எல்லைக் கிராமங்களில் குடியேற்றப்பட்ட சிங்கள மக்கள் சொல்வது என்ன?

எல்லைக் கிராமங்களில் குடியேற்றப்பட்ட சிங்கள மக்கள் சொல்வது என்ன?

அ.நிக்ஸன்

https://34de0021ec5a523ffd3927a629e56cd3.safeframe.googlesyndication.com/safeframe/1-0-40/html/container.html

1954 இல் குடியேற்றப்பட்டமைக்கான அரசியல் பின்புலம் கூட இளம் சிங்களப் பிள்ளைகளுக்குத் தெரியாது. 2009 மே மாதம் போர் இல்லாதொழிக்கும் காலம் வரையும் தங்களுக்குக் கிடைத்த வசதி வாய்ப்புக்கள் தற்போது இல்லை என்றும், சகல வசதிகளையும் கொண்ட பதவியா வைத்தியசாலையின் கருவிகள் தம்புத்தேகம வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் இந்த மக்கள் கூறினார் –

ஊடக விரிவுரை ஒன்றுக்காக சிங்களக் குடியேற்றங்கள் செய்யப்பட்ட, அனுராதபுரம், பதவியா கிராமத்துக்கு கடந்த ஜீன் 28, ஜீலை 08 ஆகிய திகதிகளில் இரண்டு தடவைகள் சென்று வந்தேன்.

அருகே பதவிசிறிபுர, வெலிஓயா உள்ளிட்ட பல சிறிய கிராமங்கள் உண்டு. பதவிசிறிபுரவைத் தவிர ஏனைய கிராமங்கள் அனுராதபுரம் மாவட்ட நிர்வாகப் பிரிவில் அடங்கினாலும், தமிழ் மக்களுக்குச் சொந்தமான முல்லைத்தீவு,வவுனியா மற்றும் திருகோணமலை மாவட்டங்களுக்குரிய காணிகள் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான்.

அதாவது வடக்குக் கிழக்கு எல்லையை இணைக்கும் தமிழ்க் கிராமங்கள்தான் இவை. இக் கிராமங்கள் அனுராதபுரம் மாவட்ட நிர்வாகத்துடன் இணைக்கப்படுவதற்கான எந்த ஒரு புவியியல் காரணிகளும் இல்லை. ஏறத்தாள பாலஸ்தீன பிரதேசத்தை இஸ்ரேல் அரசு அபகரித்த முறையை ஒத்தது எனலாம். ஆனால் நான் இப்போது அந்த அரசியல் பற்றி இங்கு பேச வரவில்லை.

ஏனெனில் கொழும்பை மையமாகக் கொண்ட சர்வதேச அரசார்பற்ற நிறுவனம் ஒன்றின் ஏற்பாட்டுடன் வவுனியாவில் உள்ள இரு அரசசார்பற்ற நிறுவனங்களினால் நடத்தப்பட்ட ”ஊடகம் – சமூகம் – தலைமைத்துவம்” பற்றிய பயிற்சி விரிவுரை ஒன்றுக்காகவே அங்கு இரு தடவைகள் சென்று வந்தேன்.

சிங்களக் குடியேற்றங்கள்

எல்லைக் கிராமங்களில் குடியேற்றப்பட்ட சிங்கள மக்கள் சொல்வது என்ன? | Sinhalese Settlers In Border Tamil Areas

அதன் காரணமாக ஈழத்தமிழர்களின் பிரதான அரசியல் கோரிக்கையின் மையப் பொருளோடு ஒப்பிட்டு இக் கட்டுரையை ஆழமாக எழுதுவதைத் தவிர்ப்பது தொழில் ஒழுக்கம் சார்ந்த பண்பு. இந்தக் குடியேற்றப் பகுதிகளுக்கு நேரில் சென்று வேறு சிலர் பார்த்தனரா, இந்த மக்களுடன் கதைத்துப் பேசினரா என்பது பற்றி எனக்குத் தெரியாது.

இருந்தாலும் இக் கிராமங்கள் தொடர்பாகவும் சிங்களக் குடியேற்ற அரசியல் நோக்கங்கள் பற்றியும் பலருக்கும் தெரியும். இது பற்றிப் பல கட்டுரைகளை என்னைப் போன்ற வேறு சிலரும் எழுதியிருக்கின்றனர்.

ஆனால் நான் முதன் முதலில் இச்சிங்களக் குடியேற்றக் கிராமங்களுக்கு நேரடியாகச் சென்று அங்குள்ள மக்களுடன் பேசிப் பழகியதுடன், அந்த மக்களின் வாழ்க்கைக் கஷ்டங்கள், புறக்கணிப்புகள், தண்ணீர்ப் பிரச்சினைகள் பற்றி அறிய முடிந்தது.

குறிப்பாகக் காட்டு யானைகள் கிராமங்களுக்குள் நுழைவதுதான் இந்த மக்களின் பிரதான பிரச்சினை. அதனைத் தடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கோபம் மக்களிடம் வெளிப்பட்டது. அதேநேரம் தாங்கள் இங்கு ஏன் குடியேற்றப்பட்டோம் என்ற அரசியலைக்கூடத் தெரியாதவர்களாகவே இந்த மக்கள் இருக்கிறார்கள் என்பதைச் சிவில் சமூகச் செயற்பாட்டாளர்களின் பேச்சுக்கள் மூலமும் உணர முடிந்தது.

2009 மே மாதம் போர் இல்லாதொழிக்கும் காலம் வரையும் தங்களுக்குக் கிடைத்த வசதி வாய்ப்புக்கள் தற்போது இல்லை என்றும் சகல வசதிகளையும் கொண்ட பதவியா அரச வைத்தியசாலையின் அனைத்துக் கருவிகளும் தம்புத்தேகம வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் இந்த மக்கள் கூறினார். மருத்துவர்கள், மருத்துவ நிபுணர்கள், தாதிகள் இடமாற்றம் செய்யப்பட்டு தற்போது பதவியா வைத்தியசாலை, வசதிகள் அற்ற நிலையில் இயங்குவதாகவும் சுட்டிக்காட்டினர்.

இனப்பிரச்சினை

அங்கு நான் விரிவுரை நிகழ்த்திய இளைஞர்கள், பெண்கள் மற்றும் சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள் அனைவருமே எந்த வேறுபாடுகளும் இன்றி என்னுடன் பண்பாக உரையாடினர். குறித்த தலைப்பில் கற்பித்த பாடங்களைப் புரிந்துகொண்டனர்.

அவர்களுடன் ”சமூகம் – ஊடகம் – தலைமைத்துவம்” என்ற பாடப்பரப்பைத் தவிர சிங்கள – தமிழ் இன முரண்பாடுகள் பற்றி நான் எதுவுமே பேசவில்லை. அது பற்றி அவர்கள் அவ்வப்போது சொன்ன விடயங்களை மாத்திரமே என்னால் செவிசாய்க்க முடிந்தது.

தமது பிரதேசக் கஷ்டங்கள் மற்றும் வசதியீனங்கள் பற்றியும், தமது பிரதேசத்தில் ஊடகவியலாளர்கள் இல்லை எனவும், தமது பிரச்சினைகள் சிங்கள நாளிதழ்களில் வருவதில்லை என்ற விவகாரங்களையும், குறிப்பாகக் கொழும்பில் உள்ள அரச தொலைக்காட்சிகளைத் தவிர தனியார் தொலைக்காட்சி அலைவரிசைகள் தெளிவில்லை என்பதால் அவற்றைப் பார்க்க முடியாதென்றும் அவர்கள் கூறினர்.

அத்துடன் அனைத்து மக்களும் சம உரிமையுடன் வாழ வேண்டும் என்பது பற்றியும் எடுத்துரைத்தனர். அப்போது தமிழ் – முஸ்லிம் மக்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறது என்ற தொனி இளைஞர்கள் சிலரிடம் இருந்து எழுந்ததை அவதானித்தேன். ஆனால் இனப்பிரச்சினையின் தன்மை, சிங்களக் குடியேற்றங்களினால் தமிழ், முஸ்லிம் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பற்றி அவர்களுக்கு ஆழமாகத் தெரிந்திருக்கவில்லை.

வடக்குக் கிழக்கில் தற்போதும் சிங்களக் குடியேற்றங்கள், புத்தர் சிலை வைத்தல் மற்றும் காணி அபகரிப்புகள் போன்ற ஆக்கிரமிப்புகள் பற்றியும் அவர்களுக்குத் தெரியாது என்பதையும் அவர்களின் பேச்சுக்கள் மூலம் நான் உணர்ந்து கொண்டேன்.

போக்குவரத்து வசதிகள் குறைவு

எல்லைக் கிராமங்களில் குடியேற்றப்பட்ட சிங்கள மக்கள் சொல்வது என்ன? | Sinhalese Settlers In Border Tamil Areas

ஆனால் 1954இல் இப் பிரதேசத்தில் உங்களைக் குடியேற்றியது போன்று 2009இற்குப் பின்னரான சூழலிலும் தமிழ்ப் பிரதேசங்களில் சிங்களக் குடியேற்றங்களை அரசாங்க ஆதரவுடன் பௌத்த குருமார் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது பற்றி நான் எதுவுமே அவர்களிடம் சுட்டிக்காட்டவில்லை. குடியேற்றங்களினால் தமிழ் மக்களுக்கு ஏற்படும் தாக்கங்கள் வலிகள் பற்றியும் எடுத்துரைக்க விரும்பவில்லை. குறித்த பாடப்பரப்போடு மாத்திரம் நான் மட்டுப்படுத்திக் கொண்டேன்.

ஜீன்-28-2023 அன்று கெப்பெற்றிப்பொலாவ சந்தியில் இருந்து சுமார் முப்பத்தைந்து கிலோமிற்றர் தூரத்தில் உள்ள பதவியா கிராமத்துக்கு இலங்கை போக்குவரத்துச் சபையின் பேருந்தில் நான் காலை 07.30 இற்குப் பயணம் செய்தேன். போக்குவரத்து வசதிகள் மிகக் குறைவு, இல்லை என்றே சொல்லாம். முன்னர் வவுனியா, திருகோணமலை மாவட்டங்களின் எல்லையில் இருந்த கிராமங்கள், கெப்பெற்றிப்பொலாவ என்ற சிங்களப் பெயரில் அழைக்கப்படுகிறது.

வவுனியாவில் இருந்து செல்லும் போது வவுனியா – திருகோணமலை பிரதான வீதியில் உள்ள கெப்பெற்றிப்பொலாவ சந்தியில் இருந்து இடதுபக்கமாக உட்புறம் நோக்கிச் சுமார் முப்பத்தைந்து கிலோமீற்றர் தூரமுள்ள பதவியா மற்றும் பதவிசிறிபுர கிராமங்களுக்கும் அதன் மூலம் வெலிஓயா கிராமத்துக்கும் செல்ல முடியும். முன்னர் முல்லைத்தீவு மாவட்டத்தின் மணலாறு பிரதேசம் இதயபூமி என அழைக்கப்பட்டது.

திருகோணமலையில் இருந்து புல்மோட்டை வழியாக சுமார் எழுபது கிலோமீற்றர் தூரத்தில் உள்ள பதவியா சந்திக்கு வந்து வெலிஓயா பிரதேசத்துக்கும் அதன் ஊடாக முல்லைத்தீவுக்கும் பேருந்து செல்வதை அவதானித்தேன்.

கெப்பெற்றிப்பொலாவயில் இருந்து பதவியாவுக்குப் பேருந்தில் சென்று கொண்டிருந்தபோது பேருந்தில் இருந்தவர்கள் என்னை உற்று நோக்கினர். இப்படியான பயணப் பொதியுடனும் உடைகளோடும் இப் பிரதேசத்தில் யாரும் பயணிப்பதில்லை என்று பேருந்து நடத்துனர் கூறியதோடு, மேலும் என்னிடம் கதை தொடுத்தார். நான் செய்தியாளர் என்று என்னை அடையாளப்படுத்தவில்லை. விரிவுரையாளர் என்றே சொன்னேன்.

பதவியா போய்ச் சேரும் வரை நாற்பது நிமிடம் அந்த வீதியில் எந்த ஒரு வாகனத்தையும் காண முடியவில்லை. இந்தப் பேருந்து மாத்திரமே சென்று கொண்டிருந்தது. வீதியில் ஆள் நடமாட்டங்கள்கூட இல்லை. அருகே காடுகளும் வயல் நிலங்களும் காணப்பட்டன. மிகச் சிறிய கொட்டில்களில் சிங்கள விவசாயிகள் வாழ்வதையும் காண முடிந்தது.

அடிப்படை வசதிகள் பற்றாக்குறை

எல்லைக் கிராமங்களில் குடியேற்றப்பட்ட சிங்கள மக்கள் சொல்வது என்ன? | Sinhalese Settlers In Border Tamil Areas

எட்டாம் திகதி குறித்த நிறுவனத்தின் வாகனத்திலேயே பதவியாவுக்குச் சென்றேன். ஏனெனில் ஏதேனும் விபத்து நடந்தாலோ அல்லது எனக்கு ஏதும் ஆபத்து நேர்ந்தாலோ அந்த வீதியில் இருந்து என்னைத் தூக்கிச் செல்லக்கூட ஆட்கள் இல்லை. இருந்தாலும் வீதிகள் காப்பெற் இடப்பட்டுக் கொழும்பின் பிரதான வீதிகளைப் பார்ப்பது போன்று காட்சி தந்தன.

ஆனால் அங்கு 1954 இல் குடியேற்றப்பட்ட சிங்கள மக்களின் வாழ்க்கை தான் மிகவும் பரிதாபத்துக்குரியது. பதவியா பிரதேசத்தில் உள்ள பதினைந்து கிராம சேவகர் பிரிவுகளில் எந்த ஒரு பகுதியிலும் உயர்கல்வி நிறுவனங்கள் இல்லை, பெரிய வர்த்தக நிலையங்கள் இல்லை.

சிறிய கடைகள் மாத்திரமே உண்டு. பதவியா சுதர்சனபுரத்தில் பாடசாலை ஒன்று உள்ளது. அடிப்படை வசதிகள் போதியதாக இல்லை. முப்பத்தைந்து கிலோமீற்றர் தூரம் உள்ள கெப்பெற்றிப்பொலாவ சந்திக்கு வந்துதான் அவர்கள் அத்தியாவசியப் பொருட்களையோ அல்லது வேறு எந்தப் பொருட்களாக இருந்தாலும் கொள்வனவு செய்ய வேண்டும்.

அனுராதபுரம் நகருக்கு வருவதாக இருந்தால் சுமார் நூறு கிலோமீற்றர் தூரம் பயணம் செய்ய வேண்டும். சென்றுவர தொள்ளாயிரத்து ஐம்பது ரூபா செலவாகும் என்றும் அப்படிச் செலவு செய்து பயணிக்கத் தங்களிடம் பணம் இல்லை என்றும் கூறினர்.

பலரும் விவசாயிகள், ஆனால் அவர்களின் விவசாயச் செய்கைக்குரிய வசதி வாய்ப்புகள் அங்கு இல்லை. வெலிஓயா கிராமத்துப் பிள்ளைகள் பாடசாலை செல்லப் பேருந்துகள் இல்லை. நடந்து செல்கின்றனர். இப் பிரதேசத்தில் இருக்கும் பௌத்த குருமார் உணவுக்குப் பெரும் கஷ்டப்படுவதாக சமூகச் செயற்பாட்டாளர் ஒருவர் தெரிவித்தார்.

இராணுவச் சிப்பாய்களின் குடும்பங்களும் அவர்களின் உறவினர்களும் இக் கிராமங்களில் அதிமாக வாழ்கின்றனர். விகாரைகள் பல உண்டு. ஆனால் 1995 இற்குப் பின்னர் பிறந்த பிள்ளைகளுக்குத் தாங்கள் இங்கு குடியேற்றப்பட்ட அரசியல் பின்னணியோ, அந்த அரசியலையோ அவர்களின் பெற்றோர்கள் சொல்லிக் கொடுத்ததாகவோ கூற முடியாது.

அவர்களின் பெற்றோர்கள்கூட தாங்கள் குடியேற்றப்பட்ட அரசியல் பின்னணியை மறந்திருக்க வேண்டும். அல்லது 2009இற்குப் பின்னர் இலங்கை அரசாங்கத்தின் தொடர் புறக்கணிப்பினால் வெறுப்படைந்திருக்க வேண்டும்.

மக்களின் பூர்வீகம்

எல்லைக் கிராமங்களில் குடியேற்றப்பட்ட சிங்கள மக்கள் சொல்வது என்ன? | Sinhalese Settlers In Border Tamil Areas

இளம் பிள்ளைகள் மிகவும் அப்பாவிகளாக உள்ளனர். உயர் கல்வி கற்க விரும்புகின்றனர், ஆனால் அவர்களிடம் வசதியில்லை. போக்குவரத்துச் செய்யக்கூடிய தூரத்தில் வசதியான நகரங்கள் அருகில் இல்லை. இணையவசதி கூட ஒழுங்காக இல்லை. ஆக வட்ஸ்அப் பேசக்கூடிய அளவுக்கே அங்கு இணையம் செயற்படுகிறது. முகநூலைப் பார்ப்பதற்குப் பல மணிநேரம் சென்ற பின்னர் தான் இணையம் ஓரளவுக்கு வேலை செய்யும் எனவும் அந்தப் பிள்ளைகள் கூறினார்கள்.

அவர்கள் மிகவும் அழகானவர்கள், என்னுடன் தொடர்ந்து பேச விரும்பினர். வகுப்பு முடிவடைந்ததும் மொழிபெயர்ப்பு இன்றி என்னிடம் தனியாகப் பேசினர். செயலமர்வுக்கு வந்திருந்த இளம் பிள்ளைகள் ஆங்கிலம் கற்க விரும்புகின்றனர். நான் கொழும்பில் பழகும் சிங்கள மக்கள் பேசும் சிங்கள மொழியை அவர்கள் பேசவில்லை. அவர்கள் பேசிய சிங்களம் கிராமிய இலக்கணத்துடன் கடுமையாக இருந்தது.

எல்லோருமே பௌத்த சமயத்தவர்கள். இவர்கள் அனுராதபுரம் நகருக்கு வருவதற்குக் கூடத் தயங்குகின்றனர். தங்களைத் தாழ்த்தப்பட்ட மக்களாகக் கருதுவார்களோ என்ற கூச்ச உணர்வும் இவர்கள் சிலரிடம் இருந்தது. அவ்வளவு தூரத்துக்கு இவர்கள் புறக்கணிக்கப்பட்டிருக்கின்றனர் என்பதை என்னால் உணர முடிந்தது.

இந்த மக்கள் அனுராதபுரம், நுவரெலியா போன்ற இடங்களில் இருந்தே இங்கு குடியமர்த்தப்பட்டிருக்கின்றனர். பதவியா பிரதேசத்தில் 1954ஆம் ஆண்டு தாங்கள் குடியேற்றம் செய்யப்பட்டதாகவும் இப் பிரதேசத்தில் உள்ள பதினைந்து கிராம சேவகர் பிரிவுகளிலும் வாழும் சுமார் நாற்பதாயிரம் மக்களின் பூர்வீகம் இப் பிரதேசம் அல்ல என்றும் கருத்தரங்கில் கலந்துகொண்ட ஒரு சமூகச் செயற்பாட்டாளர் கூறினார்.

ஆகவே தமிழர் பிரதேசங்களை நில அடிப்படையில் பிரிப்பதற்கு வடக்குக் கிழக்கின் எல்லைக் கிராமங்களில் பௌத்த விகாரைகள் கட்டுதல், சிங்களப் பெயர்களைச் சூட்டுதல் போன்ற செயற்பாடுகளுடன் மாத்திரம் சிங்கள அரசியல்வாதிகள் நின்று விடுகின்றனர் என்பது புரிகிறது. நிலங்களைப் பிரிக்கும் நோக்கில் குடியேற்றப்பட்ட சிங்கள மக்களில்; இவர்களுக்கு அக்கறையில்லை என்பதும் தெரிகிறது.

குடியேற்றப்பட்ட பின்னர் மக்கள் எப்படியாவது வாழட்டும் அல்லது அரசியல் – நாகரிக நோக்கில் அந்த மக்கள் சிந்திக்கக் கூடாது என்ற நிலைப்பாடும் சிங்கள அரசியல்வாதிகளிடம் இருப்பதுபோன்றும் தெரிகிறது. ஏனெனில் 2009இற்குப் பின்னரான சூழலில் இந்த மக்களுடைய வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த எந்த நடவடிக்கைகளும் இல்லையென மக்கள் ஆதங்கப்படுகின்றனர். போர்க்காலத்தில் மாத்திரம் தங்களுக்கும் இக் கிராம வைத்தியசாலைக்கும் ஏன் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது என்ற சந்தேகம் கூட இப்போது அவர்களிடம் மெதுவாக எழ ஆரம்பிக்கிறது.

சிங்கள அரசியல் தலைவர்கள்

எல்லைக் கிராமங்களில் குடியேற்றப்பட்ட சிங்கள மக்கள் சொல்வது என்ன? | Sinhalese Settlers In Border Tamil Areas

ஆகவே அறுபது வருடங்களுக்கு முன்னர் குடியேற்றப்பட்ட சிங்கள மக்கள் இப்படிப் புலம்புகிறார்கள் என்றால், 2009 மே மாதத்திற்குப் பின்னர் இன்று வரையும் வடக்குக் கிழக்கில் புதிதாக மேற்கொள்ளப்பட்டு வரும் சிங்களக் குடியேற்றங்களின் நிலை என்னவாக இருக்கும்? ஈழத் தமிழர்களின் மரபுவழி அடையாளங்களை பௌத்த அடையாளமாக மாற்றினால் போதும் என்பது சிங்கள அரசியல் தலைவர்களின் சிந்தனை. இதற்காக அப்பாவிச் சிங்கள மக்கள் பகடைக்காய்களாகப் பயன்படுத்தப்படுகின்றனர்.

ஆனால் இந்த உண்மையை குடியேற்றப்பட்ட சிங்கள மக்கள் தாங்களாகவே உணர்ந்து கொண்டால், எதிர்காலத்தில் சிங்கள அரசியல் தலைவர்களுக்கும் சிங்களக் கட்சிகளுக்கும் பெரும் நெருக்கடி ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் இல்லாமில்லை.

ஆனால் தமிழ்த்தேசியக் கட்சிகள் அல்லது தமிழ்ப் பிரமுகர்கள் அந்த அரசியலை இந்த மக்களிடம் சென்று போதித்தால் அது இனவாதமாகக் கிளம்பும். அத்துடன் வடக்குக் கிழக்கைத் திட்டமிட்டுப் பிரிப்பதற்காகக் கொழும்பில் இயங்கும் அரச நிர்வாக இயந்திரமும் உசாரடைந்து விடும்.

இருந்தாலும் இந்த மக்கள் நன்றாகச் சிந்திக்கிறார்கள். எனது வகுப்பில் கொடுக்கப்பட்ட குழு வேலை ஒன்றின்போது, இன நல்லிணக்கம் பற்றி அவர்களிடம் இருந்து எழுந்த கருத்துக்கள், குறிப்பாக தமிழ் முஸ்லிம் மக்களின் பிரச்சினைகள் பற்றிய உரையாடல் அவர்களின் குறைந்த பட்ச அரசியல் சிந்தனை வளர்ச்சியை வெளிப்படுத்தியது.

ஆனால் தமிழர்களின் அரசியல் விடுதலை பற்றிய உள்ளீடுகள் குறித்து அங்கு எடுத்துரைக்க நான் விரும்பவில்லை. அந்தப் பிள்ளைகள் சுட்டிக்காட்டிய விடயங்களோடு மாத்திரம் மட்டுப்படுத்தி வகுப்பை முடிவுக்குக் கொண்டு வந்தேன்.

குடியேற்றத் திட்டம்

எல்லைக் கிராமங்களில் குடியேற்றப்பட்ட சிங்கள மக்கள் சொல்வது என்ன? | Sinhalese Settlers In Border Tamil Areas

1949இல் கிழக்கு மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட கல்லோயா குடியேற்றத் திட்டம் என்பது நிலங்களற்ற விவசாயிகளைக் குடியமர்த்தும் அரசியல் வேலைத்திட்டமாகும். சுமார் நாற்பதாயிரம் ஏக்கர் நிலம் சிங்கள மக்களின் விவசாயத்துக்காக மாற்றப்பட்டது. ஐம்பது புதிய கிராமங்கள் உருவாக்கப்பட்டன. முன்னர் தமிழ்க் கிராமங்களாக இருந்த இடங்களில் பெரும்பாண்மையான சிங்களவர்கள் குடியேற்றப்பட்டதனால் இன முரண்பாடுகள் அங்குதான் ஆரம்பிக்கப்பட்டன என்று கூடச் சொல்லாம்.

இதன் தொடர்ச்சியாக வவுனியாவுக்கு அல்லது வன்னி மாவட்ட பிரதேசத்தில் இருந்த சில குளங்கள் 1954 இல் சிங்களப் பெயர்களுக்கு மாற்றப்பட்டுக் குடியேற்றங்களும் செய்யப்பட்டிருக்கின்றன என்பதற்குப் பதவியாக் குளம் சிறந்த உதாரணமாகும்.

பதவியா பிரதேச செயலகம் 1992இல் பிரேமதாச ஜனாதிபதியாக இருந்தபோது தான் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஜே. றலியூதீன் (J.Raleeyutheen) என்ற முஸ்லிம் ஒருவர் 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2022 பெப்ரவரி மாதம் வரை பிரதேச செயலாளராகக் கடமையாற்றியிருக்கிறார்.

ஆனால் பிரதேசக் காணி விவகாரம் ஒன்றில் பௌத்த பிக்கு ஒருவர் முரண்பட்டதால் அவர் தனது பதவியில் இருந்து விலகியதாகக் கூறப்படுகின்றது. பதவியா பிரதேச செயலகத்துக்கு அருகில் சிறிய பிள்ளையார் கோவில் ஒன்று உள்ளது. சிங்கள மக்கள் இப்போதும் அங்கு தீபம் ஏற்றி வழிபடுவதை அவதானிக்க முடிந்தது.

பதவிசிறிபுர பிரதேச செயலாளர் பிரிவு திருகோணமலை மாவட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. வடக்கு எல்லையில் முல்லைத்தீவு மாவட்டமும், மேற்கு எல்லைக்கு அருகாக வவுனியா, அனுராதபுரம் மாவட்டங்களும், கிழக்கில் குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவும், தெற்கில் கொமரங்கடவலை பிரதேச செயலாலர் பிரிவும் அமைந்துள்ளன.

தமிழர்களுக்குச் சிங்கள அரசியல் தலைவர்கள் நேர்மையாக இல்லை என்பது வேறு. ஆனால் தமிழர் நிலங்களைப் பிரிக்கும் நோக்கில் குடியேற்றப்பட்ட சிங்கள மக்களின் வாழ்வியல் மீது அவர்களுக்கு அக்கறையே இல்லை என்பது தான் பெரும் வேடிக்கை. 

https://ibctamil.com/article/sinhalese-settlers-in-border-tamil-areas-1689593807

———————————————————————————————————————-

தமிழர்களுக்குச் சொந்தமான ஆயிரத்து 500 ஏக்கர் காணிகள் சிங்களவர்களுக்கு தாரைவார்ப்பு

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் அக்கரைவெளியில் தமிழ் மக்களுக்குச் சொந்தமாகவிருந்த ஆயிரத்து 500 ஏக்கர் காணிகள் சிங்களவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

மகாவலி ‘எல்’ வலயத்தினுள் முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட கிராம அலுவலர் பிரிவுகளைக் கையேற்கும் நடவடிக்கைகளை இடைநிறுத்துமாறு அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையிலும், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

மகாவலி ‘எல்’ வலய திட்டம்

தமிழர்களுக்குச் சொந்தமான ஆயிரத்து 500 ஏக்கர் காணிகள் சிங்களவர்களுக்கு தாரைவார்ப்பு | 1500 Acres Of Tamils Land Distributed To Sinhalese
நீரே வராத மகாவலி ஆற்றுத்திட்டத்திற்கு புதிய வலயம் எதற்கு..!

மகாவலி ‘எல்’ வலயத்தினுள் கரைதுறைபற்று பிரதேச செயலர் பிரிவின் கீழுள்ள 6 கிராம அலுவலர் பிரிவுகள் கொண்டுவரப்பட்டுள்ளன. அவற்றைப் பிரதேச செயலகத்திடமிருந்து மகாவலி அபிவிருத்தி அதிகார சபை பொறுப்பேற்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தன.

இந்த முயற்சி தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளின் எதிர்ப்பையடுத்து நிறுத்தப்பட்டது.

அமைச்சரவையிலும் மேற்படி நடவடிக்கையை இடைநிறுத்தும் தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில் கொக்குத்தொடுவாய் அக்கரைவெளியில் 30 ஏக்கர் வீதம் சுமார் ஆயிரத்து 500 ஏக்கர் காணிகள் மகாவலி அதிகார சபையால் சிங்களவர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.

இந்தக் காணிகள் 1984ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலப் பகுதியில் தமிழ் மக்களுக்குச் சொந்தமானவையாக இருந்துள்ளன.

ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஆராய்வு

தமிழர்களுக்குச் சொந்தமான ஆயிரத்து 500 ஏக்கர் காணிகள் சிங்களவர்களுக்கு தாரைவார்ப்பு | 1500 Acres Of Tamils Land Distributed To Sinhalese
வடக்கில் தமிழர் காணிகளை விழுங்க ‘ஜே’ வலயம்..!

இந்தக் காணிகளில் உள்ள பற்றைகளை கடந்த புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் சிங்களவர்கள் துப்புரவு செய்ய முற்பட்டபோதே காணிகள் பகிர்ந்தளிக்கப்பட்ட விடயங்கள் தெரியவந்துள்ளன.

இதேவேளை, கடந்த வெள்ளிக்கிழமை அதிபரின் மேலதிக செயலாளர் தலைமையில் இடம்பெற்ற’ இணையவழி’ கலந்துரையாடலில் மகாவலி அதிகார சபையின் நடவடிக்கை தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகாவலி அதிகார சபையின் தலைமை அலுவலக அதிகாரிகள் அவ்வாறான நடவடிக்கை இடம்பெறவில்லை என்று மறுத்துள்ளனர்.

எனினும், எதிர்வரும் 3 ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்டச் செயலக ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இந்த விடயம் ஆராயப்படவுள்ளது.

https://nakkeran.com/wp-admin/post.php?post=21716&action=edit

—————————————————————————————————————————

About editor 3002 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply