கண்ணாடி வீட்டுக்குள் இருந்து கொண்டு சுமந்திரன் மீது கல்லெறிகிறார்!

கொழும்புக் கிளைத் தலைவர் கண்ணாடி வீட்டுக்குள் இருந்து கொண்டு சுமந்திரன் மீது கல்லெறிகிறார்!

நக்கீரன்

திருவாரூரோடு பொரி அரிசி என்ற பழமொழி தமிழில் உண்டு. திருவாரூர் பொரியரிசி உருண்டைகளுக்குப் பெயர் போன ஊர். அங்கு போகிறவர்கள்  கையோடு பொரியரிசி உருண்டைகளையும் மறக்காமல் வாங்கி வருவார்களாம்.  அதாவது ஒரு கல்லில் இரண்டு மாங்காய்.

மூத்த சட்டத்தரணி கவுரி சங்கரி மறைந்து ஓர் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி கடந்த ஒக்தோபர் மாதம் 30 ஆம் நாள் யாழ்ப்பாணத்தில் உள்ள  தனியார் விருந்தினர் விடுதியொன்றில் நடை பெற்றது. இந்நிகழ்வில் தமிழரசுக் கட்சியின் தலைவர் உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை முன்னாள் உறுப்பினர்கள், அரசியல் தலைவர்கள், சட்டத்தரணிகள் எனப்  பலரும் கலந்துகொண்டனர்.  நிகழ்வில் சனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசா எழுதிய ‘கௌரி நீதியின் குரல்’  என்ற புத்தகமும் வெளியிடப்பட்டது. 

அதன் பின்னர் தவராசா அவர்கள் ஊடக சந்திப்பை ஒன்றை கூட்டியிருந்தார். அதில் சமகால அரசியல் பற்றிய  தனது கருத்துக்களை சொல்லியிருப்பார் என்றுதான் யாரும் எதிர்பார்ப்பார்கள். ஆனால் அதில் சனாதிபதி சட்டத்தரணி,  தமிழ் அரசுக் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் மற்றும் பேச்சாளர் சுமந்திரன் பற்றி அடுக்கடுக்காக பல குற்றச்சாட்டுக்களை சுமத்தினார். இது ஒன்றும் புதுமையில்லை. சென்ற தேர்தலிலும் சுமந்திரனைக் குறிவைத்து ஊடகங்களில் அவர்மீது இப்போது போலவே அப்போதும் வசைபாடினார்.  சாதாரணமாக அதைப்பற்றி யாரும் கவலைப்பட மாட்டார்கள். ஆனால் தவராசா இதஅக யின் கொழும்புக் கிளையின் தலைவர். பொதுக்குழு உறுப்பினர்.

தேர்தல் நேரத்தில் தஅக சார்பாக போட்டியிடும் ஒரு வேட்பாளரை ஆதரித்துப் பேசுவதற்குப் பதில் அவர் மீது சேறு பூசுவது கட்சிக் கட்டுப்பாட்டை மீறுவது மட்டுமல்ல அது சின்னத்தனமும் ஆகும். தவராசா போன்ற படித்தவர்கள் அப்படிச் செய்வது மகா கேவலம்.

பாரதியார் ‘கண்ணன் என் சேவகன்’ என்ற பாடலில் –

“ஓயாமல் பொய்யுரைப்பார்; ஒன்றுரைக்க வேறு செய்வார்
தாயாதியோடு தனியிடத்தே பேசிடுவார்
உள்வீட்டுச் செய்தியெல்லாம் ஊரம்பலத்துரைப்பார்….

என்பார்.

இதையேதான் தவராசா செய்கிறார். கட்சிக்குள் பேச வேண்டிய செய்திகளை  பொதுவெளியில் வைத்துத் துவைக்கிறார். தன்னை யாரும் தட்டிக் கேட்க மாட்டார்கள் என்ற நினைப்பு அவருக்கு இருக்கிறது. சரி, இனி அவர் சுமந்திரன் மீது சுமத்தும் அடிநுனியற்ற குற்றச்சாட்டுக்களைப் பார்ப்போம். அதில் உண்மை இருக்கிறதா எனப் பார்ப்போம்.
 குற்றச்சாட்டு 1 – சுமந்திரனின் தன்னிச்சையான முடிவுகளால்தான் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குப் பாதிப்பு ஏற்பட்டிருக்கின்றது. இது தனிப்பட்ட கம்பனி அல்ல. மக்களுடைய கட்சி. மக்களுக்காக உருவாக்கப்பட்ட கட்சி.

பதில் – தமிழ் அரசுக் கட்சிக்கு  என்ன பாதிப்பு ஏற்பட்டு விட்டது? உங்களால்தான் கட்சிக்குப்  பாதிப்பு ஏற்பட்டுள்னது. நீங்கள்தான் உள்வீட்டுச் செய்தியெல்லாம் ஊரம்பலப்படுத்துகிறிர்கள்!

குற்றச்சாட்டு 2 – சம்பந்தன் எப்போது விலகுவார், அந்தக் கதிரையை பிடிப்போம் என்று பலர் பார்த்துக்கொண்டு இருக்கின்றனர். நான் அவ்வாறு இல்லை. கட்சிக்குள் கொள்கைகள் தமிழ்த் தேசியத்துக்கு எதிராக மாறுமாக இருந்தால், நான் கட்சியை விட்டு வெளியேறுவேன்.

பதில் – அப்படிப் போடு அருவாளை! சம்பந்தர் ஐயா அவர்களுக்குப் பின்னர் அவரது இடத்தை நிரப்ப பலர் முன்வருவது ஒன்றும் பாவகாரியமில்லை. உண்மையில் அது வரவேற்க வேண்டியது. அது போகட்டும்.  “நான் அவ்வாறு இல்லை” என்பது நல்ல நகைச்சுவை. ஒருவர் நா.உறுப்பினராக இருந்தால்தான் தலைவர் ஆக வரலாம். “நான் அவ்வாறு இல்லை” என்பது இந்தப் பழம் புளிக்கும் என்ற கதை. சம்பந்தர் ஐயாவுக்குப் பிறகு பொருத்தமான ஒருவர் கட்டாயம் வருவார்.

குற்றச்சாட்டு 3 – கட்சித் தலைமை சரியான தீர்மானங்களை எடுக்காவிட்டால், இவ்வாறு பலர் தன்னிச்சையான முடிவுகளை எடுத்து, கட்சியையும், மக்களையும் திசை திருப்பி விடுவார்கள். கட்சியில் கூட்டுப் பொறுப்பு இருக்க வேண்டும். அந்தக் கூட்டுப் பொறுப்பின் முடிவுகளுக்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும்.

பதில் – அட சக்கை என்றானாம். தன்னிச்சையான முடிவுகளை எடுப்பது யார்? கட்சிக் கட்டுப்பாட்டை மீறுவது யார்? கூட்டுப் பொறுப்பின் முடிவுகளுக்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும் என்றால் அதனை முதலில் தவராசா செய்ய வேண்டும்.  சுமந்திரனை பகிரங்கமாக – கட்சிக்கு வெளியே, பொதுவெளியில் விமர்ச்சிப்பதற்குப் பெயர் கட்டுப்பாடா? அவருக்கு எதிராக அறிக்கைகள் விடுவது, ஊடகவியலாளர் சந்திப்பை நடத்துவது  பொறுப்பானகாரியமா? கண்ணாடி வீட்டில் இருந்து கொண்டு தவராசா கல்லெறியக் கூடாது. எறிந்தால்  கண்ணாடிதான் உடைக்கும்!

குற்றச்சாட்டு 4 – பல சந்தர்ப்பங்களில் சுமந்திரனின் தன்னிச்சையான முடிவுகளால்தான், இலங்கைத் தமிழரசுக் கட்சி கீழ் நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது என்பதைக் கடந்த பல ஆண்டுகளாகக் கூறிக் கொண்டு வருகின்றேன். இது தனிப்பட்ட கட்சி அல்ல. இது மக்களுடைய கட்சி. இது மக்களுக்காக உருவாக்கப்பட்ட கட்சி. அந்தக் கட்சியினுடைய அங்கத்தவர்கள் யாராக இருந்தாலும் சரி கட்சித் தலைமையை மதிக்க வேண்டும்.

பதில் – நியாயமான கேள்வி. ஆனால்  இந்தக் கேள்வி மற்றவர்கள் உங்களிடம் கேட்க வேண்டிய கேள்வி.  தவராசா கட்சித் தலைமையை மதிக்கிறாரா? தேர்தலில் போட்டியிட கட்சியால் நியமிக்கப்பட்டசுமந்திரனக்கு எதிராக மேடைகளில் பேசுவது தலைமையை மதிக்கும் செயலா?   ஊருக்கு உபதேசம் செய்தேன் அடி கண்ணே! உனக்கல்லடி பெண்ணே என்று கேட்ட போதகர் கதைபோல் அல்லவா இது இருக்கிறது.

கூற்று  5 – இந்த மண்ணுக்கும் என்னுடைய தாய்மொழிக்கும் என்னால் செய்யக் கூடிய சேவை செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கமே தவிர வேறெந்த நோக்கமும் தனிப்பட்ட இலாபமும் எனக்குக் கிடையாது. என்னுடைய சொத்துக்களை கெளரி சங்கரி தவராசா எனும் அறக்கட்டளை மூலம் மக்களுக்காக வழங்கப் போகின்றேன்.

பதில் – தவராசா போலவே சுமந்திரனும் பல இலட்சங்கள் உழைக்கக் கூடிய சட்டத் தொழில் செய்தவர். ஆனால் அவர் மட்டுமே தொழிலை விட்டு முழுநேர அரசியலுக்கு வந்தவர்.  அதனால் வருவாயை இழந்தவர். இதனை மக்கள் புரிந்து கொண்டுள்ளார்கள். அதனால்தான் மக்கள் அவரை ஒருமுறைக்கு இருமுறை – தவரசா போன்றவர்களின் எதிர்ப்பையும் மீறி – அவரை நாடாளுமன்றத்துக்குத்  தெரிவு செய்து அனுப்பியுள்ளார்கள். மக்களுக்குத் தெரியும் யார் கட்சிக்குப் பாடுபடுகிறார்கள் – யார் தொல்பொருள் திணைக்களம் மற்றும் இராணுவம் தமிழ்மக்களது காணிகளையும்  இந்துக்கோயில்களுக்குச் சொந்தமான  காணிகளையும் கைப்பற்றிய போது நீதிமன்றத்தில்  வழக்குத் தொடர்ந்துது யார்?  வாதாடி வருபவர் யார்? சுமந்திரன் ஒருவரே! மாறாக தவராசா சாட்டுக்கு ஒரு வழக்கை ஆவது தொடுத்திருக்கிறாரா? சொத்துக்களை கௌரி சங்கரி அறக்கட்டளை மூலம் மக்களுக்கு வழங்கப் போவதாகச் சொல்வது மட்டற்ற மகிழ்ச்சி தருகிறது.

குற்றச்சாட்டு 6 –  கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், தேசியப்பட்டியல் தருமாறு நான் கேட்கவில்லை.  ஆனால், தேசியப்பட்டியலில் உள்வாங்கப்பட்டேன். தேசியப்பட்டியலில் எனது பெயர் முதலாவதாகக் காணப்பட்டது. எனினும், அடுத்த நாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஊடகத்தை அழைத்து, அம்பிகா சற்குணநாதனுடைய பெயர் முதலாவதாக உள்வாங்கப்பட்டுள்ளது என அறிவித்தார்.

பதில் – “கதிரையை பிடிப்போம் என்று பலர் பார்த்துக்கொண்டு இருக்கின்றனர். நான் அவ்வாறு இல்லை” என வீர வசனம் பேசுகிறீர்கள். யதார்த்தம் என்னவென்றால் உங்களால் அந்தப் பதவிக்கு வரமுடியாது. நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரே அந்தப் பதவிக்கு வரமுடியும். நீங்கள் ஒரு பிரதேச சபை உறுப்பினராகக் கூட தற்போது இல்லை.

நீங்கள் யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்து தஅக யின் தேசியப் பட்டியலில் உங்களது பெயர் முதலிடத்தில் இருந்ததாகவும் சுமந்திரன் உங்களது பெயரை இரண்டாவது இடத்துக்கு தள்ளிவிட்டு அந்த இடத்துக்கு அம்பிகா சற்குணம் அவர்களது பெயரை சுமந்திரன்  போட்டதாகவும் குற்றச்சாட்டும் நீங்கள்,  அந்தக் காரணத்துக்கா சுமந்திரனுக்கு எதிராக  தேர்தலில் வேலை செய்தீர்கள்?  “நான் அவ்வாறு இல்லை” என்பது அப்பட்டமான பொய் இல்லையா? கட்சியை விட்டு வெளியேறுவது உங்கள் விருப்பம். தவராசா வெளியேறுவதால் கட்சிக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. சுமந்திரனைத் திட்டுவதற்கு  ஊடக சந்திப்பு நடத்துவதும், செய்தித்தாள்களுக்கு அறிக்கை விடுவதைத் தவிர வேறு என்ன கட்சிப் பணி தவராசா செய்திருக்கிறார் எனச் சொல்ல முடியுமா?  பயங்கரவாதச் சட்டத்துக்கு எதிராக சுமந்திரனும் சாணக்கியனும் கொழும்பு காலிமுகத் திடலில் கையெழுத்துச் சேகரித்தபோது தஅக யின் தலைவரது  தலைக் கருப்பை அங்கு காணமுடியவில்லையே? ஏன்? என்ன காரணம்? சுமந்திரன் மீதுள்ள தனிப்பட்ட காழ்ப்ணர்ச்சிதானே காரணம்!

குற்றச் சாட்டு 7 – பின்னர் சுமந்திரன், சம்பந்தனைச் சந்தித்து ஒரு முடிவு எடுத்து தேசியப் பட்டியல் அம்பாறையைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற தவராசா கலையரசனுக்குக் கொடுப்பதாக தீர்மானித்து அதனையும் ஊடகங்களை அழைத்து அறிவித்தார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா நாடாளுமன்ற உறுப்பினராக வரக்கூடாது என்பதில் சுமந்திரன் தீவிரமாக இருந்தார். ஆகவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவத்துக்குத் தமிழ்த் தேசிய உணர்வுள்ள ஒருவர் தலைவராக வர வேண்டும் – என்றார்.

பதில் – இதைப் படிக்கும் போது அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை. தவராசா அவலை நினைத்து உரலை இடிக்கிறார். சுமந்திரன் தன்னிச்சையாக நடந்து கொண்டார் என்றே வைத்துக் கொள்வோம். அந்த வாதம் சரியென்றால் சம்பந்தன் ஐயாவும் தஅக யின் பொதுச் செயலாளர்  கி. துரைராசசிங்கமும் இழிச்சவாயர்களா? அரசியலில் கற்றுக் குட்டிகளா?  இந்த இரண்டு பேருமே சட்டத்தரணிகள். சம்பந்தன் ஐயா அரசியலில் பழமும் தின்று கொட்டையும் போட்டவர். இந்த நியமனம்  தொடர்பாக தவராசா மொழிவது அப்பட்டமான பொய்யாகும். சுமந்திரன் மீதுள்ள காய்ச்சலில் அப்படியான பழியை அவர் மீ து போடுகிறார். தேசியப் பட்டியலில் கிடைத்த ஒரு இடத்தை,  பிரதிநித்துவம் இல்லாத    அம்பாறை மாவட்டத்துக்கு கடந்த தேர்தலில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்த கலையரசனை  நியமிப்பது என்ற முடிவை எடுத்தது சுமந்திரன் அல்ல. அந்த யோசனையை முன்வைத்தவர்தஅக யின் பொதுச் செயலாளர்  கி. துரைராசசிங்கம் அவர்கள்.  நீண்ட கலந்துரையாடலின் பின்னர் அந்த யோசனையோடு ஒத்துப் போனவர் சம்பந்தன் ஐயா.  எனவே கூட்டாக எடுத்த முடிவை கட்சியின் பேச்சாளர் என்ற முறையில் ஊடகங்களுக்கு  சுமந்திரன் அறிவித்தார்.

அதுதான் நடந்தது.  சுமந்திரன் மீது தவராசா சுமத்தும் குற்றப் பட்டியலைப் பார்க்கும் போது சுமந்திரன் ஒரு அதிகாசசூரன், அரசியலில் சாணக்கியன், அறிவில் பிரகஸ்பதி என்றெல்லாம் நினைக்கத் தோன்றுகிறது. துரைராசசிங்கம்  தன்னிச்சையாக நடந்து கொண்டார் என்ற அடிப்படையில்லாத குற்றச்சாட்டை முன்வைத்தவர்கள் மாவை சேனாதிராசாவின் ஆதரவாளர்கள். அதனை அடுத்தே துரைராசிங்கம் அவர்கள் தனது பொதுச் செயலாளர் பதவியில் இருந்து விலகுவதாகச் சொல்லி தனது விலகல் கடிதத்தை கட்சித் தலைவருக்கு அனுப்பினார். இதுதான் நடந்தது.

சம்பந்தன் ஐயா தஅக யைப் பலப்படுத்தும் நோக்கோடு 2010 இல் சுமந்திரனை தேசியப் பட்டியல் மூலம் கட்சிக்குள் கொண்டுவந்தார். பின்னர் 2013 இல் முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசர் விக்னேஸ்வரனைக் கொண்டுவந்தார். இதில் முன்னவர் கட்சிக்காக தனது நேரம், நினைப்பைச்  செலவிட்டுக் கொண்டிருக்கிறார். பின்னவர் தனக்கு இரண்டு கொம்புகள் இருப்பதாகக் கூறி கட்சியில் இருந்து வெளியேறிவிட்டார். வெறியேறி ஒரு லெடடர் பாட் கட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார்.

தமிழ்மக்களுக்குத் தெரியும் யார், யார் கட்சிக்குப் பாடுபடுகிறார்கள், யார், யார் நாற்காலியில் இருந்து கொண்டு அறிக்கைகள் மூலமும் ஊடகச் சந்திப்பின் மூலமும் மலிவான அரசியல் செய்கிறார்கள் என்று. சுமந்திரனுக்கு எதிராகக் குழிவெட்ட வெளிக்கிட்டவர்கள் அந்தக் குழிக்குள் தாங்களாகவே விழுந்தார்கள் என்பதே வரலாறு. இதற்கு தவராசா விதிவிலக்கல்ல.

கண்ணாடி வீட்டிற்குள் இருந்து கொண்டு சுமந்திரன் மீது கல்லெறிவது வேண்டாத திருப்பணி என்பதை மட்டும் சொல்ல ஆசைப்படுகிறேன். காகம் கத்தி மாடு செத்ததாக வரலாறு இல்லை!


Thiraviam Sutharsan Sutharsan

31 அக்டோபர் 2022

சுமந்திரன் மீது குற்றச் சாட்டினை அடுக்கும் அனைவரும்.. சிறிதரன் உட்பட மற்றய பாராளுமன்ற உறுப்பினர்கள், கட்சித் தலைமைகள், அவர்களும் அதே தவறினை தாங்களும் இன்றுவரை செய்கிறார்கள்.செய்துகொண்டு இருக்கிறார்கள்…

“ஊடக சந்திப்புக்கள்”

கட்சிக் கட்டமைப்பு பிணக்குகளை ஊடகத்தில் முறையிடும் சட்டமுறைமை எந்த கட்சி விதி முறைகளுக்குள்ளும் அடங்காது.

*** ஊடகப் பேச்சாளர் என்ற வகையிலும் பாராளுமன்ற அரசியல் சட்ட விதிமுறைகள் பற்றி விளக்கமாக கேட்டு அறிந்துகொள்ளலாம் என்ற வகையிலும் சம்பந்தர் ஐயாவுடன் தொடர்ச்சியாக தொடர்பினை வைத்துக்கொள்பவர் என்ற வகையிலும் அவரின் நிலைப்பாடுகள் என்ன என்பதையும் அறிந்துகொள்ள இலகுவானவர் சுமந்திரன் என்பதனால் மட்டுமே ஊடகங்கள் அவரை நேர்காணல் செய்கிறார்கள்…

**நூறுவீதம் சரியானதை மட்டுமே சொல்கின்றார் என்பது எனது கருத்தும் அல்ல.

**தனக்கு தெரிந்தவிடயங்களை மட்டுமே அவர் சொல்கின்றார் என்பது உண்மை..

**ரணிலுடன் சேர்ந்து இயங்குவதால் கட்சிக்கு பின்னடைவு என்றார்கள் கட்சிக்காரர்கள்

**தற்போது சேர்ந்து இணக்கமாக இல்லாததினால் பின்னடைவு என்கிறார்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள்.

**சுமந்திரன் ரணிலுக்கு எதிரானவர் இல்லை.அவரின் செயற்பாடுகளுக்கு எதிரானவர்.

**பாராளுமன்ற உறுப்பினர்களிடையே உள்ள பொறாமை காழ்புணர்ச்சி தாழ்வு மனப்பாண்மை போன்றவைகள் தான் இந்த கட்சிக் குழப்பங்களுக்கு காரணம்.

**முக்கியமான அடிப்படைக் காரணம் தலைமை பொறுப்புடன் ஆளுமையுடன் செயற்படவில்லை.

**கட்சிக் கட்டமைப்பை கட்டுப்படுத்தும் துணிவு தலைமைகளிடம் இல்லை.

**தொகுதிக் கிளைகளுக்கும் மாவட்ட கிளைகளுக்கும் கட்டுப்பட வேண்டியவர்கள் தான் இந்த மக்கள் பிரதிநிதிகள்.

**தனது அதிகாரத்தினால் தலையீடு செய்து அதனை தடுத்து வைத்திருப்பதால் தான் தலைமை மீது நம்பிக்கையீனம் எழுந்துள்ளது.

**சாதாரணமாக பார்த்தால் பிரதேச சபை உறுப்பினர்களையே கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியாமல் தொகுதிக் கிளைகளும் மாவட்ட கிளைகளும் உள்ளது.இதுதான் இன்றைய கட்சியின் கையறுநிலை.

About editor 3017 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply