தமிழ் தேசிய அரசியலில் கொள்கை – ஒரு பகிரங்க சவால்?

தமிழ் தேசிய அரசியலில் கொள்கை – ஒரு பகிரங்க சவால்? – யதீந்திரா

அரசியல் அலசல்

டிசெம்பர் 18, 2022

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கம் காலமாகி 16 வருடங்களாகின்றன. கடந்த 14ம் திகதி, அவரது பதினாறாது நினைவுதினம். அதற்கு முதல் நாள்தான், தேசிய இனப்பிரச்சினை தொடர்பில் ரணில் விக்கிரசிங்கவின் சர்வகட்சி கூட்டம் இடம்பெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பங்குபற்றியமை தொடர்பில் மாறுபட்ட அபிப்பிராயங்கள் நிலவுகின்றன. நிபந்தனையுடன் பேசியிருக்க வேண்டுமென்று ஒரு கருத்து முன்வைக்கப்படுகின்றது. சமஸ்டியை ஏற்றுக்கொண்டால் மட்டுமே சிங்கள தரப்புடன் பேசவேண்டுமென்று, இன்னொரு கருத்து முன்வைக்கப்படுகின்றது. மூன்றாம் தரப்பு இல்லாமல் பேச்சுவார்த்தையில் பங்குகொள்ளக் கூடாதென்று, இன்னொரு பார்வை முன்வைக்கப்படுகின்றது. இவைகள் எவையுமே தவறான கருத்துக்கள் அல்ல. ஏனெனில் சிங்களவர்களோடு பேசிப், பேசி ஏமாந்துபோனதே தமிழர் வரலாறு. ஆனால் இந்த இடத்தில் எழும் கேள்வி இவற்றையெல்லாம் அழுத்திக்கூற, அடம்பிடிக்க, பேரம்பேச, நம்மிடமுள்ள பலம் என்ன ?

ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்திற்கும் விடுதலைப்புலிகள் அமைப்பிற்குமிடையிலான பேச்சுவார்த்தையின் முதல் நாளில், அன்ரன் பாலசிங்கம் கூறுகின்றார். அவரது குரல் மிகவும் கம்பீரமாக ஒலிக்கின்றது. ஆயுதக் களைவு விடயத்தில் சமரசமில்லை. அது எங்களுடைய மக்களின் அதிகாரமாகும். அது தமிழர்களின் பேரம் பேசும் பலம். அது எங்களுடைய மக்களின் பாதுகாப்பிற்கான கருவி. இதற்கு சிறிலங்கா அரசிலிருந்து எந்தவொரு எதிர்ப்பும் வரவில்லை. ஏனெனில் எதிர்க்க முடியாது. எதிர்த்தால் பேச்சுவார்த்தை இடம்பெறாது. உண்மையில் பாலசிங்கம் பேசவில்லை, பிரபாகரனது இராணுவாற்றல் அவரை அவ்வாறு பேசவைத்தது. தமிழர்கள் உச்ச பலத்தோடிருந்த காலத்தில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையது. அது இனிமையான நினைவுகளை தரவல்ல கடந்தகாலம். கடந்த காலம் என்னதான் அற்புதமான உணர்வை தந்தாலும் கூட, நிகழ்காலத்தில் அதற்கு எவ்வித பெறுமதியும் இல்லை. எங்கள் தாத்தாவிற்கு ஒரு யானையிருந்ததென்று, கூறுவதைப் போன்ற ஒன்றுதான் இதுவும். யானை தாத்தாவிடம் இருந்திருக்கலாம் ஆனால் நம்மிடம்?

தமிழ் தேசிய அரசியலை நான்கு கட்டங்களாக பிரிக்கலாம். ஒன்று, செல்வநாயகம் காலகட்டம். இரண்டு விடுதலை இயக்கங்களின் காலகட்டம். மூன்று, விடுதலைப் புலிகள் இயக்கத்தின் காலகட்டம். நான்கு சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் காலகட்டம். இந்த பின்புலத்தில் நோக்கினால், தமிழர்கள் கொழும்மை நிர்பந்திக்கும் பலத்தோடிருந்த காலமாக, இரண்டு காலகட்டங்களைத்தான் குறிப்பிட முடியும். மேற்படி இரண்டு காலகட்டங்களும் தமிழர்கள் ஆயுத பலத்துடனிருந்த காலகட்டங்களாகும்.

அன்று 36 ஆயுத இயக்கங்கங்கள் இருந்ததாக ஒரு பதிவுண்டு. சிலர் இதனை 32 என்றும் பதிவிடுக்கின்றனர். இதனை சிலர் வேடிக்கையாக சொல்வதுண்டு. ஆங்கில எழுத்துக்கள் அனைத்தையும் முன்னுக்கு பின்னாக போட்டுக் கொண்டு உருவாக்கப்பட்ட இயக்கங்கள். ஜந்து இயக்கங்கள் மட்டுமே இதில் பிரதானமாக பேசப்பட்டது. இயக்கங்களின் அன்றைய ஆளணி, சிறிலங்கா இராணுவத்தைவிடவும் மூன்று மடங்கென்று சொல்வார்கள். இந்த இயக்கங்களின் பிரதான இலக்கு என்னவாக இருந்தது? மிதவாதிகளால் அடைய முடியாமல் போன தனிநாட்டை ஆயுத பலம்கொண்டு அடைவதுதான் இவர்களுடைய இலக்காக இருந்தது. இந்த இயக்கங்கள் அனைத்தும் இறுதியில் சிறிலங்காவிற்கு ஒரு பலமான இராணுவத்தைத்தான் உருவாக்கிக் கொடுக்கப் போகின்றன – என்று தங்களுடைய ஆசிரியர் ஒருவர் கூறியதாக ஒரு நண்பர் என்னிடம் கூறினார். இன்று திரும்பிப்பார்த்தால் அப்படித்தான் நடந்திருக்கின்றது.

தமிழர்கள் பலத்துடனிருந்த முதல் காலகட்டமும், இரண்டாவது காலகட்டமும் இயங்கங்களின் காலகட்டம்தான். ஒரு வேறுபாண்டு. அதாவது, முதல் கட்டத்தில் இயங்கங்கள் – இரண்டாவது கட்டத்தில் இயக்கம். இயக்கங்களின் முதல் கட்டத்தில் ஒரு இணக்கப்பாடு ஏற்பட்டு, அதன் விளைவாகவே திம்புப் பேச்சுவார்த்தை இடம்பெற்றது. அதன் பெறுபேறாகவே இந்திய-இலங்கை ஒப்பந்தம் இடம்பெற்றது. மாகாண சபை முறைமை ஒரு தீர்வாக முன்வைக்கப்பட்டது.

விடுதலைப் புலிகளின் இயக்கத்தின் இராணுவ பலத்தின் விளைவாகவே, ஒஸ்லோ பேச்சுவார்த்தை இடம்பெற்றது. ஆனால் இந்த பேச்சுவார்த்தையின் விளைவாக எதனையும் அடைய முடியவில்லை மாறாக, தமிழர்களின் ஒட்டுமொத்த பலமும் அழிக்கப்பட்டது. திம்பு பேச்சுவார்த்தைக்கும், ஒஸ்லோ பேச்சுவார்த்தைக்கும் இடையில் ஒற்றுமையுமுண்டு. அதேவேளை வேற்றுமையுமுண்டு. ஒற்றுமை, இரண்டிலும் மூன்றாம் தரப்பிருந்தது. வேற்றுமை, இந்திய தலையீட்டினதும் நோர்வேயின் தலையீட்டினதும் கனதி முற்றிலும் வேறானது. இந்திய தலையீட்டின் போது, இந்தியா, கொழும்மை நிர்பந்திக்கும் சக்தியாக இருந்தது. ஆனால் ஒஸ்லோ பேச்சுவார்தையின் போது, நோர்வே ஒரு நிர்பந்திக்கும் சக்தியாக இருக்கவில்லை.

சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பிடமிருந்து எதை எதிர்பார்க்கலாம்? ஏற்கனவே தோல்வியடைந்த மிதவாதிகளால் புதிதாக எதைச் செய்ய முடியும்? இந்தக் கேள்விகளிலிருந்துதான், 2009இற்கு பினனரான அரசியலை மதிப்பிட வேண்டும். மிதவாதிகளால் எதனையுமே கையாள முடியாமல் போனதால்தான், ஆயுத இயக்கங்கள் தோற்றம்பெற்றன. இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை ஆதரித்த அமிர்தலிங்கம், மாகாண சபை தேர்தலில் போட்டியிட மறுத்தார். இந்தப் பின்புலத்தில்தான், விடுதலை இயக்கங்கங்களில் ஒன்றான, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி அந்த இடத்தை நிரப்பியது. அதாவது, மாகாண சபைக்கு வடிவம் கொடுப்பதற்கும் ஒரு இயக்கம்தான் தேவைப்பட்டது. இவ்வாறானதொரு பின்புலத்தில், இன்றுள்ள அரசியல் கட்சிகளால் கொழும்மை நிர்பந்திப்பதற்கு என்ன செய்ய முடியும்?

இந்தக் கேள்வியிலிருந்துதான், நாம், இன்றைய சூழலை மதிப்பிட வேண்டு;ம். விமர்சிக்க வேண்டும். கோபப்பட வேண்டும். குற்றச்சாட்டுக்களை முன்வைக்க வேண்டும். நடக்க முடியாத ஒருவரைப் பார்த்து ஏன் நீங்கள் நடக்கவில்லையென்று கேட்கலாமா? இன்றுள்ள சூழலில் பேச்சுவார்த்தையை எவ்வாறு கையாளலாமென்று கூறுகின்ற போது, இந்த அரசியல் யதார்த்தத்தை நாம் மறந்துவிடக் கூடாது. 2009இற்கு பின்னரான சூழலில், கொழும்மை நிர்பந்திக்கும் பலத்தை தமிழர்கள் முற்றிலும் இழந்துவிட்டனர். இந்தச் சூழலில் போரின் இறுதிக் காலத்தில் இடம்பெற்றதாக நம்பப்படும் மனித உரிமை மீறல்களையே ஒரு துருப்புச் சீட்டாக நாம் கையாண்டு வருகின்றோம் ஆனால் அதிலும் ஒரு பிரச்சினையுண்டு. கடந்த 13வருடங்களாக பொறுப்பு கூறல் விடயத்தை கொழும்பு ஏதோவொரு வகையில் இழுத்தடித்தே வருகின்றது. கொழும்பால் இவ்வாறு இழுத்தடிக்க முடிகின்றதென்றால், இங்கு கொழும்பு மட்;டும் பிரச்சினையில்லை – மாறாக, அவ்வாறானதொரு வாய்ப்பு சர்வதேச பொறிமுறையில் இருக்கின்றது என்பதையே நாம் உற்றுநோக்க வேண்டும்.

இந்த பின்புலத்தில் நோக்கினால். உள்நாட்டில் பலமில்லை. பிராந்திய சக்தியான இந்தியாவின் நிலைப்பாடு இந்திய – இலங்கை ஒப்பந்தத்துடன் மட்டுப்பட்டிருக்கின்றது. அமெரிக்காவின் கரிசனையோ, மனித உரிமைகள் விவகாரத்தை தாண்டி அசைவதாக இல்லை – அரசியல் தீர்வு தொடர்பில் அவர்கள் இதுவரை உச்சரித்ததில்லை. ஜ.நா மனித உரிமைகள் பேரவையின் அழுத்தங்கள் நமது எதிர்பார்ப்புக்களை சிறியளவில் கூட, பூர்த்திசெய்யவில்லை. இந்த நிலையில் என்ன செய்ய முடியும்? கொழும்பிற்கு நிபந்தனை வைக்கலாம். சமஸ்டியை பகிரங்கமாக அறிவித்தால்தான், நாங்கள் பேச்சுவார்த்தைக்கு வருவோமென்று உரத்து பேசலாம் – ஆனால், அதற்காக அவர்களை எவ்வாறு நிர்பந்திப்பது?

இந்த இடத்தில் தமிழர்கள் என்னதான் செய்வது? நாம் எப்போது மீளவும் பலம் பெறுவோம்? எப்போது முன்னைய கம்பீரத்துடன் பேசச் செல்வோம்? எந்த ஆய்வாளரிடம், எந்த புத்திஜீவிடம், எந்த சிவில் சமூகத்திடம் இதற்கு பதிலுண்டு. புலம்பெயர் அமைப்புக்களிடம் பதிலிருக்கின்றதா?

ஓரு மொங்கோலிய கூற்றுண்டு. அதாவது, குதிரை கிடைக்கும் வரையில் கழுதையை ஓட்டுங்கள். இப்போது அந்தக் கழுதை எதுவென்பதில்தானே நமக்குள் விவாதங்கள் இடம்பெறுகின்றன. இப்போது, 13 என்னும் எண்ணை உச்சிரித்தாலே, மகா பாவம் என்பது போல் சிலர் சிலிர்த்துக் கொள்கின்றனர். அனைவரையும் நோக்கி இந்தக் கட்டுரையாளர் ஒரு கேள்வியை முன்வைக்கின்றார். மனச்சாட்சிப்படி பதில் கூறுங்கள். கடந்த 73 வருடகால தமிழ் தேசிய அரசியல் பயணத்தின் போது, நாம் கொள்கை வழியில் மட்டும்தான் பயணித்திருக்கின்றோமா? நாம் கொள்கை தவறியதேயில்லையா? சூழ்நிலைகருதி சிந்தித்ததில்லையா – செயற்பட்டதில்லையா?

சமஸ்டிக் கோரிக்கை முன்வைத்த செல்வநாயகம் எந்த அடிப்படையில் பண்டா-செல்வா, டட்லி-செல்வா உடன்பாடுகளுக்கு சென்றார். தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைத்த தமிழர் விடுதலைக் கூட்டணியினர் எந்த அடிப்படையில் மாவட்ட சபைக்கு இறங்கினர்? எந்த தமிழ் தேசிய கொள்கையின் அடிப்படையில், தமிழரசு கட்சி, 1965இல், டட்லி சேனநாயக்க தலைமையிலான, ஜக்கிய தேசியக் கட்சியின் தேசிய அரசாங்கத்தில்; அங்கம் வகித்து, அமைச்சரவையிலும் பங்குகொண்டது? ஜம்பதிற்கு ஜம்பது கோரிய ஜி.ஜி.பொன்னம்பலம், டி.எஸ்.சேனநாயக்க தலைமையிலான ஜக்கிய தேசியக் கட்சியில் அமைச்சராக இருந்த கதையை மறக்க முடியுமா? இவைகள் அனைத்தும் எந்த தமிழ் தேசிய கொள்கையின் அடிப்படையில் இடம்பெற்றன? இவற்றுக்கு பதில் என்ன? இவற்றுக்கான பதில் தந்திரோபாயமென்றால் – ஏன் இருக்கின்ற ஒரேயொரு துருப்புச் சீட்டான மாகாண சபையை உச்சபட்டசமாக பயன்படுத்திக் கொள்ளக் கூடாது? அது ஏன் ஒரு தந்திரோபாயமாக இருக்க முடியாது? இல்லை! – இது பச்சைத் துரோகமென்றால், முன்னர் இடம்பெற்றவைகளையும் பச்சைத் துரோகமென்று அறிவிக்கும் துனிவுண்டா? இன்று சூழ்நிலை கருதி, தந்திரோபாயமாக சில விடயங்களை முன்னெடுப்பது தவறென்றால், தமிழினத்தின் முதல் துரோகி எஸ்.ஜே.வி.செல்வநாயகமாகத்தானே இருக்க முடியும்? அதற்கு முன்னர் பச்சைத் துரோகமிழைத்தவர் (கஜன் பொன்னம்பலத்தின் பாட்டன்) ஜி.ஜி.பொன்னம்பலமல்லவா?

இயக்கங்களின் வரலாறு என்ன? எந்த இயக்கம் எதிரியென்று கூறப்பட்டவர்களோடு தேவைகருதி ஊடாடாத இயக்கம். இந்திய அமைதிப் படைகளால் முற்றிலுமாக அழிக்கப்பட்;டுவிடுவோமென்னும் சூழலில்தான், அதிலிருந்து, தப்பித்துக் கொள்வதற்காக, விடுதலைப் புலிகள் பிரேமதாசவோடு உடன்பாட்டை ஏற்படுத்திக்கொண்டனர். 2000இல், அன்ரன் பாலசிங்கம், இந்திய ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணலில் இதனை பச்சையாக போட்டுடைத்திருந்தார். இந்திய அமைதிப்படை வடக்கு கிழக்கு முழுவதையும் கட்டுப்பாட்டுக் கொண்டுவந்திருந்தது. இந்த நிலையில், முழுமையான அழிவிலிருந்து தப்பித்துக் கொள்ளும் நோக்கில்தான், பிரேமதாசவோடு புரித்துணர்வு ஏற்படுத்திக்கொள்ளப்பட்டது. பின்னர் இந்தியாவின் தேவையை உணர்ந்து, பாலசிங்கம் இந்தியாவை நோக்கித் திரும்பினார்.

(When we entered into negotiations with President Premadasa, we were on the brink of destruction. The IPKF had taken over the entire north and east and the LTTE and Prabhakaran were fighting for survival. So we entered into an understanding with Premadasa to escape from total annihilation. )

ஒரு வீழ்சியை எதிர்கொள்ளும் போது, தந்திரேபாயமாக செயற்பட முடியும் – அந்த தந்திரேபாயத்திற்காக எந்தவொரு எல்லைக்கும் செல்லலாமென்பதுதானே இதன் பொருள்! இதில் எங்கிருக்கின்றது கொள்கை? எனவே தந்திரேபாயத்தை கொள்கையோடு இணைத்து குழம்பிக்கொள்ள வேண்டியதில்லை என்பதுதானே விடயம். இந்த பின்புலத்தில் சிந்தித்தால், கடந்த 73 வருடகால தமிழ் தேசிய அரசியலில் கொள்கை வழியை மட்டுமே முன்னிறுத்தி சிந்தித்த – கட்சிகளும் இல்லை, இயங்கங்களும் இல்லை. சூழ்நிலை கருதிய முடிவுகளுக்கு எவருமே தங்கவில்லையென்பதுதான் வரலாறு. இப்போது புதிதாக தமிழ்-தேசிய வகுப்பெடுப்போர், இந்த அடிப்படையில் விவாதிப்பதற்கு தயாராக இருக்கின்றீர்களா? விவாதிப்போமா? இந்தக் கட்டுரை துனிவுள்ளவர்களை அழைக்கின்றது.

நாம் ஒவ்வொரு விடயங்களை உச்சரிக்கின்ற போதும், நாம் – நமக்குள் கேட்டுக்கொள்ள வேண்டிய அரிவரிக் கேள்வி – நாம் கூறும் விடயத்தை எவ்வாறு அடையப் போகின்றோம்? அதற்கான பலத்தை எவ்வாறு திரட்டிக்கொள்ளப் போகின்றோம்? அதனை எங்களால் திரட்டிக்கொள்ள முடியுமா? விடுதலைப் புலிகள் இராணுவநிலையில் பலமாக இருந்த காலத்தில் கூட, நிலைமைகள் பாரதூரமாவதை உணர்ந்த பாலசிங்கம், இந்தியாவை நோக்கித் திரும்பினார். உண்மையில் பாலசிங்கத்தை இன்று நினைவு கூறுவோர் எவருமே – அவரது இறுதிக்கால நகர்வுகள் தொடர்பில் பேசுவதில்லை. பலத்தோடு இருந்த காலத்திலேயே ஒரு கட்டத்திற்குமேல் எதனையும் முன்னெடுக்க முடியவில்லை. பேச்சுவார்த்தையிலிருந்து பிரபாகரன் வெளியேறிய பின்னர், நிலைமைகள் மிகவும் வேகமாக அவருக்கு எதிராகத் திரும்பியது. ஒரு கட்டத்தில் அனைத்துமே கைமீறியது. விடுதலைப் புலிகள் பலத்தோடு இருக்கின்ற காலத்திலேயே எதிர்கொள்ள முடியாத விடயங்களை, இன்று எந்தவிதமான பலமுமில்லாத சூழலில் எவ்வாறு நம்மால் முன்னெடுக்க முடியும்?

அதற்காக இந்தக் கட்டுரை இலக்கை கைவிடுமாறு வாதிடவில்லை. மாறாக, இருப்பதை பாதுகாத்துக் கொண்டு. எடுப்பதை எடுத்துக் கொண்டு, முன்னேறுவோமென்றே வாதிடுகின்றது. நம் கனவுகளை சேமித்துவைப்போம். மீண்டும் பலம்பெறும் காலமொன்று வரும்போது, அந்தச் சேமிப்பை கவனமாகப் பயன்படுத்துவோம். வரலாறு முழுவதிலும் – இவ்வாறுதான் வீழ்ந்த சமூகங்கள், எழுந்திருக்கின்றன.

http://www.samakalam.com/தமிழ்-தேசிய-அரசியலில்-கொ/

About editor 3017 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply