காதலர் தினம்: காதல் ரசம் சொட்டச் சொட்ட உருக வைத்த 10 சங்க கால டூயட் பாடல்கள்
- முரளிதரன் காசி விஸ்வநாதன்
- பிபிசி தமிழ்
இன்று காதலர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. பலரும் காதல் கவிதைகளையும் திரைப்பாடல்களையும் சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். ஆனால், தமிழில் காதலைப் பேசும் பாடல்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இருந்து வருகின்றன. குறுந்தொகையில் காதலைப் பாடும் அழகிய பத்து பாடல்களை பொருளுடன் இங்கே படிக்கலாம்.
1. யாயு ஞாயும் யாரா கியரோ
எந்தையு நுந்தையு மெம்முறைக் கேளிர்
யானு நீயு மெவ்வழி யறிதும்
செம்புலப் பெயனீர் போல
அன்புடை நெஞ்சந் தாங்கலந் தனவே –
பொருள்: என்னுடைய தாயும் உன்னுடைய தாயும் ஒருவருக்கொருவர் எந்த வகையில் உறவு? என் தந்தையும் உன் தந்தையும் எந்த முறையில் உறவினர்? இப்போது பிரிவின்றி இருக்கும் நீயும் நானும் ஒருவரையொருவர் எவ்வாறு அறிந்தோம்? செம்மண் நிலத்தில் பெய்த மழை நீர் அந்த மண்ணோடு கலந்து அதன் தன்மையை அடைவது போல, அன்புடைய நம் நெஞ்சம் தாமாகவே ஒன்று கலந்துவிட்டன. பாடியவர்: செம்புலப் பெயல் நீரார்.
2. கன்று முண்ணாது கலத்தினும் படாது
நல்லான் றீம்பா னிலத்துக் காஅங்
கெனக்கு மாகா தென்னைக்கு முதவாது
பசலை யுணீஇயர் வேண்டும்
திதலை யல்குலென் மாமைக் கவினே.
பொருள்: நல்ல பசுவிந் இனிய பாலானது அந்தப் பசுவின் கன்றினாலும் உண்ணப்படாமல் கறக்கும் பாத்திரத்திலும் விழாமல் தரையில் சிந்தி வீணாவதைப் போல, எனது அழகும் எனது நிறமும் உதவாமலும் என் தலைவனுக்கும் இன்பம் பயக்காமலும் பசலை நோயால் வீணாகிறது. பாடியவர்: கொல்லன் அழிசி
3. கொங்குதேர் வாழ்க்கை யஞ்சிறைத் தும்பி
காமஞ் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பிந் மயிலியற்
செறியெயிற் றரிவை கூந்தலின்
நறியவு முளவோநீ யறியும் பூவே
பொருள்: மலர்களில் மகரந்தங்களை எடுத்து வாழும் அழகிய சிறகுகளை உடைய தும்பியே! நீ அறிந்த மலர்களில் என்னுடன் பல பிறப்புகளில் நட்புடன் பழகும் மயில் போன்ற மென்மையும் நெருங்கிய பற்களையும் உடைய பெண்ணின் கூந்தலைவிட நறுமணமுடைய பூக்களும் உள்ளனவா? நீ என் நிலத்து வண்டாதலின் நான் விரும்பியதை கூறாமல், நீ கண்கூடாக அறிந்ததைச் சொல்வாயாக. பாடியவர்: இறையனார்
4. வேரல் வேலி வேர்க்கோட் பலவின்
சார னாட செவ்வியை யாகுமதி
யாரஃ தறிந்திசி னோரே சாரல்
சிறுகோட்டுப் பெரும்பழந் தூங்கி யாங்கிவள்
உயிர்தவச் சிறிது காமமோ பெரிதே.
பொருள்: மூங்கிலை வேலியாகக் கொண்ட மலை நிலத்தில் வேரிலே பலாப் பழங்கள் தொங்குகின்ற மலை நாடனே! பலா மரத்தின் சிறிய கொம்பிலே பெரிய பலாப்பழம் தொங்கிக் கொண்டிருப்பதுபோல, தலைவியின் உயிரோ மிகச்சிறியது; அவள் உன்மேல் கொண்ட ஆசையோ மிகப் பெரியது. அந்த நிலையை அறிந்தவர் யார்? அவளை அடைந்துகொள்ளும் பருவத்தை உண்டாகிக் கொள்க. இரவிலே வந்து செல்லும் தலைவனைப் பார்த்து, தலைவியின் தோழி சொல்வதைப் போல அமைந்த பாடல் இது. “சிறுகோட்டுப் பெரும்பழந் தூங்கி யாங்கிவள்
உயிர்தவச் சிறிது காமமோ பெரிதே” – என்ற வரிகளுக்காக புகழ்பெற்ற பாடல் இது. எழுதியவர் – கபிலர்.
5. ஒடுங்கீ ரோதி யொண்ணுதற் குறுமகள்
நறுந்தண் ணீர ளாரணங் கினளே;
இனைய ளென்றவட் புனையள வறியேன்
சிலமெல் லியவே கிளவி
அணைமெல் லியள்யான் முயங்குங் காலே.
பொருள்: அழகிய, ஒடுங்கிய, அடர்த்தியான கூந்தலை உடையவள், பிறை போல் வளைந்த வாசனை நெற்றியை உடைய சிறு பெண், சுவையான குளிர்ந்த நீரைப் போன்றவள் என் தலைவி. அவளைப் பிரிந்தால் பொறுக்க முடியாத வருத்தம் தருகிறாள். அவள் இப்படிப்பட்டவள் என புனைந்து உரைக்கும் எல்லை எனக்குத் தெரியவில்லை. அவள் சொற்கள் மென்மையானவை. நான் அவளை அணையும்போது பஞ்சணையைப் போன்ற மென்மையை உடையவள். தலைவியோடு இன்புற்று, வெளியேறும் தலைவன் “இவள் ஐம்புலத்திற்கும் இன்பத்தைத் தருபவள்” என தன் நெஞ்சை நோக்கி கூறி மகிழ்வதைப் போல அமைந்த பாடல் இது. எழுதியவர் ஓரம் போகியார்.
6. பல்லோர் துஞ்சு நள்ளென் யாமத்
துரவுக்களிறு போல்வந் திரவுக்கதவ முயறல்
கேளே மல்லேங் கேட்டனம் பெரும
ஓரி முருங்கப் பீலி சாய
நன்மயில் வலைப்பட் டாங்கியாம்
உயங்குதொறு முயங்கு மறனில் யாயே.
பொருள்: ஊரில் எல்லோரும் உறங்கும் இந்த இரவில், வலிமை உடைய யானையைப் போல வந்து, தாழிட்ட கதவைத் திறக்க முயன்றதால் உண்டான ஒலியைக் கேட்டேன். நல்ல மயில் வலையில் அகப்பட்டதைப் போல, என்னுடைய தாய், நான் வருந்தும் அளவுக்கு என்னைத் தழுவியிருக்கிறாள். (அதனால், என்னால் வர இயலவில்லை). தலைவன் தன்னை அழைப்பதற்காக கதவைத் தட்டும் ஒலி கேட்டாலும், தன் தாய் உறக்கத்தில் தன்னைத் தழுவியிருப்பதால் வர முடியவில்லை என்று தலைவி சொல்வதைப் போல அமைந்த பாடல். எழுதியவர் கண்ணன்.
7. முட்டு வேன்கொ றாக்கு வேன்கொல்
ஓரேன் யானுமோர் பெற்றி மேலிட்
டாஅ வொல்லெனக் கூவு வேன்கொல்
அலமர லசைவளி யலைப்பவென்
உயவுநோ யறியாது துஞ்சு மூர்க்கே.
பொருள்: காதலனைப் பிரிந்த பெண் படும் பாட்டைக் கூறும் பாடல் இது. அசைந்து வரும் தென்றல் காற்று எனை வருத்தாமல் இருக்க வேண்டும். என் காமநோயை உணர்ந்து கொள்ளாமல், கவலையின்றித் தூங்கும் ஊரில் உள்ளோரை முட்டுவேனா, தாக்குவேனா? ஆவென்றும் ஓவென்றும் கூவுவேனா? என்ன செய்வதென்று தெரியவில்லை. எழுதியவர்: ஔவையார்.
8. காதல ருழைய ராகப் பெரிதுவந்து
சாறுகொ ளூரிற் புகல்வேன் மன்ற
அத்த நண்ணிய வங்குடிச் சீறூர்
மக்கள் போகிய வணிலாடு முன்றிற்
புலப்பில் போலப் புல்லென்
றலப்பென் றோழியவ ரகன்ற ஞான்றே.
பொருள்: காதலன் அருகில் இருந்தால் திருவிழா நடக்கும் ஊரைப் போல மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். அவர் என்னைப் பிரிந்து சென்றால், அழகிய சிறு ஊரில் மனிதர் நீங்கிச் சென்ற பிறகு, அணில் விளையாடுகின்ற முற்றத்தை உடைய தனிமையுள்ள வீட்டைப் போல பொலிவு அழிந்துபோய் வருந்துவேன். இந்தப் பாடலில் உள்ள “அணிலாடும் முன்றில்” என்ற வார்த்தைகள் மிகுந்த கவித்துவமுடையவை. எழுதியவர் அணிலாடு முன்றிலார்.
9. கவவுக் கடுங்குரையள் காமர் வனப்பினள்
குவவுமென் முலையள் கொடிக்கூந் தலளே
யாங்குமறந் தமைகோ யானே ஞாங்கர்க்
கடுஞ்சுரை நல்லா நடுங்குதலைக் குழவி
தாய்காண் விருப்பி னன்ன
சாஅய்நோக் கினளே மாஅ யோளே.
பொருள்: மாமை நிறமுடைய தலைவி வேகமாகத் தழுவுவாள். விரும்பத்தக்க அழகை உடையவள், குவிந்த மெல்லிய மார்பை உடையவள். நீண்ட கூந்தல் உடையவள். தன் தாயைக் காண வேண்டும் என்ற விருப்பத்தோடு இருக்கும் இளங்கன்றைப் போல, தன் விருப்பத்தை வெளிப்படுத்தும் மெலிந்த பார்வை உடையவள். அவளை மறந்து எப்படி இருப்பேன்? இந்தப் பாடலை எழுதியவர் சிறைகுடியாந்தையார்.
10. நிலத்தினும் பெரிதே வானினு முயர்ந்தன்று
நீரினு மாரள வின்றே சாரற்
கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு
பெருந்தே னிழைக்கு நாடனொடு நட்பே.
பொருள்: மலைகளின் அருகில் குறிஞ்சி மலரின் தேனை வண்டுகள் எடு்கும் நாட்டை உடைய தலைவனோடு நான் கொண்ட நட்பானது பூமியைவிடப் பெரிது. வானத்தைக் காட்டிலும் உயர்ந்தது. கடலைக் காட்டிலும் ஆழமானது. தன் காதலனோடு தான் கொண்ட நட்பு எல்லாவற்றையும்விடப் பெரியது என்கிறாள் தலைவி. இந்தப் பாடலைப் பாடியவர் தேவகுலத்தார்.
காதலர் தினம்: காதல் ரசம் சொட்டச் சொட்ட உருக வைத்த 10 சங்க கால டூயட் பாடல்கள் – BBC News தமிழ்
Leave a Reply
You must be logged in to post a comment.