இலங்கை இறுதி யுத்தத்தில் ‘புலிகள்’ சரணடைந்தனரா?

இலங்கை இறுதி யுத்தத்தில் ‘புலிகள்’ சரணடைந்தனரா?

ஆணைக்குழுவிடம் இலங்கை ராணுவம் சொன்னது என்ன?

எழுதியவர்,யூ.எல். மப்றூக்

பதவி,பிபிசி தமிழுக்காக

9 நவம்பர் 2022, 14:36 GMT

கணவர் எழிலனுடன் அனந்தி
படக்குறிப்பு,கணவர் எழிலனுடன் அனந்தி

லங்கையில் நடைபெற்ற உள்நாட்டு மோதல் முடிவுக்கு வந்தபோது, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த எவரும் ராணுவத்திடம் சரணடையவில்லை என்று தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவிடம் இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது.

ஊடகவியலாளர் பாலகிருஷ்ணன் நிரோஸ் குமார் என்பவரின் தகவலறியும் உரிமை விண்ணப்பம் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக மேற்படி ஆணைக்குழு கூடியபோது, அதன் முன்பாக காணொளி காட்சி மூலம் தோன்றி சாட்சியமளித்த இலங்கை ராணுவ பிரிகேடியர் என்.கே. நாகாவத்த இந்த தகவலை பதிவு செய்துள்ளார்.

இறுதி யுத்தத்தின் போது ராணுவத்தினரிடம் சரணடைந்த விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் தொடர்பில் தகவல்களைக் கோரி, ஊடகவியலாளர் நிரோஸ் குமார் – தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ், இலங்கை ராணுவத்துக்கு விண்ணப்பம் செய்திருந்தார்.

அதற்கு திருப்திகரமான பதில் வரவில்லை என்று கூறி அவர் – இது விடயமாக தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்திருந்தார்.

விளம்பரம்

இதற்கிணங்க கடந்த 3ஆம் தேதி விசாரணைக்காக ஆணைக்குழு கூடியபோது காணொளி வழியாக ஆஜரான பிரிகேடியர் நாகாவத்த, ”யுத்தத்தின் இறுதி கட்டத்தில் இலங்கை ராணுவத்திடம் புலிகள் இயக்க உறுப்பினர் எவரும் சரணடையவில்லை” என தெரிவித்தார

இதன்போது ஊடவியலாளர் நிரோஸ் சார்பாக சட்டத்தரணி ஸ்வஸ்திகா அருலிங்கம் மற்றும் ஊடகவியலாளர் தரிந்து ஜயவர்த்தன ஆகியோர் ஆணைக்குழுவில் ஆஜராகி – வாதங்களை முன்வைத்தனர்.

ஊடகவியலாளர் கோரிய தகவல்கள்
நரோஸ் குமார்
படக்குறிப்பு,நிரோஸ் குமார்

‘இறுதி யுத்த காலப்பகுதியில் இலங்கை ராணுவத்தினரிடம் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர் தொடர்பான தகவல்கள்’ எனத் தலைப்பிடப்பட்டிருந்த அந்த விண்ணப்பத்தில் 6 கேள்விகளுக்கான தகவல்களை நிரோஸ் கோரியிருந்தார்.விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த எத்தனை பேர் ராணவத்தினரிடம் சரணடைந்தனர் (ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் எத்தனை பேர்)?

புலி உறுப்பினர்கள் எந்தெந்தப் பகுதியில் வைத்து ராணுவத்தினரிடம் சரணடைந்தனர். அது தொடர்பான தகவல்கள் வழங்கப்படல் வேண்டும்;

விடுதலைப் புலி உறுப்பினர்கள் சரணடையும் போது, அவர்களைப் பொறுப்பேற்ற ராணுவ அதிகாரிகள், ராணுவப் படைப்பிரிவு போன்றவற்றின் தகவல்கள் வழங்கப்பட வேண்டும்;

சரணடைந்த புலிகள் அமைப்பின் உறுப்பினர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என்ன? அவர்களுக்கு எதிராக வழக்குகள் தாக்கல் செய்யயப்பட்டிருந்தால் அது தொடர்பான தகவல்கள் வழங்கப்பட வேண்டும்;

புலிகள் அமைப்பைச் சேர்ந்த தளபதிகள் அல்லது உயர் பதவிகளில் இருந்தோர் எத்தனைபேர் ராணுவத்திடம் சரணடைந்தனர். அவர்கள் சரணடைந்த ராணுவத் தளபதி, ராணுவப் படைப் பிரிவு போன்ற தகவல்கள் வழங்கப்பட வேண்டும். புலிகள் அமைப்பின் சரணடைந்த முக்கிய உறுப்பினர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என்ன?

சரணடைந்தவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தால் அல்லது அவர்கள் சிறைத் தண்டனை அனுபவித்துக் கொண்டிருந்தால் அவை தொடர்பான தகவல்கள் வழங்கப்பட வேண்டும் என்று நிரோஸ் குமார் தனது விண்ணப்பத்தில் கேட்டிருந்தார்.

புலிகள் சரண் அடைந்தது யாரிடம்?
இலங்கை போர்

2019 ஜூன் 25ஆம் தேதி இதற்கு – எழுத்து மூலம் பதிலளித்த இலங்கை ராணுவத்தின் தகவல் அதிகாரி, புலிகள் இயக்க உறுப்பினர்கள் எவரும் இலங்கை ராணுவத்திடம் சரணடையவில்லை என்றும், அவர்கள் இலங்கை அரசிடமே சரணடைந்தார்கள் எனவும் தெரிவித்திருந்தார்.

அது தொடர்பான விவரங்களை புனர்வாழ்வு ஆணையாளர் நாயகப் பணியகத்திடம் பெற்றுக் கொளள்ள முடியுமெனவும், அந்தப் பதிலில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதில் திருப்தியடையாத ஊடகவியலாளர் நிரோஸ் குமார், தனது விண்ணப்பம் தொடர்பில் – இலங்கை ராணுவத்துக்கு மேன்முறையீடு செய்தார்.

அப்போதும், முன்னைய பதில்தான் ராணுவத்திடமிருந்து கிடைத்தது. இந்த நடவடிக்கைகளின் போது, தனது விண்ணப்பத்தினை தமிழில் சமர்ப்பித்திருந்ததாகவும் ஆனால், தனக்கு வழங்கப்பட்ட எழுத்து மூல பதில்கள் அனைத்தும், சிங்கள மொழியிலேயே கிடைத்ததாகவும் நிரோஸ் குமார் கூறுகின்றார்.

ராணுவப் பகுதிக்கு வந்தோரில் புலிகள் இருந்தார்களா எனத் தெரியாது ராணுவம் வழங்கிய பதில்களில் திருப்தியடைதாக நிரோஸ் குமார், 2019ஆம் ஆண்டு 10ஆம் மாதம் தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழுவுக்கு நேரடியாகச் சென்று, தனது விண்ணப்பம் தொடர்பில் முறையீடு செய்ததாக பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

இதன் பின்னர், நீண்ட இழுத்தடிப்புகளுக்குப் பின்னர் 3 வருடங்கள் கடந்த நிலையில் இம்மாதம் 3ஆம் தேதி, நிரோஸ் வழங்கிய முறைப்பாட்டை, தகவல் அறியும் உரிமை தொடர்பான ஆணைக்குழு விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

அப்போது காணொளி மூலம் தோன்றி சாட்சியமளித்த ராணுவ பிரிகேடியர் என்.கே. நாகாவத்த”யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் புலிகள் எவரும் ராணுவத்திடம் சரணடையவில்லை. அப்போது மக்கள் இடம்பெயர்ந்து ராணுவப் பகுதிக்கு வந்தார்கள்.

அவர்களில் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் இருந்தார்களா என எமக்குத் தெரியாது. எம்மிடம் வந்தவர்கள் தொடர்பில் நாங்கள் எந்தப் பதிவுகளையும் செய்யவில்லை.

அவர்களை பஸ்களில் ஏற்றி – உள்நாட்டில் இடம்பெயர்ந்தோர் தங்க வைக்கப்படும் முகாம்களுக்கு அனுப்பி வைத்தோம். அந்த முகாம்கள் புனர்வாழ்வு ஆணையாளர் நாயக பணியகத்தின் கட்டுப்பாட்டில் இருந்தன.

அங்கு சென்றவர்கள் தொடர்பான நடவடிக்கைகளை அந்தப் பணியகம்தான் மேற்கொண்டது. அவ்வாறான தகவல்களை புனர்வாழ்வு ஆணையாளர் நாயகப் பணியகத்திடம்தான் பெற்றுக் கொள்ள முடியும்” என்று கூறியதாக ஊடகவியலாளர் நிரோஸ் குமார் தெரிவித்தார்.

ஆணையம் பிறப்பித்த உத்தரவு
இலங்கை

நான்கு பேரைக் கொண்ட தகவலறியும் உரிமை தொடர்பான ஆணைக்குழுவின் முன்னிலையில், இந்த விடயங்களை இலங்கை ராணுவத்தின் குறித்தளிக்கப்பட்ட அதிகாரி கூறியிருந்தார். இதன்போது ராணுவத்தின் கூற்றை மறுத்த ஊடகவியலாளர் நிரோஸ் குமார் தரப்பு சட்டத்தரணி ஸ்வஸ்திகா, ராணுவத்தினரிடம் புலிகள் இயக்க உறுப்பினர்கள் சரணடைந்தமை தொடர்பான சில ஆவணங்களை ஆணைக்குழுவிடம் ஒப்படைத்தார்.

ராணுவத்திடம் புலிகள் சரணடைந்ததாக அப்போது அரசாங்கத்தில் அங்கம் வகித்த அமைச்சர்கள், அப்போதைய ராணுவப் பேச்சாளர் உள்ளிட்டோர் ஊடகங்கள் முன்னிலையில் தெரிவித்த செய்திகள் இந்த ஆவணங்களில் உள்ளடங்கியிருந்தன.

இரு தரப்பினரின் வாதங்களையும் கவனத்திற் கொண்ட ஆணைக்குழு, ஊடகவியலாளர் நிரோஸ் மற்றும் ராணுவம் ஆகிய தரப்பினர் தத்தமது நிலைப்பாடுகள் தொடர்பான எழுத்து மூல சமர்ப்பணங்களை 10 நாட்களுக்குள் வழங்குமாறு உத்தரவிட்டது.

மேலும் இது தொடர்பான அடுத்த கட்ட விசாரணையை எதிர்வரும் ஜனவரி மாதம் 4ஆம் தேதி விசாரிப்பதற்கும் நாட்குறித்தது.

எனது கணவர் சரணடைந்ததை நேரில் கண்டேன்: எழிலன் மனைவி அனந்தி
அனந்தி
அனந்தி

”முள்ளிவாய்க்காலில் இருந்து ராணுவம் அழைத்த இடத்துக்கு மக்களுடன் சேர்ந்து நானும் எனது மூன்று பிள்ளைகளும் வரிசையில் சென்றோம். அப்போது அரச உத்தியோகத்தருக்கான எனது அடையாள அட்டையை ராணுவத்தினரிடம் காட்டினேன்.

ராணுவ அதிகாரியொருவர் வந்து எனது அடையாள அட்டையைப் பார்த்து விட்டு, நீ இந்த வரிசையில் வரவேண்டாம், உனக்கான வரிசை அங்கேயுள்ளது என கொச்சைத் தமிழில் கூறி, நான் நின்ற வரிசையிலிருந்து என்னையும் பிள்ளைகளையும் நீக்கி விட்டார்”.

”அப்போது பிரான்சிஸ் ஜோசஃப் உடன் சென்று – ராணுவத்தினரிடம் சரணடைந்த நிலையில் சற்று தூரத்தில் நின்றிருந்த எழிலன், என்னைப் பார்த்து, ‘நீ போ’ என்பது போல் தலையசைத்தார்.

முட்கம்பிகளுக்கு இந்தப் பக்கம் நாங்களும் அந்தப் பக்கம் அவர்களுமான இருந்தோம். அப்போது அங்கு நின்ற பஸ்களை நோக்கி எழிலன் உள்ளிட்டவர்களை ராணுவத்தினர் அழைத்துக் கொண்டு செல்வதை நான் பார்த்தேன்” என, அனந்தி கூறினார்.

எழிலனை அழைத்துச் சென்றவர்கள் ராணுவ சிப்பாய்கள் இல்லை என்றும், ராணுவ உயர் அதிகாரிகளே அழைத்துச் சென்றனர் எனவும் அனந்தி தெரிவித்தார்.

“எழிலனுக்கு அருகாமையில் நாங்கள் நின்றிருந்த ஒரு சமயத்தில் ‘மாவிலாறு’ ‘எழிலன்’ எனும் வார்த்தைகளைக் கூறிக் கொண்டே எழிலனை ராணுவத்தினர் அழைத்துச் சென்றனர்” எனவும் பிபிசி தமிழிடம் அனந்தி குறிப்பிட்டார்.

“அந்த இடத்திலிருந்து பொதுமக்களை பஸ்கள் ஏற்றிக் கொண்டு சென்றன. அதில் நானும் பிள்ளைகளும் சென்றோம். ஓமந்தையில் ஓரிடத்தில் பஸ் தரித்து நின்றது.

அப்போது மற்றைய பஸ்ஸில் வந்த ஒருவர் என்னிடம் ஓடிவந்து, ‘அனந்தி அக்கா, நல்லவேளை நீங்கள் வந்து விட்டீர்கள். அங்கு ஆர்மி உங்களைத் தேடுகிறார்கள்’ என்றார்.

புலிகள் இயக்க முக்கியஸ்தர்களோடு அவர்களின் குடும்பத்தினரையும் ராணுவத்தினர் அழைத்துச் சென்றிருந்தனர் என்பது, அப்போதுதான் எனக்கு தெரிய வந்தது” எனவும் அனந்தி கூறினார்.

தனது கணவர் எழிலன் ராணுவத்தினரிடம் சரணடைந்தமையை தான் நேரில் கண்டதை, நீதிமன்றத்தில் வழங்கிய சாட்சியங்களின் போதும், தான் தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

ராணுவத்தினரிடம் சரணடைவதற்காக எழிலன் உள்ளிட்ட விடுதலைப் புலி உறுப்பினர்களை அழைத்துச் சென்ற அருட்தந்தை பிரான்சிஸ் ஜோசஃப் கூட அதற்குப் பிறகு திரும்பவில்லை என்றும் அனந்தி சசிதரன் மேலும் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் பிரச்னை எழுப்பிய எம்பி
இலங்கை போர்
படக்குறிப்பு,சுமந்திரன், எம்.பி

இந்த நிலையில் இவ்விடயம் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எம்.பியும் மூத்த சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் நேற்று (நவம்பர் 8) நாடாளுமன்றில் உரையாற்றியிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. ”தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பமொன்றுக்கு அண்மையில் ராணுவம் பதிலளிக்கும் போது, தம்மிடம் யாரும் சரணடையவில்லை என்று கூறியிருந்தது. ஆனால், தாய்மாரும் மனைவியர்களும் ராணுவத்திடம் தங்கள் உறவுகளை தாங்களே கையளித்ததாக புகார் கூறுகின்றனர். இப்படியிருக்கும் போது, தங்கள் கண்கள் முன்பாகவே ராணுவத்திடம் பலர் சரணடைந்தமையை மக்கள் பார்த்துள்ள நிலையில், ராணுவத்திடமிருந்து இப்படியொரு அறிக்கை வெளிவருவதால், மக்கள் உடனடியாவே நம்பிக்கை இழந்து விடுகின்றனர்” என சுமந்திரன் தெரிவித்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

https://www.bbc.com/tamil/articles/cmm53y4m536o

About editor 3047 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply