நீர் வளம், நில வளம் உள்ள முல்லை மண்ணில் நிம்மதி ஏன் இல்லை!

நீர் வளம், நில வளம் உள்ள முல்லை மண்ணில் நிம்மதி ஏன் இல்லை!
(பாகம் 01)

  • யாழ்ப்பாணத்திலிருந்து நடராசா லோகதயாளன்

நீர் வளம் உண்டு, நில வளம் உண்டு, நிம்மதி ஒன்றுதான் இல்லை
எனினும் இந்த மண் எங்களின் சொந்த மண்
எனினும் இந்த மண் எங்களின் சொந்த மண்

என்று-அன்று புலிகள் பாடிய மண்ணின் நிலை தொடர்பான பாடல் முல்லை மண்ணின் அவலத்தை அப்படியே இன்றும்  தொட்டு நிற்கின்றது.

கொடூரமான ஒரு போர் முடிந்த 13 ஆண்டுகளிற்கும் மேலானாலும், இந்தப் பாடலும் அது தமிழ் மக்களிடையே ஏற்படுத்திய உணர்ச்சியும், தாக்கமும் மிகவும் ஆழமானது.

அடிப்படையில் வளம் மிகுந்த பூமியில் இருக்கும் மக்கள் வறுமையில் வாடுவதையும், அதிலிருந்து மீண்டு சுதந்திரமாக வாழ்வதையுமே அந்தப் பாடல் அடிநாதமாகக் கொண்டிருந்தது எனலாம்.

முல்லைத்தீவு வலி சுமக்கும் ஒரு பூமி-அதுவொரு சிவந்த மண். எக்காலத்திற்கும் போர் வடுக்களை தாங்கி நிற்கும் ஒரு நிலம். அதுமட்டுமல்ல அந்த நிலப்பரப்பு சாதனை மற்றும் வேதனைகளுக்கு அழியாத சாட்சியாக என்றென்றும் நிலைத்திருக்கும்.

இதற்கு சிறந்த உதாரணமாக வட்டுவாகல் பாலத்தைக் கூறலாம். அங்கு நடைபெற்ற அவலங்களுக்கு அந்தப் பாலம் ஒரு மௌனமான சாட்சி. அந்த பாலத்தின் ஊடாகக் கடந்து அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்த ஆயிரக்கணக்கானவர்களை இன்றும் அவர்களது உறவினர்கள் தேடுகின்றனர்.

முல்லைத்தீவு இன்றும் அவலங்கள் சுமந்து நிற்கிறது. நாட்டில் ஒப்பீட்டளவில் அதிகமாக இராணுவப் பிரசன்னம் இங்குதான் உள்ளது என்பதை தரவுகள் காட்டுகின்றன.

இலங்கையின் 25 நிர்வாக மாவட்டங்களில் ஒன்றான முல்லைத்தீவு மாவட்டம் சனத் தொகைகளில் குறைந்த மாவட்டமாக காணப்படுகின்றபோதும் வறுமையில் முன்னிலையில்  உள்ளது.  

வறுமையை போக்க அரச நிர்வாக இயந்திரங்கள் செயல்பட வேண்டிய நிலையில் அந்த வறுமைக்கு அரச நிர்வாக இயந்திரமே காரணம் எனச் சுட்டிக் காட்டப்படுகின்றது.

வளங்கள் பல இருந்தும் மக்கள் வறுமையில் வாடுவது ஏன்?

இதனை இந்தச் சிறப்பு தொடர் அலசுகிறது. ஊடக அறத்தை கடைப்பிடித்து, பிரச்சனைகளைச் சுட்டிக்காட்டி அதன் மூலம் தீர்வு காண முயலும் மக்கள் நலன் சார்ந்த ஒரு தொடராகும் இது.

இத்தொடரின் மூலம் வலியை சுமக்கும் அந்த மண்ணிற்கும் அதன் மக்களுக்கும் சிறிதேனும் ஆறுதலும் ஆதரவும் கிடைக்கும் என்பதே நம்பிக்கை.

முல்லைத்தீவு மாவட்டமானது 2415 சதுரக் கிலோ மீற்றர் பரப்பளவைக் கொண்டு 6 பிரதேச செயலாளர் பிரிவுகளின் கீழ் 136 கிராம சேவகர் பிரிவுகளில் தற்போது  45 ஆயிரத்து 927 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 516 மக்கள் வாழ்கின்றனர்.

நீர்வளம், நில வளம் இருந்தும்- வறுமையில் இருந்து மீளாத முல்லைத்தீவும் தீராத பிரச்சணைகளுமாக காணப்படுவதனை- அலச ஆரம்பிக்கும்போது இறுதி யுத்தமும் முள்ளிவாய்க்கால் அவலமும் மட்டும் கண் முன்னே தோன்றவில்லை.

போர் முடிந்து 13 ஆண்டுகள் கடந்தும் அரச நிர்வாக இயந்திரத்தினால் சீர் அமைக்க முடியாது ஆண்டுதோறும் ஏற்படும் பருவ மழையின்போது உயிரை கையில் பிடித்துக் கொண்டு வட்டுவாகல் பாலத்தின் மீது பயணிக்கும் போது  இறுதி யுத்தத்தில் மட்டுமல்ல இன்னும் உயிரைக் குடிக்கவே காத்திருக்கின்றேன் என கூறுவது போன்று காட்சி தருகின்ற வகையில் அந்தப் பாலத்தின் ஆயுள்  ஊசலாடுகின்றது. அடிப்படை வாழ்வாதாரத்திற்கான குளம் முதல் வாழ்வே முடிந்த பின்பு தகனம் செய்யும் சுடலைகூட  இராணுவத்தின் பிடியில் நிற்கும் அவலப் பட்டியலும் நீள்கின்றது.

இத்தனைக்கும் மத்தியில் எஞ்சியிருக்கும் சொற்ப நிலங்களும் தொல்லியல் எனவும் மகாவலி என்றும் ஒரே தீராத தலைவலியாக உள்ள முல்லைத்தீவு மக்கள் பெரும் போராட்டத்துடனேயே இன்றும் வாழ்கின்றனர். மக்களோ சிவ பெருமானுக்கும் புத்த பகவானுக்கும் இடையே சிக்கித் தவிக்கின்றனர்.

அந்த மாவட்டத்தின் வறுமைக்கு என்ன காரணம் என்பதை ஆராய்ந்து எழுத ஆரம்பித்த வேளை எந்த அவலத்தை முதலில் பட்டியலிடுவது என்பதில் பெரும் குழப்பமாகவும் உள்ளது. ஏனெனில் அவலத்தின் பட்டியல் அந்த அளவிற்கு நீளமாகவுள்ளது. இருப்பினும் வறுமையை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டிய அரச நிர்வாக இயந்திரங்களே வறுமைக்கான காரணங்களில் முதலிடமாகவுள்ளது என்பதையே இக்கட்டுரையின் மையப் பொருளாக தொட்டமையினால் அதனூடாகவே பட்டியலிட்டு ஆரம்பிக்கின்றேன்.

முல்லைத்தீவு மாவட்டமானது 2415 சதுரக் கிலோ மீற்றர் பரப்பளவு என்னும் வகையில் 2 லட்சத்து 41 ஆயிரத்து 500 ஹெக்டயர் அல்லது 5 லட்சத்து 96 ஆயிரத்து 505 ஏக்கர்  என்ற  அளவீட்டைக் கொண்ட நிலப்பரப்பாகும். அவ்வாறானால் இங்கே வாழும் 45 ஆயிரத்து 927 குடும்பங்களில் நிலம் அற்றவர் என எவருமே இருக்க வேண்டிய அவசியமே கிடையாது. இருப்பினும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 3 ஆயிரத்து 389 குடும்பங்களுக்கு குடியிருப்பதற்கே ஒரு துண்டு நிலம்கூட இல்லை என்பதனையும் மாவட்டச் செயலகம் உறுதிப்படுத்துகின்றது. இதேபோன்று இந்த மாவட்டத்தில் காணப்படும் வாழ்வாதாரங்களில் ஒன்றான கால்நடைகள் சுமார் 120,000 கால்நடைகளிற்கும் ஒரு மேய்ச்சல்தரைகூட கிடையாது.

2021 ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி வேலை வாய்ப்பற்றோருக்கு சுய தொழிலை ஊக்குவிக்க தேசிய ரீதியில் ஒரு லட்சம் பேருக்கு  காணி வழங்கும் திட்டம் முன்னெடுக்கப்படும். இதற்கு விரும்பியவர்களை விண்ணப்பிக்குமாறு அரசு கோரியபோது நாடு முழுவதும் விண்ணப்பித்தனர் இதில் முல்லைத்தீவில் மட்டும் 28 ஆயிரத்து 676 பேர் விண்ணப்பித்தனர். எனினும் அவர்களிற்கு வழங்க நிலம் இல்லை என்று கூறப்படுகின்றபோதும் வடக்கு கிழக்கு முழுமையாக இத் திட்டம் கிடப்பில் உள்ளது.  இவ்வாறு பெரிய ஒரு மாவட்டத்தில் எதற்குமே நிலம் இல்லை எனில் இருக்கும் நிலத்தை என்ன கடல் விழுங்கி விட்டதா என்ற கேள்வி பலருக்கு எழலாம். ஆனால் அந்த கேள்விக்கான விடையே இந்தக் கட்டுரைக்கான பெரும் பதிலாகவும் அமையும்.

இலங்கையில் இடம்பெற்ற போரின் காரணமாக அரச நிர்வாக இயந்திரங்கள் பெயரளவிற்கு வெறுமனே நிவாரணப் பணிகளில் கவனம் செலுத்த வனவளத் திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்களம், தொல்லியல் திணைக்களம் ஆகிய
3 திணைக்களங்கள் அநுராதபுரத்தில் இருந்து முல்லைத்தீவு தொடர்பில்  கன கச்சிதமாகவே செயல்பட்டுள்ளமை தற்போதைய தரவுகள் மூலம் உறுதியாகின்றன.
இந்த மூன்று திணைக்களங்களை விட

மகாவலி அபிவிருத்தி அதிகார சபை அரசின் மறைமுக நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்து வருவதாகவும் அந்த மாவட்ட மக்கள்  கருதுகின்றனர். இந்த திணைக்களங்கள் அன்று தொட்டு இன்றுவரை வடக்கு கிழக்கை அபகரிக்க அனைத்தையும் மேற்கொள்ளும் நிலையில் வடக்கு மற்றும் கிழக்கு ஆகிய இரு மாகாணத்தையும் இணைக்கும் முல்லைத்தீவில் அதிக கவனம் செலுத்தியே வந்தனர் என்பதனையும் இதற்கான தரவுகள் சான்றுகளையும் அடுத்த வரும் பகுதிகளில் புள்ளி விபரத்துடன்  பார்க்கலாம்.

யுத்தம் இடம்பெற்ற காலத்தில் அங்கே வாழ்ந்த மக்களின் உணவுத் தேவையை பூர்த்தி செய்து வவுனியாவிற்கும் அரிசி அனுப்பிய மண் முல்லைத்தீவு. இறுதி யுத்தத்தில் முள்ளிவாய்காலில் இரத்த ஆறு ஓடும்வரை நெருப்பெரிந்த நிலத்தில் அன்று ஓலைக் குடிசையிலும் தறப்பாள்களின் கீழும் குப்பி விளக்குகளுடன்  மன நிறைவோடு வாழ்ந்த மக்கள் கல் வீடுகளின் உள்ளே மின் விளக்குகள் ஒளிர மின் விசிறியின் கீழ் நிம்மதியின்றி தவிப்பதற்கு அந்த மாவட்டத்தின் அரச நிர்வாக இயந்திரம் ஏற்படுத்தும் அழுத்தங்களே காரணமாக உள்ளது என்பதே மக்கள் கூற்றாகவுள்ளது.

கடற்தொழில், விவசாயம், கைத் தொழில் மட்டுமன்றி அனைத்து வகையிலும் எந்த உணவுப் பொருளையும் பணம் இன்றி உற்பத்தி செய்த மண்ணில் இன்று பணம் இருந்தாலும் அதை போராடியே பெறவேண்டிய அவலமே காணப்படுகின்றது.

1983ஆம் ஆண்டு விரட்டபட்டு மக்கள் வெளியேறிய இடங்கள் பல  இன்றும் விடுவிக்கப்படாமால் ஆக்கிரமிப்பிலேயே உள்ளது. அரச நிர்வாக இயந்திரச் செயல்பாட்டைப் பொருத்தவரை கட்டடங்கள் உண்டு அதிகாரிகள் இல்லை. பல கட்டடங்கள் திறப்பு விழா கண்டதோடு எவருமே வந்து செயல்படாத பேய் வீடு போலுள்ளது. ஆட்கள் வந்தால் தானே அலுவல்கள் நடக்கும் என்று மக்கள் புலம்புகின்றனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் அனைத்து நிர்வாக மையங்களும் நகரை அண்டியதாகவே காணப்படுகின்றது. இதனால் ஏ-9 வீதிக்கு மேற்கே உள்ள 25 ஆயிரம் மக்களின் நெருக்கடிகள் ஏனைய பிரதேசங்களை விடவும் உச்சமானதாகவே என்றும் உள்ளது.

குறிப்பாக துணுக்காய், பாண்டியன்குளம் பிரதேச செயலாளர்  பகுதியின் புறநகர்ப் பகுதியில் ஓர் அணர்த்தமோ அல்லது பிரச்சணை என்றாலோ அதற்கான தீர்வைப் பெறும் நோக்கில் எந்த நிர்வாக அலுவலகங்களிற்கும் ஒரு வழிப்பாதையாக 75 கிலோ மீற்றர் பயணிக்க வேண்டும். அதாவது யாழ் நகரில் இருந்து கிளநொச்சிக்குப் பயணிக்கும் தூரம். அவ்வாறெனில் சென்று வர 150 கிலோ மீற்றர் தூரம். இதற்கு தீர்வாக முல்லைத்தீவு மாவட்டத்தின் நிர்வாக இயந்திரங்களை மாங்குளத்தில் அமையுங்கள் என அந்த மக்கள் கடந்த 12 ஆண்டுகளாக எமக்கு தெரிந்து கோரிக்கை விடுத்தாலும் இதற்கு முன்பும் பல ஆண்டுகளாக முன் வைப்பதாக பட்டியலிடுகின்றனர்.

25 ஆயிரம் பேரிற்கு போக்குவரத்து இடையூறு என செயலகங்களை மாங்குளம் மாற்றினால் 75 ஆயிரத்த்திற்கும் அதிகமனோர் தற்போது 15 கிலோ மீற்றரில் தமது பணியை நிவர்த்தி செய்யும் நிலையில் அவர்களை 40 அல்லது 50 கிலோ மீற்றர் அலைய விடமுடியாது ஏனெனில் குடிசண அடர்த்தி கொண்ட பிரதேச செயலகங்கள் மாவட்டத்தின் 60 வீதமான மக்கள் புதுக்குடியிருப்பு மற்றும் கரைத்துரைப்பற்று பிரதேச செயலக எல்லைக்குள் வாழ்கின்றனர் என்கின்றனர் அதிகாரிகள்.

இந்த இழுபறியினால்  நட்டாங்கண்டல், சிராட்டிகுளம்,  பாலைப்பாணியில் ஓர் வெள்ளிக் கிழமை கிணற்றிற்குள் வீழ்ந்தவரை திங்கள் கிழமைதான் கிணற்றிற்கு வெளியே எடுத்த அவலமும் அண்மையில் இடம்பெற்றது. ஏனெனில் திடீர்  மரண விசாரணை அதிகாரி முள்ளியவளையிலேயே உள்ளார்.  அதேபோன்று ஐயங்குளத்தில் ஓர் அணர்த்தத்திற்கு உள்ளானவரை மல்லாவி வைத்திசாலைக்கு மாற்றி அங்கிருந்து நோயாளர் காவு வண்டியில் கிளிநொச்சிக்கு எடுத்துச் சென்ற சமயம் பாதிக்கப்பட்ட நோயாளர் படுத்திருந்த கட்டில் ஏ-9 வீதியில் ஓடிய அவலமும் இடம்பெற்றது. மாங்குளம் சந்தியால் கிளிநொச்சி நோக்கித் திரும்பி கொக்காவிலை அண்மித்து பயணித்த சமயம்  நோயாளர் காவு வண்டியின் கதவு கயிற்றினால்  கட்டப்படடிருந்தபோது  நோயாளர் காவு வண்டி 18ஆம் போர் ஏற்றத்தில் ஏறியதனால்  கட்டில் கதவில் இடித்தபோது கயிறு அறுந்து கதவு திறந்தது. நோயாளர் படுத்திருந்த கண்டில் நோயாளருடன் 50 மீற்றருக்கும் அதிக தூர் கட்டிலுடன் ஓடினார்.

முல்லைத் தீவு மாவட்டத்தில் நிலவும் அவலங்களின் ஒரு மேலோட்டமே இது.

( அவலங்கள் தொடரும்….)


நீர் வளம்ää நில வளம் உள்ள முல்லை
மண்ணில் நிம்மதி ஏன் இல்லை?
(பாகம்-02)

வன்னி மண் கொடுத்துச் சிவந்த மண். அதற்குச் சரித்திர சான்றுகள் ஏராளம். அதன் அளப்பரிய வளங்கள் நூற்றாண்டுகளாக மக்களின் வாழ்வாதாரத்திற்கு அடித்தளமாக இருந்துள்ளன.வந்தாரை வாழவைக்கும் பூமி வன்னி பெருநிலப்பரப்பு.

ஆனால் குன்றாத வளங்கள் இருந்தும் அங்குள்ள மக்கள் வறுமையின் பிடியில் சிக்கியுள்ளது வரலாற்றுச் சோகம். போர்க்களமாக இருந்த அந்த பூமியில் இரண்டு தலைமுறையினர் சிக்கினர். ஒரு தலைமுறையினர் போருக்குப் பிந்தைய
காலத்தில் பிறந்தவர்கள். ஆனால் அனைவருக்கும் பொதுவான பிரச்சனைகள் உள்ளன. போர்க்காலத்தில் கட்டுமான வளங்கள் அழிந்தன. அது உண்மை. பாடசாலைகள்ää மருத்துவமனைகள், வியாபார நிறுவனங்கள் போன்ற மக்கள் பயன்பாட்டு
இடங்கள் தாக்குதல்களுக்கு உள்ளாயின.

போருக்குப் பின்னரான காலத்தில், ‘வடக்கின் வசந்தம்” என்ற திட்டத்தின் கீழ் சில அபிவிருத்தி பணிகள் இடம்பெற்றன.

எனினும், இந்த அபிவிருத்திகளால் யார் பயனடைந்தார்கள் என்பது மிகப்பெரும் கேள்வி. அதேவேளை அந்த முன்னேற்றம் இராணுவத்தினரின் பயணம் மற்றும் நிலப்பயனபாட்டை அதிகரித்தது. காலங்காலமாக வாழ்ந்துவந்த தமிழர்கள்
தமது வாழ்வாதாரங்களையும்ää வளங்களையும் பறிகொடுக்கும் நிலை மெல்ல மெல்ல, ஆனால் சீராகத் தொடர்ந்து நடைபெற்றது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழர்களின் பாரம்பரிய இடங்கள், தலங்கள் திட்டமிட்டு இலக்கு வைக்கப்பட்டு அபகரிக்கும் பணிகள் அரச ஆதரவுடன் முன்னெடுக்கப்பட்டன. முன்னெடுக்கப்படுகின்றன.

இதற்கு குருந்தூர்மலை ஆதிசிவன் அய்யனார் ஆலய இடத்தில் சட்டத்தையும் மீறி ஒரு பௌத்த விகாரை கட்டப்பட்டுள்ளது ஒரு சிறந்த உதாரணம். அந்த ஆலயத்திற்கு அருகிலுள்ள குளத்தில் பாரம்பரியமாக மீன்பிடித்து வாழ்வாதாரத்தை முன்னெடுக்கும் தமிழர்களின்உரிமை கூட பறிக்கப்பட்டுள்ளது.

ஒரு சிறிய இடத்தில் மக்கள் சுதந்திரமாக தமது தொழிலைச் செய்ய முடியாத சூழல் முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலவுகிறது என்பதே யதார்த்தம்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் வாழும் 1,38,516 மக்களிற்கு மட்டும் நிலப்பற்றாகுறை நிலவவில்லை அந்த மாவட்டத்தின்பொருளாதாரத்தில் முக்கிய இடம் பிடிக்கும் 1,17,801 கால்நடைகளிற்கும் மேய்ச்சல் பரப்போ அல்லது மாரி மழையின்போது மாற்று இடமின்மை காரணமாகவும் ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான மாடுகள் அதன் உரிமையாளர்களின் கண் முன்னே இறந்து விழும் அவலம் இன்றுவரை இடம்பெறும் அந்த மாவட்டத்தில் காணப்படுகின்றது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் அவலத்திற்கு அரச நிர்வாக இயந்திரமே காரணமாக உள்ளதில் அதிக பங்கு வகிக்கும் திணைக்களங்களான வனவளத் திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்களம் என்பன உள்ளதை முதல் பாகத்தில் சுட்டிக் காட்டியிருந்தோம்.

அதற்கான ஆதாரமாக மாவட்டத்தில் இந்த இரு திணைக்களத்தின் நிலை தொடர்பானபுள்ளிவிவரம் பலரை தலைசுற்றவைக்கும். ஏனெனில் மாவட்டத்தின் மொத்த பரப்பளவானது 2,41,500 ஹெக்டேயர் அல்லது 5,96,505 ஏக்கர் அளவீட்டைக் கொண்ட நிலப்பரப்பாகும். இதிலே வனவளத் திணைக்களமானது 2009 ஆம் ஆண்டிற்கு முன்னர் 81,881 ஹெக்டேயர் நிலங்களை உரிமைகோரி அரச இதழ் பிரசுரித்துள்ளதோடு 2009 ஆம் ஆண்டிற்கும் 2015 ஆண்டிற்கும் இடையில் 67,806 ஹெக்டேயர் நிலங்கள்
தமது திணைக்களத்தின் ஆளுகை என அரச இதழ் பிரசுரித்துள்ளனர்.

இவற்றின் பிரகாரம் 3,69,726 ஏக்கர் நிலம் வனவளத் திணைக்களத்தின் பிடிக்குள்
சென்றுவிட்டது. இதிலே 2009 ஆம் ஆண்டிற்குப் பின்னர் அரச இதழ் வெளியிட்ட
நிலங்களிற்கு இன்றுவரை நில அளவைகூட செய்யப்படவில்லையென மாவட்டச்
செயலகமும் உறுதி செய்கின்றது.

இதேபோன்று இலங்கையில் நிலவிய ‘நல்லாட்சி” எனச் சொல்லப்பட்ட காலத்திலும் நிலங்களை அபகரிக்க இந்த திணைக்களம் தவறவில்லை. இக்காலத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தின் 6 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் 17,259 ஹெக்டேயர் அல்லது 42,623 ஏக்கர் நிலம் மேலும் சுவீகரிக்கப்பட்டது.

இவற்றின் அடிப்படையில் தற்போது முல்லைத்தீவில் மட்டும் ஒரு 1,66, 946 ஹெக்டேயர் அல்லது 4,12,356 ஏக்கர் நிலம் வனவளத் திணைக்களத்திடம் மட்டும் உள்ளது.

இதேபோன்று வன ஜீவராசிகள் திணைக்களத்தின் ஆளுகையின் 8,517.9 ஹெக்டேயர் அல்லது 21,037 ஏக்கர் நிலம் காணப்படுகின்றது. அரச திணைக்களங்கள் மக்களின் வாழ்வாதாரம் மற்றும் நலன்களைப் புறந்தள்ளி இவ்வாறு வன்னி பெருநிலப் பரப்பிலுள்ள முல்லைத்தீவு மாவட்டத்தின் வளமான பகுதிகளைக் கையகப் படுத்தியுள்ளது. பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களின்வாழ்வாதாரத்தை நேரடியாகப் பாதித்துள்ளது.

ஆனால் இந்த திணைக்களங்கள் தாம் கையகப்படுத்திய நிலங்களை எந்தளவிற்கு நாட்டிற்கும் மக்களிற்கும் பயனுள்ளதாக மாற்றியமைத்தது என்ற கேள்விக்கு எவரிடமும் பதிலில்லை.

இலங்கையைப் போன்றே உள்நாட்டு யுத்தத்தில் சிக்கித் தவித்து பிறகு மீண்டெழுந்த
பல லத்தீன் அமெரிக்க நாடுகள் அங்கிருந்த அபரிமிதமான காடுகளைää அவற்றை அழிக்காமல் மக்கள் பயன்பாட்டிற்கு எப்படிக் கொண்டு வந்து குறிப்பாகக் கரையோர மக்களின்வாழ்வாதாரங்களை மேம்படுத்தியது என்பதை அறிந்து இலங்கை ஆட்சியாளர்கள் பாடம் படிக்க வேண்டும்.

இந்த இரு திணைக்களங்களின் பிடியில் மட்டும் மாவட்டத்தின் 67.08 வீதமான நிலப்பகுதிகள் வனப் பகுதியாக மட்டுமே முல்லைத்தீவில் பேணப்படும் சூழலில் எஞ்சிய 32.92 வீதமானபகுதியே நிர்வாகää வாழ்வாதாரää தொழில் முயற்சி மற்றும் கற்றல் செயற்பாட்டு நிலங்களாக காணப்படுகின்றது. இந்த 32.92 வீதமான
நிலங்களிலும் 2.18 வீதமான நிலங்கள் சதுப்புநிலங்களாக எந்தவொரு பாவனைக்கும்
ஏற்புடையதற்றுக் காணப்படுவதனையும் மாவட்டச் செயலக புள்ளிவிவரம் உறுதி செய்கின்றது. அதன் அளவு மட்டும் 14,493 ஏக்கரைத் தொட்டு நிற்கின்றன. இவற்றின் அடிப்படையில் மாவட்டத்துன் மொத்த நிலமான 5,96,505 ஏக்கர் நிலத்தில் இரு திணைக்களத்திடம் 4,33,393 ஏக்கரும் சதுப்பு நிலம் 14,493 ஏக்கருமாக மொத்தம் 4,47,886
ஏக்கர் நிலம் போனால் எஞ்சிய நிலமாக 1,47,112 ஏக்கர் நிலம் மட்டுமே எஞ்சிய அனைத்து விதமான செயல்பாட்டிற்கு உள்ளன.

இவை அனைத்திற்கும் அப்பால் மாவட்டத்தில் 35,403 ஹெக்டேயர் அல்லது 87,447 ஏக்கர் நிலம் விவசாய நிலமாக காணப்படுகின்றது. அதாவது மாவட்ட நிர்வாக அலகின் ஆளுகையில் இருப்பதாகக் கூறப்படும் 1,47,112 ஏக்கர் நிலத்திலும் 87,477 ஏக்கர் விவசாய நிலம் தவிர்க்கப்பட்டால் அல்லது விவசாய பாவனையெனில் – வெறுமனே 61,172 ஏக்கர் நிலம் மட்டுமே அங்கே அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்ய காணப்படுகின்றது.

புள்ளி விவரங்கள் வாசிப்பதற்குஉளைச்சலாகவும் தலைச்சுற்றுவதாகவும் இருக்கலாம். ஆனால் ஆழமான புரிதல் மற்றும் பிரச்சனைகளின் தாக்கத்தைப் புரிந்துகொள்வதற்கு
அந்த எண்ணிக்கைகள் மிகவும் அவசியமானவை. எதிர்காலத் திட்டமிடலுக்குப் புள்ளி விவரங்கள் இன்றியமையாதவை என்பதாலேயே மிகவும் சிரமங்களுக்கு இடையே சேகரிக்கப்பட்ட தரவுகள் இங்கு அளிக்கப்பட்டுள்ளன.

இந்த 61,172 ஏக்கர் நிலத்திலேயே மக்களின் 30 ஆயிரம் வரையான வாழ்விடங்கள் உள்ளன. இதிலிருந்து மிகவும் விலாசமான நிலப்பரப்புள்ள ஒரு மாவட்டத்தில் மக்கள் எப்படியான சன நெருக்கடியில் வாழ்கிறார்கள் என்பதை ஊகிக்க முடியும். குறைந்த நிலப்பரப்பில் மக்கள் செறிந்து வாழும் போதுää வளங்கள் இருந்தும் பற்றாக்குறை
ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.

அந்த நெருக்கடியைத் தீர்க்க அரசு ஏன் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவில்லை.
திட்டமிடலில் என்ன குளறுபடிகள் என மக்கள் பிரதிநிதிகள் தொடர்ந்து கேட்டாலும்அதற்கு உரிய பதில்கள் அளிக்கப்படுவதில்லை. இதற்கு மிக முக்கியமான காரணம் தேவைக்கும் அதிகமாக அங்கு நிலைகொண்டிருக்கும் இராணுவப்
பிரசன்னமே காரணம் என்று சுட்டிக்காட்டப்படுகிறது.

மாவட்டத்தின் நிர்வாக விடயங்கள் ஏனைய பொதுப்பயன்பாடுகளுக்கென முல்லைத்தீவு மாவட்டத்திலே 300ற்கும் மேற்பட்ட குளங்கள் உள்ளன. இந்த 300 குளங்களில் 100 குளங்கள் வனவளத் திணைக்கள பகுதிகளில் இருந்தாலும்
எஞ்சியவை வெளிப் பிரதேசத்திலும் உள்ளன.

மூன்றில் ஒரு பங்கு நீர் ஆதாரம் வனவளத் திணைக்களப் பகுதியில் இருந்தாலும் வனப்
பாதுகாப்பிற்குப் பாதகம் வராமல் அந்த நீரை மக்களின் வாழ்வாதாரங்களுக்கு முழுமையாக பயன்படுத்த முடியும். வனவள திணைக்களத்தின்நிர்வாகப் பகுதிகளில் மக்கள் எட்டியும் பார்க்க முடியாதபோதும் இராணுவத்தினர் மட்டும் எவ்விதமான கட்டுப்பாடுகளும் இன்றி சென்றுவர முடியும். அது அன்றாடம் நடைபெறுகிறது.
இதே நேரம் நிர்வாக ரீதியிலான நிலத்திலேயே மாவட்டத்தின் இரு கல்வி வலயங்களான துணுக்காய் முல்லைத்தீவு ஆகியவற்றின் கீழ் மாணவர்களிற்கான 127
பாடசாலைகளும், மாவட்டச் செயலகம்ää 6 பிரதேச செயலகங்கள், கிராம சேவகர் அலுவலகம் அல்லது பொது நோக்கு மண்டபம்ää பிரதேச சபைகள் கமநல
சேவை நிலையங்கள், மத்திய மாகாண அரச திணைக்களங்களிற்கான அலுவலக கட்டிடங்களும் அமையப் பெற்றுள்ளன. இவற்றிற்கும் கணிசமானநிலங்கள் போகும்.

இவ்வாறு மேற்சொன்ன புள்ளி விவரங்களே அந்த மாவட்டத்தின் வறுமைக்கு பிரதான
காரணமாகவுள்ளது. அரச நிர்வாக இயந்திரமே என்ற எனது கூற்றை மெய்ப்பிக்கும் தற்போது பலரும் ஏற்பீர்கள் என நம்புகின்றேன்.

இந்த நிலையில் மனித பாவனைக்கும் கால் நடைகளின் உணவுத் தேவைக்கும் என
வனவளத் திணைக்களம் மற்றும் வன ஜீவராசிகள் திணைக்களம் பிடித்துள்ள நிலங்களில் இருந்து உடனடியாக 17,710 ஹெக்டேயர் அல்லது 43,743 ஏக்கர் நிலத்தை மீள விடுவிக்க வேண்டும் என மாவட்ட செயலகம் அவசரமாக கோரி நிற்கின்றது. மாவட்டச் செயலகத்தில் கோரிக்கை கொழும்பிலுள்ளவர்கள் காதில் விழுமா? இந்த அவலங்கள் இவ்வாறு இருக்க அங்கே முன்னேற்றங்களுக்கு எடுக்கப்பட்ட முயற்சிகளும் செயல்பாடட்று அல்லது கைவிடப்பட்டுக் காணப்படுகின்றன. அந்த
அவலங்களை இத்தொடரின் அடுத்த பகுதியில் பார்ப்போம்.

———————————————————————————————————-

நீர் வளம், நில வளம் உள்ள முல்லை மண்ணில் நிம்மதி ஏன் இல்லை?
( பாகம் 03)

உலகெங்கும் வளமான விளைநிலங்கள் இராணுவப் பயன்பாடு உட்பட இதர பயன்பாடுகளுக்கு உபயோகப்படுத்தப்பட்டு வரும் நிலையில், உணவு நெருக்கடி பல நாடுகளில் தலைதூக்க ஆரம்பித்துள்ளது. இதற்கு இலங்கையும் விதிவிலக்கல்ல.

அண்மையில் ஐ.நாவின் அங்கமான உலக உணவுத்திட்டம் மற்றும் உணவு மற்றும் விவசாய அமைப்பு இலங்கை தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையை வாசித்தால் கவலை மட்டுமல்ல கலக்கமும் ஏற்படும். இலங்கையில் உணவு நெருக்கடி மற்றும் பாதுகப்பின்மை ஏன் ஏற்பட்டுள்ளது, அது ஏன் மேலும் தீவிரமடையும், அதற்கான தீர்வுகளை எப்படிப் பெற்றுக்கொள்ள முடியும் போன்றவகை புள்ளிவிவரங்களுடன் அந்த அமைப்புகள் வெளியிட்டுள்ளன.

அதில் முக்கியமான பரிந்துரைகளில் ஒன்று, நாட்டில் ஒவ்வொரு துண்டு நிலத்தையும் அறிவியல் ரீதியான விவசாய முறைகள் மூலம் பயன்படுத்தி, உணவு உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் துறைசார் வல்லுநர்கள் கூறுவதை கேட்டு ஆட்சியாளர்கள் அதை நாட்டு நலனிற்காகச் செயல்படுத்துவதில்லை என்பது இலங்கையின் சாபக்கேடு.

ஆட்சியில் இருக்கும் ”ஆல் இன் ஆல் அழகு ராஜாக்களின்” அனைத்தும் யாமரிவோம் என்ற எண்ணப்பாடே காரணம் என்கிற குற்றச்சாட்டும் உள்ளது. இலங்கையில் நிர்வாகக் குளறுபடிகள், மறைமுகச் செயல்பாடுகள் மற்றும் திட்டமிடலின் தோல்வி ஆகியவை எப்படி விவசாய உற்பத்தியை பாதித்துள்ளன என்பதற்கு முல்லைத்தீவு மாவட்டத்தை ஒரு உதாரணமாகக் கருத முடியும்.

இந்த மாவட்ட நிலப் பரப்பின் அளவு, அதில் மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள நிலம், எஞ்சிவை என அனைத்தும் புள்ளி விபரங்களுடன் பட்டியலிட்டோம். இதேநேரம் தொழில் வாய்ப்பாகவும், வாழ்வாதார மையங்களாகவும், அழிவடைந்த இடங்களும் இன்றும் பயிர்ச் செய்கைக்குகூட தடை விதிக்கப்பட்டே காணப்படுகின்றன. அதனையும் அரச  திணைக்களங்கள் ஆக்கிரமித்துள்ளமை 
கடந்த பகுதுகளில் புள்ளிவிவரங்களுடன் பட்டியலிடப்பட்டது.

இந்த பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வாழ்வாதார இடங்களை சான்று ஆவணங்களுடன் அளிக்க விழைந்துள்ளோம். கடின முயற்சிகளுக்கு பிறகு சில ஆவணங்கள், பிரதிகள், குறிப்புகள், வரைபடங்கள் போன்றவற்றை கண்டறிய முடிந்தது.

உதாரணமாக 1968 ஆம் ஆண்டு  நெல் அல்லாத பயிர்ச் செய்கைக்கு 2,534 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டு   உருவாக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தின்  மன்னகண்டல் ஏற்று நீர்ப்பாசண நிலம் மட்டுமன்றி இயந்திரத் தொகுதி, நீர்வாய்க்கால்  அமைவிடத்தைக்கூட இன்று  வனவளத் திணைக்களமே ஆக்கிரமித்து நிற்பதாக அங்கே பயிர்ச் செய்கை மேற்கொண்டவர்கள்  கவலை தெரிவிக்கின்றனர்.

இதற்கு அப்பால் முல்லைத்தீவு மாவட்டத்தின் 278 சதுரக் கிலோ மீற்றர் நிலப் பரப்பளவு பிரதேசம் எவருக்குமே தெரியாது அந்த மாவட்டத்தில் இருந்து காணாமல் போயுள்ளது என்கிற அதிர்ச்சித் தகவல்  தெரியவந்துள்ளது.

எல்லை மீள் நிர்ணயத்தின் பின்பு முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து 278 சதுரக் கிலோ மீற்றர் பரப்பளவைக் காணவில்லை என்ற அதிர்ச்சி தகவல் தற்போது வெளி வந்துள்ளது. இது பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலு ஒரு திரைப்படத்தில் கிணற்றைக் காணவில்லை என்று கூறுவது போலுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டமானது 2020 ஆம் ஆண்டின் ஆரம்பம் வரையில் மாவட்டத்தின் சகல தரவுகளின் அடிப்படையில் 2,693 சதுரக் கிலோ மீற்றர் பரப்பளவைக் கொண்டிருந்த ஓர் மாவட்டமாகும். ஆனால் 2021 ஆம் ஆண்டு புதிய எல்லை மீள் நிர்ணயத்தின் பின்பு நில அளவைத் திணைக்களம் மாவட்டச் செயலகத்திற்கு வழங்கியுள்ள தகவலின் அடிப்படையில் 2,415 சதுரக் கிலோ மீற்றர் பரப்பளவே காட்டப்படுகின்றது. இதை மாவட்ட நிர்வாகமும் உறுதி செய்கின்றது.

அவ்வாறானால் 278 சதுரக் கிலோ மீற்றர் நிலப்பரப்பு அதாவது 27,800  கெக்டேயர் நிலப்பரப்பு எங்கே என்ற பெரும் சர்ச்சை ஏறபட்டுள்ளது. இதனால் அயல் மாவட்டங்களான வவுனியா, கிளிநொச்சி மாவட்டங்களை ஆராய்ந்தபோது வவுனியா மாவட்டத்தில் 76 சதுரக் கிலோ மீற்றர் பரப்பளவு அதிகரித்துள்ளது. இதேபோன்று கிளிநொச்சி மாவட்டத்தின் மொத்த அளவு கடந்த ஆண்டு வரையில் ஆயிரத்து 237 சதுரக் கிலோ மீற்றராக காணப்பட்டபோதும் தற்போது 1,340 ச.கிலோ மீற்றர் என்கின்றது நில அளவைத் திணைக்களம்.

அதாவது  முல்லைத்தீவு மாவட்டத்தில் காணாமல்போன 278 சதுரக் கிலோ மீற்றரில் பொபஸ்வேவ திசையின் ஊடாக வவுனியா வடக்கில் அதிகரித்துள்ள 73 சதுரக் கிலோமீற்றருமாக மொத்தம் 176 ச.கி.மீற்றர் கண்டு பிடிக்கப்பட்ட நிலையில் முல்லையில் காணாமலபோன  278  சதுரக் கிலோ மீற்றரில் மிகுதி 102 சதுரக் கிலோ மீற்றரும்  வெலி ஒயா பிரதேச செயலாளர் பிரிவில் இருந்து பதவியாவுடன் அல்லது மதவாச்சியுடனும் சில பகுதி செல்கின்றதா என்ற பெரும் சந்தேகம் எழுப்பப்படுகின்றது. இதற்கு மாவட்ட அதிகாரிகளிடம்  இருந்தும் உரிய பதில் சரியான முறையில் வெளிவரவில்லை.

இது ஒருபுறமிருக்க   முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் 1968ஆம் ஆண்டு  ஏற்று நீர்ப்பாசணம், கால்வாய் நீர்ப்பாசணம் என இரு  திட்டங்களின் கீழ் தலா 3 ஏக்கர் வீதம் நீர்ப்பாசணத் திணைக்களம் ஊடாக  பயணாளிகளிற்கு  வழங்கப்பட்டது.

இதில் 2,534 ஏக்கர் 1968 இல் முத்தையன்கட்டு குளத்தின் கீழ்  நெல் அல்லாத பயிர்ச் செய்கைக்கு அனுமதிக்கப்பட்டு 1990ஆம் ஆண்டு வரையில்  பயிர்ச் செய்கையும் இடம்பெற்றன. ஆனால் இப்பகுதியில் 9,000 ஏக்கர் நிலம் 1921 ஆம் ஆண்டே காடாக அரச இதழ் வெளியிட்டதாகவும் அதில்  இந்த மன்னகண்டல் காணி உள்ளிட்ட பகுதியும் அடங்குவதனால் அங்கே பயிர்ச் செய்கைக்கு அனுமதிக்க முடியாது என்கின்றது  வனவளத் திணைக்களம்.

அதாவது இந்தப் பகுதியை தனது பிடியில் வைத்துக்கொண்டு பயிர்ச் செய்கைக்கு அனுமதி மறுக்கின்றனர். அவ்வாறானால் 1968 முதல் 1983 ஆம் ஆண்டு வரை என்ன செய்தீர்கள் என்ற வினாவிற்குப் பதில் கிடையாது. இதற்கான ஆதாரமாக 1968 ஆம் ஆண்டு  3 ஏக்கர் வீதம் வழங்கியபோது நீர்ப்பாசணத் திணைக்களம் வரைந்த வரைபடம் எமக்கு கிட்டியது. (அதனை இங்கே தருகின்றேன் ).

இதேநேரம் ஏற்று நீர்ப்பாசணம் நடந்த இடத்தில் வாய்க்கால்கள் இன்றும் சாட்சியாகவுள்ளன. இதற்கு புகைப்பட ஆதாரமும் உள்ளது.

முல்லைத்தீவின் குருந்தூர் மலையிலே அமைக்கப்படும்  விகாரையுடன்  259 ஏக்கருக்கு குறைவான நிலம் காணப்பட்டமைக்கு சில ஆதாரங்கள் முன்வைக்கப்படுவதனால் அந்த 259 ஏக்கர் நிலத்தையும் விகாரைக்கு  வழங்க மாவட்ட அரச நிர்வாகம்  முன் வருகின்றபோதும் விகாரையை நிரவகிக்கும்  பௌத்த துறவியோ 430 ஏக்கர் நிலத்தை அபகரிக்க முயல்வதனாலேயே அங்கும் சர்ச்சை நிகழ்கின்றது என மாவட்டச் செயலகம் அறிக்கையிட்டுள்ளது.

மாவட்டத்தின் மற்றுமோர் மிகப்பெரிய சொத்தாகவும் 150 முதல் 200 பேருக்கான வேலை வாய்ப்பாகவும் திகழ்ந்த கூழாமுறிப்பு ஓட்டுத் தொழிற்சாலை இன்றும் பாழடைந்து காணப்படுகின்றது. இலங்கையில் போர் உச்சம பெற்ற  1990ஆம் ஆண்டுடன் அரச நிர்வாகம் இத்தொழிற்சாலையை முழுமையாக கைவிட்டது. அதனால்  தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகம் இத் தொழிற்சாலையை  6 ஆண்டுகள் இயக்கினர். இதன்போது  ஓட்டுசுட்டான் தொழிற்சாலை எனவும் பண்டாரவன்னியன் ஓட்டுத்  தொழிற்சாலை எனவும் இயங்கிய காலத்தில்  1997 ஆம் ஆண்டு சண்டியன் ஜெயசிக்குறு என்னும் இராணுவ நடவடிக்கையில் இராணுவம் முன்னேறிய சமயம் தொழிற்சாலை  முழுமையாக கைவிடப்பட்டு அழிவடைந்து செல்கின்றது.

பல நூறு கோடி ரூபா சொத்துப் பெறுமதியில் இருந்த தொழிற்சாலை இன்று இரும்பாகவே காட்சி தருவது அங்கே பணியாற்றிய பலரின் கண்களில் இரத்த கண்ணீரையே வரவழைக்கிறது. 1991 முதல் 1997 வரையான காலப் பகுதியில் அயல்  கிராமங்களிற்கு ஒளியூட்டிய இடமாகவும் இதே தொழிற்சாலை விளங்கியது. இங்கிருந்த மின் பிறப்பாக்கி மூலம் மின்சார விநியோகம் இடம்பெற்றது.

இவற்றைப்போன்றே கொக்குத்தொடுவாய்- தென்னமரவடி இணைப்பு பாலம் அமைத்து தருமாறு 50 ஆண்டுகளாக அப்பகுதி மக்களால்  கோரிக்கை முன் வைக்கப்படுகின்றது. இந்தப் பாலத்தை அமைக்க 1,500 மில்லியன் ரூபா வேண்டும் என 2017 ஆம் ஆண்டு கணக்கிடப்பட்ட நிலையில் தற்போது 3,500 மில்லியன் ரூபா வேண்டும் என்ற நிலையில் இனி அமைக்கப்படுமா என்கின்ற கேள்வியும் உள்ளது. இப்பாலம் அமைக்கப்பட்டால் கரையோரமாக திருகோணமலை யாழ்ப்பாணம் வரையான போக்குவரத்துக்கள் இலகுபடுத்தப்படும். மறுபுறத்தே  வட்டுவாகல் பாலம் அமைக்க ஆயிரம் மில்லியன் ரூபா 2016ஆம் ஆண்டில்  கோரப்பட்டது அவ்வாறானால் இனி 2,250 மில்லியன் ரூபாவும் போதாது என்கின்ற நிலைமையே காணப்படுகின்றது. இப்பாலம் உள்ளிட்ட சுமார் 2 கிலோ மீற்றர் புனரமைப்பு செய்யப்பட்டால் தினமும் பல ஆயிரம் பேர் வருகை தரும் சுற்றுலாப் பிரதேசமாக இப்பகுதி மாறும் அதன் மூலம் பல நூறுபேருக்கு வேலை வாய்ப்பும் பெருந்தொகை அந்நியச் செலவாணி ஈட்டும் இடமாகவும் வளர்ச்சி அடையும்.

ஆனால் இப் பாலம் இன்றுவரை கேள்விக்குறியாகவே உள்ளது. வடக்கையும் கிழக்கையும் இணைக்க கோருபவர்கள் வடக்கிற்கும் கிழக்கிற்கும் இணைப்பாக உள்ள கொக்குத்தொடுவாய்ப் பாலம் அமைக்க (இணைக்க)  முன் வரவேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்.

வீதிகள், இடங்களின் அவலத்தை பட்டியலிடும்போது இலங்கையிலேயே முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெற்ற கேலிக்குரிய வீதிப் புனரமைப்பையும் சுட்டிக் காட்டத்தான் வேண்டும். அதாவது இலங்கையிலேயே வீதிக்கு படிகட்டிய கேலிக்கூத்து முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவிப் பகுதியில் மகிந்தவின் ஆடசிக் காலத்திலேயே இடம்பெற்றது. அது என்ன என்பது உட்பட அடுத்த வாரம் பார்ப்போம்.

( அவலப் பட்டியல் நீளும் )

நீர் வளம், நில வளம் உள்ள முல்லை மண்ணில் நிம்மதி ஏன் இல்லை?

பாகம் 04

பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை அதிலிருந்து ஓரளவேனும் மீண்டு வருவதற்கு சுற்றுலாத்துறையை பெரிதும் நம்பியுள்ளது. அவர்கள் மூலம் டொலர்கள் வரவு அதிகரிக்கும் என்று இலங்கை அரசு நம்புகிறது.

அவ்வகையில் சுற்றுலா வருபவர்கள் பெரும்பாலும் தலைநகர் கொழும்பு அதை அண்மித்த மாவட்டங்கள், தென்னிலங்கை மற்றும் மத்திய மலைநாட்டுப் பகுதிக்கே அதிகம் வருகின்றனர். கடற்கரை அழகை கண்டு களிப்பதற்கு கிழக்கு மாகாணத்தின் பாசிக்குடா கடற்பகுதிக்கும் அவர்கள் வருவதுண்டு.

ஆனால், போரினால் பாதிக்கப்பட்ட வட மாகாணத்தை மையப்படுத்தி, புலம்பெயர்ந்த தமிழர்களைத் தவிர இதர மக்கள் யாரும் சுற்றுலாவிற்கு என்று வன்னிப் பகுதிக்கு வருவதாகத் தெரியவில்லை.

எனினும், வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு சுற்றுலா வருபவர்களும் உள்நாட்டிலேயே சுற்றுலா செல்பவர்களும் கண்டிப்பாக முல்லைத்தீவில் உள்ள அதிசயத்தையும் கண்டு களிக்க வேண்டும். ஆசியாவின் அதிசயம் என்று தன்னைக் கூறிக்கொள்ளும் இலங்கையில் மட்டுமல்லா வேறு எங்கும் இருப்பதாக நானறியவில்லை.

அந்த அதிசம்தான் வீதிக்கு படிக்கட்டு கட்டியுள்ள அதிசயமாகும். அதாவது முல்லைத்தீவு மாவட்டத்தின்  மாங்குளம் சந்தியில் இருந்து துணுக்காய் செல்லும் பிரதான சாலையானது வீதி அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமானது. இந்த வீதி புனரமைப்புச் செய்யப்பட்டபோது மல்லாவி நகரின் மத்தியில் வீதி ஏறகனவே  உயரமாகவும் அனிஞ்சியன்குளம் பாடசாலை முன்பாக மிகவும் இறக்கமாகவும் உள்ளதனால் வீதியின் உயரத்தில் ஏறுவது  சிரம்மாகவுள்ளதோடு மழைகாலத்தில் பாடசாலையை நோக்கி அதிக வெள்ளம் வருவதனால் சிரமத்தை போக்க பாடசாலை முன்பாகவிருந்து சரிவாக வீதியை உயர்த்தித் தருமாறு அந்தப் பகுதி  மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதன்போது இப்பணிக்கு வீதி வேலைக்கு மேலதிகமாக 15 கோடி ரூபா நிதி வேண்டும் எனக் கணக்கிடப்பட்ட சமயம் அந்த நிதியை பெறவும் அப்பகுதி மக்கள் அலைந்து திரிந்து ஒப்புதல் பெற்றுக் கொடுத்தனர்.

இந்த வீதி அமைப்பின்போது அனிஞ்சியன்குளம் பாடசாலை முன்பாக பள்ளமாக இருந்த இடத்தில் 3 அடி உயர்த்தி  சமன் செய்ய வேண்டிய  வீதியில் மெத்தப்படித்த பொறியியலாளர்கள் ஏற்கனவே உயரமாக இருந்த அதே  இடத்தில் மேலும் 3 அடி உயர்த்தி மல்லாவி நகரில் இருந்த அத்தனை வர்த்தக நிலையத்தையும் புறமொதிக்கு போக்குவரத்திற்கும் சீர் அற்ற ஒரு வீதியை அமைத்தனர். இதன்போது  15 கோடி ரூபாவினையும் விரயம் செய்து தரம் அற்ற அபிவிருத்தி ஒன்றை மேற்கொண்டபோது மல்லாவி மக்களும் வர்த்தக சங்கமும் சந்திக்காத அதிகாரிகளும் இல்லை கோரிக்கை விடாத அமைச்சர்களும் இல்லை.

இதனையடுத்து அந்த அதிசய கட்டுமானம் செய்யப்பட்ட இடத்திற்கு வடக்கு மாகாண முதலமைச்சர் வரை நேரில் சென்று பார்த்தபோது உயர்த்திய அளவை உடைத்து தருமாறு மக்களும் வர்த்தகர்களும் கெஞ்சினர்.

ஆனால், அந்த வீதியை உடைத்தால் கட்டுமான வேலை செய்தவர்களே செலவு செய்த பணம் முழுவதையும்  பொறுப்பேற்க வேண்டி வரும் என்பதனாலும் அதற்கு பொறுப்பானவர்களின் வேலைக்கே ஆபத்து நேரிடும் என்பதனாலும் அதிகாரிகள் அது தொடரபில் சிந்திக்கவே மறுத்து விட்டனர். இதன் பின்னரே வீதியின் நடுவே இருந்து கரைக்குச் செல்ல வீதியில் இரு இடங்களில் படிகட்டும் கேலிக்கூத்து இடம்பெற்றது. இந்த வீதியை உடைத்து தருமாறு அப்பகுதி மக்கள் இன்றும் கோரிக்கை விடுக்கின்றனர்.

வீதிப்பணிக்கு அநியாயமாக 15 கோடி ரூபா செலவு செய்தபோதும் அவலங்கள் மட்டுமே அதிகம் நிறைந்த மாவட்டமான முல்லைத்தீவில் சகல தரத்திலான 2 ஆயிரத்து 95 கிலோ மீற்றர் நீளமான வீதிகள் காணப்படும் நிலையில் போர் முடிந்து 13 ஆண்டுகள் கடந்தும்  இன்றுவரை 414 கிலோ மீற்றர் வீதிகளே தார் வீதிகளாகவும், தார்ப் படுக்கை ( காப்பெற் ) வீதிகளாக மாற்றப்பட்டு 1,681 கிலோ மீற்றர் வீதிகள்  கிடங்கும், கிரவலும், மண்ணுமாகவே காட்சி தருகின்றன.

அதாவது வீதிகள் அனைத்துமே வீதி அபிவிருத்தி அதிகார சபை, வீதி அபிவிருத்தி திணைக்களம் மற்றும் உள்ளூராட்சி சபைகளிற்கு சொந்தமானவை. இவை தவிர விவசாயத் திணைக்களத்திற்கு சொந்தமான போக்குவரத்து பாதைகளும் உண்டு.  

இவற்றிலே தர வீதியில் 99.92 கிலோ மீற்றர் வீதியும் பி தரத்தில் 103.13 கிலோ மீற்றர் வீதியுமாக 203 கிலோ மீற்றர் நீள வீதியானது வீதி அபிவிருத்தி அதிகார சபையின் ஆளுகையின் கீழும், வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ்த்தர வீதியில் 399.95 கிலோ மீற்றர் வீதியும்  டீ தர வீதியில் 17.5 கிலோ மீற்றரும்  உள்ளது.

இதேபோன்று  உள்ளூராட்சி சபைகளிற்கு சொந்தமான வீதிகளில் 1,475 கிலோ மீற்றர் வீதிகள்  உள்ளன. இவற்றிலே சீ மற்றும் `டீ’ தர வீதிகளில் போர் முடிந்து 13 ஆண்டுகள் கடந்தும் 80 கிலோ மீற்றர் வீதி மட்டுமே முழுமையான தார் வீதியாக செப்பனிடப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி சபைகளிற்கு சொந்தமான 1,475 கிலோ மீற்றர் வீதியில் கொங்கிறீட் வீதிகளாக 35 கி.மீற்றரும் தார் வீதிகளாக  99 கிலோ மீற்றரும் புனரமைப்புச் செய்யப்பட்டுள்ளது. இதே நேரம் மேலும் 711 கி.மீ வீதியானது கிரவல் கொண்டு சீர் செய்யப்பட்டுள்ள அதே நேரம் மேலும் 626 கி.மீற்றர் வீதி வெறும் மணல் வீதிகளகவே உள்ளது.

இந்த ஒரு விபரமே இந்த மாவட்டத்தின் அவலத்தின் தன்மையை எடுத்தியம்பும் என நம்புகின்றேன்.

இன்று உலகம் முழுக்க வருமானத்தின் பெரும்பகுதி இரு விடயங்களிற்கே செலவிடப்படுகின்றது. அது இலங்கைக்கும் பொருந்தும். அது முல்லைத்தீவிற்கு மட்டும் விதி விலக்கு அல்ல. அதாவது உலகம் இன்று கல்வி மற்றும் சுகாதாரம் ஆகிய இரு துறைகளிற்கே அதிக பணம் அல்லது வருமானத்தின் பெரும்பகுதி செலவிடப்படுகின்றது. அது அரச வைத்தியசாலை, அரச பாடசாலைகளிற்கு அப்பால் தற்போது இலங்கையில் தனியார் வைத்தியசலை மற்றும் தனியர் கல்விக் கூடங்களிலையே அதிகம் நாடுவதன் மூலமே பெரும்தொகை நிதி வெளிச் செல்கின்றது.

வடக்கு மாகாணத்தில் அதிக வைத்தியசாலையோ அல்லது அதிக கல்வி நிலையங்களோ  யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா மாவட்டங்களில்தான் உள்ளன. அதனால் கல்வி மற்றும் சுகாதாரங்களிற்காக  முல்லைத்தீவில் செலவு செய்யும் நிதியும் பிற மாவட்டத்திற்கே செல்கின்றது. இதனை போக்க தனியார் வைத்தியசாலைகள் முல்லைத்தீவில் முதலிடவும் அதிகம் நாட்டம்கொள்ளமாட்டார்கள். ஏனெனில் இதிலும் இரு முக்கிய விடயங்கள் தாக்கம் செலுத்துகின்றன. ஒன்று வைத்தியர்கள் இரண்டாவது அதிக எண்ணிக்கையானோர்.  இது இரண்டையும் முல்லைத்தீவில் எதிர்பார்ப்பது மட்டுமல்ல அங்கே கிடையாது எனபதே யதார்த்தம். அதனால் இதனை எக்காலத்திலும் இங்கே நிவர்த்தி செய்ய முடியாது என்பதும் தெரிகின்றது. ஏனெனில், மாவட்டத்திற்கு 95 வைத்தியரகள் தேவையாகவுள்ள நிலையில் இன்றுவரை 61 வைத்தியர்களே பணியில் உள்ளனர். இதே நேரம் இவர்களிலும் 20ற்கும் மேற்பட்டவர்கள் சிங்களவர்கள். அவ்வாறானால் ஏன் மருத்துவர்கள் இந்த இடங்களில் பணியாற்ற முன்வருவது இல.லை எனக் கேள்வி எழுந்துள்ளது. இந்தக கேள்வியை மருத்துவர்களிடம் எழுப்பும் போது மருத்துவர்கள் எழுப்பும் பதில் கேள்வியிலும் நியாயம் இருப்பதாகவே தெரிகின்றது.

அதாவது இந்த மாவட்டத்தில் இருந்து ஆண்டிற்கு 4 அல்லது 5 பேர் மருத்துவத்துறைக்கு தேர்வாகின்றனர். அதன்படி 2010ஆம் ஆண்டிற்கு பின்பு தேரவானவர்களிலேயே 35 முதல் 40 பேர் வரை மருத்துவர்களாக வெளிவந்துள்ளனர். ஆனால் அந்த மாவட்ட வைத்தியர்களே 20பேர்தானே பணியில் உள்ளனர். அதாவது அந்த மாவட்ண மக்கள் தொகையின் பிரகாரம் மாவட்ட கோட்டாவில் தேரவாகி பல்கலைக்கழகம் வந்த மருத்துவரகளே யாழ்ப்பாணம், கொழும்பு, கண்டி மற்றும் வெளிநாடு எனப் பணியாற்றும்போது நாம் ஏன் அவர்கள் தொடர்பில் மட்டும் சிந்திக்க வேண்டும் என எழுப்பும் பதில் கேள்வியால் அந்த விடயத்திறகு அத்தோடு முற்றுப்புள்ளி இடப்பட்டது.

இதேநேரம் வைத்தியசாலைகளின் தேவை தினமும் வேறுபட்டதாக இருப்பினும் 2016ஆம் ஆண்டுவரை உயிரிழந்தவர்களின் உடல்களை பிணவறையில் கைத்தொலைபேசியின் வெளிச்சத்தில் தேடும் அவலத்துடனேயே இங்கே காணப்பட்டதன் சான்று இன்றும் உள்ளது.

இவை இவ்வாறெனில் மாவட்டத்தில் 3,389 குடும்பங்கள்  இருப்பிடத்திற்கு காணி இன்றியும் 9 ஆயிரம் குடும்பங்கள் இருப்பிடம் இன்றியும் உள்ளதாக கணக்கிடப்பட்டாளும் 922 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டும் உரிமையாளர்களை காணவில்லை என்னும் நிலையில் அநாதரவாக காணப்படுகின்றன. அதாவது இவை அணைத்தும் வீட்டுத் திட்டங்களின் ஊடாக வழங்கப்பட்ட வீடுகள் என்பதுதான் மிகப்பெரும் ஆச்சரியம்.

பாமர மக்களிற்கு வழங்கிய வீடுகளில்தான் மக்கள் இல்லை என்றால்,  சில முஸ்லீம் மக்கள் புத்தளத்திலும் வீடுகளை வைத்திருக்கும் நிலையில் இங்கும் வீட்டுத் திட்டம் வழங்கியதனால் அவை இன்று கட்டப்பட்ட காலம் முதல் பாழடைகின்றன எனக் கூறப்பட்டாலும் மாங்குளம் பகுதியிலே 100 அரச உத்தியோகத்தர்களிற்கு அரச வீட்டுத் திட்டம் வழங்கப்பட்டது. அந்த திட்டத்தில் இன்று 15 வீடுகளில் கூட மக்கள் இன்றி அவை பாழடைந்து காணப்படுவதுடன் சமூக விரோத செயலகளின் கூடாரமாகவும் காணப்படுவதாக குற்றம் சாட்டுவதோடு இதுதான் இந்த மாவட்டத்தின் அபிவிருத்தியின் அடையாளமாகவும் காட்சி தருகின்றது எனகின்றனர் அயல்கிராம மக்கள்.  

————————————————————————————————————-

நீர் வளம், நில வளம் உள்ள முல்லை மண்ணில் நிம்மதி ஏன் இல்லை?

நீர் வளம், நில வளம் உள்ள முல்லை மண்ணில் நிம்மதி ஏன் இல்லை?
November 24, 2022

பாகம் 05)

கார்த்திகை மாதம் ஈழத்தமிழர்களுக்கு மிகவும் உணர்வுபூர்வமானது. சமூக சமய ரீதியாகவும்   முக்கியத்துவம் உள்ளது. 

ஈழத்தில் கார்த்திகை மாதம் மாவீரர்கள் தினத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டது. தமிழர்களுக்கு தனி தேசமே தீர்வு என்ற கொள்கையை அடிப்படையாக வைத்து ஆயுதக் குழுக்கள் அரசிற்கு எதிராகப் போராட்டங்களை முன்னெடுத்தன. இதன் முன்னணியில் இருந்து இறுதிவரை  விடுதலைப் புலிகள் அமைப்பினர் மட்டுமே  இருந்தார்கள். உள்நாட்டுப் போரின் போது உயிரிழந்தவர்களை  நினைவுகூரும் வகையில் கார்த்திகை மாதம் மூன்றாம் வாரம் `மாவீரர் வாரம்` அனுசரிக்கப்படுகிறது. 

அதிலும் முல்லைத்தீவு மாவட்ட மண்ணே போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள், அப்பாவி மக்கள் மீதான தாக்குதல்கள், கல்விச்சாலைகள் மற்றும் மருத்துவமனைகள் மீதான தாக்குதல் ஆகிய அவலங்களுக்கு இன்றளவும் மௌனமான சாட்சியாக உள்ளது. 

முல்லைத்தீவு எக்காலத்திற்கும் சிவந்த மண்ணாகவே இருக்கும். அந்தளவிற்கு ரத்தக்களறி இடம்பெற்ற பூமி அது. 

இறுதிப்போர் வரை வலி சுமந்த முல்லைத்தீவு  பூமியில் அந்த மாவட்ட மக்களின் அவலத்திற்கு மட்டுமன்றி ஒட்டுமொத்த இனத்தின் அவலத்திற்கும் சாட்சியாகவுள்ளது. அந்த மண்ணில் நாளை மறுதினம் (27) தமது உறவுகளை நினைவு கூர்ந்து அகவணக்கம் செலுத்தி நினைவுச் சுடர் ஏற்றப்படுமா என உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் ஏங்குவதுபோல் முல்லை மக்களும் ஏங்கி நிற்கின்றனர். 

ஏனெனில் வடக்கு கிழக்கில் அதிக துயிலும் இல்லங்களைக் கொண்ட மாவட்டமாகவும் முல்லைத்தீவு மாவட்டமே காணப்படுகின்றது. முள்ளியவளை, விசுவமடு, வன்னிவிளாங்குளம், ஆலங்குளம் என்பன ஆரம்பக்காலம் முதல் பகிரங்கமாக  இருந்தாலும் இறுதிப் போரின் போதும் இந்திய இராணுவத்தின் காலத்து துயிலுமில்லங்கள் எனவும் அதிக துயிலுமில்லங்கள் கொண்ட அந்த மாவட்டம் மாவீரர் நாளன்று விளக்கேற்ற காத்திருக்கின்ற நிலையில் இதிலும் என்ன அவலம் ஏற்படுமோ என்று கவலைப்படுகின்றனர்.   

முல்லைத்தீவு மாவட்டமானது அவலங்கள் இடம்பெற்ற, இடம்பெறுகின்ற மாவட்டங்களில் ஒன்றாகவே இருப்பதனால் அவலங்கள் இடம்பெறும் மாவட்டமாகவே வைத்திருக்க விரும்புகின்றனரோ என்ற சந்தேகம் அந்த மாவட்டத்தவர்கள் மத்தியில் நிலவுகின்றது என்பதை இந்தத் தொடருக்காக அங்கு பயணித்த போது அவதானிக்க முடிந்தது. 

ஒடுக்கப்பட்ட தமிழ்  மக்களுக்கு ஓர் விடிவை வேண்டி இந்த மண்ணில், அந்த மண்ணிற்கு தன்னையே அர்ப்பணித்து வீரவித்தாக விதைக்கப்பட்ட ஆயிரமாயிரம் வீரர்களின் வரிசையிலே எனது உடன் பிறந்த சகோதரனான லெப்ரிணன் கேணல் இனியவனையும் சுமந்து நிற்கும் மண்ணும் இதுதான் என்ற வகையில் எனக்கும் அதிக ஆர்வம் உண்டு. 

தாய் நாட்டின் விடுதலைக்காக தம்மையே உயிர்க்கொடையாக அளித்த ஏராளமானவர்களில் முல்லைத்தீவு மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களில் வாழ்ந்த கடற்தொழிலாளர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். முல்லைத்தீவு கடற்பிரதேசத்தில் இடம்பெற்ற பல சமர்களில் அவர்களின் பங்களிப்பு பாரியளவில் இருந்துள்ளது. 

போரின் போது காக்கப்பட்ட பல பிரதேசங்களை நம்பி அதனை வாழ்வாதாரமாகக் கொண்டு வாழ்ந்த கடற்தொழிலாளர்கள் இன்று தமது தொழில் பிரதேசத்தை இழந்து தவிக்கின்றனர். யுத்த காலத்தில் போது வடக்கே இருந்த பொருளாதாரத் தடையின் மத்தியிலும் அந்த மக்களைக் காத்த ஜீவனோபாயமாக விவசாயமும் மீன்பிடியும் இருந்தன. விவசாய திணைக்களங்களின் நில அபகரிப்பில் அந்த தொழில் நலிவடைய கடற்றொழில் எவ்வாறு அழவடைகின்றது. அதற்கு காரணம் என்ன ? 

இதனால்  இந்த மாவட்டத்தின் அவலங்களிற்கு  காரணிகளாக இருப்பவை  என்ன என்று  முல்லைத்தீவைச் சேர்ந்த வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும் கடற்றொழில் சங்கங்களில் நீண்டகால அனுபவமும் கொண்டவருமான  து.ரவிகரனை நீர் வளம், நில வளம் உள்ள முல்லை மண்ணில் நிம்மதி ஏன் இல்லை என்று இந்தச் சிறப்புத் தொடருக்காக கேட்டேன். 

”முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குளாய் கிராமத்தில் 1983ஆம் ஆண்டுவரையில் 12 கரைவலைப்பாடுகள் இருந்தபோது  ஒரேயொரு பாடுமட்டும் தென்னிலங்கையரிடம் இருந்தது. மற்றவை தமிழர்கள் கையில் இருந்தன.  இன்று 12 பாடுகளுமே தென்னிலங்கையர்களிற்கு தாரைவார்க்கப்பட்டு விட்டது. முல்லைத்தீவு நகரின் மத்தியிலே  உள்ள கோட்டபாய கடற்படை முகாமானது கரைவலைப்பாடுகளிற்கு வாகனம் மற்றும் தொழிலாளர் சென்று வந்த இடம். இரு அரிச்சல்ப்பாடுகள் இருந்த இடங்களுடன் 617 ஏக்கர் காணிகளையும் ஆக்கிரமித்தே இந்த கடற்படை முகாம் காணப்படுகின்றது”. 

காரணங்களைத் தொடர்ந்து அடுக்கிய அவர், “முல்லைத்தீவு மாவட்டத்தில் போரின் பின்பு மட்டும் மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களப் பிரதிப் பணிப்பாளர்களை மாற்றுமாறிகோரி 3 முறை  போராடினோம். இதே சமயம் நாடு முழுவதும் தடை செய்யப்பட்ட தொழில் முறைமை முல்லைத்தீவில் தென்னிலங்கையர்கள் மேற்கொள்ள அனுமதி வழங்கப்படுகின்றது” என்றார். 

கடற்றொழில் அமைச்சும் திணைக்களமும் பரிந்துரைக்கும் தென்னிலங்கையர்களிற்கு அனுமதி வழங்கப்படுகின்றது என்றும் நாயாற்றிலே அனுமதி இன்றி தென்னிலங்கையர்கள் 350 படகில் இன்றும் தொழில் புரிகின்றனர் என்றார் ரவிகரன். 

”கரைவலைப்பாடு என்பது மீனைப் பெற்றுக்கொள்வதற்காக மட்டும் நோக்கம் கொண்டதல்ல.  அது அதிக தொழிலாளர்களிற்கு வேலை வாய்ப்பை வழங்க்கூடிய முறைமைகளில் ஒன்று. ஆனால் முல்லைத்தீவில்  தென்னிலங்கையர்கள் மேற்கொள்ளும் கரைவலைப்பாடுகள் இன்றுவரை கையால் இழுக்காது உழவு இயந்திரங்கள் மூலமே இழுக்கின்றனர்.  அதற்கு எவருமே நடவடிக்கை எடுக்க  முதுகெலும்பு  இல்லை”. 

சுருக்கு வலைத் தொழிலை விஜயமுனி சொய்சா அமைச்சராக இருந்த காலத்தில் இந்த மாவட்டத்தில் தடை செய்திருந்தார். ஆனால் இப்போதுள்ள அமைச்சரின் காலத்தில் நாடு முழுவதும் தடை செய்யப்பட்டுள்ள தொழிலை  கொக்குளாயில் 3 சங்கங்கள் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தில் 75 கிலோ மீற்றர் நீளமான கடல் இருந்தாலும் அதிலும் சுமார் 20 கிலோ மீற்றர் நீளமான கடல்பகுதிகள் இந்த மாவட்ட தொழிலாளர்கள் செல்ல முடியாத பகுதியாகவே காணப்படுகின்றது. தடை செய்யப்பட்ட தொழிலில் முல்லைத்தீவு மாவட்டத்தில் மட்டும் 600 வரையான படகுகள் ஈடுபடுகின்றன. 

தமிழர்களின் பூர்வீக பூமியான கொக்குளாய் கடற்றொழில்  பிரதேசம் முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டு விட்டது. இங்கே வாழ்ந்த தமிழ் மக்கள் தற்போது புளியமுனை என்னும் கிராமத்தில் வாழ்கின்றனர். 

இவ்வாறெல்லாம், மீன்பிடி, விவசாயம், வீதி, வனப் பகுதிகளில் உள்ள அவலம் பட்டியலிடப்படும் முல்லைத்தீவு மாவட்டத்திலே படையினரின் பிரசன்னமே இல்லையா அல்லது அந்த அவலம் மறைக்கப்பட்டு அல்லது மறக்கப்பட்டு விட்டதோ என வாசகர்கள் எண்ணக் கூடும்.  அந்த தரவுகளை உறுதிப்படுத்துவதில் ஏற்பட்ட கால தாமதமே முதல் 04 பாகத்திற்குள் அதனைக் கொண்டு வர முடியவில்லை. 

முல்லைத்தீவு மாவட்டத்திலே தற்போதும் படையினர் வசம் உள்ள நிலங்கள் தொடர்பாக மாவட்டச் செயலகம் உறுதிப்படுத்தும் 2022 ஆம் ஆண்டின் தகவலின்படி அரச காணிகளில்  தனியாருக்கு காணி அனுமதிப் பத்திரம் வழங்கிய நிலத்தில் 143 பேருக்குச் சொந்தமான 1,569 ஏக்கர் நிலமும் தனியார் காணிகளில் 114 பேருக்குச் சொந்தமான 528 ஏக்கர் நிலமுமாக மொத்தம் 257 பேருக்குரிய 2096 ஏக்கர் நிலமே படையினர் வசம் உள்ளது.  உண்மையில் படையினரிடம் இதைவிட பல மடங்கு உள்ளது. பல திணைக்களங்களிற்குச் சொந்தமான நிலங்களில் படையினர் நிலைகொண்டுள்ள அளவோ அல்லது மாற்று நிலம் வழங்கியதாகக் கூறப்படும் பகுதிகள் எவையும் இதில் உள்ளடக்கப்படவில்லை. 

இப்பட்டியலில் கேப்பாபுலவு விமானப்படைத் தளம் தொடர்பான எந்த தகவலும் கிடையாது. இதேபோன்று அம்பகாமத்தில் இருக்கும் பல ஆயிரம் ஏக்கர் விமானப்படைத் தளம் தொடர்பான தகவலும் இல்லை. உண்மையான அளவுகளெனில் முல்லைத்தீவு மாவட்டத்தில் மட்டும் தற்போதும் 20,000 ஏக்கருக்கும் மேற்பட்ட அளவு நிலத்தில் படையினர் நிலைகொண்டுள்ளனர் என்பதே உண்மை. அதில் பல நிலங்கள் பாதுகாப்பு அமைச்சிற்கே கையளிக்கப்பட்டிருக்கலாம் என்பதனால் மாவட்டச் செயலகம் இவற்றை உள்ளடக்காது. 

இந்த நிலைமையிலேயே 2022-11-19 அன்று வவுனியாவிற்கு வந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு முல்லைத்தீவு மாவட்டத்தின் தேவைகள், உடனடிப் பிரச்சிணைகள் அடங்கிய பெரும்  பட்டியலை மாவட்ட அதிகாரிகள் முன் வைத்தனர். 

இதில் மாவட்ட மக்களின் அபிவிருத்தி மற்றும் கால் நடைகளின் மேய்ச்சல்த்தரை பயன்பாட்டிற்காக வனவளத்  திணைக்களத்தின் பிடியில் உள்ள நிலங்களில்  43,501 ஏக்கர் நிலத்தை மாவட்ட நிர்வாகத்திற்கு விடுவிக்குமாறு  கோரப்பட்டது.  அதேபோன்று  `ஒதுக்கக்காடுகள்` என விரைவில்  வர்த்தமானி அறிவிக்கவுள்ளதாகக் கூறப்படும் 17,260 ஹெக்டேயர் நிலத்தின் பெரும் பகுதி நிலம்  தனியாருக்குச் சொந்தமான  நிலம் என்பதனால் அந்த நிலத்தை  வனவளத் திணைக்கள ஆளுகையில் செல்லாது தடுக்க  வேண்டும். குறுந்தூர்மலைப் பகுதியில் விகாரை உள்ள தொல்லியல் திணைக்களத்தின் கட்டுப்பாட்டு பகுதியாக  78 ஏக்கர் நிலம் உள்ளது. 

அந்த 78 ஏக்கருடன் அருகில் இருக்கும் 300 ஏக்கர் நிலத்தையும் தொல்லியல்த் திணைக்களம்  கேட்கின்றது. இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன் கடும் ஆட்சேபனையில் அப்பகுதி மக்களின் வாழ்விடம் வயல் உள்ளிட்ட நிலத்தையே தொல்லியல்த் திணைக்களம் கோருகின்றது, அதனால்  இந்த நிலங்களை தொல்லியல்த் திணைக்களம் மக்களிடம்  விடுவித்தே ஆக வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார். இதன்போது விகாரை  அருகே பாவனைக்கு உரிய இடம் வேண்டும் அதனால் அந்த 300 ஏக்கரும் தமக்கு வேண்டும்  என தொல்லியல்த் திணைக்களம் சார்பிலும் ஜனாதிபதியிடம்  கோரிக்கை விட்ட நிலையில் `அங்கே எத்தனை விகாரை அமைக்கப் போகின்றீர்கள் தற்போதுள்ள 78 ஏக்கர் நிலமே  போதுமானது இருப்பினும் ஒரு திசையில் அருகே வருவதனால் அந்த திசையில் 6 ஏக்ரை மட்டும் தொல்லியல்த் திணைக்களத்திற்கு வழங்குங்கள் எஞ்சிய நிலத்தை அதன் உரிமையாளர்களிடமே விடுவியுங்கள்` என ஜனாதிபதி பணிப்புரை விடுத்த அதே நேரம் எஞ்சிய நில விவகாரங்கள் எவற்றிற்குமே தீர்வு முன் வைக்கப்படவில்லை. வழமை போன்று குழு அமைத்து காலம் கடத்தும் செயல்பாடே முன்னெடுக்கப்பட்டது. 

( அவலப் பட்டியல் தொடரும்

————————————————————————————————-

நீர் வளம், நில வளம் உள்ள முல்லை மண்ணில் நிம்மதி ஏன் இல்லை?

DECEMBER 2, 2022

இறுதிப்  பாகம் 06

இந்த கட்டுரைத் தொடரின் இறுதி பாகத்தை எழுத ஆரம்பித்த போது அவர் கூறியது நினைவிற்கு வந்தது.

முல்லைத்தீவு மாவட்டம் அரச இயந்திரங்களால் அவலத்தை சந்திக்கும் அதேநேரம் வன விலங்குகளாலும் அவலத்தையே சந்திக்கின்றன. போரினால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள மக்கள் இன்னும் தமது வாழ்வாதாரங்களை முற்றாக மீட்டெடுக்காத மக்களுக்கு பட்ட காலிலேயே படும்-கெட்ட குடியே கெடும் என்ற பழமொழிக்கு ஏற்ப மனிதர்களால் மட்டுமின்றி வன விலங்குகளால் ஏற்படும் பாதிப்புகளையும் எதிர்கொள்ள வேண்டிய துர்ப்பாக்கிய நிலையில் உள்ளனர்.

தென்னிலங்கையின் அநுராதபுரம், புத்தளம்  ஆனைமடுவ, மொனராகலை போன்ற பகுதிகளில் மக்கள் குடியிருப்பை அண்டிய பகுதிகளிற்குள் ஊடுருவி நாசம் செய்யும் யானைகளை மயக்க ஊசி அடித்து வாகனங்களில் ஏற்றிவரும் வனஜீவராசித் திணைக்கள அதிகாரிகள் அவற்றினை முல்லைத்தீவின் எல்லைப் பகுதிகளிலும் வவுனியா வடக்கு நெடுங்கேணியை அண்டிய பிரதேசத்திலேயே இறக்கி விட்டுச் செல்கின்றனர்.

அதனைக் கேட்டால் குழப்பம் விளைவிக்கும் யானைகளை காடு மாற்றி விட்டால் குழப்பத்தை ஏற்படுத்த மாட்டாது என்கின்றனர். இப்படியான ஒரு விளக்கத்தை கேட்கவே சிரிப்பாகவுள்ளது. எந்த விலங்கினமும் தனது அடிப்படை குணாம்சங்களை மாற்றிக்கொள்ளாது என்கிற அடிப்படை புரிதல் வனஜீவராசி திணைக்கள அதிகாரிகளுக்கு இல்லையோ என்கிற கவலை எழுகிறது.

சிங்கத்தை இடம் மாற்றி வீட்டில் வைத்து பராமரித்தால் அது இடியப்பமும் பிட்டும் சாப்பிட்டு சாந்தமாக இருக்குமா என்ற கேள்வி எனக்குள்ளேயே எழுகிறது. அப்படித்தான் உள்ளது  யானைகளை காடு மாற்றிவிடும் எண்ணமும் உள்ளதாக எனக்குத் தோன்றுகிறது.

முல்லைத்தீவு மற்றும் நெடுங்கேணிப் பகுதியில் ஊருக்குள் மட்டுமன்றி, வைத்தியசாலைக்குள்ளும் உட்புகும் நிலையில் யானைகள் உள்ளபோதும் எந்தவொரு யானையினையாவது வேறு காட்டிற்கு மாற்றி விட்டீர்களா என மக்கள் கேட்கும் கேள்விக்கு எந்த அதிகாரிகளிடமும் பதில் இல்லை.

சரி, யானைகளை இடம்மாற்றி தராவிட்டால் யானை வேலியாவது அமைத்து தாருங்கள் என 10 ஆண்டுகளாக கோரியும் இன்றுவரை பலன் கிட்டவில்லை என்று காடுகளுக்கு அருகாமையில் வசிக்கும் மக்கள் ஆதங்கப்படுகின்றனர்.  எனினும் சிங்கள மக்கள் வாழும் வெலிஓயா, பொபஸ்வேவாவை பாதுகாக்க முல்லைத்தீவு மாவட்டத்தின் வெலிஓயா பிரதேச செயலாளர் பிரிவைச் சுற்றி கொக்குத்தொடுவாய் கடல்நீர் ஏரியை அண்டிய பகுதியில் இருந்து ஆண்டாங்குளம் வன ஒதுக்க எல்லை ஊடாக ஒதியமலை,தனிக்கல் வழியாக அரியகுண்டான் மற்றும் கம்பிலிவெவவின் எல்லைவரை 25 கிலோ மீற்றருக்கு யானைப் பாதுகாப்பு வேலி அமைத்து சிங்கள மக்கள் காக்கப்பட்டுள்ளனர் என்கின்றனர் அப்பகுதி மக்கள்.

”இது சிங்கமும் யானையும் செய்யும் கூட்டு சதியல்லவா?” என்று எல்லையோர கிராமவாசிகள் ஆவேசமாக கேட்கின்றனர்.

இதேசமயம்  தென்பகுதியில் பல்வேறு தேவைகளிற்காக வளர்க்கப்படும்  யானைகள் வயது முதிர்ந்தால் அல்லது மதம்கொண்டால் அவையும் வாகனம் மூலம் ஏற்றிவரப்பட்டு இரவு வேளைகளில் வடக்கு காடுகளிலேயே இறக்கும் அவலம் இன்றும் தொடர்வதாகவும் மக்கள் ஆதாரத்துடன் சுட்டிக்காட்டுகின்றனர்.

அதுமட்டுமின்றி முல்லைத்தீவு மாவட்டத்திலே -1962 ஆம் ஆண்டு வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்கள் இரண்டுமே ஒரே நிர்வாக மாவட்டமாக இருந்த காலத்திலேயே இரு மாவட்டத்திலும் -105 இடங்களை மட்டும் உரிமைகோரிய தொல்லியல் திணைக்களம் தற்போது முல்லைத்தீவில் மட்டும் 164 இடங்களை தமது இடங்கள் என்று கூறி உரிமை கோருகின்றனர்.  

இத்தனை அவலங்களின் மத்தியிலும் அதிலிருந்து மீண்டு அபிவிருத்தி அல்லது வளர்ச்சி அடையத் தவிக்கும் அந்த மாவட்ட மக்களிற்கு போதிய வளங்கள் இருந்தபோதும் வாய்ப்புக்கள் இன்றியே தவிக்கின்றனர்.

 மாவட்டத்தின் மிகப் பெரும் தொழிற்சாலையான கூழாமுறிப்பு ஓட்டுத் தொழிற்சாலை அடுத்த ஆண்டு (2023) மார்ச் மாதத்திற்கு முன்னதாக முழுமையாக இயங்க வைக்கும் வகையில் அதன் திருத்தப் பணிகள் ஆரம்பித்து விட்டதாக மாவட்ட அரச அதிபர் கதிர்காமத்தம்பி விமலநாதன் தெரிவித்தார்.

மாவட்ட அரச அதிபர் கூறியபடி எல்லாம் திட்டமிட்டபடி முன்னேறி அந்த தொழிற்சாலை மீண்டும் இயங்கத் தொடங்கினால், அதனால் யார் பயனடைவார்கள்-அந்த மாவட்டம் அல்லது வடக்கு மாகாணத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையிலுள்ள தமிழ் மக்களா அல்லது அவர்களுக்கு போதிய தகுதிகள் இல்லை என்று கூறப்பட்டு இதை ஒரு சாட்டாகக் கொண்டு தென்னிலங்கையிலிருந்து யானைகளைக் கொண்டு இறக்கிவிடுவது போன்று ஆட்களையும் கொண்டுவந்து இறக்குவார்களா என்ற கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை.

அதேவேளை மாவட்டத்தின் எல்லைக் கிராமங்களாக திகழும் கொக்குளாய் , கொக்குத்தொடுவாய் , கருநாட்டக்கேணி போன்ற கிராமங்களில் 1983ம் ஆண்டிற்கு முன்னர் சுமார் 3 ஆயிரம் தமழ்க் குடும்பங்கள் வாழ்ந்த நிலையில் போர் முடிந்த 12 ஆண்டு  கடந்துவிட்ட பின்னர் இப்போது ஆயிரத்திற்கும் குறைவான குடும்பங்களே உள்ளன மற்றும்அப்பகுதியின் அபிவிருத்தியை எவருமே கண்டுகொல்லவில்லை. அவர்களுக்காக குரல் கொடுக்கவும் யாருமில்லை என்று வருந்துகின்றனர். தமிழ் அரசியல்வாதிகள் கூட தங்களது தேவைகளை உணர்ந்து உரிய நடவடிக்கைகளை போதியளவில் எடுப்பதில்லை என்று என்னிடம் பேசிய போது கண்ணீருடன் தெரிவித்தனர்.

இப்போது இந்தப் பகுதி வடக்கு  மாகாணத்தின் எல்லையாக பாதுகாக்க போராடும் அதேநேரம்  மறுபுறத்தில் நெருங்கி அண்மித்து வரும்  சிங்களக்குடியேற்றத்தை  தடுத்து நிறுத்தும்  கிராமங்களாகவும் இருக்கும் இந்த கிராமத்தில் வாழும் தமிழ் மக்கள் மாகாணத்தின் இருப்பை நிலை நிறுத்திக் காக்கவேண்டும் என்பதற்காக  இன்றும் எல்லையில் ஆக்கிரமிப்பிற்கு எதிராக  போராட்டங்களை எதிர்கொண்டே வருகின்றனர்.  தமிழர்கள் தாயகப்  பிரதேசத்தை காக்க வேண்டும் என தாயகத்திலும் புலம்பெயர் தேசத்திலும் இருந்து  குரல் எழுப்பினாலும் தாயகத்தை காக்க வேண்டும் என்பதற்காக எல்லைக் கிராமங்களில் எந்த அடிப்படை வசதிகளும் அற்று வாழும் இந்த மக்களை திரும்பி பார்க்க தவறுகின்றனர்.

இதேநேரம் நாட்டின் ஏனைய வளமான பகுதிகளிற்கோ அல்லது வெளிநாடுகளிற்கு செல்லும் சந்தர்ப்பமோ அற்ற இவர்கள் பிறரின் உதவியின்று தமது அடிப்படை  வாழ்வியலையேனும் கொண்டு செல்ல  மாவிலங்கம் வெளியில் உள்ள வயல்ப் பிரதேசத்தில் வயல் விதைப்பு நடவடிக்கையில் ஈடுபடவும்  முடியாதவாறு சிங்கள மக்களின் தொழில் முயற்சி தடையாகவுள்ளது. அதாவது அருகே உள்ள சிங்கள மக்கள் தமது வாழ்வாதாரமாக ஆயிரக் கணக்கான பண்றிகளை வளர்ப்பதனால் தமது விவசாயம் அழிவடைவதாக  விவசாய அமைப்புக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
  மாவட்டத்தின் தமிழர் பிரதேசமான முகத்துவாரத்தில் அத்துமீறி வசிக்கும் தென்னிலங்கையர்கள் தமது வாழ்வாதாரமாக அதிக பன்றிகளை வளர்க்கின்றனர். அவ்வாறு வளர்க்கும் பண்றிகளை மற்றவர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் பாதுகாப்பான முறைகளில் வளர்ப்பது கிடையாது. அவற்றை பட்டிகளில் அடைத்து வளர்க்காமல் திறந்த இடங்களில் வளர்ப்பதனால் அவை இரவு பகலின்றி எவ்வேளைகளிலும் மக்கள் நடமாட்டப் பகுதிகளிற்குள்ளும் வாழ் விடங்கள் நோக்கியும் படை எடுக்கின்றன. இந்த வகைப் பண்றிகள் வளர்ப்பு இனத்தைச் சேர்ந்தமையால் மக்கள் நடமாட்டத்திற்கோ அல்லது நாய்களிற்கோ அஞ்சுவது கிடையாது.

”இவற்றின் காரணமாக 24 மணிநேரமும் காவல் இருக்கவேண்டிய நிலமையில் உள்ளோம். காட்டுப் பண்றிகள் எனில் இரவுவேளைகள் மட்டுமே நடமாடும் . அவையும் மனித நடமாட்டம் அல்லது நாய்களின் நடமாட்டத்தை கண்டால் அகன்றுவிடும் . ஆனால் இங்கே சிங்களவர்கள் வளர்க்கும் பண்றிகளை எம்மால் கட்டுப்படுத்த முடியவில்லை என்பதனால் வயல்நிலங்களும் விதைக்க முடியவில்லை எனக் கவலை தெரிவிக்கின்றனர்”.

மேலும் இந்தப் பன்றிகள் சுகாதாரமற்ற முறையில் வளர்க்கப்படுவதால், நோய் பரவும் வாய்ப்புகளும் அதிகமாகவுள்ளன என்று வைத்தியர்கள் அச்சப்படுகின்றனர். அவ்வாறு பன்றிக்காய்ச்சல் ஏற்பட்டு அது பரவினால் பெரும் ஆபத்துக்களை ஏற்படுத்தும் என்றும் அவர்கள் எச்சரிக்கின்றனர்.

தமிழ் மண்ணில் வலிகளையும் அவலங்களையும்  மட்டுமே சுமந்து வாழும் இப்பகுதி மக்களின் துயரைத் துடைக்கும் பணிக்கு யார் பொறுப்பு, அதிலும் குறிப்பாக பண்றிகளின் தொல்லை தொடர்பில் சுகாதாரத் திணைக்களத்தினரிடம் கேட்டால் நாம் அதனால் எழும் பிரச்சணைகள் தொடர்பிலும் அதன்மூலம் தொற்று வருத்தம் ஏதும் ஏற்படுகின்றதா என்பதனை மட்டுமே பார்வையிடமுடியும் என்கின்றனர். பிரதேச சபையுடன் தொடர்பு கொண்டால் ”எமது பொதுச் சுகாதார உத்தியோகத்தர் கண்காணிக்கின்றார். சுகாதார முறமையும் வளர்ப்பு முறையும் அறிவுறுத்தப்படுகின்றது என்கின்றனர்”. ஆனால் இங்கே எந்த முறமையும் பின்பற்றப்படுவதாக தெரியவே இல்லை என மக்கள் கூறுகின்றனர்.

நாம் எல்லையில் நெருக்கடிகளையும் வன விலங்குகளின் அச்சத்தையும் சிங்களவர்களின் நில ஆக்கிரமிப்பையும் தடுத்து உயிரை துச்சமாக எண்ணி வாழ்வதனாலேயே இன்றும் இப் பிரதேசம் சிங்களத்தால் முழுமையாக விழுங்கப்படவில்லை. இருப்பினும் எம்மை போன்று அடுத்த சந்த்தியும் இவ்வாறு நெருக்கடியை சந்திக்க விரும்பாது விட்டால் இன்னும் 10 வருடத்தில் முல்லைத்தீவு மாவட்டமும் சிங்கள மக்களை பெரும்பான்மையாக கொண்ட மாவட்டமாக மாறும். நாம் வாக்களிப்பவர்களும். எறுமனே வாய் கிளிய கத்துபவர்களாகவே இருப்பர். எம்மை தூக்கிவிடுவதற்கு மட்டும் யாரும் இல்லை என்கின்றனர் அப்பகுதி மக்கள்.

முல்லைத்தீவு மக்களின் துன்பங்களும் துயரங்களும் முடிவில்லா தொடர்கதை போன்றவை. கனடா உதயன் மூலம் அவற்றை வெளியுலகிற்கு கொண்டு வந்து ஓரளவேனும் அவர்களுக்கு விமோசனத்தைத் தேடித்தருவதே இந்த தொடரின் நோக்கமாக இருந்தது. எனினும்  ஐந்து வாரங்கள் தொடர்ச்சியாக கட்டுரை வெளியாகி அது உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ஏற்படுத்திய தாக்கம் காரணமாக சில நெருக்கடிகளையும் அழுத்தங்களையும்  சந்திக்க வேண்டிய சூழல் ஏற்படுகின்றது அதனால்

அந்த மக்களின் அவலங்கள் ஏராளம் என்றாலும், தவிர்க்க முடியாத சில காரணங்களால்  இந்த தொடரை இத்துடன் முடிவுறுத்திக்கொள்கின்றேன்.

—————————————————————————————————————–

About editor 3017 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply