வாழ்வாங்கு வாழ்ந்து மறைந்த அக்காவின் நினைவு நெஞ்சிருக்கும் வரை  நிலைத்திருக்கும்!

வாழ்வாங்கு வாழ்ந்து மறைந்த அக்காவின் நினைவு நெஞ்சிருக்கும் வரை  நிலைத்திருக்கும்!

வே. தங்கவேலு

சாதல் புதுவதன்று எனக் கணியன் பூங்குன்றனார் பாடி வைத்திருக்கிறார்.  இருந்தாலும் எவ்வளவுதான் மனதைத் தேற்ற முனைந்தாலும் ஆற்ற விளைந்தாலும் இறப்பினால் ஏற்படும் இழப்பை தாங்கிக் கொள்ள முடியாமல் இருக்கிறது.  

அக்கா பாக்கியம்  96 ஆண்டுகள் நிறைவாழ்வு வாழ்ந்து மறைந்து விட்டார். இந்தப்ப பாக்கியம் பலருக்குக் கிட்டுவதில்லை. அவரது வாழ்க்கையின் இறுதிக் காலம்வரை அவருக்கு எந்தக் குறையும் இருந்ததில்லை. அவரது இறுதி நாட்களில் அவரை அன்பான பிள்ளைகள், அருமை மருமக்கள், ஆசைப்  பேரப்பிள்ளைகள் கண்ணை இமை காப்பது போல் இரவு,  பகல்  கவனித்து வந்தனர். 

பேரப்பிள்ளைகள் மற்றம் பூட்டப்பிள்ளைகளின்   மழலைப் பேச்சு அவர்களின் குறும்புகள் அவர்கள் அள்ளிச் சொரிந்த பாசம், அவர்கள் காட்டிய அபரிவிதமான  வாஞ்சை  “அம்மம்மா” “அப்பம்மா” என யாழினும் குழலினும் இனிதாக அவர்கள்  வாய் மணக்கக் கூப்பிடும் குரல்கள் அக்காவின்  கண்ணுக்கு விருந்தாகவும்  செவிக்குத் தேனாகவும் விழுந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.   

பிள்ளைகளின் அன்பு மழையில் நனைந்த அக்காவிற்கு வாழ்க்கையில்  ஒரு பிடிப்பு ஏற்பட்டது.  நெடிது வாழவேண்டும் என்ற எண்ணம் அவரை அறியாமல் இருந்தது.   அவர் அகவை தொண்ணூறைக் கடந்து இவ்வளவு காலமும் வாழ்ந்ததன் இரகசியம் இதுதான்.

எமது குடும்பம் பெரியது. அதில் தப்பியவர்கள் மூன்று  பேர்தான். அண்ணன், அக்கா, நான். இப்போது நான் மட்டும் எஞ்சியிருக்கிறேன். அண்ணன் தனது 77 அகவையில் மறைந்துவிட்டார். போர், இடப்பெயர்வு, அண்ணியின் இறப்பு, தனிமை போன்ற காரணங்கள் அவரது வாழ்க்கைப் பயணத்தை முடித்துவிட்டன. இல்லை என்றால் அவர் மேலும் ஒரு பத்தாண்டுகளாவது வாழந்திருப்பார்.

நான், அண்ணன், அக்கா மூவரும் பெற்ற தாயை சிறுவயதில் இழந்துவிட்டோம்.  அவர் மறைந்தபோது எனக்கு அகவை 6, அக்காவுக்கு 12, அண்ணனுக்கு 14 மட்டுமே.   அகவையில் அம்மா (ஆச்சி என்றுதான் அழைப்போம்) மறைந்துவிட்டார். இன்றைய நவீன மருத்துவ வசதிகள் அன்றிருந்தால் அம்மா மேலும் பல ஆண்டுகள் வாழ்ந் திருப்பார். ஆச்சியின் முகம் நினைவில் நிழாலாடுகிறது.  தோற்றத்தில் அக்காவை விட உயரம். நிறமும் அப்படித்தான். அன்றைய வழக்கப்படி சட்டை அணிந்திருக்கவில்லை. சேலையைக் கொண்டுதான் மார்பை மறைத்திருப்பார். அவர் அணிந்திருந்த கொலுசு களின் ஓசை  தூரத்தில் வரும்போதே வள்ளியம்மை வருகிறார் என்று கட்டியம் கூறும். 

ஆச்சியை இழந்த தந்தையார் மறுமணம் செய்து கொள்ளவில்லை. அக்கா தாயில்லாத பிள்ளை என்ற காரணத்தால்  அவரது 16 ஆவது அகவையிலேயே திருமணம் செய்துவைத்து விட்டார். அப்போது எனக்கு அகவை பத்து.

வாழ்க்கை என்பது துன்பம் நிறைந்தது என்பது புத்தரின் போதனை. வாழ்க்கை என்பது போராட்டம் என்பது எனது எண்ணம். அரசன் முதல் ஆண்டிவரை அவரவர் வாழ்க்கை போராட்டம்தான். பூனகரி வயலில் இருந்து கிடைக்கும் நெல்லுக்கு மட்டும் தட்டுப்பாடு கிடையாது.  அக்கா நல்ல முயற்சி உடையவர். மாடுகள் வளர்த்து அவற்றில் இருந்து வரும் பாலை, வீட்டுத் தேவைக்கு மேலாக இருப்பதை விற்றுவிடுவார்.  வீட்டில்  தயிர், மோருக்கு பஞ்சம் இருக்காது. அயலவர்கள் மோர் வாங்கிச் செல்வார்கள். பால் காய்ச்சும் வேலையை என்னிடம் விட்டு விடுவார்கள்.

அக்காவின் பிள்ளைகள் வளர்ந்த பின்னரே குடும்ப பாரம் குறைந்தது. அவரின் குடும்பத்தைத் தூக்கி நிமிர்த்தியதில் பெரும்பங்கு சிவபாலநாதனை  (பாலு) சாரும். அடுத்தது சிவகுணநாதனைச் (குணம்)  சாரும். குணம்தான் 1992 ஆம் ஆண்டு முழுக் குடும்பத்தையும் கனடாவுக்கு கூப்பிட்டிருந்தார். அவர் ஒரு வாகன விபத்தில் உயிரிழந்தது எங்கள் எல்லோருக்கும்  செரிக்க முடியாத இழப்பு. தீராத வலி. அது இப்போதும் தொடர்கிறது. நாங்கள் நைசீரியாவுக்கு 1987 ஏப்ரல் மாதம் வந்தபோது கனடா எல்லைக்கு வந்து கூட்டிச் சென்று ஒரு தொடர்மாடிக் கட்டிடத்தில் குடியிருத்தினார். அங்கு 3 மாதம் இருந்துவிட்டுத்தான் ஸ்காபரோ வந்தோம்.

இந்த உலகில்  இறத்தல் என்பது நடந்தே தீரும். அதிலிருந்து தப்ப முடியாது. எனவே வாழும் காலத்தில் நாங்கள் அறம் செய்து வாழ வேண்டும்.

நற்றிறம் புரிந்தோர் பொற்படி யெய்தலும்
அற்புளம் சிறந்தோர் பற்றுவழிச் சேறலும்
அறப்பயன் விளைதலும் மறப்பயன் விளைதலும்
பிறந்தவர் இறத்தலும் இறந்தவர் பிறத்தலும்
புதுவது அன்றே தொன்றியல் வாழ்க்கை. 
   (சிலப்பதிகாரம்)

நல்லறம் செய்தோர் நற்கதியடைவார்கள் என்பதும், ஒருவரிடம் பற்றுவைத்தோர் அப்பற்றின் காரணமாக மீண்டும் அவர்கள் சேர்ந்து பிறத்தலும், மறுபிறப்பிலும் அவர்கள் சேர்ந்து அன்புடன் இருப்பதும், நல்வினைப் பயன்கள் அவர்களிடம் சேர்வதும், தீவினைப் பயன்களும் அவைகளைச் செய்தோரிடம் சேர்வதும், பிறந்தவர் இறப்பதும், இறந்தவர் பிறப்பதும் புதியதன்று, தொன்று தொட்டே இயற்கையாக நடப்பதாகும். இந்தத் தத்துவ உண்மைகளை மாடல மறையோன் வாயிலாக சிலப்பதிகாரம் இயற்றிய இளங்கோ அடிகள் எடுத்துக் கூறுவார். இதன் மூலம், மக்கள் நல்லறங்களும் நல் வினைகளும் செய்ய வேண்டும் என்பதும் பிறரிடம் அன்பு செலுத்த வேண்டும் என்பதும் இங்கு வலியுறுத்தப்படுகிறது.

அக்கா சிவபாக்கியம் கடவுள் பக்தி நிறைந்தவர். எல்லாக் கோயில்களிலும் பொங்கல் பொங்கி பூசை வழிபாடு செய்தவர்.  நல்லறங்கள் செய்து வாழ்ந்தவர். உறவினர்களது நன்மை, தின்மை எதுவாக இருந்தாலும் ஓடோடிச் சென்று தன்னால் இயன்றளவு உதவி  செய்வார்.  இது, அவர் எமது தந்தையாரிடம்  இருந்து கற்றுக் கொண்ட பண்பாகும்.

அத்வைத வேதாந்தத்தின் சிற்பி சங்கரர் இந்த உலகம் மாயை என்றார். நாம் காணும் இந்த உலகம் மட்டுமல்ல எல்லாமே மாயை என்றார். கனவுகள் எப்படி நிசம் இல்லையோ உலக வாழ்க்கையும்  உண்மை இல்லை என்றார்.  

சங்கரரின் இந்த மாயாவாதத்தை மகாகவி பாரதியார் மறுத்துரைக்கிறார். “இதோ என்முன் சௌந்தர்ய தேவதையாக நிற்கிறாளே என் மனைவி. இவள் மாயையா?” என்று காட்டமாகக் கேட்டவர் பாரதியார். 

ஆனால் உடன் பிறப்புக்களும் உற்றார், உறவினர் மறையும் போது சங்கரரின் மாயாவாதம் சரியென்று  ஒரு கணம் எண்ணத் தோன்றுகிறது! இதனைச் சுடலை ஞானம் என்றுகூட வைத்துக் கொள்ளலாம்! 

“ஊரும்சதமல்ல உற்றார் சதமல்ல உற்றுப்பெற்ற
 பேருஞ்சதமல்ல பெண்டீர் சதமல்ல பிள்ளைகளும்
 சீருஞ்சதமல்ல செல்வம் சதமல்ல தேசத்திலே
 யாருஞ்சதமல்ல நின்தாள்சதம் கச்சிஏகம்பனே!
 ( பட்டினத்தார்) 

நிலையாமைபற்றி தாயுமானவரின் அறிவுறுத்தல் இது. யாரும் ஆதரம் இல்லை.  இறைவன் திருவடியே ஆதாரம் என தாயுமானவர் தொழுது போற்றுகிறார்.

குடம்பை தனித்தொழியப்  புட்பறந்தற்றே
உடம்போடு உயிரிடை நட்பு.
            (அதிகாரம் நிலையாமை. குறள் 338) 

பருவம் வந்ததும் முட்டை தனியே கிடக்க அதனுள் இருந்த பறவை பறந்து போவதைப் போன்றதே உயிருக்கும் உடம்புக்கும் உள்ள நட்பு.   “யாதும் ஊரே யாவருங் கேளிர்” என்று தொடங்கும் புறநானூற்றப் பாடலைப் பாடிய சங்ககாலப் புலவர் பூங்குன்றனார் சாதல் புதியதன்று என்று சொல்கிறார். 

யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன
சாதலும் புதுவது அன்றே, வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்
இன்னா தென்றலும் இலமே, மின்னொடு
வானம் தண்துளி தலைஇ யானாது
கல் பொருது மிரங்கு மல்லல் பேரியாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
முறை வழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே,
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.
     (புறம்: 192)

முனிவு = வெறுப்பு, கோபம்; தண்துளி = குளிர்ந்த துளி; மல்லல் = மிகுதி, வலிமை, பொலிவு; புணை = தெப்பம், மிதவை, மூங்கில்.

இந்தப் பாடல் கணியன் பூங்குன்றனார் பாடிய பாடல். இதில் வரும் முதல் இரண்டு அடிகளை மட்டும் பலர் சொல்லிவிட்டுப் போய்விடுவார்கள். ஆனால் அடுத்த வரிகள்தான் முக்கியமானவை.  

நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன – துன்பமும் அதற்கு மருந்தான ஆறுதலும் கூட மற்றவர் தருவதில்லை.

சாதலும் புதுவது அன்றே –  கருவில் தோன்றிய நாளே அது தொடங்கிவிட்டது.  பிறந்த நாள் ஒன்று உண்டெனில், இறக்கும் நாளும் ஒன்று உண்டு.  அது இயற்கை.

வாழ்தல் இனிதென மகிழ்ந்தன்றும் இலம் – வாழ்தலை இனிதென்று உவந்ததும் இல்லை.

முனிவின் இன்னாதென்றாலு மிலமே – ஒரு வெறுப்பு வந்த இடத்து இன்னாதென்று இருத்தலும் இல்லை.

மின்னொடு வானம் தண்துளி தலை இ யானாது –  வானத்தில் மின்னலுடன் வருகின்ற சிறுத்துளி மழைநீர் ஒன்றுசேர்ந்து பெரிய கல்லைக் கூட பேராற்று நீர்வழி ஓடி பள்ளத்தில் தள்ளுகிறது.

நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர் –    அவ்வாற்று நீரின் வழியே செல்லும் தெப்பம் போல.

முறை வழிப் படூஉம் என்பது திறவோர் – அது போல இயற்கைவழி நடக்கும் உயிர்வாழ்வென்று என்பது போல சான்றோர் பார்வையில் தெளிந்த வண்ணம் ஆகும்.

பெரியோரை வியத்தலும் இலமே, சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.   ஆதலினால், பெருமையில் பெரியோரை வியந்து போற்றுவதும் தவறு, அதைவிட சிறியோரை இகழ்ந்து தூற்றுவதும் மிகவும் தவறு.

வாழ்க்கையில் இறப்பு – பிறப்பு இன்ப – துன்பம் எல்லாவற்றையும் ஒரே சீராகப் பார்க்கும் மனப்பக்குவம் மனிதர்களுக்கு வேண்டும் என்பது சங்கப் புலவரின் அறிவுறுத்தல். இப்படியான ஞானிகள்,  புலவர் பெருமக்களது அறிவுரைகள் அக்காவை இழந்து தவிக்கும் எங்கள் மனதுக்கு சற்று ஆறுதல் தருவனவாக, ஒத்தடம் கொடுப்பதாக இருக்கின்றன.

திருமூலர் என்ற சித்தர், சித்தர்களுக்கு எல்லாம் பெரிய சித்தர். மந்திரம் மூவாயிரம் என்ற நூலை எழுதியுள்ளார். ஏனைய சித்தர்கள் “காயமே இது பொய்யடா, காற்றடைத்த பையடா” என்று சொன்னதை மறுத்து மனித உடம்பு ஒரு கோயில் எனப் பாடியுள்ளார்.

உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளற் பிரானுக்கு வாய் கோபுரவாயில்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்தும் காளாமணி விளக்கே’ (பாடல் 1823)

நம் முன்னோர்கள் இயற்கையை வழிபட்டு இருக்கின்றனர். இயற்கையின் தன்மையை உணர்ந்து,வென்று சிவத்தை (கடவுள்தன்மை) யடைந்த மனிதர்களை (சித்தர்களை) வழிபட்டு இருக்கின்றனர். ஆனால் அவர்கள் நமக்கு விட்டுச்சென்ற கோவில்கள் அனைத்தும் நமது உடம்பேயன்றி வேறொன்றும் இல்லை என்று நாம் உணரவில்லை. ஆகவேதான் நாம் நம் நிம்மதியை தேடி கோவில்களுக்கு செல்கிறோம். தவறில்லை. ஆனால் உணர்ந்து செயல்பட்டால் மிக சிறப்பு.

உடம்பினை முன்னம் இழுக்கென்று இருந்தேன்
உடம்புக்குள்ளே உறு பொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில் கொண்டானென்று
உடம்பினை யான் இருந்து ஓம்புகின்றேனே” 
  (பாடல் 725)
 

என்று மானுட உடம்பின் மகத்துவத்தை மனித மனத்தில் பதிய வைத்தவர். எனவே நீண்ட நாள் வாழ விரும்பினால் நாங்கள் எங்கள் உடம்பை கோயில் என நினைத்து அங்கே உத்தமன் குடியிருக்கிறான் என நினைத்து ஒழுகல் வேண்டும்.  ஒழுக்கம் மிக மிக அவசியம். ஒழுக்கம் இல்லாத கல்வியால், ஒழுக்கம் இல்லாத பொருளால் பலனில்லை. எங்கள் பிள்ளைகளுக்கு ஒழுக்கத்தை வலியுறுத்தும் திருக்குறள், ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை போன்ற நூல்களை கற்பித்துக் கொடுங்கள்.

அறம்செய்ய விரும்பு, முயற்சி திருவினையாக்கும்,  எண்ணும் எழுத்தும் கண் எனத்தகும், உலகத்தோடு ஒட்ட ஒழுக  வேண்டும், பொறாமைபடக் கூடாது, கனிவாகப் பேச வேண்டும், ஒருவர் செய்த நன்றியை மறந்துவிடக் கூடாது, தீமையை மறந்து விடவேண்டும், தந்தை தாயாரை பேணுதல் வேண்டும், வஞ்சகம் பேசேல், சூதாட்டம் கேடு தரும், செய்வன திருந்தச் செய், தீவினையை அகற்றல் வேண்டும், ஒற்றுமையோடு வாழ வேண்டும், மீதூண் விரும்பக் கூடாது, நேர்பட ஒழுக வேண்டும்,  களவாடாக் கூடாது,  வல்லமை பேசக் கூடாது, கடிவது (கோபம்)  மறக்க வேண்டும், நடுநிலையோடு வாழ வேண்டும் என்ற அறநெறிகளை இந்த நூல்கள் வலியுறுத்துகின்றன. இந்த நாட்டில் இந்த அறநெறிகள் கற்பிக்கப்படுவதில்லை.

வாழ்வாங்கு வாழ்ந்து மறைந்த அக்காவின் நினைவு நெஞ்சிருக்கும் வரை  நிலைத்திருக்கும்!

About editor 3046 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply