கியூபா பயணக் கட்டுரை (71-80)

கியூபா பயணக் கட்டுரை (61 )
ஒரு பருந்தின் கீழ்
ஏழு திங்கள்கள் கழித்து நாடு திரும்பிய கொலம்பஸ்!

ஒரு நாட்டின் குடிமகன் ஒருவன் இன்னொரு நாட்டுக்குப் பயணம் செய்து வேறொருவனுக்குச் சொந்தமான நாட்டில் தனது அரசர் அல்லது அரசியின் பெயரில் ஒரு கொடியை நிலத்தில் நாட்டி “இந்த நாடு எனது அரசருக்குச் சொந்தமானது”” என்று கூறுவதற்கு  என்ன உரிமை இருக்கிறது? இந்தக் கேள்விக்கு விடை சொல்வது கடினமாகும். ஆனால், ஒரு பழைய பொன்மொழி “வல்லவன் வகுத்ததே வாய்க்கால்”” (Might is right) என்று சொல்கிறது.  

பொன்மொழி பழசென்றாலும் அது இன்றும் நடைமுறையில்  இருக்கிறது. வெளிநாட்டுப் படையெடுப்பாலும் உள்நாட்டுப் போரினாலும் சிக்கிச் சீரழிந்த வறிய நாடான ஆப்கனிஸ்தான் நாடு மீது பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்ற சாக்கில் அமெரிக்கா 7,000 – 10,000 வரை கிலோ எடையுள்ள குண்டுகளைப் போட்டுத் தகர்த்து வருகிறது. இந்தக் குண்டுகள் அணுக்குண்டுகளுக்கு அடுத்தபடி சக்தி வாய்ந்ததாகும். அமெரிக்காவிற்கு ஆதரவாக பிரித்தானியாவும்ää கனடாவும் கொடுக்கைக் கட்டிக் கொண்டு யுத்தகளத்தில் இறங்கியுள்ளன. 

ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன் கொலம்பசுக்கு இருந்த அதே கொலனித்துவ – ஏகாதிபத்திய மனப் பான்மை இன்று (2002) யோர்ஜ் புஷ், ரோனி பிளேயர், யேன் கிரச்சியனுக்கு இருப்பது கண்கூடு. பல நூற்றாண்டு காலமாக “கருப்பர்கள் வெள்ளை மனிதனின் சுமை” (Blacks are Whiteman’s burden)  என்று சொல்லிக் கொண்டு ஆசிய, ஆபிரிக்க, அமெரிக்க நாடுகளைத் துப்பாக்கி முனையில் கைப்பற்றி, அங்கு வாழ்ந்த பூர்வீக குடிமக்களை வேட்டையாடி, அவர்களின் சமயம், மொழி, பண்பாடுகளை அழித்து,  வளங்களைக் கொள்ளையடித்துக் கொழுத்த இந்த நாடுகள் இன்றும் அதே அரிப்போடும், தலைக் கனத்தோடும், திமிரோடும் நடந்து கொள்கின்றன.

பயங்கரவாதத்தின் மொத்த உருவமான இந்த நாடுகள் பயங்கரவாதம் பற்றிப் பேசுவது மிகவும் வேடிக்கையாக இருக்கிறது. 

கொலம்பஸ் ஒரு தீவிலிருந்து மற்றத் தீவு என மாறி மாறி போய்க்  கொண்டிருந்தார். புதிதாகப் பார்த்த ஒவ்வொரு தீவும் காதேக்கு அருகில் தன்னைக்  கொண்டு செல்வது போலவும், அங்கு பளிங்கினால் கட்டப்பட்ட ஆலயங்கள்,  தங்கத்தினால் வேயப்பட்ட அரண்மனைகள் நிறைந்த பள பளப்பான நகரங்களைப் பார்க்கப் போவதாகவும் கொலம்பஸ் எதிர்பார்த்தார். 

ஆனால், ஆலயங்களோ அல்லது அரண்மனைகளோ எங்கும் காணப்படவில்லை. கியூபாவின் கடற்கரையை அடைந்தபோது “இதுதான் ஆசியாவின் தலைநிலப் பரப்பு (mainland)?என எண்ணினார். உடனே தனது மொழிபெயர்ப்பாளர் லூயிசிடம் “மாட்சிமை தங்கிய காதே நாட்டின் சக்கரவர்த்திக்கு” முகவரியிட்டு எழுதிய கடிதம் ஒன்றைக் கையில் கொடுத்து அனுப்பி வைத்தார். அதன் பின் லூயிசின் வருகைக்கு வழிமேல் விழிவைத்துக் கொலம்பஸ் நாள் கணக்கில் காத்திருந்தார்.  

லூயிஸ் சென்று பல நாள்கள் கழிந்தன. ஆனால், சக்கரவர்த்தியையோ,  அவரின் அரண்மனையையோ, நகரத்தையோ, தங்கப் பாளங்களையோ, வாசனைத் திரவியங்களையோ, முக்கியமாகக் காதே நாட்டையோ காண முடியவில்லை. லூயிசின் கண்ணுக்குத் தெரிந்தது எல்லாம் மரப்பட்டை, புல்லுகளால் வேய்ந்த குடிசைகள், சோழம் பயரிடப்பட்ட வயல்கள் மற்றும் சாதாரண மக்கள் மட்டுமே. அவர்களால் காதே அல்லது சிப்பன்கோ (Cipango) அல்லது இந்தீஸ் எங்கிருக்கிறது என்ற தகவல் எதனையும் சொல்ல முடியவில்லை.  

எனவே கொலம்பஸ் நாள்தோறும் காதேயைத் தேடி ஒவ்வொரு தீவு தீவாக அலைந்தார். அதன் பொழுது அங்கொன்று இங்கொன்றாகச் சிறிது தங்கம், கொஞ்ச முத்துக்கள், சிறிது வெள்ளி, ஏராளமான பறவைகளின் தோல், இறக்கை, அணிமணிகள் (trinkets) போன்றவை கொலம்பசுக்குக் கிடைத்தன. 

கொலம்பசை தண்டயல் அலன்சோ பின்சொன் பிந்தா என்ற கப்பலில் பின் தொடர்ந்து வந்ததைப் பார்த்தோம் அல்லவா? பின்சொனுக்கு வேறு யோசனை தோன்றியது. “நான் என்பாட்டில் போனால் காதேயைக் கண்டு பிடிக்கலாம். கண்டு பிடித்தால் ஏராளமான தங்கம் முத்துக்களை அள்ளிக் கொள்ளலாம்” எனச் சொல்லிக் கொண்டு ஒரு நாள் பயணம் புறப்பட்டார். அவர் என்னவானார் என்பதை கொலம்பஸ் அதன் பின்னர் அறிந்து கொள்ளவே இல்லை.  

தண்டயல் பின்சொன் என்னவானார் என்ற கவலையோடு பயணப்பட்டுக் கொண்டிருந்த கொலம்பஸ் ஒரு நாள் ஹேயிட்டியை (Haiti) சென்றடைந்தார். கியூபா காதே ( அல்லது சீனா) ஆக இருந்தால் ஹேயிட்டி நிச்சயமாக சிப்பன்கோ (அல்லது யப்பான்) ஆக இருக்க வேண்டும். ஆனால், நத்தார் தினத்துக்கு முதல்நாள் சாந்தா மேரி கப்பலின் தண்டயல் எல்லாம் பத்திரமாக இருக்கிறதென்ற நினைப்பில் இன்னொரு மாலுமியிடம் சுக்கானைக் கொடுத்துவிட்டு நித்திரை கொள்ளப் போய்விட்டார். ஏனைய மாலுமிகளும் நித்திரைக்குப் போய்விட்டார்கள். அனுபமில்லாத அந்த மாலுமி சாந்தா மேரி கப்பலை ஒரு நீரடிப்பாறையில் மோத விட்டுவிட்டார். கப்பல் கவிழ்ந்து சேதமடைந்தது.

அதனை மீண்டும் மிதக்க எடுத்த முயற்சிகள் வீணாகின. கப்பல் ஒரு பக்கமாகக் குடைசாய்ந்து விட்டது. பலகைகள் விரிந்து அதனூடாக தண்ணீர் உள்ளுக்குள் புகுந்தது. அலைகள் பலமாக அடித்ததால் பாய்மரம் முறிந்து விழுந்தது. இவற்றால் சாந்தா மேரியின் ஆயுள் முடிவுக்கு வந்தது.

கொலம்பஸ் பலத்த இக்கட்டுக்குள் தள்ளப்பட்டார். பிந்தா கப்பல் அவரைக் கைவிட்டு விட்டுச் சென்று விட்டது. சாந்தா மேரியா சேதத்துக்குள்ளாகி விட்டது. எஞ்சியிருந்த நீனா என்ற கப்பல் சாந்தா மேரியாவை விட அளவில் சிறியது. அதில் எல்லா மாலுமிகளையும் ஏற்றிக் கொண்டு இசுப்பானியா திரும்ப முடியாது. ஆனால், கொலம்பஸ் இசுப்பானியாவிற்கு உடனே திரும்ப வேண்டும் என்று விரும்பினார்.

இப்படியான இக்கட்டுகளில் இருந்து மீளக் கொலம்பஸ் துரித நடவடிக்கையில் இறங்கினார். சந்தா மேரியா கப்பலைப் பிரித்தெடுக்குமாறு தனது ஆட்களுக்கு அவர் கட்டளை இட்டார். அப்படிப் பிரித்தெடுத்த பலகைகள், காட்டுக்குள் இருந்த மரங்கள், கரையில் காணப்பட்ட  கற்கள் இவற்றைக் கொண்டு கொலம்பஸ் ஒரு கோட்டையைக் கட்டினார். கோட்டையைச் சுற்றி ஆழி, காவல் கோபுரம் மற்றும் பாலம் அமைக்கப் பட்டது.  

இதுதான் அய்ரோப்பியர் புதிய உலகத்தில் கட்டிய முதல் கோட்டை ஆகும். கோட்டை யின் மீது இசுப்பானியா நாட்டின் தேசியக் கொடி பட்டொளி வீசிப் பறந்தது என்று சொல்ல வேண்டியதில்லை. கோட்டை மதில் சுவர்களில் கப்பலில் இருந்து காப்பாற்றப் பட்ட பீரங்கிகள் பொருத்தப்பட்டன. அந்தக் கோட்டைக்கு லா நேவிடாட் (La Navidad )  என்ற பெயர் சூட்டப்பட்டது. லா நேவிடாட் என்றால் நத்தார் தினத்தில் கவிழ்ந்த கப்பலில் இருந்து பிறந்த கோட்டை என்று பொருள்.  நத்தார் தினம் யேசுநாதரின் பிறந்த நாள் (Christ Nativity) என்று கொண்டாடப்படுகிறது.   

தன்னுடன் வந்த மாலுமிகளில் 45 பேரைத் தேர்ந்தெடுத்துத் தான் இசுப்பானியாவிற்குச் சென்று திரும்பும் வரை அந்தத் தீவில் தங்குமாறு கொலம்பஸ் அவர்களைப் பணித்தார். பெரும்பாலோர் அப்படி அங்கு தங்கியிருக்க மகிழ்ச்சியோடு ஒப்புக் கொண்டனர். ஒன்று அந்தத் தீவு மிகவும் அழகாக இருந்தது. இரண்டு அந்தத் தீவிலுள்ள தங்கப் பாளங்களை சேகரித்துக் கோட்டைக்குள் குவிப்பதில் பொழுது போய்விடும் என்ற நினைப்பு. தான் திரும்பி வரும்போது அவர்கள் குறைந்தது ஒரு தொன் தங்கப் பாளங்களையாவது சேகரித்து வைக்க வேண்டும் என்று கொலம்பஸ் கட்டளை இட்டார்.   
அவர்களுக்கு ஒரு ஆண்டுக்குப் போதுமான உணவும், வெடிமருந்தும் கொடுக்கப்பட்டன. இந்தியர்களோடு நட்போடு இருக்க வேண்டும். அதே சமயம் கவனமாகவும் அவதான மாகவும் இருக்க வேண்டும் எனக் கொலம்பஸ் அவர்களிடம் சொன்னார். அப்படிச் செய்யும் பட்சத்தில் இசுப்பானிய அரசியாரும் அரசரும் மனம் மகிழ்ந்து அவர்களுக்குத் தகுந்தபடி சன்மானம் செய்வார்கள் என்று சொல்லப்பட்டது.

கிபி 1493 ஆம் ஆண்டு சனவரி 4 ஆம் நாள் நீனா என்ற கப்பலில் தாய்நாடு நோக்கிய தனது பயணத்தை கொலம்பஸ் தொடங்கினார். அப்போது அவருக்கு ஒரு வியப்புக் காத்திருந்தது. தொலைந்து போய்விட்டதாக கொலம்பஸ் நினைத்த பிந்தா என்ற கப்பலைக் கண்டார். தண்டயல் அலன்சோ பின்சொனுக்குக் கொலம்பசைப் பார்க்க வெட்கமாக இருந்தது. கொலம்பசை விட்டுச் சென்றதிற்குரிய காரணத்தைப் பின்சொன் விளக்க முற்பட்டார். ஆனால்,, கொலம்பசுக்குப் பின்சொன் தங்கப் பாளங்களைத் தேடித்தான் போனார் என்பதும் அது கிடைக்கவில்லை என்பதும் தெரிந்திருந்தது. ஆனால், அதனை அவர் வாய்விட்டுச் சொல்லவில்லை. இரண்டு  கப்பல்களும் இப்போது இசுப்பானியா நோக்கித் தமது பயணத்தை ஆரம்பித்தன.  

தாயகம் நோக்கிய கடல் பயணம் கொந்தளிப்பாக இருந்தது. பலர் வாந்தி எடுத்தார்கள். ஒரு சமயம் கடல் மிகவும் கொந்தளிப்பாக இருந்ததால் நீனா அதைத் தாக்குப் பிடிக்காது மூழ்கப் போகிறது என்ற பயம் கொலம்பசுக்கு ஏற்பட்டது. உடனே கொலம்பஸ் தான் அதுவரை செய்ததையும் கண்டதையும் இன்னொரு குறிப்புத் புத்தகத்தில் எழுதினார். அதனை இசுப்பானிய அரசியாருக்கும் அரசருக்கும் முகவரியிட்டு ஒரு பீப்பாவில் போட்டு கடலில் வீசினார். 

ஆனால்,, நீனா கடலில் மூழ்கவில்லை. பெப்ரவரி மாதம் 18 ஆம் நாள் கொலம்பஸ் அசோர்ஸ் தீவைச் (அமெரிக்காவிற்கும் ஐரோப்பாவுக்கும் இடையில் அத்திலாந்திக் பெருங்கடலில் ஐரோப்பாவை அண்டிக் கிடக்கும் தீவு) சென்றடைந்தார். அந்தத் தீவின் போர்த்துக்கேய ஆளுநருக்கு ஒரே வியப்பு. அதே சமயம் இந்த இத்தாலிய விசரன் சுகமாகத்  திரும்பி வந்ததைக் கண்ட அவருக்கு மகா கோபம் வந்தது. கொலம்பசின் பயணத்தால் போர்த்துக்கல் அல்ல இசுப்பானியா நாடு இலாபம் அடையப் போகிற தென்று நினைத்த ஆளுநர் கொலம்பசைச் சிறையில் அடைக்க எத்தனித்தார். ஆனால், கொலம்பஸ் அவருக்குத் தண்ணிகாட்டி விட்டுப் போர்த்துக்கேயக் கடற் கரையை நோக்கிப் பயணப்பட்டார். அங்கு நங்கூரமிட்ட பின் போர்த்துக்கேய அரசர் யோனைச் சந்தித்தார்.  

இதே அரசர்தான் ஒரு காலத்தில் தன்னைக் கனம் பண்ணாமல் மிகவும் புறங்காட்டி நடந்து கொண்டார் என்பதை கொலம்பஸ் மறந்து விடவில்லை. இப்போதும் அப்படியே மன்னர் யோன் கொலம்பசை நடாத்தியிருப்பார். ஆனால், இப்போது கொலம்பஸ் முன்னைப்போல சாதாரண ஆள் அல்ல.  ஒரு நீண்ட அபாயம் நிறைந்த பயணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு நாடு திருப்பியிருக்கிறார். தளபதி கொலம்பசுக்கு அவமதிப்புச் செய்வதை இசுப்பானிய அரசர் அரசியார் விரும்ப மாட்டார்கள். இத்தியாதி காரணங்களுக்காக அரசர் யோன் கொலம்பசை  இராச மரியாதையுடன் வரவேற்றார். கொலம்பஸ் தான் காதேயில் இருந்து திரும்பி விட்ட செய்தியை இசுப்பானிய அரசர் அரசியர் இருவருக்கும் ஒரு தூதுவர் மூலம் அனுப்புவதற்கு அரசர் யோன் அனுமதி அளித்தார்.  

கொலம்பஸ் நீனா என்ற கப்பலில் தனது பயணத்தை மீண்டும் ஆரம்பித்தார். ஆனால், அவரது பழைய நண்பன் தண்டயல் அலொன்சோ பின்சொன் மீண்டும் ஒருமுறை கொலம்பசைக் கைவிட்டார். கொலம்பஸ் ஒரு புயலில் சிக்கியபோது, பின்சொன் அவரைக் கைவிட்டு இசுப்பானியா நோக்கி விரைந்தார். இசுப்பானிய நாட்டின் துறைமுகம் ஒன்றை அடைந்த பின்சொன் பயணத்தின் வெற்றிக்கான பாராட்டை தான்மட்டும் தட்டிக்கொள்ளும் எண்ணத்தில் அரசிக்கும் அரசருக்கும் தான் காதேயில் இருந்து திரும்பிவிட்டதாகவும்,  நேரில் சொல்வதற்கு நிறையச் சங்கதிகள் இருப்பதையும் தெரிவித்து  ஒரு கடிதத்தை அவசர அவசரமாக அனுப்பி வைத்தார். அங்கிருந்து பின்சொன் பாலோசுக்கு பயணப்பட்டார். 

மேற்கு நோக்கிப் பயணம் புறப்பட்டு ஏழு திங்கள் கழித்து கிபி 1493 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15 ஆம் நாள் கொலம்பஸ் பாலோஸ் துறைமுகத்தை சென்றடைந்தார். மக்களுக்கு நீனா என்ற அந்தச் சிறிய கப்பலை அடையாளம் காண அதிக நேரம் எடுக்கவில்லை. சொலம்பஸ் திரும்பி விட்டார் என்ற செய்தி காட்டுத் தீபோல் எங்கும் பரவியது.  

கொலம்பஸ் காதேயைக் கண்டு பிடித்து விட்டார். கூரே! கூரே! என்று எல்லோரும் கத்தினார்கள். ஆலய மணிகள் அடித்தன, பீரங்கிகள் முழங்கின, வீதி எங்கும் மக்கள் நிறைந்தனர். மாலுமிகள் அனைவரும் மகிழ்ச்சியோடு வரவேற்கப் பட்டார்கள். அவர்கள் சொன்ன கதைகளை மக்கள் ஆச்சரியத்தோடு வாயைப் பிழந்த வண்ணம் கேட்டறிந்து கொண்டார்கள். 

கொலம்பஸ் பாலோஸ் திரும்பி விட்டார். அவரைக் கண்ட எல்லோரும் வாழ்த்துக் கூறி தடபுடலாக வரவேற்றார்கள். ” பாலோஸ் துறைமுகப் பட்டினத்து மாலுமிகளை இழுத்துக் கொண்டு கடலில் பயணம் செய்து  அவர்களை பூமியின் விழிம்பில் வைத்து கீழே தள்ளி விழுத்தப்போன விசர் இத்தாலியன்” என்று இப்போது  கொலம்பசை யாரும் எள்ளி நகையாடவில்லை. (வளரும்)

——————————————————————————————————————–

கியூபா பயணக் கட்டுரை
ஒரு பருந்தின் கீழ்
கொலம்பசின் இரண்டாவது கடல் பயணம்!
(62)

இந்தக் கொண்டாட்டத்தின் மத்தியில் பிந்தா என்ற கப்பல் பாலோஸ்; துறைமுகத்தை வந்தடைந்தது. தரையில் நடக்கும் கொண்டாட்டத்தின் சத்தம் தண்டயல் அலொன்சோ பின்சொன் காதில் விழுந்தது.

கொலம்பசை முந்திக்கொண்டு புதிய நாடுகளைக் கண்டுபிடித்த செய்தியை அரசரிடமும் அரசியாரிடமும் சொல்லி அதற்குரிய பாராட்டையும் பரிசையும் தட்டிக் கொள்ளலாம் என்ற பின்சொன் கனவு கலைந்து போனது  பின்சொனினுக்கு ஏமாற்றமாக இருந்தது. தனது பழைய  நண்பனைப்  பார்த்து மன்னிப்புக் கேட்பதற்குப் பதில் பின்சொன் நேரே தனது இல்லத்துக்கு ஏகினார்.  

அங்கு  அவருக்கு  அரசர் அரசி இருவரிடத்தும் இருந்து வந்த ஒரு கடிதம் காத்திருந்தது. அதில் அவர்  நடந்து கொண்ட விதம் கடுமையாகக் கண்டிக்கப் பட்டிருந்தது. தனது முயற்சிகள் எல்லாம் தோல்வியில் முடிந்தது பின்சொனுக்கு பலத்த மன உளச்சலையும்  அளித்தது. அந்தக் கவலையில் நோய்வாய்ப்பட்டுப் பாயில் விழுந்த பின்சொன் சில நாள்கள் கழித்து இறந்து போனார். 

கொலம்பஸ் முதலில் தனது பழைய நண்பர் யுவான் பெரஸ்  (Juan Perez) என்ற பாதிரியாரைச்  சந்தித்துத் தனது பயண அனுபவங்களை விரிவாகக்  கூறினார். அதன் பின் பாசிலோனா (Barcelona) சென்று தனது வருகைக்காகக் காத்திருந்த பெர்டினன்ட் அரசரையும் இசபெல்லா அரசியாரையும் அரண்மனை சென்று சந்தித்தார். ஏற்கனவே இருவரும் கொலம்பஸ் காதேயைக் கண்டுபிடித்ததைப் பாராட்டி மடல் அனுப்பி யிருந்தார்கள். அது மட்டும் அல்லாமல் கொலம்பசை இரண்டாவது பயணத்துக்கு ஆயத்தமாகுமாறும் கேட்டிருந்தார்கள்.  

கொலம்பஸ் தான் கண்டு  கேட்டதை எல்லாம்  விரிவாக எடுத்துச் சொன்னார். தான் காதேயில் இருந்து கொண்டு வந்திருந்த தங்கம், நவரத்தினங்கள், பறவைகள் போன்றவற்றைக் காட்டினார். அரசரும் அரசியாரும் அவரது சாதனையைப் புகழ்ந்து பேசினார்கள். ஒரு வறிய கம்பிளி நெசவாளியான கொலம்பசை ஒரு இளவரசருக்கு அல்லது ஒரு பெரிய பிரபுவுக்கு உரிய மரியாதையோடு தங்கள் அருகு இருத்திக் கவுரவித்தார்கள். கொலம்பஸ் அவரது கேடயத்தோடு  அல்லது தலைக் கவசத்தோடு அரச சின்னங்களையும் சூடலாம் எனவும் அவருக்குச் சொல்லப்பட்டது.  

கொலம்பசின் இரண்டாவது கடல்  பயணத்துக்கு  வேண்டிய கப்பல்கள், மாலுமிகள் ஆயத்தம் செய்யப்பட்டன. இந்த இரண்டாவது பயணத்தில் நிச்சயம் கொலம்பஸ் பளிங்கினால் ஆன  ஆலயங்கள், தங்கத்தினால் ஆன அரண்மனைகள் கொண்ட காதே நாட்டின் நகரங்களை அடைவது நிச்சயம் எனவும் அப்போது கொலம்பஸ் காதே நாட்டுச் பேரரசரோடு தங்கம், நவரத்தினங்கள் மற்றும் வாசனைத் திரவியங்கள் போன்றவற்றில் வாணிகம் செய்ய ஒப்பந்தங்களை எழுதிக் கொள்ள வேண்டும் எனவும் அரசரும் அரசியாரும் தெரிவித்தார்கள்.  

அப்போதுகூட கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டு பிடித்ததையோ அல்லது அப்படி ஒரு பெரிய கண்டம் இருப்பதையோ அரசரோ அரசியாரோ அறிந்திருக்கவில்லை. மார்க்கோ போலோ தனது ஆசியப் பயணத்தின்போது பார்த்த செல்வச் செழிப்பான நாடுகளையே கொலம்பஸ் பார்த்துத் திரும்பியுள்ளதாக இருவரும்  நினைத்தார்கள்!  
கொலம்பஸ் செல்லும் இடமெல்லாம் அவருக்கு இராச மரியாதை கொடுக்கப்பட்டது. மக்கள் கூட்டம் அவரைப் பார்க்கத் திரண்டது. தங்களையும் காதே செல்லும் கப்பலில் அழைத்துச் செல்லுமாறு அவரிடம் பலர் கெஞ்சினார்கள்.  

கொலம்பசுக்கு எவ்வளவு விரைவாக தனது இரண்டாவது கடல் பயணத்தை தொடங்க முடியுமோ அவ்வளவு விரைவாக அதனைத் தொடங்க ஆசைப்பட்டார். தான் கண்ட அழகான தீவுகளில் கிடைக்கக்கூடிய தங்கத்தையும் நவரத்தினங்களையும் அள்ள வேண்டும் என்பது அவரது கவலையாக இருந்தது. இம்முறை மொத்தம் 17 கப்பல்களில், 1500 மாலுமிகளோடு  1493 ஆம் ஆண்டு செப்தம்பர் மாதம் 25ஆம் நாள் கொலம்பஸ் பயணம் புறப்பட்டார்.  

இந்தத் தடவை காதே, இந்தியா மற்றும் சிப்பன்கோ நாடுகளைக் கண்டு பிடித்து அங்கு இருக்கின்ற நகரங்களில் கிடைக்கக் கூடிய அளவிட முடியாத, காணுதற்கு அரிய செல்வங்களை எல்லாம் கொண்டு வந்து இசுப்பானிய நாட்டு அரசர் அரசியர் இருவரிடமும் கொடுத்து நல்ல பெயர் வாங்க வேண்டும்  என்று கொலம்பஸ் மனதுக்குள் கணக்குப் போட்டார்.

காடிஸ் துறைமுகத்தில்  இருந்து கொலம்பஸ் புறப்பட்டார். கடந்த ஆண்டு பாலோஸ் துறை முகத்தில் இருந்து  தனது முதல்  பயணத்தை 3 சிறு கப்பல்களில் கொலம்பஸ் மேற்கொண்ட போது அவரது மாலுமிகள் வேண்டா வெறுப்போடு இருந்தார்கள். அவரது நண்பர்களது எண்ணிக்கை சொற்பமாக இருந்தது. பலர் அவரை விசரன் என்று நினைத்தார்கள். பயணம் வெற்றி பெறுமா என்பதில் பலத்த அய்யம் பலருக்கு இருந்தது. இப்போது எல்லாமே தலை கீழ் மாற்றம் அடைந்துவிட்டன.  

மேரியா கலந்தே (Maria Galante)  என்ற கொடிமரக் கப்பலின் (Flagship) அணியத்தில் நின்று பெருங்கடலைக் கண்களால் அளக்கும் கொலம்பஸ் இப்போது பெரிய புள்ளி. அரசர் அரசியர் இருவரும் “பெருங்கடலின் கடல் தளபதி (Admiral of the Ocean Seas)  “இந்தியாவின் தேசாதிபதி” (Viceroy of Indies)  என்ற உயர் பதவிகளுக்குன் கொலம்பசை நியமனம் செய்திருந்தார்கள்.  

கொலம்பஸ் கூப்பிட்ட குரலுக்கு ஓடிவர வேலையாட்கள், சிறியதும் பெரியதுமான 17 கப்பல்களுக்கும்  அவரே ஏக தளபதி, துணைக்கு 1,500 மாலுமிகள், சிப்பாய்கள், குதிரை வீரர்கள். கப்பல் நிறைய இந்தியர்களுடனும், காதே நாட்டுப் பெருங்குடி வணிகர் களுடனும் வாணிகம் செய்வதற்கு  வேண்டிய  பொருள்கள், போகிற இடங்களில் தங்கிவிட விரும்புபவர்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுப்பதற்கு வேண்டிய கட்டடப் பொருள்கள் எல்லாம் பெருவாரியாக இருந்தன.  

எல்லாமே நல்லபடியாக இருந்தன. எதிர்காலம் நம்பிக்கையானதாகவும், ஒளிமயமானதாகவும் தெரிந்தது. கொலம்பஸ் தனது ஆசைக் கனவுகள், எதிர்பார்ப்புக்கள் எல்லாம் நிறைவேறப் போகிறதென்றும் உண்மையில் தான் பெரிய ஆள் மட்டுமல்ல அதிட்டசாலியும் கூட என தனக்குள் நினைத்துப் பெருமிதப் பட்டுக் கொண்டார்.  

இந்தப் பயணம் தங்கப் பாளங்களுக்கான வேட்டையாக இருக்கும். அந்தத் தங்கத்தை விற்றால்  50,000 வீரர்களைக் கொண்ட ஒரு காலால் படையையும், 4,000 வீரர்களைக் கொண்ட குதிரைப் படையையும் திரட்டி ஜெரூசலம் நகரையும் அங்குள்ள இயேசுநாதரின் கல்லறையையும் கைப்பற்றி வைத்திருக்கும் புறச்சமயிகளான துருக்கியரைத் துரத்துவதற்குப்  போதுமானதாக இருக்கும் என ஏலவே கொலம்பஸ் அரசருக்கும் அரசியாருக்கும் சத்தியம் செய்து கொடுத்திருந்தார்.  

கிறித்தவர்களுக்குப் புனித நகரமான ஜெரூசலத்தை  துருக்கியரிடம்  இருந்து மீளக் கைப்பற்ற வேண்டும் என்ற ஆசையை அய்ரோப்பிய கிறித்துவமக்கள் ஆண்டாண்டு காலமாக வளர்த்து வந்திருக்கிறார்கள். அந்த முயற்சியில் பல போராளிகள் போரிட்டுத் தோற்றார்கள் அல்லது இறந்துபட்டார்கள். இப்போது  தன்னால் அந்த ஆசையை நிறைவு செய்ய முடியுமென்று கொலம்பஸ் நினைத்தார்.  முன்னர் போலவே  கொலம்பஸ்  முதலில் கனரீஸ் தீவில் தரையிறங்கினார். அங்கு பயணத்துக்கு தேவைப்பட்ட விறகு, தண்ணீர், ஆடு, மாடு, பன்றி போன்றவற்றைச் சேகரித்தார்.  

நாள்க்கணக்கில் ஒரு தீவு மாறி மறு தீவு என்று கொலம்பஸ் போய்க் கொண்டிருந்தார். சிலவற்றில் இறங்கி அவற்றுக்குப் பெயர் சூட்டினார். ஆனால், காதே நாட்டைக் கண்டு பிடிக்க உதவவில்லை. முடிவில் கெயிட்டி (Haiti) அல்லது அவர் அழைத்தது போல ஹிஸ்பானியோலா (Hispaniola)  நோக்கிப் பயணமானார். அங்கேதான் லா நாவிடாட் என்ற கோட்டையைக் கட்டினார் என்பது தெரிந்ததே.   

நொவெம்பர் 27 இல் கொலம்பசின் கப்பல்கள்  லா நேவிடாட் கோட்டைக்கு அருகே நங்கூரம் பாய்ச்சி நின்றன. வந்து சேர்ந்த நேரம் இரவு நேரம். கண்களுக்கு ஒன்றுமே தெரியவில்லை. கோட்டை மதில் சுவர்கள் தெரிகிறதா என்று கூர்ந்து பார்த்தபோது அதுவும் கண்ணுக்குத் தென்படவில்லை. கொலம்பஸ் பீரங்கிக் குண்டொன்றை அடித்தார். அடுத்து இன்னொன்று.  குண்டுகளின்  எதிரொலி தவிர வேறொன்றையும் கேட்க முடியவில்லை.  

தான் விட்டுச் சென்ற அந்த மாலுமிகள் சரியான கும்பகர்ணன்கள் என்று கொலம்பஸ் மனதுக்குள் எண்ணினார். கடைசியாக ஒரு வள்ளத்தை யாரோ கம்புகளால் வலித்துக் கொண்டு வரும் சத்தம் கேட்டது.  கொலம்பசின் பெயரைச் சொல்லி யாரோ குரல் கொடுத்தார்கள். ஆனால், அது இசுப்பானிய மொழியில் இருக்கவில்லை. நல்ல காலம் முன்னர்  இசுப்பானியாவிற்குச் சிறைப் பிடித்துச் சென்ற இந்தியரில் ஒருவரை இந்தப் பயணத்தில் கொலம்பஸ் தன்னோடு மொழிபெயர்ப்பாளராகக் கூட்டி வந்திருந்தார்.  
கப்பலில் இருந்த வெளிச்சத்தின் உதவியுடன் அந்த வள்ளத்தில் ஒரு இந்தியர் இருப்பது மங்கலாகத் தெரிந்தது. அவர் கொலம்பசுக்குப் பரிசுப் பொருள்கள் கொண்டு வந்திருந்தார். அதில் கவனம் செலுத்தாது  என்னுடைய ஆட்கள் எங்கே, அவர்கள் என்னவானார்கள் என்று கொலம்பஸ் கேட்டார். அப்போது அவருக்கு அந்தச் சோகக் கதை சொல்லப்பட்டது.

லா நேவிடாட் என்ற அந்தக் கோட்டை தகர்க்கப்பட்டு விட்டது. மாலுமிகள்  அனைவரும் இறந்து போனார்கள். இசுப்பானியா முதல்முறையாக புதிய உலகில் ஆரம்பிக்க இருந்த கொலனி படு தோல்வியில் முடிந்தது. அதற்கு இசுப்பானியர்கள் தங்களைத் தாங்களே நொந்து கொள்வதைவிட வேறு வழி இருக்கவில்லை.  

கொலம்பஸ் அந்த மாலுமிகளை விட்டுப் போனபின்னர் அவர்கள் அவர்  பணித்தபடி நடக்கவில்லை. அவர்கள் கொலம்பசுக்குக் கொடுத்த வாக்குறுதிப்படி நடந்து கொள்ளவும் இல்லை. அவர்கள் சோம்பேறிகளாக இருந்தார்கள். அந்தத் தீவு மக்களைக் கொடுமையாக இரக்கமின்றி நடத்தினார்கள்.  அது போதாதென்று  அவர்கள் தங்களுக்குள் சண்டை போட்டுக் கொண்டார்கள். சிலர் காட்டுக்குள் சென்று வசித்தார்கள்.

நோய் வேறு வந்து  அவர்களைப்  பீடித்துக் கொண்டது. மாலுமிகள் இரண்டு கன்னைகளாகப் பிரிந்து ஒருவர் மீது ஒருவர் பொறாமைப்பட்டுக் கொண்டார்கள். இந்தியர்கள் அவர்களுடைய எதிரிகளாக மாறினார்கள். இந்தியர்களுடைய போர்த் தலைவன் ஒருவன் இந்தியர்களைத் திரட்டி வெள்ளையர்களுக்கு எதிராகப் போரிட்டான். அவனது பெயர் காஒனபோ (Caonabo) என்பதாகும்.  கோட்டையும் அதனைச் சுற்றி இருந்த இருப்பிடங்களும் சுற்றி வளைத்துத் தாக்கி அழிக்கப்பட்டன. 
நாடுபிடிப்பாளர்கள் (Conquerors)  என்று தங்களை இறுமாப்புடன் சொல்லிக்கொண்ட இசுபானியர்கள் வெல்லப்பட்டுக் கொல்லப்பட்டார்கள்!  

இந்தச் செய்திகள் கொலம்பசுக்குப் பெரிய ஏமாற்றத்தைக் கொடுத்தது. தான் நம்பிக்கை வைத்த மனிதர்கள் அந்த நம்பிக்கையை பொய்யாக்கி  விட்டார்கள். தங்கப் பாளங்களை சேருங்கள் என்று தான் போட்ட கட்டளையை அவர்கள் உதாசீனம் செய்துவிட்டார்கள். கொலம்பசின் திட்டங்கள் எல்லாம் தோற்றுப் போய் விழலுக்கு இறைத்த நீராகி விட்டது.

ஆனால், தோல்விகளைக் கண்டு துவள்பவர் அல்ல கொலம்பஸ். கோட்டை தகர்க்கப்பட்டு விட்டது, மாலுமிகள் கொல்லப்பட்டு விட்டார்கள், தான் தோற்றுவிக்க விரும்பிய இசுப்பானிய குடியேற்றம் தொடக்கத்திலேயே  தோல்வி கண்டு விட்டது. பருவாயில்லை, போவது போகட்டும் சென்றவற்றையிட்டுக் கவலைப்பட்டு ஆகப் போவது ஒன்றுமில்லை. முயற்சி திருவினையாக்கும். மீண்டும் ஒருமுறை முயற்சித்துப் பார்க்கலாம் என கொலம்பஸ் முடிவு செய்தார்.

——————————————————————————————————————-

கியூபா பயணக் கட்டுரை
ஒரு பருந்தின் நிழலில்
கியூபாவை ஆசியா என்று நம்பிய கொலம்பஸ்
(63
)

கடலில் கவிழ்ந்த சாந்தா மேரியா என்ற கப்பலின் உடைந்த பலகைகளை வைத்துக் கட்டிய நேவிடாட் என்ற கோட்டை இருந்த இடம் கொலம்பசுக்கு ஏற்றதாக இருக்கவில்லை. அது தாழ்வான, அசுத்தமான, குளிரான இடத்தில் இருந்தது. எனவே கோட்டை  கட்டுவதற்கு வேறு இடம் பார்க்க எண்ணினார்.  அந்தத் தீவைச் சுற்றிப் பார்த்த கொலம்பஸ் அதன் வடபகுதி  கோட்டை கட்டுவதற்கு உகந்த இடமாகத் தேர்ந்தெடுத்தார். உலக வரைபடத்தைப்  பார்த்தால்  மேற்கு இந்தியத் தீவுகளில் ஒன்றான ஹெயிட்டிதான் அந்தத்  தீவு என்பது  தெரியவரும். இசபெல்லா முனைக்கு (ஊயிந ஐளயடிநடடய) அருகில் உள்ளது. 

கப்பல்கள் நங்கூரம் விட்டு நிற்பதற்குத்  தேவையான துறைமுகம், பாறைக் கற்களால் ஆன குன்றில் ஒரு கோட்டை, தோட்டம் செய்வதற்கு நல்ல செழிப்பான நிலம் கொலம்பசினால்  இனம் காணப்பட்டது. அந்த இடத்தில் ஒரு புதிய நகரம் உருவாகத் தொடங்கியது. அதற்குக்  கொலம்பஸ் தனது புரவலரான இசபெல்லாவின் பெயரைச் சூட்டினார்.  

நகரத்தின் மையப் பகுதியில் ஒரு சதுக்கம் அமைக்கப்பட்டது. அதைச் சுற்றி ஒரு தெரு. பொருள்களைச் சேமித்து வைப்பதற்குக் கற்களாலான கழஞ்சியம், தேவாலயம், ஆளுநர் மாளிகை கட்டப்பட்டன. ஏனையவர்களுக்குத் தெருவின் இன்னொரு பக்கத்தில் வீடுகள் கட்டப்பட்டன. அங்குள்ள மலைக் குன்றின் உச்சியில் கண்காணிப்புக் கோபுரம் நிறுவப்பட்டது. இதுவே ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் வெள்ளையர்களால் புதிய அமெரிக்க உலகில் உருவாக்கப்பட்ட முதல் குடியிருப்பாகும்.  

கொலம்பசின் ஆட்கள் இப்போது புறுபுறுக்கத் தொடங்கினார்கள். புதிய உலகில் தங்கம் தோண்டி எடுத்து குபேரர்களாக வாழலாம் என நினைத்து வந்தோமேயொழிய வீடுகள் கட்டுவதற்கு நிலத்தை தோண்ட வரவில்லை என்பதுதான் அவர்களது புறுபுறுப்புக்குக் ஏதுவாகும். உடனே கொலம்பஸ் தங்கம் தேடும் வேட்டையில் இறங்கினார். அதில் வெற்றி பெறலாம் என்ற நம்பிக்கை முதலில் தோன்றியது. இந்தியர்கள் ஹெயிட்டி மலைப் பாறைகளில் தங்கம் இருப்பதாகச் சொன்னார்கள். மலைக்குச் சென்ற கொலம்பசின் ஆட்கள் தங்கம் காணப்படும் அறிகுறி இருப்பதாக தெரிவித்தார்கள். அதை அடிப்படையாக வைத்து இசுப்பானிய அரசருக்கும் அரசியாருக்கும் மகிழ்ச்சியான செய்தி ஒன்றை கொலம்பஸ் அனுப்பி வைத்தார்.  

மஞ்சள் நிறத் தங்கத்துக்கான வேட்டையில் கொலம்பசும் அவரது ஆட்களும் முழு மூச்சாக இறங்கினார்கள். நீரோடைகளில் தேடினார்கள். நிலத்தைத் தோண்டிப் பார்த்தார்கள். இந்தியர்களிடமும் வேலை வாங்கினார்கள். இப்போது இந்தியர்களுக்குத் தங்கம் என்ற வார்த்தையைக் கேட்டாலே வெறுப்பு வந்தது. இந்தத் தங்கத்துக்குத்தான் இந்த வெள்ளையர் உயிர் வாழ்கிறார்கள் போலும் என்று மனதுக்குள் சபித்தார்கள். ஒரு சின்னத் தங்கக் கட்டியை கையில் வைத்துக் கொண்டு “இதுதான் வெள்ளையரின் கடவுள்” என்று ஒருவருக்கு ஒருவர் கேலியாகப் பேசிக் கொண்டார்கள்.  

வாழ்க்கையில் இப்படி எல்லாம் நாரிமுறிய வேலை செய்து பழக்கப்படாத இந்தியர்கள், கொலம்பசின் உபத்திரவத்தில் இருந்து தப்பப் பொய்க்குமேல் பொய் சொல்லத் தொடங்கினார்கள். அங்கு,  இங்கு, சற்றுத் தள்ளி  என்று எல்லா இடங்களையும் காட்டினார்கள். கொலம்பசின் ஆட்கள் ஓடி ஓடி அந்த இடங்களைச் சல்லடைபோட்டுத் துளைத்து எடுத்தார்கள். தங்கம்  மட்டும்  அகப்படவே இல்லை.  

1494 சனவரி 13 ஆம்  நாள் வெளிக்கிட்டு வந்த 17 கப்பல்களில் 14 கப்பல்களைக் கொலம்பஸ் இசுப்பானியாவிற்குத் திருப்பி அனுப்பி வைத்தார். அந்தக் கப்பல்களில் ஒரு அவுன்சு தங்கம் கூட எடுத்துச் செல்லப்படவில்லை என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. ஆனால், அரசியாருக்கும் அரசருக்கும் எழுதிய கடிதத்தில் வெகு விரைவில் தங்கம் அனுப்பப்படும் என உறுதி கூறப்பட்டது.  

இன்னொரு யோசனையையும் கொலம்பஸ் முன்வைத்தார். அந்தத் தீவிலுள்ள இந்தியர்களைப் பிடித்து இசுப்பானியாவிற்கு அனுப்பினால் அவர்களை அங்கு அடிமைகளாக விற்றுப் பணம் சம்பாதிக்கலாம். அதற்கு அனுமதி அளிக்குமாறு கேட்கப்பட்டது. இந்தியர்களைப் பிடித்து அனுப்புவதால் திறைச்சேரிக்குப் பணம் குவிவது மட்டுமல்ல வேறு நன்மையும் உண்டு. அவர்கள் எல்லோரையும் நல்ல கிறித்தவர்களாக மதமாற்றமும் செய்து விடலாம்.  

கொலம்பஸ் போன்ற ஒரு கடலோடி, இப்படி எல்லாம் செய்தார் என்பதை நினைக்க வருத்தமாகத்தான் இருக்கிறது. ஆனால், அவர்தான் அமெரிக்கக் கண்டத்தில் அடிமை வாணிகத்தை தொடக்கி வைத்த முதல் மனிதர் என்பது உண்மையே.

அய்ந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் சமூக மதிப்பீடு வேறாக இருந்தது. கொடிய அடிமை வாணிகம் பெரிய குற்றமாகக் கருதப்படவில்லை. ஏனைய பொருள்க்களை வாணிகம் செய்வதுபோல் மனிதர்களையும் வாணிகம் செய்யலாம் என்ற நினைப்பு இருந்தது. சில நல்ல மனிதர்கள் அடிமை வாணிகத்தை எதிர்க்கத்தான் செய்தார்கள். ஆனால், அந்த எதிர்ப்பை யாரும் பொருட்படுத்தவில்லை. அடிமை வாணிகத்தால் அமெரிக்கப் பூர்வீக குடிமக்கள் சொல்லொணாத் துயரத்துக்கும் துன்பத்திற்கும் அல்லல்களுக்கும் அனர்த்தங்களுக்கும் ஆளானார்கள். அமெரிக்கா வடக்கு – தெற்காகப் பிரிந்து ஒரு உள்நாட்டுப் போரில் குதித்ததற்கு கொலம்பஸ் தொடக்கி வைத்த அடிமை வாணிகமே காரணியாகும்.  

தங்கம் தேடிக் களைத்த சிலர் தோட்டம் செய்யத் தொடங்கினார்கள். ஆனால்,  தோட்ட வேலையும் இலகுவாக இருக்கவில்லை. தங்கம் தேடுவது தோட்டம் செய்வதைவிட இலாபகரமாக இருக்கும் என்று அவர்கள் நினைத்தார்கள். ஆனால், தங்கத்தை ஆறு, குளம், மலை என்று தேடினவர்களுக்கு அந்த வேலை கடினமாக இருந்தது. 

அந்தத்தீவின் நீரோடைகளில் கிடைத்த கொஞ்சத் தங்கம் கொலம்பசுக்குத் திருப்தி அளிக்கவில்லை. அத்தோடு அவரது ஆட்களின் புறுபுறுப்பும் அதிகரிக்கத் தொடங்கியது. ஒரு நாள் கொலம்பஸ் தங்கச் சுரங்கங்களை வேறு தீவுகளில் கண்டு பிடிப்பதற்குத் தனது 5 கப்பல்களிலும் புறப்பட்டார். யார் கண்டார்கள் காதே நாட்டையும் அதன் பளபளக்கும் நகரங்களையும் இந்தமுறை கண்டு பிடித்தாலும் பிடிக்கலாம் என கொலம்பஸ் நினைத்தார். 

தெற்குத் திசைப் பக்கம் பயணம் செய்த கொலம்பஸ் ஜமேய்க்கா(Jamaica) தீவைக் கண்டு பிடித்தார். அதன்பின் அருகிலுள்ள கியூபாவின் கடலோரமாகப் பயணம் செய்தார். கியூபா பல மைல் தூரம் விரிந்து கிடப்பதைக் கண்ட கொலம்பஸ் அதுதான் ஆசியாவின் தலை நிலப்பரப்பாக (mainland) இருக்க வேண்டும் என்று நம்பினார். அவர் அப்படி நம்பினதில் தவறில்லை. அங்கு காணப்பட்ட பல சிறு தீவுகள் அவர் படித்த காதேபற்றிய புத்தகத்தில் குறிப்பிட்டவாறே இருந்தன. அந்தத் தீவுகளில் காணப்பட்ட மரங்களும் பழங்களும் கூட காதே சென்று வந்த பயணிகள் சொன்னவாறே இருந்தன.  

கொலம்பஸ் காண நினைத்த பளிங்குத் தேவாலயங்கள், பொன்வேய்ந்த மாளிகைகள், கண்ணைக் கவரும் நகரங்கள் இன்னும் தென்படவில்லை என்பது  உண்மைதான். ஆனால்,  ஆசியாவைக் கண்டு பிடித்தது உண்மை. உடனே தன்னோடு வந்த மாலுமி களிடம் ஒரு பத்திரத்தைக் கொடுத்து அந்த நிலப்பரப்பு ஆசியாவேதான் (உண்மையில் அது கியூபா தீவு) எனக் கையெழுத்து வாங்கிக் கொண்டார். மாலுமிகள் பின்னர் தாங்கள் ஆசியாவைப் பார்க்கவே இல்லை  என்று சொல்லித் தனது காலை வாரிவிடு வார்களோ என்ற பயத்திலேயே கொலம்பஸ் அந்தப் பத்திரத்தில்  முன்யோசனையோடு எழுதி வாங்கிக் கொண்டார்!

பின்னர் யாராவது தான் கண்டு பிடித்தது காதே இல்லை என்று சொன்னால் அவருக்கு 100 டொலர் தண்டம் அல்லது 100 கசையடியோடு அவரது நாக்கும் பிடுங்கப்படும் என்றும் எழுதி வாங்கிக் கொண்டார்! 

இதன் பின்னர் கொலம்பஸ் தனது பழைய இசபெல்லா நகருக்குப் பயணப்பட்டார். அங்குபோய்ச் சேருமுன் கொலம்பஸ் கடுமையான சுகயீனத்துக்கு ஆளானார். மாலுமிகளுக்குக் கட்டளை பிறப்பிப்பதற்குக் கையை உயர்த்தியோ தலையை ஆட்டியோ சமிக்கை கொடுக்கும் பலம்கூட அவரிடம் இருக்கவில்லை.  

நோயினால் அய்ந்து நீண்ட மாதங்களாகக் கொலம்பஸ் தனக்கு இசபெல்லா நகர்ச் சதுக்கத்தில் கட்டிய கல்வீட்டில் படுக்கையில் கிடந்தார். நல்லகாலமாக 3 கப்பல்களில் கொலம்பசுக்குத் தேவையான உணவுப் பொருட்களுடன் வந்த அவரது உடன்பிறப்பு பாத்தொலமே (Bartholomew) கொலம்பசின் கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இப்படிக் கொலம்பஸ் படுக்கையில் விழுந்து கிடந்த வாய்ப்பைப் பயன்படுத்தி சில மாலுமிகள் பாத்தொலமே வந்த கப்பல்களில் ஒன்றைக் கைப்பற்றி இசுப்பேனியா விற்குப் பயணம் புறப்பட்டார்கள். அங்கு போய்ச் சேர்ந்த அவர்கள் கொலம்பசைப் பற்றி அரசியாருக்கும் அரசருக்கம் இல்லாத பொல்லாத கதைகளைச் சொல்லித் திரி வைத்தார்கள்.  

அவர்கள் இசுப்பானியர்கள். கொலம்பஸ் இத்தாலிக்காரர். இதனால் தங்களுக்கு மேலாக பதவி நியமனம் செய்யப்பட்ட கொலம்பஸ் மீது அவர்களுக்கு இயற்கையாகவே பொறாமை இருந்தது. அதைவிட காதேயின் அழகான நகரங்கள், ஒளிவிடும் தங்கச் சுரங்கங்கள் போன்றவற்றைக் காட்டுவதாக  உறுதிமொழி கூறி அழைத்து வரப்பட்ட தங்களை அம்மணமாகத் திரியும் காட்டுமிராண்டிகளின் தீவுகளில் இறக்கி ஒரு கொஞ்சத் தங்கத்திற்காக கொலம்பஸ் வேலை வாங்கியதையிட்டு அவர்களுக்கு அவர் மீது பயங்கரக் கோபம் ஏற்பட்டது. பணக்காரர்களாகலாம் என்ற அதீத நம்பிக்கை யோடு வந்தவர்கள் இப்போது புறப்பட்டதை விட ஏழைகளாகத் திரும்பி இருந்தார்கள்.

இவையெல்லாம் கொலம்பஸ் மீது அளவு கடந்த வெறுப்பை உண்டாக்கியது. கொலம்பசைத் தாறுமாறாகத் திட்டித் தீர்த்தார்கள். இசுப்பானிய அரசியும் அரசரும் அவர்களது பெரிய கடல் தளபதி கொலம்பசைத் தேடிக் கண்டு பிடிக்க வேண்டும். இல்லாவிட்டால் அந்தத் தீவுகளில் கண்டெடுக்கப்பட்ட கொஞ்சத் தங்கத்தையும் கொலம்பஸ் தன்னோடு வைத்துக் கொண்டுவிடுவார் என்று முறையிட்டார்கள்.   

கொலம்பசின் உடல் நலத்தில் இப்போது கொஞ்ச முன்னேற்றம் காணப்பட்டது. தன்னைக் கைவிட்டு ஒரு சிலர் ஓடிப்போய் விட்டது அவருக்குக் கவலையை அளித்தது. தனக்கு அரசியாரும் அரசியும் மேற்கொண்டு உதவி செய்ய மறுத்து விடுவார்கள் என்ற பயம் வேறு அவரைப் பிடித்துக் கொண்டது. இவற்றால் 1496 மார்ச் மாதம் 10 ஆம் நாள் கொலம்பஸ் இசுப்பானியா நோக்கிப் பயணம் புறப்பட்டார். 

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் எல்லாமே ஒளி மயமாக இருந்தது. எதிர்காலம் நம்பிக்கை கொடுப்பதாக இருந்தது. ஆனால், இன்று எல்லாமே இருண்டு ஏமாற்றம் அளிப்பதாக இருந்தது. இந்தியாவிற்கான இரண்டாவது பயணம் தோல்வியடைந்து விட்டது.

மாலுமிகளைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது கொலம்பசுக்குக் களைப்பை கொடுத்தது. காதே எங்கே இருக்கிறது என்று அரித்தெடுத்ததாலும், தங்கம் முத்து இவற்றைக் கண்டு பிடிப்பதற்குக் கடுமையாக வேலை வாங்கப்பட்டதாலும் இந்தியர்கள் இப்போது கொலம்பசுக்கு  நண்பர்களாக இல்லை. மாறாக எதிரிகளாக மாறியிருந்தார்கள்.  
நோய், உளைச்சல், கரைச்சல், ஏமாற்றம், எதிரிகளாக மாறிவிட்ட இந்தியர்களின் அச்சுறுத்தல், சொந்த நாட்டில் வலுவான எதிரிகள், துக்கம், கழிவிரக்கம், பயம் இவற்றுக்கு மத்தியிலும் கொலம்பஸ் துணிவோடும் நம்பிக்கையோடும் வீட்டுக்கு  எப்போது போய் சேர்வோம் என்ற அங்கலாய்ப்போடு இருந்த 250 மாலுமிகளோடு தனது நாடு நோக்கிப் பயணம் செய்து கொண்டிருந்தார்.  1496 யூன் 11ம் நாள் அவர் பயணம் செய்த இரண்டு கப்பல்களும் காடிஸ் (ஊயனணை) துறைமுகத்தை அடைந்தது. 
கடல்பயணம் மிகவும் மனச் சோர்வு தருவதாக இருந்தது. போதிய உணவில்லை. அவ்வப்போது கப்பல்கள் சூறாவளியில் மாட்டிக் கொண்டு தவித்தன. கப்பல்களில் இருந்து மாலுமிகள் விரக்தியோடும் சோர்வோடும்; தரை இறங்கினார்கள். கொலம்பசைப் பற்றி முறையிடுவதற்கு அவர்களிடம் ஏராளமான விடயங்கள் கைவசம் இருந்தன.  

மற்றவர்களைப் போல் கொலம்பசும் இடிந்து போயிருந்தார். முதல் பயணத்தில் வெற்றியோடு  சீருடை அணிந்து கம்பீரமாக தரை இறங்கினது போலல்லாமல் இம்முறை சாதாரணமாகப் பாதிரிமார்கள் அணியும் நீண்ட அங்கியொன்றை அணிந்தவண்ணம்  தரை இறங்கினார். தன்னைப் பற்றி என்னென்ன கதைகளைத் தனது எதிரிகள் அரசியாருக்கும் அரசருக்கும் பற்ற வைத்திருப்பார்கள் என்ற கவலை ஒரு புறம், தன்னை அவர்கள் எவ்வாறு வரவேற்பார்கள் என்ற பயம் இன்னொரு புறம், கொடுத்த வாக்குறுதிகளோ பல, நிறைவேற்றப்பட்டவையோ சில. புறப்படும்போது எவ்வளவோ நம்பிக்கையோடு புறப்பட்டு, திரும்பும்போது செருக்கும் மிடுக்கும் பெருமிதமும் போய் மற்றவர்களது வெறுப்புக்கும் ஏளனத்துக்கும் ஆளான மனிதர்களில் ஒருவர்போல் கொலம்பஸ் வெறுங்கையோடு நாடு திரும்பி இருந்தார்.  

1492 இல் கொலம்பஸ் உலகின் மிகப் புகழ் வாய்ந்த  மனிதர்களில் ஒருவர். 1496 இல் வெற்றியை இழந்த, நண்பர்களை இழந்த, செல்வாக்கு இழந்த ஒரு மனிதராகக் காட்சி தந்தார். 

வாழ்க்கையில் வெற்றி நிலையானதல்ல. அது நிச்சயமற்றது. இன்று குபேரனாக இருப்பவர் நாளை பிச்சைக்காரனாக மாறலாம். இன்று பிச்சைக்காரனாக இருப்பவன் நாளை குபேரனாக மாறலாம். மண்குடிசை மாளிகை ஆகலாம். மாளிகை மண்குடிசை ஆகலாம். வண்டி ஓடத்திலும், ஓடம் வண்டியிலும் ஏறலாம். அதனால்தான் அவ்வையார் “ஆற்றங் கரையின் மரமும் அரசறிய வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே”  எனப் பாடிவிட்டுப் போயிருக்கிறார்! 

கியூபா பயணக் கட்டுரை
ஒரு பருந்தின் நிழலில்
ஏதென் தோட்டத்தைக் ‘கண்டு பிடித்த’ கொலம்பஸ்
(64)

கொலம்பஸ் பயந்ததுபோல அவரை அரசரும் அரசியாரும் வெறுத்து ஒதுக்கவில்லை. எது எப்படி என்றாலும் கொலம்பஸ் இசுப்பானிய நாட்டுக்கு ஒரு புதிய உலகைக் கண்டு பிடித்தவர். அங்கு எதிர்பார்த்ததுபோல  தங்கம், வெள்ளி இல்லாமல் இருக்கலாம். ஆனால், அவற்றை எதிர்காலத்தில் கண்டு பிடிக்கும் வாய்ப்பு இருக்கிறது. எனவே அரசரும் அரசியாரும் கொலம்பஸ் தங்களை வந்து பார்க்குமாறு தகவல் அனுப்பினார்கள். அதோடு தங்கள் அன்பான வாழ்த்துக்களையும் அவருக்குத் தெரிவித்தார்கள்.
இந்த எதிர்பாராத வரவேற்பு மூன்றாவது பயணத்தை மேற்கொள்ளும் தென்பை கொலம்பசுக்குக் கொடுத்தது. எனவே தனது பயணத்துக்கு வேண்டிய  ஏற்பாடுகளைச் செய்து தருமாறு அவர் அரசரிடமும் அரசியாரிடமும் கேட்டார். தனக்கு ஆறு கப்பல்கள் கொடுத்து உதவினால் போதும் என்று தெரிவித்த அவர்,  இம்முறை எப்படியும் ஹெயிட்டிக்கு அப்பால் உள்ள காதேயைக் கண்டு பிடிப்பது உறுதி என்று சொன்னார்.  
பயண ஏற்பாடுகள் செய்வதில் தாமதம் ஏற்பட்டது. அரசரும் அரசியாரும் வேறு சிக்கல்களில் தங்கள் புலனைச் செலவழித்துக் கொண்டிருந்தார்கள். முன்பிருந்த உற்சாகம் இப்போது அவர்களிடம் இல்லாமல் இருந்தது. பணப் பற்றாக்குறை அதற்கொரு காரணம்.  நாள்கள் கிழமைகளாகி, கிழமைகள் மாதங்களாகிப் போய்க் கொண்டிருந்தன. அதே நேரம் அரசரும் அரசியாரும் முகத்தை முறிக்காமல் கொலம்பசோடு அன்பாகப் பேசிக் கொண்டார்கள்.  கடைசியாக கொலம்பசின் கடல் பயணத்தில் எப்போதும் அரசரைவிட  அதிக அக்கறை  காட்டிவந்த அரசியார் அவருக்குக் கைகொடுத்தார். கொலம்பஸ் கேட்டுக் கொண்டபடி ஆறு கப்பல்கள் கொடுக்கப்பட்டன.  

கொலம்பஸ் தனது மூன்றாவது பயணத்தை 1498 ஆம் ஆண்டு மே மாதம் 20 ஆம் நாள் தொடக்கினார். முன்னைய கசப்பான அனுபவங்கள் காரணமாக பல மாலுமிகள் பயணம் புறப்பட மறுத்தார்கள். மிகுந்த தடைகளின் மத்தியில் 200 மாலுமிகளைத் திரட்டிக் கொண்டு பயணம் புறப்பட்டார். இம்முறை ஆசியாவை எப்படியும் கண்டு பிடிப்பது என்று சூளுரைத்துக் கொண்டார். முன்பொருமுறை ஆசியாவைக் கண்டு பிடித்துவிட்டதாக மாலுமிகளிடம் ஒரு அறிக்கை எழுதி வாங்கிக் கொண்டாலும் அதைக் கொலம்பசே நம்பவில்லை. தான் கண்டு பிடித்தவவை அனைத்தும் தீவுகள் என்பதை அவரது உள்மனம் சொல்லிக் கொண்டது.

எனவே 3 கப்பல்களை இசபெல்லா குடியிருப்பு நோக்கி பயணம்  செய்யுமாறு  பணித்து விட்டு எஞ்சிய  3 கப்பல்களோடு தென்மேற்காகக் கொலம்பஸ் பயணம் செய்து கொண்டிருந்தார். ஆகஸ்ட் மாதம் 1 ஆம் நாள் திரினிநாட் (ஐளடயனெ ழக வுசinனையன )  என்ற பெரிய தீவில் உள்ள மூன்று மலைக் குன்றுகள் கண்ணுக்குத் தெரிந்தன. கொலம்பஸ் அதன் கரையை நோக்கி விரைந்தபோது மேற்கே ஒரு பெரிய தீவு தெரிந்தது. அது கிழக்குலகின் தலைநிலப்பரப்பு என்று எண்ணினார். ஆனால், உண்மையில்  அவருக்குத் தெரியாமல் அவர் கண்முன் விரிந்து கிடந்த தென் அமெரிக்காவின் கரையோரத்தையே கண்டார். அதுதான் இன்னொரு பெயரில் கண்டுபிடிக்க (ஆசியா) நினைத்த கண்டம் என்பதை அவர் உணரவில்லை.  
கொலம்பஸ் பல பிழைகள் விட்டிருப்பதை அவரது வாழ்க்கை  வரலாறு  காட்டுகிறது. தனது முதல் பயணத்தில் ஒரு தீவைக் கண்டதும் அது கிழக்குலகின் தலைநிலப்பரப்பு எனப் பிழையாக நினைத்தார். மூன்றாவது பயணத்தில் புதிய உலகின் தலைநிலப் பரப்பைக்  கண்டதும்  அது பழைய உலகின் அருகிலுள்ள தீவு எனப் பிழையாக முடிவு செய்தார். இப்படிப் பிழைகள்  பல அவர் விட்டாலும் புதிய உலகைக் கண்டு பிடித்து வரலாற்றில் புகழ் இடத்தைப் பிடித்தார்.  

ஒரு குழந்தையின் மனம் பிடித்தமான ஒன்றில் படிந்து விட்டால் அதைப் பற்றியே மீண்டும் மீண்டும் கதைக்கும். குழந்தைகள் மட்டுமல்ல வயதுவந்த ஆண்களும் பெண்களும் அப்படித்தான். தங்களுக்குப் பிடித்தமான ஒரு பொருள் பற்றி ஓயாது சொல்லிக் கொண்டும் சிந்தித்துத் கொண்டும் இருப்பார்கள்.  

கொலம்பசும் அப்படித்தான். மேற்கு நோக்கிப் பயணம் புறப்பட்டு ஆசியாவைக் கண்டு பிடிப்பதே அவருக்கு அன்ன விசாரம் அதுவே விசாரமாக இருந்தது. ஆனபடியால்தான் திரினிநாட் தீவைச் சுற்றிப் போய்க் கொண்டிருக்கும் போது மேற்கு நோக்கி அமெரிக்காவின் கரையோரத்தைப்  பார்த்ததும் அது ஆசியாவின் புதிய பகுதி என நினைத்தார். முன்னர் கியூபாவை ஆசியாவின் தலைநிலப் பரப்பு என்று எண்ணியவாறு இதனையும் ஆசியாவின் தலைநிலப்பரப்பு என்று நினைத்தார். 

ஆனால், பெரிய ஒறினொக்கோ ஆற்றின் (ழுசiழெஉழ சுiஎநச) முகத்து வாரத்துக்குள் பயணம் செய்து கொண்டிருந்தபோது கொலம்பசுக்குத் திகைப்பு மேலிட்டது. காரணம் அந்தத் தண்ணீர் உப்பாக இல்லை. போகப் போக அது  நல்ல  தண்ணீராக மாறிக் கொண்டிருந்தது. அந்தத் தண்ணீர் மிக வேகமாக திரினிநாட்டின் வடக்குத் தெற்கு முனைகளின் இரு பக்கமும் கரைபுரண்டு ஓடிக் கொண்டிருந்தது. இந்த மாய வித்தையை அவரால் முற்றாக விளங்கிக் கொள்ள முடியவில்லை. 

பின்னர் அவருக்கு ஒரு நூதனமான யோசனை தோன்றியது. கொலம்பஸ் விவிலிய திருமறையைப் படிப்பதில் ஆர்வம் கொண்டவர். அவரது காலத்து விவிலிய திருமறையைப் படித்த புலமையாளர்கள் ஏதென் தோட்டம்  (புயசனநn ழக நுனநn)  கிழக்கே உள்ள நாட்டில் இருப்பதாகச் சொன்னார்கள். அங்கே சுவர்க்கத்தில் உள்ள மலைகளில்  இருந்து பேராறொன்று ஓடிவருவதாகவும் சொன்னார்கள். இப்போது தான் காணும் காட்சி விவிலிய திருமறையில் கூறப்பட்டது போலவே இருப்பதைக் கண்ட  கொலம்பஸ்  தான் ஆவா-ஏவா வாழ்ந்த ஏதென் தோட்டத்தின் வாசலைக் கண்டு பிடித்து விட்டதாக நினைத்தார்! 

கொலம்பஸ் தொடர்ந்து அந்த ஆற்றின் கடைசி  எல்லைவரைப்  போயிருந்திருப்பார். ஆனால், அவருக்குக் கீல்வாத நோய் பிடித்துக் கொண்டது. மேலும் கண்ணில் புண் வந்து பார்வை மங்கி விட்டது. அவரது கப்பல்களில் ஓட்டை விழுந்து தண்ணீர் கசிய ஆரம்பித்து விட்டது. எனவே தனது சகோதரரும் ஏனையோரும் தங்கி இருந்த இசபெல்லா தீவுக்கு உடனடியாகத் திரும்ப யோசித்தார். 

அவரது கப்பல் அவர் சுவர்க்கம் என நினைத்த இடத்தைவிட்டு ஹெயிட்டியைக் நோக்கிச் சென்றது. ஹெயிட்டியில் இருந்து கொண்டு ஒரு தூதுவர் மூலம் இசபெல்லாவில் இருந்த தனது சகோதரர் பார்த்தலோமேவுக்குச் செய்தி அனுப்பினார். தமையனாரின் உடல்நலக் குறைவைக் கேட்டறிந்த பார்த்தலோமோசு அவரைப் பார்க்க உடனடியாகப் புறப்பட்டார். 

பார்த்தலோமே தமயனாருக்குக் கவலை நிறைந்த கதை ஒன்றைச் சொன்னார். அதைச் செவிமடுத்த கொலம்பசின் உடல் நிலை மேலும் மோசமடைந்தது.  

ஒவ்வொரு மந்தைக் கூட்டத்திலும் ஒரு கறுப்பாடு இருப்பது வழமை. கொலம்பசின் குடியிருப்பிலும் கறுப்பாடுகள் இருந்தன. சோம்பேறிகள், பொறாமைக்காரர்கள், அதிருப்தியாளர்கள் போன்றோர்கள் இருந்தார்கள். அவர்கள் ஒன்றாகச் சேர்ந்து கொண்டு இசபெல்லா நகரத்திலும் தீவின் இன்னொரு பகுதியில் பார்த்தலோமே கட்டிய சாந்தா டொமின்கோ (Santa Do mingo) நகரத்திலும் குழப்பம் விளைவித்தார்கள். கொலம்பசைப்பற்றி இல்லாததும் பொல்லாததும் சொன்னார்கள். அவரது பதவிகளை இசுப்பானிய அரசரும் அரசியாரும் பறிக்கப் போகிறார்கள் என்ற வதந்தியைப் பரப்;பினார்கள். கொலம்பசின் தலைமையை இனிமேல்ப்பட்டு ஏற்றுக் கொள்வதில்லை என்றும் சொல்லிவிட்டார்கள். இவற்றால் அந்தக் குடியிருப்பில் சண்டை சச்சரவு அதிகரித்தது. எல்லோரும் கலகம் செய்ய ஆரம்பித்தார்கள்.  

கலகக்காரர்களுக்கு தொல்டான் (சுழடனயn)  என்பவன் தலைமை  தாங்கினான். அவனோடு ஒரு உடன்பாட்டுக்கு வர கொலம்பஸ் முடிவு செய்தார். தொல்டான் தனக்கும் தனது ஆதரவாளர்களுக்கும் நிலம் ஒதுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தான். அங்கு வாழ்ந்த பூர்வீககள் குடிமக்களை அந்த நிலத்தில் அடிமைகளாக வைத்திருந்து வேலை வாங்கவும் அனுமதி கேட்டான். அவற்றை எல்லாம் வேறு வழியின்றிக் கொலம்பஸ் ஏற்றுக் கொண்டார்.  

இதன்பின் பூசல்கள் குறைந்து ஓரளவுக்கு அமைதி திரும்பியது. கொலம்பஸ் இரண்டு கப்பல்களை இசுப்பானியாவிற்குத் திருப்பி அனுப்ப முடிவு செய்தார். அவர்களிடம் தனக்கு ஏற்பட்ட சிக்கல்களையும் பின்னடைவுகளையும் தொல்டான் கலகம் விளைவித்ததையும் விபரித்து ஒரு மடலை அரசருக்கும் அரசியாருக்கும் அனுப்பி வைத்தார். ஆனால், அந்த மடல்  நிலமையை மேலும் மோசமாக்கவே உதவியது. கப்பலில் திரும்பிய மாலுமிகள் தாங்கள் பிச்சைக்காரர்கள்போல் திரும்பியதையிட்டுக் குறைபட்டுக் கொண்டார்கள். தங்களது ஏழ்மைக்கு கொலம்பசே காரணம் என்று குற்றம் சாட்டினார்கள்.  

அப்போது கொலம்பஸ் இசுப்பானியாவிற்கு அனுப்பி வைத்த இந்திய அடிமைகள் அய்ந்து கப்பல்களில் வந்து சேர்ந்தார்கள். அத்தோடு கொலம்பஸ் கலகக்காரத் தலைவன் தொல்டனோடு உடன்பாடு செய்து கொண்டு அவனுக்கு ஹெயிட்டியில் நிலமும் பதவியும் கொடுத்த கதையும் வந்து சேர்ந்தது.  

பெர்டினன்ட் அரசருக்குக் கொலம்பஸ் மீது தொடக்கம் தொட்டே ஒரு  இனந்தெரியாத வெறுப்பு இருந்தது. கொலம்பசுக்கு அதிகமான அதிகாரம், இலாபத்தில் அதிக பங்கு கொடுத்து விட்டதாக அவர் எண்ணினார். அரசியாரும் கொலம்பஸ் நல்லதொரு கடலோட்டி ஆனால், திறமையில்லாத ஆளுநர் என்று நினைத்தார். அடிமைகளை அய்ந்து கப்பல்களில் தனது முன் அனுமதியின்றி அனுப்பி வைத்ததும் அரசியாருக்குப் பிடிக்கவில்லை.  

புதிய உலகை ஆட்சி செய்யும் உரிமை கொலம்பசின் குடும்பத்துக்கே கொடுக்கப் பட்டிருந்தது. அங்கு வாணிகம் செய்யும் உரிமையும் அவர்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால், கொலம்பஸ் வாக்களித்தவாறு தங்கம் மற்றும் வாசனைப் பொருள்களைப் பெற்றுத் தரவில்லை. எனவே அரசியாரும் அரசரும் தாங்கள் கொலம்பசுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை மீறத் தீர்மானித்தார்கள். அதன்படி மேற்குலகில் எந்தத் தண்டயலும் பயணம் செய்து அங்கு வாணிகம் மேற்கொள்ள அனுமதிக்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டது.  

கொலம்பசுக்கு எதிரான முறைப்பாடுகள் தொடர்ந்து வந்து கொண்டிருந்தன. அதனால் அவருக்குப் பதில் அந்தத் தீவுகளை ஆளுவதற்கு வேறு யாரையாவது அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டது.   

கொலம்பசிடம் இருந்து கடிதங்கள் வந்து கொண்டிருந்தன. அதில் ஒன்றில் அடிமை வாணிகத்தைத் தொடர்ந்து மேற்கொள்வதற்கு அனுமதி கேட்டிருந்தார். அத்தோடு தனக்கும் தொட்டானுக்கும் இடையில் ஏற்படும் பிணக்குகளைத் தீர்த்து வைக்க ஒரு நீதிபதியை அனுப்பி வைக்குமாறும் கேட்டார். அதனைப் படித்த அரசியாரும் அரசரும் கொலம்பஸ் அனுப்பி வைத்த அடிமைகளைத் திருப்பி அனுப்ப ஆணை பிறப்பித்தார்கள். மேலும் கொலம்பசிடம் இருந்து  ஆட்சியைப் பாரமெடுக்க பொபாதில்லா (டீழடியனடைடய) என்ற அதிகாரியை ஹெயிட்டிக்கு அனுப்பிவைக்க முடிவு செய்தார்கள்.  

பொபாதில்லா ஹெயிட்டிக்கு உடனடியாகப் பயணமானார். ஹெயிட்டி போய்ச் சேர்ந்தபோது அங்கு அவர் கண்ட காட்சி அவருக்குப் பெரும் வியப்பை அளித்தது. 

கியூபா பயணக் கட்டுரை (65)
ஒரு பருந்தின் நிழலில்
கை விலங்கு  கால் விலங்கோடு கைதியாகத் திரும்பிய கொலம்பஸ்

கலகக்காரார்களின் தலைவனான தொல்டான் கொலம்பசோடு இணக்கம் செய்து கொண்டதுதான் பொபாதில்லாவிற்கு வியப்பை அளித்தது. கொலம்பசுக்கும் தொல்டானுக்கும் இடையில் மோதல் நீடித்திருந்தால் அதனைச் சாக்காக வைத்து கொலம்பசை விடப் பெரிய ஆளாக வந்து விடலாம் என்று பொபாதில்லா எதிர் பார்த்தார். இப்போது அவரது பயணம் வீணாகிவிட்டது. ஆனால், இப்படியே திரும்பினால் மற்றவர்கள் சிரிப்பார்கள். எனவே கொலம்சுக்கும் தொல்டானுக்கும் இடையில் இப்போது மோதல் இல்லாவிட்டாலும் தனது பயணத்தின் நோக்கத்தை நிறைவேற்றப் பொபாதில்லா முடிவு செய்தார்.  

கொலம்பசின் ஆலோசனையையோ அவரது உதவியையோ எதிர்பாராது அந்தத் தீவின் ஆட்சியைத் தனது கைக்குள் கொண்டு வந்தாhர். அங்கு இருந்தவர்களுக்கு எல்லாம் தானே புதிய ஆளுநர் என்று சொன்னார்.  கொலம்பசுக்கு எதிரான குற்றச் சாட்டுக்களை எவரும் எந்தப் பயமும் இன்றித் தன்னிடம் தெரிவிக்கலாம் எனவும் அறிவித்தார்.  
பொபாதில்லா அவர்கள் சொன்ன கதைகளைக் காது கொடுத்துக் கேட்டார். தனக்கு அரசராலும் அரசியராலும் கொடுக்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி  கொலம்பசை அவமானப் படுத்தி அவரைத் தண்டிக்க விரும்பினார். ஆனால், அப்படியான நடவடிக்கையை  கொலம்பசுக்கு எதிராக எடுக்க வேண்டும் என்று அரசரும் அரசியாரும் எண்ணவில்லை. 

பொபாதில்லா ஆளுநர் மாளிகையில் குடியேறினார். அங்கு தன்னை வந்து சந்திக்குமாறு கொலம்பசுக்கும் அவரது உடன்பிறப்புக்களுக்கும் கட்டளை பிறப்பித்தார். பொபாதில்லாவோடு பேசி ஒரு இணக்கத்தைக் காணலாம் என்ற நம்பிக்கையோடு வந்த கொலம்பசுக்கும் அவரது உடன்பிறப்புக்களுக்கும் அதிர்ச்சி காத்திருந்தது. அவர்கள் மீது நம்பிக்கைத் துரோகக் குற்றச் சாட்டை வீசிய பொபாதில்லா அவர்களது கைகளுக்கும் கால்களுக்கும் விலங்கு போட்டு சிறைச்சாலையில் அடைக்குமாறு உத்தரவு பிறப்பித்தார். 

கொலம்பசுக்கு இப்போது கெட்ட காலம். தனது  அரசருக்கும்   அரசியாருக்கும் புதிய உலகம் ஒன்றைக் கண்டு பிடித்த கொலம்பஸ், அந்தப் பணியில் பசி தூக்கம் பாராது கடுமையாக உழைத்த கொலம்பஸ் இப்போது ஒரு கள்ளன் அல்லது கொலைகாரன் என்பது போலச் சிறைக்குள் தள்ளப்பட்டதைச் செரிக்க முடியாது திண்டாடினார். 
கொலம்பஸ் பல பிழைகள் விட்டது என்பது உண்மைதான்.  அதற்காக  கடல்படைத் தளபதி, இந்தியாவின் அரசப் பிரதிநிதி (ஏiஉநசழல) இசுப்பானியாவின்  புகழ் பெற்ற பிரபு, ஏனைய நாடுகளின் பொறாமைக்குரிய கடலோடி, அவர் கண்டு பிடித்த தீவிலேயே அதிகாரங்கள் பறிக்கப்பட்டு ஒரு கைதியாகச் சிறையில் அடைக்கப்பட்டதை நியாயம் என்று சொல்ல முடியாது. கொலம்பசின் மூன்றாவது பயணம் அவரைப் பொறுத்தளவில் பெரிய தோல்வியில் முடிந்து விட்டது.

காதேயைக் கண்டு பிடிக்கலாம் என்று கொலம்பஸ் நம்பினார். ஏதென் தோட்டத்தையும் சொர்க்கத்தின் ஆற்றையும் கண்டு பிடித்து விட்டதாகவும் நம்பினார். முடிவில் அவர் விசுவாசத்தோடு பணிசெய்த அரசர் அரசியார் இருவரது கட்டளையின்படி கைது செய்யப்பட்டு, அதிகாரங்கள் பதவிகள் இசுப்பானியாவில் இருந்து தூதராக வந்த ஒருவரால் பறிக்கப்பட்டு விட்டன. சிறைச்சாலை அவரது குடியிருப்பாக மாறிவிட்டது.

விலங்கு பூட்டப்பட்ட கொலம்பஸ்

சில நாள்கள் கழித்து கொலம்பசும் அவரது உடன்பிறப்புக்களும் ஒரு கப்பலில் ஏற்றப்பட்டு இசுப்பானியாவிற்கு விசாரணைக்காகவும் தண்டனைக்காகவும் அனுப்பி வைக்கப்பட்டனர். வெற்றிகள் பற்றி எப்போதும்  கனவு கண்டுகொண்டிருந்த கொலம்பசுக்கு இப்படியான ஒரு சோக முடிவு  வந்து சேரும் என்று யாரும் எதிர் பார்க்கவில்லை.    

கொலம்பசுக்கு எதிரான பொதொல்லாவின் தடால் நடவடிக்கைகள் கொடுமையாகவும் நீதி நியாயமற்றதாகவும் தோன்றலாம். ஆனால், அன்றைய காலம் நாம் இப்போது வாழும் காலம் போன்றதல்ல. அரசரும் அரசியாரும் பொதொல்லாவை அனுப்பிக் கொலம்பசுக்கும் தொல்லாடனுக்கும் இடையிலான பிணக்கைத் தீர்த்து வைக்கு மாறுதான் கேட்டார்கள். ஆனால், இம்மாதிரிக் கடுமையான நடவடிக்கை ஒன்றைக் கொலம்பசுக்கு எதிராகப் பொதொல்லா எடுப்பார் என்று அவர்கள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.    

பொதொல்லா தனக்குக் கிடைத்த அதிகாரத்தைப்  பயன்படுத்துவதில் ஒரு தனி இன்பத்தைக் கண்டார். அன்று அதிகாரத்தில் இருந்தவர்கள் எல்லோரும் பொதுவாக அப்படித்தான் நடந்து கொண்டார்கள். இசபெல்லா அரசியார் கூடத் தனக்குப் பிடிக்காதவர்கள்  மீது கடுமையான நடவடிக்கை எடுக்க எப்போதும் தயங்கியதில்லை. மற்றவர்களுக்குக் கொடூரம் இழைப்பது சர்வ சாதாரணமாகக் கருதப்பட்டது. அதனை “காலத்தின் போக்கு” (“Spirit of the Age) என்று கூடச் சொல்லலாம்.  

கப்பலில் கொலம்பசுக்கு விசுவாசமானவர்கள், அவரை விரும்பினவர்கள் சிலர் இருக்கவே செய்தார்கள். அவர்களில் வில்லிஜோ (Villifo) என்பவன் ஒருவன். கொலம்பஸ் ஒரு சாதாரண குற்றவாளிபோல் நடத்தப்படுவதை அவன் விரும்பவில்லை. கப்பல் பொதொல்லாவின் கண்களில் இருந்து மறைந்ததும் அவன் கொலம்பசின் கால்களைப் பிணைத்திருந்த சங்கிலியை அகற்றி விட விரும்பினான்.  

“பிரபு! உங்கள் கால்களைப்  பிணைத்திருக்கும் இந்த இரும்புச் சங்கிலியை அகற்றிவிடப் போகிறேன்.” 

“இல்லை. இல்லை. அப்படி எதையும் செய்ய வேண்டாம். இந்தச் சங்கிலி அப்படியே இருக்கட்டும். எனது அரசரும் அரசியாரும் பொதொல்லாவின் கட்டளைப்படி நடக்குமாறு என்னைக் கேட்டுக் கொண்டார்கள். பொதொல்லா என்னைச் சங்கிலியில் பிணைக்குமாறு செய்தார். எனவே இந்தச் சங்கிலியை அரசரும் அரசியாரும் கழட்டுமாறு உத்தரவு இடும்வரை அது என்னோடு இருக்கட்டும். அது மட்டுமல்ல? எனது அரச பணிக்குக் கிடைத்த பரிசுப் பொருள்களாகவும் நினைவுச் சின்னமாகவும் அதை நான் வைத்திருக்கப் போகிறேன்.” 

பேரோடும் புகழோடும் இருந்த ஒருவர்  பெரிய இக்கட்டுக்குள் மாட்டுப் படுவதைப் பார்க்கும் போது கவலை வரத்தான் செய்கிறது. பெரிய செல்வந்தர் ஒருவர் தான் தேடிய செல்வத்தைத்  தொலைத்துவிட்டு ஏழையாக மாறும் போது மனதுக்குத்  துன்பமாகத்தான் இருக்கிறது. “சே இப்படியெல்லாம் நடந்து விட்டதே” என்று வாய்விட்டுச் சொல்லத் தோன்றும்.  

கொலம்பசுக்கு இசுப்பானியாவில் எதிரிகள் பலர் இருந்தனர். அரண்மனையில் உலா வந்த பிரபுக்கள், இந்தியப் பயணங்களில் பணத்தைத் தொலைத்தவர்கள், பயணப்பட்டுச் சென்று நாடு திரும்பாதவர்களின் பெற்றோர்கள், உடன்பிறப்புக்கள், பிள்ளைகள் போன்றவர்கள் கொலம்பசின் எதிரிகளில் சிலராவர். அப்படிப்பட்டவர்கள் “இந்த நாசமாப்போற இத்தாலியன் கட்டையில் போக” என்று கொலம்பசைத் திட்டினார்கள்.  

ஆனால், கொலம்பஸ் அந்த நெருக்கடியிலும் பெரும்பான்மை மக்கள் மத்தியில் ஒரு புகழ்பெற்ற கடலோடியாகவே திகழ்ந்தார். கொலம்பஸ் அரசரையும் அரசியாரையும் நட்புப் பிடித்து, மேற்கு நோக்கி “இருண்ட கடலில்” பயணம் செய்து, அப்படிப் பயணம் செய்பவர்கள் பூமியின் விழிம்புவரை சென்றால் தலைகுப்புற விழுந்து விடுவார்கள் என்ற நம்பிக்கையைப் பொய்யாக்கி, காதேயையும் இந்தியாவையும் இசுப்பானியா விற்குச் சொந்தமாக்கி இத்தனை சாதனைகளையும் புரிந்த கொலம்பஸ் இசுப்பானிய குடிமக்களுக்கு “மாமனிதர்” ஆகவே காட்சி அளித்தார்.  

எனவே 1500 ஆம் ஆண்டு ஒக்தோபர் மாதம் ஒரு நாள் கொலம்பஸ் பயணம் செய்த கப்பல் காடிஸ் துறைமுகத்தை அடைந்தபோது அந்தச் செய்தி மக்களிடையே பரவத் தொடங்கியது. அது மட்டுமல்ல கொலம்பஸ் கைவிலங்கு கால்விலங்கு பூட்டப்பட்ட நிலையில் ஒரு கைதியாக வந்து சேர்ந்த செய்தி மக்கள் மத்தியில் இனந்தெரியாத மனக் கொதிப்பை ஏற்படுத்தியது.  

“கொலம்பசுக்கு விலங்கு மாட்டிய காதகர்கள் யார்? ஒரு மனிதனை இப்படியா கேவலமாக நடத்துவது? காதேயை இசுப்பானியாவிற்கு கண்டுபிடித்தவர், அங்கிருந்து  பறவைகள், விலங்குள், இந்தியர்கள் எனப் பலவற்றைக் கொண்டுவந்தவர், எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் பாலோஸ் துறைமுகத்தில் வந்திறங்கியபோது ஒரு இளவரசருக்கு உரிய மரியாதையோடு வரவேற்கப்பட்டவர், இப்போது ஒரு கைதியாக, அதுவும் சங்கிலியால் பிணைக்கப்பட்டுக் கொண்டு வரப்பட்டிருக்கிறார், இது அநியாயம். அக்கிரமம். வெட்கக்கேடு” என மக்கள் ஒரே குரலில் கண்டனம் செய்;தார்கள். 

கொலம்பசுக்கு எதிராக இருந்தவர்கள் மக்களின் மனப்போக்கைப்  பார்த்துவிட்டுத் தங்கள் “சுருதி? யை மாற்றி வாசிக்கத் தொடங்கினார்கள்.  

காடிஸ் துறைமுகத்தில் கொலம்பஸ் வந்து இறங்கியதும் கிறனடாவில் இருந்த தனது நண்பர் ஒருவருக்கு ஒரு கடிதம் எழுதினார். அந்தக் கடிதம் அரசியாருக்குக் காட்டப்பட்டது.  அதில் கொலம்பஸ் தனக்கு நேர்ந்த அவமானத்தைப் பற்றி விரிவாக எழுதியிருந்தார். நடந்த சம்பவங்களுக்கு கொலம்பஸ் வருத்தம் தெரிவித்தார். ஆனால், தனது சாதனைபற்றிப் பெருமைப் படுவதாகக் கூறிக் கொண்டார். கொலம்பஸ் நடத்தப்பட்ட விதம் இசபெல்லா அரசியாருக்குக் கோபத்தை உண்டாக்கியது. கொலம்பஸ் என்னதான் செய்திருந்தாலும் அவர் மேல் அரசியாருக்கு எப்போதுமே ஒரு தனி மரியாதையும் அன்பும் இருந்தது.  

அரசியார் கொலம்பசின் கடிதத்தை அரசர் பெர்டினாந்திடம் காட்டினார். இருவரும் கொலம்பசுக்கு ஒரு தூதுவனை அனுப்பி வைக்க முடிவு செய்தனர். அவன் மூலம் கொலம்பசுக்குப் பொபாதில்லா இழைத்த அவமானத்துக்கும் கொடுமைக்கும் மனம் வருந்துவதாகச் சொல்லி அனுப்பினார்கள். அது மட்டுமல்லாமல் கொலம்பசுக்குப் பூட்டப்பட்ட விலங்குகளை உடனே அகற்றுமாறு உத்தரவு பிறப்பித்தார்கள். மேலும் அய்யாயிரம் டொலர்களை கொலம்பசுக்கு அன்பளிப்பாக அனுப்பி உடனே அரண்மனைக்கு வருமாறு கேட்டுக் கொண்டார்கள்.

1500 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 17 ஆம் நாள் கொலம்பஸ் கிறனடாவில் உள்ள அழகான அல்ஹம்பரா (யுடாயஅடிசய) அரண்மனைக்கு வந்து சேர்ந்தார். அவரை ஒரு கோவேறு கழுதை ஒன்று சுமந்து வந்தது. அந்தக் காலத்தில் இசுப்பானிய குடிமக்கள் கோவேறு கழுதையில் பயணம் செய்வது தடை செய்யப்பட்டிருந்தது. காரணம் மக்கள் கோவேறு கழுதையில் பயணம்  செய்தால் குதிரைகளை வாங்கவோ விற்கவோ ஆட்கள் இருக்க மாட்டார்கள் என்பதே. மேலும் கோவேறு கழுதையில் பயணம் செய்வது குதிரைகளில் பயணம் செய்வதைவிடச் செலவு குறைவாக இருந்தது.  

கொலம்பஸ் உடல் நலக் குறைவால் அவதிப்பட்டார். குதிரையில் பயணம் செய்தால் அவரது உடலை அது  மேலும் வருத்தும் என்பதால் ஆடி அமர்ந்து மெல்லச் செல்லும் கோவேறு கழுதையைத் தனது பயணத்துக்குப் பயன்படுத்தினார். அதற்கான சிறப்பு உத்தரவை அரசரும் அரசியாரும் வழங்கி இருந்தார்கள். 

——————————————————————————————————————–

கியூபா பயணக் கட்டுரை (66)
ஒரு பருந்தின் நிழலில்
கொலம்பசின் கடைசிப் பயணம்

கொலம்பஸ் இசபெல்லா அரசியார் முன் தோன்றியபோது,  அவரது நோய்வாய்ப்பட்ட உடம்பும், கவலை குடிகொண்ட முகமும் அரசியாரது மனதை மிகவும் நெகிழச் செய்;தது. இசுப்பானிய நாட்டின் நலனுக்காக கொலம்பஸ் மேற்கொண்ட முயற்சியும், அதற்காக அவர் பட்ட பாடும் அரசியாரின் மனத்திரையில்  ஓடியது. கொலம்பஸ் அரண்மனைப் படிகளில் தளர்ச்சியோடு ஏறிவருவருவதைப் பார்த்ததும் அரசியார் வாய்விட்டு அழுது விட்டார்.  அரசியாரின் அழுகை கொலம்பசையும் அழவைத்தது. அரசியார் தன் மீது வைத்துள்ள அன்பையும் மதிப்பையும் கண்ட கொலம்பஸ் அரசியாரின் காலில் பயபக்தியோடு  வீழ்ந்து  வணங்கினார். அரசியார் மீது தான் வைத்திருக்கும் பக்தியை வெளிப்படுத்திய கொலம்பஸ் அவருக்காக தான் எதனையும் செய்யத் தயாராக இருப்பதாக நா தழுதழுத்த குரலில் கூறினார். 

அரசியாரும் அரசரும் தங்கள் வருத்தத்தை கொலம்பசுக்குத் தெரிவித்தனர். தளபதி கொலம்பசை இந்தமாதிரியான அவமானத்துக்கு உட்படுத்துவது தங்கள் எண்ணம் இல்லை என்றும், அவருக்கு எல்லாவித உதவியையும் தாங்கள் செய்துதர இருப்பதாகவும் சொன்னார்கள். இசுப்பானிய நாட்டின் சார்பில் இந்தியாவைக் கண்டு பிடிக்கப் பயணப்பட்டபோது அவர் மீது வைத்திருந்த அதே நட்பு இப்போதும் இருப்பதாகவும் அது தொடரும் எனவும் தெரிவித்தார்கள்.  

இந்த எதிர்பாராத திருப்பம் கொலம்பசுக்கு மன ஆறுதலைக் கொடுத்தது. கொலம்பஸ் ஹெயிட்டியை விட்டு கை கால்கள் சங்கிலியால் பிணைக்கப்பட்ட நிலையில் பயத்தோடும் நடுக்கத்தோடும்  புறப்பட்டபோது தனக்குக் கடுமையான தண்டனை காத்திருக்கிறது  என்று நம்பினார். அது குறைந்த பட்சம் நீண்டகாலச் சிறைத் தண்டனை அல்லது கூடிய பட்சம் மரண தண்டனை ஆக இருந்தால் கூட அவர் வியப்புற்றிருக்க மாட்டார்.  

அந்தக் காலத்தில் அரசர், அரசியர், பிரபுக்கள் தங்களுக்குப் பிடிக்காதவர்களைச் சர்வசாதாரணமாகத் தூக்கில் போட்டுவிடுவார்கள். பொபாதில்லா தன்னைக் கடுமையாக நடத்தியதைப் பார்த்த கொலம்பசுக்கு அரசியாரும் அரசரும் தன்னை தூக்கில் போடப் பொபாதில்லாவுக்கு கட்டளை இட்டிருக்கக் கூடுமென எண்ணினார். ஒருவேளை அப்படித்தான் அவர்கள் பொபாதில்லாவுக்குக் கட்டளை இட்டிருந்தாலும் சங்கிலியால் பிணைக்கப் பட்ட நிலையில் கரையிறங்கிய கொலம்பசைக் கண்ட மக்கள் வெகுண்டு எழுந்தது இசபெல்லா அரசியாரின் முடிவில் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கலாம்.  

அரசரைப் பொறுத்தளவில் தொடக்கம் முதலே அவர் கொலம்பசு பற்றி அதிகம் அக்கறைப் படவில்லை. கொலம்பஸ் சிறைக் கூடத்தில் அடைக்கப்படுவதை அவர் மகிழ்ச்சியோடு வரவேற்றிருப்பார். ஆனால், நாட்டு நடப்புக்களைப் பொறுத்தளவில் அரசரைவிட அரசியாருக்கே செல்வாக்கிருந்தது. அதன் காரணமாகவே அரசரும் அரசியார்போல் தானும் கவலைப் படுவதுபோல்  கொலம்பசுக்குக் காட்டிக் கொண்டார். 

கொலம்பசை முன்னர் கவலை எவ்வளவு வேகமாகக் கவ்விக் கொண்டதோ அதே வேகத்தில் இப்போது மகிழ்ச்சி பிடித்துக் கொண்டது. அரசியாருக்கும் அரசருக்கும் தன்மீது வைத்திருந்த அளப்பரிய அன்பு மாறாமல் இருந்ததைப் பார்த்த கொலம்பசுக்கு எதிர்காலத்தைப்பற்றிய நம்பிக்கை பிறந்தது. மீண்டும் இந்தியாவின் அரசப் பிரதி நிதியாகவும் (Viceroy of Indies)  கடல்படைத் தளபதியாகவும் (Admiral of the Ocean Seas)   பயணம் செய்யப் போவதையும், அந்தப் பயணத்தின் போது எங்கெல்லாம் போவது, என்னென்ன செய்வது போன்றவற்றையிட்டுக் கொலம்பஸ் பேசத் தொடங்கினார். கப்பல்கள் மற்றும் மாலுமிகளைக் கொடுத்துத் தன்னை அனுப்பி வைக்குமாறு அரசியாரை கொலம்பஸ் கேட்டுக் கொண்டார். தான் கண்டு பிடிக்கும் தீவுகளில் தான் நினைத்ததைச் செய்யும் அதிகாரம் வேண்டும் என்றும் கேட்டார்.  

அரசியார் கொலம்பஸ் கேட்டவற்றை செய்து தருவதாக உறுதிமொழி அளித்தார். ஆனால், கொலம்பஸ் பல ஆண்டுகளுக்கு முன் Bridge of Pins என்ற பாலத்தைக் கடக்கும்போது உறுதிமொழிகளைப் பற்றிப் பைபிளில் படித்த எச்சரிக்கையின் உண்மையை நினைவு படுத்திக் கொண்டதைப்போல் மீண்டும் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டிய வாய்ப்பு வரும் என்று அவர் அப்போது நினைக்கவில்லை. அந்த எச்சரிக்கை “அரசிகள் மீது நம்பிக்கை வையாதே!” என்பதாகும். 

அரசியாரும் அரசரும் அன்பாகப் பேசிப் பல உறுதிமொழிகளை வழங்கினார்கள். ஆனால், அரசர் ஒரு விடயத்தையிட்டு மனதுக்குள் ஏற்கனவே ஒரு முடிவுக்கு வந்திருந்தார். கொலம்பஸ் மீண்டும்  இந்தியாவிற்கு அரசப்பிரதிநிதியாகப் போகப் போவதில்லை. கொலம்பஸ் எப்படி ஒரு விடாமுயற்சிக்காரரோ அதேபோல அரசர் பெர்டினான்ட் ஒரு பிடிவாதக்காரர்.  

இந்தியாவில் இருந்து தங்கப் பாளங்கள் பெருமளவு இன்னும் கொண்டுவரப்படவில்லை. ஆனால், அங்கிருந்து கிடைக்கும் அறிக்கைகள்  தங்கம் மற்றும் புதையல் கண்டெடுக்கப்படும் சாத்தியக் கூறுகள் இருப்பதைச் சுட்டிக் காட்டின. ஆனால், கொலம்பசுக்குத் தாங்கள் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றினால் மிகுவருவாயில் (இலாபத்தில்) பெரும்பங்கு அவருக்குப் போய்விடும் என்ற கவலை அரசியாருக்கும் அரசருக்கும் இருந்தது.  மாறாக வேறு தளபதிகளை இந்தியாவிற்கு அனுப்பினால் கிடைக்கிற இலாபத்தில் கூடிய பங்கைத் தங்களுக்குள் வைத்துக் கொள்ளும் வாய்ப்பிருந்தது.  

எனவே அரசியாரும் அரசரும் வேறு கடல் பயணங்களை அனுப்பிக் கொண்டிருந் தார்கள். பொபாதில்லாவின் ஆட்சி எதிர்பார்த்ததுபோல நல்லதாகவோ அல்லது கட்டுப்பாடாக இல்லாததால் அவருக்குப் பதில் வேறொரு அரசப் பிரதிநிதி அனுப்பி வைக்கப்பட்டார். கொலம்பஸ்.

இப்படி  இரண்டு ஆண்டு காலம் கொலம்பசை இசுப்பானிய நாட்டிலேயே ஒருவித திரிசங்கு சொர்க்க நிலையில் வைத்திருந்தார்கள். கடைசியாக அரசியாரும் அரசரும் அவரது பயணத்துக்குப் பச்சைக் கொடி காட்டினார்கள்.  ஆனால், ஒரு நிபந்தனை. ஹெயிட்டிப் பக்கம் கொலம்பஸ் போகக்கூடாது. அதற்கப் பதிலாக தங்கம் நிறைந்த வேறு தீவுகளை அவர் கண்டு பிடிக்க வேண்டும் என்பதே அந்த நிபந்தனையாகும்.  
கொலம்பசுக்குத் தான் எங்கு போகலாம், எங்கு போகக்கூடாது என்று அரசியாரும் அரசரும் போட்ட நிபந்தனை பிடிக்கவில்லை. ஆனால், அதனை அவரால் வெளியில் காட்டிக்கொள்ள முடியவில்லை.  

1502 ஆம் ஆண்டு மே மாதம் 9 நாள் கொலம்பஸ் நான்கு சின்னக் கப்பல்களில் 150 மாலுமிகளுடன் பயணப்பட்டார். இதுவே கிறிஸ்தோபர் கொலம்பஸ் மேற்குலகுக்கு மேற்கொண்ட நான்காவதும் கடைசியானதும் ஆன பயணமாகும்.

அப்போது கொலம்பசுக்கு அகவை 56 நடந்து கொண்டிருந்தது. இந்த வயதை எட்டிய ஒருவரைக் கிழவன் என்று யாரும் அழைக்க முடியாது. இருந்தும் உண்மையான வயதைவிட கொலம்பஸ் வயதுபோனவர்போல் காட்சி அளித்தார். கவலை, கரைச்சல், ஆபத்தான சூழ்நிலை, பரபரப்பான வாழ்க்கைமுறை, கடுமையான உடல் உழைப்பு ஆகியன அவரது தலைமயிரை முற்றாக  நரைக்க வைத்ததோடு  அவரது முகத்திலும் சுருக்கங்களை ஏற்படுத்தி விட்டது.  

கொலம்பஸ் இப்போது உண்மையில் ஒரு நோயாளியாகி விட்டார். கண்கள் இரண்டும் கிட்டத்தட்டக் குருடாகி விட்டன. உடல் தளர்ந்து விட்டது. இருந்தும் அவரது உறுதி மட்டும் குலையவில்லை. அது எப்போதும் போல் கெட்டியாக இருந்தது. அவரது ஆசைகூட நரைக்கவில்லை. காதேயை இம்முறை எப்பாடு பட்டும் கண்டுபிடித்து விடுவது என்று சூளுரைத்துக் கொண்டார்.  

அவருக்கு இன்னும் ஒரு எண்ணம் இருந்தது. ஹெயிட்டியில் அவரது எதிரிகள் இருந்தார்கள். அவர்கள் கொலம்பசை கைது செய்து கால் விலங்கு கை விலங்கு மாட்டி இழுத்துச் சென்ற போது கெக்களம் கட்டிச் சிரித்தவர்கள், கேலிப் பேச்சுக்கள் பேசி கூச்சல் போட்டவர்கள், அவர்களைக்  கொலம்பஸ் மன்னிக்கத் தயாராயில்லை. மாறாக அவர்களைப் பழிக்குப் பழிவாங்க நினைத்தார்.  

அவரது கப்பல்கள் ஹெயிட்டிக் கரையை அடைந்தன. அரசியாரும் அரசரும் கொலம்பஸ் ஹெயிட்டிப் பக்கம் போகக் கூடாது என்று தடை விதித்திருந்தாலும் தனது எதிரிகளுக்கு தான் யார் என்பதைக் காட்டிக் கொள்ளும் தீய ஆசையை அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை.  

எனவே அப்போதிருந்த ஆளுநர் ஒவன்டா (ழுஎயனெய)  அவர்களுக்கு  ஒரு  செய்தியை அனுப்பி வைத்தார். அந்தச் செய்தியில் தான் இந்தியாவில் புதிய நாடுகளைக் கண்டு பிடிக்கக் கப்பல்களில் வந்திருப்பதாகவும், தனது கப்பல்களில் ஒன்று பழுதாகி விட்டதால் அதனைப் பழுதுபார்க்க சந்தோ டொமின்கோ துறைமுகத்திற்குள் (Santo Domino Harbour) நுளையவும் அதே சமயம் அரசப் பிரதிநிதியைப் பார்த்துப் பேசவும் அனுமதி வேண்டும் என்றும் கேட்டிருந்தார்.   

அந்தச் சமயத்தில்தான் ஆளுநர் ஒவன்டா  இசுப்பானியாவிற்குப் பெரிய  கப்பல்படையை அனுப்பி வைக்க ஆயத்தம் செய்து கொண்டிருந்தார். அதில் கொலம்பசை மிகவும் கேவலமாக நடத்திய முன்னாள் ஆளுநர் பொபாதில்லா, எதிர்க் கிளச்சிக்காரன் தொல்டான் மற்றும் கொலம்பசைப் பிடிக்காதவர்கள் அல்லது வெறுத்தவர்கள் நிறையப்பேர் இருந்தார்கள். அது மட்டுமல்லாது அந்தப் கப்பல் படையில் முன்னர் எப்போதும் இசுப்பானியாவிற்கு அனுப்பி வைக்காத அளவிற்குத் தங்கமும் இருந்தது. எல்லாமாக 26 கப்பல்கள் இருந்தன. இவற்றால் சந்தோ டொமின்கோ நகர் பெரும் பரப்பரப்பாகவும் அல்லோல கல்லோலமாகவும் காணப்பட்டது.  

ஆளுநர் ஒவன்டா கொலம்பசின் நண்பரா அல்லது எதிரியா என்பதைச் சொல்ல முடியாமல் இருந்தது. ஆனால், அந்த நகரில்  கொலம்பசின் எதிரிகள் பலர் இருப்பதால் அவர் தரையிறங்குவது  பாதுகாப்பாகவோ புத்திசாலித்தனமாகவோ இருக்காது என எண்ணிய ஒவன்டா கொலம்பஸ் தரையிறங்க அனுமதிக்க முடியாதெனச் செய்தி அனுப்பினார். அந்தச் செய்தி கொலம்பசுக்கு ஏமாற்றமாக இருந்தது என்று சொல்ல வேண்டியதில்லை. தான்  இசுச்பானியாவிற்காகக்  கண்டு பிடித்த ஒரு தீவில் கால் வைக்கத் தனக்கு அனுமதி மறுக்கப்பட்டது கொலம்பசுக்கு வேடிக்கையாகவும் வேதனையாகவும் இருந்தது.  

கொலம்பஸ் ஒரு திறமையான கடலோடி என்பது எல்லோரும் அறிந்த விடயம். மேலே வானத்தைப் பார்த்த அவரது கண்களுக்கு ஒரு புயல் மையம் கொள்வதற்கான அறிகுறிகள் தென்பட்டன. எனவே அதை ஆளுநருக்கு அறிவித்து மீண்டும் தரையிறங்க அனுமதி கேட்டார். ஆனால், ஒவன்டாவிற்குப் புயல் வரும் அறிகுறி எதுவும் தென்படவில்லை. கொலம்பஸ் தரையிறங்கவும் தன்னைச் சந்திக்கவும் அப்படியொரு புலுடாக் கதையை அவுட்டு விடுவதாக அவர் நினைத்தார். 

எனவே இரண்டாவது முறையும் கொலம்பசுக்கு அனுமதி  தரமுடியாதென ஒவன்டா செய்தி அனுப்பினார்.  “நீர் ஒரு கெட்டிக்கார மாலுமி என்பது எனக்குத் தெரியும். ஆனால், புயல் வரும் என்ற உமது எதிர்வுகூறல் (ஆரூடம்) பிழையென்று நான் நினைக்கிறேன். அப்படி வருவதாக இருந்தாலும் அதற்கிடையில் இன்னொரு தீவுக்குப் போவதற்கு உமக்கு அவகாசம் இருக்கிறது. அப்படிச் செய்தால் நான் உமக்கு மிகவும் கடமைப் பட்டவன் ஆவன்”” என அந்தச் செய்தியில் குறிப்பிடப் பட்டிருந்தது.

—————————————————————————————————————-

கியூபா பயணக் கட்டுரை (67)
ஒரு பருந்தின் நிழலில்
அமெரிக்காவின் தலைநிலப் பரப்பைக் கண்ட கொலம்பஸ்

இசுப்பானியாவிற்குப் பயணம் செய்ய இருந்த 26 கப்பல்களில் தங்கம் கொண்டு செல்லப்படும்  கப்பலும் ஒன்றாகும். இசுப்பானிய நாட்டு அரசியார் அரசர் இருவரோடும் கொலம்பஸ் செய்து கொண்ட ஒப்பந்தந்தின் அடிப்படையில் அந்தத் தங்கத்தில் கொலம்பசுக்கும் பங்குண்டு.  புயல் அடித்தால் அந்தக் கப்பல்கள் சேதப்படுவதற்கான அபாயம் இருந்தது. எனவே மூன்றாவது முறையாகக் கொலம்பஸ் ஆளுநருக்குப் புயல் அடிக்கப் போவது உறுதி எனச் செய்தி அனுப்பினார். தன்னை சாந்தோ டொமிங்கோ துறைமுகத்துக்குள் நுழைய அனுமதி மறுத்தாலும் புயல் அடித்து அது ஓயும் வரை எல்லாக் கப்பல்களையும் துறைமுகத்துக்குள் கொண்டு சென்று பாதுகாக்குமாறு கொலம்பஸ் ஆளுநரிடம் மன்றாட்டமாகக் கேட்டார். அப்படிச் செய்யாவிட்டால் அதனால் ஏற்படும் விளைவுகள் அனைத்துக்கும் ஆளுநரே பொறுப்பேற்க  வேண்டி இருக்கும் என்றும் கொலம்பஸ் தெரிவித்தார். அதன் பின்னர் கொலம்பஸ் தனது கப்பல்கள் பாதுகாப்பாக நங்கூரமிட்டு நிற்பதற்கான துறைமுகத்தைத் தேடிப் புறப்பட்டார்.  

சாந்தா டொமின்கோவில் வாழ்ந்த மக்கள் சரி, கப்பல் தண்டயல்கள் மற்றும் மாலுமிகள் சரி கொலம்பஸ் “புயல் வர இருக்கிறது” என்று விடுத்த எச்சரிக்கையை  நம்பவில்லை. “புயல் வரும் என்ற பேச்சுக்கே இடமில்லை” என அவர்கள் எல்லோரும் ஒரே குரலில் சொன்னார்கள். “அப்படித்தான் புயல் அடித்தாலும் எங்கள் கப்பல்களுக்கு  அதனைத் தாங்கிக் கொள்ளும் சக்தி இருக்கிறது” என்றும் அவர்கள் அறிவித்தார்கள். 

“கொலம்பசுக்கு வயதாகிக் கொண்டிருக்கிறது அதனால் அவர் பயந்தாங்கொள்ளியாக மாறி வருகிறார்” என்று அவர்கள் நினைத்தார்கள். எனவே கொலம்பசின் எச்சரிக்கையைப் பொருட்படுத்தாமல் கப்பல்கள் அனைத்தும் சாந்தோ டொமின்கோ துறைமுகத்தை விட்டு இசுப்பானியாவிற்குப் பயணம் புறப்பட்டன. ஆனால், ஹெயிட்டித் தீவின் கிழக்குக் கரையை அடையு முன்னரே கொலம்பஸ் எதிர்கூறல் சொன்ன புயல் வந்து மோதியது.  

அந்தப் புயல் மிகவும் சீற்றத்தோடு தாக்கியது. அந்தத் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாமல்  26 கப்பல்களில் 20 கப்பல்கள் பெருங்கடலின் மடியில் அமிழ்ந்தன. தங்கம் ஏற்றியிருந்த கப்பல் பெரும் சேதத்துக்கு உள்ளாகியது.  கொலம்பசின் பகைவர்களான பொபாதில்லா, தொல்டான் போன்றவர்களும் கடலில் மூழ்கி மாண்டார்கள். ஒரு சில கப்பல்களே புயலில் தப்பி ஒருவாறு சாந்தோ டொமின்கோ துறைமுகத்தை வந்து அடைந்தன. சேதத்துக்கு உள்ளான தங்கப் கப்பல் மட்டுமே தப்பிப் பிழைத்து இசுப்பானியா போய்ச் சேர்ந்தது.  

கொலம்பசின் நண்பர்கள் உரக்கக் கத்தினார்கள் “என்ன ஆச்சரியம்! எல்லாம் வல்ல கடவுளும் கொலம்பஸ் பக்கமே இருக்கிறார்!” 

ஆனால், கொலம்பசின் எதிரிகள் “இந்த இத்தாலிக்காரன் ஒரு மாயாவி (Wizard) அல்லது மந்திரவாதி (Magician) ஆளுநர் துறைமுகத்துக்குள் நுழைய அனுமதி மறுத்தது அவனை ஆத்திரப்பட வைத்துவிட்டது. அதனால் இந்தப் புயலை உருவாக்கி கொலம்பஸ் பழிதீர்த்துக் கொண்டான்” என்று சொன்னார்கள். காரண காரியங்களை விளங்கிக் கொள்ளும் ஆற்றல் இல்லாததால் போகூழ் ஆகூழ் இவற்றுக்குக் கடவுளின் கருணை அல்லது கோபம், தெய்வத்தின் சாபம் அல்லது அனுக்கிரகம் காரணம் என மக்கள் நம்பினார்கள்.    

அந்தக் காலத்தில் மக்கள்  தேவதைகள், பேய், பிசாசு, பில்லி சூனியம் போன்றவற்றை நம்பினார்கள். தங்களுக்கும் மேலான சக்தி இருந்து எல்லாவற்றையும் ஆட்டிப் படைப்பதாக நினைத்தார்கள். இடி, மின்னல், எரிமலை, நிலநடுக்கம், வெள்ளம், கிரகணம், கொள்ளை நோய் இவற்றைக் கண்டு மக்கள் அஞ்சினார்கள். அந்த நிகழ்வுகளுக்கான காரணங்களை அவர்கள் அறிந்து வைத்திருக்கவில்லை. இதற்குப் பழந்தமிழர்களும் விதி விலக்கல்ல.  

தமிழர்கள், பல புறச் சக்திகளுக்கு நடுவே பிறந்து அவற்றினால் தாங்கள் இயங்கிச் செல்வதாக நினைத்தார்கள். மேலும் வாழ்க்கையின்  ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஒவ்வொரு சக்தி காரணம் எனக் கருதினார்கள். 

அச் சக்தியை இருவகையாகப் பிரித்தனர். ஒன்று நன்மை தரும் சக்தி. அதனை கடவுள், தெய்வம் எனப் பெயர் சூட்டி அழைத்தனர்.  மற்றது தின்மை தரும் சக்தி. அதற்கு அணங்கு, சூர், பேய் எனப் பெயர் சொல்லி அழைத்தனர்.  

இந்த இரண்டு சக்திகளும் பிறப்பு, இறப்பு, பூப்பெய்தல், திருமணம், மழை, வேட்டை, வளம், விதைப்பு, அறுவடை, போர், நோய் நொடி போன்ற நிகழ்வுகள் மீது செல்வாக்குச் செலுத்துகின்றன என்று நம்பினர்.   

கடவுள், தெய்வம் போன்ற நன்மை செய்யும் சக்தியைத்  திருப்திப்படுத்தவும், தமக்கு வேண்டியவற்றைக் கேட்டுப் பெறவும் பால், பழம், பலகாரம், பூ வைத்துக் கும்பிட்டனர். போற்றி சொல்லி வணங்கினர். விழாக் கொண்டாடி மகிழ்ந்தனர்.   

அணங்கு, சூர், பேய், பிசாசு போன்ற தீய சக்திக்கு பொங்கல் பொங்கியும் ஆடு, கோழி போன்றவற்றைப் பலி கொடுத்தும் திருப்திப்படுத்த அல்லது விரும்பிய காரியத்தை சாதித்துக் கொள்ள முயன்றனர்.   

இயற்கையை இத்தகைய மந்திரச் சடங்குகள் மூலம் கட்டுப்படுத்த முடியும் என்பது அக்கால மக்களின் நம்பிக்கையாகும்.  

வணங்குதல், வேண்டுதல், பலியிடுதல், நோன்புதல் ஆகியவற்றால் ஒருவர் தாம் விரும்பிய காரியத்தைச் சாதித்துக் கொள்ள முடியும் என்ற மந்திரகால நம்பிக்கையும் சடங்குகளும் பின்னர் புராதன சமயம் ஆயிற்று.

மந்திர யுகத்தில் மந்திரவாதி வகித்த இடத்தை, புராதன சமயகாலத்தில் மந்திரவாதிப் பூசாரி கைப்பற்றினான். அதன்பின் உருவான சமய காலத்தில் புரோகிதன் வந்தான். ஒரே சமூகத்தில் இந்த மூவரும் ஏக காலத்திலும் இருந்ததும் உண்டு.  

மந்திரச் சடங்குகளை முற்றிலும் வெறும் அறியாமை என்று கூறிவிட முடியாது. நோய் உளவியல் சம்பந்தமானது என்றால் இம்மாதிரியான சடங்குகள் அதற்குரிய  மருந்தாக அமைய வாய்ப்பு இருந்தது. இனக்குழு மக்களிடம் அவநம்பிக்கையைப் போக்கி நம்பிக்கையை உண்டாக்கியது. சோர்வைப் போக்கி ஆர்வத்தை விளைவித்தது.  
இன்றைய சமயங்கள், கடவுள்கள் யாவும் கருத்து முதற் கோட்பாட்டின் (idealism) அடிப்படையில் மக்களின் மனதில் எழுந்தவையே. வேறு விதமாகச் சொன்னால் கடவுள், தெய்வம், பேய், பிசாசு எல்லாம் இயற்கையின் இயக்கத்தைப் புரிந்து  கொள்ளாமல் அச்சம் காரணமாக மனித மனம் படைத்த படைப்புக்களே! “தெய்வமென்றதோர் சித்தமுண்டாகி” என்ற கூற்று அதனை எண்பிக்கிறது.  பொருள் முதல் கோட்பாட்டிற்கு (materialism)  கருத்து முதல் கோட்பாடு எதிர்மாறானது. பொருளை முதலாகக் கொண்டே உலகம், உயிரினங்கள், மரம், புல், பூடு வளர்ந்தன என்பது பொருள் முதல்; கோட்பாடாகும்.  

பரமாத்மா, ஜீவாத்மா, பதி, பசு, பாசம்,  ஆணவம், கன்மம், மாயை, நரகம், சுவர்க்கம் போன்றவையும் மனிதனின் கற்பனையே. அதனால்தான் இவற்றையிட்டு மதவாதிகள் ஆளுக்கொரு தத்துவம் சொல்லிக் கொண்டு திரிகிறார்கள். அதனால்தான் மனிதர்கள் மத அடிப்படையில் பிளவுபட்டு “என்னுடைய மதமும் நான் வணங்கும் கடவுளுமே உண்மையானவை, மற்றவர்களது மதங்களும் கடவுள்களும் பொய்யானவை” என யானை பார்த்த குருடர்கள் கதையாகச் சண்டை பிடித்துக் கொள்கிறார்கள்!  பெருமாள் கோயில் யானைக்கு நாமம் போட்டுக் கொள்வதில்கூட மாறுபட்டு வடகலை தென்கலை எனப் பிரிந்து நின்று சண்டை பிடிக்கிறார்கள்.  

கல்வி, செல்வம், காதல், வீரம், பொறாமை, வலிமை, வெள்ளாண்மை என ஒவ்வொன் றுக்கும் ஒவ்வொரு கடவுள் படைக்கப்பட்டார்.  

கடவுளைப் படைத்த மனிதன் தனக்கு இருப்பது போலவே அவர்களுக்கும் மனைவி, குழந்தைகளைப் படைத்தான். இந்தக் கடவுளரும் மனிதர்கள் போலவே தங்களுக்குள் சண்டை இட்டுக் கொண்டார்கள். அவற்றைக் புராணம், இதிகாசம் போன்ற கட்டுக் கதைகளாக மனிதன் எழுதி வைத்தான்.  

மனிதன் படைத்த கடவுளர் பலர் தோன்றிய வேகத்தில் பின்னர் மறைந்து போனார்கள். கிரேக்கரும், உரோமரும் ஒரு காலத்தில் எண்ணிறந்த எல்லாம் வல்ல கடவுளரை வழிபட்டனர். அந்தக் கடவுளருக்கு மனைவி மக்கள் இருந்தனர். அவைகளுக்கு இடையில் பொறாமை போட்டி சண்டை இருந்தன. இப்போது அந்தக் கடவுளர் எல்லோரும் அந்த நாடுகளின் அருங்காட்சிக் கூடங்களில் காட்சிப் பொருளாக நிறுத்தி வைக்கப் பட்டுள்ளன. 

வேதகாலத்தில் கொடிகட்டிப் பறந்த கடவுளர்களான வர்ணன், இந்திரன், சோமன், அக்கினி பிற்காலத்தில் பதவி இறக்கம் செய்யப்பட்டார்கள். அதற்கு எதிர்மாறாக உருத்திரன், விஷ்ணு பதவி உயர்த்தப் பட்டார்கள்.   

சிலப்பதிகார காலத்தில் காமன், இந்திரன், சந்திரன், கலைமகள், திருமகள், கூற்றம், சூரியன், பலதேவன், சாத்தன், அய்யை, மதுராபதி, அக்கினி போன்ற கடவுளர்க்கும் தெய்வங்களுக்கும்  ஊர்கள் தோறும் கோட்டங்கள் (கோயில்கள்) இருந்தன. பிற்காலத்தில் இவர்களுக்குக் கோட்டங்கள் இல்லாமல் போய்விட்டன. சிலப்பதிகார காலத்தில் இந்திரனுக்கு மட்டுமல்ல அவனது படையான வச்சிராயுதம், அவன் வாகனமாகிய அய்ராவதம், கற்பகதரு இவற்றுக்குத் தனித்தனிக் கோட்டங்கள் இருந்தன. பின்னால் அவையும் மறைந்து போயின.  

இன்னும் பேய், பிசாசு, நால்வகை வருண பூதங்குளுக்கான சிறு தெய்வ வழிபாடு இருந்திருக்கிறது. மோகினிப் பிசாசு என்ற தெய்வ வழிபாடும் இருந்தது. இது அழகான பெண் உருவில் வந்து ஆண்களை மயக்கும் என்பது கதை. சிலப்பதிகாரம் மோகினிப் பிசாசை “ஆர் அஞர்த் தெய்வம்” “கான் உறை தெய்வம்” என்ற பெயர்களால் சுட்டுகிறது.

சங்க காலத்தில் நெய்தல் தெய்வம் வருணன் பரதவர்களால் வழிபடப்பட்டான். ஆனால், அடுத்து வந்த சங்கம் மருவிய சிலப்பதிகார காலத்தில் வருண வழிபாடு மறைந்து விட்டது. விநாயகர் வணக்கம் சிலப்பதிகார காலத்தில் காணப்படவில்லை. பல்லவ மன்னன் நரேந்திரவர்மனின் வாதாபி படையெடுப்புக்குப் பின்னரே விநாயகர் வணக்கம் தமிழ்நாட்டில் வேரூன்றியது.  சாளுக்கிய மன்னன் புலிகேசியை அவனது தலைநகரரான வாதாபியில் (இன்றைய கன்னடம் பீஜாபூர் மாவட்டத்தில் உள்ள படாமி)  தோற்கடித்து (கிபி 630) அங்கிருந்து திரும்பும்போது பிள்ளையாரையும் கொண்டு வந்து சேர்த்தான். அதனால்தான் பிள்ளையாரைக் குறிக்கும் போது “வாதாபி கணபதே” எனப் பாடகர்கள் பாடுகிறார்கள்.

அண்மையில் (2001) அமெரிக்கர்கள் சாத்தான்கள் (Devils) நம்பிக்கையீனர்கள் (Infidels) அல்லாதான் மாபெருங் கடவுள் ( Allah is Great) என்று சொல்லிக் கொண்டு இஸ்லாமிய தீவிரவாதிகள் நியூயோர்க் நகர உலக வாணிக கோபுரங்களை (World Trade Centre) பயணிகள் விமானங்களை ஏவுகணைகளாக்கி மோதித் தகர்த்தார்கள்.

அதற்குப் பதிலடியாக “அமெரிக்காவைக் கடவுள் காப்பாற்ற வேண்டும்” (God Save America)  என்று சொல்லிக் கொண்டு சனாதிபதி புஷ் ஆப்கனிஸ்தான்  மீது பத்தாயிரம், பதினாயிரம் கிலோ நிறையுடைய குண்டுகளை சகட்டு மேனிக்குப் போட்டுத் தீவிரவாதிகளோடு சேர்த்து அப்பாவிப் பொதுமக்களையும் ஆயிரக்கணக்கில்  கொன்று குவித்தார்.  

இரண்டு சாராருமே தங்கள் தங்கள் கடவுளின் பெயரைச் சொல்லிக் கொண்டு சண்டை போட்டார்கள். உலகத்தை ஒரே கடவுள் அல்லது பேராற்றல் படைத்தது என்று ஒருமனதாக எல்லோரும் எண்ணி நடந்திருந்தால் இந்தச் சண்டை நடைபெற வழியிருந்திருக்காது!  

இசுப்பானிய கப்பற்படையைப் புயல் பதம்பார்த்து அவை கடலுக்குள் சங்கமித்துக் கொண்டிருந்த அதேவேளை கொலம்பஸ்  ஹெயிட்டியின் கடலோரமாக இருந்த ஒரு சின்னக் குடாவொன்றில் தனது கப்பல்களோடு புகலிடம் தேடி இருந்தார். இதனால் புயலின் முழுச் சீற்றத்தில் இருந்து அவரும் அவரது கப்பல்களும் தப்ப முடிந்தது. இருந்தும் அவரது கப்பல்கள் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகிக் கடலில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டது. இரண்டொரு கப்பல்கள் வழி தடுமாறிப் பிரிந்து பின் புயல் ஓய்ந்தபின் ஒன்று சேர்ந்தன.

இப்போது கொலம்பஸ் ஜமேய்க்கா (Jamaica) நோக்கிப் பயணமானர். பல நாள்கள் மேற்கிந்திய தீவுகள் ஊடாகப்  பயணம் செய்த பின்னர் மேற்குப் பக்கமாகத் திரும்பினார். யூலை 14 ஆம் நாள் (1502) உயர்ந்த மலைத் தொடர் ஒன்று கொலம்பசின் கண்ணில் பட்;டன. அந்த மலைத் தொடர் தென் அமெரிக்காவின் கொந்துறாஸ் (Coast Range Mountains of Honduras) நாட்டில் உள்ளதாகும். அப்போதுதான் அமெரிக்காவின் தலைநிலப் பரப்பை கொலம்பஸ் முதன் முதலாகக் கண்டார். 

————————————————————————————————————- 

கியூபா பயணக் கட்டுரை (68)
ஒரு பருந்தின் நிழலில்
கொந்துறாசைக் கைப்பற்றிய கொலம்பஸ்

கரையை நோக்கிக் கொலம்பஸ் சென்றபோது  ஒரு பெரிய  தோணி ஒன்று அவரது கப்பலுக்கு அருகில் வந்ததைப் பார்த்தார். அந்தத் தோணி கிட்டத்தட்ட கொலம்பசின் கப்பல் அளவு பெரியதாக இருந்தது. அதன் நீளம் 40 அடிக்கு மேலாகவும், அகலம் எட்டு அடிக்குக் குறையாமலும் இருந்தது. அந்தத் தோணியை 25 இந்தியர்கள் வலித்தார்கள். தோணியின் நடுவே பனை ஓலையால் (pயடஅ டநயஎநள) வேய்ந்த கூடாரத்தின் கீழே அவர்களது குடித்தலைவர் அமர்ந்திருந்தார். காற்றைக் கொண்டு தோணியை ஓட்டுவதற்கு வசதியாக ஒருவித நூலில் செய்த பாய் இழுக்கப் பட்டிருந்தது. மேலும் அந்தத் தோணி நிறையப் பழங்களும் இந்திய விற்பனைப் பொருட்களும் காணப்பட்டன.  

தோணியையும் அதில் வந்தவர்களையும் பார்த்த கொலம்பசுக்கு  வியப்பாக இருந்தது. இதற்கு முன்னர் அவர் பார்த்த தீவுகளில் இப்படியான இந்தியர்களை அவர் சந்திக்கவே இல்லை. இவர்கள் நன்றாக உடுத்திருந்தார்கள். கைகளில் கூரான வாட்கள், ஈட்டிகள் வைத்திருந்தார்கள். அந்தச் சூழல் கொலம்பசுக்குச் சிறுவயதில் வெனிஸ் மற்றும் ஜெனோவாவில் பார்த்த தோணிகளை நினைவூட்டியது. அது மட்டுமல்லாது காதேயைப்பற்றித் தான் கேள்விப்பட்ட எண்ணிறந்த கதைகளும் அவரது நினைவுத் திரையில் ஓடின.  

கடைசியாகச் சரியான இடத்துக்கு வந்து சேர்ந்ததை நினைத்து கொலம்பஸ் மகிழ்ச்சி அடைந்தார். இந்தக் கடற்கரைதான் தான் இதுவரை காலமும் கண்டு பிடிக்தவற்றில் மிகவும் வில்லங்கப்பட்;ட காதேயின்  கடற்கரையாக இருக்க வேண்டும். இந்த இந்தியர்கள், தான் முன்னர் சந்தித்த அரை நிர்வாண இந்தியர்கள் போலல்லாது அதுவரை காலமும் சந்திப்பதற்குக் காத்திருந்த மக்களோடு ஒப்பிடக் கூடிய அளவுக்கு நாகரிகம் படைத்தவர்களாக இருந்தார்கள்.  

கொலம்பசின் இந்தக் கணிப்பு ஒரு விதத்தில்

சரியாகவே இருந்தது. இந்தப் பெரிய தோணியில் இருந்தவர்கள் இன்றைய மெக்சிக்கோ நாட்டைச் சேர்ந்த  பழங்குடி மக்கள். இன்று எமக்குத் தெரிந்த அஸ்தெக்ஸ் (Aztecs)  மக்கள்தான் இவர்கள். அரை நாகரிகம் அடைந்தவர்கள். பெரிய நகரங்கள் கோயில்கள், கல்லாலான வீடுகள் கட்டி வாழ்ந்த வர்கள். ஞாயிறின் ஓட்டத்தை வைத்து 365 நாள்கள் கொண்டது ஒரு ஆண்டு எனக் கணிக்கத் தெரிந்திருந்தவர்கள். அது மட்டும் அல்லாமல் தேவதைகளின் நாடான காதேயில் கிடைக்கலாம் என கொலம்பஸ் எதிர்பார்த்த தங்கம் கிடைக்கும் நாடு. ஆனால், மெக்சிக்கோவைக் கண்டு பிடிக்க கொலம்பஸ் கொடுத்து வைத்திருக்க வில்லை.  

மெக்சிக்கோவை கண்டு பிடித்தவர்  தண்டயல் கோதெஸ் (Cortez) என்ற பெயர் கொண்ட இன்னொரு இசுப்பானியர். மிகவும் துணிச்சலான அதே சமயம் மிகவும் கொடுமை யாளரான இவர் மெக்சிக்கோ நாட்டின் தங்கத்தையும் திரவியங்களையும்  வாரி எடுத்துக் கப்பல்களில் இசுப்பானியாவிற்கு அனுப்பினார். அதுமட்டுமல்லாது அங்கு வாழ்ந்த வீரம்நிறைந்த மக்களைக் கொன்றும் அடிமைப்படுத்தியும் பல அட்டூழியங்களைச் செய்தார்.

கொலம்பஸ் இந்தத் தோணியைச் சந்தித்த பின்னர் கப்பல் தரித்து நிற்பதற்கு தேவையான நல்ல துறைமுகம் ஒன்றைக் கண்டுபிடிப்பதற்கு கரையோரமாக மேலும் கீழும் பயணம் செய்து தேடினார். கடைசியாக 1502 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17 ஆம் நாள் இன்று Truxillo  என்று அழைக்கபடும் கொந்துராஸ் நாட்டின் நகரத்தில்  தரை யிறங்கினார். உடனே வழக்கம் போல இசுப்பானிய நாட்டின் கொடியை நாட்டி அந்த நாட்டின் அரசர், அரசியர் பேரில் அந்த நாட்டைக் கைப்படுத்தினார். 

ஆனால், அந்த நாடு கொந்துறாஸ் (Honduras) நாடு என்பதை அவர் அறிந்திருக்கவில்லை. வழமைபோல அதனை ஆசியாவின் ஒரு பகுதி என்றே எண்ணிக்  கொண்டார்.  அங்கு வாழ்ந்த இந்தியர்களிடம் இருந்து தெற்கே மேலும் பயணம் செய்தால் ஒரு “குறுகிய இடம்’ வரும் என்றும் அதற்கப்பால் “பெருங் கடல்” இருக்கிறதென்றும் தெரிந்து கொண்டார்.

இந்தக் “குறுகிய இடம்” தான் பனாமா இடைகரை (Isthmus of Panama) ஆகும். அதற்கப்பால் உள்ள “பெருங் கடல்”தான்  பசிவிக்  பெருங் கடலாகும். ஆனால், கொலம்பஸ் “குறுகிய இடம்” என்பதை நீரணை (Strait)  என்று தவறுதலாகப் புரிந்து கொண்டார்.  

அந்த நீரணையை மட்டும் கண்டு பிடித்தால் அதன் ஊடாகப் பயணம் செய்து நேரே இந்தியாவின் கரைகளைத் தழுவும் வங்காள விரிகுடாவை அடைந்து விடலாம் என கொலம்பஸ் நம்பினார்.

எனவே இந்த நீரணையைக் கண்டு பிடிக்க கொலம்பஸ் கொன்துறாஸ் மற்றும் நிக்கரகுவா (Niஉயசயபரய)  நாடுகளின் கரையோராமாகப் பயணம் செய்தார். நீங்கள் தென் அமெரிக்காவின் வரை படத்தைப் பார்ப்பீர்களானால் அத்லாந்திக் பெருங்கடலையும் பசிவிக் பெருங்கடலையும் பிரிக்கும் பனாமா கால்வாய்க்கு மிக அருகில் கொலம்பஸ் நின்றது தெரியும்.  

அந்தக் கால்வாயை மட்டும் கண்டு பிடித்திருந்தால் காதே மற்றும் இந்தியாவைக் கண்டு பிடிக்க வேண்டும் என்ற வெறியில் தனது வாழ்நாளின்  பெரும் பகுதியைக் கழித்த கொலம்பஸ் தனது இலட்;சியத்தை அடைந்திருப்பார்! ஆனால், அவரது சிறிய கப்பல் பசிவிக் பெருங்கடலைக் கடந்திருக்குமா என்பது பெரிய கேள்விக்குறி ஆகும். பெரும்பாலும் அந்தப் பயணம் பெரிய தோல்வியில் முடிந்திருக்கலாம். 

கொலம்பஸ் தான் முன்னர் கண்டுபிடித்த கியூபா மற்றும் கெயிட்டி போன்ற தீவுகளைவிட இப்போது கண்டு பிடித்திருக்கும் கொந்துறாஸ் கடலோரம் வளமான பூமி என்பதைப் புரிந்து கொண்டார். கொந்துறாசில் தங்கம் மற்றும் முத்துக்கள் நிறைந்து கிடப்பதைப் பார்த்தார். காதே மற்றும் இந்தியாவைக் கண்டு பிடித்த பின்னர் இந்த வழியாக மீண்டும் வந்து இந்தத் தங்கத்தையும் முத்துக்களையும் அள்ளிக் கொண்டு போகவேண்டும் எனத்; தனது மனதுக்குள் கணக்குப் போட்டார். 

கொந்துறாசை இந்தியர்கள் ‘வெரகுவா’ (Veraguarநசயபரய) என்ற சொல்லோடு ஒத்த ஒலியில் அழைத்தார்கள். கொலம்பஸ் அந்தப் பெயரையே அதற்குச் சூட்டினார். கொலம்பசுக்குப் பின்னர் இந்தப் பெயர் அவரது சந்ததியினருக்குக்  கொடுக்கப்பட்டது. இசுப்பானியாவில் இன்று வாழும் அவரது சந்ததியினரில் ஒருவர் வெரகுவாவின் பிரபு (னுரமந ழக ஏநசயபரய) என்று அழைக்கப்படுகிறார்.  

கொலம்பஸ் தெற்குப் பக்கமாகப் பயணம் செய்தபோது பலத்த காற்றும் மழையும் அடிக்கத் தொடங்கியது. கப்பல்களில் துளைகள் விழுந்து விட்டன. உணவுக் கையிருப்பு குறையத் தொடங்கியது. மாலுமிகள் வழக்கம்போல் புறுபுறுக்கத் தொடங்கினார்கள். இப்படியே போய்க் கொண்டிருந்தால் இந்தியா போய்ச் சேருமுன் பட்டினியால் இறக்க நேரிடும் என்று மாலுமிகள் பயந்தார்கள்.

கொலம்பசையும் கவலை பிடித்துக் கொண்டது. அவரது பதின்மூன்று வயது மகன் பெர்டினந்துவை இந்தப் பயணத்தின்போது தன்னோடு அழைத்து வந்திருந்தார். வயது கொஞ்சம் என்றாலும் அப்பாவைப் போலவே மகனும் நல்ல மன உரம் படைத்தவர் ஆவர். கப்பல் உடைந்தோ அல்லது போதிய உணவு இல்லாமலோ எல்லோரும் சாக நேரிட்டால் தனது மகனும் அநியாயமாக இறந்துவிடக் கூடும் என்று  கொலம்பஸ் பயந்தார். அந்தப் பழிக்கு அவர் மிகவும் அஞ்சினார்.  

எனவே இந்தியாவைக் கண்டு பிடிக்க வேண்டும் கொந்துறாசில் கிடைக்கும் தங்கம் முத்துக்களை அள்ள வேண்டும் என்ற தனது திட்டங்களை எல்லாம் கைவிட்டுக் கெயிட்டி திரும்ப முடிவு செய்தார். கெயிட்டி போனால் ஆளுநர் ஒவன்டோவிடம் நல்ல நிலையில் இருக்கும் கப்பல்களை உதவியாகப் பெற்று இன்னொரு முறை இந்தியா போக முயற்சிக்கலாம்.  

கொலம்பசின் கப்பல்கள்  இப்போது கெயிட்டி நோக்கிப் பயணப்பட்டன. ஆனால், அந்த நாள்களில் கெயிட்டி போய்ச் சேருவதென்பது இலேசான செயல் அல்ல. 1503 ஆம் ஆண்டு யூன் 3 ஆம் நாள் கொலம்பஸ் ஜமேய்க்கா போய்ச் சேர்ந்தார்.  

அதற்குமேல் அவரது கப்பல் பயணத்தை  மேற்கொள்ளுவது தற்கொலைக்கு ஒப்பானது என்று கொலம்பஸ் தீர்மானித்தார்.  கப்பல்கள்  நெடுங்காலம் கடலில் கிடந்ததால் அதன் அடிப்பாகத்தில் ஒருவகை ஊரிகள் ஒட்டிக்கொள்ளும். அவை கொஞ்சம் கொஞ்சமாக மரத்;தை அரிக்கத் தொடங்கும்.  இதனால் கப்பலில் ஓட்டைகள் விழுந்து அதன் ஊடாகத் தண்ணீர் உள்ளே கசியத் தொடங்கிவிட்டது. எனவே கொலம்பஸ் ஜமேய்க்கா தீவில் எங்காவது நல்ல துறைமுகத்தைக் கண்டு பிடித்து அங்கு தரித்து நின்று கப்பலுக்குப் கலப்பத்துப் பார்க்க நினைத்தார்.  

ஆனால், அவருக்குத் தோதான நல்ல துறைமுகம் கிடைக்கவில்லை. ஒவ்வொரு நாள்களும் நகர, நகர  நிலமை  மோசமாகிக் கொண்டு வந்தது.  மேலும் தாமதித்தால் கப்பல் கடலில் மூழ்கி எல்லோரும் மடிவதைத் தவிர வேறு வழியிருக்காது.  எனவே ஒரு குடாவைத் தெரிந்தெடுத்து அதற்குள் கப்பலைச் செலுத்தினார். அந்த இடம் இப்போதும் ளுசை ஊhசளைவழிhநச?ள ஊழஎந என்று அழைக்கப்படுகிறது. கப்பல் தரைதட்டியதும் அது சிதைந்து அழிபாட்டுக்கு உள்ளானது.   

அந்தக் கப்பல்களின் நீண்ட மரப் பலகைளைப் பெயர்த்தெடுத்து ஓரளவு வசதியாகத் தங்குவதற்கு ஏற்றவாது கடற்கரையோரமாகச்  சிறு சிறு வீடுகளைக்  கட்டினார்கள். அந்த அழகான தீவில் கட்டப்பட்ட அந்த  வீடுகளில் கொலம்பசும் அவரது ஆட்களும் அடுத்த ஒரு ஆண்டு முழுதும் வாழ்க்கையைப் போக்கினார்கள். தீவு அழகாக இருந்ததே ஒழிய அவர்களது வாழ்க்கை அழகாக இருக்கவில்லை.  

இன்பமாக இருக்கும்போது ஒரு பொருளைப் பார்ப்பதற்கும் துன்பமாக இருக்கும்போது அதே பொருளைப் பார்ப்பதற்கும் நிறைய வேற்றுமை உண்டு.  

இளமையில் ஒருவன் ஒருத்தியைப் பார்ப்பதற்கும்  முதுமையில் ஒருத்தியைப் பார்ப்பதற்கும் வேற்றுமை உண்டு.  

இளமையில் கொடியில் வெய்யிலுக்குக் காய்கிற வண்ணச் சேலையைப் பார்ப்பவன் கண்ணுக்கு அது அழகிய பெண்ணாகத் தோன்றும்.  

வயிறு பசிக்கிறது, சாப்பிட ஒன்றுமில்லை என்கிற நிலையில் மேலே உள்ள வானம் நீலாமாகவோ, கீழே உள்ள மரங்கள் பச்சையாகவோ கண்ணுக்குத்  தெரியாது! அதே நேரம் ஒரு சுற்றுலாவின் போது சாப்பிடுவதற்கு பத்துக் கறியோடு சோறு இருக்கும் போது அதே வானமும் மரங்களும் கண்களுக்கு நல்ல நீலநிறமாகவும் பச்சைப் பசேல் எனவும் காட்சி அளிக்கும்.  

சிலரின் வாழ்வு இன்பமாகவும், பலரின் வாழ்வு துன்பமாகவும் இருக்கிறது. இருந்தும் எவருடைய வாழ்க்கையும் முழுதும் இன்பமாகவோ முழுதும் துன்பமாகவோ இருக்காது. இரண்டும் கலந்தே இருக்கும்.  

துன்பத்திற்குக் காரணம் தெரியாதபோது மறுபிறப்புக் கொள்கை பிறந்தது. அவரவர் வாழ்வு அவரவர் முற்பிறப்பில் செய்த பாவ புண்ணியத்தைப் பொறுத்து அமைகிறது என்று சமயவாதிகள் விளக்கம் அளித்தார்கள். 

————————————————————————————————————–
  

கியூபா பயணக் கட்டுரை (69)
ஒரு பருந்தின் நிழலில்
“இறைவா! உன் கைகளில் என் ஆவியை ஒப்படைக்கிறேன்!”  

பிறப்பு, இறப்பு- மீண்டும் இறப்பு பிறப்பு இந்தச் சங்கிலித் தொடரில் இருந்து விடுதலை பெற்றால் மட்டுமே துன்பத்தில் இருந்து விடுபடலாம் என்று எண்ணியபோது முக்தி அல்லது வீடுபேறு கோட்பாடு பிறந்தது.   

உலகில் இன்பமும் துன்பமும் கலந்து இருந்தாலும் இன்பத்தைவிட துன்பந்தான் அதிகளவில் இருக்கிறது. இன்று இருப்பாரை நாளை பார்க்க முடியவில்லை. தந்தை சதமில்லை, பெற்ற தாய் சதமில்லை, தாலி கட்டிய மனைவி சதமில்லை,  மக்களும் சதமில்லை.  இந்த உலகில் எதுவும் சதமில்லை, எதுவும் நிலைத்து நிற்பதில்லை, நீடிப்பதும் இல்லை. எல்லாமே மாறிவிடுகிறது, எல்லாமே அழிந்து விடுகிறது. காலம் எதையும் விட்டு வைப்பதில்லை. இவற்றின் பின்னணியில்தான் நிலையாமைக் கோட்;பாடு தோன்றியது.  

கனவில் எத்தனையோ காட்சிகளைக் காண்கிறோம். எவ்வளவோ செயல்களைச் செய்கிறோம். தங்கக் கட்டிகள் குவிந்து கிடக்கின்றன. முடிந்த மட்டும் அவற்றை ஆசையோடு எடுத்து மடியில் கட்டிக் கொள்கிறோம். அவற்றைக் கொண்டு மாடமாளிகை கட்டலாம் எனத் திட்டம் போடும்போது கனவு கலைகிறது. கனவு உண்மையென்றாலும் கனவில் கண்டது எல்லாமே பொய் என்கிற உண்மை புலப்படுகிறது.  

நித்திரையில் எப்படிக் கனவுலகில் வாழ்கிறோமோ அதேபோல் விழிப்;;பில் மாய உலகில் வாழ்கிறோம். கனவு சொற்ப நேரத்தில் முடிந்து விடுகிறது. ஆனால், வாழ்க்கை சில ஆண்டுகள் நீடிக்கிறது. வேற்றுமை அவ்வளவுதான்.  

இவ்வாறான நிலையாமை பற்றிய சிந்தனையே இந்த உலகம் மாயை (world is an illusion) என்ற சங்கரரின் மாயாவாதக்  கொள்கைக்குக் கால்கோள் இட்டது. மாயாவாதிகள் “வாழ்வாவது மாயம் மண்ணாவது திண்ணம்” என்று வெட்டி வேதாந்தம் பேசினார்கள்.   
அதாவது இந்த  உலகத்திலுள்ள கவற்சிப் பொருள் எதிலும் ஆசை வைக்காதே, அவற்றில் மயங்கி விடாதே, அவற்றில் ஈடுபாடு கொள்ளாதே. தாமரை இலைத் தண்ணீர்போல் வாழப் பழகிக் கொள் என்றார்கள். 

உண்மையில் இல்லாத ஒன்றை  இருக்கிறது என்று நினைப்பது மாயை அல்ல. மாறாக இருக்கிற  ஒன்றை வேறொன்றாக நினைப்பதுதான் மாயை. அறியாமை அப்படி நினைக்க வைக்கிறது. எடுத்துக்காட்டாக அறியாமை காரணமாக ஒருவர் பழுதையைப் பாம்பென்று நினைக்கிறார். அறியாமை நீங்கும்போது பழுதை பாம்பு அல்ல என்ற உண்மை உணரப்படுகிறது. அப்போது பாம்பு மறைந்து விடுகிறது. அதுபோலத்தான் இந்த உலகமும்.

கொலம்பசுக்கும் அவரது ஆட்களுக்கும் ஜமேய்க்கா நிச்சயமாக சுற்றுலாப் பயணம்போல் இருக்கவில்லை. அந்த ஆண்டு ஜமேய்க்காவில் துன்பம், அச்சம், அழிவு, நோய், பட்டினி நிறைந்ததாக இருந்தது. தங்கள் தலைவிதியைப் பற்றி அவர்கள் நொந்து கொண்டார்கள். துக்கம், துன்பம் தாக்கும்போதுதான் மனிதர்கள் அளவுக்கு அதிகமாக இறைவனை நினைக்கிறார்கள்.   

கொலம்பசையும் அவரது மாலுமிகளையும்  கடவுள் பற்றிய நினைவுதான் ஆட் கொண்டது. முன்பின் தெரியாத தீவில் தனிமையில் அநாதரவாக விடப்பட்டிருந்த அவர்கள் காலை, நண்பகல், மாலை என எப்போதும்  வழிபாடு, பிரார்த்தனை போன்றவற்றில்  காலத்தைக் கழித்தார்கள்.  

டீகோ மென்டிஸ் (Diego Mendez) என்ற  துணிச்சல்கார மாலுமி ஒரு சின்னத் தோணியில் தன்னந்தனியே  இரண்டு வாட்டி கெயிட்டி சென்று நிவாரணப் பொருட்கள் கொண்டுவர முயற்சித்தார்.  முதல்முறை அவரது தோணி கிட்டத்தட்ட அழிபாட்;டுக்கு உள்ளானது. ஆனால், இரண்டாவது முறை அவர் வெற்றிகரமாகப் புறப்பட்டுச் சென்றுவிட்டார்.
சென்றவர் சென்றதுதான். மாதக் கணக்கில் அவரைப்பற்றி ஒரு செய்தியும் தெரியவில்லை. அவர் கடலில் மூழ்கி இறந்திருக்கலாம் எனச் சிலர் அனுமானித்தார்கள்.  
உண்மை என்னவென்றால் ஆளுநர் ஒவன்டோ இசுப்பானிய அரசியாரும் அரசரும் கொலம்பஸ் மீது வைத்திருந்த அன்பையையும் நட்பையும் இழந்து விட்டார்கள். அவரைத் திரும்பவும் காண முடியாமல் போனால் அவர்கள் அதற்காகக் கவலைப் படப் போவதில்லை என்று நினைத்தார். உதவி அனுப்புவதாக வாக்களித்தார். அதே சமயம் உதவி செய்யப்போய் சிக்கலில் மாட்டிக் கொள்ள அவர் விரும்பவில்லை. எனவே ஜமேய்க்காவில் கப்பல் உடைந்து அநாதரவாக விடப்பட்டவர்களுக்கு எந்த உதவியும் வந்து சேரவில்லை.   

கொலம்பசோடு இருந்த சிலர் அவரோடு சண்டை பிடித்துக்கொண்டு ஓடிவிட்டார்கள். கொலம்பசின் மகன் பெர்டினான்ட் பெரிய ஆளாக வந்தபின் ளுசை ஊhசளைவழிhநச?ள ஊழஎந இல் துணிச்சலோடும் பொறுமையோடும்  தானும் தனது தந்தையும் மற்றவர்களும் வாழ்ந்த கதையை விரிவாக எழுதி வைத்திருக்கிறார்.

கடைசியாக ஆளுநர் ஒவன்டோ அனுப்பி வைத்த நிவாரணப் பொருள்கள் ஒரு கப்பலில் வந்து சேர்ந்தன. அவற்றைக் கொண்டு வந்தவர் வேறுயாருமல்ல. தன்னந்தனியே துணிந்து தோணியிpல் போன டீகோ  மென்டிஸ்தான் கப்பலில்  வந்து சேர்ந்தார்.   
தன்னோடு சண்டை பிடித்துக் கொண்டு ஓடியவர்களை மன்னித்து அவர்களையும் அழைத்துக் கொண்டு கொலம்பஸ் 1504 ஆம் ஆண்டு யூன் 28 ஆம் நாள் சிறையைவிட மோசமான அந்தத்; தீவில் இருந்து விடுதலை பெற்றுப் புறப்பட்டார்.  

காப்பாற்றப்பட்ட  மாலுமிகள் அனைவரும் ஆகஸ்ட் 15 ஆம் நாள் சாந்தோ டொமிங்கோ துறைமுகத்தை அடைந்தார்கள். கொலம்பசைக் காப்பாற்றிய ஆளுநர்  ஒவன்டோ இப்போது கொலம்பசை எவ்வளவு கூடிய விரைவில் அங்கிருந்து அப்புறப்படுத்த முடியுமோ அவ்வளவு விரைவில் அப்புறப்படுத்த நினைத்தார்.  

அந்த நினைவுக்குப் பின்னால் கொலம்பஸ்பற்றிய பயம் அல்லது அவரை நடாத்திய முறைபற்றிய வெட்கம் அல்லது இசுப்பானியாவில் அவரை யாரும் இப்போது மதிப்பதில்லை என்ற எண்ணம் இதில் எது காரணமாக இருந்திருக்கும் என்பதை நிச்சயமாகச் சொல்ல முடியாது.

காரணம்  எதுவாக  இருந்தாலும் ஆளுநர் கொலம்பசை 1504 ஆம் ஆண்டு செப்தெம்பர் 12 ஆம் நாள் இசுப்பானியாவிற்கு அனுப்பி வைத்தார். இரண்டு கப்பல்களில் புறப்பட்ட கொலம்பஸ் தான் கண்டு பிடித்த புதிய  உலகுக்குத் தனது புறமுதுகைக் காட்டிக் கொண்டு இரண்டு கப்பல்களில் பயணமானார்.  

பெருங்கடலில் இரண்டொரு நாள்தான் பயணம் செய்திருப்பார்கள். கொலம்பஸ் சென்ற கப்பல் திடீரென்று வீசிய புயலில் சிக்கியபோது அதன் பாய்மரம் முறிந்து போனது. எனவே அந்தக் கப்பல் சந்தோ டொமின்கோவிற்கு திருப்பி அனுப்பப் பட்டது.

கொலம்பசும் அவரது மகனும் இன்னும் சிலரும் கொலம்பசின் உடன்பிறப்பு பத்தோலமே பயணம் செய்த கப்பலுக்கு மாற்றப் பட்டார்கள்.  பத்தோலமே தனது உடன்பிறப்பு கொலம்பஸ் மேற்கொண்ட ஆபத்தான கப்பல் பயணங்கள் அனைத்திலும் உடன் சென்று கொண்டிருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடைசியாக இசுப்பானிய நாட்டின் கடற்கரை அவர்கள் கண்ணுக்குத் தெரிந்தது. 1504ம் ஆண்டு நொவெம்பர் 07 ஆம்  நாள் காடிஸ் துறைமுகத்துக்குச் சற்றுத் தள்ளி இருக்கும் சான் லுக்கார் (ளுயn டுரஉயச) என்ற துறைமுகத்தை அடைந்தார்கள்.  

கொலம்பஸ் இசுப்பானியாவை விட்டுப்  புறப்பட்டு இரண்டரை ஆண்டுகள் கடந்து விட்டன. சாதிக்க நினைத்த எதுவும் அவருக்குக் கைகூடவில்லை. அவர் மீண்டும் மீண்டும் சந்தித்ததெல்லாம் ஏமாற்றம், விபத்துக்கள் மட்டுமே. அவருக்குக் கொடுக்கப்பட்ட நாலு கப்பல்களும் ஜமேய்க்கா  கடற்கரையில் அழிபாட்டுக்கு உள்ளாகின. இப்போது வெறுங்கையோடு தோல்விகளினால் ஏற்பட்ட மன உளைச்சலால் உடல் நலம் கெட்ட நிலையில் நாடு திரும்பி இருந்தார்.

கடல்தளபதி கொலம்பசின் நான்காவதும் கடைசியானதும் ஆன பயணம் இவ்வாறு தோல்வியில் முடிவுற்றது. நீண்ட கால சுகயீனம் அவரது புத்தியைக்கூடப் பேதலிக்க வைத்துவிட்டது. ஒரு விடயத்தில் மட்டும் அவர் உறுதியாக இருந்தார். இசுப்பானிய அரசரும் அரசியாரும் தனக்கு அளித்த வாக்குறுதிகளைக் காப்பாற்றத் தவறிவிட்டார்கள். உயிரோடு நீடித்து இருந்தால் அவர்களிடம் வாதிட்டு நீதி பெற வேண்டும்.  

புதிய உலகத்திற்குக் கொலம்பஸ் அல்லது உறவினர்களை மட்டும் கடல் தளபதிகளாகவும் தேசாதிபதியாகவும் அனுப்ப முன்னர் அரசரும் அரசியாரும் வாக்குறுதி அளித்திருந்தார்கள். ஆனால், மற்றவர்களையும்  அங்கு அனுப்பியதன் மூலம் அந்த வாக்குறுதி மீறப்பட்டு விட்;டது. தங்கம் மற்றும் வாணிகத்தில் கிடைக்கும் இலாபத்தில் கொலம்பசுக்கு ஒரு பங்கு என்ற வாக்குறுதியம் காற்றில் பறக்க விடப்பட்டு விட்டது. ஒரு செல்வந்தனாக இருக்க வேண்டிய  வேளையில் தான் ஒரு ஏழையாக இருப்பதைக் கொலம்பசினால் எளிதில் சீரணிக்க முடியவில்லை.

எனவே கரை சேர்ந்ததும் அரசரையும் அரசியாரையும் போய்ப் பார்க்க விரும்பினார். ஆனால், அவரது  உடல் நிலை அதற்கு இடம் கொடுக்கவில்லை.  

இசுப்பானியா திரும்பி இரண்டு கிழமைகள்கூட ஆகவில்லை. கொலம்பசுக்கு இன்னுமோர் ஏமாற்றச் செய்தி வந்து சேர்ந்தது. அரண்மனையில் அவருக்கு எப்போதும் அன்பும், ஆதரவும் காட்டி வந்த இஸ்பெல்லா அரசியார் இறந்து போனார்.  

கொலம்பஸ் இப்போது படுக்கையில் விழுந்து விட்டார். பெரும்பாலான நேரம் படுக்கையிலேயே கழிந்தது. அரசியாரின் மறைவு அவரது நோயை மேலும் அதிகரித்தது. அரசியாரின் மறைவுக்குப் பின்னர் தனக்கு உதவி செய்வார் யாரும் இல்லை என்ற கையறுநிலை ஏற்பட்டது.  

பெர்டினாந் அரசர் கொலம்பசுக்கு எந்த உதவியையும் செய்ய மறுத்து விட்டார். தனது படுக்கையில் இருந்து கொண்டு கொலம்பஸ் நீதி கேட்டு கடிதங்களுக்கு மேல் கடிதம் அனுப்பிக் கொண்டிருந்தார். ஆனால், அரசர் அசையவில்லை. மாறாக அரசரின் புன்னகை இப்போது முகச் சுளிப்பாக மாறியது. மன்னர் முகம் சுளித்தால் அரண் மனையில் இருப்பவர்களும் அரசரைப் பின்பற்றுவது நடைமுறையாகும்.

       
நண்;பர்கள் இல்லாமல், செல்வாக்கு இல்லாமல், வாய்ப்புக்கள் இல்லாமல் தனிமையில் வாடிய கொலம்பஸ் அரசரை நேரில் சந்தித்துப் பேசினால் தனக்கு நீதி கிடைக்கும் என்று நினைத்தார். நோயினால் படுக்கையில் வீழ்ந்து கிடந்தாலும் அப்படியொரு முயற்சியை மேற்கொள்ள முடிவு செய்தார்.  

நோயின் உபாதையால் தள்ளாடிக் கொண்டு வரும் கொலம்பசை அரண்மனை வாசலில் கண்ட அரசருக்கு அவர்மீது இரக்கம் பிறக்கும் என்றுதான் யாரும் எதிர்பார்ப்பார்கள். ஆனால், அரசர் கிழவன் கொலம்பசோடு அன்பாகப் பேசினாரே ஒழிய அவரது வேண்டுகோளுக்குச் செவி சாய்க்க மறுத்து விட்;டார். மனம் உடைந்துபோன கொலம்பஸ் வேறு வழியில்லாமல் கடவுளின் மீது பாரத்தைப் போட்டுவிட்டு வெறுங்கையோடு வீடு திரும்பினார்.  துன்பங்கள் நேரும் போதெல்லாம் கடவுள் தனக்குக் கை கொடுத்திருக்கிறார், இனிமேலும் கைகொடுப்பார் என்று கொலம்பஸ் தனது மனதைத் தேற்றிக் கொண்டார்.

கடவுள் அவரை ஏமாற்றவில்லை. 1506 ஆம் ஆண்டு மே 20 இல் கடவுள் கொலம்பசின் கவலை, துன்பம், துயரம், அலைச்சல் எல்லாவற்றிற்கும் ஒரு முற்றுப் புள்ளி வைத்தார். வட இசுப்பானியாவின் வல்லதோலிட் (Valladolid in Northern Spain) பட்டினத்தில் இல.7 கொலம்பஸ் அவநியூவில் உள்ள வீட்டில், சில நண்பர்கள் சூழ்ந்திருக்கத் தனது கடைசி உயிலை எழுதிவைத்து விட்டுக் கடல் தளபதி, மேற்கிந்திய நாடுகளின் தேசாதிபதி, புதிய உலகைக் கண்டுபிடித்த கடலோடி கண்ணை மூடினார். அவரது வாய் கடைசியாகச் செபித்த வார்த்தைகள் ஒரு தோத்திரமாகும்.  
“இறைவா! உன்னுடைய கைகளில் என் ஆவியை ஒப்படைக்கிறேன்!” ((Into thy hands, O Lord, I commit my spirit!)  

கொலம்பஸ் இறக்கும்  போது அவருக்கு வயது அறுபது மட்டுமே. ஆனால், அவரைப் பீடித்த நோய், கவலை, ஏமாற்றம் அவரை மிகவும் வயது போன கிழவனாகச் சித்தரித்துக் காட்டியது. 
  

கியூபா பயணக் கட்டுரை (70)
ஒரு பருந்தின் நிழலில்
வரலாற்றின் மறு பக்கம்  

கொலம்பஸ் இறந்தபோது அவர் பிறந்த நாடும் புகுந்த நாடும் உலகமும் அவரை மறந்துவிட்டது. அவரது இறுதி யாத்திரையில் அவரது நெருங்கிய நண்பர்கள் சிலரே கலந்து கொண்டார்கள். இசுப்பானிய அரசர் கடல்தளபதி கொலம்பசின் மறைவைக் கண்டு கொள்ளவே இல்லை. உவல்லதோலிட் நகர மக்கள் நான்கு கிழமைகள் கழித்து “கடல்தளபதி மறைந்து விட்டார்” என்று எழுதி வைத்தார்கள்.

உலகம் இரண்டு நூற்றாண்டுகள் கொலம்பசை மறந்தே போனது. 1697 இல் பிரான்ஸ் இசுப்பானியாவிடம் இருந்து கிஸ்பனியோவாவின் மேற்குப் பகுதியை Ryswick ஒப்பந்தத்தின் கீழ் பிரான்ஸ் பெற்றுக் கொண்டது. இது இன்றைய கெயிட்டி ஆகும். கிழக்குப் பகுதி இன்று டொமினிக்கோ குடியரசு என்று அழைக்கப்படுகிறது.  அப்போது இசுப்பானியா கொலம்பசின் பூதவுடலைக் காப்பாற்ற முடிவு செய்தது.  அதனைத் தோண்டி எடுத்த இசுப்பானியா கியூபாவிற்குக் கொண்டு சென்றது. ஓரு நூற்றாண்டு கழித்து கியூபா சுதந்திரம் அடைந்தபோது அதனை மீண்டும் செவில் (Seville)  என்ற நகரத்து இசுப்பானியர் எடுத்துச் சென்றனர். ஆனால், கதை இத்தோடு முடியவில்லை.

1877 இல்  சாந்தோ டொமிங்கோ தேவாலயத்தை  மறுபுனைவாக்கம் செய்த தொழிலாளர்கள் பலிபீடத்தின் கீழே இருந்த ஒரு பெட்டியில் எலும்புகள் இருக்கக் கண்டார்கள். அப்போதுதான் முன்னர் எடுத்துச் சென்ற எலும்புகள் கொலம்பசின் மகன் டீக்கோவினது (Diego) என்றும் இப்போது எடுத்தது கொலம்பசின் எலும்புகள் என்றும் தெரியவந்தது.

அந்த எலும்புகள் இன்று அவர் தோற்றுவித்த சாந்தோ டொமிங்கோ நகரின் தேவாலயத்தில் ஒரு கண்ணாடிப் பேழையில் வைக்கப்பட்டுள்ளது. எனவே கொலம்பசுக்கு இரண்டு கல்லறைகள் இருப்பதாக வைத்துக் கொள்ளலாம்.  
இரண்டு நூற்றாண்டுகளுக்கு உலகம் கொலம்பசை மறந்தே விட்டது. அதன் பின்னர்தான் பழைய உலகத்தில் குறைந்தது பத்து இடங்களிலும் புதிய உலகில் கணக்கற்ற நினைவுச் சின்னங்கள் மற்றும் சிலைகள் அவர் பெயரால் நிறுவப்பட்டன.   

இன்று வட அமெரிக்காவில் உள்ள குறைந்தது 50 நகரங்கள் மாநிலங்கள் கொலம்பசின் மருவுப் பெயரான கொலம்பியா சூட்டப்பட்டுள்ளது. “அமெரிக்காவைக் கண்டு பிடித்தவர்” (Discoverer of America) என்று கொலம்பஸ் புகழப்பட்டாலும் அமெரிக்கா என்ற பெயர் கொலம்பசின் நண்பர் அமெரிக்கஸ் வெஸ்புசியஸ் (Americus Vespucius)  பெயரால் அழைக்கப்படுகின்றது. அமெரிக்கசும் ஒரு இத்தாலியர். கொலம்பஸ் போலல்லாது அமெரிக்க கரையோரத்தை அதிகளவு கண்டு பிடித்தவர்.

மேலும் கொலம்பசைப் போல் தங்கம், அடிமை  வியாபாரம் என்று அலையாமல் அமெரிக்காவைப் பற்றி நிறையத் தரவுகள் கொண்டு வந்து சேர்த்தவர். அந்தத் தரவுகளின் அடிப்படையில் அய்ரோப்பிய நிலவியலாளர்கள் (Geographers)  அந்த நாட்டின் வரைபடத்தை வரைந்தார்கள். அது சீனா, இந்தியா, யப்பான் போன்ற  நாடு போல் இருக்காததால் அந்தத் தரவுகளைக் கொடுத்த  அமெரிக்கஸ் அவர்களது பெயரையே  நாட்டின் பெயராக வைத்து விட்டார்கள்.  

கொலம்பஸ் நினைவுச் சின்னம்  கொலம்பசுக்கு வாக்குப் பண்ணிய பட்டங்கள், பணம், மற்றும் விருதுகளை அவரது மூத்த மகன் டொன் டியாகோ இசுப்பானிய அரசர் பெர்டினந்திடம் இருந்து போராடிப் பெற்றுக் கொண்டார். டியாகோ கொலம்பஸ் கண்டுபிடித்த ஹெயிட்டியின் தேசாதிபதியாக நியமிக்கப்பட்டார். 

கொலம்பசின் வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கவில்லை. அவர் முதல் பயணத்தை முடித்துக் கொண்டு பாலோஸ் துறைமுகத்தில் இறங்கி பார்சிலோனா நகரத்துக்குச் சென்ற போதுதான் மக்கள் வீதிகளில் நின்று மகிழ்ச்சி ஆரவாரம் செய்து வரவேற்றார்கள். அரசரும் அரசியாரும் அரியாசனத்தில் சரியாசனம் அளித்து கொலம்பசை அரச மரியாதையோடு வரவேற்றார்கள். எஞ்சிய மூன்று பயணங்களும் பெரிய தோல்வியிலும் பாரிய ஏமாற்றத்திலும் முடிந்தன.  

மூன்றாவது பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பியபோது சங்கிலியால் கால் கை பிணைக்கப்பட்டுத் தேசத்துரோகக் குற்றம்சாட்டப்பட்ட  சிறைக் கைதி;யாக கொலம்பஸ் கொண்டு வரப்பட்டார். நான்காவதும் இறுதிப் பயணத்தையும்  முடித்துக் கொண்டு திரும்பியபோது ஊர் பேர் தெரியாத ஒருவராய், தனியனாய், மாலை மரியாதை எதுவுமின்றி, நோயினால் வாடி சாவின் விளிம்பில் நின்று கொண்டிருந்தார்.  

தொடக்க முதல் முடிவுவரை கொலம்பசை எல்லோரும் பிழையாக விளங்கிக் கொண்டார்கள். அவரது எண்ணங்கள் மற்றவர்களுக்குக் கேலியாகப் பட்டன. அவரது முயற்சிகள் அவமதிப்போடு பார்க்கப் பட்டது. அவரது சாதனைகளை மக்கள் நம்ப மறுத்தார்கள். இகழ்ச்சியோடு ஆரம்பமான அவரது வாழ்க்கை புறக்கணிப்பில் முடிவுற்றது. கவனிப்பாரற்ற நிலையில் அவரது இறப்பு ஏற்பட்டது.

ஆண்டுக் கணக்கில் அவரது கண்டுபிடிப்புப் போற்றப்படாமல், கனம் பண்ணப்படாமல் விடப்பட்டது. இன்று அமெரிக்காவைக் கண்டு பிடித்த கொலம்பஸ் என்று போற்றப் பட்டாலும் சாதாரண மக்களுக்கு  அவர் சந்தித்த தடங்கல்கள், அனர்த்தங்கள், அனுபவித்த இடர்ப்பாடுகள், முட்டுப்பாடுகள், வில்லங்கங்கள், அல்லல்கள், கவலைகள் தெரிவதில்லை. 

கொலம்பஸ் சந்தித்த பேரிடர், ஏமாற்றம் இவற்றின் பின்னணியில் மற்றவர்களுக்கு எடுத்துக் காட்டாக விளங்கும் இரண்டு முக்கிய குணாம்சங்கள் பளிச்சிடுகின்றன. ஒன்ற அவரது விடாமுயற்சி. மற்றது அவரது தன்நம்பிக்கை. என்னதான் அனர்த்தங்கள் அல்லல்கள் ஏற்பட்டாலும் இந்த இரண்டையும் கொலம்பஸ் கைவிடாது கெட்டியாகப் பிடித்துக் கொண்டார். 

கொலம்பசின் விடாமுயற்சியும் தன்நம்பிக்கையுந்தான் அவரை அமெரிக்காவைக் கண்டு பிடிக்க வைத்து இன்று கோடிக் கணக்கான வெள்ளை இனத்தவருக்கு ஒரு புதிய தாயகத்தை உருவாக்கிக் கொடுத்துள்ளது. 

கோடிக்கணக்கான மக்கள் இந்த உலகில் பிறக்கிறார்கள், இறக்கிறார்கள் ஆனால், ஒரு சிலரே தங்களது பெயரை வரலாற்றில் பதித்துவிட்டு மறைகிறார்கள். அதில் கொலம் பசும் ஒருவர். 

இன்று கொலம்பஸ் நாள் அமெரிக்காவில் விடுமுறை நாளாகக் கொண்டாடப்படுகிறது. கொலம்பசின் முதல் இரண்டு நூற்றாண்டு நிறைவு நாளை (1592, 1692) யாரும் கண்டு கொள்ளவில்லை. அப்போது மேற்கிந்திய தீவுகளில் இசுப்பானிய குடியேற்றக்காரர்கள், கனடாவில் பிரஞ்சுக்காரர்கள், நியூ இங்கிலாந்து, கறோலினா, மேரிலான்ட், வெர்ஜினியா போன்ற மாநிலங்களில் ஆங்கிலேயர், நியூயோர்க்கில் ஒல்லாந்தர், டெலவெயரில் சுவீடிஷ்காரர்கள் வாழ்ந்தார்கள்.  

இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் இவர்கள் யாவரும் இசுப்பானியர்களை வெறுத்தார்கள். இசுப்பானியர்களும் ஆங்கிலேயரும் குறைந்தது ஒரு நூற்றாண்டு காலமாகத் தங்களுக்குள் கடுமையாகச் சண்டை இட்டுக் கொண்டார்கள். 
1792 இல் கொலம்பஸ் நினைவு நாள் முதன் முறையாகக் கொண்டாடப்பட்டது. அமெரிக்காவில் அல்ல, இங்கிலாந்தில். அதனைச் செய்தவர் எல்கனன் வின்செஸ்தர் (நுடாயயெn றுiஉhநளவநச) என்ற ஒரு கிறித்தவப் பாதிரியார். அவரது காலத்தில் இன்றைய அமெரிக்க ஐக்கிய நாடுகளில் வாழ்ந்தவர்களது எண்ணிக்கை 40 இலட்சம் மக்கள் மட்டுமே! 

1892 இல் அமெரிக்கா ஒரு வலிவு பெற்ற சுதந்திர நாடாக முகிழ்ந்துவிட்டது. கொலம்பஸ் கண்டு பிடித்த அமெரிக்கா கிழக்கில் அத்திலாந்திக் பெருங்கடலும், மேற்கே பசுவிக் பெருங்கடலும் முத்தமிடும் நாடாக விளங்கிற்று. நியூயோர்க், பிலடெல்பியா மற்றும் சிகாகோ பட்டினங்களில் வாழ்ந்தவர்களது தொகை முன்னைய நூற்றாண்;டில் முழு நாட்டிலும் வாழ்ந்த மக்கள் தொகையைவிடக் கூடுதலாக இருந்தது. 1893 இல் சிகாகோ நகரில் கொலம்பசின் நினைவாக ஒரு அருங்காட்சியகம்  வெள்ளைப் பட்டினத்தில் (White City)  மிச்சிக்கன் ஏரிக்கு அருகில், சிகாகோவில் இருந்து 8 மைல் தள்ளி உருவாக்கப்பட்டது.  

வெள்ளைப் பட்டினத்தின் நீளம் ஒன்றரை மைல், அகலம் அரை மைல், பரப்பு 500 ஏக்கர். இரும்பாலும் கண்ணாடியாலும் கட்டப்பட்ட  17 அழகான கட்டிடங்கள். அதனுள் அதுவரை உலகம் காணாத அழகான, பயனுள்ள, அற்புதமான பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. அதனைக் கொலம்பஸ் நேரில் வந்து பார்த்திருந்தால் வியப்பால் மலைத்துப் போயிருப்பார்.  

கொலம்பசின் முதல் பயணத்தின் போது அவரது தண்டயல் அலொன்சோ பின்சொன் (Alonso Pinzon) தெற்கு நோக்கிக் கிளிகளின் சாயலில் பறந்த ஒரு கூட்டம் பறவைகளைப் பார்த்துவிட்டுத் தரை மேற்குத் திசையில் இல்லை தெற்குத் திசையில் இருக்க வேண்டும் என்று அனுமானித்து  மேற்கு நோக்கிப் பயணம் செய்து கொண்டிருந்த சாந்தா மேரியா, பின்தா, நீனா கப்பல்களைத் தென் மேற்குத் திசை நோக்கித் திருப்புமாறு மன்றாட்ட மாகக் கேட்டாரல்லவா? (அத்தியாயம் 44) அப்படிக் கொலம்பஸ்  தனது விருப்பத்திற்கு மாறாக தென்மேற்குத் திசையில் போக மறுத்திருந்தால் அவர்  ஒன்றில் சாவானா துறை முகம் (Savannah Harbour) அல்லது சார்ல்ஸ்ரன்; அல்லது செஸ்சாபீக் குடாவில் (Chesapeake Bay) தரை இறங்கி இருப்பார்.

அப்படித் தரை இறங்கியிருந்தால் இன்றைய ஐக்கிய அமரிக்கா அங்கிலோ சக்ஸ்சன் (Anglo Saxon) மக்களின் குடியேற்ற நாடாக இருப்பதற்குப் பதில் இசுப்பானியரது குடியேற்ற நாடாக இருந்திருக்கும். அதன் வரலாறே முற்றிலும் மாறி இருக்கும். தென் அமெரிக்காவைக் கைப்பற்றிய இசுப்பானியா அதனை வளமான செல்வம் கொழித்த பூமியாக மாற்றவில்லை. அந்தக் கிளிப் பறவைக் கூட்டத்தைப் பார்த்து பின்சொன் கொலம்பசைத் திசை திருப்பியதால் வட அமெரிக்கா கொஞ்சம் காலம் தாழ்த்தித் தங்கப் பாளங்களுக்கு ஆசைப்படாத, ஓரளவு நீதி, நியாயம், நாகரிகம் படைத்த அறிவுள்ள மக்களால் குடியேறப் பட்டது.  

வரலாற்றுக்கு எப்போதும் இரண்டு பக்கங்கள் உண்டு என்கிறார்கள்.  சிலர் வரலாற்றுக்கு மூன்று பக்கங்கள் உண்டென்றும் சொல்கிறார்கள். கொலம்பசின் அமெரிக்கக் கண்டு பிடிப்பு அதற்கு விதிவிலக்கல்ல எனலாம்.  கொலம்பசைப் போற்றுபவர்கள் ஒரு பக்கம், தூற்றுபவர்கள் இரண்டாவது பக்கம், உண்மைகள் (கயஉவள) மூன்றாவது பக்கம்.

புதிய உலகைக் கண்டு பிடித்த துணிவுமிக்க கடலோடி என்று பலர் கொலம்;பசைப் பாராட்டி அவருக்கு விழா எடுக்கிறார்கள். வேறு சிலர் அவரை இட்லரோடு ஒப்பிட்டுப் பேசக் கூடிய ஒரு “கொலையாளி” ஆகப் பார்க்கிறார்கள்.

வரலாறு பொதுவாக வெற்றி பெற்றவர்களால்தான் எழுதப்படுகிறது. அவர்கள் பொய்யை மெய்யாகச் சித்தரித்து விடுகிறார்கள்.  

கொலம்பசின் கண்டுபிடிப்பு  நிலவுடமையை அறிமுகம் செய்து, ஏனைய இனங்களை அழித்து அல்லது அடிமைப்படுத்தி, அடிமை வாணிகத்தைப் பெருப்பித்து, சுற்றுச் சூழலை நாசப்படுத்தி, அமெரிக்காவின் பழங்குடி மக்களின் சமய நம்பிக்கையைத் தகர்த்து, நாகரிகத்தை, பண்பாட்டை அழித்து ஒரு இனக் கொலையை (பநழெஉனைந)  நிறைவேற்றுவதற்கு வழிகோலியது என்று குற்றம் சுமத்தப்படுகிறது.   

கொலம்பஸ் பூர்வீக குடிமக்களைக் கத்தோலிக்க மதத்திற்கு மதமாற்றம் செய்தார். எல்லோரும் கத்தோலிக்க மதத்தவர்களாக மாறவேண்டும் என்று நினைத்ததோடு தனது நாட்குறிப்பில் 1650 ஆம் ஆண்டு உலகம் அழிந்து விடும் என்றும் எழுதி வைத்தார்!  
கொலம்பஸ் முதலில் சந்தித்த  பூர்வீக மக்கள் தைனோஸ் (வுயiழெள) என்ற இனத்தவர் என்பதை முன்னர் கண்டோம். கொலம்பஸ் அவர்களை நாகரிகமற்ற காட்டுச் சாதியினர் என்று எண்ணியதோடு அவ்வாறு எழுதியும் வைத்துள்ளார். பிறந்த மேனியராய் ஆடையின்றித் திரிபவர்கள், வேலைக்காரர்களாக வைத்திருப்பதற்கும் மதமாற்றத்திற்கும் தகுதியானவர்கள் என்பது அவரது கணிப்பீடு. ஆனால், இந்த தைனோஸ் மக்கள்  சிறிய குடிசைகள் கட்டி வாழ்ந்தார்கள், கமம் செய்தார்கள், ஒரு நாளைக்கு மூன்று முறை குளித்துத் தங்கள் உடலைச் சுத்தமாக வைத்திருந்தார்கள். இவை அன்றைய அய்ரோப்பியரிடம் அதிகம் காணப்படாதவை ஆகும்.

பிரே பாத்தொலமே டி லாஸ் காசஸ் (Fray Bartolome de Las Casas) என்ற பாதிரியார் இந்தியத் தீவுகளின் சூறையாடல் (Devastation of the Indies ) என்ற நூலில் கொலம்பசைப்பற்றிப் பின்வருமாறு எழுதுகிறார்,  

“ஒருவன் வாளால்  ஒரு மனிதனை ஒரே வீச்சில் எவ்வளவு விரைவாக இரண்டு துண்டாக வெட்டிச் சாய்க்க முடியும் என்பதுபற்றிப் பந்தயம் வைத்தார்கள். தாய்மாரிடம் இருந்த குழந்தைகளைப்  பறித்துச் சிரிப்பலைகள் மத்தியில் ஆற்றில் வீசினார்கள். கைப்பற்றிய கைதிகளை உயிரோடு கொளுத்தினார்கள். இடையிடையே இந்தியர்களும் இசுப்பானியரைக் கொன்றதால், இசுப்பானியர்கள் தங்களுக்குள் ஒரு எழுதாத விதிமுறையை வைத்துக் கொண்டார்கள். ஒவ்வொரு இசுப்பானியனின் கொலைக்கு விலையாக நூறு இந்தியர்களைக் கொலை செய்வது.” 

பூலோக சுவர்க்கமான கிஸ்பானியோலாவின்  (இன்றைய ஹெயிட்டி) மக்கள் தொகை 1494-96 ஆண்டுகளுக்கு இடையில் மூன்றில் ஒன்றாகக் குறைந்தது. அடுத்த 20 ஆண்டுகளில் இனப்படு கொலையின் விளைவாக மொத்தம் 80 இலட்சம் மக்களில் 28,000 பேரே எஞ்சினார்கள். 

About editor 3087 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply