அண்ணா கடிதம்: மன உளைச்சலில் பதவி விலக முடிவெடுத்த போலீஸ் ஆணையருக்கு என்ன அறிவுரை சொன்னார்?

அண்ணா கடிதம்: மன உளைச்சலில் பதவி விலக முடிவெடுத்த போலீஸ் ஆணையருக்கு என்ன அறிவுரை சொன்னார்?

அ.தா.பாலசுப்ரமணியன்

3 பிப்ரவரி 2023

அண்ணா
,அண்ணா

அரசியல் நாகரிகத்துக்கும், நிதானத்துக்கும், மாற்றாருக்கு இடம் தந்து நெகிழும் மனப்பான்மைக்கும் வரலாற்றில் சில தருணங்கள் எடுத்துக்காட்டாக மாறிவிடும்.

மனத்தாங்கலோடு பதவி விலக முன்வந்த காவல் துறை அதிகாரி ஒருவருக்கு அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் சி.என்.அண்ணாதுரை எழுதிய கடிதம் அத்தகைய அரிதான ஒரு நிகழ்வாக வரலாற்றில் பதிவாகியிருக்கிறது.

சென்னை மாநகர போலீஸ் ஆணையராக 1964-67 காலகட்டத்தில் இருந்தவர் சிங்காரவேலு. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் அந்தப் பதவியில் நியமிக்கப்பட்ட அவர், திமுக ஆட்சியிலும் தொடர்ந்தார். இந்நிலையில் சென்னை அண்ணா சாலையில் காங்கிரசார் மேற்கொண்ட ஓர் ஊர்வலம் வன்முறையாக மாறி அண்ணாவின் படம் ஒன்று சிதைக்கப்பட்டது.

போலீஸ் ஆணையர் காங்கிரஸ் காலத்தில் நியமிக்கப்பட்டவர் என்பதால்தான் அவர் அந்த வன்செயலை தடுக்கத் தவறிவிட்டார் என்று அவர் மீது விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்து, தாம் பதவி விலகுவதாக கூறி அவர் முதல்வராக இருந்த அண்ணாவுக்கு கடிதம் எழுதினார்.

“மன உளைச்சலில் முடிவெடுக்க வேண்டாம்”

அந்தக் கடிதத்துக்குப் பதில் அளித்தும், பதவி விலக வேண்டாம் என்று வலியுறுத்தியும் ஆங்கிலத்தில் அண்ணா ஒரு கடிதம் எழுதினார்.

18.08.1967 என்று தேதியிடப்பட்ட அந்தக் கடிதத்தின் மொழி பெயர்ப்பு இதோ:

அன்பான சிங்காரவேலு,

உங்கள் கடிதம் கையில் இருக்கிறது. இந்தக் கடிதம் கிளறிய உணர்வைக் கடந்துவர எனக்கு சிறிது நேரம் பிடித்தது. நீங்கள் மன உளைச்சலால் பாதிக்கப்பட்டதை – ஒரு வேளை அது இன்னும் தொடரலாம் – என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.

ஒருவர் மன உளைச்சலால் பாதிக்கப்பட்டிருக்கும்போது நீண்ட விளைவை ஏற்படுத்தக்கூடிய முடிவுகளை எடுக்கக்கூடாது. மன உளைச்சல் என்பது ஒரு கட்டம் – முடிவுகள் நிரந்தர விளைவை ஏற்படுத்தக்கூடியவை.

முடிவெடுக்கும் முன்பாக அமைதியாக அலசி ஆராயவேண்டும் என்று உங்களை வலியுறுத்துவதற்காகவே இந்தப் பொதுவான ஆனால் கலப்படமற்ற குறிப்பைத் தருகிறேன்.

உங்கள் (பதவி விலகும்) யோசனையைப் பற்றியே இங்கு நான் குறிப்பிடுகிறேன். இங்கு ‘நான்’ என்பது, முதலமைச்சரைக் குறிப்பிடவில்லை, பல வகையான மன அழுத்தம், உளைச்சல் ஆகியவற்றை கணிசமான அளவு பட்டறிந்தவன் என்று அங்கீகரிக்கத்தக்க ஒருவனைக் குறிப்பிடுகிறது.

52 வயதில், மன உளைச்சலின் பிடியில் இருக்கும்போது பணி ஓய்வு பெறுவது என்பது விரும்பத்தக்கதல்ல என்பதை நீங்கள் சிந்திக்கக்கூட இல்லை. அத்தகைய ஒரு பாதையைத் தேர்ந்தெடுக்கும்படி அறிவுரை கூற விரும்பாத ஒருனையே இங்கு நான் என்பது குறிக்கிறது.

முரசொலியில் (அலுவலகத்தில்) என் படம் சேதப்படுத்தப்பட்டது குறித்துக் கூறவேண்டுமானால் இந்த ஒன்றைத்தான் கூறுவேன். ஜனநாயகம் உருக்குலைக்கப்படும்போது ஆவேசம் கொண்டோரும், கூலிக்கு அமர்த்தப்பட்டோரும் வீசும் வசைகளையும், இழைக்கும் அநீதிகளையும், கட்டவிழ்க்கும் வன்முறைகளையும் படங்கள் மட்டுமல்ல, தனி மனிதர்களும் அமைதியாக தாங்கிக்கொள்ள வேண்டியிருக்கும்.

எனவே, அத்தகைய சம்பவங்கள் குறித்து நான் ஒருபோதும் கவலைப்படுவதில்லை. ஆனால், படத்தைக் காக்க முடியாமல் போன சூழ்நிலைகளை விளக்கும்போது நீங்கள் வெளிப்படுத்திய உணர்வுகளை மிக நன்றாக புரிந்துகொள்கிறேன்.

நீங்கள் அளித்துள்ள இந்தக் காசோலையை நான் வங்கியில் செலுத்திப் பணமாக்கமாட்டேன். அதை நினைவுச் சின்னமாக வைத்துக்கொள்கிறேன்.

உங்கள் எண்ணத்தை மாற்றிக்கொண்டு பணியில் தொடர விரும்புகிறவராக இன்று என்னை வந்து சந்தியுங்கள்.

அன்புகலந்த மதிப்புடன்,

உங்கள் நலன் விரும்பியாக இப்போதும் உள்ளேன்.

சி.என்.அண்ணாதுரை

அண்ணா கடிதம்
படக்குறிப்பு,ஆங்கிலத்தில் அண்ணா எழுதிய கடிதம்

கடிதத்தின் பின்னணி என்ன?

திருநாவுக்கரசு
க.திருநாவுக்கரசு

இந்தக் கடிதம் எழுதப்பட்ட பின்னணி குறித்து திராவிட இயக்க வரலாற்று ஆய்வாளர் க.திருநாவுக்கரசுவிடம் கேட்டது பிபிசி தமிழ்.

அதற்கு பதில் அளித்த அவர், “1967 ஜூலை மாதம் காமராஜர் பிறந்த நாளை ஒட்டி காங்கிரஸ்காரர்கள் சென்னையில் ஒரு ஊர்வலம் ஏற்பாடு செய்தனர். அப்போது முரசொலி பத்திரிகை அலுவலகம் அண்ணா சாலையில் ஆயிரம் விளக்கு மசூதி அருகே ஒரு சிறிய கட்டடத்தில் இயங்கி வந்தது.

அங்கு அண்ணா – கருணாநிதி இருவரும் கையில் ஒரு தாள் வைத்துக்கொண்டு இருப்பது போல ஒரு பதாகை வைக்கப்பட்டிருந்தது. அண்ணாசாலை வழியாக சென்ற காங்கிரஸ் ஊர்வலம் முரசொலி அலுவலகம் அருகே வந்தபோது ஒரு சம்பவம் நடந்தது. ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள் கற்களாலும், கட்டையாலும் அடித்து அந்தப் பதாகையைக் கிழித்தனர்.

அலுவலகத்துக்கு உள்ளேயும் புகுந்து காகிதங்களையும் மற்றவற்றையும் சேதப்படுத்தி வெளியே வீசினர். இந்த சம்பவத்தை அடுத்து தமிழ்நாடு போலீஸ் ஐ.ஜி.யாக இருந்த அருள் அங்கு வந்து பார்வையிட்டார். அப்போது சென்னை போலீஸ் ஆணையராக இருந்த சிங்காரவேலு திமுக எதிர்ப்பாளர் என்றும், ராஜாஜி ஆதரவாளர் என்றும் பேச்சு நிலவியது. வேண்டுமென்றே அவர் வன்முறையைத் தடுக்காமல் விட்டதாக குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன.

இதையடுத்து, ஏற்பட்ட இழப்பை தாமே ஈடு செய்வதாக கூறி ஒரு காசோலையில் கையொப்பம் இட்டு அவர் அண்ணாவுக்கு அனுப்பினார். அதனுடன்தான் அவர் தமது விலகல் கடிதத்தையும் அனுப்பியிருக்கவேண்டும். அந்த காசோலையை தாம் வங்கியில் செலுத்தி பணமாக்க விரும்பவில்லை என்று கூறிய அண்ணா, அதன் பின்புறத்தில் preserve it என்று எழுதிக் கொடுத்ததாக, அண்ணாவின் பிரஸ் செக்ரட்டரியாக இருந்த பி.எஸ்.சுவாமிநாதன் என்னிடத்தில் கூறியுள்ளார்” என்று தெரிவித்தார் திருநாவுக்கரசு.

வியக்க வைக்கும் ஆங்கிலம்

ஆர்.கண்ணன்.
படக்குறிப்பு,ஆர்.கண்ணன்

இந்தக் கடிதத்தில் தொனிக்கும் பெருந்தன்மை தவிர, எழுதப்பட்டிருக்கும் ஆங்கில நடையும் படிப்பவர்களை வியக்கவைக்கும்.

இத்தகைய ஆங்கிலம் எப்படி அண்ணாவுக்கு சாத்தியமானது என்று கேட்டபோது, அண்ணாவின் வாழ்க்கை வரலாற்றை ஆங்கிலத்தில் எழுதியவரான ஆர்.கண்ணன் இப்படிச் சொன்னார். “அண்ணா தீவிரப் படிப்பாளி. அத்தனையையும் ஆங்கிலத்தில் படித்தவர். காந்தி, நேரு போல வெளிநாட்டுப் படிப்புக்கான வாய்ப்பு இல்லாவிட்டாலும்கூட, பெர்னார்ட்ஷா, ஷேக்ஸ்பியர் போன்றோர் நூல்களை, கிரேக்க இதிகாசங்களை, இலக்கியங்களை, அரசியலை, வரலாற்றை ஆங்கிலத்தில் இங்கிருந்தே படித்தவர்.

The Intelligent Woman’s Guide to Socialism and Capitalism என்ற 540 பக்க பெர்னார்ட்ஷா நூலினை இரண்டே நாளில் அண்ணா படித்து முடித்தார் என்ற தகவல் பதிவாகியுள்ளது. எனவே அவரது கடிதத்தில் கையாளப்பட்டுள்ள அழகிய ஆங்கிலம் ஆச்சரியம் அல்ல,” என்றார் கண்ணன்.

அண்ணா கடிதம்: மன உளைச்சலில் பதவி விலக முடிவெடுத்த போலீஸ் ஆணையருக்கு என்ன அறிவுரை சொன்னார்? – BBC News தமிழ்

About editor 3045 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply