ஆத்திசூடி காட்டும் அறநெறிகள்

ஆத்திசூடி காட்டும் அறநெறிகள்
 

சு.ஜெனிபர், முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை, பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி – 24 –

May 14, 2017

முன்னுரை

தமிழ் இலக்கிய வரலாற்றில் சங்க மருவிய காலம் நீதி நூல் காலம் ஆகும்.களப்பிரர் காலம் என அழைக்கப்பட்ட அக்காலம் கி.பி 3 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி 6 ஆம் நூற்றாண்டுக்கு பின் நீதி இலக்கியங்கள் தோற்றம் பெறாமல் இருந்து கி.பி 12 ஆம் நூற்றாண்டில் நீதி இலக்கியங்கள் தோற்றம் பெற்றன.இடைக்கால ஒளவையார் வருகைக்கு பின்பே நீதி இலக்கியங்கள் தோற்றம் பெற்றன. தமிழ் இலக்கிய நூல் ஆசிரியர்களில் மிகவும் புகழ் பெற்றவர்.இவர் தமிழ் இலக்கியத்தை வளர்த்தவர்.இவர் பிற்காலச் சோழர் காலத்தின் இறுதியில் வாழ்ந்த பெண்பாற் புலவர்.இவர் சிறுவர்கள் மனதில் எளிமையாகப் பதியும்படி அறக்கருத்துக்களைப் பாடும் திறன் பெற்றவர்.இவர் விநாயகர் அகவல்,அசதிக்கோவை,ஞானக்குறள், போன்ற நூல்களை இயற்றியுள்ளார். மேலும் இவர் நீதி இலக்கிய படைப்புகளாக விளங்கும் ஆத்திசூடி,கொன்றை வேந்தன், மூதுரை,நல்வழி போன்ற நூல்களையும் இயற்றியுள்ளார்.இந்நூலில் ஒன்றான அற நெறிகளை எடுத்து இயம்புவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

அறம் என்பதன் பொருள்

அறமெனும் சொல்லிற்கு ஒழுக்கம்,வழக்கம், நீதி, கடமை, ஈகை, புண்ணியம், அறக்கடவுள், சமயம் என்ற எட்டு வகையான பொருட்கள் பெருவழக்காக வழங்கப்பட்டன.(க.தி.திருநாவுக்கரசு,திருக்குறள் நீதி இலக்கியம்,ப.18)

ஆத்திசூடியில் அறநெறிகள்

ஆத்திசூடி அமர்ந்த தேவனை, ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே (ஆத்தி.கடவுள் வாழ்த்து) என்று இந்நூல் சிவபெருமான் வணக்கத்துடன் தொடங்குகிறது.ஆத்திமாலை அணிந்த இறைவன் சிவபெருமான்.ஆத்திசூடி என்ற நூலின் தொடக்கத்தால் இந்நூல் பெயர்பெற்றது.அகர வரிசையில் பாடல்கள் இடம்பெற்றுள்ளன.ஒர் எழுத்துக்கு ஒரு பாடலாக மொத்தம் 108 பாடல்கள் உள்ளன.ஒர் அடியால் மட்டுமே ஒரு பாடல் அமைந்துள்ளது. இதற்கு ஒரோவடி யானும் ஒரேவிடத்து இயலும் என்ற யாப்பருங்கலம் விருத்தியுரை மேற்கோள் நூற்பா இலக்கணம் பகர்கிறது.ஓர் அடியில் இரு சீர்கள் மட்டுமே உள்ளன.சிறுவர்கள் மனப்பாடம் செய்வதற்கு ஏற்ற வடிவில் உள்ளது.

அறம் செய்ய விரும்பு

நல்ல காரியங்களைச் செய்வதற்கு விருப்பப் பட வேண்டும் என்பதை,  அறம் செய விரும்பு  (ஆத்தி.1) என்ற பாடலால் அறியலாம்.மற்றொரு பாடலில் இயன்ற வரை  பிறருக்கு மறைத்து வைக்காமல் பிறருக்கு கொடுக்க வேண்டும்.என்கிறது,

இயல்வது கரவேல்   (ஆத்தி.3) என்ற பாடலால் அறியலாம்.மேலும் மற்றொரு பாடலில் (55)ஆதரவற்றவர்களுக்கு உதவி புரிய வேண்டும் என்கிறது இதனை, தான மது விரும்பு    (ஆத்தி.55)என்ற பாடல் புலப்படுத்துகிறது.

நன்மை தீமைகளைப் பிறரிடம் சொல்லாதே

உன்னுடைய நன்மை, தீமைகளைப் பிறரிடம் கூறவேண்டாம் என்பதை,
உடையது விளம்பேல்    (ஆத்தி.5) என்ற பாடலால் அறியலாம்.

முயற்சியை கைவிடாதே

ஒரு செயலைத் தொடங்கும் போது தடை ஏற்பட்டால் அதனைக் கண்டு தைரியத்தைக் கைவிடக் கூடாது.தடை ஏற்பட்டால் முயற்சியுடன் மேற்கொண்டு  அதனை கைவிட வேண்டாம் என்கிறது.இதனை, ஊக்கமது கைவிடல்  (ஆத்தி.6) என்ற பாடலால் அறியலாம்.

கல்வி

தனிமனித வாழ்வையும் நாட்டின் முன்னேற்றத்தையும் உயர்த்துவது கல்வி.அத்தகைய கல்வி மனிதனின் உள்ளத்தில் மறைந்து கிடக்கும் அறியாமை இருளை அகற்றுகிறது.கல்வியைக் குறிக்கும் ஆங்கிலச் சொல்லான நுனரஉயவழைn என்பதற்குத் தேர்ச்சி,படிப்பு,கல்விப்பயிற்சி,வித்தை,சீட்சை,பழக்கம்,என வின்சுலோவின் தமிழ் ஆங்கில அகராதி விளக்கமளிக்கிறது.(ப.420)ஆத்திசூடியில் கல்விப் பற்றிய செய்திகள் 9 இடங்களில் (7,11,22,29,44,70,80,92,100) இடம்பெற்றுள்ளன. ஒருவர் இளமைப் பருவத்திலே கல்வியைக் கற்றுக் கொள்ள வேண்டும்.அவ்வாறு கல்வி கற்காமல் இருப்பது குற்றமாகும்.இதனை,

இளமைப் பருவத்து கல்லாமை குற்றம் (நான்மணி.94:1) என்ற பாடலடி உணர்த்துகிறது.இக்கருத்தையே ஆத்திசூடியும், இளமையில் கல்   (ஆத்தி.24) என்ற பாடலடி மேற்குறிப்பிட்ட கருத்திற்கு வலுசேர்க்கும் விதமாக அமைந்துள்ள செய்தியை அறியமுடிகிறது. நாட்கள் தோறும் நன்மை தரும் நூல்களையேப் படிக்க வேண்டும் என்பதை இனியவை நாற்பது கூறுகிறது.இதனை,

பற்பல நாளும் பழுதின்றி பாங்குடைய
கற்றலில் காழினியது இல்    
    (இனி.நாற்.பா.41:3-4)

என்ற பாடலடியின் மூலம் அறியமுடிகிறது.இக்கருத்தையே ஆத்திசூடியும், நூல் பல கல்  (ஆத்தி.70) என்ற பாடல் மூலம் அறியலாம்.

கணிதத்தையும் இலக்கியத்தையும் இகழ்ந்து விடக் கூடாது.இதனை,

எண் எழுத்து இகழேல்  (ஆத்தி.7) என்ற பாடலால் அறியலாம். கல்வி கற்காமல் இருக்கக் கூடாது.இதனை, ஓதுவது ஒழியேல்   (ஆத்தி.11) என்ற பாடலால் அறியலாம

இரத்தல் கூடாது

பிறரிடம் யாசித்தல் கூடாது.இதனை, ஏற்பது இகழ்ச்சி  (ஆத்தி.8) என்ற பாடலில் யாசித்தல் தவறு எனக் கூறிய ஆசிரியர் மற்றொரு பாடலில் இரந்து கேட்பவருக்கு உணவு அளிக்க வேண்டும் என்று கூறுகிறார். இதனை, ஐயம் இட்டு உண்  (ஆத்தி.9) என்ற பாடலால் அறியமுடிகிறது.

உலகத்தோடு நட

உலக அனுபவத்தை (பழக்க வழக்கத்தை)அறிந்து அதற்கு தகுந்த படி நடக்க வேண்டும். இதனை, ஒப்புரவு ஒழுகு  (ஆத்தி.10) என்ற பாடலால் புலப்படுகிறது.

பொறாமை படக்கூடாது

பொறாமையால் எதையும் பேசக் கூடாது.இதனை 13 ஆம் பாடல் எடுத்துரைக்கிறது.இதனை, ஒளவியம் பேசேல் என்ற பாடல் மூலம் ஒவ்வொரு மனிதருக்கும் பொறாமைக் குணம் இருக்கக் கூடாது என்ற கருத்து புலப்படுகிறது.

கனிவாக பேசு
எதையும் கனிவாக பேச வேண்டும். இதனை, ஞயம்பட உரை (ஆத்தி17என்ற பாடலால் அறியலாம்.

ஆராய்ந்து பிறகே நட்பு கொள்

நட்பைப் பற்றி வள்ளுவரும் அதிகாரம் அமைத்துள்ளார்.நட்பு,நட்பு ஆராய்தல்,கூடா நட்பு,என்ற அதிகாரங்கள் உள்ளன.
ஆய்ந்துஆய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறைதான்சாம் நட்பாள் பவர்க்கு   (792) என்ற குறளில் வெளிப்படுத்தியுள்ளார்

இக்கருத்தையே வெற்றிவேற்கையும் கூறுகிறது.இதனை, இணக்கம் அறிந்து இணங்கு  (ஆத்தி.19) என்ற பாடலால் வெளிப்படுகிறது.

நன்றி உணர்வு

ஒருவர் செய்த நன்றியை மறக்க கூடாது.செய்நன்றி மறத்தல் என்ற அதிகாரம் வகுத்து உள்ளார்.ஒருவர் செய்த உதவியை மறப்பது நல்லதல்ல என்றும் பிறர் செய்த ஒரு தீமையை அப்பொழுதே மறந்துவிடுவது நல்லது.இதனை,

நன்றி மறப்பது நன்றன்று  நன்றல்லது
அன்றே மறப்பது நன்று   
(108)

என்ற குறளின் வழி அறியலாம்.இக்கருத்தையே ஆத்திசூடி 21 ஆம் பாடல் குறிப்பிடுகிறது.இதனை, நன்றி மறவேல் (ஆத்தி.21) என்ற பாடல் புலப்படுத்துகிறது.

பெற்றோர்களைப் பாதுகாத்தல் செய்

உலகில் உள்ள மக்கள் அனைவருக்கும் உடலும் உயிரும் கொடுத்தது அவர்கள் பெற்றோர்கள்.அத்தகைய பெற்றோர்களை பாதுகாப்பது சிறந்தது.இத்தகைய கருத்தை ஆத்திசூடி வெளிப்படுத்துகிறது. இதனை,     தந்தை தாய்ப் பேண்   (ஆத்தி.20) என்ற பாடல் புலப்படுத்துகிறது.

வஞ்சகம் பேசேல்

கபடமாகவோ நயவஞ்சகமாகவோப் பேசுவது தவறு ஆகும். இதனை, வஞ்சகம் பேசேல்  (ஆத்தி.27) என்ற பாடல் சுட்டுகிறது.

இகழக்கூடியச் செயல்களைச் செய்யாதே

ஒருவர் இகழக் கூடிய செயல்களைச் செய்யக் கூடாது.மீறி செய்தால் அவர் மதிப்பு பாதிக்கக் கூடும் இதனை,     அழகு அலாதன செயேல்   (ஆத்தி.28)என்ற பாடல் குறிப்பிடுகிறது.மேலும் மற்றொரு பாடலில் பிறருடைய முகம் சுளிக்கும் படியான கடுஞ்சொற்களைச் சொல்ல வேண்டாம் என்பதை,      சுளிக்கச் சொல்லேல்  (ஆத்தி.47)என்ற பாடலால் அறியலாம்.

கைத்தொழில் கற்றுக் கொடு


தெரிந்த கைத்தொழில்களை மறைக்காமல் மற்றவருக்கு கற்று கொடுக்க வேண்டும் என்று கூறுகிறது.நாமக்கல் கவிஞரும் கைத்தொழில் ஒன்று கற்றுக் கொள் என்று குறிப்பிடுகிறார்.இதனையே, ஆத்திசூடி கைவினை கரவேல்  (ஆத்தி.40) என்ற பாடல் மூலம் குறிப்பிடுகிறார்.

பெரியோர் அறிவுரை கேள் பெரியோரைத் துணைக்கொள்ளல்   

      
பெரியோர்களைப் போற்றி ஒழுகுவதும் வழி நின்று வாழ்வதுமே நல்ல அறச்செயலாகும்;. இனியவை நாற்பதில் ஒரு பாடலில் பெரியோரைத் துணைகொள்ள வேண்டும் என்கிறது. இதனை,  தெற்றவும் மேலாயார்ச் சோர்வு  (இனி.நாற்.பா.2:4) என்ற பாடலடிகள் தெளிந்த அறிவுடைய பெரியோர்களோடு கூடி வாழ்வது நல்லது என்ற கருத்தை எடுத்தியம்பியுள்ளது. இதன் மூலம் பெரியோர்களை பின்பற்றி ஒழுக வேண்டும் என்ற செய்தியை அறியமுடிகிறது.இக்கருத்தையே ஆத்திசூடியும் இயம்புகிறது. பெரியோர் அறிவுரை கேள்.அறிவு சான்ற பெரியோர்களின் அறிவுரைகளைக் கேட்டு நடக்க வேண்டும். இதனை, மேன்மக்கள் சொல் கேள்   (ஆத்தி.94)
என்ற பாடலால் புலப்படுத்துகிறது.

சூதாட்டம் கொள்ளாதே

சூதாடுதல் அறம் அல்லாத செயல் ஆகும். சூதாடும் நிகழ்வை மகாபாரதம் எடுத்தியம்பியுள்ளது. இந்நிகழ்வால் பல உயிர்கள் அழிந்து போயின என்பதை இந்நூலின் மூலம் அறியலாம். சூதாடிக்கு நல்வாழ்வு கிடையாது என்பதை வள்ளுவர்,

ஒன்றுஎய்தி நூறுஇழக்குஞ் சூதர்க்கும் உண்டாம்கொல்
நன்றுஎய்தி வாழ்வதோர் ஆறு.
(குறள்.932)   

என்ற குறளின் வழி புலப்படுத்தியுள்ளார்.

சூதாட்டம் என்பதற்கு சென்னைப் பல்கலைக் கழக பேரகராதி சூதாடுகை,தந்திரம் எனப்   பொருள் உரைக்கிறது. சூதாட்டங்களில் ஈடுபட்டால் பொருள் இழப்பும்,மனவருத்தமும் நேரிடும் என்று ஆத்திசூடி கூறுகிறது. இதனை, சூது விரும்பேல் (ஆத்தி.48) என்ற பாடல் குறிப்பிடுகிறது.

செயலை ஒழுங்காகச்செய்

செய்யக் கூடிய காரியங்களை ஒழுங்காகச் செய்ய வேண்டும் என்று ஆத்திசூடி குறிப்பிடுகிறது இதனை, செய்வன திருந்தச் செய் (ஆத்தி.49) என்ற பாடல் கூறுகிறது.

தீவினைகளை அகற்று
மற்றவர்களுக்குத் தீங்கு உண்டாகக் கூடிய செயல்களைச் செய்யாதே இதனை, தீவினை அகற்று   (ஆத்தி.57) என்ற பாடல் எடுத்துரைக்கிறது.

ஒற்றுமை உணர்வு

நம் நாட்டு மக்களோடு கூடி ஒற்றுமையுடன் வாழ வேண்டும்.ஒற்றுமையே பலம் என்பது பழமொழி இப்பழமொழிக்கு ஏற்ப ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்று நவில்கிறது. இதனை தேசத்தோடு ஒத்து வாழ் (ஆத்தி.61) என்ற பாடலின் மூலம் அறியமுடிகிறது.மேலும் மற்றொரு பாடலில் நாடு அதாவது நாட்டு மக்கள் விரும்பத் தக்க செயல்களைச் செய்ய வேண்டும் என்று கூறுகிறது.

அதிகமான உணவை உட்கொள்ளக்கூடாது

அளவுக்கு அதிகமான உணவை சாப்பிடக் கூடாது.அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்பது பழமொழி இப்பழமொழிக்கு ஏற்றவாறு அதிகமான உணவை உட்கொள்ளக் கூடாது. இதனை, மீதூண் விரும்பேல்   (ஆத்தி.90) என்ற பாடல் குறிப்பிடுகிறது.

நேர்மையாக இரு

ஒவ்வொரு மனிதனும் நேர்மையான முறையில் வாழ வேண்டும்.இதுவே ஒவ்வொரு மனிதனுக்கும் பெருமையை ஏற்படுத்தும்.இக்கருத்தை ஆத்திசூடி எடுத்துரைக்கிறது இதனை, நேர்பட ஒழுகு   (ஆத்தி.72) என்ற பாடல் எடுத்துரைக்கிறது.

களவாடாமை

பிறரது செல்வத்தை வஞ்சனையினால் பறித்துக்கொள்வோம் என்பதை மனத்தினால் நினைப்பது குற்றமாகும் இதனை,

உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்
கள்ளத்தால் கள்வேம் எனல்
(282)

பிறருக்குரியப் பொருளை திருட ஆசைப்படக் கூடாது. இதனை, கொள்ளை விரும்பேல் (ஆத்தி.41)என்ற பாடல் புலப்படுத்துகிறது.

வேளாண்மை

இந்தியா மற்றும் உலக நாடுகள் பலவற்றிலும் பொருளாதார வாழ்க்கையின் அடிப்படையாக ஆணி வேராக விளங்குவது உழவு தொழிலே. இவ்வுழவர்களே சமுதாயத்தில் வாழும் மனிதர்கள் எல்லாரையும் தாங்குபவர்களாகவும் விளங்குகின்றனர். சென்னைப் பல்கலைக் கழக ஆங்கில தமிழ் அகராதி உழவு என்பதற்கு வேளாண்மை,விவசாயம் என்று பொருள் விளக்கம் தருகிறது. தமிழ் – தமிழ் அகரமுதலி உழவு என்பதற்கு உழவு நிலத்தை உழும் தொழில்,வேளாண்மை,உடம்பினால் உழைக்கை என்று பல்வேறு விளக்கம் தருகிறது.திருக்குறளில் உழவு என்ற அதிகாரம் 104 ஆவது அதிகாரமாக அமைந்துள்ளது.இந்நூலும் வேளாண்மை தொழிலான உழவுத் தொழிலை அதிகரிக்க செய்ய வேண்டும் என்று கூறுகிறது. இதனை, நெற்பயிர் விளை (ஆத்தி.71) என்ற பாடலால் அறியலாம்.

பகைவரை நம்பக் கூடாது

பகைவர்களிடம் நம்பிக்கை வைக்க கூடாது. இதனை,
ஒன்னாரைத் தேறேல்    (107)என்ற பாடலால் அறியலாம்.

விலைமகளிரை நாடாமை

உள்ளத்து அன்பு இன்றி பொருள் ஒன்றேயே கருதும் பெண்கள் விலைமகளிர் ஆவார்கள். இளம்பூரணர் விலைமகளிர் பற்றி கூறும் போது ஆடலும் பாடலும் வல்லாராகி அழகுமிளமையுங் காட்டி இன்பமும் பொருளும் வெஃகி ஒருவர் மாட்டு தங்காதார். (தொல்.பொருள்.பக்.53) காண்பதற்கு தகுந்தவளாகவும், மெல்லிய தோள்களையும் உடைய விலைமகளிரின் வாயில் பிறக்கும் இன்சொல்லானது நரகத்தை அடைய வழிவகுக்கும் என்பதை,

காண்தகு மென்தோள் கணிகைவாய் இன்சொல்லும்
ஆழ்ச்சிப் படுக்கும் அளறு (திரி.பா.24:1-4)

என்ற பாடலடியின் மூலம் விலைமகளிரை நாடாமை அறியமுடிகிறது. இக்கருத்தே இனியவை நாற்பதிலும் ஒரு பாடலில் இடம்பெறுகிறது. இதனை,

தடமென் பணைத்தோள் தளரிய லாரை
விடமென் றுணர்தல் இனிது (இனி.நாற்.பா.38:3-4)

என்ற பாடலடிகள் விலைமகளிரை நஞ்சு என நினைக்க வேண்டும் என்று கூறும் செய்தியை அறியமுடிகிறது.மேலும் ஆத்திசூடியும் மைவிழியார் மனை அகல் (ஆத்தி.95)என்ற பாடலால் அறியலாம்.

தற்புகழ்ச்சி கொள்ளாதே

வல்லமை பேசேல் என்ற பாடல் தற்புகழ்ச்சி கொள்ளக் கூடாது.(98)என்று கூறுகிறது.

நடுநிலைமை

ஒவ்வொரும் நடுநிலையுடன் வாழ வேண்டும் என்று கூறுகிறது. இதனை, ஒரம் சொல்லேல்    (108) என்ற பாடல் புலப்படுகிறது.

கோபப் படாமை
தன்னையும் தன்னைச் சார்ந்தவரையும் அழிப்பது சினம் கொள்ளாமையின் நன்மையைப் பற்றித் திருவள்ளுவர்

தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லும் சினம் (குறள்.305)      

கோபப் படாமல் இருக்க வேண்டும். இதனை,ஆறுவது சினம்   (ஆத்தி.2) என்ற பாடலால் அறியலாம்.மற்றொரு பாடலில் மற்றவர்களுக்கு சினம் உண்டாக கூடிய  சொற்களைச் சொல்லக் கூடாது என்பதை,     கடிவது மற   (ஆத்தி.33) என்ற பாடல் குறிப்பிடுகிறது.

சோம்பல் இன்மை

பால்ஸ் அகராதி சோம்பல் என்பதற்கு முயற்சியின்மை ,சுறுசுறுப்பின்மை, வீண்பொழுது போக்குவது, உற்சாகமின்மை என பல்வேறு பொருள் கூறுகிறது.சோம்பேரி தனம் கூடாது என்கிறது, சோம்பித் திரியேல் (ஆத்தி.53) என்ற பாடல் எடுத்துரைக்கிறது. மற்றொரு பாடலிலும் சொல்லில் சோம்பல் கொள்ளக் கூடாது என்று கூறுகிறது. இதனை, சொல் சோர்பு படேல் (ஆத்தி.53) என்ற பாடலில்  அறியலாம்.

முடிவுரை

அறம் என்பதன் பொருள், அறம் செய்ய விரும்பு, நன்மை தீமைகளைப் பிறரிடம் சொல்லாதே, முயற்சியை கைவிடாதே, கல்வி,இரத்தல் கூடாது, பகைவரை நம்பக் கூடாது, நேர்மையாக இரு, நடுநிலைமை, தற்புகழ்ச்சி கொள்ளாதே, கோபப் படாமை, சோம்பல் இன்மை, விலைமகளிரை நாடாமை, களவாடாமை,  போன்ற  அறநெறிகள் இடம்பெறுகின்றன.

துணைநூற்பட்டியல்
1 நாமக்கல் கவிஞர்   திருக்குறள் சாரதா பதிப்பகம் சென்னை-600014 முதற்பதிப்பு -2002
2 மாணிக்கம் .அ   திருக்குறள் தெளிவுரை தென்றல் நிலையம் சிதம்பரம் -608001 முதற்பதிப்பு -1999
3 நாராயணசாமி .இரா    திருக்குறள் இனிய உரை நீயூ செஞ்சுரி புக் ஹவுஸ் சென்னை -600098  முதற்பதிப்பு -1997
4 இராமசுப்பிரமணியம்,எம்.ஏ (உ.ஆ)  பதினெண் கீழ்க்கணக்கு தொகுதி 1 செல்லப்பா பதிப்பகம், மதுரை -625001 முதற்பதிப்பு -2009
5 இராமசுப்பிரமணியம்,எம்.ஏ (உ.ஆ)     பதினெண் கீழ்க்கணக்கு தொகுதி 3  செல்லப்பா பதிப்பகம், மதுரை -625001 முதற்பதிப்பு -1999 \
6 பத்மதேவன்,தமிழ்ப்பிரியன் (உ.ஆ)         நீதி நூல் களஞ்சியம்  கொற்றவை வெளியீடு சென்னை -600017  முதற்பதிப்பு -2014
7 பாலசுந்தரம் ,ச     திருக்குறள் தெளிவுரை  மணிவாசகர் பதிப்பகம்  சென்னை -600017 பதிப்பு -2000
8 அகராதி தமிழ் – தமிழ் அகராதி  சென்னைப் பல்கலைக்கழக அகராதி
9 மெய்யப்பன்   ( ப.ஆ )    நீதி நூல் தெளிவுரை மணிவாசகர் பதிப்பகம் சென்னை -600108 பதிப்பு -2006         
10. பத்மதேவன்,தமிழ்ப்பிரியன் (உ.ஆ)  நீதி நூல் களஞ்சியம்   கொற்றவை வெளியீடு  சென்னை -600017 முதற்பதிப்பு -2014

About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply