ஜனாதிபதி ரணிலின் வெருட்டல்
02 FEB, 2023
இலங்கையை தவிர, உலகின் வேறு எந்த நாட்டிலுமே அரசியலமைப்பில் உள்ள ஏதாவது ஒரு ஏற்பாட்டை நடைமுறைப்படுத்தக்கூடாது என்று அரசியல்வாதிகள் ஜனாதிபதியிடம் கூறியதாக இதுவரையில் நாம் அறியவில்லை.
இனநெருக்கடிக்கு அரசியல் தீர்வொன்றை துரிதமாக காணப்போவதாக கூறிக்கொண்டு பாராளுமன்ற கட்சிகளின் மகாநாட்டை இதுவரையில் இரு தடவைகள் கூட்டிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, 1987 ஜூலை இந்திய – இலங்கை சமாதான உடன்படிக்கையை அடுத்து மாகாணசபைகளை உருவாக்குவதற்காக இலங்கை அரசியலமைப்புக்கு 36 வருடங்களுக்கு முன்னர் கொண்டுவரப்பட்ட 13 வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தப்போவதாக அறிவித்த நாளில் இருந்து கடும்போக்கு சிங்கள தேசியவாத அரசியல்வாதிகளும் அமைப்புக்களும் அதற்கு கடுமையான எதிர்ப்பை வெளியிட்ட வண்ணமிருக்கின்றனர்.
மக்கள் கிளர்ச்சியை அடுத்து கடந்தவருட நடுப்பகுதியில் பதவி விலகிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஐந்து வருட பதவிக்காலத்தில் எஞ்சியிருக்கும் காலப்பகுதியை பூர்த்தி செய்வதற்காக பாராளுமன்றத்தினால் ஜனாதிபதியாக தெரிவான விக்கிரமசிங்கவுக்கு 13 வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கான ஆணை கிடையாது என்றும் அவ்வாறு அவர் அதை நடைமுறைப்படுத்த விரும்பினால் ஜனாதிபதி தேர்தல் ஒன்றில் மக்களிடம் ஆணையைப் பெறவேண்டும் என்றும் அவர்கள் கூறுவதைக் காணக்கூடியதாக இருக்கிறது.
இந்த சிங்கள தேசியவாத சக்திகளின் உறுதியான ஆதரவைக்கொண்ட முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் தற்போதைய பிரதமர் தினேஷ் குணவர்தனவும் பாராளுமன்ற கட்சிகளின் மகாநாட்டில் ஜனாதிபதி விக்கிரமசிங்கவும் மற்றையவர்களும் கூறுகின்றவற்றை கேட்டுக்கொண்டு மௌனமாக இருக்கிறார்களே தவிர தங்களது நிலைப்பாடுகளை வெளிப்படுத்துகிறார்கள் இல்லை. அவர்கள் 13 வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தும் ஜனாதிபதியின் நோக்கம் குறித்து வெளிப்படையாக தங்களது நிலைப்பாடுகளை அறிவிக்கவேண்டும் என்று இந்த சக்திகள் கோரிக்கை விடுத்திருக்கின்றன.
கோட்டாபயவும் அவரது மூத்த சகோதரர் மகிந்தவை பிரதமராகக் கொண்ட அரசாங்கமும் மக்கள் கிளர்ச்சிக்கு மத்தியில் பதவியில் இருந்து விலகிய பிறகு கடந்த ஜனாதிபதி தேர்தலிலும் பாராளுமன்ற தேர்தலிலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு மக்கள் வழங்கிய ஆணை வலுவிழந்து விட்டது என்பதே பொதுவான அபிப்பிராயமாக இருக்கிறது. அதனால் பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற பலத்தினால் ஜனாதிபதியாக தெரிவான விக்கிரமசிங்கவின் பதவி நியாயப்பாடு இல்லாதது என்று எதிரணி கட்சிகள் தொடக்கத்தில் இருந்தே கூறிவந்திருக்கின்றன.
ஆனால், அவரின் தெரிவு அரசியலமைப்புக்கு முரணானது என்று எவரும் கூறவில்லை. அத்தகைய ஒரு ஜனாதிபதி நாட்டின் அரசியலமைப்பில் இருக்கும் ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்கு மக்களிடம் ஆணை பெறவேண்டும் என்று வாதிடுவது எந்தவிதமான தர்க்கநியாயத்துக்கும் பொருந்தாது.ஜனாதிபதி விக்கிரமசிங்க 13 வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது என்ற தனது அறிவிப்பில் எந்தளவுக்கு இதயசுத்தியாக இருக்கிறாரோ தெரியவில்லை.அது வேறு விடயம். ஆனால் முன்னைய ஜனாதிபதிகள் எவரும் கூறாததை அவர் கூறுகிறார் என்பதை ஒத்துக்கொள்ளவேண்டும்.
மூன்றரை தசாப்தங்களுக்கும் அதிகமான காலமாக அந்த திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தாமல்இருந்ததன் மூலம் முன்னைய சகல ஜனாதிபதிகளும் அரசாங்கங்களும் அடிப்படையில் அரசியலமைப்புக்கு விரோதமாகவே செயற்பட்டுவந்திருக்கிறார்கள். அந்த திருத்தத்தை நடைமுறைப்படுத்தக்கூடாது என்று கூறுபவர்களும் உண்மையில் அரசியலமைப்புக்கு விரோதமாகவே நடந்துகொள்கிறார்கள்.அரசாங்கம் அரசியலமைப்பை மீறவேண்டும் என்று இவர்கள் வலியுறுத்துகிறார்கள் என்பதே அதன் உண்மையான அர்த்தமாகும். இத்தகைய சட்டவிரோதமான செயற்பாடுகளை எந்தவித தயக்கமும் தண்டனைப் பயமும் இன்றி இவர்கள் முன்னெடுப்பதை காணக்கூடியதாக இருக்கிறது.
இது குறித்து பெரும்பான்மை இனத்தவர்கள் மத்தியில் இருக்கக்கூடிய நியாயபூர்வமாக சிந்திக்கக்கூடிய புத்திஜீவிகள் கூட எதுவும் பேசுகிறார்கள் இல்லை.சிறுபான்மை சமூகங்களின் அரசியல் அபிலாசைகள் மற்றும் உரிமைகள் என்று வரும்போது தென்னிலங்கையில் எவரும் சட்டத்துக்கு அஞ்சாமல் அரசியலமைப்புக்கு விரோதமாக செயற்படலாம் என்றாகிறது.
இது சிங்கள தேசியவாத அரசியல் கோட்பாடுகளில் உள்ளியல்பாக இருக்கும் ஒழுக்க நியாயப் பாரம்பரியமற்ற போக்கை வெளிக்காட்டிநிற்கிறது.நாட்டின் அதியுயர் சட்டம் என்று சொல்லப்படுகின்ற அரசியலமைப்பில் உள்ள ஏற்பாடுகளை ஒரு நிறைவேற்று அதிகார ஜனாதிபதி நடைமுறைப்படுத்துவதற்கு மக்களிடம் புதிதாக ஆணை பெறவேண்டும் என்று கூறுவது எந்தவகையில் அறிவுப் பொருத்தமானது என்று சிந்தித்துப் பார்க்க முடியாத அளவுக்கு சிங்கள தேசியவாத சக்திகள் மத்தியில் சிறுபான்மை சமூகங்களின் அரசியல் அபிலாசைகளுக்கும் உரிமைகளுக்கும் எதிரான இனவாத உணர்வு மிகவும் ஆழமாக வேரூன்றியிருக்கிறது.இதுவே இலங்கையின் முன்னேற்றத்துக்கு பெரும் தடையாகவும் இருந்துவருகிறது.
இத்தகையதொரு பின்புலத்திலேயே, இறுதியாக ஜனவரி 26 நடைபெற்ற பாராளுமன்ற கட்சிகளின் மகாநாட்டில் 13 வது திருத்தத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கவேண்டியதன் அவசியம் குறித்து ஜனாதிபதி விக்கிரமசிங்க தெரிவித்த கருத்துக்கள் முக்கிய கவனத்துக்குரியவையாகின்றன.
” நிறைவேற்று அதிகார ஜனாதிபதி என்ற வகையில் தற்போதைய சட்டத்தை நடைமுறைப்படுத்தவேண்டியது எனது பொறுப்பு.13 வது திருத்தம் 36 வருடங்களாக அரசியலமைப்பின் அங்கமாக இருந்துவருகிறது.அதை நான் நடைமுறைப்படுத்தவேண்டும் அல்லது அரசியலமைப்புக்கான 22 வது திருத்தத்தை பாராளுமன்றத்தில் எவராவது தனிநபர் சட்டமூலமாக கொண்டுவந்து அதை ஒழிக்கவேண்டும். அத்தகையதொரு சட்டமூலம் சபையில் பெரும்பான்மை வாக்குகளினால் தோற்கடிக்கப்பட்டால், பிறகு 13வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தவேண்டியிருக்கும்.அந்த திருத்தத்தை நடைமுறைப்படுத்தப்போவதுமில்லை,ஒழிக்கப்போவதுமில்லை என்று ஒரு இரண்டுங்கெட்டான் நிலைப்பாட்டில் தொடர்ந்து இருக்கமுடியாது” என்று ஜனாதிபதி கூறினார்.
இவ்வாறு முன்னைய ஜனாதிபதிகளில் எவரும் ஒருபோதும் பேசியதில்லை.அந்த திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படாமல் இருப்பதை அவர்கள் உறுதிசெய்துகொண்டு வேறு எதுவும் பேசாமல் இருந்துவிட்டார்கள். இப்போது இரண்டில் ஒன்றைச் செய்யவேண்டும் என்று விக்கிரமசிங்க கூறியிருக்கும் நிலையில் 13 வது திருத்தத்தை ஒழிக்க அரசியலமைப்பு திருத்தமொன்றை கொண்டுவருவதற்கு பாராளுமன்ற உறுப்பினர்களில் எவராவது தனிநபர் சட்டமூலத்தை சமர்ப்பிப்பார்களா என்ற கேள்வி எழுகிறது.
இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக சிங்கள தலைவர்களுடன் தமிழ் தலைவர்கள் கடந்த காலத்தில் செய்த ஒப்பந்தங்கள் கிழித்தெறியப்பட்டதைப் போன்று 13 வது திருத்த விடயத்தில் அரசாங்க தலைவர்களால் நடந்துகொள்ளமுடியவில்லை. இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உடன்படிக்கையின் விளைவாக அது கொண்டுவரப்பட்டதே அதற்கு காரணமாகும்.
ஆனால், இந்தியாவை பகைக்கக்கூடாது என்பதற்காக அவ்வப்போது 13 வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதாகவும் அதற்கு மேலும் செல்வதற்கு தயாராயிருப்பதாகவும் மகிந்த போன்ற தலைவர்கள் கூறினாலும் மாகாணசபைகளின் அதிகாரங்கள் படிப்படியாக பறிக்கப்பட்டு வந்ததே உண்மை.
பொலிஸ் அதிகாரமும் காணி அதிகாரமும் 13 வது திருத்தத்தில் நடைமுறைப்படுத்தப்படாமல் இருந்துவரும் ஏற்பாடுகளில் பிரதானமானவை.கடந்த மூன்றரை தசாப்தங்களாக அரசாங்கங்கள் மாகாணசபைகளுக்கு சட்டரீதியாக உரித்தான பல பொறுப்புக்களை
திருப்பி எடுத்துக்கொண்டன.அதன் உச்சக்கட்டம் 2013 ஆம் ஆண்டின் திவிநெகும சட்டமாகும்.ஜனாதிபதி மகிந்தவின் இரண்டாவது பதவிக்காலத்தில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக இருந்த பசில் ராஜபக்சவின் பேரார்வத்துக்குரிய இந்த சட்டம் அரசாங்கத்துக்கு பாராளுமன்றத்தில் இருந்த மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்தை பயன்படுத்தி நிறைவேற்றப்பட்டு கிராமிய அபிவிருத்தியுடன் தொடர்புடைய மாகாணங்களின் பல பொறுப்புக்கள் திருப்பியெடுத்துக்கொள்ளப்பட்டன.
இந்த சட்டம் அரசியலமைப்புக்கு முரணானது என்று கூறிய பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவை தங்களால் வழிக்கு கொண்டுவரமுடியவில்லையே என்ற ஆத்திரத்தில் அவரை ராஜபக்ச அரசாங்கம் பாராளுமன்றத்தில் குற்றப்பிரேரணை மூலம் பதவிநீக்கியது குறிப்பிடத்தக்கது.
2013 வடமாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு முன்னதாக மாகாணங்களுக்குரிய பொலிஸ், காணி அதிகாரங்களை நீக்குவதற்கு அரசியலமைப்பு திருத்தம் ஒன்றை கொண்டுவருவதற்கு மகிந்த அரசாங்கத்துக்கு யோசனை இருந்தது. ஆனால் அது கைவிடப்பட்டது.இந்தியாவின் அன்றைய காங்கிரஸ் அரசாங்கத்தின் ஆட்சேபமே அதற்கு காரணம் என்பதில் சந்தேகமில்லை.
இவ்வாறாக மாகாணசபைகளின் அதிகாரங்களை படிப்படியாக பறித்து அவற்றை ஒரு கோது போன்று ஆக்கும் செயற்பாடுகளில் அரசாங்கங்கள் ஈடுபட்டுவந்திருக்கின்றனவே தவிர, 13 வது திருத்தத்தை ஒழிப்பது குறித்து ஒருபோதும் யோசிக்கவில்லை. அந்த திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி மாகாணசபை தேர்தல்களை நடத்துமாறு இடையறாது இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்திவரும் இந்தியாவினாலும் கூட மாகாணசபைகளின் அதிகாரங்கள் கணிசமானளவுக்கு பறிக்கப்பட்டதை தடுக்கமுடியவில்லை.
13 வது திருத்தமும் மாகாணசபை தேர்தல்களும் இந்தியாவினால் மாத்திரம் வலியுறுத்தப்படுபவை என்ற நிலை மாறி இப்போது அவை அமெரிக்காவும் மேற்குலகின் முக்கிய நாடுகளினதும் கவனத்துக்குரியவையாகவும் மாறிவிட்டன.ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அடுத்தடுத்து நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் 13 திருத்தத்தின் நடைமுறைப்படுத்தல் பற்றி வலியுறுத்தப்பட்டிருக்கிறது.இலங்கை வருகின்ற மேற்குலக இராஜதந்திரிகளும் இதை வலியுறுத்துவதை தற்போது காணக்கூடியதாக இருக்கிறது.
அதனால் அந்த திருத்தம் தொடர்பில் தற்போது எழுந்திருக்கும் சர்ச்சையில் அதை ஒழிப்பதற்கு பாராளுமன்றத்தில் சடடமூலத்தை எவரும் கொண்டுவரும் சாத்தியமில்லை என்று நம்பலாம்.இதை உணர்ந்த நிலையில்தான் ஜனாதிபதி விக்கிரமசிங்க ஒன்றில் நடைமுறைப்படுத்தவேண்டும் அல்லது ஒழிக்கவேண்டும் என்று எதிர்ப்பாளர்களை வெருட்டினார் போலும்.
ஆனால்,13 வது திருத்தம் முழுமையான நடைமுறைப்படுத்தலுக்கு எதிரான சிங்கள தேசியவாத சக்திகளின் குரல்கள் இப்போது படிப்படியாக ஓங்கி ஒலிக்கத்தொடங்கியிருக்கின்றன. விமல் வீரவன்ச போன்றவர்கள் உயிரைக்கொடுத்தேனும் அதை தடுப்போம் என்று சூளுரைக்கின்ற அதேவேளை சரத் வீரசேகர போன்றவர்கள் மீண்டும் இனக்கலவரம் மூளலாம் என்று அச்சுறுத்துகிறார்கள்.முக்கியமான பௌத்த பிக்குமாரும் குரல்கொடுக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.மீண்டும் இனவாத அணிதிரட்டலுக்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
ஜனாதிபதி விக்கிரமசிங்கவினால் 13 வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த முடியுமோ இல்லையோ கடந்தவருட மக்கள் கிளர்ச்சியை அடுத்து பதுங்கிப்போயிருந்த சிங்கள தேசியவாத சக்திகள் மீண்டும் வெளியே வந்து சமூகங்கள் மத்தியில் குரோதங்களை வளர்க்கும் தங்களது நச்சுத்தனமான இனவாதப் பிரசாரங்களை முன்னெடுக்க வசதியான சூழ்நிலை உருவாக்கப்படுகிறது என்பது மாத்திரம் உண்மை.
Leave a Reply
You must be logged in to post a comment.