ஒளவையார் – அரியது

ஒளவையார் – அரியது 

அரியது கேட்கின் வரிவடி வேலோய்
அரிதரிது மானிடர் ஆதல் அரிது
மானிடர் ஆயினும் கூன்குருடு செவிடு
பேடு நீங்கிப் பிறத்தல் அரிது
பேடு நீங்கிப் பிறந்த காலையும்
ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது
ஞானமும் கல்வியும் நயந்த காலையும்
தானமும் தவமும் தான்செயல் அரிது
தானமும் தவமும் தான்செய்வ ராயின்
வானவர் நாடு வழிதிறந் திடுமே

இந்தப் பாடல் பள்ளிக்கூடத்தில் படித்து இருப்பீர்கள். பெரிய சிக்கலான பாடல் ஒன்றும் இல்லை. சில சமயம், மிக எளிமையாக இருப்பதால் அதில் உள்ள ஆழ்ந்த கருத்துக்களை நாம் அறியத் தவறி விடுகிறோம்.

இந்தப் பாடலில் அப்படி என்ன ஆழ்ந்த கருத்து இருக்கிறது என்று பார்ப்போம்.

மானிடராதல் அரிது – சரி தான். நாம் மானிடராகப் பிறப்பதற்கு நாம் என்ன செய்தோம்? ஒன்றும் செய்யவில்லை. பிறந்து விட்டோம். அவ்வளவுதான். நம் முயற்சி ஒன்றும் இல்லை.

பேடு நீங்கி பிறத்தல் அரிது – அதுவும் சரி தான். ஆனால், அதற்காக நாம் என்ன செய்ய முடியும். தாயின் கருவில் இருக்கும் போதே குருடு, செவிடு போன்ற குறைகளை நாம்  சரி செய்து கொள்ள முடியுமா ? முடியாது. ஏதோ, நம் நல்ல காலம் , குறை ஒன்றும் இல்லாமல் பிறந்து விட்டோம்.

ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது….ஞானமும் கல்வியும் பெறுதல் அரிது என்று சொல்லவில்லை.  அடைதல் அரிது என்று சொல்லவில்லை. நயத்தல் அரிது  என்று சொல்கிறாள் ஒளவை.  நயத்தல் என்றால் விரும்புதல், இன்புறுதல், பாராட்டுதல், மகிழ்தல், சிறப்பித்தல் என்று பொருள். ஞானமும் கல்வியும்  எங்கு இருந்தாலும் அதை கண்டு முதலில் மகிழ வேண்டும், அதை அடையும் போது   மனதில் இன்பம் பிறக்க வேண்டும். “ஐயோ, இதை படிக்க வேண்டுமே ” என்று மனம் நொந்து படிக்கக் கூடாது. “அடடா, எவ்வளவு நல்ல விஷயம்..இத்தனை நாளாய் இது தெரியாமல் இருந்து விட்டேனே …நல்லது இப்பவாவது தெரிந்ததே ” என்று மகிழ வேண்டும்.

ஞானம் வேறு, கல்வி வேறு. கல்வி கற்பதன் மூலம் வருவது. ஞானம் உள்ளிருந்து வருவது. உள்ளே செல்லும் கல்வி, உள்ளிருக்கும் ஞானத்தை வெளியே கொண்டு வர வேண்டும்.

“தானமும் தவமும் தான்செயல் அரிது”

படிப்பதாவது எப்படியாவது தத்தி முத்தி படித்து விடலாம்.  தானமும் தவமும்  செய்வது இருக்கிறதே  மிக மிக கடினமான செயல்.

இலட்சக் கணக்கில் செல்வம் இருந்தாலும், நூறு ரூபாய் தருமம் செய்ய மனம் வருமா ? தானம் கூட ஒரு வழியில் செய்து விடலாம். வெள்ள நிவாரண நிதி, முதியோர்  பாதுகாப்பு, பிள்ளைகள் பாதுகாப்பு நிதி என்று ஏதோ ஒன்றிற்கு நாம் தானம் கூட செய்து விடுவோம்.

தவம் ? தவம் செய்வது எளிதான செயலா ? யாராவது தவம் செய்வதைப் பற்றி நினைத்தாவது பார்த்தது உண்டா ? தவம் என்றால் ஏதோ காட்டுக்குப் போய் , மரத்தடியில் அன்ன ஆகாரம் இல்லாமல் இருப்பது என்று நினைக்கக் கூடாது. அது என்ன என்று  பின்னால் ஒரு blog இல் பார்க்க இருக்கிறோம்.

தானமும் தவமும் செய்து விட்டால், வானவர் நாடு வழி திறக்குமாம்.

சொர்கத்துப் போக வேண்டும், இறைவன் திருவடியை அடைய வேண்டும் என்று விரும்பாதவர் யார்.

சொர்கத்துப் போக என்ன வழி ? எப்படி போவது ?

ஔவை சொல்கிறாள் – தானமும் தவமும் செய்யுங்கள். சொர்கத்துக்கான வழி தானே திறக்கும் என்கிறாள்.

சம்பாதிப்பதை எல்லாம் வீடு வாசல், நகை, நட்டு , கார், shares , bonds என்று சேமித்து வைத்து விட்டு, சொர்கத்து எப்படி போவது ?

“காதற்ற ஊசியும் வாராது காண் நும் கடை வழிக்கே ” என்றார் பட்டினத்தார்.

தானமும் தவமும் எப்போது வரும் என்றால்,

ஞானத்தையும், கல்வியையும் நயத்தால் வரும். முதலில் கல்வி, அப்புறம் ஞானம். அது வந்தால், செல்வத்தின் நிலையாமை தெரியும். இளமையின் நிலையாமை தெரியும். அப்போது தானமும் தவமும் செய்யத் தோன்றும்.

ஞானத்தையும் கல்வியையும் எப்படி நயப்பது ?

கூன் குருடு செவிடு பேடு நீங்கி பிறந்தால் , ஞானத்தையும், கல்வியையும் நயக்க முடியும்.

உங்களுக்கு கூன், குருடு, செவிடு போன்ற குறை ஒன்றும் இல்லையே ?

அப்படி என்றால், அடுத்த இரண்டையும் செய்யுங்கள், வானவர் நாடு வழி திறந்து  உங்களுக்காக காத்து நிற்கும்.

ஔவைப் பாட்டியின் ஞானத்தின் வீச்சு புரிகிறதா ?

எளிமையான பாடல் தான். எவ்வளவு ஆழம்?

http://interestingtamilpoems.blogspot.com/2019/02/blog-post_11.html

ஔவையிடம் முருகபெருமான் கேட்ட கேள்வியும், அவர் சொல்லும் பதில்களும்…

அரிது எதுவோ?

அரிது அரிது, மானிடராய் பிறத்தல் அரிது
மானிடராய் பிறந்த காலையின்
கூன் குருடு செவிடு பேடு நீங்கி பிறத்தல் அரிது
கூன் குருடு செவிடு பேடு நீங்கி பிறந்த காலையின்
ஞானமும் கல்வியும் நயத்தல் அறிது
ஞானமும் கல்வியும் நயந்த காலையும்
தானமும் தவமும் தான் செய்தல் அரிது
தானமும் தவமும் தான் செய்ததாயினும்
வானவர் நாடி வழி பிறந்திடுமே

கொடியது எது?

கொடியது கேட்கின் வரிவடிவேலோய்
கொடிது கொடிது வறுமை கொடிது
அதனினும் கொடிது இளமையில் வறுமை
அதனினும் கொடிது ஆற்றொணாக் கொடுநோய்
அதனினும் கொடிது அன்பில்லாப் பெண்டிர்
அதனினும் கொடிது அவர்கையால் இன்புற உண்பதுதானே!

பெரியது எது?

பெரியது கேட்கின் நெறிதமிழ் வேலோய்.
பெரிது பெரிது புவனம் பெரிது
புவனமும் நான்முகன் படைப்பில் வந்து
நான்முகன் கரியமால் உந்தியில் வந்தோன்
கரியமாலோ அலைகளில் துயின்றோன்
அலைகடலோ குறுமுனியின் கையில் அடக்கம்
குறுமுனியோ கலசத்திற் பிறந்தோன்
கலசமோ புவியிற் சிறுமண்
புவியொ அரவினுக்குற் ஒருதலைப் பாரம்
அரவோ உமையவள் சிறுவிரல் மோதிரம்
உமையோ இறைவர் பாகத்தொடுக்கம்
இறைவனோ தொண்டருள்ளத்து ஒடுக்கம்
தொண்டர்தம் பெருமையை சொல்லவும் பெரிதே!

இனியது எது?

இனியது கேட்கின் வரிவடிவேலோய்
இனிது இனிது ஏகாந்தம் இனிது
அதனினும் இனிது ஆதியைத் தொழுதல்
அதனினும் இனிது அறிவிடல் சேர்தல்
அதனினும் இனிது அறிவுள்ளோரை கனவிலும் நனவிலும் காண்பதுதானே

About editor 3092 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply