குருந்தூர் மலை விவகாரம் : சிவநேசன், ரவிகரன் உள்ளிட்ட மூவருக்கு எதிராக நீதிமன்றில் வழக்குத்தாக்கல்

குருந்தூர் மலை விவகாரம் : சிவநேசன், ரவிகரன் உள்ளிட்ட மூவருக்கு எதிராக நீதிமன்றில் வழக்குத்தாக்கல்

By VISHNU

21 SEP, 2022
image

பக்கச்சார்பாக செயற்படும் முல்லைத்தீவு பொலிசார் குருந்தூர் மலை விவகாரம்  முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள்  சிவநேசன்,ரவிகரன் உள்ளிட்ட மூவருக்கு  எதிராக நீதிமன்றில் வழக்குத்தாக்கல் குருத்தூர் மலையில் பௌத்த வழிபாடுகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக முன்னாள் வடமாகாண விவசாய அமைச்சர் கந்தையா சிவநேசன்,முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும்,  சமூகஆர்வலர் ஜூட் நிக்சன் ஆகியோருக்கு எதிராக முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் B/688/2022 என்னும் வழக்கிலக்கத்தினூடாக வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

இந் நிலையில் குறித்த வழக்குவிசாரணைகள் எதிர்வரும் 10.11.2022 திகதிக்கு தவணையிடப்பட்டுள்ளது. 

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், தமிழர்களின் பூர்வீக வழிபாட்டு இடமான முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு, குருந்தூர் மலையில், கடந்த 12.06.2022 அன்றையதினம் முல்லைத்தீவு நீதிமன்றால் வழங்கப்பட்ட கட்டளைகளை மீறி, ‘கபோக்’ கல்லினாலான புத்தர் சிலை ஒன்றினை நிர்மாணிப்பதற்கும், அங்கு புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பௌத்த விகாரையின் கலசத்திற்குரிய விசேட பூசைவழிபாடுளை மேற்கொள்வதற்குமான முயற்சியில் பௌத்தபிக்குகள் மற்றும், பௌத்தாலோக நற்பணிமன்றம், தென்னிலங்கையைச் சார்ந்த பெரும்பாண்மை இனத்தவர்கள், இராணுவத்தினர் ஆகியோர் இணைந்து முன்னெடுத்திருந்தனர். 

இந் நிலையில் முல்லைத்தீவு நீதிமன்றால் வழங்கப்பட்ட கட்டளைகளை மீறி மேற்கொள்ள இந்த முயற்சிக்கு எதிர்ப்புத்தெரிவித்து குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலய நிர்வாகத்தினர், பொதுமக்கள் ஜனநாயக ரீதியிலான போராட்டமொன்றை மேற்கொண்டிருந்தனர். 

இவ்வார்ப்பாட்டத்தில் முன்னாள் வடமாகாண விவசாய அமைச்சர் கந்தையா சிவநேசன்,முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், சமூகஆர்வலர் ஜூட்நிக்சன் உள்ளிட்டவர்களும் பங்கேற்றிருந்தனர். 

அந்தவகையில் மக்களாலும், மக்கள் பிரதிநிதிகளாலும் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தின் மூலம், முல்லைத்தீவு நீதிமன்றால் வழங்கப்பட்ட கட்டளையை மீறி அன்றைய தினம் முன்னெடுக்கப்படவிருந்த நிகழ்வுகள் அனைந்தும் ஏற்பாட்டாளர்களால் கைவிடப்பட்டிருந்தன. 

இந்நிலையில் குருந்துர்மலையில் மேற்கொள்ளப்பட்ட பௌத்த வழிபாடுகளை தடுக்கமுற்பட்டதாகத் தெரிவித்து, ஆலய நிர்வாகத்தினரோடும், பொதுமக்களோடும் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் வடமாகாண விவசாய அமைச்சர் கந்தையா சிவநேசன்,முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், சமூக ஆர்வலர் ஜூட் நிக்சன் ஆகியோருக்கு எதிராக மணலாறு சப்புமல் தென்ன ஆராண்ய விகாராதிபதி கல்கமுவ சந்திரபோதி தேரர் உள்ளிட்ட ஏழு தேரர்களால் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. 

இந் நிலையில் தேரர்களால் பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டவர்களை விசாரணைக்கு வருமாறு முல்லைத்தீவு போலீசார் அழைப்பாணை விடுத்திருந்தனர். இவ்வாறு போலீசாரால் விடுக்கப்பட்ட அழைப்பாணைக்கு அமைவாக கடந்த 02.09.2022அன்று முன்னாள் வடமாகாண விவசாய அமைச்சர் கந்தையா சிவநேசன்,முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் சமூக ஆர்வலர் ஜூட் நிக்சன் ஆகியோர் முல்லைத்தீவு பொலிஸ் நிலையம் சென்று தமது வாக்குமூலங்களை வழங்கியிருந்தனர். 

இந் நிலையில் குறித்த விசாரணைகளைத் தொடர்ந்து பொலீசார் 20.09.2022 நேற்று முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்துள்ளனர் அந்தவகையில் B/688/2022 என்னும் வழக்கிலக்கத்தில் குறித்த வழக்குத் தாக்கல்செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த வழக்கானது எதிர்வரும் 10.11.2022 அன்றைய திகதிக்கு விசாரணைகளுக்காகத் தவணையிடப்பட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவுகளை மீறி தொடந்தும் இன்றும் கட்டுமான பணிகளை முன்னெடுக்கும் தேரருக்கோ ஏனையோருக்கோ எதிராக நடவடிக்கை எடுக்காத முல்லைத்தீவு பொலிசார்  இவ்வாறு உரிமைக்காக  ஜனநாயக ரீதியாக போராடும் மக்களை தொடர்ந்தும் திட்டமிட்டு நீதிமன்றுக்கு அழைக்கும் பொலிசாரின் பக்கச்சார்பான நடவடிக்கைக்கு கடும் கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது .

RELATED TAGS:

About editor 3089 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply