முதலாம் இராஜராஜ சோழன்
இது சோழ அரசன் பற்றிய கட்டுரை. பொன்னியின் செல்வன் புதினக் கதாநாயகன் பற்றிய கட்டுரைக்கு அருள்மொழிவர்மன் ஐப் பார்க்க.
முதலாம் இராஜராஜ சோழன் | |
---|---|
இராசகேசரி வர்மன்[1][2] மும்முடிச்சோழன், சிவபாதரசேகரன், சோழ நாராயணன், கேரளாந்தகன், சிங்களாந்தகன், பாண்டிய குலசனி, அழகிய சோழன், செயங்கொண்டான், திருமுறை கண்ட சோழன் | |
தஞ்சாவூரில் உள்ள இராசராச சோழனின் சிலை. | |
ஆட்சிக்காலம் | அண். 985 – அண். 1014 |
முன்னையவர் | உத்தம சோழன் |
பின்னையவர் | இராசேந்திர சோழன் |
பிறப்பு | அருள்மொழிவர்மன் சு. பொ.ஊ. 947 (தஞ்சாவூர்) |
இறப்பு | 1014 (அகவை 66–67) |
குடும்பம்உறுப்பினர் | இராசேந்திர சோழன்குந்தவைமாதேவடிகள் |
அரசமரபு | சோழர் |
தந்தை | சுந்தர சோழன் |
தாய் | வானவன்மகாதேவியார் |
மதம் | சைவம், வைணவம் |
அருமொழிவர்மன் அல்லது அருண்மொழிவர்மன் என்கின்ற பேரரசர் இராசகேசரி வர்மன் முதலாம் இராசராச சோழன் சோழ பேரரசின் புகழ் பெற்ற மன்னர்களுள் ஒருவனாவார். ‘சோழ மரபினரின் பொற்காலம்’ என்று போற்றத்தக்க வகையில் ஆட்சி செய்த இம்மன்னனின் ஆட்சிக்காலம் பொ.ஊ. 985 முதல் பொ.ஊ. 1014 வரையாகும். இவர் மகன் முதலாம் இராசேந்திரன் காலத்தில் சோழநாடு கடல் கடந்து பரவிய பெருமைக்கு அடிகோலியதும் இம்மன்னனே. இராசராச சோழனின் முப்பதாண்டு ஆட்சிக்காலமே சோழப் பேரரசின் வரலாற்றில் மிக முக்கியமாக விளங்கியது. ஆட்சி முறை, இராணுவம், நுண்கலை, கட்டிடக்கலை, சமயம், இலக்கியம் ஆகிய பல்வேறு துறைகளில் புதிய எழுச்சியைக் கண்ட சோழப்பேரரசின் கொள்கைகள் இவருடைய ஆட்சியில் உருப்பெற்றவையே.
இவர் பொ.ஊ. 957 முதல் பொ.ஊ. 973 வரை சோழ நாட்டை ஆண்ட சுந்தர சோழனுடைய இரண்டாவது மகனாவார். சுந்தர சோழனுக்கும் சேர நாட்டு வானவன் மாதேவிக்கும் ஐப்பசி திங்கள் சதய நன்னாளில் பிறந்த இவரது இயற்பெயர் “அருண்மொழிவர்மன்”. இராசகேசரி அருண்மொழிவர்மன் என்ற பெயராலேயே தன் ஆட்சியின் தொடக்க காலத்தில் இம்மன்னர் அழைக்கப்பட்டார். இவர் ஆட்சியின் 3ம் ஆண்டு முதலே இராசராச சோழன் எனப்பட்டார் (988) தந்தை இறந்ததும் இவர் உடனடியாகப் பதவிக்கு வரவில்லை. 15 வருடகால உத்தம சோழனின் ஆட்சிக்குப் பின்னரே இவர் செத்திரிய முறைபடி ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். இராசராசசோழன் தன்னை அரசர்களுக்கு எல்லாம் அரசன் (சத்திரிய சிகாமணி) என்று புனைபெயர் கொண்டு வாழ்ந்தார். விசயாலய சோழன் நிறுவிய சோழ அரசு இவர் காலத்திலும் இவர் மகன் இராசேந்திர சோழன் காலத்திலும் மிக உயர்நிலை எய்தியது. இராசராசனின் காலம் பிற்காலச் சோழர் வரலாற்றில் மட்டுமன்றித் தென்னிந்திய வரலாற்றிலேயே ஒரு பொற்காலமாகும்.
புகழ் பெற்ற இளவரசன்
தஞ்சைப் பெருவுடையார் கோயிலில் உள்ள கல்வெட்டு
முதலாம் பராந்தக சோழன் இறந்ததற்கும் முதலாம் இராசராச சோழன் அரியணை ஏறுவதற்கும் இடையேயுள்ள காலப்பகுதி, முப்பது ஆண்டுகளைக் கொண்ட குறுகிய காலப்பகுதியாகும். ஆயினும் அது சோழ வரலாற்றின் மிகக் கடுமையான பகுதியாகும். அப்பகுதிக்கான ஆதாரங்கள், குழப்பமாகவே உள்ளன.
இரண்டாம் ஆதித்தன் கொலை
முதலாம் இராசராசன் ஆட்சியில் சோழப் பேரரசு
இராசகேசரி இரண்டாம் ஆண்டு கல்வெட்டு மூலம், இரண்டாம் ஆதித்தன் ஒரு சதியின் மூலம் இப்போதைய கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் வட்டத்தில் தற்போது மேலக்கடம்பூர் என்று அழைக்கப்படும் ஊரில் கொலை செய்யப்பட்டான் என்பது தெரியவருகிறது. இக்கல்வெட்டு ‘பாண்டியன் தலைகொண்ட கரிகாலச் சோழனை’ கொலை செய்த குற்றத்திற்காகச் சிலருடைய சொத்துக்களை பறிமுதல் செய்து, விற்கும் பணியினை மன்னனின் கட்டளைப்படி சதுர் வேத மங்கலச் சபை மேற்கொண்டதாக தெரிவிக்கிறது. இந்த இராசகேசரி கல்வெட்டு, சுந்தர சோழனுக்கும், ஆதித்தனின் தம்பியும் உத்தம சோழனுக்குப் பின் பட்டத்திற்கு வந்தவனான இராசராச சோழனுக்கும் பொருந்தும். இரண்டாம் ஆதித்தனின் கல்வெட்டுகள் 5 ஆம் ஆண்டு வரை கிடைத்திருப்பதாலும், ஆதித்தன் தன் தந்தைக்கு முன்பே ஆட்சி செய்ததாகக் கூற முடியாததாலும் இக்கல்வெட்டு இராசராச சோழனுடையது என்பது தெளிவாகிறது. உத்தம சோழன் ஆட்சி செலுத்திய பதினாறு ஆண்டுகளில் இரண்டாம் ஆதித்தனைக் கொலை செய்தவர்கள் பழிவாங்கப்படவில்லை என்பதும் இதன் மூலம் தெளிவாகிறது.
குடும்ப வாழ்வில் ஏற்பட்ட பேரிழப்பால், சுந்தர சோழன் தன் இறுதி நாட்களில் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தான். மகனை இழந்த சுந்தர சோழன், தன் மகனைக் கொன்றவர்களைத் தண்டிக்க இயலாதவாறு செய்யப்பட்ட சூழ்ச்சிகளைக் கண்டு மனம் வருந்தி இறந்தான்.[3]
உத்தம சோழனுக்கு இக்கொலையில் தொடர்பு இல்லையென்று சொல்வதற்கில்லை, உத்தமச் சோழனுக்கு அரியணை ஏறவேண்டும் என்ற ஆசையிருந்தது. மன்னர் பதவி தவிர, அதற்குக் கீழ்ப்பட்ட எப்பதவியையும் அவன் ஏற்க விரும்பவில்லை. அரச குடும்பத்தின் மூத்த கிளையினன் என்ற காரணத்தால் அரியணை தனக்கே என்று அவன் கருதினான். தனக்கு ஆதரவாக ஆட்களைத் திரட்டி, இரண்டாம் ஆதித்தனைக் கொன்று, தன்னை இளவரசனாக்குமாறு சுந்தர சோழனை வற்புறுத்தினான். வேறுவழியின்றி சுந்தர சோழன் இதற்கு சம்மதித்தான் என்றும் திருவாலங்காட்டுப் பட்டயங்களிலும் உடையார்குடிக் கல்வெட்டிலும் உள்ள குறிப்புகளை இணைத்துப் பார்க்கும் பொழுது புலனாகிறது.[3]
திருவாலங்காட்டுச் செப்பேடுகள்,
விண்ணுலகுக்குச் செல்ல வேண்டும் என்ற ஆசையால் ஆதித்தன் மறைந்தான் (காணாமற் போனான்) கலியின் வல்லமையால் ஏற்பட்ட காரிருளைப் போக்க, அருள்மொழிவர்மனை அரசனாகுமாறு அவனுடைய குடிமக்கள் வேண்டினர். ஆனால் செத்திரிய தருமத்தை நன்கு அறிந்த அருண்மொழி அரசப்பதவியை விரும்பவில்லை என்று கூறிவிட்டான். தன்னுடைய சிற்றப்பன் அவ்வரசப் பதவியை விரும்புவதை உணர்ந்தமையால் தன் சிற்றப்பன் ஆசை தீருமட்டும் அரசனாக இருக்கட்டும் என்று அருண்மொழி வர்மன் அரசப்பதவியை மறுத்துவிட்டான்.
இதை, அருண்மொழி வர்மனின் அடக்கத்தால், உத்தம சோழனின் பேராசை வெற்றிகண்டது. அருண்மொழியை, கோழை, அரசியல் திறமை இல்லாதவன், சட்டப்படி உரிமை இல்லாதவன் என்றெல்லாம் சொல்லிவிடமுடியாது. உள்நாட்டுக் குழப்பம் ஏற்பட்டுவிடக்கூடாது என்ற ஒரே காரணத்திற்காக, அவன் உத்தம சோழனுக்கு அரியணையை விட்டுக் கொடுத்து, அவன் காலத்திற்குப் பிறகு, தான் பட்டத்திற்கு வருவதற்காக பொறுமையுடன் இசைந்தான் என்று கொள்ளலாம். மேலும், அருண்மொழியின் உடலில் காணப்பட்ட சில அடையாளங்களைப் பார்த்த பொழுது, மூவுலகையும் காக்கும் ஆற்றல் படைத்த திருமாலே, பூஉலகுக்கு வந்திருப்பதாக நினைத்து, மதுராந்தகன் அவனை இளவரசனாக்கி மண்ணுலகை ஆளும் பொறுப்பைத் தானே மேற்கொண்டான் என்றும் தெரிவிக்கின்றன.
சோழர்களின் மெய்க்கீர்த்திகள்
பிறருக்குத் தானங்களை வழங்கிய பொழுது அவ்வறச் செயல்களை, தரும சாத்திரங்களைத் தழுவி செப்பேடுகளில் பொறித்து உரியவர்க்கு அளித்து வந்தனர். இச்செப்பேடுகளில் தம் முன்னோர் வரலாறுகளை முதலில் எழுதுவித்தனர். தன் ஆட்சியில் நிகழ்ந்த வரலாற்று உண்மைகளை அதிகாரப் பூர்வமாகத் தெரிவித்து நன்கு விளக்கும் மெய்க்கீர்த்திகளை இனிய தமிழ் அகவற்பாவில் தன் கல்வெட்டுகளின் தொடக்கத்தில் பொறிக்கும் வழக்கத்தை உண்டாக்கியவன் இராசராச சோழனே. இவருக்குப் பிறகு இவர் வழி வந்த சோழ மன்னர்கள் அனைவரும் இந்தப் பழக்கத்தைப் பின்பற்றினர். இவர் மகன் முதலாம் இராசேந்திரனின் ஆட்சித் தொடக்கத்தில் குறைந்த அளவிளான மெய்க்கீர்த்தி, நாளடைவில் விரிந்து அவ்வப்போது நடைபெற்ற நிகழ்ச்சிகளையும் தன்னுள் சேர்த்துக் கொண்டது. சோழர் கல்வெட்டுக்களில் காணப்படும் இத்தகைய வரலாற்று முன்னுரைகள், ஒவ்வொரு மன்னனுடைய ஆட்சிக் காலத்திலும் நடைபெற்ற நிகழ்ச்சிகளை அறியவும், கல்வெட்டுகள் எந்தெந்த மன்னர்களுடையவை என்பதை அறியவும் பெரிதும் உதவுகின்றன.
இராசராசனின் மெய்க்கீர்த்திகள்
சில அரசர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட மெய்க் கீர்த்திகளை உடையவராக இருந்தனர். முதலாம் இராசராசன் மூன்று வித மெய்க்கீர்த்திகளை கையாண்டாலும் ‘திருமகள் போல’ என்று தொடங்கும் மெய்க்கீர்த்தியையே எட்டாம் ஆண்டிலிருந்து பெரும் அளவில் பயன்படுத்தப்பட்டது. இவ்வகை மெய்க்கீர்த்தி இவரது ஆட்சியில் நடைபெற்ற முதற்போரைக் குறிக்கும் வகையில், ‘காந்தளூர்ச்சாலை கலமறுத்த’ என்ற பட்டத்தைக் குறிப்பிடுகிறது.
கீழ்வருவது இராசராச சோழனின் மெய்க்கீர்த்திகளில் ஒன்று.
“ஸ்வஸ்திஸ்ரீ் திருமகள் போல பெருநிலச் செல்வியுந் தனக்கேயுரிமை பூண்டமை மனக்கொளக் காந்தளூர்ச் சாலைக் களமறூத்தருளி வேங்கை நாடும் கங்கைபாடியும் நுளம்பபாடியும் தடிகை பாடியும் குடமலை நாடும் கொல்லமும் கலிங்கமும் எண்டிசை புகழ்தர ஈழ மண்டலமும் இரட்டபாடி ஏழரை இலக்கமும் திண்டிறல் வென்றி தண்டால் கொண்டதன் பொழில் வளர் ஊழியுள் எல்லா யாண்டிலும் தொழுதகை விளங்கும் யாண்டே செழிஞரை தேசுகொள் ஸ்ரீ்கோவிராஜராஜகேசரி பந்மரான ஸ்ரீராஜராஜ தேவர்.”
இரண்டாம் வகையான மெய்க்கீர்த்தியிலும் காந்தளூர்ச்சாலை வெற்றிக்கே முதலிடம் அளிக்கப்பட்டுள்ளது. இவரது 20ஆம் ஆண்டைச் சேர்ந்த மூன்றாம் வகை மெய்க்கீர்த்தியில் இராசராசன் மதுரையை அழித்தார் என்றும். கொல்லம், கொல்ல தேசம், கொடுங்கோளூர் ஆகிய நாட்டு மன்னர்களை வெற்றி கொண்டார் என்றும் கடல் கடந்த பகுதிகளின் மன்னர்கள் அவருடைய பரிவாரமாகப் பணிபுரிந்தனர் என்றும் கூறுகிறது.
மேலும் இவன் காலத்திலேயே வட்டெழுத்துக்கள் தமிழ் எழுத்துக்களாக மாற்றியமைக்கப்பட்டன.[4]
போர்கள்
கேரளப் போர்
இராசராசன் தன் ஆட்சியின் தொடக்கத்திலேயே மும்முடிச் சோழன் என்ற பட்டம் பெற்றான். இவன் ஆட்சிக் காலத்தில் முதற்போர் கேரள நாட்டுடன் நடந்தது, இப்போரின் விளைவைப் பற்றி இம்மன்னனது நான்காம் ஆண்டு முதலாகக் கல்வெட்டுக்களில் காணப்படும், ‘காந்தளூர்ச் சாலை கலமறுத்த’ என்ற பட்டத்தால் விளக்கப்பட்டுள்ளது. இப்பட்டம் இராசராசனின் நான்காம் ஆண்டு கல்வெட்டிலேயே காணப்பட்டாலும், எட்டாம் ஆண்டிற்கு முற்பட்ட கல்வெட்டுகள் கேரளத்திலும், பாண்டிய நாட்டிலும் காணப்படவில்லை என்பதால் வெற்றி கொண்ட பகுதியைத் தன் நேரடி ஆட்சியின் கீழ்க் கொண்டுவர சில ஆண்டுகள் பிடித்திருக்கலாம் என்று தெரிகிறது.
இம்மன்னனின் வெற்றி பற்றித் தெளிவாகக் கூறும் திருவாலங்காட்டுப் பட்டயங்கள், இவன் முதன் முதலில் தென் திசையிலேயே தன் வெற்றியை நிலை நாட்டினான் என்று கூறுகிறது. பாண்டிய மன்னன் அமர புயங்கனை சிறைபிடித்தான் என்று கூறும் இக்குறிப்பு, ‘சூரிய வம்சத்தின் ஒளிவிளக்கான இந்த தண்டநாதன் பிறகு விழிஞம் என்னும் தவிர்க்க முடியாத கடற்கோட்டையைப் பிடித்தான். வெற்றித் தெய்வத்தின் நிலையான இருப்பிடம் என்று சொல்லத்தக்க சிறப்புடையது அக்கோட்டை. பாண்டிய, கேரள சிங்கள நாடுகளை தென்னாட்டு அரசுகள் மூன்றும் இணைந்திருந்து. இராசராசன் ஆட்சியிலும் இக்கூட்டணி செயல்பட்டது. இம்மன்னனின் தென் திசைப் போரில் பாண்டியர், சேரர் இருவரையுமே எதிர்க்க வேண்டியிருந்தது. அப்போது சேர மன்னனாக இருந்தவன் பாசுகர ரவிவர்மன் திருவடி (பொ.ஊ. 978–1036). இம்மன்னனின் கல்வெட்டுகள் திருவாங்கூரின் பல்வேறு பகுதிகளில் காணப்படுகின்றன.
மலைநாடு
பொ.ஊ. 1008ம் ஆண்டுக்கு முன் மேற்கொள்ளப்பட்ட இப்படையெடுப்பின் பொழுது உதகைக் கோட்டையைத் தாக்கி கைப்பற்றியது முக்கியமான நிகழ்ச்சியாகும். மேற்கு மலைப் பகுதியான மலைநாடு அல்லது குடமலைநாடு இப்போதைய குடகு நாடாகும். உதகைக் கோட்டை குடகின் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையிலோ அல்லது சிறிது தென் திசையிலோ இருந்ததாகக் கொள்ளலாம்.
இம்மன்னனின் ஆட்சியைப் பற்றி கூறும் கலிங்கத்துப் பரணி உதகையைக் கைப்பற்றியதை மட்டுமே குறிப்பிட்டுள்ளது. சேர நாட்டில் தான் பிறந்த சதய நாள் விழாவைத் தொடக்கி வைத்தான் என்றும் இராசராசனுடைய தூதுவன் அவமதிக்கப்பட்டதால் அந்தப் பழியைத் தீர்க்கும் வகையில் பதினெட்டு காடுகளை இவன் கடந்து சென்று உதகையைத் தீயிட்டு அழித்தான் என்றும் மேலும் இது இராசராச சோழனின் பெரும் சாதனை என்றும் ஒட்டக்கூத்தர் தமது மூன்று உலாக்களிலும் கூறுகிறார்.
உதகை கோட்டை எனப்படுவது இப்போது தென்குமரி நாட்டில் உள்ள உதயகிரி கோட்டை. இங்கே சோழர் தளபதியாக இருந்த இராசேந்திரசோழன் இரணியசிங்கநல்லூர் தலைமையாக்கி வேணாட்டை ஆண்ட பாசுகர ரவிவர்மனால் சிறைப்பிடிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தான். இதனால் கோபம்கொண்ட இராசராசசோழன் பெரும்படையுடன் வந்து வேணாட்டை வென்றான். உதயகிரியை அழித்தான். சேரநாட்டு அதர்வ வேதபாடசாலைகளை அழித்தான். இதையே காந்தளூர்சாலை கலமறுத்தல் என்று தன் மெய்கீர்த்திகளிலில் குறிப்பிடுகிறான். இத்தகவல்களை கே கே பிள்ளை அவர்கள் அவரது தென்னிந்திய வரலாறு நூலில் சொல்கிறார். கவிமணி தேசிகவினாயகம்பிள்ளை காந்தளூர்ச்சாலை பற்றி எழுதிய விரிவான ஆய்வுக்கட்டுரையும் இதைப்பற்றி பேசுகிறது
ஈழப் போர்
முதலாம் இராசராச சோழன் கால பொன் நாணயம், இலங்கை
ஈழம்
இராசராசனால் வென்று கைப்பற்றப்பட்ட நாடுகளுள் ஈழமும் ஒன்று என்பதை இம்மன்னனது ‘திருமகள் போல’ என்று தொடங்கும் பொ.ஊ. 993ம் ஆண்டு மெய்க்கீர்த்தியால் அறியலாம். ‘கொடுமை மிக்க சிங்களர்கள் வசமிருந்த ஈழ மண்டலத்தை இம்மன்னன் கைப்பறியதன் மூலம், இவனது புகழ் எண் திசைகளிலும் பரவியது’, ‘தஞ்சையில் இராசராச சோழன் எடுப்பித்த சிறந்த கோயிலுக்கு ஈழத்தின் பல கிராமங்களை இவனுடைய 29ம் ஆண்டில் தானமாக அளித்தான்’ என்றும் ஈழப்படையெடுப்பைப் பற்றி திருவாலங்காட்டுப் பட்டயங்கள் சிறப்பாகக் குறிப்பிடுகின்றன.
இப்படையெடுப்பின் பொழுது ஈழ மண்டலத்தில் ஆட்சி புரிந்து கொண்டிருந்தவன், பொ.ஊ. 981ம் ஆண்டில் பட்டம் பெற்ற ஐந்தாம் மகிந்தன் என்பவனாவான். முதலாம் இராசேந்திரனின் தலைமையில் சோழப்படை சென்ற பொழுது இம்மன்னனே ஆட்சியில் இருந்தான். ஆனால் இராசராசனின் இப்படையெடுப்பைப் பற்றி மகாவமிசம் குறிப்பிடவில்லை. ‘மகிந்தன் ஆட்சியில் பத்தாம் ஆண்டிற்குப் பிறகு (பொ.ஊ. 991) ஓர் இராணுவப் புரட்சி ஏற்பட்டு அதன் விளைவாகப் பெரும் குழப்பம் விளைந்தது; கேரள கன்னட வீரர்களின் செல்வாக்கு இவன் நாடு முழுவதும் பரவியதே இந்த குறைபாட்டிற்கு காரணமாக இருக்கலாம். இராணுவ புரட்சியின் விளைவாய் மகிந்தன், ஈழ மண்டலத்தின் தென் கிழக்கிலுள்ள ரோகண நாட்டிற்கு தப்பி ஓடிவிட்டான். இதனால் ஈழ மண்டலத்தின் வடபகுதியை இராசராசன் எளிதில் கைப்பற்றி மும்முடிச் சோழ மண்டலம் என்று அதற்குப் பெயரிட்டான்.’ என்று கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.
இராசராச சோழனின் சுவர் ஓவியம் தஞ்சைப் பெருவுடையார் கோவிலில் கிடைத்தது.[5]
ஈழப் படையெடுப்பின் விளைவுகள்
சோழப்படையெடுப்பு ஈழநாட்டில் ஒரு நிலையான விளைவை ஏற்படுத்தியது, ஓராயிரம் ஆண்டிற்கு மேலாக ஈழத்தின் தலைநகராக விளங்கிய அநுராதபுரம் இப்போரில் சோழரால் அழிக்கப்பட்டது. இந்நகரில் இராணுவ காவல் நிலையமாக விளங்கிய பொலன்னறுவை சோழரது புதிய தலைநகராக்கப்பட்டது. இராசராச சோழனுக்கு முன்னர் ஈழத்தின் மீது படையெடுத்துச் சென்ற தமிழ் அரசர்களில் தாட்டியன் என்னும் பாண்டிய வேந்தன் தவிர மற்றவர்கள் அதன் வடபகுதியை மட்டும் கைப்பற்றுவதையே தங்கள் குறிக்கோளாகக் கொண்டிருந்தனர். ஆனால் இராசராச சோழன் ஈழ மண்டலம் முழுமையையும் கைப்பற்றித் தன் ஆட்சிக்குட்பட்டதாக எண்ணியதால் பழைய தலைநகரை விடுத்து புதிய தலைநகரை அமைத்துக் கொண்டான். ஆனால் இவனின் மகனான இராசேந்திரச் சோழன் காலத்திலேயே ஈழத்தின் தென்பகுதி தாட்டியனுக்குப் பிறகு இரண்டாவது முறையாக தமிழர்களுக்குக் கீழ் வந்தது. பிற்காலத்தில் சிங்கள வேந்தனாகிய முதலாம் விசயபாகு, அனுராதபுரத்தில் முடிசூட்டப் பெற்றான் என்றாலும் பொலன்னறுவையைத் தொடர்ந்து தன் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்தான்.
ஈழத்தில் சோழக் கோயில்கள்
இராசராசனின் கல்வெட்டுகள் பல, ஈழத்தில் உள்ளன. ஈழத்தைச் சோழர் கைப்பற்றியதைக் கொண்டாடும் வகையில் பொலன்னறுவையில் இராசராசன் சிவனுக்கு ஒரு கற்றளி எடுப்பித்தான். பொலன்னறுவை நகரின் சுவர்களுக்குள் அமைந்துள்ள இந்த அழகிய சிவாலயம் ஈழ நாட்டில் காணப்படும் புராதனச் சின்னங்களில் இன்றளவும் நன்கு பாதுகாக்கப்பட்டுள்ளது. இதன் கட்டட அமைப்பைக் காணும் பொழுது இது பொ.ஊ. 10 மூதல் 12ம் நூற்றாண்டுகளுக்குள்ளேயே கட்டப்பட்ட சோழர்காலத்துக் கோயில்கள் போன்றே (தஞ்சை பெரிய கோயில் இவ்வகைக் கோயில்களில் மிகவும் சிறந்தது) அமைந்துள்ளது.
பிற வெற்றிகள்
கங்கர்களின் கங்கபாடியும், நுளம்பர்களின் நுளம்பபாடியும் சில வேளைகளில் தடிகை வழி என்றழைக்கப்பட்ட தடிகைபாடியும் இராசராச சோழனின் ஆட்சியில் சோழநாட்டுடன் இணைக்கப்பட்டன. இராசராசனின் காந்தளூர்ச் சாலை வெற்றியைத் தொடர்ந்து, கீழைச் சாளுக்கியரை எதிர்த்து வேங்கி நாட்டிற்குள் படையெடுப்பதற்கு முன்னர் மைசூர் நாடு கைப்பற்றப்பட்டதாக கல்வெட்டுகளில் காணப்படும் மெய்க்கீர்த்தியில் இருந்து அறிய முடிகிறது. பின்னர் கொங்கு நாட்டிலிருந்து காவிரி ஆற்றைக் கடந்து தடிகைபாடியையும் தலைக்காட்டையும் முதலில் தாக்கிய பொழுது சோழருக்கு பெரும் வெற்றி கிட்டியது. மேலும் அடுத்த ஒரு நூற்றாண்டிற்கும் மேலாக கங்க நாட்டின் மீதான ஆதிக்கமும் சோழருக்குக் கிடைத்தது.
மேலைச் சாளுக்கியர்
மேலைச் சாளுக்கியர் இராசராசன் தலைமையில் ஏற்பட்ட சோழப்படையெடுப்பை உதாசீனம் செய்யவில்லை. பொ.ஊ. 922ம் ஆண்டுக் கல்வெட்டு ஒன்றில் இரண்டாம் தைலப்பன் சோழ மன்னனுக்கு எதிராக ஒரு வெற்றி பெற்றதாகவும் அவனிடமிருந்து 150 யானைகளைக் கைப்பற்றியதாகவும் கூறுகிறான். (சில வரலாற்று ஆசிரியர்களின் கூற்றுபடி பொ.ஊ. 922ல் இந்தப் போர் நடைபெற்றதாகக் கருதப்படுகிறது ஆனால் இதை உண்மையென்று நிரூபிக்கும் ஆதாரங்கள் இல்லை. இராசராச சோழனின் கல்வெட்டுக்களின் படி சாளுக்கியர் மீதான படையெடுப்புக்கள் எதுவும் பொ.ஊ. 994 ஆண்டிற்கு முன் எதுவும் நடக்கவில்லை என்று தெரியவருகிறது.)
சத்தியாசிரயனுடன் போர்
922ம் ஆண்டிற்குப் பிறகு சில ஆண்டுகளில் இரண்டாம் தைலப்பன் இறந்தான். அதன் பின்னர் அவனுடைய மகன் சத்தியாசிரயன் சாளுக்கிய மன்னனானான். சத்தியாசிரயனை எதிர்த்துப் போர் புரிந்து வெற்றியடைந்து, அவனிடமிருந்த செல்வத்தில் ஒரு பங்கைத் தஞ்சை பெரிய கோயிலுக்கு என்று இராசராசன் ஆட்சியின் பிற்பாதிக் கல்வெட்டுகளில் காணப்படுகிறது. மாளவ நாட்டு பாரமாரர் இதே சமயம் சாளுக்கியர்களை வடக்கிலிருந்து தாக்கினர். மேலைச் சாளுக்கியர் இருபெரும் பகைவரை ஒரே நேரத்தில் எதிர்த்துப் போரிட்டுச் சமாளிக்க முடியாமல் திணறினர். ஏறக்குறைய பொ.ஊ. 1003ம் ஆண்டைச் சேர்ந்த இராசராச சோழனின் கல்வெட்டுகள் இச்சோழமன்னன் ‘இரட்டப்பாடி’ ஏழரை இலட்சம் என்ற நாட்டைப் படையெடுத்து அதைக் கைப்பற்றினான் என்று கூறுகின்றன. ஆனால் இக்கூற்று மிகைப்படுத்தப்பட்டதாகும். சத்தியாசிரயன் இராசராசனது கடல் போன்ற பெரும்படையைக் கண்டு அஞ்சிப் போர்க்களத்தை விட்டு ஓடிவிட்டான் என்று திருவாலங்காட்டுச் செப்பேடுகள் சொல்வது நம்பக்கூடியதாயுள்ளது.[6]
இராசேந்திரன் தலைமை
தார்வார் மாவட்டம் ஒட்டூரில் பொ.ஊ. 1007ம் ஆண்டைச் சேர்ந்த(929) சத்தியாசிரயனின் கல்வெட்டு ஒன்று, சோழ குலத்திற்கு அணியாக விளங்கியவனும் இராசராச நித்தியாவிநோதனின் மகனுமாகிய, நூர்மடிச் சோழ இராசேந்திர வித்தியாதரன் என்பவன், ஒன்பது நூறாயிரம் வீரர்கள் அடங்கிய பெரும்படையுடன் பீச்சப்பூர் மாவட்டத்திலுள்ள தோனூர் வரையில் வந்து, பெரும்போர் புரிந்து நாட்டைச் சூறையாடிப் பாழ்படுத்தியும் நகரங்களைக் கொளுத்தியும், இளங்குழவிகள், அந்தணர் என்றும் பாராமல் அவர்களைக் கொன்றும், கன்னியரைக் கைப்பற்றி மனைவியராக்கியும், அந்தச் சாதியை அழித்தும் அளவற்ற பொருள்களைக் கவர்ந்து கொண்டு தன்நாட்டுக்குத் திரும்பிச் சென்றான் என்று இக்கல்வெட்டு கூறுகிறது. இதன் பிறகு சத்தியாசிரயன் சோழரை விரட்டியடித்து, அவரிடமிருந்து தன் பொருள் வாகனத்தை மீட்டு தென் பகுதியையும் கைப்பற்றினான் என்று இதே கல்வெட்டு மேலும் கூறுகிறது. பகைவனின் கல்வெட்டுகளில் காணப்படும் நாச வேலைகளையும் கற்பழிப்புக்களையும் சோழ இளவரசன் செய்திருக்கக்கூடுமா என்ற வினா எழுந்தாலும் இராசேந்திரன் மேலைச் சாளுக்கிய நாட்டின் மீது படையெடுத்துச் சென்று இரட்டபாடியை வென்றான் என்ற செய்தி உறுதிப்படுத்தப்படுகிறது.
சாளுக்கியப் போரின் விளைவுகள்
சோழர்களின் வடமேற்குப் படையெடுப்பின் மூலம் மைசூரில் கங்கர்களும் நுளம்பர்களும் ஆண்ட பகுதிகளோடு ஏறக்குறைய இப்போதையை பெல்லாரி மாவட்டம் முழுவதும் சோழ நாட்டுடன் இணைக்கப்பட்டது. இராசராசனின் கல்வெட்டோ அல்லது இக்காலச் சாளுக்கிய மன்னரது கல்வெட்டுக்களோ பெல்லாரியில் இதுவரை அகப்படவில்லை. ஆனால் பொதுவாக, சோழ நாட்டின் தூரப் பகுதிகளில் அவர்களுடைய கல்வெட்டுகள் பெரிதும் காணப்படுவதில்லை. கங்கை, வேங்கி மண்டலங்களுக்கென்றே ஒரு மாதண்ட நாயகனை இராசராசன் தன் ஆட்சியின் இறுதியில் அமர்த்தியிருந்தான் என்பதே இவ்விரு மண்டலங்களும் ஒன்றோடொன்று இணைந்திருந்ததோடு சோழநாட்டுடன் சேர்ந்திருந்தன என்பதற்கும் போதுமான சான்றாகும்.[7]
வேங்கி
இராசராச சோழன் ஆட்சியின் தொடக்கத்தில் ஏற்பட்ட அரசியலின் தொடர்ச்சியாக, அவன் வேங்கி விவகாரங்களில் தலையிட வேண்டியதாயிற்று, கீழைச் சாளுக்கியரை அவர் தம் தாயாதியினரான மேலைச் சாளுக்கியரிடமிருந்து பிரித்துவிட வேண்டுமென்ற அரச தந்திரத்தின் அடிப்படையில் இத்தலையீடு இருந்தது. சோழ ஏகாதிபத்தியக் கொள்கையின் அடிப்படையிலேயே இராசராசனும் அவனுடைய சந்ததியினரும் தங்கள் வலிமையைத் துங்கபத்திரை ஆற்றின் கிழக்குக் கரையோரத்தில் பரவச் செய்ய முடிந்ததே தவிர, அவ்வாற்றின் மறுபக்கத்தில் தம் வலிமையைப் பரவ செய்ய முடியவில்லை. கீழைச் சாளுக்கியர், மேலைச் சாளுக்கியருக்கிடையேயான வேறுபட்ட நிலைகளே இதற்குக் காரணமாகும்.
வேங்கியை ஆட்சி செய்த காலத்தில், கீழைச் சாளுக்கியர்கள் மேலைத் தக்காண இராட்டிரகூடர்களுடன் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து போரிட்டதன் விளைவாக வலியிழந்து, சோர்வுற்றதோடு உள்நாட்டுக் குழப்பத்திற்கும் பலியாயினர். சோழரின் வரவினால் கீழைச் சாளுக்கிய மன்னர் குடும்பம் உற்சாகம் பெற்று அடுத்து நூறு ஆண்டுகள் சோழரது அதிகாரத்திற்குற்பட்ட நண்பர்களாய்த் திகழ்ந்து, அதன் பின்னர் முதலாம் குலோத்துங்க சோழன் காலத்திலும் அவனது சந்ததியினரான சோழ சாளுக்கியர் என்றழைக்கப்பட்டவரின் காலத்திலும் சோழநாடும் மேம்படும் வகையில் உதவிபுரிந்து தங்கள் நன்றிக் கடனைத் தீர்த்தனர்.
மேலைச் சாளுக்கியரோ பல நூற்றாண்டுகளாக இராட்டிரகூடர்களின் அடிமைகளாக இருந்து அப்போது தான் இரண்டாம் தைலப்பனின் தலைமையில் தன்னுரிமையை நிலைநாட்டித் தனிநாடாக உருவெடுத்து மிகவும் உற்சாகத்துடன் காணப்பட்டனர். சத்தியாசிரயனின் செப்ரோலு கல்வெட்டு கூறுவது போல, கீழைச் சாளுக்கியரின் வலிமையையும் தம்முடன் இணையச் செய்யும் முயற்சியையும் இவர்கள் மேற்கொண்டனர். ஆனால் வடக்கில் பாராமாரர்களும் தெற்கே சோழர்களும் இவர்களை ஒரே வேளையில் தாக்கியதால் தம் முன்னோரது ஆட்சியில் இருந்த இரட்டப்பாடி ஏழரை இலட்சம் பகுதியை இழக்காமல் பாதுகாப்பதைத் தவிர வேறு முயற்சிகளில் இவர்களால் ஈடுபடமுடியவில்லை. வேறு நாடுகளைத் தம் கீழ்க் கொண்டுவரும் முயற்சிக்கு இவர்களுக்கு நேரம் கிடைக்காததோடு, உற்சாகமும் இல்லாமல் போயிற்று. இந்நிலைக்கு விஞ்ஞான ரீதியாக விளக்கம் கூறமுடியாது என்றாலும் பொதுவாக எந்த அரச வமிசத்திலும் முதல் மன்னர்களே சிறந்த ஆட்சியாளர்களாய் விளங்கினாலும் இத்தகைய அரச வமிசங்கள் தொடர்ந்து சில தலைமுறைகள் சிறந்து விளங்குகின்றன.
வடக்கில் சோழர் ஆட்சி பரவுதல்
முதல் பராந்தகன் ஆட்சியில் சோழநாடு வடக்கே நெல்லூர் வரையில் பரவியிருந்தது. இராட்டிரகூடரின் படையெடுப்பின் பொழுது வடபகுதிகளை இழக்க நேரிட்டது. பின்னர் முதலாம் பராந்தகனின் வழி வந்தோரால் ஒரு சில பகுதிகள் மட்டுமே மீட்கப்பட்டன. இவர்கள் காலத்தில் சென்னைக்கு அருகேயுள்ள திருவொற்றியூர் உட்பட்டிருந்த வடபகுதி அனைத்தையும் மீட்கும் பொருட்டு இராசராசன் தன் ஆட்சியின் தொடக்கத்திலேயே ஒரு படையை வடக்கு நோக்கிச் செலுத்தினான்.
வேங்கிப் போர்
கீழைச் சாளுக்கியரின் இன்னல்கள் பொ.ஊ. 945–970 காலத்தில் ஆட்சி செய்த இரண்டாம் அம்மன் காலத்தில் தொடங்கின இவ்வின்னல்களுக்குப் பேராசை கொண்ட இராட்டிரகூட மன்னன் மூன்றாம் கிருட்டிணனுக்கும் கீழைச் சாளுக்கியரின் இளைய குடும்பத்தினருக்கும் இடையே ஏற்பட்ட பூசல்களே காரணம்.
பொ.ஊ. 945ம் ஆண்டில் தன் ஒன்றுவிட்ட அண்ணனைப் புறக்கணித்துவிட்டு, இரண்டாம் அம்மன் அரியணையைப் பெற்றான். இளையவன் வழிவந்தவர்களான பாடபனும் இரண்டாம் தாழனும் ஆட்சியைக் கைப்பற்ற தகுந்த சந்தர்ப்பத்திற்காகக் காத்திருந்தனர். முதலாம் பராந்தகச் சோழனை வென்ற இராட்டிரகூட மன்னன் மூன்றாம் கிருட்டிணன், வேங்கி நாட்டின் மீதும் தன் கவனத்தைச் செலுத்தினான். கீழைச் சாளுக்கிய இளவரசர்களுக்கிடையே உண்டான உட்பகைகள் இம்மன்னனுக்குச் சாதகம் ஆயின. இரண்டாம் அம்மன் பேடகல்லு மன்னனான செடாசோட வீமனின் சகோதரியை மணந்தான். இக்காலத்தில் புகழ்பெற்று நிலவிய வீமன் தன் மைத்துனனுக்குப் பெரிதும் உதவிபுரிந்தான்.
இரண்டாம் அம்மனின் ஆட்சி இருபத்தைந்து ஆண்டுகள் அதாவது 970 வரை நிலவினாலும், இது நிலையற்றதாகவே இருந்தது. இம்மன்னன் அரியணை ஏறிய பொழுது இரண்டாம் யுத்தமல்லன் என்பவனோடு போரிட்டு வெற்றியடைந்தான். ஆனால் யுத்தமல்லனின் தோல்வி, அவனது புதல்வர்களான பாடபனாலும் இரண்டாம் தாழனாலும் பழிவாங்கப்பட்டது. வேங்கி நாட்டிலிருந்த சிலர், மற்றும் இராட்டிரகூட மன்னன் கிருட்டிணன் உதவியுடன் இரண்டாம் அம்மனை நாட்டை விட்டே விரட்டி, அவனது அரியணையையும் கைப்பற்றினர்.
பாடபன், தாழன் ஆகியோரது செப்புப் பட்டயங்களில் கூறப்பட்டுள்ள கிருட்டிணனின் உதவி, இவர்களுக்கு இச்சமயங்களில் கிடைத்திருக்க வேண்டும். ஆனால் சில ஆண்டுகளுக்குப் பிறகு கலிங்கத்திற்கு ஓடிவிட்ட அம்மன், கொலனு நாட்டுத் தலைவனான நிருபகாமாவின் உதவியுடன் நாடு திரும்பி 955க்கு முன்னர் தாழனது ஆட்சியை முடித்தான். கொலனுத் தலைவனின் மகளை மணந்த அம்மன், தாழனுடன் செய்த போரில் தாழனைக் கொன்றான். இது அம்மன் தன் தாயாதியான ஒரு மன்னனை விண்ணுலகத்திற்கு அனுப்பினான் என்று சக்திவர்மனுடைய படிப்பற்று பட்டயம் கூறுவதிலிருந்து புலனாகிறது.
ஆனால் விரைவிலேயே மூன்றாம் கிருட்டிணன் வேங்கி நாட்டின் மீது மீண்டும் படையெடுக்க, அம்மன் இரண்டாம் முறையாக கலிங்கத்திற்குத் தப்பி ஓடவேண்டியதாயிற்று. இந்நிகழ்ச்சி அம்மனுடைய பதினோராம் ஆண்டிற்குப் பிறகே நடைபெற்றது என்று மாங்கல்லுப் பட்டயங்கள் கூறுகின்றன. வேங்கி நாட்டில் அம்மனுக்கு விரோதமான ஒரு கூட்டத்தின் ஆதரவைப் பெற்ற தானார்ண்ணவனிடம் ஆட்சிப் பொறுப்பை கிருட்டிணன் அளித்தான். ஆனால் இராட்டிரகூடர் வேங்கியை விட்டு அகன்றவுடன், மீண்டும் அம்மன் தன் நாட்டை அடைந்து தானார்ணவனுடன் சமாதானம் செய்துகொண்டு, சிலகாலம் அந்நாட்டை ஆட்சி செய்தான். முடிவில் தானார்ணவன் மீண்டும் அம்மனுக்கு எதிராகக் கிளம்பி அம்மன்னனைப் போரில் கொன்று தானே அரியணையைப் பற்றினான்.
வீமன், மூன்றாம் கிருட்டிணனின் அதிகாரத்திற்குட்பட்டவனாயிருந்து, இம்மன்னன் வேங்கி நாட்டைக் கைப்பற்ற உதவியிருக்கக்கூடும். ஆனால், கிருட்டிணனின் மரணத்திற்குப் பிறகு தனியுரிமையைப் பெற்று, அம்மன் மீது வெற்றிகொண்ட தானார்ணவனை எதிர்த்து, பொட்டாடி என்ற பகுதியைத் தாக்கி கைப்பற்றினான். இச்சண்டையில் வீமன், தானார்ணவனைக் கொன்று, அவனது குழந்தைகளை விரட்டியதோடு, வேங்கி நாட்டை முழுவதையும் கைப்பற்றினான். தானார்ணவனின் மரணத்திற்கும், இவன் மகன் முதலாம் சக்திவர்மனின் ஆட்சி தொடங்கியதற்கும் இடையேயான 25 ஆண்டுகள்(973 – 999) ஓரு இடையீட்டுக் காலம் என்றும் ஊழ்வினையால் ஏற்பட்ட தீயுழிக்காலம் என்றும் கீழைச் சாளுக்கியர் தம் சாசனங்களில் குறிப்பிடுகின்றனர்.
இராசராச சோழன் அரியணையேறிய பொழுது, இரண்டாம் தைலன், சத்தியாசிரயன் ஆகியோரது தலைமையில் மேலைச் சாளுக்கியர் எழுச்சியுற்றனர். தானர்ணவனின் மக்கள் சோழநாட்டில் தங்கியிருந்ததே மேலைச் சாளுக்கியருக்கு எதிராக கடைபிடிக்க வேண்டிய கொள்கையை உருவாக்க இராசராசனுக்கு பெரிதும் உதவியது. இவர்களையே கருவியாகக் கொண்டு, வேங்கிநாட்டின் விவகாரங்களில் தலையிட இராசராச சோழன் துணிந்தான். அதே வேளையில் செடாசோட வீமனும் மேலைச் சாளுக்கியரும் ஒப்பந்தம் செய்து கொண்டனர்.
999ம் ஆண்டிலோ அல்லது அதற்குச் சற்று முன்னரோ, சக்திவர்மனை வேங்கி நாட்டு அரியணையில் அமர்த்தும் எண்ணத்துடன் இராசராசன் வேங்கிநாட்டின் மீது படையெடுத்தான். இதை எதிர்க்க வீமன் அனுப்பிய ஏகவீரன் என்ற பெரும் வீரனை இராசராசன் கொன்றான் என்றும் பின்னர் பட்தேமன், மகாராசன் என்ற பலம் வாய்ந்த இரு தலைவர்களையும் கொன்றான் என்றும் முடிவாக செடாசோடன் என்னும் பேரும் மரத்தை வேருடன் களைந்தான் என்றும் அதாவது வீமனையும் தோல்வியுறச் செய்தான் என்று சக்திவர்மன் சாசனங்கள் கூறுகின்றன. ஆயினும் இப்போர் கடுமையாகவும் பல ஆண்டுகள் நீடித்ததாகவும் இருந்தது.
1011ம் மே திங்கள் 10ம் நாள் விமலாதித்தன் வேங்கி நாட்டு அரியணையில் அமர்ந்தான் என்று கல்வெட்டு ஆதாரங்கள் கூறுகின்றன. இவனுக்கு முன் இவனது சகோதரன் சக்திவர்மன் பன்னிரெண்டு ஆண்டுகள் ஆட்சி செய்தான். இதிலிருந்து சக்திவர்மன் பொ.ஊ. 999ல் அரியணையில் அமர்ந்தான் என்றும் அதே ஆண்டில் ‘இடையீட்டுக் காலம்’ முடிவுற்றது என்பதும் தெளிவாகிறது.
வீமனின் வீழ்ச்சியையும் வேங்கி நாடு இராசராசனுடைய அதிகாரத்திற்கு உட்பட்டதையும் சத்தியாசிரயனால் பொறுத்துக்கொள்ள இயலவில்லை. இப்போது முதல் அடுத்த 135 ஆண்டுகளுக்கு சோழர்களுக்கும் மேலைச் சாளுக்கியருக்கும் வேங்கி நாட்டைக் குறித்து அடிக்கடி போர் நிகழத் தொடங்கியது.
மாலத் தீவுகளைக் கைப்பற்றல்
இராசராசனது போர்களுள் இறுதியில் நிகழ்ந்தது, இவன் ‘முந்நீர்ப்பழந்தீவு பன்னீராயிரம்’ எனப்படும் மாலத் தீவுகளை கைப்பற்றும் பொருட்டு படையெடுத்ததேயாகும். கடல் கடந்து சென்ற இப்படையெடுப்பைப் பற்றி விரிவான விவரங்கள் கிடைக்கவில்லை. எனினும் இராசேந்திர சோழன் பிற்காலத்தில் திறமையாகப் பயன்படுத்திய கப்பற்படை இராசராசன் காலத்திலேயே சிறந்த முறையில் உருவாக்கப்பட்டது என்பது தெளிவாகிறது.
தஞ்சைப் பெருவுடையார் கோயில்
முதன்மைக் கட்டுரை: தஞ்சைப் பெருவுடையார் கோயில்
இராசராச சோழனால் தஞ்சையில் எடுப்பிக்கப்பட்ட இராசராசேச்சரம் என்னும் சிவன் கோயில், தென் இந்திய வரலாற்றுப் பகுதியில் தலைசிறந்த சின்னமாகும் தென்னிந்திய கட்டடக் கலைக்கே பெருமை தேடித்தரும் கலைக் கருவூலமாகவும் இம்மன்னனின் ஒப்பற்ற ஆட்சியின் நினைவுச் சின்னமாகவும் இன்றளவும் இக்கோயில் விளங்கி வருகிறது. இக்கோயில் வானளாவி நிற்பதோடு எளிமையான அமைப்பையும் உடையது. இராசராசனின் 25ம் ஆண்டின் 275ம் நாளில் இது கட்டி முடிக்கப்பட்டது. இராசராசன் காலத்தில் இராசராசேச்சரம் என்று அழைக்கப்பட்ட இக்கோவிலின் பெயரானது பெருவுடையார் கோவில் என்ற தமிழ்ப் பெயரின் வடமொழி வடிவமாகும்.
இராசேந்திரன் இளவரசுப் பட்டம் பெறுதல்
இராசராச சோழன் தன் ஆட்சி முடிவில் தன் மகன் இராசேந்திரனை அரசாங்க அலுவல்களில் தன்னுடன் கலந்து கொள்ளச் செய்தான். இராசராசனின் நான்காம் ஆட்சி ஆண்டுக் கல்வெட்டுகள் இராசேந்திரனை இளம் அரசகுமாரன் என்று குறிப்பிடுவதால், இளவரசுப் பட்டம் பெற்ற பொழுது இவன் குறைந்தது இருபத்தைந்து வயதினனாக இருந்திருக்க வேண்டும். இராசராச சோழனின் 29-ம் ஆண்டுக் கல்வெட்டுகள் தஞ்சையில் ஏராளமாகக் கிடைப்பதால், இம்மன்னனின் சிறந்த ஆட்சி பொ.ஊ. 1014ல் முடிவுற்றது என்று தெரியவருகிறது.
நிர்வாகம்
இராசராச சோழன்
நிலவரியை நிர்ணயிக்க வேண்டி நாடெங்கும் நிலங்களை அளந்து, நிலத்திற்கேற்ப வரி விதித்து, இப்போதைய நிர்வாகத்தில் உள்ளது போல் செயலாளர்களைக் கொண்ட மத்திய அரசை இராசராச சோழன் நன்கு அமைத்தான். மேலும் நிர்வாகத்தை வலுவாக்கி, மத்திய அரசின் பிரதிநிதிகளை ஆங்காங்கு மேற்பார்வைக்காக அமர்த்தி, கிராம சபைகளையும் மற்றப் பொதுக்குழுக்களையும் பொதுக் குழுக்களையும் தணிக்கையின் மூலம் கட்டுப் படுத்தினான். அதனால் நிறைந்த நிலைப்படையை உருவாக்கி, இராசேந்திரனின் கீழ் மேலும் பல வெற்றிகளை அடைந்த பெரும் கப்பற்படையை நிறுவி, தென் இந்தியாவின் வரலாற்றிலேயே இராச்சியங்களை நிர்மாணிப்பதில் ஒப்பற்றவனாகத் திகழந்தான்.
சமயக் கொள்கை
ஆழ்ந்த சிவபக்தனான இராசராசன் இந்தியாவின் பெரும் இராசதந்திரிகளைப் போன்று, எல்லா சமயங்களிடத்தும் பொது நோக்குடையவனாய் அவற்றை ஆதரித்து வந்தான். தஞ்சைப் பெருங் கோயிற் சுவர்களில் காணப்படும் அழகிய சிற்பங்களிலிருந்து இம்மன்னன் கல்வெட்டுகளில் இவனால் கட்டப்பட்டதாகக் கூறப்படும் விட்டுணு ஆலயங்களிலிருந்தும் இராசராசன் தனது சமயக் கொள்கைகளில் தாராள மனப்பான்மை உடையவனாகவே இருந்தான் என்று தெரியவருகிறது. நாகப்பட்டினத்தில் சிரீவிசயம், கடாரம் ஆகியவற்றின் அரசன் சைலேந்திர மன்னன் திருமாற விசயோதுங்க வர்மனால் சூடாமணி விகாரம் கட்டப்பட்டபொழுது அம்மன்னனை பெருதும் ஊக்குவித்தான் என்று புகழ் வாய்ந்த லெய்டன் பட்டயங்கள் கூறுகின்றன.
பட்டங்கள்
இராசராசனின், மும்முடிச் சோழன், செயங்கொண்டான், அருண்மொழி என்ற பெயர்கள் நகரங்களின் பெயர்களாக மாறியதோடு, வளநாடுகளும் மண்டலங்களும் இம்மன்னனின் பெயராலேயே அறியப்பட்டன.
- அழகிய சோழன்
- மும்முடிச்சோழன்
- காந்தளூர் கொண்டான்.
- சோழநாராயணன்.
- அபயகுலசேகரன்
- அரித்துர்க்கலங்கன்.
- அருள்மொழி
- இரணமுக பீமன்
- ரவி வம்ச சிகாமணி
- ராச பாண்டியன்.
- ராச சர்வக்ஞன்.
- இராசராசன்
- இராச கேசரிவர்மன்
- சோழேந்திர சிம்மன்.
- இராச மார்த்தாண்டன்.
- இராசேந்திர சிம்மன்.
- இராச விநோதன்.
- உத்தம சோழன்.
- உத்துக துங்கன்.
- உய்யக் கொண்டான்.
- உலகளந்தான்.
- கேரளாந்தகன்.
- சண்ட பராக்கிரமன்
- சத்ருபுசங்கன்.
- சிங்கனாந்தகன்
- சிவபாத சேகரன்.
- சோழகுல சுந்தரன்.
- சோழ மார்த்தாண்டன்.
- திருமுறை கண்ட சோழன்.
- தெலிங்க குலகாலன்.
- நித்ய விநோதன்.
- பண்டித சோழன்.
- பாண்டிய குலாசனி
- பெரிய பெருமாள்.
- மூர்த்தி விக்கிரமா பரணன்
- சென நாதன்.
- செயங்கொண்ட சோழன்.
- சத்திரிய சிகாமணி.
- கீர்த்தி பராக்கிரமன்.
- தைல குலகாலன்.
மேற்கண்ட நாற்பதுக்கும் மேற்பட்ட பெயர்களில் இராசராச சோழன் அழைக்கப்பட்டுள்ளார்.
குடும்பம்
இராசராசன் பல பெண்களை திருமணம் செய்திருக்கிறார். அவருடைய பட்டத்து அரசியாக உலகமகாதேவியார் என்பவர் இருந்துள்ளார். தஞ்சைப் பெருவுடையார் கோயிலில் இராசராசன் திருவாயிலிலுள்ள ஒரு கல்வெட்டில் இராசராசனின் பட்டத்து அரசியான உலகமகாதேவியாரும், சோழமகாதேவியார், அபிமானவல்லி, திரைலோக்கிய மகாதேவி, பஞ்சவன்மாதேவி, பிருத்வி மகாதேவி, இலாடமாதேவி ஆகிய மனைவிமார்களும் கோயிலுக்கு கொடைகள் அளித்திருப்பது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.[8]
இராசராசனுக்கு மனைவிமார் பலராவர். கல்வெட்டுகளில் மட்டும் 15 பேர் குறிப்பிடப்பட்டுள்ளனர். அவர் உலகமகா தேவியார், திட்டைப்பிரான் மகள் சோழ மாதேவியார், அபிமானவல்லியார், திரைலோக்கிய மாதேவியார், பஞ்சவன் மாதேவியார், பிருதிவி மாதேவியார், இலாட மாதேவியார், மீனவன் மாதேவியார், நக்கன் தில்லை அழகியார், காடன் தொங்கியார், கூத்தன் வீராணியார், இளங்கோன் பிச்சியார் முதலியோர் ஆவர். இவர்களை இராசராசன் ‘நம் பெண்டுகள்’ என்று கல்வெட்டில் குறித்தனன். இவருள் உலகமாதேவியார் பெயரே கல்வெட்டுகளில் முதலில் குறிக்கப்பட்டுள்ளது. திருவிசலூரில் இராச ராசன் துலாபாரம் புக்கபோது பட்டத்தரசியான தந்திசக்தி விடங்கியார் இரணியகருப்பம் புக்கனர்; திருவிச நல்லூர்ப் பெருமானுக்குச் சர்க்கரைப் பொங்கல் செய்ய 45 பொற் காசுகள் தானமளித்தார்[9]. இந்த அம்மையாரே திருவையாற்றில் கற்றளி ஒன்று எடுத்து அதற்கு ‘உலகமாதேவீச்சரம்’ எனத் தம் பெயரிட்டார். இதனைக் குறிக்கும் கல்வெட்டில், உடையார் இராசராச தேவர் நம்பிராட்டியார் தந்திசக்தி விடங்கியாரான பூர் உலக மகா தேவியார்…[10] என்பது காணப்படலால், இரணியகருப்பம் புக்கவர் உலக மகாதேவியாரே என்பது வெளிப்படை தஞ்சைப் பெரிய கோவிலில் இராசராசன் பிரதிமமும் உலகமகாதேவியார் பிரதிமமுமே எழுந்தருளப் பெற்றன[11]. இவற்றால், இவரே இராசராசன் முதற் பெருந்தேவியார் என்பது விளங்கும்.
இராசராசன் பல மனைவியருடன் வாழ்ந்தாலும், குறைந்த அளவிலான மக்களைப் பெற்றிருந்தான். பல கோயில்களுக்கு நிவந்தங்கள் அளித்ததாக கல்வெட்டுக்களில் குறிப்பிடப்படும் இவனது மனைவிமார்களின் எண்ணிக்கை ஏறக்குறைய பதினைந்து, ஆயினும் உலக மகாதேவி என்று அழைக்கப்பட்ட தந்திசக்தி விடங்கி என்பவளே பட்டத்தரசியாக விளங்கியவள். இராசராச சோழனின் ஆட்சியின் 29ம் ஆண்டில் திருவிசலூரில் இம்மன்னனுடன் இருந்தாள், திருவிசலூர்க் கோயிலில் இம்மன்னன் துலாபாராம் புகுந்த பொழுது தந்திசக்தியும் இரணிய கருப்பம் புகுந்தாள்.
இராசராசனின் ஒரே மகனான இராசேந்திரனின் தாயார், திருபுவன மாதேவி என்றழைக்கப்பட்ட வானவன் மாதேவி ஆவாள். இராசராசனின் மகள் குந்தவை, சாளுக்கிய விமலாதித்தனை மணந்தாள். கல்வெட்டுகள் குந்தவையை, ஆழ்வார் பராந்தகன் குந்தவைப் பிராட்டியார் என்றும் பொன்மாளிகைத் துஞ்சின தேவரின் புதல்வி என்றும் குறிப்பிடுகின்றன. தன் தமக்கையிடத்தில் இராசராசன் பெருமதிப்பு வைத்திருந்தான் தான் எடுப்புவித்த தஞ்சை பெரிய கோயிலுக்கு, தன் தமக்கை கொடுத்தவற்றை நடு விமானத்தின் கல்மீது, தான் கொடுத்தவற்றைப் பற்றி வரைந்துள்ள இடத்திற்கு அருகே வரையச் செய்ததோடு, தன் மனைவிமார்களும் அதிகாரிகளும் கொடுத்தவற்றைச் சுற்றியுள்ள பிறைகளிலும், தூண்களிலும் பொறிக்கச் செய்தான்.
இராசராசன் மூன்று புதல்விகளைப் பெற்றிருத்தல் வேண்டும், ஏனெனில் திருவலஞ்சுழியிலுள்ள ஒரு கல்வெட்டு சாளுக்கிய விமலாதித்தனை மணந்த இளைய குந்தவையைத் தவிர, மாதேவடிகள் என்பாளை நடு மகளாகக் குறிப்பிட்டுள்ளது.
இராசராசனின் படைப்பிரிவுகள்
இராசராசனின் படையில் பல்வேறு படைப்பிரிவுகள் இருந்துள்ளன என்பது தஞ்சை கோயில் கல்வெட்டு மூலம் தெரிய வருகிறது. அந்தப் படைப்பிரிவுகளின் பெயர்கள்;[12]
- பெருந்த நாட்டு ஆனையாட்கள்
- பண்டித சோழ தெரிந்த வில்லிகள்
- உத்தம சோழ தெரிந்த வில்லிகள்
- நிகரிலி சோழ தெரிந்த உடநிலை குதிரைச் சேவகர்
- மும்மடி சோழ தெரிந்த ஆணைப்பாகர்
- வீர சோழ அனுக்கர்
- பராந்தக கொங்காவலர்
- மும்மடி சோழ தெரிந்த பரிவாரத்தார்
- கேரளாந்தக தெரிந்த பரிவாரத்தார்
- செனநாத தெரிந்த பரிவாரத்தார்
- சிங்களாந்தக தெரிந்த பரிவாரத்தார்
- சிறுதநாட்டு வடுக காவலர்
- வலங்கை வேலைக்காரர்
- பெருந்தநாட்டு வலங்கை வேலைக்காரப் படைகள்
- அழகிய சோழ தெரிந்த வலங்கை வேளைக்காரர்
- அரிதுகலங்கன் தெரிந்த வலங்கை வேளைக்காரர்
- சண்டபராகிரம தெரிந்த வலங்கை வேளைக்காரர்
- திரய சிகாமணி தெரிந்த வலங்கை வேளைக்காரர்
- மூர்த்த விக்கிரமபரண தெரிந்த வலங்கை வேளைக்காரர்
- நித்த வினோத தெரிந்த வலங்கை வேளைக்காரர்
- இராச கந்திரவ தெரிந்த வலங்கை வேளைக்காரர்
- இராசராசன் தெரிந்த வலங்கை வேளைக்காரர்
- இரானாமுக பீம தெரிந்த வலங்கை வேளைக்காரர்
- விக்கிரமபரண தெரிந்த வலங்கை வேளைக்காரர்
- கேரளாந்தக வாசல் திருமெய்க்காப்பாளர்
- அனுக்க வாசல் திருமெய்க்காப்பாளர்
- பரிவார மெய்க்காப்பாளர்கள்
- பலவகை புறம்படிகாவலர்
அதிகாரிகளும் திறை செலுத்திய குறுநில மன்னர்களும்
இராசராசன் சோழனுடைய அதிகாரம் கங்க, வேங்கி மண்டலங்களிலும் கங்க நாட்டு மன்னனுக்குத் திறை செலுத்திய குறுநில மன்னர்கள் மீதும் பரவியிருந்தது. மும்முடிச் சோழன் என்றழைக்கப்பட்ட பரமன் மழபாடியார் என்னும் படைத்தலைவன் சீத்புலி, பாகி ஆகிய நாடுகளை வென்றவன். திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில், பழுவூரைச் சுற்றியுள்ள சிறுபகுதி ஒன்றின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருந்தவர் பழுவேட்டரையர் என்பவர்களாவார். இவர்கள் சோழ குடும்பத்திற்கு நெருங்கிய உறவினராக இருந்தனர். முதலாம் பராந்தக சோழன் பழுவேட்டரையரின் இளவரசியை மணந்திருந்தான். இராசராசனுக்குத் திறை செலுத்திய பழுவூர்க் குறுநில மன்னனான அடிகள் பழுவேட்டரையன் கண்டன்மறவன் என்பவன் குறுநில மன்னர்களுக்கு உரிய சிறப்புக்களையும் பெற்று ஆட்சி செய்து வந்தான்.
மதுராந்தகன் கண்டராதித்தன் உத்தம சோழனின் மகன் ஆவான், இராசராசன் ஆட்சியில் இவன் கோயில்களைக் கண்காணித்து, அவற்றில் தவறிழைத்தவர்களை விசாரித்து, தண்டித்து, எதிர்காலத்தில் தவறிழைக்காதபடி நல்ல நிலையில் பாதுக்காகும் ஏற்பாடுகளைச் செய்தான்.
வைதும்பர்களைப் போன்று, முதலாம் பராந்தகனிடம் தோல்வியுற்ற வாணர்களும், சோழர்களுக்குக் கட்டுப்பட்டு அவர்களது நிர்வாகத்தில் முக்கிய அதிகாரிகளாகப் பங்கேற்றனர். மாறவன் நரசிம்மவர்மன் என்ற வாண மன்னன் தென் ஆற்காடு மாவட்டத்தில் செம்பையை அடுத்த பகுதிகளை இராசராசனது இறுதிக் காலத்தில் ஆட்சி செய்தான்.
பெருவுடையார் கோவிலில் இராசராச சோழனின் சிலை
தஞ்சைப் பெரிய கோயில், ஒரு தோற்றம்
இராசராசன் பற்றிய புனைவு ஆக்கங்கள்
- இராஜராஜ சோழன் – கலைமாமணி ஆர்.ராமநாதன் என்பவரால் எழுதப்பட்ட நாடக பிரதி. இந்த மேடை நாடகபிரதியே பின்னர் சிவாஜி கணேசன் நடிப்பில் திரைப்படமாக எடுக்கப்பட்டது. இந்நாடகப்பிரதி நூல்வடிவாக பிரேமா பிரசுரம் சென்னை-24 ஆல் வெளியிடப்பட்டுள்ளது. தென்னிந்திய பல்கழைக்கழகங்களில் அங்கீகரிக்கப்பட்ட Study Material ஆகவும் இந்நூல் காணப்படுகின்றது.
- பொன்னியின் செல்வன் – கல்கி கிருஷ்ணமூர்த்தியால் எழுதப்பட்ட வரலாற்று நாவல் இதில் அருண்மொழிதேவன் எனும் இயற்பெயருடன் இராச இராசனின் இளமைப்பருவம் பற்றிய தகவல்களுடன் நாவல் எழுதப்பட்டுள்ளது.
- உடையார் – பாலகுமாரனால் எழுதப்பட்டது. இராச இராசன் பேரரசனான பின்னர் நடந்த நிகழ்வுகளைப்பற்றி குறிப்பிடுகின்றது.
- காந்தளூர் வசந்தகுமாரன் கதை – சுஜாதாவால் எழுதப்பட்டது. இராசராசன் காலத்தில் காந்தளூர் சாலையில் இடம்பெற்ற போர் பற்றிய நிகழ்வுகளை குறிக்கின்றது.
- சேரர் கோட்டை (புதினம்) – கோகுல் சேஷாத்ரியால் எழுதப்பட்ட இந்த வரலாற்று நாவல், இராசராசனின் முதற் போரான சேரநாட்டுக் காந்தளூர்ச் சாலை படையெடுப்பை விரிவாகச் சித்தரிக்கின்றது
- ராஜா ராஜா சோழன் – ச .ந .கண்ணன் எழுதிய புத்தகம் , கிழக்கு பதிப்பகம் வெளியீடு
- காவிரி மைந்தன் (அனுஷா வெங்கடேஷ்)
- இராஜகேசரி – கோகுல் சேஷாத்ரியால் எழுதப்பட்ட இந்த வரலாற்று நாவல், இராசராசர் தஞ்சை பெரிய கோயிலை கட்டிக்கொண்டிருக்கும் காலத்தில் நடைபெறும் நிகழ்வுகளைப் பின்னணியாகக் கொண்டு புனையப்பட்டுள்ளது
- வேங்கையின் மைந்தன் (அகிலன்)
இராச இராசன் சமாதி
முதலாம் இராச இராச சோழனின் நினைவிடம் (பள்ளிப்படை) தஞ்சாவூர் மாவட்டம், பட்டீச்சரம் அருகே உள்ள உடையாளூர் என்ற கிராமத்தில் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.
பஞ்சவன்மாதேவீச்சரம்
முதலாம் இராசராச சோழனின் தேவியும், பழுவேட்டரையரின் திருமகளுமாகிய பஞ்சவன்மாதேவியார் சிவனடி சேர்ந்தபின்பு அவ்அம்மையாரை பள்ளிப்படுத்தி எடுக்கப்பெற்ற கற்றளியே பஞ்சவன்மாதேவீச்சரமாகும். இராசேந்திர சோழன் எடுத்த இக்கற்கோயில் திருமலைராயன் ஆற்றின் வடகரையில் அமைந்துள்ளது.[13]
Leave a Reply
You must be logged in to post a comment.