மார்க்சியம், டார்வினியம் என்பது என்ன? ஆளுநர் ரவி பேச்சுக்கு எதிர்ப்பு ஏன்?

மார்க்சியம், டார்வினியம் என்பது என்ன? ஆளுநர் ரவி பேச்சுக்கு எதிர்ப்பு ஏன்?

அ.தா.பாலசுப்ரமணியன்

பிபிசி தமிழ்

ஆர்.என்.ரவி

உலக அரசியல் பொருளியல் வரலாற்றைப் புரட்டிய கார்ல் மார்க்சின் கருத்தியல், உயிர்களின் பரிணாம வளர்ச்சியை விளக்கி அறிவியல் உலகைத் திருப்பிப் போட்ட சார்லஸ் டார்வினின் கோட்பாடு போன்ற மேற்கத்திய கருத்துகள் இந்தியாவின் வளர்ச்சியைப் பாதித்ததாக, ஆளுநர் ஆர்.என். ரவி பேசியதாக வெளியான செய்தி தமிழ்நாட்டில் ஒரு பரபரப்பான அரசியல் விவாதத்தைத் தோற்றுவித்துள்ளன.

பேராசிரியர் பி.தர்மலிங்கம் எழுதிய “பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா: சிந்தனைச் சிதறல்கள்” & “பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா: “ஒருங்கிணைந்த மனிதநேயம்” ஆகிய நூல்களின் தமிழாக்கத்தை ஆளுநர் மாளிகையில் நடந்த ஒரு விழாவில் வெளியிட்டார் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி.

அப்போது பேசியபோதே மேற்கண்ட கருத்தை அவர் வெளியிட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது தொடர்பாக ராஜ்பவன் செய்திக்குறிப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

ஆளுநர் என்ன பேசினார்?

மனிதனை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இறையியல் கோட்பாடு இயற்கைக்கும் மனிதனுக்கும் இடையில் மோதலை உருவாக்கி கண்மூடித் தனமான இயற்கை சுரண்டலுக்கு காரணமானது என்றும், ‘வலியது வாழும்’ என்ற கோட்பாட்டை வலியுறுத்தும் டார்வினின் கருத்துப்படி பலவீனமானவர்கள் வாழ உரிமையே இல்லாமல் போகிறது என்றும் இதில் இரக்கத்துக்கு இடமில்லை என்றும் ஆளுநர் பேசியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

அதைப் போலவே, இருப்பவர்களுக்கும் இல்லாதவர்களுக்கும் இடையில் மார்க்சியக் கோட்பாடு நிரந்தரப் பகைமைகளை உருவாக்கிவிடுகிறது என்றும் மார்க்சிய மாடல், சமுதாயத்தின் மாறுபட்ட பிரிவுகளுக்கு இடையில் பாகுபாட்டை தோற்றுவிப்பதாகவும், சமூகத்தில் நிரந்தர மோதலை தூண்டிவிட்டதாகவும் ஆர்.என்.ரவி குறிப்பிட்டார் என்கின்றன செய்திகள்.

அதைப் போலவே ரூசோவின் சமூக ஒப்பந்தக் கோட்பாடு தொடர்பாகவும் சில கருத்துகளைத் தெரிவித்துள்ளார் ஆளுநர்.

இந்நிலையில், மார்க்சியம், டார்வினியம் குறித்த ஆளுநரின் கருத்துகள் விமர்சனத்துக்கு உள்ளாகின்றன. ஆளுநர் கருத்துகளை விமர்சித்து கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள், அமைச்சர் பொன்முடி போன்றவர்கள் விமர்சித்து அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர்.

“ஹிட்லர், முசோலினி, மனு, கோல்வால்கர், கோட்சே போன்றவர்களின் கருத்துக்கு அடிமை என்பதில் சிலருக்கு வெட்கம் இல்லாதபோது, புத்தர், வள்ளுவர், மார்க்ஸ், லிங்கன், டார்வின், அம்பேத்கர், பெரியார் கருத்துகளால் ஈர்க்கப்பட்டதில் எனக்குப் பெருமைதான்” என்று ட்வீட் செய்தார் மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன்.

கார்ல் மார்க்ஸ்
கார்ல் மார்க்ஸ்

மார்க்சியம் என்பது என்ன?

கருப்புப் பணம் என்ற படத்தில் கவிஞர் கண்ணதாசன் பாடும், “எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும். இங்கு இல்லாமை இல்லாத நிலைவேண்டும். வல்லான் பொருள்குவிக்கும் தனியுடைமை நீங்கி இந்நாட்டில் வரவேண்டும் பொதுவுடமை” என்பது பொதுவுடைமைக் கோட்பாட்டுக்கான எளிய விளக்கமாக பலரும் முன்மொழிவார்கள்.

இப்படி உலகத்தில் தனி மனிதர்களுக்கு சொத்துடைமை இருப்பதற்குப் பதிலாக சொத்துகள் எல்லாம் எல்லோருக்கும் பொதுவாக இருக்கும்படியான ஒரு சமூக அமைப்பை நோக்கி படிப்படியாக செல்லவேண்டும், அப்படித்தான் உலகம் செல்லும் என்று ஒரு கோட்பாட்டை 19-ம் நூற்றாண்டில் ஜெர்மனியில் பிறந்த கார்ல் மார்க்ஸ், பிரடரிக் ஏங்கல்ஸ் என்ற இரண்டு தத்துவ, அரசியல், பொருளாதார அறிஞர்கள் உருவாக்கினார்கள்.

உலகில் ஆதி காலத்தில் தனிமனிதர்களுக்கு சொந்தமாக சொத்துகள் இல்லை என்றும், இந்த நிலை மாறி மனிதர்களுக்கு இடையில், ஆண்டான் – அடிமை முறை நிலவிய காலம், பண்ணையார் – பண்ணைத் தொழிலாளி முறை நிலவிய காலம், ஆலை முதலாளிகள் – ஆலைத் தொழிலாளிகள் நிலவிய காலம் என்று படிப்படியாக மாற்றம் ஏற்பட்டு வந்திருப்பதாகவும் பிற்காலத்தில் இந்த முறையும் மாறி, சமதர்ம சமுதாயமாகவும், கடைசியில் மீண்டும் பொதுவுடைமை சமுதாயமாகவும் மாறும் என்று கார்ல் மார்க்சும், பிரடெரிக் ஏங்கல்சும் கூறினார்கள்.

மார்க்சியம்

வரலாறு அறிந்த காலம் தொட்டு இப்படி இருப்பவர்கள் இல்லாதவர்கள் இடையில் போராட்டம் நடந்துகொண்டே இருப்பதாகவும், இதற்குப் பெயர் வர்க்க மோதல் என்றும், கடைசியில் பொதுவுடைமை சமுதாயம் தோன்றும்போது இந்த வர்க்க மோதல் மறைந்துவிடும் என்றும் மார்க்சும் ஏங்கெல்சும் கூறினார்கள். இவர்கள் இருவரும் சேர்ந்து உருவாக்கிய ‘கம்யூனிஸ்ட் அறிக்கை’ என்ற அறிக்கையில் இது பற்றி இவர்கள் அறிவித்தனர். இது தவிர, இது தொடர்பாக ஏராளமான ஆராய்ச்சிகளையும் இவர்கள் மேற்கொண்டு பல நூல்களை வெளியிட்டார்கள்.

இந்த சிந்தனையே 1917ம் ஆண்டு ரஷ்யாவில் சமதர்ம புரட்சி தோன்றுவதற்கு வழி ஏற்படுத்தியது. பிறகு, ஏராளமான கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும், சீனா உள்ளிட்ட ஆசிய நாடுகளிலும் அரசியல் கிளர்ச்சிக்கும் பிறகு ஆட்சிமுறை மாற்றத்துக்கும் வித்திட்டது இந்த மார்க்சிய தத்துவம். இப்படி உருவான கம்யூனிஸ்ட் நாடுகளின் ஆட்சி முறைக்கு ஆதரவாகவும், எதிராகவும் ஏராளமான வாதப்பிரதிவாதங்கள் உண்டு.

இப்படி உருவான சோஷியலிச நாடுகளுக்கு ஒரு கருத்தியல் வழிகாட்டுதலை உருவாக்கியது மட்டுமல்லாமல், ‘தன்னை மறுபரிசீலனை செய்துகொண்டு, தனது குறைகளை களைந்துகொள்ள முதலாளித்துவத்துக்கும் மார்க்சியம் (குறிப்பாக மார்க்ஸ் எழுதிய முக்கிய நூலான ‘மூலதனம்’) காரணமாக இருந்தது’ என்கிறார் இஸ்ரேலிய வரலாற்று அறிஞரான யுவல் நோவா ஹராரி. மனித குலத்தின் எதிர்காலம் குறித்த தமது ஆராய்ச்சி நூலான ‘ஹோமோ டியூயஸ்’ என்ற நூலில் இது பற்றிக் குறிப்பிடுகிறார் ஹராரி.

மார்க்சியம் மோதலைத் தூண்டுகிறதா?

அருணன்

வர்க்க மோதல் குறித்த மார்க்சின் கருத்தையே ஆளுநர் ரவி விமர்சித்துள்ளார். சமூகத்தில் மாறுபட்ட பிரிவுகளுக்கு இடையில் மோதலை மார்க்சியம் வளர்ப்பதாக ஆளுநர் கூறியது குறித்து, மார்க்சியத்தை ஏற்றுக்கொண்டவரான வரலாற்று ஆய்வாளர் பேராசிரியர் அருணனிடம் கேட்டோம்.

“சமுதாயத்தில் ஏற்கெனவே இருப்பவர்கள் இல்லாதவர்கள் இடையில் மோதல் நிலவுகிறது என்றுதான் மார்க்சியம் கூறுகிறது. மோதல் இருக்கவேண்டும் என்று மார்க்சியம் கூறவில்லை” என்று விளக்கினார் அருணன்.

“அதானி போன்ற முதலாளிகளிடம் இப்படி செல்வம் மேலும் மேலும் குவியவே நரேந்திர மோதியின் ஆட்சி உதவுகிறது.

பெருமுதலாளிகளுக்கு ஆதரவாக மூன்று வேளாண் சட்டங்களை மோதி கொண்டுவந்தபோது அதை எதிர்த்து விவசாயிகள் வீரத்தோடு போராடினார்கள். இந்தப் போராட்டம்தான் வர்க்கப் போராட்டம். இந்தப் போராட்டத்தை தூண்டியது யார்? ஆட்சியாளர்களும், பெருமுதலாளிகளும்தானே? ஏற்கெனவே சமுதாயத்தில் இப்படிப்பட்ட மோதல் இருப்பதை ஆராய்ந்து சொன்னதுதான் மார்க்சியம். அது மோதலை உருவாக்கிய தத்துவம் அல்ல” என்றார் அருணன்.

ஆனால், கம்யூனிசம் அடக்குமுறைக் கோட்பாடு என்று வலியுறுத்தினார் பிபிசியிடம் பேசிய பாஜக தலைவர் நாராயணன் திருப்பதி.

எளியது வாழக்கூடாது என்பதா டார்வின் கோட்பாடு?

டார்வின்

டார்வின் உருவாக்கிய பரிணமாக் கோட்பாடு, வலியது மட்டுமே வாழவேண்டும் என்று வலியுறுத்துகிறதா என்று ஓய்வு பெற்ற விலங்கியல் பேராசிரியரும், நோபல் பரிசு பெற்ற தமிழரான வெங்கி ராமகிருஷ்ணனின் ‘ஜீன் மெஷின்’ நூலை மொழிபெயர்த்தவருமான சற்குணம் ஸ்டீபன் அவர்களிடம் கேட்டோம்.

உயிர்கள் ஒன்றில் இருந்து மற்றொன்று பரிணமித்து வந்திருப்பது எப்படி என்பது பற்றிய சிந்தனை இருந்து வந்தது என்றும், டார்வின் உருவாக்கிய ‘வலியது வாழும்’ என்ற கோட்பாடு இந்த பரிணாம வளர்ச்சி எப்படி நடந்திருக்கும் என்பதை விளக்குவதுதானே ஒழிய வலியது மட்டுமே வாழவேண்டும் என்று கூறுவது அல்ல என்றும் விளக்கினார். அவர் ஒரு எடுத்துக்காட்டைக் கூறினார்.

சற்குணம் ஸ்டீபன்
பேரா. சற்குணம் ஸ்டீபன்

கொசுக்களை ஒழிக்க மருந்து அடிக்கிறோம். பெரும்பாலான கொசுக்கள் அழிந்தாலும், சில கொசுக்கள் அதில் தப்பிப் பிழைக்கின்றன. இந்த கொசுக்கள் மருந்தை தாங்கி பிழைக்க முடிகிறவை. இப்படி பிழைத்த வலிமையான கொசுக்கள் தங்களுடைய வம்சத்தை உருவாக்கும். பிறகு அடுத்த தலைமுறையிலும் இப்படி நடக்கும். இப்படி தப்பித்து தப்பித்து வருகிற தலைமுறைகளில் ஒரு கட்டத்தில் பெரிய மாற்றங்கள் நிகழும். இப்படித்தான் பரிணாமம் நடக்கிறது என்பதை டார்வின் கோட்பாடே விளக்கியது.

இதை உலகம் முழுவதும் ஏற்றுக்கொண்டது. இது பலவீனமானவர்கள் வாழக்கூடாது என்று கூறும் கோட்பாடு அல்ல என்றார் சற்குணம் ஸ்டீபன்.

அத்துடன், 19-ம் நூற்றாண்டில் தோன்றிய டார்வினிய கோட்பாட்டில் பிற்காலத்தில் பல மாற்றங்கள் தோன்றிவிட்டன என்றும், மிக வலியதே வாழும் என்று பொருள் படும் fittest will survive என்ற டார்வினிய கோட்பாடு, பிந்தைய டார்வினியமாக வளர்ச்சி அடைந்து, குறைந்த வலிமை கொண்டவை, மிகவலிமை கொண்டவற்றோடு இணைந்து வாழும் என்று பொருள்படும் வகையில் fit, fitter along with fittest will survive என்று மாற்றம் பெற்றதாகவும் அவர் கூறினார்.

பாஜக தலைவர் நாராயணன் திருப்பதி கூறுவது என்ன?

நாராயணன் திருப்பதி

இப்படி மார்க்சிய, உயிரியல் அறிஞர்கள் கூறும் விளக்கம்பற்றி பா.ஜ.கவின் செய்தித் தொடர்பாளரும், மாநில துணைத் தலைவருமான நாராயணன் திருப்பதியிடம் கேட்டோம். “கம்யூனிசம் என்பது உலகம் முழுவதும் செத்துப்போன சித்தாந்தம். சீனா போன்ற கம்யூனிச நாடுகளில் கூட கம்யூனிசம் இல்லை.

சர்வாதிகாரமும் அடக்குமுறையும்தான் உள்ளன. மக்கள் அங்கே அடிமையாக உள்ளனர். சிறுபான்மையினர் கொடுமைப்படுத்தப்படுகிறார்கள்.

எனவே கம்யூனிசம் அடக்குமுறை சித்தாந்தம். ஆளுநர் பங்கேற்ற நிகழ்வில் நானும் இருந்தேன். தீனதயாள் உபாத்தியாய உருவாக்கிய ஒருங்கிணைந்த மனித நேயம் என்ற கோட்பாட்டையும் ஒப்பிட்டு ஆளுநர் பேசினார். ஆளுநர் பேசியது மிகச்சரி. கம்யூனிசம் வேரோடும், வேரடி மண்ணோடும் அழிந்துவிட்டது” என்றார் நாராயணன் திருப்பதி.

மார்க்சியம், டார்வினியம் என்பது என்ன? ஆளுநர் ரவி பேச்சுக்கு எதிர்ப்பு ஏன்? – BBC News தமிழ்

About editor 3089 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply