நல்வாழ்வுக்கான, தற்சார்பான மற்றும் தன்னம்பிக்கையான வாழ்க்கை மாற்றங்கள் நோக்கி ஈகை அறக்கட்டளை

நல்வாழ்வுக்கான,  தற்சார்பான மற்றும் தன்னம்பிக்கையான வாழ்க்கை மாற்றங்கள் நோக்கி  ஈகை அறக்கட்டளை

நக்கீரன்

நேற்று ஈகை அறக்கட்டளை (Eekai Foundation) நடத்திய நிதி சேகரிப்புக்காக நடத்திய இரவு விருந்தில் கலந்து கொண்டேன். இடம் J J Swagat Banquet Hall, Markham.

இப்படியான ஒரு நிதிசேர் நிகழ்ச்சியை நடத்துவது இதுவே முதல்தடவை. தோரயமாக 150 பேர் கலந்து கொண்டார்கள். முதன்மை விருந்தினராக வழக்கறிஞர் மல்லிகா வில்சன் (பேராசிரியர் ஏ ஜே வில்சன் அவர்களுடைய மகள். தந்தை செல்வநாயகம் அவர்களின் பேத்தி) அழைக்கப்பட்டிருந்தார்.

இந்த நிகழ்ச்சியில் கோவிட் காலத்தில் (2020 இல்)  தொடங்கப்பட்ட வள்ளுவம் தொண்டு நிறுவனமும் ஒரு பங்காளியாகக் கலந்து கொண்டது.

ஈகை அறக்கட்டளை முழுமையாக வெளிப்படையான, மத சார்பற்ற, அரசியல் சார்பற்ற கனடிய இலாப நோக்கற்ற அமைப்பாக இருக்கும்.

வடக்கு மற்றும் கிழக்கு இலங்கையில் போர் மற்றும் இயற்கை பேரழிவுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் கனடாவில் உள்ள இளைஞர்களுக்கும் அதிகாரம் அளித்தல். இலங்கையிலும் கனடாவிலும் தங்கள் சமூகத்திற்கு உதவுவதில் ஆர்வமுள்ள தமிழ் கனடியர்களின் வலுவான வலையமைப்பை உருவாக்குதல் நோக்கமாகும்.

திருவள்ளுவரின் திருக்குறள் ஒன்று அதன் இணையதளத்தில் பதியப்பட்டுள்ளது.

வறியார்க்கொன்று ஈவதே ஈகை
மற்றெல்லாம் குறியெதிர்ப்பை நீர துடைத்து. (குறள் 221)

இல்லாதவர்க்கு வழங்குவதே ஈகைப் பண்பாகும் மற்றவர்களுக்கு வழங்குவது என்பது ஏதோ ஓர் ஆதாயத்தை எதிர்பார்த்து வழங்கப்படுவதாகும்.​

​To give to the destitute is true charity
All other gifts have the nature of  a measured return. (Kural 221)

To give to the destitute is true charity All other gifts have the nature of a measured return.

இந்த அறக்கட்டளைக்கு இந்த ஆண்டு சனவரி மாதத்தில் தொண்டு நிறுவனம் என்ற தகைமையை (Charitable status) கனடா வருவாய்த்துறை முகாமை வழங்கியிருந்தது. இது இலகுவில் கிடைக்கக் கூடிய சலுகை அல்ல. சட்ட அடிப்படையில் போராடிப் பெற்ற சலுகை.

இந்த தொண்டு நிறுவனத்தின் பார்வை (Vision)

 ஒன்றிணைந்து பகிர்ந்து கொள்ளுங்கள்
Unite and share

இந்த தொண்டு அறக்கட்டளையின் பணி (Mission)
நல்வாழ்வுக்கான, தற்சார்பான மற்றும் தன்னம்பிக்கையான வாழ்க்கை மாற்றங்கள்.

Healthy, Independent & Self-Reliant Life Changes

ஈகை அறக்கட்டளையின் தலைவர் குடும்ப மருத்துவர் வடிவேல் சாந்தகுமார். இவர் பலரும் அறிந்த மருத்துவர் மற்றும் சமூகப்பற்றாளர். மக்கள் தொண்டே மகேசுவரன் தொண்டு என்று நினைப்பவர். அதன் செயலாளர் சண்முகம் சதானந்தன், பொருளாளர் நிரஞ்சன் நடராசா. மேலதிகமாக 13 பேர் இயக்குநர் அவையில் இருக்கிறார்கள். அதில் பல பெண்கள் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

தமிழ் மக்களால் தொடங்கப்பட்ட தமிழ்த் தொலைக்காட்சியின் உரிமை சிஎம்ஆர் வானொலி நிறுவனத்துக்கு கைமாறிய போது கிடைத்த வருவாயைக் கொண்டு ஈகை அறக்கட்டளை 2019  இல் தொடங்கப்பட்டது. 7 ஆண்டுகளில் 10 இலட்சம் கனடிய டொலர் கொடுக்கப்பட வேண்டும் என்பதுதான் உடன்படிக்கை. இதில் 40 விழுக்காடு இதுவரை கிடைத்துள்ளது. இந்த நிதியைக் கொண்டு ஈகை அறக்கட்டளை தாயகத்தில் இருக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் திட்டங்களை செய்து வருகிறது.

சங்க காலத்தில் கள் அருந்தி புலால் உண்டு மறத்தையும் கொடையையும் போற்றிய தமிழ்மக்கள் சங்கம் மருவிய காலத்தில் ( 3 – 6 ஆம் நூற்றாண்டு) அறத்துக்கு முன்னுரிமை கொடுத்தார்கள். இதற்கு சமணம் மற்றும் பவுத்தம் இரண்டின் வருகை முக்கிய காரணிகளாகும். அது தொடர்பான நூல்களைத் தொகுத்து பதிணென் கீழ்க்கணக்கு நூல்கள் எனப்பெயரிட்டனர். இதில் பன்னிரண்டு நூல்களிலே பதினொரு நூல்கள் அறம், பொருள், இன்பம் என்னும் முப்பொருள்களைப் பற்றி உரைப்பன. இப்பதினொரு நூல்களிலே தலைசிறந்தது முப்பால். அதாவது திருக்குறள். இதற்கு அடுத்தபடியாக நாலடியும் பழமொழியும் சிறந்தன ஆகும். இவை உயர்ந்த அறங்களை எடுத்துரைக்கின்றன.

நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம்
இல்லெனினும் ஈதலே நன்று. (குறள் 222)

பிறரிடமிருந்து நல்வழியில் பொருளைப் பெற்றாலும் அது பெருமையல்ல; சிறுமையே ஆகும் கொடை வழங்குவதால் மேலுலகம் என்று சொல்லப்படுவது கிட்டிவிடப் போவதில்லை; எனினும் பிறர்க்குக் கொடுத்து வாழ்வதே சிறந்த வாழ்க்கையாகும்.

ஆனால் இன்று பலர் அர்ச்சனை, அபிசேகம்,  தேர், தீர்த்தம், திருவிழாக்கள் செய்வதுதான் அறம் என நினைக்கிறார்கள். அவற்றுக்கு தங்கள் நேரத்தையும், நினைப்பையும், பொருளையும் செலவழிக்கிறார்கள். சாதாரணமாக ஒறுப்பாக வாழும் தமிழ்க் குடும்பங்கள் திருமணம், பூப்பெய்தல், பிறந்த நாள் கொண்டாட்டங்கள் போன்ற சடங்குகளுக்கு, பெயர், புகழுக்காக  தங்கள் ஆற்றலுக்கு மேலாக செலவழிக்கிறார்கள்.

கோயில் வழிபாடுகளையும் சடங்குகளையும் தமிழ்ச் சித்தர்கள் கடுமையாகக் கண்டித்துள்ளார்கள்.  திருமூலர் அருளிய தமிழாகமம் திருமந்திரம். ‘திரு’ என்ற சொல்லின் பொருள் ‘இறைவன்’; இறைவனை அடைய கைகொடுக்கும் ‘மந்திரம்’ என்பதால் ‘திருமந்திரம்’ எனப் பெயர்பெற்றது.  சைவ சமய அறுபத்துமூன்று நாயன்மார்களில் ஒருவர்.  திருமூலர் அருளிய திருமந்திரம் பத்தாம் திருமுறையாக வைக்கப்பட்டுள்ளது. காலத்தால் கிபி.6 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். சித்தர்களுக்குத் சித்தரான திருமூலர்  அன்பும் சிவமும் வேறல்ல. இரண்டும் ஒன்றுதான் என உபதேசித்தவர்.

ஏழையின் வயிற்றுக்குச் சோறிட்டால் இறைவனுக்கு அது சேரும் என்கிறார் திருமூலர்.

கோயிலில் ஓவியமாக வரைந்து வைக்கப்பட்ட இறைவனின் திருவுருவத்தின் முன்னர் நீ படைக்கும் படையல், நடமாடும் கோயில்களான ஊன்-உடல்களில் வாழும் நம் இறைவனுக்கு ஒருபோதும் சென்று சேருவதில்லை. ஆனால், நடமாடும் கோயில்களான ஏழை மனிதர்களின் ஊன்-உடல்களில் வாழும் நம் இறைவனுக்கு நீ ஒன்று கொடுத்தாய் என்றால், அது கோயிலில் வரைந்து வைக்கப்பட்ட பகவானிடம் உடனே சென்று சேர்ந்துவிடும்!” என்று அருளினார்.

படமாடக் கோயில் பகவற்கு ஒன்று ஈயின்
நடமாடக் கோயில் நம்பர்க்கு ஆங்கு ஆகா
நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில்
படமாடக் கோயில் பகவற்கு அது ஆமே – திருமந்திரம்

அவருக்குப் பின்னர் வந்த சித்தர்கள் அறம் செய்வதை வற்புறுத்தினார்கள். இறைவனைப் புறத்தே தேடாது அகத்தே தேடுமாறு சொன்னார்கள்.

அறத்தைப்பற்றிச் சொல்ல வந்த மணிமேகலை காப்பியம் –

ஆற்றுநர்க்கு அளிப்போர் அறவிலை பகர்வோர்
ஆற்றா மாக்கள் அரும்பசி களைவோர்
உலகின் மெய்ந்நெறி வாழ்க்கை
மண்திணி ஞாலத்து வாழ்வோர்க்கு எல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே
உயிர்க்கொடை பூண்ட உரவோய் ஆகிக்
கயக்குஅறு நல்அறம் கண்டனை என்றலும்,

துன்பத்தைத் தாங்கிக்கொண்டிருப்பவர்களுக்கு உதவுபவர், அறச் செயலை விலைக்கு விற்போர், துன்பத்தைத் தாங்க முடியாமல் வருந்துவோர் – யாராய் இருந்தாலும் அவர்களின் பசியைப் போக்குபவர் உலகில் மெய்ந்நெறி வாழ்க்கை வாழ்பவராகப் போற்றப்படுவர். உலகில் வாழ்பவர் யாராய் இருந்தாலும் அவர்களுக்கு உணவு கொடுத்தவரே உயிர் கொடுத்தவராக மதிக்கத் தக்கவர். மணிமேகலை! உயிர்க்கொடை வழங்கும் பேறு பெற்றவளே! நீ குற்றமற்ற நல்லறம் பூண்டு வாழும் வாழ்க்ககையைக் காணப்போகிறாய் என  தீவதிலகை வாயிலாக சீத்தலைச் சாத்தனார் தான் எழுதிய பவுத்த காப்பியமான மணிமேகலையில்  இடித்துரைக்கிறார்.

முப்பது ஆண்டுகளாக நடந்த யுத்தத்தில்  பாதிக்கப்பட்ட அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை கட்டியெழுப்ப புலம்பெயர் தமிழர்கள் தவறிவிட்டார்கள். இலங்கை ஒட்டாண்டியாகிப் போன பின்னர் அந்த மக்களின் வாழ்வாதாரம் அதல பாதாளத்தில் வீழ்ந்துவிட்டது. ஈகை போன்ற தொண்டு நிறுவனங்கள் வழங்கும் நிதியுதவி மிகச் சிறிய மாற்றத்தைத்தான் ஏற்படுத்த முடியும்.

போன தலைமுறையோடு தமிழ்மொழி பாவனை தொலைந்துவிட்டது என்பதற்கு இந்த இரவு விருந்து நிகழ்ச்சி நல்ல எடுத்துக்காட்டாகும். 99 விழுக்காடு தமிழர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் 99 விழுக்காடு ஆங்கிலத்தில் இடம் பெற்றது. அடுத்த தலைமுறையோடு தமிழ் கனடா போன்ற நாடுகளில் மெல்லச் செத்துவிடும்.

தமிழ்மொழி வாழ்த்துப் பாடுவது ஒரு சடங்காக மட்டுமே நடைபெறுகிறது. அதன் பொருளை யாரும் சிந்தித்துப் பார்ப்பதில்லை.

வரவேற்பு நடனமும் பாரதியாரின் பாடலுக்கான அபிநயமும்  இரசிக்கும் படியாகவும் நேர்த்தியாகவும்  இருந்தது.

ஈகை அறக்கட்டளையின் செயலாளர் சண்முகம் சதானந்தன்  எல்லோருக்கும் நன்றி கூறினார். சற்று தாமதமாக  தொடங்கினாலும்  மாலை 9.00 மணிக்கு நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டது பாராட்டத்தக்கது.

Contact –  Eekai.org
 Phone: +1 416 613 9112
 Fax: +1 416 613 9114
 ​​


 

About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply