மனு நீதி வரலாறு என்ன? நான்கு வர்ணங்கள் ஏற்பட்டது எப்படி?

மனு நீதி வரலாறு என்ன? நான்கு வர்ணங்கள் ஏற்பட்டது எப்படி? ஆரியர்கள், திராவிடர்கள் நால் வருண அமைப்புக்குள் வந்தது எப்படி?

  • அ.தா.பாலசுப்ரமணியன்
  • பிபிசி தமிழ்

23 செப்டெம்பர் 2022

புத்தகம்
படக்குறிப்பு,சித்தரிப்புப் படம்

மனு நீதி என்று பரவலாக அறியப்படும் மனுஸ்மிருதி, இந்து மதம் போன்றவை தமிழ்நாட்டில் அவ்வப்போது விவாதப் பொருள் ஆவது வழக்கம்.

மனு நீதி குறித்து திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா பேசிய பேச்சுக்கு பாஜகவினர், அதிமுகவினர் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

மனு நீதி குறித்து 2020ல் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் பேசிய ஒரு பேச்சு சர்ச்சையானதை அடுத்து, மனு நீதி என்றால் என்ன என்ற தலைப்பில் வெளியிட்ட கட்டுரையை இப்போது மறு பிரசுரம் செய்கிறோம்.

இந்த மனுஸ்மிருதியில் பெண்களைப் பற்றி இழிவாக கூறப்பட்டிருப்பதாகக் கூறி விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஓர் இணைய வழிக் கூட்டத்தில் பேசிய பேச்சின் ஒரு பகுதியை இந்து வலதுசாரி ஆதரவாளர்கள் சமூக ஊடங்கங்களில் பகிர்ந்தனர். திருமாவளவன் பெண்களை அவமதித்து விட்டதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர்.

பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த நடிகை குஷ்புவும் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் திருமாவளவனை விமர்சித்தார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மனுஸ்மிருதி நூலைத் தடை செய்யவேண்டும் என்று கோரி சென்னையில் சனிக்கிழமை போராட்டம் நடத்தியது. திருமாவளவனின் பேச்சுக்காக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

THIRUMAOFFICIAL

இத்தனை விவாதங்களுக்கும், அரசியல் மோதல்களுக்கும் வழி வகுக்கும் அந்த மனுஸ்மிருதி என்பதுதான் என்ன? அதன் வரலாறு என்ன?

பண்டைய காலத்தில் சமூக அடுக்குகளை நிர்வகிப்பதற்கான விதிகளை வகுத்தது மனு ஸ்மிருதி என்பதே ஆகும் என்பது பரவலான கருத்து.

‘ஸ்மிருதிகள்’ என்பவை இந்திய வைதீக மரபில், தகுதியில் ‘ஸ்ருதி’ எனப்படும் வேதங்களுக்கு அடுத்த நிலையில் இருப்பவை. மனு ஸ்மிருதி தவிர இன்னும் ஏராளமான ஸ்மிருதிகள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் எழுதியவர் பெயராலேயே அறியப்படுகின்றன.

இவற்றின் உள்ளடக்கம் பற்றிப் பேசும் வரலாற்றுப் பேராசிரியர் அ.கருணானந்தன், வேதங்களில் எல்லாம் இருக்கிறது என்பார்கள். உண்மையில் வேதங்களில் அப்படி ஒன்றும் இல்லை. அவை வெறுமனே போர்கள் செய்வது பற்றியும், வேள்விகள் பற்றியுமே குறிப்பிடுகின்றன. வேதங்களைப் போல அல்லாமல் சந்தேகத்துக்கு இடமற்ற முறையில் செயல்படுத்துவதற்கான சட்டதிட்டங்களே ஸ்மிருதிகள் என்று கூறுகிறார்.

ஆனால், ஸ்மிருதிகள் குறிப்பாக மனுஸ்மிருதி சட்டம் அல்ல என்கிறார் பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி.

அத்துடன் 70 வகையான மனுஸ்மிருதிகள் இருப்பதாகவும், இப்போது விவாதிக்கப்படும் மனுஸ்மிருதி நூல் 1794ல் ஆங்கிலேயரான வில்லியம் ஜோன்ஸ் என்பவரால் மொழிபெயர்த்து எழுதப்பட்டது என்றும் குறிப்பிடுகிறார் நாராயணன் திருப்பதி.

ஸ்மிருதிகளின் தோற்றம், காலம், அவை எதற்காக, யாரால் தோற்றுவிக்கப்பட்டன என்ற கேள்விக்கு விரிவாக விடையளித்தார் பேராசிரியர் கருணானந்தன்.

அவரது பேட்டியில் இருந்து:

‘தொடக்கத்தில் மூன்று வருணம்தான்… ‘

“பிராமணர்கள், ஆரியர்கள் என்ற இரு பதங்களையும் ஒன்று போல பாவித்து குழப்பிக்கொள்கிறார்கள். ஆரியர்கள் என்பது இனத்தைக் குறிக்கும் சொல்.

இந்தியாவுக்குள் ஆரியர்கள் வந்த தொடக்க காலத்தில் இங்கிருந்த மற்ற குடிகளோடு அவர்களுக்குத் தொடர்பு ஏதும் இருக்கவில்லை.

அவர்கள் தங்கள் இனத்துக்குள்ளேயே மூன்று விதமான பகுப்புகளை உருவாக்கிக் கொண்டனர்.

அவர்களுக்கு அவர்கள் இனம்தான் உலகம் என்பதால் ஒட்டுமொத்த இனத்தையும் குறிக்க ‘விஸ்’ என்ற சொல்லைப் பயன்படுத்தினர். ‘விஸ்’ என்றால் உலகம் என்று பொருள். இந்த விஸ்ஸில் இருந்து சடங்குகளை நடத்துவதற்கான புரோகிதர்களைத் தேர்ந்தெடுத்தனர். இவர்கள் பிராமணர்கள் எனப்பட்டனர். பிறகு படைகளை நடத்துவதற்காக ‘ரஜனியர்கள்’ அல்லது ‘ஷத்திரியர்கள்’ என்பவர்களைத் தேர்ந்தெடுத்தனர்.

கருணானந்தன்

இவர்களைத் தவிர இருந்த மற்ற பொதுமக்களைக் குறிக்க ‘வைஸ்யர்கள்’ என்ற சொல் பயன்படுத்தப்பட்டது. ‘விஸ்’ என்ற சொல்லில் இருந்தே வைஸ்யர்கள் என்ற சொல் பிறக்கிறது. ஆக, வைஸ்யர்கள் என்றால் உலகத்தார் என்று பொருள்” என்றார் கருணானந்தன்.

தொடக்கத்தில் முதல் இரண்டு வருணத்தார் பிறப்பின் அடிப்படையில் முடிவு செய்யப்படவில்லை. அவர்களைத் தேர்வுதான் செய்தார்கள். பிறகு, முதல் இரண்டு வருணங்ளில் இருந்தவர்கள் தங்கள் நிலைகளைத் தக்கவைத்துக்கொள்ள இந்தப் பிரிவினையைப் புனிதப்படுத்தி அதை நிரந்தரமானதாக, பிறப்பு அடிப்படையிலானதாக மாற்றிக்கொண்டனர் என்கிறார் அவர்.

“முற்கால வேதங்களில் நால் வருண அமைப்பு இல்லை. பிற்கால வேதங்கள் கூட மூன்று வருண அமைப்பைப் பற்றியே பேசுகின்றன. இதுவே ‘த்ரேயி’ எனப்படுகிறது என்கிறார் வரலாற்று அறிஞர் ரொமிலா தாப்பர்.

அதாவது ஆரிய இனத்துக்குள்ளேயே இருந்த சடங்குப் பிரிவு, படைப் பிரிவு, மற்ற பொதுமக்கள் என்பதே இந்த தொடக்க கால வருணப் பிரிவினை.

நான்காவது வருணம் எப்படி வந்தது?

ஆரியர்கள் நாடோடிகளாக, இடம் பெயர்ந்துகொண்டே இருந்தவரை இந்தப் பிரிவினையே இருந்தது. கங்கைக் கரை முதலிய இடங்களை அடைந்து அவர்கள் நிரந்தரமாக குடியேறிய பிறகு அவர்கள் நாகரிக சமூகத்தோடு தொடர்புகொள்ளவேண்டிய நிலை ஏற்பட்டது. அவர்களில் சிலரை ஆள்வோராக ஏற்கவேண்டிய நிலையும் ஏற்பட்டது.

அந்த நிலையில் அவர்களைக் கட்டுப்படுத்தி தங்களுக்கு ஏற்றமுறையில், ஆரிய பிராமணர்களின் தலைமையை ஏற்று ஆட்சி செய்யவைப்பதற்காக உருவாக்கப்பட்ட சட்டதிட்டங்களே ஸ்மிருதிகள்” என்று கூறும் கருணானந்தன், இவர்கள் புதிதாக தொடர்பு ஏற்படுத்திக்கொண்ட ஆரியர்கள் அல்லாத கருப்பு நிறம் கொண்ட மக்கள் ஏற்கனவே நாகரிகம் மிகுந்தவர்களாக, கட்டடங்களைக் கட்டுவது, கருவிகளை செய்வது உள்ளிட்ட பலவற்றை அறிந்தவர்களாக இருந்தனர். ஆரியர்கள் அல்லாத இந்த மக்களைக் குறிக்கவே சூத்திரர் என்ற புதிய பிரிவை நான்காவதாக ஸ்மிருதிகள் இணைத்தன என்கிறார்.

“சூத்திரம் என்றால் தொழில் திறம் (Technique) என்று பொருள். எனவே சூத்திரம் அறிந்தவர்கள் சூத்திரர்கள்.

அதுவரை ஆரியர்கள் பெரிய கட்டுமானங்களைக் கட்ட அறியாதவர்கள். அதிகபட்சம் பர்ணசாலைகளே அவர்களது கட்டுமானங்கள். எனவே தொழில்திறம் மிக்கவர்களான நாகரிக மக்களை அவர்கள் வென்று அழிப்பதற்குப் பதிலாகப் பயன்படுத்திக்கொள்ளவே விரும்பினர். எனவே அவர்களை எப்படி ஆள்வது என்பதையும் உள்ளடக்கிய விதிகளே ஸ்மிருதிகள்.

உள்ளூர் மக்களில் சிலருக்கு ஆட்சி அந்தஸ்து தரும்போது அவர்கள் ஷத்ரியர்கள் என அங்கீகரிக்கப்பட்டார்கள். அவர்கள் இந்த ஸ்மிருதிகள் வகுத்த சட்டதிட்டங்களை ஏற்றே ஆட்சி புரிந்தார்கள்.

அத்தகைய கருப்பு நிறம் கொண்ட உள்ளூர் ஆட்சியாளர்களே ராமர், கிருஷ்ணர் முதலிய அவதாரக் கடவுளர்கள் ஆனார்கள்.

பத்துக்கு மேற்பட்ட ஸ்மிருதிகள் உள்ளது தெரியும். ஆனால், 200க்கும் மேற்பட்ட ஸ்மிருதிகள் இருப்பதாக சொல்கிறார்கள். இவற்றில் ஒன்றுதான் மனு ஸ்மிருதி” என்பது கருணானந்தன் கருத்து.

மனுஸ்மிருதி என்ன சொல்கிறது?

“மனுஸ்மிருதி இந்த நால் வருணங்களுக்கு இடையில் கலப்பு ஏற்படுவதை தண்டனைக்கு உட்பட்டதாக ஆக்கியது.

வீட்டில் உழைப்பது, நிலத்தில் உழைப்பது, நூற்பது, நெய்வது போன்ற வேலைகளை செய்துவந்த மிகப் பெரிய உழைக்கும் பிரிவான பெண்களைக் கட்டுப்படுத்தும் விதிகளையும் மனு ஸ்மிருதி வகுத்தது.

பெண்களுக்கு வர்ணம் இல்லை. உரிமையும் இல்லை. பெண்களுக்கு பூநூல் அணியும் உரிமை இல்லை. பெண்களுக்குத் திருமணம்தான் உபநயணம். பூப்பெய்தும் முன்னே கன்னிகா தானம் என்ற முறையில் திருமணம் செய்விக்கவேண்டும் என்று வரையறுக்கும் மனு ஸ்மிருதி, பெண்கள் தனியாக வாழும் உரிமையை மறுக்கிறது. அவர்கள் தந்தை, சகோதரன், கணவன், மகன் என்று யாரோ ஓர் ஆணின் பாதுகாப்பில் வாழ வேண்டியவர்கள் என்பதாகவும் அதனை வகுக்கிறது.

குழந்தை பெற்றுத் தருவது பெண்களின் கடமை என்கிறது ஸ்மிருதி. குழந்தை பெற்றுத் தரும் தகுதி இல்லாத, நோய் வாய்ப்பட்ட, தொடர்ந்து பெண் குழந்தைகளையே பெற்றுத்தரும் பெண்களை விலக்கலாம் என்று மனுஸ்மிருதி விதி வகுத்தது.

அதைப் போலவே சூத்திரனுக்கும் உடமைகளோ, உரிமைகளோ இல்லை என்பதை விதியாக வகுத்தது மனு ஸ்மிருதி.

நால் வருண அடுக்கில் உயர் அடுக்கில் உள்ள ஆண்கள் கீழ் அடுக்கில் உள்ள பெண்களோடு உறவு வைத்துக் கொள்வதை அது அனுமதிக்கிறது. இது அனுலோமம் எனப்படும். ஆனால், கீழ் அடுக்கில் உள்ள ஆண்கள் மேல் அடுக்கில் உள்ள பெண்களோடு உறவு கொள்வதை ‘பிரதிலோமம்’ என்று கூறும் மனுஸ்மிருதி அதை தடை செய்கிறது” என்கிறார் கருணானந்தன்.

பிற்காலத்தில் சாகர், பார்த்திபர், கிரேக்கர் முதலிய பல இனத்தவர்கள் இந்தியாவுக்குள் படையுடன் நுழைந்தபோது அவர்களில் பலரை அரசராக ஏற்கவேண்டிய நிலையும் ஆரியர்களுக்கு ஏற்பட்டது. அப்போது, அவர்களில் இந்த நால்வருண அமைப்பை ஏற்று ஆட்சி நடத்த ஒப்புக்கொண்டவர்கள் ஷத்ரிய வருணமாக ஏற்றுக்கொள்ளப்பட்டனர் என்கிறார் அவர்.

மனு ஸ்மிருதி எழுதப்பட்ட காலம் ஏறத்தாழ கி.பி. முதல் நூற்றாண்டாக இருக்கலாம் என்கிறார் கருணானந்தன்.

மனு ஸ்மிருதி எவ்விதமான கருத்துகளைப் பேசுகிறது, அதன் பின்புலம் என்ன என்று பாஜக செய்தித் தொடர்பாளரான நாராயணன் திருப்பதியைத் தொடர்பு கொண்டு கேட்டது பிபிசி தமிழ்.

‘இது ஆங்கிலேயர் செய்த மொழி பெயர்ப்பு….’

நாரயணன் திருப்பதி

மனு ஸ்மிருதி என்ற பெயரில் 70 வெவ்வேறு நூல்கள் உள்ளன. மனு ஸ்மிருதியை எந்த ஒருவரும் குறிப்பிட்டு எழுதவில்லை. இப்போது விமர்சகர்கள் குறிப்பிட்டுப் பேசும் நூல் 1794ம் ஆண்டில் வில்லியம் ஜோன்ஸ் என்பவரால் மொழி பெயர்த்து எழுதப்பட்டது.

முஸ்லிம்களுக்கு ஷரியத், கிறிஸ்தவர்களுக்கு பைபிள் இருப்பதைப் போல இந்துக்களுக்கு ஒரு நூல் வேண்டும் என்பதற்காக ஆங்கிலேயர்கள் இதைச் செய்தார்கள்.

இந்த மனு தர்மம்தான் இந்துக்களுக்கு சட்டம் என்பது தவறான தகவல். மனு என்பவர் இதை நான்கு பேருக்கு சொல்லி, அந்த நான்கு பேர் மேலும் பலருக்குச் சொல்லி, இப்படியே சொல்லிச் சொல்லி லட்சக்கணக்கானவர்களுக்கு சென்று சேர்ந்ததே மனுஸ்மிருதி.

ஆனால், இப்போது அதை பிரிவினையை உருவாக்குவதற்காக எடுத்துக்கொண்டு விவாதிக்கிறார்கள் என்றார் நாராயணன் திருப்பதி.

இந்தியா என்பது ஒரு நாடு அல்ல, பல நாடுகளின் கூட்டமைப்பு என்பவர்கள்தான் இந்த நூல் இந்தியா முழுவதும் பரவி சட்டமாக இருந்தது என்கிறார்கள். அப்படியானால், அவர்கள் இந்தியா என்பது ஒரு நாடு அல்ல என்று கூறிவந்தது பொய். அல்லது மனு ஸ்மிருதியைப் பற்றி இப்போது கூறுவது பொய் என்று கூறினார் நாராயணன் திருப்பதி.

மனு ஸ்மிருதியைப் பற்றி இப்படி தவறாகப் பேசினால், அப்போது கிறிஸ்துவ மதத்தில், முஸ்லிம் மதத்தில் இப்படியெல்லாம் இல்லையா என்று வாக்குவாதம் வந்து மதச் சண்டை வரும் என்று எதிர்பார்த்து மதக் கலவரத்தை தூண்டுவதற்காகவே இப்படிப் பேசுகிறார்கள் என்றும் குற்றம்சாட்டுகிறார் நாராயணன் திருப்பதி.

https://www.bbc.com/tamil/india-54679630

About editor 3188 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply