தமிழகத்தின் அரசியல் பெருந்தகையாளர் பேரறிஞர் அண்ணா

தமிழகத்தின் அரசியல் பெருந்தகையாளர் பேரறிஞர் அண்ணா

By NANTHINI

03 FEB, 2023 | 05:18 PM
image

– தமிழ்நாட்டின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 54ஆம் ஆண்டு நினைவுதினம் இன்று 

ரசியல் வித்தகர், இலக்கியத்துறை, சிறுகதை, நாடகம், கட்டுரை, கவிதை, திரைக்கதை, அரசியல் சாணக்கியம், அடுக்குமொழிப் பேச்சு ஆகிய சிறப்புகளை ஒருசேர பெற்றுள்ள ஒரே பெருந்தகையாளர் பேரறிஞர் அண்ணா. 

இவர் 1909.09.15 அன்று காஞ்சிபுரம் நகரில்,  நெசவாளர் குடும்பத்தில் நடராசன் – பங்காரு அம்மாளுக்கு மகனாக பிறந்தார். 

‘அண்ணாத்துரை’ எனும் இயற்பெயர் கொண்ட இவர் காஞ்சிபுரத்தில் உள்ள பச்சையப்பன் உயர்நிலைப்பள்ளியில் கல்வி கற்றார். 

படித்துப் பட்டம் பெறும் இலட்சியத்தை இவர் கொண்டிருந்தபோதும், குடும்ப வறுமையால் மேற்கல்வி தொடர முடியாமல் காஞ்சிபுரம் நகராட்சியில் எழுத்தாளராக பணியாற்றினார்.

அப்போது பிற்பட்ட வகுப்பினருக்கு கல்லூரியில் கல்வி கற்பதற்கான கட்டணச் சலுகை வழங்கப்படுவதை அறிந்து, 1928ஆம் ஆண்டு சென்னைக்கு வந்து, பச்சையப்பன் கல்லூரியில் சேர்ந்து, முதுகலைப் பட்டம் பெற்றார். 

பின்னர் தனது 21 வயதில் இராணி அம்மையாரை திருமணம் செய்தார். 

1932ஆம் ஆண்டு இவர் எழுதிய ‘மொஸ்கோ மக்களின் அணிவகுப்பு’ என்ற ஆங்கிலக் கட்டுரைக்கு முதல் பரிசு கிடைத்தது.

அதன் பின் சென்னையில் கோவிந்த நாயக்கர் நடுநிலை பள்ளியில் ஆசிரியராக சிறிது காலம் பணியாற்றினார். அந்நாட்களிலே‍யே அண்ணா அரசியலில் ஈடுபட்டார். 

நீதிக்கட்சியின் மீது இவரது கவனம் திரும்பியதால் ஆசிரியர் பணியை துறந்தார். 

1934ஆம் ஆண்டு ஆனந்த விகடன் பத்திரிகையில் ‘கொக்கரக்கோ’ என்ற அண்ணாவின் முதல் சிறுகதை வெளிவந்தது. 

1934இல் நீதிக்கட்சிக் கூட்டங்களில் உரையாற்றும் சந்தர்ப்பங்களும் அண்ணாவுக்கு கிடைத்தன.

1935இல் திருப்பூரில் நடந்த ஒரு மாநாட்டில் தந்தை பெரியார் பேசிய சீர்திருத்த கருத்துகளால் ஈர்க்கப்பட்டு, பெரியாரின் சீடரானார். 

1936இல் சென்னை மாநகராட்சி தேர்தலில் நீதிக்கட்சி வேட்பாளராக பெத்துநாயக்கன் பேட்டையில் காங்கிரஸை எதிர்த்து களமிறங்கி  தோல்வி கண்டபோதும் அவர் துவண்டுவிடவில்லை. 

அதன் பின் பின் பாலபாரதி எனும் வார பத்திரிகையை  நடத்தி வந்தார். சில இதழ்களில் எழுதியும் சித்திரங்கள் வரைந்தும் வாசகர்கள் மத்தியில் புகழடைந்தார்.

1938இல் ராஜாஜி முதலமைச்சராக இருந்தபோது ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டு அண்ணா உட்பட பலரும் கைதுசெய்யப்பட்டு சிறை சென்றனர்.

1940இல் ஹிந்தி கட்டாய பாடமல்ல என அரசு ஆணை பிறப்பித்த பின்னரே அண்ணா உட்பட அவரோடு கைதுசெய்யப்பட்டவர்கள்  விடுதலையாயினர். 

1939இல் அண்ணா நீதிக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனார். 

1949 செப்டெம்பர் 17ஆம் திகதி பெரியார் பிறந்த நாளில் திராவிட முன்னேற்றக் கழகம் தனிக்கட்சியாக அண்ணாவின் தலைமையில் உருவானது.

1957இல் இடம்பெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக முதல் முறையாக போட்டியிட்டு, 15 சட்டமன்ற தொகுதிகளையும், 2 நாடாளுமன்ற தொகுதிகளையும் கைப்பற்றியது.

காஞ்சிபுரம் தொகுதியில் போட்டியிட்டு அண்ணா வெற்றி பெற்றதை தொடர்ந்து 1957இல் சட்டமன்ற உறுப்பினரானார்.

அபேட்சகர் என்ற சமஸ்கிருத வார்த்தையை ‘வேட்பாளர்’ என தூய தமிழில் மாற்றியதும் அண்ணாதான். 

1962இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் திமுக 51 சட்டமன்ற தொகுதிகளை கைப்பற்றினாலும், காஞ்சிபுரம் தொகுதியில் அண்ணா தோல்வியுற்றார். திமுக எதிர்க்கட்சியானது.

1967இல் நடைபெற்ற தேர்தலில் திமுக 138 தொகுதிகளில் அபார வெற்றி பெற்று, அண்ணா தமிழகத்தின் முதல்வரானார்.

இவரது மாநில ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்கள் அறிமுகமாயின.

1968இல் அமெரிக்கா, ஜப்பான், இத்தாலி, சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளுக்கு சென்றார், அண்ணா.

அமெரிக்க ஏர்ல்ஸ் பல்கலைக்கழகத்தில் அண்ணா பேசினார். Nothing என்ற தலைப்பில் அண்ணாவை பேசச் சொல்லவே, அவர் அரங்கையே அதிரச் செய்யுமளவு உரையாற்றினார்.

அப்போது ஒரு மாணவன் எழுந்து ‘பிகோஸ்’ (because) என்ற சொல் தொடர்ந்து மூன்று முறை வருவது போல் பேசும்படி அண்ணாவிடம் கூற, அவர் இப்படியாக அந்த வசனத்தை பேசினார்.

‘no sentence ends in because, because, because is a conjunction’ 

இந்த வசனத்துக்கு இன்றைய தலைமுறையினரே கூட சல்யூட் வைப்பர்.

1968இல் அண்ணாமலை பல்கலைக்கழகம் அண்ணாவுக்கு டாக்டர் பட்டம் வழங்கி (doctor of literature) கௌரவித்தது. 

திரையுலக பயணம் 

அண்ணாவின் எழுத்துப்பணி திரையுலகையும் திரும்பிப் பார்க்க வைத்தது. ஒரே இரவில் இவர் எழுதிய ‘ஓர் இரவு’ நாடகமாகவும் திரைப்படமாகவும் வெளிவந்தது. அதன் பின்னர் அண்ணா ‘தமிழ்நாட்டின் பெர்னாட்ஷா’ என அழைக்கப்பட்டார்.

இவர் எழுதிய ‘வேலைக்காரி’ நாடகமும் திரைப்படமானது. 

சுயமரியாதை மாநாட்டுக்காக இவர் எழுதிய ‘சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம்’ நாடகத்தில் சிவாஜி கணேசனை சத்ரபதி சிவாஜியாக நடிக்க வைத்து, அவரை நடிகர் திலகமாக உலகறியச் செய்தவர் அண்ணாவே! 

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் மீதுள்ள அளவு கடந்த அன்பினால் ‘என் இதயக்கனி’ என்றார், அண்ணா.

அண்ணா மீது எம்.ஜி.ஆர் கொண்ட பற்றினால், அவர் எதிர்காலத்தில் மக்கள் திலகம், புரட்சித் தலைவர் என தமிழக மக்கள் கொண்டாடும் தலைவனாக போற்றத்தகுந்த இடத்தினை அடைந்தார்.

எழுதியவற்றுள் சில நூல்கள்

அவர்கள் சந்திப்பு

ஆரியமாயை 

இலட்சிய வரலாறு 

உலகப்பெரியார் 

கம்பரசம் 

குமரிக்கோட்டம் 

பணத்தோட்டம்பணத்தோட்டம் 

மே தினம் 

தீ பரவட்டும் 

ரோமாபுரி ராணிகள் 

விடுதலைப்போர் 

மறைவு 

1968.09.16 அன்று புற்றுநோய் அறுவை சிகிச்சைக்காக அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் உள்ள மெமோரியல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், அண்ணா.

சிகிச்சை முடிந்து நவம்பர் 6ஆம் திகதி தமிழகம் திரும்பினார்.

1969 ஜனவரி 14ஆம் திகதி தைப்பொங்கல் திருநாளில் சென்னை தியாகராய நகரில் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணனின் சிலையை திறந்து வைத்தது தான் அண்ணா பங்கேற்ற இறுதி நிகழ்வானது.

மீண்டும் புற்றுநோயால் தீவிரமாக பாதிக்கப்பட்ட அண்ணா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோதும் சிகிச்சை பலனின்றி 1969 பெப்ரவரி 3ஆம் திகதி பேரறிஞர் அண்ணாத்துரை காலமானார். இவரது மறைவு தமிழகத்தை மட்டுமன்றி, இந்தியா முழுவதுமுள்ள மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. 

About editor 3160 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply