. பொதுமேடை என்ற சொல் இந்த அமைப்பின் தன்மையைச் சுட்டுவதாகும். 2024 என்பது இந்த ஆண்டில் இன்னும் சில மாதக் காலத்தில் நடக்கவிருக்கும் நாடாளுமன்ற மக்களவைக்கான பொதுத் தேர்தலைக் குறியாகக் கொண்டு இந்த அமைப்பு இயங்கும் என்பதைச் சொல்லாமல் சொல்வதாகும். பொது மேடையின் ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்ற இனிய அன்பர் மேனாள் சென்னை உயர் நீதிமன்ற நீதியர் திரு அரி பரந்தாமன் அவர்களைக் கேட்டுக் கொண்டோம். அவரும் இசைவு தெரிவித்துள்ளார். ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவனாக நான் இருப்பேன்.
பொதுமேடையை அறிமுகம் செய்வதற்கான ஊடகச் சந்திப்பு இன்று நடைபெற்றது. அன்பர் அரி பரந்தாமன் உடல் நலிவுற்றிருப்பதால் ஊடகச் சந்திப்பில் அவரால் கலந்து கொள்ள இயலாத நிலையில் அன்பர்கள் அஜிதா, செந்தில் ஆகியோருடன் நானும் பொதுமேடையை அறிமுகம் செய்து ஊடகர்களின் வினாக்களுக்கும் விடையிறுத்தோம். தமிழ்நாடு பொதுமேடை – 2024 அறிக்கையை ஈண்டு பகிர்கிறேன்:
தமிழ்நாடு பொதுமேடை – 2024
ஏன்? எதற்காக? என்ன அவசரம்?
பாஜகவின் பத்தாண்டுக் கால ஆட்சி இந்நாட்டில் அடிப்படையான பல கேடுகளைச் செய்து வருகிறது. இந்திய நாட்டை ”ஒரே நாடு, ஒரே சந்தை, ஒரே மொழி, ஒரே மதம்” என்ற திசையில் நகர்த்திச் செல்கிறது.
இஸ்லாமியர்களையும் கிறித்தவர்களையும் இரண்டாம் நிலைக் குடிமக்களாக பாவிப்பதும் உயர்சாதி இந்துக்களை மட்டுமே இந்துக்களாக மதிப்பதுமான இந்துத் தேசியத்தை உயர்த்திப் பிடிக்கிறது. இது சிறுபான்மை மக்களுக்கும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமுதாயங்களுக்கும் எதிரான தேசியம் ஆகும்.
மதச்சிறுபான்மையினர் மீதான தாக்குதல்:
பாஜக அரசுகள் மணிப்பூரில் குக்கி பழங்குடி மக்களுக்கும் மெய்த்தி மக்களுக்கும் இடையில் மத மோதலைத் தூண்டி விட்டு இன்று வரை கொடிய வன்முறை ஓயாமல் தொடர்ந்து வருகிறது. இது பாஜகவின் மதவெறி அரசியல் ஏற்படுத்தும் விளைவுகளுக்கான அண்மைய எடுத்துக்காட்டாகும்.
பாஜக அரசு குறிப்பாக இஸ்லாமியர்களுக்கு எதிராக அடுக்கடுக்கான ஒடுக்குமுறைகளைக் கட்டவிழ்த்துள்ளது. வாக்காளர் பட்டியலில் இருந்து இஸ்லாமியர்களை நீக்குவது, இஸ்லாமியர்கள் செறிந்து வாழும் தொகுதிகளைத் தனித் தொகுதிகளாக அறிவிப்பது, இஸ்லாமிய மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகைத் திட்டத்தை நீக்கியது, கர்நாடகாவில் ஹிஜாபுக்கு தடை, இட ஒதுக்கீட்டு உரிமைப் பறிப்பு, பசுப் பாதுகாப்பு என்ற பெயரில் இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்கும்பல் அடித்துக் கொலைகள், குஜராத் படுகொலைகள், முசாபர்நகர் வன்முறை, தில்லி வன்முறை என இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறைச் செயல்களில் ஈடுபட்டோருக்குத் தண்டனையின்மை, மசூதிகளில் குண்டுவைத்த இந்துத்துவச் சதியாளர்களுக்குத் தண்டனையின்மையும் பதவி அங்கீகாரங்களும், பாபர் மசூதியை இடித்த இடத்தில் இன்று இராமர் கோயில், காசி, மதுராவிலும் மசூதியை அகற்றவதற்கு சதித் திட்டம், புதிய மசூதிகள் கட்டுவதற்குத் தடை, பல மாநிலங்களில் மதமாற்றத் தடைச் சட்டம், புல்டோசர் அடக்குமுறை, காஷ்மீரில் 370 செயலிழப்பு, இஸ்லாமியர்களின் குடியுரிமையைக் கேள்விக்குறியாக்கும் குடியுரிமைத் திருத்தச் சட்டங்கள், பொது சிவில் சட்டத்தைக் கொண்டுவரத் துடிப்பது, லவ் ஜிகாத் பொய் வழக்குகள், ஊபா பிரிவுகளின் கீழ் ஆயிரக்கணக்கான இஸ்லாமிய இளைஞர்கள் மீது பொய் வழக்குகள், ஆண்டுக்கணக்கில் பிணை மறுத்து சிறையிலைடைப்பு, இஸ்லாமியர்களை வேட்டையாடும் என்.ஐ.ஏ, இஸ்லாமியச் சிறைவாசிகளின் விடுதலைக்கு முட்டுக்கட்டைப் போட்டு வரும் ஆளுநர் ஆர் என் இரவி; இவற்றை எல்லாம் எதிர்த்துப் போராடும் பாப்புலர் ஃப்ரண்ட் போன்ற இஸ்லாமிய அமைப்புகளைத் தடை செய்வது என இஸ்லாமியர்களுக்கு எதிராக நடைபெற்று வரும் அடக்குமுறைகள் நீண்டு செல்கின்றன.
‘இனி இந்த நாட்டில் எப்படி வாழப் போகிறோம்?’ என்று இஸ்லாமியர்களின் மனதில் கவலையும் அவநம்பிக்கையும் விரக்தியும் ஏமாற்றமும் ஓங்கி நிற்கின்றன. இஸ்லாமியர்களைக் கொல்ல வேண்டும் என இந்துத்துவ வெறியர்கள் மிக வெளிப்படையாகவே அறைகூவல் விடுக்கின்றனர். மோடி – அமித் ஷா தலைமையிலான பாஜக ஆட்சியில் இஸ்லாமியர்கள் இனத் துடைப்புக்கும் இனவழிப்புக்கும் ஆளாகும் நிலைக்குத் தள்ளப்பட்டு வருகின்றனர்.
மாநில உரிமை மீறல்கள்:
2014ஆம் ஆண்டு ‘ஒத்துழைப்புடன் கூடிய கூட்டாட்சி’ என்று சொல்லிக் கொண்டுதான் மோடி ஆட்சிக்கு வந்தார். பாசகவை வழிநடத்தும் ஆர்.எஸ்.எஸ். மொழிவழி மாநில ஏற்பாட்டை ஏற்கவில்லை. ஜம்மு காசுமீரில் ஒன்றாயிருந்த மாநிலத்தை இரண்டாக உடைத்து ஒன்றிய ஆட்சிப்புலமாக மாற்றியது, தில்லி ஒன்றிய ஆட்சிப் புலத்தின் அதிகாரத்தை முடக்கியது, சட்டப் பேரவை இல்லாத ஒன்றிய ஆட்சிப்புலமான இலட்சத் தீவில் மாட்டு இறைச்சியை இடம் விட்டு இடம் கொண்டுசெல்லத் தடை, இரண்டு பிள்ளைகளுக்கு மேல் பெற்றவர்கள் பஞ்சாயத்துத் தேர்தலில் போட்டியிட முடியாது என்ற சட்டத் திருத்தம், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் சட்டப் பேரவை இயற்றிய சட்டங்களுக்கு (நீட் விலக்கு, சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் போன்றவை) ஒப்புதல் தர மறுக்கும் ஆளுநர்களின் அடாவடித்தனம், ஆளுநரின் வழியாக இரட்டையாட்சி நடத்துவது, தேசிய கல்விக் கொள்கை – 2020 திணிப்பு, ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு முறையின் மூலம் மாநில வரியுரிமையைப் பறித்தது, கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில் ICMR, NIV, NIE போன்ற ஆய்வு நிறுவனங்களையும் வளங்களையும் தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஒன்றிய பாசக அரசு, தானும் செயல்படாமல் மாநில அரசுகளையும் செயல்பட விடாமல் தடுத்தது, வெள்ளம், புயல் போன்ற பேரிடரின் போது உதவித் தொகை கொடுக்க மறுப்பது, ஜி.எஸ்.டி. இழப்பீட்டுத் தொகையைக் கொடுக்க மறுப்பது, மாநில அரசுகளின் நிதி ஆதாரங்களைப் பறித்துவிட்டு மோடி வங்கிக்கடன், மோடி வீடு, மோடி மருந்தகம் என ஒன்றிய அரசின் நேரடி திட்டங்களை செயல்படுத்தி மாநில அரசுகளைக் செல்லாக்காசு ஆக்குவது, என்.ஐ.ஏ.-வில் திருத்தம் கொண்டுவந்து மாநிலப் பட்டியலில் இருக்கும் சட்ட ஒழுங்கில் தலையிடுவது, ஒரே நாடு, ஒரே தேர்தல் முறையைக் கொண்டுவருவதன் மூலம் மாநிலங்களின் தனித்துவங்களை ஒழித்துக்கட்ட துடிப்பது, தமிழ்நாட்டை மூன்றாக உடைப்பதற்குத் திட்டமிடுவது என தமிழ்நாட்டுக்கும் எதிர்க்கட்சிகள் ஆளும் ஏனைய மாநிலங்களுக்கும் எதிராக மோடி அரசு செய்துவரும் ஒடுக்குமுறைகள் கொஞ்சநஞ்சமில்லை. இப்போது அரசமைப்புச் சட்டத்தில் இருக்கும் அரைகுறைக் கூட்டாட்சி ஏற்பாட்டைக்கூட முற்றாக ஒழித்துக்கட்டப் பார்க்கிறது பாஜக அரசு.
எதிர்க்கட்சிகளுக்கு எதிராக அமலாக்கத் துறையையும் சட்டவிரோதப் பணப்பறிமாற்றத் தடை சட்டத்தையும் அது பயன்படுத்தி வருகிறது. பாஜகவுக்குக் கட்சித் தாவிவிட்டால் அவர்கள் பதவி பெறுகின்றனர். கட்சித் தாவ மறுப்பவர்கள் சிறையில் அடைக்கப்படுகின்றனர். மாநிலங்களை மட்டுமின்றி மாநிலக் கட்சிகளையும் இல்லாது ஒழிக்கப் பார்க்கிறது பாஜக.
கார்ப்பரேட் சார்பு:
பாஜக அரசு அதானி, அம்பானி போன்ற ஒருசில கார்ப்பரேட்களின் கையில் நாட்டை விற்க முயல்கிறது; கடந்த பத்தாண்டில் மட்டும் கார்ப்பரேட்களுக்கு 16 இலட்சம் கோடி ரூபாய் வாராக் கடனைத் தள்ளுபடி செய்துள்ளது. அதானி குழுமம் நிலக்கரி, துறைமுகம் ஆகிய துறைகளில் கோலோச்சிக் கொண்டிருந்த நிலையில் இருந்து மாற்று எரிசக்தி, விமானத்துறை, உள்கட்டமைப்பு விவகாரங்களிலும் மிகப் பெரிய ஏகபோக சக்தியாக மாறியிருக்கிறது. அதானியும் அம்பானியும் மோடி அரசின் ஒத்தாசையுடன் உலகப் பணக்காரர் வரிசையில் கிடுகிடுவென வளர்ந்துள்ளனர்.
அதானி பங்குச் சந்தையில் செய்த மோசடிகளை ஹிண்டென்பர்க் அறிக்கை வெளிக்கொண்டு வந்தது. ஆனால், இதுகுறித்து விசாரிப்பதற்கு என்று சிறப்பு ஆணையம் அமைக்க மோடி மறுத்து விட்டார். அதானியை விமர்சிப்பவர்கள் நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்படுகின்றனர். ’மோதானி (MODANI)’ என்று சொல்லும் அளவுக்கு மோடி – அதானி கூட்டணி உலகறிந்த ஒன்றாக மாறியுள்ளது.
வறுமை, வேலையின்மை, ஊழல் ஒழிப்பு, கறுப்புப் பண ஒழிப்பு என்றெல்லாம் உறுதியளித்து ஆட்சிக்கு வந்த மோடியின் பாசக அரசு வறுமையையும் வேலையின்மையையும் மென்மேலும் மோசமாக்கியே வருகிறது. புள்ளி விவரங்களில் சித்துவேலை செய்து இந்த உண்மையை மறைக்க இயலாது. இலஞ்ச ஊழலில் அது திளைப்பதற்கு அண்மைய சிஏஜி அறிக்கை வெளிக்கொண்டு வந்துள்ள 7.5 இலட்சம் கோடி ரூபாய் மதிப்புடைய ஊழல்களே சான்று. கறுப்புப் பணக் காவலரே மோடிதான் என்னுமளவுக்கு உலகஞ்சுற்றும் கறுப்புப் பண முதலைகளுக்கு இந்தப் பத்தாண்டு காலமே பொற்காலமாகியுள்ளது.
பெண்களுக்குப் பாதுகாவலர்களாக தம்மைக் காட்டிக்கொண்டு பெண்களுக்கு எதிரானக் குற்றங்களில் குற்றவாளிகளைப் பாதுகாப்பதை செய்துவருகிறது பாசக அரசு. ஆசிஃபா, பில்கிஸ் பானு, உன்னாவ் தலித் பெண், குத்துச்சண்டை வீராங்கணைகள் போன்ற பெண்களுக்கு எதிரான வன்முறை நிகழ்வுகளே குற்றவாளிகள் பாதுகாக்கப்படுவதற்கான வலுவான சான்றுகள் ஆகும்.
ஒடுக்குண்ட மக்களுக்கான சமூகநீதியை மறுத்துப் பொருளியல் போர்வையில் இந்து உயர்சாதியினருக்கு சலுகைகள் வழங்குவதில் பாஜக அரசு குறியாக இருக்கக் காண்கிறோம்.
ஜனநாயக நிறுவனங்கள் மீதான தாக்குதல்:
அரசமைப்புச் சட்டத்தின் மீதும் நாடாளுமன்ற ஜனநாயக நிறுவனங்களின் மீது கிஞ்சிற்றும் மதிப்பற்ற பாசக, அவற்றுக்குள்ளேயே இருந்து கொண்டு அவற்றைச் செல்லாக் காசு ஆக்கிக் கொண்டிருக்கின்றது. நீதித்துறை, தேர்தல் ஆணையம், ஆர்.பி.ஐ., மனித உரிமை ஆணையம், நிட்டி ஆயோக், என அனைத்து நிறுவனங்களும் வளைக்கப்படுகின்றன. மக்களவையும் மாநிலங்களவையும் அமைச்சரவையும் நாடாளுமன்ற நிலைக் குழுக்களும் பேருக்கு இருப்பவையாக மாறியுள்ளன. அரசமைப்புச் சட்டம் வழங்கியிருக்கும் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு வருகின்றன. பிரதமர் அலுவலகமே அனைத்தையும் தீர்மானிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அரசியலமைப்புச் சட்டத்தை வெற்று காகிதமாக மாற்றி வருகின்றனர். மொத்தத்தில் நாட்டின் பொருளாதாரம் அதானி, அம்பானி ஆகிய இரு கார்ப்பரேட்களின் கைகளில் என்றால் அரசியல் அதிகாரம் மோடி – அமித் ஷா ஆகிய இருவரின் கைகளில் குவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு பொதுமேடை – 2024:
இவை யாவும் இந்நாட்டை ஒரு பேரழிவை நோக்கி நகர்த்திக் கொண்டிருக்கின்றன. இதைத்தான் பாசிச இருள் இந்நாட்டின் அரசியலைக் கவ்விக் கொண்டிருக்கிறது என்று சொல்கிறோம். இந்த ஆட்சி தொடர்ந்தால் அந்தப் பேரழிவை இந்நாட்டு மக்கள் நிச்சயம் சந்திக்க நேரிடும். அனைத்துப் பிரிவு மக்களும் சொல்லொண்ணாத் துன்பங்களுக்கு ஆளாவர். இந்நாட்டின் எதிர்காலம் குறித்து நாம் கொண்டிருக்கும் பெருங்கனவுகள் தவிடுபொடி ஆக்கப்படும்.
எனவே, வருகின்ற 2024 நாடாளுமன்றத் தேர்தல் என்பது இந்திய வரலாற்றின் திசைப்போக்கை நிர்ணயிக்கவல்ல தேர்தலாக அமையப் போகிறது.
பாஜக ஆட்சியில் நீடிப்பது என்பது நாம் போராடுவதற்கு இருக்கும் ஜனநாயக வெளியை அடியோடு முடிவுக்கு கொண்டுவந்து விடும். எனவேதான், இந்தத் தேர்தல் இந்த நாடும் மக்களும் சந்திக்கக் கூடிய வாழ்வா, சாவா போராட்டத்திற்கான ஒரு களமாக அமையப் போகிறது.
2024 நாடாளுமன்றத் தேர்தலில் முதன்மையான கேள்வி இந்நாட்டை பாசிச இருளில் மூழ்கடித்துக் கொண்டிருக்கும் மோடியின் ஆட்சி தொடர்வதா? கூடாதா? என்பதே ஆகும். இத்தேர்தல் இந்த ஆட்சியை முடிவுக்கு கொண்டுவருவதற்குக் கிடைத்திருக்கும் நல்லதொரு வாய்ப்பு ஆகும். இந்த வாய்ப்பை இந்நாட்டு மக்கள் தவறவிட்டு விடக்கூடாது.
இந்த முக்கியமான வரலாற்றுத் தருணத்தில் சமூக அக்கறை கொண்ட குடிமைச் சமூகத்தினர் தன்னார்வத்துடன் முன்வந்து மோடி அரசின் பத்தாண்டுக் கால ஆட்சியின் அவலங்களையும் அது தொடர்ந்தால் ஏற்படக் கூடிய பேரழிவையும் மக்களிடம் கொண்டுசொல்ல வேண்டும்.
இந்த தேர்தலில் மக்கள் தவறாமல் வாக்களிக்க வேண்டும். அவர்கள் அளிக்கக் கூடிய வாக்கு பாஜகவையும் அதன் கூட்டணிக் கட்சிகளையும் தோற்கடிக்கக் கூடிய வலிமை கொண்ட கூட்டணிக்கு அளிக்கக் கூடிய வாக்காக அமைய வேண்டும். தமிழ்நாட்டைப் பொறுத்த வரை நம்முடைய இலக்கு என்பது தமிழ்நாடு – புதுச்சேரி இணைந்த நாடாளுமன்ற இடங்கள் 40இலும் பாசக கூட்டணியைத் தோற்கடிக்க வேண்டும். அப்படித் தோற்கடிக்கக் கூடிய கூட்டணி வெல்ல வேண்டும். இவ்விதம் தோற்கடிக்கக் கூடிய கட்சிகள், கூட்டணிகள் கடைப்பிடிக்கும் கொள்கைகள், நடைமுறைகள் பல வகையிலும் மக்கள் நலனுக்கு எதிராக அமைந்திருப்பதை மறுக்க முடியாது என்றாலும், இந்தக் கொள்கைகள், நடைமுறைகளுக்கு எதிரான ஜனநாயகவழிப் போராட்டக் களத்தைக் காத்துக் கொள்ளவும் பாசிச பாஜக ஆட்சியை வீழ்த்தியாக வேண்டும்.
இந்த இலக்கை அடைவதற்குத் துணை செய்வதற்காகத்தான் தமிழ்நாடு பொதுமேடை – 2024 என்ற குடிமைச் சமூக (சிவில் சமூக) அமைப்பொன்றை உருவாக்கியுள்ளோம்.
மக்களுடைய பல்வேறு முக்கியக் கோரிக்கைகளை முன்வைத்து தமிழ்நாடு பொதுமேடை – 2024 சார்பாக வரவிருக்கும் தேர்தல் களத்தில் பாஜகவுக்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் எதிரான பரப்புரையைத் தொடங்குகிறோம்.
வருகின்ற ஜனவரி 30 – காந்தியார் நினைவு நாளை பாஜகவின் மதவெறி அரசியலுக்கு எதிரான நாளாகக் கடைபிடிக்க இந்தப் பொதுமேடை முடிவு செய்துள்ளது.
இந்துத்துவ அரசியலுக்கு எதிரான போராட்டத்தில்தான் காந்தியார் கொலை செய்யப்பட்டார். இன்று நாட்டின் ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்திருக்கும் இந்துத்துவத்திற்கு எதிராகப் போராடுவதற்கு உறுதியேற்போம். இந்நாளை மதவெறி எதிர்ப்பு நாளாக அறிவிக்குமாறு தமிழ்நாடு அரசிடம் இந்த பொதுமேடையின் சார்பாகக் கோருகிறோம். ஜனவரி 30 ஆம் நாள் சென்னை, கோவை, கன்னியாகுமரி, திருச்சி போன்ற முக்கிய நகரங்களில் பொதுமேடை சார்பாக ஒன்றுகூடி உறுதியேற்க இருக்கிறோம்.
ஓய்வுபெற்ற நீதியர்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள், பேராசிரியர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள், மாணவர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள். படைப்பாளிகள், சமயப் பெரியவர்கள், அரசியல் – சமூகச் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட அனைத்துக் குடிமைச் சமூக ஆற்றல்களும் தம்மால் இயன்ற அனைத்து
வழிகளிலும் பாசிச ஆற்றல்களை ஆட்சியில் இருந்து இறக்கப் பாடுபட வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறோம்.
இந்த வரலாற்றுக் கடமையை நிறைவேற்றுவதற்குத் தமிழ்நாட்டு இளைஞர்கள் தமது அறிவையும் ஆற்றலையும் திறனையும் உழைப்பையும் கொடுக்க முன்வருமாறு அறைகூவி அழைக்கிறோம்.
இந்த முயற்சிக்கு ஊடகங்கள் ஆதரவு நல்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்.
இப்படிக்கு,
து. அரி பரந்தாமன்,
(முன்னாள் நீதியர்)
ஒருங்கிணைப்பாளர்,
செய்தித் தொடர்பு: 9941931499 தமிழ்நாடு பொதுமேடை – 2024
Leave a Reply
You must be logged in to post a comment.