ஆலமர் செல்வன்: தென்னாடுடைய சிவன்

ஆலமர் செல்வன்: தென்னாடுடைய சிவன்

முனைவர் தி. இராஜரெத்தினம்

ஆய்வாளர்

பிரெஞ்சு ஆசியவியல் ஆய்வுப்பள்ளி,

19&16, துய்மா வீதி (Dumas street)

புதுச்சேரி -1

ஆய்வுச் சுருக்கம்:

‘தென்னாடுடைய சிவனே போற்றி’ என்பது சிவபுராணம். தென்னாட்டினன் என்பதே அதன் உட்பொருள். எனவே சைவசமயத்திற்கு தென்னாடுடைய சிவன் என்னும் தக்‌ஷிணாமூர்த்தி தென்னகத்தின் கொடை என்னும் கருதுகோளில் இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது. சங்க இலக்கியத்தில் காணப்படும் சிவன் பற்றிய செய்திகளும் ஆலமர் கடவுள் என்று சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் தக்‌ஷிணாமூர்த்தி பற்றிய குறிப்புகளும் ஆராயப்பட்டு, தக்‌ஷிணாமூர்த்தி தெற்கு முகமாக அமர்ந்திருக்கும் கடவுள் மட்டுமல்ல, அவர் தென்னாட்டிலிருந்து வந்தவர் என்னும் கருத்தினை முன்மொழிந்து அதனை நிறுவ முயற்சிக்கின்றது. மேலாய்வுகள் அதனை நிறுவும் விதமாக அமையும்.

திறவுச்சொற்கள்:

    ஆலமர் கடவுள், ஆலமர் செல்வன், தக்‌ஷிணாமூர்த்தி, ஆலமரம், முருகன், சேயோன், தொல்பழந்தமிழ், முன்பழந்தமிழ், பின்பழந்தமிழ்

முன்னுரை:

     சங்க இலக்கியத்தில் சைவ சமயம் சார்ந்த செய்திகள் பதிவாகியுள்ளமையினை அறிஞர்கள் பலர் பொதுநிலையில் விளக்கியுள்ளனர்.1 ஆனால், ‘ஆலமர் செல்வன்’ என்று சங்க நூல்களால் அழைக்கப்படும் தென்முகக்கடவுளாகிய தக்‌ஷிணாமூர்த்தி பற்றிய தனிநிலை ஆய்வு எதுவும் எழுதப்பட்டதாகத் தெரியவில்லை. ஆலமர் செல்வன் என்று தமிழ் செவ்விலக்கியங்களில் அழைக்கப்படும் சிவன் ‘தென்னாட்டினைப் பூர்வீக மாகக் கொண்டவன்’ என்னும் கருதுகோளினை முன்வைத்து இக்கட்டுரை அமைகிறது.

தொல்பழந்தமிழ் நூல்களில்:

தொல்காப்பியம் ஐவகை நிலத்திற்குமான தெய்வங்களைக் குறிப்பிடும்போது குறிஞ்சி நிலத்தெய்வமாக ‘சேயோன்’ என்னும் குழந்தைத்தெய்வத்தைக் குறிப்பிடுகிறது.2 சேயோன் என்னும் கடவுள் ‘முருகன்’ என்னும் தெய்வத்தைக் குறிப்பது என்பது அறிஞர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாகும். தொல்காப்பிய அகத்திணையியல் 5 ஆம் நூற்பா சேயோன், மாயோன், இந்திரன், வருணன் என்னும் தெய்வங்களைக் கூறியுள்ளபோதிலும் ‘சிவன்’ என்னும் கடவுள் பற்றிய குறிப்புகள் ஏதும் கொடுக்கவில்லை.  ஆனால், செவ்வியல் இலக்கியங்களில் சிவன் பற்றிய பல பதிவுகள் காணக்கிடைக்கின்றன. சிவன் ஒருநிலம், ஒரு இனம் சார்ந்த கடவுளாக இல்லாமல் இருந்ததே காரணம்3 என்று கூறப்பட்டாலும் பல செவ்வியல் நூல்களிலும் வலுவான நிலையில் பதிவுசெய்யப்பட்டவரும் சிலப்பதிகாரம், மணிமேகலை4 முதலிய காப்பியங்களில் முழுமுதல் கடவுள் நிலையில் வைக்கப்பட்டவருமாகிய சிவன் குறித்த பதிவு தொல்காப்பியத்தில் ஏன் இல்லை என்பது வலுவான கேள்வியாக நம்முன் இருக்கிறது.

ஆலமர்செல்வன்:

‘ஆல மரத்தின் கண் அமர்ந்த செல்வன்’ என்று பொருள்படும். செல்வன் என்னும் சொல்லுக்குப்  தமிழ்ப்பேரகராதி  1. செல்வமுள்ளவன், 2. இறைவன், 3. புத்தன், 4. மகன் என்னும் நான்கு பொருள்களைத் தருகின்றது.5

இதில் செல்வன் என்னும் தலைச்சொல்லினைத் தமிழ்ப்பேரகராதி ‘செல்வம்’ என்ற சொல்லிலிருந்து வருவிக்கின்றது. சிறுபாணாற்றுப்படையில் வரும் ஆலமர் செல்வன் என்னும் சொற்சேர்க்கையில் செல்வன் என்னும் சொல்லுக்குத் தமிழ்ப்பேரகராதி ‘இறைவன்’ என்றே பொருள் கூறுகிறது. செல்வத்தையுடையவன் என்னும்  பொதுப்பெயர் (குறிப்பு வினையாலணையும் பெயர்) ‘இறைவன்’ என்னும் சிறப்புப் பொருளை அடைந்துள்ள நிலையை நாம் காண்கிறோம். ‘செல்வன்’ என்னும் சொல் மகனைக்குறிப்பது பிற்கால வழக்கு ஆகும்.

எவ்வாறாயினும், ஆலமர் செல்வன் என்னும் சொல்லுக்குப் பொருள் ‘ஆலமரத்தின்கண் அமர்ந்த சிவன்’ என்பதே எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட பொருள் ஆகும்.

தமிழ்ச் செவ்விலக்கியங்களில் ஆலமர் செல்வன்:

பேரா. அகத்தியலிங்கம் அவர்கள் செவ்வியல் தமிழினைப் பழந்தமிழ் என்று கொண்டு அதனை: 1. தொல்பழந்தமிழ்,

2. முன்பழந்தமிழ்,

3.பின்பழந்தமிழ் என்று மூன்றாகப்பகுத்து ஆய்ந்துள்ளார்6.

 தொல்காப்பியமே தொல்பழந்தமிழ் நூலாக நமக்குக் கிடைக்கிறது. வேறு நூல்கள் பற்றிய குறிப்புகள் முதற்சங்கம் பற்றிய குறிப்புகளில் காணப்படுகின்றன. தொல்காப்பியத்தில் ‘சேயோன், மாயோன், இந்திரன், வருணன் பற்றிய குறிப்பு மட்டுமே உண்டு. சேயோன் குழந்தைத்தெய்வமாக இருந்தால் தந்தைத்தெய்வம் ஒன்று இருக்கவேண்டுமல்லவா?7 அது பற்றிய குறிப்புகள் முன்பழந்தமிழ் நூல்களில் காணப்படுகின்றன.

     முன்பழந்தமிழ் காலகட்டத்தின்கண் பதிற்றுப்பத்து, ஐங்குறுநூறு, அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, பத்துப்பாட்டு முதலிய நூல்களைக் குறிப்பிட்டுள்ளார் அகத்தியலிங்கம்8. இந்நூல்களில் காணப்படும் சிவன் பற்றிய குறிப்புகளைப் பிறிதொரு கட்டுரையில் விளக்கியுள்ளோம்.9

இங்கு ஆலமர் செல்வன் என்னும் தக்‌ஷிணாமூர்த்தி பற்றிச் சிறப்பாகக் காண்போம். புறநானூற்றுப் பாடல் ஒன்று சிவனை ‘முழுமுதல்வன்’ என்கின்றது.10. புறநானூற்றுப்பாடல்கள்11இரண்டும் மற்றும் அகநானூற்றுப் பாடல் ஒன்றும்12 சிவனை ‘முக்கண் செல்வன்’ என்கின்றன. கறைமிடறு உடைய சிவனை ஒரு புறப்பாடல் பதிவு செய்துள்ளது.13 அகநானுற்று பாடல் ஒன்றும் புறநானூற்றுப் பாடல் ஒன்றும்  ஆலமரத்தோடு கூடிய சிவனை அடையாளப்படுத்துகின்றன.  அவை:

ஆலமுற்றம் கவின் பெற தைஇய              (அகம் 181:16)

‘ஆலமர் கடவுளன்ன நின் செல்வம்’- (புற: 198)

ஆலின்கீழ் அமர்ந்த முக்கட் செல்வனாகிய கடவுள்’ (புறம்: 198 பழைய உரை)

ஆலமர் செல்வன் என்னும் சிவவடிவம் பற்றிய பதிவும் முன்பழந்தமிழ் காலகட்டத்தில் மிக விரிவாக இல்லை எனலாம். ஆனால், சிவன் பற்றிய சில செய்திகள் உள்ளன.

பின்பழந்தமிழ் நூல்கள் என கலித்தொகை, பரிபாடல், பத்துப்பாட்டு-ஆற்றுப்படைகள், திருமுருகாற்றுப்படை மற்றும் சிலம்பு, மணிமேகலை முதலிய நூல்களை அகத்தியலிங்கம் குறித்துள்ளார். இக்கால கட்டத்தில் ஆலமர் செல்வன் மிக வலிமையாக இடம்பெற்றுள்ளமையினை நாம் அறிகிறோம். 

சிறுபாணாற்றுப்படை வரி ஒன்று ஆலமர் செல்வனைப் பதிவு செய்துள்ளது.14 முருகன் ஆலமர் செல்வனின் மகன் என்னும் குறிப்பை கலித்தொகை, பரிபாடல், திருமுருகாற்றுப்படை, சிலப்பதிகாரம், மணிமேகலை முதலிய நூல்கள் குறிப்பிடுகின்றன. அவை:

‘ஆல் அமர் செல்வன் அணி சால் பெரு விறல், போல . . .’   (கலி. 81: 9-10)   ‘ஆலமர் செல்வன் அணிசால் மகன் . . . ’              (கலி. 83:14)

 ‘ஆல்கெழுகடவுள் புதல்வ மால் வரை’              (திருமுரு. 256); 

‘ஆலமர் செல்வன் புதல்வன்’                 (சிலப்பதிகாரம்- 26:12)

 ‘மலைமகள் மகன்’                         (சிலப்பதிகாரம் 26:16)

பொலந்தேர் மீமிசைப் புகர்முக வேழத்
திலங்குதொடி நல்லார் சிலர்நின் றேற்றி
ஆலமர் செல்வன் மகன்விழாக் கால்கோள்
காண்மி னோவெனக் கண்டுநிற் குநரும்

 (மணிமேகலை, மலர்வனம் புக்ககாதை,143-145)

மேலும் முருகன் மால் என்னும் திருமாலின் மருமகன் என்றும் உமா தேவி திருமாலின் சகோதரி என்றும் பரிபாடல் கூறுகின்றது.

     மால் மருகன் -பரி.19.5

உமா திருமாலின் சகோதரி (பரி 8.126)

மேற்கண்ட செய்திகளிலிருந்து முருகன் ஆலமர் செல்வன் மகன் என்பதும் திருமால் மருகன் என்பதும் உமாதேவின் புதல்வன் என்பதும் செவ்வியல் நூல்களில் பதிவு பெற்றிருக்கின்றமையை நாம் அறிகிறோம்.

முருகன் தமிழ்க்கடவுள்:

முருகன் தமிழ்க்கடவுள் என்பது எல்லோரும் ஒத்துக்கொள்ளும் ஒரு செய்தி ஆகும். ஆலமர் கடவுள் தமிழ்க்கடவுளா? என்னும் ஒரு கேள்வி எழுகின்றது. வேதத்தில் முதன்மை பெற்ற இந்திரன் தொல்காப்பியத்திலும் சங்க இலக்கியத்திலும் மருத நிலத்திற்குத் தெய்வமானது எவ்விதம்? இந்திரனும் வருணனும் வேதக்கடவுளர்கள் அல்லவா? அவர்கள் சங்க இலக்கியத்தின் முறையே மருதம், நெய்தல் திணைகளுக்குத் தெய்வம் ஆனகதை என்ன? முன்பழந்தமிழ் நூல்கள் காட்டும் தெய்வங்கள் பின்பழந்தமிழ் காட்டும் தெய்வங்கள் பற்றிய செய்திகள் அடிப்படையில் தொல்காப்பியம் பொருளதிகாரம் காட்டும் தெய்வங்கள் பற்றிய செய்திகள் மறுவாசிப்புச் செய்யப்படவேண்டியவையா? முன்பழந்தமிழ் நூல்கள் காட்டும் தெய்வக்குறிப்புகள் பெரும்பாலும் பிற்காலப் பாடல்களிலிலேயே காணப்படுகின்றன. அதாவது புறநானூற்றின் பின் 200 பாடல்களே காலத்தால் முற்பட்டன என்றும் முற்பாதி காலத்தால் பிற்பட்டன என்பது அறிஞர்களின் ஆய்வு முடிவு ஆகும்.

தொல்காப்பியம் காட்டும் நிலத்தெய்வங்களுக்கும் சமண பௌத்த சமயங்களுக்கு மான தொடர்பு அல்லது எதிர்வு முதலியவை ஆய்வுநோக்கில் ஆராயப்படவேண்டும். தொல்காப்பியம் ‘வேந்தன்’ என்றே குறிப்பிடுவதை பிற்கால இலக்கணங்கள் ‘இந்திரன்’ என்கின்றன. வேந்தன் என்னும் பொதுப்பெயர் இந்திரனுக்குச் சிறப்புப்பெயராகிய கதை ஆராயப்படவேண்டும். முருகன் சுப்பிரமணியன் ஆனதைப்போல.

தக்‌ஷிணாமூர்த்தியும் தென்னாடும்:

Google map

‘தக்‌ஷிணம்’ என்றால் தெற்கு என்று பொருள். தக்‌ஷிணா மூர்த்தி என்பதற்கு தெற்குதிசை நோக்கி இருக்கும் கடவுள் என்பது வடபுலத்தார் விளக்கம். ஆனால், ‘தெற்கிலிருந்து வந்த மூர்த்தி’ என்னும் வாசிப்புச் சாத்தியமும் இருக்கிறது. இதனை மெய்ப்பிக்கும் வகையில் தக்‌ஷிணாமூர்த்தி கோயில்கள் தென்னாட்டிலேயே அதிகம் காணப்படுகின்றன. (பார்க்க: Google map)

கோபிநாத ராவ் அவர்களின் கூற்று ஒன்றும் தென்னகத்தோடு உள்ள தொடர்பினைச் சுட்டுகிறது.

He (T.A. Gopinatha Rao in his book namely ‘Elements of Hindu Iconography’, Indological Book House, Varanasi, 1971, Vol.II, Part I, p. 324 ) says that in the left ear of the female there should be a Kundala known as Vaalikaa. This is the rendering of the Tamil word Vaali which is the name of an ear-ornament; such words are common in tha Agamas, and indicates distinctly by the fact that the authors of the bulk of the agamas were residents of the Tamil country, p.325.15

     சிலப்பதிகாரத்தில் செங்குட்டுவன் சிவன் அருளால் தோன்றியவன் என்னும் குறிப்புக் காணப்படுகிறது. (“செஞ்சடை வானவன் அருளினால் விலங்க வஞ்சித்தோன்றிய வானவ! – (சிலம்பு. 26: 98-99)

நீலகண்ட சாஸ்திரி அவர்கள் தென்ன்னாட்டில் காணப்படும் உருவ அமைப்புகள் தெற்காசிய நாடுகளில் கிடைக்கும் தெய்வ உருவங்களோடு ஒப்புமை உடையனவாக உள்ளன என்கிறார்.

“The hermaphrodite icons commonly seen in South India are found to be very common in the Hindu colonies of Southeast Asia where they are met with perhaps in larger numbers than in India”.16

சோ. ந. கந்தசாமி அவர்கள் சிந்து சமவெளிக்கால சிவன் எவ்வாறு ருத்ரன்  ஆக மாற்றப்பட்டான் என்று கூறுகிறார்.

 ‘The worship of Siva, as the Absolute goes back to the pre-Vedic period. During the period of the Brahmanas, the Siva of the Indus Valley civilization and the Rudra of the Vedic culture merged together representing respectively the love and law aspects of the Absolute.’17

இதிலிருந்து சில காலக்கட்டங்களில் சில உள்ளூர் தெய்வங்கள் மையதெய்வங்களாக மாற்றப்பட்டமையினை அறிகிறோம்.

ஆலமர் செல்வன் என்னும் தெய்வமும் பிற்காலத்தில் தக்‌ஷிணாமூர்த்தி என்னும் தெய்வமாக ஆக்கப்பட்டுள்ளார்.

மரங்களும் வழிபாடும்:

மரங்களே ஆதியில் வணங்கப்பட்டிருந்தன. பிற்காலத்திலேதான் அம்மரங்களோடு இணைத்துத் தெய்வ உருவங்களையும் வணங்கினர் என்னும் கூற்று உள்ளது.

     Trees are sacred in India, and often associated with a god or a goddess. Some scholars believe that it is the tree that was worshipped first, maybe for its medicinal or symbolic purpose and that the gods and goddesses came later. That may be the case but today trees are an integral part of a deity’s symbolism. The mango tree, for example, is associated with the love-god Kama, the Tulsi plant is dear to Vishnu, Bilva is associated with Shiva worship, blades of Dhurva grass is offered to Ganesha, Neem or Margosa is sacred to the mother goddess, coconut and banana is associated with Lakshmi.18

ஆலமரம் என்பது இறப்புக்கடவுளான எமனுடன் தொடர்புடையது. அதனால் அது சுடுகாடுகளிலேயே நிற்பது. அதனால் அது பிறப்பு – இறப்புச் சடங்குகளில் பயன்படுத்தப்படுவதில்லை என்று ஒரு குறிப்பு உள்ளது.

Banyan is also associated with Yama, the God of death. This is why it is planted outside of villages near crematoriums. This tree does not let even a blade of grass grow under it. That is why it is not used for any fertility ceremonies like childbirth and marriage, as it does not allow renewal or rebirth.19 

இது ஒரு பொதுவான கருத்தே ஆகும். ஆனால், தமிழகத்தைப் பொறுத்த அளவில்

‘ஆல்போல் தழைத்து அருகுபோல் வேறூன்றி வாழ்க’ என்று மணமக்களை வாழ்த்துவது உண்டு. ‘திருமணம் என்பது ஆயிரங்காலத்துப் பயிர்’ என்னும் வழக்கும் ஆலமரத்தினோடு தொடர்புபட்டதே. ஆலமரமே அழிவில்லாத ஆயிரங்காலத்துப்பயிர். தென்னிந்தியர்களின் திருமணச்சடங்கில் ‘மாமன் சடங்கு’ கால்நாட்டுவது ஆலமரத்தின் சிறுகிளை ஒன்றினை நட்டு ‘குறியீடாக’ காட்டும் சடங்கு உள்ளது. சில பகுதிகளில் பலாமரக்கிளையினையும் நடுவதாகச் செய்தியுள்ளது. எனவே, மங்கலம் அல்லாத ஆலமரத்தினைத் தமிழர்கள் மங்கலமாக மதிக்கின்றனர். தமிழர்களின் வாழ்வில் ஆலமரம் ஒரு மங்கலக் குறியீடாக உள்ளது. இதற்குக்காரணம் ஆலமர் கடவுள் என்னும் கருத்தே ஆகலாம்.

பசுபதி ஆகிய பழைய சிவன் பிற்காலத்தில் ருத்ரன் ஆனமைபோல, ஆலமர் செல்வனாகிய தென்னகக் கடவுளும் பிற்காலத்தில் தக்‌ஷிணாமூர்த்தி ஆகியிருக்கலாம்.

தொகுப்புரை:

  1. சங்க இலக்கியத்தில் காணப்படும் சிவன் வழிபாடு குறித்தச் செய்திகள் குறிக்கப்பட்டுள்ளன.
  2. ஆலமர் செல்வன் என்னும் தக்‌ஷிணாமூர்த்தி பற்றிய குறிப்புகள் சங்க இலக்கியத்தில் வருமிடங்களும் குறிக்கப்பட்டுள்ளன.
  3. ஆலமர் கடவுள் தென்னாட்டவர் என்னும் கருதுகோளை நிறுவும் விதமாகச் சில செய்திகள் ஆராயப்பட்டுள்ளன.

முடிவுரை:

சைவ சமயத்திற்கு தென்னகம் வழங்கிய கொடை ‘ஆலமர் செல்வன்’ என்னும் தக்‌ஷிணாமூர்த்தி என்று சொல்லலாம். சைவ சாஸ்திர நூல்களில் ‘குரு’ ஆக நினைக்கப்படுபவர் இவரே ஆவர். பிரம்மகுமாரர்களான சனகாதி முனிவர்களுக்கு அறமுறைத்தவர் அவர் என்பதாகப் புராணக்கதைகள் உண்டு. இக்கட்டுரை தக்‌ஷிணாமூர்த்தி என்னும் சிவ வடிவத்தின் மூலவேர் தென்னகமே என்பதை முன்மொழிந்து நிறைவுபெறுகின்றது. மேலாய்வுகள் மூலம் மேலும் இக்கூற்று நிறுவப்படவேண்டும்.

அடிக்குறிப்புகள்:

  1. Rajendran, A. 1985. “Siva cult in sangam age”,  History of the Siva cult in Tamilnadu from the Sangam Age to the Cholas, Ph.D dissertation, Madurai Kamaraj University. Chapter 10 P.4, 5)
  2. தொல்காப்பியம் பொருளதிகாரம் அகத்திணியியல் 5
  3.  இராஜரெத்தினம், தி. 2020. தந்தைத்தெய்வம்: செவ்வியல் இலக்கியங்களில் சிவபெருமான் குறித்தப்பதிவுகள் -அச்சில்
  4. மேலது.
  5. செல்வன் celvaṉ , n. < செல்வம். 1. Wealthy man; செல்வமுள்ளவன். செல்வர் சிறுநோக்கு நோக்குங்கால் (நாலடி, 298). 2. Lord; இறைவன். ஆலமர் செல்வற்கு (சிறுபாண். 97). 3. Buddha; புத்தன். (சூடா.) 4. Son; மகன். செங்கதிர்ச் செல்வன் செய்த வென்றியை (கம்பரா. மகுடபங்க. 45).
  6. அகத்தியலிங்கம், ச. 1983. சங்கத்தமிழ்-I, மணிவாசகர் பதிப்பகம், சென்னை.
  7. (பார்க்க: ‘Here ‘Seyon’, the God of Kurinji (hilly) literally means son-god (sey=son) and the very word implies the existence of a father god. As has been well recognised the father god is siva. The sangam works refer in a number of places to Murugan (seyon) as the son of siva and goddess Korravai. (Rajendran, A. 1985. “Siva cult in sangam age”,  History of the Siva cult in Tamilnadu from the Sangam Age to the Cholas, Ph.D dissertation, Madurai Kamaraj University. Chapter 10 P.4; இராஜரெத்தினம், தி. 2020. தந்தைத்தெய்வம்: செவ்வியல் இலக்கியங்களில் சிவபெருமான் குறித்தப்பதிவுகள்);)
  8. அகத்தியலிங்கம். மேலது. ப.X
  9. இராஜரெத்தினம், தி. 2020. தந்தைத்தெய்வம்: செவ்வியல் இலக்கியங்களில் சிவபெருமான் குறித்தப்பதிவுகள் -அச்சில்
  10.  புறநானூறு. 166:1- 4
  11.  புறம். 6:18; புறம். 55:1-6
  12.  அகநானூறு. 181: 15-18
  13.  அகம். 181: 15-18
  14. சிறுபாணாற்றூப்படை. 97
  15.  Rajendran A, ibid. p. 24
  16. Sastri, K.A. 1963. Devolopment of Religion in South India, Orient Longman, Madras. p. 66)
  17.  Kandasamy, S.N.  Tamil and Indian Philosophy, International Institute of Tamil Studies, Chennai. p. 308
  18. https://devdutt.com/articles/under-the-banyan-tree/
  19.  
About editor 3192 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply