“சே குவேராவின் உருக்கமான இறுதிக் கடிதம் !!

ஃபிடல்,

இந்த நேரத்தில் எனக்குப் பல விஷயங்கள் நினைவுக்கு வருகின்றன. உங்களை மரியா அந்தோனியாவின் வீட்டில் சந்தித்தது; உங்களுடன் வர என்னை நீங்கள் அழைத்தது; புறப்படத் தயாரானபோது நமக்கு ஏற்பட்ட பரபரப்பு.

நடக்க இருக்கும் விபரீதம் எனக்கு எப்போது புரிந்தது தெரியுமா? நீங்கள் இறந்துபோனால் யாருக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று ஒரு நாள் அவர்கள் வந்து கேட்டார்கள். பிறகு, எல்லாம் புரிந்துவிட்டது. ஒரு புரட்சியின் முடிவு, வெற்றி அல்லது வீரமரணம் என்பதைப் புரிந்துகொண்டேன்.

இன்று, நாம் வளர்ச்சி அடைந்திருக்கிறோம். அன்று போல் இல்லாமல் பக்குவப் பட்டிருக்கிறோம். ஆனால், கடந்த காலம் மீண்டும் திரும்புகிறது. கியூபா மண்ணில் நிகழ்ந்த கியூபப் புரட்சியில், எனக்கு அளிக்கப்பட்டிருந்த கடமைகளை நான் நிறைவேற்றிவிட்டேன் என்று நினைக்கிறேன்.

ஆகையால், நான், உங்களிடமிருந்தும் நமது தோழர்களிடமிருந்தும், என்னுடைய கியூப மக்களிடமிருந்தும் விடைபெறுகிறேன்.

கட்சியின் தலைமையில் என்னுடைய பொறுப்புகளிலிருந்தும், அமைச்சர் பதவியில் இருந்தும், மேஜர் பொறுப்பிலிருந்தும், கியூபாவின் பிரஜைக்கான உரிமையிலிருந்தும் நான் விலகுகிறேன். இனி, எனக்கு கியூபாவுடன் சட்ட ரீதியான எந்த உறவும் இல்லை. ஆனால், வேறு வகையில் பிணைப்புகள் உள்ளன. நிச்சயமாக அவற்றை என்னால் உதறித் தள்ள முடியாது.

கடந்த காலத்தை திரும்பிப் பார்க்கும்போது, புரட்சியின் வெற்றியை உறுதிப்படுத்த, நான் நேர்மையாகவும் அர்ப்பணிப்போடும் செயல்பட்டு வந்தேன் என்றே நம்புகிறேன். நான் செய்த ஒரே தவறு என்ன தெரியுமா? சியாரா மிஸ்த்ரா மலைத்தொடரில் கழித்த முதல் சில தினங்களில் உங்கள் மீது மேலும் அதிக நம்பிக்கை வைக்காதது. ஒரு புரட்சியாளராக, ஒரு தலைவராக பரிமணித்த உங்கள் குணாதிசயங்களை உடனடியாகப் புரிந்துகொள்ள தவறியது.

கரீபிய சிக்கல் கொழுந்து விட்டு எரிந்துக் கொண்டிருந்த அந்த சோகமான, ஆனால் துடிப்பு மிக்க காலகட்டத்தில், உங்களுடன் சேர்ந்து, நமது மக்களின் பக்கம் நின்ற தருணத்தை இன்றும் பெருமையுடன் உணர்கிறேன். உங்களைப் போல் ஒரு தலைவர் செயல்படுவது அபூர்வமானது. உங்களை தயக்கம் இன்றி பின் பற்றியதற்காக நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.

என்னுடைய எளிமையான முயற்சிகளும் உதவிகளும் வேறு சில நாடுகளுக்குத் தேவைப்படுகிறது. கியூபாவின் தலைவராக நீங்கள் இருப்பதால் உங்களுக்கு மறுக்கப்பட்டதை என்னால் செய்ய முடியும் என்று நம்புகிறேம்.

ஆக, நாம் பிரிய வேண்டிய நேரம் வந்துவிட்டது.

ஒரு பக்கம் மகிழ்ச்சியோடும் மறு பக்கம் துயரத்தோடும் நான் என் பயணத்தை மேற்கொள்கிறேன் என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள். என் நேசத்துக்குரிய மக்கள் ஒரு சிறப்பான சமுதாயத்தை கட்டி எழுப்புவார்கள் என்ற என் நம்பிக்கையை இங்கே விட்டுவிட்டு பிரிகிறேன். புதிய போராட்டக் களங்கள் காத்திருக்கின்றன.

நீங்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்குப் பாத்திரமாக இருப்பேன். ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போராடுவதை புனித கடமையாக மேற்கொள்வேன். அதை நிறைவேற்றவும் செய்வேன். இதுதான் என்னுடைய பலத்துக்கு ஆதாரமாக இருக்கிறது.

எங்கோ, கண் காணாத இடத்தில் முடிவு என்னை நெருங்குமானால், அந்தக் கடைசி தருணத்தில் கியூப மக்களையும், குறிப்பாக உங்களையும்தான் நினைத்துக் கொண்டிருப்பேன்.

எனக்கு கற்றுக்கொடுத்ததற்கும் அதற்கு நீங்களே ஒரு உதாரணமாக விளங்கியதற்கும் என் நன்றி. என்னுடைய செயல்களின் விளைவுகள் உங்கள் நம்பிக்கைக்கு பங்கம் விளைவிக்காமல் இருக்க முயல்வேன். நமது புரட்சியின் அயல்நாட்டு கொள்கையோடு எப்போதும் அடையாளம் காணப்பட்டவன் நான். இப்போதும், அது தொடர்கிறது. நான் எங்கு இருந்தாலும், ஒரு கியூபப் புரட்சியாளனின் பொறுப்புணர்வோடு இருப்பேன்.

எனது மனைவி, மக்களுக்கு எந்த சொத்தையும் நான் விட்டுச் செல்லவில்லை. அதற்காக வருத்தப்படவும் இல்லை. உண்மையில் எனக்கு மகிழ்ச்சிதான். அவர்கள் வாழ்வதற்கு தேவையானவற்றை கவனித்துக்கொள்வதற்கும், குழந்தைகளுக்கு கல்வி அளிப்பதற்கும் ஓர் அரசாங்கம் இருக்கிறது.

இன்னும் பல விஷயங்களை உங்களிடமும், நமது மக்களிடமும் சொல்ல விருப்பம். ஆனால் தேவையில்லை என்றே நினைக்கிறேன். நான் சொல்ல விரும்புவதை வெளிப்படுத்தும் சக்தி வார்த்தைகளுக்கு இல்லை. காகிதங்கள் வீணாவதைத் தவிர வேறு பயன் ஏதும் ஏற்பட்டுவிடப்போவதில்லை.

நமது முன்னேற்றம் எப்போதும் வெற்றியை நோக்கியே. வெற்றி அல்லது வீரமரணம்.

என் முழுமையான புரட்சிகரமான உணர்ச்சி வேகத்துடன் உங்களை ஆரத் தழுவிக்கொள்கிறேன்.


Suresh Turai Kanapathypillai

லா கிகேரா வில் கைது செய்யப்பட்ட நிலையில் சே குவேராவை விசாரணை செய்தது இரண்டு பொலிவியா இராணுவ அதிகாரிகளும் ஒரு அமெரிக்க உளவுத்துறை முகவரும் தான். இவர்கள் அனைவரிடமும் சே தைரியமாகவே நடந்து கொண்டார். தன்னை கொல்ல வேண்டாம் என்று எந்த சந்தர்ப்பதிலும் கூறவில்லை.

ஆனால் சே காலில் காயமடைந்து வில்லி,சீனோ என்ற இரண்டு தோழர்களின் உதவியுடன் அந்த மேட்டு நிலத்தில் இருந்து கீழே இறங்கும் போதே மூன்று இராணுவ வீரர்களை எதிர் கொண்டார். அவர்கள் குவேராவை அடையாளம் காணவில்லை. அந்த சமயத்தில் தான் சே கூறினார்.

“நான் தான் சே குவேரா. என்னைக் கொல்வதால் உங்களுக்கு இலாபம் இல்லை “

அவ்வளவுதான். நடக்க முடியாத நிலையில் இருந்த குவேராவை அங்கிருந்து கொல்லப்பட்ட இடமான சிறுவர் பாடசாலை வரையிலும் சுமந்து வந்தார்கள். அந்த இடம் மரங்கள் நிறைந்த மலை பிரதேசம். கடந்த வருடம் பொலிவியா சென்ற போது சே கைது செய்யப்பட்ட இடத்தில் இருந்து கொல்லப்பட்ட இடம் வரையிலும் நான் ஊன்றுகோல் உதவியுடன் தான் நடந்தேன்.

சே இறந்து போன அக்டோபர் மாதம் அவர் ஆஸ்துமா தொந்தரவு அதிகமாக இருக்கவில்லை. ஆனால் அவர் அங்கிருந்த பதினொரு மாதங்களில் பெரும் பகுதி ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டு கொண்டே இருந்தார். சே மட்டுமல்ல அந்த புரட்சி படையில் இருந்த அனேகர் ஏதோ ஒரு நோயினால் சிரமப்பட்டனர். அதேநேரம் அந்த குழுவில் சே உட்பட மூன்று மருத்துவர்களும் இருந்தனர்.

About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply