கன்னல் தமிழும் கவியரசும்

 கன்னல் தமிழும் கவியரசும்

“வெண்ணிலாவும் வானும் போலே
விரனும் கூர்வாளும் போலே(வெண்ணிலாவும்)

வண்ணப் பூவும் மணமும் போலே
மகர யாழும் இசையும் போலே
கண்ணும் ஒளியும் போலே எனது
கன்னல் தமிழும் யானும் அல்லவோ(வெண்ணிலாவும்)

என்பது, கவியரசர்-பாவேந்தர் பாரதிதாசனாரின் பாடல் ஒன்றின் முன் பாதியாகும். இந்தப் பாடலிலுள்ள ஒப்புமை நயங்கள் மிகவும் சுவைக்கத் தக்கன. அவற்றை ஒவ்வொன்றாய்க் காண்பாம்.

வெண்ணிலாவும் வானும்

நம் நாட்டில் அமாவாசையன்று இரவு முழுதும் நிலா ஒளி இல்லை. அடுத்த நாளிலிருந்து பருவம் வரையும் சிறிது சிறிதாக ஒளிகூட முழுநிலா ஒளி வீசும். அதற்கு அடுத்த நாளிலிருந்து ஒளி சிறிது சிறிதாகக் குறைய, அமாவாசை யன்று ஒளி சிறிதும் இராது. பிறை, நாளுக்கு நாள் ஒளி வளரும் காலப் பகுதியை வளர்பிறை என்றும், நாளுக்கு நாள் ஒளி தேயும் காலப் பகுதியைத் தேய்பிறை என்றும் கூறுவர். ஞாயிறு, பூவுலகு, நிலா ஆகியவை சுற்றுவதால் இந்த மாற்றம் ஏற்படுகிறது.

நன்மங்கல வினைகளை வளர்பிறையில் தொடங்கினால்தான் வளர்ச்சி கிடைக்கும் எனவும், தேய்பிறையில் தொடங்கின் தளர்ச்சியே கிடைக்கும் எனவும் மக்கள் நம்புகின்றனர்.

அந்தக் காலத்தில் இரவில் விளக்கு வசதி கிடையாது. நிலா ஒளி உள்ள நாட்களில் இரவிலும் மக்கள் தொடர்ந்து செயலாற்ற முடிந்தது. முன்னிரவில் நிலா ஒளி இல்லாத நாட்களில் அவ்வாறு செயலாற்ற இயலவில்லை. அதனால், தேய் பிறையில் தொடங்காமல் வளர் பிறையில் தொடங்கும் வழக்கம் ஏற்பட்டது. பின்னர் இந்தக் கொள்கை ‘சாத்திர சம்பிரதாயம்’ என்னும் பெயருக்கு உட்பட்டு விட்டது.

எந்தக் காலத்திலும், வானத்தில் நிலா இருப்பின் பூவுலகு பொலிவு பெறுகிறது. நிலா இல்லாத காலத்தில், பிள்ளையில்லாத இல்லம் போன்றது எனப் புலவர்கள் தாழ்த்திக் கூறும் அளவுக்கு வானம் ஆகிவிடுகிறது. நிலா உள்ள வானமே பொலிவாயிருப்பதால், பாவேந்தர் நிலாவையும் வானத்தையும் இணைத்துக் கூறியுள்ளார். ஞாயிற்றைச் செஞ்ஞாயிறு என்பதால், நிலா வெண்ணிலா எனப்படுகிறது. இதைத்தான் கவியரசர் ‘வெண்ணிலாவும் வானும் போலே’ என்றார். இது பாடலின் முதல் பகுதி. அடுத்து இரண்டாம் பகுதி வருக:

வீரனும் கூர்வாளும்

இந்தக் காலத்தில் போர் மறவர்கட்குத் துப்பாக்கி படைக் கருவியா யிருப்பது போல, அந்தக் காலத்தில் வாள் படைக் கருவியாய்ப் பயன்பட்டது.

துப்பாக்கி என்பது சுடும் கருவி. இதை, கடும் கருவிகளுள் மிகுந்த ஆற்றல் உடையனவற்றிற்கெல்லாம் பொதுப் பெயராக – பிரதிநிதிப் பெயராகக் கொள்ளல் வேண்டும். இந்த மிகுந்த ஆற்றலைத்தான் ‘கூர்வாள்’ என்பது குறிப்பிடுகிறது. ‘கூர்’ என்பதில் அவ்வளவு ஆழ்ந்த கருத்து அடங்கி யுள்ளது.

கையில் கூர்வாள் இருந்தால் போதுமா? நன்கு பயன்படுத்த வேண்டுமே!

ஓர் ஊரில் உடன்பிறந்தார் நால்வர் இருந்தனர். அவர்களுள் மூவர் துணிவுடையவர். நாலாமவன் தொடை நடுங்கி. மிக்க வலிமையுடைய பகைவன் ஒருவனைத் துணிவுடைய மூவரும் வளைத்துக் கொண்டு தாக்கினர். அப்போது, தொடைநடுங்கி, தன் அண்ணன்மார்களை நோக்கி, அண்ணே! அவனைக் கெட்டியாய்ப் பிடித்துக் கொள்ளுங்கள் – நானும் ஓர் அடி அடித்துப் பார்க்க ஆசையாயிருக்கிறது – என்று கூறினானாம். இத்தகைய தொடைநடுங்கிப் பேடிகளிடம் கூர்வாள் இருந்தும் யாது பயன்? பேடி கை வாளைப்பற்றி வள்ளுவர் பின்வருமாறு கூறியுள்ளார்:

“தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை
வாளாண்மை போலக் கெடும்” (614)
 
“பகையகத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத்து
அஞ்சுமவன் கற்ற நூல்” (727)

என்பன குறள்கள். அதனால்தான், பாவேந்தர், வீரன் என்ற சொல்லையும் கூர் என்ற சொல்லையும் அடக்கி ‘வீரனும் கூர்வாளும் போலே’ என்றார். அடுத்து மூன்றாம் பகுதி: வண்ணப் பூவும் மணமும்

மணம் இல்லா மலருக்கு மதிப்பு இல்லை. இத்தகைய மலர்களை, ‘இணர் ஊழ்த்தும் நாறாமலர்’ என்று குறிப்பிட்டுள்ளார் குறளார். ‘பொன்மலர் நாற்றம் உடைத்து’ என்னும் பொன்னான மொழியும் மலருக்கு மணத்தின் தேவையைக் கோடிட்டுக் காட்டியுள்ளது.

கவியரசர் ‘பூ’ என்று மட்டும் கூறவில்லை. ‘வண்ணம்’ என்னும் அடைமொழி தந்து ‘வண்ணப் பூ’ என்று குறிப்பிட்டுள்ளார். பின் வண்ணப் பூவோடு மணத்தை இணைத்துள்ளார். பூவின் வண்ணத்திற்கும் மணத்திற்கும் நோக்கம் உண்டு.

பெண் பூவில் கருப் பகுதியில் ஆண்பூவின் மகரந்தப் பொடி வந்து ‘பிற மகரந்தச் சேர்க்கை’ உண்டானால் வளமான காய் காய்க்கும். வண்டுகள் ஆண் பூக்களிலிருந்து மகரந்தப் பொடியைக் கொண்டு வந்து பெண் பூக்களின் கருப் பகுதியில் சேர்க்கும். இவ்வாறு வண்டுகள் செய்ய அவற்றை ஈர்ப்பதற்காகவே, மலர்கள் கவர்ச்சியான வண்ணங்கள் உடையனவாக உள்ளனவாம். மாலையில் மலரும் முல்லை முதலிய மலர்கள் வெண்மையா யிருப்பதற்குக் காரணம், இரவில் – இருட்டில் வெள்ளையாயிருந்தால்தானே தாம் இருப்பது வண்டுகட்குத் தெரியும் என்பதாகும். மணம் வீசுவதும் வண்டுகளை ஈர்ப்பதற்கே.

இந்த இரண்டு செய்திகளையும் கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை மிகவும் அழகாகக் கூறியுள்ளார்.

“மஞ்சள் குளித்து முகம் மினுக்கி – இந்த
மாயப் பொடி வீசி நிற்கும் நிலை” (மலரும் மாலையும்)

எனச் சூரியகாந்தி என்னும் தலைப்பில் கூறியுள்ளார். மஞ்சளாயிருக்கும் சூரியகாந்தி, வண்டுகளை ஈர்ப்பதற் காக மஞ்சள் பூசி முகத்தை மினுக்குகிறதாம். மலர்கள் மாயப் பொடி (மகரந்தத் தூள் – Pollen) வீசுகின்றனவாம். “என் மருமகள் என் மகனுக்கு என்னவோ சொக்குப் பொடி போட்டு விட்டிருக்கிறாள்” என மாமியார் சொல்வதாகக் கூறப்படும் உலகியல் செய்தி ஈண்டு ஒப்பு நோக்கத் தக்கது. மேலும் ஒரு பாடலில் கவிமணி அறிவிக்கிறார்:

“வண்டின் வரவு எதிர் பார்த்திருப்போம் – நல்ல
வாசமும் வீசி நிற்போம்” (மலரும் மாலையும்)

வண்டுகளை ஈர்க்க மணம் வீசப்படுகின்றதாம். கவுதமப் புத்தர் காப்பியம் என்னும் நூலிலும்,

“மாலை மலர்கள் மணம்வீசி – வண்டை
மயக்கியே தம்பால் ஈர்த்தனவே” (18-15)

என இச் செய்தி அறிவிக்கப்பட்டுள்ளது. இவற்றையெல்லாம் அறிவியலார் ‘இயற்கையின் தேர்வு’ (Selection of Nature) என்பர். எனவே, மலருக்கும் வண்ணத்திற்கும் மணத்திற்கும் உள்ள நெருங்கிய தொடர்பை அறிவிக்கவே, “வண்ணப் பூவும் மணமும் போலே” என்று பாடினார் பாவேந்தர். அடுத்து, பாடலின் நான்காம் பகுதி வருக:

மகர யாழும் இசையும்

யாழ் தமிழர்களின் இசைக்கருவி. யாழில் பலவகை உண்டு. பேரியாழ், மகரயாழ், சகோட யாழ், செங்கோட்டி யாழ் என்னும் ஒருவகை நான்கனுள் மகர யாழும் ஒன்றாகும். இது, மகர (மீன்) வடிவம் அமையப் பெற்றுப் பத்தொன்பது நரம்புகளைக் கொண்டது. ‘குழலினிது யாழினிது’ என்னும் வள்ளுவர் வாய்மொழி யாழின் இனிமையை அறிவிக்கிறது.

யாழுக்கும் இசைக்கும் நெருக்கம் மிகுதி. பண்டு யாழ்க் கருவியை நிலைக்களமாகக் கொண்டே பெரும் பண்களும் அவற்றின் திறங்களும் நுண்ணிதின் ஆராய்ந்து வகைப்படுத்தப்பட்டன. யாழ் நரம்பின் துணை கொண்டு ஆராய்ந்து கண்ட பண்வகைகள் ‘யாழின் பகுதி’ எனப்படும், அப்பண்களின் இயல்பினை விளக்கும் இசை நூலை ‘நரம்பின் மறை’ என்று தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ளார். மகர யாழ் பற்றிய ஆட்சி பல நூல்களின் இடம் பெற்றுள்ளது. மணிமேகலையில்,

“தகரக் குழலாள் தன்னொடு மயங்கி
மகர யாழின் வான்கோடு தழீஇ” (4-55,56)

எனவும், மேருமந்திர புராணத்தில்,

“மகர யாழ் வல்ல மைந்தன் ஒருவனைக்கண்ட மத்தப்
புகர் முகக் களிற்றின்…” (வச்சிராயுதம்-31)

எனவும் மகர யாழ் இடம் பெற்றுள்ளது. இவற்றைக் கொண்டு, இசைக்கு, மற்ற கருவிகளைவிட யாழோடு தொடர்பு நெருக்கம் என்பது பெறப்படும். எனவேதான், மகர யாழும் இசையும் போலே’ என்றார் பாவரசர்.

கண்ணும் ஒளியும்

இது பாடலின் ஐந்தாம் பகுதி. கண்கள் இருப்பினும், எந்த ஒளியும் சிறிதும் இல்லையேல், கண்கள் எதையும் பார்த்துத் தெரிந்துகொள்ள முடியாது. எவ்வளவோ மிக்க பேரொளி இருப்பினும், கண்கள் இல்லையேல் – குருட்டுக் கண்களால் எப்பொருளையும் பார்த்தறிதல் இயலாது. பொருள்களைக் காணும் நிலையில் கண்கட்கும் ஒளிக்கும் உள்ள இணைபிரியாத் தொடர்பினால், “கண்ணும் ஒளியும் போலே” என்று பாடினார் பாவேந்தர்.

கன்னல் தமிழும் கவியரசரும்

பாடலின் ஆறாம் பகுதி ‘கன்னல் தமிழும் யானும்’ என்பது. தமிழ் கன்னல் தமிழாம். கன்னல் என்பதற்கு, கரும்பு, சர்க்கரை, இனிமை என்ற பொருள்கள் உண்டு. அதாவது, கன்னல் தமிழ் என்றால், கரும்புபோல் இனிக்கும் தமிழ் என்பது பொருளாம். தஞ்சைவாணன் – கோவை ஆசிரியர் பொய்யா மொழிப் புலவர்,

“தேருந்தொறும் இனிதாம் செந்தமிழ்”

என்றார். மாணிக்க வாசகர் திருக்கோவையாரில்

“உயர் மதில் கூடலின் ஆய்ந்த ஒண் தீந்தமிழ்”

என்றார். தீந்தமிழ் = தித்திப்பான தமிழ்.

தமிழ் என்ற சொல்லுக்கே இனிமை என்ற பொருள் உண்டு.

எனவே, தமிழுக்கும் தமக்கும் நெருக்கம் மிகுதி எனக் கவியரசர் கூறுகிறார். வானத்திற்கு வெண்ணிலாபோல வீரனுக்குக் கூர்வாள் போல-மலருக்கு மணம் போல-மகர யாழுக்கு இசைபோல-கண்ணுக்கு ஒளிபோல-என உவமைகளை அடுக்கி, கவிஞருக்குத் தமிழ். இன்றியமையாதது எனக் கருத்து கொள்ளலாகாது. இந்த உவமைகளை அடுக்கி, இவற்றைப்போல, தமிழுக்குக் கவியரசர் இன்றி மையாதவர் எனக் கருத்து கொள்ளல் வேண்டும். அந்த அளவுக்குக் கவிஞர், தமிழின் பெருமைகளை, விளக்கிப் பல சிறந்த தமிழ் நூல்களைப் படைத்துத் தமிழை வளர்த்து உள்ளார். கன்னல் தமிழும் கவியரசர் புகழும் வாழ்க. 

[tps://ta.wikisource.org/wiki/இயல்தமிழ்இன்பம்/கன்னல்தமிழும்கவியரசும்

About editor 3017 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply