தமிழர்கள் ஏற்கும் தீர்வை வழங்கினால் இலங்கை வளமான பூமியாகும்!

தமிழர்கள் ஏற்கும் தீர்வை வழங்கினால் இலங்கை வளமான பூமியாகும்!

 சிறிலிங்கம்

February 19, 2012

இலங்கை பிரித்தானியா ஆட்சிசெய்த காலத்தில் நாட்டை நேசித்து இலங்கையை வளப்படுத்த உழைத்தவர்கள் தமிழர்கள். நீண்ட காலமாக தமிழ்த் தலைவர்கள் சிங்களத் தலைவர்கள் சகோதரர்கள் போல் நேசித்து இலங்கையை வளப்படுத்துவதற்கு உழைத்தார்கள். இலங்கைக்கு சுதந்திரம் வேண்டு மென்று முதல் முதல் குரல் கொடுத்தவர்கள் சேர்.பி. இதராமநாதன், சேர்.பி.அருணாசலம் போன்றவர்களாகும். 1915 இல் ஏற்பட்ட இனக் கலவரத்தின் போது பாதிக்கப்பட்ட சிங்கள சகோதரர்களைப் பாதுகாத்து உயிர் தப்ப வைப்பதற்கு பித்தானியா சென்று காலனி ஆட்சியாளிடம் உத்தரவாதம் பெற்று வந்தவர் சேர்.பி. இராமநாதனாகும். அவர் நாடு திரும்பியபோது கொழும்புத்துறைமுகத்தில் இருந்து பல்லக்கில் இருத்தி மிக மரியாதையுடன் ஊர்வலமாக அழைத்து வந்தனர்.

முதல் பிரதமர் டி.எஸ்.சேனாநாயக்காவின் ஆட்சியைத் திறம்பட நடத்துவதற்கு பக்க பலமாக இருந்தவர்கள் தமிழர்கள். பிரதமரின் செயலாளராகப் பணியாற்றிய சேர்.கந்தையா வைத்தியநாதன் போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். கல்லோயா திட்டத்தை திட்டமிட்டுக் கொடுத்த எஞ்சினியர் கனகரத்தினம் என்ற தமிழரேயாகும்.

1940 இல் மகாவலித் திட்டத்திற்கு அடித்தளம் இட்டுக் கொடுத்தவர் பாலசிங்கம் என்ற தமிழன். இவை அனைத்தையும் இன்றைய ஆட்சியாளர்கள் நினைத்துப் பார்க்க வேண்டும். பிரித்தானிய ஆட்சிக் காலத்தில் அரச நிருவாகத்தை திறம்பட நடத்தியவர்கள் தமிழர்கள். அவர்களிடத்தில் ஐக்கிய இலங்கை என்ற உணர்வே வேரூன்றியிருந்தது. இதை சிதைத்தது பதவி ஆசை கொண்ட சிங்களத் தலைமைகளே. தமிழர்களை அணைத்து இலங்கைக்கு சுதந்திரம் பெறுவதற்காக டி.எஸ்.சேனநாயக்க என்னை நம்புங்கள் நான் தமிழர்களுக்கு தீங்கு செய்யமாட்டேன் என்று உறுதிமொழி கொடுத்து அரசியல் மேதைகள் அடங்காத் தமிழன் சுந்தரலிங்கம்,

ஜி.ஜி. பொன்னம்பலம் போன்றவர்களைக் கட்டி அணைத்து சுதந்திரத்தை பெற்ற பின் தமிழர்களை ஏமாற்றிய முதல் சிங்களத் தலைவராவார்.

அவர் 10 இலட்சம் மலையகத் தமிழர்களின் குடியுரிமை வாக்குமையைப் பறித்தார். தமிழ்ப் பகுதிகளில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை மேற்கொண்டார். இலங்கையில் தமிழர்கள் தொகையில் சிறிதாக இருந்தாலும் ஒரு தேசிய இனமாக வரலாற்று ரீதியாக வாழ்ந்து வந்தவர்கள் அவர்கள் ஐக்கிய இலங்கையை நேசித்து வாழ்ந்தவர்கள்.

காடாகக் கிடந்த மலைநாட்டை பொன் கொழிக்கும் பூமியாக்கியவர்கள் தமிழர்கள்.

மலேசியாவைப் பிரித்தானியர்கள் ஆட்சி செய்த காலத்தில் இலங்கைத் தமிழர்களை அழைத்து ஆட்சி நிருவாகப் பொறுப்பைக் கொடுத்திருந்தார்கள். அவர்கள் நிருவாகத்தைத் திறமையாக நடத்தியதால் இலங்கைக்கும் நல்ல பெயரைத் தேடிக் கொடுத்தனர். பிரித்தானியாவில் நடைமுறையிலிருந்த நாடாளுமன்ற ஜனநாயக முறையை அரசியல் வளர்ச்சியடைந்த இலங்கைக்கு அறிமுகம் செய்த பிரித்தானிய அரசு சிங்களவர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட சிங்கள அரசு தவறான முறையில் பெரும்பான்மை அதிகாரத்தைப் பயன்படுத்தி சிறுபான்மை இனத்தவர்களை அழித்தொழிப்பர் என்று நினைத்திருக்கவே இல்லை.

ஒரு ஜனநாயக நாட்டில் பெரும்பான்மை சிறுபான்மையை நேசித்து ஆட்சி செய்வது தான் நாகரீகம். இந்த நாகரீகமான ஆட்சியை சிங்கள அரசியல் தலைமைகள் நசுக்கிவிட்டு பெரும்பான்மை என்ற பலத்தைக் கொண்டு பெரும்பான்மை இனத்தவர்களைக் கொண்ட ஆயுதப்படையையும் வைத்துக் கொண்டு 1958 லிருந்து மூன்று பெரிய இனக்கலவரங்களை நடத்தி இலட்சக்கணக்கான தமிழர்கள் நாட்டை விட்டு ஓட வைத்தனர். அவர்கள் பிறநாடுகளில் அரசியல் தஞ்சம் கோரி வாழ்ந்து வருகின்றனர்.

அதனால் இன்று 10 இலட்சம் தமிழர்கள் புலம்பெயர் நாடுகளில் வாழ்கின்றார்கள்.

அவர்கள் பலத்துடன் வாழ்கிறார்கள். அவர்களுடைய பலத்தையும் பணத்தையும் இலங்கை நாட்டை வளப்படுத்த வேண்டுமானால் சகல அதிகாரம் கொண்ட ஜனாதிபதி தமிழர்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு அரசியல் தீர்வை வைத்து தமிழர்கள் சுயமரியாதையுடனும் கௌரவத்துடனும் தங்கள் மண்ணில் சுதந்திரமாக வாழ வழி செய்ய வேண்டும்.

அரசியல் தீர்வுத்திட்டம் ஒன்றில்தான் புலம் பெயர் தமிழர்களின் முழுமையான முதலீட்டையும் ஒத்துழைப்பையும் பெற்று இலங்கையில் நிலையான சமாதானத்தை ஏற்படுத்த முடியுமென உலக சமாதான மன்றத்தின் பிரித்தானிய கிளை நம்பிக்கையுடன் இலங்கை அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. அவ்வாறாயின் இலங்கை அரசு சீனாவிடமோ அமெரிக்காவிடமோ உலக வங்கியிடமோ கடன் கேட்டுச் செல்ல வேண்டியதில்லை.

http://akkinikkunchu.com/new/

About editor 3045 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply