பாட்டனாரின் இரண்டகத்தை வசதியாக மறந்துபோன பேரன் கஜேந்திரகுமார்!

மலையகத் தமிழர்களது வாக்குரிமையைப் பறித்த தேர்தல் திருத்த சட்டத்ததுக்கு ஆதரவாக பாட்டனார் வாக்களித்த இரண்டகத்தை வசதியாக மறந்துபோன பேரன் கஜேந்திரகுமார்!

 நக்கீரன்

(1)

கடந்த வார (ஓகஸ்ட் 11) கனடா உதயன்  ஏட்டில் “மலையக மக்களின் பிரஜா உரிமையை பறித்த சட்டத்திற்கு பாட்டனார் ஜி.ஜி பொன்னம்பலம் ஆதரவு வழங்கியமைக்காக மனிப்பு கேட்பீர்களா என்ற கேள்விக்கான தெளிவுபடுத்தலை பதிவு செய்ய விரும்புகிறேன் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவிப்பு” என்ற செய்தி வெளியாகியிருந்தது. செய்தியை எழுதியவர் பு.கஜிந்தன்.
இந்தச் செய்தி உரையைப் படித்தபோது அதிவீரராமர் எழுதிய வெற்றிவேற்கையில் வரும் ஒரு பாடல் ஒன்று நினைவுக்கு வந்தது.

வாய்ப்பறை யாகவும் நாக்கடிப் பாகவும்
சாற்றுவது ஒன்றைக் போற்றிக் கேண்மின்.
பொய்யுடை யொருவன் சொல்வன் மையினால்
மெய்பொ லும்மே மெய்போ லும்மே
மெய்யுடை ஒருவன் சொல்லாட் டாமையால்
பொய்போ லும்மே பொய்போ லும்மே.
(வெற்றிவேற்கை பாடல் 34)

கஜேந்திரகுமார் பொன்னம்பலம்  ஒரு சட்டத்தரணி. சட்டத்தரணிகளுக்கு இயல்பாக இருக்கும் வாய்வன்மை, வாதத்திறமை இரண்டையும் பயன்படுத்தி தனது பாட்டன் ஜிஜி பொன்னப்பலம் 8 இலட்சம் மலைநாட்டுத் தமிழர்களுக்கு இழைத்த இரண்டகத்தை பூசி மெழுகப் பார்க்கிறார். நியாயப்படுத்தப் பார்க்கிறார். வெள்ளை அடிக்க எத்தனிக்கிறார்.வரலாற்றைத் திரிக்க முயற்சிக்கிறார்.
“மலையக மக்களை இந்த நாட்டில் உரிமையற்றவர்களாக மாற்றிய சட்டத்தை எனது பாட்டனார் ஜீஜீ பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் முற்றுமுழுதாக எதிர்த்தே வாக்களித்திருந்தது என்பதை மிகத் தெளிவாக இந்த இடத்தில் பதிவு செய்ய விரும்புகிறேன்.”

அதன் பின்னர் இலங்கையின் சுதந்திரத்துக்குப் பின்னர் ஒரு பல்லின பிரதிநிதித்துவ அரசை அமைக்க அழைப்பு விடுத்த பிரதமர் டி.எஸ். சேனநாயக்காவுடன் நடந்த பேச்சுகளில் மலையக மக்களின் குடி உரிமையை பறித்த இலங்கைக் குடியுரிமை சட்டத்தை மீளப்பெறுமாறு அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் நிபந்தனை விதித்திருந்தது.”

உண்மை என்னவென்றால் இலங்கைக் குடியுரிமைச் சட்டம் 28 நாடாளுமன்றத்தில் ஓகஸ்ட் 20 1948 இல் நிறைவேற்றப்பட்டது. அந்தச் சட்டம் நொவெம்பர் 15 அன்று நடைமுறைக்கு வந்தது. ஆனால் ஜிஜி பொன்னம்பலம் பெரிய சேனநாயக்காவின் அமைச்சரவையில் செப்தெம்பர் 03 அன்று அமைச்ராகி விட்டார்! அதாவது எண்ணி 14 நாட்களில் அமைச்சராகி விட்டார்!

ஜிஜி பொன்னம்பலம் அலரிமாளிகைக்கு வருகை செய்து பெரிய சேனநாயக்கவிடம் சரணடைந்த அந்தக் கண்றாவிக் காட்சியை ஜே.எல். பெர்னாண்டோ இப்படி விபரிக்கிறார் “தெமில [பொன்னம்பலம்] சிங்கள சிங்கமான டி.எஸ்.சேனாநாயக்கவின் முன் குனிந்து அமைச்சரானார்.” (இலங்கையின் மூன்று பிரதமர்கள், எம்.டி. குணசேன, 1963, பக். 27. ஜிஜி பொன்னம்பலத்தை விரைவில் வாக்காளர்கள் தள்ளிவிட்டு விடுவார்கள்.)

(According to J.L Fernando (Three Prime Ministers of Ceylon, MD Gunasena, 1963, p. 27), “The Damila [Ponnambalam] bowed low before the Sinhala Lion, DS Senanayake, and was made a Minister.” GGP would soon be rejected by the Tamil electorate.)

இது எதனைக் காட்டுகிறது? ஓகஸ்ட் 20 க்குப் பின்னர் அல்ல அதற்கு முன்னரே  ஜிஜி பொன்னம்பலம் திரைமறைவில் – தந்தை செல்வநாயகம், கு. வன்னியசிங்கம் போன்றோருக்குத் தெரியாமல் – பெரிய சேனநாயக்கா அவர்களுடன் தனக்கு ஒரு முழு அமைச்சர் பதவியும் மேலும் ஒருவருக்கு அரை அமைச்சர் பதவியும் இன்னும்  ஒருவருக்கு துணை அவைத் தலைவர் பதவிக்கும் இரகசியமாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தார் என்பதே!

மேலே குறிப்பிட்டது போல இலங்கைக் குடியுரிமைச் சட்டம் 28 எதிராக ஓகஸ்ட் 20,1948 அன்று இதய சுத்தியோடு ஜிஜி பொன்னம்பலம் பேசியிருந்தால் எப்படி அல்லது ஏன் எண்ணி 14 நாட்களுக்குள் பெரிய சேனநாயக்காவின் அமைச்சரவையில் இடம் பிடித்தார்? எதற்காக குத்துக்கரணம் அடித்தார்? உண்மை என்னவென்றால் இலங்கைக் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக ஒப்புக்கு பேசிவிட்டு, ஒப்புக்கு வாக்களித்துவிட்டு பெரிய சேனநாயக்காவிடம் கேவலம் ஓர் அமைச்சர் பதவிக்காக 8 இலட்சம் மலையகத் தமிழர்களின் குடியுரிமை பறிக்கப்பட்டதற்கு மறைமுகமாக உடந்தையாக இருந்தார் என்பதே யதார்த்தமாகும்.

“அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ்) தலைவர் ஜிஜி பொன்னம்பலம் இலங்கைக் குடியுரிமை சட்டமூலத்திற்கு எதிராகப் பேசவில்லை, அதற்கு எதிராக வாக்களித்ததோடு தனது முயற்சியை முடித்துக் கொண்டார். டி.எஸ்.சேனநாயக்கவுடன் அமைச்சரவையில் இணைவதற்குப் பொன்னம்பலம் பேச்சுவார்த்தை நடத்தியதாக நம்பப்படும் காலம் அது என்று பல ஆண்டுகளுக்குப் பிறகு எஸ்.ஜே.வி.செல்வநாயகம் என்னிடம் கூறினார்” என்கிறார் முன்னாள் நா.உறுப்பினர் வே. நவரத்தினம். (நூல் “தமிழ்த் தேசத்தின் வீழ்ச்சியும் எழுச்சியும்” – 2021 பதிப்பு – பக்கம் 50)

“The All Ceylon Tamil Congress leader G.G. Ponnambalam did not speak against the Ceylon Citizenship Bill, but contend himself with merely voting against it. S.J.V. Chelvanayakam told me many years later that was the time when Ponnambalam was believed to have been negotiating with D.S. Senanayake to join the Cabinet” writes V. Navaratnam former MP in his book “The Fall and Rise of Tamil Nation” 2021 second edition page 50.

ஜி.ஜி.பொன்னம்பலத்திற்கு நியாயம் செய்யும் வகையில் 1948 ஆண்டு ஓகஸ்ட் 20 ஆம் திகதியிடப்பட்ட அரச இதழ் (பக்கங்கள் 21821 – 1861) ஊடாக இலங்கைகுடியுரிமைச் சட்டமூலத்திற்கு எதிராகப் பேசினார் என்பது உறுதியாகிறது.

இது பற்றி அறுபதுகளில் தந்தை செல்வநாயகம் அவர்களிடம் நான் கேட்ட போது தான் நாடாளுமன்றத்தில் பேசிக் கொண்டிருந்த போது தனக்கு அருகில் அமர்ந்திருந்த ஜிஜி பொன்னம்பலம் “Chelva, don’t burn your boats, Chelva don’t burn your boats” என கிசு கிசுத்துக் கொண்டு எனது கோட் சட்டையை இழுத்தபடி இருந்தார்” எனச் சொன்னார். இந்த ஆங்கில பழமொழியின் பொருள் “நீங்கள் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் உங்கள் படகுகள் / பாலங்களை எரித்தால், அந்த நிலைமைக்கு திரும்புவதற்கான சாத்தியமான அனைத்து வழிகளையும் நீங்கள் அழிக்கிறீர்கள்” என்பதாகும்.

இவ்வளவிற்கும் மலையகத் தமிழர்களின் நலன்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும்போது, அவர்களுக்கு உறுதுணையாக நின்று குரல் கொடுப்பேன் என்று இலங்கை இந்திய காங்கிரஸ் கட்சிக்கு ஜிஜி பொன்னம்பலம் எழுத்தில் உறுதி அளித்தாதிருந்தார். அப்படி எழுத்தில் கொடுக்கப்பட்ட உறுதிமொழி பின்வருமாறு,


“இலங்கையில் இந்தியர்களின் உரிமைகள் மற்றும் தகுதிக்கான இலங்கை இந்திய காங்கிரசின் கோரிக்கையை ஆதரிப்பதாகவும், கடைப்பிடிப்பதாகவும் நான் உறுதியளிக்கிறேன். அதாவது அரசியல் வாக்குரிமைக்கான தகுதி ஆறு மாத எளிய இருப்பிடத் தேர்வின் அடிப்படையில் இருக்க வேண்டும்.

தீவில் ஐந்தாண்டுகள் வதிதல் மற்றும் நிரந்தரத் தீர்வுக்கான விருப்பத்தை பிரகடனம் செய்தல் என்பன ஏனைய மக்களுடன் சமத்துவத்தின் அடிப்படையில் ஒரு நபருக்கு முழுமையான குடியுரிமையைப் பெற்றுக் கொடுக்க வேண்டும்.

மேற்குறிப்பிட்ட தகைமையைப் பெறாத ஆட்கள் குறிப்பிட்ட எதிர்காலத் திகதியில் அவற்றைப் பெற்றுக்கொள்ள அனுமதிக்கப்படுவர்.”

தமிழர் பலமான ஜிஜி பொன்னம்பலத்துக்கு ஒரு அமைச்சர் பதவி கொடுத்து வசப்படுத்தித் தனது கக்கத்தில் வைத்துக் கொண்ட பெரிய சேனநாயக்க மரத்தாலே விழுந்தவனை மாடேறி மிதித்த கதையாக மலையகத் தமிழர்களது குடியுரிமைக்கு உலைவைத்த கையோடு அடுத்து ஆண்டு (1949) அவர்களது வாக்குரிமைக்கும் வேட்டு வைத்தார்.

இலங்கை (நாடாளுமன்றத் தேர்தல்கள்) திருத்தச் சட்ட எண் 1946 க்கு பெரிய சேனநாயக்க ஒரு ஒருவரித் திருத்தத்தை கொண்டு வந்தார். அந்தத் திருத்தம் (48/49) நாட்டு மக்களது வாக்குரிமையை குடியுரிமையையோடு முடிச்சுப் போட்டது. (Welcome to UTHR, Sri Lanka)

தளது பாட்டனார் ஜிஜி பொன்னம்பலம் இலங்கைக் குடியுரிமை சட்டத்தை நாடாளுமன்றத்தில் எதிர்த்துப் பேசினார், எதிர்த்து வாக்களித்தார் எனத் துதிபாடும் கஜேந்திரகுமார் அதே பாட்டனார் மலையகத் தமிழர்களது வாக்குரிமையைப் பறித்த இலங்கை (நாடாளுமன்றத் தேர்தல்கள்) திருத்தச் சட்ட எண் 48/1949 பற்றி வாயே திறக்கவில்லை. அந்த இரண்டகத்தை அவர் வசதியாக மறந்துவிட்டார். அந்தச் சட்டத்துக்கு அப்போது அமைச்சராக இருந்த ஜிஜி பொன்னம்பலம் ஆதரித்து வாக்களித்தார். அமைச்சர் பதவியா, மலையகத் தமிழர்களின் வாக்குரிமையா என்ற கேள்வி எழுந்த போது ஜிஜி பொன்னம்பலம் அமைச்சர் பதவியை இறுகப் பற்றிக் கொண்டார்.

பெரிய சேனநாயக்க கொண்டு வந்து நிறைவேற்றிய 48/1949 தேர்தல் சட்ட திருத்தத்தின் மூலம் எட்டு இலட்சம் மலையகத் தமிழர்கள் தங்கள் வாக்குரிமையை ஒரே இரவில் இழந்தார்கள்.

1949 சட்டப், பிரிவு 4 (1) வெறுமனே கூறியது: “எந்தவொரு குடிமகனும் அவர் இலங்கையின் குடிமகனாக இல்லாத போது அவரது பெயர் எந்தவொரு ஆண்டில் அல்லது எந்தவொரு வாக்காளர் பதிவேட்டில் பதிவுசெய்யப்படவோ அல்லது தக்கவைக்கப்படவோ தகமையற்றவர் ஆவர்.

The 1949 Act, in section 4(1), simply stated: “No person shall be qualified to have his name entered or retained in any register of electors in any year if such person is not a citizen of Ceylon.”

இந்த சட்ட திருத்தத்திற்கு முன்னர் மலைநாட்டுத் தமிழர்கள் 1931 மற்றும் 1936 இல் சட்ட சபைக்கு நடந்த தேர்தலிலும், 1947 இல் நாடாளுமன்றத்துக்கு 1947 நடந்த தேர்தலிலும் வாக்களித்து இருந்தார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

1947 இல் நடந்த தேர்தலில் மலைநாட்டுத் தமிழர்கள் இலங்கை இந்திய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 7 பேர் நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டார்கள். அவர்களது வாக்குப் பலம் மேலும் இருபது தொகுதிகளின் வெற்றிக்கு வழிகோலியது. தொழிலாள வர்க்கம் என்பதால் அவர்கள் பெரும்பாலும் இடதுசாரிக் கட்சிகளுக்கு (சமஜமாஜிக் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி) வாக்களித்தார்கள். ( தொடர்ச்சி அடுத்த வாரம்)

—————————————————————————————————————–

மலையகத் தமிழர்களது வாக்குரிமையைப் பறித்த தேர்தல் திருத்த சட்டத்ததுக்கு ஆதரவாக பாட்டனார் வாக்களித்த இரண்டகத்தை வசதியாக மறந்துபோன பேரன் கஜேந்திரகுமார்!

(2)

சென்ற வாரத் தொடர்ச்சி………

1947 இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஏழு இடங்களில் வெற்றிபெற்ற இலங்கை இந்திய காங்கிரஸ் கட்சி 1952 இல் நடந்த தேர்தலில்  ஒரு இடத்தில் கூட வெற்றிபெற முடியவில்லை.

இலங்கை அரசியல் வரலாற்றில்  முன்னாள் பிரதமர் டி.எஸ். சேனநாயக்கா முக்கிய இடமுண்டு. பத்தாம் தரத்தை தாண்டாத பெரிய சேனநாயக்கா டி. எஸ். சேனநாயக்கா (20-10-1884 – 22 – 03 – 1952)  (Don Stephen Senanayake, ஒக்தோபர் 20, 1884 – மார்ச் 22, 1952) இலங்கையின் முதலாவது பிரதமரும், அரசியல்வாதியும் ஆவார். பவுத்தரான இவர் கொழும்பில் கல்கிசையில் உள்ள தூய தோமாவின் கல்லூரியில் பயின்றார். பின்னர் சிறிது காலம் நில அளவை திணைக்களத்தில் எழுத்தராகப் பணியாற்றினார். அதன் பின் தனது தந்தையாருக்கு சொந்தமான இறப்பர்த் தோட்டத்தைக் கவனிக்கச் சென்றுவிட்டார்.

1929 இல் இலங்கை சட்டவாக்கப் பேரவையில் ஓர் உறுப்பினரானார். 1931 அரசாங்க சபைக்குத் தெரிவு செய்யப்பட்டதுடன் வேளாண்மை, காணி அமைச்சரானார். வேளாண் மறுமலர்ச்சிக்குப் பெரிதும் உழைத்தார். 1946 இல் பிரித்தானிய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட சேர் பட்டத்தை மறுத்தார். எனினும் பிரித்தானியருடன் நல்லுறவைப் பேண விரும்பினார். 1947 இல் நடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு இலங்கையின் முதலாவது பிரதமரானார். 1948 பெப்ரவரி 4 இல் பிரித்தானியக ஆதிக்கம் முடிவுற்றதும் முழு இலங்கையையும் நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்றார். கல்லோயா திட்டத்தினைத் தொடங்கி வைத்தார். 1952 இல் காலிமுகத் திடலில் குதிரை ஓடிக் கொண்டிருந்த போது விழுந்து காயமடைந்தார். அவருடன் ஜிஜி பொன்னம்பலமும் குதிரை ஓடிக் கொண்டிருந்தார். மருத்துவ மனையில் சேர்க்கப்பட்ட பெரிய சேனநாயக்கா சிகிட்சை பலனின்றி இறந்தார். இவருக்கு பின் இவரது மகன் டட்லி சேனாநாயக்க இலங்கையின் பிரதமரானார்.

சோல்பரி ஆணைக் குழு 1944 இல் இலங்கை வந்தபோது அந்த ஆணையத்தை சாட்டுக்கு புறக்கணிப்பதாக அறிவித்து விட்டு திரைமறைவில் அந்த ஆணையத்தோடு நட்பான உறவுகளை வைத்துக் கொண்டிருந்தார். சோல்பரி ஆணைக் குழு பரிந்துரைத்த இலங்கை சுதந்திர யாப்பு பெரும்பாலும் பெரிய சேனநாயக்காவும் அவரது அமைச்சர் அவையும் கொடுத்த வரைவுதான். அதனை அன்றைய பேரதேனிய பல்கலைக் கழக துணை வேந்தர் ஐவர் ஜெனிங்ஸ் வரைந்திருந்தார்.  இவற்றால்  பெரிய சேனநாயக்கா சுதந்திர இலங்கையின் சிற்பி என வருணிக்கப்படுகிறார்.

இலங்கை சுதந்திரம் அடையும்வரை பெரிய சேனநாயக்கா தன்னை ஒரு தேசியவாதியாக காட்டிக் கொண்டார். தன்னை ஒரு சிங்களவர் என்று காட்டிக் கொள்ளாமல் தன்னை ஒரு அசல் இலங்கைவாதியாகக் காட்டிக் கொண்டார். இலங்கை சுதந்திரம் பெற்ற பின்னரே அவரது சுயரூபம் தெரியவந்தது.

1947 இல் இலங்கை இந்திய காங்கிரஸ் தேர்தலில் போட்டியிட்டு 7 தொகுதிகளில் வெற்றி ஈட்டியது. அதே நேரம் இடதுசாரிகள் போட்டியிட்ட ஏறக் குறைய 20  தொகுதிகளில் இந்தியத் தமிழர்களது வாக்குப் பலம் வெற்றி தோல்வியை தீர்மானித்தது.  இதன் விளைவு கண்டிப் பிரதேசத்தில் கண்டிய சிங்களவர் தேர்தலில் தோல்வியை தழுவினார்கள். இது பெரிய சேனநாயக்கா உள்ளத்தை உறுத்தியது. மேலும் இந்தியத் தமிழ் வாக்காளர் கம்யூனிஸ்ட் – ரொஸ்க்சயிட் போன்ற இடதுசாரிகளுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ததையும் பெரிய சேனநாயக்க நயக்கவில்லை. இந்த இரண்டு காரணிகளே இந்திய வம்சாவழித் தமிழர்களது குடியுரிமையையும் வாக்குரிமையும் பறிப்பதற்குக் காரணமாக அமைந்தன.   சோல்பரி ஆணைக் குழுவின் யாப்பு வரைவில் இலங்கையின் குடிமக்கள் யார், வாக்குரிமை யாருக்கு என்ற இரண்டு முக்கிய விடயங்கள் வரைவு யாப்பில் விடுபட்டுப் போயின. அதற்கு காரணம் பெரிய சேனநாயக்காவின் தந்திர அரசியல்தான்.

இலங்கை குடியரிமை வரைவு சட்டத்தை சாட்டுக்கு எதிர்த்து பேசியும் வாக்களித்த ஜிஜி பொன்னம்பலம் 14 நாட்கள் கழித்து பெரிய சேனநாயக்காவின் அமைச்சரவையில் செப்தெம்பர் 03 அன்று சேர்ந்து கொண்டதை ஏற்கனவே பார்த்தோம். பின்னர் அடுத்த ஆண்டு  இலங்கை (நாடாளுமன்றத் தேர்தல்கள்) திருத்தச் சட்ட எண் 48/49 திருத்தத்தை பெரிய சேனநாயக்கா கொண்டுவந்து நிறைவேற்றிய போது ஜிஜி பொன்னம்பலம் (யாழ்ப்பாணம்) உட்பட 4  தமிழ்க் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த நா. உறுப்பினர்கள் (வி.குமாரசாமி (சாவகச்சேரி)  ரி. இராமலிங்கம் (பருத்தித்துறை)  கே.  கனகரத்தினம் ( வட்டுக்கோட்டை) ஆதரித்து வாக்களித்தார்கள்.  மூன்று நா.உறுப்பினர்கள்  சா.ஜே.வி செல்வநாயகம் (காங்கேசன்துறை) எஸ். சிவபாலன் (திருக்கோணமலை)  கு.வன்னியசிங்கம் (கோப்பாய்) எதிர்த்து வாக்களித்தார்கள்.

கஜேந்திரகுமார் சொல்கிறார் “உண்மையில் அதை எதிர்த்தது தமிழரசுக்கட்சிதான். அந்த நிலைப்பாட்டில் கூட இறுதிக் கட்டத்தில் மாற்றத்தை செய்ததால் வெறும் 15% ஆன மலையக மக்களே பிரஜா உரிமை பெற கூடியதாக இருந்தது. 85% மலையக மக்கள் பிரஜா உரிமை பெறும் சந்தர்ப்பத்தை வீணாக இழந்திருந்தோம். தமிழரசுக்கட்சியின் கோரிக்கையின் பிரகாரம் இந்த சட்டமூலத்தினை பகிஷ்கரித்தமையால் ஏறத்தாழ 85% மலையக மக்கள் நாடற்றவர்கள் ஆனார்கள்”.  கேள்வி என்னவென்றால் இலங்கைக் குடியுரிமைச் சட்டம் 28/48 யை உள்ளத் தூய்மையுடன் எதிர்த்துப் பேசி வாக்களித்த  கட்சி பின் எதற்காக  இந்திய – பாகிஸ்தானிய குடியிருப்பாளர்கள் சட்டத்தை ( Indian & Pakistani Residents’ Act of 1949) ஏன் ஆதரித்தது? யதார்த்தம் என்னவென்றால் அப்போது ஜிஜி பொன்னம்பலம் அமைச்சரவையில் அமைச்சராக இருந்தார். அமைச்சுப் பதவியா? மலையகத் தமிழர்களின் வாக்குரிமையா? குடியுரிமையா? என வந்த போது ஜிஜி பொன்னம்பலம் அமைச்சுப் பதவியை தக்க வைக்க இந்திய – பாகிஸ்தானிய குடியிருப்பாளர்கள் சட்டத்துக்கும் ( Indian & Pakistani Residents’ Act of 1949 ஆதரித்து வாக்களித்தார். அவருக்கு வேறு தெரிவு இருக்கவில்லை.

இதே நிலைதான் 48/1949 தேர்தல் சட்ட திருத்தத்தம் நாடாளுமன்றத்தில் கொண்டுவந்து நிறைவேற்றப்பட்ட போது ஜிஜி பொன்னம்பலம் அந்த மக்களாட்சிக்கு முரணான சட்டத்தை ஆதரித்து வாக்களித்தார். அந்த சட்ட திருத்தத்தின் மூலம்  எட்டு இலட்சம் மலையகத் தமிழர்கள் தங்கள் வாக்குரிமையை ஒரே இரவில் இழந்தார்கள்.

1946  இல் எடுக்கப்பட்ட குடித்தொகைக் கணக்கின்படி  இலங்கைத் தமிழர்களது எண்ணிக்கை 733,700 (11.02%) ஆகவும் இந்தியத் தமிழர்களது எண்ணிக்கை 780,600 (11.73%) ஆகவும் மொத்தம் 1,574,300 (22.75%) இலட்சமாக இருந்தது. (1931 இல் இந்தியத் தமிழர்களது எண்ணிக்கை 818,500 (15.43%) ஆக இருந்தது!)

2012 இல் எடுக்கப்பட்ட குடித்தொகைக் கணக்கின்படி இலங்கைத் தமிழர்களது எண்ணிக்கை  2,269,266 (11.15%)  ஆகவும்  மலையகத்  தமிழர்களது எண்ணிக்கை 839,504 (4.12%) ஆகவும் மொத்தம் 31,08770 (15.27%) இருந்தது.

இதே கால கட்டத்தில் சிங்களவர்களின் எண்ணிக்கை 1946 இல்  4,620,500 (69.14%) ஆகவும் 2012 இல் 15,250,081 (74.90%) உயர்ந்து காணப்பட்டது. மலையகத் தமிழர்களின் எண்ணிக்கையும் விடுக்காடும் தேய்ந்து போன காரணத்தாலேயே சிங்கள அரசுகள் 1956 இல் சிங்களம் மட்டும் சட்டத்தை மிக எளிதாக 2/3  பெரும்பான்மை பலத்தோடு நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முடிந்தது. இந்தப் “புண்ணியம்” ஜிஜி பொன்னம்பலத்தையும் அவரது தமிழ்க் காங்கிரஸ் கட்சியை சேரும்! யானை தனது தலையில் மண்ணை வாரிக் கொட்டியது போல ஜிஜி பொன்னம்பலம் தனது தலையில் மண்ணை வாரிக்  கொட்டிக் கொண்டார்.

பின்வரும் மக்கள் தொகை அட்டவணை 1 இலங்கையில்  குடிப்பரம்பலில் சிங்களவர் கண்ட வளற்சியையும் தமிழர்கள் சந்தித்த வீழ்ச்சியையும் ஒரே பார்வையில் படம் பிடித்துக் காட்டுகிறது.

அட்டவணை 1

ஆண்டுசிங்களவர்இலங்கைத் தமிழர்இலங்கை சோனகர்இந்தியத் தமிழர்இலங்கை மலாய்பரங்கியர்இந்திய சோனகர்மற்றவர்கள்மொத்தம் எண்
எண்%எண்%எண்%எண்%எண்%எண்%எண்%எண்%
1881 Census1,846,60066.91%687,20024.90%184,5006.69% 8,9000.32%17,9000.65% 14,5000.53%2,759,700
1891 Census2,041,20067.86%723,90024.07%197,2006.56% 10,1000.34%21,2000.70% 14,2000.47%3,007,800
1901 Census2,330,80065.36%951,70026.69%228,0006.39% 11,9000.33%23,5000.66% 20,0000.56%3,566,000
1911 Census2,715,50066.13%528,00012.86%233,9005.70%531,00012.93%13,0000.32%26,7000.65%32,7000.80%25,6000.62%4,106,400
1921 Census3,016,20067.05%517,30011.50%251,9005.60%602,70013.40%13,4000.30%29,4000.65%33,0000.73%34,6000.77%4,498,600
1931 Estimate3,473,00065.45%598,90011.29%289,6005.46%818,50015.43%16,0000.30%32,3000.61%36,3000.68%41,8000.79%5,306,000
1946 Census4,620,50069.41%733,70011.02%373,6005.61%780,60011.73%22,5000.34%41,9000.63%35,6000.53%48,9000.73%6,657,300
1953 Census5,616,70069.36%884,70010.93%464,0005.73%974,10012.03%25,4000.31%46,0000.57%47,5000.59%39,5000.49%8,097,900
1963 Census7,512,90071.00%1,164,70011.01%626,8005.92%1,123,00010.61%33,4000.32%45,9000.43%55,4000.52%19,9000.19%10,582,000
1971 Census9,131,24171.96%1,423,98111.22%855,7246.74%1,174,6069.26%43,4590.34%45,3760.36% 15,5100.12%12,689,897
1981 Census10,979,56173.95%1,886,87212.71%1,046,9267.05%818,6565.51%46,9630.32%39,3740.27% 28,3980.19%14,846,750
2012 Census15,250,08174.90%2,269,26611.15%1,892,6389.30%839,5044.12%44,1300.22%38,2930.19% 25,5270.13%20,359,439

மூலம்: இலங்கைக் குடித்தொகை திணைக்களம்

முழு இலங்கையை விட கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்ட இன ரீதியான குடிப்பரம்பல் மாற்றம் மிக மிக சோகமானது. இலங்கை சுதந்திரம் பெற்ற கையோடு  பெரிய சேனநாயக்கா கிழக்கு மாகாணத்தில் நடத்தப்பட்ட திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம் அந்த மாகாணத்தின் குடிப்பரம்பலை தலைகீழாக மாற்றியது. அதற்குக் காரணம் மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடங்கப்பட்ட  கல் ஓயா (பட்டிப்பளை) சிங்களக்   குடியேற்றத் திட்டமும் திருகோணமலை மாவட்டத்தில் ஒப்பேற்றிய  அல்லை – கந்தளாய் சிங்களக் குடியேற்றத் திட்டகுடியேற்றத் திட்டமும் காரணமாகும். இந்தத் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம் காரணமாக கிழக்கில்  புதிதாக ஒரு மாவட்டமும் இரண்டு தேர்தல் தொகுதிகளும் உருவாக்கப்பட்டன.

1959 தேர்தல்தொகுதி மீள்நிர்ணயப் பரிந்துரைகளின் கீழ், பழைய நாடுகாட்டுப் பகுதியில், 19.03.1960 அன்று, “அம்பாறை” எனும் புதிய தேர்தல் மாவட்டம் உருவானது. எனவே, 1960இன் இறுதியில், மட்டக்களப்பின் தென்பகுதியில், பொத்துவில், கல்முனை, நிந்தவூர் என்ற நான்கு தேர்தல் தொகுதிகளோடு  அம்பாறை  என  நான்காவது  தேர்தல்  தொகுதி உருவாக்கப்பட்டன.

10.04.1961 அன்று இந்நான்கு தேர்தல்  தொகுதிகளையும் ஒன்றிணைத்து, புதிய நிர்வாக மாவட்டமொன்றை இலங்கை அரசு பிரகடனம் செய்தது. இதன்மூலம், பாரம்பரியமிக்க தமிழர் தாயகமான மட்டக்களப்புத் தேசம், மட்டக்களப்பு, அம்பாறை என இரு மாவட்டங்களாகத் துண்டாடப்பட்டது. இதற்கும் கஜேந்திரகுமாரின் பாட்டனார் ஜிஜி  பொன்னம்பலத்துக்கும் என்ன சம்பந்தம்? சம்பந்தம் நிறையவே இருகிறது. அதனை அடுத்த வாரம் பார்ப்போம். (தொடரும்)

—————————————————————————————————————————

மலையகத் தமிழர்களது வாக்குரிமையைப் பறித்த தேர்தல் திருத்த சட்டத்துக்கு ஆதரவாக பாட்டனார் வாக்களித்த இரண்டகத்தை வசதியாக மறந்துபோன பேரன் கஜேந்திரகுமார்!

(3)

 நக்கீரன்

கிழக்கில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம் பற்றி ஏற்கனவே குறிப்பிட்டுள்ளேன். பெரிய சேனநாயக்க உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று பேசுவதில் கெட்டிக்காரர். நுனிநாக்கில் தேன் அடிநாக்கில் நஞ்சு என்ற பழமொழிக்கு அவர் பொருத்தமானவர்.

 “எங்களில் சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் என்ற பேதமில்லை. நாங்கள் எல்லோரும் இலங்கையர்கள்” என நாடு சுதந்திரம் அடையும்வரை பேசி வந்தார். ஆனால் உள்ளூர தமிழ்மக்களது குடித்தொகையைக் குறைக்கவும் தமிழர்களது பாரம்பரிய நிலப்பரப்பில் தென்னிலங்கைச் சிங்களவர்களை “நிலமில்லாத உழவர்களுக்கு நிலம்”  (Land distribution to landless peasants) என்ற போர்வையில்  கிழக்கில் குடியேற்றி தமிழர்களது குடிப்பரம்பலை வெட்டிக் குறைக்கத்  திட்டங்களைத் தீட்டி அவற்றைத்  துரிதகதியில் நடைமுறைப் படுத்த இரகசியமாக வைத்திருந்தார்.

தமிழர்களது குடித்தொகையைக்  குறைக்க இலங்கை சுதந்திரம் அடைந்த அதே ஆண்டில் – முதல் 282 நாட்களில் – குடியுரிமை சட்டம் இல. 28/48 நாடாளுமன்றத்தில் கொண்டு வந்து  ஓகஸ்ட் 21, 1948 இல்  நிறைவேற்றினார்.  சமாந்திரமாக திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் மூலம் கிழக்கில் தமிழர்களது குடிப்பரம்பலை தலைகீழாக மாற்றி அமைக்கும் திட்டத்தை நடைமுறைப் படுத்தினார். அதன் விளைவை இன்று அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். கிபி 7 ஆம் நூற்றாண்டில்  வாழ்ந்த திருஞானசம்பந்தர்   “குடிதனை  நெருக்கிப் பெருக்கமாய் தோன்றும் கோணமாமலை அமர்ந்தாரே” எனவும் “குரைகடல் ஓத நித்திலங் கொழிக்கும் கோணமாமலை அமர்ந்திருந்தாரே” என ஏற்றியும் போற்றியும் பாடிய கோணமாமலை இன்று தமிழர்களது கைகளில் இருந்து பறிபோய்விட்டது. சம்பந்தரின் பதிகங்கள் சமய உணர்வை மட்டுமின்றி தமிழர்களது தாயக உணர்வை மட்டுமின்றி திருகோணமாமலையின் வரலாற்றை ஆய்வோருக்கு ஒரு ஆணவமாகவும் இருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது.

இலங்கையிலுள்ள பழைமை வாய்ந்த பல பௌத்த விகாரைகள் இல்லாது செய்யப்பட்டு, இந்துக் கோயில்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண தொல்பொருள் தொடர்பில் ஆராயும் சனாதிபதி செலயணியின் உறுப்பினர் எல்லாவல மேதானந்த தேரர் அண்மையில் தெரிவித்திருக்கின்றார். திருகோணமலையில் கோகன்ன விகாரை அமைந்துள்ள இடத்திலேயே தற்போதுள்ள  திருகோணேஸ்வரம் கோயில் அமைக்கப்பட்டுள்ளதாக அவர் பிபிசி (தமிழ்)க்கு அளித்த நேர்காணலில்  குறிப்பிட்டுள்ளார். பொலன்னறுவை  காலத்துக்கு சொந்தமான கல்வெட்டுக்களில் இந்த விகாரை இருந்தமைக்கான சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறுகிறார்.

வரவர மாமியார் கழுதைபோல் ஆனாள் என்பது போல  பொன்னம்பலம் அருணாசலம் காலத்தில் அன்றைய சிங்களத் தலைவர்கள் “கொழும்பு உங்களுடைய பிரதேசம் இல்லை. உங்களது தாயகம் வட கிழக்கு. அங்கு சென்று தேர்தலில் போட்டியிடுங்கள்” என அவருக்குச் சொன்னார்கள். அந்த வரலாற்றை சற்றுத் திரும்பிப் பார்ப்பது பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன்.

சட்டசபைக்கு  தேர்தல் மூலம் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட வேண்டும் என்ற கொள்கைக்காகப் போராடிய முதல் இலங்கையர் பொன்னம்பலம் அருணாசலம் ஆவார். 1875 ஆம் ஆண்டில் இலங்கை சிவில் சேவையில் நுழைந்த முதல் இலங்கையரும் இவரே. பிரித்தானிய மன்னரின் ஊழியனாக  அவர் பணியாற்றிய காலத்தில், அதிகாரப்பூர்வ கட்டுப்பாட்டைத் துறக்காமல் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்புக்கு ஆதரவாக புனைப்பெயரில் தொடர் கட்டுரைகளை எழுதினார். இவர் 1913 இல் பதிவாளர் பதவியில்  (Registrar General) இருந்து  ஓய்வு பெற்றார். அதே ஆண்டில் பிரித்தானிய மன்னருக்கு ஆற்றிய சிறப்பான சேவைகளுக்காக இவருக்கு சேர் பட்டம் கொடுத்து மதிப்பளிக்கப்பட்டது.

சிங்கள – தமிழ் இனங்களிடையே  நல்லுறவு  நிலவியதால் அது இலங்கையின் பிற்கால வரலாற்றில் சிறந்த காலமாகக் கருதப்பட்டது. 1919 டிசம்பர் 11 இல் அருணாசலத்தின் முயற்சியினால் இலங்கையின் முதலாவது தேசிய இயக்கமான இலங்கைத் தேசிய காங்கிரஸ்  (Ceylon National Congress) உருவாக்கப்பட்டது. அதன் முதலாவது தலைவராக அவரை  அக்கால சிங்களத் தலைவர்கள் எந்தத் தயக்கமுமின்றி ஒருமனதாத்  தெரிவு செய்தார்கள்.  அப்போது இரு இனத்தவர்களும் இரண்டு பெரும்பான்மைச் சமூகங்களாகக் கருதப்பட்டனர். 1922 ஆம் ஆண்டு முதல் சில சிங்களவர்கள் தமிழர்களை சிறுபான்மை இனமாகக்  கருதத் தொடங்கிய போதிலும் அருணாசலம் தேசிய ஒருமைப்பாட்டை அடையப்  பெரும் பாடுபட்டார்.

இலங்கைத் தேசிய காங்கிரஸ் தொடக்கப்பட்ட குறுகிய காலத்தில் அருணாசலம்  சிங்களத் தலைவர்கள் மீதான நம்பிக்கையை இழக்கத் தொடங்கினார். பிராந்திய தேசியவாதம் மற்றும் நலன்களுக்கு அப்பாற்பட்ட இந்திய தேசிய காங்கிரசின் வழியில் இலங்கைத்  தேசிய காங்கிரசை வடிவமைப்பதற்கான அவரது முயற்சிகளை எஃப்.ஆர்.சேனநாயக்க தலைமையிலான குழு எதிர்த்தது. பின்னர் அருணாசலம் கூறுகையில், சிங்கள தேசியவாத நலன்களுக்கு அப்பாற்பட்டு நிற்க அவர்கள்  மறுத்துவிட்டார்கள். அவர்கள் ஒவ்வொரு  சிக்கலையும் சிங்கள தேசியவாத நிலைப்பாட்டில் இருந்து பார்த்தனர்.


1921 சட்டமேலவை தேர்தலுக்கு முன்பு இந்த சிங்கள – தமிழ் உறவில் ஒரு பாரிய முறிவு ஏற்பட்டது.  இலங்கைத்  தேசிய காங்கிரஸ் உருவானபோது  தமிழர்களது பிரதிநித்துவம் பற்றிக் கீழ்க்கண்ட ஒரு உடன்படிக்கை எழுதப்பட்டது.


….இலங்கை தேசிய சங்கம், இலங்கை சீர்திருத்தச் சங்கம் என்பவற்றின் தலைவர்கள் என்ற முறையில், யாழ்ப்பாணச் சங்கத்தால் முன் வைக்கப்படும் எந்தவொரு திட்டத்தையும், அது தீர்மானங்கள் உள்ளடக்கும் பல்வேறு கொள்கைகளிலிருந்தும் வேறுபடாத பட்சத்தில், நாம் ஏற்றுக்கொள்வோம் என உறுதிமொழி அளிக்கிறோம். யாழ்ப்பாணச் சங்கம் உண்மையில் நியாயமற்ற எதனையும் வற்புறுத்தாது என நாம் நிச்சயமாக நம்புகிறோம், அத்தேர்தல் தொகுதி, பிரதேசத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கும் வரையில், மேல் மாகாணத்தில் தமிழருக்கென ஆசனத்தை ஒதுக்குவதற்காண ஏற்பாட்டை நாம் முனைப்புடன் ஆதரிப்போம் என உறுதியளிக்கத் தயாராய் உள்ளோம்…”

உங்கள் உண்மையுள்ள

ஜேம்ஸ் பீரிஸ் (தலைவர் – இலங்கை தேசிய சங்கம்)

ஈ.ஜே.சமரவிக்கிரம (தலைவர் – இலங்கை சீர்திருத்தக் கழகம்)
 

அப்போது சட்ட நிரூபன சபையின் தமிழ்ப் பிரதிநிதியாக இருந்த அ.சபாபதிக்கும் இதுபோன்ற வாக்குறுதியை அளித்திருந்தார்கள்.

“இந்த வாக்குறுதியினால், உங்களுக்கு வட மாகாணத்தில் மூன்று ஆசனங்களும், கிழக்கு மாகாணத்தில் இரு ஆசனங்களும் (உங்களால் முடிந்தால் இவ் எண்ணிக்கையை நீங்கள் அதிகரிக்கலாம்), தமிழருக்கு ஏனைய மாகாணங்களிலும், கொழும்பு மாநகர சபையிலும் இருக்கின்ற சந்தர்ப்பங்களுடன், மேல் மாகாணத்தில் பிரதேச தொகுதி அடிப்படையில் ஓர் ஆசனம் ஒதுக்கப்படவும் சாத்தியமாகின்றது.”

“மேல் மாகாணத்தில் தமிழருக்கு ஒரு தொகுதியை ஒதுக்குவதற்கு எமது ஆதரவைத் தருவோம் என்று வாக்குறுதியளிக்கிறோம்” என்ற செய்தியை அன்றே அருணாசலம்  சபாபதிக்கு அறிவித்தார்.

“…ஜேம்ஸ் பீரிசும், ஈ.ஜே.சமரவிக்கிரவும் உத்தரவாதம் அளித்திருக்கிறார்கள்… வடக்குக்கு மூன்று, கிழக்குக்கு இரண்டு, மேல் மாகாணத்துக்கு ஒன்று என்கிற வகையில் அவர்கள் அந்த உத்தரவாதத்தை அளித்திருக்கிறார்கள்… மேல் மாகாணத்தில் இந்தியத் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்த அரசாங்கம் நிச்சயம் வழிகளை ஏற்படுத்தும்… நமது சிங்கள நண்பர்கள் மேல்மாகாணத்தில் முஸ்லிம்களுக்கான பிரதிநிதித்துவக் கோரிக்கைக்கும் நிச்சயம் ஆதரவு வழங்குவார்கள்… முஸ்லிம்கள் அந்தக் கோரிக்கையை வலியுறுத்த வேண்டும்…

யாழ்ப்பாணத்திலிருந்து போதுமானளவு பிரதிநிதிகளுடன் நீங்களும் (சபாபதி), ஏ.கனகசபையும் இந்தத் தீவின் முக்கிய பொதுப் பிரச்சினையை தீர்ப்பதற்கான இந்த மாநாட்டில் கலந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன். 15ஆம் திகதி ஆளுநர் யாழ்ப்பாணத்துக்கு வருகை தருகிறார் என்பதை நான் அறிவேன். நீங்களும் கனகசபையும் 14 பின்னேரமோ அல்லது 13ஆம் திகதி கூட்டத் தீர்மானங்களை நிறைவேற்றியதும் இரயிலில் ஏறி சென்றுவிடலாம்…”

இப்படிக்கு

அருணாசலம்

ஜேம்ஸ் பீரிஸ் மற்றும்  சமரவிக்கிரம ஆகியோர் கொடுத்த உறுதிமொழிகளை நம்பி அந்த உத்தரவாதத்தை அருணாசலம்  யாழ்ப்பாணச் சங்கத்துக்கு வழங்கினார். இந்த உறுதிமொழிகளை  நம்பி யாழ்ப்பாணச் சங்கம்  இலங்கை தேசிய காங்கிரஸ் உருவாகுவதற்காக கைகோர்த்தது.

மேற்படி உறுதிமொழியின் பேரில் யாழ்ப்பாணச் சங்கமும் இன ரீதியான பிரதிநிதித்துவத்தைக் கைவிட்டு 11.12.1919 இல் நடந்த இலங்கை தேசிய காங்கிரஸ் கூட்டத்தில் கலந்துகொண்டது. அதன் தலைவராக  அருணாசலம்  நியமிக்கப்பட்டார். அவர் தலைமையேற்றதும் ஆற்றிய முதலாவது உரையில் பின்வருமாறு குறிப்பிட்டார்.

“சிறுபான்மையினருக்கான சிறப்புப் பிரதிநிதித்துவம் ஒரு தற்காலிக பயனை மட்டுமே வழங்கும் நான் நம்புகிறேன், இறுதியில் புதிய முறையின் நடைமுறையானது சிறுபான்மையினரையும் இந்த முழுத் தீவையும் ஒரே தேர்தல் தொகுதியாகக் கருதித் தீவினதும் பொது நலனுக்காக உழைப்பாளர்கள் என்று நம்புகிறேன்….”

எழுதப்பட்ட  உடன்படிக்கைக்கு அமைய கொழும்பு நகர இருக்கையைத்  தனக்கு ஒதுக்குமாறு சிங்களத் தலைவர்களான    ஜேம்ஸ் பீரிஸ் மற்றும் ஈ.ஜே. சமரவிக்ரம இருவரிடமும் அருணாசலம் கேட்டுக்கொண்டார். அருணாசலத்தின் கோரிக்கையை ஏற்றுக்கொள்வது வகுப்புவாரி பிரதிநிதித்துவக் கொள்கையை ஏற்றுக்கொள்வதாகும் என்று கூறி அவரது கோரிக்கையை இருவரும் நிராகரித்தனர். இது தொடர்பில்  வினவிய போது, அக்காலத்தில் இருந்த சங்கத்தின் தலைவர்களால்  வழங்கப்பட்ட உறுதிமொழிக்கு இலங்கை தேசிய காங்கிரசின் உத்தியோகத்தர்கள் என்ற வகையில் தங்களைக் கட்டுப்படுத்தாது என்று அவர்கள் விளக்கம் அளித்தனர்.

இலங்கை தேசிய காங்கிரஸ் அமைப்பை உருவாக்கிய பின்னர்  அருணாசலம் தனது தமையனார்  பொன் இராமநாதன் அவர்களைச் சந்தித்து நடந்ததைச் சொன்னபோது  “சிங்களவர்கள் அமர்வதற்குக் கதிரையைத் தந்து விட்டு அமரும்போது அதைப் பின்னால் இழுத்து உன்னை விழுத்திவிடுவார்கள்” என எச்சரிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.  சிங்களத் தலைவர்கள்    1918 இல் தேசிய காங்கிரசின் தலைமைப் பதவியை வழங்கிவிட்டு 1921ல் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற மறுத்து  அவரைத் தூக்கியெறிந்தனர்.  அந்தக் கழுத்தறுப்போடு   தொடங்கியதுதான் தமிழர் சிங்களவர்களுக்கு இடையிலான  இன மோதலாகும்.  அது ஒரு நூற்றாண்டு கடந்தும்  தொடர்கிறது.

The Sri Lankan Tamil Struggle Chapter 16 The Arunachalam Factor T ...

தமிழர்களைத்  தேசிய காங்கிரசுடன் இணைப்பதற்கான பேச்சுவார்த்தையில் அருணாசலம் அவர்களே  நடுவராகத் தொழிற்பட்டார். எழுத்து வடிவில் உடன்பாடு ஒன்றும் கைச்சாத்திடப்பட்டது. சிங்கள – தமிழ் தேசிய இனங்களின்  ஒற்றுமைக்காக அயராது பாடுபட்ட  அருணாசலம், மேல் மாகாணத்தில், குறிப்பாக கொழும்பில் தமிழர்களுக்கு ஒரு இருக்கையை சிங்களத் தலைவர்கள் வழங்க மறுத்ததால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார். தன்னை சிங்களத் தலைவர்கள் நம்பவைத்து கழுத்தறறுத்துவிட்டார்கள்,  ஏமாற்றி விட்டார்கள் என்ற ஆதங்கம் அவருக்கு ஏற்பட்டது. அந்தத்  தாக்கம் தொடர்பாக கருத்துத் தெரிவித்த பொன் இராமநாதன் பின்வருமாறு  கூறினார்.

“சிங்கள மற்றும் தமிழ் அரசியல் சிக்கல் தற்போது  இலங்கையர் மத்தியில் பெருமளவு குழப்பத்தை ஏற்படுத்துகின்றது…..வாக்குறுதியின் ஞானத்தையோ , சாத்தியத்தையோ, அதற்கு மற்றவர்கள் கட்டுப்படுவார்களோ அல்லவோ என்பவற்றையிட்டு எமக்குத் தகவல் தருபவர் என்னதான் கருத்தைக் கொண்டிருந்தாலும், இந்த இரு கனவான்களும்  தமது செல்வாக்கை பிரயோகிதிருக்க வேண்டுமென்பதிலும், தங்களது ஆதரவாளர்களை அதற்கு இணங்க வைத்திருக்க  வேண்டும் என நம்புகிறேன். ஆனால் அந்த இருவரும் அவற்றை மறுதலித்து விட்டனர்…… இனிமேலும் இந்த இலங்கைத் தேசிய காங்கிரசின்  சிங்களத் தலைவர்களை தமிழர் நம்பு மறுப்பது  ஒன்றும் வியப்பில்லை. தமிழர்கள்  தமது நலன்களைப் பாதுகாப்பதற்கு சுதந்திரமான நடவடிக்கை எடுக்கத் தீர்மானித்து விட்டனர்……. எனது  சொந்தக் கடமை தெளிவானது, நான் எனது வாக்குறுதியில் திடமாக இருக்கிறேன். (Tamils in Sri Lanka – A Comprehensive History page 425)

1921 இல் இலங்கைத் தேசிய காங்கிரசில் இருந்து வெளியேறித்  தமிழரது தனித்துவ தேசிய அடையாளத்தை நிலைநிறுத்த  இலங்கைத் தமிழர் மகாசபையை (Ceylon Tamil League)  அதே 1921 ஆண்டு  சனவரி 15 ஆம்  திகதி உருவாக்கினார். அதன் தலைமைப் பொறுப்பையும்   பொன் அருணாசலம்  ஏற்றுக்கொண்டார். அவர் தனது தலைமையுரையில் குறிப்பிட்டதாவது,

“குழுவின் அறிக்கை தமிழர் மகாசபையின் பணிகளையும் நோக்கங்களையும் இலட்சியங்களையும் முழுமையாக முன்வைப்பதால் நான் விரிவாகப் பேச வேண்டிய அவசியமில்லை. அரசியல் தேவையால்தான் தமிழர் மகாசபை உருவானது, ஆனால் அரசியல் என்பது அதன் அடிப்படை  கோட்பாடல்ல. காலங்காலமாக தமிழர்களை  உருவாக்கியிருக்கும் தமிழ்மக்களது  இலட்சியங்களை உயிர்ப்புடன் வைத்திருப்பதும் பரப்புவதும்,  அதன்  இலட்சியங்களை இலங்கையிலும், தென்னிந்தியாவிலும், தமிழ்க் குடியேற்ற நாடுகளிலும் உயிர்ப்புடன் வைத்திருப்பதும், தமிழகம், தமிழ்நாடு இரண்டினக்  ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் வளர்ப்பதும்  போன்ற மிக உயர்ந்த நோக்கங்களைக் கொண்டுள்ளன என்பது என் கருத்து.

ஆனால், எல்லா இன, மத சகோதர, சகோதரிகளுக்கும் சேவை செய்ய வேண்டும் என்ற பெருமிதமான கடமையையும், பாக்கியத்தையும் தமிழர்கள் கைவிடப் போவதில்லை. ஆனால் நாங்கள் கடுமையாக அச்சுறுத்தப்படுவதை எதிர்க்கிறோம், யாரையும் கீழ்த்தரமாக வைத்திருப்பதை நாங்கள் எதிர்க்கிறோம், நம்மை தற்காத்துக் கொள்ள நம்மை வலுவாகவும், பொது நன்மைக்காக உழைக்கவும் நாங்கள் விரும்புகிறோம்.”

‘இலங்கைத் தேசம்’ என்று போராடிய அவர், ‘தமிழர்கள் காலங்காலமாக தனித் தேசியத்தையும், தனி இறையாண்மையையும் அனுபவித்து வந்தனர்’ என்ற அடிப்படையில் ‘தமிழீழத்தை’ ஒன்றிணைப்பது, ஒருங்கிணைப்பது பற்றிப் பேசினார்.  தமிழர்களின் உணர்வுகளுக்குத்  துளியும் இடமளிக்க மறுப்பதில் சிங்களத் தலைவர்கள் பிடிவாதமாக இருப்பதையும், இலங்கையின் அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் தமிழர்களுக்கு உரிய நன்மைகள் இல்லாமல் பெரும்பான்மையினருக்கு ஆதாயம் தேடும் கொள்கையாக உருவாக்கப்படுவதையும் கண்டறிந்ததால் முதலில் ‘தமிழீழம்’ அமைப்பது பற்றி சிந்தித்தவர்  பொன்னம்பலம் அருணாசலம் ஆவர். ஆனால், அவரது தமிழீழ கோரிக்கையை நிராகரித்த யாழ்ப்பாணத் தமிழர்கள், ‘யாழ்ப்பாணத் தெருக்களில் அவருக்கு எதிராகக் கூக்குரலிட்டனர்’. (https://sangam.org/2010/12/Tamil_Struggle_18.php)

கடந்த  செப்தெம்பர் 17, 2023 அன்று  பொத்துவிலில் இருந்து  நல்லூரை நோக்கிச்  சென்று கொண்டிருந்த தியாக தீபம் திலீபன் அவர்களது உருவம் தாங்கிய ஊர்தி மீது  திருகோணமலை கப்பல்துறையில் வைத்து இராணுவ புலனாய்வாளர்கள் மற்றும் காவல்துறையினர் சூழ்ந்திருக்க சிங்களக் காடையர்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இதற்கான அடிப்படைக்  காரணம்  மட்டக்களப்பு மாவட்டம் போல் திருகோணமலையிலும்  பெரிய சேனநாயக்கா மேற்கோண்ட திட்டமிட்ட  சிங்களக்  (கல்ஓயா, அல்லை – கந்தளாய்) குடியேற்றங்களே.

திருகோணமலை கடந்த 100 ஆண்டுக்குள்  தமிழர்களது கையில் இருந்து பறிபோய்விட்டதை இந்தத் தாக்குதல் படம் பிடித்துக் காட்டுகிறது. 1921 ஆம் ஆண்டு திருகோணமலையில் வாழ்ந்த சிங்களவர் தொகை 1,501 (4.40 %). இன்று சிங்களவர்களது எண்ணிக்கை 101,991 (26.97 %) அதே காலகட்டத்தில் 1921 தமிழர்களது எண்ணிக்கை 18,580 ( 54.47 %). இன்று 2012 இல் தமிழர்களது எண்ணிக்கை 122,080 (32.28 %)! தமிழர்கள் இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டு்ளார்கள். முதலிடம் முஸ்லிம் 152,854 (40.42 %). அடுத்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் தமிழர்கள் மூன்றாம் இடத்துக்கு தள்ளப்படுவார்கள்! பொறுத்திருந்து பாருங்கள்! (தொடரும்)  


மலையகத் தமிழர்களது வாக்குரிமையைப் பறித்த தேர்தல் திருத்த சட்டத்துக்கு ஆதரவாக பாட்டனார் வாக்களித்த இரண்டகத்தை வசதியாக மறந்துபோன பேரன் கஜேந்திரகுமார்!

(4)

 நக்கீரன்

கிழக்கில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம் பற்றி ஏற்கனவே குறிப்பிட்டுள்ளேன். பெரிய சேனநாயக்க உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று பேசுவதில்  வல்லவராக இருந்தார். தமிழர்களை நம்ப வைத்து கழுத்தறுத்த முதலும் முக்கியமான சிங்களத் தலைவரும் அவர்தான்.

இந்திய வம்சாவழித் தமிழர்களின் குடியுரிமைக்கு மட்டுமல்ல அவர்களது வாக்குரிமைக்கும் வேட்டு வைக்கும் திட்டம் அவரிடம் இருந்தது,  ஆனால் அவற்றை வெளிக்காட்டவில்லை.

1946 ஆம் ஆண்டு டி.எஸ்.சேனாநாயக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட இலங்கை சுதந்திர சட்டமூலத்திற்கு,  தமிழ் சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களித்திருக்கா விட்டால் இலங்கை சுதந்திரம் பெற்றிருக்காது. சேனநாயக்கவின் உள்நோக்கம் மற்றும் சூழ்ச்சிகளை அறியாமல் தமிழ் சட்டமன்ற உறுப்பினர்கள் அவர் மீது நம்பிக்கை வைத்து ஏமாந்தினர், சிங்களவர்களின் கைகளால் தமிழர்களுக்கு எந்த தீங்கும் ஏற்படாது என்ற அவரது கபடமான அதே நேரம் இனிப்பான அறிவிப்பு தமிழர்களை  இந்த சட்ட  மூலத்துக்கு வாக்களிக்கத் தூண்டுவதற்கான சர்க்கரை பூசப்பட்ட மாத்திரையாகும்.

1946 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இலங்கை சுதந்திர சட்டமூலத்திற்கு  அரச சபையில் இருந்த  அனைத்து தமிழ் உறுப்பினர்களும் அரசியலமைப்பை ஏற்றுக்கொள்வதற்கு ஆதரவாக ஒருமனதோடு  வாக்களித்த பின்னர்  பெரிய சேனநாயக்க தனது ஏற்புரையில்  தமிழர்களுக்கு ஒரு உறுதிமொழி அளித்தார்.

 “சுதந்திர இலங்கையில்  உங்களுக்கு  (சிங்களவர் அல்லாதவர்கள்) எங்கள் கைகளிலிருந்து (சிங்களவர்) எந்தத் தீங்கும் ஏற்படும் என்று நீங்கள் பயப்படத் தேவையில்லை”.

மேலும் கூறுகையில் “நீங்கள் லண்டனிலிருந்து ஆளப்பட விரும்புகிறீர்களா அல்லது இலங்கை என்ற முறையில் இலங்கைக்கு உதவ விரும்புகிறீர்களா? இலங்கை தேசிய காங்கிரசின்(1919 இல் சேர் பொன்னம்பலம் அருணாசலத்தால் நிறுவப்பட்ட) சார்பிலும், சுதந்திர இலங்கையில் நீங்கள் பயப்படத் தேவையில்லை என்ற நேர்மையான உத்தரவாதத்தை சிறுபான்மை சமூகங்களுக்கு நான் வழங்குகின்றேன். இக்காலப்பகுதியில் அமைச்சர்கள் அதிகபட்ச சுதந்திரத்தை அடைவது பற்றிய ஒரேயொரு நோக்கத்தை மட்டுமே கொண்டிருந்தனர்.   சிங்கள ஆதிக்கம் குறித்த கற்பனையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. நாம் விரும்பியது சிங்கள மேலாதிக்கமல்ல, இலங்கை மேலாதிக்கம் என்பது ஒவ்வொருவருக்கும் தெளிவாகத் தெரிந்திருக்க வேண்டும் என்பதால் நாம் அவற்றைப் (குற்றச்சாட்டுக்களை) புறக்கணிக்க முடியும். சிறுபான்மையினருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு திட்டத்தை நாங்கள் உருவாக்கினோம்; பாரபட்சமான சட்டங்களுக்கு எதிராக நாங்கள் வேண்டுமென்றே அவர்களைப் பாதுகாத்தோம்.  தலைமை ஆளுநரிடம் (Governor – General)   முக்கியமான அதிகாரங்களை ஒப்படைத்தோம்… அரச சேவையில் இனவாதம் இருக்கக்கூடாது என்ற உத்தரவாதத்தை வழங்குவதற்காக சுயாதீன அரச சேவை ஆணைக்குழுவொன்றை உருவாக்கத்  தீர்மானித்தோம்.

“நான் சாதாரணமாக பேசும்போது சிங்களவனாகப் பேசுவதில்லை, இந்த சபையின் தலைவர் தன்னை ஒரு சிங்களப் பிரதிநிதியாக நினைத்துக் கொள்ள வேண்டும் என்று நான் நினைக்கவில்லை, ஆனால் ஒரு முறை நான் ஒரு சிங்களவனாகப் பேச விரும்புகிறேன்.  ஒரு சமூகத்தின் நலன்கள் அனைவரின் நலன்கள் என்பதை எனது கட்டளைக்குட்பட்ட அனைத்து சக்தியுடனும் வலியுறுத்த விரும்புகிறேன். எந்த இனமாக இருந்தாலும் சரி, எந்த மதமாக இருந்தாலும் சரி, நாம் எல்லோரும் ஒருவர்.

இப்படியான சிங்களத் தலைவர்களது பொ ய் வாக்குறுதிகளை நம்பித்  தமிழர் தரப்பு காலம் காலமாக ஏமாந்து வருகிறது.  இரண்டாவது சங்கிலி மன்னன் அல்லது ஒன்பதாம் செகராசசேகரன் ( கிபி 1617 – 1619 )போர்க்களத்தில் யாழ்ப்பாண இராச்சியத்தின்  (கிபி 1215–1624) இறைமையை இழந்ததுவரை தமிழர்களுக்கு என ஒரு சுதந்திரமான இராச்சியம் இருந்தது. பிரித்தானியர் இலங்கைக்குச்  சுதந்திரம் வழங்கிய போது அந்த இராச்சியத்தின் இறைமையை  மீள் உருவாக்குமாறு தமிழ்த் தலைவர்கள் கேட்டிருக்க வேண்டும். ஆனால் கேட்கவில்லை. குறைந்த பட்சம் இணைப்பாட்சி அடிப்படையில் ஒரு மாநில அரசைக் கேட்டிருக்க வேண்டும். சிங்களத் தலைவர்களின் உறுதிமொழிகளைப் பார்த்து ஏமாந்து போனார்கள்.

Image result for யாழ்ப்பாண இராச்சியம்

அண்டை நாடான இந்தியாவில் இந்திய முஸ்லிம்கள்  முகமது அலி ஜின்னாவின் தலைமையில் தனிநாடு கேட்டுப் போராடி வெற்றி பெற்றார்கள். Go, but before you go divide India” (வெளியேறுங்கள், ஆனால் வெளியேறுமுன் இந்தியாவைப் பிரித்துவிட்டு வெளியேறுங்கள்) என்பது அவரது முழக்கமாக இருந்தது.  அது மட்டுமல்ல ” India is not a nation, nor a country. It is a subcontinent of nationalities”  (இந்தியா ஒரு தேசம் அல்ல. ஒரு நாடும் அல்ல. அது தேசிய இனங்களின் ஒரு துணைக்கண்டம்) என்பது அவரது முழக்கமாக  இருந்தது.  தமிழர்களுக்கு ஒரு  மொகமது  அலி ஜின்னா கிடைக்கவில்லை என்பது எமது தவக்குறைவு.

ஆங்கிலேய உயர் அதிகாரிகள் தமிழர்கள் தனித்துவமான இனம், தனித்துவமான மொழி மற்றும்  அவர்களுக்கு ஒரு வரையறையப்பட்ட நிலப்பரப்பில் தனியான அரசும் ஆட்சியும்  இருந்ததை வரலாற்றில் பதிவு செய்து வைத்துள்ளார்கள்.

இலங்கையின் முதலாவது கொலனித்துவ செயலாளரான சேர் ஹியூ கிளெக்ஹோன் யூன் 1799 இல்  பிரித்தானகிய அரசாங்கத்திற்குப் பின்வருமாறு ஒரு கடிதத்தை எழுதியிருந்தார்.

“மிகவும் பண்டைய காலத்திலிருந்து இரண்டு வெவ்வேறு நாடுகள் தீவின் உரிமையை தங்களுக்குள் பிரித்துக் கொண்டுள்ளன. முதலாவதாக, நாட்டின் உட்புறத்தில் அதன் தெற்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் வாழும்  சிங்களவர்களும், இரண்டாவதாக வடக்கு மற்றும் கிழக்கு மாவட்டங்களைக் கொண்ட மலபார்களும் (தமிழர்களும்)  ஆவர். இந்த இரண்டு நாடுகளும் தங்கள் மதம், மொழி மற்றும் பழக்கவழக்கங்களில் முற்றிலும் வேறுபடுகின்றன.

புகழ்பெற்ற தலைமை நீதிபதியான   சேர் அலெக்சாண்டர் யோன்ஸ்டோன் (Sir Alexander Johnstone) 01.07.1827 அன்று  பெரிய பிரித்தானியா  மற்றும் அயர்லாந்தின்  அரசுக்குரிய  ஆசிய சபைக்கு  (Royal Asiatic Society of Great Britain ) பின்வருமாறு எழுதினார்:

“… இலங்கைத் தீவின் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் முழுவதிலும் விவசாயச் செழிப்பு நிலவிய காலத்தில் வாழ்ந்த மக்கள் இனம் ஒரே மொழியைப் பேசியது, ஒரே எழுத்துப் பண்பைப் பயன்படுத்தியது என்பதை அவர்களிடமிருந்தும், என்னிடம் உள்ள பல்வேறு வரலாறுகளிலிருந்தும் உறுதியாகக் கூற முடியும் என்று நினைக்கிறேன். அதே காலகட்டத்தில் இந்தியாவின் தெற்குத்  தீபகற்பத்தில் வாழ்ந்த மக்களின் அதே தோற்றம், மதம், சாதிகள், சட்டங்கள் மற்றும் பழக்கவழக்கங்கள் இருந்தன…”

1799 ஆம் ஆண்டின் கிளெக்ஹோன் குறிப்பு (Cleghorn  Minute)  மற்றும் 1802 ஆம் ஆண்டின் அரோ ஸ்மித் வரைபடம் (Arrow Smith Map) ஆகியவை இலங்கைத் தீவு இரண்டு தனித்தனி நாடுகளைக் கொண்டிருந்தது என்பதற்கான உத்தியோகபூர்வ சான்றுகளாகும்.

1815 இல் கண்டி இராச்சியமும் 1818 இல் வன்னி குறுநில அரசர்களும் வீழ்ந்த பின்னரே ஆங்கிலேயர்கள் முழுத் தீவிற்கும் எசமானர்களானார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். போர்த்துகீசியர்கள் மற்றும் ஒல்லாந்தர்களைப் போலல்லாமல், பிரித்தானியர் தொலைதூர மேற்கிலிருந்து இந்தத் தீவை ஒரு புவியியல் அலகாகப் பார்த்தனர், அரசியல் அல்லது தேசிய அரசுகளாக அல்ல.

1833 இலதான் வசதிக்காக நிருவாகம் ஒருங்கிணைக்கப்பட்டது. 1833 ஆம் ஆண்டில் பிரித்தானிய அரசாங்கம் நிருவாகத்தை ஒருங்கிணைத்த போதிலும், அது அறிமுகப்படுத்திய கச்சேரி முறையுடன் முன்னர் இருந்த பல்வேறு பூர்வீக நிர்வாகக் கட்டமைப்புகளை இணைத்தது. ஆங்கிலேயர்கள் கடந்த காலத்துடன் முறித்துக் கொள்ள விரும்பவில்லை என்பதையே இது காட்டுகிறது. உள்ளூர் மற்றும் சம்பிரதாய சட்டங்கள் சமூகத்தின் உறுப்பினர்களிடையே உறவுகளை நிர்வகிக்க அனுமதிக்கப்பட்டன. கடல் பகுதிகளில் ஒல்லாந்தர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட உரோமானிய  ஒல்லாந்த  சட்டம் தீவின் பொதுவான சட்டமாகத் தொடரப்பட்டது. இது மிகவும் பயனுள்ளதாக இருந்தது. ஆர்.டி.எல்.க்கு முன்னர் இருந்த எந்தவொரு சட்ட முறையும் முழுத் தீவையும் உள்ளடக்க முடியாது. இலங்கைத் தீவு ஒரு நாடு அல்ல என்பதற்கு இது மீண்டும் ஒரு சான்றாகும்.

நிகழ்கால அரசியலைப் புரிந்து கொள்ள இறந்த கால அரசியல் தெரிந்திருக்க வேண்டும் என்பதற்காகவே மேலே உள்ள வரலாற்றுத்  தரவுகளைப் பதிவு செய்துள்ளேன். 

சென்ற மாதம் கனடிய தமிழர் பேரவை நடாத்திய தமிழர் தெருத் திருவிழாவுக்குச்  சிறப்பு விருந்தினராக வருகை தந்த நா.உறுப்பினரும் தமிழர் முற்போக்குக் கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன் எனது இல்லத்துக்கு வந்தபோது அவரோடு உரையாட ஒரு வாய்ப்புக் கிடைத்தது. இலங்கைத் தமிழர்கள் எதிர்நோக்கும் பல சிக்கல்கள் பற்றிக் குறிப்பிட்டு விட்டு தமிழ் மக்களுடைய குடித்தொகை எண்ணிக்கை குறைந்து கொண்டு போவது பற்றிக் கவலை தெரிவித்தார். என்ன பாடுபட்டாலும் கொடுப்பதைக் கொடுத்து  நாட்டை விட்டு வெளியேறி   மேற்கு நாடு ஒன்றுக்குப்  சென்றுவிட வேண்டும் என்பதே வட கிழக்கில் உள்ள இளைஞர்களது கனவாக  இருப்பதாகச் சொன்னார்.  மனோ கணேசன் மட்டுமல்ல ஏனைய தமிழ் அரசியல் தலைவர்களது கருத்தும் இதேமாதிரித்தான் இருக்கிறது.

எல்லோரும் வெளியேறிவிட்டால் யாருக்காகத் தமிழீழம் என்ற கேள்வி எழுவது சரியே. ஆனால் தமிழ் இளைஞர்கள் நாட்டை விட்டு வெளியேறத் துடிக்கும் சிக்கலை விடத்  தமிழீழ மக்களின் காணி பூமிகள் சிங்கள – பவுத்த பேரினவாதத்தால்  நாளொழுரு மேனியும் பொழுதொருவண்ணமும் வேக வேகமாக  விழுங்கப்பட்டு வருகிறது. இதற்கு முன்னாலும் பின்னாலும் காவி அணிந்த பவுத்த தேரர்களே அணிவகுத்து  நிற்கிறார்கள். இதுவே  இன்று

 நாம் எதிர்கொள்ளும் பாரிய  சவாலாகும்.

திருகோணமலையில்  குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்டதமிழர்களின் பூர்வீக   நிலாவெளி பெரியகுளம் என்ற  ஊரில்  சட்டத்துக்குப் புறம்பாகப்  பவுத்த விகாரைகள் கட்டப்பட்டு வருகின்றன. பகலிக் கட்டினால் மக்களது எதிர்ப்பைச்  சந்திக்க வேண்டு்ம் என்பதால் பவுத்த தேரர்களின் மேற்பார்வையில் கட்டுமானப் பணிகள் இரவில் மேற்கொள்ளப்படுகின்றன.

இவ்வாறு சட்டதிட்டங்களை மீறிக் கட்டப்படும் விகாரைகளுக்கு எதிராக நீதிமன்றக் கட்டளையை தமிழர்தரப்புப் பெற்றாலும் அவற்றை பவுத்த தேரர்கள் சட்டை செய்வதில்லை. பவுத்தம் அரச மதம், நீதிமன்றங்களின் கட்டளைகள் தங்களைக் கட்டுப்படுத்தாது என்பது அவர்களது விதண்டா வாதமாக இருக்கிறது. இலங்கை இராணுவம் மற்றும் காவல்துறை பவுத்த தேரர்களுக்கு பாதுகாப்பு வழங்குகின்றன. குருந்துார்மலையில் சட்டத்துக்குப் புறம்பாக, நீதிமன்றக் கட்டளையை மீறி இராணுவமே  அரசாங்த்தின்  செலவில் ஒரு விகாரையைக்  கட்டி முடித்துள்ளது! 

மாங்குளத்தில் ஒரு பாரிய புத்தர் சிலையோடு பவுத்த தூபி கட்டப்பட்டுள்ளது. வவுனியாவில் இருந்து வடக்கே செல்லும் ஏ9 நெடுஞ்சாலையின் இரு மருங்கிலும் 17 பவுத்த விகாரைகள், தூபிகள் நிறுவப்பட்டுள்ளன. கேட்டால் வடக்குக்கு யாத்திரை போகும் பவுத்த சிங்களவர்கள் பவுத்த விகாரைகள் இருக்கும் இடங்களில் தங்கிப் போகவே பவுத்த விகாரைகளும், தூபிகளும் சிலைகளும் நிறுவுவதாக சிங்கள அரசு தரப்பில் காரணம் சொல்லப்படுகிறது.

மன்னார் மாவட்டத்தில் தேவாரப் பாடல் பெற்ற திருக்கேதீச்சுர கோயிலில் இருந்து 50 மீற்றர் தொலைவில் மகாதோட்ட இராஜமகா விகாரை என்ற பெயரில் பவுத்த விகாரை புதிதாக இராணுவத்தினால் நிருமாணிக்கப்பட்டு அதில் 1,500 கிலோ நிறையுள்ள புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது. திருக்கேதீச்சுரத்தின் பண்டைய பெயர் மாதோட்டம் ஆகும்.

மாதகல்லில் மிகப் பெரிய பவுத்த விகாரை சிறீலங்கா கடற்படையால் கட்டப்பட்டுள்ளது. இதற்காகப் பல தனியார் காணிகளைக் கடற்படை வலோத்காரமாக கையகப்படுத்தியுள்ளது. இந்த இடத்தில் பவுத்த பிக்குணி சங்கமித்த அரசமரக் கிளையோடு வந்து இறங்கியதாகக் கூறும் கதையின் அடிப்படையிலேயே இந்தப் பவுத்த விகாரை இந்துக் கோவில்களையும் உள்ளடக்கி நிருமாணிக்கப் பட்டிருக்கிறது. ஒரு நாட்டின் இராணுவம் சரி, கடற்படை சரி இவ்வாறு பவுத்த விகாரைகள் கட்டுவதில் ஈடுபடக் கூடாது. ஆனால் சிறீலங்காவைப் பொறுத்தளவில் இதுவே விதியாக இருக்கிறது.

எதையும் இழக்கலாம் ஆனால் நிலத்தை இழந்தால் ஒரு இனம் தனது தேசிய அடையாளத்தை இழந்து விடும் என்பது வரலாறு படிப்பிக்கும் படிப்பினை ஆகும்.

இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர் கிழக்கு மாகாணத்தில் புதிதாக ஒரு நிருவாக மாவட்டமும் இரண்டு தேர்தல் தொகுதிகளும் உருவாக்கப்பட்டுள்ளன. இது பற்றி அடுத்த வாரம் ஆராய்வோம். (தொடரும்)

—————————————————————————————————————————

About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply