கிழக்கில் பறிபோகும் தமிழர் நிலம்
Courtesy: பா.அரியநேத்திரன்.
தமிழரின் தாயகக் கோட்பாட்டை சிங்களப் பேரினவாத ஆட்சியாளர்கள் உடைத்து, இன விகிதாசாரத்தை மாற்றி அமைப்பதில் மிகவும் மூர்க்கத்தனமாக நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.
அதற்கான வியூகங்களை முன்னாள் ஐனாதிபதி கோட்டாபய தலைமையிலான குழு தீவிரப்படுத்தப்பட்டன. அதற்காகவே கிழக்குமாகாண ஆளுநராக அனுராதா யகம்பத் என்பவர் நியமிக்கப்பட்டார். பிரதமர் டி.எஸ்.சேனநாயக்க தொடக்கம் ஐனாதிபதி ரணில் வரை விரிவடைந்து பெரும் பூதமாக மாறி விட்டது.
தமிழரின் வடக்கு, கிழக்கு மாகாண நிலங்களைப் பறித்து சிங்கள குடியேற்றங்களை உருவாக்கும் திட்டம் தற்போது அதிகளவில் இடம்பெறுகின்றது. நாட்டில் ஆரம்பத்தில், கல்லோயாத் திட்டம், அல்லை கந்தளாய் திட்டம் என பெயர் சூட்டி அரங்கேறிய சிங்கள குடியேற்றங்கள் இன்று சத்தம் இன்றி மிகத் தீவிரமாக ஊடுருவி வருகின்றன.
போரின்போது தீவிரப்படுத்த முடியாது போன குடியேற்றங்கள் யுத்த மௌனத்தின் 2009.மே.18க்கு பின்னர் தீவிரமடைந்துள்ளது.
தற்போதைய நில அபகரிப்பு தொல்லியல், வனவள, கரையோரப் பாதுகாப்புத் திணைக்களங்கள் மூலமாகவும் எல்லை நிர்ணயம் என்ற போர்வையிலும் முன்னெடுக்கப்படுகின்றது. கிழக்கு மாகாணத்தில் அம்பாறை, திருகோணமலை மாவட்டங்கள் எப்படி இன விகிதாசார முறையில் மாற்றியமைக்கப்பட்டதோ, அதனை ஒத்த நிலைக்கு மட்டக்களப்பு, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் மாவட்டங்களில் நில அபகரிப்புக்களும் சிங்கள குடியேற்றங்களும் தற்போது தீவிரமடைந்துள்ளது.
கிழக்கு, வடக்கு நிலத் தொடர்ச்சியின் எல்லையில் குறிப்பாக திருகோணமலையின் குச்சவெளி பிரதேச செயலக பகுதியில் உள்ள நிலப்பரப்பை சிங்கள குடியேற்றங்களுக்கு உள்ளாக்கி தமிழர் தாயகத்தின் நிலத் தொடர்பின் நிர்வாக கட்டமைப்பை உடைத்துள்ளனர்.
கிழக்கை மீட்பதாக கூறி பிரச்சாரம் செய்து கடந்த 2020 பொதுத்தேர்தலில் வெற்றிபெற்று இராஜாங்க அமைச்சர்களாக பதவி பெற்றுக்கொண்ட சந்திரகாந்தன், வியாழேந்திரன் இருவரும் வாய்மூடி மௌனியாகியுள்ளனர். நாட்டில் இவ்வாறு தொடரும் நில அபகரிப்பு தற்போது வவுனியா மாவட்ட இன விகிதாசாரத்தை மாற்றியமைக்க, அனுராதபுரம் வடக்கு எல்லைக் கிராமங்களை வவுனியா வடக்கு பிரதேச செயலகத்துடன் எல்லை நிர்ணயத்தை மாற்றி இணைக்கும் செயற்பாடு வரை அரங்கேறி வருகின்றது.
இதேவேளை தமிழர் தரப்புகள் இதுகுறித்து தொடர்ந்து வீதியில் போராடுவதும், கடிதங்களை எழுதுவதும், இதனை முடிவுக்கு கொண்டு வரும் என நினைத்தால் இன்னும் சிறிது காலத்தில் தாயகக் கோட்பாடு முழுவதும் பறிக்கப்பட்டு விடும். உடனடியாக ஒன்றிணைந்து தடுப்பதற்கான பொறிமுறை ஒன்றை செயற்படுத்த வேண்டும் இதன் மூலமே இருப்பைத் தக்க வைக்க முடியும். ஆனால் இதை எவரும் சிந்திப்பதாக இல்லை. இலங்கை பிரித்தானியரிடமிருந்து 1948.02.04.ல் அரசியல் விடுதலை பெற்ற பின்னர் உருவான இன அரசியலில் கிழக்கு மாகாணம் முக்கியமான ஒன்றாக இருந்து வருகின்றது.
விடுதலைக்குப் பின் ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களினால் நடைமுறைப்படுத்தப்பட்ட அரசாங்கம் சார்ந்த குடியேற்றத்திட்டங்கள், தமிழ்ப் பெரும்பான்மை மாகாணமாக இருந்துவந்த மாகாணத்தின் இனப்பரம்பலில் பெரும்பான்மைச் சிங்களவர்களுக்குச் சார்பான நிலையைக் கொண்டுவர முயற்சிப்பதாகக் கூறித் தமிழ் மக்களிடையே அதிருப்தியைத் தோற்றுவித்தது. 1987 இல் ஏற்படுத்தப்பட்ட இலங்கை – இந்திய ஒப்பந்தம் கிழக்கு மாகாணத்தை, வட மாகாணத்துடன் தற்காலிகமாக இணைத்து வடக்கு கிழக்கு மாகாண சபை என்ற ஒரே மாகாணசபை நிவாகத்தின் கீழ் கொண்டு வந்தது.
அத்துடன் இணைந்த மாகாணங்களின் நிர்வாக மையமும், கிழக்கு மாகாணத்திலுள்ள திருகோணமலையிலேயே அமைக்கப்பட்டது. இந்தத் தற்காலிக இணைப்பு 2006 அக்டோபர் 16 ஆம் நாள் இலங்கை உச்சநீதிமன்றத்தினால் நீக்கப்பட்டு இரண்டு மாகாணங்களும் பிரிக்கப்பட்டன. இந்த மாகாணம் தொடர்பில் தமிழர், சிங்களவர்களுக்கிடையிலான முரண்பாடுகள் ஒருபுறமிருக்க, நாட்டில் முஸ்லிம்கள் செறிந்து வாழும் முக்கிய பகுதியாகவும் கிழக்கு மாகாணமே விளங்குவதாலும், மாகாணத்தின் சனத்தொகையில் அண்ணளவாக 30% முஸ்லிம்களாக இருப்பதாலும் தீர்வு விடயத்தில் சிக்கல்கள் அதிகமாக உள்ளது.
கிழக்கு மாகாணம் கிட்டத்தட்ட 9.996 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது. இது வடக்கே வட மாகாணம், கிழக்கே வங்காள விரிகுடா, தெற்கே தென் மாகாணம், மற்றும் மேற்கே ஊவா மாகாணம், மத்திய மாகாணம், வடமத்திய மாகாணம் ஆகியவற்றை எல்லைகளாகக் கொண்டுள்ளது. இம்மாகாணத்தின் கரைப்பகுதிகள் பெரும்பாலும் கடற் காயல்களைக் கொண்டுள்ளன. இவற்றில் மட்டக்களப்பு வாவி, கொக்கிளாய் வாவி, உப்பாறு, உல்லைக்கழி ஆகியவை குறிப்பிடத்தக்கவை.
திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மூன்று மாவட்டங்களை கொண்ட கிழக்கு மாகாணத்தில் கிழக்குமாகாண சனத்தொகை-2012
திருகோணமலை
சோனகர் – 152854 (40.42%)
தமிழர் – 122080 (32.29%)
சிங்களவர் – 101991 (26.97%)
முஸ்லிம்கள்- 159251 (42.11%)
பொளத்தர்கள் – 98772 (26.12%)
இந்துக்கள் – 98113 (25.95%)
கிறிஸ்த்தவர்கள் – 21892 (5.79%)
மட்டக்களப்பு
தமிழர் – 382300 (72.80%)
சோனகர் – 133844 (25.49%)
சிங்களவர் – 6127 (1.17%)
இந்துக்கள் – 338983 (64.55%)
முஸ்லிம்கள்- 133939 (25.51%)
கிறிஸ்த்தவர்கள் – 46300 (8.82%)
பொளத்தர்கள் – 5787 (1.10%)
அம்பாறை
சோனகர் – 282489 (43.59%)
சிங்களவர் – 251018 (38.73%)
தமிழர் – 112915 (17.43%)
முஸ்லிம்கள்- 282746 (43.63%)
பொளத்தர்கள் – 250213 (38.61%)
இந்துக்கள் – 102454 (15.81%)
கிறிஸ்த்தவர்கள் – 12609 (1.95%)
திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களாலும், முஸ்லிம் மக்களின் இனம்பரம்பலாலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழர்களின் இனவிகிதாசாரம் இப்போது 2022, ல் கணக்கெடுப்பு நடத்தப்பட்டால் மேலும் தமிழர்களின் சனத்தொகை குறையும் என்பதில் மாற்றுக்கருத்துகள் இல்லை. தமிழரின் பிறப்புவீதம் குறைந்துள்ளது என்பது புள்ளிவிபரங்கள் மூலம் எதிர்காலத்தில் தெளிவூட்டும்.
கிழக்குமாகாணத்தில் அம்பாறை திருகோணமலை மாவட்டங்களில் சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யும் வாய்ப்பு கடந்த 1960ம் ஆண்டுக்கு பின்னரே ஏற்பட்டது. வடக்கு கிழக்கு தாயகத்தில் கூட 1960, க்கு முன்னர் எந்தவொரு சிங்கள நாடாளுமன்ற உறுப்பினரும் தெரிவாகவில்லை.
1960.3.20ஆம் திகதி இடம்பெற்ற பொதுத்தேர்தலில்தான் முதன் முதலாக அம்பாறை தேர்தல் தொகுதியில் இருந்து ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சிமூலமாக விஜேயசிங்க விஜயபாகு என்ற சிங்களவர் தெரிவானார்.1960, தேர்தலில் வடக்கு கிழக்கு முழுவதும் 19, தேர்தல் தொகுதிகளில் 15, பேர் இலங்கை தமிழரசு கட்சியில் வெற்றிபெற்ற வரலாறும் இருந்தது.
1961.04 10ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து அம்பாறை மாவட்டம் பிரிக்கப்பட்டது.
1977.06.14ஆம் திகதி திருகோணமலை மாவட்டத்தில் சேருவெல என்ற தொகுதி முதன் முதலாக ஆரம்பிக்கப்பட்டு சேருவெல தொகுதியில் இருந்து எச்.எம்.லீலாரெட்ண என்ற சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர் திருகோணமலையில் தெரிவானார். அதற்கு முன்னர் திருகோணமலையில் எந்த சிங்கள பிரதிநித்துவமும் இருந்ததில்லை. ஆனால் 1994.8.20ல் இடம்பெற்ற பொதுத்தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் கிடைத்த 6, நாடாளுமன்ற உறுப்பினர்களில் 4, சிங்களவரும்,2, முஸ்லிம்களும் தெரிவானார்கள் தமிழர் எவருமே தெரிவாகவில்லை.
ஆனால் அதன்பின்னர் கிழக்கு மாகாணத்தில் சிங்கள குடியேற்றங்கள் திட்டமிட்டு இடம்பெற்றதால் தற்போது ஏறக்குறைய 23, வீதமானவர்கள் சிங்களமக்கள் கிழக்குமாகாணத்தில் உள்ளனர். ஈழத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க, தேவார பாடல் பெற்ற தலமான திருக்கோணேஸ்வரம் ஆலய நிலம் என்றுமில்லாத அளவு அத்துமீறி அரச நிர்வாகத்தின் உதவியுடன் ஆக்கிரமிக்கப்படுகிறது. தொல்பொருள் ஆய்வு என்ற போர்வையில் பூர்வீக சைவத்தமிழ் நிலங்ககள் பௌத்தமயமாக்கல் இடம்பெறுவதற்கான வேலைத்திட்டங்களும், கோணேசர் வளாகத்தின் முன் வீதி இருமருங்கிலும் சிங்கள வியாபாரிகளுக்கு கடைகளை ஒதுக்கி கொடுத்து அவர்களை நிரந்தரமாக குடியேற்றும் சதிவேலைகளும் இடம்பெறுகிறது.
இதனை தடுப்பதற்காக பல முயற்சிகள் தமிழ் தேசிய அரசியல் வாதிகளாலும், பொது சிவில் அமைப்புகளாலும், இந்திய தூதரகத்தின் மூலமாகவும் ஜனாதிபதி ரணிலின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டதும், வடக்கு கிழக்கில் உள்ள பல உள்ளூராட்சி்சபைகள் கண்டன தீர்மானங்களை நிறைவேற்றி ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரின் கவனத்திற்கு அனுப்பப்பட்டும் உள்ளன.
எனினும் முழுமையாக அது நிறுத்தப்படவில்லை. இதைவிட திருகோணமலை மாவட்டத்தில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினராக சம்மந்தன் ஐயா இருந்தும் இல்லாத நிலை காணப்படுவதால் மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டங்களில் தமிழர்கள் குரல் மௌனிக்கப்பட்டு சிங்கள நாடாளுமன்ற உறுப்பினரின் ஆதிக்கம் காரணமாக திருகோணமலை பூர்வீக தமிழர் நிலங்கள் மாற்று சமூகத்தால் அபகரிக்கப்படுகின்றன இதற்கு திருகோணமலை அரச நிர்வாகமும் ஆளுநரும் பக்கபலமாய் உள்ளனர் என்பது அங்குள்ள மக்களின் கருத்து.
மட்டக்களப்பு மாவட்டத்தில் சிங்களமக்கள் மிக குறைவானவர்களே வாழ்கின்றனர் இதனை அறிந்த ஆட்சியாளர்கள் தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் கால்நடைகளுக்காக ஒதுக்கப்பட்ட மகாவலி திட்டத்தின் கீழ் உள்ள காணிகளை திட்டமிட்டு வெளிமாவட்ட சிங்கள மக்களை குடியேற்றும் நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன.
இதற்காக தற்போதைய கிழக்கு மாகாண ஆளுநர் பல வேலைத்திட்டங்களை சல சலப்புகள் இன்றி மேற்கொண்டுவருகிறார். மட்டக்களப்பு மயிலத்தமடு, மாதவனையில் மகாவலியின் இடது கரையில் மாடுகளுக்கான மேய்ச்சல் தரையாக ஒதுக்கப்பட்டிருந்த காணிகளில் சட்டவிரோத குடியிருப்பாளர்கள் சிலர் குடியேறியுள்ளனர்.
இதேபோல் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக பிரிவில் உள்ள ஏற்கனவே மேச்சல் தரையாக இருந்த கெவிளியாமடு பகுதிகளில் உள்ள காடுகள் அழிக்கப்பட்டு அங்கு சிங்கள ஊர்காவல் படையினருக்கு முந்திரி செய்கை என்ற போர்வையில் பகிர்ந்தளித்து அத்துமீறிய சிங்கள குடியேற்றங்கள் வெளிமாவட்டத்தில் இருந்து அழைத்து குடியேற்றும் சதி இடம்பெறுகிறது.
இதை தடுக்கும் பொருட்டு தமிழ்தேசிய கூட்டமைப்பினால் பல நடவடிக்கைகள் எடுத்தும் இதுவரை எந்த பயனும் இல்லை. தற்போது 2022 மானாவாரி பெரும்போக வேளாண்மை செய்கை ஆரம்பித்துள்ளதால் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கால்நடைப்பண்ணையாளர்கள் மாடுகளை மேய்ச்சல் தரைக்கு ஒதுக்கிய கெவிளியமடு பிரதேசங்களுக்கு கொண்டு செல்ல முடியாதவாறு மேச்சல் தரைகளில் மின்சார வேலிகளை ஊர்காவல் படையினர் அமைத்து பாதைகளை மூடியுள்ளதாக பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுதொடர்பாக ஆளும் கட்சி இராஜாங்க அமைச்சர்கள் ஏனோ தானோ என்ற நிலையில் உள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தை மட்டுமே எந்த ஒரு சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்களும் தெரிவாகும் சந்தர்ப்பம் இல்லை இதனை இலக்குவைத்து் எதிர்காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவராவது தெரிவாக வேண்டும் என்ற திட்டங்கள் தீட்டப்பட்டு கிழக்கு மாகாண ஆளுநரின் உதவியுடன் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் மேற்கொள்ளபட்டுவருகின்றன.
எல்லைக்கிராமங்களை இலக்குவைத்து இவ்வாறு சிங்கள ஆக்கிரமிப்புகள் நடக்கும் அதேவேளை மட்டக்களப்பு மாநகரசபை எல்லைக்குள் கடந்த 1960 காலப்பகுதியில் இயங்கி பின்னர் 1986, ம் ஆண்டுடன் மூடப்பட்ட சிங்கள பாடசாலையை மீளவும் ஆரம்பிக்க கிழக்கு மாகாண ஆளுநர் முயற்சித்து வருவதை அறியமுடிகிறது.
இதற்காக மட்டக்களப்பில் உள்ள சிங்கள இராணுவம், மற்றும் சிங்கள உத்தியோகத்தர்கள், சிங்கள வர்த்தகர்கள் தரவு சேகரிக்கப்பட்டு அவர்களின் பிள்ளைகளை ஏற்கனவே கைவிடப்பட்ட சிங்கள பாடசாலையில் கல்வி கற்க வைத்து நகர் பகுதிகளிலும் சிங்களவர்களை வாக்காளர் பட்டியலில் இணைக்கும் முயற்சிகளும் இப்போது தொடர்வதை காணலாம்.
இப்படி பல வேலைத்திட்டங்கள் மட்டக்களப்பில் சிங்கள குடியேற்றங்களை எப்படியாவது மேற்கொள்வதற்கு பல முனைப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழர் சனத்தொகை கடந்த 1990, ம் ஆண்டுக்கு பின்னர் படிப்படியாக குறைந்து வருவதை அவதானிக்க முடிகிறது.
இதற்கு பொருளாதார கஷ்டம் வருமானம் இன்மை என்ற காரணத்தை கூறி இரண்டு பிள்ளைகளுடன் அல்லது மூன்று பிள்ளைகளுடன் பிறப்பு வீதத்தை தமிழர்கள் நிறுத்துகின்றனர். ஆனால் முஸ்லிம் மக்களின் பிறப்பு வீதம் கூடிச்செல்கின்றது. அபிவிருத்தியை பொறுத்தவரையிலும் நிலத்தை பாதுகாக்க வேண்டுமானாலும் சனத்தொகை அதிகரிப்பு மிக இன்றியமையாதது என்பதை தமிழ்மக்கள் புரிந்து கொள்வது இல்லை.
எல்லைக்கிராமங்களில் சென்று குடியேறும் மனப்பாங்கும் ஏனைய இனங்களுடன் ஒப்பிடும்போது தமிழர்கள் துணிந்து முன்வருவதில்லை என்பதே உண்மை. ஒரு இனத்தின் இருப்பு அல்லது தேசத்தின் தூண்கள் நிலம்,மொழி,பொருளாதாரம்,கலாசாரம் இந்த நான்கில் ஏதோ ஒன்றில் இடையூறு ஏற்படுமாயின் இனத்தின் இருப்பு கேள்விக்குறியாகும்.
தமிழர்களின் பிறப்புவீதம் குறைவடைந்து வருவதால் எதிர்காலத்தில் கிழக்குமாகாணத்தில் தமிழர்களின் இருப்பை தக்கவைப்பதிலும் பாரிய சவால்களை சந்திக்கவேண்டிவரும் என்பது உண்மை.
தமிழர்களுடைய பிறப்பு வீதத்தை அதிகரிக்கும் விதமாக பொருளாதாரத்தை ஈட்டக்கூடிய செயல்திட்டங்கள் புலம்பெயர் தமிழ்மக்கள் சிந்தித்து உதவுவதும் காலத்தின்தேவை. அரசியல்வாதிகளால் மட்டும் திட்டமிட்ட குடியேற்றங்களை ஒரு கட்டத்தில் மட்டுமே தடுக்கமுடியும் வெறுமனமே திட்டமிட்ட குடியேற்றங்களை தடுக்கும் அதேவேளை அந்த தரிசுநிலங்களை தக்கவைப்பதற்கும் அங்கு சென்று குடியேறி வாழ்வதற்கும் எந்த தமிழர்களும் முன்வராமையும் ஏனைய சமூகத்திற்கு சாதகமாய் மாறிவிடுகிறது.
கிழக்கு மாகாணத்தில் மூன்று இன மக்களும் வாழ்வதால் அதில் ஏதோ இரண்டு இனங்கள் ஒன்றாக மாறினால் மட்டுமே அவர்களின் கலை கலாசார பண்பாடுகளையும் நிலத்தையும் தக்கவைக்க முடியும். இதற்கு ஒரேவழி கிழக்கு மகாணத்தில் பூர்வீகமாக வாழும் தமிழ்பேசும் மக்களான தமிழர்களும், முஸ்லிம் மக்களும் தமது உள் முரண்பாடுகளை மறந்து வடக்கு கிழக்கு இணைந்த ஒரு அரசியல் தீர்வை பெற்றால் மட்டுமே இரண்டு இன மக்களின் பலம் பாதுகாப்பு எல்லாமே தங்கியுள்ளது என்ற உண்மையை தமிழ் முஸ்லிம் மக்கள் உணர வேண்டும்.
https://tamilwin.com/article/eastern-province-land-encroachment-1678191767
Leave a Reply
You must be logged in to post a comment.