சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபையில் என்ன நடந்தது? ஏன் இந்த சர்ச்சை? – கள நிலவரம்
முரளிதரன் காசி விஸ்வநாதன்
பிபிசி தமிழ்
5 யூலை 2023
சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனகசபை எனக் கூறப்படும் மேடையின் மீது ஏறி நான்கு நாட்களுக்கு பக்தர்கள் கடவுளை தரிசிக்கக்கூடாது என தீட்சிதர்கள் சார்பில் வைக்கப்பட்ட பதாகை, அந்தக் கோவில் தொடர்பான சர்ச்சையை மீண்டும் முன்னணிக்குக் கொண்டு வந்துள்ளது. சிதம்பரம் நடராஜர் கோவில் தொடர்ந்து சர்ச்சையில் அடிபடுவது ஏன்?
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன திருவிழா கடந்த 17ஆம் தேதி துவங்கிய நிலையில், திருத்தேர் விழாவையொட்டி பொதுமக்கள் ஜூன் 24, 25, 26, 27 ஆகிய நான்கு நாட்கள் கனகசபையில் ஏறி வழிபடத் தடை விதிப்பதாக கோவிலை நிர்வகித்துவரும் தீட்சிதர்கள் பதாகை ஒன்றை வைத்தனர்.
இதற்குப் பக்தர்கள் சிலர் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில், ஜூன் 24ஆம் தேதியன்று இந்து சமய அறநிலையத் துறையைச் சார்ந்த அதிகாரிகள் அங்கு வந்த அந்தப் பதாகையை அகற்ற முயன்றனர். அதற்கு தீட்சிதர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனால் அதிகாரிகள் அப்போது திரும்பிச் சென்றுவிட்டனர். செயல் அலுவலர் அளித்த புகாரில் 11 தீட்சிதர்கள் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டது.
இதற்கு அடுத்த நாள் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களும் பா.ஜ.கவைச் சேர்ந்தவர்களும் கோவிலுக்குள்ளேயே கனகசபை தொடர்பாக கோஷங்களை எழுப்பினர். இதற்குப் பிறகு அறநிலையத் துறை அதிகாரிகள் சிலர் கனகசபை மீது வலுக்கட்டாயமாக ஏறியதாக கோவில் தீட்சிதர்கள் கூறுகின்றனர். ஆனால், பக்தர்கள் சிலரே அதிகாரிகள் துணையுடன் ஏறியதாக அங்கிருந்த வேறு சிலர் கூறுகின்றனர்.
இந்த நிகழ்வு குறித்து தீட்சிதர்கள் தரப்பும் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளது.
கனகசபை மீது பக்தர்களை ஏற அனுமதிப்பது குறித்த சர்ச்சைதான் இப்போது எழுந்தது என்றாலும், கோவிலுக்கு வரும் பக்தர்கள் தீட்சிதர்களால் மோசமாக நடத்தப்படுவது பற்றிய புகார்கள், கோவிலில் எந்த உரிமையும் இல்லாமல் இந்து சமய அறநிலையத் துறை அத்துமீறி செயல்படுவதாக தீட்சிதர்கள் அளிக்கும் புகார்கள் என இந்தக் கோவில் தொடர்ந்து செய்திகளில் அடிபட்டு வருகிறது. இதற்கு அடிப்படையாக அமைந்தது, இந்தக் கோவிலை நிர்வகிப்பது யார் என்ற சர்ச்சைதான்.
அதற்கு முன்பாக கடந்த சில ஆண்டுகளில் இந்தக் கோவில் தொடர்பாக எழுந்த சில சர்ச்சைகளைப் பார்க்கலாம்.
சிதம்பரம் கோவில் தொடர்பாக இதற்கு முந்தைய சர்ச்சைகள்
1. ஆறுமுகசாமி கனகசபையில் தேவாரம் பாடுவது தொடர்பான சர்ச்சை: கடந்த 2007 – 2008ஆம் ஆண்டுகளில் கடலூரைச் சேர்ந்த சிவனடியாரான ஆறுமுகசாமி கனகசபை மீது ஏறி தேவாரம் பாட முயன்றார். இதற்கு தீட்சிதர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். நீதிமன்றத்தில் இதற்குத் தடை விதிக்கப்பட்டது, பிறகு அறநிலையத் துறை ஆணையர் அனுமதி அளித்ததால் ஆறுமுகசாமி பாட முயன்றதில் தள்ளுமுள்ளு என பல ஆண்டுகள் இந்த விவகாரம் சர்சையாகவே நீடித்தது.
2. ஆயிரங்கால் மண்டபத்தில் திருமணம் நடத்திய சர்ச்சை: கடந்த 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ஆம் தேதி தொழிலதிபர்கள் வீட்டுத் திருமணம் ஒன்று இங்குள்ள ஆயிரம் கால் மண்டபத்தில் நடக்க அனுமதிக்கப்பட்டது. இந்தக் கல்யாணத்திற்காக அந்த மண்டபம் மிக பிரம்மாண்டமான முறையில் அலங்கரிக்கப்பட்டது. அலங்காரம் செய்யவந்த ஊழியர்கள் கோயிலின் பொற்கூரையின் மீது ஏறி அலங்காரம் செய்த படங்களும் சமூக வலைதளங்களின் வெளியாகின. இதையடுத்து இந்த விவகாரம் சமூகவலைதளங்களில் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. இதில் சம்பந்தப்பட்ட தீட்சிதர் இடைநீக்கம் செய்யப்பட்டார்.
3. பெண் பக்தரைத் தாக்கியதாக வழக்கு: கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பர் 16ஆம் தேதியன்று தன் மகனின் பிறந்த நாளுக்காக அர்ச்சனை செய்யச் சென்ற லதா என்ற பக்தர் தீட்சிதர் ஒருவரால் தாக்கப்பட்டதாக புகார் எழுந்தது. சரியாக அர்ச்சனை செய்யும்படி கூறியதால், தீட்சிதர் அவரைத் தாக்கியதாகக் கூறப்பட்டது. இது தொடர்பான காணொளிகளும் சமூக வலைதளங்களில் பரவின. இதையடுத்து இரண்டு மாதங்கள் கோவில் பணியிலிருந்து இடைநீக்கம் செய்ததோடு, ஐயாயிரம் ரூபாய் அபராதமும் தீட்சிதர்கள் சார்பில் விதிக்கப்பட்டது.
4. பெண் பக்தரை ஜாதிப் பெயர் சொல்லி திட்டியதாக வழக்கு: கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில், ஜெயஷீலா என்ற பெண் பக்தர் ஒருவரை ஒரு தரப்பு தீட்சிதர் கனகசபையின் மீது ஏற்றிய நிலையில், மற்றொரு தரப்பு அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தது. இதையடுத்து எழுந்த மோதலில், தன்னை ஜாதிப் பெயர் சொல்லித் திட்டியதாக அந்தப் பெண் புகார் அளித்தார். அந்தப் புகாரில் 20 தீட்சிதர்கள் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டது.
5. பக்தர் மீது தாக்குதல் சர்ச்சை: கனகசபை மீது ஏற தடைவிதிக்கும் நிகழ்வுக்கு சில நாட்களுக்கு முன்பாக பக்தர் ஒருவர் தாக்கப்பட்டதாக புகார் எழுந்தது. கடந்த ஜூன் 22ஆம் தேதி சிவபுரி என்ற கிராமத்தைச் சேர்ந்த கார்வண்ணன் என்பவர் சாமி தரிசனம் செய்ய சென்றுள்ளார். அப்போது, கோயிலின் பஞ்சமூர்த்தி வீதி உலா நடைபெற்றுக் கொண்டிருந்தது. கார்வண்ணன் எதிரில் நின்றதாகவும் அவரை தள்ளி நிற்கும்படி தீட்சிதர்கள் சொன்னதாகவும் கூறப்படுகிறது. இதை தொடர்ந்து எழுந்த சலசலப்பில், தீட்சிதர் ஒருவர் கார்வண்ணனை கன்னத்தில் அறையும் காட்சி வீடியோவில் பதிவாகியுள்ளது. இதையடுத்து இரண்டு தீட்சிதர்கள் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டது.
பூமி சுழலும் அச்சு 80 செ.மீ. கிழக்கில் நகர இந்தியர்களும் ஒரு காரணம் – எப்படி தெரியுமா?4 ஜூலை 2023
சிதம்பரம் நடராஜர் கோவிலின் வரலாறு என்ன?
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அமைந்திருக்கும் நடராஜர் கோவில் தமிழ் சைவத் தலங்களில் மிக முக்கியமான ஒரு திருத்தலமாகும். அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் என சமயக்குரவர்கள் நால்வராலும் பாடப்பட்டது இந்தக் கோவில். சைவ இலக்கியங்களில் கோவில் என்பது இந்தக் கோவிலையே குறிக்கிறது.
இந்தக் கோவிலைப் பொறுத்தவரை, ஒரே காலகட்டத்தில் ஒரே மன்னரால் கட்டப்பட்ட கோவில் அல்ல. பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு அரசர்களால் இந்தக் கோவில் கட்டப்பட்டு, பெரிதாக்கப்பட்டிருக்கிறது. பிற்காலச் சோழர்களின் காலத்தில் இந்தக் கோவில் மிகவும் போற்றப்பட்ட கோவில்களில் ஒன்றாகத் திகழ்ந்தது.
வெள்ளைவாரணர் எழுதிய இந்தக் கோவிலின் வரலாற்றின்படி, சோழர் காலத்தில் கட்டப்பட்ட இந்தக் கோவிலை பல்லவ மரபைச் சேர்ந்த இரண்டாம் கோப்பெருஞ்சிங்கன் அழகுபடுத்தினான். தெற்குக் கோபுரத்திற்கு முதலாம் கோப்பெருஞ்சிங்கன் திருப்பணி செய்தான்.
கண்டன் மாதவன் என்பவனால் கட்டப்பட்ட புராண மண்டபத்தை உள்ளடக்கி, ஆயிரங்கால் மண்டபம் ஒன்று கட்டப்பட்டது. இதனை மூன்றாம் குலோத்துங்கச் சோழன் கட்டினான். இந்த மண்டபத்தில்தான் சேக்கிழாரின் திருத்தொண்டர் புராணம் அரங்கேற்றம் செய்யப்பட்டது.
சிற்றம்பலம் சித்சபை என்றும் அதற்கு முன்பாக உள்ள எதிரம்பலம் கனகசபை என்றும் ஊர்த்தவதாண்டவ மூர்த்தியின் சன்னிதி நிருத்த சபை என்றும் சோமாஸ்கந்தர் திருமேனி உள்ள மண்டபம் தேவசபை என்றும் ஆயிரங்கால் மண்டபம் ராஜசபை என்றும் அழைக்கப்படுகின்றன.
ராஜராஜ சோழன்: ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நிலத்தை துல்லியமாக அளவிட பயன்படுத்திய ‘உலகளந்தான் கோல்’3 ஜூலை 2023
ஏறத்தாழ நாற்பத்தி மூன்று ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இந்தக் கோவிலுக்கு நான்கு ஏழு நிலைக் கோபுரங்களைக் கொண்டிருக்கிறது.
இந்தக் கோவிலுக்குள் பெருமாள் கோவில் ஒன்றும் உள்ளது. எட்டாம் நூற்றாண்டில் ஆட்சி செய்த நந்திவர்மப் பல்லவனால் கட்டப்பட்ட இந்தக் கோவில் திருசித்ரக்கூடம் என்று அழைக்கப்படுகிறது. இதற்கு வைணவர்கள் பூஜை செய்து வருகின்றனர்.
இந்தக் கோயிலின் நிர்வாகம் சோழவம்சத்தில் வந்ததாகச் சொல்லப்படும் பிச்சாவரம் சோழர்களின் கட்டுப்பாட்டில் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. ஆனால், தில்லை வாழ் அந்தணர்கள் எனப்படும் தீட்சிதர்களே இந்தக் கோவிலைத் தற்போது கட்டுப்படுத்தி வருகின்றனர்.
சிதம்பரம் தீட்சிதர்கள் யார்?
தமிழ் சைவ இலக்கியங்களில் தில்லை வாழ் அந்தணர்கள் என்ற தொடர் இடம் பெறுகிறது. இவர்கள் மூவாயிரம் பேர் இருந்தார்கள் என்பதும் கூறப்படுகிறது. ஆனால், எங்கிருந்து வந்தார்கள் என்பது தொடர்பான தகவல்கள் தெளிவாக இல்லை. புராணங்களின்படி தாங்கள் கைலாயத்திலிருந்து வந்ததாக சிதம்பரம் தீட்சிதர்கள் சொல்கின்றனர். பெரிய புராணத்தில் தில்லைவாழ் அந்தணர் சருக்கம் என்றே ஒரு பகுதி இடம்பெற்றுள்ளது.
ஆரம்பத்தில் 3,000 பேராக இருந்த அந்தணர்களின் எண்ணிக்கை தற்போது சுருங்கி, சுமார் 450 பேர் கோவில் நிர்வாகத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கோவிலின் நிர்வாகத்தைப் பொறுத்தவரை எப்போது தீட்சிதர்கள் கையில் வந்தது என்பது குறித்த தகவல்கள் தெளிவாக இல்லை. ஆரம்பத்திலிருந்தே தங்கள் வசம்தான் கோவில் இருந்ததாக தீட்சிதர்கள் தெரிவிக்கின்றனர்.
தீட்சிதர்கள் VS இந்து சமய அறநிலையத் துறை
இந்தக் கோவிலைக் கையகப்படுத்த பல தசாப்தங்களாக இந்து சமய அறநிலையத் துறை முயற்சித்து வருகிறது. 1926ல் மெட்ராஸ் இந்து சமய அறக்கட்டளைச் சட்டம் உருவாக்கப்பட்ட பிறகு, அதன் அடிப்படையில் சிதம்பரம் கோவில் நிர்வாகத்தை ஏற்க அப்போதைய சென்னை மாகாண அரசு முயற்சித்தது. இதற்கென ஒரு திட்டம் (scheme) வகுக்கப்பட்டது. இதனை எதிர்த்து தீட்சிதர்கள் தொடர்ந்த வழக்கு நடந்து கொண்டிருந்த போதே, நிர்வாகத்தை அரசு ஏற்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது.
தீட்சிதர்கள் தொடர்ந்த வழக்கில் திட்டம் வகுக்கப்பட்டது சரி எனச் சொன்ன தென்னார்க்காடு நீதிமன்றம், திட்டத்தில் சில மாற்றங்களைச் செய்யச் சொன்னது. இதனை எதிர்த்துச் செய்யப்பட்ட மேல் முறையீட்டை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இருந்தபோதும் 1940-இல் ஆளுநர் ஆட்சியின்போது கோவில் நிர்வாகத்தை ஏற்கும் நடைமுறை கைவிடப்பட்டது.
இதற்குப் பிறகு, 1951ல் சிதம்பரம் கோவிலின் நிர்வாகத்தை ஏற்பதற்கான அரசாணையை சென்னை மாகாண அரசு பிறப்பித்தது. இதனை எதிர்த்து தீட்சிதர்களால் தாக்கல்செய்யப்பட்ட ரிட் மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தீட்சிதர்களுக்கு ஆதரவாக தீர்ப்பளித்தது. உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டாலும், அந்த மேல் முறையீடு பிறகு திரும்பப் பெறப்பட்டது.
1981ல் எம்.ஜி. ராமச்சந்திரன் முதலமைச்சராக இருந்தபோது, 1939ஆம் ஆண்டுத் திட்டத்தை செயல்படுத்த பார்வையாளர்களை நியமித்தது தமிழ்நாடு அரசு. இதனை எதிர்த்து தீட்சிதர்கள் வழக்குத் தொடர்ந்தனர். இதில் தீட்சிதர்களுக்கு ஆதரவாகத் தீர்ப்பு வந்தது.
இதற்குப் பிறகு 1987ல் கோவிலுக்கு நிர்வாக அதிகாரியை நியமித்து உத்தரவிட்டார் அறநிலையத் துறை ஆணையர். தீட்சிதர்கள் மற்றும் நிர்வாக அதிகாரிகளின் அதிகாரங்கள் வரையறுக்கப்பட்டன. இதனை எதிர்த்து தீட்சிதர்கள் தாக்கல் செய்த வழக்கு பத்தாண்டுகளுக்குப் பிறகு 1997ல் தள்ளுபடி செய்யப்பட்டது. 2004ல் தீட்சிதர்கள் சீராய்வு மனு தாக்கல் செய்தனர். அதுவும் தள்ளுபடிசெய்யப்பட்டது. சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து ரிட் மனு தாக்கல் செய்தனர் தீட்சிதர்கள். அது 2009ல் தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்ட பிப்ரவரி 2ஆம் தேதி இரவு 8 மணிக்கு நிர்வாக அதிகாரி கோவிலுக்குப் பொறுப்பேற்றுக் கொண்டார். ரிட் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து தீட்சிதர்கள் மேல் முறையீடு செய்தனர். இரு நாட்களில் கோவிலில் உண்டியல் வைக்கப்பட்டது.
ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டதை எதிர்த்து செய்யப்பட்ட முறையீட்டை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து தீட்சிதர்கள், அரசியல் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி உள்ளிட்டோர் மேல் முறையீடு செய்தனர். உச்ச நீதிமன்றம் தீட்சிதர்களுக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்தது.
இதையடுத்து கோவில் நிர்வாகம் மீண்டும் தீட்சிதர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டது.
இப்போது கோவிலை மீண்டும் கைப்பற்ற இந்து சமய அறநிலையத் துறை முயற்சிப்பதாக தீட்சிதர்கள் குற்றம்சாட்டுகின்றனர். குறிப்பாக, 2021ல் தி.மு.க. அரசு மீண்டும் பதவியேற்றதும் இந்த முயற்சி தீவிரமாக நடப்பதாகக் கூறுகிறார்கள் அவர்கள்.
“கடந்த இரண்டாண்டுகளாக எவ்வளவு தொந்தரவு செய்யமுடியுமோ, அவ்வளவு தொந்தரவு செய்கிறார்கள். சமூகத்தில் எங்கள் மீது காழ்ப்புணர்ச்சியை ஏற்படுத்தி, கெட்ட பெயர் ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள். இந்தக் கோவில் மீது இந்து சமய அறநிலையத் துறைக்கு எந்தக் கட்டுப்பாடும் கிடையாது. இருந்தபோதும் ஆறு மாதங்களுக்கு முன்பாக, அதிகாரிகள் வந்து நகைகளைச் சோதித்துச் சென்றனர். இவர்களுடைய நோக்கம் என்பது இந்தக் கோவிலைக் கைப்பற்றி உண்டியல் வைப்பது. வரிசைகளை ஏற்படுத்தி கட்டணம் வசூலிப்பது. எங்களுக்கு எவ்வளவு கஷ்டம் கொடுக்கலாமோ அவ்வளவு கஷ்டம் கொடுக்கிறார்கள்” என்கிறார் பொது தீட்சிதர்களில் ஒருவரான பைரவதாஸ அய்யப்ப தீட்சிதர்.
இதே கருத்தையே எதிரொலிக்கிறார் பொது தீட்சிதர்கள் சபையின் செயலரான சிவராம தீட்சிதர். “இந்து சமய அறநிலையத் துறை இந்தக் கோவில் மீது கண் வைத்திருக்கிறது. இதனை எப்படியாவது அபகரிக்க வேண்டுமென நினைக்கிறது. எங்களுடைய நகைகளை சரிபார்க்க வேண்டும் என்றார்கள். அந்த அறிக்கையை சரியாகக் கொடுத்தோம். 17 வருட ஆவணங்களை அளித்தோம். ஒரு கிராம்கூட தொலைந்ததாக அவர்களால் சொல்ல முடியவில்லை. அதற்குப் பிறகு பால்ய விவாகம் செய்வதாக ஒரு பத்து குடும்பங்களின் மீது வழக்குத் தொடர்ந்தார்கள். பெண் குழந்தைகளைச் சோதித்தார்கள்.
தென் ஆப்ரிக்காவில் வாரிசுச் சண்டையில் மன்னருக்கு விஷம் கொடுக்கப்பட்டதா?3 ஜூலை 2023
இந்தக் கோவில் தொடர்பாக உச்ச நீதிமன்றத் தீர்ப்பு இருக்கிறது. அரசு இதுபோன்ற அடக்குமுறைகளை கைவிடவேண்டும்” என்கிறார் சிவராமன்.
இந்தக் கோவில் தொடர்பாக ஊடகங்களிடம் பேசியுள்ள இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு. “அரசைப் பொருத்தவரையில், ஆதிகாலம் தொட்டு என்ன வழிபாட்டு முறைகள் பின்பற்றப்படுகிறதோ, அதை துளியளவுக்காவது மாற்றும் எண்ணம் இந்து சமய அறநிலையத் துறைக்குக் கிடையாது. அதே நேரத்தில், திருக்கோயில்கள் மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டது. அதை டீனாமினேஷன் கோவிலாக (சமயக் கோயில்) அறிவிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு தீட்சிதர்கள் செயல்படுகிறார்கள்.
மக்களுடைய நன்கொடைகளால் இந்த திருக்கோயில் நடந்துகொண்டிருக்கிறது. இந்த திருக்கோயிலை இந்து சமய அறநிலையத் துறையிடம் இருந்து எடுக்கின்றபோது, அன்றைக்கு திருக்கோயிலில் இருந்த ரொக்கப் பணம் எவ்வளவு என்பதை இதுவரை தணிக்கை செய்வதற்குகூட அவர்கள் அனுமதிக்க மறுக்கிறார்கள்.
அந்தக் கோயிலை ஏதோ அவர்களுடைய சொந்த நிறுவனம் போல் பாவித்துக் கொண்டுள்ளனர். இதைத்தான் அரசு தட்டிக்கேட்கிறது. மக்கள் பணத்தால், மக்களுடைய முழு அர்ப்பணிப்பால் நடக்கின்ற இத்திருக்கோயிலில், மக்களுக்கும் அரசுக்கும் சேர்க்க வேண்டிய வெளிப்படையான தகவல்களைக் கூட கொடுக்க மறுக்கிறார்கள்” என்றும் தெரிவித்திருக்கிறார்.
இந்தக் கோவில் தொடர்பான ஆவணங்கள் திரட்டப்பட்டுவருவதாகவும் அதன் அடிப்படையில் தொடர் நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும் என்றும் சேகர் பாபு தெரிவித்திருக்கிறார்.
Leave a Reply
You must be logged in to post a comment.