மணிமேகலை தமிழில் தோன்றிய முதல் சமய காப்பியம்

மணிமேகலை தமிழில் தோன்றிய முதல் சமய காப்பியம்

February 23, 2012

தமிழில் தோன்றிய முதல் சமயக்காப்பியம் மணிமேகலை. இந்நூல் பவுத்தமத நீதிகளை எடுத்துச் சொல்கிறது. மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனாரால் எழுதப்பட்டது. சிலப்பதிகாரக் கதையின் தொடர்ச்சியாக இந்நூல் அமைந்துள்ளது. இவ்வுண்மையை சிலப்பதிகாரத்தின் உரைபெறு கட்டுரை எடுத்துக் கூறுகிறது. அதனால் காப்பியங்க ளில் சிலப்பதிகாரமும், மணிமேகலையும் இரட்டைக் காப்பியங்கள் என்று அழைக்கப் படுகின்றன. இந்நூலுக்கு மணிமேகலைத் துறவு என்றொரு பெயரும் உண்டு. இக்காப்பியத்தின் கதாநாயகியே மணிமேகலை.  சிலப்பதிகாரத்தின் கதைத் தலைவனான கோவலனுக்கும், ஆடலரசியான மாதவிக்கும் பிறந்த மகள் மணிமேகலை. கோவலனின் குலதெய்வமான மணிமேகலையின் பெயரை தன் மகளுக்கு சூட்டினான். தன் பாட்டி சித்ராபதி யையும், தாய் மாதவியையும் போல கணிகையாக வாழ மணிமேகலைக்கு  விருப்பமில்லை. கற்புக்கரசி கண்ணகியைப் போன்று அறவழியில் அவள் வாழ்ந்தாள்.

சக்கரவாளக்கோட்டம் என்னும் இடத்தில் உறங்கிக் கொண்டிருந்த மணிமேகலையை அவளுடைய குலதெய்வமான மணிமேகலா தெய்வம் மணிபல்லவத்தீவிற்குத் தூக்கிச் சென்றது. அங்குள்ள புத்தக்கோயிலை வணங்கி தன் பழம்பிறப்பைப் பற்றி அவள் தெரிந்து கொண்டாள். முற்பிறவியில் இலக்குமி என்னும் பெயரில் வாழ்ந்ததை அறிந்தாள். முழுமதி நாளான வைகாசி விசாகநாளில் அமுதசுரபி என்னும் அட்சய பாத்திரத்தைப் பெற்றாள். பசியின் கொடுமையில் இருந்து மக்களைக் காப்பதற்காக அந்த பாத்திரத்தைப் பயன்படுத்தினாள். அறவண அடிகள் என்னும் துறவியிடம் அறிவுரை கேட்டு, ஆதிரை என்னும் கற்புக்கரசியிடம் முதன் முதலில் பிச்சை ஏற்றாள். அன்று முதல் அந்த பாத்திரத்தில் அள்ள அள்ளஅன்னம் குறையாமல் வந்தது.

இக்காப்பியம் 30 காதைகளைக் கொண்டதாகும். முதல் காதையான விழாவறை காதையில் கூறப்படும் இந்திர விழாவே, தற்கால பொங்கல் பண்டிகை எனக்கருதப்படுகிறது. இவ்விழா 28 நாட்கள் நடந்துள்ளது. சிறைச்சாலையை அறச்சாலையாக்கிய பெண்மணி மணிமேகலை. பசிக்கொடுமையைப் போக்கியவளின் புகழை, என் நாவால் உரைக்க முடியாது என்று சாத்தனார் மணிமேகலையின் பெருமையை இந்நூலில் புகழந்துள்ளார். உலக வாழ்வில் இளமையோ, செல்வமோ நிலையில்லாதவை. வீடுபேறு என்னும் மோட்சத்தை பிள்ளைகளாலும் பெற்றுத் தர முடியாது. அறம் என்னும் தர்மசிந்தனை ஒன்று மட்டுமே நமக்கு சிறந்த துணை என்பதே மணிமேகலை காப்பியத்தின் சாரமாகும்.

உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே என்னும் வரி இந்நூலில் இடம் பெற்றுள்ள சிறப்பான பாடல் வரியாகும். தமிழ்த்தாத்தா உ.வே. சாமிநாதய்யர் நூலாசிரியர் சாத்தனாரின் புலமையைப் பெரிதும் பாராட்டியுள்ளார்.

பதிகம் (கதைபொதி பாட்டு)

அஃதாவது-இந்நூலின்கட் போந்த பொருளை நிரலாகத் தொகுத்துக் கூறும் சிறப்புப் பாயிரம் என்றவாறு

பதிக்க கிளவி பல்வகை பொருளைத்
தொகுதி யாக்க சொல்லுத றானே

என்பது முணர்க.

இனி, பதிகம் என்ற சொல் பாயிரம் என்னும் பொருட்டுமாகும் என்பதனை.

முகவுரை பதிகம் அணிந்துரை நூன்முகம்
புறவுரை தத்துரை புனைந்துரை பாயிரம்

என வரும் நன்னூற் சூத்திரத்தால் உணர்க.

பாயிரம் பொதுவும் சிறப்பும் என இரு வகைத்து. அவற்றுள் இப்பதிகம் நூற்கேயுரிய சிறப்புப் பாயிரம் ஆகும்.

இனி இதன்கண் மணிமேகலை என்னும் இப்பெருங் காப்பியத்தின் பிறப்பிடமாகிய காவிரிப்பூம்பட்டினத்தின் வரலாறும் அதனைத் தலைநகராகக் கொண்ட சோழ நாட்டைப் புரக்கும் காவிரி என்னும் பேரியாற்றின் வரலாறும், காவிரிப் பூம்பட்டினத்தின் கண் ஒரு நூறு கேள்வி யுரவோனாகிய இந்திரனுக்கு விழாவெடுத்தற்கு முரசறைதல் தோற்றுவாயாகவும் மணிமேகலை பிறப்பற வேண்டி நோன்பு மேற்கொள்ளல் இறுவாயாகவும் அமைந்த கதையைத் தம் மகத்துட் கொண்ட உள்ளுறுப்புக்களும் நிரல்படுத்திக் கூறப்பட்டுள்ளன.

இளங்கதிர் ஞாயீ றெள்ளுந் தோற்றத்து
விளங்கொளி மேனி விரிசடை யாட்டி
பொன்றிகழ் நெடுவரை உச்சித் தோன்றித்
தென்றிசைப் பெயர்ந்தவிக் தீவத் தெய்வதம்
சாகைச் சம்பு தன்கீழ் நின்று -5

மாநில மடந்தைக்கு வருந்துயர் கேட்டு
வெந்திற லரக்கர்க்கு வெம்பகை நோற்ற
சம்பு வெண்பாள் சம்பா பதியனள்
செங்கதிர்ச் செல்வன் திருக்குலம் விளக்கும்
கஞ்ச வேட்கையிற் காந்தமன் வேண்ட – 10

அமர முனிவன் அகத்தியன் றனாது
கரகங் கவிழ்த்த காவிரிப் பாவை
செங்குணக் கொழுகியச் சம்பா பதியயல்
பொங்குநீர்ப் பரப்பொடு பொருந்தித் தோன்ற
ஆங்கினி திருந்த அருந்தவ முதியோள் – 15

ஓங்குநீர்ப் பாவையை உவந்தெதிர் கொண்டாங்கு
ஆணு வீசும்பின் ஆகாய கங்கை
வேணவாத் தீர்த்த விளக்கே வாவெனப்
பின்னலை முனியாய் பொருந்தவன் கேட்டீங்கு
அன்னை கேளிவ் வருந்தவ முதியோள் – 20

நின்னால் வணங்குந் தகைமையள் வணங்கெனப்
பாடல்சால் சிறப்பிற் பரதத் தோங்கிய
கோடாச் செங்கோற் சோழர்தங் குலக்கொடி
கோள்நிலை திரிந்து கோடை நீடினும்
தான்நிலை திரியாத் தண்டமிழ்ப் பாவை – 25

தொழுதனள் நிறபவத் தொன்மூ தாட்டி
கழுமிய உவகையிற் கவாற்கொண் டிருந்து
தெய்வக் கருவுந் திசைமுகக் கருவும்
செம்மலர் முதியோன் செய்த அந்நாள்
என்பெயர்ப் படுத்த இவ் விரும்பெயர் மூதூர் – 30

நின்பெயர்ப் படுத்தேன் நீவா ழியவென
இருபாற் பெயரிய உருகொழு மூதூர்
ஒருநூறு வேள்வி உரவோன் றனக்குப்
பெருவிழா அறைந்ததும் பெருகிய தலரெனச்
சிதைந்த நெஞ்சிற் சித்திரா பதிதான் – 35

வயந்த மாலையான் மாதவிக் குரைத்ததும்
மணிமே கலைதான் மாமலர் கொய்ய
அணிமலர்ப்  பூம்பொழில் அகவயிற் சென்றதும்
ஆங்கப் பூம்பொழில் அரகிளங் குமரனைப்
பாங்கிற் கண்டவள் பளிக்கறை புக்கதும் – 40

பளிக்கறை புக்க பாவையைக் கண்டவன்
துளக்குறு நெஞ்சில் துயரொடும் போயபின்
மணிமே கலாதெய்வம் வந்துதோன் றியதும்
மணிமே கலையைமணி பல்லவத் துய்த்ததும்
உவவன மருங்கினவ் வுரைசால் தெய்வம் -45

சுதமதி தன்னைத் துயலெடுப் பியதூஉம்
ஆங்கத் தீவகத் தாயிழை நல்லாள்
தான் றுயி லுணர்ந்து தனித்துய ருழந்ததும்
உழந்தோ ளாங்கணோர் ஒளிமணிப் பீடிகைப்
பழம்பிறப் பெல்லாம் பான்மையி ணுணர்ந்ததும் -50

உணர்ந்தோள் முன்னர் உயிர்தெய்வந் தோன்றி
மணங்கவ லொழிகென மந்திரங் கொடுத்ததும்
தீப திலகை செவ்வனந் தோன்றி
மாபெரும் பாத்திரம் மடக்கொடிக் களித்ததும்
பாத்திரம் பெற்ற பைந்தொடி தாயரொடு – 55

யாப்புறு மாதவத் தறவணர்த் தொழுததும்
அறவண வடிகள் ஆபுத் திரன்றிறம்
நறுமலர்க் கோதைக்கு நன்கனம் உரைத்ததும்
அங்கைப் பாத்திரம் ஆபூத் திரன்பால்
சிந்தா தேவி கொடுத்த வண்ணமும் – 60

மற்றப் பாத்திரம் மடக்கொடி யேந்திப்
பிச்சைக் கவ்வூர்ப் பெருந்தெரு வடைந்ததும்
பிச்சைக் யேற்ற பெய்வளை கடிஞையிற்
பத்தினிப் பெண்டிர் பாத்தூண் ஈத்ததும்
காரிகை நல்லாள் காயசண் டிகைவயிற்று – 65

ஆனைத் தீக்கெடுத் தம்பலம் அடைந்ததும்
அம்பலம் அடைந்தனள் ஆயிழை யென்றே
கொங்கலர் நறுந்தார் கோமகன் சென்றதும்
அம்பல மடைந்த அரசிளங் குமரன்முன்
வஞ்ச விஞ்சையின் மகள்வடி வாகி – 70

மறஞ்செய் வேலோன் வான்சிறைக் கோட்டம்
அறஞ்செய் கோட்டம் ஆக்கிய வண்ணமும்
காயசண் டிகையென விஞ்சைக் காஞ்சனன்
ஆயிழை தன்னை அகலா தணுகலும்
வஞ்ச விஞ்சையின் மன்னவன் சிறுவனை – 75

மைந்துடை வாளில் தப்பிய வண்ணமும்
ஐயரி யுண்கண் அவன்றுயர் பொறாஅள்
தெய்வக் கிளவியிற் றெளிந்த வண்ணமும்
அறைகழல் வேந்தன் ஆயிழை தன்னைச்
சிறைசெய் கொன்றதுஞ் சிறைவீடு செய்ததும் – 80

நறுமலர்க் கோதைக்கு நல்லற முரைத்தாங்கு
ஆய்வளை ஆபூத் திரனா டடைந்ததும்
ஆங்கவன் றன்னோ டணியிழை போகி
ஓங்கிய மணிபல் லவத்திடை யுற்றதும்
உற்றவ ளாங்கோர் உயர்தவன் வடிவாய்ப் – 85

பொற்கொடி வஞ்சியற் பொருந்திய வண்ணமும்
நவையறு நன்பொரு ளுரைமி னோவெனச்
சமயக் கணக்கர் தந்திறங் கேட்டதும்
ஆங்கத் தாயரோ டறவணர்த் தேர்ந்து
பூங்கொடி கச்சி மாநகர் புக்கதும் -90

புக்கவள் கொண்ட பெய்யுருக் களைந்து
மற்றவர் பாதம் வணங்கிய வண்ணமும்
நவத்திறம் பூண்டு தருமங் கேட்டுப்
பவத்திற மறுகெனப் பாவை நோற்றதும்
இளங்கோ வேந்தன் அருளிக் கேட்ப – 95

வளங்கெழு கூல வாணிகன் சாத்தன்
மாவண் தமிழ்த்திறம் மணிமே கலைதுறவு
ஆறைம் பாட்டினுள் அறியவைத் தனனென்

உரை

தோற்றுவாய்

1-8: இளங்கதிர் ………பதியினள்

(இதன் பொருள்) பொன் திகழ் நெடுவரை உச்சி இத்தீவைத் தெய்வதம்-பொன் மயமாக விளங்குகின்ற நெடிய மேருமலையின் உச்சியின்கண் இந்த நாவலந் தீவின் காவல் தெய்வமானது;  இளங்கதிர் ஞாயிறு எள்ளும் தோற்றத்து விளங்கு ஒளி மேனி விரி சடையாட்டி தோன்றி – இளமையுடைய கதிர்களையுடைய ஞாயிற்று மண்டிலத்தையும் இகழ்தற்குக் காரணமான பேரொளியோடு காணப்படுகின்ற விளக்கமான ஒளிப் பிழம்பாகிய திருமேனியையும் விரிந்த சடையையும் உடையவளாய் அருளுருவங் கொண்டு தோன்றி; மாநில மடந்தைக்கு வரும் துயர் கேட்டு – பெரிய நிலமகளுக்கு அரக்கர்களால் உண்டாகின்ற துன்பங்களைத் தன்பால் முறையிடுகின்ற அமரர்கள் வாயிலாய்க் கேள்வியுற்று வெம்திறல் அரக்கர்க்கு வெம்பகை-வெவ்விய ஆற்றலுடைய அவ்வரக்கர்களுக்கும் அச்சமுண்டாக்கும் பகையாவதற்குரிய ஆற்றலைப் பெறும் பொருட்டு; சாகை சம்பு தன்கீழ் நின்று நோற்ற – கிளைகளை யுடைய நாவல் மரத்தின் கீழே நின்று தவம் செய்தமையாலே; சம்பு என்பாள்- சம்பு என்று பெயர் பெற்றவள்; தென்திசை பெயர்ந்த சம்பா பதியினள் – அம் மேருமலையினின்றும் தெற்குத் திசையை நோக்கி எழுந்தருளிய காலத்தே சம்பாபதி என்னும் தன் பெயரோடு படைக்கப்பட்டிருந்த பூம்புகார் நகரத்திலே திருக்கோயில் கொண்டு வீற்றிருப்பாளாயினள்; என்க.

(விளக்கம்) ஞாயிறு திருமேனிக்கும் கதிர் விரிசடைக்கும் உவமை. இஃது எதிர் நிரல் நிறை உவமை. ஆகவே ஞாயிற்றை எள்ளும் மேனியையும் அதன் இளங்கதிரை எள்ளும் சடையையும் உடைய அருளுருவம் கொண்டு பொன்வரை உச்சியில் தோன்றித் துயர் கேட்டுச் சம்புவின் கீழ் நின்று நோற்றமையால் சம்பு எனப் பெயர் பெற்று, பொன் மலையினின்றும் தென்றிசை நோக்கிப் பெயர்ந்து வந்து தென்றிசையின்கண் தனக்கெனப் பிரமனால் தன் பெயரோடே படைக்கப்பட்டிருந்த சம்பாபதி என்னும் நகரத்தில் எழுந்தருளி இருப்பாளாயினள் என்பது கருத்தாகக் கொள்க.

இதனால் காவிரி ஒரு பேரியாறாகக் காட்சி தருதற்கு முன்பு சம்பாபதி என்னும் பெயரையுடையதாய் இருந்த அந்நகரமே காவிரியாறு சோழ மன்னர்களால் பெரிய யாறாகச் செய்யப்பட்ட பின்னர் காவிரிப்பூம்பட்டினம் எனவும் காவிரி கடலொடு கலக்கம் சிறப்புக் கருதிக் பூம்புகார் நகரம்  எனவும் பெயர் பெற்றது என்று உணரப்படும்.

இதனை (26-30) ஆம் அடிகளில் கூறுமாற்றான் அறியலாம் ஆகவே, சம்பு வென்பாள் சம்பாபதியினள் என்றது, சம்பு என்னும் அக்காவற்றெய்வம் பொன்வரையுச்சியினின்றும் தென்திசைப் பெயர்ந்து வந்து நான்முகன் தன் பெயர்ப்படுத்த சம்பாபதி என்னும் இடத்திலே உறைந்தது என்றவாறு. இத் தெய்வம் காவிரியாறு தோன்று முன்பே அவ்வடத்திலே எழுந்தருளி யிருந்தது என்பதும் பின்னர்க் கூறுமாற்றானுணரலாம்.

காவிரியின் தோற்றம்

6-18 செங்கதிர் ……..வாவென

(இதன் பொருள்.) செங்கதிர்ச் செல்வன் திருக்குலம் விளக்கும் வேட்கையின் காந்தமன் – சிவந்த ஒளியையுடைய கதிரவன் வழித் தோன்றிய தெய்வத் தன்மையுடைய தான் பிறந்த குலத்தினைப் புகழால் உலகுள்ள துணையும் விளக்க வேண்டும் என்றெழுந்ததொரு விருப்பங் காரணமாகச் சோழர் குலத்திலே தோன்றிய காந்தன் என்னும் மன்னவன்; அமர முனிவன் அகத்தியன் கஞ்சம் வேண்ட -தேவமுனிவனாகிய அகத்தியன்பாற் சென்று தன்னாட்டை வளம் படுத்துதற்கு இன்றியமையாத நீர் வழங்க வேண்டுமென்று வேண்டா நிற்றலால்; தனாது கரகம் கவிழ்த்த காவிரிப் பாவை- அம் முனிவன், நீர் பேரியாறாகப் பெருகிச் சென்று அச் சோழ நாட்டினை வளம்படுத்தத் திருவுளங் கொண்டு அதற்குக் கால்கோள் செய்பவன் தன்னுடைய நீர் கரத்தைக் குடக மலையுச்சியிலே சென்று கவிழ்த்தமையாலே அதிலிருந்து ஒழுகிய நீர் அம்முனிவன் கருதியாங்குப் பேரியாறாகப் பெருகிக் காவிரிப்பாவை என்னும் பெயரோடு; செங்குணக்கு ஒழுகி-நேர் கிழக்குத் திசை நோக்கி ஒழுகி; அச் சம்பாபதி அயல் பொங்கு நீர்ப் பரப்பொடு பொருந்தித் தோன்ற -சம்பாபதி என்னும் தெய்வம் எழுந்தருளியிருந்த சம்பாபதி என்னும் அத்திருப்பதியின் மருங்கே மிக்க நீரையுடைய கடற்பரப்பிலே புகுந்து பொலியா நிற்ப; ஆங்கினிதிருந்த -அச் சம்பாபதியிலே மகிழ்ந்தெழுந்தருளியிருந்த; அருந்தவ முதியோள் -அரிய தவத் தினையுடைய பழையோளாகிய அச் சம்பாபதி என்னும் தெய்வம்; உவந்து – அந் நதி நங்கை வரவு கண்டு பெரிதும் மகிழ்ந்து; ஓங்கு நீர்ப் பாவையை எதிர் கொண்டு -உயரிய தெய்வத் தன்மையுடைய அக் காவிரி நங்கையை எதிர் சென்று அன்புடன் வரவேற்று; ஆங்கு ஆணுவிசும்பின் ஆகாய கங்கை-அவ்விடத்திலேயே தன்னோகை கூறுபவள் ஆருயிர்களின்பால் அன்பு மிக்கவளே! விசும்பாகிய உயர் குலத்துப் பிறந்த ஆகாய கங்கையாகிய நங்கையே; வேணவாத்தீர்த்த விளக்கே -சோழ மன்னனும் அவன் குடிமக்களும் நீண்ட காலமாகத் தம்முட் கொண்டிருந்த பேரிய அவாவினை நிறைவேற்றி அவர்களுடைய துன்பவிருளைத் துவரப் போக்கிய ஒளி விளக்கே ;வா என வருக வருக என்று பாராட்டி வரவேற்ப என்க.

(விளக்கம்) திருக்குலம் -தெய்வத் தன்மையுடைய குலம். சோழ மன்னர்,கதிரவன் குலத்து மன்னர் என்பது நூனெறி வழக்கம். காவிரி தோன்று முன்னர்ச் சோழர் நாடு நீர் வளம் பெறாது வறுமையுற்றுக் கிடந்தமையால் அந்த நாட்டரசனாகிய காந்தன் அக் குறை தீர்த்துத் தான் பிறந்த அந்த நாட்டையும்  தான் பிறந்த சோழர் குலத்தையும் புகழுடைய தாக்க விரும்பி அகத்தியன்பாற் சென்று வரம்வேண்டினனாக அவன் வேண்டுகோட் கிணங்கிய அகத்தியன் அந் நாட்டினை நீர் நாட்டாக்கத் திருவுளங் கொண்டு அந் நாட்டினைப் புரக்கும் ஒரு போறியாற்றைப் படைத்து வழங்க விரும்பி அதற்குக் கால்கோள் செய்பவன் குடகமலை யுச்சியில் ஏறிச் சென்று தன் கரக நீரை கவிழ்த்துவிட, அந்நீர் பெருகிப் பேராறாகிச் செங்குணக் கொழுகிச் சோணாட்டிற் புக்குக் புனல் பரப்பி வளஞ் செய்து சம்பாபதியின் மருக்கே கடலிற் பாய்ந்தது எனவும் அக் காவிரி வருகையால் மகிழ்ந்த சம்பாதி என்னும் தெய்வம் அந் நீர் மகளை எதிர் சென்று வரவேற்று மகிழ்ந்தான் எனவும் இப் பகுதி காவிரியின் தோற்றமும் காரணமும் கட்டுரைத்த படியாம்.

கம்சம்- நீரை பிறப்பித்தல். கஞ்ச வேட்கை எனச் சொற் கிடந்தாங்கே நீருண்டாக்கும் விருப்பத்தால் எனினுமாம். கஞ்சம் என்பதே நீர் என்னும் பொருட்டென லுமாம். (கஞ்சம் கலங்குவன என்பது நளவெண்பா) காந்தன்-சோழர் குலத்து மன்னருள் ஒருவன்.மன்-அரசன். பகீரதன் தானே தவம் செய்து கங்கையை நிலவுலகிற்குக் கொணர்ந்தனன். காந்தன் தவத்தினால் பேராற்றுலுடைய அகத்தியனை வணங்கி அவன்பால் வரமாகப் பெற்று அவ்வாகாய கங்கையையே காவிரிப் பாவையாகச் சோழநாட்டிற்குக் கொணர்ந்தான் என்க. அகத்தியன் கடல் குடித்தவன். அவன் பேரியாறு படைத்தல் பெரிதில்லை. தன் கரத்திலிருந்த ஆகாய கங்கையாகிய நீரையே காவிரிப்பேரியாறாகப் பெருகிவரச் செய்தான் ஆதலின் அவன் கரக நீர் ஆகாய கங்கை என்பது தோன்ற அமர முனிவன் அகத்திழன் என்று விதித்தார். ஆணு:பண்பாகு பெயர்; விளி.அன்பே என்று விளித்தப்படியாம். ஆணுவே! ஆகாய கங்கையே! விளக்கே! வா! என்று தன் ஆர்வந் தோன்ற மும்முறை விளித்தப் படியாம்.பொங்குநீர்ப் பரப்பு என்னும் பன்மொழித் தொடர், கடல் என்னும் ஒருபொருள் மேனின்றது மலைத்தலைய கடற்காவிரி என்பது பட்டினப்பாலை (9).விளக்கு என்றமையால் துன்பவிருள் போக்கும் விளக்கு என்று கூறக் கொள்க. வேணவா -மிக்க அவா.

அகத்தியன் காவிரிநங்கைக்கு அத் தெய்வத்தை
அறிமுகப் படுத்துதலும், காவிரி வணங்குதல்

19-26: பின்னலை……….நிற்ப

(இதன் பொருள்.) பின்னிலை முனியாய் பெருந்தவன்-தன்னாற் படைக்கப்பட்டுச் செங்குணக்காக இயங்கி வருகின்ற அக் காவிரிப் பாவையின் பின்னே அவளது இயக்கங் கண்டு மகிழ்தற்கு அவள் பின்னரே தொடர்ந்து வருவதனை வெறாமல் விருப்பத்தோடு வந்த பெரிய தவத்தையுடைய அவ்வமா முனிவர்; கேட்டு-சம்பாபதி அந் நதிமகளை வரவேற்கும் பாராட்டுரையினைக் கேட்டு மகிழ்ந்து; அன்னை கேள் இ அருந்தவ முதியோள் நின்னால் வணங்குந் தன்மையள் வணங்கு என-மன்னுயிர்க் கெல்லாம் அன்னையாகிய காவிரி மகளே கேள். நின்னை பாராட்டும் இந்த அரிய தவத்தை யுடைய இவள் கன்னிகையாகக் காணப்படினும் நிலமடந்தையின் காவல் தெய்வமாகிய கொற்றவை ஆதலின் முன்னைப் பழமைக்கும் முன்னைப் பழமையோளாகிய இறைவியே ஆதலின உன்னால் வணங்கப்படுதற் கியன்ற பெருமையுடையாள் காண்! ஆதலால் அத் தெய்வத்தை வணங்குவாயாக என்று பணித்தலாலே; பாடல்சால் சிறப்பின் பரதத்து ஓங்கிய கோடாச் செங்கோல் சோழர் தங்குலக் கொடி-நல்லிசைப் புலவராலே பாடுதற் கமைந்த பொருஞ் சிறப்பமைந்த இப் பாரத நாட்டிலே புகழாலுயர்ந்ததும் எஞ்ஞான்றும் வளைந்திலாதது மாகிய செங்கோலையுடைய சோழ மன்னருடைய குலத்திற்கே உரிமைபூண்ட பூங்கொடிபோல் வாளும்; கோள் நிலை திரிந்து கோடை நீடினும் தான் நீலை திரிபாத் தமிழ்ப்பாவை -கோள்கள் நன்னிலை பிறழ்ந்து கோட்டைக் காலமே நீண்டாலும். தான் தனது புனலாலே மன்னுயிர் புரக்கும் தனது நிலை பிறழா தவளும் குளிர்ந்த தமிழ் மொழியைத் தனது வளத்தாலே வளர்ப்பவளும் திருமகள் போல்பவளுமாகிய அக் காவிரி நங்கை அம் முனிவன் பணித்தாங்கு; தொழுதனள் நிற்ப – சம்பாபதியைக் கைகுவித்துத் தொழுது தலையாலே வணங்கி நிற்ப என்க.

(விளக்கம்) தன்னாற் படைக்கப்பட்ட காவிரி ஒழுகும் வனப்பினைக் கண்டுகளிக்கும் கருத்தாலே அம் மாபெருந்தவனும் பின்னலை முனியாது  விரும்பி அவளைப் பின் தொடர்ந்து வந்தான் என்றவாறு. அவன் பின்னிற்றற்கு ஒண்னாத பெருமையுடையான் என்பது தோன்ற பெருந்தவன் என்றார். காவிரியின் பால் மகவன்பு கொண்டு அவனும் பின்னலை முனியாது அவளைத் தொடர்ந்தான் என்று அவனுடைய அன்பின் நிலை கூறியவாறு. அன்னை என்று  விளித்தான் தன்மகளாதலின். உயிர்கட் கெல்லாம் அன்னை என்பது பற்றி அங்ஙனம் விளித்தான் எனினுமாம். பாரத நாட்டிலமைந்த ஏனைமன்னர் செங்கோள்களினும் காட்டில் உயர்ந்த செங்கோல்; எஞ்ஞான்றும் கோட்டாச் செங்கோல் என்று தனித் தனி இயையும் ஏனை மன்னரால் கைப்பற்ற வியலாமை பற்றிச் சோழர் தங்குலக்கொடி என்றார்.

இனி, கோணிலை திரிந்து…பாவை என்னும் இதனோடு- வசையில் புகழ் வயங்கு வெண்மீன்-திசைதிரிந்து தெற்கேகினும்-தற்பாடிய தளியுணவின் -புட்டோம்பப் புயன்மாறி-வான்பொய்ப்பினும் தான்பொய்யாமலைத் தலைய கடற் காவிரி -புனல் பரந்து பொன் கொழிக்கும் எனவும்,(பட்டினப்-1-7) இலக்குகதிர் வெள்ளி தென்புலம் படரினும் அந்தண்காவிரி வந்து கவர்பூட்ட எனவும் (புறம். 357-8) கரியவன் புகையினும் புகைக்கொடி தோன்றினும், விரிகதிர் வெள்ளி தென்புலம் படரினும்……காவிரிப் புதுநீர்க் கடுவரல் வாய்த்தலே எனவும் (சிலப்-10:1092-8) வரும் பிறசான்றோர் பொன்மொழிகளையும் ஒப்பு நோக்குக. வளமில்வழி மொழிவளனும் கலைப்பெருக்கமும், உண்டாத லின்மையின் தமிழ் மொழியின் ஆக்கத்திற்கும் காவிரி காரணமாதல் பற்றி, தண்டமிழ்ப் பாவை என்றொரு பெயரும் கூறினர் தொமுத்தனள். தொழுது,

சம்பாபதி காவிரி வாழ்த்துதல்

26-31: அத்தொல்………வாழியவென

(இதன் விளக்கம்) அத்தொல் மூதாட்டி கழுமிய உவகையின் கவான் கொண்டு இருந்து- அவ்வாறு காவிரிப் பாவையாலே தொழப்பட்ட மிக்க முதுமையையுடைய அச் சம்பாபதி என்னும் தெய்வந் தானும் அந்நதிமகளோடு உளம் ஒன்றிய அன்பினாலே மகிழ்ந்து அக் காவிரிப் பாவையைத் தழுவித் தன் மடிமிசை இருத்திக் கொண்டிருத்து கூறுபவன் அன்னையே!; செம்மலர் முதியோன் செந்தாமரை மலரில் உறையும் முதுபெருங் கடவுளாகிய பிரமன் உலகங்களைப் படைக்கத் தொடங்கி; தெய்வக் கருவும் திசைமுகக் கருவும்-மகாராசிகலோக முதலிய அறுவகை உலகங்களையும் அவற்றில் வாழும் தெய்வகணப் பிண்டங்களையும் நான்கு திசைகளினும் அமைந்துள்ள இருபது வகைக்கப்பட்ட பிரமகணப் பிண்டங்களையும் படைத்துப் பின் இந்நிலவுலகத்தையும் இதன்கண் வாழும் மக்கட் பிண்டங்டளையும்; செய்த அந்நாள் – படைத்த அப் பண்டைக் காலத்திலேயே; என் பெயர்ப்படுத்த இவ் இரும்பெயர் மூதூர் – சம்பாபதி என்னும் எனது பெயரோடு படைத்தருளிய பெரிய புகழையும் பழைமையையும் உடைய இந்த ஊரினை; நின் பெயர் படுத்தேன் – இற்றை நாள தொடங்கியான காவிரிப் பூம்பட்டினம் என வழங்குமாறு நினது பெயரோடும் இணைத்தேன் காண; நீ வாழிய என – நீடுழி வாழ்வாயாக என்று வாழ்த்தியருள என்க.

(விளக்கம்.) படைப்புக் காலத்திலேயே படைப்புக் கடவுள் முக்காலமும் உணர்ந்தவன் ஆதலின் இந்நகரத்தை யான் இருத்தற்கியன்ற இடமாகப் படைத்துச் சம்பாபதி என்னும் பெயரும் சூட்டினன். ஆதலின் யானும் எனக்குரிய பொன்வரையுச்சியிலே தோன்றி நில மடந்தைக்கு அரக்கரால் அழிவு வரும் என்று பிறதெய்வங்கள் கூறக் கேட்டு அவர்கள் அஞ்சத்தகுந்த பேராற்றலை அப் பொன்வரையுச்சியில் நிற்கும் சாகைச்சம்புவின் கீழ் நெடுங்காலம் தவம்செய்து பெற்றுப் பின்னர், இச் சம்புத்தீவன் காவற்றெய்வமாகிய கொற்றவையாகி இச் சம்பாபதி நகரத்திலே வதிகிறேன். ஆதலின் இந் நகரம் மாபெருஞ் சிறப்புடையதாம். இற்றைநாள் தொடங்கி இம்மூதூர் காவிரி பூம்பட்டினம் என்னும் பெயரோடும் நிலவுக! நீ வாழ்க! என்று அத்தெய்வம் அந்நகர் வரலாறும் பெருமையும் பழமையும் காவிரிக்கு அறிவுறுத்து வாழ்த்திற்று என்க.

இனி உலகங்கள் முப்பத்தொன்று என்பதும் அவைபொன்மலையை நடுவண் கொண்டு அதன் மேலும் கீழும் நடுவிலும் உள்ளன என்பதும் பௌத்தர் கொள்கையாம். இவற்றைப் படைப்புக் கடவுள் படைக்கும் பொழுது தெய்வலோக முதலிய மேலுலகத்தைப் படைத்துப் பின்னர் மக்கள் உலகாகிய இந்நிலவுலகத்தைப் படைத்தான் என்பதும் அங்ஙனம் நிலவுலகத்தைப் படைக்கும் பொழுதும் சம்புத்தீவையே முற்படப் படைத்து அதன் தென்றிசைமருக்கில் அதன் காவற்றெய்வமாகிய சம்பு என்னும் தெய்வம் உறைதற் பொருட்டுச் சம்பாபதி என்னும் பெயரோடு ஒரு நகரையும் படைத்தான் என்பதும் இப்பகுதியில் பாட்டிடை வைத்த குறிப்புப் பொருளாகக் கொள்க. ஈண்டுத் தெய்வக் கரு என்றது ஆறுவகைப்பட்ட தெய்வங்களையும் அவர் வாழும் உலகங்கங்களையுமாம்; திசைமுகக் கரு என்றது, இருபது வகைக்கப்பட்ட பிரமலோகங்களையும் அவற்றின் உறையும் பிரமகணங்களையும் என்க. இனி இவ்விருவகை உலகங்களையும் படைத்துழி என்பெயர்ப்படுத்த இவ்விரும் பெயர் மூதூர் என்றமையின் பின்னர் நிலவுலகத்தைப் படைக்கும் பொழுது முற்படப் புகார் நகரம் படைக்கப்பட்டது என்பதும் பெற்றாம். எனவே புகார் நகரம் படைப்புக் காலந்தொட்டு அதனை ஆளும் அரசரால் சோழமன்னரால் வழிவழி ஆளப்பட்டுப் பதியெழுவறியாய் பழங்குடி கெழீஇய பண்பாட்டோடு புகழையும் பெற்று வருகிறதென்றவாறாயிற்று. இதனோடு,

வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி
பண்பிற் றலைப்பிரிதல் இன்று

என்னும் குறளிற்கு ஆசிரியர் பரிமேலழகர் வகுத்த விளக்கவுரையில் தொன்று தொட்டு வருதல் சேர சோழ பாண்டியர் என்றாற் போலப் படைப்புக்காலந் தொடங்கி மேம்பட்டு வருதல் என்பதனைக் ஒப்பு நோக்கி இரண்டற்குமுள்ள உறவுணர்ந்து மகிழ்க.

இனி இவ்வுலகங்களை பற்றிய விரிவான விளக்கம் சக்கரவாளக் கோட்ட முரைத்தகாதையில் தரப்படும். அவற்றைக் ஆண்டுக் கண்டு கொள்க.

இப் பெருங்காப்பியத்தின் உள்ளுறுப்புக்கள்

32-44: இருபால் ………………. உய்த்ததும்

இதன் பொருள் : இருபால பெயரிய உருகெழு மூதூர்- இவ்வாற்றால் சம்பாபதி என்றும் காவிரிப்பூம்பட்டினம் என்றும் இருவகையான பெயர்களைக் கொண்டு பகைவர்க்கு அச்சத்தைத் தரும் பழைய ஊராகிய அந்த நகரத்தே; ஒரு நூறு வேள்வி உரவோன் தனக்கு பெருவிழா அறைந்ததும்-ஒப்பற்ற நூறு வேள்விகளைச் செய்து முடித்தமையாலே அமரருக்கு அரசனாம் பேறு பெற்ற ஆற்றலுடைய இந்திரனுக்குப் பெரிய விழா வெடுத்தற் பொருட்டு மன்னவன் பணிமேற் கொண்டு தொல்குடி வள்ளுவன் முரசறைந்த தூஉம்; அலர் பெருகியது என சிதைந்த நெஞ்சின் சித்திராபதிதான் வயந்த மாலையான் மாதவிக்கு உரைத்ததும் -மாதவி துறவு பூண்டமையால் தங்குடிக்குப் பழி பெரியதாயிற்றென்று கருதியதனாற் கலங்கிய நெஞ்சதையுடைய சித்திராபதி வயந்தமாலை என்னும் கூனியை ஏவி அப்பழியை மாதவிக்கு அறிவுறுத்திய தூஉம்; மணிமேகலை தான் மாமலர் கொய்ய அணிமலர்  பூம்பொழில் அகவயின் சென்றதும் மாதவியால் துறவிற் புகுத்தப்பட்ட மணிமேகலை புத்தருக்கு அணிவித்தற்குச் சிறந்த புதுமலர் கொய்துவரும் பொருட்டு அழகிய மலர்வனத்தினுள்ளே சென்று புகுந்ததூஉம்; ஆங்கு அப் பூம்பொழில் அரசிளங் குமரனைப் பாங்கிற் கண்டு அவள் பளிக்கறை புக்கதும் – அப்பொழுது அம் மலர்வனத்தினூடே மன்னிளங்குமரனாகிய உதயகுமரன் தன் பக்கலிலே வருதலை அவன் தேர் ஒலியாற் கண்டு அம் மணிமேகலை அங்கிருந்த பளிக்கறையினுட் புகுந்து கொண்டதூஉம்; பளிக்கரை புக்க பாவையைக் கண்டவன் – பளிக்கறையின்கட் புகுந்திருந்த மணிமேகலையைப் பளிங்கிணூடே கண்ட அம் மன்னிளங்குமரன்; துளக்குறுநெஞ்சில் துயரொடு போய பின் – காமத்தாலே கலங்கிய நெஞ்சில் நிறைந்த துன்பத்தோடே அம் மலர்வனத்தைவிட்டுச் சென்ற பின்னர்; மணிமேகலா தெய்வம் வந்து தோன்றியதும்-மணிமேகலா தெய்வம் அங்கு மக்களுருக் கொண்டு வந்து தோன்றிய தூஉம்; மணிமேகலையை மணி பல்லவத்து உய்த்ததும்-அத்தெய்வம் மணிமேகலையை உறங்கும்பொழுது எடுத்துப் போய் மணி பல்லவம் என்னும் சிறியதொரு தீவின்கண் வைத்ததும் என்க;

(விளக்கம்) இருபாற் பெயரிய: சம்பாபதி, காவிரிப்பூம்பட்டினம் என்னும் இரண்டு பெயர்களையுடைய.நூறு பெருவேள்வி செய்து முடித்தவனே இந்திரனாம் தகுதிபெறுவான் ஆதலின் அவ் வரலாறு தோன்ற வாளாது இந்திரன் என்னாது ஒருநூறு வேள்வி உரவோன் என்றார். இந்திரவிழா ஆண்டுதோறும் சித்திரா பருவத்திலே தொடங்கி இருபத்தெட்டு நாள் நிகழ்த்தப்பட்டுக் கடலாட்டோடு நிறைவுறும் ஒருமாபெருந்திருவிழா ஆகலின் பெருவிழா என்றார். அலர்- பழி.அஃதாவது வேத்தியல்…….உரைநூற் கிடக்கையும் கற்றுத் துறைபோகிய ஒரு நாடகக்கணிகை நற்றவம் புரிந்தது நாணுடைத்து என மாக்கள் தூற்றும் பழிச்சொல். சித்திராபதி-மாதவியின் தாய். வயந்தமாலை-மாதவியின் பணிமகள். மணிமேகலை – கோவலனுக்கும் மாதவிக்கும் தோன்றியவள். இக் காப்பியத்தலைவியுமாவாள்.அரசிளங்குமரன் – உதயகுமரன். பளிங்கு அறை – வேற்றுமைப் புணர்ச்சியால் மென்றொடர் வன்றொடராயிற்று. பளிங்கினாலியன்ற அறை என்க. பாவை: மணிமேகலை. மணிமேகலா தெய்வம் – இந்திரன் பணிமேற்கொண்டு மணிபல்லவம் முதலிய சில தீவுகளைக் காக்குமொரு தெய்வம்; கோவலனுடைய குலத்தெய்வமுமாம். இத் தெய்வம் தன் முன்னோன் ஒருவனைக் கடலில் மூழ்கி இறைவாவண்ணம் செய்த உதவியைக் கருதி அத் தெய்வத்தின் நினைவுக்குறியாகவே தன் மகட்குக் கோவலன் மணிமேகலை என்னும் பெயரும் சூட்டினான்.

இதுவுமது

45-50 : உவவன…………..உணர்ந்ததும்

(இதன் பொருள்) உவவனம் மருங்கின் அவ் உரை சால் தெய்வதம் சுதமதி தன்னைத் துயில் எடுப்பியதூஉம்- அம் மலர்வனத்தின் பக்கத்திலே அப் புகழ் மிக்க மணிமேகலா தெய்வம் மீண்டும் வந்து ஆங்குத் தூங்கு துயிலெய்திக் கிடந்த சுதமதி என்பவளைத் துயிலுணர்த்தியதும்; ஆங்கு அத் தீவகத்து ஆயிழை நல்லாள் தான் துயில் உணர்ந்து தனித்துயர் உழந்ததும் – மணிமேகலா தெய்வம் மணிமேகலையைத் துயில் கலையாவண்ணம் எடுத்துப் போய்த் துயிலக்கிடத்தி வந்த அவ்விடத்தே (அஃதாவது-அம் மணிபல்லவத் தீவின் கண்ணே) அழகிய அணிகலன் அணிதற்கியன்ற பெண்ணின் நல்லாளாகிய மணிமேகலை வழி நாட் காலையிலே தானே துயிலுணர்ந்து தனக்கு நேர்ந்த தென்னென்றறியாமையாலே மாபெருந் துன்பத்தாலே வருந்தியதும் உழந்தோள் ஆங்கண் பான்மையின் ஓர் ஒளி மணி பீடிகை பழம் பிறப்பு எல்லாம் உணர்ந்ததும் – அவ்வாறு துன்ப மெய்திய அம் மணிமேகலை ஏதுநிகழ்ச்சி எதிர்ந்துள்ளமையால் அவ்விடத்தேயிருந்த ஓர் ஒளியுடைய மணிகளாலியன்ற புத்த பீடிகையைக் கண்டு தொழுதமையால் தன் பழம் பிறப்பும் அதன் கண் நிகழ்ந்த நிகழ்ச்சிகளுமாகிய அரிய செய்திகள் பலவற்றையும் தானே உணர்ந்து கொண்டதும் என்க.

(விளக்கம்) உவவனம் -மக்களால் உண்டாக்கப்பட்ட பூம்பொழில். உரை – புகழ். சுதமதி – மாதவியின் தோழியும் மணிமேகலைக்குறுதுணையாய்ச் சென்றவளும் ஆகிய ஒரு பார்ப்பனப் பெண் துறவி (பிக்குணி).துயிலெடுப்பியது-துயிலினின்றும் எழுப்பியது. அத்தீவகம் – முன் கூறப்பட்ட மணிபல்லவம். உழந்தோள் : பெயர்.பீடிகை – புத்தபீடிகை.பான்மையின் -ஏது நிகழ்ச்சி எதிர்ந்தமையின்; ஊழ்வினை நிகழ்ச்சியை ஏது நிகழ்ச்சி என்பது பௌத்தருடைய வழக்கு.

இதுவுமது

51-58: உணர்ந்தோள்………உரைத்ததும்

(இதன் பொருள்) உணர்ந்தோள முன்னர் உயர்தெய்வம் தோன்றி மனம் கவல் ஒழிக என மந்திரம் கொடுத்ததும் – பழம் பிறப்புணர்ந்த அம் மணிமேகலையின் முன்னர்ச் உயரிய பண்புடைய மணிமேகலா தெய்வம் தானே எளிவந்து தோன்றி மகளே! நின்நெஞ்சத்துத் துன்பங்களை யெல்லாம் ஒழித்திடுக என ஆறுதல் கூறி, அரிய மூன்று மறை மொழிகளை அறிவுறுத்ததும்; தீப திலகை செவ்வனம் தோன்றி மாபெரும் பாத்திரம் மடக் கொடிக்கு அளித்ததும் – தீவ திலகை என்னும் மற்றொரு தெய்வம் மணிமேகலை முனனர்த் தோன்றிச் செவ்விதாக மிகப் பெரிய சிறப்பு வாய்ந்த அமுதசுரபி என்னும் பிச்சைப் பாத்திரம் ஒன்றனை இளங்கொடி போல்வளாகிய அம் மணிமேகலைக்கு வழங்கியதும் பாத்திரம் பெற்ற பைந்தொடி தாயரொடு யாப்புறும் மாதவத்து அறவணர்த் தொழுததும் – அமுதசுரபியைப் பெற்று மறைமொழியினுதவியாலே அம் மணிமேகலை வான் வழியாகப் பறந்துவந்து புகார் நகரம் எய்தித் தன் தாயராகிய மாதவியோடும் சுதமதியோடும் கூடிக் கட்டமைந்த பெரிய தவவொழுக்கத்தையுடைய அறவணவடிகளைக் கண்டு வணங்கியதும்; நறுமலர்க் கோதைக்கு – நறிய மலர் மாலையணியத் தகுந்த இளமையுடைய மணிமேகலைக்கு; அறவணவடிகள் ஆபுத்திரன் திறம் நன்கனம் உரைத்ததும் – அறவணவடிகளார் அமுதசுபிக்குரியவனான ஆபுத்திரன் என்பானுடைய வரலாறும் பண்புமாகிய செய்திகளை யெல்லாம் விளக்கமாக விளம்பியதும் என்க.

(விளக்கம்) உணர்ந்தோள் :பெயர்; மணிமேகலை. தீய தெய்வமும் உளவாகலின் அவற்றினீக்குதற்கு உயர் தெய்வம் என்றார்; அஃதாவது – மணிமேகலா தெய்வம். கவல் – துன்பம். மந்திரம் – மறைமொழி. மணிமேகலா தெய்வம் மணிமேகலைக்கு வேற்றுரு வெய்தவும்; வானத்தே இயங்கவும் பசிபிணியின்றி இருத்தற்கும் வேண்டிய ஆற்றல் தரும் மூன்று அரிய மந்திரங்களை செவியறிவுறுத்தது; இவற்றை ஈந்தமையால் இனி நீ மணங்கவல வேண்டா என்று ஆறுதலும் கூறிற்று என்க. செவ்வனம்-செம்மையாக. திருவுருவங்கொண்டு தோன்றி என்க. வேண்டுவார் வேண்டும் உண்டியை வேண்டுமளவும் சுரந்தளிக்கும் மிகக் பெரிய சிறப்புடைய பாத்திரம் என்றவாறு பெருமை ஈண்டு அதன் அளவின் மேல் நில்லாது சிறப்பின் மேனின்றது. மடக்கொடி என்றது அவளது இளமையை விதந்தபடியாம். பைந்தொடி : மணிமேகலை. சுதமதி மணிமேகலையின் பால் தாய்மை யன்புடையாளாதல் பற்றி அவளையும் உளப்படுத்துத் தாயர் எனப் பன்மைச் சொல்லாற் கூறினர். பிறாண்டும் இங்கனமே கூறுதல் காணலாம். யாப்புறுமாதவம் – பொறிபுலன்களைக் கட்டியொழுகும் பெரிய தவம். ஆபுத்திரன்- இக் காப்பிய வுறுப்பினுள் சிறந்தோர் உறுப்பாக அமைத்தவன்; அமுதசுரபியைத் தெய்வத்திடம் முதன்முதலாகப் பெற்றவன்; தமக்கென வாழாது பிறர்க்கென வாழ்ந்த பெருந்தகை; ஆவால் பாலூட்டி வளர்க்கப்பட்டவன். நன்கனம் -நன்கு; நன்றாக.

இதுவுமது

59-68 : அங்கை ………..சென்றதும்

(இதன் பொருள்) அங்கைப் பாத்திரம் ஆபுத்திரன்பால் சிந்தா தேவி கொடுத்த வண்ணமும் – தன் அகங்கையி லேந்திய அமுதசுரபி என்னும் பிச்சை பாத்திரத்தை ஆபுத்திரனுடைய அருளுடைமை கண்டிரங்கிய கலைமகளாகிய சிந்தாதேவி என்னும் தெய்வம் அவன்பால் கொடுத்த திறமும்; மற்று அப்பாத்திரம் மடக்கொடி ஏந்திப் பிச்சைக்கு அவ்வூர்ப் பெருந்தெரு அடைந்ததும் -மேலும் அவ்வமுத சுரபியை மணிமேகலை அங்கையிலிலேந்தி முதன்முதலாக அதன்கண் பிச்சை ஏற்கும் பொருட்டு அகன்ற புகார் நகரத்துத் தெருவிலே எய்தியதும்; பிச்சை ஏற்ற பெய்வளை கடிஞையின் பத்தினிப் பெண்டிர் பாத்தூண் ஈத்ததும் -அவ்வாறு பிச்சைபுக்க மணிமேகலை ஏந்திய அம்மாபெரும் பாத்திரத்தின்கண் முதன் முதலாகச் சிறந்த கற்புடைய மகளாகிய ஆதிரை நல்லாள் பலரும் பகுத்துண்டற் கியன்ற உணவினைப் பிச்சையாகப் பெய்ததும்; காரிகை நல்லாள் காயசண்டிகை வயிற்று ஆனைத்தீக் கெடுத்து அம்பலம் அடைந்ததும் – அழகுமிக்க மணிமேகலை அமுத சுரபியில் ஏற்ற பிச்சை யுணவினை ஊட்டிக் காயசண்டிகை என்பவளை நீண்ட காலமாகப் பற்றி வருத்திய ஆனைத்தீ என்னும் வயிற்று நோயை தீர்த்துப் பின்னர் உலகவறவி என்னும் அம்பலத்தை எய்தியதும்; ஆயிழை அம்பலம் அடைந்தாள் என்று கொங்கு அலர் நறுந்தார்க் கோமகன் சென்றதும் – மணிமேகலை உலக வறவி என்னும் அம்பலம் எய்திய செய்தி கேட்டுத்தேனோடு மலர்ந்த நறிய ஆத்திமாலை சூடிய சோழமன்னன் மகனாகிய உதயகுமரன் அவளைத் கைப்பற்றும் கருத்தோடு அவ்வம்பலத்திற்குச் சென்றதும்; என்க 

(விளக்கம்) அங்கை – அகங்கை; உள்ளங்கை. அகம் என்னும் நிலைமொழி ஈற்றுயிர்மெய்கெட்டது சிந்தாதேவி – தலைமகள். நகரமாதலின் பெருந்தெரு என்றார். பத்தினிப் பெண்டிர் என்றது ஆதிரையை; பத்தினி ஆகலின் ஒருவரைக் கூறும் உயிர்மொழியாகக் கருதிப் பன்மைக்கிளவியால் கூறினர். பன்னையொருமை மயக்கம் எனினுமாம். பாத்தூண் – பகுத்துண்ணும் உணவு. காரிகை – அழகு அம்பலம் – உலக அறவி என்னும் பெயருடையதாய்ப் புகார் நகரத்திருந்ததொரு பொதுவிடம். ஆங்கு இரவலர் வந்து குழுமுவர் ஆதலின் அவர்க்கூட்டும் பொருட்டு அங்கு மணிமேகலை எய்தினன் என்பது கருத்து. அயிழை: மணிமேகலை அவள் உலகவறவி புகுந்தாள் என்று கேள்வியுற்று அரசிளங்குமரன் அவளைக் கைப்பற்றி வருங் கருத்துடன் அம்பலம் அடைந்தான் என்பது கருத்து.

இதுவமது

69-78: அம்பலம்………… வண்ணமும்

(இதன் பொருள்.) அம்பலம் அடைந்த அரசிளங்குமரன் முன் வஞ்ச விஞ்சையன் மகள் வடிவாகி – தன்னைப் பெரிதும் கரமுற்று அவ்வம்பலம் புக்க அக் கோமகன் முன் அவன் தன்னைக் அறியா வண்ணம் வஞ்சித்துப் போகும் பொருட்டு விச்சாதரன் மனைவியாகிய காயசண்டிகையின் உருவத்தை மேற்கொண்டு அவனைப் போக்கியபின் அவ் வுருவத்தோடு அந்நகரத்துச் சிறைக் கோட்டம் புகுந்து ஆங்குப் பசியால் வருந்துவோர் துயர் களையு மாற்றால்; மறஞ்செய் வேலோன் வான் சிறைக் கோட்டம் அறக்கோட்டம் ஆக்கிய வண்ணமும் – வீரப்போர் செய்யும் வேலேந்திய சோழ மன்னனுடைய உயர்ந்த சிறைக் கோட்டத்தையே அறக் கோட்டமாக மாற்றிய செய்கையும்; விஞ்சைக் காஞ்சனன் காய சண்டிகை என – மணிமேகலை காயசண்டிகை யுருவத்தோடு அம்பலத்திலே வந்த அரசிளங்குமரனோடு சொல்லாட்டம் நிகழத்தியபொழுது அவளைக் காணவந்தவனாகிய விச்சாதரன் அவளைத் தன் மனைவியாகிய காய சண்டிகை என்றே கருதி அவள் ஒழுக்கத்தை ஐயுற்று அவ்வையந் தீர்க்குக் கரந்துறைபவன்: ஆயிலை தன்னை அகலாது அணுகலும் -அரசன் மகன் மணிமேகலையை காணும் வேட்கையால் அறங்கேட்டும் அகலாதவனாய் மீண்டும் அங்கு வந்தமையால்: வஞ்ச விஞ்சையன் மன்னவன் சிறுவனைக் மைந்துடை வாளில் தப்பிய வண்ணமும் – வஞ்சத்தாலே கரந்திருந்த அவ்விச்சாதரன் மனைவன் மகனாகிய உதயகுமரனை வலிமை மிக்க வாளால் எறிந்து போனதும்; மை அரி யுண்கண் அவன் துயர் பொறாஅள் தெய்வக் கிளவியில் தெளிந்த வண்ணமும் – கரிய நிறமும் செவ்வரியும் உடையவாய்க் கண்டோர் நெஞ்சத்தைப் பருகும் பேரெழில் படைத்த கண்ணையுடைய மணிமேகலை அரசன் மகன் இறந்தமையா லெய்திய துன்பத்தைப் பெறாமல் வழிந்திப் பின்னர்க் கந்திற் பாவையாகிய தெய்வம் வருவதுரைத்துத் தேற்றத் தெளிந்த தன்மையும்; என்க.

(விளக்கம்) வஞ்சத்தாலே விஞ்சையான் மகள் வடிவாகி என்க. விஞ்சையன் – விச்சாதரன். மகள் – மனைவி. மனைவியை மகள் என்னும் வழக்கு இந்நூல் பிறாண்டும் காணப்படும். கதைத்தொடர்பு நன்கு விளங்குதற் பொருட்டு ஈண்டைக்கு வேண்டுவன சில சொற்கள் தந்துரைக்கப்பட்டன. இவ்வாறு தந்துரைப்பன இசையெச்சத்தாற் கொள்ளப்படுவன. யாண்டும் இதனைக் அறிந்து கடைப்பிடிக்க. வேளோன் : சோழமன்னன் மக்களைச் சிறைசெய்தலும் வேந்தற்கு வடுவன்று அவனுக்கியன்ற கடமை என்பார் மறஞ்செய் வேலோன் என மன்னனை விதந்தார். கோட்டம் இரண்டும் ஈண்டுக் கட்டிடம் என்னுந் துணையாம். வாளில் தப்புதல் – வாளாலெறிந்து கொல்லுதல். மை அரி உண் கண் என்னும் பன்மொழித் தொடர் மணிமேகலை என்னும் துணையாய் நின்றது. அவன் என்றதும் உதயக்குமரனை. மணிமேகலை பற்பல பழம் பிறப்புக்களிலே அவன் மனைவியாகி அவனோடு வாழ்ந்தவளாதலின் பழம் பிறப்பணபுணர்ச்கியுடைய மணிமேகலை அவன் இறந்தமை பொறாது வருந்தனள் என்பது கருத்து. தெய்வம் – கந்திற் பாவையினிற்குந் தெய்வம். கிளவி – சொல்.

இதுவுமது

79-88: அறைகழல்…….. கேட்டதும்

(இதன் பொருள்) அறை கழல் வேந்தன் ஆயிழை தன்னைச் சிறை செய் கென்றதும் – ஆரவாரிக்கும் வீரக்கழலணிந்த சோழ மன்னன் மணிமேகலையைச் சிறையிடச் செய்ததும்; சிறைவீடு செய்ததும் – பின்னர்ச் சிறைவீடு செய்வித்ததும்; ஆய்வளை நறுமலர்க் கோதைக்கு நல் அறம் உரைத்து ஆங்கு ஆபுத்திரன் நாடு அடைந்ததும் – சிறை வீடு பெற்ற மணிமேகலை நறிய மலர் மாலையணிந்த கோப்பெருந் தேவிக்கு நல்லனவாகிய அறங்கள் பல வற்றையும் அறிவுறுத்து அப்பால் ஆபுத்திரன் மறுமையில் மன்னவனாகி அருளாட்சி செய்கின்ற சாவக நாட்டிற்குச் சென்றதும் அணியிழை ஆங்கு அவன் தன்னோடு போகி ஓங்கிய மணி பல்லவத்திடை உற்றதும் – மணிமேகலை அந் நாட்டரசனாகிய ஆபுத்திரனோடு சென்று உயர்ந்த மணி பல்லவத் தீவினகட் புகுந்ததும்; உற்றவள் ஆங்கு ஓர் உயர் தவன் வடிவாய்ப் பொற்கொடி வஞ்சியின் பொருந்திய வண்ணமும் – மணி பல்லவத்தை எய்திய மணிமேகலை அவ்வாசனை அவனாட்டிற்குப் போக்கி அப்பால் அத் தீவினின்றும் ஓர் உயரிய தவவொழுக்க முடைய துறவோன் வடிவத்தை மேற்கொண்டு அழகிய கொடியுயர்த்தப் பட்ட வஞ்சிமா நகரத்தே வந்துற்ற செய்தியும்; நவை அறுநன் பொருள் உரைமினோ எனச் சமயக் கணக்கர் தம் திறம் கேட்டதும் அவ் வஞ்சிமா நகரத்திலே அம்மாதவன் வடிவத்தோடே சென்று, பிறப்புப்பிணி அறுதற் கியன்ற நன்மை தருகின்ற நுமது தத்து வங்களைக் கூறுங்கோள்! என்று பல்வேறு சமயத் தலைவர்களையும் தனித்தனியே கண்டு வினவி, அவ்வவர் சமயங்கட்கியன்ற தத்துவங்களை யெல்லாம் கேட்டறிந்ததும் என்க.

(விளக்கம்) அறை கழல்: வினைத்தொகை. சிறைவீடு. சிறைக்கோட்டத்தினின்றும் விடுதலை செய்தல். நறுமலர்க் கோதை: கோப் பெருந்தேவி. ஆய்வளை: மணிமேகலை. அவன் நாடு – ஆபுத்திரன் மறுபிறப்பில் அரசனாகி ஆட்சி செய்கின்ற நாடு. அஃதாவது சாவகநாடு. பொற்கொடி வஞ்சி – அழகிய கொடியுயர்த்திய வஞ்சிநகரம் என்க. வெளிபடை. நவை – பிறவிப்பணி. நன்பொருள் – தத்துவம். சமயக் கணக்கர் – சமய முதல்வர்.

இதுவுமது

89-98: ஆங்க ……வைத்தான்

(இதன் பொருள்) ஆங்கு அத்தாயரோடு அறவணர்த் தேர்ந்து – அவ் விடத்திலே தன் தாயராகிய மாதவியையும் சுதமதியையும் நல்லாசிரியராகிய அறவணடிகளாரையும் கண்டு அடிவணங்க விரும்பியும்; பூங்கொடிகச்சி மாநகர் புக்கதும் – மணிமேகலை ஆங்குத் துறவியாயிருந்த மாசாத்துவான் வேண்டுகோட் கிணங்கியும் வானத்தே இயங்கிக் காஞ்சிமா நகரத்தே சென்று புகுந்ததும்; புக்கவன் கொண்ட பொய்யுருக் களைந்து – காஞ்சியிற் புகுத்தவள் தான் மேற்கொண்டிருந்த மாதவன் வடிவத்தைத் துறந்து; மற்று அவர் பாதம் வணங்கிய வண்ணமும் – தான் காணவிரும்பிய தாயாரும் அடிகளாரும் தன்னைத்தேடி வந்தவரைக் கண்டு மகிழ்ந்து அவரடிகளிலே வீழ்ந்து வணங்கிய வண்ணமும்; தவத்திறம் பூண்டு தருமம் கேட்டு – தவக்கோலம் பூண்டு அறவணவடிகளார்பால் பௌத்த தருமங்களைக் கேட்டுணர்ந்தும்; பாவை பவத்திறம் அறுகென நோற்றதும்; மணிமேகலை தருமங் கேட்ட பின்னர்ப் பிறப்பிற்குக் காரணமாக பழவினைத் தொகுத்து துவரங் கெடுவதாக என்னும் குறிக்கோளோடு பொருளகளின்பால் பற்றறுதற்குரிய நெறியில் அதற்கியன்ற நோன்புகளைக் கடைபிடித் தொழுகியதும் ஆகிய இவற்றை யெல்லாம்; இளங்கோ வேந்தன் அருளிக் கேட்ப – இளங்கோ வடிகளார் என்னும் சேரமுனிவன் தலைமை வீற்றிருந்தருளி விரும்பிக் கேளாநிற்ப; வளம்கெழு கூல வாணிகன் சாத்தன் – வளம் பொருந்திய மதுரைக் கூல வாணிகனாகிய தண்டமிழ்ப் புலவன்; ஆறு ஐம் பாட்டினுள் -முப்பது காதைகளிலே அரங்கேற்றி; மணிமேகலை துறவு மாவண் தமிழ்த் திறம் அறிய வைத்தனன்.- மணிமேகலை துறவு என்னும் இத் தொடர்நிலைச்செய்யுளா லியன்ற மணிமேகலை துறவு என்னும் பெயரையுடைய இவ் வனப்பியல் நூல் வாயிலாக எழுத்து வளமும் சொல்வளமும் பொருள்வளமும் ஆகிய வளம் பலவும் பெற்றுச் சிறந்துள்ளமையாலே பெருவளமுடைய மொழியாக விளங்குகின்ற நந்தமிழ் மொழியானது சிறப்பினை உலகுள்ள துணையும் மக்கள் அறியும்படி மாபெருங் காப்பியமாக இயற்றி நிறுவினன் என்பதாம்.

(விளக்கம்) பொய்யுரு -வேற்றுருவம். இளங்கோ வேந்தன் என்றது இளங்கோவடிகளாரை. இளங்கோ என்ற பின்னரும் வேந்தன் என்று வேண்டாது கூறியது, அவர் தாமும் சிந்தை செல்லாச் சேணெடுந் தூரத்து அந்தம் இல் அரசாள் வேந்தாக இருத்தலைக் கருதிக் காணுமாறு தாம் வேண்டிய தொன்றனை முடித்தற் பொருட்டென்க. கண்ணகித் தெய்வமே அவரை இளங்கோ வேந்தனாகவே கண்டு பாராட்டியதனை(சிலப், வர – 180 -3 சிலப்பதிகாரத்தில் காண்க.

மணிமேகலை துறவு என்பதே இக் காப்பியத்திற்கு ஆசிரியரிட்ட பெயர் என்பதனை இப் பதிகத்தால் அறியலாம். இவ்வாறே நீலகேசித் தெருட்டு என அதன் ஆசிரியர் இட்ட பெயர் இறுதிச்சொல் மறைந்து நீலகேசி என்று வழங்கிவருவதும் நினைக.

கூலவாணிகன் சாத்தனார் கொள்கை பௌத்த தருமத்தை மக்கள் அறியவைத்தலே யாகும். ஆயினும் அவருடைய கருத்து நிறைவேறிற்றில்லை. மற்று மணிமேகலையால் எய்திய பயன், மானண் தமிழ்த் திறமே யாய் முடிந்தது. அத் தமிழ்த்திறம் பற்றியே இந்நூல் தமிழகத்தே தமிழ் மொழி நிற்கும் அளவும் நின்று நிலவும் ஆற்றில் பெற்றுத் திகழ்கின்றது என்பதில் ஏதும் ஐயமில்லை.

இப் பாயிரம்(பதிகம்) பிறராற் செய்யப்பட்டது. சாத்தன் என ஆசிரியரைப் படர்க்கையாகப் பேசுவதே இதற்குச் சான்று. இனி இப் பாயிரத்தில் ஆக்கியோன் பெயர் சாத்தன் என்பதனாலும் வண்டமிழ்த்திறம் என்றதனால் அதற்கியன்ற எல்லையே இதற்கும் எல்லை என்பதும் போந்தன. முதனூலாகலின் வழிகூற வேண்டாவாயிற்று. மணிமேகலை துறவு என்பதும் நூற்பெயர். காலம் களம் காரணம் என்னும் பாயிரவுறுப் புக்கள் பலவும் அமைந்துள்ளமையும் அறிக.

பதிகம் முற்றிற்று.

  1. விழாவறை காதை

முதலாவது விழாவறைந்த பாட்டு

அஃதாவது: பூம்புகார் நகரத்து வாழ்கின்ற சமயக் கணக்கர் முதலிய பெரியோர் ஒருங்கு கூடி அந் நகரத்திலே வாண்டு தோறும் நிகழ்த்தப்பட்டு வருகின்ற இந்திர விழா என்னும் பெருவிழா எடுத்தற்குரிய சித்திரைத் திங்களின் முழுமதி நாள் அணுகி வருதலானே அவ் விழாவிற்குக் கால் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்து அதனை நகரமக்கட்கு அறிவிக்கும் படி வழக்கம் போல விழா முரசம்  அறையும் முதுகுடிப் பிறந்த வள்ளுவனுக்கு அறிவிப்பு, அது கேட்ட வள்ளுவன்றாணும் வச்சிரக் கோட்டத்தில் வைக்கப்பட்டிருக்கின்ற மணங்கெழு முரசத்தைக் கச்சையானைப் பிடர்த்தலை ஏற்றித் தானும் ஏறியிருந்து அவ் விழா நிகழப் போவதனையும் அதற்குக் கால் கோள் செய்யும் நாளையும் விழாவின் பொருட்டு நகரத் தெருக்கள் தோறும் முரசறைந்த செய்தியைக் கூறும் பாட்டு என்றவாறு. இக் காதையினால் இற்றைக் கிர்கடாயிரம் ஆண்டுகட்கு முன்னர்த் தமிழகத்து மாந்தர் விழா நிகழ்த்தும் முறையும், அவர் ஒப்பற்ற நாகரிகமும் இனிது விளங்கும்.

உலகம் திரியா ஓங்கு உயர் விழுச் சீர்ப்
பலர் புகழ் மூதூர்ப் பண்பு மேம்படீஇய
ஓங்கு உயர் மலயத்து அருந் தவன் உரைப்ப
தூங்கு எயில் எறிந்த தொடித் தோள் செம்பியன்
விண்ணவர் தலைவனை வணங்கி முன் நின்று
மண்ணகத்து என்தன் வான் பதி தன்னுள்
மேலோர் விழைய விழாக் கோள் எடுத்த
நால் ஏழ் நாளினும் நன்கு இனிது உறைக என
அமரர் தலைவன் ஆங்கு அது நேர்ந்தது
கவராக் கேள்வியோர் கடவார் ஆகலின்  01-010

மெய்த் திறம் வழக்கு நன்பொருள் வீடு எனும்
இத் திறம் தம் தம் இயல்பினின் காட்டும்
சமயக் கணக்கரும் தம் துறை போகிய
அமயக் கணக்கரும் அகலார் ஆகி
கரந்து உரு எய்திய கடவுளாளரும்
பரந்து ஒருங்கு ஈண்டிய பாடை மாக்களும்
ஐம் பெருங்குழுவும் எண் பேர் ஆயமும்
வந்து ஒருங்கு குழீஇ வான்பதி தன்னுள்
கொடித் தேர்த் தானைக் கொற்றவன் துயரம்
விடுத்த பூதம் விழாக்கோள் மறப்பின்  01-020

மடித்த செவ் வாய் வல் எயிறு இலங்க
இடிக் குரல் முழக்கத்து இடும்பை செய்திடும்
தொடுத்த பாசத்து தொல் பதி நரகரைப்
புடைத்து உணும் பூதமும் பொருந்தாதாயிடும்
மா இரு ஞாலத்து அரசு தலையீண்டும்
ஆயிரம்கண்ணோன் விழாக் கால்கொள்க என
வச்சிரக் கோட்டத்து மணம் கெழு முரசம்
கச்சை யானைப் பிடர்த்தலை ஏற்றி
ஏற்று உரி போர்த்த இடி உறு முழக்கின்
கூற்றுக்கண் விளிக்கும் குருதி வேட்கை  01-030

முரசு கடிப்பு இகூஉம் முதுகுடிப் பிறந்தோன்
திரு விழை மூதூர் வாழ்க! என்று ஏத்தி
வானம் மும் மாரி பொழிக! மன்னவன்
கோள் நிலை திரியாக் கோலோன் ஆகுக!
தீவகச் சாந்தி செய்தரு நல் நாள்
ஆயிரம்கண்ணோன் தன்னோடு ஆங்கு உள
நால் வேறு தேவரும் நலத்தகு சிறப்பில்
பால் வேறு தேவரும் இப் பதிப் படர்ந்து
மன்னன் கரிகால்வளவன் நீங்கிய நாள்
இந் நகர் போல்வதோர் இயல்பினது ஆகிப்  01-040

பொன்நகர் வறிதாப் போதுவர் என்பது
தொல் நிலை உணர்ந்தோர் துணிபொருள் ஆதலின்
தோரண வீதியும் தோம் அறு கோட்டியும்
பூரண கும்பமும் பொலம் பாலிகைகளும்
பாவை விளக்கும் பல உடன் பரப்புமின்
காய்க் குலைக் கமுகும் வாழையும் வஞ்சியும்
பூக் கொடி வல்லியும் கரும்பும் நடுமின்
பத்தி வேதிகைப் பசும் பொன் தூணத்து
முத்துத் தாமம் முறையொடு நாற்றுமின்
விழவு மலி மூதூர் வீதியும் மன்றமும்  01-050

பழ மணல் மாற்றுமின் புது மணல் பரப்புமின்
கதலிகைக் கொடியும் காழ் ஊன்று விலோதமும்
மதலை மாடமும் வாயிலும் சேர்த்துமின்
நுதல் விழி நாட்டத்து இறையோன் முதலா
பதி வாழ் சதுக்கத்துத் தெய்வம் ஈறு ஆக
வேறுவேறு சிறப்பின் வேறுவேறு செய்வினை
ஆறு அறி மரபின் அறிந்தோர் செய்யுமின்
தண் மணல் பந்தரும் தாழ்தரு பொதியிலும்
புண்ணிய நல்லுரை அறிவீர்! பொருந்துமின்
ஒட்டிய சமயத்து உறு பொருள் வாதிகள்  01-060

பட்டி மண்டபத்து பாங்கு அறிந்து ஏறுமின்
பற்றாமாக்கள் தம்முடன் ஆயினும்
செற்றமும் கலாமும் செய்யாது அகலுமின்
வெண் மணல் குன்றமும் விரி பூஞ் சோலையும்
தண் மணல் துருத்தியும் தாழ் பூந் துறைகளும்
தேவரும் மக்களும் ஒத்து உடன் திரிதரும்
நால் ஏழ் நாளினும் நன்கு அறிந்தீர் என
ஒளிறு வாள் மறவரும் தேரும் மாவும்
களிறும் சூழ்தர கண் முரசு இயம்பி
பசியும் பிணியும் பகையும் நீங்கி
வசியும் வளனும் சுரக்க! என வாழ்த்தி
அணி விழா அறைந்தனன் அகநகர் மருங்கு என்  01-072

இந்திர விழாவின் வரலாறு

1-10: உலகம்……….ஆகலில்

(இதன் பொருள்) உலகம் திரியா ஓங்கு உயிர் விழுச்சீர் பலர் புகழ் மூதூர் பண்பு மேம்படீஇய – சான்றோர் சென்ற நெறிநின்றொழுகுதலில் ஒரு பொழுதும் பிறழா தொழுகுதல் காரணமாகப் பெரிதும் உயர்ந்துள்ள தனது மாபெரும் சிறப்பினைப் பிறநாட்டிலுள்ள சான்றோர் பலரும் புகழாநிற்றற் கிடமான பழைய ஊராகிய புகார் நகரத்தின் தெய்வத் தன்மை காலந்தோறும் மேம்பட்டு வளர்தற் பொருட்டாக; ஓங்கு உயர் மலயத்து அருந்தவன் உரைப்ப – வானுற உயர்ந்து புகழானும் உயர்ந்த பொதிய மலையின்கண் இறைவன் ஏவலாலே எழுந்தருளியிருக்கும் செய்தற்கரிய தவங்களைச் செய்துயர்ந்த அகத்தியமுனிவன் பணிப்ப: தூங்கு எயில் எறிந்த தொடித்தோள் செம்பியன் – வானத்திலே இயங்குகின்ற மதில்களை அழித்த வீர வலைய மணிந்த சோழ மன்னன் ஒருவன்; விண்ணவர்தலைவனை வணங்கி முன்னின்று – தனக்கு நன்றிக் கடன்பட்டுள்ள அமரர்கோமனை வணங்கி அவன் முன்னிலையிலேயே நின்று; மண்ணகத்து என்றன் வான்பதி தன்னுள் – நிலவுலகத்திலமைந்த என்னுடைய தலை நகரத்தினுள்; மேலோர் விழைய விழாக்கோள் எடுத்த நால் ஏழ் நாளினும் நன்கு இனிது உறைக என – விண்ணவரும் கரந்துரு வெய்தி வந்து கரண்டற்கு விரும்புதற்குக் காரணமான பெரிய தொரு திருவிழாவை நினைக்கு யாங்கள் எடுத்தலை மேற்கொண்ட இருபத்தெட்டு நாளினும் நீ அந்நகரத்தே அவ்விழாவினை ஏற்றுக் கொண்டு உறுதியாக அங்கேயே இனிதாக வீற்றிருந்தருளல் வேண்டும் இது யான் நின்பால் பெற விரும்பும் வரம் என்று வேண்டா நிற்ப; அமரர் தலைவன் ஆங்கு அது நேர்ந்தது – தேவர் கோமனும் மறாஅது அவ்வாறே தந்த வரத்திற்கு; கவராக் கேள்வியோர் – ஐயுறாமைக்குக் காரணமான மெய்ந்நூற் கேள்வியினையுடைய சான்றோர்; கடவார் ஆதலின் – மாறுபட்டொழுகாராதலின் என்க.

(விளக்கம்) உலகம் என்றது சான்றோருடைய ஒழுக்கத்தை,ஓங்குயர் விழுச்சீர், என்று ஒருபொருட்பன்மொழி பலவற்றை அடைபுணர்த்தோதினர். புகார் நகரத்துப் புகழ் சாலவும் உயர்ந்த புகழ்; தனக்குத் தானே நிகரான புகழ் என்றுணர்த்தற்கு. அப் புகழ் அத்தகையதாதலை புறவிற்காகத் துலாம் புக்கதும் ஆன்கன்றிற்கு மகனை ஆழியின் மடித்ததும் தூங்கெயில் எறிந்து அமரரைப் புரந்ததும் ஆகிய இன்னோரன்ன அந்நாட்டு மன்னர் செயற்கரிய செயல்களாலறிக. நாகநீள் நகரொடும் போகநீள் புகழ்மன்னும் புகார் என இளங்கோவடிகளாரும் (மங்கல) பாராட்டுதலறிக. பலர் அயல் நாட்டுச் சான்றோர் பலரும் என்க என்னை புகழத்தகுந்தவர் அவரேயாகலான். பண்பு – தெய்வப்பண்பு. அருந்தவன் – அகத்தியன். அகத்தியன் சோழனுடைய மூதூர் மேம்படுதற் பொருட்டுச் செம்பியன்பால் நீ இவ்வரத்தைக் கேள் என்றுரைத்தமையாலே செம்பியன் இந்திரன்பால் நீ விழாக்கோள் எடுத்த நாலேழ் நாளினும் என் பதியில் நன்கினிதுறைதல் வேண்டும் என வரங் கேட்டான்; அவனும் செய்ந்நன்றிக் கடன்பட்டிருத்தலான் அவ் வரத்தை மறாது நேர்ந்தனன் என்றவாறு. வானத்தே இயங்கு மதிலினுள் இருந்து அரக்கர் வானவர் ஊரெல்லாம் புகுந்து அவர்க்குக் கேடு விளைத்தனர். அம் மதிலை ஒரு சோழன் அழித்து அமரரைப் பாதுகாத்தனன். இவ்வாற்றல் நன்றிக் கடன்பட்ட இந்திரன் நீ விரும்பும் வரங்கேள் என்ன அச்சோழன் அகத்தியர் அறிவுறுத்தபடி வரம்கேட்டனன். அவனும் நேர்ந்தனன் என்க.

இவ் வீரச் செயல்பற்றி அச்சோழமன்னன் தூங்கெயில் எறிந்த தொடித்தோள் செம்பியன் எனப்பட்டான்.

விண்ணவர் தலைவனை வணங்கி முன்னின்று மண்ணகத்து என்றன் வான்பதி என்று பாட்டிடைவைத்த குறிப்பினாலே வரங்கேட்டது வானவருலகத்திலே என்பதும் பெற்றாம். இச் சோழன் அசுரர் மதிலை அழித்து அமரரைக் காத்தமையால் அடுதல் அவர்க்கு ஒரு புகழாகாது என மாறோக்கத்து நப்பசலையார் நவில்வர்.

ஒன்னு ருட்கும் துன்னருங் கடுந்திறல்
தூங்கெயி லெறிந்த நின்னூங்க ணோர்நினைப்பின்
அடுதல் நின்புகழும் அன்றே

என்பது அந் நல்லிசைப்புலவர் மணிமொழி.

மேலோர் – அமரர்.

விழாக்குழுவினர்

11-18: மெய்த்திறம் …….குழீஇ

(இதன் பொருள்) மெய்த்திறம் வழக்கு நன்பொருள் வீடு என்னும் இத்திறம் தம் தம் இயல்பில் காட்டும் – மெய்ந்நூல் வழக்கும் உலகியல் வழக்கும் நன்மைதருகின்ற துணி பொருளும் வீடுபேறும் ஆகிய இவையிற்றைச் சொல்லான் மட்டும் அறிவுறுத்துதலே யன்றித் தம் தம் ஒழுக்கத்தானும் நன்கு தெரியக் காட்டும் சிறப்புடைய; சமயக் கணக்கரும் – பல்வேறு சமயக் குரவர்களும்; தம் துறை போகிய அமயக் கணக்கரும் தமக்குரிய கணிதத்துறையில் கற்று மிகுந்த புகழுடைய காலக் கணிவரும்; அகலாராகி கரந்துரு வெய்திய கடவுளாளரும் – தமக்குரிய விண்ணவர் பதியினும் இந்நகரம் சிறந்ததென்று கருதித் தம்முருவம் கரந்து மக்களுருவிற் றிரிகின்ற தேவர்களும்; பரந்து ஒருங்கு ஈண்டிய பாடை மாக்களும் – வணிகத் தொழிலின் பொருட்டு உலகத்துள்ள நாடெல்லாம் சென்று மீண்டு வந்து ஒருங்கு கூடியிருக்கின்ற பல்வேறு மொழி பேசுகின்ற வேற்று நாட்டு வணிகத்தலைவரும்; ஐம்பெருங் குழுவும் – அமைச்சர் முதலிய ஐம்பெருங்குழுவினுள்ளாரும்; எண் பேராயமும் – கரணத்தியலவர் முதலிய எண் பேராயத்தாரும் ஆகிய கோத் தொழிலாளரும்; வந்து ஒருங்கு குழீஇ -ஊரம்பலத்தே வந்து ஒருங்கே கூடியிருந்து என்க.

(விளக்கம்) மெய்திறம் – மெய்ந்நூல் வழக்கு; வழக்கு -உலகியல் வழக்கு; நன்பொருள் – தத்துவங்கள். வீடு – வீட்டினியல்பு. இத்திறம் தம்தம் இயல்பில் காட்டுதலாவது இவற்றின் வழி நின்று ஒழுக்கத்கதைத் தம்தம்மிடத்தேயே பிறர் அறிந்து கொள்ளுமாறு ஒழுகுமாற்றால் பிறரை அறியச்செய்யும் சிறப்புடையோராதல். எனவே சொல்லுதல் யார்க்கும் எளிதாதலால் இவர் தம்தம் சமயத்தைத் தமது ஒழுக்கத்தாலேயே அறிவுறுத்துபவர் என அவர் பெருமையை விதந்தோதிய படியாம்.

சோழநாடு நீர் நாடாகலின் மருதத்திணைத் தெய்வத்தின் பெயரால் பெருவிழா எடுப்பதாயிற்று; ஆயினும் இவ்விழா நிகழும் போது அந்நகரத்தமைந்த பல்வேறு சமயஞ்சார்ந்த கடவுளர்க்கும் அவ்வவ் முறைப்படியே விழா நிகழ்த்தும் வழக்கம் உண்மையின் விழா வெடுத்தற்குப் பல்வேறு சமயக் கணக்கர்களும் வந்து குழுமினர் என்றுணர்க. இதனால் அக்காலத்தே சமயப் பூசலில்லாமை நன்குணரப்படும். இரப்போரும் ஈவாரும் இல்லாமையால் தமக்குரிய விண்ணுலக வாழ்க்கையை வெறுத்துக் கடவுளாளரும் பூம்புகாரில் கரந்துருவெய்தி மக்களூடே மக்களாய் வாழ்த்தினர் என்க. அவர்க்கே விழா வெடுக்கப் போவதால் அவரும் அக்குழுவினுள் கலந்து கொண்டனர் என்க.

ஐம்பெருங்குழுவும் எண்பேராயமும் கோத்தொழிலாளராவார். அவருள் ஐம்பெருங்குழு அமைச்சரும் புரோகிதரும் சேனாபதியரும் தூதுவரும் ஒற்றரும் என்னும் இவர்கள் குழு. எண்பேராயம் – கரணத்தியலவர் கருமவிதிகள் கனகச்சுற்றம் கடைகாப்பாளர் நகரமாந்தர் நளிபடைத்தலைவர் யானைவீரர் இவுளி மறவர் இனையர் என்க.

இப்பகுதியால் பண்டைக்காலத்தே ஊர்ப்பொதுக் காரியங்களை நகர் வாழ் மக்களும் சான்றோரும் அரசியற் சுற்றத்தாறும் பிறநாட்டு வணிகத்தலைவரும் ஒருங்குகுழுமியே எண்ணித்துணியும் வழக்கமிருந்தமை அறியப்படும். இஃது அக்காலத்து நாகரிகச் சிறப்பிற்கு ஓர் எடுத்துக் காட்டாகும். குழீஇ -கூடி.

விழாக்கோள் மறப்பின் விளையுந் தீமைகள்

18-26: வான்பதி……..கொள்கென

(இதன் பொருள்) விழாக் கோள் மறப்பின் நம் தலை நகரத்தே இந்திர விழா வெடுத்தலை நம்மனோர் மறந்தொழியின்; வான்பதி தன்னுள் கொற்றவன் துயரம் விடுத்த பூதம் – பண்டு அமராபதியிடத்தே நம் வேந்தனாகிய முசுகுந்தனுக்கு அசுரரால் நேர்ந்த துன்பத்தைத் துடைத்த நாளங்கடியிடத்துப் பூதமானது மடித்த செவ்வாய் வல் எயிறு இலங்க இடிக்குரல் முழக்கத்து இடும்பை செய்திடும் – சினத்தாலே மடித்த சிவந்த தன் வாயின் வலிய பற்கள் திகழும்படி இடிபோன்ற தன் குரலாலே முழக்கஞ் செய்து மாந்தருக்கு துன்பஞ் செய்யாநிற்கும்; தொடுத்த பாசத்துத் தொல்பதி நரகரைப் புடைத்துணும் பூதமும் பொருந்தா தாயிடும் – அதுவுமின்றித் தன் கைக் கயிற்றினாலே நமது பழைய இந்நகரத்திலுள்ள கயமாக்களைக் கட்டிக்கொடுபோய்ப் புடைத்து விழுங்குமாற்றால் நன்மை செய்திடும் சதுக்கப் பூதமும் அத் தொழிலில் பொருந்தாது நல்லோருக்கும் இடும்பை செய்யும்; மாயிரு ஞாலத்து அரசுதலை ஈண்டும் ஆயிரம் கண்ணோன் விழாக் கால் கொள்கென – ஆதலின் இப்பேருலகத்து பன்னரெல்லாம் வந்து கூடுதற்குக் காரணமான இத்திரவிழாவிற்குக் கால் கோள் செய்க என்று முடிவு செய்யாநிற்ப என்க.

(விளக்கம்) வான்பதி – வானநாட்டுத் தலைநகரம், அமராபதி. கொற்றவன் – முசுகுந்தன் என்னும் சோழமன்னன். இவன் இந்திரனுக்கு உற்றழியுதவச் சென்று அமராபதியைக் காத்துநின்ற பொழுது அசுரர் இருட்கணையால் அவன் கண்ணை மறைத்தபொழுது அவ்விடுக்கணை ஒரு பூதம் போக்கியது. அப்பூதம் இந்திரனால் ஏவப்பட்டுப் புகார் நகரத்தே நாளங்காடியிடத்தே இருந்து அந்நகரத்தைக் காவல் செய்துவந்தது என,(சிலப் -6: 13) இச்செய்தி கூறப்பட்டுளது. புடைத்துணும் பூதம் – சதுக்கப்பூதம். இதனியல்பினை தவமறைந் தொழுதும் தன்மையி லாளர் அவமறைந் தொழுகும் அலவைப்பெண்டிர், அறைபோ கமைச்சர், பிறர் மனை நயப்போர், பொய்க்கரி யாளர் புறங்கூற் றாளரென், கைக்கொள் பாசத்துக் கைப்படு வோரெனக், காத நான்கும் கடுங்குர லெடுப்பிப் பூதம் புடைத்தணும் பூத சதுக்கமும் எனவரும் சிலப்பதிகாரத்தானு மறிக. (5: 128-36).

ஞாலத்துள்ள அரசர் முதலாக அனைவரும் வந்தீண்டும் விழா என்க. ஆயிரங்கண்ணோன்- இந்திரன். கொள்க என்று முடிவுசெய்ய என்க.

இனி இந்திரவிழாவை மறந்து கைவிடத்தகுந்த சூழ்நிலை அந்நகரத் திருந்தமையால் இங்ஙனம் கூடி முடிவுசெய்தல் வேண்டிற்று. என்னை கோவலன் அந் நகரத்தை நீங்கியதற்கே அந்நகரத்து மாந்தர் இராமன் வனம் போன நாள் அயோத்தி மாந்தர் அவலமுற்றாற்போல அவல முற்றனர் என்பது சிலப்பதிகாரத்தால் அறியப்பட்டது. இதனை

அருந்திறல் பிரிந்த அயோத்தி போலப்
பெரும்பெயர் மூதூர் பெரும்பேதுற்றதும்   (சிலப்-95-9)

எனவரும் கோசிகமாணி கூற்றாலறிக. அப்பாலும் கோவலனுக்கும் கண்ணகிக்கும் நேர்ந்த நிகழ்ச்சிகளும் அதுகேட்டு மாசாத்துவானும் மாநாய்கனும் துறவு பூண்டமையும் இருவர் மனைவிமாரும் இறந்தமையும் இவற்றிற்கெல்லாம் மேலாக மாதவி துறவு பூண்டமையும் அம்மாநகரத்திற்குப் பேரிழவாகத் தோன்றியிருத்தல் கூடும் என்பதும், இக் காரணத்தால் அவர் விழா வெடுத்தற்கண் ஊக்கமின்றி இருத்தல் கூடும் என்பதும் ஈண்டு நுண்ணுணர்வாற் கண்டு கொள்ளல் கூடும் அன்றோ. இது விழாக்கோள் மறப்பின் எனப் பாட்டிடை வைத்த குறிப்பினாற் போந்த பொருளாம். எனவே விழாக்கொள்ளாது விடலாம். விட்டால் இன்னின்ன இன்னல் உண்டாகும் ஆதலால் விழாவெடுத்தலே நன்று என்று அக்குழுவினர் முடிவு செய்தபடியாம். ஈண்டு இக்குறிப்புப் பொருள் கொள்ளாக்காலை இப்பகுதி வேண்டா கூறலாய் முடியும் என்க.

வள்ளுவன் விழாவறையத் தொடங்குதல்

27-34: வச்சிரக்………..ஆகுக

(இதன் பொருள்) வச்சிரக் கோட்டத்து மணங் கெழு முரசம்- வச்சிரக் கோட்டத்திலே முரசு கட்டிலில் வைக்கப்பட்டு நாள் தோறும் வழிபாடு செய்துவருதலாலே நறுமணங் கமழாநின்ற விழா முரசினை; கச்சையானைப் பிடர்த்தலை ஏற்றி – கச்சை கட்டிய அரச யானையின் பிடரிடத்தே ஏற்றிவைத்து; ஏற்றுரிபோர்த்த இடி உறுமுழக்கின் கூற்றுக்கண் விளிக்கும் குருதி வேட்கை முரசு கடிப்பு இடும் முதுகுடிப் பிறந்தோன் – தன்னோடு ஒத்த ஆனேற்றினோடு பொருது வென்ற இளையஆனேற்றினது தோலை உரித்துப் போர்த்துக் கட்டப்பட்டதும் இடிபோன்று முழங்கும் முழக்கத்தையுடையதும் கூற்றுவினைத் தான் முழங்குமிடத்திற்கு அழைப்பதும் பகைவர் குருதியைக் காணும் வேட்கையையுடைதுமாகிய வீரமுரசத்தைக் குறுந்தடியால் முழக்கும் உரிமை பூண்ட பழைய குடியிற் பிறந்த வள்ளுவன் தானும் ஏறியிருந்து. திருவிழைமூதூர் வாழ்க என்று ஏத்தி திருமகள் எப்பொழுதும் விரும்பி வீற்றிருததற்குக் காரணமான பூம்புகார் நகரம் நீடுழி வாழ்க என்று முதன் முதலாக நகரத்தை வாழ்த்திப் பின்னர்; வானம் மும்மாரி பொழிக மன்னவன் கோள் நிலை திரியாக் கோலோன் ஆகுக – வானம் திங்கள் தோறும் மும்முறை மழை பொழிவதாக என்றும் மன்னன் கோள்கள் நிலைதிரியாமல் நன்னெறியில் இயங்குதற்குக் காரணமான செங்கோன்மை உடையான் ஆகுக என்றும் வாழ்த்திப் பின்னர் விழாவறிவுறுப்பவன்; என்க.

(விளக்கம்) விழாமுரசம் எப்பொழுதும் வச்சிரக்கோட்டத்தில் முரசு கட்டிலில் வைக்கப்பட்டிருக்கும். நாள்தோறும் நறுமலர் சூட்டி நறுமணப்புகையும் எடுத்தல் தோன்ற மணங்கெழு முரசும் என்றார் வச்சிரக்…..ஏற்றி என்னும் இந்த இரண்டடிகளும் இளங்கோவடிகளாருடைய மணிமொழியைப் பொன்போல்ப் போற்றித் தண்டமிழாசான் சாத்தனார் ஈண்டுப் பொதிந்துவைத்துள்ளனர். (சிலப்- 5:141-2) வச்சிரக்கோட்டம் -இந்திரனுடைய வச்சிரப்படை நிற்குங்கோயில். கச்சை – யானையின் கீழ்வயிற்றிற் கட்டும் கயிறு. பிடர்த்தலை என்புழித்தலை. ஏழாவதன் சொல்லுருபு.

வீரமுரசத்திற்கு வீரப்பண்புமிக்க ஆனேற்றின் வளங்கெழுமிய தோலை மயிர்சீவாது போர்த்தல் ஒரு மரபு; இதனை ஏறிரண்டுடன் மடுத்து வென்றதன் பச்சை சீவாது போர்த்த……முரசம் என்பதனானும் (புரநா-288) உணர்க. முழக்கினாலே கூற்றினைத் தன்னிடத்திற்கு வருமாறு அழைக்கும் முரசு எனினுமாம். குருதிவெள்ளத்தைக் காணும் வேட்கை என்க. மன்னனுடைய வீரமுரசத்தை முழக்கும் உரிமை பெறுதல் வள்ளுவர்க்கு ஒரு பேறு. வழிவழியாக அம்முரசம் முழக்கும் உரிமையுடையோன் என்பார் முதுகுடிப்பிறந்தோன் என்றார்.

விழாச் சிறப்பு

35-42: தீவக………ஆதலில்

(இதன் பொருள்) தீவகச் சாந்தி செய்தரு நல் நாள்- இந் நாவலந் தீவினுள்ள மாந்தர் எல்லாம் பகை பசி பிணி முதலியவற்றால் இடுக்கணுறாமைப் பொருட்டுத் தெய்வத்தைக் கருதிச் செய்யும் சாந்தியாகிய இப்பெருவிழா நிகழ்த்தா நின்ற இருபத்தெட்டு நாள் முடியும் துணையும்; ஆயிரம் கண்ணோன் தன்னோடு ஆங்குள நால் வேறு தேவரும் இந்நகரத்திலே இனிது உறைவதாக வரமீந்த இந்திரனோடு அவ்வானுலகத்தே வதிகின்ற நால் வேறு வகைப்பட்ட தேவர்களும்; நலத்தகு சிறப்பின் பால் வேறு தேவரும் – தத்தமக்கே சிறந்துரிமையுடைய பல்வேறு நன்மைகள் காரணமாகப் பல்வேறு பகுதியினராகிய ஏனைய தேவர்களும்; இப்பதிப் படர்ந்து – இந்நகரத்திருத்தலாலுண்டாகும் இன்பத்தை நினைந்து; மன்னன் கரிகால் வளவன் நீங்கிய நாள் – இந் நகரத்து மன்னனாயிருந்த கரிகாற் சோழன் வடநாட்டரசரைப் போரில் வென்று புகழ் பெறக் கருதி வடநாட்டின் மேல் சென்ற நாளிலே; இந் நகர் போல்வது ஓரியல்பினது ஆகி – இப் பூம்புகார் நகரம் வறிதாய்க்  கிடந்ததொரு தன்மையுடையதாய்; பொன்னகர் வறிதா போதுவர் -தாம் வாழுகின்ற பொன்னகரமாகிய அமராபதி நகரம் வறிதாகக் கிடக்கவிட்டு இப் புகார் நகரத்திற்கு வந்திடுவர் என்பது; தொல்நிலை உணர்த்தோர் துணி பொருள் ஆதலில் – பண்டும் பண்டும் இத் திருவிழாக் காலத்துத் தன்மையைக் கூர்ந்துணர்ந்த சான்றோர் தெளிந்ததோருண்மை யாதலாலே (என்றான்) என்க.

(விளக்கம்) தீவகம் – நாவலந்தீவு. இத் தீவகத் தெய்வத்தின் பெயரால் படைப்புக் காலத்திலேயே சம்பாபதி என்னும் நகரம் படைக்கப் பட்டமையான் அதன்கண் நிகழ்த்தும் சாந்தி இத் தீவக முழுமைக்கும் உரியதாம் என்பார் தீவகச் சாந்தி என்றார். ஆயிரங் கண்ணோன் அப் பெருவிழா நிகழ்தரு நாலேழ் நாளும் அங்கு வந்து இனிதிருப்பதாக வரந்தந்தமையால் அங்கு வரும் கடப்பாடுடையான் ஆதலின் அவன் வரவு கூறாமலே அமையு மாகலின் ஏனைய தேவர் வரவை உடனிழகழ்ச்சி ஒடு உருபு கொடுத்தோதினன், நால் வேறு தேவர் என்றது, வசுக்களும் கதிரவரும் உருத்திரரும் மருத்துவருமாய் நால்வகைப்பட்ட தேவர் என்றவாறு.

பால் வேறு தேவர் என்றது பதினெண் வகைப்பட்ட தேவர்களை. படர்ந்து – நினைந்து கரிகால்வளவன்  நீங்கிய நாள் என்றது – கரிகாற் சோழன் வடநாட்டரசரை வென்று வாகை சூடக் கருதி நால்வேறு படைகளோடும் புகார் நகரத்தினின்றும் வடதிசையிற் சென்று விட்டமையால் புகார் நகரம் பொலிவற்று வறிதாய்க் கிடந்த அந்த நாளில் போல என்றவாறு. இந்திரன் முதலியோர் வந்துவிட்டமையால் வறிதே கிடக்கும் பொன்னகரத்திற் குவமையாதல் வேண்டி இங்ஙனம் கூறினர். இவ் வரலாற்றினை இருநில மருங்கின்…….அந்நாள் எனவரும் சிலப்பதிகாரத்திற் காண்க (5: 86-94) தொன்னிலை – பண்டு இப் பெருவிழாவிற்கு அத் தேவர் அவ்வாறு வந்த நிலைமை

வள்ளுவன் நகர் அணி செய்யுமாறு அறிவித்தல்

  1. விழாவறை காதை

(முதலாவது விழாவறைந்த பாட்டு)

அஃதாவது: பூம்புகார் நகரத்து வாழ்கின்ற சமயக் கணக்கர் முதலிய பெரியோர் ஒருங்கு கூடி அந் நகரத்திலே வாண்டு தோறும் நிகழ்த்தப்பட்டு வருகின்ற இந்திர விழா என்னும் பெருவிழா எடுத்தற்குரிய சித்திரைத் திங்களின் முழுமதி நாள் அணுகி வருதலானே அவ் விழாவிற்குக் கால் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்து அதனை நகரமக்கட்கு அறிவிக்கும் படி வழக்கம் போல விழா முரசம்  அறையும் முதுகுடிப் பிறந்த வள்ளுவனுக்கு அறிவிப்பு, அது கேட்ட வள்ளுவன்றாணும் வச்சிரக் கோட்டத்தில் வைக்கப்பட்டிருக்கின்ற மணங்கெழு முரசத்தைக் கச்சையானைப் பிடர்த்தலை ஏற்றித் தானும் ஏறியிருந்து அவ் விழா நிகழப் போவதனையும் அதற்குக் கால் கோள் செய்யும் நாளையும் விழாவின் பொருட்டு நகரத் தெருக்கள் தோறும் முரசறைந்த செய்தியைக் கூறும் பாட்டு என்றவாறு. இக் காதையினால் இற்றைக் கிர்கடாயிரம் ஆண்டுகட்கு முன்னர்த் தமிழகத்து மாந்தர் விழா நிகழ்த்தும் முறையும், அவர் ஒப்பற்ற நாகரிகமும் இனிது விளங்கும்.

உலகம் திரியா ஓங்கு உயர் விழுச் சீர்ப்
பலர் புகழ் மூதூர்ப் பண்பு மேம்படீஇய
ஓங்கு உயர் மலயத்து அருந் தவன் உரைப்ப
தூங்கு எயில் எறிந்த தொடித் தோள் செம்பியன்
விண்ணவர் தலைவனை வணங்கி முன் நின்று
மண்ணகத்து என்தன் வான் பதி தன்னுள்
மேலோர் விழைய விழாக் கோள் எடுத்த
நால் ஏழ் நாளினும் நன்கு இனிது உறைக என
அமரர் தலைவன் ஆங்கு அது நேர்ந்தது
கவராக் கேள்வியோர் கடவார் ஆகலின்  01-010

மெய்த் திறம் வழக்கு நன்பொருள் வீடு எனும்
இத் திறம் தம் தம் இயல்பினின் காட்டும்
சமயக் கணக்கரும் தம் துறை போகிய
அமயக் கணக்கரும் அகலார் ஆகி
கரந்து உரு எய்திய கடவுளாளரும்
பரந்து ஒருங்கு ஈண்டிய பாடை மாக்களும்
ஐம் பெருங்குழுவும் எண் பேர் ஆயமும்
வந்து ஒருங்கு குழீஇ வான்பதி தன்னுள்
கொடித் தேர்த் தானைக் கொற்றவன் துயரம்
விடுத்த பூதம் விழாக்கோள் மறப்பின்  01-020

மடித்த செவ் வாய் வல் எயிறு இலங்க
இடிக் குரல் முழக்கத்து இடும்பை செய்திடும்
தொடுத்த பாசத்து தொல் பதி நரகரைப்
புடைத்து உணும் பூதமும் பொருந்தாதாயிடும்
மா இரு ஞாலத்து அரசு தலையீண்டும்
ஆயிரம்கண்ணோன் விழாக் கால்கொள்க என
வச்சிரக் கோட்டத்து மணம் கெழு முரசம்
கச்சை யானைப் பிடர்த்தலை ஏற்றி
ஏற்று உரி போர்த்த இடி உறு முழக்கின்
கூற்றுக்கண் விளிக்கும் குருதி வேட்கை  01-030

முரசு கடிப்பு இகூஉம் முதுகுடிப் பிறந்தோன்
திரு விழை மூதூர் வாழ்க! என்று ஏத்தி
வானம் மும் மாரி பொழிக! மன்னவன்
கோள் நிலை திரியாக் கோலோன் ஆகுக!
தீவகச் சாந்தி செய்தரு நல் நாள்
ஆயிரம்கண்ணோன் தன்னோடு ஆங்கு உள
நால் வேறு தேவரும் நலத்தகு சிறப்பில்
பால் வேறு தேவரும் இப் பதிப் படர்ந்து
மன்னன் கரிகால்வளவன் நீங்கிய நாள்
இந் நகர் போல்வதோர் இயல்பினது ஆகிப்  01-040

பொன்நகர் வறிதாப் போதுவர் என்பது
தொல் நிலை உணர்ந்தோர் துணிபொருள் ஆதலின்
தோரண வீதியும் தோம் அறு கோட்டியும்
பூரண கும்பமும் பொலம் பாலிகைகளும்
பாவை விளக்கும் பல உடன் பரப்புமின்
காய்க் குலைக் கமுகும் வாழையும் வஞ்சியும்
பூக் கொடி வல்லியும் கரும்பும் நடுமின்
பத்தி வேதிகைப் பசும் பொன் தூணத்து
முத்துத் தாமம் முறையொடு நாற்றுமின்
விழவு மலி மூதூர் வீதியும் மன்றமும்  01-050

பழ மணல் மாற்றுமின் புது மணல் பரப்புமின்
கதலிகைக் கொடியும் காழ் ஊன்று விலோதமும்
மதலை மாடமும் வாயிலும் சேர்த்துமின்
நுதல் விழி நாட்டத்து இறையோன் முதலா
பதி வாழ் சதுக்கத்துத் தெய்வம் ஈறு ஆக
வேறுவேறு சிறப்பின் வேறுவேறு செய்வினை
ஆறு அறி மரபின் அறிந்தோர் செய்யுமின்
தண் மணல் பந்தரும் தாழ்தரு பொதியிலும்
புண்ணிய நல்லுரை அறிவீர்! பொருந்துமின்
ஒட்டிய சமயத்து உறு பொருள் வாதிகள்  01-060

பட்டி மண்டபத்து பாங்கு அறிந்து ஏறுமின்
பற்றாமாக்கள் தம்முடன் ஆயினும்
செற்றமும் கலாமும் செய்யாது அகலுமின்
வெண் மணல் குன்றமும் விரி பூஞ் சோலையும்
தண் மணல் துருத்தியும் தாழ் பூந் துறைகளும்
தேவரும் மக்களும் ஒத்து உடன் திரிதரும்
நால் ஏழ் நாளினும் நன்கு அறிந்தீர் என
ஒளிறு வாள் மறவரும் தேரும் மாவும்
களிறும் சூழ்தர கண் முரசு இயம்பி
பசியும் பிணியும் பகையும் நீங்கி
வசியும் வளனும் சுரக்க! என வாழ்த்தி
அணி விழா அறைந்தனன் அகநகர் மருங்கு என்  01-072

விழாவறை காதை

உரை

இந்திர விழாவின் வரலாறு

1-10: உலகம்……….ஆகலில்

(இதன் பொருள்) உலகம் திரியா ஓங்கு உயிர் விழுச்சீர் பலர் புகழ் மூதூர் பண்பு மேம்படீஇய – சான்றோர் சென்ற நெறிநின்றொழுகுதலில் ஒரு பொழுதும் பிறழா தொழுகுதல் காரணமாகப் பெரிதும் உயர்ந்துள்ள தனது மாபெரும் சிறப்பினைப் பிறநாட்டிலுள்ள சான்றோர் பலரும் புகழாநிற்றற் கிடமான பழைய ஊராகிய புகார் நகரத்தின் தெய்வத் தன்மை காலந்தோறும் மேம்பட்டு வளர்தற் பொருட்டாக; ஓங்கு உயர் மலயத்து அருந்தவன் உரைப்ப – வானுற உயர்ந்து புகழானும் உயர்ந்த பொதிய மலையின்கண் இறைவன் ஏவலாலே எழுந்தருளியிருக்கும் செய்தற்கரிய தவங்களைச் செய்துயர்ந்த அகத்தியமுனிவன் பணிப்ப: தூங்கு எயில் எறிந்த தொடித்தோள் செம்பியன் – வானத்திலே இயங்குகின்ற மதில்களை அழித்த வீர வலைய மணிந்த சோழ மன்னன் ஒருவன்; விண்ணவர்தலைவனை வணங்கி முன்னின்று – தனக்கு நன்றிக் கடன்பட்டுள்ள அமரர்கோமனை வணங்கி அவன் முன்னிலையிலேயே நின்று; மண்ணகத்து என்றன் வான்பதி தன்னுள் – நிலவுலகத்திலமைந்த என்னுடைய தலை நகரத்தினுள்; மேலோர் விழைய விழாக்கோள் எடுத்த நால் ஏழ் நாளினும் நன்கு இனிது உறைக என – விண்ணவரும் கரந்துரு வெய்தி வந்து கரண்டற்கு விரும்புதற்குக் காரணமான பெரிய தொரு திருவிழாவை நினைக்கு யாங்கள் எடுத்தலை மேற்கொண்ட இருபத்தெட்டு நாளினும் நீ அந்நகரத்தே அவ்விழாவினை ஏற்றுக் கொண்டு உறுதியாக அங்கேயே இனிதாக வீற்றிருந்தருளல் வேண்டும் இது யான் நின்பால் பெற விரும்பும் வரம் என்று வேண்டா நிற்ப; அமரர் தலைவன் ஆங்கு அது நேர்ந்தது – தேவர் கோமனும் மறாஅது அவ்வாறே தந்த வரத்திற்கு; கவராக் கேள்வியோர் – ஐயுறாமைக்குக் காரணமான மெய்ந்நூற் கேள்வியினையுடைய சான்றோர்; கடவார் ஆதலின் – மாறுபட்டொழுகாராதலின் என்க.

(விளக்கம்) உலகம் என்றது சான்றோருடைய ஒழுக்கத்தை,ஓங்குயர் விழுச்சீர், என்று ஒருபொருட்பன்மொழி பலவற்றை அடைபுணர்த்தோதினர். புகார் நகரத்துப் புகழ் சாலவும் உயர்ந்த புகழ்; தனக்குத் தானே நிகரான புகழ் என்றுணர்த்தற்கு. அப் புகழ் அத்தகையதாதலை புறவிற்காகத் துலாம் புக்கதும் ஆன்கன்றிற்கு மகனை ஆழியின் மடித்ததும் தூங்கெயில் எறிந்து அமரரைப் புரந்ததும் ஆகிய இன்னோரன்ன அந்நாட்டு மன்னர் செயற்கரிய செயல்களாலறிக. நாகநீள் நகரொடும் போகநீள் புகழ்மன்னும் புகார் என இளங்கோவடிகளாரும் (மங்கல) பாராட்டுதலறிக. பலர் அயல் நாட்டுச் சான்றோர் பலரும் என்க என்னை புகழத்தகுந்தவர் அவரேயாகலான். பண்பு – தெய்வப்பண்பு. அருந்தவன் – அகத்தியன். அகத்தியன் சோழனுடைய மூதூர் மேம்படுதற் பொருட்டுச் செம்பியன்பால் நீ இவ்வரத்தைக் கேள் என்றுரைத்தமையாலே செம்பியன் இந்திரன்பால் நீ விழாக்கோள் எடுத்த நாலேழ் நாளினும் என் பதியில் நன்கினிதுறைதல் வேண்டும் என வரங் கேட்டான்; அவனும் செய்ந்நன்றிக் கடன்பட்டிருத்தலான் அவ் வரத்தை மறாது நேர்ந்தனன் என்றவாறு. வானத்தே இயங்கு மதிலினுள் இருந்து அரக்கர் வானவர் ஊரெல்லாம் புகுந்து அவர்க்குக் கேடு விளைத்தனர். அம் மதிலை ஒரு சோழன் அழித்து அமரரைப் பாதுகாத்தனன். இவ்வாற்றல் நன்றிக் கடன்பட்ட இந்திரன் நீ விரும்பும் வரங்கேள் என்ன அச்சோழன் அகத்தியர் அறிவுறுத்தபடி வரம்கேட்டனன். அவனும் நேர்ந்தனன் என்க.

இவ் வீரச் செயல்பற்றி அச்சோழமன்னன் தூங்கெயில் எறிந்த தொடித்தோள் செம்பியன் எனப்பட்டான்.

விண்ணவர் தலைவனை வணங்கி முன்னின்று மண்ணகத்து என்றன் வான்பதி என்று பாட்டிடைவைத்த குறிப்பினாலே வரங்கேட்டது வானவருலகத்திலே என்பதும் பெற்றாம். இச் சோழன் அசுரர் மதிலை அழித்து அமரரைக் காத்தமையால் அடுதல் அவர்க்கு ஒரு புகழாகாது என மாறோக்கத்து நப்பசலையார் நவில்வர்.

ஒன்னு ருட்கும் துன்னருங் கடுந்திறல்
தூங்கெயி லெறிந்த நின்னூங்க ணோர்நினைப்பின்
அடுதல் நின்புகழும் அன்றே

என்பது அந் நல்லிசைப்புலவர் மணிமொழி.

மேலோர் – அமரர்.

விழாக்குழுவினர்

11-18: மெய்த்திறம் …….குழீஇ

(இதன் பொருள்) மெய்த்திறம் வழக்கு நன்பொருள் வீடு என்னும் இத்திறம் தம் தம் இயல்பில் காட்டும் – மெய்ந்நூல் வழக்கும் உலகியல் வழக்கும் நன்மைதருகின்ற துணி பொருளும் வீடுபேறும் ஆகிய இவையிற்றைச் சொல்லான் மட்டும் அறிவுறுத்துதலே யன்றித் தம் தம் ஒழுக்கத்தானும் நன்கு தெரியக் காட்டும் சிறப்புடைய; சமயக் கணக்கரும் – பல்வேறு சமயக் குரவர்களும்; தம் துறை போகிய அமயக் கணக்கரும் தமக்குரிய கணிதத்துறையில் கற்று மிகுந்த புகழுடைய காலக் கணிவரும்; அகலாராகி கரந்துரு வெய்திய கடவுளாளரும் – தமக்குரிய விண்ணவர் பதியினும் இந்நகரம் சிறந்ததென்று கருதித் தம்முருவம் கரந்து மக்களுருவிற் றிரிகின்ற தேவர்களும்; பரந்து ஒருங்கு ஈண்டிய பாடை மாக்களும் – வணிகத் தொழிலின் பொருட்டு உலகத்துள்ள நாடெல்லாம் சென்று மீண்டு வந்து ஒருங்கு கூடியிருக்கின்ற பல்வேறு மொழி பேசுகின்ற வேற்று நாட்டு வணிகத்தலைவரும்; ஐம்பெருங் குழுவும் – அமைச்சர் முதலிய ஐம்பெருங்குழுவினுள்ளாரும்; எண் பேராயமும் – கரணத்தியலவர் முதலிய எண் பேராயத்தாரும் ஆகிய கோத் தொழிலாளரும்; வந்து ஒருங்கு குழீஇ -ஊரம்பலத்தே வந்து ஒருங்கே கூடியிருந்து என்க.

(விளக்கம்) மெய்திறம் – மெய்ந்நூல் வழக்கு; வழக்கு -உலகியல் வழக்கு; நன்பொருள் – தத்துவங்கள். வீடு – வீட்டினியல்பு. இத்திறம் தம்தம் இயல்பில் காட்டுதலாவது இவற்றின் வழி நின்று ஒழுக்கத்கதைத் தம்தம்மிடத்தேயே பிறர் அறிந்து கொள்ளுமாறு ஒழுகுமாற்றால் பிறரை அறியச்செய்யும் சிறப்புடையோராதல். எனவே சொல்லுதல் யார்க்கும் எளிதாதலால் இவர் தம்தம் சமயத்தைத் தமது ஒழுக்கத்தாலேயே அறிவுறுத்துபவர் என அவர் பெருமையை விதந்தோதிய படியாம்.

சோழநாடு நீர் நாடாகலின் மருதத்திணைத் தெய்வத்தின் பெயரால் பெருவிழா எடுப்பதாயிற்று; ஆயினும் இவ்விழா நிகழும் போது அந்நகரத்தமைந்த பல்வேறு சமயஞ்சார்ந்த கடவுளர்க்கும் அவ்வவ் முறைப்படியே விழா நிகழ்த்தும் வழக்கம் உண்மையின் விழா வெடுத்தற்குப் பல்வேறு சமயக் கணக்கர்களும் வந்து குழுமினர் என்றுணர்க. இதனால் அக்காலத்தே சமயப் பூசலில்லாமை நன்குணரப்படும். இரப்போரும் ஈவாரும் இல்லாமையால் தமக்குரிய விண்ணுலக வாழ்க்கையை வெறுத்துக் கடவுளாளரும் பூம்புகாரில் கரந்துருவெய்தி மக்களூடே மக்களாய் வாழ்த்தினர் என்க. அவர்க்கே விழா வெடுக்கப் போவதால் அவரும் அக்குழுவினுள் கலந்து கொண்டனர் என்க.

ஐம்பெருங்குழுவும் எண்பேராயமும் கோத்தொழிலாளராவார். அவருள் ஐம்பெருங்குழு அமைச்சரும் புரோகிதரும் சேனாபதியரும் தூதுவரும் ஒற்றரும் என்னும் இவர்கள் குழு. எண்பேராயம் – கரணத்தியலவர் கருமவிதிகள் கனகச்சுற்றம் கடைகாப்பாளர் நகரமாந்தர் நளிபடைத்தலைவர் யானைவீரர் இவுளி மறவர் இனையர் என்க.

இப்பகுதியால் பண்டைக்காலத்தே ஊர்ப்பொதுக் காரியங்களை நகர் வாழ் மக்களும் சான்றோரும் அரசியற் சுற்றத்தாறும் பிறநாட்டு வணிகத்தலைவரும் ஒருங்குகுழுமியே எண்ணித்துணியும் வழக்கமிருந்தமை அறியப்படும். இஃது அக்காலத்து நாகரிகச் சிறப்பிற்கு ஓர் எடுத்துக் காட்டாகும். குழீஇ -கூடி.

விழாக்கோள் மறப்பின் விளையுந் தீமைகள்

18-26: வான்பதி……..கொள்கென

(இதன் பொருள்) விழாக் கோள் மறப்பின் நம் தலை நகரத்தே இந்திர விழா வெடுத்தலை நம்மனோர் மறந்தொழியின்; வான்பதி தன்னுள் கொற்றவன் துயரம் விடுத்த பூதம் – பண்டு அமராபதியிடத்தே நம் வேந்தனாகிய முசுகுந்தனுக்கு அசுரரால் நேர்ந்த துன்பத்தைத் துடைத்த நாளங்கடியிடத்துப் பூதமானது மடித்த செவ்வாய் வல் எயிறு இலங்க இடிக்குரல் முழக்கத்து இடும்பை செய்திடும் – சினத்தாலே மடித்த சிவந்த தன் வாயின் வலிய பற்கள் திகழும்படி இடிபோன்ற தன் குரலாலே முழக்கஞ் செய்து மாந்தருக்கு துன்பஞ் செய்யாநிற்கும்; தொடுத்த பாசத்துத் தொல்பதி நரகரைப் புடைத்துணும் பூதமும் பொருந்தா தாயிடும் – அதுவுமின்றித் தன் கைக் கயிற்றினாலே நமது பழைய இந்நகரத்திலுள்ள கயமாக்களைக் கட்டிக்கொடுபோய்ப் புடைத்து விழுங்குமாற்றால் நன்மை செய்திடும் சதுக்கப் பூதமும் அத் தொழிலில் பொருந்தாது நல்லோருக்கும் இடும்பை செய்யும்; மாயிரு ஞாலத்து அரசுதலை ஈண்டும் ஆயிரம் கண்ணோன் விழாக் கால் கொள்கென – ஆதலின் இப்பேருலகத்து பன்னரெல்லாம் வந்து கூடுதற்குக் காரணமான இத்திரவிழாவிற்குக் கால் கோள் செய்க என்று முடிவு செய்யாநிற்ப என்க.

(விளக்கம்) வான்பதி – வானநாட்டுத் தலைநகரம், அமராபதி. கொற்றவன் – முசுகுந்தன் என்னும் சோழமன்னன். இவன் இந்திரனுக்கு உற்றழியுதவச் சென்று அமராபதியைக் காத்துநின்ற பொழுது அசுரர் இருட்கணையால் அவன் கண்ணை மறைத்தபொழுது அவ்விடுக்கணை ஒரு பூதம் போக்கியது. அப்பூதம் இந்திரனால் ஏவப்பட்டுப் புகார் நகரத்தே நாளங்காடியிடத்தே இருந்து அந்நகரத்தைக் காவல் செய்துவந்தது என,(சிலப் -6: 13) இச்செய்தி கூறப்பட்டுளது. புடைத்துணும் பூதம் – சதுக்கப்பூதம். இதனியல்பினை தவமறைந் தொழுதும் தன்மையி லாளர் அவமறைந் தொழுகும் அலவைப்பெண்டிர், அறைபோ கமைச்சர், பிறர் மனை நயப்போர், பொய்க்கரி யாளர் புறங்கூற் றாளரென், கைக்கொள் பாசத்துக் கைப்படு வோரெனக், காத நான்கும் கடுங்குர லெடுப்பிப் பூதம் புடைத்தணும் பூத சதுக்கமும் எனவரும் சிலப்பதிகாரத்தானு மறிக. (5: 128-36).

ஞாலத்துள்ள அரசர் முதலாக அனைவரும் வந்தீண்டும் விழா என்க. ஆயிரங்கண்ணோன்- இந்திரன். கொள்க என்று முடிவுசெய்ய என்க.

இனி இந்திரவிழாவை மறந்து கைவிடத்தகுந்த சூழ்நிலை அந்நகரத் திருந்தமையால் இங்ஙனம் கூடி முடிவுசெய்தல் வேண்டிற்று. என்னை கோவலன் அந் நகரத்தை நீங்கியதற்கே அந்நகரத்து மாந்தர் இராமன் வனம் போன நாள் அயோத்தி மாந்தர் அவலமுற்றாற்போல அவல முற்றனர் என்பது சிலப்பதிகாரத்தால் அறியப்பட்டது. இதனை

அருந்திறல் பிரிந்த அயோத்தி போலப்
பெரும்பெயர் மூதூர் பெரும்பேதுற்றதும்   (சிலப்-95-9)

எனவரும் கோசிகமாணி கூற்றாலறிக. அப்பாலும் கோவலனுக்கும் கண்ணகிக்கும் நேர்ந்த நிகழ்ச்சிகளும் அதுகேட்டு மாசாத்துவானும் மாநாய்கனும் துறவு பூண்டமையும் இருவர் மனைவிமாரும் இறந்தமையும் இவற்றிற்கெல்லாம் மேலாக மாதவி துறவு பூண்டமையும் அம்மாநகரத்திற்குப் பேரிழவாகத் தோன்றியிருத்தல் கூடும் என்பதும், இக் காரணத்தால் அவர் விழா வெடுத்தற்கண் ஊக்கமின்றி இருத்தல் கூடும் என்பதும் ஈண்டு நுண்ணுணர்வாற் கண்டு கொள்ளல் கூடும் அன்றோ. இது விழாக்கோள் மறப்பின் எனப் பாட்டிடை வைத்த குறிப்பினாற் போந்த பொருளாம். எனவே விழாக்கொள்ளாது விடலாம். விட்டால் இன்னின்ன இன்னல் உண்டாகும் ஆதலால் விழாவெடுத்தலே நன்று என்று அக்குழுவினர் முடிவு செய்தபடியாம். ஈண்டு இக்குறிப்புப் பொருள் கொள்ளாக்காலை இப்பகுதி வேண்டா கூறலாய் முடியும் என்க.

வள்ளுவன் விழாவறையத் தொடங்குதல்

27-34: வச்சிரக்………..ஆகுக

(இதன் பொருள்) வச்சிரக் கோட்டத்து மணங் கெழு முரசம்- வச்சிரக் கோட்டத்திலே முரசு கட்டிலில் வைக்கப்பட்டு நாள் தோறும் வழிபாடு செய்துவருதலாலே நறுமணங் கமழாநின்ற விழா முரசினை; கச்சையானைப் பிடர்த்தலை ஏற்றி – கச்சை கட்டிய அரச யானையின் பிடரிடத்தே ஏற்றிவைத்து; ஏற்றுரிபோர்த்த இடி உறுமுழக்கின் கூற்றுக்கண் விளிக்கும் குருதி வேட்கை முரசு கடிப்பு இடும் முதுகுடிப் பிறந்தோன் – தன்னோடு ஒத்த ஆனேற்றினோடு பொருது வென்ற இளையஆனேற்றினது தோலை உரித்துப் போர்த்துக் கட்டப்பட்டதும் இடிபோன்று முழங்கும் முழக்கத்தையுடையதும் கூற்றுவினைத் தான் முழங்குமிடத்திற்கு அழைப்பதும் பகைவர் குருதியைக் காணும் வேட்கையையுடைதுமாகிய வீரமுரசத்தைக் குறுந்தடியால் முழக்கும் உரிமை பூண்ட பழைய குடியிற் பிறந்த வள்ளுவன் தானும் ஏறியிருந்து. திருவிழைமூதூர் வாழ்க என்று ஏத்தி திருமகள் எப்பொழுதும் விரும்பி வீற்றிருததற்குக் காரணமான பூம்புகார் நகரம் நீடுழி வாழ்க என்று முதன் முதலாக நகரத்தை வாழ்த்திப் பின்னர்; வானம் மும்மாரி பொழிக மன்னவன் கோள் நிலை திரியாக் கோலோன் ஆகுக – வானம் திங்கள் தோறும் மும்முறை மழை பொழிவதாக என்றும் மன்னன் கோள்கள் நிலைதிரியாமல் நன்னெறியில் இயங்குதற்குக் காரணமான செங்கோன்மை உடையான் ஆகுக என்றும் வாழ்த்திப் பின்னர் விழாவறிவுறுப்பவன்; என்க.

(விளக்கம்) விழாமுரசம் எப்பொழுதும் வச்சிரக்கோட்டத்தில் முரசு கட்டிலில் வைக்கப்பட்டிருக்கும். நாள்தோறும் நறுமலர் சூட்டி நறுமணப்புகையும் எடுத்தல் தோன்ற மணங்கெழு முரசும் என்றார் வச்சிரக்…..ஏற்றி என்னும் இந்த இரண்டடிகளும் இளங்கோவடிகளாருடைய மணிமொழியைப் பொன்போல்ப் போற்றித் தண்டமிழாசான் சாத்தனார் ஈண்டுப் பொதிந்துவைத்துள்ளனர். (சிலப்- 5:141-2) வச்சிரக்கோட்டம் -இந்திரனுடைய வச்சிரப்படை நிற்குங்கோயில். கச்சை – யானையின் கீழ்வயிற்றிற் கட்டும் கயிறு. பிடர்த்தலை என்புழித்தலை. ஏழாவதன் சொல்லுருபு.

வீரமுரசத்திற்கு வீரப்பண்புமிக்க ஆனேற்றின் வளங்கெழுமிய தோலை மயிர்சீவாது போர்த்தல் ஒரு மரபு; இதனை ஏறிரண்டுடன் மடுத்து வென்றதன் பச்சை சீவாது போர்த்த……முரசம் என்பதனானும் (புரநா-288) உணர்க. முழக்கினாலே கூற்றினைத் தன்னிடத்திற்கு வருமாறு அழைக்கும் முரசு எனினுமாம். குருதிவெள்ளத்தைக் காணும் வேட்கை என்க. மன்னனுடைய வீரமுரசத்தை முழக்கும் உரிமை பெறுதல் வள்ளுவர்க்கு ஒரு பேறு. வழிவழியாக அம்முரசம் முழக்கும் உரிமையுடையோன் என்பார் முதுகுடிப்பிறந்தோன் என்றார்.

விழாச் சிறப்பு

35-42: தீவக………ஆதலில்

(இதன் பொருள்) தீவகச் சாந்தி செய்தரு நல் நாள்- இந் நாவலந் தீவினுள்ள மாந்தர் எல்லாம் பகை பசி பிணி முதலியவற்றால் இடுக்கணுறாமைப் பொருட்டுத் தெய்வத்தைக் கருதிச் செய்யும் சாந்தியாகிய இப்பெருவிழா நிகழ்த்தா நின்ற இருபத்தெட்டு நாள் முடியும் துணையும்; ஆயிரம் கண்ணோன் தன்னோடு ஆங்குள நால் வேறு தேவரும் இந்நகரத்திலே இனிது உறைவதாக வரமீந்த இந்திரனோடு அவ்வானுலகத்தே வதிகின்ற நால் வேறு வகைப்பட்ட தேவர்களும்; நலத்தகு சிறப்பின் பால் வேறு தேவரும் – தத்தமக்கே சிறந்துரிமையுடைய பல்வேறு நன்மைகள் காரணமாகப் பல்வேறு பகுதியினராகிய ஏனைய தேவர்களும்; இப்பதிப் படர்ந்து – இந்நகரத்திருத்தலாலுண்டாகும் இன்பத்தை நினைந்து; மன்னன் கரிகால் வளவன் நீங்கிய நாள் – இந் நகரத்து மன்னனாயிருந்த கரிகாற் சோழன் வடநாட்டரசரைப் போரில் வென்று புகழ் பெறக் கருதி வடநாட்டின் மேல் சென்ற நாளிலே; இந் நகர் போல்வது ஓரியல்பினது ஆகி – இப் பூம்புகார் நகரம் வறிதாய்க்  கிடந்ததொரு தன்மையுடையதாய்; பொன்னகர் வறிதா போதுவர் -தாம் வாழுகின்ற பொன்னகரமாகிய அமராபதி நகரம் வறிதாகக் கிடக்கவிட்டு இப் புகார் நகரத்திற்கு வந்திடுவர் என்பது; தொல்நிலை உணர்த்தோர் துணி பொருள் ஆதலில் – பண்டும் பண்டும் இத் திருவிழாக் காலத்துத் தன்மையைக் கூர்ந்துணர்ந்த சான்றோர் தெளிந்ததோருண்மை யாதலாலே (என்றான்) என்க.

(விளக்கம்) தீவகம் – நாவலந்தீவு. இத் தீவகத் தெய்வத்தின் பெயரால் படைப்புக் காலத்திலேயே சம்பாபதி என்னும் நகரம் படைக்கப் பட்டமையான் அதன்கண் நிகழ்த்தும் சாந்தி இத் தீவக முழுமைக்கும் உரியதாம் என்பார் தீவகச் சாந்தி என்றார். ஆயிரங் கண்ணோன் அப் பெருவிழா நிகழ்தரு நாலேழ் நாளும் அங்கு வந்து இனிதிருப்பதாக வரந்தந்தமையால் அங்கு வரும் கடப்பாடுடையான் ஆதலின் அவன் வரவு கூறாமலே அமையு மாகலின் ஏனைய தேவர் வரவை உடனிழகழ்ச்சி ஒடு உருபு கொடுத்தோதினன், நால் வேறு தேவர் என்றது, வசுக்களும் கதிரவரும் உருத்திரரும் மருத்துவருமாய் நால்வகைப்பட்ட தேவர் என்றவாறு.

பால் வேறு தேவர் என்றது பதினெண் வகைப்பட்ட தேவர்களை. படர்ந்து – நினைந்து கரிகால்வளவன்  நீங்கிய நாள் என்றது – கரிகாற் சோழன் வடநாட்டரசரை வென்று வாகை சூடக் கருதி நால்வேறு படைகளோடும் புகார் நகரத்தினின்றும் வடதிசையிற் சென்று விட்டமையால் புகார் நகரம் பொலிவற்று வறிதாய்க் கிடந்த அந்த நாளில் போல என்றவாறு. இந்திரன் முதலியோர் வந்துவிட்டமையால் வறிதே கிடக்கும் பொன்னகரத்திற் குவமையாதல் வேண்டி இங்ஙனம் கூறினர். இவ் வரலாற்றினை இருநில மருங்கின்…….அந்நாள் எனவரும் சிலப்பதிகாரத்திற் காண்க (5: 86-94) தொன்னிலை – பண்டு இப் பெருவிழாவிற்கு அத் தேவர் அவ்வாறு வந்த நிலைமை

வள்ளுவன் நகர் அணி செய்யுமாறு அறிவித்தல்

43-54: தோரண…சேர்த்துமின்

(இதன் பொருள்) தோரண வீதியும் தோமறு கோட்டியும் பூரண கும்பமும் பொலம் பாலிகைகளும் பாவை விளக்கும் பலவுடன் பரப்புமின் – தோரணங்களையுடைய பெருந்தெருக்களிடத்தேயும் குற்றமற்ற அறவோர் கூடும் ஊர்மன்றங்களிடத்தும் நிறை குடங்களையும் பொற்பாலிகைகளையும் பாவை விளக்குகளையும் பலப்பலவாக ஒருங்கே வைத்து அணி செய்யுங்கோள் எனவும்; காய்க்குலைக் கமுகும் வாழையும்  வஞ்சியும் பூங்கொடி வல்லியும் கரும்பும் நடுமின – காய் நிரம்பிய குலைகளோடு கூடிய கமுகுகளையும் வாழைகளையும் வஞ்சிக்கொடிகளையும் அழகிய மலர்க்கொடிகளையும் கரும்புகளையும் நட்டு அணி செய்யுங்கோள்! எனவும் பத்தி வேதிகைக் பசும்பொன் தூணத்து முத்துத் தாமம் முறையொடு காற்றுமின் – நிரலாகத் தெற்றிகளிலே நிறுத்தப்பட்டுள்ள பசும்பொன்னாற் செய்யப்பட்ட தூண்கள் தோறும் முத்து மாலைகளை நிரல்படத் தூக்கி அணி செய்யுங்கோள் எனவும்; விழவுமலி மூதூர் வீதியும் மன்றமும் பழமணல் மாற்றுமின் புதுமணல் பரப்புமின்- திருவிழா மிக்கு நிகழ்தற் கிடமான பழைய இந் நகரத்துச் சிறப்பு வீதிகளிடத்தும் சிறப்பு மன்றங்களிடத்து முள்ள பழைய மணலை மாற்றி அவ்விடமெல்லாம் புதிய மணல் கொணர்ந்து அழகாகக் பரப்புங்கோள் எனவும்; கதலிகைக் கொடியும் காழ் ஊன்று விலோதமும் கோத்துக் கட்டும் கதலிகைக் கொடிகளையும் மூங்கிற் கோலை ஊன்றி அதன் உச்சியிற் கட்டுதற்குரிய கொடிகளையும் இல்லந்தோறும் மதலை மாடங்களினும் முன்றிலினும் நிரலே உயர்த்துங்கோள்! எனவும் என்க.

(விளக்கம்) தோரண வீதி என்பது தோரணத்தால் அழகு செய்தற்கியன்ற சிறப்பான வீதிகளை. தோரணங் கட்டுதல் கூறாமலே அமையும் ஆதலின் தோரணங் கட்டுமின் என்னாது உடம்படுத்துத் தோரண வீதி என்றான். அல்லது எஞ்ஞான்றும் தோரணம் கட்டப்பட்ட வீதி எனக் கோடலுமாம். நன்மக்கள் குழுமியிருத்தற்குரிய மன்றங்கள் என்பான்தோம் அறு கோட்டி என்றான். தோம் – களவு முதலிய குற்றங்கள் கோட்டி – கூட்டம். கூடுமிடத்தை ஆகுபெயரால் கோட்டி என்றான். பொலம் – பொன். பாவை விளக்கு – படிமம் கையிலேந்திய விளக்கு காய்க் குலையை வாழைக்கும் கூட்டுக. வஞ்சி – பொன்னிறமான ஓர் அழகிய பூங்கொடி. இதனைப் பொற் கொடிப் பெயர் வஞ்சி என வெளிப்படைப் பொருளுக்கு அடைபுணர்த்தலான் அறிக. இதனை ஒரு வகை மரமாகக் கருதுவாரும் உளர்.

பத்தியாக வேதிகையில் நிறுத்தப்பட்ட பொற்றூண். தூணம்- தூண். முத்து மாலைகளையும் அழகாக நாலவிடுதல் வேண்டும் என்பான் முறையொடு நாற்றுமின் என்றான். மூதூரில் விழவு மலிதற் கிடமான வீதியும் மன்றமும் என்றவாறு.

கதலிகைக் கொடிமதலை மாடத்தும் வாயிலில் காழூன்றுவிலோதமும் சேர்த்துமின் என்ற குறிப்பினால் கதலிகைக் கொடி யென்றது நூலிலே கோத்துத் தோரணம் போன்று கட்டப்படும் துகிற் கொடி என்க. காழ் – கோல். விலோதம் என்பது உருவினாற் பெரிய துகிற் கொடி போலும். இதனைக் கோல் உச்சியிற் சேர்த்துயர்த்து நடப்படும் என்பது தெரித்தோதப் பட்டது. வினை வேறுபடுதலால் சேர்த்துமின் எனப்பொது வினையால் அறிவித்தனன்.

மதிலை மாடம் – மாளிகையின் முகப்பிலமைந்த சிறு மாடம்.

இதுவுமது

54-63: நுதல்விழி……அகலுமின்

(இதன் பொருள்) நுதல்விழி நாட்டத்து இறையோன் முதலாப் பதிவாழ் சதுக்கத்துத் தெய்வம் ஈறாக – நெற்றிக் கண்ணையுடைய கடவுள் முதலாக இந்நகரத்திலே வதிகின்ற சதுக்கப்பூதம் ஈறாக வமைந்த தெய்வங்கட்கெல்லாம் தம்முன் வேறு வேறு வகைப்பட்ட விழாக்களையும் வேறு வேறு வகையான செய்தொழில்களையும்; ஆறு அறிமரபின் – செய்யும் நெறியினை அறிந்தவர்கள் அவ்வவற்றிற் கேற்ப நிகழ்த்துங்கோள் எனவும்; தண் மணல் பந்தரும் தாழ்தரு பொதியிலும் புண்ணிய நல்லுரை அறிவீர் பொருந்துமின் – குளிர்ந்த புதுமணல் பரப்பட்ட பந்தரிடத்தும் தங்குதற்கியன்ற பொதியில்களிலும் அறமாகிய நன்மொழியை அறிவுறுத்தற்கு அறிந்த சான்றோர் சென்று சேருங்கோள் எனவும்; ஒட்டிய உறுபொருள் வாதிகள் பட்டி மண்டபத்துப் பாங்கு அறிந்து ஏறுமின் – யாமே வெல்வேம் எனச் சூள் மொழிந்து தத்தமக்குப் பொருந்திய பொருளைச் சொற்போரில் வென்று நிலை நாட்டும் சமயவாதிகள் ஆங்காங்குள்ள பட்டிமண்டபங்களிலே ஏறும் மரபறிந்து ஏறக் கடவீர் எனவும்; பற்றா மாக்கள் தம்முடன் ஆயினும் செற்றமும் கலாமும் செய்யாது விலகிச் செல்லுங்கோள் எனவும் என்க.

(விளக்கம்) நெற்றியில் தோற்றுவித்துக் கொண்டு விழித்த கண்ணையுடைய முழுமுதற் கடவுளாகிய சிவபெருமான் என்க. பெருந் தெய்வத்திற்கு சிவபெருமானையும் சிறு தெய்வதிற்குச் சதுக்கப் பூதத்தையும் எடுத்தோதியபடியாம். எனவே, இந்திரனுக்கு எடுக்கும் அவ்விழா நாட்களிடையே அந்நகரத்து உறைகின்ற எல்லாத் தெய்வங்களுக்கும் விழா நிகழ்த்தப்படும் வழக்க மூண்மை பெற்றாம். இதனை,

பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலும்
அறுமுகச் செவ்வே ளணிதிகழ் கோயிலும்

என்றற் றொடக்க முதலாக

வேறுவேறு கடவுளர் சாறுசிறந் தொருபால்

என்னுந் துணையும் நிகழும் இளங்கோவடிகளார் திருமொழியானும் (5:169-78) அறிக. ஆறு அறி மரபின் அறந்தோர் என்றது- விழா நிகழ்த்தும் நெறியினை அறியும் முறையானே அறிந்தோர் என்றவாறு. நிருத்தம் முதலிய ஆறங்களையு முணர்ந்த முறைமையுடைய அந்தணர் என்பாருமுளர். இவ்வுரை பொருந்தாது. என்னை வேத நெறிப்படாத பாசண்டிகள் தெய்வங்களும் உளவாகலின் என்க. ஈண்டுப் புண்ணிய நல்லுரை அறிவர் பொருந்துமின், என்றதற் கேற்பச் சிலப்பதிகாரத்தினும் திறவோர் உரைக்கும் செயல் சிறந் தொருபால் (5:181) என வருதலும் நினைக. ஒட்டிய – சூளுரைத்த. பட்டி மண்டபம் – சொற்போர் நிகழ்த்தும் முறைமை. பற்றா மாக்கன் – பகைவர். செற்றம் – தீராச் சினம். கலாம்- கலகம்; போர்.

இதுவுமது

64-72: வெண்மணல்……..மருங்கென்

(இதன் பொருள்) நன்கு அறிந்தோர் வெள்மணல் குன்றமும் விரிபூஞ்சோலையும் தண்மணல் துருத்தியும் தாழ் பூந்துறைகளும் – நன்மை யறிந்த மாந்தர்களே வெள்ளிய மணற் குன்றுகளிடத்தும் மலர்ந்த பூம்பொழில்களிடத்தும்; குளிர்ந்த மணற்பரப்புக்களையுடைய ஆற்றிடைக் குறைகளிடத்தும் ஆழ்ந்த அழகிய நீர்த்துறைகளிடத்தும் விழாக் காண்டற்கு; தேவரும் மக்களும் ஒத்து உடன் திரிதரும் நால் ஏழ் நாளினும் – தேவர்களும் மக்களும் தம் முள் வேற்றுமை பாராட்டாமல் ஒருங்கே திரிதற்குக் காரணமான விழா நிகழும் இருபத்தெட்டு நாள்களும், எனவும் எடுத்துக் கூறி; ஒளி றுவாள் மறவரும் தேரும் மாவும் களிறும் சூழ்தரக் கண்முரசு இயம்பி – விளங்குகின்ற வாட்படை ஏந்திய மறவரும் தேவர்களும் குதிரைகளும் களிற்றியானைகளும் தன்னைச் சூழ்ந்து வருமாறு குறுந்தடியாலே அவ்விழா முரசின் முகத்திலே தாக்கி முழக்கி; பசியும் பிணியும் பகையும் நீங்கி வசியும் வளனும் சுரக்க என – (இறுதியில்) மக்கள் பசிப்பிணியும் உடற்பிணியும் தம்முள் மாறுபட்டுப் பகைக்கின்ற பகைமையும் நீக்கப் பெற்று நாடெங்கணும் மழையும் தென் முதலிய பொருள் வளமும் மிகுவனவாக என்று வாழ்த்தி; அகநகர் மருங்கு அணி விழா அறைந்தனன் – அகநகரத்தும் புறநகரத்தும் அவ்வள்ளுவன் அழகிய இந்திர விழாவை முரசறைந்து அறிவித்தனன்; என்பதாம்.

(விளக்கம்) மணற் குன்றம், பட்டினப் பாக்கத்திலுள்ளவை. துருத்தி, காவிரியின் கண்ணுள்ளவை. துறை என்றது. காவிரியில் நீராடுதுறையும் கடலின்கட் டுறையும் நீர்நிலைகளிற் றுறையும் ஆகிய அனைத்திற்கும் பொது. தேவர் கரந்துரு வெய்தி மக்கட் குழுவினுட் புகுந்து திரிதலின் ஒத்துடன் திரிதரும் என்றார். முரசறையும் வள்ளுவன் தொடக்கத்தினும் முடிவினும் இங்ஙனம் நாடு அரசன் மக்கள் முதலியோரை வாழ்த்துதன் மரபு. பசியும் பிணியும் பகையும் நீங்கி வசியும் வளனும் சுரக்கென எனவரும். இவ்வடிகள் சிலப்பதிகாரத்தும் இவ்வாறே நிகழ்தலுமறிக. (சிலப்- 5: 72-3).

இனி இக்காதையை – அருந்தவன் உரைப்ப செம்பியன் வானவர் தலைவனை உறைகென நேர்ந்தது கடவாராதலின் சமயக்கணக்கர் முதலியோர் குழீஇ, கால்கொள்கெனப் பிறந்தோன் ஏற்றி இயம்பி ஏத்தி வாழ்த்தி பொழிக ஆகுக பரப்புமின் நடுமின் நாற்றுமின் மாற்றுமின் பரப்புமின் சேர்த்துமின் செய்யுமின் பொருந்துமின் ஏறுமின் அகலுமின் என அணிவிழா நகரினும் மருங்கினும் அறைந்தனன் என இயைத்திடுக.

விழாவறை காதை முற்றிற்று

(இதன் பொருள்) தோரண வீதியும் தோமறு கோட்டியும் பூரண கும்பமும் பொலம் பாலிகைகளும் பாவை விளக்கும் பலவுடன் பரப்புமின் – தோரணங்களையுடைய பெருந்தெருக்களிடத்தேயும் குற்றமற்ற அறவோர் கூடும் ஊர்மன்றங்களிடத்தும் நிறை குடங்களையும் பொற்பாலிகைகளையும் பாவை விளக்குகளையும் பலப்பலவாக ஒருங்கே வைத்து அணி செய்யுங்கோள் எனவும்; காய்க்குலைக் கமுகும் வாழையும்  வஞ்சியும் பூங்கொடி வல்லியும் கரும்பும் நடுமின – காய் நிரம்பிய குலைகளோடு கூடிய கமுகுகளையும் வாழைகளையும் வஞ்சிக்கொடிகளையும் அழகிய மலர்க்கொடிகளையும் கரும்புகளையும் நட்டு அணி செய்யுங்கோள்! எனவும் பத்தி வேதிகைக் பசும்பொன் தூணத்து முத்துத் தாமம் முறையொடு காற்றுமின் – நிரலாகத் தெற்றிகளிலே நிறுத்தப்பட்டுள்ள பசும்பொன்னாற் செய்யப்பட்ட தூண்கள் தோறும் முத்து மாலைகளை நிரல்படத் தூக்கி அணி செய்யுங்கோள் எனவும்; விழவுமலி மூதூர் வீதியும் மன்றமும் பழமணல் மாற்றுமின் புதுமணல் பரப்புமின்- திருவிழா மிக்கு நிகழ்தற் கிடமான பழைய இந் நகரத்துச் சிறப்பு வீதிகளிடத்தும் சிறப்பு மன்றங்களிடத்து முள்ள பழைய மணலை மாற்றி அவ்விடமெல்லாம் புதிய மணல் கொணர்ந்து அழகாகக் பரப்புங்கோள் எனவும்; கதலிகைக் கொடியும் காழ் ஊன்று விலோதமும் கோத்துக் கட்டும் கதலிகைக் கொடிகளையும் மூங்கிற் கோலை ஊன்றி அதன் உச்சியிற் கட்டுதற்குரிய கொடிகளையும் இல்லந்தோறும் மதலை மாடங்களினும் முன்றிலினும் நிரலே உயர்த்துங்கோள்! எனவும் என்க.

(விளக்கம்) தோரண வீதி என்பது தோரணத்தால் அழகு செய்தற்கியன்ற சிறப்பான வீதிகளை. தோரணங் கட்டுதல் கூறாமலே அமையும் ஆதலின் தோரணங் கட்டுமின் என்னாது உடம்படுத்துத் தோரண வீதி என்றான். அல்லது எஞ்ஞான்றும் தோரணம் கட்டப்பட்ட வீதி எனக் கோடலுமாம். நன்மக்கள் குழுமியிருத்தற்குரிய மன்றங்கள் என்பான்தோம் அறு கோட்டி என்றான். தோம் – களவு முதலிய குற்றங்கள் கோட்டி – கூட்டம். கூடுமிடத்தை ஆகுபெயரால் கோட்டி என்றான். பொலம் – பொன். பாவை விளக்கு – படிமம் கையிலேந்திய விளக்கு காய்க் குலையை வாழைக்கும் கூட்டுக. வஞ்சி – பொன்னிறமான ஓர் அழகிய பூங்கொடி. இதனைப் பொற் கொடிப் பெயர் வஞ்சி என வெளிப்படைப் பொருளுக்கு அடைபுணர்த்தலான் அறிக. இதனை ஒரு வகை மரமாகக் கருதுவாரும் உளர்.

பத்தியாக வேதிகையில் நிறுத்தப்பட்ட பொற்றூண். தூணம்- தூண். முத்து மாலைகளையும் அழகாக நாலவிடுதல் வேண்டும் என்பான் முறையொடு நாற்றுமின் என்றான். மூதூரில் விழவு மலிதற் கிடமான வீதியும் மன்றமும் என்றவாறு.

கதலிகைக் கொடிமதலை மாடத்தும் வாயிலில் காழூன்றுவிலோதமும் சேர்த்துமின் என்ற குறிப்பினால் கதலிகைக் கொடி யென்றது நூலிலே கோத்துத் தோரணம் போன்று கட்டப்படும் துகிற் கொடி என்க. காழ் – கோல். விலோதம் என்பது உருவினாற் பெரிய துகிற் கொடி போலும். இதனைக் கோல் உச்சியிற் சேர்த்துயர்த்து நடப்படும் என்பது தெரித்தோதப் பட்டது. வினை வேறுபடுதலால் சேர்த்துமின் எனப்பொது வினையால் அறிவித்தனன்.

மதிலை மாடம் – மாளிகையின் முகப்பிலமைந்த சிறு மாடம்.

இதுவுமது

54-63: நுதல்விழி……அகலுமின்

(இதன் பொருள்) நுதல்விழி நாட்டத்து இறையோன் முதலாப் பதிவாழ் சதுக்கத்துத் தெய்வம் ஈறாக – நெற்றிக் கண்ணையுடைய கடவுள் முதலாக இந்நகரத்திலே வதிகின்ற சதுக்கப்பூதம் ஈறாக வமைந்த தெய்வங்கட்கெல்லாம் தம்முன் வேறு வேறு வகைப்பட்ட விழாக்களையும் வேறு வேறு வகையான செய்தொழில்களையும்; ஆறு அறிமரபின் – செய்யும் நெறியினை அறிந்தவர்கள் அவ்வவற்றிற் கேற்ப நிகழ்த்துங்கோள் எனவும்; தண் மணல் பந்தரும் தாழ்தரு பொதியிலும் புண்ணிய நல்லுரை அறிவீர் பொருந்துமின் – குளிர்ந்த புதுமணல் பரப்பட்ட பந்தரிடத்தும் தங்குதற்கியன்ற பொதியில்களிலும் அறமாகிய நன்மொழியை அறிவுறுத்தற்கு அறிந்த சான்றோர் சென்று சேருங்கோள் எனவும்; ஒட்டிய உறுபொருள் வாதிகள் பட்டி மண்டபத்துப் பாங்கு அறிந்து ஏறுமின் – யாமே வெல்வேம் எனச் சூள் மொழிந்து தத்தமக்குப் பொருந்திய பொருளைச் சொற்போரில் வென்று நிலை நாட்டும் சமயவாதிகள் ஆங்காங்குள்ள பட்டி மண்டபங்களிலே ஏறும் மரபறிந்து ஏறக் கடவீர் எனவும்; பற்றா மாக்கள் தம்முடன் ஆயினும் செற்றமும் கலாமும் செய்யாது விலகிச் செல்லுங்கோள் எனவும் என்க.

(விளக்கம்) நெற்றியில் தோற்றுவித்துக் கொண்டு விழித்த கண்ணையுடைய முழுமுதற் கடவுளாகிய சிவபெருமான் என்க. பெருந் தெய்வத்திற்கு சிவபெருமானையும் சிறு தெய்வதிற்குச் சதுக்கப் பூதத்தையும் எடுத்தோதியபடியாம். எனவே, இந்திரனுக்கு எடுக்கும் அவ்விழா நாட்களிடையே அந்நகரத்து உறைகின்ற எல்லாத் தெய்வங்களுக்கும் விழா நிகழ்த்தப்படும் வழக்க மூண்மை பெற்றாம். இதனை,

பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலும்
அறுமுகச் செவ்வே ளணிதிகழ் கோயிலும்

என்றற் றொடக்க முதலாக

வேறுவேறு கடவுளர் சாறுசிறந் தொருபால்

என்னுந் துணையும் நிகழும் இளங்கோவடிகளார் திருமொழியானும் (5:169-78) அறிக. ஆறு அறி மரபின் அறந்தோர் என்றது- விழா நிகழ்த்தும் நெறியினை அறியும் முறையானே அறிந்தோர் என்றவாறு. நிருத்தம் முதலிய ஆறங்களையு முணர்ந்த முறைமையுடைய அந்தணர் என்பாருமுளர். இவ்வுரை பொருந்தாது. என்னை வேத நெறிப்படாத பாசண்டிகள் தெய்வங்களும் உளவாகலின் என்க. ஈண்டுப் புண்ணிய நல்லுரை அறிவர் பொருந்துமின், என்றதற் கேற்பச் சிலப்பதிகாரத்தினும் திறவோர் உரைக்கும் செயல் சிறந் தொருபால் (5:181) என வருதலும் நினைக. ஒட்டிய – சூளுரைத்த. பட்டி மண்டபம் – சொற்போர் நிகழ்த்தும் முறைமை. பற்றா மாக்கன் – பகைவர். செற்றம் – தீராச் சினம். கலாம்- கலகம்; போர்.

இதுவுமது

64-72: வெண்மணல்……..மருங்கென்

(இதன் பொருள்) நன்கு அறிந்தோர் வெள்மணல் குன்றமும் விரிபூஞ்சோலையும் தண்மணல் துருத்தியும் தாழ் பூந்துறைகளும் – நன்மை யறிந்த மாந்தர்களே வெள்ளிய மணற் குன்றுகளிடத்தும் மலர்ந்த பூம்பொழில்களிடத்தும்; குளிர்ந்த மணற் பரப்புக்களையுடைய ஆற்றிடைக் குறைகளிடத்தும் ஆழ்ந்த அழகிய நீர்த்துறைகளிடத்தும் விழாக் காண்டற்கு; தேவரும் மக்களும் ஒத்து உடன் திரிதரும் நால் ஏழ் நாளினும் – தேவர்களும் மக்களும் தம் முள் வேற்றுமை பாராட்டாமல் ஒருங்கே திரிதற்குக் காரணமான விழா நிகழும் இருபத்தெட்டு நாள்களும், எனவும் எடுத்துக் கூறி; ஒளி றுவாள் மறவரும் தேரும் மாவும் களிறும் சூழ்தரக் கண்முரசு இயம்பி – விளங்குகின்ற வாட்படை ஏந்திய மறவரும் தேவர்களும் குதிரைகளும் களிற்றியானைகளும் தன்னைச் சூழ்ந்து வருமாறு குறுந்தடியாலே அவ்விழா முரசின் முகத்திலே தாக்கி முழக்கி; பசியும் பிணியும் பகையும் நீங்கி வசியும் வளனும் சுரக்க என – (இறுதியில்) மக்கள் பசிப்பிணியும் உடற்பிணியும் தம்முள் மாறுபட்டுப் பகைக்கின்ற பகைமையும் நீக்கப் பெற்று நாடெங்கணும் மழையும் தென் முதலிய பொருள் வளமும் மிகுவனவாக என்று வாழ்த்தி; அகநகர் மருங்கு அணி விழா அறைந்தனன் – அகநகரத்தும் புறநகரத்தும் அவ்வள்ளுவன் அழகிய இந்திர விழாவை முரசறைந்து அறிவித்தனன்; என்பதாம்.

(விளக்கம்) மணற் குன்றம், பட்டினப் பாக்கத்திலுள்ளவை. துருத்தி, காவிரியின் கண்ணுள்ளவை. துறை என்றது. காவிரியில் நீராடுதுறையும் கடலின்கட் டுறையும் நீர்நிலைகளிற் றுறையும் ஆகிய அனைத்திற்கும் பொது. தேவர் கரந்துரு வெய்தி மக்கட் குழுவினுட் புகுந்து திரிதலின் ஒத்துடன் திரிதரும் என்றார். முரசறையும் வள்ளுவன் தொடக்கத்தினும் முடிவினும் இங்ஙனம் நாடு அரசன் மக்கள் முதலியோரை வாழ்த்துதன் மரபு. பசியும் பிணியும் பகையும் நீங்கி வசியும் வளனும் சுரக்கென எனவரும். இவ்வடிகள் சிலப்பதிகாரத்தும் இவ்வாறே நிகழ்தலுமறிக. (சிலப்- 5: 72-3).

இனி இக்காதையை – அருந்தவன் உரைப்ப செம்பியன் வானவர் தலைவனை உறைகென நேர்ந்தது கடவாராதலின் சமயக்கணக்கர் முதலியோர் குழீஇ, கால்கொள்கெனப் பிறந்தோன் ஏற்றி இயம்பி ஏத்தி வாழ்த்தி பொழிக ஆகுக பரப்புமின் நடுமின் நாற்றுமின் மாற்றுமின் பரப்புமின் சேர்த்துமின் செய்யுமின் பொருந்துமின் ஏறுமின் அகலுமின் என அணிவிழா நகரினும் மருங்கினும் அறைந்தனன் என இயைத்திடுக.

விழாவறை காதை முற்றிற்று

 Logged

 Anu

Golden Member

Posts: 2463
Total likes: 48
Karma: +0/-0

Re: மணிமேகலை

« Reply #2 on: February 28, 2012, 08:46:27 AM »

  1. ஊரலருரைத்த காதை

இரண்டாவது ஊரலருரைத்த பாட்டு

அஃதாவது விழாவறைதல் கேட்ட மாந்தர் மாதவியை நினைந்து நாடகக் கணிகை துறத்தல் நாணுத்தக வுடைத்து என யாண்டும் பழிதூற்றுதல் கேட்ட சித்திராபதி அப் பழி பிறந்தமையை வயந்த மாலையை ஏவி மாதவிக்கு அறிவித்த செய்தியைக் கூறுகின்ற செய்யுள் என்றவாறு.

இதன்கண் -விழாவறைந்த வண்ணமே பூம்புகார் நகரம் மக்களால் அணிசெய்யப்பட்டது. உரியநாளிலே  இந்திர விழாவும் தொடங்கி நிகழ்வதாயிற்று. இறந்த யாண்டில் இவ் விழாவிற் கலந்து கொண்டு மக்கட்குக் கிடைத்தற்கரிய கலையின்பம் நல்கிய தன் மகள் மாதவி, கோவலனுக்கும் கண்ணகிக்கும் ஊழ்வினை உருந்து வந்தூட்டிய கொடுந்துயர் கேட்டு மணிமேகலையை வான் துயர் உறுக்கும் கணிகையர் கோலம் காணா தொழிகெனக் கோதைத் தாமம் குழலொடு களைந்து போதித்தானம் புரிந்தறங் கொண்டமையாலே இவ் விழாவிற்கு மாதவியும் மணிமேகலையும் வாராமையாலே சித்திராபதி பெரிதும் வருந்தியவளாய் மாதவியின் தோழியாகிய வயந்த மாலையை அழைத்து நீ மாதவியின்பாற் சென்று இம்மாநகரத்து மக்கள் அவளைப் பற்றித் தூற்றாநின்ற பழிச் சொல்லை எடுத்துக் கூறுக; என்று பணித்தமையும் அத்தோழியும் அவள் துறவுக்குப் பெரிதும் வருந்தியிருந்தமையாலே அவ்வாறே சென்று மாதவியிருந்த தவப் பள்ளியில் மலர் மண்டபத்தே சென்று அவள் வாடிய மேனிகண்டு உளம் வருந்தி அந் நகரத்து மாந்தர் எல்லாம் நாடகக்கலை கற்றுத் துறைபோகிய நீ நற்றவம் புரிந்தது நாணுத் தகவுடைத்து என்று தூற்றும் பண்பில்லாப் பழி மொழியை எடுத்துக் கூறித் தனனோடு வருமாறு அழைத்த செய்தியும்

அதுகேட்ட மாதவி தான் உயிரோடிருந்ததே நாணம் அற்ற செயலாம் என்று வருந்துபவள் பத்தினிப் பெண்டிரியல்பு கூறி அவருள் கண்ணகி தலை சிறந்தமையும் கூறி அவள் மகளாகிய மணிமேகலை இழி தகவுடைய நாடகக் கணிகையாகாள், யானும் இத் துறவினின்று மீண்டு வருவேன் அல்லேன் காண் என்றியம்பி அறவண அடிகளார் தனக்கு அறங்கூறி ஒருவா றுய்வித்தலாலே உயிரோடிருக்கின்றேன். யான் இனி இப் பள்ளியினின்று வருவேனல்லேன் எனக் கூறி விடுப்பதும் வயந்தமாலை கையறவுடையளாய் மீண்டு செல்லுதலும் ஆகிய இச்செய்திகள் கூறப்படும்.

நாவல் ஓங்கிய மா பெருந் தீவினுள்
காவல் தெய்வதம் தேவர்கோற்கு எடுத்த
தீவகச் சாந்தி செய்தரு நல் நாள்
மணிமேகலையொடு மாதவி வாராத்
தணியாத் துன்பம் தலைத்தலை மேல் வர
சித்திராபதி தான் செல்லல் உற்று இரங்கி
தத்து அரி நெடுங் கண் தன் மகள் தோழி
வயந்தமாலையை வருக எனக் கூஉய்
பயம் கெழு மா நகர் அலர் எடுத்து உரை என
வயந்த மாலையும் மாதவி துறவிக்கு  02-010

அயர்ந்து, மெய் வாடிய அழிவினள் ஆதலின்
மணிமேகலையொடு மாதவி இருந்த
அணி மலர் மண்டபத்து அகவயின் செலீஇ
ஆடிய சாயல் ஆய் இழை மடந்தை
வாடிய மேனி கண்டு உளம் வருந்தி
பொன் நேர் அனையாய்! புகுந்தது கேளாய்!
உன்னோடு இவ் ஊர் உற்றது ஒன்று உண்டுகொல்?
வேத்தியல் பொதுவியல் என்று இரு திறத்துக்
கூத்தும் பாட்டும் தூக்கும் துணிவும்
பண் யாழ்க் கரணமும் பாடைப் பாடலும்  02-020

தண்ணுமைக் கருவியும் தாழ் தீம் குழலும்
கந்துகக் கருத்தும் மடைநூல் செய்தியும்
சுந்தரச் சுண்ணமும் தூ நீர் ஆடலும்
பாயல் பள்ளியும் பருவத்து ஒழுக்கமும்
காயக் கரணமும் கண்ணியது உணர்தலும்
கட்டுரை வகையும் கரந்து உறை கணக்கும்
வட்டிகைச் செய்தியும் மலர் ஆய்ந்து தொடுத்தலும்
கோலம் கோடலும் கோவையின் கோப்பும்
காலக் கணிதமும் கலைகளின் துணிவும்
நாடக மகளிர்க்கு நன்கனம் வகுத்த   02-030

ஓவியச் செந் நூல் உரை நூல் கிடக்கையும்
கற்று துறைபோகிய பொன் தொடி நங்கை
நல் தவம் புரிந்தது நாண் உடைத்து என்றே
அலகு இல் மூதூர் ஆன்றவர் அல்லது
பலர் தொகுபு உரைக்கும் பண்பு இல் வாய்மொழி
நயம்பாடு இல்லை நாண் உடைத்து என்ற
வயந்தமாலைக்கு மாதவி உரைக்கும்
காதலன் உற்ற கடுந் துயர் கேட்டு
போதல்செய்யா உயிரொடு நின்றே
பொன் கொடி மூதூர்ப் பொருளுரை இழந்து  02-040

நல் தொடி நங்காய்! நாணுத் துறந்தேன்
காதலர் இறப்பின் கனை எரி பொத்தி
ஊது உலைக் குருகின் உயிர்த்து அகத்து அடங்காது
இன் உயிர் ஈவர் ஈயார் ஆயின்
நல் நீர்ப் பொய்கையின் நளி எரி புகுவர்
நளி எரி புகாஅர் ஆயின் அன்பரோடு
உடன் உறை வாழ்க்கைக்கு நோற்று உடம்பு அடுவர்
பத்தினிப் பெண்டிர் பரப்புநீர் ஞாலத்து
அத் திறத்தாளும் அல்லள் எம் ஆய் இழை
கணவற்கு உற்ற கடுந் துயர் பொறா அள்  02-050

மணம் மலி கூந்தல் சிறுபுறம் புதைப்ப
கண்ணீர் ஆடிய கதிர் இள வன முலை
திண்ணிதின் திருகி தீ அழல் பொத்தி
காவலன் பேர் ஊர் கனை எரி ஊட்டிய
மா பெரும் பத்தினி மகள் மணிமேகலை
அருந் தவப் படுத்தல் அல்லது யாவதும்
திருந்தாச் செய்கைத் தீத் தொழில் படாஅள்
ஆங்கனம் அன்றியும் ஆய் இழை கேளாய்
ஈங்கு இம் மாதவர் உறைவிடம் புகுந்தேன்
மற வணம் நீத்த மாசு அறு கேள்வி   02-060

அறவண அடிகள் அடிமிசை வீழ்ந்து
மா பெருந் துன்பம் கொண்டு உளம் மயங்கி
காதலன் உற்ற கடுந் துயர் கூறப்
பிறந்தோர் உறுவது பெருகிய துன்பம்
பிறவார் உறுவது பெரும் பேர் இன்பம்
பற்றின் வருவது முன்னது பின்னது
அற்றோர் உறுவது அறிக! என்று அருளி
ஐவகைச் சீலத்து அமைதியும் காட்டி
உய் வகை இவை கொள் என்று உரவோன் அருளினன்
மைத் தடங் கண்ணார் தமக்கும் எற் பயந்த  02-070

சித்திராபதிக்கும் செப்பு நீ என
ஆங்கு அவள் உரை கேட்டு அரும் பெறல் மா மணி
ஓங்கு திரைப் பெருங் கடல் வீழ்த்தோர் போன்று
மையல் நெஞ்சமொடு வயந்த மாலையும்
கையற்றுப் பெயர்ந்தனள் காரிகை திறத்து என்  02-075

உரை

1-9: நாவல்……..உரையென

(இதன் பொருள்) நாவல் ஓங்கிய மாபெருந் தீவினுள் – நாவன் மரம் உயர்ந்து நிற்பதனால் நாவல்தீவு எனப் பெயர் பெற்ற மிகவும் பெரிய இத்தீவின்; காவல் தெய்வம் தேவர் கோற்கு எடுத்த தீவகச் சாந்தி செய்தரு நல்நாள் – முதல் முதலாகச் சம்பாபதி என்னும் காவல் தெய்வமானது பொதுவாக இத்தீவில் வாழ்வோர்க்கு அரக்கர் முதலியோராலுண்டாகும் தீங்கு அகலவும் பசியும் பிணியும் பகையும் நீங்கி வசியும் வளனும் உடையராய் இனிது வாழ்தற் பொருட்டும் அமரர்க்கரசனாகிய இந்திரனுக்குச் செய்த பெருவிழா இவ்வாண்டினும் நிகழ்த்தப் பெற்று வருகின்ற நன்மையுடைய நாளிலே; சித்திராபதி மணிமேகலையொடு மாதவி வாராத் தணியாத் துன்பம் தலைத்தலை மேல்வா – சித்திராபதி மானவள் மணிமேகலையும் மாதவியும் வந்து கலந்து கொள்ளாமையாலே வேறெவ்வாற்றானும் தணிக்க வொண்ணாத துன்பம் நினைக்குந்தோறும் ஒருகாலைக்கு ஒருகால் பெருகியே வருதலானே ; செல்லல் உற்று இரங்கி -பெரிதும் வருந்தி அவர் திறத்திலே மிகவும் இரக்கமெய்தி; அரிதத்து நெடுங்கண் தன் மகள் தோழி – செவ்வரி படர்ந்த நெடிய கண்ணை யுடைய தன் மகளாகிய மாதவியின் உசாஅத்துணைத் தோழியாகிய; வயந்த மாலையை வருக எனக் கூஉய் – வயந்த மாலை என்பாளைத்  தன்பால் வருக என்று அழைத்து; பயம்கெழு மாநகர் அலர் எடுத்து உரைஎன வயந்தமாலாய் நீ இப்பொழுதே மாதவியின்பாற் சென்று பயன் மிக்க இப்பெரும் நகரத்துள் வாழும் மாந்தர் இடந்தொறும் இடந்தொறும் அவள் திறத்திலே தூற்றுகின்ற பழியை அவள் உளங்கொள்ளுமாற்றால் எடுத்துக் கூறுவாயாக என்று ஏவா நிற்றலாலே; என்க.

(விளக்கம்) காவல் தெய்வம் – சம்பாபதி. தீவகத்தே வாழ்வோரைக் காத்தலே தன் கடமை யாதலின் அவர்கட்குத் தீங்கு வாராமைப் பொருட்டும் நலம் பெருகுதற் பொருட்டும் மருதத்திணைத் தெய்வமாகிய இந்திரனைக் குறித்து முதன் முதலாகத் தொடங்கிய விழா வென்க சோழனாடு மருதவைப்பு மிக்க நாடாதலின் அந்நாட்டுத் தலை நகரத்தில் இவ் விழா வெடுத்தல் பொருத்தமாதலுணர்க.

செய்தருநாள் என்னும் வினைத்தொகை: செய்கின்ற நிகழ்காலங் குறித்து நின்றது. சித்திராபதி, மாதவியின் கலை நல வளர்ச்சிக்கு பெரிதும் பாடுபட்ட நற்றாய் ஆகலானும் மாதவியின் துறவு காரணமாக மாதவியையும் அவள் மகளாகிய மணிமேகலையையும் அவர் தம் கலைச்செல்வத்தையும் ஒருசேர இழந்தவளாதலானும் அவட்கெய்திய துன்பம் தணியாத் துன்பமாய் தலைத்தலை மேல்வர என்றார். தலைத்தலை என்றது நினைக்குந்தோறும் நினைக்குந்தோறும் எனக் காலத்தின் மேனின்றது. செல்லல் – துன்பம். மாதவி கண்ணழகில் மிகவும் சிறப்புடையள் ஆதலால் அவள்தன்கண்ணே அவள் நினைவின் முன்னிற்றல் தோன்ற, தத்தரி நெடுங்கண் தன் மகள் என்றார். ஆசிரியர் இளங்கோவடிகளாரும் அவளைக் குறிப்பிடுந்தோறும் மறவாமே மாமலர் நெடுகண் மாதவி என்றே இனிதி னியம்புவர். கூஉய்-கூவி; அழைத்து மாதவி வாராள் என்னும் நினைவால் உரைத்து அழைத்து வருதி என்னாது, உரை என்றொழிந்தாள். அவள் பழியஞ்சும் பண்புடையாள் ஆதலின் வருவதாயின் இது கேட்டுவருதல் கூடும் என்னும் கருத்தினால் அலர் எடுத்துரை என்றாள். தன் துயர முதலிய கூறற்க என்பது குறிப்பு.

வயந்த மாலையின் அன்பு

10-15: வயந்த………வருந்தி

(இதன் பொருள்) வயந்த மாலையும் மாதவி துறவிக்கு அயர்ந்து மெய்வாடிய அழிவினன் ஆதலின் – அவ் வயந்தமாலை என்னும் தோழி தானும் மாதவியின்பால் பேரன்பு கொண்டவளாதலின் அவள் மேற்கொண்ட துறவொழுக்கத்திற்குச் சித்திராபதியினுங் காட்டில் மிகவும் நெஞ்சழிந்து ஊணும் உறக்கமும் அருகி உடல் மெலிதற்குக் காரணமான துன்பமுடையளாதலாலே; மணிமேகலை மாதவியிருந்த அணிமலர் மண்டபத்து அகவயின் செலீஇ- ஏது நிகழ்ச்சி எதிர்ந்துள்ளமையாலே புத்தப் படிமத்திற்கு அணிதற்குரிய மலர்மாலை தொடுக்கு மிடமாகிய மண்டபத்திற்குள்ளே புகுந்து; ஆறிய சாயல் ஆய் இலை மடந்தை வாடிய மேனி கண்டு உளம் வருந்தி – பண்டு அசைத்த சாயலையும் அழகிய அணிகலன்களையுமுடைய அயகிய இளையளாயிருந்த அம் மாதவியினுடைய துயரத்தாலும் நோன்பாலும் வாடியிருந்த திருமேனியைக் கண்டு மேலும் வருந்திக் கூறுபவள் என்க.

(விளக்கம்) துறவி- துறவு. மாதவியின்பாற் சென்ற வயந்தமாலை அவளைத் தனியிடத்தேயும் காணலாம்; அவ்வாறன்றி இவள்வாயிலாய் மணிமேகலைக்கு ஏது நிகழ்ச்சி எதிர்ந்துள்ளமையின் அதற்கிணங்க மணிமேகலையோடிருந்ததொரு செவ்வியற் காண்பாளாயினள் என்பது குறிப்பு.

ஆடிய சாயல் – அசைந்த மென்மை. மடந்தை – ஈண்டு இளைமை யுடையோள் என்னும் குறிப்புப் பொருள் மேனின்றது. செலீஇ- சென்று.

வயந்தமாலை மாதவிக்குக் கூறுதல்
16-26: பொன்னே…….கணக்கும்

(இதன் பொருள்) பொன் நேர் அனையாய் – திருமகளையே ஒக்கும் நங்காய்; புகுந்தது கேளாய் – உன் செயல் காரணமாக இப்பொழுது நம் மாநகரத்தே நிகழ்ந்ததொரு செய்தியைக் கூறுவேன் கேட்டருள்க; உன்னோடு இவ்வூர் உற்றது உண்டு கொல் நாடக மேத்தும் ஆடலணங் காகிய நின்னோடு இம் மாநகரத்து மரந்தர்க் குண்டான பகைமை ஏதேனும் உளதோ! இல்லையன்றே அங்ஙனமாகவும்; வேத்தியல் பொதுவியல் என்று இரு திறத்து கூத்தும் – பாட்டும் தூக்கும் துணிவும் வேந்தர்க்காடும் கூத்தும் எல்லா மாந்தர்க்கும் பொதுவாக ஆடும் கூத்தும் என்று வகுத்துக் கூறப்படுகின்ற இருவகைப்பட்ட  கூத்துக்களின் இலக்கணங்களும், அவற்றிற் கியன்ற பண் வகையும் செந்தூக்கு முதலிய ஏழுவகைப் பட்ட தூக்கு வகையும் தாளவகையும்; பண்யாழ் கரணமும் – பண்ணுறுத்திய யாழ்க் கரணங்களும்; பாடைப் பாடலும் – அகக் கூத்தும் புறக் கூத்துமாகிய இருவகைக் கூத்திற்குமுரிய உருக்கள் எனப்படும் பாடல்களும் தண்ணுமைக் கருவியும் – தண்ணுமை முதலிய தோற் கருவி வாசிக்கும் வகையும்; தாழ் தீங்குழலும் – மந்த இசையினாற் சிறப்பெய்தும் வேய்ங்குழல் வாசிக்கும் வகையும்; கந்துகக் கருத்தும் மடைநூல் செய்தியும் – பந்தாடுதலின்கண் சிறந்த கருத்து வகையும், அட்டில் நூலறிவும் அடிசல் சமைக்கும் தொழில் வகையும்; சுந்தரச் சுண்ணமும் – அழகு தருகின்ற பொற் சுண்ணம் முதலியன செய்தலும்; தூநீராடலும் – தூய நீர்விளையாட்டு வகையும்; பாயல் பள்ளியும் – காதலரோடு இனிதாகப் பள்ளி கொள்ளுதற்கியன்ற கலைகளும்; பருவத்து ஒழுக்கமும் – வேனிற் பருவம் முதலிய அறுவகைப் பருவங்கட்கும் ஏற்ப ஒழுகும் ஒழுக்கமும்; காயக் கரணமும் – உடம்பினாற் கலவிப் பொழுதின் நிகழ்த்தும் அறுபத்துநான்கு வகைத் தொழின் முறைகளும்; கண்ணியது உணர்த்தலும் – குறிப்பறிந்து கொள்ளும் திறமும்; கட்டுரை வகையும் – பொருள் பொதிந்த சொற்களாலே பேசுகின்ற வகைகளும்; கரந்துறை கணக்கும் – பிறர் அறியாவண்ணம் மறைந்து வதியும் முறையும் என்க.

(விளக்கம்) வேத்தியல் – அரசர் பொருட்டுச் சிறப்பாக ஆடும் கூத்து. பொதுவியல் – பொதுமக்கள் எல்லாரும் கண்ட களிக்க ஆடும் கூத்து. இங்ஙனம் கூறுவர்(சிலப்) அரும்பதவுரையாசிரியர். அடியார்க்கு நல்லார், இவையிரண்டும் நகைத்திறச் சுவைபற்றி நிகழும் விதூடகக் கூத்து; எனவும் இவற்றை வசைக்கூத்தும் எனவும் விளக்குவர். பாட்டு – பண். இவற்றியல்பெலாம் சிலப்பதிகாரத்தில் அரங்கேற்று காதையில் கண்டுகொள்க.

தூக்கு – தாளங்களின் வழிவரும் செந்தூக்கு மதலைத்தூக்கு துணி புத்தூக்கு கோயிற்றூக்கு நிவப்புத்தூக்கு கழாற்றூக்கு நெடுந்தூக்கு என்னும் ஏழுதூக்குக்களுமாம். துணிவு – தாளம். அவை – கொட்டும், அசையும், தூக்கும், அளவும். இவற்றுள் கொட்டென்பது அரை மாத்திரை; வடிவு க அசையென்பது ஒரு மாத்திரை; வடிவு, எ தூக்கென்பது இரண்டு மாத்திரை; வடிவு உ அளவு என்பது மூன்று மாத்திரை; வடிவு ஃ என்பர். பண்ணியாழ்: வினைத்தொகை. கரணம் – செய்கை. படைப்பாடல் – அகக்கூத்திற்கும் புறக்கூத்திற்கும் இயன்ற இசைப்பாடல்கள். இசைப்பாடல் எனினும் உருக்கள் எனினும் ஒக்கும். இக்காலத்தார் உருப்படி எனலும் காண்க. தண்ணுமை, இதனை அகப்புறவு முழவு என்ப. குழல் – வேய்ங்குழல் கந்துகம் – பந்து மடைநூல் சமையற்கலை பற்றிய நூல். செய்தியும் – மடைநூலும் மடைத்தொழிற் செய்கியும் என்க. பாயற் பள்ளி – இடக் கரடக்கல். பருவம் – வேனில் முதலிய பருவம். மகளிர்க்குரிய பேதை பெதும்பை முதலியனவுமாம். காயக்கரணம்: இடக்கர் அடக்கு. கட்டுரை – சொல்லாட்டம். கரந்துறை கணக்கு – மறைந்து வதிதற்கியன்ற முறை.

இதுவுமது

27-37: வட்டிகை……..உரைக்கும்

(இதன் பொருள்) வட்டிகைச் செய்தியும் – எழுதுகோல் கொண்டியற்றும் தொழிற்றிறமும்; மலர் ஆய்ந்து தொடுத்தலும் மலர்களை வண்ணம் வடிவம் மணம் முதலியவற்றால் ஆராய்ந்து அழகாகத் தொடுத்தலும்; கோலங்  கோடலும் – உள்வரிக் கோலம் புனைந்து கொள்ளலும்; கோøயின் கோப்பும் – முத்துப் பவழம் முதலியவற்றைக் கோவைப் படுத்தலும்; காலக் கணிதமும் – காலக்கணக்கிய லறிதலும்; கலைகளின் துணிவும் – அறுபத்துநான்கு வகைப்பட்ட கலைகளை அறிந்து தெளிதலும்; நாடக மகளிர்க்கு நன்கனம் வகுத்த ஓவியச் செந்நூல் உரைநூல் கிடக்கையும் – நாடகமாடும் மகளிர் பயில்வதற் கென்றே அறிஞர்களால் நன்றாக வகுத்து வரையப்பட்ட ஓவியங்களையுடைய செவ்விய நூலில் அவை கிடக்கும் முறையே அறித்தலும் ஆகிய இக் கலைகளை எல்லாம்; கற்றுத் துறைபோய் பொற்றொடி நங்கை – நன்கு ஐயந்திரிபறப் பயின்று அந் நாடகத் துறையில் தலைவரம்பாகத் திகழ்கின்ற பொன்தொடி யணிந்த நாடகமகளிரிற் றலைசிறந்த நாடகக் கணிகை யொருத்தி; நல்தவம் புரிதல் சிறந்த தவவொழுக்கத்தை மேற்கொள்வது; நாண் உடைத்து ஆராயுங்கால் நாணுதற்குரியதொரு செயலாகும் என்று சொல்லி; அலகில் மூதூர் ஆன்றவர் அல்லது – அளவில்லாத மாந்தர் வாழுகின்ற நந்தம் பழைய நகரத்தின்கண்ணுறைகின்ற ஆன்றவிந்தடங்கிய சான்றோரை யல்லதும்; பலர் தொகுபு உரைக்கும் பண்பு இல் வாய்மொழி – பிறரும் இடந்தொறும் கூட்டம் கூட்டமாகக் கூடியிருந்து பேசுகின்ற பண்பாடு இல்லாத உண்மையோடு கூடிய பழமொழி; நயம்பாடு இல்லை – நம்மனோர்க்கு அழகுண்டாக்குதல் இல்லை யாகலின்; நாணுடைத்து என்ற – அதனைக்கேட்கும் நம்மனோர்க்கும் நாணந் தருதலைத் தன்பாலுடைய தாகவே உளதுகாண்! என்று கூறிய; வயந்த மாலைக்கு மாதவி உரைக்கும் – வயந்த மாலைக்க மறு மொழியாக அவளை நோக்கி மாதவி கூறுகின்றாள் என்க.

(விளக்கம்) வட்டிகை – எழுதுகோல். கோலம் – உள்வரிக்கோலம்; அஃதாவது பல்வேறு வேடங்களும் புனைந்து கொள்ளும் திறம். காலக் கணிதம் – காலத்தைக் கணிக்கும் தொழில். துணிவு – தெளிவு. ஓவியச் செந்நூல் – நாடகமகளிர்க் கியன்ற நிற்றல் இருத்தல் முதலியவற்றையும் ஒற்றைக்கை இரட்டைக்கை முதலிய அவினய வகைகளையும் ஓவியமாக வரைந்து காட்டப்பட்ட நூல் என்க. அவ்வோவியங்கள் முறைபடுத்திக்கிடத்தப்பட்டு அவற்றின் விளக்கவுரைகளும் வரையப்பட்டிருத்தலும் இந்நூல் நாடக மகளிர் பொருட்டே ஆக்கப்பட்டது என்பதும் தோன்ற நாடக மகளிர்க்கு நன்கனம் வகுத்த ஓவியச் செந்நூல் உரைநூற் கிடக்கை என்று விதந்தோதினார். இப்பழி கூறுதற்குரியோர் ஆன்றவிந்தடங்கிய சான்றோரேயாவர், அவரையன்றியும் ஏனையோரும் தூற்றுகின்றனர் என்பாள் ஆன்றவரல்லது பலர்தொகுப்புரைக்கும் வாய்மொழி என்றாள். பிறர்பழிதூற்றும் மொழி தீயமொழியாதலின் பண்பில் மொழி என்றாள். வாய்தந்தன கூறுகின்றனர் என்பாள் வாய்மொழி என்றாள். அவர்மொழியில் வாய்மையும் உளது என்பாள் அங்ஙனம் கூறினன் என்பதும் ஒன்று. என்னைச் அச் செயல் வாய்மையாகவே நாணுத் தருவ தொன்றே என்பது அவட்கும் உடம்பாடாகலின் என்க.

மாதவி வயந்தமாலைக்குக் கூறும் மறுமொழி

38-48: காதலன்…….பெண்டிர்

(இதன் பொருள்) நற்றொடி நங்காய் காதலன் உற்ற கடுந்துயர் கேட்டே செய்யா உயிரொடு நின்றே – அழகிய வளையலணிந்த நங்கையாகிய தோழியே கேள்! யான் துறவினால் நாணுந்துறந்தேனல்லேன் எளியேன் என் ஆருயிர்க் காதலனாகிய கோவலன் எய்திய பெரிய துயரச் செய்தியைக் கேட்டிருந்தேயும் யாக்கையை விட்டுத் தானே போகமாட்டாத புல்லிய உயிரைத் தாங்கிப் பின்னும் வாழ்வுகந்திருக்கின்றமையால்; பொன் கொடி மூதூர் பொருள் உரை இழந்து – அழகிய கொடியுயர்த்தப்பட்ட இப் பழைய நகரத்துள் வாழும் மாந்தர் எல்லாம் ஒருவாராய் என்னைப் பாராட்டுதற் கியன்ற பொருள் பொதிந்த புகழ் மொழியையும் இழந்து; நாணுத்துறந்தேன் – நாணத்தைக் கைவிட்டவளே ஆகின்றேன் காண்! பத்தினிப் பெண்டிர் – வாய்மையான பத்தினி மகளிரின் இயல்பு கேள்; காதலர் இறப்பின் – தம்மாற் காதலிக்கப்பட்ட தங்கேள்வர் ஊழ்வினை காரணமாக இறந்துபடின்; கனை எரி பொத்தி – மிக் கெரியுமாறு நெருப்பை மூட்டி; உலை ஊது குருகின் உயிர்த்து – கொல்லனுலையில் ஊதப்படுகின்ற துருத்தியின் மூக்குக் கனலோடு உயிர்க்கும் உயிர்ப்புப் போன்று வெய்தாக உயிர்த்து; அகத்து அடங்காது – தம்முள்ளத்தே அடங்க மாட்டாமையாலே; இன் உயிர் ஈவர் – தமதினிய உயிரைக் நீத் தொழிவர்; ஈயாராயின் – அவ்வாறு உயிர் நீத்திலராய விட்டதே; நல்நீரப் பொய்கையின் நளி எரி புகுவர் – குளிர்ந்த நீர்நிலை புகுந்து மாய்ந்தொழிவர்; நளி எரி புகாஅர் ஆயின அன்பரோடு உடனுரை வாழ்க்கைக்கு நோற்று உடம்படுவர் – அவ்வாறு செறிந்த தீயினுள் முழுகி மாயாதவிடத்தே இறந்துபட்ட தம் காதலரோடு மறுமைக்கண் கூடியுறையும் வாழ்க்கையை எய்தும் பொருட்டுக் கைம்மை நோன்பின் மேற்கொண்டிருந்து இம்மை மாறியபொழுது அக் காதலரோடு கூடி வாழா நிற்பர்காண் என்றான் என்க.

(விளக்கம்) வயந்தமாலை கற்றுத்துறை போகிய நங்கை நற்றவம் புரிந்தது நாணுடைத்து என்று ஊர் அலர் தூர்க்கின்றது என்றாளாதலின், மாதவி அங்ஙனம் அலர்தூற்றுதற்குக் காரணம், அவர் தவறு மன்று; நான் தவம் புரிந்ததுமன்று. காதலன் கொலையுண்ட செய்தி கேட்டபின்னரும் யான் நாணம்கெட்டவளாகின்றேன். அவர் தூற்றம் அலரும் இவ்வகையால் வாய்மையை ஆகின்றது. எனவும், வாய்மை யாகவே யான் பத்தினிமகளாயிருந்தால் கடுந்துயர் கேட்டவுடன் என் உயிர் தானே போயிருத்தல் வேண்டும்;  அங்ஙனம் போந்துணிவற்ற புல்லுயிர் தாக்கிப் பின்னும் வாழ்வு கந்தருக்கின்றமையாலே புகழையும் இழந்தேன். பழியையும் சுமந்தேயிருக்கின்றேன் என்று தன்னையே நொந்துரைக்கின்ற இம்மொழிகள் அவளுடைய பேரன்பை மிகத் தெளிவாகக் காட்டுதலுணர்க. நற்றொடிநங்காய் என்று விளித்தது இகழ்ச்சிக் குறிப்பு.

கனை எரி – மிக்க நெருப்பு. எரி – உலையின்கண்ணிடப்பட்ட நெருப்பு. இதனைத் துன்பமாகிய தீ மூளப்பட்டு என்பாருமுளர். அவ்வுரை பொருந்தாமை யுணர்க நளி – செறிவு. எரிபுகுவர் என்றது தீயின மூழ்கி இறப்பர் என்றவாறு. உடம்பு அடுவர் எனக் கண்ணழித்து உடம்பை வருத்துவர் என்பாருமுளர்.

இனி, இம்மாதவி கூற்றிற்கு,

ஓருயிராக உணர்க உடன்கலந் தோர்க்(கு)
ஈருயி ரென்ப ரிடைதெரியார்-போரில்
விடனேந்தும் வேலோற்கும் வெள்வளையி னாட்கும்
உடனே யுலந்த துயிர்  (புற-வெண்பாமாலை, 268)

என வரும் வரலாற்று வெண்பாவிற் றலைவியும்,

அரிமா னேந்திய அமளிமிசை யிருந்த
திருவீழ் மார்பின் தென்னர் கோமான்
தயங்கிணர்க கோதை தன்துயர் பொறாஅன்
மயங்கினன் கொல்லென மலரடி வருடித்
தலைத்தா ணெடுமொழி தன்செவி கோளாள்
கலக்கங் கொள்ளாள் கடுந்துயர் பொறாஅள்
மன்னவன் செல்வுழிச் செல்க யானெனத்
தன்னுயிர் கொண்டவ னுயிர்தே டினள்போல்
பெருங்கோப் பெண்டு மொருங்குடன் மாய்ந்தனள்

என வரும் நெடுஞ்செழியன் பெருந்தேவியும் காதலர் இறந்தவுடன் இன்னுயிர்ந்தமைக்கும், நன்னரீப்பொய்கையின் நளிபெயரிபுக்கமைக்கு,

பெருங்காட்டுப் பண்ணிய கருங்கோட்டீமம்
நுமக்கரி தாகுக தில்ல எமக்கெம்
பெருந்தோட் கணவன் மாய்ந்தென அரும்பற
வள்ளித ழவிழ்ந்த தாமரை
நள்ளிரும் பொய்கையுந் தீயுமோ ரற்றே                 (புறம்-246)

எனக் கூறித் தன் கணவன் பூதப்பாண்டியன் இறந்துழி தீப்பாய்ந்திறந்த பெருங்கோப்பெண்டு என்னும் புலமையாட்டியும் சிறந்த எடுத்துக் காட்டாவார். மேலும், உடனுறைவாழ்க்கைக்கு நோற்கும் நோன்பினியல்பை,

அணில்வரிக் கொடுங்காய் வாள்போழ்ந் திட்ட
காழ்போல் நல்விளர் நறுநெய் தீண்டா
தடையிடைக் கிடந்த கைபிழி பிண்டம்
வெள்ளெட் சாந்தொடு புளிபெய் தட்ட
வேளை வெந்தை வல்சி யாகப்
பரற்பெய் பள்ளிப் பாயின்று வதியும்
உயவற் பெண்டிர்                                              (புறம் 246)

எனவரும். அப்பெருங்கோப் பெண்டின் கூற்றே சான்றாதலும் உணர்க.

மாதவி மணிமேகலை நாடகக்கணிகை யாகாளெனல்

48-57: பரப்பு…..படாஅள்

(இதன் பொருள்) பரப்பு நீர் ஞாலத்து அத்திறத்தாளும் அல்லள்-கடல் சூழ்ந்த இந்நிலவுலகத்தேயான் கூறிய அத்தகையபத்தினிப் பெண்டிர் போலவாளும் அல்லள்; எம் ஆயிழை – எங்கள் கண்ணகி நல்லாள்; கணவற்கு உற்ற கடுந்துயர் பொறாஅள்-தன் காதலனுக்கு எய்திய பெருந்துன்பத்தைக் கேட்டு நெஞ்சுபொறுக்கொணாத துன்பமுடையளாகி; மணம்மலி கூந்தல் சிறுபுறம் புதைப்பக் கண்ணீராடிய கதிர் இளவனமுலை – நறுமண மிக்குக் கமழ்கின்ற தன் கூந்தல் சரிந்து தன் முதுகினை மறைப்பவும்; தன் கண்ணினின்றும் வீழ்ந்த துன்பக் கண்ணீரின் மூழ்கிய ஒளியுடைய அழகிய இளமுலையில் ஒன்றனைத் தன் கையாலேயே; தண்ணிதின திருகி – திட்பமாகப் பற்றித் திருகி வட்டித்து எறிந்து; தீ அழல் பொத்தி – தீயாகிய அழலைக் கொளுவி; காவலன் பேரூர் கனை எரி மூட்டிய – பாண்டிய மன்னனுடைய தலை நகரமாகிய மதுரை முழுவதும் பெரிய தீயை மூட்டிய தெய்வத்தன்மையுடைய; மாபெரும் பத்தினி-மிகப் பெரிய பத்தின்யல்லளோ?; மகள் மணிமேகலை – அக் கற்புத் தெய்வத்தின் மகள் ஆவாள் இம் மணிமேகலை; அருந்தவப் படுத்தல் அல்லது – ஆதலின் அக் கற்புத் தெய்வத்தின் சிறப்பிற் கேற்ப இம் மணிமேகலையை அரிய தவவொழுக்கத்தின் பால் செலுத்துவதல்லது; யாவதும் திருந்தாச் செய்கைத் தீத்தொழில் படாஅள் – சிறிதும் உளம் திருந்துதற்குக் காரணமாகத் தீய செய்கைகளையுடைய பரத்தைமைத் தொழிலில் ஈடுபடாள் காண் என்றாள் என்க.

(விளக்கம்) தன் அன்புரிமை தோன்றக் கண்ணகியை மாதவி எம்மாயிழை என்கிறாள். எம் மென்னும் பொதுப் பெயர் கோவலனையும் மணிமேகலையையும் உளப்படுத்தியது. திருகுதல் அருமை தோன்றத் திண்ணிதிற்றிருகி என்றாள். எம் மாயிழை ஞாலத்துள்ள யான் கூறிய பத்தினிப் பெண்டிரின் திறத்தினும் மேம்பட்டுப் பேரூர் எரிமூட்டிய தெய்வக் கற்புடையாள். அத்தகைய பத்தினி மகள் மணிமேகலை. ஆதலின் தவப்படுத்தற்கே உரியள் தீத் தொழிலில் ஈடுபடாள் என மணிமேகலையைக் கண்ணகி மகளாகவே கொண்டு கூறினள். என்னை கோவலன் என்னோடு கேண்மை கொண்டிராவிடின் இவள் அவள் திருவயிற்றிலேயே கருவாகிப் பிறந்திருப்பாள் மன்! என்னும் கருத்தால். இப்பொழுது நிலம் இழந்ததேனும் வித்து உயர்ந்ததாகலின் அஃது இந்நிலத்தினும் தனக் கியன்ற விளைவையே செய்யும் என்பாள் தீத் தொழிற் படாள் என்றாள்.

மாதவி அறவணர்பால் அறங்கேட்டு அமைதி கொண்டமை கூறத் தானும் மீளாமையைக் குறிப்பாக அறிவித்தல்

58-63: ஆங்கனம்…….கூற

(இதன் பொருள்) ஆங்கனம் அன்றியும் – அவ்வாறு மணிமேகலை நிலையிருப்பது மல்லாமல்; ஆயிழை கேளாய் – வயந்தமாலாய் இனி என்னிலைமை இயம்புவேன் கேட்பாயாக; ஈங்கு இம்மாதவர் உறைவிடம் புகுந்தேன் – யான் கணிகையே ஆதலின் காதலன் உற்ற கடுந்துயர் கேட்டுப் போதல் செல்லாவுயிரொடு நின்றேனாயினும் ஆற்றெணாத் துயருழந்து அதற்கு ஆறுதல் தேடி இங்கு இப் பௌத்த சங்கத்தார் உறைகின்ற இத் தவப் பள்ளியிற் புகுந்தேன் காண் ஏது நிகழ்ச்சி எதிர்ந்துளதாதலாற் போலும். இவ்விடத்தே; மறவணம் நீத்த மாசு அறு கேள்வி அறவணவடிகள் அடிமீசை வீழ்ந்து – தீவினையின் நிழலும் ஆடாவண்ணம் அவற்றைத் துவரக் கடிந்தமையால் மாசு அற்ற அறக் கேள்வியையுடைய அறவணடிகள் என்னும் சிறப்புப் பெயர் பெற்ற அறவோரைக் காணப்பெற்று அவர் திருவடிகளிலே வீழ்ந்து வணங்கி; மாபெருந் துன்பம் கொண்டு – மிகப் பெரிய துன்பத்தைச் சுமந்து கொண்டு ஆற்றாமையாலே; உளம் மயங்கி – நெஞ்சழித்து செய்வதறியாமல் மயங்கி அவர்பால்; காதலன் உற்ற கடுந்துயர் கூற – என ஆருயிர்க் காதலன் கொலைக்களப் பட்ட மிக்க துன்பத்தைக் கூறாநிற்றலாலே; என்க

(விளக்கம்) ஆங்கனம் அன்றியும் என்றது மணிமேகலை அவ்வாறு ஆதலன்றியும் இனி என்றிறம் உரைப்பேன் என்பதுபட நின்றது. ஆயிழை: வயந்தமாலை; அண்மைவிளி. எனக்கும் ஏது நிகழ்ச்சி எதிர்ந்துளதாதலாற் போலும் ஈங்கு இம்மாதவர் உறைவிடம் புக்கேன் என்பது அவள் கருத்தாகக் கொள்க. மறவணம்-மறத்தின் வண்ணம். தீவினையின் தன்மை நீத்த அறவண அடிகள். மாசறு கேள்வி அறவண அடிகள் எனத் தனித்தனி இயையும் . அறவணன் – அறத்தின் திருவுருவமானவன். எனவே இஃது அச் சங்கத்தாரீப்த சிறப்புப் பெயர் என்பதுணரப்படும்.சாதலில் இன்னாததில்லை ஆகலின் கொலையுண்டமையைக் கடுந்துயர் என்றாள்.

அறவணர் அருவிய அறவுரைகள்

64-66: பிறந்தோர்……..அருளினன்

(இதன் பொருள்) பிறந்தோர் உறுவது பெருகிய துன்பம் – அது கேட்ட அடிகளார் அடிச்சிக்குப் பெரிதும் இரங்கி என் துயரத்திற்கு ஆறுதல் கூறுபவர் அளியோய் வருந்தற்க! உலகின் கண் பிறப்பெடுத்துழலவோர் யாவரேனும் எய்துவது ஒருகாலைக் கொருகால் மிகுத்து வரந்துன்பமட்டுமே காண்; பிறவார் உறுவது பெரும் பேரின்பம் – இன்ப பிறவாநிலை எய்னோர் யாவர் அவர்க்கு மட்டுமே எய்துவதாம் மக்கள் அவாவுகின்ற மாபெரும் பேரின்பம்; முன்னது பற்றின் வருவது – துன்பம் அனைத்திற்கும் பிறப்பிடமாகிய முற் கூறப்பட்ட பிறப்புப் பற்றினாலே வருவதொன்றும்; பின்னது பின்னே கூறப்பட்ட இன்பநிலைகளமாகிய பிறவாமையோ; அற்றோர் உறுவது அறிக – பற்றற்றோர்க்குத் தானே எய்துவதொன்றாம்; அறிக என்றருளி- இவ்வாய்மைகள் நான்கினையும் நன்கு அறிந்து கொள்ளக் கடவாய் என்று முற்பட இவற்றை அறிவித்துப் பின்னர்; ஐவகைச் சீலத்து அமைதியும் காட்டி – பற்றறுதிக்குக் காரணமான ஐந்து வகைப்பட்ட ஒழுக்கங்களி னிலக்கணங்களையும் நன்கு அறிவுறுத்து; இவை உய்வகை கொள் என்று உரவோன் காட்டினன்-இவையே நீ எய்திய மாபெருந் துன்பக்கடலினின்றும் கரையேறி உறுதியாகக் கடைப்பிடித்துக் கொள்ளக் கடவாய் என்று அப் பேரறிவாளர் திருவாய் மலர்ந்தருளினர் காண் என்றாள் என்க

(விளக்கம்) ஆதலால் யான் ஒருவாறு அம் மாபெருந் துன்பத்தினின்றும் நீங்கி அமைதி பெற்றுள்ளேன் காண் என்பது இதனாற் போந்த குறிப்புப் பொருளாம் என்க.

இப்பகுதியில் புத்தபெருமான் போதி மூலத்துப் பொருந்தியிருந்துழிக் கண்ட மெய்க் காட்சிகள் நான்கும் சுருங்கக்கூறி விளங்க வைத்திருக்கும் தண்டமிழ் ஆசான் சாத்தனார்தம் புலமை வித்தகம் நினைந்து நினைந்து மகிழற்பாலதாம்.

பௌத்த சமயத்தின் உயிராக விளங்குவன இந்த நான்கு வாய்மைகளேயாம். அவை, துன்பம், துன்பந் துடைத்தல், துன்பவருவாய், துன்பம் துடைத்தல் நெறி என்னும் இவையேயாம்.

இவையிற்றுள்-பிறப்பு துன்பங்கட் கெல்லாம் நிலைக்களனாதலின் பிறந்தோர் உறுவது பெருகிய துன்பம் என முதல் வாய்மை கூறப்பட்டது பிறவாமையே இன்பநிலையம் ஆதலின் பிறவார் உறுவது பெரும் பேரின்பம் என இரண்டாம் வாய்மை இயம்பப்பட்டது. முன்னது என்றது பிறப்பினை; அதற்குக் காரணம் பற்றுடைமை ஆதலின், முன்னது பற்றின் வருவது என மூன்றாவதாகிய வாய்மை துன்ப வருவாய்(வரும் வழி) கூறப்பட்டது. பிறவாமையே துன்பம் துடைக்கும் நெறி ஆகலின் பின்னது-பற்றறுதி. பின்னது அற்றோர் உறுவது என்பதனால் நான்காம் வாய்மை நவிலப்பட்டமை நுண்ணிதின் உணர்க. இவ் வாய்மைகள் நான்கும் உலகிலுள்ள எல்லாச் சமயங்கட்கும் எல்லா நாட்டிற்கும் எக் காலத்திற்கும் பொருந்தும் சிறப்புடையன வாதலும் உணர்க.

இங்ஙனம் துணிபொருள் கூறியவர் அவற்றை எய்துதற்குரிய ஏதுவும் இயம்பினர் என்பாள் ஐவகைச் சீலத்து அமைதியும் காட்டி அருளினன் என்றாள். சீலம்-ஒழுக்கம். அவையாவன: காமம் கொலைகள் பொய் களவு என்னும் ஐந்து தீவினைகளையும் துவரக் துயந்தொழுகுதலாம். காமத்தைத் துறந்தபொழுதே துன்பம் இல்லையாக; இவ்வாற்றல் யான் ஈண்டு ஒருவாறு துன்பந் துடைக்கும் நெறிநிற்றலால் உயர்ந்திருக்கின்றேன் என்று மாதவி வயந்த மாலைக்குத் தன்னிலை கூறத் தானும் வரமாட்டாமையைக் குறிப்பினால் கூறியபடியாம். தான் உழந்த மாபெருந் துன்பத்தை ஆற்றுவித்த அறவண அடிகளின் அறிவாற்றலின் சிறப்புத் தோன்ற அவரை உரவோள் என்று அறியும் ஆற்றலும் ஒருங்கே உணர்த்தும் பெயரால் கூறினள் என்க.

வயந்தமாலை வறிதே மீண்டுபோதல்

70-75: மைத்தடங்கண்……….திறத்தென்

(இதன் பொருள்) நீ மைத்தடங் கண்ணார் தமக்கும் என் பயந்த சித்திராபதிக்கும் என்னிலைமையைக் கூறுவாயாக என்று ஆங்கு அவள் உரை கேட்டு அவ்விடத்தே மாதவி கூறிய மொழியைக் கேட்டவளவிலே; வயந்த மாலையும் காரிகை திறத்துக் கையற்று-மாதவியை மீட்டுச் செல்லும் கருத்தோடு வந்த அவ் வயந்தமாலை தானும் அம் மாதவி திறத்திலே தான் பின் ஏதும் சொல்லவா செய்யவோ இயலாத கையாறு நிலையுடையளாகி; அரும் பெறல் மாமணி ஓங்கு திசைப் பெருங்கடல் வீழ்த்தோர் போனறு அரிதாகப் பெற்றதொரு மாணிக்க மணியை உயர்ந்த அலைகளையுடைய பெரிய கடலிலே போகட்டுவிட்டவர் போலே; மையல் நெஞ்சமொடு பெயர்ந்தனள்-பெரிதும் மயக்கமுற்ற நெஞ்சத்தோடே வறிதே செல்வாளாயினள்; என்பதாம்.

(விளக்கம்) தன் தோழிமார் தன் கூற்றிற்குப் பொருளுணரார் ஆயினும் அவர்க்கும் கூறுக என்னும் இகழ்ச்சி தோன்ற அவரை மைத்தடங்கண்ணார் என்றாள். என்னை அழகு செய்த புறக்கண்ணேயுடையர் அகக் கண்ணில்லா அவர்க் கெல்லாம் இவை விளங்க மாட்டா என்பதே அவள் கருத்தாதலின் என்க.

இனி இத்துணைத் துன்பத்திற்கும் ஆளாகும் என்னைப் பெற்றமையாலும் அவள் கருதியது நிறைவேறாமையாலும் அவள் தீவினையாட்டியே ஆதல்வேண்டும் என்பது குறிப்பாகத் தோன்றற் பொருட்டு அன்னைக்கு என்னாது தனக்கும் அவட்கும் அயன்மை விளங்கித் தோன்ற எற்பயந்த சித்திராபதி எனத் தன் நற்றாயைக் கூறினள். இதனால் அவட்குப் பற்றறுதி கைவந்தமையும் புலப்படுதலறிக. வயந்தமாலையும் அன்பு பொருளாக அன்றிப் பொருட்பொருட்டே அழைக்கவந்தவள் ஆதலின் அவட்கு மாமணியை இழந்தவர் உவமையாக எடுக்கப்பட்ட நயமுணர்க.

இனி இக்காதையை-நன்னாளில் மாதவி வாராத்துன்பம் மேல்வர, சித்திராபதி இரங்கி வயந்தமாலையைக் கூவி அலரை மாதவிக்கு உரைஎன அவள் சென்று மாதவியைக் கண்டு வருந்தி அனையாய் கேளாய் வாய்மொழி நாணுடைத்து என அவட்கு மாதவி உரைக்கும் துறந்தேன் மணிமேகலை தீத்தொழில் படாஅள் யான் புகுந்து வீழ்ந்து மயங்கிக் கூற உரவோன் அறிகென்று நாட்டி, அருளினன். இதனைக் கண்ணார்க்கும் சித்திராபதிக்கும் நீ சென்று செப்பு என வயந்தமாலையும் கையற்றுப் பெயர்ந்தனள் என இயைத்திடுக.

ஊரலர் உரைத்த காதை முற்றிற்று.

 Logged

 Anu

Golden Member

Posts: 2463
Total likes: 48
Karma: +0/-0

Re: மணிமேகலை

« Reply #3 on: February 28, 2012, 08:48:47 AM »

  1. மலர்வனம் புக்க காதை

மூன்றாவது மலர்வனம் புக்கபாட்டு

அஃதாவது-மாதவியும் வயந்த மாலையும் சொல்லாட்டம் நிகழ்த்தும் பொழுது மணிமேகலை புத்த படிமத்திற்கு அணிய வேண்டிய மலர் மாலை தொடுக்கும் செயலீடுபட்டிருந்தாளாக, அவர்கள் சொல்லாட்டத்திடையே மாதவி கூற்றில் தன் அன்புத் தந்தையாகிய கோவலன் உற்ற கொடுந்துயரும் பேசப்பட்டமையால் அச் செய்தியால் அவள் உள்ளத்தே துன்ப நினைவுகள் தோன்ற அவன் உகுத்த கண்ணீர் மலர்மாலையில் வீழ்ந்து அதனை வாலாமையுடையதாக்கியது. அதனால் அற்றே நாள் வழி பாட்டிற்குப் புதிய மலர் பறித்து வந்து தொடுக்க கருதி அம்மலர் பறித்து வருதற்கு மாதவி மணிமேகலையை ஏவினள்; அவட்குத் துணையாகச் செல்வதற்குச் சுதமதி என்னும் அன்புமிக்க பிக்குணி தானே முன்வந்தளள். ஆகவே மணிமேகலையும் சுதமதியும் புதியமலர் கொண்டு வருதற் பொருட்டுத் தீதற்றதாகக் கருதப்படும் உவவனம் என்னும் மலர் வனத்தில் சென்று புகுந்த செய்தியைக் கூறும் செய்யுள் என்றவாறு.

இதன்கண்- மணிமேகலைக்குத் தந்தையின் பாலுள்ள அன்பின் தன்மையும்; அவளுடைய பேரழகின் சிறப்பும் சாத்தனாரால் வியத்தகுமுறையில் கூறப்பட்டுள்ளன.

மேலும் சுதமதி தன் வரலாறு கூறுதலும்; அந்நகரத்திலுள்ள மலர்ப்பொழில்கள் பலவற்றின் பல்வேறு தன்மைகளைக் கூறுதலும் உவவனத்திலுள்ள பளிக்கறை பற்றிய வரலாறு கூறுதலும் பெரிதும் சுவை பயப்பனவாம். சுதமதியும் மணிமேகலையும் மலர் வனம் நோக்கிச் செல்லும் பொழுது வழியிலே நிகழும் ஒரு களிமகன் செயல் நகைச்சுவை தருவதாம் மணிமேகலையைக் கண்டிரங்குவார் மொழிகள் வாயிலாய்ப் புலவர் மணிமேகலையின் பேரழகைப் புலப்படுத்தும் வித்தகப் புலமை பெரிதும் இன்பம் பயப்பதாம். இவ்வாறு இக் காதையில் பல்வேறு சுவைகள் நிரம்பியுள்ளன.

வயந்தமாலைக்கு மாதவி உரைத்த
உயங்கு நோய் வருத்தத்து உரைமுன் தோன்றி
மா மலர் நாற்றம் போல் மணிமேகலைக்கு
ஏது நிகழ்ச்சி எதிர்ந்துளது ஆதலின்
தந்தையும் தாயும் தாம் நனி உழந்த
வெந் துயர் இடும்பை செவிஅகம் வெதுப்ப
காதல் நெஞ்சம் கலங்கிக் காரிகை
மாதர் செங் கண் வரி வனப்பு அழித்து
புலம்பு நீர் உருட்டிப் பொதி அவிழ் நறு மலர்
இலங்கு இதழ் மாலையை இட்டு நீராட்ட  03-010

மாதவி மணிமேகலை முகம் நோக்கி
தாமரை தண் மதி சேர்ந்தது போல
காமர் செங் கையின் கண்ணீர் மாற்றி
தூ நீர் மாலை தூத்தகை இழந்தது
நிகர் மலர் நீயே கொணர்வாய் என்றலும்
மது மலர்க் குழலியொடு மா மலர் தொடுக்கும்
சுதமதி கேட்டு துயரொடும் கூறும்
குரவர்க்கு உற்ற கொடுந் துயர் கேட்டு
தணியாத் துன்பம் தலைத்தலை எய்தும்
மணிமேகலை தன் மதி முகம் தன்னுள்  03-020

அணி திகழ் நீலத்து ஆய் மலர் ஒட்டிய
கடை மணி உகு நீர் கண்டனன் ஆயின்
படை இட்டு நடுங்கும் காமன் பாவையை
ஆடவர் கண்டால் அகறலும் உண்டோ?
பேடியர் அன்றோ பெற்றியின் நின்றிடின்?
ஆங்கனம் அன்றியும் அணி இழை! கேளாய்
ஈங்கு இந் நகரத்து யான் வரும் காரணம்
பாராவாரப் பல் வளம் பழுநிய
காராளர் சண்பையில் கௌசிகன் என்போன்
இருபிறப்பாளன் ஒரு மகள் உள்ளேன்  03-030

ஒரு தனி அஞ்சேன் ஒரா நெஞ்சமோடு
ஆராமத்திடை அலர் கொய்வேன் தனை
மாருதவேகன் என்பான் ஓர் விஞ்சையன்
திரு விழை மூதூர் தேவர்கோற்கு எடுத்த
பெரு விழாக் காணும் பெற்றியின் வருவோன்
தாரன் மாலையன் தமனியப் பூணினன்
பாரோர் காணாப் பலர் தொழு படிமையன்
எடுத்தனன் எற் கொண்டு எழுந்தனன் விசும்பில்
படுத்தனன் ஆங்கு அவன் பான்மையேன் ஆயினேன்
ஆங்கு அவன் ஈங்கு எனை அகன்று கண்மாறி  03-040

நீங்கினன் தன் பதி நெட்டிடை ஆயினும்
மணிப் பூங் கொம்பர் மணிமேகலை தான்
தனித்து அலர் கொய்யும் தகைமையள் அல்லள்
பல் மலர் அடுக்கிய நல் மரப் பந்தர்
இலவந்திகையின் எயில் புறம் போகின்
உலக மன்னவன் உழையோர் ஆங்கு உளர்
விண்ணவர் கோமான் விழாக் கொள் நல் நாள்
மண்ணவர் விழையார் வானவர் அல்லது
பாடு வண்டு இமிரா பல் மரம் யாவையும்
வாடா மா மலர் மாலைகள் தூக்கலின்  03-050

கைபெய் பாசத்துப் பூதம் காக்கும் என்று
உய்யானத்திடை உணர்ந்தோர் செல்லார்
வெங்கதிர் வெம்மையின் விரி சிறை இழந்த
சம்பாதி இருந்த சம்பாதி வனமும்
தவா நீர்க் காவிரிப் பாவை தன் தாதை
கவேரன் ஆங்கு இருந்த கவேர வனமும்
மூப்பு உடை முதுமைய தாக்கு அணங்கு உடைய
யாப்பு உடைத்தாக அறிந்தோர் எய்தார்
அருளும் அன்பும் ஆர் உயிர் ஓம்பும்
ஒரு பெரும் பூட்கையும் ஒழியா நோன்பின்  03-060

பகவனது ஆணையின் பல் மரம் பூக்கும்
உவவனம் என்பது ஒன்று உண்டு அதன் உள்ளது
விளிப்பு அறைபோகாது மெய் புறத்து இடூஉம்
பளிக்கறை மண்டபம் உண்டு அதன் உள்ளது
தூ நிற மா மணிச் சுடர் ஒளி விரிந்த
தாமரைப் பீடிகை தான் உண்டு ஆங்கு இடின்
அரும்பு அவிழ்செய்யும் அலர்ந்தன வாடா
சுரும்பு இனம் மூசா தொல் யாண்டு கழியினும்
மறந்தேன் அதன் திறம் மாதவி கேளாய்
கடம் பூண்டு ஓர் தெய்வம் கருத்திடை வைத்தோர்  03-070

ஆங்கு அவர் அடிக்கு இடின் அவர் அடி தான் உறும்
நீங்காது யாங்கணும் நினைப்பிலராய் இடின்
ஈங்கு இதன் காரணம் என்னை? என்றியேல்
சிந்தை இன்றியும் செய் வினை உறும் எனும்
வெந் திறல் நோன்பிகள் விழுமம் கொள்ளவும்
செய் வினை, சிந்தை இன்று எனின் யாவதும்
எய்தாது என்போர்க்கு ஏது ஆகவும்
பயம் கெழு மா மலர் இட்டுக்காட்ட
மயன் பண்டு இழைத்த மரபினது அது தான்
அவ் வனம் அல்லது அணி இழை! நின் மகள்  03-080

செவ்வனம் செல்லும் செம்மை தான் இலள்
மணிமேகலையொடு மா மலர் கொய்ய
அணி இழை நல்லாய்! யானும் போவல் என்று
அணிப் பூங் கொம்பர் அவளொடும் கூடி
மணித் தேர் வீதியில் சுதமதி செல்வுழீஇ
சிமிலிக் கரண்டையன் நுழை கோல் பிரம்பினன்
தவல் அருஞ் சிறப்பின் அராந்தாணத்து உளோன்
நாணமும் உடையும் நன்கணம் நீத்து
காணா உயிர்க்கும் கையற்று ஏங்கி
உண்ணா நோன்போடு உயவல் யானையின்  03-090

மண்ணா மேனியன் வருவோன் தன்னை
வந்தீர் அடிகள்! நும் மலர் அடி தொழுதேன்
எம் தம் அடிகள்! எம் உரை கேண்மோ
அழுக்கு உடை யாக்கையில் புகுந்த நும் உயிர்
புழுக்கறைப் பட்டோர் போன்று உளம் வருந்தாது
இம்மையும் மறுமையும் இறுதி இல் இன்பமும்
தன் வயின் தரூஉம் என் தலைமகன் உரைத்தது
கொலையும் உண்டோ கொழு மடல் தெங்கின்
விளை பூந் தேறலில் மெய்த் தவத்தீரே!
உண்டு தௌிந்து இவ் யோகத்து உறு பயன்  03-100

கண்டால் எம்மையும் கையுதிர்க்கொணம் என
உண்ணா நோன்பி தன்னொடும் சூளுற்று
உண்ம் என இரக்கும் ஓர் களிமகன் பின்னரும்
கணவிர மாலையின் கட்டிய திரள் புயன்
குவி முகிழ் எருக்கின் கோத்த மாலையன்
சிதவல் துணியொடு சேண் ஓங்கு நெடுஞ் சினைத்
ததர் வீழ்பு ஒடித்துக் கட்டிய உடையினன்
வெண் பலி சாந்தம் மெய்ம் முழுது உரீஇப்
பண்பு இல் கிளவி பலரொடும் உரைத்து ஆங்கு
அழூஉம் விழூஉம் அரற்றும் கூஉம்  03-110

தொழூஉம் எழூஉம் சுழலலும் சுழலும்
ஓடலும் ஓடும் ஒரு சிறை ஒதுங்கி
நீடலும் நீடும் நிழலொடு மறலும்
மையல் உற்ற மகன் பின் வருந்தி
கையறு துன்பம் கண்டு நிற்குநரும்
சுரியல் தாடி மருள் படு பூங் குழல்
பவளச் செவ் வாய் தவள வாள் நகை
ஒள் அரி நெடுங் கண் வெள்ளி வெண் தோட்டு
கருங் கொடிப் புருவத்து மருங்கு வளை பிறை நுதல்
காந்தள் அம் செங் கை ஏந்து இள வன முலை  03-120

அகன்ற அல்குல் அம் நுண் மருங்குல்
இகந்த வட்டுடை எழுது வரிக்கோலத்து
வாணன் பேர் ஊர் மறுகிடைத் தோன்றி
நீள் நிலம் அளந்தோன் மகன் முன் ஆடிய
பேடிக் கோலத்துப் பேடு காண்குநரும்
வம்ப மாக்கள் கம்பலை மூதூர்
சுடுமண் ஓங்கிய நெடு நிலை மனைதொறும்
மை அறு படிவத்து வானவர் முதலா
எவ் வகை உயிர்களும் உவமம் காட்டி
வெண் சுதை விளக்கத்து வித்தகர் இயற்றிய  03-130

கண் கவர் ஓவியம் கண்டு நிற்குநரும்
விழவு ஆற்றுப் படுத்த கழி பெரு வீதியில்
பொன் நாண் கோத்த நன் மணிக் கோவை
ஐயவி அப்பிய நெய் அணி முச்சி
மயிர்ப் புறம் சுற்றிய கயிற்கடை முக் காழ்
பொலம் பிறைச் சென்னி நலம் பெறத் தாழ
செவ் வாய்க் குதலை மெய் பெறா மழலை
சிந்துபு சில் நீர் ஐம்படை நனைப்ப
அற்றம் காவாச் சுற்று உடைப் பூந் துகில்
தொடுத்த மணிக் கோவை உடுப்பொடு துயல்வர  03-140

தளர் நடை தாங்காக் கிளர் பூண் புதல்வரை
பொலந் தேர் மீமிசைப் புகர் முக வேழத்து
இலங்கு தொடி நல்லார் சிலர் நின்று ஏற்றி
ஆல் அமர் செல்வன் மகன் விழாக் கால்கோள்
காண்மினோ என கண்டு நிற்குநரும்
விராடன் பேர் ஊர் விசயன் ஆம் பேடியைக்
காணிய சூழ்ந்த கம்பலை மாக்களின்
மணிமேகலை தனை வந்து புறம் சுற்றி
அணி அமை தோற்றத்து அருந் தவப் படுத்திய
தாயோ கொடியள் தகவு இலள் ஈங்கு இவள்  03-150

மா மலர் கொய்ய மலர்வனம் தான் புகின்
நல் இள அன்னம் நாணாது ஆங்கு உள
வல்லுநகொல்லோ மடந்தை தன் நடை?
மா மயில் ஆங்கு உள வந்து முன் நிற்பன
சாயல் கற்பனகொலோ தையல் தன்னுடன்?
பைங் கிளி தாம் உள பாவை தன் கிளவிக்கு
எஞ்சலகொல்லோ? இசையுந அல்ல
என்று இவை சொல்லி யாவரும் இனைந்து உக
செந் தளிர்ச் சேவடி நிலம் வடு உறாமல்
குரவமும் மரவமும் குருந்தும் கொன்றையும்  03-160

திலகமும் வகுளமும் செங் கால் வெட்சியும்
நரந்தமும் நாகமும் பரந்து அலர் புன்னையும்
பிடவமும் தளவமும் முட முள் தாழையும்
குடசமும் வெதிரமும் கொழுங் கால் அசோகமும்
செருந்தியும் வேங்கையும் பெருஞ் சண்பகமும்
எரி மலர் இலவமும் விரி மலர் பரப்பி
வித்தகர் இயற்றிய விளங்கிய கைவினைச்
சித்திரச் செய்கைப் படாம் போர்த்ததுவே
ஒப்பத் தோன்றிய உவவனம் தன்னைத்
தொழுதனள் காட்டிய சுதமதி தன்னொடு
மலர் கொய்யப் புகுந்தனள் மணிமேகலை என்  03-171

உரை

மணிமேகலை தந்தையையும் தாயையும் நினைத்து வருந்துதல்

1-6: வயந்த…….வெதுப்ப

(இதன் பொருள்) மாமலர் நாற்றம் போல் பெரிய நாளரும்பு மலர்ந்துழி அதன்கண் மணம் தோன்றுமாறு போலே; மணிமேகலைக்கு ஏது நிகழ்ச்சி எதிர்ந்துளது ஆதலின்-மணிமேகலை முற்பிறப்பிலே செய்த வினைத்தொகுதி அவளுள்ளே முதிர்ந்து தன் பயனை ஊட்டுதற்கியன்ற செவ்வி பெற்றிருத்தலாலே; வயந்தமாலைக்கு மாதவி உரைத்த-சித்திராபதியின் ஏவலாலே தனக்கு ஊரலர் உரைத்துக் தொருட்டவந்த வயந்த மாலைக்கு மறுமொழியாக மாதவி கூறிய; உயங்கு நோய் வருத்தத்து உரைமுன் தோன்றி-வாடுதற்குக் காரணமான நோயாகிய துன்பக்கிளவியை நிலைக்களனாகக் கொண்டு பிறந்து; தந்தையும் தாயும் தாம் நனி உழத்த வெம்துயர் இடும்பை செவியகம் வெதுப்ப-தன் தந்தையும் தாயுமாகிய கோவலனும் கண்ணகியும் பெரிதும் நுகர்ந்த வெவ்விய துன்பத்தோடு கூடிய தீச் சொல்லாகிய நெருப்பு அவளுடைய செவியினுட் புகுந்து நெஞ்சத்தைச் சுடா நிற்றலாலே, என்க.

(விளக்கம்) வயந்தமாலைக்கு மாதவியுரைத்த உரை. உயங்குநோய் வருத்தத்து உரை எனத் தனித்தனி இயையும். உயங்குதல்-வாடுதல். நோயாகிய வருத்தத்தைத் தன் பொருளாகக் கொண்ட உரையை ஒற்றுமை கருதி வருத்தத்து உரை என்றார். வருத்தத்தின் மிகுதிதோன்ற உயங்கு நோய்வருத்தம் என ஒரு பொருட்பலசொல் அடுக்கி அடை புணர்த்தார்.

பருவமெய்தி மலரும் மலரின்கண் நாற்றம் தோன்றுதல் முதிர்ந்து செவ்விபெற்ற வினையினின்றும் அதன் பயனாகிய நுகர்ச்சி தோன்றுதற்கு உவமை. ஊழ்வினை ஏது நிகழ்ச்சி எதிர்தல் என்பது பௌத்த நூல் வழக்கு.

மாதவி முன்னைக் காதையில் உரைத்த உயங்கு நோய் வருத்தத்து உரை என்றது அவள் காதலன் உற்ற கடுந்துயர் கேட்டுப்போதல் செய்யா வுயிரொடு நின்றேன் என்றும் கணவற்குற்ற கடுந்துயர் பொறாஅள்….கூந்தல் புதைப்பத்….திருகி எரியூட்டிய பத்தினி என்றும் கூறிய உரைகளை என்க. இவை செவியுட்புகுந்து அவள் தந்தைதாயார் பட்ட துயரமெல்லாம் நினைப்பித்து நெஞ்சத்தை வெதுப்பின் என்றவாறு.

மணிமேகலை கண்ணீர் உகுத்தலும் மாதவி செயலும்

(இதன் பொருள்) காரிகை காதல் நெஞ்சம் கலங்கி-அம் மணிமேகலை அவர்பாற் கொண்டுள்ள அன்பு காரணமாகப் பெரிதும் நெஞ்சம் கலங்கி உருகுதலாலே; மாதர் செங்கண்-அவளுடைய காதல் கெழுமிய சிவந்த கண்கள்; புலம்பு நீர்-துன்பக் கண்ணீரைப் பெருக்கி; வரிவனப்பு அழித்து-தம்பாற் படர்ந்த செவ்வரிகளை மறைத்து; உருட்டி அவள் தொடுக்கின்ற கட்டவிழ்ந்து மலராநின்ற நறிய மலரினது விளக்குகின்ற இதழ்களையுடைய மாலையின் மேல் வீழ்த்தி அதனை நினைத்து வாலாமைப் படுத்தி விட்டமையாலே; மாதவி மணிமேகலை முகம் நோக்கி-இது கண்ட மாதவி மணிமேகலையின் முகத்தைப் பரிவுடன் நோக்கி; தாமரை தண்மதி சேர்ந்தது போலக் காமர் செங்கையின் கண்ணீர் மாற்றி-தாமரை மலர் ஒன்று குளிர்ந்த திங்கள் மண்டிலத்தைத் தீண்டியது போன்று தன் அழகிய கையை அவள் முகத்திலே சேர்த்துச் சிவந்த அக்கையினாலே அவள் கண்ணீரைத் துடைத்துவிட்டுக் கூறுபவள்; தூநீர் மாலை தூத்தகை இழந்தது-அன்புடையோய் தூய நீர்மையையுடைய இம் மலர் மாலை நின் கண்ணீர் பட்டுத் தனது தூய தன்மையை இழந்துவிட்டது; நீயே நிகர் மலர் கொணர்வாய்-இம் மாலை நம்மிறை வழிபாட்டிற்காகாதாகலின் இப்பொழுது நீயே மலர் வனத்திற் சென்று புதிய மலர்களைக் கொய்து கொணர்வாயாக என்று கூறாநிற்ப; என்க.

(விளக்கம்) மணிமேகலைக்கு ஏதுநிகழ்ச்சி எதிர்ந்துளதாகலின் உரை வாயிலாய் இடும்பை தோன்றி அவளது செவியகம் வெதுப்ப அதனால் அக் காரிகை நெஞ்சு கலங்க அவள் செங்கண் புலம்பு நீர் பெருக்கி வரிவனப்பு அழித்து உருட்டி மாலையில் இட்டு நீராட்ட அது கண்ட மாதவி மணிமேகலை முகம் நோக்கித் தன் செங்கையின் கண்ணீர் மாற்றிக் கூறுபவள் மாலை இழந்தது நீயே நிகர் மலர் கொணர்வாய் என்று கூறலும் என்று இயைத்திடுக. இப்பகுதி பெரிதும் அவலச் சுவை பயத்தலுணர்க. காரிகை: மணிமேகலை. மாந்தர்-அழகு; காதல் எனினுமாம். வரி-செவ்வரி. அதன் வனப்பை அழித்து என்றது கண்ணீர் பெருகி அவற்றை மறைத்தலை. புலம்பு நீர்-துன்பக்கண்ணீர். வனப்பு-அழகு. இட்டு நீராட்டல் என்பதன் ஒரு சொன்னீர்மைத்தாகக் கோடலுமாம். தாமரை மாதவி கைக்கும் மதி, மணிமேகலை முகத்திற்கும் உவமைகள். தூநீர்-தூயதன்மை. தூத்தகை என்பதுமது, நிகர்மலர், புதுமலர். ஒளிமலர் என்பாருமுளர்.

சுதமதியின் பரிவுரைகள்

16-25: மதுமலர்……….நின்றிடின்

(இதன் பொருள்) மதுமலர்க் குழலியொடு மாமலர் தொடுக்கும் சுதமதி கேட்டுத் துயரொடுங் கூறும்-தேன் பொருந்திய மலரணிதற்கியன்ற கூந்தலையுடைய மணிமேகலையோடே சிறந்த மலர்மாலை தொடுத்துக் கொண்டிருந்த சுதமதி யென்னும் பெயரையுடைய மற்றொரு பிக்குணி மாதவி கூறிய மொழியைக் கேட்டவளவிலே மணிமேகலை திறத்திலே துன்பமுடைய நெஞ்சத்தோடே மாதவியை நோக்கிக் கூறவாள்; குரவர்க்கும் ஊழ்வினை உருத்து வந்தூட்டுதலானே வந்தெய்திய கொடிய துன்பத்தைச் செவியேற்று அவரை நினைந்து ஆறாக பெருந்துயரம் எண்ணுந்தோறும் எண்ணுந்தோறும் எய்தா நின்ற; மணிமேகலையின் தன் மதிமுகந் தன்னுள் அணிதிகழ் நீலத்து ஆய் மலர் ஓட்டிய கடை மணி உகுநீர் கண்டனன் ஆயின் – இம் மணிமேகலையின் நிறை மதி போன்ற திருமுகத்தின்கண் ணமைந்த அழகு விளங்குகின்ற நீலத்தின் ஆராய்தற்கியன்ற மலரின் அழகைப் புறமிடச் செய்த கண்ணின் மணியின் கடைப்பகுதியினின்றும் துளித்த துன்பக் கண்ணீரைக் கண்டுளனாயின்; காமன் படை இட்டு நடுங்கும் காமவேள் தன் கருப்பு வில்லும் அருப்புக் கணையுமாகிய படைக் கலன்களை நிலத்திலே எறிந்து விட்டு ஆற்றொணாத் துயரத்தாலே நடுங்குவான் அல்லனோ; பாவையை – அத்தகைய பேரழகு படைத்த பாவை போன்ற இவள் மலர் கொய்யப் போகும் வழியிலே; ஆடவர் கண்டால் அகறலும் உண்டோ-ஆண்மக்கள் கண்டக்கால் அக் காட்சியைவிட்டு அப்பாற் போதலும் உளதாகுமோ; பெற்றியின் நின்றிடின் பேடியர் அன்றோ-கண்ட பின் மயங்காமல் தமக்கு இயல்பான அறிவோடு நின்றால் அவர் பேடியர் ஆதல் ஒருதலையன்றோ என்றாள் என்க.

(விளக்கம்) சுதமதி வரலாற்றினை அடுத்த அவளை கூறக்கேட்போம். இவள் மணிமேகலைபால் தாய்மையன்பு கொண்டிருப்பவள் ஆதலின், அவளை மலர்க்கொய்யப் போம்படி மாதவி பணித்தமையால் அங்கனம் போனால் அவட்குத் தீமையுண்டாகும் என்னுங் கருத்தால் துயருற்றுக் கூறுகின்றாள் என்க. அவளுடைய பேரழகே அவட்குத் தீமைபயக்கும் என்பான் அவ்வழகினை இவ்வாறு விதந்தோதுகின்றாள். காமனுக்கு மகளிரே சேனையாகலின் அச்சேனைக்கு இவள் தலைவியாதலின் அவள் துன்பக்கண்ணீரைக்கண்டுகாமன் பொறானாய்ப் படையிட்டு நடுங்குவான் என்றவாறு. இவளைக் கண்ட ஆடவர் எத்தகையோராயினும் மயங்காதிரார் என்பதனை, பெற்றியின் நின்றிடின் அவர் பேடியராகத் தாமிருப்பர் என்றாள். இவ்வாற்றால் இச் சுதமதி மணிமேகலையின் பேரழகை நுண்ணிதல் கூறக்காட்டுதல் பெரிதும் இலக்கிய இன்பம் நல்குதல் உணர்க.

மகளிர் யாண்டும் தனியே செல்லுதல் தகாது என்பதற்குச்
சுதமதி தன்னையே எடுத்துக் காட்டாகக் காட்டல்

26-35: ஆங்ஙனம்………வருவோன்

(இதன் பொருள்) ஆங்ஙனம் அன்றியும்-அவ்வாற்றானன்றியும் (இவள் தனித்தலர் கொய்யப் போகாமைக்குப் பிறிது காரணமும் உளது அது என் வரலாறு கூறவே நீ அறிந்து கொள்வாய் ஆகலின்) அணியிழை ஈங்கு யான் இந்நகரத்துவரும் காரணம் கேளாய்-அணியிழாய் இங்கிருக்கும் யான் இப் பூம்புகார் நகரத்திற்கு வர நேர்ந்த காரணத்தைக் கூறுவல் கேட்பாயாக பாராவாரம் பல்வளம் பழுகிய காராளர் சண்பையின் கௌசிகன் என்போன்-பல்வேறு கடல்படுபொருள் வளமும் நிரம்பிய காராளர் என்னும் வகுப்பினர் மிக்குவாழ்கின்ற சண்பை என்னும் நகரத்தே குடியிருப்புடைய கௌசிகன் என்னும் பெயரையுடைய; இருபிறப்பாளன் ஒரு மகள் உள்ளேன்-பார்ப்பனனுக்கு ஒரே மகளாயிருந்த யான்; ஒரே நெஞ்சமொடு ஒருதனி அஞ்சேன் ஆராமத்திடை அலர் கொய்வேன்றனை-யாதொன்றனையும் ஆராய்ந்தறியாத என் பேதை நெஞ்சத்தால் மிகவும் தனிமையுடையேனாய்ச் சிறிதும் அஞ்சாமல் ஒரு மலர்ப்பொழிலும் புகுந்து மலர் செய்கின்ற என்னை; மாருத வேகன் என்பான் ஓர் விஞ்சையன்-மாருத வேகன் என்னும் பெயரையுடையான் ஒரு விச்சாதரன்; திருவிழை மூதூர் தேவர் கோற்கு எடுத்த பெருவிழா காணும் பெற்றயின் வருவோன்-திருமகள் பெரிதும் விரும்புமியல்புடைய இப் பழைய நகரத்தின்கண்  அவ்வாட்டைக்கு நிகழ்த்தும் பெரிய இந்திரவிழாவைக் கண்டு களிக்கும் கருத்தொடு விசும்பின் வழியே வருபவன்; தாரன் மாலையன் தமனியப் பூணினன் பாரோர் காணப் பலர் தொழும் படிமையன் உடையனாய் பொற்கலன்கள் பூண்டவனாய் இந்நிலவுலகத்தார் கண்டிராததும் கண்டோர் பலரும் கை தொழில் தகுந்ததுமாகிய உருவச் சிறப்புமுடையான் காண் என் எடுத்தனன் கொண்டு எழுந்தனன் கொண்டு வானத்திலே பறந்து போயினன்; ஆங்கு அவன் பான்மையேன் ஆயினேன்-அவ் வானத்தின்கண் யானும் அவன் கருதியாங்கியைந் தொழுகலானேன்காண் ஆங்கு அவன் ஈங்கு எனை கண்மாறி அகன்று- ஆங்கு அவ்வாறு செய்த அவ்விச்சாதரன் இந் நகரத்திலே எனைக் கைவிட்டுச் சிறிதும் கண்ணோட்டமின்றிப் பிரிந்து; தன்பதி நெட்டிடை ஆயினும் நீங்கினன்-தன்னூர் மிகவும் நீண்ட வழியுடையதாக இருப்பினும் என்னைச் சிறிதும் நினையாதவனாய்த் தான் மட்டுமே போயொழிந்தான் நாண் என்றாள் என்க.

(விளக்கம்) ஆங்ஙன மன்றியும்-என்றது அவ்வாறன்றியும் வேறு காரணங்களாலும் அவட்குத் தீமை வரலாம் என்பதுபட நின்றது. இது பாட்டிடைவைத்த குறிப்பாற் போந்த பொருள். இனி ஆங்ஙனமன்றியும் என்பதனுடன் 42 ஆம் அடிக்கட்கிடந்த மணிமேகலைதான் தனித்தலர் கொய்யும் தகைமையள் அல்லள் அதற்கு எடுத்துக்காட்டாக (26) அணியியை கேள் என இயைத்துப் பொருள் கூறினும் அமையும். என்னை அகன்று பொருள் கிடப்பினும் அணுகிய நிலையினும் இயன்று பொருள் முடியத் தந்தனர் உணர்த்தல் மாட்டு என மொழிப் பாட்டியல் வழக்கின் என்பது ஓத்தாகலின் என்க(தொல்-செய்யு-210). பாரா வாரம்- கடல். காராளர்-ஒரு சாதியினர்: பூவைசியர்; அவராவார் வணிகருள் உழுதுண்போர். இவர் உழுதுண்ணலே அன்றிக் கலத்தினுஞ் சென்று பொருளீட்டுவோராதலின், பாராவாரம் பல்வளம் பழுநிய காராளர் சண்பை என்றார். சண்பை சீகாழிநகர்போலும். அஞ்சுல தஞ்சல் அறிவார் தொழில் என்பதை ஓரா நெஞ்சமொடு என்றவாறு. ஆராமம் மலர்ப்பொழில். பூம்புகார் என்பது தோன்றித் திருவிழைமூதூர் என்றாள். பெருவிழா என்றது-இந்திரவிழாவை. இந்திரவிழாவிற்கு விச்சாதரரும் வருகுவர் என்பதை, சிலப்பதிகாரத்தில் கடலாடு காதையானும், (1-34 வெள்ளி காண்போன்) இந்நூலிற் காயசண்டிகை வரலாற்றானும் உணர்க. விஞ்சையன்-விச்சாதரன். படிமையன்-உருவமுடைய மாறி, கண்ணோட்டமின்றி-இதற்கு வேறு கூறுவாருமுளர். அதற்கு எடுத்துக்காட்டும் காட்டுவர். ஆயினும் ஈண்டைக்கு அவ்வுரை பொருந்தாமை நுண்ணுணர்வாற் கண்டுகொள்க நெட்டிடையாயினும் நீங்கினன் என மாறுக.

இதுவுமது

42-43: பணி…………அல்லள்

(இதன் பொருள்) மணிப்பூங்கொம்பர் மணிமேகலை தான்-இக் காரணங்களாலே அழகிய மலர்க் கொடி போன்று பருவம் கெழுமிய நம் மணிமேகலை நல்லாள்; தனித்து அலர் கொய்யும் தகைமையள் அல்லள்-நீ ஏவியாங்குத் தமியளாய்ச் சென்று மலர்வனம் புக்கு கொய்து வருந்தன்மையுடையள் அல்லள் காண் என்றாள் என்க.

(விளக்கம்) இக்காரணங்களாலே தனித்து அலர் கொய்யப் போதல் கூடாது என்பது கருத்து.

மலர்ப் பொழில்களும் அவற்றின் சிறப்பியல்பும்

44-58: பன்மலர்……..எய்தார்

(இதன் பொருள்) பன்மலர் அடுக்கிய நல்மரப் பந்தர் இலவந்தி கையின் எயில்புறம் போகின் உலக மன்னவன் உழையோர் ஆங்குளர்-பன்னிறமுடைய மலர்க் கொடிகளை நிரல்பட நட்டுப் படரவிட்ட நல்ல மரத்தாலியன்ற பூம்பந்தர் களையுடைய இலவந்திகையினது மதிலின் புறத்தே சென்றக்கால் உலகாள் மன்னனுடைய பணி மாக்கள் ஆங்கிருப்பவர் ஆதலின் அந்நெறிச் செலல் தகாதுகாண்; விண்ணவர் கோமான் விழாக்கொள் நல் நாள் வானவர் அல்லது மன்னவர் விழையார்-இந்திரனுக்கு விழா நிகழ்த்தும் இருபத்தெட்டு நல்ல நாளினும் இந்திரன் சுற்றத் தாராகிய வானுலகத்துத்தேவர் வந்து தங்குதலின்றி நிலவுலகத்து மாந்தர் உட்புக விரும்பார் என்பதும்; பாடு வண்டு இமிரா பல் மரம் யாவையும்-இசை பாடும் வண்டுகள் தாமும் முரன்று மூசுதலில்லாத பல்வேறு வகைப்பட்ட மரங்களிலெல்லாம்; வாடா மாமலர் மாலைகள் தூக்கலின்-வானவர் நாட்டுக் கற்பக மரங்களினின்றும் அத் தேவர்கள் கொணர்ந்த வாடாத சிறப்புடைய மலர்களாற் றொடுக்கப்பட்ட மாலைகளைத் தூக்கிவிட்டிருத்தலானே; கைபெய் பாசத்துப் பூதம் காக்குமென்று-அங்கெல்லாம் கையிடத்தே கயிற்றையுடைய பூதம் காவல் செய்யும் என்று; உணர்த்தோர் உய்யானத்திடைச் செல்லார்-அறிந்த மாந்தர் அரசன் உரிமையோடும் ஆடுதற்கியன்ற உய்யானத்தின் வழியே செல்வாரல்லர், இவையிரண்டு பொழிலும் இங்கனமாக; வெங்கதிர் வெம்மையின் விரிசிறை இழந்த-கதிரவனை அணுகப் பறந்தலானே அவன் வெம்மையாலே விரிந்த சிறகை இழந்து; சம்பாதியிருந்த சம்பாதி வனமும்-சம்பாதி யென்னுங் கழுகரசன் தவமிருந்தமையாலே சம்பாதி வனம் என்று கூறப்படுகின்ற மலர்வனமும்; ஆங்கு-அவ்வாறே; தவா நீர்க் காவிரிப்பாவை தன் தாதை கவேரன் இருந்த கவோ வனமும்-கெடாத நீரையுடைய காவிரியாகிய நீர்த்தெய்வத்தின் தந்தையாகிய கவேரன் என்னும் மன்னன் தவமிருந்தமையாலே கவேர வனம் என்று கூறப்படுகின்ற மலர்வனமும்; மூப்படை முதுமைய-ஏனைய மலர் வனங்களினுங் காட்டில் காலத்தால் மூப்புடைய பழைமையுடையனவாதலால்; தாக்கு அணங்கு உடைய -அவை மக்களைத் தீண்டி வருத்தும் தெய்வங்களைத் தம்பாலுடையன காண்; யாப்புடைத்தாக அறிந்தோர் எய்தார்-இவ்வுலகுரையை உறுதியுடையதாக வுணர்ந்தவர் யாரும் அவ்விரண்டினூடும் புகுதார் காண்; என்றாள் என்க.

(விளக்கம்) பல்வேறு மணமும் நிறமுமுடைய மலர்கொடிகளை நிரல் படவைத்துப் படரவிட்ட மரப்பந்தர் என்க. இவற்றைப் பூம்பந்தர் என்னாது மரநிழல் என்பாருமுளர். நன்மரம் என்றது பந்தரிட்ட மரத்தை. இலவந்திகை-இயந்திரவாவி; அஃதாவது நீரை வேண்டும் பொழுது நிரப்பவும் ஏனையபொழுது வடித்துவிடவும் பொறியமைத்தவாவி. இஃது அரசனும் உரிமை மகளிரும் நாடோறும் நீராடற்குரியதாம். இதனியல்பை இலவந்திகை-நீராவியைச் சூழந்த வயந்தச் சோலை; அஃது அரசனும் உரிமையும் ஆடும் காவற் சோலை எனவரும் அடியாருக்கு நல்லார் உரையானும் (சிலப்-10:30-31) நிறைகுறின் நிறைத்துப் போக்குறின் போக்கும் பொறிப்படை யமைந்த பொங்கில வந்தகை எனவரும் பெருங்கதையானும்(1-40:311-2) உணர்க. உலக மன்னவன் என்றது-சோழமன்னனை. உழையோர்- பணிமாக்கள். உழையோரிருத்தலதன் அங்குப் போதல் கூடாது என்பது குறிப்பு.

விழாக்கோள் ஈரேழ் நாளும் விண்ணகர் வறிதே கிடப்ப அமரர் எல்லாம் ஈங்கு வந்து உய்யானத்திடை இருத்தலின் அங்கு அவர் கொணர்ந்த கற்பகமலர்மாலை மரந்தொறும் தூக்கப்பட்டிருக்கும். மேலும் பூதங்காக்கும் ஆதலால் உணர்ந்தோர் செல்லார் என்றவாறு. இனிச் சம்பாதிவனமும் கவேரவனமும் முதுமைய அணங்குடைய ஆதலின் அவற்றினுள்ளும் போதல் கூடாது. யாப்புடைத்தாக அறிந்தோர் என்றது, (அணங்குடைய என்னும் இவ்வுலகுரையை) உறுதியுடையதாக அறிந்தோர் என்றவாறு.

சம்பாதி-சடாயுவின் உடன்பிறந்தவன். இவன் வானுலகம் புகப் பறந்து போன பொழுது கதிரவன் சினத்திற்கு ஆளாகிச் சிறகு தீயப் பெற்றான் இதனை,

ஆயுயர் உம்பா நாடு காண்டும் என்றறிவு தள்ளி
மீயுயர் விசும்பி னூடு மேற்குறச் செல்லும் வேலை
காய்கதிர்க் கடவுட்டேரைக் கண்ணுற்றும் கண்ணு றாமுன்
தீயையுந் தீக்குந் தெய்வச் செங்கதிர்ச் செல்வன் சீறி
…………………………………..
வெந்துமெய் யிறகு தீந்து விழுந்தனென் விளகி லாதேன்
                                                              (கம்பரா – சம்பா-54-5)

எனவரும் அச் சம்பாதி கூற்றானே யுணர்க.

உவவனமும் பளிக்கறையும்

59-68: அருளும்………கழியினும்

(இதன் பொருள்) அருளும் அன்பும் ஆர் உயிர் ஓம்பும் ஒரு பெரும் பூட்கையும் ஒழியா நோன்பின்-இனி இவையிற்றைத்தவிர ஆருயிர்களின் பால் பேரருளும் அன்பும் அவ்வாருயிரைப் பாதுகாக்க வேண்டும் என்னும் ஒப்பற்ற பெரிய கோட்பாடும் ஒரு பொழுதும் தன்னைவிட்டு நீங்காத தவத்தினை யுடைய; பகவானது ஆணையின் பல் மரம் பூக்கும் உவவனம் என்பது ஒன்றுண்டு-புத்த பெருமானுடைய கட்டளையினாலே பருவமல்லாத பொழுதும் மலருகின்ற சிறப்பினையுடைய உவவனம் என்னும் ஒரு மலர்ப் பொழிலும் உளதுகாண்; அதன் உள்ளது-அவ் வுவ வனத்தின் உள்ளிடத்ததாய்; விளிம்பு அறை போகாது மெய்புறத்திரூஉம் பளிக்கு அறை மண்டபம் உண்டு-தன்னுட் புகுந்தவர் எழுப்பும் ஒலி வெளிப்படாது உருவத்தை மட்டும் புறத்தே காட்டும் பளிங்கினாலியன்ற அறையினையுடைய மண்டபம் ஒன்று உளது காண்; அதன் உள்ளது-அம் மண்டபத்தின் உள்ளிடத்ததாய்; தூகிறமாமணிச் சுடர் ஒளி விரிந்த தாமரைப் பீடிகைதான் உண்டு-தூயநிறமுடைய மாணிக்க மணியின் சுடர் போலச் சுடர்விடுகின்ற ஒளியோடு மலர்ந்த தாமரை மலர் வடிவிற்றாகிய மேடையென்றும் உளதுகாண்; ஆங்கு இடின்-அம் மேடையின் மேலிட்டால்; அரும்பு அவிழ் செய்யும்-அரும்புகள் நன்கு மலர்ந்தலைச் செய்யும்; தொல் மாண்டு கழியினும் மலர்ந்தன வாடா சுரும்பினம் மூசா-தொன்று தொட்டுத் தோன்றி மறையுமியல்புடைய யாண்டுகள் பல கழித்தாலும் மலர்ந்த அம் மலர்கள் வாட மாட்டா அவையிற்றில் வண்டினமும் மொய்க்கமாட்டா காண் என்றாள் என்க.

(விளக்கம்) அருள்-எல்லாவுயிரிடத்தும் பரந்து பட்டுச் செல்லும் நெஞ்சநெகிழ்ச்சி. அன்பு-தொடர்புடையார்மாட்டுச் செல்லும் நெஞ்ச நெகிழ்ச்சி. பகவனுக்கு அணுக்கமில்லாதனவும் அணுக்கமுடையனவுமாக உயிர்கள் இருவகைப்படுதலின் இரண்டும் கூறினள். பூட்கை கொள்கை. நோன்பு-தவம். பகவன்-புத்தர். ஆனையின் என்றமையால் மலரும் பருவமில்லாத போதும் மலரம் என்றாளாயிற்று. உள்ளது-உள்ளிடத்ததாய்; மண்டபம் ஒன்றுண்டு. அதனகத்ததாய்ப் பீடிகை ஒன்றும் உளது என்க. விளிப்பாகிய அறை: இருபெயரொட்டு. தூநிறம்-தூய நிறம். ஆங்கு-அப் பீடிகையில். அரும்பு மலரும் மலர்ந்தவை வாடா மூசப்படா. தொல்யாண்டு பொருட்கேற்ற அடை. தொன்று தொட்டுத் தோன்றி மறையும் யாண்டு என்க.

இதுவுமது

69-79: மறந்தேன்………..அதுதான்

(இதன் பொருள்) மாதவி அதன் திறம் மறந்தேன்- மாதவி நங்காய் அப் பீடிகையின் தன்மை யொன்றனைக் கூற மறந் தொழிந்தேன்; கேளாய்-அதனையும் கூறுவேன் கேள்; ஓர் தெய்வம் கருத்திடை வைத்துக் கடம் பூண்டோர் ஆங்கு அவர் அடிக்கு இடின் அவர் அடிதான் உறும்-யாதானும் ஒரு தெய்வத்தைத் தம் நெஞ்சத்தே திண்ணிதாக நினைந்து அத் தெய்வத்தை வழிபாடு செய்தலையே தங்கடமையாகக் கொண்டவர் அம் மேடையின்மேல் அத் தெய்வத்தின் திருவடிக்கிடுவதாக நினைத்து மலரை இட்டால் அஃது அவ்விடத்தினின்றும் மறைந்து அத் தெய்வத்தின் திருவடியைச் சென்று சேர்வதாம்; நீனைப்பிலராய் இடின்-யாரேனும் யாதொறும் தெய்வத்தையும் நினைத்தலின்றி அதன்மேல் மலரை வறிதே இடுவாராயின்; யாங்கணும் நீங்காது-அம் மலர் யாண்டும் போகாமல் அம் மேடையின் மேலேயே கிடவாநிற்கும்; ஈங்கு இதன் காரணம் என்னை என்றியேல்-இம் மேடையி லிவ்வாறு நிகழும் அற்புத நிகழ்ச்சிக்குக் காரணந்தான் என்னையோ என்று வினைவுவாயாயின் கூறுவேன் கேள். அதுதான்-அத் தாமரைப் பீடிகை தானும்; பண்டு மயன்-முன்பொரு காலத்தே அமரர் தச்சனாகிய மயன் என்பவன்; சிந்தை இன்றியும் செய்வினை உறும் எனும் வெந்திறல் நோன்பிகள் விழுமங் கொள்ளவும்-ஒருவன் இதனைச் செய்யவேண்டும் என்னும் நினைவின்றியே செய்ததொரு வினையின் பயனும் அவனுக்கு வந்துறாமல் வீண்போகாது என்னும் கோட்பாடுடைய வெவ்விய ஆற்றலுடைய தவத்தோர் தம் கொள்கை தவறென்று தமது அறியாமைக்கு வருந்த வேண்டும் என்றும்; சிந்தையின்று எனின் செய்வினை யாவதும் எய்தாது என்போர்க்கு ஏதுவாகவும்-தான் செய்யும் வினையின்கட் செய்யவேண்டும் என்னும் தன்முனைப்பு இல்லை யாயவழி ஒருவன் செய்த வினையின் பயன் அவனுக்குச் சிறிதேனும் வந்துறாது என்னும் கொள்கையுடையவர்க்கு அக்  கொள்கையைச் சாதிக்குமோர் ஏதுவாக வேண்டும் என்றும் கருதி; பயன்கெழு மாமலர் இட்டுக்காட்ட இழைத்த மரபினது- இருவிழியும் இவ்வாறு பயன்தரும் சிறந்த மலரை இட்டு மெய்யறிவு காட்டற் பொருட்டே இயற்றிய முறைமையினை உடைத்தாகலான்; அதுதான்-அப்பிடிகைதானும் இவ்வற்புதம் நிகழ்த்துகின்றது காண் என்றாள் என்க.

(விளக்கம்) அதன்திறம்-அப்பீடிகையின் சிறப்பு. கடம்-கடமை. ஒரு தெய்வத்தைக் கருத்திடைவைத்து என்றது ஒரு தெய்வத்தை வழி படுதெய்வமாக மதித்து என்றவாறு. அவர்- அத்தெய்வம். இதன் காரணம் இங்ஙனம் நிகழ்கின்ற அற்புதச் செயலுக்கான காரணம். வெந்திறல் நோன்பிகள் என்றது இகழ்ச்சி. அவராவார் ஆருகதர். அவர் நினையாது வினைசெய்யினும் அவ்வினையும் செய்தவனுக்குத் தன் பயனை ஊட்டாது கழியாதெனும் கோட்பாடுடையர். அதனை,

ஒத்த வன்றனை யுறுபகை யேயெனக்
குத்தி னானுக்கும் கொலைவினை யில்லெனப்
புத்த னீருரைத் தீரங்கோர் புற்கலம்
செத்த வாறது சிந்திக்கற் பாலதே

எனவரும் நீலகேசியானும் அதனுரையானும் உணர்க. (நீல-543) மற்றிச்செய்யுளே, செய்வினை சிந்தையின்றெனின் யாவதும் எய்தாதென் போர் பௌத்தர் என்பதற்கும் எடுத்துக்காட்டாதலறிக.

ஆருகதர் உடலை வருத்தும் கடுநோன்புடையராதலின் அவரை வெந்திறல் நோன்பிகள் என்றிகழ்தபடியாம். அது-அப் பீடிகை.

மணிமேகலைக்குத் துணையாகச் சுதமதியும் செல்லுதல்

80-85: அவ்வனம்……….செல்வுழீஇ

(இதன் பொருள்) அணியிழை நின்மகள் அவ்வனம் அல்லது செவ்வனம் செல்லும் செம்மைதான் இலள்-மகளிர்க்கு அணிகலன் போல்பவளாகிய நின்மகளாகிய மணிமேகலை மலர் கொய்தற்குச் செல்வதாயின் அவ்வுவவனத்திற்கு நேராகச் செல்வதல்லது பிற வனத்திற்குச் செல்லும் தகுதியுடையாள் அல்லள்; மாமலர் கொய்ய-சிறந்த மலரைக் கொய்துவருதற்கு; மணிமேகலையொடு அணியிழை நல்லாய்-உவவனத்திற்கும் அவள் தமியளாய்ப் போகவறியாள் ஆகலின் அவளோடு மாதவி நல்லாய்; யானும் போவல் என்று-யானும் துணையாகச் செல்வேன் காண் என்று தானே முறைபட்டு எழுந்து; அணிப் பூங்கொம்பர் அளளொடும் கூடி மணித்தேர் வீதியில் சுதமதி செல்வுழி -அழகிய பூங்கொம்பு போன்ற அம் மணிமேகலையோடு கூடி மணி யொலிக்கும் தேர்களியங்கும் பெருந் தெருவின்மேல் சுதமதி அவட்கு வழிகாட்டிச் செல்லுகின்ற பொழுது என்க.

(விளக்கம்) அவ்வனம்-அந்த உவவனம். அணியிழையாகிய நின்மகள் என்க. செவ்வனம்-நேர். செம்மை-தகுதி. கொம்பர் போன்றவளோடு கூடி என்க.

களிமகனும் சமணத்துறவியும்

86-93: சிமிலி………கேண்மோ

(இதன் பொருள்) சிமிலிக் கரண்டையன் நுழை கோல் பிரம்பினன்-உறியிலிட்டுத் தூக்கிய நீர்க்கரகத்தையுடையவனும் நுண்ணிதாகத் திரண்ட பிரம்மைப் பற்றியவனும்; தவல் அருஞ் சிறப்பின் அராந்தாணத்துளோன்-கேடில்லாத சிறப்பினையுடைய அராந்தாணம் என்னும் அருகன் கோயிலில் உறைபவனும் ஆகிய அமணசமயத்துத் துறவியொருவன்; நாணமும் உடையும் நன்கனம் நீத்து-நாணத்தையும் ஆடையையும் துவரத்துறந்து; காணா உயிர்க்கும் கையற்று ஏங்கி-கண்ணுக்குப் புலப்படாத நுண்ணுயிர்க்கும் தன்னியக்கத்தால் இன்னல் உண்டாமோ என்று நிலத்தை மிதிக்கவும் அஞ்சித் செயலறவுடையனாய் ஏக்கமுற்று; உண்ணாநோன்பொடு உயவில் யானையின் மண்ணா மேனியன் வருவோன்றன்னை-உண்ணா நோன்பினாலே பசியால் வருந்தும் யானை போலக் கழுவாத உடம்பையுடையனாய் அவ்வீதியின்கண் வருபவனை;(103) ஓர் களி மகன்-கள்ளுண்டு களித்தானொரு கயவன்; வந்தீர் அடிகள் நும்மடி தொழுதேன்-எதிர் நின்று மறித்துக் கூறுபவன் அடிகேள் வருக வருக நீவிரே எளிவந்தருளினிர் அடியேன் நும்முடைய திருவடிகளைத்  தொட்டுக் கைகுவித்துத் தொழுதேன் ஏற்றருளுக எம்தம் அடிகள்- எங்கள் அடிகளே; எம் உரை-எளியேம் வேண்டு கோளையும் கேண்மோ-செவியேற்றருள்க என்றான் என்க.

(விளக்கம்) சிமிலி-உறி. கரண்டை-கரகம். நுழைகோல் நுண்ணியதிரட்சி. தவல்கேடு. அராந்தாணம்-அருகன்கோயில். காணாவுயிர்- கண்ணுக்குப் புலப்படாத நுண்ணுயிரினம். அவற்றினை மிதித்துழிக் கொலைத்தீவினை வருமென்று வருத்தி ஏங்கினன் என்பது கருத்து. அவ்வாறு சமணசமயத்துறவோர் வருத்துதலை-

குறுந ரிட்ட குவளையம் போதொடு
பொறிவரி வண்டினம் பொருந்திய கிடக்கை
நெறிசெல் வருத்தத்து நீரஞ ரெய்தி
அறியா தடியாங் கிடுதலுங் கூடுங்
எறிநீரேடைகரை யியக்கிந் தன்னின்
பொறிமா ணலவனும் நத்தும் போற்றா
தூழடி யொதுக்கத் துறுநோய் காணின்
தாழ்தரு துன்பந் தாங்கவு மொண்ணா
                                (சிலப். 10: 84-93)
எனவரும் கவுந்தியடிகளார் கூற்றானுமுணர்க. உயவல் யானை-வருந்துகின்ற யானை மண்ணா மேனி-கழுவாத உடம்பு. வந்தீர்-எளிவந்தீர். இஃது அசதியாடியபடியாம். களிமகன் என்னும் எழுவாய் (103) முன்னே கூட்டப்பட்டது. கேண்மோ-ஓ: முன்னிலையசை.

இதுவுமது

94-103: அழுக்குடை……….பின்னரும்

(இதன் பொருள்) அழுக்குடை யாக்கையில் புகுந்த நும் உயிர் புழுக்கறைப் பட்டோர் போன்று உளம் வருந்தாது-அழுக்கோடு கூடிய நும்முடைய உடம்பினுள் புகுந்துறைகின்ற நுமதுயிரானது புழுக்கமிக்க அறையாகிய சிறையிலிடப்பட்டவர் போன்றுள்ளம் பெரிதும் வருந்தர்வண்ணஞ் செய்து; இம்மையும் மறுமையும் இறுதியில் இன்பமும் தன்வயின் தரூஉம்-(இதோ இக் கலத்திலுள்ள இக்கள்ளை நோக்குமின் இஃதெத்தகைய தோவெனின்) இஃது இம்மையில் நுகர வேண்டிய இன்பத்தையும் இம்மை மாறித் துறக்கத்தே நுகர்தற்கியன்ற அமரருலகவின்பத்தையும்

இவற்றிற்குத் அப்பாற் பெறக் கிடந்த கடையிலாவின்பம் என்று நுங்கள் இறைவன் கூறும் வீட்டின்பத்தையும் தன்னுள்ளிருந்தே வழங்கும் என்று; என் தலைமகன் உரைத்தது-இதன் பெருமை என் நல்லாசிரியர் செவியரிவுறுத்து எனக்கருளிய தொன்றும்; கொழுமடல் தெங்கின் விளைபூந்தேறலின் கொலையும் உண்டோ-வளமான மடல்களையுடைய தென்னையின் பூவாகிய பாளையிற் பிறந்த இந்தக் கள்ளில் கொலைத்தீவினையும் உண்டோ இல்லையாகலின்; மெய்த் தவத்தீரே-கொல்லாமை மேற்கொண்டொழுகா நின்ற வாய்மையான தவத்தையுடையீரே; உண்டு தெளிந்து இவ்யோகத்து உறுபயன் கண்டால் எம்மையும் கையுதிர்க் கொண்ம் என இக் காலத்திலுள்ள கள்ளை ஒருமுறை பருகி அதனொடு கலந்து ஒன்ணுபட்டு நும் நெஞ்சந் தெளித்து இந்த யோகத்தினது மிக்க பயனை நீயர் கண்டுகொண்டு எம்முரை பொய்யாயின் பின்னர் இக்கள்ளோடு எம்மையும் கையை அசைத்துப் போக்குமின் என்று கையை அசைத்துப் போக்குமின் என்று சொல்லி; உண்ணா நோன்பி தன்னொடும் சூள் உற்று உணம் என இரக்கும் ஓர் களிமகன்-உண்ணா நோன்பையுடைய அத் துறவி முன்னர் நின்று பருகீராயின் நும்மை விடேன் என்று வஞ்சினங்கூறி அடிகேள் சிறிது பருகிக் பாருங்கள் என்று வேண்டுகின்ற அக்களிமகள் பின்பும் என்க.

(விளக்கம்) சமணத்துறவோர் நீராடார் ஆதலின் அதனை விதந்து அழுக்குடையாக்கை என்றான். அழுக்கால் மயிர்த்துளைகளும் அடை பட்டிருத்தலின் அவர் உடம்பைப் புழுக்கறையோ டுவமித்தான். புழுக்கறை-கடிய குற்றமிழந்தோரை இட்டுவைக்கும் புழுக்கமிக்க நிலவறை எனவே அக்காலத்துச் சிறைக் கோட்டத்துள் இஃதொன்றென்றறிக. கடையிலாவின்பம் எனச் சமணர் கூறும் வழக்கிற்கேற்ப இறுதியிலின்பம் என்றான். கள்ளின் பெருமை கூறுவான் மூவகை யின் பத்தையும் இது தன்னுளளிருந்தே வழங்கும் என்றான். நுமக்குத் தலை மகனாகிய அருகன் போன்று எமக்கும் ஒரு முதல்வனுளன் அவனே இதனருமையை அறிவுறுத்தினன் என்பான் என்தலைமகன் உரைத்தது öன்றான். நுங்கன் கோட்பாடாகிய கொல்லா விரதத்திற்கும் கள் பொருந்தும் என்பான் தேறலிற் கொலையும் உண்டோ என்றான்; வினா அதன் எதிர்மறைபொருளை வலியுறுத்து நின்றது. யோகம்-இரண்டறக்கலத்தல். கள்ளின் வெறி உண்டவர்களை விழுங்கி அவர் அறிவை இல்லையாக்கித் தானேயாய் நிற்றலால் இதுவே பயனால் சிறந்ததொரு யோகம் என்பான் இவ்யோகத்தின் உறுபயன் என்றான். கண்டால் ஏற்றுக்கொண்மின் இன்றேல் எம்மையும் கையுதிர்த்துப் போக்குமின் என்றவாறு. சமணத்துறவோர் தந்நெறியொழுகாதாரைக் கண்டக்கால் அவரோடு வாயாற் பேசாமல் கையை அசைத்தே அகற்றுவர் ஆதலின் எம்மையும் கையுதிர்க்கொண்மின் என்றான். கையுதிர்-கையை அசைத்தல். உண்ணாநோன்பி-இரண்டுவாவும் அட்டமியும் முட்டுப் பாடும் பட்டினி விட்டுண்ணும் விரதி. களிமகன் பின்னரும், மையலுற்ற மகன் பின்பும் வருந்தி(115), நிற்குநரும் என இயையும்.

ஒரு பித்தன் செயல்

104-115: கணவிர……நிற்கநரும்

(இதன் பொருள்) கணவிர மாலையிற் கட்டிய திரள் புயன்-அலரிப் பூமாலையாலே கட்டப்பட்ட திரண்ட புயங்களையுடையவனும்; குவிமுகிழ் எருக்கின் கோத்த மாலையன்-கூம்பிய அரும்புகளையுடைய எருக்கம் பூவினால் தொடுக்கப்பட்ட மாலையினை மார்பில் அணிந்தவனும்; சிதவல் துணியொடு சேண் ஓங்கு நெடுஞ்சினை ததர் வீழ்பு ஒடித்துக் கட்டிய உடையினன்-இடையிலே நைந்து சிதைந்த கந்தையோடு மிகவும் உயர்ந்த நெடிய மரக்கிளைகளினின்று உலர்ந்து தாமே உதிர்த்த சுள்ளிகளை ஒடித்து அக்கந்தல் துணியில் மடிகோலிக் கட்டிய ஆடையை உடையவனும் ஆகி; பலரோடும் பண்பு இல்மொழி உரைத்து-எதிர்வரும் ஏதிலார் பலரோடும் வாய்தந்த பொருளற்ற மொழிகளைப் பேசி; ஆங்கு அழூஉம் விழூஉம் அரற்றும் கூஉம் தொழூஉம் எழூஉம் அங்கனம் பேசும் பொழுதே அழுவான் தரையிலே விழுவான் அழுது ஏதேனும் பிதற்றுவான் கூவுவான் கை கூப்பித் தொழுது வீழ்ந்து வணங்குவான் பின்னர் எழுவான்; சுழலலும் சுழலும் ஓடலும் ஓடும்-நின்றவாறே சுழலுதலும் செய்வான் பொள்ளென அவ்விடத்தினின்று விரைந்து ஓடுதலையுஞ் செய்வான்; ஒரு சிறை ஒதுக்கி நீடலும் நீடும்-ஒரு பக்கத்தே ஒதுக்கி நெடிது நிற்றலும் செய்வான்; நிழலொடு மறலும்-தனது நிழலொடு பகைத்து மறவுரை பல கூறுவான்; மையல் உற்ற மகன் பின் இவ்வாறு பித்தேறி உழலுகின்ற ஒருவன் பின்னே; வருந்திக் கையிறு துன்பம் கண்டு நிற்குநரும்-அவன் நிலைக்குப் பெரிதும் இரங்கி வருந்தி அவன் திறத்திலே தாம் கையற்று நிற்றற்குக் காரணமான அவன் துன்பங்களைக் கண்டு நிற்பவர்களும் என்க.

(விளக்கம்) கணவிரமாலை-அலரிப்பூமாலை. எருக்கிற் கோத்த மாலை-எருக்கம் பூக்கள் கோக்கப் பெற்ற மாலை என்க. சிதவற்றுணி-கந்தற்றுணி. ததர்வீழ்பு-செறிந்து வீழ்ந்தவையாகிய சுள்ளி. சுழலலும் சுழலும் என்றது அதன் மிகுதி தோற்றுவித்து நிற்கும் ஒரு சொன்னீர்மைத்து ஓடலும் ஓடும் என்பதுமது. நிழலொடு மறலுதல்-நிழலைப் பகைவனைப் பார்க்குமாறு சினந்து நோக்கி வீரம் பேசிப் போரிடுவான் போலாதல்.

பேடியாடல்

116-125: சுரியல்……….காண்குநகும்

(இதன் பொருள்) நீள் நீலமளந்தோன் மகன்-நெடிய நிலத்தை ஓரடியாலே அளந்தருளிய திருமாலின் அவதாரமாகிய கண்ணன் மகனாகிய காமன் அவதாரமாகிய பிரத்தியும்நன் என்பவன்; முன்-பண்டு தன் மகனாகிய அகிருத்தினைச் சிறைவீடு செய்தற் பொருட்டு சென்று; வாணன் பேர் ஊர் மறுகிடை-வாணாசுரனுடைய பெரிய நகரமாகிய சோ வினது வீதியிடத்தே; சுரியல் தாடி மருள்படு பூங்குழல் பவளச் செய்வாய்த் தவள வாள் நகை-சுரண்ட தாடியையும் கண்டோர் மயங்குதற்குக் காரணமான அழகிய கூந்தலையும் பவளம் போன்று சிவந்த வாயினையும் வெள்ளிய ஒளி தவழும் எயிறுகளையும்; ஒள் அரி நெடுங்கண் வெள்ளி வெள் தோட்டுக் கருங் கொடி புருவத்து-ஒள்ளிய செவ்வரி படர்ந்த நீண்ட கண்ணையும் மிகவும் வெண்மையான சங்கினாற் செய்த தோடணிந்த செவியினையும் கரிய ஒழுங்குபட்ட புருவத்தையும்; மருங்குவளை பிறைநுதல்-இருபக்கத்தும் வளைந்த பிறைத்திங்கள் போன்ற நெற்றினையும்; காந்தன் அம் செங்கை ஏந்து இள வன முலை அம் நுண் மருங்குல் அகன்ற அல்குல்-காந்தள் மலர் போன்ற அழகிய சிவந்த கையினையும் அணந்துநிற்கும் இளமையும் எழிலுமுடைய முலையினையும் அழகோடு நுணுகிய இடையினையும் அகலிதாகிய அல்குலையும்; இகந்த வட்டுடை எழுது வரிக்கோலத்து-மகளிர்க்கியன்ற ஆடை மரபினைக் கடந்த முழந்தாளளவிற்றாகிய வட்டுடையினையும் தோளினும் முலையினும் எழுதிய பத்திக் கீற்றின் அழகினையுமுடைய; பேடிக்கோலத்து-ஆண்மையழிந்து பெண்மையவாவிய பேடியின் கோலம் பூண்டு; ஆடிய பேடு காண்குநரும்-ஆடியருளிய பேடு என்னும் புறநாடகமாடுவார் ஆடுங்கூத்தினைக் கண்டு களிப்போரும் என்க.

(விளக்கம்) சுரியல்-சுருண்ட. கண்டோர் மருள்படும் கூந்தல் என்க. நகை-எயிறு. அரி-செவ்வரி. தோடு-ஒருவகைக்காதணி. கொடி-புருவம். மகளிர் உடுக்கும் ஆடை மரப்பினை இகந்த வட்டுடை. இகத்தல்-கடத்தல். வட்டுடை-முழந்தாள் அளவிற்றாகிய ஒருவகை உடை. வாணன் பேரூர்-வாணாசுரன் நகரம்; இதற்குத் சோநகரம் என்பது பெயர். நிலமளந்தோன்-திருமால்; ஈண்டுக் கண்ணன் மேற்று. அவன் மகன் பிரத்தியும் நன். இவன் மகன் அநிருத்தன் சிறையிடப்பட்டான். அவனை மீட்கச் சென்றுழி, பிரத்தியும்நன் அந் நகரமறுகில் பேடிக்கோலங்கொண்டு கூத்தாடினான். அக்கூத்திற்குப் பேடு என்று பெயர் இதனைப் புறநாடகம் பதினொன்றனுள் ஒன்று என்ப. வாணன் பேரூரில் ஆண்மை திரிந்த பெண்மைக் கோலத்துக் காமன் ஆடிய பேடியாடலும் (சிலப்-6-54-5 என்பர் இளங்கோ. பிரத்தியும்நன் காமனின் அவதாரம் ஆதலின் காமர் என்றார், இனி இதனோடு

சுருளிடு தாடி மருள்படு பூங்குழல்
அரிபரந் தொழுகிய செழுங்கய னெடுங்கண்
விரிவெண் டோட்டு வெண்ணகைத் துவர்வாய்ச்
சூடக வரிவளை ஆடமை பணைத்தோள்
வளரிள வனமுலைத் தளரியன் மின்னிடைப்
பாடகச் சீறடி ஆரியப் பேடி

எனவரும் இளங்கோ வாக்கு (27:181-6) ஒப்புக்காணத் தகும்.

கண்கவர் ஓவியம்

126-131: வம்ப………நிற்குநரும்

(இதன் பொருள்) வம்பமாக்க-இந்திர விழாக் காண்டற் பொருட்டு அந் நகரத்திற்கு வந்துள்ள புதிய மாந்தர்; கம்பலை மூதூர்-ஆரவார மிக்க பழைய அப் பூம்புகார் நகரத்திலே காட்சி பலவும் கண்டு வருபவர் அத்தேர்வீதியின் இருமருங்கும் அமைந்த; சுடுமண் ஓங்கிய நெடுநிலை மனைதொறும்-செங்கல்லாலியன்ற உயர்ந்து நிற்கின்ற நெடிய ஏழடுக்கு மாளிகை ஒவ்வொன்றினும்; மை அறு படிவத்து வானவர் முதலா எவ்வகை உயிர்களும் உவமம் காட்டி-குற்றமற்ற வடிவத்தையுடைய எத்தகைய உயிர்களுக்கும் அவ்வவற்றிற்கு உவமையாமாறு தங்கலைத்திறத்தைக் காட்டி; விளக்கத்து வெள்சுதைதீற்றிய விளக்கமான வெண் சாந்தினையுடைய சுவரின் கண்; வித்தகர் இயற்றிய-ஓவியக்கலை கற்றுத் துறை போகிய வித்தகப் புலமையோர் வரைந்துள்ள; கண்கவர் ஓவியம் கண்டு நிற்குநரும்-காண்போர் கண்களைத் தம் அழகாலே கவருமியல் புடைய ஓவியங்களைக் கண்டு வியந்து நிற்போரும் என்க.

(விளக்கம்) சுடுமண்-செங்கல். நெடுநிலைமனை-எழுநிலை மாட மாளிகை. படிவம்-வடிவம். வானவர் முதலா எவ்வகையுயிரும் என்றது அறுவகைப் பிறப்பினையும் உடைய உயிர்களையும் என்றவாறு. ஓவியங் காண்போர்க்கு இப்படித்தான் இந்திரன் இருப்பான்; இப்படித்தான் திருமகள் இருப்பாள் என அவ்வோவியங்கள் உவமமாகும்படி கலைத்திறத்தால் காட்டி என்க. பன்னிறங்கொண்டு வரையவேண்டுதலின் வெண்சுதை வேண்டிற்று. விளக்கத்து வெண்சுதை என மாறுக. விளக்கத்து இயற்றிய என இயைப்பினும் ஆம். எவ்வகைச் செய்தியும் உவமங்காட்டி நுண்ணிதினுணர்ந்த நுழைந்த நோக்கின் கண்ணுள் வினைஞரும் என,(மதுரை-556)பிறகும் ஓதுதல் காண்க.

தளர்நடை தாங்காக் கிளர்பூண் புதல்வர்

132-145: விழாவாற்று…….நிற்குநரும்

(இதன் பொருள்) விழா ஆற்றுப்படுத்த கழிபெரு வீதியில்-இந்திரவிழா இனிது நிகழுமாறு அணி செய்து அதன்வழிப் படுத்தப்பட்ட மாபெருந் தெருவிடத்தே; பொன் நாண் கோத்த நல்மணிக் கோவை ஐயவி அப்பிய நெய்மணி முச்சி-பொன்னாலியன்ற நாணிலே கோக்கப்பட்ட அழகிய மணிக் கோவையும் சிறுவெண் கடுகினை அப்பிய நெய்யணிந்த உச்சியில் அமைந்த; மயிர்ப்புறம் சுற்றிய கயில் கடை முக்காழ் பொலம் பிறை-மயிரைக் கொண்டையாகக் கட்டி அதைச் சுற்றிக்கட்டப்பட்ட கோக்கியை நுனியிலுடைய முப்புரியாகிய முத்துமாலையும் அதனோடு கட்டிய பொன்னாற் செய்த பிறையும்; சென்னி நலம் பெறத்தாழ-தலை அழகு பெறுமாறு தாழ்ந்து கிடப்பவும்; செவ்வாய்க்குதலை மெய் பெறு மழலை சிந்துபு சில்நீர் ஐம்படை நனைப்ப-பொருள் விளங்காததும் எழுத்துருவம் பெறாததும் ஆகிய மழலை மொழியோடு சிந்தித் தம் வாயூறல் தம் மார்பிடைக் கிடக்கும் ஐம்படைப்பூந்துகில்-மறைக்க வேண்டிய உறுப்பை மறைத்துக் காக்கும் கருத்தாலன்றி வாளாது அழகின் பொருட்டு இடையிலே சுற்றிவிடப்பட்ட உடையாகிய அழகிய துகிலானது; தொடுத்த மணிக் கோவை உடுப்பொடு துயல்வர-தொடுக்கப்பட்ட மணிக்கோவையாலியன்ற உடையினோடு சேர்ந்து அசையா நிற்பவும்; தளர் நடை தாங்காக் கிளர்பூண் புதல்வரை-இயல்பாகவே தளர்ந்து நடக்கும் அவர்தம் நடை தாங்கா வண்ணம் மிகுதியாக அணிந்துவிடப்பட்ட விளங்குகின்ற அணிகலன்களையுடைய தத்தம் மக்களை; பொலம் தேர்மிசைப் புகர்முக வேழத்து-பொன்னாலியன்ற தேரின்மீது அமைத்தமையால் மேலும் உயர்ந்துள்ள புள்ளிகளையுடைய முகத்தையுடைய பொன்னாலியன்ற யானையினது பிடரிடத்தே; இலங்கு தொடி நல்லார் சிலர் நின்று ஏற்றி ஆலமர் செல்வன் மகன் விழாக் கால் கோள் காண்மினோ என-விளங்குகின்ற பொன் வளையலணிந்த மகளிர் சிலர் தரைமீதும் தேரின்மீதும் நின்று ஏற்றி வைத்து ஆலமர் செல்வனாகிய நம் இறைவன் மகன் முருகன் இதோ வீதிவலஞ் செய்தல் ஆகிய விழாவைத் தொடங்குகின்றான். எல்லீரும் வந்து காணுங்கோள் என்று ஏனைய ஆயமகளிர்க்குக் காட்ட; கண்டு நிற்குநரும்-அங்ஙனமே வந்து அக் காட்சியைக் கண்டு மகிழ்ந்து நிற்போரும் என்க.

(விளக்கம்) விழா வாற்றுப்படுத்த வீதி என்றது விழா நிகழ்த்துதற்குத் தகுந்ததாக அணிமுதலியவற்றான் நெறிப்படுத்தப்பட்ட வீதி என்றவாறு. அது தேர்வீதியாதலின் கழிபெருவீதி என்றார். ஐயவி-வெண்சிறு கடுகு. இது பேய் முதலியவற்றால் துன்பம் வாராமைப் பொருட்டு சிறுவர் தலையில் அப்பிவிட்டபடியாம். புதல்வர்க்குக் காவற் பெண்டிர் கடிப்பகை எறிந்து தூபம் காட்டித் தூங்குதுயில் வதியவும் எனப் பிறாண்டும் ஓதுவர்(7:57-9)முச்சியில் கொண்டை யாகப் புனைந்த மயிர்ப்புறஞ் சுற்றி என்க. கயில்-கோக்கி;(கொக்கி) கயிற்கடை-கோக்கியில்.கடை: ஏழாவதன் உருபு கயிற் கடைப்பிறை என்க. நலம்-அழகு. குதலை-பொருள் விளக்காச் சொல். மெய்-எழுத்துருவம். சின்னீர் என்றது வாயூறலை. ஐம்படை-திருமாலுடைய சங்கு முதலிய ஐந்து படைகளின் வடிவமாகச் செய்து மகவிற்கு மார்பின்கண் அணியும் ஒருவகை அணிகலன். அற்றம்-சோர்வு; இடக்கரடக்கு. மறைக்க வேண்டிய உறுப்புக்களை மறைத்து மானங்காத்தற் பொருட்டன்றி வாளாது அழகின் பொருட்டுச் சுற்றிய பூந்துகில். மணிக் கோவைகளைத் தூங்கவிட்டு ஆடைபோல அற்றங் காத்தற்கு அரையிற் கட்டும் அணியை உடுப்பு என்றார். தம்முடம்பையே தாங்காது தளரும் நடைக்கு மேலும் பொறையாக அணியப்பட்ட பூண் என்பார் நடைதாங்காப்பூண் என்றார். தேர்-பொற் சிறுதேர் அதன் மிசை பொன் யானையை ஏற்றி அதன் பிடரில் புதல்வரை ஏற்றிவைத்து முருகன் விழாத்தொடங்குகின்றார்கள் காண்மினோ என்றவாறு. ஆலமர் செல்வன் மகன்-முருகன்.

மணிமேகலை மலர் கொய்யப் போவாளைக் கண்டு

மாந்தர் பெரிதும் மனம் மறுகுதல்

146-158: விராடன்…….இனைந்துக

(இதன் பொருள்) விராடன் பேரூர் விசயன் ஆம் பேடியைக் காணிய சூழ்ந்த கம்பலை மாக்களின்-விராடனுடைய தலை நகரத்து வீதியிலே செல்லாநின்ற விசயனாகிய பேடியைக் காணுதற்கு அவாவிச் சூழ்ந்துக்கொண்ட ஆரவாரமுடைய அந்நகரத்து மாந்தரைப் போன்று; மணிமேகலைதனை வந்து புறஞ் சுற்றி சுதமதியோடு மலர் கொய்ய அவ்வீதியிலே செல்லாநின்ற மணிமேகலையைக் கண்ட அந்நகரத்து மக்கள் பலரும் அவள் பக்கலிலே வந்து சூழ்ந்துகொண்டு; அணி அமை தோற்றத்து அருந்தவப் படுத்திய தாயோ கொடியள் தகவு இலள் செய்யாக் கோலத்தோடு இவளைச் செயற்கரிய தவநெறியிலே செலுத்திய மாதவியும் ஒரு தாய்மையுடையள் ஆவாளோ? அவள் தாயல்லள் பெரிதும் கொடியவள், பண்பற்றவள்! ஈங்கு இவள் மலர் வனம்தான் புகின்-இவற்றே இவள் மலர்ப் பொழிலினூடே புகுந்தக்கால்; ஆங்கு உள நல் இள அன்னம் மடந்தை தன் நடை நாணாது வல்லுந கொல்லோ- அப் பொழிலில் வாழ்கின்ற அழகிய அன்னப் பறவைகள் இவள் நடையைக் கண்டு நாணி ஓடுவதல்லது நாணாமல் அங்கு வாழ வல்லமையுடையன ஆகுமோ? ஒருதலையாய் ஓடியேபோம்; ஆங்குள மாமயில் தையல் முன் வந்து நிற்பன தன்னுடன் சாயல் கற்பன கொலோ- அப் பொழி லிடத்தே வாழ்கின்ற அழகிய மயில்களுள் வைத்து நாணாது துணிந்து வந்து நிற்கின்ற மயில்கள் ஒரோவழி இவளிடத்தேயுள்ள சாயலைத் தாமும் கற்க விரும்புவன ஆதல் வேண்டும்; உள பைங்கிளிகள் தாம் பாவை தன் கிளவிக்கு எஞ்சல கொல்லோ இசையுந அல்ல-அப் பொழிலிலே மழலை பேசித்திரிகின்ற பச்சைக்கிளிகள் தாமும் இனிமையினாலே இவளுடைய மொழி தரு மினிமையை விஞ்சி விடமாட்டா ஏன்? ஒப்பாவனவும் இல்லை; என்று இவை சொல்லி-என்று இவையும் இவை போல்வனவும் தத்தம் வாய்தந்தனவெல்லாம் பரிந்து சொல்லி யாவரும் இனைந்து உக- எத்தகையோரும் இவள் பொருட்டுப் பெரிதும் நெஞ்சழிந்து ஒழுகுமாறு வருந்த என்க.

(விளக்கம்) பன்னிரண்டாண்டு காட்டிலுறைந்த பின்னர் ஓராண்டு பிறர் அறியாவண்ணம் கரந்துறைதல் வேண்டும் என்று துரியோதனனுடன் உடன்படிக்கை செய்துகொண்ட பாண்டவர் விராடநகரத்தில் உள்வரிக்கோலம் பூண்டுறைந்தனர் என்பது மகாபாரதம். அப்பொழுது அருச்சுனன் பேடியுருத்தரித்து அந்நகரத்திற் செல்ல அப்பேடியைக்காண நகரமாந்தர் ஆரவாரத்துடன் வந்து அப் பேடியைச் சூழ்ந்தது ஈண்டுத் துறவோர் பள்ளியினின்றும் மலர்வனம் புகச்செல்லும் மணிமேகலையை மாந்தர் சூழ்ந்தமைக்குவமை.

கம்பலை-ஆரவாரம். அணியமை தோற்றம்- அணிகலன் இல்லாமலும் திகழும் இயற்கை அழகு. இதனைச் செய்யாக்கோலம் என்பர் இளங்கோ. தாயோ என்னும் வினா எதிர்மறைப் பொருளை வற்புறுத்தி நின்றது. வல்லுந-பொறுக்கும் வன்மையுடையன. ஓ:எதிர்மறை கற்பன கொல்லோ என்புழி, கொல்லும் ஓவும் அசைச்சொற்கள். வினாவாக்கி-கற்கவியலா தெனினுமாம். எஞ்சல-விஞ்சா; மிகா. இசையுநவும் அல்ல எனல் வேண்டிய எச்சவும்மை தொக்கது. இசையுந ஒப்பாவன. இவை என்றது தாயோ கொடியள் என்பது முதலியவற்றை.

மணிமேகலையும் சுதமதியும் மலர்வனம் புகுதல்

159-171 :செந்தளிர்……மணிமேகலையென்

(இதன் பொருள்) செந்தளிர்ச் சேவடி நிலம் வடுவுறாமல்-சிவந்த தளிர்போன்று சிவந்த அடியினாலே நிலத்தில் சுவடு தோன்றாதபடி நடந்து; குரவமும் மரவமும் குருந்தும் கொன்றையும் திலகமும் வகுளமும் செங்கால் வெட்சியும் நரந்தமும் நாகமும் பரந்தலர் புன்னையும்-குராமரமும் வெண் கடப்ப மரமும் குருந்தும் கொன்றையும் திலகமரமும் வகுள மரமும் சிவந்த காலையுடைய வெட்சியும் நரந்த மரமும் நரகமரமும் பரந்து மலரும் புன்னையும்; பிடவமம் தளவமும் முடமுள் தாழையும் குடசமும் வெதிரமும் கொழுங்கால் அசோகமும்-குட்டிப்பிடவங் கொடியும் செம்முல்லையும் வளைத்த முள்ளையுடைய தாழையும் வெட்பாலையும் செருந்தியும் மூங்கிலும் வளவிய காலையுடைய அசோக மரமும்; செருந்தியும் வேங்கையும் பெருஞ்சண்பகமும் எரிமலர் இலவமும்-செருந்தி மரமும் வேங்கை மரமும் பெருஞ்சண்பக மரமும் நெருப்புப் போன்ற மலரையுடைய இலன மரமும் ஆகிய இவையெல்லாம்; விரிமலர் பரப்பி-மலர்ந்த மலர்களைப் பரப்பியிருத்தலாலே; வித்தகர் இயற்றிய விளங்கிய கைவினைச் சித்திரச் செங்கைப்படாம் போர்த்ததுவே ஒப்பத் தோன்றிய-ஓவியப் புலவர் வரைந்த விளக்கமான கைத் தொழிலாகிய சித்திரங்கள் அமைந்த செய்கையையுடைய படா அத்தினால் போர்க்கப்பட்டதை ஒத்துக்காணப்பட்ட; உவவனம் தன்னை தொழுதனள் காட்டிய சுதமதி தன்னொடு-உவவன மென்னும் அத் தெய்வப் பூம்பொழிலை அணுகியவுடன் அதனைக் கைகூப்பித் தொழுது இதுதான் அம்மலர் வனமென்று தனக்குக் காட்டிய சுதமதி என்பாளொடு; மணிமேகலை மலர் கொய்யப் புகுந்தனள்-மணிமேகலை மலர் கொய்தற்கு அவ்வனத்தினுள் புகுந்தனள் என்பதாம்.

(விளக்கம்) குரவமுதலாக இலவ மீறாக் கூறப்பட்ட மரங்களும் கொடிகளும் பிறவும் பகவனதாணையால் ஒரு சேர மலர்ந்து பரப்பித் தோன்றுதற்கு ஓவியப்புலவர் திறம்பட வரைந்த சித்திரங்களையுடைய துகில் உவமை.

தொழுதனள்: தொழுது முற்செற்றம். பகவனதாணையிற் பன்மரம் மலர்தலும் மயனிழைத்த பீடிகையை உடையதாதலும் ஆகிய தெய்வத் தன்மைபற்றிச் சுதமதி அதனை அணுகியவுடன் கைகூப்பித் தொழுது காட்டினள் என்க.

இனி இக் காதையை மாதவியுரைத்த வுரைமுன் தோன்றி மணிமேகலைக்கு ஏது நிகழ்ச்சி எதிர்ந்துளதாகலின் வெதுப்பக் கலங்கி அழித்துருட்டி நீர் ஆட்ட மாதவி நோக்கிக் கொணர்வாயென்றலும் சுதமதி கூறும் காமன் நடுங்கும் ஆடவர் அகறலும் உண்டோ நின்றிடிற் பேடியர் அன்றோ அன்றியும் யான் வரும் காரணங் கேளாய் கொய்வேனை எடுத்தனன் எழுந்தனன் படுத்தனன் ஆயினேன் நீங்கினன் ஆதலால் நின்மகள் செவ்வியிலள் போகின் ஆங்குளர் செல்லார் எய்தார் உவவனம் ஒன்றுண்டு யானும் போவல் என்று செல்வுழி நிற்குநரும் காண்குநரும் நிற்குநரும் இனைந்துகக் காட்டிய சுதமதியோடு மணிமேகலை கொய்யப் புகுந்தனள் என இயைத்திடுக

மலர்வனம் புக்க காதை முற்றிற்று

 Logged

 Anu

Golden Member

Posts: 2463
Total likes: 48
Karma: +0/-0

Re: மணிமேகலை

« Reply #4 on: February 28, 2012, 08:50:51 AM »

  1. பளிக்கறை புக்க காதை

நான்காவது மணிமேகலை உதயகுமரனைக் கண்டு பளிக்கறை புக்க பாட்டு

அஃதாவது -உவவனத்தினுட் சுதமதியோடு மணிமேகலை புகுந்தனளாக, அவள்பால் பெருங்காதல் கொண்டிருந்த அரசிளங்குமரனாகிய உதயகுமரன் அவளைத் தன் தேரிலேற்றிவரத் துணிந்து தேரோடு அவ் வுவவனத்தை அணுகியபொழுது மணிமேகலை அவன் வரவினைத் தேரின் ஒலியாலுணர்ந்து அக்கோமன் தன்பால் கன்றிய காமமுடையவனைதலைப் பண்டே கேள்வியுற்றிருந்தனளாகலின் பெரிதும் அஞ்சி அவ்  வுவவனத்திருந்த பளிக்கறையினுட் புகுந்து தாழக் கோலையிட்டுக் கொண்டதும் பின்னர் ஆங்கு நிகழ்ந்தனவும் கூறுகின்ற செய்யுள் என்றவாறு.

இதன்கண்-மணிமேகலைக்குச் சுதமதி அம்மலர்ப்பொழிலின் அழகைக் காட்ட அவள் கண்டு மகிழ்தலும், உதயகுமரன் மதங்கொண்ட யானையை அடக்கி மறவர் சூழத் தேரிலேறி மணிமேகலை சென்ற வீதயில் வருபவன், ஆங்கு எட்டிகுமரன் வாயிலாக மணிமேகலை மலர்வனம் புகப்போன்மை அறிந்து அங்ஙனமாயின் ஆங்குச் சென்று அவளை என் தேரிலேற்றி வருகுவென், என்று சூள்மொழிந்து தன் தேரை உவவனம் நோக்கிச் செலுத்தி அதனை அணுகுதலும் அதன் ஆரவாரத்தால் அங்ஙனம் வருபவன் அரசன் மகனே யாதல் வேண்டும் என்று மணிமேகலை சுதமதிக்குக் கூறுதலும், அவள் அஞ்சி நடுங்கி மணிமேகலையை அங்குள்ள பளிக்கறை மண்டபத்துட் புகுத்திப் பளிக்கறையின் அகத்தே தாழக்கோல் இட்டுக் கொண்டிருக்கச் செய்தபின் அதனாலே ஐந்து விற்கிடைத் தொலைவில் நிற்றலும், கழிபெருங்காம வேட்கையுடன் உதயகுமரன் தேரினின்றிழிந்து உவவனத்துள்ளே மணிமேகலையைத் தேடி வருபவன் அவளைக் காணாமல் சுதமதியை மட்டும் கண்டு அவள்பால் மணிமேகலையின் இயல்பினைத் தனது வேட்கை தோன்ற வினவுதலும், சுதமதி அச்சத்தோடு அவ்வரசிளங்குமரனுக்கு மக்கள் யாக்கையின் இழிதகைமையை எடுத்தோதுதலும், அதனைக் கேட்கும் பொழுதே மணிமேகலையைத் துருவித் திரியும் அவன்  கண்ணில் பளிக்கறை புக்க பாவையின் உருவம் பளிங்கினூடே வந்து புகுந்ததுவும் பிறவும் அழகாகக் கூறப்பட்டுள்ளன.

பரிதி அம் செல்வன் விரி கதிர்த் தானைக்கு
இருள் வளைப்புண்ட மருள் படு பூம்பொழில்
குழல் இசை தும்பி கொளுத்திக்காட்ட
மழலை வண்டு இனம் நல் யாழ்செய்ய
வெயில் நுழைபு அறியா குயில் நுழை பொதும்பர்
மயில் ஆடு அரங்கில் மந்தி காண்பன காண்!
மாசு அறத் தெளிந்த மணி நீர் இலஞ்சி
பாசடைப் பரப்பில் பல் மலர் இடை நின்று
ஒரு தனி ஓங்கிய விரை மலர்த் தாமரை
அரச அன்னம் ஆங்கு இனிது இருப்ப  04-010

கரை நின்று ஆலும் ஒரு மயில் தனக்கு
கம்புள் சேவல் கனை குரல் முழவா
கொம்பர் இருங் குயில் விளிப்பது காணாய்!
இயங்கு தேர் வீதி எழு துகள் சேர்ந்து
வயங்கு ஒளி மழுங்கிய மாதர் நின் முகம் போல்
விரை மலர்த் தாமரை கரை நின்று ஓங்கிய
கோடு உடை தாழைக் கொழு மடல் அவிழ்ந்த
வால் வெண் சுண்ணம் ஆடியது இது காண்!
மாதர் நின் கண் போது எனச் சேர்ந்து
தாது உண் வண்டு இனம் மீது கடி செங் கையின்  04-020

அம் சிறை விரிய அலர்ந்த தாமரைச்
செங் கயல் பாய்ந்து பிறழ்வன கண்டு ஆங்கு
எறிந்து அது பெறா அது இரை இழந்து வருந்தி
மறிந்து நீங்கும் மணிச் சிரல் காண்! எனப்
பொழிலும் பொய்கையும் சுதமதி காட்ட
மணிமேகலை அம் மலர்வனம் காண்புழி
மதி மருள் வெண்குடை மன்னவன் சிறுவன்
உதயகுமரன் உரு கெழு மீது ஊர்
மீயான் நடுங்க நடுவு நின்று ஓங்கிய
கூம்பு முதல் முறிய வீங்கு பிணி அவிழ்ந்து  04-030

கயிறு கால் பரிய வயிறு பாழ்பட்டு ஆங்கு
இதை சிதைந்து ஆர்ப்ப திரை பொரு முந்நீர்
இயங்கு திசை அறியாது யாங்கணும் ஓடி
மயங்கு கால் எடுத்த வங்கம் போல
காழோர் கையற மேலோர் இன்றி
பாகின் பிளவையின் பணை முகம் துடைத்து
கோவியன் வீதியும் கொடித் தேர் வீதியும்
பீடிகைத் தெருவும் பெருங் கலக்குறுத்து ஆங்கு
இரு பால் பெயரிய ஒரு கெழு மூதூர்
ஒரு பால் படாஅது ஒரு வழித் தங்காது  04-040

பாகும் பறையும் பருந்தின் பந்தரும்
ஆதுல மாக்களும் அலவுற்று விளிப்ப
நீல மால் வரை நிலனொடு படர்ந்தெனக்
காலவேகம் களி மயக்குற்றென
விடு பரிக் குதிரையின் விரைந்து சென்று எய்தி
கடுங்கண் யானையின் கடாத் திறம் அடக்கி
அணித் தேர்த் தானையொடு அரசு இளங் குமரன்
மணித் தேர்க் கொடுஞ்சி கையான் பற்றி
கார் அலர் கடம்பன் அல்லன் என்பது
ஆரங்கண்ணியின் சாற்றினன் வருவோன்  04-050

நாடக மடந்தையர் நலம் கெழு வீதி
ஆடகச் செய்வினை மாடத்து ஆங்கண்
சாளரம் பொளித்த கால் போகு பெரு வழி
வீதி மருங்கு இயன்ற பூ அணைப் பள்ளி
தகரக் குழலாள் தன்னொடு மயங்கி
மகர யாழின் வான் கோடு தழீஇ
வட்டிகைச் செய்தியின் வரைந்த பாவையின்
எட்டிகுமரன் இருந்தோன் தன்னை
மாதர் தன்னொடு மயங்கினை இருந்தோய்!
யாது நீ உற்ற இடுக்கண்! என்றலும்  04-060

ஆங்கு அது கேட்டு வீங்கு இள முலையொடு
பாங்கில் சென்று தான் தொழுது ஏத்தி
மட்டு அவிழ் அலங்கல் மன்ன குமரற்கு
எட்டிகுமரன் எய்தியது உரைப்போன்
வகை வரிச் செப்பினுள் வைகிய மலர் போல்
தகை நலம் வாடி மலர் வனம் புகூஉம்
மாதவி பயந்த மணிமேகலையொடு
கோவலன் உற்ற கொடுந் துயர் தோன்ற
நெஞ்சு இறை கொண்ட நீர்மையை நீக்கி
வெம் பகை நரம்பின் என் கைச் செலுத்தியது  04-070

இது யான் உற்ற இடும்பை என்றலும்
மது மலர்த் தாரோன் மனம் மகிழ்வு எய்தி
ஆங்கு அவள் தன்னை என் அணித் தேர் ஏற்றி
ஈங்கு யான் வருவேன் என்று அவற்கு உரைத்து ஆங்கு
ஓடு மழை கிழியும் மதியம் போல
மாட வீதியில் மணித் தேர் கடைஇ
கார் அணி பூம்பொழில் கடைமுகம் குறுக அத்
தேர் ஒலி மாதர் செவிமுதல் இசைத்தலும்
சித்திராபதியோடு உதயகுமரன் உற்று
என்மேல் வைத்த உள்ளத்தான் என  04-080

வயந்தமாலை மாதவிக்கு ஒரு நாள்
கிளந்த மாற்றம் கேட்டேன் ஆதலின்
ஆங்கு அவன் தேர் ஒலி போலும் ஆய் இழை!
ஈங்கு என் செவிமுதல் இசைத்தது என் செய்கு? என
அமுது உறு தீம் சொல் ஆய் இழை உரைத்தலும்
சுதமதி கேட்டுத் துளக்குறு மயில் போல்
பளிக்கறை மண்டபம் பாவையைப் புகுக என்று
ஒளித்து அறை தாழ் கோத்து உள்ளகத்து இரீஇ
ஆங்கு அது தனக்கு ஓர் ஐ விலின் கிடக்கை
நீங்காது நின்ற நேர் இழை தன்னை   04-090

கல்லென் தானையொடு கடுந் தேர் நிறுத்தி
பல் மலர்ப் பூம்பொழில் பகல் முளைத்தது போல்
பூ மரச் சோலையும் புடையும் பொங்கரும்
தாமரைச் செங் கண் பரப்பினன் வரூஉம்
அரசு இளங் குமரன் ஆரும் இல் ஒரு சிறை
ஒரு தனி நின்றாய்! உன் திறம் அறிந்தேன்
வளர் இள வன முலை மடந்தை மெல் இயல்
தளர் இடை அறியும் தன்மையள்கொல்லோ?
விளையா மழலை விளைந்து மெல் இயல்
முளை எயிறு அரும்பி முத்து நிரைத்தனகொல்?  04-100

செங் கயல் நெடுங் கண் செவி மருங்கு ஓடி
வெங் கணை நெடு வேள் வியப்பு உரைக்கும்கொல்?
மாதவர் உறைவிடம் ஒரீஇ மணிமேகலை
தானே தமியள் இங்கு எய்தியது உரை? எனப்
பொதி அறைப் பட்டோர் போன்று உளம் வருந்தி
மது மலர்க் கூந்தல் சுதமதி உரைக்கும்
இளமை நாணி முதுமை எய்தி
உரை முடிவு காட்டிய உரவோன் மருகற்கு
அறிவும் சால்பும் அரசியல் வழக்கும்
செறி வளை மகளிர் செப்பலும் உண்டோ?  04-110

அனையது ஆயினும் யான் ஒன்று கிளப்பல்
வினை விளங்கு தடக் கை விறலோய்! கேட்டி
வினையின் வந்தது வினைக்கு விளைவு ஆயது
புனைவன நீங்கின் புலால் புறத்திடுவது
மூப்பு விளிவு உடையது தீப் பிணி இருக்கை
பற்றின் பற்றிடம் குற்றக் கொள்கலம்
புற்று அடங்கு அரவின் செற்றச் சேக்கை
அவலம் கவலை கையாறு அழுங்கல்
தவலா உள்ளம் தன்பால் உடையது
மக்கள் யாக்கை இது என உணர்ந்து  04-120

மிக்கோய்! இதனைப் புறமறிப்பாராய்
என்று அவள் உரைத்த இசை படு தீம் சொல்
சென்று அவன் உள்ளம் சேராமுன்னர்
பளிங்கு புறத்து எறிந்த பவளப் பாவையின்
இளங்கொடி தோன்றுமால் இளங்கோ முன் என்  04-125

உரை

(1-முதலாக 25-இறுதியாக, உவவனத்தினுள் புக்க மணிமேகலைக்கு அதன் எழிலையும் அங்குறையும் பறவை முதலியவற்றையும் சுதமதி காட்டிக் கூறுவதாய் வரும் ஒரு தொடர்)

மயிலாடரங்கு

1-9: பரிதி…….காண்பன காண்

(இதன் பொருள்) பரிதி அம் செல்வன் விரிகதிர் தானைக்கு இருள் வளைப்புண்ட மருள்படு பூம்பொழில்-ஞாயிற்றுக் கடவுளாகிய உலக முழுதாள்கின்ற அழகிய அரசனுடைய திசையெலாம் விரிந்த கதிர்களாகிய படைமறவர்க்கு அஞ்சிப்புகுந்த இருளானது அப் படைமறவர்க்கு அஞ்சிப்புகுந்த இருளானது அப் படைமறவர்களாலே நாற்றிசையும் சூழ்ந்து முற்றுகையிடப்பட்டமையால் உள் புகுந்தோர் இது பகலோ இரவோ என்று மருள்தற்குச் காரணமான
அம் மலர்ப் பொழிலினூடே; தும்பி குழல் இசை கொளுத்திக் காட்ட-தும்பிகள் வேய்ங்குழலின் இசையைக் கூட்டிக் காட்டா நிற்பவும்; வண்டு இனம் மழலைநல் யாழ் செய்ய-வண்டுக் கூட்டங்கள் கேள்விக்கினிய அழகிய யாழிசையை உண்டாக்கவும்; வெயில் நுழைபு அறியா குயில் நுழை பொதும்பர்-ஞாயிற்றின் ஒளி ஒரு பொழுதும் நுழைதல் அறிந்திலாததும் குயில்களும் நுழைத்தே செல்லுதற் கியன்ற செறிவுடையதுமாகிய அப் பொழிலிடத்தே; மயில் ஆடு அரங்கின் மந்தி காண்பன காண்-மணிமேகலாய்! அதோ மயிலாகிய நாடகக் கணிகை கூத்தாடா நின்ற கூத்தாட்டரங்கின் கண் மந்தியாகிய அவையோர் இருந்து காண்பனவற்றைக் காண்பாயாக என்றாள் என்க.

(விளக்கம்) பரிதி-ஞாயிறு. செல்வன்-அரசன். அழியாத ஒளிச் செல்வன் என்பார், அஞ்செல்வன் என்றார். அவன் பகையாகிய இருளை நாற்றிசையும் பரந்து சென்று அழித்தலின் விரிகதிர் தானையாயிற்று. பகையாகிய இருள் புக்குக் கரந்திருத்தலான் அத் தானையால் வளைப் புண்டிருக்கும் அரணாகிய பொழில் என்றவாறு.

தும்பி-வண்டு. இசை கொளுத்துதல்-இசையைப் பொருத்துதல். மழலை-இன்பம். வெயிலாகிய பகை நுழையவியலாது. குயில் இருட்கின மாதலின் அவைமட்டும் புகும் பொதும்பர் எனவும் ஒருபொருள் தோன்றிற்று. கணிகையாகிய மயில் எனவும் அவையோராகிய மந்தி எனவும் கூறிக்கொள்க.

அரசவன்னம் கொலுவிருத்தல்

7-13: மாசற………காணாய்

(இதன் பொருள்) மாசு அறத் தெளித்த மணிநீர் இலஞ்சிப் பாசடைப் பரப்பின்-அழுக்கற்றமையாலே நன்கு தெளிந்துள்ள படிகமணி போன்று தூயதாகிய பொய்கையாகிய தன் அரண்மனையகத்தே பசிய இலையாகிய கம்பளம் விரிக்கப்பட்ட திருவோலக்க மண்டபத்தில்; பல்மலர் இடைநின்று ஒரு தனி ஓங்கிய விரைமலர்த்தாமரை ஆங்கு-பல்வேறு மலர்க் கூட்டங்களாகிய இருக்கைகளுள் வைத்துத் தனக்கே சிறந்துரிமையுடைய தொரு பேரழகோடு உயர்ந்து மலர்ந்துள்ள நறுமணங் கமழுகின்ற தாமரையாகிய அரசு கட்டிலின் மேலே; இனி அரச அன்னம் இருப்ப-காட்சிக்கினிதாக அன்னமாகிய அரசன் கொலுவீற்றிருப்ப; கரை நின்று ஆலும் ஒரு மயிலுக்குக் கம்புட் சேவல் கனைகுரன் முழவு ஆக-அவ்விலஞ்சியின் கரையாகிய ஆடலரங்கினின்று கூத்தாடுகின்ற ஒப்பற்ற மயிலாகிய விறலியினது ஆடலுக்கியையச் சம்பங்கோழிச் சேவலாகிய முழவோனுடைய மிக்கவொலி மத்தள முழக்கம் ஆக; கொம்பர் இருங்குயில் விளைப்பது காணாய் பூங்கொம்பிலுள்ள கரிய குயிலாகிய பாணன் பாடுவதனையும் காண்பாயாக என்றாள் என்க.

(விளக்கம்) மணி-படிகமணி. பாசடை-பசியஇலை. இது பச்சைக் கம்பளமென்க. இருக்கும் இருக்கைக்குப் பல்வேறு இடைநின்று ஒரு தனி ஓங்கிய விரைமலர்த் தாமரை ஆங்கு-பல்வேறு பறவைகள் இருக்கும் நீர்பூக்கள் உவமை; தனிநின்றோங்கிய விரைமலர்த் தாமரையாகிய அரசு கட்டில் என்க. கரை-ஆடலரங்கு எனவும், மயில் விறலி எனவும் கொள்க. கம்புட்சேவல்-சம்பங்கோழியிற்
சேவல்: இதனை முழவோன் எனவும், குயிலை பாணனாகவும் கூறிக் கொள்க. என்னை அன்ன அரசன் கொலுவீற்றிருத்தலால், இங்ஙனம் இனிதின் இயம்பினர். இது குறிப்புவமம் என்னும் அணி. விளிப்பது-பாடுவது. விளித்த இன்னமிர்துறழ்கீதம் (சீவக-1941)என்புழியும் அஃதப்பொருட்டாதலறிக.

வேறு பல காட்சிகள்
14-25: வயங்குதேர்………..காட்ட

(இதன் பொருள்) தேர் இயங்கு வீதி எழுதுகள் சேர்ந்து வணங்கு ஒளி மழுங்கி நின் மாதர் முகம் போல்-யாம் வந்த தேரோடும் வீதியிலே கம்பலை மாக்கள் சூழ்தலாலே எழுந்த புழுதி படிந்தமையாலே விளங்கும் ஒளி மழுங்கியிருக்கின்ற நின்னுடைய அழகிய முகத்தைப் போன்று; கரை நின்று ஓங்கிய கோடு உடைத்தாழைக் கொழுமடல் அவிழ்ந்த வால் வெள் சுண்ணம் ஆடிய இவ்விலஞ்சியன் கரையிலே நின்றுயர்ந்துள்ள கொம்பின் மலர்ந்துள்ள தாழம்பூவினது கொழுவிய அகமடலில் உதிர்ந்த மிக்க வெள்ளிய துகள் மூடியதனால் தன்னொளி மழுங்கிய; விரை மலர்த்தாமரை இது காண்-மணமுடைய மலராகிய தாமரை மலரிதனையும் காண்பாயாக; மாதர் நின்கண் போது எனச் சேர்ந்து தாது உண் வண்டினம் மீது கடிசெங்கையின் அலர்ந்த தாமரை-அழகிய நின்னுடைய கண்ணை மலர் என நினைத்து வந்து வீழ்ந்து தாதுண்ண முயலுகின்ற வண்டுகளின் மேலோச்சிக் கடிகின்ற நின் சிவந்த கையைப் போன்று மலர்ந்துள்ள தாமரை மலரின் மேல்; செங்கயல் பாய்ந்து பிறழ்வன-சிவந்த கயல் மீன்கள் பாய்ந்து பிறழ்கின்றவற்றை; அம் சிறைவிரிய ஆங்குக் கண்டு எறிந்து அது பெறா அது-வானத்தே தனது அழகிய சிறகுகள் விரிய அசையாமல் பறந்து அப்பொழுது கண்டு சிறகொடுக்கி விரைந்து எறிந்தும் அம் மீனைப் பற்றமாட்டாமல்; இரை இழந்து-தனக்கியன்ற இரையினை இழந்து; வருந்தி மறிந்து நீங்கும் மணிச்சிரல் காண் என-உளம் வருந்தி மீண்டு போகும் அழகிய அச்சிரற் பறவையின் செயலையும் அழகையும் காண்பாயாக என்று; பொழிலும் பொய்கையும் சுதமதி காட்ட-அப் பூம்பொழிலின் அழகையும் பொய்கையின் அழகையும் மணிமேகலைக்குச் சுதமதி காட்டா நிற்ப; என்க.

(விளக்கம்) இதன்கண்-மணிமேகலைக்குக் கூறுகின்ற சுதமதியின் கூற்றை ஞாபகவேதுவாக வைத்து நம்மனோர்க்கு நினைவூட்டும் செய்தியும் உண்டு. அச் செய்தியை ஈண்டுக் கருப்பொருட் புறத்தே தோற்றுவிக்கும் இப் புலவர் பெருமான் வித்தகம் பெரிதும் வியக்கத்தக்கதாம்.

அது வருமாறு: தாமரை மலரில் பிறழ்ந்த செங்கயல் கண்டு வானத்தேசிறைவிரியக்காத்துநின்ற மணிச்சிரல் தனக்கு எளிதாகக்கிட்டு மோரிரை என்று கருதி விரைந்து அதன் மேல் வீழ்ந்து பற்றியும், அவ் விரை பெறாமல் மறிந்து விண்ணில் மீண்டது என்னுமிதன் புறத்தே,மலர்வனம் புக்கமையால் மணிமேகலை தனக்கு எளிதாகக் கிடைத்து விடுவாள் என்று கருதி அவள்மேற் சென்ற அரசிளங்குமரன் தன்கருத்து நிறைவேறாமல் வாளாது மறிந்து (இறந்து) விண்ணேறினன் என்னும் பின்னிகழ்ச்சியை இப்புலவர் பெருமான் நம்மனோரை நினைக்குமாறு செய்கின்றார். இதுஞாபக வேது எனப்படும். புலவர்நினைந்த தொன்றனைக் கதையோடு தொடர்பு படுத்தாமலே பயில்வோருளத்தே தோற்று விக்கக் கருதி அதற்கு ஏதுமாத்திரையே புறத்தே தோற்றுவித்தலாம். இஞ்ஞாபகம் காரணமாகச் சிரல் இரைபெறாது இழந்து வருந்தி மறிந்து நீங்கியது என்று விதந்தோதியிருத்தலறிக. மறித்து நீங்கும் என்ற சொல் பொய்தது உதயகுமரன் திறத்திலே இறந்தொழிந்தான் என்னும் பொருட்கியைதற் பொருட்டேயாம் என்பது நுண்ணுணர்வற் கண்டு கொள்க.

நகரத்தின்கண் காலவேகம் என்னும் யானை மதமயக்குற்றுச் செய்யும் செயல்கள்

26-34: மணிமே……..போல

(இதன் பொருள்) மணிமேகலை அம் மலர்வனம் காண்புழி-இவ்வாறு மணிமேகலை அந்த மலர்ப் பொழிலின் இயற்கையழகினைக் கண்டு மகிழாநிற்கும் பொழுது; மதிமருள் வெள்குடை மன்னவன் சிறுவன் உதயகுமரன்-திங்கள் மண்டிலம் போன்ற வெண் கொற்றக் குடையையுடைய சோழ மன்னனுடைய மகன் உதயகுமரன் என்பான்(செய்தன சொல்வாம்); உருகெழு மூதூர்-பகைவர்க்கு அச்சந்தருகின்ற அப் பூம்புகார் நகரத்திலே; (44) கால வேகம் களிமயங்கு உற்றென-காலவேகம் என்னும் களிற்றியானையானது காமத்தாற் களித்தற்குக் காரணமான மதவெறிப்பட்டபடியாலே; நீயான் நடுங்க நடுவுநின்ற ஓங்கிய கூம்பு முதல் முறிய வீங்கு பிணி அவிழ்ந்து-மாலுமியானவன் செயலறவினாலே திகைத்து நடுங்கும்படியும் மரக்கலத்தின் நடுவிடத்தே நின்றுயர்ந்த பாய்மரம் முறிந்து போம்படியும் செறியக் கட்டின கட்டவிழ்ந்து கயிறுகள் புரியற்றுப் போகவும்; இதை வயிறு பாழ் பட்டாங்குச் சிதைந்து ஆர்ப்ப-பாயின் நடுவிடம் கிழிந்து பாழ்வெளியாய் விடவும் பாய் சிதைந் தொழியவும் அகத்துள்ள மாக்கள் எல்லாம் அழுது ஆரவாரம் செய்யவும்; திரை பொரு முந்நீர் இயங்குதிசை அறியாது-அலைகள் மோதா நின்ற கடலிடத்தே தான் செல்ல வேண்டிய திசையையும் அறியமாட்டாமல்; யாங்கணும் ஓடி-தள்ளிய திசைகளிலெல்லாம் ஓடியலைந்து; மயங்கு கால் எடுத்த-சுழற்காற்றாலியக்கப்படுகின்ற; வங்கம் போல-மரக்கலத்தைப் போன்று, என்க.

(விளக்கம்) மதிமருள் என்னும் அடைமொழி வெண்குடைக்குவமை யாதலோடன்றி  மதிமருள்…..சிறுவன் என்பதனோடும் இயைவிக்கலா மாதலின் ஏதுநிகழ்ச்சி எதிர்ந்துள்ளமையாலே பிக்குணியாகிய மணிமேகலையின் பால் கன்றிய காமமுடையனாய் அறிவுமயங்கிய அரசிளங்குமரன் எனவும் பொருள் கோடற்கும் இயைந்து நிற்றலால் இஃது இரட்டுறமொழிதல் என்னும் உத்தியின் பாற்படுதலும் உணர்க. எழுவாய் சேய்மையிற் கிடந்தமையின் ஈண்டுக்கொண்டு கூட்டப்பட்டது. காலவேகம் என்பது பட்டத்தியானையின் பெயர். களிமயக்கம்-காமவெறியாலுண்டான அறிவு மயக்கம். நீயான்-மாலுமி. கூம்பு-பாய்மரம். இதை வயிறுபாழ்பட என இயைக்க. இதை-பாய். நடுவிடம் கிழிந்து வெளியாகிவிட என்றவாறு. நீயான்-யானைப்பாகனுக்கும்,மரக்கலம்-யானைக்கும்,மயங்கு கால்-களிமயக்கத்திற்கும் உவமைகளாக உணர்க. மயங்குகால்-சுழற்காற்று மூதூர்க்குக் கடலுவமை.

இதுவுமது

35-44: காழோர்………படர்ந்தென

(இதன் பொருள்) காழோர் கை அற மேலோர் இன்றி-குத்துக் கோற்காரர் தம்மாலாந்துணையும் குத்தியும் மடங்காமையாலே செயலற்றொழியத் தன் மேலிருந்து செலுத்தும் பாகர் யாருமில்லாமல் செய்து; பாகின் பிளவையின் பணை முகந்துடைத்து-அப் பாகர் தோட்டியாற் குத்திப் பிளந்த புண்ணின்பரிய வாயினின் றொழுகும் குருதியைத் தன் கையாற் றுடைத்துக் கொண்டு; கோ இயல் வீதியும் கொடித் தேர் வீதியும் பீடிகைத் தெருவும் பெருங்கலக்குறுத்து-அரசற்கியன்ற வீதியிடத்தும் கொடி உயர்த்திய தேரோடும் வீதியிடத்தும் அங்காடித் தெருவிடத்தும் புகுந்து மாபெருங் கலக்கத்தை மக்கட்குண்டாக்கி; ஆங்கு இருபால் பெயரிய உருகெழு மூதூர்-அவ்வாறே பட்டினப்பாக்கமும் மருவூர்ப் பாக்கமும் என்னும் இருவகைப் பெயரையுடைய அச்சம் பொருந்திய அம் மூதூரின்கண், யாங்கணும்; ஒருபால் படாஅது ஒருவழித் தங்காது-ஒரு பக்கத்திலே படாமலும் ஓரிடத்திலே நில்லாமலும்; பாகும் பறையும் பருந்தின் பந்தரும் ஆதுலமாக்களும் அலவுற்று விளிப்ப-பாகுத் தொழிலோரும் பறையறை வோரும் பந்தர் போல் நிழலிட்டுத் தன்னைச் சூழ்ந்து பறக்கும் பருந்துக் கூட்டமும் ஆற்றா மாந்தரும் மனஞ்சுழன்று துன்பக் குரல் எழுப்பும்படி; நீலமால்வரை நிலத்தோடு படர்ந்தென நீல நிறமுடைய மலையொன்று நிலத்திலே இயங்குகினாற் போன்று இயங்காநிற்ப, என்க.

(விளக்கம்) காழ்-குத்துக்கோல். மேலோர்-பிடரிலிருந்து செலுத்தும் பாகர். பாகின் பிளவை-பாகர் தோட்டியாற் குத்திப்பிளந்த புண். முகம்-புண்ணின் வாய். காழோரும் பாகரும் தன் முகத்திற் புண்களைக் கையினாற்றுடைத்து எனினுமாம். பீடிகைத்தெரு-அங்காடித்தெரு. இருபாற்பெயரிய என்றது ஈண்டுப் பட்டினப்பாக்கம் மருவூர்ப்பாக்கம் என்னும் இருபகுதியாகிய பெயரையுடைய என்பதே கருத்து. என்னை ஒருபாற் படா அது என்பதனால். இனி காவிரிப்பூம்பட்டினம் சம்பாபதி என்னும் இருபாற் பெயரிய மூதூர் என்றல் ஈண்டுச் சிறப்பில்லை.(கால…..படர்ந்தென என்னும் அடி கூட்டிப் பொருள் கூறப்பட்டது.)

உதயகுமரன் மறச்செயல்

45-50:விபேரி………..வருவோன்

(இதன் பொருள்) அரசு இளங்குமரன் விடுபசிக் குதிரையின் விரைந்து சென்று எய்தி-யானையால் நிகழுகின்ற இன்னலைப் பணிமாக்கள் அறிவித்தவுடனே இளவரசனாகிய உதயகுமரன் தனக்கெனவே விடப்பட்டிருக்கின்ற விரைந்த செலவினையுடையதொரு குதிரையில் ஏறி விரைந்து அக்களிற்றியானையின் பால் சென்றடைந்து; கடுங்கண் யானையின் கடாத்திறம் அடக்கி-சினமிக்க அக் களிற்றியானையின் மதவெறியை அடக்கித் தளையிடுவித்து; அணிந்தேர்த் தானையொடு-அழகிய தேர்ப்படையோடு; தானும் மணித்தேர் கொடுஞ்சி பற்றி-தானும் ஒரு மணிகட்டி அணி செய்யப் பெற்ற தேரில் ஏறி அத் தேரிலுள்ள இருக்கையில் அமராமல் தன்னைக் காண விரும்பும் மக்களுக்கு நன்கு காட்சி நல்குதற் பொருட்டு அவ் விருக்கையைக் கையாற் பற்றி நின்றவாறே, கார் அலர் கடம்பன் அல்லன் என்பது ஆரங்கண்ணியில் சாற்றினன்வருவோன்-தன்னைக் காண்பவர்க் கெல்லாம் தான் கார் காலத்தே மலருங் கடப்பமாலை யணியும் முருகவேள் அல்லன் சோழமன்னன் மகனே என்னும் உண்மையைத் தான் அணிந்திருக்கின்ற ஆத்திமாலையினாலே அறிவித்துத் தேரூர்ந்து வருகின்றவன்; என்க.

(விளக்கம்) விடுகுதிரை பரிக்குதிரை எனத்தனித்தனிகூட்டுக. தனக்காக விடப்பட்ட விரைந்த செலவையுடைய குதிரை என்றவாறு. இனி, குதிரைப்படையொடு கூட்டாமல் ஏறியூர்தற் பொருட்டு விடப்பட்ட குதிரையுமாம். கொடுஞ்சி தாமரைவடிவிற்றாகச் செய்து தேர்த்தட்டில் இடப்பட்ட இருக்கை. காலவேகத்தை அடக்கிய வெற்றிபற்றித் தன்னைக் காண்டற்கு அவாவி இருமருங்கும் கூடிநிற்கும் மாந்தர் நன்கு கண்டு களித்தற் பொருட்டு இருக்கையிலமராமல் அதனைப் பற்றிநின்றவாறே வருபவன் என்பது கருத்து. இக்காலத்தும் ஊர்வலம்வருந் தலைவர் இவ்வாறு ஊர்தியில் இராமல் எழுந்து நின்று வருதலைக் காணலாம். உதயகுமரனைக் காண்போர் இவன் முருகனோ உதய குமரனோ என்று ஐயுறுதல் கூடும். ஆதலின் அங்ஙனம் ஐயுறாமைப் பொருட்டு உதயகுமரன் ஆத்திசூடி வருகின்றான் என்னும் இது தற்குறிப்பேற்றம் என்னும் அணியாகும்.

கடம்பன்-முருகன். ஆரங்கண்ணி-ஆத்திமாலை. இது சோழ மன்னர்க்குரிய அடையாளப் பூமாலை.

இனி, கொடுஞ்சி என்பதற்கு உ.வே.சா ஐயரவர்கள், தாமரைப்பூ வடிவமாகப் பண்ணித் தேர்த்தட்டின் முன்னே நடுவது என்பர் ஆசிரியர் நச்சினார்க்கினியர் என எடுத்துக்காட்டி, மேலும் இது தாமரைமொட்டு வடிவமுள்ளது என்றும் விளக்கினர். இவ்விளக்கம் விளங்காவிளக்கமாம். என்னை! கொடுஞ்சி என்பது தேரிலிடப்படும் இருக்கையே அன்றிவேறன்று. இவ்வுண்மை அவ்விளக்கங்களால் விளக்கமாகாததோடு அது தாமரை மொட்டு வடிவமுள்ளது என்பது இருக்கைக்குப் பொருந்தாமையும் உணர்க. இனி அஃது இருக்கையே என்பது சிலப்பதிகாரத்தில் காணப்பட்டது. அதனை-

கடும்படை மாக்களைச் கொன்று களங்குவித்து
நெடுந்தேர்க் கொடுஞ்சியும் கடுங்களிற் றெருத்தமும்
விடும்பரிக் குதிரையின் வெரிநும் பாழ்பட  (26:12-14)

என்புழி கொடுஞ்சி என்பது களிற்றெருத்தமும் குதிரையின் வெரிநும் (முதுகு) போன்று மறவர் இருக்குமிடம் என்பது நன்கு விளக்கமாதல் நுண்ணுணர்வாற் கண்டு கொள்க.

உதயகுமரன் எட்டி குமரனை வினாதல்

56-60: நாடக……என்றலும்

(இதன் பொருள்) நாடக மடந்தையர் நலம் கெழு வீதி ஆடகச் செய்வினை மாடத்து ஆங்கண்-நாடகக் கணிகையர் வாழ்கின்ற அழகு பொருந்திய வீதியில் வரும்பொழுது அவ்வீதியிலுள்ள தொரு பொன்னாலியன்ற கலைத்தொழிற் சிறப்பமைந்த ஒரு மாளிகையின் மேல்மாடத்தின்கண், பெளித்த கால் போகுபெருவழிச் சாளரத்தின் அருகிலே; வீதி மரங்கு இயன்ற பூ அணைப்பள்ளி-தெருப்பக்கமாக இடப்பட்டதொரு மலர்ப்பள்ளிக் கட்டிலின் மேல்; தகரக் குழலாள் தன்னொடு மயங்கி-மயிர்ச் சந்தனம் நீவிய கூந்தலையுடைய தன் காமக்கிழத்தியோடே மனம் மயங்கி; மகரயாழின் வான் கோடு தழீஇ வட்டிகைச் செய்தியின் வரைத்த பாவையின் இருந்தோன்-மகர யாழினது சிறந்த கோட்டினை ஒரு கையால் பற்றிய வண்ணம் எழுதுகோளால் எழுதபட்டதோர் ஓவியமே போன்று சிறிதும் இயக்கமின்றி அமர்ந்திருந்த; எட்டிகுமரன் தன்னை-எட்டிப்பட்டம் பெற்ற கொழுங்குடிச் செல்வனாகிய வணிக விளைஞனை உதயகுமரன் கண்டு வினவுபவன்; மாதர் தன்னொடு மயங்கினை இருந்தோய்-நங்கையொருத்தியொடு பெரிதும் மயங்கி இருக்கின்றாய்; நீ உற்ற இடுக்கண் யாது என்றலும்-நண்பனே நீ இவ்வாறு மயங்கியிருத்தற்கு இப்பொழுது நீ எய்திய துன்பம் என்னையோ என்று வினவுதலும்,என்க.

(விளக்கம்) ஆடகம்-ஒருவகைப் பொன். பொளித்த-குடைந்த. கால்-காற்று. பெரிய சாளரம் என்பார் பெருவழி என்றார். அஃது அம்மாளிகையின் மேன்மாடத்து வீதிப்பக்கமாக இருந்தது என்பதும், அச் சாளரத்தின் அருகே பள்ளிக்கட்டில் இடப்பட்டிருந்ததும் என்பதும் அதன்மேல் எட்டிகுமரன் தன்னை மறந்திருந்தான் என்பதும் அவன் மருங்கே அவன் காமக்கிழத்தியும் வாளாதிருந்தாள் என்பதும் அச் சாளரத்தின் வழியே உதயகுமரன் ஒவியம் போன்றிருக்கும் அவனைக் கண்டு வினவிளன் என்பதும் அவன்றானும் செல்வக் குடியிற் பிறந்த பெருநிதிக் கிழவன் என்பதும் தண்டமிழ் ஆசான் சாத்தனார் சொற் சுருங்கத் திறம்பட விளக்கியிருத்தல் உணர்க.

எட்டி-வணிகருட் சிறந்தோருக்கு அரசனால் வழங்கப்படும் ஒரு பட்டம். குமரன் என்றது உதயகுமரனுக்கு நண்பனாகும் அவனது இளமை கூறியவாறு.

மகிழ்ந்திருக்க வேண்டிய செவ்வியில் மயங்கியிருக்கின்றனை என்பாள் மாதர் தன்னொடும் மயங்கினை இருந்தோய் என்றான். இங்ஙனம் இவன் மயங்குதற்குக் காரணம் மனத்துன்பமே ஆதல் வேண்டும் என்னும் ஊக்கத்தால் இவ்வாறு வினாவினன். இவ் வூகத்திற்கு இவன் மாதர் அத்துன்பத்திற்குக் கழுவாய் ஏதும் செய்யாமல் வாளாவிருந்தமையே ஏதுவாயிற்று என்க.

எட்டிகுமரன் காரணம் இயம்புதல்

61-71: ஆங்கது…….என்றலும்

(இதன் பொருள்) ஆங்கு அதுகேட்டு-அவ்வாறு வினவிய உதயகுமரன் குரல் கேட்டவுடனே மயக்கத்தினின்று விழிப் படைந்தவனாய் எட்டி குமரன் வீங்கு இளமுலையொடு தான் பாங்கிற் சென்று தொழுது ஏத்தி-துணுக்குற் றெழுந்த அவ் வெட்டி குமரன் பருத்த கொங்கைகளையுடைய தன் காமக் கிழத்தியோடே விரைந்து உதயகுமரன் தேர் மருங்கே எய்திக் கை கூப்பித் தொழுது கொற்றவ நீடுழி வாழ்க! நின் வரவறியாது கெட்டேன் என்று தன் பிழைக்கு வருந்திப் பின்னும் புகழ்ந்தேத்தி; மட்டு அவிழ் அலங்கல் மன்ன குமரற்கு-தேன் துளிக்கும் மலர் மாலை அணிந்த அக் கோவிளங்குமரனுக்கு; எய்தியது உரைப்போன்-விடையாக அங்கு நிகழ்ந்ததனைக் கூறுபவன், வகை வரிச் செப்பினுள் வைகிய மலர் போல் தகைநலம் வாடி மலர்வனம் புகூஉம் மாதவி பயந்த மணிமேகலையொடு-ஒழுங்காக வரிந்து கட்டப்பட்ட செப்புக் கலத்தினூடே வைக்கப்பட்டிருந்த மலர் போன்று தன் பருவத்திற்குத் தகுதியான தனது பேரழகு வாடி இத் தெருவிலே நடந்து சிறிது முன்பு சென்றவளாகிய மாதவி ஈன்ற மணிமேகலையைக் கண்டதனாலே; கோவலன் உற்ற கொடுந்துயர் தோன்ற நெஞ்சு இறை கொண்ட நீர்மையை நீக்கி-அக் காட்சி வாயிலாய் அவள் தந்தையாகிய கோவலன் எய்திய கொடிய துயரம் என்னெஞ்சிலே தோன்றவே அது கலங்கிற்றாக அது காரணமாக என்நெஞ்சமானது தன்பால் நிலை பெற்றிருந்த பண்ணிற்கியன்ற நரம்பினை இயக்கும் தன் பண்பிற்கு மாறாக; வெம்பகை நரம்பில் என்கைச் செலுத்தியது; அதற்குப் பகை நரம்பிலே என் கையைச் செலுத்திவிட்டது; இது யான் உற்ற இடும்பை என்றலும்-இதுவே யான் பெருமானுடைய வரவும் அறியாதவண்ணம் பெரிதும் மயங்கி இருந்தமைக்கு எய்திய காரணமாம்; பெருமான் நீடு வாழ்க என்றறிவுறுத்தலும் என்க.

(விளக்கம்) ஆங்கது கேட்டு என்றது அங்குநிகழும் ஆரவாரமும் அறியமாட்டாதிருந்த அவன் மயக்கமிகுதி தோன்ற நின்றது. வீங்கிள முலை-காமக்கிழத்தி. எய்தியது-நிகழ்ந்த காரணம். பௌத்தப்பள்ளியின் கட்டுக்காவன் மிகுதிபற்றி அதனுள் அடங்கி இருந்த மணிமேகலையை வகைவரிச் செப்பினுள் வைகிய மலர் என்றான். மணிமேகலை யினால் தோன்றிய கொடுந்துயர் என்றது, கோவலன் கொலைப்பட்டதனை. துயர் தோன்ற நெஞ்சு தான் மேற்கொண்டிருந்த இசைத்தொழின் நீர்மையில் நீங்கித் தன்னை அறியாது பகைநரம்பில் கையைச் செலுத்திப் பண்ணையும் கொடுத்தது இவ்வாற்றால் மயக்கமுற்றேன்: பகைநரம்பு-நின்ற நரம்பிற்கு ஆறாவதும் மூன்றாவதுமாகும். நின்ற நரம்பிற்கு ஆறும் மூன்றும் சென்று பெற நிற்பது கூடமாகும் என்பது அடியார்க்கு நல்லார் மேற்கோள்(சிலப்-8;33-4)

உதயகுமரன் அதுகேட்டு மகிழ்ந்து மணிமேகலையைக் கைப்பற்றத் துணிதல்

72-78: மதுமலர்…………இசைத்தலும்

(இதன் பொருள்) மதுமலர்த் தாரோன் மனம் மகிழ்வெய்தி-தேன் பொதுளிய மலர்மாலையணிந்த அவ்வரசிளங் குமரன்றானும் மணிமேகலை மலர்வனத்திற்குச் சென்ற செய்தியை எட்டிகுமரன் வாயிலாய்க் கேட்டுப் பெரிதும் மனம் மகிழ்ச்சி அடைந்து; ஆங்கு அவள் தன்னை என் அணித்தேர் ஏற்றி வருவேன் என்று அவற்கு உரைத்து; நண்பனே நன்று சொன்னாய் அம்மலர் வனத்தே யானும் சென்று அம் மணிமேகலையை என் அழகிய தேரில் ஏற்றி கொண்டு மீண்டும் இங்கு வருவேன் காண் என்று அவ் வணிகனுக்கு அறிவித்துப் பின்னர்; ஆங்கு ஓடு மழை கிழியும் மதியம் போல மாடவீதியின் மணித்தேர் கடை இவானத்தே இயங்குகின்ற ஒரு முகிலைக் கிழித்தியங்கும் திங்கள் மண்டிலம் போன்று மாட மாளிகைகளையுடைய வீதியிலே தன் தலையிலே அணிந்து கொள்ளும் உவவனம் என்னும் அப் பூம்பொழிலின் வாயிலை அணுகிய பொழுது; அத் தேர் ஒலி மாதர் செவி முதல் இசைத்தலும்-அத் தேர் செய்யும் ஆரவாரம் அப் பொழிலகத்திருந்த மணிமேகலையின் செவியிடத்தே சென்று ஒலித்தலாலே என்க.

(விளக்கம்) உதய குமரன் மணிமேகலையின்பால் இயற்கையாகவே காதலுடையவனா யிருந்தும் சித்திராபதியால் தூண்டப்பட்டிருந்தும் அவள் தவப்பள்ளியிடத்தாளா யிருத்தல் அறிந்து அவளை நாடி உயிர் குடித்தோன்றலாகிய தான் அங்குப் போதல் பழிதருஞ் செயலாம் என்றுணர்ந்து அதுகாறும் மனமடக்கியிருந்தான் ஆதலின் அவள் இப் பொழுது பூம்பொழிலிலிருக்கின்றமை எட்டிகுமரனால் அறிந்து அங்குச் சென்று அவளைப் பற்றிவருதல் கூடும் என்று மனமகிழ் வெய்தினன் என்றவாறு. எட்டிக்குமரன் உதயகுமரனுக்கு நண்பனாதலானும் அச் செயல் அவனுக்கு உடன்பாடாம் என்பதனானும் அவளைத் தேரேற்றி ஈங்கு வருவேன் என்று அவனுக்குக் கூறினன் என்க.

உதயகுமரன் தன்னைக் காணவந்து குழுமிய நகரமாந்தர் குழுவினூடே தேரூர்ந்து வந்தவன் இச் செய்தி கேட்டவுடன் தன்தேரோடு ஒத்தியங்கும் அக்கூட்டம் விலகுமாறு தன்தேரைக் கடவித் தனியே செல்கின்றன் ஆகலின் அதற்கு ஓடுமழை கிழியும் மதியம் போலத் தேர் கடைஇ உவமை எடுத்தோதினர். மதியம் தேர்க்கும் முகில் மக்கட் கூட்டத்திற்கும் உவமை. இவ்வுவமையின் அழகுணராது இதற்குத் தத்தம் வாய்தந்தன கூறுவாருமுளர்: வானத்தே முகிலாற் சூழப்பட்டதிங்கள் அம் முகில்களியங்குதல் தோன்றாமல் தான் இயங்குதல் போன்று காட்சிதரும். முகில்கள் திங்களைவிட்டு நீங்கிய பொழுதில் திங்கள் முகில்களைக் கிழித்துக்கொண்டு தனித்து விரைந்தியங்குமாறு போலே காட்சி தரும். இது மயக்கக் காட்சியே ஆயினும் ஆதனையே உவமையாக எடுத்தனர் என்று நுண்ணிதின் அறிந்திடுக. மக்கட்குழு மேனின்று நோக்குவர்க்குக்  கூந்தலும் குஞ்சியும் செறித்து முகில் போறலும் உணர்க.

தேரொலிகேட்ட மணிமேகலை நிலையும் சுதமதி அவளைப் பளிக்கறை புகுத்தலும்

79-88: சித்திரா………….இரீஇ

(இதன் பொருள்) ஆயிழை சித்திராபதியோடு உதயகுமரன் உற்று என்மேல் வைத்த உள்ளத்தான் என-அன்னாய் ஈதொன்று கேள் சித்திராபதியோடு தொடர்புற்று உதயகுமரன் என்னும் வேந்தன் மகன் என்பால் காமுற்ற நெஞ்சையுடையனாக இருக்கின்றான் என்று; வயந்தமாலை மாதவிக்கு ஒருநாள் கிளிந்த மாற்றம் கேட்டேன்-வயந்தமாலை என் அன்னையாகிய மாதவிக்கு ஒரு நாள் அறிவித்த செய்தியை யான் என் செவியாலே கேட்டிருக்கின்றேன்; ஆதலின் ஈங்கு என் செவிமுதல் இசைத்தது ஆங்கு அவன் தேர் ஒலி போலும்-ஆகையால் இப்பொழுது என் செவியால் கேட்ட ஒலி அம் மன்னன் மகன் என் பொருட்டு ஊர்ந்து வருகின்ற தேரின் ஒலியே போலும்; என் செய்கு-அங்ஙனமாயின்யான் என் செய்வேன் என அமுது உறு தீங்சொல் ஆயிழை உரைத்தலும்-என்று பெரிதும் அஞ்சி அமிழ்தம் போன்ற இனிய சொல்லையுடைய மணிமேகலை சுதமதிக்குக் கூறாநிற்ப; சுதமதி கேட்டுத் துளக்குறு மயில்போல்-சுதமதி அவள் கூறிய அஞ்சுதகு சொற்களைக் கேட்டு நடுங்குகின்ற மயில்போன்று நடுங்கி; பாவையைப் பளிக்கறை மண்டபம்புகுக என்று ஒளித்து-பாவை போலும் மணிமேகலையை விரைத்து அழைத்துக் கொடுபோய்ப் பளிக்கு அறை மண்டபத்தினூடே புகுவாயாக என்று கூறிப் புகுவித்து மறைத்து; அறை உள்ளகத்து தாழ்கோத்து இரீஇ-அப் பளிக்கறையின் உள்ளே அமைந்த தாழக்கோலைக் கோத்துக் கொண்டு இருக்கச் செய்து என்க.

(விளக்கம்) சித்திராபதியோடுற்று என்றது சித்திராபதி அவ்விழி முயலுதலின் அவளோடு தொடர்புற்று என்பதுபடநின்றது. சித்திராபதி அங்ஙனம் முயலுதல் பின்னரும் அறியப்படும். கிளிந்த-கூறிய போலும்: ஒப்பில் போலி. ஈங்கு-இப்போழுது செய்கு-செய்வேன்; என்செய்கு என்றாள் உய்தற்கு வழிகாணாக் கையறவினால். வேடர்வரவு கண்டு துளிக்குறுமயில் என வருவித்துக் கூறலுமாம். கோத்து-கோப்பித்து எனப் பிறவினைப் பொருட்டாய் நின்றது. என்னை? மணிமேகலையை உள்ளகத்தே தாழ்கோத்துக் கொண்டிருப்பித்து என்பதே கருத்தாகலான். தாழக் கோல் உள்ளகத்தேயே அமைந்திருக்குமாகலின் சுதமதி அதனைக் கோத்த லியையாமையும் உணர்க. புறத்திருந்தும் உள்ளகத்தே தாழ் கோத்தலும் கூடுமாம் பிறவெனின் அது பாதுகாவலுக்கு அமையா தென்க. இரீஇ-இருப்பித்து.

உதயகுமரன் சுதமதியைக் காண்டல்

89-96: ஆங்கது…………அறிந்தேன்

(இதன் பொருள்) ஆங்கு அது தனக்கு ஓர் ஐவிலின் கிட்ககை நீங்காது நின்ற நேரிலை தன்னை-அப் பளிக்கறையினின்றும் ஏறத்தாழ ஐந்து விற்கிடைத் தொலைவிற்கு அப்பாற் செல்லாமல் அணுக்கமாகவே நின்ற சுதமதி; கல்லென் தானையொடு கடுந்தேர் நிறுத்தி-செய்தி யறியாமையாலே தன் தேரினைக் கலீர் என்னும் ஆரவாரத்தோடு தொடர்ந்து வந்த படைமறரோடே தனியே விரைந்து வந்த தன் தேரினையும் நிறுத்தித் தேரினின்று மிழிந்து தமியனாய் உவவனத்தினுட் புகுந்து; பல்மலர்ப் பூம்பொழில் பகல் முளைத்தது போல்-பல்வேறு மலர்களையுடைய அப்பூம்பொழிலினூடே ஒரு கதிரவன் தோன்றி வருமாறு போலே காணப்பட்டு மணிமேகலை நிற்குமிடத்தை அறிதற் பொருட்டு; பூமரச் சோலையும் புடையும் பொங்கரும் தாமரைச் செங்கண் பரப்பினன் வரூஉம்-பூமரங்கள் செறித்த சோலையினூடும் பக்கங்களினும் செய்குன்றுகளின் பாலும் தனது செந்தாமரை மலர் போன்ற கண்ணின் பார்வையைப் பரப்பிப் பார்த்து வருகின்ற; அரசிளங் குமரன் அம் மன்னவன் மகன் ஆங்கு நின்றவளை நோக்கி; ஆரும் இல் ஒரு சிறை நின்றாய்-யாரும் இல்லாத தனியிடத்தே நின்றனை உன் திறம் அறிந்தேன். உன்னைப் பற்றிய செய்தி யான் முன்னமே அறிந்துள்ளேன் என்றான்; என்க.

(விளக்கம்) அது-பளிக்கறைமண்டபம். வில்-ஒரு நீட்டலளவை ஒருவில்-நான்கு முழம். ஐவிலின் கிட்ககை என்றது, ஏறத்தாழ இறுபது முழத்தொலைவு என்பதாயிற்று. மன்னர் முதலியோரைத் தொழுபவர் ஐந்துவிற்கிடைக்கு அப்பால் நின்றுதொழவேண்டும் என்னும் மரபு முளது. இதனை, ஐவிலினகல நின்றாங் கடிதொழு திறைஞ்சினாற்கு எனவரும் சிந்தாமணியானு முணர்க(1704). தானையொடு நிறுத்தி என்றமையால் தானே மறவரும் விறைந்தோடும் வேந்தன் மகன் தேரினை விடாது தொடர்ந்து வந்துற்றமை பெற்றாம். பகல்-கதிரவன். கண்பரப்பினன்-கட்பார்வையை இடையீடின்றிச் செலுத்தி. பரப்பினன்: முற்றெச்சம். மணிமேகலை எங்குளள் என்று ஆராய்வான் அவ்வாறு யாண்டும் நோக்கி வந்தான் என்பது கருத்து. 60-நேரிழை தன்னைக் கண்ட என ஒரு சொல்பெய்து இயைக்க. தனியே நின்றனை நீ யார் எனவினவத் தொடங்கியவன் அணுகிய பொழுது அவள் சுதமதியாதலை அறிந்து கொண்டமையின் உன்திறமறிந்தேன் என்கின்றான் நீ மணிமேகலைக்குத் துணையாக வந்தசெய்தியும் அறிந்துளேன் என்பது குறிப்பு.

மன்னவன் மகன் மணிமேகலையின்றிறம் சுதமதியின்பால் வினாதல்

97-104: வளரிள உரையென

(இதன் பொருள்) வளர் இள வள முலை மடந்தை தளர் இடை அறியும் தன்மையள் கொல்லோ-நன்று நங்காய் வளருகின்ற இளைய அழகிய முலையினையுடைய மணிமேகலை தன் காதலன் காமத்தாலே தளர்கின்ற செவ்வியைத் தானே தெரிந்து கொள்கின்ற தண்மை யுடையளாயிருப்பாளல்லளோ? மெல்லியல் விளையா மழலை விளைந்து முளை எயிறு அரும்பி முத்து நிரைத்தன கொல்-அம் மெல்லியலாளுக்கு எழுத்துருவம் பெறாத இள மழலை எழுத்துருவம் பெற்றுச் செவ்வாயில் பாற்பற்கள் விழுந்து எயிறுகள் முளைத்து வளர்ந்து தம்முள் ஒத்து முத்துக்கள் போன்று நிரல்பட்டு விட்டன வன்றோ?; செங்கயல் நெடுங்கண் செவிமருங்கு ஓடி வெங்கணை நெடுவேள் வியப்பு உரைக்கும் கொல் சிவந்த கயல்மீன் போன்ற அவளுடைய சிவந்த கண் அவளது செவியினருகே அடிக்கடி ஒடிப்போய் வெவ்விய மலரம்புகளையுடைய நெடிய காமவேள் தம்மைக் கொண்டு உலகினைக் மருட்டும் வியத்தகு தானே ஒரீஇ தமியள் இங்கு எய்தியது உரை என-இனி இவை கிடக்க மணிமேகலை பெரிய துறவோர் உறைகின்ற இடத்தினின்றும் தானே நீங்கித் தமியளாய் இவ் வுவவனத்திற்கு வந்த தற்குரிய காரணம் என்னை? இதற்கு மட்டுமேனும் விடை தருக என்று பணிப்ப என்க.

(விளக்கம்) ஈண்டு உதயகுமரன் சுதமதியை நோக்கி மணிமேகலையின் உறுப்புகளின் இயல்பையும் அவளியல்பையும் வினாதல் அவற்றின் இயல்பினை அறிந்துகொள்ளுங் கருத்தால் வினவும் அறியாவினாக்கள் அல்ல, அவையெல்லாம் அவள்பாலெழுந்த காமவேட்டை மிகுதியினாலே; இவ்வாறு அவற்றின் இயல்புகளைத் தன்னுள்ளே நினைந்து நினைந்து தானே இன்புறுதற் பொருட்டாம். ஆதலாற்றான் வினவியதொன்றற்கு விடை வருதலை எதிர்பாராமல் மேலும்மேலும் வினாக்களை அடுக்கிக் கொண்டே போகின்றான். இங்ஙனம் ஆதல் கைக்கிளைத்திணைக்கு இயல்பு. இதனை சொல்எதிர் பெறாஅன் சொல்லி இன்புறல் புல்லித் தோன்றும் கைக்கிளைக் குறிப்பே எனவரும் தொல்காப்பியத்தானும் உணர்க.(அகத்-53).

தளரிடை-காமத்தால் நெஞ்சந்தளரும் செவ்வி. விளையாமழலை-இளமழலை முத்துக்கள் போன்று நிரல்பட்டனவா? என்றவாறு. சங்கத்தை நீங்கிவந்தமை கருதித் தமியள் இங்கு எய்தியது என்றான். இவ்வினாவிற்கு மட்டும் ஒருதலையாக நீ விடைதருக என்பான் ஈங்கு எய்தியது உரை என்றான்.

சுதமதி உதய குமரனுக்குக் கூறும் நயவுரைகள்

105-112: பொதியறை……கேட்டி

(இதன் பொருள்) மதுமலர்க் கூந்தல் சுதமதி பொதி அறைப் பட்டோர் போன்று உளம் வருந்தி-அதுகேட்ட சுதமதி புழுக்கறையிடத்தே அகப்பட்டுக் கொண்டவர் வீடுபெற விழிகாணாமல் வருந்துதல் போன்று உள்ளத்தினூடே பெரிதும் வருந்தி; உரைக்கும்-உதய குமரனுக்குக் கூறுவாள்; இளமை நாணி முதுமை எய்தி உரை முடிவு காட்டிய உரவோன் மருகற்கு-தான் இளையனாயிருத்தலால் இவன் முறைகூற அறியான் என்று முறை வேண்டினார் கருதுவர் என்று எண்ணி நாணமெய்தி முதியோனாக உள்வரிக் கோலம் பூண்டு அவையமேறி யிருந்து வழக்குரைக்குஞ் சான்றோர் பாராட்டும் வண்ணம் தீர்ப்புரை வழங்கிய திருமாவளத் தான் வழித் தோன்றலாகிய பெருமானுக்கு; அறிவும் சால்பும் அரசியல் வழக்கும் செறிவளை மகளிர் செப்பலும் உண்டோ-அறிவு பற்றி யாதல் சால்புடைமை பற்றியாதல் அரசியல் வழக்குப் பற்றியாதல் கையிற் செறிய வளையலணியும் பேதை மகளிராகிய எம்மனோர் ஏதேனும் அறிவுறுத்துதலும் உண்டேயோ; அனையது ஆயினும் யான் ஒன்றுகிளிப்பல்-என்னிலை அத் தன்மையுடையதே மாயினும் பெருமான் வினவியபடியால் யான் ஒன்று கூறத் துணிக்கிறேன்; வினை விளக்கு தடக்கை விறலோய் கேட்டி-ஆட்சித் தொழில் விளக்குகின்ற பெரிய கையினையுடைய கொற்றவனே கேட்டருள்க; என்றாள் என்க.

(விளக்கம்) வேந்தன் சீரின் ஆந்துணை இம்மையாலே சுதமதி இவனிடமிருந்து மணிமேகலையை மீட்டுக்கொடுபோதற்குச் சிறிதேனும் வழிகாணாமல் தன்னுள்ளே வருந்துகின்றாளாகலின் பொதியறைப் பட்டோர் போன்று என உவமை தேர்ந்துரைத்தார். இனி ஒழுக்கொடு புணர்ந்த அவனுடைய விழுக்குடிப்பிறப்பே ஒரோவழி நமக்கு உய்தி தருதல் கூடும் என்னும் கருத்தால் அதனையே அவனுக்கு எடுத்துக்காட்டுவாள். இளமை……..மருகற்கு என அவனைப் பாராட்டுஞ் சுதமதியின் நுண்ணறிவு பாராட்டத்தக்கதொன்றாம். இதனால் அவளறிவுறுத்தும் வரலாறு வருமாறு

கரிகாலன் இளம்பருவத்திலேயே அரசு கட்டிலேறியவன்; அப் பொழுது முறை வேண்டிவந்த வாதியும் பிரதிவாதியும் ஆகிய இருதிறக்தாருமே இத்துணை இளைஞன் நம் வழக்கத்திற்குத் தீர்வுகாணமாட்டுவனோ என்று ஐயுறுவாராயினர். இதனைக் குறிப்பினால் அறிந்துகொண்ட கரிகாலன் நாளை அறனறிந்து மூத்த அறிவுடையார் ஒருவரைக்கொண்டு நுங்கள் வழக்கிற்கு முடிவு கூறுவிப்போம் என்று அவரைப் போக்கி விட்டான். மறுநாள் தானே முதியோள் கோலம்பூண்டு அறங்கூறவையமேறி இருந்து அவ் வழக்கிற்கு முடிவு கூறினன்; அம் முடிவு உலகம் உவப்ப தொன்றாயிருந்தது என்பதாகும். இதனை

உரைமுடிவு காணான் இளமையோன் என்ற
நரைமது மக்கள் உவப்ப-நரைமுடித்துச்
சொல்லான் முறைசெய்தான் சோழன் குலவிச்சை
கல்லாமல் பாகம் படும்           (21)

எனவரும் பழமொழி வெண்பாவானு முணர்க.

இனி இதன்கண் சுதமதி நினக்கு அறிவும் சால்பும் அரசியல் வழக்கும் செறிவளை மகளிர் செய்பலும் உண்டோ? என்று அவனைப் பாராட்டுஞ் சொற்றொடர் அரசன் மகனே நீ இப்பொழுது மேற்கொண்டிருக்குஞ் செயல் நின் அறிவுக்கும் பொருந்தாது, சான்றாண்மைக்கும் பொருந்தாது, அரசியலுக்கும் பொருந்தாது. ஆயினும் இவற்றை உனக்குக் கூறுந்தகுதி எனக்கல்லை. என்செய்கோ? என்னும் கருத்தினைக் குறிப்பாக அட்ககியிருத்தலும் உணரற்பாற்று.

கிளப்பல்-சொல்வேன். கேட்டி-கேள்.

மக்கள் யாக்கையின் இயல்பு

113-125: வினையின்……முன்னென்

(இதன் பொருள்) மக்கள் யாக்கை வினையின் வந்தது-மக்கள் பெற்றிருக்கின்ற உடம்பு முன்னே செய்த வினையின் பயனாக வந்து தோன்றிய தொன்றாம்; வினைக்கு விளைவு ஆயிது-மீண்டும் வினைகள் விளைதற் கிடனாயது; புனைவன நீங்கின் புலால் புறத்து இடுவது-அது தானும் தனது இழிதகைமையை மறைத்தற் பொருட்டுப் புனைகின்ற ஆடை முதலியவற்றைப் புனையாது நீங்கி விடிலோ புலால் நாற்றத்தைப் புறமெல்லாம் பரப்புமொரு புன்மையுடையதாம்; மூப்பு விளவு உடையது-கணந்தோறும் முதுமையுறுவதும் ஒருநாள் இறந்து படுவதுமாம்; தீப்பிணி இருக்கை துன்பந் தகும் பிணிகள் பலவும் இருத்தற் கிடமாம்; பற்றின் பற்று இடம்-பற்றுக்கள் பற்றுதற்கியன்றதோ ரிடமாம்; குற்றக் கொள்கலம்-காம முதலிய குற்றங்களை எல்லாம் தன்பாற் கொண்டிருக்கின்ற மட்கலம் போல்வதாம்; அரவு அடங்கு புற்றின் செற்றச் சேக்கை-நச்சுப் பாம்பு அடக்கி யிருக்குமொரு புற்றைப் போன்று சினம் என்னும் தீய பண்பு அடக்கியிருக்குமொரு இருக்கையாம்; அவலம் கவலை கையாறு அழுங்கல் தவலா உள்ளம் தன்பால் உடையது-அவலமும் கவலையும் கையாறும் அழுங்கலும் என்று கூறப்படுகின்ற நால்வகைத் துன்பங்களும் நீங்காததொரு நெஞ்சத்தைத் தன்பால் எஞ்ஞான்றும் கொண்டிருப்பதாம்; இது என வுணர்ந்து-இஃதென்று இதனியல் புகளை ஆராய்ந்துணர்ந்து; மிக்கோய் இதனைப் புறமறிப் பாராய் அறிவு மிக்க அரசன் மகனே இவ்வுடம்பினை அகம் புறமாக மாற்றி அகக் கண்ணால் நோக்கி யருள்வாயாக; என்று அவள் உரைத்த இசைபாடு தீஞ்சொல் -என்று அச் சுதமதி கூறிய பொருத்தமான இனிய சொல்;சென்று அவன் உள்ளம் சேரா முன்னர்-சென்று அவன் நெஞ்சத்திலே பதியு முன்பே; இளங்கோ மன் பளிக்கு புறத்து எறிந்த பவளப் பாவையின் இளவரசனாகிய உதயகுமரன் கண் முன்னர்ப் பளிங்குப் பேழையுள் வைக்கப்பட்டுத் தன் உருவத்தைப் புறத்தே தோற்றுவிக்கும் பவளத்தாலியன்றதொரு பாவையைப் போன்று; இளங்கொடி தோன்றும்-மணிமேகலையின் உருவம் பளிக்கறையூடிருந்து தோன்றா நிற்கும் என்பதாம்.

(விளக்கம்) வினை-மனமொழிமெய் என்னும் மூன்றிடத்தும் தோன்றும் பத்துவகைப்படுந் தீவினையும் அவற்றிற்கு மாறாகிய நல்வினைகளுமாம். முற்பிறப்பிலே செய்த வினையின் பயனாகத் தோன்றியது; பின்னும் பிறத்தற்கேதுவாகிய வினைகள் விளைதற்கிடனாவது என்றவாறு. புனைவன-ஆடையும் நறமணப் பொருள்களுமாம். விளிவு-சாவு. பிணிவாத பித்த சிலேத்துமங்களின் சமமின்மையாலே உடம்பிற்றோன்றும் எண்ணறந்த பிணிகள். பிணியெனப்படுவது சார்பிற் பிறிதாய் இயற்கையிற்றிரிந்து உடம்பு இடும்பைபுரிதல் என இந்நூலுள் (30-98-9) கூறப்படுதலறிக. மிகினும் குறையினும் நோய் செய்யும் நூலோர், விளிமுதலா எண்ணிய மூன்று எனவரும் திருக்குறளும்(941) நினைக. பற்று-பசைஇய அறிவு, அவ்வறிவு பற்றியிருக்குமிடம் என்க. குற்றம் காமவெகுளி மயக்கங்கள். அரவு அடங்கு புற்றின் என மாறுக. செற்றம்-சினம். சேக்கை-தங்குமிடம் அவலம்-துன்பம் தோன்றியநிலை. கவலை அதுதீர்க்க வழிதேடும் நிலை. கையாறு-வழிகாணாது திகைக்கும் நிலை. அழுங்கல் துன்பத்தே அழுந்திவருந்தும் நிலை. தவலா-நீங்காத, ஈறுகெட்டது. இதுவென இத்தன்மைத்தென்று. அறிவுமிக்கோய் என்க. புறமறிப்பார்த்தலாவது யாதானும் ஒரு பையைப் புறம் அகம் ஆகும்படி புரட்டிப்பார்த்தால், மற்றதனைப் பைமறியாய் பார்க்குப் படும் என்பது நாலடி(42). அங்ஙனம் பார்க்குங்கால் என்பும் தடியும் உதிரமும் அன்றி இவ்வாக்கையில் வேறு ஏதும் சிறப்பின்மை அறியப்படும் என்பது குறிப்பு. இங்ஙனம் கூறியது இத்தகைய இழிதகைய யாக்கையே மணிமேகலையின் யாக்கையும், அதனை நீ வளரிளவனமுலை எனவும், முளையெயிறு அரும்பி முத்து நிரைத்தன்ன எனவும், செங்கயல் நெடுங்கண் எனவும் பாராட்டுதல் நின் அறிவுடைமைக்கு அழகாகுமோ. அங்ஙனம் கூறாதே கொள் என்னும் குறிப்பெச்சப்பொருள் தோற்றுவித்தற் பொருட்டாம். இவள்மொழி பொருளியல்புணர்த்தும் மெய்ம்மைத் தன்மைத்தாதல் கருதி இசைபடுதீஞ் சொல் என்றார். அவ்வறையின் பளிங்கு புறத்தே புறப்படவிட்ட இளங்கொடி உருவம் பவளம் பாவையின் இளங்கோமுன் தோன்றும் என இயைப்பினுமாம்.

இனி, இக்காதையினை-காண்பன காண் காண் எனச் சுதமதி காட்ட மணிமேகலை காண்புழி மன்னவன் சிறுவன் வருவோன் இருந்தோன்றன்னை போது என்றலும் உரைப்போன் என்றலும் எய்தி உரைத்துக் கடைஇக் குறுக ஒலிமணிமேகலை செவிமுதல் இசைத்தலும் மணிமேகலை உரைத்தலும் இரீஇ நின்ற நேரிழை தன்னை உதயகுமரன் நின்றோய் அறிந்தேன் தன்மையள் கொல்லோ உரைக்குங்கொல் உரையெனச் சுதமதி உண்டோ கிளிப்பல் கேட்டி என்றுரைத்தசொல் சேராமுன்னர் இளங்கோமுன் இளங்கடி தோன்றுமால் இயைத்திடுக.

பளிக்கறை புக்க காதை முற்றிற்று.

 Logged

 Anu

Golden Member

Posts: 2463
Total likes: 48
Karma: +0/-0

Re: மணிமேகலை

« Reply #5 on: February 28, 2012, 08:53:26 AM »

  1. மணிமேகலா தெய்வம் வந்து தோன்றிய காதை

ஐந்தாவது மணிமேகலை உதயகுமரன்பால் உள்ளத்தாள் என மணிமேகலை தனக்கு மணிமேகலா தெய்வம் வந்து தோன்றிய பாட்டு

அஃதாவது: பளிக்கறைக் குள்ளிருக்கின்றாள் மணிமேகலை என்றறிந்த உதயகுமரன் அவளைக் கைப்பற்றுதற்கு முயன்றும் மாட்டாமையால் இகழ்ச்சி மொழி சில கூறி இவளை இனி யான் சித்திராபதிவாயிலாய் எய்துவேன் என்று காமத் துன்பத்தோடே அச் சோலையை விட்டுப் போயினன் பின்னர்ப் பளிக்கறையினின்று வெளிவந்த மணிமேகலை தன்னெஞ்சமும் நிறை கடந்து அவன் பின்னே செல்லலுற்றது. காமம் பெருவலியுடைய தொன்று போலும் என்று அதனை வியந்து நிற்கின்ற பொழுது இந்திர விழாக்காண அந் நகரத்திற்கு வந்திருந்த மணிமேகலா தெய்வம் அப் பொழிலில் இருக்கின்ற புத்த பீடிகையைத் தொழுதன் மேலிட்டு (அந் நகரத்தில் வாழுகின்ற மாயவித்தை செய்பவளாய்) மணிமேகலைக்கும் சுதமதிக்கும் அறிமுகமாயிருந்த ஒரு மானிட மகள் வடிவத்தோடு அங்கு புத்த பீடிகையைத் தொழுதமை கூறும் செய்யுள் என்றவாறு.

இதன்கண்-பளிக்கறை உள்ளே தாழ்கோல் தாழ்கோல் கோத்திருந்தமையாலேயும் அது தெய்வத் தன்மையை யுடைய பொழில் என்பது கருதியும், தான் பெருங்குடித் தோன்றலாதலானும் மணிமேகலையை வலிந்து கைப்பற்ற முயலாமலே பக்கலிலே நின்ற சுதமதியை நோக்கி மணிமேகலையினியல்புகளை மன்னன் மகன் வினவுதலும்,அவள் மணிமேகலை காமத்தை வென்றவள் சாபமிடும் ஆற்றல் உடையள் ஆதலின் பெருமான் அவளை மறந்தொழிக என்று அறிவுறுத்துதலும், அதுகேட்டு அவன் நகைத்து அவள் அத்தகையளாயினும் யான் கைப்பற்றியே தீர்வேன் என்று கூறிப் பின்னர்ச் சுதமதியின் வரலாறு வினவுதலும், அவள் தன் வரலாற்றைச் சுவைபடச் சொல்லுதலும், பின்னர் உதயகுமரன் அவ்விடம் விட்டகன்று போதலும், மணிமேகலை பளிக்கறையி னின்றும் புறம் போந்து தன்னெஞ்சம் தன்னை இகழ்ந்த அம் மன்னன் மகன் பின்னே சென்றதொன்று கூறிக் காமம் அத்தகைய பெருவலியுடையது போலுமென்று வியந்து நிற்க; மணிமேகலா தெய்வம் மானுடமகள் வடிவத்தோடு அவ்வுவவனத்தே வந்து புத்தபீடிகையைத் தொழுதலும், அந்திமாலை வரவும் அழகாகக் கூறப்பட்டுள்ளன.

இளங்கோன் கண்ட இளம் பொன் பூங்கொடி
விளங்கு ஒளி மேனி விண்ணவர் வியப்ப
பொரு முகப் பளிங்கின் எழினி வீழ்த்து
திருவின் செய்யோள் ஆடிய பாவையின்
விரை மலர் ஐங் கணை மீன விலோதனத்து
உருவிலாளனொடு உருவம் பெயர்ப்ப
ஓவியன் உள்ளத்து உள்ளியது வியப்போன்
காவி அம் கண்ணி ஆகுதல் தௌிந்து
தாழ் ஒளி மண்டபம் தன் கையின் தடைஇச்
சூழ்வோன் சுதமதி தன் முகம் நோக்கி  05-010

சித்திரக் கைவினை திசைதொறும் செறிந்தன!
எத் திறத்தாள் நின் இளங்கொடி? உரை என
குருகு பெயர்க் குன்றம் கொன்றோன் அன்ன நின்
முருகச் செவ்வி முகந்து தன் கண்ணால்
பருகாள் ஆயின் பைந்தொடி நங்கை
ஊழ் தரு தவத்தள் சாப சரத்தி
காமற் கடந்த வாய்மையள் என்றே
தூ மலர்க் கூந்தல் சுதமதி உரைப்ப
சிறையும் உண்டோ செழும் புனல் மிக்குழீஇ?
நிறையும் உண்டோ காமம் காழ்க்கொளின்?  05-020

செவ்வியள் ஆயின் என்? செவ்வியள் ஆக! என
அவ்விய நெஞ்சமொடு அகல்வோன் ஆயிடை
அம் செஞ் சாயல்! அராந்தாணத்துள் ஓர்
விஞ்சையன் இட்ட விளங்கு இழை என்றே
கல்லென் பேர் ஊர்ப் பல்லோர் உரையினை
ஆங்கு அவர் உறைவிடம் நீங்கி ஆய் இழை!
ஈங்கு இவள் தன்னோடு எய்தியது உரை என
வார் கழல் வேந்தே வாழ்க நின் கண்ணி
தீ நெறிப் படரா நெஞ்சினை ஆகு மதி!
ஈங்கு இவள் தன்னோடு எய்திய காரணம்  05-030

வீங்குநீர் ஞாலம் ஆள்வோய்! கேட்டருள்!
யாப்பு உடை உள்ளத்து எம் அனை இழந்தோன்
பார்ப்பன முதுமகன் படிம உண்டியன்
மழை வளம் தரூஉம் அழல் ஓம்பாளன்
பழ வினைப் பயத்தான் பிழை மணம் எய்திய
எற்கெடுத்து இரங்கி தன் தகவு உடைமையின்
குரங்கு செய் கடல் குமரி அம் பெருந் துறைப்
பரந்து செல் மாக்களொடு தேடினன் பெயர்வோன்
கடல் மண்டு பெருந் துறைக் காவிரி ஆடிய
வட மொழியாளரொடு வருவோன் கண்டு ஈங்கு  05-040

யாங்கனம் வந்தனை என் மகள்? என்றே
தாங்காக் கண்ணீர் என் தலை உதிர்த்து ஆங்கு
ஓதல் அந்தணர்க்கு ஒவ்வேன் ஆயினும்
காதலன் ஆதலின் கைவிடலீயான்
இரந்து ஊண் தலைக்கொண்டு இந் நகர் மருங்கில்
பரந்து படு மனைதொறும் திரிவோன் ஒரு நாள்
புனிற்று ஆப் பாய்ந்த வயிற்றுப் புண்ணினன்
கணவிர மாலை கைக்கொண்டென்ன
நிணம் நீடு பெருங் குடர் கை அகத்து ஏந்தி
என் மகள் இருந்த இடம் என்று எண்ணி  05-050

தன் உறு துன்பம் தாங்காது புகுந்து
சமணீர்காள்! நும் சரண் என்றோனை
இவன் நீர் அல்ல என்று என்னொடும் வெகுண்டு
மை அறு படிவத்து மாதவர் புறத்து எமைக்
கையுதிர்க்கோடலின் கண் நிறை நீரேம்
அறவோர் உளீரோ? ஆரும் இலோம்! எனப்
புறவோர் வீதியில் புலம்பொடு சாற்ற
மங்குல் தோய் மாட மனைதொறும் புகூஉம்
அங்கையில் கொண்ட பாத்திரம் உடையோன்
கதிர் சுடும் அமயத்துப் பனி மதி முகத்தோன்  05-060

பொன்னின் திகழும் பொலம் பூ ஆடையன்
என் உற்றனிரோ? என்று எமை நோக்கி
அன்புடன் அளைஇய அருள்மொழி அதனால்
அஞ்செவி நிறைந்து நெஞ்சகம் குளிர்ப்பித்து
தன் கைப் பாத்திரம் என் கைத் தந்து ஆங்கு
எந்தைக்கு உற்ற இடும்பை நீங்க
எடுத்தனன் தழீஇ கடுப்பத் தலை ஏற்றி
மாதவர் உறைவிடம் காட்டிய மறையோன்
சா துயர் நீங்கிய தலைவன் தவ முனி
சங்கதருமன் தான் எமக்கு அருளிய  05-070

எம் கோன் இயல் குணன் ஏதம் இல் குணப் பொருள்
உலக நோன்பின் பல கதி உணர்ந்து
தனக்கு என வாழாப் பிறர்க்கு உரியாளன்
இன்பச் செவ்வி மன்பதை எய்த
அருளறம் பூண்ட ஒரு பெரும் பூட்கையின்
அறக் கதிர் ஆழி திறப்பட உருட்டி
காமற் கடந்த வாமன் பாதம்
தகைபாராட்டுதல் அல்லது யாவதும்
மிகை நா இல்லேன் வேந்தே வாழ்க! என
அம் சொல் ஆய் இழை! இன் திறம் அறிந்தேன்  05-080

வஞ்சி நுண் இடை மணிமேகலை தனைச்
சித்திராபதியால் சேர்தலும் உண்டு என்று
அப் பொழில் ஆங்கு அவன் அயர்ந்து போய பின்
பளிக்கறை திறந்து பனி மதி முகத்துக்
களிக் கயல் பிறழாக் காட்சியள் ஆகி
கற்புத் தான் இலள் நல் தவ உணர்வு இலள்
வருணக் காப்பு இலள் பொருள் விலையாட்டி என்று
இகழ்ந்தனன் ஆகி நயந்தோன் என்னாது
புதுவோன் பின்றைப் போனது என் நெஞ்சம்
இதுவோ அன்னாய்! காமத்து இயற்கை?  05-090

இதுவே ஆயின் கெடுக தன் திறம்! என
மது மலர்க் குழலாள் மணிமேகலை தான்
சுதமதி தன்னொடும் நின்ற எல்லையுள்
இந்திர கோடணை விழா அணி விரும்பி
வந்து காண்குறூஉம் மணிமேகலா தெய்வம்
பதிஅகத்து உறையும் ஓர் பைந்தொடி ஆகி
மணி அறைப் பீடிகை வலம் கொண்டு ஓங்கி
புலவன் தீர்த்தன் புண்ணியன் புராணன்
உலக நோன்பின் உயர்ந்தோய் என்கோ!
குற்றம் கெடுத்தோய் செற்றம் செறுத்தோய்  05-100

முற்ற உணர்ந்த முதல்வா என்கோ!
காமற் கடந்தோய் ஏமம் ஆயோய்
தீ நெறிக் கடும் பகை கடிந்தோய் என்கோ!
ஆயிர ஆரத்து ஆழி அம் திருந்து அடி
நா ஆயிரம் இலேன் ஏத்துவது எவன்? என்று
எரி மணிப் பூங் கொடி இரு நில மருங்கு வந்து
ஒரு தனி திரிவது ஒத்து ஓதியின் ஒதுங்கி
நில வரை இறந்து ஓர் முடங்கு நா நீட்டும்
புல வரை இறந்த புகார் எனும் பூங்கொடி
பல் மலர் சிறந்த நல் நீர் அகழிப்  05-110

புள் ஒலி சிறந்த தெள் அரிச் சிலம்பு அடி
ஞாயில் இஞ்சி நகை மணி மேகலை
வாயில் மருங்கு இயன்ற வான் பணைத் தோளி
தருநிலை வச்சிரம் என இரு கோட்டம்
எதிர் எதிர் ஓங்கிய கதிர் இள வன முலை
ஆர் புனை வேந்தற்குப் பேர் அளவு இயற்றி
ஊழி எண்ணி நீடு நின்று ஓங்கிய
ஒரு பெருங் கோயில் திருமுகவாட்டி
குண திசை மருங்கில் நாள் முதிர் மதியமும்
குட திசை மருங்கில் சென்று வீழ் கதிரும்  05-120

வெள்ளி வெண் தோட்டொடு பொன் தோடு ஆக
எள் அறு திருமுகம் பொலியப் பெய்தலும்
அன்னச் சேவல் அயர்ந்து விளையாடிய
தன்னுறு பெடையைத் தாமரை அடக்க
பூம் பொதி சிதையக் கிழித்துப் பெடை கொண்டு
ஓங்கு இருந் தெங்கின் உயர் மடல் ஏற
அன்றில் பேடை அரிக் குரல் அழைஇ
சென்று வீழ் பொழுது சேவற்கு இசைப்ப
பவளச் செங் கால் பறவைக் கானத்து
குவளை மேய்ந்த குடக் கண் சேதா  05-130

முலை பொழி தீம் பால் எழு துகள் அவிப்ப
கன்று நினை குரல மன்று வழிப் படர
அந்தி அந்தணர் செந் தீப் பேண
பைந் தொடி மகளிர் பலர் விளக்கு எடுப்ப
யாழோர் மருதத்து இன் நரம்பு உளரக்
கோவலர் முல்லைக் குழல் மேற்கொள்ள
அமரக மருங்கில் கணவனை இழந்து
தமர் அகம் புகூஉம் ஒரு மகள் போல
கதிர் ஆற்றுப்படுத்த முதிராத் துன்பமோடு
அந்தி என்னும் பசலை மெய்யாட்டி
வந்து இறுத்தனளால் மா நகர் மருங்கு என்  05-141

உரை

பளிக்கறையின் புறந்தோன்றிய மணிமேகலையின் உருவத்தைக் கண்ட உதயகுமரன் ஓவியமென்றே கருதி வியத்தல்

1-7: இளங்கோன்………வியப்போன்

(இதன் பொருள்) இளங்கோன் கண்ட இளம் பொற்பூங்கொடி விளக்கு ஒளி மேனி- இளவரசனாகிய உதயகுமரன் கண்ட பளிக்கறைப் புறத்தே புறப்படவிட்ட இளமையுடைய பொன்னிறமான காமவல்லி போல்வளாகிய மணிமேகலையின் விளங்குகின்ற ஒளியுடைய திருமேனியை; விண்ணவர் வியப்ப-அமரர்களும் வியங்கும்படி; ஓவியன் பளிங்கின பொருமுக எழினி வீழ்த்து-ஓவியத் துறை கை போகிய ஓவியப் புலவன் ஒருவன் பளிக்குநிறம் உடையதொரு பொருமுக எழினி என்னும் திரைச் சீலையைத் தூங்கவிட்டு அதன்மேல் தான வரையும் ஓவியம்; திருவின் செய்யோள் ஆடிய பாவையின்-செல்வததிற் கியன்ற தெய்வமாகிய திருமகள் மேற்கொண்டு ஆடிய கொல்லிப் பாவையின் உருவம் போன்று; விரைமலர் ஐங்கணை மீன விலோதனத்து உருவிலாளனொடு உருவம் பெயர்ப்ப-மணங்கமழும் மலரம்புகளையும் மீனக் கொடியையும் உடைய காமவேளின் குறும்பினாலே தன்னைக் கண்டோருடைய உருவத்தை மாறுபடுத்த வேண்டும் என்று; உள்ளத்து உள்ளியது-தன் உள்ளத்திலே கருதி வரையப்பட்டதோர் ஓவியமே என்று கருதி; வியப்போன்-மருண்டு நோக்குபவன்; என்க.

(விளக்கம்) உதயகுமரன் பளிக்கறையின் உள்ளிருந்து தோன்றும் மணிமேகலையின் விளங்கொளிமேனியை அதனுட்புறத்தே சிறந்த ஓவியனால் வரையப்பட்டதோர் ஓவியமே என்று கருதி அவ்வோவியம் தனது காமத்தைப் பெருக்கி உடம்பை மெலிவித்தலாலே. இதனை எழுதியவன் இவ்வோவியம் தன்னைக் கண்டோரை இவ்வண்ணம் மெலிவித்தல் வேண்டும் என்று கருதியே வரைந்திருத்தல் வேண்டும் என்று துணிந்து பின்னும் அவன் கலைத்திறத்தை வியந்து நிற்கின்றான் என்பதாம்.

பொற்கொடி-கற்பகத்தின் மேற்படரும் ஒரு வானுலகத்துப் பூங்கொடி. ஈண்டு மணிமேகலையின் நெஞ்சமும் உதயகுமரன் என்னும் கற்பகத்தின் மேற்படர்தலின் அப் பொற்கொடியையே உவமை எடுத்தார். இது கருத்துடை அடைகொளி என்னும் அணியின் பாற்படும். பாவை கொல்லிப்பாவை. அஃதாவது-திருமகள். போர்க்கு வந்தெதிர்ந்த அசுரர் போகித்து மெலிந்து வீழும்படிபுனைந்துகொண்டதொரு பெண்மைக்கோலம். இவ்வுருவம் கொல்லிமலையின் மேற்புறத்திலே வரையப்பட்டுளதென்றும் அதனைக் கண்டோர் அப் பொழுதே மோகித்து மயங்குவர் என்றும் கூறுப. இவ்வோவியனும் அப்பாவையுருவத்தைக் கண்டோரை மயக்குறுத்தும் கருத்தோடு இதனை இங்கு வரைந்துள்ளான் என்று இம்மன்னன் மகன் கருதுகின்றான். என்னை? அதுகானும் தன்னைப் பெரிதும் மோகித்து மயங்கும்படி செய்தலான். பாவையைக் கண்டவுடனே காமவேள் குறும்பும் கண்டோர் உளத்தே தோன்றி அவற்றின் மெய்ப்பாட்டையும்  தோற்றவித்து உருவத்தை மாறுபடுத்துதலின் இங்ஙனம் உடனிகழ்ச்சிப் பொருளுடைய ஒடு உருபு பெய்து கூறியவாறு காமவேளின் செயலும் உடன் தோன்றுதல் பற்றி அவனுடைய மலரம்புகளையும் உடனோதினன். பளிங்கின் நிறமமைந்த படாஅஞ் செய்து அதன்மேல் எழுதியிருத்தலின் அது வியத்தகு செயலாயிற்று. தன்னை அது தன்பாலீர்த்தலின் உருவம் பெயர்ப்ப உள்ளியதிது என்று கருதினன்.

உதயகுமரன் செயலும் சொல்லும்

8-12: காவியம்…….உரையென

(இதன் பொருள்) காவியக் கண்ணி ஆகுதல் தெளிந்து-வியந்து கூர்ந்து நோக்கிய உதயகுமரன் அதன் கண்ணழகிலீடுபட்டு நெடிது நோக்கியவழி அவை இமைத்தலைக் கண்டு நீலமலர் போலும் கண்களையுடைய மணிமேகலையே இவள் ஓவியம்
அல்லள் என்று ஐயந்தெளிந்து அவளைக் கைப்பற்றுதற் பொருட்டு; ஒளி தாழ் மண்டபம் தன் கையின் தடைஇச் சூழ்வோன்-ஒளி தங்கியிருக்கின்ற அப் பளிக்கறை மண்டபத்துள்ளே தானும் புகவிரும்பி அதற்கு வாயில் காணுதற்கு முயன்று அஃதிருக்குமிடம் அறிதற்குத் தன் கையாலே தடவிப் பார்த்தவண்ணம் அதனைச் சுற்றி வருபவன்; சுதமதி தன்முகம் நோக்கி-சுதமதியை நோக்கி நங்காய் இம் மண்டபம் சாலவும் அழகியது காண்; சித்திரக் கைவினை திசைதொறுஞ் செறிந்தன-இதனுள் நான்கு பக்கங்களினும் ஓவியங்களாகிய கலைஞர் செய்தொழிறறிறம் செறிந்துள்ளன ஆதலால் என்று கூறிய பின்னரும் அவளை நோக்கி; எத்திறத்தாள் நின் இளங்கொடி உரை என-இவை கிடக்க; உன் தோழியாகிய மணிமேகலை எத்தன்மையுடையவள் இதற்கு விடைதருதி என்றிரப்ப என்க.

(விளக்கம்) மணிமேகலை ஓவியம் என்று கருதி அதன் உறுப்புநலங்களைக் கூர்ந்து பார்த்து வருங்கால் அவள் தன்னை நோக்கியிருக்கும் அவள் கண்களில் தன்பார்வையை நேருக்கு நேர் செலுத்தியவழி அவள் காணத்தால் இமைகளை இறுக மூடிக்கொண்டனள் ஆதலின் இவ்வுருவம் மணிமேகலையின் உருவமே என்று தெளிந்து கொண்டாள் என்னும் இத்துணையும் குறிப்பாகப் புலப்படுமாறு பிற சொல்லாற் கூறாது காவியங் கண்ணி ஆகுதல் தெளிந்து என குவன் தெளிவிற்குக் காரணமான கண்மேலிட்டு அறிவுறுத்தும் நுணுக்கம் பேரின்பம் பயப்பதொன்றாம்.

பின்னும் பளிக்கறையுள்புகுந்து அவளைக் கைப்பற்றுவதே தன் கருத்தாகவும், உட்புகுதும் வழிநாடி நாற்புறமும் சூழ்வருபவன் அஃதுட் புறம் தாழ்கோத்த பளிங்குக் கதவமாதலின் உட்புகுகவும் இயலாமல் தானுற்ற ஏமாற்றத்தையும் உள்ளிருப்பவள் மணிமேகலை என்று தான் அறிந்து கொண்டமையையும் சுதமதி அறியாவண்ணம் மறைத்தற் பொருட்டு இவ்வரசிளங்குமரன் சுதமதி தன் முகம் நோக்கிச் சித்திரக் கைவினை திசை தொறும் செறிந்தன என்று கூறிக்கொள்கின்றான். என்னை தான் இம் மண்டபத்தினூடே வரைந்துள்ள ஓவியங்களைக் காண்டற்கு விழைந்தே அதனைச் சுற்றி வந்ததாகவும், பளிக்குமண்டபத்தின் நான்கு பக்கங்களினும் மணிமேகலை உருவம் தோன்றுவதனைத் தான் இதன் நாற்புறத்தும் சித்திரச் செய்வினை செறிந்துள்ளதாக நினைப்பதாகவும் அச் சுதமதி நினைப்பாளாக என்பதே அவன் கருத்தாதலின் என்க. இஃது எத்துணை நுணுக்கமான கருத்து நோக்கி மகிழ்மின்.

நன்று, ஓவியக்காட்சி கண்டாயிற்று. இனி, என்னை சுதமதியை மதியுடம்படுவித்து அவள் வாயிலாகலே மணிமேகலையை எய்தக்கருதி அதற்குத் தோற்றுவாய் செய்பவன் தான் அவள் பின்னிற்கும் தன் எளிமைதோன்ற, நின் இளங்கொடி எத்திறத்தாள் என்று நம்மனோரும் அவன் திறத்திலே பரிவுகொள்ளுமாறு வினவிச் செயலற்று நிற்றல் உணர்க. இதன்கண் மணிமேகலையை நின் இளங்கொடி என்றது நீ நினைத்தவண்ணம் அவள் நடப்பாள் அவளை என் முயற்சியால் எய்தவியலாது எனத் தான் அவள் நடப்பாள் அவளை என் முயற்சியால் எய்த வியலாது எனத் தான் அவள் பின்னிற்றலைத் தெற்றென் வுணர்த்துதல் இயலாமையின் குறிப்பாக அவள் உணரும் பொருட்டே இவ்வாறு வினவுகின்றான். இவ்வாற்றால் இக் காதனிகழ்ச்சி அகப்புறமாகி. காட்சி ஐயம் தெளிதல் மதியுடம்படுத்தல் என்னும் துறைகளை யுடையதாதலும் உணர்க

சுதமதியின் பரிவுரை

13-19: குருகு………..உரைப்ப

(இதன் பொருள்) குருகு பெயர்க்குன்றம் கொன்றோன் அன்ன நின் முருகச் செவ்வி முகந்து தன கண்ணால் பருகாள் ஆயின் கிரவுஞ்சம் என்னும் பறவையின் பெயர் கொண்ட மலையைத் தகர்த்தொழித்த முருக வேளையே ஒத்து விளங்குகின்ற நின்னுடைய இவ்விளமைப் பேரழகினை நிரம்ப முகந்து கொண்டு தன் கண்களாகிய வாயால் பருகா தொழிவாளாய்விடின பின்னர்வாய்ச் சொற்கள் என்ன பயனுமில்; பைந்தொடி நங்கை அவளுடைய அத் திட்பம் ஒன்றே அவள்; ஊழ்தரு தவத்திள் சாப சரத்தி காமற் கடந்த வாய்மையள்-பற்பல பிறப்பிலே அடிப்பட்டு வருகின்ற ஊழாலே தரப்பட்ட மாபெருந் தவத்தையுடையாளென்பதும் சாபமாகிய கொல்கணைகளையுடையாள் என்பதும் காம வேளின் குறும்புகளை யெல்லாம் கடந்துயர்ந்த மெய்யுணர்வுடையாள் என்பதும் தேற்றமாம் அன்றோ என்று; தூமலர்ச் சுதமதி உரைப்ப-தூய மலர் போன்ற உள்ளமுடைய அச் சுதமதி அவளுடைய திறம் குறிப்பாகவும் வெளிப்படையாகவும் இஃதென்று அறிவியா நிற்ப என்க.

(விளக்கம்) மன்னவன் மகனே உன்னைக் கண்டும் நிலைகலங்காமல் அம் மணிமேகலை இருப்பாளானால் பின்னர் அவளைப்பற்றி நீ கேட்டறிவதற்கே யாதொன்றுமில்லை. உன்னைக் கண்டுவைத்தும் உன் அழகை வாரிப் பருகாத அவள் திட்பமே அவள் மாபெருந் தவவாற்றல் உடையாள் என்பதையும் அவள் சாபமிடும் ஆற்றல் பெற்றிருப்பாள் என் பதையும் மெய்யுணர்வு பெற்றவள் என்பதையும் அறிவுறுத்தும் சான்றாகுமன்றோ என்கின்றாள். இதனால் உன்னை அவள் நேருக்குநேரே பார்த்தும் நிலைகலங்காதிருத்தலை நீயுந்தான் அறிகின்றனை. யானும் நீ மறைத்தாயேனும் அறிகின்றேன். ஆதலால் இதனை நீயே உணர்ந்து கொள்ளலாமே என்னைக் கேட்பது வீண் என்ற இடித்துரையைக் கேட்டற்கினிய மொழிகளாலே கூறும் இவள் நாநலம் வியத்தற் பாலதாம்.

உதயகுமரன் பின்னும் பின்னிலை முயறல்

19-27: சிறை………..உறையென

(இதன் பொருள்) செழும்புனல் மிக்குழீஇ சிறையும் உண்டோ காமம் காழ கொளின நிறையும் உண்டோ-அது கேட்ட உதயகுமரன் நன்று நங்காய் நீ அறியாது கூறுதி, வளவிய நீர் மிககுப் பெருகினால் அதனைத் தடுத்து நிறுத்தும் அணைதானும் உளதாமோ உளதாகாதன்றே அங்ஙனமே ஆடவராயின் என? பெண்டிர் ஆயினென்? காமப்பண்பு மிக்குப் பெருகியக்கால் அதனைத்தடுத்து நிறுத்தும் நெஞ்சுறுதியும் உளதாமோ? ஆகாது காண்; செவ்வியள ஆயின் என் செவ்வியள் ஆக என-மற்று மணிமேகலை தான் நீ கூறுமாறு காமற் கடந்த வாய்மையளாகும் செம்மையுடையளாயினுலும் அதனால் என்? அவ்வாறே அவள் செம்மையுடைளாகவே இருந்திடுக என்று கூறி; வவ்வி நெஞ்சமொடு அகல்வோன-அவள் திருவுருவத்தைக் கூர்ந்து கொண்டதொரு கள்ளவுள்ளத்தோடே அவ் வுவவனத்தை விட்டுச் செல்லத் தொடங்குபவன்; ஆயிடை-அதற்கிடையிலே மீண்டும் சுதமதியை நோக்கி; அச்செஞ்சாயல்-அழகிய செம்மையுடைய மெல்லியால் நீதானும் அராந்தாணத்துள் ஓர் விஞ்சையன் இட்ட விளங்கிழை என்று-அருகன் கோயின் மருங்கில் யாரோ ஒரு விச்சாதரனால் பற்றிக் கொணர்ந்து விடப்பட்ட பெண் என்று; கல் என பேரூர் பலலோர் உரையினை-கல்லென்று ஆரவாரிக்கும் இப் பெரிய நகரத்திலே பலராலும் கூறப்படும் கூற்றையுடையை அல்லையோ; ஆங்கு அவர் உறைவிடம் நீங்கி-அவ்வருகத்தானத்தே அவ்வாருகதர் உறையுமிடத்தினின்றும் விலகி; ஈங்கு ஆயிழை இவள் தன்னோடு எய்தியது உரை என-இங்குப், பௌத்தர் சங்கத்திற் சேர்த்திருக்கின்ற மணிமேகலையாகிய இவளோடு பகவனதாணையில் பன்மரம் பூக்கும் பௌத்தர் உவவனத்திற்கு வந்ததற்கியன்ற காரணம் என்னையோ? கூறுதி என்று பணிப்ப என்க.

(விளக்கம்) சுதமதி மணிமேகலையைக் காமற் கடந்த வாய்மையள் என்றதனை மறுத்து அவட்குப் பேதைமையூட்டுவான் சிறையும் உண்டோ………செவ்வியள் ஆக என்கின்றான். இதனால் நீ காமப்பண்பின் இயல்பறிவாயல்லை; ஒரோவழி மணிமேகலைக்குக் காமம் இன்னும் காழ் கொண்டிலது போலும் அது காழ்கொள்ளும் பொழுதுதான் அவள் காமற் கடந்த செவ்வயளா அல்லளா? என்பது தெரியவரும்; அது காழ்கொள்ளும் துணையும் செவ்வியளாகவே இருந்திடுக என்று அசதியாடுகின்றான். இவ்வாறு உதயகுமரன் கூறுவதன் கருத்து மணிமேகலை தன்னைக் கண்ணிமையாது பார்த்து நின்றவள் தான் அவள் கண்ணை நோக்கிய பொழுது இமைத்துக் கண்களை மூடிக்கொண்டமையால் அவள் தன்னை பெரிதும் காதலிக்கின்றாள் என்னும் குறிப்புணர்ந்தமை யாலே; யாம் இங்கனமாகவும் அவளியல்பறியாது பேசும் சுதமதியை எள்ளிப்பேசிய பேச்சை இவை என்றுணர்க. வவ்விய நெஞ்சமொடு என்று கொண்டு அனள் உருவத்தை முழுதும் (தன்னுள்ளக் கிழியில் வரைத்து கவர்ந்து கொண்ட நெஞ்சமோடு என்பதே சிறப்பு. அவ்வியம் என்று பிரித்து அழுக்காறு என்று பொருள் கொண்டு பிறர்க்கு இவள் உரியளாதல் கூடுமோ என்பதால் உளதாகிய பொறாமை என்பாருமுளர். இங்ஙனம் கூறுவோர் அக் கூற்று அவனது ஆண்மையையே இழுக்குப்படுத்துதலை அறியார் போலும்.

இழுக்கோடு புணரா விழுக்குடிப்பிறப்பினனாதலின் கடவுள் மலர் வனத்தில் அப்பாலும் காமவிளையாடல் புரியத்துணியாது அகல்வோன் பின்னும் சுதமதியை அவளது உசாஅத்துணைத் தோழியாகவே கருதி அவளைப் பின்னும் மதியுடம்படுத்த வேண்டி அவள் வரலாற்றை நன்கறியும் பொருட்டே நங்காய் உன்னை யான் அராந்தாணத்துவிஞ்சையன் இட்ட விளங்கிழை என்னுந்துணையே அறிவேன்: அங்ஙனமாயின் இவட்கும் உனக்கும் தொடர்பு எவ்வாறுண்டாயது என்றறிய இங்ஙனம் வினவினன் என்க.

அவர் உறைவிடம் என்றது ஆருகதர் உறையும் அருகத்தானத்தை அராந்தாணம் என்பதும் அது.

சுதமதி உதயகுமரன் வினாவிற்கு விடைகூறுதல்

28-38: வார்கழல்……….பெயர்வோன்

(இதன் பொருள்) வார் கழல் வேந்தே வாழ்க நின் கண்ணி நெடிய வீரக்கழலணிந்த வேந்தர் பெருமானே நீடுழி வாழ்க நின் ஆரங்கண்ணி; தீ நெறிப்படரா நெஞ்சினை ஆகுமதி-நின முன்னோர் போன்று நீதானும் தீய நெறியிலே செல்லாத நன்னர் நெஞ்சம் உடையையாகுக; வீங்கு நீர் ஞாலம் ஆள்வோய் ஈங்கு இவள் தன்னோடு எய்திய காரணம் கேட்டருள்-கடல் சூழ்ந்த நிலவுலகத்தை ஆளும் தகுதிமிக்கோய் யான் இவ்வுவவனத்திற்கு இம் மணிமேகலையோடு கூடி வருதற்கியன்ற காரணத்தைக் கூறுவல் திருச்செவியேற்றருள்க; யாப்புஉடை உள்ளத்து எம் அனையிழந்தோன்-என்னை இழந்ததோடன்றிக் கற்புடைமையாற் பெரிதும் தனக்குப் பொருந்திய உள்ளத்தையுடையளாயிருந்த எம் அன்னையாகிய தன் மனைவியையும் இழந்துவிட்டவனாகிய என் தந்தையாகிய; பார்ப்பன முதுமகன் படிமவுண்டியன் பார்ப்பன முதியவறான எத்தகையனோவெனின நோற்றுப் பட்டினி விட்டுண்பவனும்; மழை வளம் தரூஉம் அழலோம்பாளன் உலகிற்கு மழை வளத்தைத் தருதற்குரிய வேள்வித்தீயை முறைப்படி ஓம்புபவனும் ஆவான்காண்; பழவினைப்பயத்தால் பிழை மணம் எய்திய என கெடுத்து இரங்கி-பழவினையின் பயனாகத் தவறான மணம் எய்திய என்னை இழந்து அன்பு மிகுதியால் என பொருட்டுப் பெரிதும் இரக்கமுற்று; தன் தகவு உடைமையின்-தனக்குரிய பெருந்தகைமையை உடையவனாயிருந்தமையாலே; குரங்கு செய்கடல் குமரியம் பெருந்துறை-குரங்குகளாலே இயற்றப்பட்ட திருவணையையுடைய கடலின்கண் அமைந்த பெரிய புண்ணியத் துறையாகிய கன்னியாகுமரித் துறையில் ஆடுதற் பொருட்டு: பரந்து செல் மாக்களொடு-பரவிச் செல்லாநின்ற மாந்தரோடு கூடி; தேடினன் பெயர்வோன் என்னைத் தேடிக் காணுங் குறிக்கோளோடு வருபவன்; என்க.

(விளக்கம்) தீநெறிப்படரா நெஞ்சினையாகுமதி என்றது வாழ்த்துவது போன்று அப் பெருந்தகைக்கு இன்றியமையாத அறிவுரை கூறியவாறாம். நீயோ உலகம் ஆளும் வேந்தன்: யாமோ ஆற்றவும் எளியேமாகிய பிக்குணிகள்; எம்திறத்திலே பெருமான் ஏதம் செய்யா தொழுகுதல்  வேண்டும் என்றுநினைவூட்டுகின்றாள். மதி: முன்னிலையசை காரணம் கூறுவல் கேட்டருள் என்றவாறு.

எம்மனை-எம் அன்னை என்னையிழந்ததே யன்றியும் எம் மன்னையையும் இழந்தோன் என்பதுபட நிற்றலின் இறந்தது தழீஇய எச்சவும்மை தொக்கது. எம்மனை என்றது எம்மூர் என்றாற் போலத் தன்னுடன் பிறந்தாரையும் உளப்படுத்தபடியாம். உயர்ந்த தாய் தந்தையர்க்குத் தோன்றியும் பழவினைப் பயத்தாற் பிழைமணம் எய்தினே னல்லது என் பிழையன்று என்பாள் தந்தையையும் தாயையும் பெரிதும் பாராட்டுகின்றனள். படிமம்-நோன்பு. தன்தகவு என்றது அந்தணனுக்கியன்ற அருளுடைமையை. குரங்கு செய்கடல் என்றது செய்கடல் என்றது தென்கடல் என்னுமாத்திரையை அறிவித்து நின்றது. குரங்கு அணைசெய்த கடல் என்றவாறு. குமரி-கண்ணியாகுமரி. குமரி ஒரு நதி என்பதும் அஃது கடல் கோட்பட்டமையின் அக் கடலும் குமரிக்கடல் எனப் பெயர் பெற்ற தெனவும் கூறுப. நெடியோன் குன்றமும் தொடியோள் பௌவமும் என்பது சிலப்பதிகாரம்.(8:1. என்னைத் தேடியவனாய் என்க. அங்ஙனம் அவன் தகவுடைமையை ஏதுவாக்கினள்

இதுவுமது

39-46: கடல் மண்டு…….திரிவோன்

(இதன் பொருள்) கடல் மண்டு பெருந்துறைக் காவிரி ஆடிய வடமொழியாளரொடு வருவோன்-கடலிற் புகுதும் பெரிய துறையையுடைய காவிரியில் நீராடுதற் பொருட்டு ஈண்டு வருகின்ற வடமொழியையுடைய ஆரியரொடு கூடி வருபவன்; கண்டு என்மகள் ஈங்கு யாங்கனம் வந்தனை என்றே-என்னைக் கண்டு அந்தோ என் அருமை மகளே நீ இந்நகரத்திற்கு எவ்வாறு வந்துற்றனை என்று சொல்லி வாய்விட்டுக் கதறியழுது; தாங்காக் கண்ணீர் என்தலை உதிர்த்து-தடைசெய்தற்கியலாத அன்புக் கண்ணீரை என்தலைமேல் உதிர்த்து; ஓதல் அந்தணர்க்கு ஒவ்வேன் ஆயினும்-பிழை மணம் பட்டமையாலே ஓதற்றொழிலை முதன்மையாகக் கொண்ட பார்ப்பன வாழ்க்கைக்குப் பொருந்தேன் ஆயதனையும் பொருளாகக் கருதாத; காதலன் ஆதலின் ஆங்குக் கைவிடலீயான்-பேரன்புடையவன் ஆதலாலே அவ்விடத்தையே என்னைக் கைவிட்டுப் பிரிதலாற்றானாகி; இரந்தூணதலைக் கொண்டு-அந்தணரில்லத்தே பிச்சை புக்குண்ணும் வாழ்க்கையை மேற்கொண்டு; இந்நகர் மருங்கின பரந்துபடு மனைதொறும் திரிவோன்-பிச்சையின் பொருட்டு இம்மாநகரத்திலே பரவலாக வமைந்துள்ள பார்ப்பனர் இல்லந்தோறும் சென்று திரிபவன்; என்க.

(விளக்கம்) கடல் மண்டு பெருந்துறை என்றது காவிரி கடலொடு கலக்கும் புகாரை. அதனாலேயே அதற்குப் புகார் நகரம் என்பது பெயராயிற்று. புகார்-சங்கமுகம். அது புண்ணியத் தீர்த்தமாதலின் நீராடு பெருந்துறையும்  ஆயிற்று வடமொழியாளர் என்றது ஆரியப்பார்ப்பனரை. என்று கதறியழுதனன் என்பது கருத்து. தாங்காக் கண்ணீர்-தடுத்தலியலாத அன்புக் கண்ணீர் என்றவாறு; ஈண்டு,

அன்பிற்கு முண்டோ அடைக்குந்தா ழார்வலர்
புன்கணீர் பூசல் தரும்             (குறள்-71)

எனவரும் பொன்மொழி நினைக்கத்  தகும். தகுதி பற்றி, பார்ப்பனர் மனைதொறும் என்றாம்.

இதுவுமது

46-55: ஒருநாள்………கோடலின்

(இதன் பொருள்) ஒருநாள் புனிற்றாப் பாய்ந்த வயிற்றுப் புண்ணினன-அங்ஙனம் திரிகின்ற நாள்களுள் வைத்து ஒருநாள் அணித்தாக ஈன்ற ஆவொன்று சினந்து பாய்ந்தமையாலே அதன் கோட்டாற் கிழிக்கப்பட்ட பெரியபுண்ணை வயிற்றிலுடையவனாய்; நிணம்நீடு பெருங்குடர் கணவிரமாலை கைக்கொண்டு என்ன கையகத்து ஏந்தி-அப் புண்வழியே நிணத்தோடு கூடிய நீண்ட தனது பெருங்குடர் சரிந்துகுவது அறுந்தொழியா வண்ணம் செவ்வலரிப்பூமாலையைச் சுருட்டிக் கையிலேந்தி வருமாறுபோலே தோன்றும்படி தன் கையகத்தே தாங்கி ஏந்திக் கொண்டு; என்மகள் இருந்த இடம் என்று எண்ணி-இவ்வாரந் தாணம் என்மகள் நெடுநாள் இருந்து பழகியவிடம் என்று நினைந்து அவ்வுரிமைபற்றி; தன் உறுதுன்பம் தாங்காது புகுந்து தனக்குண்டான பெருந்துன்பம் பொறானாய் அவ்வருகத் தானத்திலே புகுத்து; சமணீர்காள் நும்சரண் என்றோனை-சமணச் சான்றோரே! சமணச் சான்றோரே! அளியோன் நுஙகட்கு அடைக்கலம் கண்டீர் என்று கதறியழுதவனைக் கண்டுழி; மை அறுபடிவத்து மாதவர்-குற்றாதீர்ந்த தவவேடந்தாங்கிய மாபெருந்துறவோர் எல்லாம் ஒருங்குகூடி; என்னொடும் வெகுண்டு. அவன் மகள் என்பதுபற்றி அவனையும் என்னையும் ஒருசேரச் சினந்து உரடபுபவர்; இவண் நீர் அல்ல என்று-இத்தகையோரை ஏற்றுக்கோடலும் பரிவுகாட்டலும் தெய்வத் தன்மையுடைய இவ்வராந்தாணத்திற்குப் பொருந்தும் நீர்மைகள் ஆகா என்னும் கருத்தோடு; புறத்துக் கைஉதிர்க்கோடலின்-வாயாற் கூறாமல் தமது கையை அசைக்குமாற்றால் எமைப் புறத்தே துரத்திவிட்டமையாலே; என்றாள் என்க.

(விளக்கம்) புனிற்று ஆ-அணிமையில் கன்றீன்ற ஆ. அதற்கு அணுகியவரைச் சினந்து பாய்தல் இயல்பு. பாய்ந்த என்றது பாய்ந்து வயிறு கிழியக் குத்திய என்பதுபட நின்றது. பாய்ந்தமையாலே பட்ட புண்ணினன் என்க. கணவிர மாலையின் சுருள் கையிலேந்திய குடாச் சுருளிற் குவமை. கணவிரம்-செவ்வலரிப்பூ; ஆகுபெயர். பெருங்குடர் என்றது-மலக்குடரை. என் மகளிருந்து பழகிய இடம் என்று எண்ணி அவ்வுரிமை பற்றி வந்து சரண்புகுந்தான் என்பது கருத்து. இஃது அத் துறவோரின்பால் கண்ணோட்டம் எட்டுணையும் இல்லை என்று காட்டற்குக் கூறியது. என்னை ? கண்ணோட்டம் என்பது தன்னொடு பயின்றாரைக் கண்டால் அவர் கூறியன மறுக்க மாட்டாமைக்குக் காரணமான ஒரு பண்புடைமையே யாதலின். கண்ணோட்ட மின்மையையும் வெகுளியுண்மையையும் முற்படக் காட்டிப் பின்னர் மையறுபடிவத்து மாதவர் என்றது முற்றிலும் அவற்றிற்கு எதிர்மறைப் பொருள் பயக்கும் இகழ்ச்சி  மொழியாதல் உணர்க. புற வேடத்திற்குக் குறைவில்லை என்பாள் மையறுபடிவத்து மாதவர் என்கின்றாள். இவன் என்றதும் இகழ்ச்சி. என்னை? கடவுள் உறையுமிடமாகிய அவ்விடத்திற்கு அருளுடைமை நீரல்ல என்பதுபட நிற்றலின். மௌன விரதிகளாதலின் கையுதிர்க் கோடல் வேண்டிற்று. இதுவும் இகழ்ச்சி. இச் சுதமதி வாயிலாய்த் தண்டமிழாசான் சாத்தனார் திறம்பட அவர் காலத்துச் சமணத் துறவோரின் இழிதகைமையை எடுத்துக் காட்டினர். இதனைக் காட்டவே இங்ஙனம் ஒரு சூழ்நிலையை அவர் உருவாக்கியுள்ளனர்; அவர் ஆருகதரின் இப்புன்மை பொறாது பௌத்த சமயம் புக்கு அச்சமயத்தைப் பரப்பும் நோக்கமடையோராதல் ஈண்டு நினையற்பாலதாம். இனி, அவர் காலத்துப் பௌத்தத் துறவிகளின் சான்றாண்மையும் இவர் இச் சுதமதியின் வாயிலாகவே உணர்த்துவதனைக் காண்பாம்.

இதுவுமது

55-64: கண்ணிறை…….குளிர்ப்பித்து

(இதன் பொருள்) கண் நிறை நீரேம் புறவோர் வீதியில் ஆரும் இலேம அறவோர் உளிரோ என புலம்பொடு சாற்ற-இவ்வாறு அச் சமண சமயத்து மாதவர் எம்மைத் துரத்திவிட்டமையால் உறுதுயர் பொறாமையாலே கண்களில் வெள்ளமாய்ப் பெருகி வீழும் நீரையுடையேமாய் அவ்வராந்தாணத்தின புறத்தே வாழ்வோருடைய தெருவிலே சென்று மாபெருந்துயரத்திற்கு ஆளாயினேம் களைகணாவார் ஒருவரையேனும் உடையேமல்லேம் ஆதலால் அளியேமாகிய எமமிடுக்கண் தீர்க்கும் அறவோர் யாரேனும் உள்ளீரோ உள்ளராயின் எம்மைப் புறந்தம்மின் என்று அரற்றிக் கூவாநிற்ப; மங்குல் தோய் மாடமனைதொறும் புகூஉம் அங்கையிற் கொண்டபாத்திரம் உடையோன்-அவ்வீதியிலமைந்த முகில் தவழும் மாடங்களையுடைய இல்லந்தோறும் பிச்சைபுகுதற்கியன்ற கோரகை என்னும் அகங்கையிற் கொண்ட பாத்திரத்தையுடையவனும்; கதிர்சுடும் அமயத்துவம் பனி மதமுகத்தோன்- ஞாயிறு சுடுகின்ற அந்த நண்பகற்பொழுதினும் குளிர்ந்த திங்கள் மண்டிலம் போலே அருள்பொழியும் திருமுகத்தையுடையவனும்; பொன்னில் திகழும் பொலம் பூவாடையன்-பொன்போலத் தூய்தாக விளக்குகின்ற பொன்னிற மருதம் பூந்துவரூட்டிய ஆடையையுடையவனும் ஆகிய பௌத்ததுறவோன் ஒருவன் எம்மையணுகி; என உற்றனிரோ-நீயிர் என்ன இடுக்கண் எய்தினிரோ என்று; எமை நோக்கி-எம்மை பரிந்து நோக்கி எமத்திடுக்கணை அறிந்துக்கொண்டபின்; அன்புடன் அளைஇய அருள் மொழியதனால் அஞ்செவி நிறைத்து நெஞ்சம் குளிர்ப்பித்து-அஞ்சன்மின் நீயிர் உற்ற துயரத்தை யாமகற்றுவோம் என்பன போன்ற அன்போடளாவிய அருள்மொழி பலகூறி எமது உட்செவியை நிறைத்து எமதுள்ளத்தையும் குளிர்ப்பண்ணி என்க.

(விளக்கம்) அறவோர்-எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகுவோர். அராந்தாணத்து அறவோர் ஒருவரேனும் இலர் என்பது இதனாற் போந்தமையும் உணர்க. அருகரல்லாத புறவோர் வாழும் வீதி என்றவாறு: காணார் கேளார் கான்முடிடப்பட்கடார் முதலிய ஆதுலர்க்கும் அன்னம் இடவேண்டுதலின் மாடந்தோறும் புகுதல் வேண்டிற்று. அங்கை-அகங்கை; உள்ளங்கை. உள்ளம் எப்பொழுதும் குளிர்ந்திருந்தலின் கதிர் சுடும் அமயத்தும் பனிமதி முகமுடையன் ஆயினன் என்பது கருத்து. பொன்னிற்றிகழும் ஆடையன் என்றது. ஆடையின்றியாதல் பாயுடுத்தாதல் அமண் துறவோர் போல்பவ னல்லன் என்பது குறிப்பாகத் தோற்றுவித்தபடியாம். முன்னர் நாணமும் ஆடையும் நன்கனம் நீத்து மண்ணாமேனியன் என(3:88-91) ஆருகதத்துறவோனை அறிவித்தமையும் நினைக. பொலம்பூ வாடையன்-பொன் போன்ற நிறமுடைய அழகிய துவராடை யுடுத்தோன். அது மஞ்சள் நிறத்தது ஆகலின் வண்ணம் பற்றிக் பொன் உவமமாகிறது. அகனமர்ந்து முகத்தான் அமர்ந்து நோக்கி அன்புடன் அளைஇய அருள்மொழி கேட்ட வளவிலே எம் துன்பம் முழுதும் தீர்ந்தாற் போன்று உள்ளம் குளிர்ந்தோம் என்றது. இங்ஙனம் பேசுவதே மொழியாற் செய்யும் நல்வினை என்னும் புத்தருடைய கொள்கையை அவன் முழுதும் மேற்கொண்டொழுகுபவன் என்பதை புலப்படுத்து நின்றது.

இதுவுமது

65-70: தன்கை……..அருளிய

(இதன் பொருள்) தன்கைப் பாத்திரம் என்கைத் தந்து-தன் அங்கையிலேந்திய பிச்சைப் பாத்திரத்தை என்கையிலே கொடுத்துவிட்டு; ஆங்கு எந்தைக்கு உற்ற இடும்பை நீங்க-அப்பொழுதே என் தந்தை எய்திய துன்பம் நீங்கும் வண்ணம்; தழீஇ எடுத்தனன் தலை ஏற்றிக் கடுப்ப மாதவர் உறைவிடம் காட்டிய தன்னிருகைகளானும் மகவினை எடுப்பார் போன்று தழுவி எடுத்துத் தன்தலையாலே சுமந்து விரைந்துசென்று தன்னோரனைய சிறந்த துறவோர் உறைவிடத்தை எமக்கு உறையுளாகக் காட்டியவனும்; மறையோன் சாதுயர் நீக்கிய தலைவன்-பார்ப்பனனாகிய எந்தைக்குப் பின்னும் மருத்துவஞ்செய்து அவன்சாதற்குரிய பெருந்துயரத்தை நீக்கியவனும் தலைமையடையவனும்; தவமுனி சங்கதருமன் தான் எமக்கு அருளிய-வினையின் நீங்கி விளங்கி ய அறிவுடையவனுமாகிய சங்கதருமன் என்னும் சிறப்புப் பெயருடைய நல்லாசிரியன் தானே முனைவந்து எந்தையும் யானும் ஆகிய எம்மிருவருக்கும் திருவாய் மலர்ந்தருளிய; என்க.

(விளக்கம்) ஆங்கு-அப்பொழுதே. இரண்டு கைகளானும் தழுவி எடுக்க வேண்டித் தன்கைப் பாத்திரத்தை என் கைத்தந்து என்பது கருத்து. குடர் சரிந்து வீழாதபடி எடுக்க வேண்டுதலின் தழீஇ எடுத்தல் வேண்டிற்று. இரண்டு கைகளானும் அவனை மேனோக்கிய வண்ணம் மகவினை எடுக்குமாறு போலவே எடுத்தத் தலைமிசை ஏற்றிக் கொடு விரையச் சென்றுமாதவர் உறைவிடத்தை எமக் குறையுளாகக் காட்டிப் பின்னும் மருத்துவத்தால் சாதுயர் நீக்கியவன் என்றாள் என்க. தலைவன் என்றது சங்கத் தலைமையுடைமையை, சங்கதருமன் என்றது சிறப்புப் பெயர். சங்கத்தார்க்கு அறம் அறிவுறுத்தும் ஆசான் என்பது சிறப்புப் பெயர். சங்கத்தார்க்கு அறம் அறிவுறுத்தும் ஆசான் என்பது கருத்து. அவன்றானே முன்வந்து எமக்கு அறிவுறுத்தருளிய என்க. இவ்வாற்றால் நூலாசிரியர் பௌத்தத் துறவோரின் சான்றாண்மை புலப்படுத்திய நுணுக்க முணர்க.

இதுவுமது

71-76: எங்கோன்…………….வாழ்கென

(இதன் பொருள்) எம்கோன்-எம்முடைய இறைவனும்; இயல்குணன்-இயல்பாகவே மெய்யுணர்வு தலைப்பட்டவனும்; ஏதும் இலகுணப் பொருள்-குற்றமில்லாத குணங்கட்கெல்லாம் தானே பொருளானவனும்; உலகநோன்பின் பலகதி உணர்ந்து-துறவாமலே நோன்பு நோற்று உயிர்கள் பிறக்கும் பலவேறு பிறப்புக்களினும் பிறந்து பிறர்க்குரியாளன-தனக்கென முயன்று வாழாமல் பிறர் வாழ்தற் பொருட்டே முயல்பவனும் ஆகிய; இன்பச் செவ்வி மனபதை எய்த-தான் கண்ட வீட்டின்பம் எய்துதற்குரிய செவ்வியை மன்னுயிரெல்லாம் எய்துதறகுரிய; அருளறம் பூண்ட ஒருபெரும் பூட்கையின்-அருளாகிய அறத்தை மேற்கொண்டொழுகுமொரு பெரிய கோட்பாட்டோடு; அறக்கதிர் ஆழி திறப்பட உருட்டி-அறமாகிய ஒளியுடைய சக்கரத்தைச் சிறிதும் சோர்வின்றி உருட்டி; காமன கடந்த வாமன்-காமனை வென்றுயர்ந்த அழகனகிய புத்ததேவனுடைய; தகைபாராட்டுதல் அல்லது-தெய்வத்தன்மையை இடையறாது பாராட்டுகின்ற செந்நாவையுடையேனல்லது; மிகைநாவிலலேன் வேந்தே வாழ்க என வேறு தெய்வங்களைப் பாராட்டற்கியன்ற மிகையான செயலையுடைய நாவல்லேன் அரசே நீடுழி வாழ்க! என்றாள் என்க.

(விளக்கம்) எங்கோன்-எமக்கு ஆத்தனானவன். பௌத்தர்கள் ஆத்தனாகிய புத்தனையே கடவுளாகவும் கொள்வர். இதனை,

முற்றுணர்ந்து புவிமீது கொலையாதிய
தீமை முனிந்து சாந்தம்
உற்றிருந்து கருணையினாற் பரதுக்க
துக்கனா யும்ப ரோடு
கற்றுணர்ந்த முனிவரருங் கண்டுதொழப்
பிடகநூல் கனிவான் முன்னம்
சொற்றருந்த வுரைத்தருளூந் தோன்றலே
கடவுள்அருட் டோன்ற லாவான்

எனவரும் மெய்ஞ்ஞான விளக்கத்தானும் (சருக்கம் 32-4) உணர்க. குணமாகிய பொருள் என்க. உலக நோன்பு-துறவாமலே மேற்கொள்ளும் நோன்பு. புத்தர் வினையாலன்றி அருள் காரணமாகக் கை வந்த முத்தியைக் கைவிட்டு வாலறிவுடன் விலங்கு முதலிய பிறப்புக்களினும் புக்கும் பிறர்க் குழன்றார் என்பர். இதனை

வானாடும் பரியாயும் மரிணமாயும்
வனக்கேழற் களிறாயு மெண்காற்புண்மான்
றானாயு மனையெருமை ஒருத்தலாயுந்
தடக்கையிளங் களிறாயுஞ் சடங்கமாயு
மீனாயு முயலாயு மன்னமாயு
மயிலாயும் கொலைகளவு கட்பொய்காமம்
வரைந்தவர்தா முறைந்தபதி மானாவூரே

எனவரும் நீலகேசியில்(206) யாமெருத்துக்காட்டிய பழஞ்செய்யுளானு மூணர்க. ஏதமில் குணப் பொருள் என்றதனை

மீனுருவாகி மெய்ம்மையிற் படிந்தனை
மானுருவாகியே வான்குண மியற்றினை

எனவும்

எறும்புகடை அயன்முதலா எண்ணிறந்த வென்றுரைக்கப்
பிறந்திறந்த யோனிதொறும் பிரியாது சூழ்போகி
எவ்வுடம்பி லெவ்வுயிர்க்கும் யாதொன்றால் இடரெய்தின்
அவ்வுடம்பி லுயிர்க்குயிரா யருள்பொழியுந் திருவுள்ளம்

எனவும். வரும் பழம் பாடல்களையும் (வீரசோழியம் யாப்பு எடத்துக் காட்டுக்கள்) ஒப்பு நோக்குக. இன்பச் செவ்வி என்றது-வீடுபெறும் நிலைமையை. இதனை 30 ஆம் காதையில் விளங்கக் காணலாம். மன்மதை-மன்னுயிர். தகை-கடவுட்டன்மை யாகிய பெருந்தகைமை. மிகைநா-இதனைக் கடந்து பிற தெய்வங்களை வாழ்த்தும் நா.

உதயகுமரன் போதலும் மணிமேகலை தன்னிலை சுதமதிக்கு இயம்பலும்

80-90: அஞ்சொல்……..நெஞ்சம்

(இதன் பொருள்) அம்சொல் ஆயிழை நின்திறம் அறிந்தேன்-அழகிய சொற்றிறமமைந்த சுதமதி நல்லாய் நன்று யான் நின் வரலாறு அறிந்துகொண்டேன்; வஞ்சி நுண்ணிடை மணிமேகலை தனைச் சித்தராபதியால் சேர்தலும் உண்டு என்று அயர்ந்து வஞ்சிக் கொடிபோலும் நுண்ணிய இடையையுடைய மணிமேகலை யான் சித்திராபதிவாயிலாய்ச் சேர்தற்கும் இடன் உண்டுகாண் அவள் செவ்வியளாயின் செவ்வியளாகுக என்று தன் செயலறவினாற் கூறியவனாய்; ஆங்கு அப் பொழில் அவன் போய்பின்-அவ்வளவின் அம் மலர்ப் பொழிலினின்றும் அவ்வரசிளங்குமரன் அகன்றுபோய் பின்னர்; பளிக்கறை திறந்து மணிமேகலை அப் பளிக்கறையின் தாழ்நீங்கித் திறந்து வந்தவள்; பனிமதி முகத்துக் களிக்கபல் பிறழாக் காட்சியளாகி-குளிர்ந்த திங்கள் மண்டிலம் போன்ற தன் முகத்தின்கண் களிக்கன்ற கயல்மீன் போன்ற கண்கள் அவனைக் கண்டகாட்சி கலங்காமைப் பொருட்டுப் பிறழாது நிலைத்த காட்சியையுடையளாய்ச் சுதமதியை அணுகிக்கூறுபவள்; (60) அன்னாய்-அன்னையே ஈதொன்றுகேள்; புதுவோன்-நமக்குப் புதியவனாகிய இவ்வரசன் மகன் என்னை; கற்புத்தான் இலள் நல் தவ உணர்வு இலள் வருணக் காப்பு இளல் பொருள் விலையாட்டி என்று இகழ்ந்தனன் ஆகி நயந்தோன் என்னாது-இவள் நிறையில்லாதவள், நன்மை மிக்க தவத்திற்குக் காரணமான மெய்யுணர்வு கைவரப் பெறாதவள், வருணத்தாலே தன்னைத்தான காக்கும் குலமகளும் அல்லள்; பொதுமக்கள், பொருட் பொருட்டுத் தன்னையே விற்கு மியல்புடையள் என்று இன்னோரன்ன கூறி இகழ்ந்தவனாய் என அழகின் பொருட்டே காமுறுபவன் என்று தானும் இகழ்ந்து புறக்கணியாமல்; என் நெஞ்சம்(புதுவோன்) பின் போனது-எனது புல்லிய நெஞ்சம் அவ்வேதிலானையும் விரும்பி அவனைத் தொடர்ந்து அவன் பின்னே போயொழிந்தது! என்றாள் என்க.

(விளக்கம்) கண் களிக் கயல்போல் இடையறாது பிறழ்தல் தமக்கியல் பாகவும் அவனைக் கண்ட காட்சி மறையும் என்று அஞ்சிப் பிறழாதிருக்கின்ற காட்சியளாகி என்றவாறு. கற்புத்தானிலள் என்று இகழ்ந்தான் என்றது அவன் நிறையும் உண்டோ காமம் காழ் கொளின் என்றதன் குறிப்புப் பொருளை உட்கொண்டு கூறியபடியாம். நிறை கைகூடாதாகவே தவவுணர்வும் இலள் என்பதும் குலமகள் அல்லள் என்பதும் வருணக் காப்பின்மையும் பொருள் வலையாட்டியாதலும் ஆகிய வசைச் சொற்கள் அனைத்தும் அதன் குறிப்புப் பொருளாக மணிமேகலை கொண்டு கூறுகின்றாள் போலும். இனி அவன் இங்கனம் இகழ்ந்தமையை வழீ மொழிதல் வாயிலாய் பெறவைத்தவாறுமாம். இகழ்ந்தனனாகி நயந்தோன் என்றது அவன் நம்மழகை மட்டுமே நயக்கின்றான் என்றவாறு. என்னெஞ்சம் என்றது என் புல்லிய நெஞ்சம் என்பதுபட நின்றது.

சொற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை காமநோய்
உற்றார் அறிவதொன் றன்று                 (1255)

எனவரும் திருக்குறள் ஈண்டு நினைக்கத்தகும். புதுவோன் என்பதனை எழுவாயாகவும் எடுத்துக் கூட்டுக.

மணிமேகலா தெய்வம் வந்து தோன்றுதல்

90-96: இதுவோ………பைந்தொடியாகி

(இதன் பொருள்) அன்னாய் இதுவோ காமத்தியற்கை-அன்புடையோய்! இவ்வாறு உயர்வும் இழிதகைமையும் உன்னிப் பாராமல் சென்றவிடத்தால் நெஞ்சத்தைச் செலுத்தும் இத் தீய பண்புதான் காமத்தின் இயல்பேயோ யான் இதுகாறும் அறிந்திலேன்காண்; அது திறம் இதுவே ஆயின் அதன் திறம் கெடுக என-அக் காமத்தின் தன்மை இவ்விழிதகைமையே ஆயின் அதன் ஆற்றல் ஒழிவதாக! என்று வியந்துகூறி; மதுமலர்க் குழலாள் மணிமேகலைதான்-தேன் பொதுளிய மலரணியும் பருவமுடைய கூந்தலையுடைய அம் மணிமேகலை நல்லாள்; சுதமதி தன்னொடு நின்ற எல்லையுள்-அன்புடைய சுதமதியோடு சொல்லாடி நின்றபொழுதில்; இந்திரகோடணை விழா அணி விரும்பி தேவேந்திரனுக்கு அந் நகரத்தே நிகழ்கின்ற ஆரவாரமுடைய விழாவின் அழகைக் காண விரும்பி; வந்து காண்குறூஉம் மணிமேகலா தெய்வம்-வந்து காணுகின்ற மணிமேகலா தெய்வம் என்னும் மணிமேலையின் தந்தைவழிக்குல தெய்வமானது மணிமேகலை நெஞ்சம் காமுற்றுப் புதுவோன் பின்போன செவ்வியறிந்து அவளைத் தடுத்து நன்னெறிப்படுத்துதற் பொருட்டு; பதியகத்து உறையும் ஓர் பைந்தொடியாகி-அந் நகரத்திலே வாழுமொரு பசிய வளையலையுடையா ளொரு மானுடமகள் வடிவந்தாங்கி; என்க.

(விளக்கம்) இதுவோ-இத்தகைய இழிதகவுடையதோ என்புழி ஓகாரம் ஒழியிசை. என்னை? அனையதாயினும் அழிக்குதும் என்பது குறித்து நிற்றலின். கோடணை-ஆரவாரம். அணி-அழகு. காண்குறூஉம்-என்றமையால் அத் தெய்வம் இந்திர விழாக் கால் கொண்ட பொழுதே அங்கு வந்தமை பெற்றாம். ஈண்டு வருதற்குக் காரணம் மணிமேகலைக்கு எதிர்ந்துள ஏது நிகழ்ச்சியை அறிந்து அவ்வழி அவளை ஆற்றுப்படுத்தற்குக் கருதியதாம் என்க. என்னை? அஃது அவட்குக் குல தெய்வமும் ஆகலான். அதனை,

வந்தேன் அஞ்சன் மணிமேகலை யான்
ஆதிசால் முனிவன் அறவழிப் படூஉம்
ஏதுமுதிர்ந் துளது இளங்கொடிக் காதலின்
விஞ்சையிற் பெயர்த்துநின் விளங்கிழை தன்னை
வஞ்சமின் மணிபல் லவத்திடை வைத்தேன்

எனப் பின்னர் அத் தெய்வமே(துயலெழுப்பிய காதையில்) இயம்புதலானும் அறிக. இக் கருத்தை யுட்கொண்டே இக் காதை முகப்பின் (…….உதயகுமரன் பால் உள்ளத்தாள் என மணிமேகலைக்கு மணிமேலா தெய்வம் வந்து தோன்றிய பாட்டு.) என்று முன்னையோர் வரைந்தனர் என்றுணர்க.

மணிமேகலா தெய்வம் புத்தபீடிகையை வலஞ்செய்து வாழ்த்தி வணங்குதல்

96-108: மணியறை………நீட்டும்

(இதன் பொருள்) மணி அறைப் பீடிகை வலங்கொண்டு ஓங்கி-உவவனத்தின் கண்ணதாகிய அப் பளிக்கறையின் உள்ளே அமைந்த புத்தபீடிகையை வலமாக வந்து பின்னர் வானத்தின் கண் உயர்ந்துநின்று; புலவன்-எல்லார்க்கும் அறிவாயுள்ளவனே; தீர்த்தன-தூயோனே!; புண்ணியன-அறத்தின் திரு மூர்த்தியே!; புராணன்-பழைமையுடையோனே!; உலகநோன்பின் உயர்ந்தோய் எனகோ-உன்னை, துறவாமலே நோன்பு செய்து உயர்ந்தோன் என்று புகழவேனோ?; குற்றம் கெடுத்தோய்-காம வெகுளிமயக்கமாகிய குற்றங்களை அழித்தவனே என்றும்; செற்றம் செறுத்தோய்-அடிப்பட்ட சினத்தையே சினந்தவனே என்னும்; முற்ற வுணர்ந்த முதல்வா என்கோ-முழுதும் ஓதாமலே உணர்ந்திட்ட முழுமுதல்வனே என்றும் பாராட்டுவேனோ?; காமற் கடந்தோய் ஏம்ம ஆவோய் தீநெறிக்கடும்பகை கடிந்தோய் என்கோ-காமனை வென்றவனே மன்னுயிர்க்கெல்லாம் காவலானவனே  தீமை பயக்கும் வழியிற் செலுத்தும் ஐம்பொறிகளாகிய கடிய பகையை வெனறொழித்தவனே என்று சொல்லிப் புகழவேனோ?;
ஆயிர ஆர்த்து ஆழியம் திருந்து அடி-நின்னுடைய ஆயிரம் ஆரக்கால்களோடு கூடிய சக்கர ரேகையுடைய அழகிய திருவடிகளை; ஆயிரம் நாஇலேன்-ஆயிரம் நாவுகளின்றி ஒரே நாவுடைய யான்; ஏததுவது எவன்-புகழ்ந்து பாராட்டுதல் எங்ஙனமாம்; என்று என்று பலவும் சொல்லிப் புகழ்ந்து; எரிமணிப் பூங்கொடி இருநிலம் மருங்கு வந்து ஒருதனி திரிவது ஒத்து-ஒளிவீசும் அழகிய காமவல்லி என்னும் வான்நாட்டுப் பூங்கொடி ஒன்று தனித்து நிலவுலகத்திலே திரிந்தாற் போன்று; ஓதியின் ஒதுங்கி-ஓதிஞானத்தோடே இயங்கி; நிலவரை இறந்து(ஓர்) முடங்கு நாநீட்டும்-நிலப்பரப்பினைக் கடந்து கானிலந் தோயாமலே நின்று அவன் புகழ் கூறமாட்டாமையால் முடக்கிய தன் நாவினை நிமிர்த்துப் புகழாநிற்கும் என்க.

(விளக்கம்)  மணியறை-பளிக்கறை. வானத்திலோங்கி என்க புண்ணியன்-அறவோன் குற்றம்-காமவெகுளி மயக்கம். என்கோ என்பேனா? புராணம்-பழைமை. ஏமம்-பாதுகாவல்; இன்பமுமாம். தீநெறி-தீயவழியில் ஒழுகும் ஒழுக்கம். தீயநெறியிற் செலுத்தும் கடியபகை. ஆயிரம் ஆரங்களையுடைய சக்கரக் குறி கிடந்த திருந்தடி என்க. நின்னைப் புகழ் நாவாயிரம் வேண்டும் அவையிலேன் எவ்வாறு புகழ்வல்? என்றவாறு. ஓதி-மெய்யறிவு; முக்காலமும் அறியும் முற்றறிவுமாம். ஓர்: அசை. கூற மாட்டாது முடங்கி நாவை மீண்டும் நிமிர்த்து என்க. நிமிர்த்திப் பாராட்ட என்று முடிந்திடுக. நீட்டும் நீட்டிப் பாராட்டிப் பரவுவாள் என்க. நீட்டும்: செய்யும் என்னும் முற்றச் சொல்.

அந்திமாலையின் வரவு

(109 ஆம் அடிமுதலாக,141 ஆம் அடிமுடியப் புகார் நகரத்தே அற்றைநாள் அந்திமாலை வரவின் வண்ணனையாய் ஒரு தொடர்.)

109-122: புலவரை………..பெய்தலும்

(இதன் பொருள்) புலவரை இறந்த புகார் எனும் பூங்கொடி-அறிவினது எல்லையையும் கடந்துதிகழ்கின்ற பேரழகோடு கூடிய பூம்புகார் நகரம் என்னும் மலர்ந்த கொடிபோலும் மடந்தை எத்தகையளோ வெனின் அவள்தான்; பல்மலர் சிறந்த நல்நீர் அகழி அடி-பல்வேறு வண்ணமலர்களாலே நல்ல நீர்மையையுடைய (நீரையுடைய) அகழியாகிய திருவடிகளையும் அவ்வகழியின் கண்ணிருந்து ஆரவாரிக்கின்ற; புள ஒலிசிறந்த தௌஅரிச் சிலம்பு-பறவை இனமாகிய அவ்வடியிற் கிடந்து முரலும் சிறந்த தெளிந்த ஓசையைச் செய்யும் பரல்களையுடைய சிலம்புகளையும்; ஞாயில் இஞ்சி-ஞாயிலென்னும் உறுப்போடு கூடிய மதில்வட்டமாகிய; நகை மணிமேகலை-(அந்நகர் நங்கை இடையிலணிந்த) ஒளிமிக்க மணிகளாலியன்ற மேகலை என்னும் அணிகலனையும் வாயில் மருங்கு இயன்ற வான் டணைத்தோளி-வாயிலின இரு மருங்கும் நடப்பட்டுள்ள உயர்ந்த மூங்கிலாகிய தோள்களையும் உடையாள்; தருநிலை வச்சிரம் என எதிர்எதிர் ஓங்கிய இருகோட்டம்-தருநிலைக் கோட்டம் எனவும் வச்சிரக் கோட்டம் எனவும் கூறப்படுகின்ற ஒன்றற்கொன்று எதிர்எதிராக உயர்ந்து திகழும் இரண்டு கோட்டங்களாகிய; கதிர் இளவனமுலை-ஒளியும் இளைமையும் அழகும் உடைய இரண்டு முலைகளையும்; ஆர்புனை வேந்தற்குப் பேரளவு இயற்றி ஊழிஎண்ணி நீடுநின்று ஓங்கிய ஆத்திமாலை சூடிய சோழமன்னனுக் கென்றே உலகத்து அரண்மனைகளுள் வைத்துப் பெரிய அளவுடையதாக இயற்றப்பட்டு ஊழிபலவும் எண்ணியறிந்து நீடூழிகள் நிலைத்து நின்று புகழாலுயர்ந்திருக்கின்ற; ஒரு பெருங்கோயில்-உலகில் ஒப்பற்ற பெரிய அரண்மனையாகிய; திருமுகவாட்டி -அழகிய முகத்தினையும் உடையவளாவாள்; குணதிசை மருங்கின் நாளமுதிர் மதியமும் குடதிசை மருங்கின் சென்றுவீழ் கதிரும்-அற்றை நாள் கீழ்த்திசையினின்றும் எழாநின்ற வளர்பிறைப் பக்கத்து நாளெல்லாம் முதிர்ந்தமையாலே முழுவுருவமும் பெற்ற நிறைத் திங்கள் மண்டிலமும் மேற்றிசையிலே சென்று வீழ்கின்ற ஞாயிற்று மண்டிலமும்; வெள்ளி வெளதோட்டொடு பொன்தோடு ஆக-வெள்ளியாலியன்ற வெள்ளைத் தோடாகவும் பொன்னாலியன்ற செந்தோடாகவும்; எள் அறு திருமுகம் பொலியப் பெய்தலும்-குற்றமற்ற அந் நகர நங்கையின் அழகிய முகமானது மேலும் பொலிவுறும்படி காலம் என்னும் அவளுடைய தோழியானவள் அணிந்து விடாநிற்பவும் என்க.

(விளக்கம்) புலவரை-அறிவின் எல்லை; அழகு அறிவிற்கன்றி உணர்ச்சிக்குப் புலனாதலின் அறிவின் எல்லை இறந்த என்றார். அகழியாகிய அடியையும் அதன்கண் பன்னிற மலரினின்று ஆரவாரிக்கின்ற புள்ளொலியாகிய அவள் தன் சிலம்பையும். இஞ்சியாகிய மேகலையையும், இருமருங்கும் நடப்பட்ட மூலையினையும், அரண்மனையாகிய திருமுகத்தையும் உடைய பூம்புகார் என்னும் நகர் மடந்தைக்கு அற்றைநாள் எழுகின்ற திங்கள் மண்டிலத்தை ஒரு செவியினும், வீழ்கின்ற ஞாயிற்று மண்டிலத்தை ஒரு செவியினும் வெள்ளித் தோடாகவும் பொன் தோடாகவும் அரண்மனையாகிய திருமுகம் பொலியும்படி காலமாகிய அந் நகர் நங்கையின் தோழி அணிந்து விடவும் என்க. இது குறிப்புவமை அணி. காலமாகிய தோழி என வருவித்துக் கூறுக.

தருநிலை வச்சிரம் என இரு கோட்டம் என்றது தருநிலைக் கோட்டமும் வச்சிரக் கோட்டமும் ஆகிய இரு கோட்டங்களும் என்றவாறு. தரு-கற்பகம். கற்பசத்தரு நிற்கும் கோட்டமும் வச்சிரப்படை நிறுத்தப்பட்ட கோட்டமும் என்க. கோட்டம்-கோயில். இவை ஒன்றற் கொன்று அணித்தாக ஒன்றுபோல உயர்ந்த கோட்டங்களாதலின் இங்ஙனம் உருவகஞ் செய்தார்.

இதுவுமது

123-132: அன்னச்சேவல்………படர

(இதன் பொருள்) அன்னச் சேவல் அயர்ந்து விளையாடின தன் உறுபெடையைத் தாமரை அடக்க-அன்னப்பறவையினுள் வைத்துச் சேவலன்னமானது பெரிதும் தன்னை மறந்து காதல் விளையாடல் நிகழ்த்திய தனக்குரிய பெடையன்னத்தைக் கதிரவன் மேலைக்கடலில் மறைதலாலே ஆட்டத்திற்குக் களமாயிருந்த தாமரை மலரானது இதழ்குவித்துத் தன்னுள்ளே அடக்கி மறைத்துக் கொள்ளுதலாலே; பூம்பொதி சிதையத் கிழித்துப் பெடைகொண்டு ஓங்கு இரு தெங்கின் உயர்மடல் ஏற-அத் தாமறையின் இதழ்களாலியன்ற பொதி சிதைந்தழியும்படி கிழித்து அச் சேவலன்னம் தன்பெடையன்னத்தை எடுத்துக்கொண்டு உயர்ந்து நிற்கின்ற தெங்கினது உயர்ந்த மடலினூடே ஏறியிருப்பவும் அன்றில் பெடை அரிக்குரல் அழைஇச் சென்றுவீழ் பொழுது சேவற்கு இசைப்ப-பெடையன்றில் தனது அரித்தெழுகின்ற குரலாற் கூவுமாற்றாலே குடகடலிலே கதிரவன் சென்று வீழ்கின்ற அந்திமாலையாகிய பொழுதின் வரவினைத் தன் சேவலன்றிலுக்கு அறிவிப்பவும்; பவளச் செங்கால் பறவைக் கானத்துக் குவளைமேய்ந்த-பவளம் போன்று சிவந்த கால்களையுடைய அன்னப்பறவைகள் செறிந்துள்ள கானகத்தினுதடே குவளை மலர்களை மேய்ந்த; சேதா குடம் முலைக்கண் பொழி தீம்பால் எழுதுகள் அவிப்ப-செவ்விய பசுக்களின் குடம்போன்ற முலையிற் கண்களிற் சுரந்து பொழியாநின்ற இனிய பாலே அவற்றின் இயக்கத்தாலே எழுகின்ற துகளை அடக்கும்படி; கன்று நினை குரல்-தத்தம் கன்றை நினைத்துக் கூப்பிடுகின்ற குரலையுடைய வாய் விரைந்து; மன்றுவழிப் படர-தத்தம் மன்றங்களிற்குச் செல்கின்ற வழியின்மேற் செல்லா நிற்பவும் என்க.

(விளக்கம்) இதன்கண் தனக்குரிய பெடையை, தாமரை பொதிந்து கொள்ள அதுகண்ட அன்னச் சேவலானது அப்பொதியைச் சிதைத்து அப் பெடையை எடுத்துக் கொண்டு தெங்கின் உயர் மடலில் ஏறிற்றாகக் கூறிய இக் கருப்பொருட் புறத்தே உதயகுமரனுடைய உள்ளத் தடத்தில் மலர்ந்துள்ள ஏது நிகழ்ச்சியாகிய தாமரை மலரானது மணிமேகலையாகிய தூய அன்னத்தைத் தன்னுள் வைத்துக் காமமாகிய தன்னிதழ்களாலே மறைந்துக் கொள்ளா நிற்ப அவ் விதழ்கள் சிதையும்படி மணிமேகலா தெய்வம் மணி பல்லவத்திற்கு எடுத்துப் போய் உயரிய துறவு நெறியில் சேர்ப்பித்தலாகிய பொருள் தோன்றி அற்றை நாளிரவு நிகழ்ச்சியை ஒருவாறாக நினைப்பித்து நிற்றலையும் நினைக. இவ்வாறு ஒன்று கூற அதுவே பிறிதொரு பொருளையும் நினைவூட்டுவதாக அமைக்குந் திறம் சாத்தனார் போன்ற மாபெருங் கலைஞர்க்கே இயல்வது போலும். இங்ஙனம் தோன்றுவதனை,(தொனிப் பொருள் என்னும்) குறிப்புப் பொருள் என்க.

காதற்றுணையைப் பிரிந்துறைய நேரின் அன்றிற் பறவை இறந்து படும் ஆதலால் தனக்கிரை கொணரச் சென்றுள்ள சேவலுக்குத் தனது அரிக்குரலாலே கதிரவன் மறைவதனை அறிவிக்கின்றது என்க. அரிக் குரல்-அரித்தெழும் ஒலி; இஃது இழுமென்னும் இனிய வொலிக்கு முரண் ஆய வொலியாம். அழைஇ-அழைத்து. குடக்கண்-குடம்பால் கறக்கும் முலையின்கண் எனலுமாம் இத்தகைய பசுக்களைக் குடச்சுட்டு என்னும் பெயராலும் குறிப்பதுண்டு. இதனை….

புல்லார் நிரைகருதி யாஞ்செல்லப் புண்ணலம்
பல்லார் அறியப் பகர்ந்தார்க்குச்-சொல்லால்
கடஞ்சுட்ட வேண்டா கடுஞ்சுரையா னான்கு
குடஞ்சுட் டினத்தாற் கொடு

எனவரும் புறப்பொருள் வெண்பாமாலை வரலாற்று வெண்பாவானும் அதன் உரையானும் உணர்க(வெட்சி-18).

சேதா-செவ்விய பசு. சிவந்த நிறமுடைய பசு எனலுமாம். பசுக்களில் சிவப்புப் பசுவே சிறந்தது என்பது இதன் கருத்தென்க.

சேதா………..படர என்னுமிதனோடு மதவுநடை நல்லான் வீங்குமாண் செருத்தல் தீம்பால் பிலிற்றக் கன்று பயிர் குரல மன்று நிறை புகுதரும் மாலையும் எனவும்(அகநா-14) ஆன்கணங் கன்று பயிர் குரல மன்று நிறை புகுகர (குறிஞ்சி-217) எனவும் வரும் பிறநூற் சொற்றொடர்களையும் ஒப்பு நோக்குக.

இதுவுமது

133-141: அந்தியந்தணர்……..மருங்கென்

(இதன் பொருள்) அந்தணர் அந்திச் செந்தீப் பேண-மறையவர் தம்மறை விதித்தாங்கு அந்திப் பொழுதிலே வளர்க்க வேண்டிய வேள்வித் தீயை அவிசொரிந்து வளர்ப்பவும்; பைந்தொடி மகளிர் பலர் விளக்கெடுப்ப-பசிய பொன் வளையலணிந்த மங்கலமகளிர் பலரும் தத்தம் மனைதொறும் திருவிளக் கேற்றித் தொழா நிற்பவும்; யாழோர் மருதத்து இன்னரம்பு உளர-யாழ் வாசிக்கும் இசைவாணராகிய பாணரகள் மருதப்பண் எழீஇ இனிய இசை தரும் யாழ் நரம்புகளை வருடாநிற்பவும்; கோவலர் முல்லைக்குழல் மேற் கொள்ள-கோவலராகிய ஆயர்கள் தமக்குரிய முல்லைப் பண்ணை வேய்ங்குழலிடத்தே ஊதாநிற்பவும்; அமரகம் மருங்கில் கண்வனை இழந்து தமர் அகம் புகூஉம் ஒருமகள் போல-போர்க் களத்திடத்தே தன் கணவன் இறந்து படுதலாலே பெருந்துன்பத்தோடே தன் பெற்றோர் இல்லத்திற்குத் தனியே செல்லும் ஒரு மங்கையைப் போல; கதிர் ஆற்றுப்படுத்த முதிராசத்துன்பமோடு அந்தி என்னும் பசலை மெய்யாட்டி-கதிரவனாகிய தன் கணவனை மறைந்தொழியும்படி போக்கி விட்டமையாலே முடிவில்லாத பிரிவுத்துன்பத்தோடே அந்தி மாலை என்னும் பெயரையுடைய பசலை பாய்ந்த மெய்யினையுடைய நங்கை; மாநகர் மருங்கு வந்து இறுத்தனள்-பெரிய அப் பூம்புகார் நகரிடத்தே வந்து தங்குவாளாயினள்; என்பதாம்.

(விளக்கம்) (23-41) இவ்வந்திமாலை வண்ணனையில் அன்னச் சேவல் தாமரை முதலிய மருதக்கருப் பொருளும் அன்றிற் சேவல் பெடை முதலிய நெய்தற் கருப்பொருளும், ஆவும் கோவலருமாகிய முல்லைக்கருப் பொருளும் வந்து மயங்கின.

கதிரவனைப் போக்கிய என்க. பிரிவாற்றாமையால் பசலைபூத்த மெய்யினை உடையளாய் என்றவாறு. செக்கர் வானத்தை அவளுடைய பசலை மெய்யாக உருவகித்த படியாம்.

மணிமேகலை தமரையும் காதலனாகிய உதயகுமரனையும் பிரிந்து போய் வருந்துதலைக் கருத்துட் கொண்டு புலவர் பெருமான் இக் காதையைத் துன்பியல் முடிவுடைத்தாக இயற்றினர். என்னை? அடுத்து வருவன அவலச் சுவையே நிரம்பிய காதைகளாதலால் அச் சுவைக்கு இவ்வாறு கால்கோள் செய்கின்றனர், காப்பியவுத்தி பலவும் கைவந்த தண்டமிழ் ஆசான் சாத்தனார் என்க.

இனி இக் காதையை-இளங்கோன் கண்ட பூங்கொடி உருவம் பெயர்ப்ப வியப்போன் தெளிந்து சூழ்வோன் உரையென, உரைப்ப ஆகென அகல்வோன்,உரையினை உரையென வேந்தே கேட்டருள், இழந்தோன் வருவோன் கண்டு உதிர்த்துத் திரிவோன் புண்ணினன் புகுந்து என்றோனை. என்னொடும் கையுதிர்க் கோடலின், உடையோன் நோக்கித், தந்து ஏற்றிக் காட்டிய சங்கதருமன். அருளிய தகை பாராட்டுதல் அல்லது இல்லேன் என அறிந்தேன் என்று. போயபின் என் நெஞ்சம் போனது கெடுக என, தெய்வம் ஆகி நீட்டும் நீட்ட; அடக்க இசைப்பப் படர எடுப்ப உளரக் கொள்ள இழந்து மெய்யாட்டி  மாநகர் மருங்கு இறுத்தனள் என்று இயைத்திடுக.

மணிமேகலா தெய்வம் வந்து தோன்றிய காதை முற்றிற்று

. சக்கரவாளக்கோட்டம் உரைத்த காதை

ஆறாவது மணிமேகலை தனக்கு மணிமேகலா தெய்வம் சக்கரவாளக் கோட்டம் உரைத்து அவளை மணிபல்லவத்துக் கொண்டுபோன பாட்டு

அஃதாவது-அரசன் மகன் சென்ற பின்னர் அங்குப் பதியகத் துறையுமோர் பைந்தொடியாகி வந்த மணிமேகலா தெய்வம் நீயிர் எற்றிற்கு இங்கு நிற்கின்றீர் என வினவ, சுதமதி மன்னன் மகன் நிலைமை கூறுதலும் அது கேட்ட தெய்வம் நீங்கள் வந்த வழியே சென்றால் மன்னன் மகன் மணிமேகலையைப் பற்றிக் கொள்வான் ஆதலால் இட் பொழிலின் மேற்றிசை மதிலிலமைந்த சிறிய வழியே சென்று, சக்கரவாளக் கோட்டத்தேயுள்ள துறவோர் இருக்கைக்குச் செல்லுமின், என அதுகேட்ட சுதமதி சுடுகாட்டுக் கோட்டம் என்பதனை நீ சக்கரவாளக் கோட்டம் என்கின்றினை அதற்குக் காரணம் என்? என வினவ அத் தெய்வம் அதன் வரலாற்றை விரிவாகக் கூறக் கேட்டிருந்த சுதமதி, உறங்கி விட்டாள். அப்பால் அத் தெய்வம் மணிமேகலையை மயக்கி எடுத்து வான் வழியே சென்று மணிபல்லவத்தீவிலே துயில்வித்தவாறே இட்டுச் சென்ற செய்தியைக் கூறுஞ்செய்யுள் என்றவாறு.

இதன்கண் சக்கரவாளக் கோட்டத்து வரலாறு கூறு மாற்றால், தமிழ்ச்சான்றோருடைய புறப்பொருளின்பாற்படும் காஞ்சித்திணைப் பொருள் பயில்வோருளத்தே நன்கு பதியுமாறு சாத்தனார் மிகவும் திறம்பட வகுத்தோதுகின்றார். அப்பாலும் ஒரு பார்ப்பனச் சிறுவன் அச் சக்கரவாளக் கோட்டத்துட் புகுந்து அஞ்சி இல்லம் புகுந்து உயிர் துறந்தமையும், அவன் தாய் கோதமையெனபாள் குழந்தையின் பிணத்தை எடுத்துக் கொண்டு சென்று சம்பாதி கோயிலின் முன்னின்று முறையிடுதலும், சம்பாபதி அவட்கு வெளிப்பட்டுக் கூறுதலும் அத் தெய்வத்தின் அறிவுரைகளும் செயலும் கற்போருளத்தே.

பாங்கருஞ் சிறப்பின் பல்லாற் றானும்
நில்லா வுலகம் புல்லிய நெறித்தே

என ஆசிரியர் தொல்காப்பியனார் ஓதிய காஞ்சித் திணைப் பொருளுக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகத் தோன்றுமாறு இக்காதை திகழ்கின்றது. இது துறவு நூலாகலின் நிலையாமை யுணர்ச்சி கைவந்தர்லொழிய மெய்யுணர்வு பெறுதல் சாலாமையின் அவ் வுணர்ச்சியைத் தோற்றுவிக்கும் இக் காதை இந் நூலுக்கு இன்றியமையாச் சிறப்புடையதுமாகும்.

அந்தி மாலை நீங்கிய பின்னர்
வந்து தோன்றிய மலர் கதிர் மண்டிலம்
சான்றோர் தம் கண் எய்திய குற்றம்
தோன்றுவழி விளங்கும் தோற்றம் போல
மாசி அறு விசும்பின் மறு நிறம் கிளர
ஆசு அற விளங்கிய அம் தீம் தண்கதிர்
வெள்ளி வெண் குடத்துப் பால் சொரிவது போல்
கள் அவிழ் பூம் பொழில் இடைஇடைச் சொரிய
உருவு கொண்ட மின்னே போல
திருவில் இட்டுத் திகழ்தரு மேனியள்  06-010

ஆதி முதல்வன் அற ஆழி ஆள்வோன்
பாத பீடிகை பணிந்தனள் ஏத்தி
பதிஅகத்து உறையும் ஓர் பைந்தொடி ஆகி
சுதமதி நல்லாள் மதி முகம் நோக்கி
ஈங்கு நின்றீர் என் உற்றீர்? என
ஆங்கு அவள் ஆங்கு அவன் கூறியது உரைத்தலும்
அரசு இளங் குமரன் ஆய் இழை தன் மேல்
தணியா நோக்கம் தவிர்ந்திலனாகி
அறத்தோர் வனம் என்று அகன்றனன் ஆயினும்
புறத்தோர் வீதியில் பொருந்துதல் ஒழியான்  06-020

பெருந் தெரு ஒழித்து இப்பெரு வனம் சூழ்ந்த
திருந்து எயில் குடபால் சிறு புழை போகி
மிக்க மாதவர் விரும்பினர் உறையும்
சக்கரவாளக் கோட்டம் புக்கால்
கங்குல் கழியினும் கடு நவை எய்தாது
அங்கு நீர் போம் என்று அருந் தெய்வம் உரைப்ப
வஞ்ச விஞ்சையன் மாருதவேகனும்
அம் செஞ் சாயல் நீயும் அல்லது
நெடு நகர் மருங்கின் உள்ளோர் எல்லாம்
சுடுகாட்டுக் கோட்டம் என்று அலது உரையார்  06-030

சக்கரவாளக் கோட்டம் அஃது என
மிக்கோய்! கூறிய உரைப் பொருள் அறியேன்
ஈங்கு இதன் காரணம் என்னையோ? என
ஆங்கு அதன் காரணம் அறியக் கூறுவன்
மாதவி மகளொடு வல் இருள் வரினும்
நீ கேள் என்றே நேர் இழை கூறும் இந்
நாமப் பேர் ஊர் தன்னொடு தோன்றிய
ஈமப் புறங்காடு ஈங்கு இதன் அயலது
ஊரா நல் தேர் ஓவியப் படுத்துத்
தேவர் புகுதரூஉம் செழுங் கொடி வாயிலும்  06-040

நெல்லும் கரும்பும் நீரும் சோலையும்
நல்வழி எழுதிய நலம் கிளர் வாயிலும்
வெள்ளி வெண் சுதை இழுகிய மாடத்து
உள் உரு எழுதா வெள்ளிடை வாயிலும்
மடித்த செவ் வாய் கடுத்த நோக்கின்
தொடுத்த பாசத்துப் பிடித்த சூலத்து
நெடு நிலை மண்ணீடு நின்ற வாயிலும்
நால் பெரு வாயிலும் பாற்பட்டு ஓங்கிய
காப்பு உடை இஞ்சிக் கடி வழங்கு ஆர் இடை
உலையா உள்ளமோடு உயிர்க் கடன் இறுத்தோர்  06-050

தலை தூங்கு நெடு மரம் தாழ்ந்து புறம் சுற்றி
பீடிகை ஓங்கிய பெரும் பலி முன்றில்
காடு அமர் செல்வி கழி பெருங் கோட்டமும்
அருந் தவர்க்கு ஆயினும் அரசர்க்கு ஆயினும்
ஒருங்கு உடன் மாய்ந்த பெண்டிர்க்கு ஆயினும்
நால் வேறு வருணப் பால் வேறு காட்டி
இறந்தோர் மருங்கில் சிறந்தோர் செய்த
குறியவும் நெடியவும் குன்று கண்டன்ன
சுடுமண் ஓங்கிய நெடுநிலைக் கோட்டமும்
அருந் திறல் கடவுள் திருந்து பலிக் கந்தமும்  06-060

நிறைக் கல் தெற்றியும் மிறைக் களச் சந்தியும்
தண்டும் மண்டையும் பிடித்துக் காவலர்
உண்டு கண் படுக்கும் உறையுள் குடிகையும்
தூமக் கொடியும் சுடர்த் தோரணங்களும்
ஈமப் பந்தரும் யாங்கணும் பரந்து
சுடுவோர் இடுவோர் தொடு குழிப் படுப்போர்
தாழ் வயின் அடைப்போர் தாழியில் கவிப்போர்
இரவும் பகலும் இளிவுடன் தரியாது
வருவோர் பெயர்வோர் மாறாச் சும்மையும்
எஞ்சியோர் மருங்கின் ஈமம் சாற்றி  06-070

 நெஞ்சு நடுக்குறூஉம் நெய்தல் ஓசையும்
துறவோர் இறந்த தொழு விளிப் பூசலும்
பிறவோர் இறந்த அழு விளிப் பூசலும்
நீள் முக நரியின் தீ விளிக் கூவும்
சாவோர்ப் பயிரும் கூகையின் குரலும்
புலவு ஊண் பொருந்திய குராலின் குரலும்
ஊண் தலை துற்றிய ஆண்டலைக் குரலும்
நல் நீர்ப் புணரி நளி கடல் ஓதையின்
இன்னா இசை ஒலி என்றும் நின்று அறாது
தான்றியும் ஒடுவையும் உழிஞ்சிலும் ஓங்கி  06-080

கான்றையும் சூரையும் கள்ளியும் அடர்ந்து
காய் பசிக் கடும் பேய் கணம் கொண்டு ஈண்டும்
மால் அமர் பெருஞ்சினை வாகை மன்றமும்
வெண் நிணம் தடியொடு மாந்தி மகிழ் சிறந்து
புள் இறைகூரும் வெள்ளில் மன்றமும்
சுடலை நோன்பிகள் ஒடியா உள்ளமொடு
மடைதீ உறுக்கும் வன்னி மன்றமும்
விரத யாக்கையர் உடை தலை தொகுத்து ஆங்கு
இருந் தொடர்ப் படுக்கும் இரத்தி மன்றமும்
பிணம் தின் மாக்கள் நிணம் படு குழிசியில்  06-090

விருந்தாட்டு அயரும் வெள்ளிடை மன்றமும்
அழல் பெய் குழிசியும் புழல் பெய் மண்டையும்
வெள்ளில் பாடையும் உள்ளீட்டு அறுவையும்
பரிந்த மாலையும் உடைந்த கும்பமும்
நெல்லும் பொரியும் சில் பலி அரிசியும்
யாங்கணும் பரந்த ஓங்கு இரும் பறந்தலை
தவத் துறை மாக்கள் மிகப் பெருஞ் செல்வர்
ஈற்று இளம் பெண்டிர் ஆற்றாப் பாலகர்
முதியோர் என்னான் இளையோர் என்னான்
கொடுந்தொழிலாளன் கொன்றனன் குவிப்ப இவ்  06-100

அழல் வாய்ச் சுடலை தின்னக் கண்டும்
கழி பெருஞ் செல்வக் கள்ளாட்டு அயர்ந்து
மிக்க நல் அறம் விரும்பாது வாழும்
மக்களின் சிறந்த மடவோர் உண்டோ?
ஆங்கு அது தன்னை ஓர் அருங் கடி நகர் என
சார்ங்கலன் என்போன் தனி வழிச் சென்றோன்
என்பும் தடியும் உதிரமும் யாக்கை என்று
அன்புறு மாக்கட்கு அறியச் சாற்றி
வழுவொடு கிடந்த புழு ஊன் பிண்டத்து
அலத்தகம் ஊட்டிய அடி நரி வாய்க் கொண்டு  06-110

உலப்பு இல் இன்பமோடு உளைக்கும் ஓதையும்
கலைப் புற அல்குல் கழுகு குடைந்து உண்டு
நிலைத்தலை நெடு விளி எடுக்கும் ஓதையும்
கடகம் செறித்த கையைத் தீநாய்
உடையக் கவ்வி ஒடுங்கா ஓதையும்
சாந்தம் தோய்ந்த ஏந்து இள வன முலை
காய்ந்த பசி எருவை கவர்ந்து ஊண் ஓதையும்
பண்பு கொள் யாக்கையின் வெண்பலி அரங்கத்து
மண் கணை முழவம் ஆக ஆங்கு ஓர்
கருந் தலை வாங்கி கை அகத்து ஏந்தி  06-120

இரும் பேர் உவகையின் எழுந்து ஓர் பேய் மகள்
புயலோ குழலோ கயலோ கண்ணோ
குமிழோ மூக்கோ இதழோ கவிரோ
பல்லோ முத்தோ என்னாது இரங்காது
கண் தொட்டு உண்டு கவை அடி பெயர்த்து
தண்டாக் களிப்பின் ஆடும் கூத்துக்
கண்டனன் வெரீஇ கடு நவை எய்தி
விண்டு ஓர் திசையின் விளித்தனன் பெயர்ந்து ஈங்கு
எம் அனை! காணாய்! ஈமச் சுடலையின்
வெம் முது பேய்க்கு என் உயிர் கொடுத்தேன் என  06-130

தம் அனை தன் முன் வீழ்ந்து மெய் வைத்தலும்
பார்ப்பான் தன்னொடு கண் இழந்து இருந்த இத்
தீத்தொழிலாட்டியேன் சிறுவன் தன்னை
யாரும் இல் தமியேன் என்பது நோக்காது
ஆர் உயிர் உண்டது அணங்கோ? பேயோ?
துறையும் மன்றமும் தொல் வலி மரனும்
உறையுளும் கோட்டமும் காப்பாய்! காவாய்
தகவு இலைகொல்லோ சம்பாபதி! என
மகன் மெய் யாக்கையை மார்பு உறத் தழீஇ
ஈமப் புறங்காட்டு எயில் புற வாயிலில்  06-140

கோதமை என்பாள் கொடுந் துயர் சாற்ற
கடி வழங்கு வாயிலில் கடுந் துயர் எய்தி
இடை இருள் யாமத்து என்னை ஈங்கு அழைத்தனை
என் உற்றனையோ? எனக்கு உரை என்றே
பொன்னின் பொலிந்த நிறத்தாள் தோன்ற
ஆரும்இலாட்டியேன் அறியாப் பாலகன்
ஈமப் புறங்காட்டு எய்தினோன் தன்னை
அணங்கோ பேயோ ஆர் உயிர் உண்டது
உறங்குவான் போலக் கிடந்தனன் காண் என
அணங்கும் பேயும் ஆர் உயிர் உண்ணா  06-150

பிணங்கு நூல் மார்பன் பேது கந்தாக
ஊழ்வினை வந்து இவன் உயிர் உண்டு கழிந்தது
மா பெருந் துன்பம் நீ ஒழிவாய் என்றலும்
என் உயிர் கொண்டு இவன் உயிர் தந்தருளில் என்
கண் இல் கணவனை இவன் காத்து ஓம்பிடும்
இவன் உயிர் தந்து என் உயிர் வாங்கு என்றலும்
முது மூதாட்டி இரங்கினள் மொழிவோள்
ஐயம் உண்டோ ஆர் உயிர் போனால்
செய்வினை மருங்கின் சென்று பிறப்பு எய்துதல்?
ஆங்கு அது கொணர்ந்து நின் ஆர் இடர் நீக்குதல்  06-160

ஈங்கு எனக்கு ஆவது ஒன்று அன்று நீ இரங்கல்
கொலை அறம் ஆம் எனும் தொழில் மாக்கள்
அவலப் படிற்று உரை ஆங்கு அது மடவாய்
உலக மன்னவர்க்கு உயிர்க்கு உயிர் ஈவோர்
இலரோ இந்த ஈமப் புறங்காட்டு
அரசர்க்கு அமைந்தன ஆயிரம் கோட்டம்!
நிரயக் கொடு மொழி நீ ஒழிக என்றலும்
தேவர் தருவர் வரம் என்று ஒரு முறை
நான்மறை அந்தணர் நல் நூல் உரைக்கும்
மா பெருந் தெய்வம்! நீ அருளாவிடின்  06-170

யானோ காவேன் என் உயிர் ஈங்கு என
ஊழி முதல்வன் உயிர் தரின் அல்லது
ஆழித் தாழி அகவரைத் திரிவோர்
தாம் தரின் யானும் தருகுவன் மடவாய்!
ஈங்கு என் ஆற்றலும் காண்பாய் என்றே
நால் வகை மரபின் அரூபப் பிரமரும்
நால் நால் வகையில் உரூபப் பிரமரும்
இரு வகைச் சுடரும் இரு மூவகையின்
பெரு வனப்பு எய்திய தெய்வத கணங்களும்
பல் வகை அசுரரும் படு துயர் உறூஉம்  06-180

எண் வகை நரகரும் இரு விசும்பு இயங்கும்
பல் மீன் ஈட்டமும் நாளும் கோளும்
தன் அகத்து அடக்கிய சக்கரவாளத்து
வரம் தரற்கு உரியோர் தமை முன் நிறுத்தி
அரந்தை கெடும் இவள் அருந் துயர் இது எனச்
சம்பாபதி தான் உரைத்த அம் முறையே
எங்கு வாழ் தேவரும் உரைப்பக் கேட்டே
கோதமை உற்ற கொடுந் துயர் நீங்கி
ஈமச் சுடலையில் மகனை இட்டு இறந்த பின்
சம்பாபதி தன் ஆற்றல் தோன்ற  06-190

எங்கு வாழ் தேவரும் கூடிய இடம் தனில்
சூழ் கடல் வளைஇய ஆழி அம் குன்றத்து
நடுவு நின்ற மேருக் குன்றமும்
புடையின் நின்ற எழு வகைக் குன்றமும்
நால் வகை மரபின் மா பெருந் தீவும்
ஓர் ஈர் ஆயிரம் சிற்றிடைத் தீவும்
பிறவும் ஆங்கு அதன் இடவகை உரியன
பெறு முறை மரபின் அறிவு வரக் காட்டி
ஆங்கு வாழ் உயிர்களும் அவ் உயிர் இடங்களும்
பாங்குற மண்ணீட்டில் பண்புற வகுத்து  06-200

மிக்க மயனால் இழைக்கப்பட்ட
சக்கரவாளக் கோட்டம் ஈங்கு இது காண்
இடு பிணக் கோட்டத்து எயில் புறம் ஆதலின்
சுடுகாட்டுக் கோட்டம் என்று அலது உரையார்
இதன் வரவு இது என்று இருந் தெய்வம் உரைக்க
மதன் இல் நெஞ்சமொடு வான் துயர் எய்தி
பிறந்தோர் வாழ்க்கை சிறந்தோள் உரைப்ப
இறந்து இருள் கூர்ந்த இடை இருள் யாமத்துத்
தூங்கு துயில் எய்திய சுதமதி ஒழியப்
பூங்கொடி தன்னைப் பொருந்தித் தழீஇ  06-210

அந்தரம் ஆறா ஆறு ஐந்து யோசனைத்
தென் திசை மருங்கில் சென்று திரை உடுத்த
மணிபல்லவத்திடை மணிமேகலா தெய்வம்
அணி இழை தன்னை வைத்து அகன்றது தான் என்  06-214

உரை

திங்கள் மண்டிலத்தின் தோற்றம்

1-8: அந்தி………..சொரிய

(இதன் பொருள்) அந்தி மாலை நீங்கிய பின்னர்-அவ்வாறு வந்திறுத்த அந்திமாலைப் பொழுது போன பின்பு; வந்து தோன்றிய மலர் கதிர் மண்டிலம்-குணகடலினின்று மெழுந்து வானத்தே தனது ஒளியாலே விரிந்து தோன்றிய திங்கள் மண்டிலமானது; சான்றோர் தங்கண் எய்திய குற்றம் தோன்றுவழி விளங்கும் தோற்றம் போல-நற்பண்புகளால் நிறைந்த உயர்குடிப்பிறந்தார் மாட்டுளதாகும் குற்றம் தான் சிறிதேயாயினும் அது பிறரால் காணப்படும்பொழுது பெரிதாக விளங்கித் தொன்றுமாறு போலே; மாசுஅறு விசும்பின் மறுநிறம் கிளர-குற்றமற்ற வானிடத்தே தன் மறுவானும் ஒளியானும் விளங்கித் தோன்றா நிற்ப; ஆசு அற விளங்கிய அம் தீம் தண் கதிர் வெள்ளி வெள்குடத்துப் பால் சொரிவது போல்-குற்றமில்லாமல் விளங்கிய அதனுடைய அழகிய இனிய குளிர்ந்த நிலாக்கதிர்கள் வெள்ளியாலியன்ற தூய வெண்மையான குடத்தினின்றும் பால் பொழியுமாறு போலே; கள் அவிழ் பூம்பொழில் இடை இடைச் சொரிய தேன் துளிக்கின்ற உவவனம் என்னும் அம் மலர்ப்பூம்பொழிலகத்தே இடையிடையே பொழியா நிற்ப என்க.

(விளக்கம்) வந்து தோன்றிய என்றது வானத்திலே உயர்ந்து வந்து தோன்றிய என்பதுபட நின்றது. மலர்கதிர்: வினைத்தொகை. சான்றோர் தங்கண் எய்திய குற்றம்போல……..மறுநிறம் கிளர என்னுமிதனோடு;

குடிப்பிறந்தார் கண்விளங்குங் குற்றம் விசும்பின்
மதிக்கண் மறுப்போ லுயர்ந்து     (957)

எனவரும் திருக்குறளையும் நினைவு கூர்க.

மாசு அறு விசும்பின் என்புழி மாசு என்றது முகில் மழை முதலியவற்றை மறுவானும் நிறத்தானும் கிளர என்க. இனி மறுவானது அதன் மார்பிலே மட்டும் விளங்க, அதன் கதிர்கள் பூம்பொழிலினும் வந்து இடை இடையே சொரிய எனக்கோடலுமாம். நிறம்-ஈண்டு மார்பு. கள்தேன். பொழில்-உவவனம்.

மணிமேகலா தெய்வம் சுதமதியையும் மணிமேகலையையும் அணுகி வினாதல்

9-15: உருவு…….உற்றீரென

(இதன் பொருள்) உருவு கொண்ட மின்னே போலத் திருவில் இட்டுத் திகழ்தரு மேனியள்-பெண்ணுருக் கொண்டதொரு மின்னல் போன்ற மணிமேகலா தெய்வம் இந்திரவில் போன்று பல்வேறு நிறங்களையும் வானிடத்தே பரப்பி விளங்குகின்ற திருமேனியுடையவளாய்; ஆதி முதல்வன் அற ஆழி ஆள்வோன் பாத பீடிகை பணிந்தனள் ஏத்தி-எண்ணில் புத்தர்கட்கும் முற்படத் தோன்றிய முதல்வனும் உலகினைத் தனது அறமாகிய சக்கரத்தையுருட்டி அருளாட்சி செய்பவனும் ஆகிய புத்தபெருமானுடைய பாதபங்கயம் கிடந்த பீடிகையை வலஞ்செய்து வணங்கி வாழ்த்தியவள் பின்னர்; பதியகத்து உறையும் ஓர் பைந்தொடியாகி-அப் பூம்புகார் நகரத்தே வாழ்வாள் ஒருத்தியின் வடிவத்தை மேற்கொண்டு; சுதமதி நல்லாள் மதிமுகம் நோக்கி ஈங்கு நின்றீர் என்உற்றீர் என-ஐந்து விற்கிடைத் தொலைவில் அங்குநின்ற சுதமதி என்னும் அறப்பண்பு மிக்கவளது திங்கள் போன்ற திருமுகத்தை நோக்கி நீவிரிருவீரும் இப்பொழுது இவ்விடத்திலே தமியராய் நிற்கின்றீர், இவ்வாறு நிற்றற்குக் காரணமான இடுக்கண் ஏதெனும் எய்தினிரோ இயம்புக! என்று வினவ என்க.

(விளக்கம்) உருவு கொண்டமின்னே போல என்றாரேனும் மின் ஒரு பெண்ணுருவு கொண்டாற் போல என்பது கருத்தாகக் கொள்க. திருவில்-இந்திரவில். இந்திரவில் போன்று பல்வேறு ஒளிகளையும் பரவவிட்டு என்க ஆதிமுதல்வன் என்றது-கௌதம புத்தரை. உலகத்தே அறத்தைச் சான்றோர் உள்ளத்தே புகுத்தி அருளாட்சி செய்தலின், அறவாழி ஆள்வோன் என்றார்.
அழி என்றது ஆணையை. அதனை ஆழியாகக் கூறுவது மரபு. இந்திரவில் இன்னவாறு தோன்றும் எனப் புலப்படாமையினால் அங்ஙனம் தோன்றுகின்ற தெய்வங்கட்குவமை யாயிற்று என்பாருமுளர். அவ் விளக்கம் போலி என்னை? அஃது எவ்வாறு தோன்றுகின்றது என்பது யாவர்க்கும் இனிது விளக்குதலின். பாத பீடிகை என்றது. பளிக்கறையினகத்தே மயனால் இயற்றப்பட்ட பீடிகையை. பணிந்தனள்-பணிந்து. பைந்தொடி, என்றது பெண் என்னுந் துணையாய் நின்றது. மதிமுகம்: உவம உருபு கொக்கது. மகளிர் நிற்கத்தகாத இடத்தினும் பொழுதினும் நிற்கின்றீர் என்பாள் ஈங்கு நின்றீர் என்றாள். அதற்கொரு காரணம் இருத்தல் வேண்டும், அது தெரிந்திலது என்பாள் போல வினவியபடியாம். பதியகத்து உறையு மோர் பைந்தொடியாகி வந்தமைக் கிணங்க வினவியவாறு. என்-என்ன இடுக்கண். சுதமதியோடு மணிமேகலையையும் உளப்படுத்திப் பன்மையால் வினவினள்.

மணிமேகலா தெய்வம் அம் மகளிர்க்குக் கூறுதல்

16-26: ஆங்கவள்……….உரைப்ப

(இதன் பொருள்) ஆங்கு அவள் ஆங்கு அவன் கூறியது உரைத்தலும்-அங்ஙனம் வினவியபொழுது அச்சுதமதி நல்லாள் அத் தெய்வத்திற்கு முன்பு அவ்விடத்தே அவ்வரசிளங்குமரன் கூறியதனை எடுத்துக் கூறாநிற்ப; அரசு இளங்குமரன் ஆயிழை தன் மேல் தணியா நோக்கம் தவிர்ந்திலன் ஆகி-அது கேட்ட அம்மணிமேகலா தெய்வம் அம் மகளிரை நோக்கி அன்புடையீர்! அவ்வரசன் மகனாகிய இளமையுடைய உதயகுமரன், நீ கூறியவாறு இம் மணிமேகலையின்பால் தணியாத் காம நோக்கம் தவிராதவனாயிருந்தும் ; அறத்தோர் வனம் என்று அகன்றனன் ஆயினும்-இழுக்கொடு புணரா விழுக்குடிப் பிறப்புடையோன் ஆதலின் இவ் வுவவனம் பகவனதாணையிற் பன்மரம் பூக்கும் இயல்புடையதாய் அச் சமயத் துறவோர்க்கே உரிய தெய்வத் தன்மையுடைய தாகலின் இதனூடே இவளைக் கைப்பற்றுதல் பழியாம் என்பது கருதி இப்பொழுது இவ்விடத்தினின்று நீங்கினன் ஆயினும்; புறத்தோர் வீதியில் பொருந்துதல் ஒழியான்-துறவோரல்லாத ஏனையோர் வாழுகின்ற வீதியினிடத்தே நீயிர் செல்லுங்கால் அவன் இவளைக் கைப்பற்றுதலின்றிப் போகான்காண்!; பெருந்தெருவொழித்துப் பெருவனம் சூழ்ந்த திருந்து எயில் குடபால் சிறுபுழை போகி-ஆதலால் நீயிர் நுமது பள்ளிக்குச் செல்லும் பொழுது நீவிர்வந்த அந்தப் பெரிய தெருவழியே செல்லுதலைக் தவிர்த்துப் பெரிய இந்த உவவவனத்தைச் சூழ்ந்துள்ள அழகிய மதிலிடத்தே மேற்றிசையிலுள்ள சிறியதொரு புழைக்கடைவாயில் வழியே சென்று; மிக்க மாதவர் விரும்பினர் உறையும் சக்கரவாளக் கோட்டம் புக்கால்-மிகுந்த பெரிய தவத்தையுடைய துறவோர் விரும்பித் தங்குஞ் சிறப்புடைய சக்கரவாளக்கோட்டத்துள் புகுந்து விட்டால்; கங்குல் கழியினும்-அதனூடேயே இவ்விரவுப் பொழுது முழுவதும் கழிந்தாலும்; கடுநவை எய்தாது அங்கு நீர்போம் என்று அருந்தெய்வம் உரைப்ப-கடிய துன்பம் ஒன்றும் நுமக்குண்டாக மாட்டாது ஆதலாலே அவ்வழியே சென்று அச் சக்கரவாளக் கோட்டத்திறகே நீவிரிருவீரும் போவீராக என்று காண்டற்கரிய அத் தெய்வம் கட்டுரைப்ப; என்க.

(விளக்கம்)  ஆங்கு இரண்டனுள் முன்னது காலத்தையும் பின்னது இடத்தையும் சுட்டியவாறு. அவள்: சுதமதி. அவன்: உதயகுமரன். தணியாத காமநோக்கம்-பெயரெச்சத்தின் ஈறு கெட்டது. அறத்தோர் என்றது துறவோரை. அவன் உயிர்குடிக் பிறப்பினன் ஆகலின் ஈண்டு இவளைக்கைப்பற்றுதல் பழியென்றுட் கொண்டு அகன்றனன் என்றவாறு பெருந்தெருவில் இவளைக் கைப்பற்றுதல் அவனுக்குப் பழியாகாமையின் அவன் இவள் வரவு பார்த்து அங்குத் தேற்றமாக இருப்பான்; ஐயமில்லை, ஆதலின் அவ்வழியே செல்லற்க என்று தெரிந்தோதிய படியாம். புழைபுழைக்கடைவழி. பெருவனம் என்றது உவவனத்தை. சக்கரவாளக் கோட்டத்தே கடுநவை எய்தாமைக்கு ஏதுக்கூறுவாள், மிக்க மாதவர் விரும்பி யுறையும் சக்கரவாளக் கோட்டம் என்றாள்.

காண்டற்கரிய தெய்வம் இங்ஙனம் எளிவந்துரைப்ப என்பார், அருந்தெய்வம் உரைப்ப என்றார்.

சுதமதி மணிமேகலா தெய்வத்தை வினாதல்

27-36: வஞ்ச…..கூறும்

(இதன் பொருள்) வஞ்ச விஞ்சையான் மாருத வேகனும் அம் செஞ்சாயல் நீயும் அல்லது-அது கேட்ட சுதமதி அத் தெய்வத்தை நோக்கி அன்புடையோய்! வஞ்ச நெஞ்சமுடைய மாருதவேகன் என்னும் விச்சாதரனும் அழகிய செவ்விய மென்மையுடைய நங்கையே நீயும் அல்லது; நெடு நகர் மருங்கின் உள்ளோர் எல்லாம் நெடிய இப் பூம்புகார் நகரத்தில் வாழுகின்ற மாந்தர் எல்லாருமே நின்னாற் கூறப்பட்ட கோட்டத்தை; சுடுகாட்டுக் கோட்டம் என்றலது உரையார்-சுடுகாட்டுக் கோட்டம் என்று குறிப்பிட்டுக் கூறுவதேயன்றிப் பிறிதொரு பெயரானும் கூறுதலிலர்; மிக்கோய் அது சக்கரவாளக் கோட்டம் எனக் கூறிய உரைப் பொருள் அறியேன்-அறிவான் மிக்க நீதானும் அதனைச் சக்கரவாளக் கோட்டம் என்றே கூறிய சொல்லின் பொருளை யான் சிறிதும் தெரிகிலேன்; ஈங்கு சொல்லின் பொருளை யான் சிறிதும் தெரிகிலேன்; ஈங்கு இதன் காரணம் என்னையோ என-இங்கு நீ இவ்வாறு இதற்குப் பெயர் கூறுதற்கியன்ற காரணந் தான் யாதோ? என்று வினவாநிற்ப; ஆங்கு அதன் காரணம் அறியக் கூறுவன்-அது கேட்ட அத் தெய்வம் நல்லாய் நன்றுவினவினை அவ்வாறு அதனைக் கூறுவதற்குரிய காரணம் நீ நன்கு அறிந்து கொள்ளுமாறு விளக்கமாகக் கூறுவேன்; நீ மாதவி மகளோடு வல் இருள் வரினும் கேள்- நீ தானும் இம் மாதவி மகளோடு பொறுமையுடனிருந்து நள்ளிரவு வந்துறினும் கேட்டறிந்து கொள்ளக்கடவை, கேட்பாயாக என்று; நேரிழை கூறும்-முற்பட வலியுறுத்துப் பின்னர் நேரிய அணிகலன்களையுடைய அம் மணிமேகலா தெய்வம் கூறாநிற்கும் என்க.


(விளக்கம்) தன்னைக் கண்ணோட்டஞ் சிறிதுமின்றிக் கைவிட்டுப் போனமையாலே விஞ்சையான் என்னாது வஞ்சவிஞ்சையன் என்றான். நெடுநகர் என்றது- பூம்புகார் நகரத்தை. வஞ்ச விஞ்சையான் கூற்றுப் பொய்யாதலும் கூடும் என்றிருந்தவன் இவளும் அங்ஙனம் கூறுதலின் ஒரு காரணம் உவதாதல் வேண்டும் என்னும் ஊகத்தால் வினவுகின்றாளாகலின் மிக்கோய் கூறிய உரைப்பொருள் என்றாள். வஞ்சவிஞ்சையனே அன்றி மிக்கோயும் கூறுகின்றனை ஆதலின் அது பொருள் உரையே ஆதல் வேண்டும் அஃதறிகிலேன் என்றவாறு.

இனி, அத் தெய்வந்தானும் அஃதறிந்து கொள்ள வேண்டிய தொன்றே ஆதலால் கூறுவன் கேள் என்கின்றது. மணிமேகலையும் உணரற்பாலது அச் செய்தி என்பது தோன்ற மாதவி மகளோடு வல்லிருள் வரினும் கேள் என்றாள். என்னை? அவட்குக் துறவின் செல்லும் ஏது நிகழ்ச்சி எதிர்துண்மையின் அதற்கின்றியமையாத நிலையாமை யுணர்ச்சியைத் தோற்றுவிக்கும் செய்தியாகலின்; வல்லிருள்-என்றது ஆகு பெயராய் இரவு என்னும் துணை. இச் செய்தியைக் கேட்டல் அவட்கு ஆக்கமாம் ஆதலின் என்க. நிலையாமை யுணர்ச்சியைத்  மெய்யுணர்வார்க்கு இன்றியமையாத தென்பதனை:

அவற்றுள் நிலையாமையாவது- தோற்ற முடையன யாவும் நிலையுதலிலவாந்தன்மை. மயங்கிய வழிப் பேய்த்தேரிற் புனல்போலத் தோன்றி, மெய்யுணர்ந்த வழிக் கயிற்றில் அரவுபோலக் கெடுதலிற் பொய்யென்பாரும், நிலைவேறுபட்டு வருதலால் கணந்தோறும் பிறந்திறக்கு மென்பாரும் ஒருவாற்றான் வேறுபடுதலும் ஒருவாற்றான் வேறுபடாமையும் உடைமையின் நிலையாமையும் நிலையுதலும் ஒருங்கேயுடைய வென்பாருமெனப் பொருட்பெற்றி, கூறுவார் பலதிறத்தராவார்; எல்லார்க்கும் அவற்றது நிலையாமையும் உடம்பாடாகலின் ஈண்டு அதனையே கூறுகின்றார். இஃதுணர்ந்துழியல்லது பொருள்களின்மேல் பற்று விடாதாகலின், இது முன் வைக்கப்பட்டது எனவரும் பரிமேலழகர் பொன் மொழிகள் ஈண்டு நினைவிற் கொள்ளற் பாலனவாம்(குறள் அதி-34-முன்னுரை).

(34-இந்நாமப் பேரூர் என்பது முதலாக; 205-இதன் வரவு இது என்னுமளவும் மணிமேகலா தெய்வத்தின் கூற்றாய் ஒரு தொடர்)

சக்கரவாளக்கோட்ட வண்ணனை

36-49: இந்நாம…… இஞ்சி

(இதன் பொருள்) இந்நாமப் பேரூர் தன்னொடு தோன்றிய ஈமப் புறங்காடு ஈங்கு- பகைவர்க்கு அச்சம் விளைவிக்கும் பெரிய தலை நகரமாகிய இந்நகரம் தோன்றிய காலத்தே அதனோடு தோன்றிய முதுமையுடைய ஈமவிறகுகளையுடைய சுடுகாடு இவ்வுவவனத்தின்; அயலாது- பக்கத்திலே உளதாம்; ஊரா நல்தேர் ஓவியப் படுத்துத் தேவர் புகுதரூஉம் செழுங்கொடி வாயிலும்-அது தானும் வலவன ஏவா வானவூர்தியின் ஓவியம் வரையப்பட்டுத் தேவர்கள் மட்டும் உள்ளே புகுதற்கமைந்த வளவிய கொடியுயர்த்தப்பட்ட வாயினும்; நெல்லும் கரும்பும் நீரும் சோலையும் நல்வழி எழுதிய நலம்கிளர் வாயிலும்- நெற்பயிரும் கரும்பும் நீர்நிலைகளும் சோலையும் உடைய நல்ல நெறியும் வரைந்து ஓவியப்படுத்தப்பட்ட அழகுமிகும் வாயிலும்; வெள்ளி வெள்சுதை இழுகிய மாடத்து உள்உருவு எழுதா வெள் இடை வாயிலும்- மிகவும் வெண்மையான சுண்ணச்சாந்து தீற்றிய மாடத்தையும் அதனுள் ஓவியம் ஒன்றும் வரையாமல் வெற்றிடமாக விடப்பட்டிருக்கின்ற வாயிலும்; மடித்த செவ்வாய்க் கடுத்த நோக்கின் தொடுத்த பாசத்துப் பிடித்த சூலத்து-உதடுகளை மடித்துள்ள சிவந்த வாயையும் கடிய வெகுளியையுடைய நோக்கத்தையும் நரகன் ஒருவனைக் கட்டிய கயிற்றையும், அவனை எறிதற்கு ஓக்கிய சூலப்படையையும் உடையதாய்க் கட்டிவிடப்பட்ட; நெடுநிலை மண்ணீடுநின்ற வாயிலும்-நேராக உயர்ந்து நிற்கின்ற நிலையினையுடைய பூதப்படிமம் நிற்கின்ற வாயிலும் ஆகிய; நால்பெருவாயிலும் பால்பட்டு ஓங்கிய காப்பு உடை இஞ்சி- நான்கு பெருவாயில்கள் நான்கு பக்கங்களினும் அமைக்கப்பட்டு நாற்புறமும் சூழ்ந்து உயர்ந்த காவலையுடைய மதிலையும் என்க.

(விளக்கம்) நாமம்-அச்சம். ஊராநற்றேர்-வலவனேவா வானவூர்தி. தேவர் புகுதரூஉம் செழுங்கொடிவாயிலும் என்றது, தேவராதற்குரிய நல்வினை செய்தார் நுண்ணுடம்போடு கூடிய உயிரைத் தங்களுலகிற்கு அழைத்துச் செல்லுதற்கு அச் சக்கரக் கோட்டத்தில் வந்து புகுவாராதலின் அவர்க்கெனவே சிறப்பாக வகுக்கப்பட்டு அச்சிறப்புக்கு அறிகுறியாக வானவர் ஊர்தியாகிய வலவனேவா வானவர் ஊர்தியின் ஓவியம் வரையப்பட்டும் அதற்கேயுரிய கொழுங்கொடி உயர்த்தப்பட்டும் திகழும் வாயிலும் என்றவாறு.

இனி இதனைப் பாட்டிடைவைத்த குறிப்பினாலே ஏனைய மூன்று வாயிலின் சிறப்புகளையும் இப் புலவர் பெருமான் இதனைப் பயில்பவர்களே குறிப்பாக வுணர்ந்து கொள்ளுமாறு புனைந்திருக்கும் பேரழகு நம்மைப் பேரின்பத்திலே திளைப்பிக்கின்றது. அக் குறிப்புப் பொருளை இனி ஈண்டு ஆராய்ந்தெடுத்துக் காட்டுவாம்.

உயிரினங்கள் தத்தம் வினையின் பயனாக மூன்றுலகங்களினும் சென்று பிறக்கும் என்பதும், பற்றற்ற உயிர் பேராவியற்கையாகிய பேரின்ப வாழ்வைப் பெறும் என்பதும், உலகாயத சமயத்தார்க் கல்லது ஏனைய சமயத்தார்க்கும் பெரும்பாலும் ஒப்பமுடிந்த கொள்கையாம். பேராவியற்கை என்னும் இந் நிலையே வீடு எனவும் முத்தி எனவும் கூறுவர் பௌத்தர். இந் நிலையையே நிருவாணம் என்று கூறுவர். ஆகவே இம்மையே நல்வினை செய்த உயிர்கள் தேவர்களால் வரவேற்கப்பட்டு அச் சக்கரவாளக் கோட்டத்தினின்றும் புறப்படும் வாயிலை மட்டும் விளக்கினர். இனி, நல்வினையும் தீவினையும் விரவச் செய்த வுயிர்கள் மீண்டும் இன்பமும் துன்பமும் விரவிய நுகர்ச்சியையுடைய மக்கள் பிறப்பையே எய்தும் ஆகலின் அவ்வுயிர் புறப்படுதற்கும் அவற்றிற்குரிய கடன்கள் செய்தற்குரிய மக்கள் புகுதருதற்கும் உரிய வாயில் என்பதற்குரிய அடையாளங்களாகவே இவ் வுலக வாழ்விற்கின்றியமையாத பொருள்களாகிய நெல்லும் கரும்பும் நீரும் சோலையும் நல்வழி மருங்கே பொறிக்கப்பட்டது ஒரு வாயில் எனவும் இனித் தீவினை செய்தவுயிர்கள் காலதூதர்களாலே பாசத்தால் பிணிக்கப்பட்டு நரகிலிடப்பட்டு வதைக்கப்படும் என்பதற்கறிகுறியாகவும் அவ்வினத்துப் பேயும் பூதமும் புகுதருதற்கும் அத்தீய வுயிர்கள் புறப்படுதற்கும் உரிய வாயிலது என்றறிவுறுத்தற்கு

மடித்த செவ்வாய்க் கடுத்த நோக்கின் தொடுத்த பாசத்துப் பிடித்த சூலத்து
நெடுநிலை மண்ணீடு

ஒருவாயிலின்கண் சிற்பியரால் கட்டி நிறுத்தப்பட்டது எனவும், இனி, மெய்யுணர்வு சிறந்து அவாவறுத்த தூயவுயிர்கள் பேராவியற்கை பெறுதற்கு இவ்வுலகிற்கு ஈண்டு வாராநெறிச் செல்வன புறப்பட்டுப் போதற்கியன்ற வாயில் என்பதற்கு அறிகுறியாகவே ஒரு வாயில்

வெள்ளி வெண்சுதை இழுகிய மாடத்து
உள்ளுரு எழுதா வெள்ளிடை வாயில்

மயனால் அமைக்கப்பட்டது. என்னை? வீடெய்துவோர் உளம் இவ் வுலகப் பொருள்களில் யாதொன்றனிடத்தும் பற்றில்லாமல் முழுத்தூய்மை  பெற்று வறிதிருக்குமாதலின், அவ்வுயிர் போகும் அவ் வாயில் தூய்மைக்கே அறிகுறியாகிய வெள்ளி வெண்சுதை தீற்றி ஓவியப் பொருள் ஏதும் வரையப்படாமல் வெள்ளிடையாக (வெற்றிடமாக) விடப்படல் வேண்டிற்று. இவையெல்லாம் யாம் நுண்ணுணர்வாற் காணுங்கால் அக் காட்சி பேரின்பம் பயத்தலும் உணர்ந்து கொள்க.

இவ்வாறு நான்கு வாயிலும் நால் வேறு வகை பட்டனவாகப் புலவர் பெருமான் ஓதுதற்குக் காரணம் இருத்தல் வேண்டும் என்னும் கருத்தாலே ஆராய்ந்து கூறும் பொரும் இவை.

மண்ணீடு-சுடுமண் கொண்டு செய்து சுதை தீற்றிய படிவம்(உருவம்). இத் தொழில் செய்வோரை மண்ணீட்டாளர் என்று அறிவுறுத்துவர் ஆசிரியர் இளங்கோவடிகளார்(சிலப். 5-30). மண் மாண்புனை பாவை என்பர் வள்ளுவனார். அதற்குப் பரிமேலழகர் சுதையான் மாட்சிமைப்படப் புனைந்த பாவை என்றுரை வகுப்பர்(407-குறள்). வாயிலும் வாயிலும் வாயிலும் ஆகிய நாற் பெருவாயிலும் என இயையும். இஞ்சி-மதில்

இதுவுமது

49-53: கடி….கோட்டமும்

(இதன் பொருள்) கடி வழங்கும் ஆர்இடை-அம் மதிலக வரைப் பினூடே மக்கள் வழங்குதலரிய நிலப்பரப்பிலே; உலையா உள்ளமோடு உயிர்க்கடன் இறுத்தோர் தலைதூங்கு நெடுமரம் தாழ்ந்து புறம் சுற்றி-உறுதியிற்றளராத நெஞ்சத்தோடே நின்று தம் தலைமயிரால் மரக்கிளையில் நன்கு முடியிட்ட பின்னர்த் தாமே தம் கழுத்தை யரிந்து தாம் தமது பராவுக்கடனாகிய உயிரைக் கொடுத்த வீரமறவருடைய தலைகள் தூங்காநின்ற நெடிய மரங்களின் கிளைகள் தாழ்ந்து பக்கமெல்லாம் சூழப்பெற்று;  பீடிகை ஓங்கிய முன்றில் காடு அமர்செவ்வி கழிபெருங் கோட்டமும் சுடுகாட்டை விரும்பியறையும் இறைவியாகிய கொற்றவை எழுந்தருளியிருக்கின்ற மிகவும் பெரிய திருக்கோவிலும் என்க.

(விளக்கம்) உயிர்க்கடன் இறுத்தோர்-தம் தலையைத் தாமே அரிந்து தமதின்னுயிரை இறைவிக்குப் பலியாக வழங்குபவர். இங்ஙனம், உயிர்க் கடன் இறுத்தலை அவிப்பலி என்று தமிழருடைய பொருளியல் நூல் கூறும். அவி-ஆவி. ஆவிப்பலி கொடுக்கும் மறவரே மறத்திற்குத் தலைவரம்பாவார் என்ப. இங்ஙனம் அவிப்பலி கொடுத்தலை.

ஆர்த்துக் களங்கொண்டோர் ஆரம ரழுவத்துச்
சூர்த்துக் கடைசிவந்த சுடுநோக்குக் கருந்தலை
வெற்றி வேந்தன் கொற்றங் கொள்கென
நற்பலி பீடிகை நலங்கொள வைத்தாங்கு
உயிர்ப்பலி யுண்ணும் உருமுக்குரன் முழக்கத்து
மயிர்க்கண் முரசொடு வான்பலி யூட்டி

எனவரும் சிலப்பதிகாரத்தானும்(5:83-8), அங்ஙனம் உயிர்க் கடனிறுக்குங் காலத்தே அம் மறவருடைய உலையா உள்ளத்தினியல்பை,

மோடி முன்றலையை வைப்பரே
முடிகுலைந்த குஞ்சியை முடிப்பரே
ஆடிநின்று குருதிப்புதுத் திலதமும்
அம்மு கத்தினி லமைப்பரே

எனவரும் (சிலப்-5:76-88: அடியார்க்-உரைமேற்கோள்) தாழிசையானும்,

அடிக்கழுத்தின் நெடுஞ்சிரத்தை அரிவராலோ
அரிந்தசிரம் அணங்கின்கைக் கொடுப்பராலோ
கொடுத்தசிரம் கொற்றவையைப் பரவுமாலோ
குறையுடலம் கும்பிட்டு நிற்குமாலோ

எனவரும் கலிங்கத்துப் பரணியானும்(கோயில்-15) அறிக.

இனி உயிர்கடனிறுப்போர் சிலர் தமது சிகையை மரக்கிளையில் முடிந்துவிட்டுப் பின் கழுத்தை அரிதலால் தலைதூங்கு நெடுமரம் என்றார், இதனை

வீங்குதலை நெடுங்கழையின் மிசைதோறும்
திசைதோறும் விழித்து நின்று
தூங்குதலை சிரிப்பனகண் டுறங்குதலை
மறந்திருக்குஞ் சுழல்கட் சூர்ப்பேய்

என்பதனாலறிக.(கலிங்க- கோயில்-21)

பெரும்பலி என்றார் அவிப்பலி யாதலின். பீடிகை- பலிபீடம். காடமர் செல்வி-கொற்றவை.

இதுவுமது

54-65: அருந்தவர்……பரந்து

(இதன் பொருள்) அருந் தவத்தார்க்கு ஆயினும் அரசற்கு ஆயினும் ஒருங்கு உடன்மாய்ந்த பெண்டிர்க்காயினும்-அரிய தவவொழுக்கந் தாங்கிய துறவோர்க் காதல், அரசருக்கு ஆதல் தங்கணவர் மாய்ந்தக்கால் அவரோடு ஒருங்கே தம்முயிரையும் மாய்த்துக் கொண்ட கற்புடைய மகளிர்க்காதல்; நால்வேறு வருணப் பால் வேறுகாட்டி-அந்தணரும் அரசரும் வணிகரும் வேளாளரும் ஆகிய பகுதிகளையுடைய மாந்தர்களுக்கு அப் பகுதிகளுக்குரிய மரபுகளையும் வேறு வேறு தெரியும்படி அவற்றிற்குரிய அடையாளங்களோடு காட்டி; இறந்தோர் மருங்கில் சிறந்தோர் செய்த-இறந்துபட்டவர் திறத்திலே அவரவர்க்குச் சிறந்த கேளிராயோர் எடுத்த; குறியவும் நெடியவும் குன்று கண்டன்ன சுடுமண் ஓங்கிய நெடுநிலைக் கோட்டமும்-குறியனவாகவும் நெடியனவாகவும் அமைந்த மலைக்கூட்டத்தைக் கண்டாற் போன்ற காட்சியையுடைய செங்கலாலியற்றப்பட்ட உயர்ந்த நிலையினையுடைய கோயில்களும்; அருந் திறல் கடவுள் திருந்து பலிக்கந்தமும்-தடுத்தற்கரிய பேராற்றல் பொருந்திய கடவுளர்க்குத் திருத்தமுடைய பலிகளையிடுதற்பொருட் டமைக்கப்பட்ட பல வேறுவகையான தூண்களும்; நிறைக் கல் தெற்றியும்-வீரமறவர்க்கு நிறுத்தப்பட்ட கல்களையுடைய மேடைகளும்; மிறைக்களச் சந்தியும்-குற்றம்புரியும் கொடியாரைக் கொலை செய்தொறுத்தற்கியன்ற கொலைக்களமாகிய சந்தியும்; தண்டும் மண்டையும் பிடித்துக் காவலர் உண்டுகண் படுக்கும் உறையுள் குடிகையும்-தடியும் மட்கலமும் கையிற்கொண்டு அச் சக்கரவாளக் கோட்டத்தைக் காவல் செய்கின்ற காவலர்கள் உணவுண்டு உறங்குதற்கியன்ற இடமாகிய குடில்களும்; தூமக்கொடியும்-எரிகின்ற ஈமத்தினின்று தோரணங்களும்-ஈமத்தில் எரிகின்ற தீப்பிழம்புகளாகிய தோரணங்களும்; ஈமப்பந்தரும் யாங்கணும் பரந்து-ஈமநெருப்பு மழையாலவியாமைப் பொருட்டு இடப்பட்டுள்ள சாரப்பந்தர்களும் ஆகிய இவையெல்லாம் எங்கும் பரந்து காணப்பட்டு; என்க.

(விளக்கம்) அருந்தவர்க்கும் அரசர்க்கும் கற்புடை மகளிர்க்கும் இடுகாட்டில் கோவில் எடுக்கும் வழக்கம் உண்மை அறிக. அந்தணர் முதலிய வருணம் நாள்கிற்கும் வேறு வேறு அடையாளம் உண்மையின் கோயில்களினும் அவ்வடையாளமிட்டு இவர் இனையர் இன்ன வகுப்பினர் என யாவரும் அறியும்படி காட்டி என்பது கருத்து. சிறந்தோர்-இறுதிக்கடன் செய்தற்குச் சிறப்புரிமையுடையோர் எனினுமாம்.

பொருளுடைமைக்கும் இறந்தோர் தகுதிக்கும் ஏற்பக குறியவும் நெடிவுமாக எடுக்கப்பட்டவை என்க.

சுடுமண்- செங்கல். கந்தம்-தூண். நிறைக்கல்-வீரமறவர்க்கு நினைவுச்சின்னமாக நிறுத்தப்பட்ட கல். இறுத்தல்-இறை என்றானாற் போன்று, நிறுத்தல்- நிறை என்றாயிற்று. தெற்றி-மேடை. மிறை-குற்றம். களம் என்றமையால் இது கொலையால் கொடியாரை வேந்தொறுக்கும் கொலைக்களம் என்பது பெற்றாம். இக் களம் பல கோத் தொழிலாளரும் கூறுமிடகலின் சந்தி எனப்பட்டது. இதற்குப் பிற ரெல்லாம் சிறப்பில்லாவுரை கூறிப்போந்தார்.

உறையுளாகிய குடிகை, குடில் என்பன தூய தமிழ்ச் சொற்களே. கடி-வீடு. கை, இல் என்னும் சிறுமைப் பொருட்பின்னொட்டு சேர்ந்து குடிகை, குடில் என ஆயிற்று. கொடி-ஒழுங்கு, கொடி என்றதற்கிணங்க நூலாசிரியர் தோரணமும் பந்தரும் என்ற நயமுணர்க.

சக்கரவாளக் கோட்டத்தெழும் ஓசைவகைகள்

66:79: சுடுவோர்….. நின்றறாது

(இதன் பொருள்) சுடுவோர் இடுவோர் தொடுகுழிப்படுப்போர் தாழ்வயின் அடைப்போர் தாழியின் கவிப்போர்-அச் சக்கரவாளக்கோட்டத்து மக்கட்பிணத்தை ஈமத்தேற்றிச் சுடுபவரும் அவற்றைக் கொணர்ந்து ஒருபுறத்தே வாளாது போகடுவோரும் தோண்டப்பட்ட குழியிலிட்டுப் புதைப்பவரும் தாழ்ந்த பள்ளங்களிலே அடைத்து வைப்பவரும் மண்ணாற்செய்த தாழீயிலிட்டுக் கவிழ்ப்பவருமாய்; இரவும் பகலும் இளிவுடன் தரியாது வருவோர் பெயர்வோர் மாறாச்சும்மையும்-இரவும் பகலுமாகிய இருபொழுதினும் வாலாமையுடன் இருத்தல் பொறாமல் வருபவரும் கடன்முடித்துப் போவாரும் எழுப்புகின்ற இடையறாத ஆரவாரமும்; எஞ்சியோர் மருங்கின் ஈமம் சாற்றி-இறவாதிருந்தோர்க்கெல்லாம் நுங்கட்கும் இவ்வாறு செய்யும் ஈமச்சடங்குண்டு என்பதனை அறிவுறுத்துக் கேட்டோர்; நெஞ்சு நடுக்குறூஉம் நெய்தல் ஓசையும்-நெஞ்சத்தை அச்சத்தால் நடுங்கப்பண்ணுகின்ற நெய்தற்பறை முழக்கமும்; துறவோர் இறந்த தொழுவிளிப் பூசலும்-துறவுபூண்டவர் இறந்தமையாலே ஏனையோர் அவரைத் தொழுது வாழ்த்தும் வாழ்த்தொலியும்; பிறவோர் இறந்த அழுவிளிப் பூசலும்-துறவாத மாந்தர் இறந்தமையால் அவர் சுற்றத்தார் அழுதலாலே எழுகின்ற அழுகை ஒலியும்; நீள்முக நரியின் தீவிளிக்கூவும்- நீண்ட முகத்தையுடைய நரிகள் ஊளையிடுகின்ற கேள்விக்கின்னாததாகிய கூக்குரலும்; சாவோர்ப் பயிரும் கூகையின் குரலும்- சாகக்கிடக்கின்றவரை விரைந்து சாகும்படி கூப்பிடுகின்ற கூகையின் குழறல் ஒலியும்; புலஊண்பொருந்திய குராலின் குரலும்-ஊன் உண்ணுதலிலே பொருந்திய கோடான் குரல்களும்; ஊண்தலை துற்றிய ஆண்டலைக் குரலும்-உணவாக மாந்தர் தலைமூளையை உண்ட ஆண்டலைப்புள் மகிழ்ந்தெடுத்த குரலோசையும்; இன்னா இசையொலி ஆகிய இன்னாமதருகின்ற இசைகளின் கூட்டமாகிய பேரொலியானது; நல்நீர் புணரி நளிகடல் ஓதையின்-நல்ல நீரையுடைய ஆறுகள் புக்குப் புணர்தலையுடைய செறிந்த கடலினது முழக்கம் போன்று; என்றும் நின்று அறாது-எப்பொழுதும் நிலைபெற்று நிற்ப தல்லது ஒருபொழுதும் ஒழியமாட்டாது என்றாள் என்க.

(விளக்கம்) பிணங்களைச் சுடுவோரும் இடுவோரும் குழிப்படுப்போரும் அடைப்போரும் கவிப்போருமாய்ப் பல்வேறுவகையாக இறுதிக் கடன்கள் செய்ய, இரவும் பகலுமாகிய இருபொழுதும் வருவோரும் செல்வோரும் செய்யும் ஆரவாரமும் நெய்தற்பறை முழக்கம் ஓசையும் தொழும் பூசலும் அழும் பூசலும் நரி கூகை குரால் ஆண்டலைப்புள்ளும் ஆகிய இவை செய்யும் ஆரவாரமும் ஆகிய எல்லாம் இன்னா இசையாய் ஒன்றாகிக் கடலோதை போல் எப்பொழுதும் ஒலிக்க.

இடுவோர்-வாளாது போகட்டுச் செல்வோர். மக்கட் பிணமும் நரிமுதலிய பிறவுயிர்கட்கு உணவாதலின் அவற்றைச் சுடுதல் முதலியன செய்யாமற் போகட்டுப் போவதும் சிறந்த அறமாம் என்று கருதும் கோட்பாடுடையோரும் அக்காலத்திருந்தனர் என்பது இதனால் அறியப்படும். தாழ்வயின் அடைத்தலாவது பள்ளத்திலிட்டுப் பிணத்தைப் பல விடங்கட்கும் இழுத்தேகாமல் அவ்விடத்திலேயே தின்றுவிடும்படி வழியை அடைத்து விடுதலாம். தாழி- மட்பாண்டம். இதனை முதுமக் கட்டாழி என்ப. கீழே ஒரு தாழியிலிட்டு மற்றொரு தாழியாற் கவிப்பது என்க. இளிவு-வாலாமை  தரியாது என்றது-காலந்தாழ்த்தாமல் என்றவாறு. சும்மை-ஆரவாரம். எஞ்சியோர் மருங்கின் ஈமஞ்சாற்றுதலாவது சாப்பறை முழக்கம். சாவுண்டென்பதனை மறந்துவாழ்வோர்க்கு நுமக்கும் சாவுண்டென்பதனை அறிவுறுத்தல். இதனை

மணங்கொண்டீண் டுண்டுண்டுண் டென்னும் உணர்வினாற் சாற்றுமே டொண்டொண்டொண்ணென்னும் பறை எனவரும் நாலடியானும்(25) உணர்க.

கூகை குழறுதலை இறக்கும் காலம் அணித்தாக வந்துற்றோரை அறிந்துவிரைவில் இறந்து பட்டு ஈமப்புறங்காட்டிற்கு வருமாறு அழைப்பதாகக் கருதுமொரு கோட்பாடு பற்றிச் சாவோர்ப் பயிரும் கூகையின் குரலும் என்றார். இல்லத்திற் கணுக்கமாகக் கூகையிருந்து குழறினால் இற்றை நாளும் அஞ்சி அதனை ஓட்டுவாரும், அணுமையில் யாரேனும் ஈண்டுச் சாவார் உளர் என்பாரும் உளர். தலையூண்துற்றிய ஆண்டலை என மாறுக. ஈண்டு ஊண் என்றது மூளையாகிய உணவை. துற்றுதல்- தின்னல். நன்னீராகிய யாறுகள் சென்று புணர்தலையுடைய நளிகடல் என்க. ஓதை-முழக்கம்.

சக்கரவாளக் கோட்டத்துள்ள மரங்களும் மன்றமும்

(இதன் பொருள்) தான்றியும் ஒடுவையும் உழிஞ்சிலும் ஓங்கி கான்றையும் சூரையும் கள்ளியும் அடர்ந்து-தான்றியும் ஒடுவையும் உழிஞ்சிலும் ஆகிய மரங்கள் வளரப் பெற்றுக் கான்றையும் சூரையும் கள்ளியுமாகிய செடிகள் செறியப்பெற்று; காய் பசிக் கடும் பேய் கணம் கொண்டு ஈண்டும் மாமலர் பெருஞ்சினை வாகை மன்றமும்-உடம்பு வற்றுதற்குக் காரணமான பதியையுடைய கடிய பேய் கூட்டமாகக் கூடியிருக்கின்ற முகில் தவழ்கின்ற பெரிய கிளைகளோடு கூடிய வாகை மரம் நிற்றலாலே வாகை மன்றம் என்று கூறப்படுகின்ற மன்றமும்; புள்வெள்நிணம் தடியோடு மாந்தி மகிழ் சிறந்து இறைகூறும் வெள்ளில்மன்றமும்- பல்வேறு பறவைகளும் மக்கள் யாக்கையின் வெள்ளிய நிணத்தையும் தசையையும் நிரம்பத் தின்றமையாலே மகிழ்ச்சி மிகப்பெற்று நெடும்பொழுது தங்குதற்கிடமான விளாமரம் நிற்றலாலே வெள்ளில்மன்றம் எனப்படும் மன்றமும்; சுடலை நோன்பிகள் ஒடியா உள்ளமொடு மடை தீ உறுக்கும் வன்னி மன்றமும்-சுடலையிலேயே சாந்துணையுமிருந்து இறந்துபடுவது என்னும் நோன்பினை மேற்கொண்டு அந்நோன்பினை தளராத உள்ளத்தோடிருந்து தாம் பெற்ற வாய்க்கரிசியாலே சோறு சமைத்தற்கு மண்டையிலிட்டுத் தீயின் மேல் ஏற்றும் இடமாகிய வன்னிமறம் நிற்கும் மன்றமும்; விரத மாக்கையர் உடைதலை தொகுத்து ஆங்கு இருந்தொடர்பபடுக்கும் இரத்தி மன்றமும்-விரதங்காக்கும் யாக்கையினையுடையோர் உடைத்த தலைகளைத் தொகுத்துப் பெரிய மாலையாகத் தொடுக்குமிடமாகிய இலந்தை மரம் நிற்கும் மன்றமும்; பிணம்தின் மாக்கள் நிணம்படு குழிசியில் விருந்தாட்டு அயரும் வெள்ளிடை மன்றமும்-பிணத்தைத் தின்று வாழும் இயல்புடைய மாக்கள் கொண்டாடும் வெற்றிடமாகிய மன்றமும் ஆகிய இவ்விடங்களிலெல்லாம் என்க.

(விளக்கம்) தான்றி முதலிய மூன்றும் மரங்கள் என்றும், கான்றை முதலிய மூன்றும் செடிகள் என்றும் கொள்வாருமுளர். காய்பசி: வினைத்தொகை எனினுமாம். காய்தற்குக் காரணமான பசியுமாம்; காய்தல்-வற்றுதல்; நெடும்பசியால் அறவுலர்ந்து நெற்றாய் அற்றேம் என்பது பேய் முறைப்பாடு (கலிங்கத்து) பேய்ப் பிறப்பிற் பெரும் பசியே எஞ்ஞான்றும் அலைக்கும் என்னும் கோட்பாடு பற்றி; காய்பசிக் கடும்பேய் என்று விதந்தார். மால்-முகில். மால்-என்பதற்கு மயக்கம் எனவே பொருள் கொண்டு மயக்கமே உருக்கொண்டு எஞ்ஞான்றும் அமர்பந்திருத்தற்கிடமான பெருஞ்சினை எனலுமாம். பேய்கள் இருந்து மயக்குறுத்துதல் பற்றி அங்ஙனம் கூறினர். என்க.

மன்றம்-உயிரினங் கூடும் இடம். பெரும்பாலும் மன்றங்களில் யாதானும் மரம் நிற்பதுண்டு. ஈண்டு வாகை மரம் நிற்கும் மன்றம் வாகை மன்றம் எனவும், வெள்ளில் நின்ற மன்றம் வெள்ளில் மன்றம் எனவும், வன்னி மரம் நின்ற மன்றம் வன்னி மன்றம் எனவும், இரத்தி மரம் நின்ற மன்றம் இரத்தி மன்றம் எனவும் கூறப்படுகின்றன. மரமொன்றும் நில்லாத மன்றத்தை வெள்ளிடை மன்றம் என்றனர். சிலப்பதிகாரத்தினும் நகரத்துள்ளே அமைந்த மன்றம் பல கூறப்பட்டன, அவற்றுள்ளும்

உள்ளுநர்ப பனிக்கும் வெள்ளிடை மன்றம்

என ஒரு மன்றம் கூறப்படுதலறிக(5-17)

இனி, ஈமப்புறங்காட்டிலிருந்து நோன்பு செய்வாரும் உளர் என்பதனை, நீலகேசியில்,

இறைவி கோட்டத்து ளீரிரு திங்கள தகவை
உறையு ளாகவவ் வுறையருங் கேட்டகத் துறைவான்
பொறையும் ஆற்றலும் பூமியு மேருவு மனையான்
சிறைசெய் சிந்தைய னந்தமில் பொருள்களைத் தெரிந்தான்

ஆகிய முனிச்சந்திர பட்டாரகன் எனும் பெயர் முனிவன் பலாலயம் என்னும் சுடுக்காட்டினூடிருந்தே நோன்பு செய்தான் எனக் கூறப் பட்டிருத்தலாலுணர்க. இத்தகையோரும் சுடலை நோன்பிகள் ஆகுவர். இனி இவரைக் காபாலிக சமயத்துறவோர் என்பாரும் உளர்(நீலகேசி-33).

சுடலை நோன்பிகள் தம் வயிற்றுத் தீத்தணித்தற்கு அங்குக் கிடைக்கும் வாய்க்கரிசியை மண்ணுலியன்ற மண்டையில் உலை நீர் பெய்து சோறு சமைத்தற்கு அம் மண்டையை ஈமத்தீயில் வைப்பர் என்று கொள்க. அவருறையுமிடம் வன்னி மன்றம் என்று கொள்க. விரத யாக்கையர் என்றது மாவிரத சமயத் துறவோரை. இவர் மாந்தர் தலை யோட்டினை மாலையாகக் கோத்து அணிவாராதலின் உடைதலை தொகுத்து இரத்தி மன்றத்தே தொடர்ப்படுத்துவர் என்க. மாவிரதமாவது… சாத்திரத்திற் கூறும் முறையே தீக்கை பெற்று எலும்பு மாலை யணிதல முதலிய சரியைகளின் வழுவாதொழுகினவர் முத்தராவார் என்பது மாதவச் சிவஞான யோகியாரின் மணிமொழி.(சிவஞானபாடியம். அவையடக்கம்) பிணந்தின் மாக்கள் நிணம்படு குழிசியில் விருந்தாட்டயரும் வெள்ளிடை மன்றமும் என் புழிக் கூறப்படும் மாக்களும் ஒரு வகைச் சமயத் துறவோர் என்று கோடலுமாம். என்னை? காபால சமயத்துறவோர் நாடோறும் மனிதர் தலையோட்டில் ஐயமேற்றுண்பவர் எனச் சிவஞான முனிவர் கூறுதலானும் (சிவ-அவையடக்) மெய்ஞ்ஞான விளக்கத்தில் இவரைக் காளாமுக மதத்தினர் என்று கூறி இவர் கபால பாத்திர போசனம் சவ பஸ்மதாரணம் சவமாம் சபத்துவம் தண்டதாரணம்: சுராகும்பத் தாபன பூசை முதலியன உடையவர்(மெய்ஞ். மதவிளக்) எனக் கூறப் படுதலால், இவரையே ஈண்டு வெள்ளிடை மன்றத்து நிணம்படு குழிசியில் விருந்தாட்டயரும் பிணந்தின் மாக்கள் என்று சாத்தனார் குறிப்பிடுகின்றனர் எனல் மிகையன்று.

அவ்வீம்ப்புறங்காட்டிற் காணப்படும் பொருள்கள்

92-96: அழற்பெய்…… பறந்தலை

(இதன் பொருள்) அழல் பெய் குழிசியும் புழல் பெய் மண்டையும் புழல் என்னும் தின்பண்டத்தைப் பெய்து கொணரும் மட்பாண்டமும்;
வெள்ளில் பாடையும்- வெள்ளிலாகிய பாடையும்; உள்ளீட்டு அறுவையும்- பிணத்தை அகத்தே இட்டு மூடிக்கொணர்ந்த கோடிச் சீலையும்; பரிந்த மாலையும்- பாடை பிணம் இவற்றிற் கணியப்பட்டு அறுத்தெறியப்பட்ட மலர் மாலைகளும்; உடைந்த கும்பமும்-உடைக்கப்பட்ட குடங்களின் ஓடுகளும்; நெல்லும் பொரியும் சில் பலி அரிசியும்-சிதறிய நெல்லும் பொரிகளும் ஆவிக்குப் பலிப் பொருளாகப் பிணத்தின் வாயிலிடும் சில அரிசிகளும்; யாங்கணும் பரந்த ஓங்கு இரும் பறந்தலை-எவ்விடத்தும் பரந்து கிடக்கின்ற உயர்ந்த பெரிய அப் பாழிடமாகிய சுடு காடுதானும்; என்க.

(விளக்கம்) அழல்- பிணஞ்சுடக் கொணரும் நெருப்பு. குழிசி- பானை. வெள்ளில்-பாடை; வெள்ளிலாகிய பாடை என்க. பிணமாகிய உள்ளீட்டை உடைய அறுவை என்க. பாடையின் உள்ளே விரித்த அறுவையுமாம். அறுவை-துகில். நெல்சிந்தும் வழக்கமும் பலி அரிசியிடுதலும் இக்காலத்தும் உண்டு. ஆவிக்குப் பலியாகப் பிணத்திலிடும் அரிசையைச் சில்பலியரிசி என்றார். என்னை? ஒரு பிடியளவாகச் சிலரே இடுதலின் சிலவாகிய பலியரிசி என்றார். இக்காலத்தே வாய்க்கரிசி என்பது மது.

இனி ஈண்டுக் கூறப்படும் இவ் வருணனைகளோடு

ஆங்கமாநக ரணைந்தது பலாலைய மென்னும்
பேங்கொள் பேரதவ் வூரது பிணம்படு பெருங்காடு
ஏங்கு கம்பலை யிரவினும் பகலினு மிகலி
யோங்கு நீர்வையத் தோசையிற் போயதொன் றுளதே

எனவும்,

விண்டு நீண்டன வேய்களும் வாகையும் விரவி
இண்டு மீங்கையு மிருள்பட மிடைந்தவற் றிடையே
குண்டு கண்ணின பேய்களும் கூகையும் குழறிக்
கண்ட மாந்தர்தம் மனங்களைக் கலமலக் குறுக்கும்

எனவும்

ஈமத் தூமமு மெரியினு மிருளொடு விளக்கா
வூமைக் கூகையு மோரியு முறழுறழ் கதிக்கும்
யாமத் தீண்டிவந் தாண்டலை மாண்பில வழைக்கும்
தீமைக் கேயிட னாயதோர் செம்மலை யுடைத்தே

எனவும்,

வெள்ளின் மாலையும் விரிந்தவெண் டலைகளுங் கரிந்த
கொள்ளி மாலையுங் கொடிபடு கூறையு மகலும்
பள்ளி மாறிய பாடையு மெல்லும்புமே பரந்து
கள்ளி யாரிடைக் கலந்ததோர் தோற்றமுங் கடிதே

எனவும்,

காக்கை யார்ப்பன கழுதுதங் கிளையொடு கதறித்
தூக்க ளீர்ப்பன தொடர்ந்தபல் பிணங்களுந் தூங்கச்
சேக்கை கொள்வன செஞ்செவி யெருவையு மருவி
யாக்கை கொண்டவர்க் கணைதலுக் கரிதது பெரிதும்

எனவும்,

கோளி யாலமும் கோழரை மரங்களுங் குழுமித்
தூளி யார்த்தெழு சுடலையும் உடலமுந் துவன்றி
மீளி யாக்கைய தாக்கியுண் பேய்க்கண மிகைசூழ்
கூளி தாய்க்கென வாக்கிய கோட்டமொன் றுளதே

எனவும் வரும், நீலகேசிச் செய்யுள்கள் ஒப்பு நோக்கற்பாலன. (தருமவுரை: 27,28,29,30,31,32.)

மணிமேகலா தெய்வம் மக்களின் அறியாமைக் கிரங்குதல்

97-104: தவத்துறை……. உண்டோ

(இதன் பொருள்) (நங்கையீர்! ஈதொன்று கேண்மின்!;) தவத்துறை மாக்கள் மிகப் பெருஞ்செல்வர் ஈற்றிளம் பெண்டிர் ஆற்றாப் பாலகர் முதியோர் என்னான் இளையோர் என்னான்-இவர் உயர்ந்த தவநெறியிலே ஒழுகுகின்ற பெரியோர் இவர் மிகப் பெரிய செல்வமுடையோர் இவர் அணிமைக் காலத்தே மகவீன்ற இளம் பருவமுடைய மகளிர், இவர் துன்பம் பொறுக்கமாட்டாத இளங்குழவிகள், இவர் ஆண்டான் முதிர்ந்த சான்றோர், இவர் ஆண்டிளைய காளையர் என்று சிறிதும் எண்ணிப் பார்த்து இரங்காதவனாய்; கொடுந் தொழிலாளன் கொன்றனன் குவிப்ப-கொடிய கொலை செய்யுந் தொழிலையே மேற் கொண்டிருக்கின்ற கூற்றுவன் நாள்தோறும் மன்னுயிர்களைக் கொன்று குவியாநிற்ப; இவ்வழல்வாய்ச் சுடலை தின்னக் கண்டும்- இந்த நெருப்பையே வாயாகக் கொண்ட ஈமப்புறங்காடு கொன்று போகட்ட உடல்களைத் தின்று தீர்ப்பதனைக் கண்கூடாகக் கண்டு வைத்தும்; கழிபெருஞ் செல்வக் கள்ளாட்டயர்ந்து- மிகப் பெரிய செல்வமாகிய கள்ளை யுண்டு களித்து விளையாடி; மிக்க நல் அறம் விரும்பாது வாழும்- மிகச் சிறந்த நல்ல அறங்களைச் செய்தற்கு விரும்பாமல் உயிர் வாழுகின்ற; மக்களில் சிறந்த மடவோர் உண்டோ- மாந்தரினுங் காட்டில் பெரிய மடமையுடையோர் பிறர் உளரோ? கூறுமின்! என்றாள் என்க.

(விளக்கம்) துறவின்கட்புகுதற் கியன்ற ஏது நிகழ்ச்சி எதிர்ந்துள்ள மணிமேகலைக்கும் அந்நெறிக்கட் பயிலும் சுதமதிக்கும் ஒரு சேர யாக்கை நிலையாமை செல்வம் நிலையாமை இளமை நிலையாமை என்னும் மூவகை நிலையாமைகளும் உள்ளத்தின்கண் நன்கு பதியுமாறு முதன் முதலாக மணிமேகலா தெய்வம் சக்கரவாளக் கோட்ட வரலாறு கூறுதலைத் தலைக்கீடாகக் கொண்டு கேட்போர்க்கு அவ் வுணர்ச்சி தலைதூக்குமாறு தனது தெய்வ மொழியாலே செவியறிவுறுத்துகின்றது என்பதனை இதனைப் பயில்வோர் நன்குணர்ந்து கொள்ளுதல் வேண்டும்.

ஈண்டு யாக்கை நிலையாமை, செல்வம் நிலையாமை, இளமை நிலையாமை ஆகிய மூன்று நிலையாமை போதரத் துறவோர் இறந்து படுதலையும் மிகப் பெருஞ்செல்வர் இறந்து படுதலையும் இளம் பெண்டிர் இறந்துபடுதலையும் பாலகர் இறந்துபடுதலையும் நிரல்பட வோதுதல் உணர்க. ஈங்குக் கூறப்படுவோருள் துறவோரிறந்து பாடுறுதல், தவத்தாலும் யாக்கையை அழியாதபடி செய்தல் சாலாது என்பதுணர்த்தற் பொருட்டாம். இனிச் செல்வ நிலையாமையும் இரு வகைப்படும். அவையாவன செல்வத்தை யீட்டிய செல்வர் இறத்தலும் அவருளராகச் செல்வமே அவரைக் கைவிட்டழிந்து போதலுமாம். சிறப்பு நோக்கிச் செல்வம் நிற்கச் செல்வரே இறந்துபடுதல் கூறியவாறு. இளமை நிலையாமை தோன்ற இளம் பெண்டிர் எனப்பட்டது. இன்பம் நுகர்தற்கியன்ற பருவம் வந்துறு முன்னரும் யாக்கை அழிதலுண்மையின் ஆற்றாப் பாலகர் அழிவையும் உடன் கூறிற்று. ஈற்றிளம் பெண்டிர் என்றமையால் பீட்பிதுக்கியும் கூற்றம் கொல்லுதலும் போந்தமை யுணர்க. மெய்யுணர்வார்க்கு நிலையாமையுணர்ச்சி இன்றியமையாமையை முன்னும் கூறினாம்.

கொடுந் தொழிலாளன்- கூற்றுவன். கொன்றனன்- கொன்று. அழலாகிய வாய். சுடலை-சுடுகாடு. கண்டும் என்றது காட்சியளவையால் கண்கூடாகத் தாமே ஐயந்திரிபறக் கண்டு வைத்தும் என்பதுபட நின்றது.

செல்வம் செருக்கைத் தோற்றுவித்தலின் கள்ளாகக் குறிப்புவமம் செய்யப்பட்டது. அறம் ஒன்றே செல்வத்துப் பயனாகவும் பிறந்தோர்க்கு ஆக்கமாகவும், பொன்றுங்காற் பொன்றாத் துணையாகவும் மீண்டும் பிறப்புற்று வாழ்நாள் வழியிடைக்கும் கல்லாகவும் அமையும் மாபெருஞ் சிறப்புடையது என்பது தோன்ற மிக்க நல்லறம் என்றும் அத்தகைய பேற்றினை அறியத்தகும் பிறப்பு மக்கட் பிறப்பே என்பது தோன்றவும் மக்களிற் சிறந்த மடவோர் உண்டோ? என்றும் ஓதியவாறாம். ஓகாரம் வினா. அதன் எதிர்மறையாகிய இல்லை என்னும் பொருளை வற்புறுத்தி நின்றது.

இனி, மணிமேகலை நெஞ்சம் காமத்தால் நெகிழ்ந்து புதுவோன் பின்றைப் போயதனை அங்ஙனம் போகாமைப் பொருட்டுத் தானிற்கின்ற துறவறத்தை உறுதியாகக் கடைப்பிடித்திடுக என்று ஈண்டு வற்புறுத்துவதே அத் தெய்வத்தின் கருத்தாகலின் ஈண்டு அறம் என்பது துறவின் மேனின்றது அது தோன்றவே அறம் என வாளாது கூறாமல் மிக்க அறம் என்று அத்தெய்வம் விதந்து கூறிற்று.

யாக்கையின் இழிதகைமை

105-115: ஆங்கது….ஓதையும்

(இதன் பொருள்) ஆங்கு அது தன்னை-அவ்வாறிருக்கின்ற அச் சக்கரவாளக் கோட்டத்தை; ஓர் அருங்கடி நகர் என-ஓர் அரிய காவலமைந்த நகரம் என்று கருதி அதனூடே புகுந்து; தனிவழிச் சென்றோன் சார்ங்கலன் என்போன்-இரவிலே தமியனாய்ச் சென்றவனாகிய சார்ங்கலன் என்னும் ஒரு பார்ப்பனச் சிறுவன் அவ்விடத்தே; யாக்கை என்புந் தடியும் உதிரமும் என்று அன்பு உறும் மாக்கட்கு அறியச் சாற்றி- மாக்களே உடம்பென்று நும்மால் பேணப்படும் பொருள் வறிய எழும்பும் தசையும் குருதியுமாகிய அருவருக்கத் தகுந்த இவ்விழிதகைப் பொருள்களின் கூட்டமேயன்றிப் பிறிதொரு பெருந்தகைமையும் உடையதன்று காண்! என்று அதன்பால் பெரிதும் அன்பு கொள்ளுகின்ற அறிவிலிகளுக்குத் தன்னையே சான்றாக்கி நன்கு அறிவுறும்படி; வழுவொடு கிடந்த புழுவூண் பிண்டத்து- நிணத்தோடு கிடந்த புழுக்கள் நெளிகின்ற அழுகிய ஊனோடு கூடிய பிணத்தினது; அலத்தகம் ஊட்டிய அடி நரி வாய்க்கொண்டு உலப்பில் இன்பமொடு உளைக்கும் ஓதையும்- பண்டு செம்பஞ்சுக் குழம்பூட்டி அழகு செய்யப்பட்டிருந்த அடிகளை நரிகள் தம் வாயாற் கொண்டு அழியாத இன்பதோடு ஊளையிடாநின்ற ஒலியையும்; கழுகு கலைப்புற அல்குல் குடைந்து உண்டு நிலத்திலை நெடுவிளி எடுக்கும் ஓதையும்- கழுகு மேகலையென்னும் அணிகலனாலே பண்டு புறத்தே அழகு செய்யப்பட்ட அல்குலை அலகினாலே குடைந்து குடைந்து வயிறு நிரம்பத் தின்றமையாலே பெரிதும் மகிழ்ந்து நிலத்தின்மேனின்று நீளிதாகக் கூவுகின்ற ஒலியும்; கடகம் செறிந்த கையைத் தீ நாய் உடையக் கல்வி ஒடுங்கா ஓதையும்- பண்டு கங்கணம் செறிந்து கிடந்த கையைச் சுடுகாட்டு நாய் என்புமுறிய வாயாற் கவ்வித் தின்று ஒழியாமல் குரைக்கின்ற ஒலியும்; என்க.

(விளக்கம்) ஈண்டுக் கூறப்படும் பிணம் பெண்பிணம் என்பது கூறாமலே விளங்கும். கேட்போர் மகளிராதலின் தம்முடம்பிலேயே அருவருப்புத் தோன்றுதற் பொருட்டு அத் தெய்வம் பெண்ணுடம்பையே விதந்தெடுத்துக் கூறியபடியாம். பின்னும் இவ் விளக்கம் கொள்க.

தடி- தசை. வழு-உடம்பிலுள்ள நிணம். அலத்தகம்- செம்பஞ்சுக் குழம்பு. உளைக்கும்- ஊளையிடும். நிலைத்தலை என்ற பாடத்திற்கு நிமிர்த்திய தலை என்க. கலை-மேகலை. கடகம்-கங்கணம். தீநாய்-சுடு காட்டிலேயே வாழும் நாய். இதனை ஒரு சாதி நாய் என்பாருமுளர். என்புடையக் கவ்வி என்க.

இனி இப் பகுதியோடு

குடருங் கொழுவுங் குருதியு மென்பும்
தொடரும் நரம்பொடு தோலும்-இடையிடையே
வைத்த தடியும் வழும்புமாம் மற்றிவற்றுள்
எத்திறத்தா ளீர்ங்கோதை யாள்   (46)

எனவரும் நாலடி வெண்பா ஒப்புநோக்கற்பாலது.

இதுவுமது

116-127: சாந்தம்….எய்தி

(இதன் பொருள்) சாந்தம் தோய்ந்த ஏந்து இளமுலை காய்ந்த பசி எருவை கவர்ந்து ஊண் ஓதையும்- சந்தனம் நீவப்பெற்ற அணந்த இளமுலையின் ஊனை மிகவும் வருந்திய பசியோடு வந்த பெருங்கழுகு அலகினாலே கவர்ந்து தின்று மகிழ்ந்து கூவும் ஒலியும்; பண்பு கொள் யாக்கையின் வெள்பலி யரங்கத்து-பல்வேறு பண்புகளைக் கொண்டுடிருந்த மக்கள் உடம்பைச் சுட்டமையாலேயுண்டான வெண்ணிறமான் சாம்பற் குவியலாலியன்ற மேடை மேலே: ஓர் பேய் மகள் ஆங்கு ஓர் கருந்தலை வாங்கி-ஒரு பெண் பேயானது ஆங்குக் கூந்தலாலே கறுப்பாகக் கிடந்த தலையைத் திருகித் தன்; கையகத்து- கையிடத்திலே; மண்கணை முழவம் ஆக ஏந்தி- மண் பூசப்பெற்ற தண்ணுமையாக ஏந்திக் கொண்டு; இரும்பேர் உவகையின் எழுந்து- மிகவும் பெரிய மகிழ்ச்சியோடு எழுந்து நின்று அத் தலையின்கண் அமைந்த உறுப்புக்களைத் தனித்தனி நோக்கிக் காமுகர்; புயலோ குழலோ கயலோ கண்ணோ குமிழோ மூக்கோ இதழோ கவிரோ பல்லோ முத்தோ என்னாது இரங்காது-இது முகிலோ அல்லது கூந்தல் தானோ? இவை கயல் மீனகளோ அல்லது கண்கள் தாமோ? இது குமிழ் மலரோ அல்லது மூக்குத்தானோ? இவை அதரங்களோ அல்லது முருக்கமலரிதழ்களேயோ? இவை பற்களோ அல்லது முத்துக் கோவையோ? என்று அவற்றைச் சிறிதும் பாராட்டாமலும் அவற்றின் பால் இரக்கங் கொள்ளாமலும்; கண்தொட்டு உண்டு அத் தலையிலமைந்த கண்களை அகழ்ந்தெடுத்துத் தின்றவாறே; கவை அடிபெயர்த்து- தனது கவைத்த விரல்களையுடைய அடிகளைப் பெயர்த்து; தண்டாக் களிப்பின் ஆடும்- தணியாத மகிழ்ச்சியோடே ஆடா நின்ற கூத்தினை; கண்டனன் வெரீஇ கடுநவை எய்தி அச்சத்தாலே பெருந் துன்பமெய்தி என்க.

(விளக்கம்) சார்ங்கலன் என்போன், ஓதைபல கேட்டுச் சென்றவன் பேய்மகள் ஆடும் கூத்துக்கண்டு நவை எய்தி என்க. கடுநவை எய்தி என்பதற்குப் பேயாற் பிடிக்கப்பட்டு என்று கூறுவாருமுளர். அவ்வுரை போலி என்னை? அணங்கும் பேயும் பிடிப்பதுமில்லை உயிருண்பதுமில்லை என்று சாதிப்பதே இந்நூலாசிரியரின் மேற்கோளாதலின் பேயாற் பிடியுண்டதாகவும் பேய் உயிருண்டதாகவும் கருதுவதற்குக் காரணம், பேதமையேயன்றி அந் நிகழ்ச்சியெல்லாம் ஊழ்வினையின் நிகழ்ச்சிகளே என்று காட்டுவதற்கே நூலாசிரியர் இச் சார்ங்கலன் கதையே ஈண்டுப் படைத்துள்ளார் ஆதலின் என்க.

எருவை-கழுகில் ஒருவகை. பண்புகொள் யாக்கை என்றது இகழ்ச்சி எனினுமாம். வெண்பலி யரங்கம் என்றது சாம்பலாலியன்ற மேட்டினை. மண்பூசப் பெற்ற திரண்ட முழவம் என்க. உவகை- சிறந்த ஊண் கிடைத்தமை பற்றி யுண்டாயது. காமுகர் கூந்தல் முதலியவற்றைப் புயல் முதலியனவாகக் குறிப்புவமஞ் செய்து பாராட்டுதலை நலம் பாராட்டுதல் என்ப. இப் பேய் அங்ஙனம் பாராட்டிற்றில்லை: பரிவு கொள்ளவுமில்லை என்பாள் புயலோ…. என்னாது இரங்காது என்றாள். தொட்டு- அகழ்ந்து. தண்டா- தணியாத.

சார்ங்கலன் செயல்

128-131: விண்டோர்…..வைத்தலும்

(இதன் பொருள்) விண்டு ஓர்திசையின் விளித்தனன் பெயர்ந்து-அவ்விடத்தினின்றும் நீங்கி மெய்மறந்து தான்சென்ற திசையை நோக்கி அம்மையே என்று கூவியவனாய் விரைந்து தன்னில் முன்றிலை எய்தி ஆங்கெதிர்வந்த அன்னையை நோக்கி. எம்மனை ஈங்கு காணாய் ஈமச் சுடலையின்- என் அன்னையே ஈங்கு என்னை நோக்குதி ஈமம் எரிகின்ற சுடுகாட்டின்கண்; வெம் முதுபேய்க்கு என் உயிர் கொடுத்தேன் என- வெவ்விய முதுமையுடைய தொரு பேய்க்கு யான் என் உயிரைக் கொடுத்தொழிந்தேன்! என்று பிதற்றிய வண்ணம்; தம்மனை தன்முன் வீழ்ந்து மெய்வைத்தலும்- தன் தாயின் முன்னிலையிலேயே வீழ்ந்து உயிர்நீத்தலும்; என்க.

(விளக்கம்) விண்டு- நீங்கி. ஓர் திசை  என்றது தான் சென்று கொண்டிருந்த அத் திசையில் என்றவாறு. விளத்தனன் என்றது அம்மையே! என்று தன் அன்னையே அழைத்து அலறியவனாய் என்றவாறு. பெயர்ந்து- ஓடி. எம்மனை- எம்மன்னை; மரூஉவழக்கு தம்மனை என்பதும் அது: வெம்முது பேய்க்கு என்னுயிர் கொடுத்தேன் என்றது இவ்வாறு சொல்லிப் பிதற்றி என்றவாறு. மெய்வைத்தலும் என்றது வீழ்ந்து இறத்தலும் என்றவாறு.

சார்ங்கலன் தாய் கோதமை செயல்

132-138: பார்ப்பான் ….பதியென

(இதன் பொருள்) பார்ப்பான் தன்னொடு கண் இழந்து இருந்த இத் தீத்தொழிலாட்டி- தன் கணவனாகிய பார்ப்பனனோடு தானும் கண்ணிழந்திருந்த இந்தப் பார்ப்பனிதானும் காவற்றெய்வமாகிய சம்பாபதியை உள்ளத்தால் நோக்கி; சம்பாபதி- சம்பாபதி யென்னுந் தெய்வமே! கேள்!; என் சிறுவனை- அளியேனாகிய என் ஒரு மகனாகிய இச் சிறுவனை; யாருமில் தமியேன் என்பது நோக்காது- களைகணாவார் யாரும் இல்லாதேன் என்பதனை எண்ணியிரங்காமல்; ஆர் உயிர் உண்டது அணங்கோ பேயோ- அரிய உயிரையுண்டது தெய்வமேயோ அல்லது அவன் கூறியவாறு முதுபேய்தானோ? அறிகிலேன்; துறையும் மன்றமும் தொல்வலிமரனும் உறையுளும் கோட்டமும் காப்பாய்- நீர்த்துறைகளிடத்தும் மன்றங்களிடத்தும் பழைமையான வலிமையுடைய மரங்களிடத்தும் மக்கள் வதியும் பிறவிடங்களினும் கோயில்களிடத்தும் மக்களுக்குத் தெய்வத்தானால் பேய்களினானாதல் தீங்கொன்றும் நிகழாவண்ணம் காக்கும் பேரருள் உடையாய்; காவாய்- எளியேமாகிய எம்மைக் காவாது கைவிட்டனை; தகவு இலை கொல்லோ- எம்மாட்டு அத்தகைய அருள் உடையாய் அல்லையோ! என்று அரற்றி; என்க.

(விளக்கம்) பார்ப்பான் என்றது- பார்ப்பனனாகிய என் கணவன் என்பதுபட நின்றது. பார்ப்பானொடு கண்ணிழந்திருந்த தீத் தொழிலாட்டி என்றமையால் தானும் கண்ணிழந்தமை குறித்தாள். இவ்வாற்றால் தீத் தொழிலாட்டி என்றது தீவினையாட்டி என்னும் பொருளுடைய தெனினுமாம். சிறுவன் என்றாள் அவனும் இரங்கற் குரியான் என்பது தோற்றுவித்தற்கு. யாருமில் தமியேன் என்பதுமது. அணங்கு- தீண்டி வருத்தும் தெய்வம். துறை- நீராடுதுறை. துறை முதலியன அணங்கானும் பேயானும் தீங்குறுத்தப் படுமிடம். தகவு என்றது மன்னுயிர்புரக்கும் பேரருளுடைமையை. எல்லார்க்கும் அருள் செய்யும் அருளுடையாய்க்கு எம்பால் அஃதொழிந்ததோ என்றரற்றியபடியாம்.

இனி, இக் காதையில் சக்கரவாளக் கோட்டத்தின் வரலாறு கூறுதல் தலைக்கீடாக 34. இந் நாமறப் பேரூர் தோன்றிய ஈமப்புறங்காடு என்பது தொடங்கி 131. வீழ்ந்து மெய் வைத்தலும் என்பதீறாக, பிறப்பாகிய துன்பம் எய்துதற்குக் காரணமான, காம வெகுளி மயக்கங்கள் என்னும் முக்குற்றமும் விளைதற்குக் காரணமான பிறப்பினை உண்டாக்கும் பற்றினை அறுத்தற்கு இன்றியமையாத ஐவகைப் பாவனை யுள்ளும் தலைசிறந்த (துன்பியல்) அசுப பாவனை மணிமேகலைக்குக் கைவருதற் பொருட்டு இவ்வுடம்பு,

அநித்தம் துக்கம் அநான்மா அசுசி

என்னும் நான்கு மெய்யுணர்ச்சிகளையும் மிகவும் நுண்ணிதாகச் செவியறிவுறுத்திய அருமையை உணர்க. இவ்வுண்மை அறியப்படாவிடின் இதனைப் பயில்வோர் இக் காதையின் சிறப்பைச் சிறிதும் உணராராவர் என்க. மேலே கூறப்பட்ட ஐவகைப் பாவனைகளும் 30. பவத்திற மறுகெனப் பாவை நோற்ற காதையில் நன்கு விளக்கப்படும்.

கோதமை சம்பாபதியிடம் முறையிடுதல்

139-149: மகன்மெய்….காணென

(இதன் பொருள்) கோதமை என்பாள் மகன் மெய் யாக்கையை மார்பு உறத் தழீஇ-இவ்வாறு அரற்றிய கோதமை என்னும் அப் பார்ப்பினி செய்தமை கேண்மின்! அவள்தான் தன் மகனுடைய உயிரற்ற மெய்யாகிய அவ்வுடம்பினைத் தன் கைகளாலே எடுத்துத் தன்மார்புபோடு நன்கு பொருந்துமாறு தழுவிச் சுமந்து கொடுபோய்; ஈமப் புறங்காட்டு எயில் புற வாயிலின் கொடுந்துயர் சாற்ற- அச்சுடுகாட்டுக் கோட்டத்தின் மதிலினது வாயிற்புறத்திலே கிடத்திநின்று சம்பாபதியை மனத்தானினைந்து வாயால் அழைத்துத் தானெய்திய கொடிய அத் துன்பத்தைக் கூறி முறை வேண்டாநிற்ப; பொன்னின் பொலிந்த நிறத்தாள்- பொன் போன்ற நிறமுடையவளாகச் சம்பாபதி என்னும் அத் தெய்வந்தானும் அவளுடைய அகக்கண் முன்னர் வந்து; கடி வழங்கு வாயிலின் கடுந்துயர் எய்தி இடை இருள் யாமத்து என்னை ஈங்கு அழைத்தனை என் உற்றனையோ எனக்கு உரை என்று தோன்ற-நங்காய்! பேய்கள் திரிகின்ற இவ் வாயிலிடத்தே கொடிய துன்பமெய்தி நள்ளிரவில் இவ்விருள்மிக்க யாமத்திலே என்னை இங்கு வருமாறு அழைக்கும் நீ தான் எத்தகைய இன்னல் எய்தினையோ அதனை எனக்கு இயம்புக என்று பரிவுரை கூறத் தோன்றாநிற்ப ஆரும் இல்லாட்டி என் அறியாப் பாலகன் ஈமப்புறங் காட்டு எய்தினோன் தன்னை-பாதுகாவல் செய்தற்குரியார் யாருமில்லாத அளியேனாகிய என் ஒருமகனாகிய விரகறியாத சிறுவன் நீயே எழுந்தருளியிருக்கின்ற இச் சுடுகாட்டின்கண் வந்தடனை ஆருயிர் உண்டது அணங்கோ பேயோ-அரிய உயிரைக் குடித்ததுநின் ஆட்சியிலடங்கிய அணங்கேயோ பேயோயான் அறிகின்றிலேன்; உறங்குவான் போலக் கிடந்தனன்காண் என-உதோ துயில்பவனைப் போன்று கிடக்கின்றனன் நீயே கண்டருளுதி என்று கூற; என்க.

(விளக்கம்) மெய்யாகிய யாக்கை: இரு பெயரொட்டு. கொடுந்துயர்- மகனை இழந்த பொறுக்கொணாத் துன்பம். சாற்ற- கூறிமுறை வேண்ட என்க. புறக்கண் குருடாகலின் அகக்கண் முன்னே உருவத்தோடு தோன்ற என்க. என்னுற்றனையோ எனக்குரை என்றது பரிவுரை. பொன்னிற் பொலிந்த நிறத்தாள் தோன்ற என்றமையால் அத் தெய்வம் அவள் அகக் கண்ணால் காண்டற்கியன்ற அருளுருவம் கொண்டு தோன்ற என்க. இக் காட்சி கனாக்காட்சி போல்வதாம் என்றுணர்க.

கணவனும் கண்ணிலன் யானும் கண்ணிலேன் எம்மைத் தாங்குங்கேளிரும் இலேன் எமக்குதவியாயிருந்த இச் சிறுவனைக் கொன்றது உன் அருளாட்சிக்கண் நிகழத் தகாததொரு கொடுமை; இங்ஙனம் நிகழவும் நீ வாளா திருந்தது என்னையோ? என்று முறையிட்ட படியாம்.

சம்பாபதி மறுமொழிழும் கோதமை வேண்டுகோளும்

150-153: அணங்கும்…. என்றலும்

(இதன் பொருள்) அணங்கும் பேயும் ஆர் உயிர் உண்ணா-அது கேட்ட அத் தெய்வம் அவள் வினாவிற்கு மறுமொழியாக, பார்ப்பனியே ஈதொன்றுகேள்! நீ நினைக்கின்றபடி அணங்காதல் பேயாதல் அரிய உயிரை உண்ண மாட்டா; பிணங்கு நூல் மார்பன் பேது கந்து ஆக ஊழ்வினை வந்து இவன் உயிர் உண்டு கழிந்தது- முறுக்குண்ட பூணூலணிந்த இச் சிறுவனுடைய பேதமையையே பற்றுக்கோடாகக் கொண்டு இவன் முற்பிறப்பிலே செய்த தீவினையாகிய இவனது ஊழே இவன் உயிரைக் கவர்ந்து கொண்டு போயிற்றுக்காண்! இஃதியற்கை என்றுணர்ந்து கொள்வாயாக!; மாபெருந்துன்பம் நீ ஒழிவாய் என்றலும்- நின் பேதமை காரணமாக நீ எய்துகின்ற இம் மாபெருந்துன்பத்தைக் களைந்து அமைதிகொள்வாயாக என்று தேற்றுரை கூறாநிற்ப என்க.

(விளக்கம்) அணங்கு-பிறவுயிரைத் தீண்டி வருத்தும் தெய்வம். உயிர் அணங்கு முதலியவற்றால் உண்ணப்படும் உணவுப் பொருளன்று ஆதலால் அதனை அவை உண்ணும் என்று கருதுவதே அறியாமை என்று விளக்கியபடியாம். இனி தீதும் நின்றும் பிறர்தர வாரா அவை முன்பு செய்த பழவினைப் பயனாகத் தாமே வருவன. உன் மகன் இறந்தமைக்கும் அவன் பழவினையே காரணம் என்றுணர்ந்து துன்பந்தவிர் என்று ஆறுதல் கூறியபடியாம்.

இதுவுமது

154-163: என்னுயிர்…மடவாய்

(இதன் பொருள்) என்  உயிர் கொண்டு இவனுயிர் தந்து அருளின் இவன்கண் இல் என் கணவனைக் காத்து ஓம்பிடும்-அதுகேட்ட அவ்வன்புமிக்க தாயாகிய கோதமை அத் தெய்வத்தை நோக்கி எல்லாம்வல்ல தெய்வம் நீ அதலாலே இவன் ஊழ்வினை வேண்டுவது ஓர் உயிரேயாகலின் என்னுயிரைக் கைக்கொண்டு இச்சிறுவன் உயிரைமீட்டுத் தந்தருள்வாயாயின் அளியேனுடைய கண்ணில்லாத கணவனை இச்சிறுவன் பேணிக்காப்பாற்றுவனாகலின்; இவன் உயிர்தந்து என் உயிர்வாங்கு என்றலும்-இச்சிறுவன் உயிரை மீட்டுத்தந்து அதற்கீடாகக் கண்ணற்றவளாகிய என் உயிரைக் கவர்ந்து கொண்டருள்க! என்று வேண்டாநிற்ப; முது மூதாட்டி இரங்கினள் மொழிவோள்-அவ் வேண்டுகோள் கேட்ட அம் மிகப் பழைய தெய்வமாகிய சம்பாபதிதானும் அவள் பொருட்டுப் பெரிதும் பரிவு கொண்டு அவட்குக் கூறுபவள்; மடவாய்- மடப்பமிக்க பார்ப்பன மகளே கேள்!; ஆருயிர் போனால் செய்வினை மருங்கின் சென்று பிறப்பெய்துதல் ஐயம் உண்டோ- ஓருடலின்கண்ணிருந்து- வாழும் உயிர் இறந்துபோனக்கால் அவ்வுயிர் மீண்டும் அப் பழவினைசார்பாகவே போய் மற்றுமொரு பிறப்பின் எய்தும் என்னும் திறவோர் காட்சியில் உனக்கு ஐயமும் உண்டேயோ? ஐயுறாதே கொள், அஃது அங்ஙனமே சென்று மீண்டும் பிறப்பெய்தா நிற்கும் என்பது தேற்றமேகாண்; ஆங்கு அது கொணர்ந்து நின் ஆர் இடர் நீக்குதல்- அவ்வாறாகிய நின்மகன் உயிரை மீட்டுக்கொணர்ந்து இறந்துபட்ட இவ் வுடம் பிலே புகுத்தி நீ எய்திய ஆற்றுதற்கரிய துன்பத்தைக் களைதல்; ஈங்கு எனக்கும் ஆவது ஒன்று அன்று- ஈங்குக் காவற்றெய்வ மாயிருக்கின்ற எனக்கும் ஆற்றலாகும் ஓர் எளிய செயல் அன்று காண்!; நீ இரங்கல்- நீ இங்ஙனம் வருந்தாதே கொள்; ஆங்கது- நீ கூறுவது; கொலை அறம் ஆம் எனும்-ஓர் உயிரின துயர்களைதற்குப் பிறிதோர் உயிரைக்  கொலை செய்தலும் அறம் ஆகும் என்று கூறுகின்ற; கொடுந்தொழில் மாக்கள் அவலப் படிற்று உரை- கொலைத்தொழில் செய்கின்ற மடவோர் கூறுகின்ற துன்பத்திற்குக் காரணமான வஞ்சகமொழியே காண்!; என்க.

(விளக்கம்) மன்பதையின் துயர்தீர்த்தற் பொருட்டு வேள்விக் களத்திலே உயிர்ப்பலி செய்கின்றவர் கொள்கையே ஓருயிர்க்கு ஈடாக மற்றோர் உயிரைப் பலி யிடுவதும் அறமாம் என்பது. அது தீவினையேயன்றி அறமாகாது அதனால் விளைவது மீண்டும் துன்பமேயன்றிப் பிறிதில்லை; ஊன் உண்ணுதற்கு விரும்பும் தீயோர் கூறும் வஞ்சக மொழியே அஃது; அதனைக் கைவிடுக என்று தேற்றியபடியாம். இங்ஙனம் கூறுவோர் இயல்பும் அவர்வினை இயல்பும் அவர் மொழியியல்பும் ஒருசேரத் தெரித்தோதுகின்ற அத் தெய்வம் கொலை அறம் ஆம் எனும் கொடுந்தொழின் மாக்கள் அவலப் படிற்றுரை ஆங்காது எனச் சொற்றிறம் தேர்ந்து கூறுதலறிக.

ஈங்கு எனக்கும் ஆவது ஒன்றன்று எனல் வேண்டிய சிறப்பும்மை செய்யுள் விகாரத்தாற் றொக்கது.

போன நின்மகன் உயிரும் புதுப்பிறப்பெய்தி வாழும். ஆதலால் நீ இரங்கல் என்று தேற்றியபடியாம். இரங்கல்- இரங்காதேகொள். அவலம்-துன்பம்; படிறு-வஞ்சம். ஆங்கது ஓருயிர்க்கு ஈடாக மற்றோருயிரைக் கொடுத்து மீட்கலாம் என்னும் நின்கோட்பாடு.

இதுவுமது

163-167: உலக…. என்றலும்

(இதன் பொருள்) ஆங்காது மடவாய் அவ்வுண்மை கேட்பாயாக! உலக மன்னர்க்கு உயிர்க்கு உயிர் ஈவோர் இலரோ-அன்புடையோய்! இந்நிலவுலகத்தை ஆளும் திருவுடைய மன்னர்கள் இறந்தபொழுது அவர் உயிர்க்கு ஈடாக உயிர் வழங்குவோர் இப் பேருலகில் இலர் என்றோ நினைதி!; எண்ணிறந்தோர் உயிர்வழங்க முன்வருபவர் உளர்காண்; இந்த ஈமப் புறங்காட்டு அரசர்க்கு அமைந்தன ஆயிரம் கோட்டம்- பார்ப்பன மகளே! இந்தச் சுடுகாட்டுக் கோட்டத்தினுள்ளேயே இறந்த அரசரைப் புதைத்து அதன்மேல் நினைவுக்குறியாக எடுக்கப்பட்ட கோயில்கள் ஆயிரத்திற்கு மேலும் இருக்கின்றனகாண்!; நிரயக் கொடு மொழி நீ ஒழி என்றலும்-ஆதலாலே, உயிர்க்குயிர் ஈவேன் என்னும் நிராயத்துன்பந்தரும் இம் மொழியைக் கூறாது விடுக என்று; கூறியருளுதலும் என்க.

(விளக்கம்) உலக மன்னவர் என்றது சோழ மன்னர்களை. இலரோ என்புழி ஓகாரம் எதிர்மறை. பலர் உயிரீவோர் உளராவர் என அதன் எதிர்மறைப் பொருளை வற்புறுத்து நின்றது. ஆயிரங் கோட்டம் என்றது மிகுதிக்கு ஓரெண் காட்டியவாறு. நிரயக் கொடுமொழி என்றது. இவனுயிர்க்கு என்னுயிர் கொள் என்றதனை.

கோதமை கூற்று

168-171: தேவர்……ஈங்கென

(இதன் பொருள்) தேவர் வரம் தருவர் என்று நால்மறை அந்தணர் நல்நூல் ஒரு முறை உரைக்கும்- தெய்வமே கேட்டருள் துன்புழந்து வருந்தினோர் வழிபாடு செய்து வேண்டினால் தெய்வங்கள் அத் துயர் தீர்க்கும் வரத்தை வழங்குவர் என்று நான்கு மறைகளாகிய அந்தணருடைய மெய்ந்நூல்கள் அவர்க்கு உய்திபெறும் ஒரு முறைமையினைக் கூறாநிற்கும்; மாபெருந் தெய்வம் நீ அருளாவிடின்-அத் தெய்வங்களுள்ளும் மிகப் பெரிய தெய்வமாகிய நீயே யான் கேட்ட இவ்வரத்தை வழங்கி அருளாதொழியின்; யான் ஈங்கு என் உயிர் காவேன் என-அளியேன் இவ்வுலகத்துப் பின்னும் வாழ்வுகந்து என் உயிரைப் பேணுவேனல்லேன் காண்! என்றாள் என்க.

(விளக்கம்) ஒரு முறை-துன்புற்றோர்க்குய்தி பயக்கும் ஒரு வழி நான்மறையாகிய நன்னூல் அந்தணர் நன்னூல் எனத் தனித்தனி இயையும். தெய்வங்களுள் வைத்துத் தலைசிறந்த தெய்வமாகிய நீயே என்பாள், மாபெருந் தெய்வம் நீ என்றாள், பிரிநிலை ஏகாரஞ் செய்யுள் விகாரத்தால் தொக்கது.

சம்பாபதியின் மறுமொழி

172-185: ஊழிமுத….இதுவென

(இதன் பொருள்) ஊழி முதல்வன் உயிர்தரின் அல்லது -ஊழி முடிவின் மீண்டும் உலகியற்றும் பெருங்கடவுளாகிய பிரமன் இறந்தொழிந்த உயிரைப் படைத்துத் தந்தால்(தருதல் கூடும் அவன்) அல்லது; ஆழித்தாழி அகவரைத் திரிவோர் தாம்தரின் யானும் தருகுவன்-சக்கரவாளமாகிய தாழியினூடே என்னைப் போன்று திரிகின்ற தேவர்கள் தாம் நீ வேண்டுமாறு நின் மகன் உயிரை மீட்டுத் தருவார் உளராயின் யானும் நின்மகன் உயிரை மீட்டுத் தருகுவேன் காண்!. மடவாய்- மடப்ப மிக்க பார்ப்பன மகளே நீயே; ஈங்கு என் ஆற்றலும் காண்பாய் என்று இப்பொழுதே என்னுடைய ஆற்றலையும் காணக்கடவாய் என்று கூறி; நால்வகை மரபின் அரூபப் பிரமரும் நால் நால் வகையின் உரூபப் பிரமரும்-நரல்வேறு முறைமையினையுடைய அரூபப் பிரமர்களும், பதினாறு வகைப்பட்ட உரூபப் பிரமரும்; இருவகைச் சுடரும்-ஞாயிறுந் திங்களுமாகிய இருவகைப்பட்ட ஒளிக்கடவுளரும்-இரு மூவகையின் பெருவனப்பு எய்திய தெய்வதகணங்களும்-ஆறு வகைப்பட்ட பேரழகுடைய தெய்வக் கூட்டங்களும்; பல்வகை அசுரரும்-பலவேறு வகைப்பட்ட அசுரர்களும் படுதுயர் உறூஉம் எண்வகை நரகரும்-பெருந்துன்பத்தை எய்தா நின்ற எட்டு வகைப்பட்ட நரகரும்; இருவிசும்பு இயங்கும் பல்மீன் ஈட்டமும்- பெரிய வானத்திலே இயங்கா நின்ற பலவாகிய மீன் கூட்டமும்; நாளும் கோளும் தன் அகத்து அடக்கிய- நாண்மீன்களும் கோள்களும் ஆகிய தேவ கணங்களையெல்லாம் தன்னுள்ளே அடக்கிக் கொண்டிருக்கின்ற; சக்கரவாளத்து- சக்கரவாளமாகிய இவ்வண்டத்தினுள்ளே உறைகின்ற; வரந்தரர்க்கு உரியோர் தமை முன் நிறுத்தி- மாந்தர்க்கு வரந்தருதற்கு உரிமையுடையோரை எல்லாம் சம்பாபதி தனது ஆற்றலாலே வரவழைத்து அக்கோதமையின் அகக்கண் முன்னர் நிறுத்தி வைத்து; இவள் அருந்துயர் இது- தேவர்களே கேண்மின்! இப் பார்ப்பனிக்கு இப்போது எய்தியிருக்கின்ற தீர்ததற்கரிய  துயரம் இஃதேயாம்; அரந்தை கெடுமின் என-நும்மில் யாரேனும் இவளுடைய இத் துன்பத்தைப் போக்கியருளுமின் என்று வேண்டாநிற்ப என்க.

(விளக்கம்) ஊழி முதல்வன் என்றது இவ் வுலகம் அழிந்தொழிந்த ஊழியின் பின்னர் மீண்டும் உலகத்தைப் படைக்கின்ற பிரமதேவனை இவன் செந்தாமரை மலர்மேல் வீற்றிருப்பவன் என்பது பௌத்தர் கொள்கை. பிரமர் பலவகைப்பட்டுப் பலராதலின் இவனை ஊழி முதல்வன் என்றும். செம்மலர் முதியோன் என்றும் மகாப்பிரமா என்றும் விதந்தோதுவர். உலகப் படைப்பு அந்தம் ஆதி என்மனார் புலவர் எனச் சைவசித்தாந்தத்தே கூறப்படுமாறே இவரும் ஊழிக்குப் பின் உலகம் படைக்கும் முதல்வன் என்றே கூறுதல் உணர்க. ஆழித்தாழி- சக்கரவாளக் கோட்டமாகிய தாழிவடிவிற்றாகிய அண்டம் என்க.

திரியுந் தேவரில் யாரேனும் தருவார் உளராயின் யானுந் தருகுவன் என்றது, அவ் வரந்தருதற்கு எத் தேவராலும் இயலாது என்பதுபட நின்றது. எனக்குரிய ஆற்றல் எனக்குளது அதனைக் காட்டுவல் நீயே அதனையும் காண்க. நீ கேட்கும் வரந்தரும் ஆற்றல் ஊழி முதல்வற்கன்றிப் பிற தேவருக்கில்லை என்பதனைக் தெரிந்து விளக்கியபடியாம். தேவர்களை எல்லாம் ஒருங்கழைத்துக் காட்டுமாற்றால் சம்பாபதி தன் ஆற்றலை வெளிப்படுத்திக் காட்டியவாறாம்

நால்வகை மரபின் அரூபப் பிரமர்- நால்வகை உலகங்களின் வாழும் உருவமற்ற பிரமர்கள்; இவர்கள் ஐந்தாந்தியானத்தில் தேறியவர் என்பர். இவர் இருப்பிடம்(1) ஆகாசாநந்தியாயதன லோகம்; (2) விஞ்ஞானா நந்தியாயதன லோகம்; (3) ஆகிஞ்சந் யாயதன லோகம்; (4) நைவசம்ச்ஞானா சம்ச்ஞானாயதன லோகம் என்னும் நான்குமாம். இவை நான்கும் அரூபப்பிரம லோகங்கள் எனப்படும்.

பதினாறு வகை மரபின் உரூபப்பிரமர்: பதினாறு வகை உலகங்களில் உருவத்தோடு வாழும் பிரமர்கள் என்பர்; இவர்களில் முதலாந் தியானத்தில் தேறியவர் வாழுமுலகம்(1) பிரமகாயிக லோகம்; (2) பிரமபுரோகித லோகம். (3) மகாப்பிரம லோகம் (4) பரீத்தாப லோகம் என்னம் நான்குமாம்.

இரண்டாந்தியானத்தில் தேறியவர் வாழுமிடம் (1) அப்பிர மாணாபலோகம்; (2) ஆபாசுவர லோகம்; (3) பரீத்தசுப லோகம்; (4) அப்பிரமாணசுப லோகம் என்னும் நான்குமாம்.

மூன்றாந் தியானத்தில் தேறியவர் வாழுமிடம்-(1) சுபகிருஞ்ஞ லோகம்(2) பிருகத்பல லோகம்; (3) அசஞ்ஞாசத்துவ லோகம்; (4) அப்பிருக லோகம் என்னும் நான்குமாம்.

நான்காந்தியானத்தில் தேறியவர் வாழுமிடம்-(1) அதப லோகம்; (2) சுதரிச லோகம்; (3) சுதரிசி லோகம்; (4) அகநிட்டலோகம் என்னும் நான்குமாம். இவை தியானவகையால் நால் நான்கு வகைப் படுதலின் நானால்வகையின் உரூபப் பிரமரும் என்று தெரித்தோதினர்.

இனி அரூபப்பிரமரும் உரூபப்பிரமரும் ஆகிய இருவகைப் பிரமரும் வாழும் உலகம் இருபதனையும் நிட்காம லோகங்கள் என்றும் ஓதுப

இருவகைச் சுடரும் என்றது-ஞாயிற்றுத் தேவனையும் திங்கட்டே வனையுமாம்

பெருவனப் பெய்திய தெய்வதகணங்களும் என்றது இந்நிலவுலகத்தியே செய்த நல்வினையின் பயனாகிய இன்ப நுகர்ச்சி எய்துதற்கியன்ற ஆறுவகைப்பட்ட தேவலோகங்களினும் வாழும் தேவரினங்களை. இவர் இன்ப நுகர்தற்குரிய லோகம் என்பது தோன்ற பெருவனப் பெருவனப் பெய்திய தெய்வதகணம் என்றார்.

நல்வினையால் தேவராய்ப் பிறந்த இவர் வாழும் உலகங்கள் (1) மகாராசிக லோகம்; (2) திரயத்திரிஞ்ச லோகம்; (3) யாம லோகம்;(4) துடிதலோகம்; (5) நிருமாணரதி லோகம்; (6) பரநிருமித வய வருத்தி லோகம் என்னும் இந்த ஆறுலகங்களுமாம்.

மேலே கூறப்பட்ட இருபத்தாறுலகங்களும் நல்வினை செய்தோர்க் குரிய மேலுலகங்களாம்.

இனி, மக்கள் வாழும் இந்நிலவுலகம் ஒன்றுமே நடுவிலமைந்த உலகமாம். ஆகவே நல்வினை என்னும் இருவகை வினைகளும் விரவிய உயிர்கள் இதன்கட் பிறந்து இன்பம் துன்பம் என்னும் இருவகை நுகர்ச்சிகளையும் எய்தும் என்ப. இக் காரணத்தால் பௌத்தர்கள் வினைகளின் கூட்டத்தை வேதனைக் கந்தம் என்பர். வினைகள் இரண்டென்னாது மூன்று என்பர். இதனை,

இனிவே தனையா வனஇன்ப மொடு
துனிவே தருதுன் பமுமாம் இடையும்
நனிதா நலதீ வினையன் மையினாம்
பனிவே யிணைபன் னியதோண் மடவாய்   (488)

எனவரும் நீலகேசிச் செய்யுளானும்; அதற்கு நுகர்ச்சிக் கந்தம்-இன்ப நுகர்ச்சியும் துன்பநுகர்ச்சியும். இவ்விரண்டும் விரவிய சமநுகர்ச்சியும் என மூவகைப்படும் என்று விளக்கிய விளக்கவுரையானும் உணர்க.

பல்வகை அசுரர் என்றார் அவர் தாமும் தாஞ்செய்த தீவினையின் பயனாக அவற்றின் வன்மை மென்மைகட் கேற்பப் பலவகைப்படுதலின். தீவினை மிகுதியால் எட்டுவகைப்பட்ட நரகப் புரைகளிலே இடப்பட்ட உயிர்களைப் பிரித்து எண்வகை நரகர் என்றார். இவ்வெண்வகை நரகப் பகுதிகளும் நரகலோகம் என்னும் ஓருலகத்தின் உட்பகுதிகளாம்.

அந்நரகங்கள்-(1) மகாநிரயம்; (2) இரௌரவம்; (3) காலசூத்திரம்; (4) சஞ்சீவனம்; (5) மகரவீசி; (6) தபனம்;(7) சம்பிரதாபனம்;(  சங்கதம் என்னும் இவ் வெட்டுமாம்.

இனித் தீவினைப் பயனாகச் சென்று பிறப் பெய்தும் உலகங்களை இருள் உலகம் என்ப. அவை தாமும் நான்கு வகைப்படும். (1) நரகலோகம்; (2) திரியக் குலோகம்; (3) பிரேதலோகம்;(4) ஆசுரிக லோகம் என்னும் இந்த நான்குமாம்.

நிலவுலகத்தின் கீழுள்ள இவை நான்கும் கீழுலகம் எனத் தொகுத்தோதப்படும்.

இனி, நல்வினை தீவினை இரண்டும் விரவு வினையுமாகிய மூன்று வினைகளானும் உயிர்கள் எய்தும் இருள் உலகம் நான்கும் நிலவுலகம் ஒன்றும் ஒளி உலகம் ஆறுமாகிய பதினொருலகத்தையும் காமலோகங்கள் என்றும் தொகுத்தும் கூறுப.

மேலே கூறியவாற்றால் பௌத்த சமயத்தார் கூறுகின்ற காம லோகம் பதினொன்றும் நிட்காம லோகம் இருபதும் ஆகிய முப்பத்தோரு லோகங்களையும் அவற்றினியல்புகளையும் அறிக.

பன்மீனீட்டம் என்றது விசும்பில் எண்ணிறந்தனவாகக் காணப்படுகின்ற விண்மீன்களே. நாள் என்றது அசுவனி முதலிய இருபத்தேழு மீன்களையுமாம். கோள்களில் முன்னர்த் தேவரோடு கூட்டிய ஞாயிற்றையும் திங்களையும் தவிர்த்து எஞ்சிய ஏழு கோள்கையுமாம். மேலே கூறப்பட்ட முப்பத்தோருலகங்களையும் பன்மீன்களையும் கோள்களையும் நாள்களையும் தன்னகத்தே அடக்கியிருக்கும் ஓர் அண்டமே சக்கரவாளம் ஆம். இங்ஙனமே எண்ணிறந்த சக்கரவாளங்கள் உள என்பது பிடக நூலோர் துணிவாம் என்றுணர்க.

வரந்தருதற் குரியோர் என்றது இவற்றுள் மேலுலகத்தும் நிலவுலகத்தும் உறையும் தெய்வங்களை அரந்தை-துன்பம்.

தேவர் கூற்றும் கோதமையின் செயலும்

126-129: சம்பாபதி…. இறந்தபின்

(இதன் பொருள்) எங்கு வாழ் தேவரும்-எவ்வெவ்வுலகத்தும் வாழ்வோராய்ச் சம்பாபதியின் ஆணைக்கடங்கிச் சுடுகாட்டுக் கோட்டத்தே வந்து சேர்ந்த தேவரெல்லாம்; சம்பாபதி தான் உரைத்த அம்முறையே உரைப்பக் கேட்டு-அச் சம்பாபதி என்னும் ஆற்றல் சால் தெய்வம் உரைத்தவாறே ஊழி முதல்வன் உயிர்தரின் அல்லது ஆழித்தாழி அகவரைத் திரியும் யாந்தர வல்லேம் என்று கூற அது கேட்டு; கோதமை உற்ற கொடுந்துயர் நீங்கி- மெய்யுணர்ந்தமையாலே கோதமை என்னும் அப்பார்ப்பனிதானும் பேதமை காரணமாகப் பண்டு தான் எய்திய கொடிய துன்பத்தினின்று நீங்கி; மகனை ஈமச் சுடலையி

Re: மணிமேகலை

« Reply #7 on: February 28, 2012, 08:58:13 AM »

  1. துயிலெழுப்பிய காதை

ஏழாவது மணிமேகலா தெய்வம் உவவனம் புகுந்து சுதமதியைத் துயிலெழுப்பிய பாட்டு

அஃதாவது: மணிமேகலையை உவவனத்தினின்றும் எடுத்துப் போய் முப்பது யோசனைத் தொலைவில் கடலினுள்ளிருக்கும் மணிபல்லவம் என்னும் தீவின்கண் வைத்து அவ்விடத்தினின்றும் மீண்டும் புகார் நகரத்து உவவனத்தினூடே துயிலில் ஆழ்ந்திருந்த சுதமதியை எழுப்பித் தான் செய்தமையைக் கூறி மாதவிக்கும் அந் நற்செய்தியைக் கூறும்படி பணித்து மறைந்த செய்தியைக் கூறுஞ் செய்யுள் என்றவாறு.

இதன்கண்- உவவனத்தின்கண் மணிமேகலையைக் கண்ணெதிரே கண்டு வைத்தும்; அவளது மடங்கெழுநோக்கின் மதமுகந் திறப்புண்டு இடங்கழி தன் நெஞ்சத்திளைமையானை கல்விப்பாகன் கையகப்படா அது ஒல்காவுள்ளத் தோடுமாயினும் ஒழுக்கொடு புணர்ந்த விழுக்குடிப் பிறந்தோ னாதலின் பகவனது ஆணையிற் பன்மரம் பூக்கும் அத் தெய்வப் பூம்பொழிலில் அவளைக் கைப்பற்றுதல் குடிப்பழியாம் என்றஞ்சி அகன்ற அரசிளங் குமரனாகிய உதயகுமரன் தன் அரண்மனைக்கண் காம நோயாற் பெரிதும் வருந்தி நாளைக்கு அவளை யான் எப்படியும் கைப்பற்றுவேன் என்னும் துணிவுடன் பொங்கு மெல்லமளியில் கண்டுயிலாது கிடந்தோன் முன்னர், மணிமேகலா தெய்வம் தோன்றி மன்னறம் கூறி மன்னவன் மகனே! தவத்திறம் பூண்டோள் தன்மேல் வைத்த அவத்திறம் ஒழிக என்றறிவுறுத்து அப்பால் உவவனத்திலே துயில் கொண்டிருந்த சுதமதியை எழுப்பித் தான் மணிமேகலா தெய்வம் என்றறிவித்து மணிமேகலைக்கு ஏது நிகழ்ச்சி எதிர்ந்துளதாலின் அவளை நன்னெறிக்கட் செலுத்தவே யான் எடுத்துப் போயினேன், என்னை மாதவி முன்னரே அறிகுவள், மணிமேகலை இற்றைக்கு ஏழா நாள் நலம் பல எய்தி இங்கு வந்து சேர்வாள் என்று கூறும் அத் தெய்வத்தின் அருட்டிறமும், பின்னர்ச் சுதமதி சக்கரவாளக் கோட்டம் புக்கதும்; ஆங்குக் கந்திற் பாவை சுதமதிக்குக் கூறும் அற்புதக் கிளவியும்; இரவு வண்ணனையும் பெரிதும் இன்பம் பயப்பனவாக அமைந்திருத்தலைக் காணலாம்.

மணிமேகலை தனை மணிபல்லவத்திடை
மணிமேகலா தெய்வம் வைத்து நீங்கி
மணிமேகலை தனை மலர்ப் பொழில் கண்ட
உதயகுமரன் உறு துயர் எய்தி
கங்குல் கழியின் என் கை அகத்தாள் என
பொங்கு மெல் அமளியில் பொருந்தாது இருந்தோன்
முன்னர்த் தோன்றி மன்னவன் மகனே!
கோல் நிலை திரிந்திடின் கோள் நிலை திரியும்
கோள் நிலை திரிந்திடின் மாரி வறம் கூரும்
மாரி வறம் கூரின் மன் உயிர் இல்லை  07-010

மன் உயிர் எல்லாம் மண் ஆள் வேந்தன்
தன் உயிர் என்னும் தகுதி இன்று ஆகும்
தவத் திறம் பூண்டோள் தன்மேல் வைத்த
அவத் திறம் ஒழிக என்று அவன்வயின் உரைத்த பின்
உவவனம் புகுந்து ஆங்கு உறு துயில் கொள்ளும்
சுதமதி தன்னைத் துயிலிடை நீக்கி
இந்திர கோடணை இந் நகர்க் காண
வந்தேன் அஞ்சல் மணிமேகலை யான்
ஆதிசால் முனிவன் அறவழிப்படூஉம்
ஏது முதிர்ந்தது இளங்கொடிக்கு ஆதலின்  07-020

விஞ்சையின் பெயர்த்து நின் விளங்கு இழை தன்னை ஓர்
வஞ்சம் இல் மணிபல்லவத்திடை வைத்தேன்
பண்டைப் பிறப்பும் பண்புற உணர்ந்து ஈங்கு
இன்று ஏழ் நாளில் இந் நகர் மருங்கே
வந்து தோன்றும் மடக்கொடி நல்லாள்
களிப்பு மாண் செல்வக் காவல் பேர் ஊர்
ஒளித்து உரு எய்தினும் உன்திறம் ஒளியாள்
ஆங்கு அவள் இந் நகர் புகுந்த அந் நாள்
ஈங்கு நிகழ்வன ஏதுப் பல உள
மாதவி தனக்கு யான் வந்த வண்ணமும்  07-030

ஏதும் இல் நெறி மகள் எய்திய வண்ணமும்
உரையாய் நீ அவள் என் திறம் உணரும்
“திரை இரும் பௌவத்துத் தெய்வம் ஒன்று உண்டு” என
கோவலன் கூறி இக் கொடி இடை தன்னை என்
நாமம் செய்த நல் நாள் நள் இருள்
“காமன் கையறக் கடு நவை அறுக்கும்
மா பெருந் தவக்கொடி ஈன்றனை” என்றே
நனவே போலக் கனவு அகத்து உரைத்தேன்
ஈங்கு இவ் வண்ணம் ஆங்கு அவட்கு உரை என்று
அந்தரத்து எழுந்து ஆங்கு அருந் தெய்வம் போய பின்  07-040

வெந் துயர் எய்தி சுதமதி எழுந்து ஆங்கு
அகல் மனை அரங்கத்து ஆசிரியர் தம்மொடு
வகை தெரி மாக்கட்கு வட்டணை காட்டி
ஆடல் புணர்க்கும் அரங்கு இயல் மகளிரின்
கூடிய குயிலுவக் கருவி கண் துயின்று
பண்ணுக் கிளை பயிரும் பண் யாழ்த் தீம் தொடை
கொளை வல் ஆயமோடு இசை கூட்டுண்டு
வளை சேர் செங் கை மெல் விரல் உதைத்த
வெம்மை வெய்து உறாது தன்மையில் திரியவும்
பண்பு இல் காதலன் பரத்தமை நோனாது  07-050

உண் கண் சிவந்து ஆங்கு ஒல்கு கொடி போன்று
தெருட்டவும் தெருளாது ஊடலோடு துயில்வோர்
விரைப் பூம் பள்ளி வீழ் துணை தழுவவும்
தளர் நடை ஆயமொடு தங்காது ஓடி
விளையாடு சிறு தேர் ஈர்த்து மெய் வருந்தி
அமளித் துஞ்சும் ஐம்படைத் தாலி
குதலைச் செவ் வாய் குறு நடைப் புதல்வர்க்குக்
காவல் பெண்டிர் கடிப்பகை எறிந்து
தூபம் காட்டி தூங்கு துயில் வதியவும்
இறை உறை புறவும் நிறை நீர்ப் புள்ளும்  07-060

கா உறை பறவையும் நா உள் அழுந்தி
விழவுக் களி அடங்கி முழவுக் கண் துயின்று
பழ விறல் மூதூர் பாயல் கொள் நடு நாள்
கோமகன் கோயில் குறு நீர்க் கன்னலின்
யாமம் கொள்பவர் ஏத்து ஒலி அரவமும்
உறையுள் நின்று ஒடுங்கிய உண்ணா உயக்கத்து
நிறை அழி யானை நெடுங் கூ விளியும்
தேர் வழங்கு தெருவும் சிற்றிடை முடுக்கரும்
ஊர் காப்பாளர் எறி துடி ஓதையும்
முழங்கு நீர் முன் துறைக் கலம் புணர் கம்மியர்  07-070

துழந்து அடு கள்ளின் தோப்பி உண்டு அயர்ந்து
பழஞ் செருக்கு உற்ற அனந்தர்ப் பாணியும்
அர வாய்க் கடிப்பகை ஐயவிக் கடிப்பகை
விரவிய மகளிர் ஏந்திய தூமத்து
புதல்வரைப் பயந்த புனிறு தீர் கயக்கம்
தீர் வினை மகளிர் குளன் ஆடு அரவமும்
வலித்த நெஞ்சின் ஆடவர் இன்றியும்
புலிக் கணத்து அன்னோர் பூத சதுக்கத்து
கொடித் தேர் வேந்தன் கொற்றம் கொள்க என
இடிக் குரல் முழக்கத்து இடும் பலி ஓதையும்  07-080

ஈற்று இளம் பெண்டிர் ஆற்றாப் பாலகர்
கடுஞ் சூல் மகளிர் நெடும் புண் உற்றோர்
தம் துயர் கெடுக்கும் மந்திர மாக்கள்
மன்றப் பேய்மகள் வந்து கைக்கொள்க என
நின்று எறி பலியின் நெடுங் குரல் ஓதையும்
பல் வேறு ஓதையும் பரந்து ஒருங்கு இசைப்ப
கேட்டு உளம் கலங்கி ஊட்டு இருள் அழுவத்து
முருந்து ஏர் இள நகை நீங்கிப் பூம்பொழில்
திருந்து எயில் குடபால் சிறு புழை போகி
மிக்க மா தெய்வம் வியந்து எடுத்து உரைத்த  07-090

சக்கரவாளக் கோட்டத்து ஆங்கண்
பலர் புகத் திறந்த பகு வாய் வாயில்
உலக அறவியின் ஒரு புடை இருத்தலும்
கந்து உடை நெடு நிலைக் காரணம் காட்டிய
அந்தில் எழுதிய அற்புதப் பாவை
மைத் தடங் கண்ணாள் மயங்கினள் வெருவ
திப்பியம் உரைக்கும் தெய்வக் கிளவியின்
இரவிவன்மன் ஒரு பெரு மகளே!
துரகத் தானைத் துச்சயன் தேவி!
தயங்கு இணர்க் கோதை தாரை சாவுற  07-100

மயங்கி யானை முன் மன் உயிர் நீத்தோய்!
காராளர் சண்பையில் கௌசிகன் மகளே!
மாருதவேகனோடு இந் நகர் புகுந்து
தாரை தவ்வை தன்னொடு கூடிய
வீரை ஆகிய சுதமதி கேளாய்!
இன்று ஏழ் நாளில் இடை இருள் யாமத்து
தன் பிறப்பு அதனொடு நின் பிறப்பு உணர்ந்து ஈங்கு
இலக்குமி ஆகிய நினக்கு இளையாள் வரும்
அஞ்சல் என்று உரைத்தது அவ் உரை கேட்டு
நெஞ்சம் நடுக்குறூஉம் நேர் இழை நல்லாள்  07-110

காவலாளர் கண் துயில்கொள்ளத்
தூ மென் சேக்கைத் துயில் கண் விழிப்ப
வலம்புரிச் சங்கம் வறிது எழுந்து ஆர்ப்பப்
புலம் புரிச் சங்கம் பொருளொடு முழங்கப்
புகர் முக வாரணம் நெடுங் கூ விளிப்ப
பொறி மயிர் வாரணம் குறுங் கூ விளிப்ப
பணை நிலைப் புரவி பல எழுந்து ஆலப்
பணை நிலைப் புள்ளும் பல எழுந்து ஆலப்
பூம்பொழில் ஆர்கைப் புள் ஒலி சிறப்பப்
பூங்கொடியார் கைப் புள் ஒலி சிறப்பக்  07-120

கடவுள் பீடிகைப் பூப் பலி கடைகொளக்
கலம் பகர் பீடிகைப் பூப் பலி கடை கொளக்
குயிலுவர் கடைதொறும் பண் இயம் பரந்து எழக்
கொடுப்போர் கடைதொறும் பண்ணியம் பரந்து எழ
ஊர் துயில் எடுப்ப உரவுநீர் அழுவத்துக்
கார் இருள் சீத்து கதிரவன் முளைத்தலும்
ஏ உறு மஞ்ஞையின் இனைந்து அடி வருந்த
மா நகர் வீதி மருங்கில் போகி
போய கங்குலில் புகுந்ததை எல்லாம்
மாதவி தனக்கு வழு இன்று உரைத்தலும்  07-130

நல் மணி இழந்த நாகம் போன்று அவள்
தன் மகள் வாராத் தனித் துயர் உழப்ப
இன் உயிர் இழந்த யாக்கையின் இருந்தனள்
துன்னியது உரைத்த சுதமதி தான் என்  07-134

உதயகுமரன் முன்னர் மணிமேகலா தெய்வம் வந்து தோன்றல்

1-7: மணிமே…… தோன்றி

(இதன் பொருள்) மணிமேகலா தெய்வம் மணிபல்லவத்திடை மணிமேகலைதனை வைத்து நீங்கி-இவ்வாறு மணிமேகலா தெய்வமானது உவவனத்தினின்று முப்பதி யோசனைத் தூரத்தில் தென் கடலிற் கிடக்கும் மணிபல்லவம் என்னும் தீவினிடை மணிமேகலையைக் கொடுபோய்த் துயில் கலையாவண்ணம் மெத்தென வைத்துப் பின்னர் அத் தீவினின்றும் நீங்கி; மணிமேகலைதனை மலர்ப்பொழில் கண்ட உதயகுமரன் உறுதுயர் எய்தி-அம் மணிமேகலையைப் பகவனதாணையில் பல்மரம் பூக்கும் தெய்வத்தன்மையுடைய உவவனமாகிய மலர்ப் பொழிலிற் கண்ட அரசிளங்குமரனாகிய உதயகுமரன் அவ்விடத்தே அவளைக் கைப் பற்றுதற்கஞ்சி மீண்டவன் மிக்க காமநோயாலே வருந்தி; கங்குல் கழியில் என் கையகத்தாள் என-இற்றை நாளிரவு கழிந்தக்கால் அவள் என் கையகத்தே இருப்பாள் அதற்காவன செய்குவல் என்னும் துணிவோடு பொங்கு மெல் அமளியில் பொருந்தாது இருந்தோன் முன்னர்த் தோன்றி-ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கப்பட்டுயர்ந்த மெல்லிய படுக்கையின் மேலே கண்ணிமைகள் பொருந்தாமல் படர்மெலிந்திருப்பவன் கண்முன் மின்னே போலப் பெண்ணுருவங் கொண்டு நின்று என்க.

(விளக்கம்) மணிமேகலா தெய்வம் மணிமேகலையைப் பாதுகாத்துக் கடைபோக நன்னெறியிலே செலுத்தும் குறிக்கோளுடன் அவளை எடுத்து மணிபல்லவத்திடை வைத்தாலும், அவள் மீண்டும் புகார் நகரத்திற்கு வரும் பொழுது அவள் பால் கழிபெருங் காமம் கொண்டவனாய் உதயகுமரன் அவளைக் கைப்பற்றவே முயல்வான் ஆகலின் அவள் தெய்வத்தின் துணைவலியும் தவவலியும் உடையாள் என்று அவன் அறியும்படி செய்து அச்சுறுத்தற் பொருட்டு அப்பொழுதே அவன் முன் தோன்றியவாறு. இஃது எதிரதாக் காக்கும் அறிவு எனப்படும் என்னை?

எதிரதாக் காக்கு மறிவினார்க் கில்லை
அதிர வருவதோர் நோய்     (429)

என நிகழும் தமிழ் மறையும் நினைக.

மணிமேகலா தெய்வம் உதயகுமரனுக்குச் செங்கோல் காட்டல்

7-14: மன்னவன்…….உரைத்தபின்

(இதன் பொருள்) மன்னவன் மகனே! எள்ளறு சிறப்பின் இமையவர் வியப்பப் புள்ளுறு புன்கண் தீர்த்தோனன்றியும், வாயிற் கடைமணி நடுநா நடுங்க ஆவின் கடைமணி யுகுநீர் நெஞ்சு சுடத் தான் தன் அரும்பெறற் புதல்வனை ஆழியின் மடித்தோனுமாகிய செங்கோன் மன்னர் வழிவழிச் சிறந்து வந்த சோழ மன்னவன் மகனே! ஈதொன்று கேள்! கோல் நிலை திரிந்திடின் கோள் நிலை திரியும்-அரசன் குறிக்கொண்டு பேணுதற் கியன்ற செங்கோன்மை பிறழுமானால் வெள்ளி முதலிய கோள்கள் தம் நிலையி லியங்காமல் பிறழ்ந்தியங்கா நிற்கும்; கோள் நிலை திரிந்திடின் மாரி வறங்கூரும்-அங்ஙனம் கோள்கள் நிலை பிறழ்ந்தியங்கினாலோ மழை பொய்த்து உலகிலே வற்கட மிகாநிற்கும்; மாரி வறங்கூரின் மன்னுயிர் இல்லை-மாரி பொய்த்து வற்கட மிகுமாயின் உடம்பொடு தோன்றி நிலைபெற்று வாழ்கின்ற உயிர்கள் இறந்துபடும்; மன்னுயிர் எல்லாம் மண் ஆள் வேந்தன் தன் உயிர் என்னும் தகுதி இன்று ஆகும்-இங்ஙனம் ஆயின் உலகில் நிலைபெற்று வாழ்கின்ற உயிர்கள் எல்லாம் அரசனுடைய உயிரே ஆகும் என்று ஆன்றோர் கூறும் பெருந்தகைமை அவ்வரசன்பால் சிறிதும் இல்லையாம்; தவத்திறம் பூண்டோள் தன் மேல் வைத்த அவத்திறம் ஒழிக என்று அவன்வயின் உரைத்தபின்- செங்கோன் முறை பிறழாது அத்தகைய பெருந்தகைமையோடு அருளாட்சி புரிந்த நின்முன்னோர் நெறிநின்று நீ தானும் தவவொழுக்கத்தை மேற்கொண்டொழுகுகின்ற மணிமேகலையின்பாற் கொண்டுள்ள நின் கேட்டிற்கே காரணமான இடங்கழி காமத்தைக் கைவிட்டு விடுவாயாக! என்று அத் தெய்வம் அவனுக்குக் கூறி அச்சுறுத்திய பின்று என்க.

(விளக்கம்) மன்னவன் என்றது- செங்கோன்மை பிறழாத சிபியும் மனுவும் போன்ற புகழ் மிக்கோர் மரபின் வந்த சோழமன்னன் என்பது பட நின்றது. கோல்-அரசியலறம். அஃது ஒருபாற் கோடாது செவ்விய கோல் போறலின் செங்கோல் என வழங்கப்படும். ஈண்டு அடை மொழியின்றிக் கோல் என நின்றது. முறை கோடுதலை ஈண்டுக் கோல் திரியின் என்றார்.

முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி
யொல்லாது வானம் பெயல்   (559)

எனவரும் திருக்குறளையும் நினைக.

கோள்-மழைதரும் வெள்ளி முதலிய கோள்கள். மாரிவறங் கூர்தல்- மழை பெய்யா தொழிதல்.

மன்னுயிரெல்லாம் மண்ணாள் வேந்தன் தன்னுயிர் எனபதனோடு

நெல்லும் உயிரன்றே நீரும் உயிரன்றே
மன்னன் உயிர்த்தே மலர்தலை யுலகம்
அதனால் யானுயி ரென்ப தறிகை
வேன்மிகு தானை வேந்தற்குக் கடனே       (புறநா-186)

எனவரும் மோசிகீரனார் பொன்மொழி ஒப்புநோக்கற் பாலதாம்.

இனி ஈண்டுத் தண்டமிழ் ஆசான் சாத்தனார் கூறிய இதனை, ஆசிரியர் திருத்தக்க தேவரும் தம் பெருங்காப்பியத்தூடே( சீவக:225)

கோள்நிலை திரிந்து குறைபடப் பகல்கண் மிஞ்சி
நீணில மாரி யின்றி விளைவஃகிப் பசியும் நீடி
பூண்முலை மகளிர் பொற்பின் கற்பழிந் தறங்கண் மாறி
ஆணையிவ் வுலகு கேடாம் அரசுகோல் கோடி னென்றான்

எனப் பொன்போற் பொதிந்து வைத்துள்ளமையும் உணர்க.

தவத்திறம்- நோன்பு. அவத்திறம்- கேட்டிற்குக் காரணமான பொருந்தாக் காமம். அது கோன்முறையன்றாகலின் ஒழிக என்றறிவுறுத்தபடியாம்.

மணிமேகலா தெய்வம் உவவனத்தே சென்று சுதமதியைத் துயிலெழுப்பித் தெருண்மொழி கூறுதல்

(15- உவவனம் என்பது தொடங்கி 40- போயின் என்னுமளவும் ஒரு தொடர்)

15-25: உவவனம்…..தோன்றும்

(இதன் பொருள்) உவவனம் புகுந்து ஆங்கு உறுதுயில் கொள்ளும் சுதமதி தன்னைத் துயில் இடை நீக்கி மீண்டும் மணிமேகலா தெய்வம் உவவனத்திலே புகுந்து அவ்விடத்தே மிக்க துயில் கொண்டிருந்த சுதமதியைத் துயிலுணர்த்தி; அஞ்சல் யான் மணிமேகலை இந்நகர் இந்திரகோடணை காண வந்தேன்-சுதமதி அஞ்சாதே கொள்! யான் நும்மோடுறவு கொண்டுள்ள மணிமேகலா தெய்வங்காண்! இப் பூம்புகார் நகரத்தே நிகழாநின்ற இந்திரவிழாக் காண்டற்கு ஈண்டு வந்தேன்! இளங்கொடிக்கு ஆதிசால் முனிவன் அறவழிப்படூஉம் ஏது முதிர்ந்துளது ஆகலின்-இப்பொழுது இளமையுடைய மணிமேகலைக்குப் புத்த பெருமான் திருவாய் மலர்ந்தருளிய அறநெறியில் ஒழுகுதற்குக் காரணமான பழவினைத் தொகுதி முதிர்ச்சியுற்றுப் பயனளிக்கும் செவ்வி பெற்றிருத்தலாலே; நின் விளங்கு இழை தன்னை விஞ்சையில் பெயர்த்து ஓர் வஞ்சம் இல் மணிபல்லவத்திடை வைத்தேன்- நின் வளர்ப்பு மகளாகிய மணிமேகலையை என் வித்தையினாலே துயில் கலையாவண்ணம் இவ்விடத்தினின்றும் எடுத்துப் போய் என் காவலிலமைந்தமையின் சிறிதும் வஞ்சச் செயல் நிகழ்தலில்லாத மணிபல்லவம் என்னும் தீவிடத்தே வைத்துள்ளேன்; பண்புற பண்டைப் பிறப்பும் உணர்ந்து-அவள் அவ்விடத்தே நிகழும் தெய்வப் பண்பு எய்துதலாலே அவளுடைய அறிதற்கரிய பழைய பிறப்பின் வரலாற்றையும் உணர்ந்துகொண்டு; ஈங்கு இந்நகர் மருங்கே இன்று ஏழ் நாளில் வந்து தோன்றும்-இந் நாவலம் பொழிலகத்துள்ளே இப் பூம்புகார் நகரத்தின்கண் இற்றைக்கு ஏழா நாள் வான் வழியாக வந்து தோன்றுவள்; என்க.

(விளக்கம்) உறுதுயில்- மிக்கவுறக்கம். இந்திரகோடணை-இந்திர விழா. மணிமேகலை- மணிமேகலா தெய்வம். ஆதிசான் முனிவன் என்றது கௌதம புத்தரை. ஏது- பழவினை. இளங்கொடி: மணிமேகலை. விஞ்சை- வித்தை. மணிபல்லவத் தீவின்கண் அவட்கு ஏதம் சிறிதும் வரமாட்டா தென்பாள், வஞ்சமில் மணிபல்லவம் என்றாள் ஈங்கு-இந் நாவலந் தீவின்கண். நகர்-புகார் நகரம். உரையாய்- கூறுவாயாக; அவள் என்திறம் உணரும்- அம் மாதவி என் பெயர் கேட்கு மளவிலேயே என்னை இன்னார் என்று உணர்ந்து கொள்ளுவள், எங்ஙனமெனின்; கோவலன் திரை இரும் பௌவத்துத் தெய்வம் ஒன்று உண்டு எனக் கூறிக் கொடியிடை தன்னை நாமம் செய்த நல் நாள்- மணிமேகலையின் தந்தையாகிய கோவலன் அலையெறியும் பெரிய கடலிடத்தே எங்குலதெய்வம் ஒன்றுளது என்று என் வரலாற்றை மாதவி முதலியோர்க்கு எடுத்துச் சொல்லித் தன் குழவியாகிய அவட்கு மணிமேகலை என்னும் என் பெயரையே சூட்டிய அந்த நல்ல நாளில்; என்க.

இதுவுமது

25-35: மடக்கொடி……நன்னாள்

(இதன் பொருள்) மடக்கொடி நல்லாள் களிப்புமாண் காவல் பேரூர் ஒளித்துரு எய்தினும் உன் திறம் ஒளியாள்-மடப்பமுடைய பூங்கொடி போலும் அழகுடைய அம் மணிமேகலை களித்து வாழ்தற்குப் பெரிதும் மாட்சிமையுடைய செல்வச் செழிப்பும் காவலும் அமைந்த தலைநகரமாகிய இப் பூம்புகாருக்கு அவள் மீண்டும் வரும்போது தனக்குரிய வுண்மையுருவத்தோடு வாராமல் வேற்றுருக் கொண்டே வருவள் காண்! அவ்வாறு அவள் வேற்றுருவில் வந்து ஈண்டுக் கரந்துவருவாளாயினும் தன்னை உனக்கு மறையாமல் உன் திறத்திலே தன்னை வெளிப்படுத்திக் காட்டுவள்; ஆங்கு அவள் இந்நகர் புகுந்த அந்நாள் ஈங்கு நிகழ்வன ஏதும் பலவுள-அவ்வாறு அவள் வேற்றுருவத்தோடு இம்மாநகர் புகுந்த அக்காலத்தே இங்கே நிகழ்விருக்கின்ற பழவினை நிகழ்ச்சிகள் பற்பல உள அவை நிகழுங்காண்!; நீ மாதவி தனக்கு யான் வந்த வண்ணமும் மகள் ஏதம் இல் நெறி எய்திய வண்ணமும்- நங்காய்! இவை நிற்க! இனி நீ போய் மாதவியைக் காண்புழி, யான் இந்நகரத்திற்கு வந்த செய்தியையும் என் வாயிலாய் அவள் அருமை மகளாகிய மணிமேகலை குற்றமில்லாத நன்னெறியிலே சென்றுள்ள செய்தியையும்; உரையாய்-கூறுவாயாக; அவள் என்திறம் உணரும் அம்மாதவி என் பெயர் கேட்குமளவிலேயே என்னை இன்னார் என்று உணர்ந்து கொள்ளுவள், எங்ஙனமெனின்; கோவலன் திரை இரும் பௌவத்துத் தெய்வம் ஒன்று உண்டு எனக் கூறிக் கொடியிடை தன்னை என் நாமம் செய்த நல் நாள்-மணிமேகலையின் தந்தையாகிய கோவலன் அலையெறியும் பெரிய கடலிடத்தே எங்குலதெய்வம் ஒன்றுளது என்று என் வரலாற்றை மாதவி முதியோர்க்கு எடுத்துச் சொல்லித் தன் குழவியாகிய அவட்கு மணிமேகலை என்னும் என் பெயரையே சூட்டிய அந்த நல்ல நாளில்; என்க.

(விளக்கம்) நல்லாள்: மணிமேகலை. களிப்பு- ஈண்டு வாழ்க்கையின்பம் என்னும் பொருட்டு. பேரூர்- தலைநகரமாகிய பூம்புகார். ஒளித்துரு- வேற்றுருவம். உன்திறம்-உனக்கு. ஆங்கு-அவ்வாறு. அந்நாள் என்றது அக்காலத்தே என்பதுபட நின்றது. ஏது நிகழ்ச்சி- பழவினை விளைவுகள். தெய்வமாகலின் எதிர்காலத்து நிகழ்ச்சிகளாகிய உதயகுமரன் கொலையுண்ணல் முதலியவற்றைக் கருதி ஏதுநிகழ்ச்சி பலவுள என்று கூறுகின்றது. யான் வந்த வண்ணம் என்றது மணிமேகலா தெய்வமாகிய யான் வந்த வண்ணமும் என்பதுபட நின்றது.

இனி, சுதமதி, மாதவி இத்தெய்வத்தை அறியாளாகலின் தெய்வத்தால் எடுத்துப் போகப்பட்ட தன் மகட்கு என்னுறுமோ? என்று அஞ்சுதல் இயல்பாதல் பற்றிச் சொல்லாது விடுவாளாதலின், அத் தெய்வம் என்பெயர் கேட்குமளவிலேயே மாதவி என்னை அறிந்து கொள்வாள். மேலும் தன் மகட்கு ஏதம் சிறிதும் நிகழமாட்டாதென்று ஆறுதலும் அடைகுவள்; ஆதலால் நீ இவற்றை அஞ்சாது அவட்குக் கூறுக என்று தெளிவித்தற் பொருட்டு இக் கருத்தெல்லாம் அடங்க அவள் என்றிறம் உணரும் என்று கூறும் நுணுக்கம் உணர்க. பின்னும் அவள் அறிந்தமை எவ்வாறு என்னும் ஐயம் சுதமதிக்குப் பிறக்கு மாகலின் அவ்வையம் அகற்றுதற்கு அவ் வரலாற்றையும் அறிவித்தல் வேண்டிற்று.

மணிமேகலைக்குப் பெயர் சூட்டிய நாளில் கோவலன் எங்குல தெய்வம் ஒன்றுளது, அதன் பெயரையே இக் குழவிக் கிடுக என்று என் பெயரை இடுவித்த பொழுது என் வரலாற்றையும் மாதவி முதலியோர்க்குக் கூறினன்; இவ்வாற்றால் மாதவி என்னை அறிகுவள் என்றவாறு.

இனி, ஈண்டுக் கூறும் இச் செய்தியை

மாந்தளிர் மேனி மாதவி மடந்தை
பால்வாய்க் குழவி பயந்தன ளெடுத்து
வாலா மைந்நா ணீங்கிய பின்னர்
மாமுது கணிகையர் மாதவி மகட்கு
நாம நல்லுரை நாட்டுது மென்று
தாமின் புறாஉந் தகைமொழி கேட்டாங்
கிடையிருள் யாமத் தெறிதிரைப் பெருங்கடல்
உடைகலப் பட்ட வெங்கோன் முன்னாள்
புண்ணிய தானம் புரிந்தோ னாகலின்
நண்ணுவழி யின்றி நாள்சில நீந்த
இந்திரன் ஏவலின் ஈங்கு வாழ்வேன்
வந்தே னஞ்சன் மணிமே கலையான்
உன்பெருந் தானத் துறுதி யொழியாது
துன்ப நீங்கித் துயர்க்கடல் ஒழிகென
விஞ்சையிற் பெயர்த்து விழுமந் தீர்த்த
எங்குல தெய்வப் பெயரீங் கிடுகென
அணிமே கலையார் ஆயிரங் கணிகையர்
மணிமே கலைஎன வாழ்த்திய ஞான்று
மங்கல மடந்தை மாதவி தன்னோடு
செம்பொன் மாரி செங்கையிற் பொழிய
………………………கருணை மறவ!

எனவரும் சிலப்பதிகாரத்து. அடைக்கலக் காதையில்(22-53) மாடல மறையோன் கூற்றானும் உணர்க.

மாதவிக்கு யான் நேரிலே தோன்றியும் உவகை கூறியுளேன்; ஆதலின் அவள் அறிகுவள் என்று அத் தெய்வம் கூறுதல்

35-40: நள்ளிருள்………போயபின்

(இதன் பொருள்) நள் இருள் கனவு அகத்தே நனவு போல- செறிந்த இருளையுடைய இடையாமத்தே துயிலிலாழ்ந்திருந்த அம் மாதவியின் கனவிலே நனவிலே தோன்றுமாறு போல அவள் நன்குணர்ந்து கொள்ளும்படி உருவங் கொண்டு தோன்றி; காமன் கை அறக் கடுநவை அறுக்கும் மாபெருந் தவக்கொடி ஈன்றனை என்றே உரைத்தேன்- நங்காய்! காம வேளின் குறும்பு தன்பாற் செல்லாமையாலே கையறவு கொள்ளும்படி பெருந் துன்பத்திற் கெல்லாம் பிறப்பிடமாகிய பிறவிப் பிணியை அறுத்தொழிக்கும் மிகப் பெரிய நோன்புகளாகிய நறுமண மலர்களைப் பூத்தற் கியன்றதொரு தெய்வப்பூங்கொடியையே நீ பெற்றுள்ளனை நீடூழி வாழ்க! என்று அவளை வாழ்த்தியுமிருக்கின்றேன்; ஈங்கு இவ்வண்ணம் ஆங்கு அவட்கு உரை என்று-ஈங்கு இப்பொழுது கூறுகின்ற இந் நிகழ்ச்சியையும் நீ ஆங்கு அவள்பாற் சென்று கூறக்கடவை என்று சுதமதிக்குப் பணித்து; அருந்தெய்வம் ஆங்கு அந்தரத்து எழுந்து போனபின்-காண்டற்கரிய அம் மணிமேகலா தெய்வம் அப்பொழுதே அவள் கட்புலங் காண விசும்பிலே எழுந்து மறைந்து போனபின்பு; என்க.

(விளக்கம்) நள்ளிருள்-என்றது மாதவி துயிலில் ஆழ்ந்திருந்த இடையாமம் என்பதுபட நின்றது. காமன் கையற என்றது-காமன் தன் செயலில் இவள்பால் தோல்வியுற்று வருந்த என்பதுபட நின்றது. இனி இவள் துறவுபூணுவதால் தன் வெற்றிக்கு இனி இவள் துணையாகாள் என்று காமன் கையறவு கொண்டான் என்பது மொன்று. கடுநவை என்றது பிறப்பினை. நோன்பாகிய மலர்களை மலரும் பூங்கொடி போல்வாள் என்க.

எழுபிறப்புந் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின்    (குறள்-92)

என்பதும்,

தம்மிற் றம்மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லா மினிது   (குறள்-68)

என்பதும் கருதி மாதவி மகிழுமாற்றால் மணிமேகலா தெய்வம் அத்தகு மகவினைப் பெற்றாய் எனப் பாராட்டற் பொருட்டு மாபெருந்தவக் கொடியீன்றனை என ஓகை கூறினேன் என்று சுதமதிக்குக் கூறிய படியாம். கனவிற் பெரும்பாலன விழிப்புற்ற பின்னர்த் தெளிவாகத் தோன்றா அத்தகைய கனவன்று, அவள் நெஞ்சில் அழியாது பதிவுற்றிருக்கும் கனவு என்பது தோன்ற நனவே போலக் கனவகத் துரைத்தேன் என்றது. யான் ஈங்குக் கூறிய இந் நிகழ்ச்சியை நான் கூறியவாறே கூறிக் காட்டுக என்பதற்கு ஈங்கிவ் வண்ணம் ஆங்கவட்குரை என்று பணித்தது எனலுமாம்.

சுதமதி துயரொடு சக்கரவாளக் கோட்டம் புகப்போதலும் புகார் நகரத்து நள்ளிரவு வண்ணனையும்

(42 ஆம் அடி முதலாக 86 ஆம் அடி முடியுந்துணையும் நள்ளிரவின் வண்ணனையாய் ஒரு தொடர்)

41-49: வெந்துயர்…….. திரியவும்

(இதன் பொருள்) சுதமதி வெம்துயர் எய்தி ஆங்கு எழுந்து- சுதமதி மணிமேகலையின் பிரிவாற்றாமையாலுண்டான வெவ்விய துன்பத்தை எய்தி அம் மலர்பொழிலின்கண் அவ்விடத்தினின்றும் எழுந்து செல்பவள்; அகல் மனை அரங்கத்து ஆசிரியர் தம்மொடு வகை தெரி மாக்கட்கு வட்டணை காட்டி- அகன்ற தமதில்லத்திலே இயற்றப்பட்ட ஆடலரங்கத்திலே அக் கலைப் பயிற்சி செய்விக்கும் இயலாசிரியனும் ஆடலாசிரியனும் யாழாசிரியனும் குழலோனும் தண்ணுமையோனுமாகிய ஆசிரியரோடிருந்து ஆடற்கலையின் வகைகளைப் பயின்று கொள்ளும் மக்கட்கு வட்டணை முதலிய அவிநய வகைகளை யெல்லாம் செய்து காட்டி ஆடல்புணர்க்கும் அரங்கு இயல் மகளிரின்-ஆடல்கலையைப் பயிற்றுவிக்கின்ற அரங்கத்தே ஆடும் மகளிர் அத் தொழிலை நிறுத்திக் கண் முகிழ்த்துயிலுதல் போன்றே; கூடிய குயிலுவக் கருவி கண் துயின்று-அவ்வாடன் மகளிரோடு கூடி முழங்கிய, குழல் முதலிய குயிலுவக் கருவிகளும் தத்தம் கண்ணவிந்து வாளாது கிடப்பவும்; பண்ணுக்கிளை பயிரும் பண் யாழ்த் தீந்தொடை கொளைவல் ஆயமோடு இசை கூட்டு உண்டுபண்களையும் திறன்களையும் நன்கிசைக்கின்ற பண்ணுறுத்தப் பட்ட இனிய ஒலிகளையுடைய நரம்புகளை வருடிப் பண்பாடுதலில் வல்ல மகளிரோடே கூடியிருந்து யாழிசையும் மிடற்றுப் பாடலும் பிறவும் ஆகிய இசையின்பங்களை இனிது நுகர்ந்து பின்னர்; விளைசேர் செங்கை மெல்விரல் உதைத்த வெம்மை வெய்து உறாது தன்மையில் திரியவும்-துயில் மயக்கத்தால் மகளிர் வளைமணிந்த சிவந்த தம்முடைய கைவிரலாலே மெல்லென வருடிய நரம்புகள் வெப்பம் வேண்டுமளவு வெய்தாக உறாமையாலே தளர்ந்து அவற்றிலெழும் இசை தன் தன்மையில் பிறழா நிற்பவும் என்க.

(விளக்கம்) ஆசிரியர்-ஆடற்கலைக் கின்றியமையாத குழலாசிரியர் முதலியோர். வட்டணை- வர்த்தனை; கமலவர்த்தனை. அஃதாவது கைத்தலங் காட்டல். இதனை,  தோற்பொலி முழவும் யாழுந் துளைபயில் குழலு மேங்கக் காற்கொசி கொம்புபோலப் போந்து கைத்தலங்கள் காட்டி எனவரும் சிந்தாமணிக்கு ஆசிரியர் நச்சினார்க்கினியர் வலக் கால் முன் மிதித்தேறி வலத்தூணைச் சேர்ந்து கைத்தலங் காட்டுதல் கமலவர்த்தனை என்னும் விளக்கவுரையானு முணர்க. மாக்களை என்பதற்கு முதனீண்டதெனக் கொண்டு தம்மக்கட்கு எனக் கொள்க. ஆடற்கலையைக் கற்பிக்கும் மகளிர் என்க. குயிலுவக் கருவி குழல் முதலிய இசைக் கருவிகள். இதனை கூடிய குயிலுவக்  கருவிக ளெல்லாம் குழல் வழி நின்ற தியாழே யாழ் வழித் தண்ணுமை நின்றதுதகவே, தண்ணுமைப் பின் வழி நின்றது முழவே முழவொடு கூடிநின் றிசைத்த தாமந் திரிகை என்பதனானுமுணர்க. (சிலப். 3:138-142) பண்ணும் கிளையும் என்க. கிளை- திறம். கொளை- பண். துயில் மயக்கத்தாலே மெல்விரலால் மெல்ல வருடலின் நரம்பில் வெப்பம் வெய்தாக உறதாக ஒலி தன்மையில் திரியவும் என்க.

இதுவுமது

50-59: பண்பில்…… வதியவும்

(இதன் பொருள்) பண்பு இல் காதலன் பரத்தமை நோனாது- தமது பாடறிந்தொழுகும் பண்பற்றவராகிய தம் காதலர் பரத்தையரோடு கூடியொழுகும் ஒழுக்கத்தைப் பொறாத குலமகளிர்; உண் கண் சிவந்து-அவர்பா லெழுந்த சினத்தாலே தம்மையுண்ட கண்கள் சிவக்கப் பெற்று; தெருட்டவும் தெருளாது ஊடலொடு துயில்வோர்- தம் கணவர் தம் பள்ளியிடத்தே வந்து தமது குற்றமின்மையைக் கூறி ஊடலுணர்த்தா நிற்பவும் ஊடல் தீராதாராய்ப் பொய்த்துயில் கொள்பவர்; விரைப் பூம்பள்ளி வீழ்துணை தழுவவும்- தம் சினத்திற்கஞ்சி மணமலர் பரப்பிய அப் பள்ளியிலே ஒரு புறத்தே கிடக்கின்ற தம்மால் விரும்பப்படும் அக் காதலரைத் துயில் மயக்கத்தாலே தழுவுவார் போலத் தழுவிக் கொள்ளவும் என்க.

(விளக்கம்) காதலன் பரத்தமை நோனாது துயில்வோர் என்றது ஒருமைப் பன்மைமயக்கம். இதனை, அஃதை தந்தை அண்ணல் யானை அடுபோர்ச் செழியர் என்புழிப் போலக் கொள்க.

ஊடலொடு பொய்த்துயில் கொள்வோர், தம் ஆற்றாமையால் தம்மருகே அஞ்சிக் கிடக்கும் காதலரைத் துயில் மயக்கத்தாலே தம்மையறியாது தழுவுவார் போலத் தழுவவும் என்க. என்னை? குலமகளிர்க்குத் தங்காதலர் பரத்தைமை நோனாது கடிந்தொழுகல் கூடாமையான் இங்ஙனம் உபாயத்தால் தழுவினர் என்க. இதனை.

சேக்கை இனியார்பாற் செல்வான் மனையாளால்
காக்கை கடிந்தொழுகல் கூடுமோ கூடா

எனவரும் பரிபாடலினுங் காண்க.(பரி-20-86-7)

இதுவுமது

54-63: தளர்நடை…….நடுநாள்

(இதன் பொருள்) தளர் நடை ஆயிமொடு தங்காது ஓடி விளையாடு சிறு தேர் ஈர்த்து- தளர்த்த நடையையுடைய சிறாஅர் கூட்டத்தோடு கூடி ஓரிடத்தும் தங்கி இளைப்பாறுதலின்றி ஓடுதலைச் செய்து தாம் விளையாடுதற்கியன்ற சிறிய தேர்களை இழுத்து; மெய் வருந்தி-உடல் வருந்தி; அமளித்துஞ்சும் ஐம்படைத்தாலிக்குதலைச் செவ்வாய்க் குறுநடைப் புதல்வர்க்கு- அவ் வருத்தம் தீரப் பஞ்சணைமிசை ஆழ்ந்து துயில்கொண்டுள்ள ஐம்படைத்தாலி என்னும் பிள்ளைப் பணி பூண்டுள்ள மழலை பேசுகின்ற சிவந்த வாயையும் குறுகுறு நடக்கும் நடையையுமுடைய மக்களுக்கு; காவல் பெண்டிர் கடிப்பகை எறிந்து தூபம் காட்டித் தூங்கு துயில் வதியவும்- செவிலித் தாயர் ஐயவியைத் தூவி அகிற்புகை காட்டிய பின்னர் அவர் பக்கலிலே தாமும் மிக்க துயிலிலே ஆழ்ந்து கிடப்பவும்; இறை உறை புறவும் நிறை நீர்ப்புள்ளும் காஉறை பறவையும்-இல்லிறப்பிலே தங்குகின்ற புறாக்களும் நிறைந்த நீர் நிலைகளிலே மலரின் மேலுறைகின்ற பறவைகளும் பொழிலிலே உறைகின்ற பறவைகளும்; நாஉள் அழுந்தி- தத்தம் நா அலகினாடே அழுந்தி ஓலியவிந்துறங்கியிருப்பவும்; விழவுக்களி அடங்கி முழவுக்கண் துயின்று பழவிறல் மூதூர் பாயல் கொள் நடுநாள்- விழாவின் மகிழ்ச்சியாரவாரமும் அடங்கி முழவு முதலிய இசைக்கருவிகளும் தம் கண்களில் ஒலியெழாது அவிந்து கிடப்பவும் பழைதாகிய வெற்றியையுடைய முதுமையுடைய அப் பூம்புகார் நகரமே இவ்வாறு பள்ளி கொண்டிருக்கின்ற இரவின் நடுயாமத்தே என்க.

(விளக்கம்) தளர்நடை ஆயம் என்றது இளஞ்சிறாஅர் கூட்டத்தை அவர் ஆடும் பொழுது இளைப்பாற வேண்டும் என்று கருதி ஓரிடத்தும் தங்கியிருத்தலில்லை, இஃதவரியல்பு ஆகலின் தங்காது ஓடி என்றார்.

தேரில் ஏறி யின்புறுதற்கு மாறாக இவர் தேரினை ஈர்த்தலிலேயே பேரின்பம் எய்துவர், விளையாட்டினாலே மெய்வருந்திய வருத்தம் தீர இவர் பள்ளியில் ஆழ்ந்து துயிலுவர். இவர்க்குக் காவற் பெண்டிர் எறிந்து காட்டிப் பின் தாமும் துயில என்க. காவற் பெண்டிர்-செவிலித்தாயர். தூங்குதுயில்- மிக்கதுயில். கடிப்பகை-ஐயவி; வெண்சிறு கடுகு. ஐம்படைத்தாலி- திருமாலின் சங்கு முதலிய ஐந்து படைகளையும் பொன்னாற் செய்து கோத்ததொரு பிள்ளைப்பணி திருமால் காவற் கடவுளாதலின் மக்களைக் காத்தற் பொருட்டு அணிவது இவ் வைம்படைத்தாலி என்க.

இறை-இறப்பு. புறவு- புறா, நீர்ப்புள்-நீரில் வாழுமியல்புடைய பறவைகள். பறவைகள் துயிலுங் காலத்தே மிகவும் ஆழ்ந்து துயல்வன ஆதலின் அவ்வியல்பு தோன்ற நாவுள்ளழுந்தி என்றார். அழுந்தித் துயிலவும் அடங்கித் துயின்றும் மூதூர் பாயல்கொள் நடுநாள் என்க.

நள்ளிரவில் அந் நகரத்துள் நிகழும் நிகழ்ச்சிகள்

64-76: கோமகன்……அரவமும்

(இதன் பொருள்) கோமகன் கோயில் குறுநீர்க் கன்னலின்- சோழமன்னனுடைய அரண்மனையின்கண் நாழிகை வட்டிலின் உதவியாலே; யாமங் கொள்பவர் ஏத்தொலியரவமும்- பொழுதினை அளந்து காணும் கணிமாக்கள் அரசனை வாழ்த்தும் பாடலோடு தாங்கண்ட பொழுதினை நகரத்துள்ளார்க்கு அறிவிக்கின்ற அரச வாழ்த்துப் பாடலாலெழுகின்ற ஒலியும்; உறையுள் நின்று ஒடுங்கிய உண்ணா உயக்கத்து நிறை அழியானை நெடுங் கூவிளியும் கட்டப்பட்டிருக்கின்ற கொட்டிலினூடேயே நின்று கவளமும் கொள்ளாமையாலுண்டான மெய் வருத்தத்தோடே காம மிகுதியாலே நெஞ்சத்தின்கண் நிறையழிந்து யானைகள் தத்தம் காதற்றுணையைக் கருதி நீளிதாகப் பிளிறாநின்ற பிளிற்றொலியும்; தேர் வழங்கு தெருவும் சிற்றிடை முடுக்கரும்- தேரோடுதற்குரிய பெருந் தெருக்களிடத்தும் சிறிய வழியாகிய முடுக்குகளிடத்துள்; ஊர் காப்பாளர் எறி துடியோதையும்- நகரங்காக்கும் காவன் மறவர் முழக்கும் துடியும் முழக்கமும்; முழங்கு நீர் முன் துறைக் கலம்புணர் கம்மியர்- ஆரவாரிக்கின்ற கடற்றுறையிடத்தே மரக்கலம் இயைக்கின்ற கம்மத் தொழிலாளர்; துழந்து அடுகள்ளின் தோப்பியுண்டு அயர்ந்து பழஞ் செருக்கு உற்ற அனந்தல் பாணியும்- தம்மிலத்திலேயே துழாவிச் சமைத்த நெல்லாலியன்ற கள்ளைப் பருகித் தம்மை மறந்து முதிர்ந்த செருக்குடனே அக் கள் மயக்கத்தூடே பாடுகின்ற பாடலோசையும்; அரவாய்க் கடிப்பகை ஐயவிக் கடிப்பகை விரவிய மகளிர் ஏந்திய தூமத்து அரம் போன்ற வாயினையுடைய வேப்பிலையாகிய பேய்ப் பகையினையும் வெண்சிறு கடுகாகிய பேய்ப்பகையினையும் விரவியிட்ட தூபக்காலை மகளிர் கையிலேந்திய புகையினோடும் வந்து; புதல்வரைப் பயந்து புனிறுதீர் கயக்கம் தீர்வினை மகளிர்- மகவீன்றமையால் வாலாமையுடைய அணுமைக் காலம் தீர்ந்து தாயாராகிய மகளிர் ஈனுதலாலெய்திய கயக்கத்தை நீராடுதலாலே தீர்க்கின்ற தொழிலையுடைய குலமகளிர்; குளன் ஆடு அரவமும்- பிறர் தம்மை நோக்காமைப் பொருட்டு அவ்விடையிருள் யாமத்தே குளத்தின்கண் நீராடுதலாலே எழுகின்ற ஒலியும் என்க.

(விளக்கம்) கோமகன்: சோழமன்னன். கோயில்-அரண்மனை குறுநீர்க் கன்னல் -காலத்தை அளந்து காண்டற்குரியதொரு கருவி. அஃதாவது ஒரு வட்டிலின்கண் நீரை நிரப்பி அதன் அடியில் மிகச்சிறியதொரு துளையமைத்து அத் துளை வழியாக நீர் வடியும் பொழுதினை நொடி நாழிகை முதலிய காலக் கூறுபாடாக அறிதற்கு வரையிட்டுப் பொழுதினை அளந்து காண்டல். இதனை.

பொழுதளந் தறியும் பொய்யா மாக்கள்
தொழுது காண்கையர் தோன்ற வாழ்த்தி
எறிநீர் வையகம் செலீஇய செல்வோய்நின்
குறிநீர்க் கன்னல் இனைத்தென் றிசைப்ப

எனவரும் முல்லைப் பாட்டானும்(55-58) அறிக.

யாமங் கொள்பவர்- நாழிகைக் கணக்கர். அவர் அரசனுக்குச் சென்று நாழிகைக்குக் கவி சொல்லுவார் எனவும்,

பூமென் கணையும் பொருசிலையும் கைக்கொண்டு
காமன் திரியும் கருவூரா- யாமங்கள்
ஒன்றுபோ யொன்றுபோ யொன்றுபோய் நாழிகையும்
ஒன்றுபோ யொன்றுபோய் ஒன்று

என்றோர் எடுத்துக் காட்டும் தந்தனர் அடியார்க்கு நல்லார் (சிலப்-5: 49-உரை விளக்கம்)

உறையுள்-யானைக் கொட்டில். காமக்குணம் மேலிட்டிருத்தலால் கவளங் கொள்ளாது உடம்பு மெலிந்து வருந்தும்யானை நிறையழியானை எனத் தனித்தனி கூட்டுக.

துடி-ஒருவகைத் தோற் கருவி. கலம் புணர் கம்மியர் என்றது மரக்கலஞ் செய்யும் கம்மாளரை. இனி மரக்கலத்தில் சேர்ந்து தொழில் செய்வோருமாம். துழந்தடுதல்-துடுப்பினாலே துழாவிச் சமைத்தல். தோப்பி- நெல்லாற் சமைத்த ஒருவகைக் கள் இல்லடுகள்ளின் தோப்பி பருகி எனவரும் பெரும்பாணாற்றுப் படையும் நோக்குக(142). செருக்கு-ஈண்டுக் கள்ளினா லெய்திய வெறி. அது தானும் நெடுங்காலமாகப் பயின்று முதிர்ந்த வெறி யென்பார், பழஞ்செருக்கு என்றார். அணந்தர்-மயக்கம். எனவே வாய்தந்தன பாடும் பாட்டு என்க. பாணி- பாட்டு. அரவாய்- வேப்பிலை: அன்மொழித்தொகை. ஐயவி வெண்சிறு கடுகு. கடிப்பகை- பேய்ப்பகை. அஃதாவது பேய் அஞ்சி யகலுதற்குக் காரணமாதலின் அதற்குப் பகையாகிய பொருள் என்றவாறு. புனிற்று மகளிராதலின்  இருவகைக் காப்பும் வேண்டிற்று. கயக்கம் என்றது மகப்பேற்றால் உண்டான பொலிவழிவினை.

மகவீன்ற சில நாளில் அக் கயக்கம் தீர்தற்கு நீராடி ஒப்பனை செய்தற்கேற்றதாக உடம்பு சீர்படும் அன்றோ, அத்தகைய செவ்வியைப் புனிறு தீர்ந்த செவ்வியாகக் கேடல் மரபு. அங்ஙனஞ் செவ்வியுறுதற்கு ஒன்பது நாட்கள் வேண்டும். பத்தா நாளிரவிற் சென்று குளிர்ந்த நீரினாடி வாலாமை கழிப்பர் எனக் கூறும் நூல் உளது என்பர் அறிஞர் இவ்வாறு நீராடும் வழக்கத்தை

கணவ ருவப்பப் புதல்வர்ப் பயந்து
பணைத்தேந் திளமுலை யமுத மூறப்
புலவுப்புனிறு தீர்ந்து பொலிந்த சுற்றமொடு
வளமனை மகளிர் குளநீ ரயர

எனவரும் மதுரைக் காஞ்சியானும் (600-603) உணர்க. குளன்: போலி

இதுவுமது

77-87: வலித்த….கலங்கி

(இதன் பொருள்) வலத்த நெஞ்சின் ஆடவர் அன்றியும்- தம்முள் ஒருவரோடொருவர் பகை கொண்டு கறுவு கொண்ட நெஞ்சினையுடைய பகை மறவர் யாருமில்லாதிருந்தும்; புலிக்கணத்து அன்னோர் பூத சதுக்கத்து-புலிக்கூட்டத்தையே ஒத்தவராகிய அந்நகரத்து மறக்குடிப் பிறந்த போர் வீரர்கள் பூத சதுக்கம் என்னுமிடத்திற்குத் தாமே வந்து; கொடித்தேர் வேந்தன் கொற்றம் கொள்க என- புலிக்கொடி யுயர்த்திய தேரையுடைய நங்கள் சோழ மன்னன் சென்ற போர்தொறும் வென்றியே கொள்வானாக என்று பராவி; இடிக்குரல் முழக்கத்து இடும்பலி ஓதையும்-இடி போன்று முழங்கும் வீர  முரசமுழக்கத்தோடே சதுக்கப்பூதத்திற்குத் தம்முயிரைத் தாமே வழங்குகின்ற ஆரவாரமும்; ஈற்றிளம் பெண்டிர் ஆற்றாப் பாலகர் கடுஞ்சூல் மகளிர் நெடும்புண் உற்றோர் தம் துயர் கெடுக்கும் மந்திரமாக்கள் மகவீன்ற இளமகளிரும் துன்பம் பொறாத பால்வாய்ச் சிறு குழவிகளும் தலைச் சூல் உற்றிருக்கின்ற மகளிரும் நெடிய புண்பட்டு வருந்துவோரும் ஆகிய இத்தகையோர் பேய் முதலியவற்றானும் பிணியானும் எய்திய துன்பத்தைத் தீர்த்தற் பொருட்டு மந்திரம் பண்ணும் மந்திரவாதியர்; மன்றப் பேய்மகள் வந்துகைக் கொள்கென நின்று எறி பலியின் நெடுங்குரல் ஓதையும்-வாகை மன்றத்திலே வதிகின்ற பேய்த்தலைவி வந்து யாம் தருகின்ற ஆடு கோழி முதலியவற்றின் குருதிப் பலியை ஏற்றருள்கவென்று அப் பேயை வண்ணித்துப் பாடிக் கூவி அழைக்கின்ற நெடிய அழைப்பாரவாரமும்; பல்வேறு ஓதையும் பரந்து ஒருங்கு இசைப்பக் கேட்டு உளங் கலங்கி- நரியின் ஊளையும் நாயின் குரைப்பும் ஆகிய இன்னோரன்ன பிற ஆரவாரங்களும் திசையெலாம் பரவி ஒருங்கே கேட்கும் பேராரவாரத்தைக் கேட்டு நெஞ்சம் அச்சத்தாலே கலங்கி; என்க.

(விளக்கம்) பகைவர் இல்லாத காலத்தேயும் மன்னவன் கொற்றம் நாளும் நாளும் உயர்க என்று வீரமறவர் தம் முயிரையே தெய்வத்திற்குப் பலியிடும் வழக்க முண்மையை,

ஆர்த்துக் களங்கொண்டோர் ஆரம ரழுவத்துச்
சூர்த்துக் கடைசிவந்த சுடுநோக்குக் கருந்தலை
வெற்றி வேந்தன் கொற்றங் கொள்கென
நற்பலி பீடிகை நலங்கொள வைத்தாங்
குயிர்ப்பலி யுண்ணும் உருமுக்குரன் முழக்கத்து
மயிர்க்கண் முரசமொடு வான்பலி யூட்டி

எனவரும் சிலப்பதிகாரத்தானும் (5:83-8) உணர்க. இதனை அவிப்பலி என்பர் ஆசிரியர் தொல்காப்பியனார். இது வீரச்சுவை: அவிப்பலி செய்வோர் பலிக்கும் வலிக்கும் தலைவரம்பாயோர் என்னும் மாபெரும் புகழ்க்குரியோர் என்ப.

ஈற்றிளம் பெண்டிர் முதலியோர் பிணி முதலியவற்றிற்கியன்ற
மருந்துண்ணவும் பத்தியங் காக்கவும் வலியற்றவர் ஆவர். இவர்க்கு மனவலியும் இன்மையின் பேயாலே எளிதிற் பற்றப்படுவர். ஆதலின் இவர் துயர் மந்திர மாக்களாலேயே தீர்க்கப்படும்; ஆதலால் இத்தகையோரைத் தனியே வாங்கி எண்ணினர். இச் செயல் தமக்குடன்பாடன்மையின் மந்திர மாக்கள் என்றார். என்னை? உயிர்க் குயிரீதல் மடமை என்பாள் சம்பாபதி

கொலை அறமாமெனும் கொடுங்தொழி லாளர்
அவலப் படிற்றுரை ஆங்கது

என முன்னைக் காதையில் (162-163) அறிவுறுத்துதலும் நினைக.

மன்றம்- வாகைமன்றம். காய்பசிக் கடும்பேய் கணங்கொண்டீண்டு மாமலர் பெருஞ்சினை வாகை மன்றமும் என் முன்னும் கூறினமை (சக்கர. 82-83) நினைக.

நின்றெறி பலி என்றது ஆடு கோழி முதலியவற்றின் குருதியிற் குழைத்த சோற்றினை வானத்தே எறியும் பலி என்றவாறு. இவ்வோசையெல்லாம் சுதமதி கேட்டுக் கலங்கி என்க.

சுதமதி உலக வறவியிற் புகுதல்

87-93: ஊட்டிருள்…….இருத்தலும்

(இதன் பொருள்) முருந்து ஏர் இளநகை ஊட்டு இருள் அழுவத்து பூம்பொழில் நீங்கி-முருந்து போன்ற கூர்த்த வெள்ளிய பற்களையுடைய அச் சுதமதியானவள் காரரக்கின் குழம்பினை ஊட்டினாற் போன்று பெரிதும் இருண்டுகிடக்கும் பரம்பினையுடைய அந்த உவவனமாகிய பூம்பொழிலினின்றும் நீங்கி; திருந்து குடபால் எயில் சிறுபுழை போகி-அழகிய மேற்றிசைமதலி னமைந்த சிறிய வாயிலிற் புகுந்து சென்று; மிக்க மா தெய்வம் வியந்து எடுத்து  உரைத்த சக்கரவாளத்து ஆங்கண்- மிகவும் சிறந்த அருளுடைய பெரிய மணிமேகலா தெய்வம் வியந்து எடுத்துக் கூறிய சக்கரவாளக் கோட்டத்தே ஆங்கோரிடத்தே; பலர் புகத்திறந்த பகுவாய் வாயில்- வருவோர் பலரும் புகுதற் பொருட்டுத் திறந்தே கிடக்கின்ற பிளந்தவாய் போன்ற வாயிலிற் புகுந்து; உலக வறவியின் ஒருபுடை இருந்தாலும்-உலக வறவி என்னும் ஊரம் பலத்தே ஒரு பக்கத்திலே அமர்ந்திருத்தலும்; என்க.

(விளக்கம்) அருளுடைமைபற்றி மணிமேகலா தெய்வத்தை மிக்க மா தெய்வம் என்றார். பகுவாய்- பிளந்த வாய். வாய் போன்ற வாயில் என்க. உலகவறவி-பூம்புகார் நகரத்துப் பெரியதோர் ஊரம்பலம். அஃதுலகத்துள்ள மாந்தர்க் கெல்லாம் பொதுவிடம் என்பது புலப்பட அதற்கு அப் பெயர் இடப்பட்ட தென்க.

கந்தற்பாவை சுதமதியை விளித்தல்

94-105: கந்துடை……..கேளாய்

(இதன் பொருள்) நெடுநிலை உடைக் கந்து அந்தில்- நெடிதாக நிற்கும் நிலையினையுடைய தூணாகிய அவ்விடத்தே; காரணம் காட்டிய எழுதிய அற்புதப் பாவை- பண்டு மயன் என்பான் வருபவர் பிறப்பிற்குக் காரணமாகிய அவருடைய முற்பிறப்பு முதலியவற்றை அறிவித்தற் பொருட்டியற்றிய வியத்தகு படிமத்திலே உறைகின்ற தெய்வம் ஒன்று; மைத்தடங் கண்ணாள் மயங்கியருள் வெருவ- அச் சுதமதி பின்னும் அவ்விருளில் மயங்கி அஞ்சும்படி; திப்பியம் உரைக்கும் தெய்வக்கிளவியின்-இறந்த கால எதிர்கால நிகழ்ச்சிகளைக் கூறுகின்ற தெய்வத்தன்மையுடைய தனக்குரிய தெய்வ மொழியாலே பேசத் தொடங்கி; இரவி வன்மன் ஒரு பெருமகளே துரகத்தானைத் துச்சயன் தேவி- இரவி வன்மன் என்பவனுடைய ஒப்பற்ற பெருமையுடைய மகளே! குதிரைப்படை மிக்க துச்சயன் என்பவனுடைய மனைவியே! தயங்கு இணர்கோதை தாரை சாவு உற- விளங்குகின்ற மலர் மாலையணிந்த நின் தமக்கையாகிய தாரை என்பாள் பொறுக்ககில்லாது இறந்தொழியும்படி; மயங்கி யானை முன் மன்னுயிர் நீத்தோய்- மயக்கமுற்று யானை முன் சென்று நிலைபெற்ற உயிரை விட்டவளே!; காராளர் சண்பையில் கௌசிகன் மகளே- காராளர் மிக்கு வாழ்கின்ற சண்பை மாநகரத்தேயுறையும் கௌசிகன் என்னும் பார்ப்பனன் மகளே! மாருத வேகனொடு இந்நகர் புகுந்து தாரை தன்னொடு கூடிய வீரையாகிய சுதமதி கேளாய்- மாருதவேகன் என்னும் விச்சாதரன் கைப்பற்றின்மையாலே அவனோடு இப் பூம்புகார் நகரத்தே வந்து தாரையாகிய நின் தமக்கை மாதவியோடு கூடி யுறைகின்ற வீரையாகிய சுதமதியே! ஈதொன்று கேட்பாயாக! (என்று விளித்து முன்னிலைப்படுத்தி) என்க.

(விளக்கம்) நெடுநிலை உடைக்கந்து அந்தில் என மாறிக் கூட்டுக. காரணம்-இப் பிறப்பிற்குக் காரணமான பழம்பிறப்பு. காட்டிய: செய்யிய என்னும் வாய்பாட்டு வினையெச்சம்; காட்ட என்க.மயன் எழுதிய பாவை, அற்புதப் பாவை எனத் தனித்தனி கூட்டுக. மைத்தடங் கண்ணாள் என்றது சுதமதி என்னும் பெயராந்துணை. மயங்கி வெருவ என்க. திப்பியம்- தெய்வத் தன்மையான செய்தி. அஃதாவது, பழம்பிறப் புணர்த்துதல் எதிரது கூறல் முதலியன. தெய்வக்கிளவி- தெய்வத்திற் கியன்ற மொழி. அஃதாவது வாயாற் கூறாமல் வானொலி மாத்திரையாகவே கூறுதல்.

இரவிவன்மன்- அசோதர நகரத்து அரசன். சுதமதியின் முற் பிறப்பில் அவட்குத் தந்தையானவன்.

துச்சயன்- சுதமதியின் முற்பிறப்பிற் கணவனாயிருந்தவன். இவன் கச்சய நகரத்து மன்னன்.

தாரை- சுதமதியின் முற்பிறப்பிலே அவளுக்குத் தமக்கையாயிருந்தவள். வீரை என முற்பிறப்பிற் பெயர் பெற்றிருந்த சுதமதி, யானை யாலறையுண் டிறந்தாள்; அது பொறாமல் தாரை தானே உயிர் விட்டாள் என்பது கருத்து.

சண்பை- சீகாழி. அங்க  நாட்டிலுள்ள சம்பா நகரம் என்பாருமுளர். மயங்கி- கள்ளால் மயங்கி என்பதுபட நின்றது. தாரை மறுபிறப்பில் மாதவியாகப் பிறந்தாள்; வீரையாகிய நீ சுதமதியாகப் பிறந்து அவளோடு கூடினை என்றறிவித்தபடியாம்.

இனி, அன்புக் கேண்மை கொண்டு வாழ்பவர் இம்மை மாறி மறுமை எய்திய விடத்தும் மீண்டும் கூடி அவ்வன்பினை வளர்த்துக் கொள்வார் என்பது பௌத்த சமயத்தினர் கோட்பாடாதல் பெற்றாம். ஆசிரியர் இளங்கோவும் இக்கொள்கையை யுடையர் என்பதனைச் சிலப்பதிகாரத்து (30) வரந்தரு காதையின் நிகழ்ச்சிகளால் அறியலாம். மேலும் அவர்

நற்றிறம் புரிந்தோர் பொற்படி யெய்தலும்
அற்புளஞ் சிறந்தோர் பற்றுவழிச் சேறலும்

என்றோதியதற்கு ஈண்டுத் தாரையும் வீரையுமாகிய அற்புளஞ் சிறந்த உடன் பிறந்த மகளிரிருவரும், மறுபிறப்பில் மாதவியும் சுதமதியும் வேறு இடங்களினும் குடிகளினும் பிறந்திருந்தும் பற்றுவழி மீண்டும் கூடியது சிறந்த எடுத்துக் காட்டாதலும் அறிக.

இதுவுமது

104-110: இன்றேழ்………. நல்லாள்

(இதன் பொருள்) இன்று ஏழ் நாளில் இடை இருள் யாமத்து- இற்றைக்கு ஏழாநாளின் இரவின் இருள் செறிந்த இடையாமத்திலே; இலக்குமியாகிய நினக்கு இளையாள் தன் பிறப்பதனொடு நின்பிறப்பு உணர்ந்து ஈங்கு வரும்- முற்பிறப்பிலே இலக்குமி என்னும் பெயரோடிருந்த நின் தங்கை தன் முற்பிறப்பினையும் உன்னுடைய முற்பிறப்பினையும் அறிந்துகொண்டு இந் நகரத்திற்கு வருவாள் காண்!; அஞ்சல் என்று உரைத்தது அவ் உரை கேட்டு- ஆதலால் நீ அஞ்சாதே கொள்! என்று அக் கந்திற் பாவை தன் தெய்வக் கிளவியாலே தெரிந்துக் கூறியதாக அந்த மொழிகளைக் கேட்டு; நெஞ்சம் நடுங்குறூஉம் நேரிழைநல்லாள்- அச்சத்தால் தன்னுள்ளம் நடுங்குகின்ற அச் சுதமதி நல்லாள்; என்க.

(விளக்கம்) இடையிருள் யாமம்- நள்ளிரவு. இலக்குமி என்றது மணிமேகலையின் முற்பிறப்பின்கண் அவட்கெய்திய பெயரை. இதனால் மாதவியும் சுதமதியும் மணிமேகலையும் பிறப்பிலே நிரலே தாரையும் வீரையும் இலக்குமியும் என்னும் பெயர்களையுடைய ஒரு தாய்வயிற்றுடன்பிறந்த மகளிராயிருந்தனர் என்பது பெற்றாம். தெய்வம் கூறிற்றேனும் அது தெய்வமொழியாதல் பற்றியும் மகளிர் இயல்பு பற்றியும் சுதமதிக்கு அச்சமே பிறந்தது. என்னை?

அணங்கே விலங்கே கள்வர்தம் மிறையெனப்
பிணங்கல் சாலா அச்சம் நான்கே    (மெய்-8)

எனவரும் தொல்காப்பியம் அணங்கும் அச்சம் பிறத்தற்கு நிலைக்களமாம் எனக் கூறுதலும் நினைக. அணங்கு- தெய்வம். நேரிழை நல்லாள் என்றது வாளாது சுதமதி என்னும் பெயர் மாத்திரையாய் நின்றது.

(111 ஆம் அடிமுதலாக 124 ஆம் அடிமுடிய வைகறைப் பொழுதின் வண்ணனையாய் ஒரு தொடர்)

பூம்புகாரில் வைகறை யாமத்து நிகழ்ச்சிகள்

111-124: காவலாளர்……….பரந்தெழ

(இதன் பொருள்) காவலாளர் கண்துயில் கொள்ள- இரவெல்லாம் துயிலின்றி நகரங்காத்த காவற் றொழிலாளர் கண் மூடித் துயிலா நிற்பவும்; தூமென் சேக்கைத் துயில் கண் விழிப்ப-தூய மெல்லிய பஞ்சணையிற் றுயின்று கொண்டிருந்த காதலர்கள் கண்கள் துயிலுணர்ந்து விழித்துக் கொள்ளவும்; வலம்புரிச் சங்கம் வறிது எழுந்து ஆர்ப்ப- வலம்புரிச் சங்கங்கள் பொருளின்றி மங்கலமாக ஆரவாரிப்பவும்; புலம்புரிச்சங்கம் பொருளொடு முழங்க அறிவை விரும்புகின்ற புலவர் கூட்டம் கடவுள் வாழ்த்தாகிய பொருளோடு பாடி முழங்கா நிற்பவும்; புகர்முக வாரணம் நெடுங்கூ விளிப்ப-புள்ளிகளையுடைய முகத்தையுடைய யானைகள் தம்மைக் குளிர் நீராட்டும் பாகரை நெடிதாகக் கூவிப் பிளிறவும்; பொறி மயிர் வாரணம் குறுங்கூ விளிப்ப- புள்ளி பொருந்திய மயிரையுடைய கோழிச் சேவல்கள் குறிய கூவுதலாலே கதிர்வரவியம்பா நிற்பவும்; பணைநிலைப் புரவி பல எழுந்து ஆல- பந்தியிற் கட்டப் பெற்று நிற்றலையுடைய பலப்பலவாகிய குதிரைகளும் அந் நிலையை வெறுத்து நிலை யெர்ந்து கனையா நிற்பவும்; பணைநிலைப் புள்ளும் பல எழுந்து ஆல- மரக்கிளைகளிலே உறக்கத்தே நிலை பெற்ற காக்கை முதலிய பறவைகளும் எழுந்து ஆரவாரிப்பவும்; பூம்பொழில் ஆர்கை புள்ளொலி சிறப்ப- மலர்ப் பொழில்களினூடே நிறைந்துள்ள பறவைகளின் பாட்டொலி மிகா நிற்பவும்; பூங்கொடியார் கை புள்ளொலி சிறப்ப- மலர்க் கொடி போன்ற மகளிரின் கையிலணிந்த வளையல்களின் ஒலியும் மிகா நிற்பவும்; கடவுள் பீடிகை பூப்பலி கடைகொள்-இரவில் விழாக் கொள்ளும் கடவுளர்க்குப் பலிபீடங்களிலே மலர்ப்பலியிட்டு விழாவை முடிவு செய்யா நிற்பவும்; கலம்பகர் பீடிகை கடை பூம்பலி கடை கொள்-அணிகலம் விற்கும் அங்காடித் தெருவில் கடைகளெல்லாம் முற்றத்தே மலர்ப்பலி கொள்ளா நிற்பவும்; குயிலுவர் கடைதொறும் பண்இயம் பரந்து எழ-இசைக்கருவியாளர் உறையுமிடமெல்லாம் பண்ணிசையும் கருவியிசையும் பரவி எழாநிற்பவும்; கொடுப்போர் கடைதொறும் பண்ணியம் சிற்றுண்டி செய்து கொடுப்போர் கடைதோறும் சிற்றுண்டிகள்; பரந்து எழ- பரவுதல் செய்து மிகா நிற்பவும்; என்க.

(விளக்கம்) காவலளார்-ஊர்காப்பாளர்; தேர் வழங்கு தெருவும் சிற்றிடை முடுக்கரும் ஊர்காப்பாளர் எறிதுடி யோதையும் என இக் காதையில்(68-69) முன்னும் கூறப்பட்டமை யுணர்க. சேக்கைத் துயில்கண் என்றது காதலர் கண்களை துயில்வோர் விரைப் பூம்பள்ளி வீழ்துணை தழுவவும் என முன்னும்(52-53) கூறப்பட்டமை உணர்க. வலம்புரிச்சங்கம்- சங்குகளிற் சிறந்தது. இது மங்கலச் சங்கு புலம்-அறிவு. புகர்முக வாரணம்-யானை. பொறிமயிர் வாரணம்- சேவல். பொழில் ஆர்கை- பொழிலில் நிறைதலையுடைய. பூங்கொடியார் கைப்புள் என்றது-வளையலை. மாதர் இல்லத்தே தொழிலில் முனைதலின் வளைகள் மிக்கொலித்தன என்றவாறு. இனி, பூங்கொடியில் தாதுண்ணும் அறுகாற் சிறு பறவையின் இசையொலி எனினுமாம்.

கலம்பகர் பீடிகை-அணிகலம் விற்கும் அங்காடித் தெரு. கடை- அங்காடித் தெருவிலுள்ள பல்வேறு கடைகளும் என்க. கடை வாயிலில் வைகறையில் பூவிடுதங் மரபு.

குயிலுவர்-இசைக் கருவி குயிலுவோர். கூடிய குயிலுவக் கருவி கண் துயின்று என முன்னும் வந்தமை யறிக. பண்ணியம்- தின் பண்டங்கள். கொடுப்போர்- செய்து கொடுப்போர். இவர் உணவு விற்போர் என்க.

சுதமதி மாதவியைக் கண்டு மணிமேகலையைப் பற்றிக் கூறுதலும்; இருவர் நிலைமையும்

125-134:ஊர்துயில்………தானென்

(இதன் பொருள்) ஊர் துயில் எடுப்ப-இவ்வாறு அம் மூதூரில் வாழ்வாரையெல்லாம் உறக்கத்தினின்றும் எழுப்புதற்கு; உரவு நீர் அழுவத்துக் கார் இருள் சீத்துக் கதிரவன் முளைத்தலும் வலிமைமிக்க நீர்ப்பரப்பாகிய குணகடலினின்றும் கரிய இருளைத் துரந்து கதிரவன் தோன்றா நிற்பவும்(சுதமதி நல்லாள்) ஏ உறு மஞ்ஞையின் இனைந்து-அம்பேறுண்ட மயில் போன்று பெரிதும் உளம் வருந்தித் தன் மெல்லடிகள் வருந்துமாறு, மாநகர் வீதி மருங்கின் போகி-அப் பூம்புகார் நகரத்து வீதி வழியாக நடந்து சென்று; போய கங்குலிற் புகுந்ததை யெல்லாம் கழிந்த இரவிலே நிகழ்ந்த நிகழ்ச்சிகளை யெல்லாம்; மாதவி தனக்கு வழுவின்று உரைத்தலும்- மாதவிக்குச் சிறிதும் பிறழாமல் கூறியதனாலே; அவள் நல் மணி இழந்த நாகம் போன்று தன் மகள் வாராத் தனித்துயர் உழப்ப-அம் மாதவிதானும் தான் உமிழ்ந்த அழகிய மணியை இழந்துவிட்ட நாகப் பாம்பு போன்று தன் மகளாகிய மணிமேகலை மீண்டு வாராமையாலே எழுந்த மாபெருந்துன்பத்திலே அழுந்தா நிற்ப; துன்னியது உரைத்த சுதமதி- மணிமேகலைக்கு நிகழ்ந்ததனை மாதவிக்குக் கூறிய அச் சுதமதி தானும்; இன் உயிர் இழந்த யாக்கையின் இருந்தனள்- தனக்கினிய உயிரையே இழந்தொழிந்த உடம்புபோல இருப்பாளாயினள்; என்பதாம்.

(விளக்கம்) உரவுநீர்-கடல். ஆக்கல் அளித்தல் அழித்தல் என்னும் மூன்று பேராற்றலும் உடையதாகலின் அதற்கது பெயராயிற்று. உரவு-ஆற்றல். அழுவம்-பரப்பு. ஏ-அம்பு. இனைதல்-வருந்துதல். இஃது உள்ளத்தின்கண் எய்திய துயரத்திற்குவமை ஆதலின் அடிவருத்தத்தை வேறு கூறினர். போய கங்குல்-கழிந்த இரவு. எல்லாம்- எஞ்சாமைப் பொருட்டு. வழு-குற்றம்; ஈண்டுப் பிறழ்ச்சி. வாராத் துயர் என்புழி பெயரெச்சத் தீறு கெட்டது. தனித் துயர்- பெருந்துன்பம். சுதமதிதானும் எனல் வேண்டிய எச்சவும்மை செய்யுள் விகாரத்தால் தொக்கது.

இனி இக்காதையை- மணிமேகலையை மணிபல்லவத்திடை மணிமேகலா தெய்வம் வைத்து நீங்கி உதயகுமரன் இருந்தோன் முன்னர்த் தோன்றி மகனே! கோல் திரிந்திடின் கோள் திரியும் கோள் திரிந்திடின் வறங்கூறும் கூரின் உயிர் இல்லை. உயிர் வேந்தன் உயிர் என்னும் தகுதி இன்றாகும். அவத்திறம் ஒழிகென உரைத்தபின் சுதமதி தன்னைத் துயிலிடை நீக்கி அஞ்சல், மணிமேகலை யான், ஏது முதிர்ந்தது, இளங்கொடிக்கு; ஆதலின் பெயர்த்து வைத்தேன் இன்று ஏழ் நாளில் வந்து தோன்றும்.  ஒளியாள் ஈங்கு நிகழ்வன பலவுள. மாதவிக்கு உரையாய்! என்திறம் உணரும்! கனவகத்துரைத்தேன் உரை எனப் போயபின், சுதமதி எழுந்து கேட்டுக் கலங்கிப் போகி ஒரு புடை இருத்தலும், பாவை கிளவியின் மகளே! தேவி நீத்தோய், சுதமதி கேளாய் இளையாள் வரும் அஞ்சல் என்றுரைத்த உரை கேட்டு, நல்லாள் கதிரவன் முளைத்தலும் வருந்தப் போகி மாதவிக்கு உரைத்தலும், அவள் உழப்ப, சுதமதி இருந்தனள் என இயைத்துக் கொள்க.

துயிலெழுப்பிய காதை முற்றிற்று

Posts: 2463

Total likes: 48

Karma: +0/-0

Re: மணிமேகலை

« Reply #8 on: February 28, 2012, 09:00:05 AM »

  1. மணிபல்லவத்துத் துயருற்ற காதை

எட்டாவது மணிமேகலை மணிபல்லவத்துத் துயிலெழுந்து துயருற்ற பாட்டு

அஃதாவது: மணி பல்லத்தின்கண் மணிமேகலா தெய்வம் மணிமேகலையைத் துயில் கலையாமலே வைத்துப் போன பின்னர் அத்தீவகத்தில் துயில்கொண்டிருந்த மணிமேகலை வைகறையிலேயே வழக்கம்போல் துயிலுணர்ந்து நோக்கினவள் அவ்விடம் தான் கண்டிராத புதிய இடமாயிருத்தல் கண்டு யாதொன்றும் காரணங் காணமாட்டாளாய்ப் பெரிதும் திகைத்தனள். கதிரவன் தோன்றிய பின்னர் ஆங்கு எழுந்து சுற்றிப் பார்த்து மக்கள் வழக்கமும் இல்லாமையால் வருந்தித் தன் தந்தையை நினைந்து அழுதரற்றும் செய்தியைக் கூறுஞ் செய்யுள் என்றவாறு.

இதன்கண் மணிமேகலா தெய்வம் மணிமேகலையைத் துயிலக்கிடத்திய மணிபல்லவத்தின் வண்ணனையும் பூம்புகார் நகரத்து உவவனத்தே துயில்கொண்டு மணிபல்லவத் தீவின் கண் துயிலுணர்ந்த மணிமேகலை பண்டறி கிளையொடு பதியும் காணாளாய்க் கண்டறியாதன கண்ணிற் கண்டு மருள்பவளின் நிலைமையை இப் புலவர் பெருமான் தன்மை நவிற்சியாகக் கூறிக் காட்டும் புலமைத்திறமும் பெரிதும் போற்றத் தகுவனவாக அமைந்திருத்தல் காணலாம்.

மணிமேகலை மருண்டு தந்தையை நினைந்து அழுதரற்றும் பகுதி ஓதுபவர் உள்ளத்தை உருக்கம் இயல்பிற்றாக அமைந்துளது. மணிபல்லவத் தீவு அழகொழுகப் புனைந்துரைக்கப்பட்டுள்ளது. அப்பால் அத் தீவிலுள்ள புத்தபீடிகையின் வரலாறும் தெய்வத்தன்மையும் இக்காதையில் இனிது கூறப்பட்டுள்ளன.

ஈங்கு இவள் இன்னணம் ஆக இருங் கடல்
வாங்கு திரை உடுத்த மணிபல்லவத்திடை
தத்து நீர் அடைகரை சங்கு உழு தொடுப்பின்
முத்து விளை கழனி முரி செம் பவளமொடு
விரை மரம் உருட்டும் திரை உலாப் பரப்பின்
ஞாழல் ஓங்கிய தாழ் கண் அசும்பின்
ஆம்பலும் குவளையும் தாம் புணர்ந்து மயங்கி
வண்டு உண மலர்ந்த குண்டு நீர் இலஞ்சி
முடக் கால் புன்னையும் மடல் பூந் தாழையும்
வெயில் வரவு ஒழித்த பயில் பூம் பந்தர்  08-010

அறல் விளங்கு நிலா மணல் நறு மலர்ப் பள்ளித்
துஞ்சு துயில் எழூஉம் அம் சில் ஓதி
காதல் சுற்றம் மறந்து கடைகொள
வேறு இடத்துப் பிறந்த உயிரே போன்று
பண்டு அறி கிளையொடு பதியும் காணாள்
கண்டு அறியாதன கண்ணில் காணா
நீல மாக் கடல் நெட்டிடை அன்றியும்
காலை ஞாயிறு கதிர் விரித்து முளைப்ப
உவவன மருங்கினில் ஓர் இடம்கொல் இது!
சுதமதி ஒளித்தாய்! துயரம் செய்தனை!  08-020

நனவோ கனவோ என்பதை அறியேன்!
மனம் நடுக்குறூஉம் மாற்றம் தாராய்!
வல் இருள் கழிந்தது மாதவி மயங்கும்
மெல் வளை! வாராய் விட்டு அகன்றனையோ?
விஞ்சையின் தோன்றிய விளங்கு இழை மடவாள்
வஞ்சம் செய்தனள்கொல்லோ? அறியேன்!
ஒரு தனி அஞ்சுவென் திருவே வா! எனத்
திரை தவழ் பறவையும் விரி சிறைப் பறவையும்
எழுந்து வீழ் சில்லையும் ஒடுங்கு சிறை முழுவலும்
அன்னச் சேவல் அரசன் ஆக  08-030

பல் நிறப் புள் இனம் பரந்து ஒருங்கு ஈண்டி
பாசறை மன்னர் பாடி போல
வீசு நீர்ப் பரப்பின் எதிர் எதிர் இருக்கும்
துறையும் துறை சூழ் நெடு மணல் குன்றமும்
யாங்கணும் திரிவோள் பாங்கு இனம் காணாள்
குரல் தலைக் கூந்தல் குலைந்து பின் வீழ
அரற்றினள் கூஉய் அழுதனள் ஏங்கி
வீழ் துயர் எய்திய விழுமக் கிளவியின்
தாழ் துயர் உறுவோள் தந்தையை உள்ளி
எம் இதில் படுத்தும் வெவ் வினை உருப்ப  08-040

கோல் தொடி மாதரொடு வேற்று நாடு அடைந்து
வை வாள் உழந்த மணிப் பூண் அகலத்து
ஐயாவோ! என்று அழுவோள் முன்னர்
விரிந்து இலங்கு அவிர் ஒளி சிறந்து கதிர் பரப்பி
உரை பெறு மும் முழம் நிலமிசை ஓங்கித்
திசைதொறும் ஒன்பான் முழ நிலம் அகன்று
விதி மாண் நாடியின் வட்டம் குயின்று
பதும சதுரம் மீமிசை விளங்கி
அறவோற்கு அமைந்த ஆசனம் என்றே
நறு மலர் அல்லது பிற மரம் சொரியாது  08-050

பறவையும் முதிர் சிறை பாங்கு சென்று அதிராது
தேவர் கோன் இட்ட மா மணிப் பீடிகை
பிறப்பு விளங்கு அவிர் ஒளி அறத்தகை ஆசனம்
கீழ் நில மருங்கின் நாக நாடு ஆளும்
இருவர் மன்னவர் ஒரு வழித் தோன்றி
எமது ஈது என்றே எடுக்கல் ஆற்றார்
தம பெரும் பற்று நீங்கலும் நீங்கார்
செங் கண் சிவந்து நெஞ்சு புகையுயிர்த்துத்
தம் பெருஞ் சேனையொடு வெஞ் சமம் புரி நாள்
இருஞ் செரு ஒழிமின் எமது ஈது என்றே  08-060

பெருந் தவ முனிவன் இருந்து அறம் உரைக்கும்
பொரு அறு சிறப்பின் புரையோர் ஏத்தும்
தரும பீடிகை தோன்றியது ஆங்கு என்  08-063

மணிபல்லவத்தே மணிமேகலை துயிலுமிடத்தின் மாண்பு

1-12: ஈங்கிவள்………அஞ்சிலோதி

(இதன் பொருள்) இவள் ஈங்கு இன்னணம் ஆக- இப் பூம்புகார் நகரத்திலே மணிமேலையைப் பிரிந்து ஆற்றாமையால் பெரிதும் வருந்திய சுதமதி என்பாளின் நிலைமை இவ்வாறாக; இருங்கடல் வாங்கு திரை உடுத்த மணிபல்லவத்து இடை- பெரிய கடலினது நாற்புறமும் வளைந்து வந்து மோதுகின்ற அலைகளை அணிந்துள்ள மணி பல்லவம் என்னும் தீவினகத்தே; தத்து நீர் அடை கரை சங்கு உழுதொடுப்பின் முத்து விளை கழனி-தவழுகின்ற நீரை அடைக்கின்ற கரையினையும் சங்குகளால் உழப்பட்டு விதைத்த விதைப்பின்கண் முத்துக்களாகிய கூலம் விளைகின்ற வயல்களையும்; முரி செம்பவளமொடு விரை மரம் உருட்டும் திரை உலாப் பரப்பின்- கொடிகளிலே முரிந்த சிவந்த பவளக் கொடிகளையும் உடை கலங்களினின்றும் மிதந்த சந்தனம் முதலிய நறுமண மரங்களையும் சுமந்து வந்து உருட்டுகின்ற அலைகள் உலாவுகின்ற நெய்தனிலப்பரப்பினையும்; ஞாழல் ஓங்கிய தாழ் கண் அசும்பின்- புலிநகக் கொன்றை மரங்கள் உயர்ந்து வளர்ந்துள்ள தாழ்ந்த நன்னீர் ஊற்றுக் கண்களையுடைய ஈரம்புலராத நிலப்பகுதியினையும் ஆம்பலும் குவளையும் தாம் புணர்ந்து மயங்கி வண்டு உண மலர்ந்த- ஆம்பலும் குவளையுமாகிய கொடிகள் தம்முள் விரவிப் படர்ந்து கலந்து பசித்துவருகின்ற வண்டுகள் தாதுண்டு மகிழுமாறு மலர்ந்திருக்கின்ற; குண்டு நீர் இலஞ்சி- ஆழமான நீரையுடைய பொய்கைக் கரையினையும்; முடக்கால் புனையும் மடல் பூந் தாழையும் வெயில் வரவு ஒழித்த-அக்கரையின் மேனின்ற முடம்பட்ட காலையுடைய புன்னை மரமும் மடலாற்சிறந்த பூவினையுடைய தாழையும் தழைத்துச் செறிதலாலே வெயில் புகுதாதபடி தடுத்துள்ள; பயில் பூம் பந்தர்-பயிலுதற் கினிய பூக்களோடியன்ற நீழலின் கீழ்; அறல் விளங்கு நிலாமணல் நறுமலர்ப்பள்ளி- வரிவரியாகத் திகழா நின்ற நிலவொளி போன்ற நிறமமைந்த மணற்பரப்பின் மேல் மணிமேகலா தெய்வம் பரப்பிய நறிய மலராகிய பாயலின் மேலே; துஞ்சு துயில் எழூஉம் அம்சில் ஓதி-ஆழ்ந்து துயின்ற துயிலினின்றும் வழக்கம் போன்று எழுகின்ற மணிமேகலை; என்க.

(விளக்கம்) ஈங்கு இவள் என்றது புகார் நகரத்துள்ள சுதமதி என்றவாறு. இன்னணம்- இவ்வாறு இவள் இவ்வாறாக எனவே, இஃது இனி யாம், மணிமேகலா தெய்வம் விஞ்சையிற் பெயர்த்து மணி பல்லவத்திடை வைத்து நீங்கிய மணிமேகலையின் திறங் கூறுவாம் என்று குறிப்பாக நுதலிப் புகுந்தவாறாயிற்று. வாங்கு- வளைந்த. அடைகரையினையுடைய கழனி சங்கு உழுகழனி தொடுப்பின் கழனி முத்துவிளை கழனி என்று தனித்தனி கூட்டுக. இது சொல் மாத்திரையால் மருதத்திணை கூறியபடியாம். உழுதல் கூறவே வித்தலும் விளைபொருளும் கூறினார். சங்கு உழுது முத்தாகிய விதையை விதைப்ப முத்தாகிய கூலங்களே விளையும் கழனி என்றார். கழனி- மருதத்திணையில் விளைநிலம். முரி செம்பவளம்: வினைத்தொகை. கொடியில் முரிந்த செம்பவளம் என்றவாறு. விரை மரம்-சந்தன மரம் முதலியன. இவை உடை கலத்தினின்றும் மிதந்தவை. நீரினின்றும் மரங்களைக் கரை யேற்றுவார் அவற்றை உருட்டியே ஏற்றவர் ஆதலின் உருட்டுந்திரை என்றார். மரமுருட்டியவர் இளைப்புற்றுச் சிறிது வாளாதுலாவுதலும் இயல்பாதலின், இத் திரைகளும் அங்ஙனமே உலாவும் என்றார்.

ஞாழல்- புலிநகக் கொன்றை. தீவுகளின் கரையோரப் பகுதிகள் தாமே நன்னீர் ஊற்றெடுக்கும் ஊற்றுக் கண்களையுடையனவாய் எப்பொழுதும் நீர்க்கசிவுடையவாய் வளமுடையவாகவும் இருத்தல் இயல்பு. அவ்விடத்தே ஞாழல் முதலிய மரங்கள் செழித்து வளர்ந்துள்ளன. அசும்பு- நீர்க்கசிவுடைய நிலம். அவ்விடத்தே இலஞ்சியும் ஒன்றுளதாயிருந்தது. அதன்கரையில் புன்னையும் தாழையும் தழைத்தோங்கி வெயில் புகாதபடி தடுத்து நிழலிட்டிருந்தன. அதன்கீழ் நிலவொளி தவழும் மணற் பரப்பின் மேலே புதிய மலர்களைப் பரப்பி அம் மலர்ப் பாயலின் மேல் மணிமேகலா தெய்வம் தனது பேரருளுக்கு ஆளான மணிமேகலையைத் துயிலவிட்டு அத் தெய்வம் அகன்றது என்பது இதனால் இனிது பெற்றாம். கதிரவன் எழுமுன்னர்த் துயிலுணர்ந்து எழுகின்ற தன் வழக்கப்படியே மணிமேகலை துயிலெழுந்தாள் என்பது தோன்ற அந்நறுமலர்ப் பள்ளித் துஞ்சுதுயில் எழு மஞ்சில் ஓதி என்றார். என்னை? ஆண்டுத் துயிலுணர்த்துவார் பிறர் யாரும் இன்மையின் அப்பொழுது அங்ஙனம் துயிலுணர்ந் தெழுவது அவள் வழக்கம் என்பது போதருதலறிக. துஞ்சு துயில் என்றது துஞ்சுதல் போன்று தன்னையறியாது ஆழ்ந்து துயிலும் துயில் என்றவாறு. துஞ்சினாற் செத்தாரின் வேறல்லர் என்பார் வள்ளுவனார். நல்லுறக்கத்திற்கு இயல்பும் இதுவே என்றுணர்க.

மணிமேகலையின் மருட்கை நிலை

13-27: காதல்…….வாவென

(இதன் பொருள்) காதல் சுற்றமும் மறந்து கடைகொள் வேறு இடத்துப் பிறந்த உயிரே போன்று-அன்பு காரணமாகத் தனக்குத் தாயே தந்தையே மாமனே மாமியே இன்னோரன்ன உறவுத் தொடர்ப்பாட்டோடு தன்னைச் சூழ விருந்த சுற்றத் தாரை எல்லாம் ஒருசேர மறந்து இம்மை வாழ்க்கை இறுதி எய்த மீண்டும் வேறோர் இடத்தே சென்று புதிய பிறப்பினை எய்தியதோர் உயிர் போலவே; பண்டு அறிகளையொடுபதியும் காணாள்-முன்பு தான் பயின்றறிந்த தாய் முதலிய சுற்றத்தாரோடு தான் வாழ்தற் கிடமான புகார் நகரத்தையும் காணாதவளாகி; கண்டு அறியாதன கண்ணிற் காணா-முன்பு ஒரு பொழுதும் கண்டறியாத புதிய பொருள்களையும் இடத்தையுமே தன் கண்களாலே கண்டு மருளும் பொழுது; நீல மாக்கடல் நெட்டிடை அன்றியும் காலை ஞாயிறு கதிர்விரித்து முளைப்ப நீலநிறமுடைய பெரிய கடல் நெடுந்தூரத்திற் கிடத்தலின்றித் தன்னருகே கிடத்தலாலே அந்த விடியற்காலத்தே ஞாயிற்றுமண்டிலம் தன் கதிர்களை விசும்பிலே பரப்பி அக்கடலினின்றும் தோன்றுதல் கண்டு தான் இருக்கும் இடத்தை ஐயுற்று ஆராய்பவள்; உவவனம் மருங்கினில் இது ஓர் இடம் கொல்- நெருநல் யான் சுதமதியோடு மலர் கொய்ய வந்துபுக்க உவவனத்தினுள் அமைந்துள்ள ஓரிடமே இவ்விடம் ஆதல் வேண்டும். ஆம். ஆம். இஃதுவ வனத்தில் ஓரிடமே; ஆயின், சுதமதி யாண்டுப் போயினள்? அவள் நம்மை அசதியாடக் கருதி அயலிலே ஒளிந்திருப்பாள் என்று கருதி; சுதமதி ஒளித்தாய் துயரஞ் செய்தனை-சுதமதீ! சுதமதீ! நீ ஒளித்திருக்கின்றாய்காண்! விளையாடுஞ் செவ்வி இஃதன்று காண்! ஒளித்துறைதல் வாயிலாய் நீ எனக்குத் துன்பமே செய்தொழிந்தாய்!; நனவோ கனவோ என்பதை அறியேன்- அன்புடையோய்! யான் இப்பொழுது விழிப்பு நிலையிலிருக்கின்றேனா! அல்லது துயிலிடத்தே கனவுதான் கண்டு மருள்கின்றேனா! இவற்றுள் எந்நிலையினேன் என்று அறிகின்றிலேன்; மனம் நடுங்குறூஉம் மாற்றம் தாராய்-என் நெஞ்சம் அச்சத்தால் நடுங்குகின்றது ஆதலால் விளையாடாதே கொள்! மறுமொழி தருவாய்!; வல் இருள் கழிந்தது மாதவி மயங்கும் வலிய இரவு எப்படியோ கழிந்தொழிந்தது நம்மைக் காணாமையால் அன்னையாகிய மாதவி பெரிதும் மயங்கித்துன்புறுவாள் அல்லளோ? எல்வளை வாராய்-ஓ சுதமதி! இத்துணை கூறியும் நீ என்முன் வந்தாயில்லையே!; விட்டு அகன்றணையோ-அன்புடையோய் ஒரோவழி நீ என்னைத் தமியளாய் ஈண்டே துயில விட்டுப் போய்விட்டனையோ? அவ்வாறு போகவும் துணியாயே! விஞ்சையில் தோன்றிய விளக்கு இழைமடவாள் வஞ்சம் செய்தனள் கொல் அறியேன்-என்னிது! என்னிது! ஒரோவழி நெருநல் இரவு விந்தையுடையவளாய் நம்பால் வந்தெய்திச் சக்கரவாளக் கோட்டத்து வரலாறு கூறிக்கொண்டிருந்த மங்கை ஏதேனும் வஞ்சகச் செயல் செத்தொழிந்தனளோ? அவள் என்னாயினள் என்றும் அறிகின்றிலேனே! ஒரு தனி அஞ்சுவென் திருவேவா என- பெருந்தனிமையாலே எய்தும் துன்பத்திற்கும் அஞ்சுகின்றேன் அருட்செல்வமேயனைய சுதமதியே விரைந்து என்முன் வருதி! என்று பற்பலவும் கூறிக்கொண்டு; என்க.

(விளக்கம்) மணிமேகலா தெய்வத்தாலே முழுதும் வேறாய இடத்திலே விஞ்சையாற் பெயர்த்து வைத்த மணிமேகலைக்கு இம்மைமாறி வேறிடத்திற் பிறந்த உயிரை இப்புலவர் பெருமான் உவமையாக எடுத்துக்கூறும் புலமைத்திறம் நினைந்து நினைந்து மகிழற் பாலதாம்.

ஓரிடத்தே துயின்று அத்துயில் கலையாமலேயே மற்றோரிடத்தே பெயர்த்திடப்பட்ட ஒரு பெண் துயிலுணர்ந்து கொள்ளும் மருட்கையை இவர் எத்துணைத் திறம்படத் தன்மை நவிற்சியாகப் புனைந்துள்ளார், நோக்குமின்!

மணிபல்லவத்தின் கீழ்ப்பகுதியில் கடன் மருங்கிலமைந்தது மணிமேகலையை வைத்த இலஞ்சிக்கரை ஆதலால் கதிரவன் நீரினின்றே அணித்தாகத் தோன்றும் காட்சியை மணிமேகலை நன்கு கண்டனன் என்பது தோன்ற நீல மாக்கடல் நொட்டிடை யன்றியும் காலை ஞாயிறு கதிர் விரிந்து முளைப்ப எனக் கதிரவன் தோற்றத்தை விதந்தெடுத்து விளம்பினர்.

முன்னாளிரவு உவவனத்திலேயே இரவிடை இவள் துயில்கொண்டவளாதலின் இஃது உவவனத்தின்கண்ணமைந்த ஓரிடமே என்று ஊகிக்கின்றாள். அங்ஙனமாயின் நம்மோடிருந்த சுதமதி யாண்டுளள் என்று பின்னர் ஆராய்கின்றனள். மற்று அவளைக் காணாமையின், அவள் நம் பால் கழிபெருங் காதலுடையாள் ஆதலின் நம்மைக் கைவிட்டுப் போகத் துணியாள் ஆயின், அவள்? …….அவள் முன்பே துயிலுணர்ந்தவள் நம்மை எழுப்பவும் மனமின்றி இவள் தானே எழுக! என்றிருந்தவள் நாம் எழுந்து திகைப்பது கண்டு நகைப்பது கருதி இவ்விடத்திலே மறைந்துறைபவள் ஆதல் வேண்டும் என்று மணிமேகலை ஊகிக்கின்றாள்; இஃது இயற்கையோடு எத்துணைப் பொருத்தமாக அமைந்துளது காண் மின்! இங்ஙனம் ஊகித்தவள் உரத்த குரலில் சுதமதீ! சுதமதீ! சுதமதீ! என்று பன்முறை கூவி அழைத்திருப்பாள்; அங்ஙனம் அழைத்தாள் என்பதனைப் புலவர் பெருமான் அடுக்கிக் கூறாது சுதமதி ஒளித்தாய்! என ஒருமுறை விளித்தாள் போலக் கூறினரேனும் இதனைப் பாட்டிடை வைத்த குறிப்பால் யாம் உரையில் அடுக்கிக் கூறினாம்.

சுதமதி ஒளிந்துறைந்தாலும் அண்மையிலேயே ஒளிந்திருப்பாள் என்னும் கருத்தால் சுதமதி ஒளித்தாய் என அண்மை விளியால் விளித்தனள்; விளித்து நீ ஒளித்திருக்கின்றனை என்பது தெரிந்து கொண்டேன் எழுந்து வருதி என்பது இதன் குறிப்பாம். பின்னர்ப் பன்முறை விளித்தும் அவள் வாராமையாலே, இது கனவோ நனவோ என்பதை யறியேன் மனம் நடுங்குறூஉம் மாற்றந்தாராய் என்று தன்னிலை கூறி விரைந்து வெளிவர வேண்டுகின்றனள். பின்னும் சுதமதி அசதியாட ஒளிந்தே இருக்கின்றாள் என்றுட் கொண்டு அங்ஙனம் விளையாட்டயரும் செவ்வியோ இஃது என்று அவட்குப் பேதைமை யூட்டுவாள் வல்லிருள் கழிந்தது நம் வரவு காணாமையாலே மாதவி பெரிதும் மயங்குவளே அதனை நீ நினைந்திலையோ என அவள் விரைந்து வருதற்கு ஏதுவும் கூறி அழைக்கின்றாள். பின்னும் சுதமதி வாராமையால் முன்னாளிரவு தம்மோடு சொல்லாடி யிருந்த விஞ்சையிற் றோன்றிய விளங்கிழை மடவாள்நினைவு அவள் உள்ளத்தே அரும்புகின்றது. அவள் ஏதேனும் வஞ்சம் செய்திருப்பாளோ என்று ஐயுறுகின்றாள்; மருள்கின்றாள். பின்னும் சுதமதியே ஒரு தனி அஞ்சுவன் திருவே வா என்றிரந்து வேண்டுகின்றாள்.இத்துணையும் நிகழ்ந்தபின் சுதமதி ஈண்டில்லை. ஆதலின் அவ் வஞ்சவிஞ்சை மகளால் ஏதோ குறும்பு செய்யப்பட்டுளதோ என்று ஐயுறுகின்றாள்; இஃது உவவனம் அன்று போலும்! அதனை ஆராய்வல் என்னும் எண்ணத்தாலே எழுந்து ஆராயத் தலைப்படுகின்றனள். இப்புலவர் பெருமான் தாமே ஈண்டு அம் மணிமேகலையாய் மாறிவிடுகின்ற அவர்தம் வித்தகப் புலமையை எத்துணைப் புகழ்தாலும் மிகையாகாது. வாழ்க அவர் புகழும் அவர் வழங்கிய தண்டமிழ்க் காப்பியமும்.

மணிமேகலை எழுந்து திரிந்து இடம் ஆராய்தல்

28-35: திரைதவழ்……..காணாள்

(இதன் பொருள்) திரை தவழ் பறவையும் விரிசிறைப் பறவையும் எழுந்து வீழ் சில்லையும் ஒடுங்கு சிறை முழுவலும்- நீரின் மேலே தவழ்ந்து சென்று இரை தேர்கின்ற கடற்பறவைகளும் விரிந்த சிறகுகளோடு வானத்தில் பறந்து திரிந்து இரை தேர்கின்ற பறவைகளும் ஓரிடத்தினின்றும் மற்றோரிடத்திற்கு நீரினின்றும் எழுந்து பறந்துபோய் வீழுகின்ற சில்லைச்சாதிப் பறவைகளும்,ஓடுங்கிய சிறகுகளுடனே நீரினுள் முழுகித் தமக்கியன்ற இரையைப் பற்றிக்கொண்டு தலைதூக்கும் முழுவற் சாதிப் பறவைகளும் ஆகிய நால் வேறு வகைப்பட்ட பறவைகளும் நால் வேறு படை மறவர்களாகவும்; சேவல் அன்னம் அரசனாக-அவற்றுள் சேவலாகிய அன்னப் பறவையே அரசனாகவும்; பல் நிறப் புள்ளினம் பரந்து ஒருங்கு ஈண்டி-பல்வேறு நிறம் அமைந்த பறவைக்கூட்டம் பரந்து தனித்தனியிடத்தே குழுமி; பாசறை மன்னர் பாடி போல- பகை மன்னரிருவர் போர் ஆற்றுதற் பொருட்டு நால் வேறு படைகளுடனே வந்து பாசறையிலிருப்போர் ஒருவர்க்கொருவர் எதிர் எதிர் ஆகத் தத்தம் படையை எதிர் எதிரே விட்டிருந்தாற் போன்று; வீசு நீர்ப்பரப்பின் எதிர் எதிர் இருக்கும்-அலைஎறிகின்ற நெய்தனிலப் பரப்பிலே (துறையினது) இருபக்கங்களிலும் எதிர் எதிரே இருக்கின்ற கடற்றுறையும்; துறைசூழ் நெடுமணற் குன்றமும் யாங்கணும் திரிவோள்-அத் துறையைச் சூழ்ந்துள்ள நெடிய மணற் குன்றுகளும் ஆகிய எவ்விடத்தும் திரிந்து நோக்கி வருபவள்; பரங்கு இனம் காணாள் பண்டு தன் பக்கத்திலே காணப்படும் பொருள்களுக்கு இனமாகிய எப் பொருளையும் காணப் பெறாளாகி என்க.

(விளக்கம்) இவர் கடற்பறவையை அவை இரைதேருமாற்றாலேயே ஈண்டு நான்கு வகையாகப் பிரித்துக் காட்டுகின்றனர். அவையாவன; நீரின்மேல் தவழ்ந்து தமது தோலடியாலே நீரை உதைத்துச் சென்று எதிர்ப்படுகின்ற இரையை அலகாற் பற்றிக் கொள்வனவும்; விசும்பிலே பறந்த வண்ணமே திரிந்து இரையைக்காணும் பொழுது வீழ்ந்து பற்றிக் கொள்வனவும்,ஓரிடத்தினின்றும் மற்றோரிடத்திற்குப் பறந்துபோய் விழுந்து இரை தேர்ந்து பற்றிக் கொள்வனவும், சிறகொடுக்கி நீரினுள் முழுகி நீரினூடேயே இயங்கி ஆங்ககப்படும் இரையைப்பற்றிப் பின் தலை தூக்குவனவுமாம். இவற்றிற்கு(1. அன்னம், 2. சிரல், 3. கடற்காக்கை, 4. குளுவை முதலியவற்றை எடுத்துக் காட்டுகளாகக் கொள்க. இவற்றுள் அன்னச் சேவல் சிறந்திருத்தலின் அதனை அரசன் என்றார். நால் வேறுபடைகளுக்கு நால்வேறு பறவை இனம் காட்டினர். வீசு நீர்ப்பரப் பென்றது அலைதவழும் நிலப் பகுதியை. துறை கூறினர் ஆங்கு மக்கள் இலரேனும் மரக்கலங்கள் வந்து நங்கூரமிட்டு நிறுத்தப் படுவதும் மக்கள் கலத்தினின்றும் இறங்கித் தங்கியிருத்தலும் நிகழ்தலின் அதற்கான துறையும் அங்கு உண்டு என்பதுணர்த்தற்கு. இதனை,

வங்க மாக்களொடு மகிழ்வுட னேறிக்
கால்விசை கடுகக் கடல்கலக் குறுதலின்
மாலிதை மணிபல் லவத்திடை வீழ்த்துத்
தங்கிய தொருநாள் தானாங் கிழிந்தனன்
இழிந்தோன் ஏறினன் என்றிதை எடுத்து
வழங்குநீர் வங்கம் வல்லிருள் போதலும்
வங்கம் போயபின் வருந்துதுயர் எய்தி
அங்கு வாழ்வோர் யாவரும் இன்மையின்

எனவும்(14-79-86)

கம்பளச் செட்டி கலம்வந் திறுப்ப

எனவும் இந்நூலில் பிறாண்டும் வருவனவற்றாலறிக. (25:184)

இனி, இதனோடு

கம்புட் கோழியுங் கனைகுர னாரையுஞ்
செங்கா லன்னமும் பைங்காற் கொக்கும்
கானக் கோழியு நீர்நிறக் காக்கையும்
முள்ளு மூரலும் புள்ளும் புதாவும்
வெல்போர் வேந்தர் முனையிடம் போலப்
பல்வேறு குழூஉக் குரல்பரந்த வோதையும்

எனவரும் சிலப்பதிகாரப் பகுதியை (10.114-119) ஒப்பு நோக்குக.

மணிமேகலை தந்தையை நினைந்து அழுதல்

36-43: குரற்றலை…….முன்னர்

(இதன் பொருள்) குரல் தலைக் கூந்தல் குலைந்து பின் வீழகொத்துக் கொத்தாக அடர்ந்துள்ள தன் தலையின்கட் கூந்தல் சரிந்து பின்புறத்தே வீழுமாறு; அரற்றினள் கூஉய் அழுதனள் வாய்விட்டு அரற்றிக் கூவி அழுதவளாய்; ஏங்கி வீழ்துயர் எய்திய விழுமக்கிளவியில் தாழ்துயர் உறுவோள்-ஏங்கி நிலத்தில் வீழ்தற்குக் காரணமான துன்பமுடைய துயரந் தருகின்ற மொழிகளைக் கூறுதலோடே ஆழ்ந்த தனிமைத் துன்பத்தை நுகர்பவள்; தந்தையை உள்ளி-தன் அன்புத் தந்தையாகிய கோவலனை நினைவு கூர்ந்து; எம் இதின் படுத்தும் வெவ்வினை உருப்ப எம்மை இந்நிலையாமைக் காளாக்கிய வெவ்விய ஊழ்வினை வந்துருத்தலாலே; கோல் தொடி மாதரொடு வேற்று நாடு அடைந்து வைவாள் உழந்த- திரண்ட வளையலணிந்த காதலாளாகிய என் அன்னையுடனே வேற்றுவர் நாட்டிலே சென்று ஆங்குக் கூரியவாளே றுண்ணும் கொடிய துன்பத்தை நுகர்ந்த; மணிப்பூண் அகலத்து  ஐயாவோ என்று அழுவோள் முன்னர்- மணியணிகலன் அணியும் அழகிய மார்பினையுடைய ஐயாவோ என்று கதறி அழுகின்ற அம் மணிமேகலையின் முன்னர் என்க.

(விளக்கம்) குரல் தலைக்கூந்தல்- கொத்துக் கொத்தாகத் தலையிலுள்ள கூந்தல் என்க. துன்பத்தானாதல் இன்பத்தானாதல் நெஞ்சம் நெகிழ்ந்துழிக் கூந்தல் நெகிழ்தல் ஒரு மெய்ப்பாடாம்; இதனை கூழைவிரித்தல் என்பர் ஆசிரியர் தொல்காப்பியனார்(மெய்ப்-14) விழுமக் கிளவி- துன்பத்திற் பிறந்த சொல். துன்ப மிக்கவர் அன்புடையோரை உள்ளுதலியற்கை. மகளிர்க்கு அவ்வழி அழுகை வருதல் இயல்பு.

தந்தைக்கு வந்த வெவ்வினையே தம்மை இந் நெறியிற் செலுத்தியது என்னாமல் எம்மை இங்ஙனம் துன்புறும் நெறியிற் செலுத்தவந்த யாஞ் செய் வெவ்வினையே நும்மை வைவாள் உழப்பித்தது என்பாள் எம்மிதிற் படுத்தும் வெவ்வினை என்கின்றாள். மாதர்-காதல். மாதர் என்றாள் கண்ணகியின் கற்புச் சிறப்பு மேம்பட்டுத் தோன்றுதற்கு. ஐயா என்றது அத்தனே என்றவாறு.

மணிமேகலைக்குப் புத்த பீடிகை புலப்படுதல்

(44 ஆம் முதலாக, 42 ஆம் அடி முடியப் புத்த பீடிகையின் வண்ணனையாய் ஒரு தொடர்)

44-53: விரிந்திலங்…….ஆசனம்

(இதன் பொருள்) விரிந்து இலங்கு அவிர் ஒளிசிறந்து கதிர் பரப்பி- நாற்றிசையினும் பரவித்திகழும் பேரொளி இடையறாது மிகுதலாலே எப்பொழுதும் சுடரைப் பரப்பிக்கொண்டு, உரை பெறும் மும்முழம் நிலமிசை ஓங்கி- சிற்பநூலிற் கூறப்படுகின்ற முறைப்படி மூன்று முழம் நிலத்தினின்று முயர்ந்தம்; திசை தொறும் ஒன்பான் முழம் நிலம் அகன்று- நான்குதிசைகளினும் ஒன்பதுமுழம் நிலப்பரப்பின்மேல் அகன்றும்; மீமிசை-அப்பீடத்தின் உச்சியிலே நடுவிடத்தே, விதிமாண் ஆடியின் வட்டம் குயின்று- நூல்விதியினாலே மாண்புடைய பளிங்கினாலே வட்ட வடிவமான பீடமிட்டு; பதும் சதுரம் விளங்கி-அதன் நாப்பண் புத்தருடைய பாதபங்கயம் அழுந்திக் கிடந்த சதுரவடிவிற்றாகிய மேடையால் விளக்கமெய்தி; தேவர்கோமான்- அமரர்க்கு அரசனாகிய இந்திரன் இதுதான்; அறவோற்கு அமைந்த ஆசனம் என்று-அறத்தின் திருவுருவமாகிய புத்த பெருமான் எழுந்தருளுதற்குப் பொருந்திய இருக்கையாம் என்று சொல்லி, இட்ட மாமணிப் பீடிகை-இடப்பட்ட சிறந்த மணிகள் இழைத்த பீடிகையாதலாலே; மரம் நறுமலர் அல்லது பிற சொரியாது-அயலில் நிற்கின்ற மரங்கள் தாமும் தன்மேலே நறிய மணங்கமழும் புதிய மலர்களைக் சொரிவதல்லது பிறவற்றைச் சொரியப்படாததும்; பறவையும் உதிர் சிறை பாங்கு சென்று அதிராது பறவைகள் தாமம் உதிரும் இயற்கையையுடைய சிறகுகள் தமக்கிருத்தலாலே தன் பக்கலிலே தம் சிறகுகளை அடித்துப் பறத்தலில்லாததும்; பிறப்பு விளக்கு அவிர் ஒளி அறத்தகை ஆசனம்-தன்னைக் கண்டவர்க்கெல்லாம் அவரவர் முற்பிறப்பு விளங்கித் தோன்றுவதற்குக் காரணமாய் விளங்குகின்ற தெய்வத்தன்மையுடைய ஒளியையுடையதும் ஆகிய அறப்பெருந் தகையாளனாகிய புத்தருடைய இருக்கையாம்; என்க.

(விளக்கம்) அப்பீடிகை தன்னைக் கண்ட முற்பிறப்புக்களை யுணர்த்துவது. அவ்வாறே பறவைகளும் மரமும் பறவையும் அதன் தெய்வத்தன்மையை உணர்தலின் மரம் மலரன்றிப் பிறவற்றைச் சொரியாது. பறவை அதன் சிறகதிர்ந்து பறவாது என்றவாறு.

பரப்பி ஓங்கி அகன்று குயின்று விளங்கி அமைந்த ஆசனம் அது தானும் சொரியப் படாததும் அதிர்க்கப்படாததும் தேவர்கோன் இட்டதும் ஆகிய பீடிகை, அதுதானும் பிறப்பு விளங்கும் ஒளியையுடைய அறத்தகை ஆசனமுமாம் என இயைத்திடுக. அறத்தகை-புத்தர்.

இதுவுமது

54-63: கீழ்நில……ஆங்கென்

(இதன் பொருள்) கீழ்நில மருங்கின் நாகநாடு ஆளும் இருவர் மன்னவர் ஒருவழித் தோன்றி ஈது எமது என்றே எடுக்கல் ஆற்றார்- கிழக்குத் திசையிலுள்ள நாகநாட்டினை ஆளுகின்ற இருவேறு மன்னர்கள் அம் மணிபல்லவத்திலே ஒரே செவ்வியில் வந்து, இத் தீவு எம்முடையதாகலின் இம் மாமணிப்பீடிகையும் எமக்கே உரியதாகும் என்று இருவரும் தனித் தனியே உரிமை கொண்டாடி அதனைத் தத்தம் நாட்டிற்குக் கொண்டுபோக எண்ணித் தனித்தனியே நிலத்தினின்றும் பெயர்த்தெடுத்தற்குப் பெரிதும் முயன்றும் அது செய்யவியலாதாராகிய பின்னரும்; தம் பெரும் பற்று நீங்கலும் நீங்கார்-அதன்பால் பசைஇய தத்தம் அவாவினை விலக்குதலும் செய்யவியலாதாராய்த் தம்முடையதே என்னும் உரிமையை நிலைநாட்டுதற் பொருட்டு ஒருவரோடொருவர் இகலி; செங்கண் சிவந்து நெஞ்சு புகை உயிர்த்து தம் பெருஞ் சேனையோடு வெஞ்சமம் புரிநாள்-இயற்கையாகவே சிவந்துள்ள தங்கண்கள் சினத்தாலே மேலும் சிவக்க நெஞ்சம் புகையை உயிர்ப்பத் தத்தமக்குரிய பெரிய படைகளைத் திரட்டிக் கொண்டு வெவ்விய போர்த்தொழிலைச் செய்கின்றபொழுது; பெருந்தவ முனிவன்- பெரிய தவத்தினையுடைய வினையினீங்கி விளங்கிய அறிவினையுடைய முனைவனாகிய புத்தபெருமான் எழுந்தருளி; ஈது எமது இருஞ்செரு ஒழிமின் என்றே- இப் பீடிகை எமக்கே உரிமையுடையதாகும் ஆதலால் நீயிர் ஆற்றும் போரினை ஒழிமின் என்று இருவரையும் அமைதியுறச் செய்த பின்னர்; இருந்து அறமுரைக்கும்-அதன்மேலமர்ந்து அவ்விருவருக்கும் தமது அறத்தைச் செவியறிவுறுத்தியருளிய; பொருவு அறு சிறப்பின் புரையோர் ஏத்தும் தரும் பீடிகை தோன்றியது-ஒப்பற்ற சிறப்புண்மையாலே மேலோர் வாழ்த்தி வணங்குகின்ற அத் தரும பீடிகை மணிமேகலை கண்ணிற்குப் புலப்படுவதாயிற்று; என்பதாம்.

(விளக்கம்) நாவலந் தீவிற்குக் கிழக்கே கடலினூடமைந்த நாக நாட்டை ஆட்சி செய்யும் இருவேறு மன்னர் என்க. தீவு; தமக்கே உரியதாகலின் அதன் கண்ணமைந்த மாமணிப் பீடிகையும் எமக்கே உரியதாம் என்று உரிமை கொண்டாடி எடுக்க முயன்று இயலாமையால் தம்முடைய தென்னும் உரிமையை நிலைநாட்ட இருவரும் படை கூட்டிப் பெரும்போர் செய்தனர் என்பது கருத்து.

அவர் போரை ஒழித்து அவ்வரசர்க்கு அதன் மேலிருந்து புத்தர் தாமே அறமுரைத்தலாலே அப் பீடிகை பொருவறு சிறப்புடையதாயிற் றென்க.

மற்று அவ்வரசர் அதனைக் கண்டபோது அவர்க்கு அவர்தம் பழம் பிறப்புணர்ச்சி வாராமைக்குக் காரணம் அவர் உள்ளம் அன்பிற்படாது அவாவின்பாற் பட்டிருந்தமை என்க. அன்றி, புத்தன் எழுந்தருளித்தன்மேலமர்ந்து அறமுரைத்த பின்னரே அப் பீடிகைக்கும் அவ்வாற்றல் வந்துற்றதென்க கோடலுமாம்.

பற்று- பொருள்களின்பால் பசைஇய அறிவு. இருஞ்செரு- பெரும்போர். பெருந்தவ முனிவன்: புத்தன். உலகிலுள்ள பிற புத்த பீடிகைகளுக்கு முற்பிறப்புணர்த்தும் ஆற்றலின்மையின் பொருவது சிறப்பின் தரும்பீடிகை என அதன் தனித்தன்மையை விதந்தோதினர்.

இதன் இக் காதையை- ஈங்கு இவள் இன்னணமாக, மணிபல்லவத் திடை நறுமலர்ப் பள்ளித் தூங்கு துயில் எழூஉம் அஞ்சில் ஓதி, காணாள் கண்டு, முளைப்பச் சுதமதி துயரஞ் செய்தனை அறியேன் மாற்றம் தாராய் மாதவி மயங்கும் அகன்றனையோ மடவாள் செய்தனள் கொல்லோ அஞ்சுவன் வா எனத் திரிவோள் காணாள் வீழ ஏங்கி உறுவோள் உள்ளி அழுவோள் முன்னர்ப் பீடிகையாகிய ஆசனம், முனிவன் அறமுரைக்கும் அத் தரும் பீடிகை தோன்றியது என இயைத்திடுக.

மணிபல்லவத்துத் துயருற்ற காதை முற்றிற்று.

 Logged

  1. பீடிகைகண்டு பிறப்புணர்ந்த காதை

ஒன்பதாவது மணிமேகலை மணிபல்லவத்திடைப் பீடிகை கண்டு பிறப்புணர்ந்த பாட்டு

அஃதாவது மணிமேகலை மணிபல்லவத்தில் நறுமலர்ப் பள்ளியினின்றும் துயிலுணர்ந்தவள் அவ்விடத்துப் புதுமையால் பெரிதும் மருண்டு ஞாயிறு தோன்றிய பின்னர் எழுந்து யாங்கணும் திரிபவள் தன்முன்னே தோன்றிய புத்தபீடிகையைக் கண்ணுற்றபொழுது அப் பீடிகையின் தெய்வத்தன்மை காரணமாகத் தனது பழம் பிறப்பு வரலாற்றைக் உணர்ந்துகொண்ட செய்தியைக் கூறுஞ்செய்யுள் என்றவாறு.

இதன்கண் ஏது நிகழ்ச்சி எதிர்ந்துள்ள காரணத்தாலே மணிமேகலை புத்தபீடிகையைக் கண்டவுடனேயே இறையன்பாலே அவட்கெய்திய மெய்ப்பாடுகளும், அதனை அன்புடன் வலம் வந்து நிலத்தில் விழுந்து வணங்கி எழுந்தவுடனே தனது முற்பிறப்பின் செய்திகளை எல்லாம் உணர்ந்துகோடலும், முற்பிறப்பிலே பிரமதருமன் என்னும் முனிவனைத் தான் கண்டவாறே தன் அகக்கண் முன்னர்க் காண்டலும், முற்பிறப்பிலே காயங்கரை என்னும் யாற்றின் கரையிலிருந்து அம்முனிவர் பெருமான் தனக் குரைத்தவை எல்லாம் அவ்வாறே நிகழ்கின்றன என்று விம்மித மெய்துதலும், தான் அசோதரம் ஆளும் இரவிவன்மன் என்னும் அரசனுக்கும் அமுதபதி என்னும் அரசிக்கும் மகளாய் இலக்குமி என்னும் அரசிளங்குமரியா யிருந்தமையும்; தான் , சித்திபுரம் என்னும் நகரத்து அரசன் தேவியாகிய நீலபதி என்னும் அரசி வயிற்றிற் றோன்றிய அரசிளங் குமரனாகிய இராகுலனுக்கு வாழ்க்கைத்துணைவியாகியதும் பிறவும் ஆகிய செய்திகள் பலவும் மருட்கையணி தோன்ற மிகவும் அழகாகப் புனைந்துரைக்கப்படுகின்றன.

ஆங்கு அது கண்ட ஆய் இழை அறியாள்
காந்தள் அம் செங் கை தலை மேல் குவிந்தன
தலைமேல் குவிந்த கையள் செங் கண்
முலை மேல் கலுழ்ந்து முத்தத் திரள் உகுத்து அதின்
இடமுறை மும் முறை வலமுறை வாரா
கொடி மின் முகிலொடு நிலம் சேர்ந்தென்ன
இறு நுசுப்பு அலச வெறு நிலம் சேர்ந்து ஆங்கு
எழுவோள் பிறப்பு வழு இன்று உணர்ந்து
தொழு தகை மாதவ! துணி பொருள் உணர்ந்தோய்!
காயங்கரையில் நீ உரைத்ததை எல்லாம்  09-010

வாயே ஆகுதல் மயக்கு அற உணர்ந்தேன்
காந்தாரம் என்னும் கழி பெரு நாட்டுப்
பூருவ தேயம் பொறை கெட வாழும்
அத்திபதி எனும் அரசு ஆள் வேந்தன்
மைத்துனன் ஆகிய பிரமதருமன்!
ஆங்கு அவன் தன்பால் அணைந்து அறன் உரைப்போய்
தீம் கனி நாவல் ஓங்கும் இத் தீவிடை
இன்று ஏழ் நாளில் இரு நில மாக்கள்
நின்று நடுக்கு எய்த நீள் நில வேந்தே!
பூமி நடுக்குறூஉம் போழ்தத்து இந் நகர்  09-020

நாக நல் நாட்டு நானூறு யோசனை
வியன் பாதலத்து வீழ்ந்து கேடு எய்தும்
இதன்பால் ஒழிக என இரு நில வேந்தனும்
மா பெரும் பேர் ஊர் மக்கட்கு எல்லாம்
ஆவும் மாவும் கொண்டு கழிக என்றே
பறையின் சாற்றி நிறை அருந் தானையோடு
இடவயம் என்னும் இரும் பதி நீங்கி
வட வயின் அவந்தி மா நகர்ச் செல்வோன்
காயங்கரை எனும் பேர் யாற்று அடைகரை
சேய் உயர் பூம்பொழில் பாடி யெய்து இருப்ப  09-030

எம் கோன் நீ ஆங்கு உரைத்த அந் நாளிடைத்
தங்காது அந் நகர் வீழ்ந்து கேடு எய்தலும்
மருள் அறு புலவ! நின் மலர் அடி அதனை
அரசொடு மக்கள் எல்லாம் ஈண்டிச்
சூழ்ந்தனர் வணங்கித் தாழ்ந்து பல ஏத்திய
அருளறம் பூண்ட ஒரு பேர் இன்பத்து
உலகு துயர் கெடுப்ப அருளிய அந் நாள்
அரவக் கடல் ஒலி அசோதரம் ஆளும்
இரவிவன்மன் ஒரு பெருந்தேவி
அலத்தகச் சீறடி அமுதபதி வயிற்று  09-040

இலக்குமி என்னும் பெயர் பெற்றுப் பிறந்தேன்
அத்திபதி எனும் அரசன் பெருந்தேவி
சித்திபுரம் ஆளும் சீதரன் திருமகள்
நீலபதி எனும் நேர் இழை வயிற்றில்
காலை ஞாயிற்றுக் கதிர் போல் தோன்றிய
இராகுலன் தனக்குப் புக்கேன் அவனொடு
பராவரும் மரபின் நின் பாதம் பணிதலும்
எட்டு இரு நாளில் இவ் இராகுலன் தன்னைத்
திட்டிவிடம் உணும் செல் உயிர் போனால்
தீ அழல் அவனொடு சேயிழை மூழ்குவை  09-050

ஏது நிகழ்ச்சி ஈங்கு இன்று ஆதலின்
கவேர கன்னிப் பெயரொடு விளங்கிய
தவாக் களி மூதூர்ச் சென்று பிறப்பு எய்துதி
அணி இழை! நினக்கு ஓர் அருந் துயர் வரு நாள்
மணிமேகலா தெய்வம் வந்து தோன்றி
அன்று அப் பதியில் ஆர் இருள் எடுத்து
தென் திசை மருங்கில் ஓர் தீவிடை வைத்தலும்
வேக வெந் திறல் நாக நாட்டு அரசர்
சின மாசு ஒழித்து மன மாசு தீர்த்து ஆங்கு
அறச் செவி திறந்து மறச் செவி அடைத்து  09-060

பிறவிப் பிணி மருத்துவன் இருந்து அறம் உரைக்கும்
திருந்து ஒளி ஆசனம் சென்று கைதொழுதி
அன்றைப் பகலே உன் பிறப்பு உணர்ந்து ஈங்கு
இன்று யான் உரைத்த உரை தெளிவாய் என,
சா துயர் கேட்டுத் தளர்ந்து உகு மனத்தேன்
காதலன் பிறப்புக் காட்டாயோ? என
ஆங்கு உனைக் கொணர்ந்த அரும் பெருந் தெய்வம்
பாங்கில் தோன்றி பைந்தொடி! கணவனை
ஈங்கு இவன் என்னும் என்று எடுத்து ஓதினை
ஆங்கு அத் தெய்வதம் வாராதோ? என
ஏங்கினள் அழூஉம் இளங்கொடி தான் என்  09-071

மணிமேகலை புத்தபீடிகையை வலம்வந்து வணங்கலும் பழம் பிறப்புணர்தலும்

1-8: ஆங்கது………உணர்ந்து

(இதன் பொருள்) ஆங்கு அதுகண்ட ஆயிழை அறியாள்-அம்மணிபல்லவத்தின்கண் புத்த பெருமானுக்கியன்ற அத் தருமபீடிகையைக் கண்ணாற் கண்டதுணையானே மணிமேகலை நல்லாள் தான் எய்திய துயரங்களைச் சிறிதும் அறியாள் என்பதென்னை? அவள் தன்னை முழுதும் அறியாததொரு நிலையினை எய்தினள்; காந்தள் அம்செங்கை தலைமேல் குவிந்தன-அவளுடைய செங்காந்தள்மலர் போன்ற சிவந்த கைகள் தாமே எழுந்து அவள் தலையின்மேல் கூம்பிக் கும்பிட்டன; தலைமேல் குவிந்த கையள் செங்கண் கலுழ்ந்து முலைமேல் முத்தத்திரள் உகுந்து- தாமே தலைமேலேறிக் குவிந்து கும்பிட்ட சிவந்த கைகளையுடைய மணிமேகலை அன்பு மேலீட்டாலே நெஞ்சுருகி அழுது தன் சிவந்த கண்களினின்றும் கண்ணீர்த்துளிகளை முத்துக்கள் போன்று மிகுதியாக முலைமேற் சொரிந்து; அதினிடம் முறை மும்முறை வலமுறை வாரா-அப் பீடிகையின் மருங்கே சென்று நூல்சொன்ன முறைப் படியே மூன்று முறை அதனை வலமுறையாகச் சுற்றி வந்து; கொடிமின் முகிலொடு நிலம் சேர்ந்தென்ன- கொடியுருவமுடைய மின்னலொன்று முகிலோடே நிலத்தில் வந்து பொருந்தினாற் போன்று; இறும் நுசுப்பு அலச ஆங்கு-ஒடிவது போன்று நுணுகிய தன்னிடை வருந்தும்படி அப் பீடிகையின் முன்னர்; வெறு நிலம் சேர்ந்து எழுவோள்- வெற்றிடத்திலே விழுந்து வணங்கி அந்நிலத்தினின்றும் எழுபவள்; பிறப்பு வழுவு இன்று உணர்ந்து- தனது முற்பிறப்பின் வரலாற்றைச் சிறிதும் குற்ற மில்லாமல் நன்குணர்தலாலே; என்க.

(விளக்கம்) அது-அத் தரும பீடிகை. ஆயிழை- மணிமேகலை. அறியாள் என்றது தன்னைக் கவ்விய துயரத்தோடு தன்னையும் அறியாமல் மெய்மறந்தாள் என்பதுபட நின்றது. புத்த பீடிகையைக் கண்டவுடன் மணிமேகலை தன்னை மறத்தற்குக் காரணம் பழவினை காரணமாக அவள் நெஞ்சத்தின்கண் நிகழ்ந்த இறையன்பு மேலிட்டமையே யாகும். ஆகவே இஃது அன்பின் மெய்ப்பாடேயாகும். பண்டும் பண்டும் பல பிறப்புக்களிலே புத்தன்பால் அடிப்பட்டுவந்த அன்புதான் வெளிப்படுதற்கியன்ற ஏது நிகழ்ச்சி எதிர்ந்தமையாலே ஈண்டு மணிமேகலைக்கு நிகழும் மெய்ப்பாடுகள் எல்லாம் அவ்விறையன்பின் மிகுதியால் பிறப்பனவே என்றுணர்க.

இது புதுமை பற்றிவந்த மருட்கை என்னும் மெய்ப்பாடு என்பாரு முளர். அது பொருந்தாது. என்னை? ஈண்டு மணிமேகலையின் பால்நிகழும் மெய்மறத்தலும் கைகுவித்தலும் கண்ணீரரும்பலும் பிறவும் இறையன்பு மிக்குழி யுண்டாகும் மெய்ப்பாடுகளோடு ஒத்திருத்தலும் மருட்கை யுற்றோர்க்கு இம் மெய்ப்பாடுகள் சிறிதும் ஒவ்வாதிருத்தலும் கீழே தரும் எடுத்துக் காட்டுக்களாலே இனிதினுணர்க அவற்றுள் இறையன்பின் மேலீட்டால் நிகழும் மெய்ப்பாடுகளை

கையுந் தலைமிசை புனையஞ் சலியன
கண்ணும் பொழிமழை யொழியாதே
பெய்யுந் தகையன கரணங் களுமுடன்
உருகும் பரிவின பேறெய்தும்
மெய்யுந் தரைமிசை விழுமுன் பெழுதரு
மின்றாழ் சடையொடு நின்றாடும்
ஐயன் திருநடம் எதிர்கும் பிடுமவர்
ஆர்வம் பெருகுத லளவின்றால்
(திருத்தொண்டர்-1438)

எனவரும் அருமைச் செய்யுளை ஈண்டு மணிமேகலை நிலைகூறும் பகுதியோடு ஒப்பு நோக்கி யுணர்க.

இனி, மருட்கை யுற்றோர் மெய்ப்பாடுகள் வருமாறு: அற்புத அவிநய மறிவரக் கிளப்பிற் சொற்சோர்வுடையது சோர்ந்தகையது மெய்ம்மயிர் குளிர்ப்பது வியத்தக வுடைய தெய்திய திமைத்தலும் விழித்தலும் இகவாதென் றையமில் புலவர் அறைந்தன ரென்ப என வரும் அடியார்க்கு நல்லார் மேற்கோளான் (சிலப். 3.12-25) உணர்க. அல்லதூஉம், புதுமை பற்றி வந்த மருட்கையணி முன்னைக் காதையிலே 15 ஆம் அடி முதலாக 43 ஆம் அடிகாறும் கூறிப் போந்தமையும் அறிக.

அதனிடம் முறை எனக் கண்ணழித்து முறை நூன்முறைப்படி என்க. மணிமேகலையின் திருமேனிக்கு மின்னற்கொடியும் அவள் கூந்தலுக்கு முகிலும் உவமை.

இறுநுசுப்பு: வினைத்தொகை. இறும் என்றையுறுதற்குக் காரணமான நுசுப்பு என்க. வெறுநிலம் என்றது வெற்றிடம் என்றவாறு. அலச-வருந்த. வழுவின்றுணர்ந்து என்புழி இன்றி என்னும் குற்றியலிகரம் குற்றியலுகரமாய்த் திரிந்தது.

மணிமேகலை பிரமதருமன் என்னும் முனிவனை முன்னிலைப்படுத்துப் பழம்பிறப்பி னிகழ்ச்சிகளை உரைத்தல்

9-16: தொழுதகை……..உரைப்போய்

(இதன் பொருள்) தொழு தகை மாதவ துணிபொருள் உணர்ந்தோய்- அமரரும் முனிவரும் தொழுதற்கியன்ற தகுதியையுடைய பெரிய தவத்தையுடையோய்! தெளிதற்குரிய மெய்ப்பொருளை உணர்ந்த பெரியோய்!; காயங் கரையின் நீ உரைத்ததை எல்லாம் வாயே ஆகுதல் மயக்கு அற உணர்ந்தேன்- காயங் கரை என்னும் பேரியாற்றின் கரையின்மேல் பூம்பொழிலின்கண்ணிருந்தருளி அடிச்சிக்குத திருவாய் மலர்ந்தருளிய செய்தி எல்லாம் உண்மையே ஆதலே அடிச்சி ஐயமும் திரிபுமாகிய மயக்கஞ் சிறிதும் இல்லாமல் உணர்ந்துள்ளேன்; காந்தாரம் என்னும் கழிபெரு நாட்டு பூருவதேயம் பொறைகெட வாழும் காந்தாரம் என்னும் பெயரையுடைய மிகப் பெரிய நாட்டின்கண்ணதாகிய பூருவதேயம் என்னும் நாட்டின்கண் நிலமகட்குப் பொறையாகிய தீவினையாளர் மிகாவண்ணம் செங்கோலோச்சி வாழ்கின்ற; அத்திபதி எனும் அரசு ஆள் வேந்தன் மைத்துனன் ஆகிய பிரமதரும-அத்திபதி என்னும் பெயரோடு அரசாட்சி செய்கின்ற மன்னனுக்கு மைத்துனனாகிய பிரமதருமனென்னும் சிறப்புப் பெயர் பெற்ற பெருமானே! ஆங்கு அவன்றன்பால் அணைந்து அறன் உரைப்போய்-அப் பூருவதேயத்தே அம் மன்னன்பாற் சென்று அறஞ்செவியறிவுறுத்துகின்ற நீதானும்; என்க.

(விளக்கம்) புத்தபீடிகையை வணங்கி எழும்பொழுதே பழம் பிறப்புணர்ச்சியோடே எழுந்த மணிமேகலை முற்பிறப்பிலே தான் காயங்கரை என்னும் யாற்றங்கரையிற் கண்டளவளாவிய பிரமதத்தமுனிவனைத் தனது அகக்கண் முன்னர்க் கண்டு அக்காலத்தே அவன் கூறியவையனைத்தும் உண்மையாகவே நிகழ்ந்து வருதலைக் கண்டு அம் முனிவனைப் பாராட்டுபவள் அவனை மாதவ எனவும் உணர்ந்தோய் எனவும் முன்னிலைப்படுத்திப் பாராட்டுகின்றபடியாம். காயங்கரை-ஓரியாறு உரைத்ததை என்புழி ஐகாரம் சாரியை. வாய்-உண்மை. காந்தாரம் என்னும் கழிபெரு நாட்டின் கீழ்த்திசை நாட்டை ஆளும் அரசன் எனினுமாம். பூருவம்- கீழ்த்திசை. பிரமதருமன் என்னும் முனிவன் அத்திபதி என்னும் அரசனுடைய மைத்துனனாயிருந்து துறவு பூண்டவன் என்பது இதனாற் பெற்றாம். பிரமதரும என்றது விளி. ஆங்கு-அப் பூருவதேயத்தில். அவன்: அத்திபதி என்னும் அரசன். உரைப்போய்: விளி.

இதுவுமது

17-28: தீங்கனி………..செல்வோன்

(இதன் பொருள்) நீள் நிலவேந்தே தீங்கனி நாவல் ஓங்கும் இத்தீவு இடை இன்று ஏழ் நாளில்- நெடிய நிலத்தை ஆளுகின்ற அத்திபதியரசே! ஈதொன்று கேட்பாயாக! இனிய கனிதரும் நாவல் மரம் நிலை பெற்று ஓங்கி நிற்கும் இந்நாவலந்தீவினிடத்தே இற்றைக்கு ஏழா நாளிலே; இரு நில மாக்கள் நின்று நடுக்கு எய்த- பெரிய நிலத்திலே வாழுகின்ற மாந்தரெல்லாம் செயலற்று நின்று அச்சத்தால் நடுக்கமுறும்படி; பூமி நடுக்குறூஉம் போழ்தத்து-நிலநடுக்கம் உண்டாகும் அப் பொழுது; இந்நகர் நாக நல் நாட்டு நால் நூறு யோசனை வியன் பாதலத்து வீழ்ந்து கேடு எய்தும்- நினது தலைநகரமாகிய இந்த நகரமும் கிழக்குத் திசையிலமைந்த நாகருடைய நல்ல நாட்டின்கண் நானூறு யோசனை நிலப்பரப்பும் அகன்ற பாதலத்திலே அழுந்தி அழிந்தொழியும் காண்! இதன் பால் ஒழிக என- ஆதலால் இங்கு நின்றும் புறம் போவாயாக! என்று அறிவுறுத்தியருளுதலாலே; இரு நில வேந்தனும்-அது கேட்ட பெரிய நிலத்தை ஆள்கின்ற அத்திபதி யரசன்றானும் நின் பணி தலைமேற்கொண்டு; மாபெரும் பேரூர் மக்கட்கு எல்லாம்- மிகமிகப் பெரியதாகிய தனது நகரத்தே வாழுகின்ற தன் குடிமக்கட் கெல்லாம்; ஆவும் மாவும் கொண்டு கழிக என்றே பறையில் சாற்றி-அச் செய்தியை அறிவிப்பவன் நுங்கள் ஆக்களையும் ஏனைய விலங்கினங்களையும் கைக்கொண்டு அப்பாற் சென்றுய்யுங்கோள் என்று பறையறைவிக்குமாற்றால் அறிவித்து; நிறை அருந் தானையோடு- தன்பாலமைந்த நிறைந்த வெலற்கரிய நால்வேறு வகைப்படைகளோடே; இடவயம் என்னும் இரும்பதி நீங்கி வடவயின் அவந்தி மாநகர்ச் செல்வோன்- இடவயம் என்னும் தனது பெரிய தலைநகரத்தினின்றும் புறப்பட்டு வடதிசையிலுள்ள அவந்தி என்னும் பெரிய நகரம் புகச் செல்லுபவன்; என்க.

(விளக்கம்) தீங்கனி நாவலோங்குமித் தீவிடை என்றது நாவலந்தீவத்தை. இதன் பெயர்க் காரணம் தெரித்தோதிய படியாம். இந் நகரும்-என்றது இடவய நகரத்தை. இந் நாகநன்னாட்டு நானூறி யோசனையும் எனல் வேண்டிய எண்ணும்மை தொக்கன. நாக நன்னாடு நாவலந்தீவின் கீழ்த்திசையிற் கடலின்கண்ணமைந்ததொரு பெரிய நாடு. இதனை முன்னைக் காதையினும்(54) கீழ் நில மருங்கின் நரகநாடு என்றுகுறிப்பிட்டமை யுணர்க.

பூமி நடுக்குறூஉம் போழ்தத்து என்றாரேனும் பூமி நடுக்குறும் என்னும் அப்போழ்தத்து என்றும் அறுத்தோதுக. விலங்குகளில் ஆக்கள் தம்முயிர் கொடுத்தும் காப்பாற்றப்படுஞ் சிறப்புடைமை பற்றி அதனைத் தனித்து வாங்கி ஏனையவற்றை மா என்னும் பொதுப் பெயரோ லோதியவாறு ஆவிற்கு அச்சிறப்புண்மையை

ஆவும் ஆணியற் பார்ப்பன மாக்களும்
பெண்டிரும் பிணியுடை யீரும்… …
எம்மம்பு கடிவிடுதும் நும்மரண் சேர்மின்எனா
அறத்தாறு நுவலும் பூட்கை

எனவரும் நெட்டிமையார் கூற்றானும்

பார்ப்பார் அறவோர் பசுப்பத் தினிப்பெண்டிர்
மூத்தோர் குழவி எனுமிவரைக் கைவிட்டு

எனவரும் கண்ணகியார் கூற்றானும் (சிலப்-21:53-4) இனிதினுணர்க

இதுவுமது

29-37: காயங்கரை…..அந்நாள்

(இதன் பொருள்) காயங்கரை யெனும் பேரியாற்று அடைகரை சேய் உயர் பூம் பொழில் பாடி செய்திருப்ப-காயங்கரை என்னும் பெரிய யாற்றினது நீரடைகரையிடத்தே மிகவும் உயர்ந்து வளர்ந்துள்ளதொரு பொழிலின்கண் அவ்வரசன் கட்டூரமைத்துப் படைகளோடு தங்கியிருந்தானாக; எங்கோன் நீ ஆங்கு உரைத்த அந்நாளிடை அந்நகர் தங்காது வீழ்ந்து கேடு எய்துதலும்- எம்பெருமானே நீ இடவயநகரத்தே கூறியவாறே அற்றைக்கு ஏழாநாளிலேயே அவ்விடவய நகரம் சிறிதும் எஞ்சாது பாதலத்திலே நில நடுக்கத்தாலே வீழ்ந்தழிந் தொழிதலும் மருள் அறு புலவ- பேதைமை அற்ற மெய்க்காட்சியாளனே; அரசொடு மக்கள் எல்லாம் நின் மலர் அடியதனை ஈண்டி சூழ்ந்தனர் வணங்கித் தாழ்ந்து பல ஏத்திய-அந் நிகழ்ச்சி வாய்மையே ஆதல் அறிந்த அத்திபதி யரசனோடு ஏனைய மக்களும் நின்னுடைய செந்தாமரை மலர் போன்ற திருவடியிற் புகல் புகுந்து நின்னைச் சூழ்ந்துகொண்டு வணங்கித் திருவடியிலே வீழ்ந்து நின் புகழ் பலவும் கூறி ஏத்தியதும்; அருள் அறம் பூண்ட ஒரு பேரின்பத்து-ஆதிபகவன் திருவாய் மலர்ந்தருளிய அனைத்துயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகுதலாகிய அருள் அறத்தை மேற்கொள்ளுமாற்றால் வந்துறும் ஒப்பற்ற பேரின்பத்தை எய்துவித்து; உலகு துயர் கெடுப்ப அருளிய அந்நாள்- நின்னைச் சரண்புகுந்த அம் மக்களே யன்றி இப் பேருலகத்து வாழும் மாந்தரனைவருடைய துயரத்தையும் போக்கி உய்யக் கொள்வான் திருவுளங் கொண்டு அவ்வருளறத்தை எல்லா மக்கட்கும் செவியறிவுறுத்தியதும் ஆகிய அந்தக் காலத்திலே; என்க.

(விளக்கம்) (28) செல்வோன் பாடி செய்திருப்ப என்க. பாடிகட்டூர்; படைவீடு. எங்கோன்: முன்னிலைப் புறமொழி. ஆங்கு-அவ்விடவய நகரத்தில். அந்நாள்-அற்றைக்கு ஏழாநாள். தங்காது- சிறிதும்எஞ்சாமல், சூழ்ந்தனர்: முற்றெச்சம். பூண்டமையால் வந்துறும் ஒரு பேரின்பம் என்க. அஃதாவது நிருவாண நிலை. அதனை எய்தினாலன்றித் துயரம் போகாமையின் அதனை ஏதுவாக்கினார். தாழ்ந்து பல ஏத்தியதும் அருளியதும் ஆகிய அந்நாள் என இயைக்க. அந்நாள் என்றது அந்தக்காலத்திலே என்பதுபட நின்றது.

மணிமேகலை தன் முற்பிறப்பின் வரலாறு கூறுதல்

38-47: அரவ…..பணிதலும்

(இதன் பொருள்) அரவக் கடல் ஒலி அசோதரம் ஆளும் இரவி வன்மன் ஒரு பெருந்தேவி- ஆரவார முடைய கடல் இடையறா தொலிக்குமாறு இடையறாத பேராரவாரமுடைய அசோதரம் என்னும் நகரத்திருந்து அரசாட்சி செய்கின்ற இரவிவன்மன் என்னும் அரசனுடைய முதன் மனைவியாகிய கோப்பெருந்தேவி அலத்தகச் சீறடி அமுதபதி வயிற்று இலக்குமி என்னும் பெயர் பெற்றுப் பிறந்தேன்- செம்பஞ்சிக் குழம்பூட்டிய சிறிய அடிகளையுடைய அமுதபதி என்பவளுடைய வயிற்றிலே அடிச்சி இலக்குமி என்னும் பெயருடையேனாய்ப் பிறந்திருந்தேன்; அத்திபதி எனும் அரசன் பெருந்தேவி அடிச்சிக்குப் பெதும்பைப் பருவம் வந்துற்றபோது யான், அத்திபதி என்னும் அரசனுடைய கோப்பெருந் தேவியும்; சித்திபுரம் ஆளும் சீதரன் திருமகள்- சித்திபுரத்தில் ஆட்சி செய்யும் சீதரன் என்னும் அரசனுடைய அழகிய மகளும் ஆகிய; நீலபதி என்னும் நேர் இழைவயிற்றின் காலை கதிர் ஞாயிறு போல் தோன்றிய- நீலபதியென்னும் நேரிய அணிகலன் அணிந்த அரசியின் திருவயிற்றிலே காலையில் தோன்றும் கதிர்களையுடைய ஞாயிறு போல் தோன்றிய; இராகுலன் தனக்குப் புக்கேன- இராகுலன் என்னும் கோக்குமரனுக்கு வாழ்க்கைத் துணையாகப் புகுந்தேன்; அவனோடும் பராவரும் மரபின் நின் பாதம் பணிதலும்; ஒருநாள் என் கணவனாகிய இராகுலனோடு வந்து யான் நின்னைக் கண்டு புகழ்தற்கரிய முறைமையினையுடைய நின் திருவடிகளிலே வீழ்ந்து வணங்கினேனாக அப்பொழுது என்க.

(விளக்கம்) அரவக்கடல் போன்ற ஒலியினையுடைய அசோதர நகரம் என்க. அலத்தகம்- செம்பஞ்சிக் குழம்பு. அமுதபதி: பெயர். இலக்குமி என்னும் பெயர் பெற்றுப் பிறந்தேன் என்றாரேனும் பிறந்து இலக்குமி என்னும் பெயர் பெற்றேன் என்பது கருத்தாகக் கொள்க.

சீதரன்- சீதர மன்னன். காலைக் கதிர் ஞாயிறுபோல் என்க. புக்கேன் என்றது வாழ்க்கைத் துணைவியாகப் புக்கேன் என்றவாறு. பராவு அரும்-பராவுதல் அரிய.

இதுவுமது

48-57: எட்டிரு……..வைத்தலும்

(இதன் பொருள்) எட்டு இரு நாளின் இவ் விராகுலன் தன்னை திட்டிவிடம் உண்ணும்- எம்பெருமான் அடிச்சியை நோக்கி இற்றைக்குப் பதினாறாநாள் நின் கணவனாகிய இந்த இராகுலனைத் திட்டிவிடம் என்னும் நாகம் உயிர் பருகிவிடும்; செல் உயிர் போனால் சேயிழை அவனொடு தீ அழல் மூழ்குவை- செல்லுதற்குரிய போகூழ் தலைப்பட்ட நின் கணவன் உயிர் போனக்கால் நீ அவனோடு ஈமத் தீயாகிய நெருப்பில் முழுகி உயிர் துறப்பாய் காண் என்றும்; ஈங்கு ஏது நிகழ்ச்சி இன்று ஆதலின்- அப்பால் இந் நாட்டில் நினக்குப் பழவினையாலுண்டாகும் நிகழ்ச்சி யாதும் இல்லையாதலின்; கவேரகன்னிப் பெயரொடு விளங்கிய தவாக்களி மூதூர் சென்று பிறப்பு எய்துதி- நீ கவேரன் மகவாகிய காவிரியின் பெயரை அடை மொழியாகப் பெற்றுக் கெடாத மகிழ்ச்சியையுடைய பழைமையுடைய காவிரிப்பூம் பட்டினத்திலே போய்ப் பிறப்பாய் காண் என்றும்; அணியிழை நினக்கு ஓர் அருந்துயர் வருநாள் மணிமேகலா தெய்வம் வந்து தோன்றி அழகிய அணிகலன்களையுடைய இலக்குமியே இன்னும் கேள், இம்மை மாறி மறுமையாகி அந்தப் பிறப்பிலே நின்னால் கடத்தற் கரிய ஒப்பற்ற துயர் (ஒன்று வந்துறும்) வந்துறுகின்ற அந்த நாளிலே, மணிமேகலா தெய்வம் என்னும் நின்குல தெய்வம் தானே நின்னை அத் துயரத்தினின்றும் எடுத்து நன்னெறிப் படுத்துதற்கு  எளிவந்து நின் கண்முன் தோன்றி; அன்று அப்பதியின்ஆர் இருள் எடுத்துத் தென் திசை மருங்கில் ஓர் தீவு இடைவைத்தலும்- அற்றை நாளிலேயே நள்ளிரவிலே நின்னை எடுத்துப் போய்த் தென்திசையிலமைந்த ஒரு தீவின்கண் இட்ட பின்னர்; என்க.

(விளக்கம்) இராகுலன்- முற்பிறப்பில் இலக்குமியா யிருந்த மணிமேகலையின் காதலன். எட்டிருநாள்- பதினாறாம் நாள். இதனால் பிரமதத்த முனிவர் இந் நிகழ்ச்சிகளை அவள் கணவன் அறியாவண்ணம் இலக்குமிக்கு மட்டும் தனித்துக் கூறியதாதல் வேண்டும் என்று கருதுக. செல்லுயிர் என்றாள் இறந்துபாடுறும் போகூழ் வந்தெய்தப் பெற்ற உயிர் என்பதறிவித்தற்கு.

திட்டிவிடம்- தன் நோக்கம் பட்ட துணையானே உயிர்கள் இறந்து படுதற்குக் காரணமான கொடிய நச்சுத் தன்மையை நோக்கத்திலேயே கொண்டிருக்கும் ஒரு நாகப் பாம்பு. இதனால் இதற்குத் திட்டி விடம் என்பதே பெயராயிற்று. புத்தர் பிறந்த பிறப்புக்களிலே திட்டிவிடம் என்னும் நச்சுப் பாம்பாகப் பிறந்து கண் விழித்தாற் பிறவுயிர் சாமென்றஞ்சிக் கண் விழியாதே கிடந்தார் என்னும் ஒரு கதை புத்தசாதகக் கதையிலுள தென்பது நீலகேசி உரையிற் காணப்படுதலு முணர்க.

திட்டிவிட மன்ன கற்பின் செல்வியை

என்பது கம்பர் வாக்கு;(தாடகை-10)

கவேரன் என்னும் அரசன் தவம் செய்து பெண் காவிரிநதி யாகினள் என்பது பௌராணிக மதம். கவேரகன்னிப் பெயரொடு விளங்கிய மூதூர் என்றது காவிரி என்னும் அடைபுணர்த்தோதப்படும் காவிரிப் பூம்பட்டினத்தை. அருந்துயர் என்றது- கடத்தற்கரிய துயரம் என்றவாறு. அஃதாவது உதயகுமரன் மணிமேகலையின்பாற் கழிபெருங்காமமுடையவனாய் அவளைக் கைப்பற்ற முயன்றதனை. மணிமேகலையின் நெஞ்சமும் அவன் பின்னர்ப் போனமையால் அஃது அவளால் கடந்தற்கரிய துயர் ஆயிற்றென்பார் ஆயிழை நினக்கோர் அருந்துயர் வரும் நாள் என்று பிரமதத்த முனிவர் அறிவித்தனர் என்றவாறு. அப் பதி- பூம்புகார் நகரம். தீவு- மணிபல்லவம்.

பகலே உன் பிறப்பு உணர்ந்து ஈங்கு இன்று யான் உரைத்த உரை தெளிவாய் என- அற்றைநாட் பகற் பொழுதிலேயே உன்னுடைய இப்பிறப்பின் வரலாற்றினை உணர்ந்து மேலும் இற்றைநான் இங்கியான் உனக்குக் கூறகின்ற இம் மொழி யெல்லாம் வாய்மையே ஆதலையும் நீலே உணர்ந்து கொள்வாய் என்றும் கூறாநின்றனை என்றாள் என்க.

(விளக்கம்) வேகம்-சினமிகுதி. திறல்- போர் செய்யும் ஆற்றல். மனமாசு-அழுக்காறு அவா வெகுளி இன்னாச்சொல் என்னும் நான்குமாம். மறச்செவி-தீயவற்றைக் கேட்டற்கவாவும் செவி. இது பயிற்சியா லெய்துமொரு வழக்கம். அறச்செவி-அறங்கேட்டற்கு அவாவுடைய செவி. இதுவும் பயிற்சியா லெய்துவதேயாம். பிறவிப்பிணி மருத்துவன்- பிறவிநோய் தீர்தற் கியன்ற நல்லற மருந்துகளை ஊட்டி மீண்டும் பிறவிப்பிணி வாராமற் செய்யும் மருத்துவனாகிய புத்த பெருமான். ஈங்கு என்றது முற்பிறப்பிலே பிரமதத்த முனிவரைக் கண்ட இடத்தை. உரை வாயேயாதலை நீயே தெளிந்து கொள்ளுவாய் என்று நீ கூறியவாறே இற்றைநாள் காயங்கரையின் நீ உரைத்ததை யெல்லாம் வாயே ஆகுதல் மயக்கற உணர்ந்தேன் என்று முன்பே நுதலிப் புகுதல்(10-11) ஈண்டு நினைக.

(முற்பிறப்பிலே இலக்குமி யாகிய) மிணமேகலை பிரமதத்தனை வினவினமையும் அவன் கூறிய மாற்றமும்)

45-71: சாதுயர்….தானேன்

(இதன் பொருள்) சாதுயர் கேட்டுத் தளர்ந்து உகும் மனத்தேன் காதலன் பிறப்பும் காட்டாயோ என-என் ஆருயிர்க் கணவன் திட்டிவிடத்தாற் சாதலும் யான் தீயினிற் புகுந்துசாதலும் ஆகிய சாதற்றுன்பங்களைக் கேட்டு அப்பொழுதே தளர்ந்துருகி ஒழுகும் மனத்தை யுடையேனாகிய யான் பெரும்! அடிச்சியின் மறுபிறப்பிஃதொன்று மட்டும் கூறியருளினை அதனினும் காட்டில் யான் பெரிதும் அறிந்துகொள்ள விரும்புகின்ற என் காதலன் மறுமையில் எய்தும் பிறப்பினையும் அறிவித்தருள மாட்டாயோ? என்று ந